தேவபயத்தின் பிறப்பிடம்

வேதம் போதிக்கும் தேவபயம் – 4

– அல்பர்ட் என். மார்டின் –

[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]

“தேவபயமென்பது கடவுளுடைய ஆராதனையைப்பற்றி மட்டுமே குறிக்கிறதாக இல்லாமல், தேவபக்தியின் எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. அத்தோடு அது மெய்யான கிறிஸ்தவத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டது என்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான்” என்று சென்ற தலைமுறையில், வேதத்தை மிகுந்த கவனத்துடன் கற்ற மாணவர்களில் ஒருவர் எழுதியிருக்கிறார். இதை அவர் இப்படியும் சொல்லியிருந்திருக்கலாம், அதாவது, தன்னுடைய வேதத்தை நன்கு அறிந்திருக்கிற எந்தவொரு நபரும் பொதுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று என்னவென்றால், “மெய்யான கிறிஸ்தவம்” என்பதற்கான இணை வார்த்தையாக “தேவபயத்தை” நாம் பயன்படுத்தலாம் என்பதுதான். வேதத்தை முறையாகப் படிப்பது இந்த முடிவுக்குத்தான் நம்மை வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த உண்மை பயத்தையும் பயங்கரத்தையும் உள்ளடக்கியது. தேவபயமென்பது மெய்யான கிறிஸ்தவத்தைக் குறிப்பிடுவதற்கான இணை வார்த்தையாக இருக்குமானால், தேவபயம் இல்லாமல் இருப்பதென்பது மெய்யான கிறிஸ்தவம் இல்லை என்பதற்கான அறிகுறியாகவே இருக்கும்.

தேவபயமாகிய இந்த முக்கிய பாடத்தைப் பற்றிய பல கேள்விகளை நாம் கேட்டோம், வேதமும் அவற்றிற்கான பதிலை நமக்குத் தந்திருக்கிறது. தேவபயம் சம்பந்தமாக நாம் கேட்க வேண்டிய இன்னொரு முக்கியமான கேள்வி என்னவென்றால், “தேவபயம் எங்கிருந்து வருகிறது?” என்பதுதான். வேதத்தின்படி, தேவபயத்தின் பிறப்பிடம் எது? ஒருவேளை, ஒரு சுவையான சாக்லேட் கேக்கை உங்களுடைய பிள்ளை ஒருபோதும் பார்த்ததில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் கொஞ்ச நேரத்திற்கு முன் அப்படியான ஒரு சுவையான கேக்கை நீங்கள் செய்து, அதை அவன் முன் வைக்கிறீர்கள். அவன் உங்களைப் பார்த்து, என்ன இது? என்று கேட்கிறான். நீங்களும் அவனைப் பார்த்து, இது கேக், சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்று பதிலளிக்கிறீர்கள். அவன் தொடர்ந்து, இது எப்படி செய்யப்பட்டது என்று கேட்க, நீங்களும், அதைச் செய்வதற்கு பயன்படுத்திய எல்லா பொருட்களையும்பற்றி விவரிக்கிறீர்கள் – மாவு, கோக்கோ பவுடர், சோடா மாவு மற்றும் இதர பொருட்கள். அது என்ன என்று மட்டும் நீங்கள் சொல்லாமல், அது கேக்காக வருவதற்கு என்னவெல்லாம் பயன்பட்டன என்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அடுத்து, இது செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களெல்லாம் எங்கிருந்து வந்தன என்று அவன் கேட்கிறான். மாவு, நிலத்தில் விளைந்த தானியத்திலிருந்து வந்தது, மாவு கேக்கின் பதத்திற்கு வர பயன்படுத்தப்படும் பொருட்கள் சில குறிப்பிட்ட மிருகத்தின் கொழுப்பிலிருந்து வந்தன என்று ஒவ்வொன்றாக விளக்குகிறீர்கள். இதன் மூலம் கேக் செய்வதற்கான பொருட்களின் பிறப்பிடத்தைப் பற்றி நீங்கள் உங்கள் பிள்ளைக்கு விவரித்துக் காட்டுகிறீர்கள்.

இதுவரை நாம் பார்த்ததில், கேக் என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்கியிருக்கிறேன். இதன்மூலம், தேவபயம் என்றால் என்ன என்பதைப்பற்றி விளக்கியிருக்கிறேன். இது கடவுளைப் பற்றியது. அதாவது, அவருடைய மகத்துவத்தையும் மகிமையையும், அவருடைய இரட்சிக்கும் செயலில் கிருபையின் வெளிப்பாட்டையும் அறிந்து, அவருடைய புன்னகைதான் வாழ்வில் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றும் அவருடைய வெறுப்புதான் வாழ்வில் மிகப்பெரிய சாபம் என்றும் உறுதியாக நம்புகிற நம்பிக்கையை நம்மில் ஏற்படுத்துவதே தேவபயமாகும். பிறகு தேவபயத்தின் மூன்று முக்கியமான அம்சங்களை அடையாளங் கண்டோம். தேவபயத்தின் இந்த அம்சங்கள் எங்கிருந்து வந்தன என்பதை நாம் ஆராய்கிறபோது, நம்முடைய நினைவில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இதை வெறும் அறிவுக்காக படிக்கின்ற பாடமாக நாம் பார்க்கக்கூடாது என்பதுதான். எல்லாவிதமான ஆவிக்குரிய அனுபவங்களிலுள்ள ஒரு முக்கியமான தவறு என்னவென்றால், எது நல்லொழுக்கத்தின் பிறப்பிடம் என்பதைப் பற்றிய அறியாமையில் இருந்துவிடுவதுதான். பவுல் தன்னுடன் இருந்த யூதர்களுக்கு என்ன சொன்னார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இரட்சிக்கப்படுவதற்கு நீதி மிகவும் அவசியமானது என்பது யூதர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் பவுல் அவர்களைப் பற்றிச் சொல்லுகிறார், “அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்” (ரோமர் 10:3). நீதியைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் கடவுளால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே நீதியின் பிறப்பிடத்தைக் கண்டறிவதில் அவர்கள் அக்கறையற்றவர்களாக இருந்தார்கள்.

நாம் தேவபயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், அதைப் பற்றிய ஏனைய சில விஷயங்களையும் அறிந்திருப்பது மட்டும் போதாது. அதை எங்கிருந்து பெறுவது என்பதையும் நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். தேவபயத்தை எங்கிருந்து பெறுவது என்பதை நீங்கள் அறியாதிருந்தால் அது உங்களுக்குக் கேட்டைத்தான் கொண்டுவரும். இது மிகப் பெரிய ஆவிக்குரிய விஷயத்தைப் பற்றியது. தேவபயத்தின் பிறப்பிடம் எது? இதில் நாம் முதலாவதாக பார்க்கப் போவது, ஒருவனுடைய இருதயத்தில் தேவபயம் நாட்டப்படுவதென்பது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதம் என்பதாகும். இரண்டாவதாக, கடவுளுடைய கிருபையினால் தேவபயம் எப்படி ஒருவனுடைய இருதயத்தில் நாட்டப்படுகிறது என்பதை வேதத்திலிருந்து நாம் பார்க்கப் போகிறோம்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதம்

முதலாவது, ஒருவனுடைய இருதயத்தில் தேவபயம் விதைக்கப்படுவதென்பது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதம் என்பதை வேதத்தில் நாம் காண்கிறோம். கடவுள் மனிதர்களுடனான தன்னுடைய எல்லா செயல்பாடுகளையும், அவர்களோடு தான் கொண்டுள்ள உடன்படிக்கையின் உறவின் அடிப்படையில்தான் நடத்துகிறார். கடவுள் தாமே தீர்மானித்திருக்கிற சில குறிப்பிட்ட காரியங்களை, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தருவதாக வாக்களித்திருக்கிறார். வேதம் குறிப்பிடுகிற “நித்திய உடன்படிக்கையிலுள்ள” (எபிரெயர் 13:20) அம்சங்களின்படியாகவே, பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதும் அதனோடு தொடர்புடையதுமாகிய ஏனைய ஆசீர்வாதங்களும் நமக்கு வருகின்றன. மோசேயின் உடன்படிக்கையிலிருந்து பிரித்துப் பார்க்கிறபோது, சில வேளைகளில் இது “புதிய உடன்படிக்கை” என்றும் அழைக்கப்படுகிறது. எபிரெயர் 8:6-13 வரையுள்ள வசனங்களில், புதிய உடன்படிக்கையின் கீழாக அறிவிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் பழைய உடன்படிக்கையின் கீழ் அறிவிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைவிட பலமடங்கு உயர்ந்தவை என்பதை கடவுள் மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த உண்மை, 13வது வசனத்தில் தொகுப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது, “‘புது உடன்படிக்கை’ என்று அவர் சொல்வதனாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது, உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது” என்று அறிகிறோம். கர்த்தருடைய பந்தியை ஏற்படுத்தியபோது, இயேசு சொன்னார், “இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” (1 கொரிந்தியர் 1:25). வேறுவிதமாக சொல்லுவதானால், அவர் தம்முடைய இரத்தம் சிந்துதலின் மூலம் அவர் நிறைவேற்றயிருக்கிறவைகள் யாவும் புதிய உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள்ளான ஆசீர்வாதங்களையே குறிக்கிறதாக இருக்கிறது. இயேசு சிந்திய இரத்தத்திற்கப்பால், எந்தவொரு மனிதனும் உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெறுவதில்லை. அதேபோல், இயேசுவின் இரத்தத்தினால் எந்தப் பலனைப் பெறுகிற எவனும், புதிய உடன்படிக்கையில் வாக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களின் அம்சங்களையே பெறுகிறான்.

அந்த உடன்படிக்கையில் என்ன ஆசீர்வாதங்கள் வாக்களிக்கப்பட்டிருந்தன? எசேக்கியேல் 36 மற்றும் எரேமியா 31, 32 அதிகாரங்களில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல ஆசீர்வாதங்கள் தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் யாவும் புதிய உடன்படிக்கையின்கீழ் அனுபவிக்கப்படும் ஆசீர்வாதங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக, எபிரெயர் 8 மற்றும் 10 வது அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசீர்வாதங்களையே குறிப்பிடுகிறேன். இப்போது நம்முடைய கவனத்தை எரேமியா 32வது அதிகாரத்தில் செலுத்துவோம். ஏனென்றால், அதுதான் தேவபயத்தைப் பற்றியும், புதிய உடன்படிக்கையில் அதற்கான இடத்தைப் பற்றியும் நேரடியாகக் குறிப்பிடுகிறது.

“அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.” (எரேமியா 32:38-41)

இப்பகுதியில் கடவுள் தம்முடைய மக்களுக்கான இரக்கத்தை வாக்களிக்கிறார். தமக்கு பயப்படும் பயத்தை அவர்களுடைய இருதயத்தில் வைப்பதாக அவர் சொல்லுகிறார். அதன் மூலம் அவர்கள் தம்முடைய வழிகளில் நிலைத்திருப்பார்கள். கடவுளுக்கும் அவர்களுக்கும் இருக்கிற தொடர்பைக் கவனியுங்கள் “அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைப்பேன்”. பழைய உடன்படிக்கையில், தம்முடைய மக்களுக்கு முன்பாக தம்முடைய மகத்துவத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்திக்காட்டி, அவர்கள் நடுக்கங்கொள்ளவும் தாம் பேசுகிற மலையைத் தொடவும் கூடாது என்று சொல்லி பயத்தை ஏற்படுத்தி, தம்முடைய கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்த போதிலும், அவர்கள் தொடர்ந்து அவ்வப்போது ஆவிக்குரிய விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். முடிவாக, கடவுள் அந்த தலைமுறையினர் அனைவரையும், அதாவது நேரடியாக பழைய உடன்படிக்கையைப் பெற்றவர்கள் யாவரையும், நியாயந்தீர்த்தார். அவர்களில் இருபது வயள்ளவர்களையும் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் யாவரையும் வனாந்தரத்திலேயே சாகும்படி செய்தார். இறுதியில், அவர்களுடைய ஆவிக்குரிய விபச்சாரத்தினிமித்தமாக அந்த நாடு முழுவதையும் சிறைபட்டுப்போகச் செய்தார். ஆனால் தற்போது, இந்த புதிய உடன்படிக்கையின் அடிப்படையில், இந்த உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்குட்பட்ட யாவரும் அவருக்கு எதிரான விபச்சாரக்காரர்களாக மாட்டார்கள் என்று அவர் சொல்லுகிறார். அவர்கள் அவரைவிட்டு அகன்றுபோக மாட்டார்கள், ஏனென்றால், “எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைப்பேன்” (வசனம் 40) என்கிறார். அதாவது “அவர்களுடைய இருதயத்தில் எனக்குப் பயப்படும் பயத்தை நான் ஏற்படுத்துவேன். அவர்களுடைய உள்ளான மனதில் இதை வைப்பேன். ஆகவே அவர்கள் தம்மையும் தம்முடைய வழிகளையும் பற்றிக்கொண்டிருப்பார்கள். தம்மைவிட்டு அகன்று போகமாட்டார்கள்” என்கிறார்.

எரேமியா தீர்க்கதரிசியினுடைய இந்த வாக்கியத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளுவதென்ன? தேவபயமென்பது புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதமாக இருக்கிறது என்பதை முதலாவது நாம் கற்றுக்கொள்ளுகிறோம். அந்தக் காலத்திலும், அதைத் தொடர்ந்து ஆண்டவராகிய இயேசு இவ்வுலகில் வந்து இரட்சிப்பை நிறைவேற்றிய பிறகும், புதிய உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் ஒருவன் தேவபயத்தைக் கொண்டிராமல், யாரொருவரும் மெய்யாகவும், சரியாகவும் தேவனுக்குப் பயந்திருக்க முடியாது. இரண்டாவது, இது கடவுளுடைய தனித்துவமான சர்வஏகாதிபத்தியத்தின் செயல் – “நான் அவர்கள் இருதயத்தில் எனக்குப் பயப்படும் பயத்தை வைப்பேன்.” தானே இதைச் செய்கிறேன் என்று கடவுள் இதைவிட வேறு எப்படித் தெளிவாகச் சொல்ல முடியும். நானே அதை இருதயத்தில் வைப்பேன் என்று அவர் சொல்லுகிறார். அவர் இங்கு செய்வேன் என்று சொல்லியிருப்பது, மோசேயின் காலத்தில் இருந்ததைப்போல் ஏதோ ஒரு குறிப்பிட்ட கொஞ்சக் காலத்திற்குரியதல்ல. பழைய உடன்படிக்கையின் கீழ் ஒட்டுமொத்த நாடுமே ஆவிக்குரிய விபச்சாரத்திலும், தொடர்ந்து கடவுளைவிட்டு பின்வாங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எரேமியா தீர்க்கதரிசி அறிவிக்கிறார், “புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்கள்” (எரேமியா 9:26). எருசலேமில், யூதர்களுக்கான தன்னுடைய கடைசிப் பிரசங்கத்தில், ஸ்தேவான், ஒட்டுமொத்த இஸ்ரவேல் தேசத்தினுடைய தொன்றுதொட்ட வரலாற்றின் ஆவிக்குரிய நிலையைச் சுருக்கமாக இப்படி விவரிக்கிறார், “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்” (அப்போஸ்தலர் 7:51). இருப்பினும், கடவுள் தம்முடைய “கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கை மீதியாக” (ரோமர் 11:5) வைத்திருந்தார். அவர்கள் மறுபிறப்படைந்தவர்களாகவும், பரிசுத்த ஆவியானவரைத் தங்களில் கொண்டவர்ளாகவும், தேவபயம் இருதயத்தில் நாட்டப்பட்டவர்களாகவும் இருந்தவர்கள். ஆனால் கடவுள் சொல்லுகிறார், இந்த புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்குக்கீழ் வருகிறவர்கள், தங்களுடைய இருதயத்தில் தமக்கு பயப்படும் பயத்தைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து ஆண்டவரைப் பற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதற்கான உறுதியை இது தருகிறது. மேலும், இது கிருபையினுடைய ஆசீர்வாதங்களின் சூழலில் செய்யப்படும் என்றும் இப்பகுதி சொல்லுகிறது. அவர், “நான் அவர்கள் தேவனாயிருப்பேன்” (எரேமியா 32:38), “அவர்களுக்கு நன்மைசெய்வதிலிருந்து, நான் அவர்களைவிட்டு பின்வாங்குவதில்லை” (வசனம் 40), “அவர்கள் மேல் சந்தோஷமாயிருப்பேன்” (வசனம் 41) என்று சொல்லுகிறார். கிருபையினுடைய ஆசீர்வாதங்களின் அடிப்படையில் அவரைப்பற்றும் பயத்தை அவர் அவர்களில் நாட்டுவார்.

எரேமியாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? இரண்டு முடிவுகளுக்கு நாம் வரலாம். முதலாவது, தம்முடைய இரத்தத்தினால் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திய கிறிஸ்துவினுடைய செயலினால் அல்லாமல், எந்தவொரு நபரும் தேவபயத்தைக் கொண்டிருக்க முடியாது. புதிய உடன்படிக்கையினுடைய வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதமாக இது நம்முடைய இருதயத்தில் வைக்கப்பட வேண்டும். ஆதாமினுடைய வழித்தோன்றல்களில் தானாக இந்த தேவபயம் காணப்படுவதோ வளருவதோ கிடையாது. தேவபயம் என்பது நம்முடைய இருதயங்களில் இயற்கையாக வளரக்கூடிய மனப்பாங்கு அல்ல. இயற்கையான மனிதனைப் பற்றி ரோமர் 3:18 சொல்லுகிறது, “அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வபயம் இல்லை”. இயற்கையான மனிதன், கடவுள் மீது பயபக்தியும் மரியாதையும் கொண்டு, அவரை நேசித்து, நம்பி, அவருக்குக் கீழ்ப்படிகிற பயத்தை ஒருபோதும் கொண்டிருக்க மாட்டான். புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்குக்கீழ் வருகிறவன் மட்டுமே இத்தகைய பயத்தை அறிந்திருப்பான். இத்தகைய பயம் கல்வியறிவின் மூலமாகவோ, ஆவிக்குரிய அறிவின் வளர்ச்சியின் மூலமாகவோ, வம்சாவழியின் மூலமாகவோ வருகிறதில்லை. கடவுளுடைய கிருபையின் சர்வஏகாதிபத்திய செயலின்படியாக, ஒருவன் புதிய உடன்படிக்கையினுடைய ஆசீர்வாதங்களை அடைவதன் மூலமாக மட்டுமே இதைப் பெறுகிறான்.

இந்தப்பகுதியிலிருந்து நாம் பெறுகிற இரண்டாவது முடிவு என்னவென்றால், புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களில் பங்குகொண்டுள்ள யாவரும் தங்களுடைய இருதயத்தில் தேவபயம் நாட்டப்பட்டுள்ளதைத் தங்களுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்துவார்கள். உடன்படிக்கையின் இரத்தத்தினால் மன்னிப்பைப் பெற்ற பாவியான ஒருவன் கடவுளுக்கு பயப்படாமல் இருப்பதென்பது முடியாத காரியம். ஒருவன் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவிடம் வந்து, அவரால் மன்னிக்கப்பட்ட பிறகும், கடவுளோடு தனக்கிருக்கிற தொடர்பைப்பற்றியும், தேவபயத்துடன் வாழுவதைப் பற்றியும் அக்கறையில்லாதவனாக இருக்க முடியாது.

இருதயத்தில் தேவனுடைய கிருபையின் செயல்

எவ்வாறு புதிய உடன்படிக்கையின்கீழ் தேவபயமானது மனிதர்களுடைய இருதயங்களில் கொடுக்கப்படுகிறது என்பதை இப்போது கவனிப்போம். மிகுந்த பயபக்தியுடன் நான் ஒரு கேள்வியை உங்கள்முன் வைக்கிறேன்: “மனிதர்கள் தங்களுடைய பணத்தைப் பாதுகாப்பு பெட்டியில் பத்திரப்படுத்தி வைப்பதுபோல் கடவுள் வெறுமனே தேவபயம் என்ற மனநிலையை ஏற்படுத்தி அதை மனிதர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் நட்டுவைத்துவிடுகிறாரா?” என்பதுதான் அந்தக் கேள்வி. இந்த விதத்திலும் கடவுளால் இதை செய்திருக்க முடியும் என்று நாம் சொல்லலாம். கடவுள் சிறு குழந்தைகளையும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் மறுபிறப்படையச் செய்கிறபோது, இரட்சிக்கும் கிருபையின் பொதுவான வழிமுறைகளைத் தாண்டி வேறுவிதங்களிலும் செயல்படுகிறார். ஆனால் கடவுளுடைய கிருபையின் செயல்பாடுகள் மனிதனுடைய தன்மையை மீறிச் செயல்படுகிறதில்லை என்கிறது வேதம். கடவுள் மனிதர்களுடைய இருதயங்களில் தேவபயத்தை நிலைநிறுத்துவதற்கு, பாவிகளுடைய மனம், உணர்ச்சிகள், சித்தம் ஆகியவற்றைத் தாண்டிச் செயல்படுவதில்லை. ஆனால் அவற்றின் பின்னிருந்தும், அவற்றின் மூலமாகவும், அவற்றின் கீழிருந்தும் அதை செய்கிறார். ஆகவேதான் இந்த விஷயத்தில் நம்முடைய செயல்பாடுகளை அவருடைய செயல்பாடுகளிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. இக்காரணத்தினால்தான், நம்முடைய ஆண்டவர் நிக்கொதேமுவிடம், மறுபிறப்பில் பரிசுத்த ஆவியானவருடைய செயல்பாடுகள் காற்றின் செயல்பாடுகளைப் போல் இருக்கும் என்றார். அதாவது, காற்று எங்கிருந்து வருகிறது, எங்கு போகிறது என்பதிலிருக்கும் புதிரைப் போல் அது இருக்கும் என்பது அதன் அர்த்தம்.

பிலிப்பியர் 2:13ல் பவுல் சொல்லுகிறார், “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்”. இந்தப்பகுதி சொல்லுகிறது, கடவுள் “உங்களில் செயல்படுகிறார்”. கடவுள் நம்மில் செயல்படுகிறபோது, நாம் பொம்மலாட்டக் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் பொம்மையைப் போலாகிறதில்லை. கடவுள் செயல்படுகிறதினால், நாம் மனந்திரும்பவும், விசுவாசிக்கவும், ஜெபிக்கவும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் நம்மை உந்தித்தள்ளும் சக்தி ஏற்படுகிறவரை நாம் பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறதா? இல்லை. கடவுள் “நாம் விருப்பங்கொள்ளும்படி நம்மில் செயல்படுகிறார்” என்று பவுல் சொல்லுகிறார். நம்முடைய உள்ளான உணர்வுகளில் செயல்படுகிறார். அவருடைய பார்வையில் பிரியமானதை, நாம் உணர்வுபூர்வமாக தெரிவுசெய்கிறபோது அவர் நம்மில் செயல்படுகிறார் என்பதை நாம் கண்டறியலாம். நான் திருச்சபைக்குப் போகிறபோது, திருச்சபைக்கு போக நான் தீர்மானித்திருக்கிறேன் என்பதை என்னுடைய உணர்வுபூர்வமாக அறிந்திருக்கிறேன். அதாவது அங்கு போய், கடவுளை நாடுகிற சபையாரோடு சேர்ந்து ஜெபிக்க நான் முடிவுசெய்திருக்கிறேன். என்னுடைய வாயைத் திறந்து அவரை ஆராதிக்கவும், பாடல்களைப் பாடிப் போற்றவும் தீர்மானித்திருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் நான் செய்கிறபோது, கடவுள்தாமே தம்முடைய நல்ல செய்கைகளில் நான் விருப்பங்கொள்ளும்படி என்னில் செயல்படுகிறார். இதை நான் உணர்வுபூர்வமாக நினைத்திராவிட்டாலும் இதுவே உண்மை.

ஏன் நான் திருச்சபைக்குப் போய் ஜெபிக்கவும் ஆராதிக்கவும் தீர்மானித்தேன் என்று என்னையே நான் கேட்டுப்பார்க்கிறபோது, கடவுள், நான் அவருடைய கட்டளைகளின் வழிகளைவிட்டு விலகாமலும், என்னைப்பற்றிய அவருடைய சித்தமாக அவரே வெளிப்படுத்தியுள்ளவைகளைத் தெரிவுசெய்யவும், தம்மைப் பற்றும் பயத்தை என்னுடைய இருதயத்தில் வைத்திருப்பதினாலும் இப்படி செய்கிறேன் என்று நான் பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

புதிய உடன்படிக்கையினுடைய தனித்துவமான முதலாவது ஆசீர்வாதம் என்ன? கடவுள் தம்முடைய மக்கள் மனப்பூர்வமாக கீழ்ப்படிவின் வாழ்க்கைக்குள் வரும்படி தம்முடைய வல்லமையினால் அவர்களில் செயல்படுவதுதான் அவர் செய்கிற முதலாவது காரியம் என்று கடவுளே சொல்லுகிறார். அவர் அவர்களிடம் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஏதோ தூரமாக இருக்கிற ஒன்றல்ல. மாறாக, அவர், என் கட்டளைகளை நான் அவர்கள் இருதயத்தில் எழுதுவேன் என்கிறார். இது பரிசுத்த கட்டளைகளைப் பற்றிய இருதயப்பூர்வமான நாட்டம். ஆகவேதான், அவர்களில் அவைகளைக் கைக்கொள்ளுவதும் கீழ்ப்படிவதும் தொடர்ந்து முன்னேறுகிறதாக இருக்கும். “பழைய உடன்படிக்கையில் இருப்பதுபோல், என்னுடைய எதிர்பார்ப்புகளை நான் அவர்கள் முன் வைக்கிறதோடு மட்டும் இருந்துவிடாமல், அவர்களுடைய உள்ளான மனதிலும் கீழ்ப்படிவின் வாழ்வை நாடும்படிச் செய்வேன்” என்று கடவுள் சொல்லுகிறார். இது கடவுளுக்கான நம்முடைய கடமைப்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வைக் காட்டுகிறது. இதுதான் தேவபயத்தின் இரண்டாவது அம்சம். நியாயப்பிரமாணம் எனக்கு வெளியிலிருந்து, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குப் போதிக்கிறதோடு, அது எனக்குள்ளாகவும் இருந்து, அதன் பரிசுத்த கோரிக்கைகளை நான் நிறைவேற்றும்படி என்னை உந்தித்தள்ளுகிறதாகவும் இருக்கிறது.

கடவுள் தம் மக்களை சொந்தமாகக் கொண்டுள்ளார், அவர்கள் அவரைத் தம்மில் கொண்டுள்ளார்கள்

வேறு என்னவெல்லாம் தாம் செய்கிறதாக கடவுள் சொல்லுகிறார்? எரேமியா 32:38ல் சொல்லுகிறார், “அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்”. “நான் என்னையே அவர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பதினால், நான் அவர்களுடையவராயிருப்பேன்”. புதிய உடன்படிக்கையில் தம்முடைய குமாரனிலும், அவருடைய செயல்பாடுகளிலும் இதை அவர் வெளிப்படுத்தியிருப்பதை நாம் அறிவோம். கடவுள் அவர்களுடைய தேவனாக இருப்பதாக மட்டும் அவர் சொல்லாமல், அவர்கள் அவருடைய ஜனங்களாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அவர் தம்மை வெளிப்படுத்தியிருப்பதனால் அவர் அவர்களைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அவர்களும் அவரைக் கொண்டிருப்பார்கள். கடவுள் தம்முடைய மக்களோடு நெருக்கமான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அதாவது, அவர் அவர்களோடும், அவர்கள் அவரைக் கொண்டிருப்பதுமாகிய உறவின் மூலமாக அவர் எப்போதும் அவர்களைச் சுற்றி எங்கும் நிறைந்திருப்பதைக் காட்டுகிறார். தேவபயத்தின் இரண்டாவது அம்சத்தை இது சுட்டவில்லையா? தன் பாவத்திற்காக வருந்துகிற, கடவுளை விசுவாசிக்கிற பாவியான ஒருவன், பெரியவரும், எல்லாம் வல்லவரும், உயர்ந்தவரும், பரிசுத்தமானவருமான கடவுள், ஏதோ எங்கோ இருக்கிறவரல்ல, அவர் என்னுடைய கடவுளாக இருக்கிறார், நான் அவருடைய பிள்ளையாக இருக்கிறேன் என்பதை உணர்ந்தவனாக இருப்பான். இந்த உடன்படிக்கையின் உறவில், நான் அவருடையவன், அவர் என்னுடையவர். இதைத்தான் கடவுள் புதிய உடன்படிக்கையில் வாக்களித்திருக்கிறார்.

கடவுளைப் பற்றிய மெய்யான அறிவு

வேறு என்ன அவர் வாக்களித்துள்ளார்? எரேமியா 31:34ல் அவர் சொல்லுகிறார், “இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்”. இந்தப் புதிய உடன்படிக்கையில், தம்முடைய மக்களுக்குத் தம்மைப் பற்றிய மெய்யானதும் உள்ளார்ந்ததுமான அறிவைத் தருவதாக கடவுள் சொல்லுகிறார். பழைய உடன்படிக்கையில், சிலர் மட்டுமே கடவுளை மெய்யாக அறிந்திருந்தார்கள. ஆபிரகாமின் சரீரப்பிரகாரமான வாரிசுகளில், பெரும் கூட்டத்தினர் கடவுளை அறியாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவருடைய மகா வல்லமையின் செயல்பாடுகளை கண்ணாரக் கண்டிருக்கிறார்கள். ஆனால் அவருடைய இருதயத்தைப் பற்றிய அறியாமையிலேயே இருந்திருக்கிறார்கள். கடவுள் அவர்களிடத்தில், “எகிப்திலே உங்களுடைய புலம்பலை நான் கேட்டேன். உங்கள்மீது நான் பரிதாபமும் மனதுருக்கமும் கொண்டு, உங்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவதற்காக மோசேயை அனுப்பினேன்” என்று சொன்னார். அவர்கள் எகிப்தை விட்டு வெகுதொலைவில்கூட வரவில்லை, செங்கடலின் கரையோரத்தில் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் மோசேயிடம் வந்து, “கடவுள் எங்களை வெளியே கொண்டு வந்தது, எங்களைக் கொல்லுவதற்காக” என்றார்கள். அவர்கள் யேகோவாவை அறிந்திருக்கவில்லை. உண்மை என்னவென்றால், அவர்கள் அந்நாளில் செங்கடலின் கரையோரத்தில் நின்றுகொண்டிருந்தது, அவர்களுடைய புலம்பலைக் கர்த்தர் கேட்டு, அவர்கள்மீது மனதுருக்கம் கொண்டு, அவர்களை விடுவித்ததனால்தான். ஆனால் அவர்களோ கடவுளுக்கு எதிராகத் திரும்பி, “கடவுள் எங்களைக் கொல்லும்படியாக வெளியே கொண்டு வந்தார்” என்றார்கள். ஒரு தகப்பனாக உங்களுடைய பிள்ளையிடம், “உனக்காக நான் ஒரு அற்புதமான நாளை ஏற்பாடு செய்திருக்கிறேன். உனக்குப் பிடித்தமானவைகளைச் செய்வதற்கு உனக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்றுக்கு போகப் போகிறோம்” என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது, நீங்கள் யாவரும் உங்களுடைய காரில் ஏறி அமர்ந்திருக்கிறபோது, உங்கள் மகன், “இந்த காரை செங்குத்தான மலைமீது ஏற்றி அங்கிருந்து எங்களைக் கீழே தள்ளி கொல்லப் போகிறீர்களா” என்று கேட்கிறான். அப்போது ஒரு தகப்பனாக உங்களுடைய மனம் என்ன நினைக்கும்? ஒருவேளை நீங்கள் அவனுக்கு “மகனே, உனக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை. என்னுடைய திட்டம் என்ன என்பதைப் பற்றி ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன்” என்று சொல்லலாம். யூதர்கள் கடவுளை அறிந்திருக்கவில்லை. மீதமிருந்தவர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள், ஆனால் பெருங் கூட்டத்தினர் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

கடவுள் சொல்லுகிறார், புதிய உடன்படிக்கையில், அவர்கள் ஒருவருக்கொருவர் “கடவுளை அறிந்துகொள்” என்று பாடம் நடத்தத் தேவையில்லை. ஏனென்றால், புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களில் ஒன்றாக, அவர்களில் கடவுளைப் பற்றிய மெய்யானதும், இரட்சிக்கிறதும், உள்ளார்ந்ததுமான அறிவை அனுபவரீதியாக யாவரும் தங்களில் பெற்றிருப்பார்கள். அதாவது கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை கொண்டிருந்து, உள்ளார்ந்த மனதிலும் ஆவிக்குரிய வகையிலும் அதை அறிந்து, அவைகளை நேசிப்பார்கள். தேவபயத்தில் காணப்படும் மூன்று அம்சங்களையும் இங்கு காணமுடிகிறதில்லையா? “இவைகளை அவர்களுடைய இருதயத்தில் நான் வைப்பேன்” என்று கடவுள் சொல்லுகிறார். இந்த மூன்று அம்சங்களும் ஒருவனுடைய இருதயத்தில் இருந்தால், அவனில் தேவபயத்தைப் பார்க்க முடியும்.

பாவமன்னிப்பும் தேவபயமும்

புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்கெல்லாம் அடித்தளமானதும், ஏனைய ஆசீர்வாதங்களெல்லாம் அதனடிப்படையிலும், அதிலிருந்தும் வெளிப்படுகிறதுமான ஒன்றைப் பற்றித்தான் இப்பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். அதை நாம், எரேமியா 31:34ல் பார்க்கலாம், “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்”. இதையே வேறுவிதமாக சொல்லுவதானால், இதுவரை நாம் பார்த்த எல்லா ஆசீர்வாதங்களிலும், முழுமையானதும் இறுதியானதுமாகிய பாவமன்னிப்பாகிய ஆசீர்வாதத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றன. இந்த வார்த்தைகளின் மூலமாக கடவுள் வாக்களிப்பதென்னவென்றால், “நான் அனைத்தையும் செய்வேன். அதாவது, என் சித்தத்தை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தை உங்களில் ஏற்படுத்துவது, என்னைப் பற்றிய அனுபவரீதியான அறிவைத் தருவது, உங்களை என்னுடைய ஜனங்களாகக் கொண்டிருப்பது, அதன் மூலம் நீங்கள் என்னை உங்களுடையவராகக் கொண்டிருப்பது, ஆகிய இவையாவும், உங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்போடு பிரிக்கமுடியாதபடி இணைந்திருக்கின்றன.” இந்த பாவமன்னிப்பைப் பெற்றவன் மட்டுமே, இருதயத்தில் நாட்டப்படும் புதிய உடன்படிக்கையின் ஏனைய ஆசீர்வாதங்களை அறிந்திருப்பான். எரேமியா இதைக் காண்கிறார். கடவுள் இதை அவருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். தேவபயத்தைக் கொண்டிருப்பதும், புதிய உடன்படிக்கையின் இரத்தத்தினாலாகிய பாவமன்னிப்பைப் பெற்றிருப்பதும் பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பவை.

இவை இரண்டையும் ஒன்றிணைத்திருக்கிற ஆழமானதும் அற்புதமானதுமான ஒரு வேதப்பகுதி இருக்கிறது அது சங்கீதம் 130. அதில், சங்கீதக்காரன் மனச்சோர்வு கொண்டவராக இருக்கிறார். அவர் தன்னுடைய ஆவிக்குரிய நிலையை விவரிக்கிறபோது “ஆழங்களில்” இருப்பதாகச் சொல்லுகிறார். இந்த சங்கீதம் இப்படியாக ஆரம்பிக்கிறது, “கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்” (வசனம் 1). அந்த “ஆழங்கள்” என்பது என்ன என்பதைப் பற்றிய சில குறிப்புகள் இச்சங்கீதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே” (வசனம் 3). “ஆழங்கள்” என்று அவர் குறிப்பிடுவது, தன்னுடைய பாவத்தைப் பற்றிய ஆழமான குற்றவுணர்வையும், கடவுள் தன்னுடைய பாவத்தை மிகவும் கண்டிப்பான முறையில் கையாளுவாரானால் நிச்சயமாக தான் இல்லாமல் போய்விடுவேன் என்பதை உணர்ந்ததையுந்தான் இப்படிச் சொல்லுகிறார். இவ்வளவு பரிசுத்தமான கடவுள், தான் செய்த ஒவ்வொரு பாவத்தையும் கணக்கில் வைத்திருப்பாரானால், கடவுளுடைய பிரசன்னத்தில் நிற்பதோ, நியாயத்தீர்ப்பில் நிற்பதோ நிச்சயமாக தன்னால் முடியவே முடியாது என்பதை சங்கீதக்காரன் உணர்ந்தவராக இருக்கிறார். கடவுளுக்கு முன்பாக நாம் மகிழ்ச்சியோடு நிற்கமுடியாவிட்டால், அவரைப் பற்றிய பயத்துடன் நாம் நடக்க முடியாது. கடவுளுக்கு முன்பாக நிற்கிறபோதெல்லாம் பயமும் திகிலும் மட்டுமே ஏற்படுமானால், எப்படி அவரிடத்தில் மகிழ்ச்சியோடு உறவுகொள்ள முடியும்? இந்தவிதத்தில் யார்தான் அவர் முன்பாக நிற்க முடியும்? இதுதான் இந்த சங்கீதக்காரனை துளைத்தெடுக்கிற கேள்வி.

அவருடைய குழப்பதிற்கான பதிலை 4வது வசனம் தருகிறது, “உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.” சங்கீதக்காரன் சொல்லுகிறார், கர்த்தர் நம்முடைய அக்கிரமங்களைக் குறித்து வைத்து, அதற்கேற்ற நீதியை நிறைவேற்றுவாரானால், ஒருவனும் அவருக்கு முன்பாக நிற்க முடியாது. இந்த சங்கீதக்காரனும் கடவுளுக்கு முன்பாக நிற்க முடியாமலிருந்தால், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு உந்தித்தள்ளும் இருதயத்தைப் பற்றி அவர் ஒன்றும் அறியவில்லை என்றும், கடவுளை தன்னுடைய தேவனாக கொண்டிருக்கவும், தான் கடவுளுக்கான பிள்ளையாக இருக்கவும் அவரால் முடியவில்லை என்றும், இந்த சங்கீதக்காரன் உள்ளான மனதில் அனுபவரீதியாக கடவுளை அறிந்திருக்கவில்லை என்றுதான் சொல்ல முடியும். ஆகவேதான் கடவுள் அவரிலும் அவர் கடவுளிலும் மகிழ்ச்சியடைய முடியவில்லை. கடவுளைப் பற்றிய திகிலையும் பயத்தையும் ஒருவன் கொண்டிருக்கலாம், ஆனால் அவருக்கு முன்பாக பயபக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் சமாதானத்துடனும் நிற்க முடியாது.

இந்த குழப்பங்களுக்கான பதில் கடவுளிலுள்ள மன்னிப்பை கண்டறிவதில்தான் இருக்கிறது. ஒருவன் பரிசுத்த ஆவியானவருடைய செயல்பாட்டினாலும், விசுவாசத்தினாலும் பாவமன்னிப்பிற்கான கடவுளுடைய வழியைக் கண்டறிகிறபோது, அது அவனுடைய இருதயத்தில் தேவபயத்தை ஏற்படுத்தும். அது எப்படி உண்டாகும்? ஒருவேளை நாம் வாசித்த வசனம், “உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் ‘நீதி’ உண்டு” என்று இருந்திருந்தால், அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நாம் பயப்படும்படிக்கு அவரிடத்தில் மன்னிப்பு உண்டு என்று இருக்கிறது. கடவுள் அருளும் பாவமன்னிப்பைக் கண்டறிவது எப்படி தேவபயத்தை நம்மில் ஏற்படுத்தும்? பாவ மன்னிப்பின் அனுபவம் நம்மில் தேவபயத்தை ஏற்படுத்துவதற்கு இரண்டு வழிகளை நான் கூறுவேன். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சரீரப்பிரகாரமாக வருவதற்கு முன்பு, மறுபிறப்படைந்த ஆண்டவருடைய மனிதன் ஒருவன், சுவிசேஷத்தின் இந்த உண்மையை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சரீரப்பிரகாரமாக வந்து பரிசுத்த ஆவியானவரையும் அனுப்பிய பிறகு, நாம் அறிந்திருப்பதைவிடக் குறைந்தளவே அறிந்திருந்திருப்பார். அவர்கள் அதை கண்டார்கள், புரிந்துகொண்டிருந்தார்கள், களிகூரவும் செய்தார்கள். ஆனால் அவைகளை அனுபவப்பூர்வமாக அறிந்திருக்கவில்லை.

கடவுளுடைய குணாதிசயங்களின் வெளிப்பாடு

முதலாவது, தம்முடைய மக்களின் பாவமன்னிப்பிற்காக கிறிஸ்து நிறைவேற்றிய பணிகளில், கடவுள் தம்முடைய ஆச்சரியமான குணாதிசயங்கள் யாவையும், மகிமையான வகையில் ஒருமுனைப்படுத்தி, முழுமையாக அதை வெளிப்படுத்தியிருக்கிறார். கடவுளுடைய குணாதிசயங்களை அதாவது அவருடைய மகத்துவத்தையும், அவருடைய மகிமையையும் பற்றிய சரியான பார்வையில் தேவபயம் துவங்கினால், நிச்சயமாக பாவமன்னிப்பிற்கான கடவுளுடைய வழியைக் கண்டறிவதென்பது அவருடைய மகிமையான குணாதிசயங்களின் பிரகாசத்தைக் கண்டறிவதாகும். ஆகவே, கடவுளிடத்தில் பாவமன்னிப்பு இருப்பதினால், அவருக்கு பயப்படுகிறோம்.

அந்த பாவமன்னிப்பு தேவபயத்தோடு எப்படி தொடர்புடையதாகிறது? இக்கேள்விக்கான பதிலைக் கொடுக்கும் முயற்சிக்கு என்னை அனுமதியுங்கள். கடவுள் இந்த உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கிய விதத்தின் ஞானத்தைப் பற்றி சிந்திக்கிறபோது நாம் வியப்படைகிறோம். உயிரினங்களில் பல்வேறு வகைகள், வானமண்டலங்களின் படர்ந்து விரிந்த தன்மை, விண்ணுலகிலுள்ள நட்சத்திரக் கூட்டங்கள் என்பதெல்லாம் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. இவைகளின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளுடைய ஞானத்தைப் பற்றிச் சிந்திப்பதென்பது பாலகர்களின் ஞானத்தைப் போன்றது என்று எண்ணி நம்மை வாயடைத்துப் போகச் செய்வதுதான் கன்னியின் வயிற்றில் கடவுள் மனிதனாக உருவானது. கடவுளுடைய இந்த ஞானமே பாவியான மனிதனுடைய மன்னிப்பிற்கான திட்டத்தைத் தீட்டியது. அதாவது கடவுள்தாமே மனிதனாக வந்து, பாவியான மனிதனுடைய குற்றத்தை கடவுள்தாமே தன்மீது ஏற்றுக்கொண்டு, அவைகளிலிருந்து மனிதனை விடுவிப்பது என்ற திட்டம். அவரே நீதியுள்ளவராகவும், இயேசுவில் விசுவாசிக்கிறவர்களுக்கு நீதியை வழங்குகிறவராகவும் இருக்கிறார். ஆகவே கிறிஸ்து கடவுளுடைய ஞானம் என்று அழைக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை (1 கொரிந்தியர் 1:24). என்ன அருமையான ஞானத்தின் வெளிப்பாடு!

அப்படியானால், கடவுளுடைய பரிசுத்தத்தைப் பற்றி என்ன சொல்லுவது? ஆபிரகாமோடு நீங்களும் உடனிருந்து, சோதோம் கொமாரா மற்றும் அதை சுற்றியிருந்த நகரங்கள் தீக்கிரையாகி, நெருப்புச் சூளையிலிருந்து வெளியேறும் புகையைப் போன்று அங்கிருந்த நெருப்புத்தழலில் புகை உண்டானதை பார்த்திருந்தால் (ஆதியாகமம் 19:28), கடவுளுடைய பரிசுத்தத்தையும் பாவத்தின்மீது அவருக்கிருந்த வெறுப்பின் பயங்கரத்தையும் கண்டிருப்பீர்கள். கடவுளுடைய பரிசுத்தத்தின் அந்த வெளிப்பாடு நம்மை வெளிரிப்போகச் செய்யக்கூடியதாக இருக்கிறது, அதை கெத்சமனே மற்றும் கொல்கதாவோடு ஒப்பிடுகிறபோது. கெத்சமனேயின் குளிர்ந்த இரவில், அந்த தெய்வீக மனிதனுக்கு, இன்னும் சில மணி நேரங்களில் தனக்கு நடக்கவிருப்பதைப் பற்றி மேலதிக புரிதல் பிதாவினால் கொடுக்கப்படுகிறது. அந்தப் புரிதல் அவரை இருதயத்தில் திகிலடையச் செய்து, தளர்ச்சியுற்றவராக கீழே விழச் செய்தது. நமக்காக பாவமானார் என்பதின் ஆழமான அர்த்தத்தை இது விளக்குகிறது. அதாவது, மனித வர்க்கத்தினுடைய பாவத்தின் மீதான கடவுளுடைய கோபத்தின் பாத்திரத்திலுள்ள கடைசிச் சொட்டு மட்டும் அவர்மீது அன்று வடிக்கப்பட்டது. மிகுந்த வியாகுலத்துடனான ஜெபத்தைத் தொடர்ந்து, அவருடைய இரத்த நாளம் வெடித்து, இரத்தம் வியர்வையுடன் கலந்து வெளிப்பட்டது.

நாம் சிலுவையைப் பார்க்கிறோம், அதேநேரம் வானங்கள் காரிருளினால் அடைபட்டிருக்கிறதையும் பார்க்கிறோம். தேவகுமாரனுக்கு மூச்சிரைக்கிறதைக் காணமுடிகிறது. அத்தோடு, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” (மத்தேயு 27:46) என்று வானத்தைக் குத்திக் கிழிக்கிற கதறலைக் கேட்கிறோம். இவையாவும் ஏன் அவசியம்? இக்கேள்விக்கான சரியான பதில் என்னவென்றால், கடவுள் மகா பரிசுத்தமானவர், மனிதர்களுடைய பாவங்கள் தம்முடைய சொந்த நேசகுமாரன் மீது வைக்கப்பட்டபோது, நித்தியத்திலும் விளக்க முடியாதளவுக்கு அவர் கதறுகிறவரை தாம் மிகவும் நேசிக்கிற குமாரனாக இருந்தபோதிலும் தம்முடைய கோபத்தின் உக்கிரத்தை எந்தவகையிலும் தளர்த்தாமலும் குறைக்காமலும் அவர் மீது கொட்டித் தீர்த்தார். தாம் மிகவும் நேசிக்கிற தம்முடைய குமாரனாக இருந்தபோதிலும், ஒருபோதும் பாவம் செய்யாதவராக இருந்தபோதிலும், கடவுள் மகா பரிசுத்தராக இருப்பதினால் இப்படிச் செய்தார். இந்த உண்மையை அப்போஸ்தலனாகிய பவுல் இப்படி விவரிக்கிறார், “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோமர் 8:32).

கெத்செமனேயிலும் கொல்கதாவிலுமாக இயேசு அடைந்த பயங்கரமான வேதனையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாவமன்னிப்பிற்கான வழியை கண்டறிகிறபோது, அதில் கடவுளுடைய ஞானம் மற்றும் பரிசுத்தமாகிய குணாதிசயத்தின் வெளிப்பாட்டைக் காணமுடிகிறது. மேலும், கொலோசெயர் 2:15ல், கிறிஸ்து அந்தகாரத்தின் வல்லமையையெல்லாம் வெளியரங்கமான கோலமாக்கி, தம்முடைய மரணம் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதலினால் அவைகளின்மேல் வெற்றி சிறந்தார் என்று வாசிக்கிறோம். நரகத்தில் எல்லா வல்லமையும் மரண நிலையிலேயே அவரை வைத்திருக்க முயற்சித்திருப்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஆனால் பேதுரு சொல்லுகிறார், “அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது” என்று (அப்போஸ்தலர் 2:24).

அத்தோடு, தேவனுடைய அன்பும் இதில் வெளிப்படுகிறது. தேவனுடைய அன்பின் ஆழத்தை யாரால் அளவிட முடியும்? “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). தேவகுமாரன் எவ்வளவு தூரம் தம்முடைய மகத்துவமான அன்பை வெளிப்படுத்திக் கீழிறங்கி வந்திருக்கிறார் என்பதை சிலுவையில் பார்க்கலாம். இதன் காரணமாகவே அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிச் சொல்லுகிறார், “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:8). பாவமன்னிப்பிற்கான வழியைப் பற்றிய ஆவிக்குரிய புரிதல் எப்படி நம்மில் தேவபயத்தை உண்டாக்குகிறது என்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? இத்தகைய கடவுளுக்கு முன்பாக வியப்பேதும் இல்லாமல் எப்படி இப்படியான காரியங்களை நம்மால் கண்டறிய முடியும்? இந்த உண்மைகளையெல்லாம் ஒருவன் ஆழ்ந்து சிந்தித்தபிறகு, எப்படி ஆச்சரியமும், பயபக்தியும், குற்றவுணர்வும் கொள்ளாமல் இருக்க முடியும். அதாவது இந்த கடவுள் நம்முடைய இரட்சிப்பைப்பற்றி இடைவிடாமல் அக்கறைகாட்டுகிறவராக, இவைகளையெல்லாம் செய்திருக்கிறவராகையால், நம்முடைய விருப்பங்களையெல்லாம் அவருடைய சித்தத்திற்கு அடிபணிய வைத்து, நம்முடைய இருதயத்தின் எல்லா நேசத்தையும், கீழ்ப்படிவையும் காட்டுவதற்கு அவரே பாத்திரராக இருக்கிறார்.

கடவுளோடு சமாதானமும், தகப்பனிடத்தில் பிள்ளையின் பயமும்

பாவமன்னிப்பும், தேவபயமும் ஏன் சேர்ந்திருக்கிறது என்பதற்கான இரண்டாவது காரணம் என்னவென்றால், கடவுள் தம்முடைய குமாரன் மூலமாக வழங்குகிற பாவமன்னிப்பை விசுவாசத்துடன் ஏற்பதும், பாவத்தினிமித்தமாக உண்டாகிற குற்றவுணர்வோடு பெரும்பாலும் சேர்ந்திருக்கிற பயத்திலிருந்தும் திகிலிலிருந்தும் நம்மை விடுவிப்பதுமே. பாவியான ஒருவன் கடவுளால் மன்னிக்கப்படுகிறபோது, அவன் அதுவரை கடவுளைப் பற்றி கொண்டிருந்த பயமும் வெறுப்பும், அவர்மீது மதிப்பும், அன்புகலந்த பயமும், தத்துப்பிள்ளையினிடத்தில் காணப்படும் கீழ்ப்படிவுமாக மாறிவிடுகிறது. எல்லா விசுவாசிகளையும் பற்றி பவுல் இப்படியாகச் சொல்லுகிறார், “அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15). இத்தகைய அன்பைக் கண்டறிகிற யாதொருவனும், “இதோ, ஆண்டவரே, நான் என்னையே தந்துவிடுகிறேன், இதைத்தான் என்னால் செய்ய முடியும்” என்பதைத் தவிர்த்து வேறு என்ன சொல்ல முடியும்? கடவுள், தகுதியற்றவர்களான பாவிகளுக்கு தம்முடைய இரக்கத்தின் மூலமாக பாவமன்னிப்பை வழங்கியதினால், அவர்மீதான பயம், மரியாதையாகவும், ஒரு பிள்ளை தன் தகப்பனிடத்தில் காட்டும் பயமாகவும் மாறிவிடுகிறது. யோவான் “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1 யோவான் 4:18) என்று சொல்லுகிறபோது, இந்த உண்மையைத்தான் குறிப்பிடுகிறார். தேவபக்தியின் மையமாக வேதம் நமக்குக் காட்டுகிற தேவபயத்தை இல்லாமலாக்குவதற்காக வேதத்தில் இந்த வசனம் கொடுக்கப்படவில்லை. மாறாக, இப்போது நாம் படித்துவருகிற சத்தியத்தைத்தான் இது நிலைநிறுத்துகிறது.

நியாயப்பிரமாணம், ஒருபோதும் போட்டியிட முடியாததான தேவபயத்தை, இரக்கமும் கிருபையும் சேர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. இந்த தேவபயம் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் பயங்கரத்தைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அவருடைய இரக்கங்கள் மற்றும் பலன்களையே அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கும். பேரச்சத்தினால் உண்டாகிற பயம் நியாயத்தீர்ப்பையே அதிகமாக நினைக்கத் தூண்டும், நடுக்கத்துடன் கடவுளைவிட்டு தூர ஓடச் செய்யும். பரிசுத்த ஆவியினால் நாட்டப்படுகிற பயம், நமக்குக் கொடுக்கப்படுகிற இரக்கத்தைப் பற்றி நினைக்கத் தூண்டும், அது பயபக்தியுடன் அவரை ஆராதிக்கவும், அன்புடன் அவருடன் உறவுகொள்ளவும் செய்யும். இரக்கத்தைப் பெற்றதின் விளைவாக காணப்படும் தேவபயமானது, கடவுளுடைய கைப்பிடியளவுள்ள நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும் திறந்த கைகளுடனான அவருடைய ஆசீர்வாதங்களிலேயே பெரிதும் அக்கறைகாட்டும். இந்த உண்மைதான், சங்கீதக்காரனை, “தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கிவிடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது” (சங்கீதம் 33:18-19) என்று சொல்லும்படி வைத்தது.

தவறாக பயன்படுத்தப்படும் பாவமன்னிப்பு

இந்தப் போதனைகள் தொடர்பாக அநேக நடைமுறை பயன்பாடுகள் இருக்கின்றன. முதலாவதாக, இங்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லா மதங்களின் மடமையைப் பார்க்கிறோம். மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லா மதங்களும், பாவமன்னிப்பைத் தவிர்த்த வேறு வழிகளில்தான் தேவபயத்தைப் பற்றிப் போதிக்கின்றன, அல்லது தேவபயத்தை உண்டாக்காத பாவமன்னிப்பைப் பற்றித்தான் வாக்களிக்கின்றன. சுவிசேஷத்தின்படியாக அல்லாமல், மனித ஞானத்தின்படியாக தேவநீதியை அடைவதற்கான எந்தவொரு திட்டமும் இந்த இரண்டு வழிகளில் ஏதோவொன்றில் சென்று தோல்வியில்தான் போய் முடிவடையும். இன்னொருவரின் செயல்பாட்டினாலும் மரணத்தினாலும் நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பாவமன்னிப்பைப் பெறுவோம் என்று மனிதர்களிடத்தில் சொல்லுவது, அவர்கள் அதை நம்பி ஒழுக்கக்கேடான வாழ்க்கையை வாழுவதற்கு காரணமாக அமைந்துவிடும் என்று சிலர் சொல்லுவார்கள். இதுதான் ரோமன் கத்தோலிக்க சபையின் வாதம். இலவசமானதும் முழுமையானதுமான பாவமன்னிப்பைப் பற்றி அவர்கள் போதிப்பதில்லை. ஏனென்றால், அவ்வாறு விளக்கினால், அவர்கள் பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதால் பாவத்தைத் தொடர்ந்து செய்யலாம் என்று எண்ணங்கொள்ளுவார்கள் என்று அதற்கான காரணமாக சொல்லுகிறார்கள். கீழ்ப்படிவை ஏற்படுத்தக்கூடிய தேவபயத்தை ஒருவனில் உண்டாக்க வேண்டுமானால், அவனுடைய மனச்சாட்சியில் பயத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும், கடவுள் தன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறாரா, இல்லையா என்பதைப்பற்றிய சந்தேகத்தையும் கிளப்பிவிடுவதுதான் வழி என்று அவர்கள் நம்புகிறார்கள். அப்போதுதான் ஒரு நபர் கடவுளுக்கு கீழ்ப்படிவதற்கு பயத்துடன் முயற்சி செய்து, தொடர்ந்து இப்படியே நான் செய்துவந்தால் கடவுளுடைய அனுகூலத்தைப் பெற முடியும் என்ற எதிர்பார்ப்புடன் செயல்படுவான் என்கிறார்கள். கடவுள் தம்மைப் பற்றுகிற பயத்தை ஒரு மனிதனுடைய இருதயத்தில் ஏற்படுத்துவதற்கு கையாளுகிற வழிமுறையாக நாம் இதுவரை பார்த்து வந்தது, ரோமன் கத்தோலிக்கம் எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது, ரோமன் கத்தோலிக்கம் ஒரு போலி மதம். பவுல் “வேறு சுவிசேஷம்” என்று சொல்லுவது இதைத்தான். உண்மையில் இது சுவிசேஷமே அல்ல. ரோமன் கத்தோலிக்கத்தின் இந்த போலிப் போதனைக்கு நேர்எதிர்மாறாக, கடவுள் நம்முடைய மனச்சாட்சியில், நம்முடைய நிலைமைக்குத் தகுந்த முழுமையான பயத்தை ஏற்படுத்தி, கிறிஸ்துவின் செயலின் மூலமாக வருகிற பாவமன்னிப்பிற்கான வழிமுறையை எடுத்துக்காட்டி, அவர்மீது மரியாதையுடனான பயத்தை, அன்புடனும் நம்பிக்கையுடனும் கொண்டிருக்கும்படியான விசுவாசத்தைத் தருகிறார்.

இரண்டாவது விதமான போலி மதம், இதற்கு நேரெதிர்மாறானதாக இருக்கிறது. அது என்னவென்றால், ஒருவன் சிலுவையின் இரத்தத்தினால் முழுமையான பாவமன்னிப்பைப் பெறுகிறான் என்கிறது இந்தப் போதனை. ஆனால் அந்தப் பாவமன்னிப்பை ஏற்பதாக அவன் ஒரு முறை அறிக்கை செய்வதால், அதாவது, “பாவிகளுடைய ஜெபத்தைச் செய்வது” அல்லது “கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுப்பது” போன்றவற்றில் ஏதாவதொன்றைச் செய்துவிட்டபிறகு, எதுவுமே கடவுளுடைய அனுகூலத்திலிருந்து அந்த நபரைப் பிரிக்க முடியாது என்று அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்படியான அறிவிப்பு செய்தியைப் பெற்ற பெரும்பாலானவர்கள் தேவபயமற்றவர்களாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய மனச்சாட்சியின் உள்ளுணர்வின் காரணமாக சில காரியங்களில் கடவுளைப்பற்றிய அக்கறையைக் காட்டுகிறார்கள். ஆனால் இருதயத்திலிருந்து கடவுளுடைய பரிசுத்த கட்டளைகளைப் பற்றிக்கொண்டிருப்பதற்கான வல்லமையை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். உத்தரிக்கும் ஸ்தலத்தில் நாளை கண்விழிக்க வேண்டி வந்துவிடுமோ என்று ரோமன் கத்தோலிக்கர்களைப் போல் அவர்கள் பயப்படுவதில்லை. சிலுவையின் இரத்தத்தினால் பாவமன்னிப்பைப் பெற்றிருப்பதினால், நிச்சயமாக தாங்கள் பரலோகத்தில்தான் கண்விழிப்போம் என்று உறுதியாக அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் அவர்களுடைய வாழ்க்கையில் தேவபயமென்பது குறைவாகவே காணப்படுகிறது. கடவுளுடைய பரிசுத்த நாளான ஓய்வுநாளில், அவருக்காக ஒரு மணிநேரமோ அல்லது இரண்டு மணிநேரமோ கொடுத்துவிட்டு, கடவுளுடைய ஓய்வுநாள் கட்டளையைப் பற்றிய எந்தவிதமான அக்கறையுமில்லாமல், ஏனைய நேரமனைத்தையும் தங்களுக்கு விருப்பமான காரியங்களில் அவர்கள் செலவிடுவதன் மூலம் ஓய்வுநாளை அசுத்தமாக்குகிறார்கள். கடவுளுடைய கட்டளையைப் பற்றிய எந்தவிதமான எண்ணமும் இல்லாமல், ஓய்வுநாளில் தங்களுடைய வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலைகளிலும், தொலைகாட்சியிலும் கைப்பேசியிலுமாக தங்களுடைய நேரங்களை செலவிடுகிறார்கள். ஏன்? அவர்கள் தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதென்ற ஒரு பொய்யை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் தேவபயத்திற்கு அவர்கள் அந்நியராயிருந்து, அதன் வேரையோ கனியையோ தங்களில் கொண்டிராமல் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு தவறுகளும் அடிப்படையிலேயே குறைபாடுள்ளவைகள். நீங்கள் முழுமையான பாவமன்னிப்பின் ஆசீர்வாதங்களுக்குள்ளாக வராதவரை நிச்சயமாக உங்களில் தேவபயத்தைக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அந்த ஆசீர்வாதத்திற்குள்ளாக நீங்கள் வந்துவிட்டால், நிச்சயமாக அவருக்குப் பயப்படுகிறவர்களாக இருப்பீர்கள். அப்படியில்லாவிட்டால், கடவுளுடைய இரட்சிக்கும் இரக்கத்தின் அனுபவத்தை மெய்யாக ஒருநாளும் நீங்கள் பெறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

நடைமுறை பயன்பாடுகள்

சூடுண்ட மனச்சாட்சியைக் கொண்டிருக்கிறீர்களா? கடவுள் மற்றும் அவருடைய கட்டளைகளின் பயங்கரங்கள் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குக் காட்டியிருக்கின்றனவா? பயங்கரத்தைப் பற்றிய பயத்தைக் கொண்டிருந்தும், பாவமன்னிப்பின் அடிப்படையிலான பயத்தை அறியாதிருக்கிறீர்களா? அடிமைத்தனத்தின் ஆவியைக் கொண்டிருந்து, “அப்பா, பிதாவே” என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பற்றி அறியாதிருக்கிறீர்களா? இதுதான் உங்களுடைய நிலைமையாக இருக்குமானால், நீங்கள் இருக்கிறவண்ணமாக இயேசுவிடம் நீங்கள் வராதவரை, நீங்கள் ஆறுதல் பெறவோ தேவபயத்தைக் கொண்டிருக்கவோ போவதில்லை என்பதை நிச்சயமாக நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவரே புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர், அவர் இரக்கத்தின் அரியணையில் அமர்ந்திருக்கிறார், அந்த அரியணையினிடத்தில்தான் அவருக்குப் பயப்படும்படியான பாவமன்னிப்பிற்கான வழியிருக்கிறது. அவரை உங்களுடைய ஆண்டவராக இரட்சகராக விசுவாசியாதவரை அவருக்கு நீங்கள் பயப்படப் போகிறதில்லை. நீங்கள் இருக்கிறவண்ணமாக அவரிடத்தில் வாருங்கள். அதைத்தான் அவர் வரவேற்கிறார். அப்போது அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுகிறார். ஆண்டவராகிய இயேசுவின் எதிரிகள் அவரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு “இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்” (லூக்கா 15:2). உண்மையில், அவர்களுக்கே தெரியாமல் இந்த மகிமையான சத்தியத்தை அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கலக்கமுற்றிருக்கிற ஆத்துமாக்களுக்கான ஆறுதல் வார்த்தையும் இங்கிருக்கிறது. தங்களை மிகவும் பாவியாக உணருகிற, கடவுளுடைய மெய்யான பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் சில வேளைகளில், இவ்வளவு காலமாக கடவுள் தங்களை எப்படித்தான் பொறுத்துக்கொண்டிருக்கிறாரோ என்று ஆச்சரியப்படுவார்கள். இது உங்களுடைய நிலைமையாக இருந்தால், உங்களுடைய பாவத்தைப் பற்றியெல்லாம் மறந்துவிட்டு, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள் என்று போதிக்கிறவர்களின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள். உங்களுடைய பாவங்களை மறக்காதீர்கள். மாறாக, பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் உங்களுக்குக் காண்பிக்கட்டும். அவருக்குத் தெரியும் நீங்கள் அவைகளைத் தாங்குவீர்கள் என்று. ஏனென்றால், உங்களுடைய பாவங்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைதான் அவர் உங்களுக்கு காண்பித்திருக்கிறார். கடவுளுடைய ஆவியானவர், உங்களையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து இப்படிச் சொல்ல வைப்பார், “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே”. பிறகு, உங்களுடைய பாவங்களைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறபோது, பாவமன்னிப்பை வழங்குகிற கடவுளுடைய மகிமையின் சிறப்பை எண்ணி வியப்படைவீர்கள். பாவமன்னிப்பை வழங்குகிற அவருடைய மகிமையின் சிறப்பை எவ்வளவாக நீங்கள் பார்க்கிறீர்களோ, அவ்வளவாக அவருக்குப் பயப்படுவீர்கள் – “உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு”. ஆக்டோவியஸ் வின்ஸ்லோ என்பவர் சொல்லுகிறார், “உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளைக் கிறிஸ்துவினுடைய இரத்தத்தில் அமிழ்த்தி ஊறவையுங்கள்”. இதைத்தான் நாம் யாவரும் செய்ய வேண்டும். உங்களுடைய நடவடிக்கைகளை அதில் ஊறவைத்து, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவிடம் மறுபடியும் மறுபடியும் வருகிறபோது, உங்களுடைய இருதயத்தில் தேவபயமானது ஆழ ஊன்றியிருப்பதைக் காண்பீர்கள். அது உங்களுடைய அன்றாட வாழ்க்கையை அதிகமதிகமாக ஒழுங்குமுறைப்படுத்தும்.

தங்களுடைய ஆவிக்குரிய நிலையைப் பற்றிய விஷயத்தில் வஞ்சிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நம்பிக்கையின் உறுதியைக் காட்டும் சத்தியமும் இங்கிருக்கிறது. பயங்கரத்தைப் பற்றிய உணர்வும், நரகத்தைப் பற்றிய பயமும் இல்லாதபோது, நீங்கள் பாவமன்னிப்பைப் பெற்றிருப்பதாக நீங்கள் எண்ணலாம். ஏனென்றால், உங்களுக்குள்ளாக எல்லாம் நன்றாகவே இருப்பதாக சிலர் உங்களை நம்ப வைப்பார்கள். அப்போது நீங்கள் சொல்லுவீர்கள், “புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தை நான் பெற்றிருக்கிறேன்” என்று. ஆனால் கேள்வி என்னவென்றால், “தேவபயம் எங்கே?” அவர் உங்களை தம்முடைய உடன்படிக்கையில் உட்படுத்தியிருந்தால், உங்களுடைய இருதயத்தில் தம்மைப் பற்றும் பயத்தை வைப்பதாக கடவுளுடைய சொந்த வார்த்தைகளே சொல்லுகின்றன. அவருக்கான உங்களுடைய கடமைப்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? எங்கும் படர்ந்திருக்கிற அவருடைய பிரசன்னத்தைப் பற்றிய உணர்வை உங்களுடைய வாழ்க்கையில் காணமுடிகிறதா? பாவமன்னிப்பைப் பற்றிய உங்களுடைய புரிதல் தேவபயத்துடன் கட்டப்பட்டிருக்கிறதா? இன்னும் கொஞ்சம் நேரடியாக சிலவற்றைச் சொல்லுகிறேன். யாரெனும் ஒருவர் உங்களுடைய பிள்ளைகளிடத்தில், “உங்களுடைய தாய் தகப்பனிடத்தில் காணப்படும் குணாதிசயங்களில் எல்லாவற்றையும்விட முதன்மையானதாக நீங்கள் பார்க்கக் கூடியது எது?” என்று கேட்டால், “அது தேவபயம்” என்று உங்கள் பிள்ளைகளால் சொல்ல முடியுமா? “என்னுடைய வீட்டில் நடக்கிற எந்தவொரு விஷயத்திலும், என்னுடைய அப்பா, கடவுளுடைய வார்த்தை அந்த விஷயத்தைப் பற்றி என்ன சொல்லுகிறது என்பதிலேயே எப்போதும் முதலாவது அக்கறைக்காட்டுவார்” என்று உங்களுடைய பிள்ளை சொல்லுமா? என்னுடைய அப்பா, அம்மாவிடம் தேவபயம் என்பதுதான் முதன்மையான குணாதிசயமாக இருக்கிறது என்று உங்களுடைய பிள்ளையால் சொல்ல முடியுமா? நீங்கள் தேவபயத்துடன் வாழுகிறீர்கள் என்ற சாட்சியத்தை உங்களுடைய பிள்ளைகளிடத்தில் கட்டாயப்படுத்தி வாங்க முடியாது. அதை நீங்கள் பெற வேண்டும். மெய்யாகவே நீங்கள் தேவபயத்துடன் வாழுகிறதின் மூலமாக மட்டுமே அதை பெறமுடியும்.

உங்களுடைய பிள்ளைகளோ அல்லது உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களோ, அப்படியான சாட்சியத்தை உங்களைப் பற்றி சொல்லாமலிருந்தால் அதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டாமா? ஒருவேளை அப்படியிருந்தால், இன்றே நீங்கள் கடவுளை நோக்கி, “கடவுளே, மெய்யாக உமக்கு பயப்படும் பக்குவம் என்னில் ஆரம்பிக்க, பாவமன்னிப்பின் கிருபையைக் காணக்கூடிய பார்வையை எனக்குத் தாரும்” என்று கெஞ்சுங்கள். பாவமன்னிப்புடனான புதிய உடன்படிக்கையின் அனைத்து கிருபையுள்ள பலன்களின் துவக்கத்தையே, தேவபயமானது மெய்யான விசுவாசியினுடைய அடையாளமாக காட்டுகிறது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s