1517ல் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் கத்தோலிக்க மதத்திற்கெதிரான தன்னுடைய போதனைகளை 95 குறிப்புகளாக எழுதி ஜெர்மனியில் விட்டன்பேர்க் எனும் இடத்தில் இருந்த கோட்டைக் கதவில் பதித்தார். அக்காலத்தில் முக்கியமான மத, அரசியல் விவாதங்களில் ஈடுபடுகிறவர்கள் இவ்வாறு செய்வது வழக்கம். இதன் மூலம் இந்தக் குறிப்புகள் பற்றி தன்னோடு விவாதத்தில் ஈடுபட கல்விமான்களுக்கும், மதகுருமாருக்கும் லூத்தர் அழைப்புவிடுத்தார். இந்தத் 95 குறிப்புகளை எழுதி போப் 10ம் லியோவுக்கு எதிராக மார்டின் லூத்தர் போராட்டத்தை ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணமுண்டு. அன்று போப் லியோ ரோம் நகரத்தில் செயின்ட் பீட்டர்ஸ் பெசீலிக்காவை கட்டுவதற்கு மக்களிடம் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். லூத்தரை மனக்கசப்படையச் செய்தது பெசீலிக்கா கட்டியது அல்ல; அதைக் கட்டுவதற்கு போப் பணம் சேர்த்தவிதமே. போப் லியோ மக்களிடம் பணம் பெறுவதற்காக, பெசீலிக்கா கட்டுவதற்கு அவர்கள் கொடுக்கும் பணத்தொகைக்கேற்ப அவர்களுடைய பாவங்களை மன்னித்து பாவமன்னிப்புப் பத்திரத்தைத் தானே கையெழுத்திட்டு வழங்குவதாக உறுதிமொழி தந்திருந்தார். இதுவே லூத்தரைக் கொதிப்படையச் செய்தது.
மக்களுக்கு பாவமன்னிப்புக் கொடுக்க கத்தோலிக்க போப்பால் எப்படி முடியும் என்ற கேள்வி உங்களுக்கெழலாம். அதுவரை இருந்துள்ள பரிசுத்தர்கள் (Saints) அனைவரும் செய்துள்ள நற்கிரியைகளெல்லாம் பொக்கிஷமாக கத்தோலிக்க மதத்தின் கரத்தில் வைக்கப்பட்டிருப்பதாக கத்தோலிக்க மதம் போதித்து வந்தது. கிறிஸ்துவின் கிரியைகளின் பலன்களும் இந்தவிதமாக தங்கள் சபைக்கே கொடுக்கப்பட்டிருப்பதாக கத்தோலிக்க மதம் கூறிவந்தது. இதன் காரணமாக எவராவது பாவத்தில் சிக்கிக் கொண்டிருந்தால், அவர்களுடைய பாவம் போவதற்காக தங்களிடம் இருக்கும் நற்கிரியைகளின் பலன்களாகிய பொக்கிஷத்தில் இருந்து அவர்களுடைய பாவத்துக்கு கிரயமாக ஒரு குறிப்பிட்ட அளவை அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் பாவத்தை மன்னித்து, அந்த மன்னிப்புக்கு அத்தாட்சியாக போப் கையெழுத்திட்ட பாவமன்னிப்புப் பத்திரத்தைத் தங்களால் தரமுடியும் என்பது கத்தோலிக்க மதப்போதனையாக இருந்தது.
மார்டின் லூத்தர் ஏற்கனவே பல காலமாக தன்னுடைய பாவம் உணர்த்தப்பட்டு இரட்சிப்புப் பற்றியும், இரட்சிப்பின் நிச்சயம் பற்றியும் கேள்விகள் கேட்டு அவற்றிற்கான விளக்கங்களை நாடி சுவிசேஷ ஞானத்தை அடைந்திருந்தார். போப்பின் பாவமன்னிப்பு பத்திரமும், அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் லூத்தரை சமாதானத்தோடு இருக்கவிடவில்லை. வேதம் போதிக்கும் சுவிசேஷத்திற்கு முற்றிலும் எதிரான போலிப்போதனையாக இதைக் கருதி போப்புக்கு எதிராகக் கிளம்பினார் லூத்தர். ஆகவே, 16ம் நுற்றாண்டு சீர்திருத்தவாதம் ஏனைய முக்கிய போதனைகளான விசுவாசத்தின் மூலம் மட்டுமே நீதிமானாகுதல், வேதம் மட்டுமே அதிகாரம் கொண்டது போன்ற போதனைகளை மக்கள் முன்வைத்தபோதும் சீர்திருத்தவாதத்திற்கான பிரதான காரணம் போப் லியோ அறிமுகப்படுத்திய பாவமன்னிப்புப் பத்திரமும், அதற்குக் கொடுத்த விளக்கமுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். லூத்தரைப் பொறுத்தவரையில் போப்பின் செயல் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு முற்றிலும் எதிரானது. மக்கள் பெசீலிக்கா கட்டுவதற்கு கொடுக்கும் பணமாகிய நற்கிரியையின் மூலம் அவர்கள் செய்திருக்கும் பாவத்தைக் கத்தோலிக்க மதம் மன்னிக்கமுடியும் என்ற போப்பின் விளக்கம், ஒருவன் தன்னுடைய நற்கிரியைகளினால் தன் பாவத்திற்கு மன்னிப்புப் பெற்று இரட்சிப்பை அடையமுடியும் என்ற போலிப்போதனை என்று லூத்தர் அதை வைராக்கியத்தோடு எதிர்த்தார்.
95 குறிப்புகள்
லூத்தர் தன்னுடைய 95 குறிப்புகளை சாதாரண மனிதர்கள் வாசிப்பதற்காக மக்கள் மொழியில் எழுதவில்லை. படித்த, கல்விமான்களும், விரிவுரையாளர்களும், மதஅதிகாரிகளும் அதுபற்றித் தன்னோடு அறிவுபூர்வமாக விவாதம் செய்வதற்காக அதை இலத்தீன் மொழியில் எழுதியிருந்தார். பின்னால் அது ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு கோட்டைக் கதவில் பதிக்கப்பட்டது. இந்தக் குறிப்புகள் மூன்று முக்கிய விஷயங்களை முன்வைத்தது. (1) கெதீட்ரல் கட்டுவதற்கு பாவமன்னிப்புப் பத்திரம் விற்பது. (2) பாவமன்னிப்புக் கொடுக்கும் வல்லமை தனக்கிருப்பதாக போப் சொல்வது. (3) பாவஉணர்வடைந்திருக்கும் ஆத்துமாக்களுக்கு பாவமன்னிப்புப் பத்திரம் ஏற்படுத்தும் பெரும் ஆத்தும துன்பம் ஆகியவையே அவை. பாவமன்னிப்புப் பத்திரங்கள் ஆத்துமாக்களைத் தவறான வழியில் நடத்துவதாக லூத்தர் நம்பினார்.
லூத்தரின் 95 குறிப்புகள் நற்கிரியைகள் பற்றிய கத்தோலிக்கப் போதனையைத் தகர்த்தன. பாவமன்னிப்புப் பத்திரங்களுக்கும் நற்கிரியைகளுக்கும் இருக்கும் வேறுபாட்டை லூத்தர் உணர்த்த முயன்றார். ஒருவன் துன்பப்படுகிறவர்களுக்கு செய்வதால் கிடைக்கும் பயன் பாவமன்னிப்புப் பத்திரத்தைப் பெறுவதால் அடைய முடியாது என்றார் லூத்தர். பாவமன்னிப்புப் பத்திரங்களால் ஒருவனை நல்லவனாக்க முடியாது என்றன இக்குறிப்புகள். அதிகமாக பணம் வைத்திருக்கும் ஒருவன் அவற்றை எதிர்காலத்துக்காக சேமித்து வைப்பதை விட்டுவிட்டு பாவமன்னிப்புப் பத்திரங்களில் செலவிடுவது ஊதாரித்தனம் என்றார் லூத்தர். போப் பெசீலிக்கா கட்டுவதற்கு மக்களிடம் பணம் கேட்பதைவிட தான் சேர்த்துவைத்திருக்கும் சொத்தில் இருந்து செலவிட வேண்டும் என்றார் லூத்தர். இந்தக் குறிப்புகளின் இறுதி நான்கு குறிப்புகளும் கத்தோலிக்க மதம் அளிக்கும் பொய்யான சமாதானத்தை விடுத்து கிறிஸ்து மட்டுமே அளிக்கக்கூடிய மெய்யான சமாதானத்தை அனைவரும் நாட வேண்டும் என்பதை முன்வைத்தன.
95 குறிப்புகளின் இன்றைய பயன்பாடு
லூத்தரின் இந்தக் குறிப்புகள் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதத்தின் முக்கிய போதனைகளை முன்வைக்காதபோதும் அந்தச் சீர்திருத்தவாதத்தை ஆரம்பித்து வைத்த கருவியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சீர்திருத்தவாதத்தின் அடிப்படைப் போதனையான கிறிஸ்தவ சுவிசேஷத்தின் மெய்த்தன்மையையே இந்தக் குறிப்புகள் சுட்டிக்காட்டி கத்தோலிக்க மதத்தின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டின. லூத்தர் தான் பணிபுரிந்த ஆத்துமாக்களுக்கு மெய்யான இரட்சிப்பும், இரட்சிப்பின் நிச்சயமும் கிடைக்கவேண்டும் என்ற ஆதங்கத்துடனேயே இந்தக் குறிப்புகளை வெளியிட்டு போப்பை எதிர்த்தார். இதுபற்றிய விவாதங்களில் மேலும் மேலும் ஈடுபட்டபோது லூத்தரின் வேதஞானமும் அதிகரித்து இரட்சிப்பு பற்றிய தெளிவான விளக்கங்களை லூத்தர் அளிக்க ஆரம்பித்தார். ஆகவே, 16ம் நூற்றாண்டின் மாபெரும் சீர்திருத்தவாதத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருங்கருவியாக இந்தத் 95 குறிப்புகள் அமைந்தன.
மேலும் லூத்தர் விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக முடியும் என்ற போதனையை அறிவுபூர்வமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார். கத்தோலிக்க மதம் போதித்த உத்தரிக்கும்ஸ்தலத்தை அவர் அடியோடு நிராகரித்தார். அப்படியொரு இடம் இல்லை என்பதை வேதஆதாரங்களோடு நிரூபித்தார். போப்பின் பாவமன்னிப்புப் பத்திரம் மட்டுமல்ல, வேறு எந்த உயர்தர மனிதனிடம் பெறுகிற மன்னிப்பும் எவருக்கும் பாவமன்னிப்பளிக்காது என்று உறுதியாக லூத்தர் போதித்தார். இதெல்லாம் லூத்தரை போப்பின் அதிகாரத்தின் ஆணிவேரையே அசைக்கும்படியான போராட்டத்தில் ஈடுபடுத்த, மூன்று வருடங்களுக்குப் பிறகு 1520ல் இதற்கெல்லாம் லூத்தர் பதிலளித்து தான் எழுதியவற்றைத் தவறு என்று மறுதலிக்கவேண்டும் என்று போப் கட்டளையிட்டார். 1521ல் லூத்தர் கத்தோலிக்க சபையில் இருந்து நீக்கப்பட்டார்.
இன்று உலகமறிந்த ஒரு ஆவணமாக லூத்தரின் இந்த 95 குறிப்புகள் இருக்கின்றன. அன்று நாடாளும் பேரரசர்களையே மண்டியிட வைத்துக்கொண்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரத்தை எவரும் உரசிப்பார்க்கத் துணிந்திருக்க மாட்டார்கள். அது தற்கொலை செய்துகொள்வதற்கு சமமானது என்பது மக்கள் அறிந்திருந்த உண்மை. கர்த்தர் மட்டுமே அளிக்கக்கூடிய நெஞ்சுரமும், தீவிரமான ஆவிக்குரிய விசுவாசமும் இல்லாமல் எந்த மனிதனும் வாழ்க்கையில் இத்தகைய காரியத்தை செய்யத் துணியான். சத்தியத்திற்கு விரோதமான செயல் பாவமன்னிப்புப் பத்திர விநியோகமும், பாவமன்னிப்புப் பற்றிய போப்பின் போதனையும் என்பதை லூத்தர் உணர்ந்தபோது அவர் உயிர் பயமில்லாமல் சத்தியத்தைப் பாதுகாக்கவும், ஆத்துமாக்களை வழிநடத்தவும் முன்வந்தார். இத்தகைய சத்திய வைராக்கியமும், அதை நிலைநாட்டத் துடிக்கும் நெஞ்சுரமும் அன்றுபோல் இன்றும் அவசியமாக இருக்கிறது. மேலும் லூத்தர்கள் எழவேண்டிய காலத்தில் நாமிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத வரலாற்றின் மூலம் இதை வாசகர்கள் உணர்ந்தாலே போதும். வாசகர்களே! நீங்கள் போய்க்கொண்டிருக்கிற சபைகளிலும், வாசிக்கும் நூல்களிலும் மெய்யான வேதசத்தியங்களுக்கு எதிரான போலித்தனமான போதனைகள் இருக்கின்றனவா? ஆத்துமாக்களை வஞ்சிக்கும் போதனைகளாக, ஆட்டுத்தோல் போர்த்தியவர்களால் அவை கொடுக்கப்பட்டபோதும் அவற்றை உங்களால் உணரமுடிகின்றதா? அப்படி உணர்வீர்களானால் விசுவாசிகளான நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? லூத்தர் 1517ல் செய்ததை செய்யமுடியாதபடி உங்களை உட்கார வைத்திருப்பது எது? லூத்தருக்கு இருந்த நெஞ்சுரம் உங்களுக்கு இல்லாமலிருப்பதற்கு எது காரணம்? இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் கர்த்தர் முன் பதிலளித்துத்தான் ஆகவேண்டும். லூத்தரின் 95 குறிப்புகள் உங்களை சிந்திக்கவைக்கட்டும்; ஆவியானவர் உங்களோடு பேசட்டும்.