கிறிஸ்தவ வைராக்கியமும் முதலாவது கட்டளையும்

பக்தி வைராக்கியம் – 6 – டேவிட் மெரெக்

[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]  

இத்தொடரை ஆரம்பித்தபோது, ரோமர் 12:9-11 வரையுள்ள வசனப் பகுதியை விரிவாகப் படித்தோம். அதன்பிறகு, இந்த பகுதியைச் சுற்றியுள்ள வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை போதனைகளைப் படித்தோம். இப்போது இப்பாடத் தொடரின் மைய வசனமாகிய ரோமர் 12:11ஐ, வேதத்திலுள்ள மற்ற பகுதிகளோடு தொடர்புபடுத்தி பரந்த எல்லையளவில் ஆராய்ந்து பார்க்கப் போகிறோம்.

இந்த ஆக்கத்தில், 11வது வசனத்தின் நடுப்பாகமாக இருக்கிற “ஆவியிலே அனலாயிருங்கள்” என்பதைக் குறித்து விரிவாகப் படிக்கப் போகிறோம். முதல் ஆக்கத்திலேயே இந்த வசனத்தைப் பற்றிப் பொதுவாக நாம் படித்திருக்கிறோம். “ஆவியிலே அனலாயிருங்கள்” என்கிற இதனுடைய மொழிநடை வேதத்தின் இன்னொரு வசனத்தின் மொழிநடைக்கு ஒத்ததாக இருக்கிறதைப் பார்த்தோம். அந்த வசனப்பகுதி, உபாகமம் 6:4-5 வசனங்கள்,

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “இருதயம்” “ஆத்துமா” என்பது ரோமர் 12:11ல் வருகிற “ஆவி” என்பதற்கான இணை வார்த்தைகள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று வார்த்தைகளும் நம்முடைய சரீரத்தைத் தவிர்த்த அதற்கு உள்ளிருக்கிறதைக் குறிக்கின்ற வார்த்தைகள். ஆகவே கடவுள் மீது உணர்வுப்பூர்வமாக முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்பு காட்டுதல் என்பது ஆவியிலே அனலாயிருப்பதற்கான இணையாகும்.

முதலாவது நாம், உபாகமம் 6:5 வசனத்தின் மொழியமைப்பில் அதிக கவனம் செலுத்தப் போகிறோம். பிறகு, வேதத்தின் ஏனைய பகுதிகளில் இதேவித மொழியமைப்பு இருக்கிற பகுதிகளை ஆராய்வோம்.

1. இக்கட்டளையின் மொழிநடை. உபாகமம் 6:5 வசனத்திலுள்ள கட்டளை பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் மீண்டும் இதேவிதமாக முழுமையாக சொல்லப்படவில்லை. ஆனால், புதிய ஏற்பாட்டில் மறுபடியுமாக சொல்லப்பட்டுள்ள எல்லா இடங்களிலும் இதனோடு கூடுதலாக சில பகுதிகள் சேர்க்கப்பட்டுத்தான் சொல்லப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் இயேசு இதைக் குறிப்பிட்டுச் சொல்லிய ஒரு பகுதியை நாம் பார்க்கலாம் – மாற்கு 12:28-34. உபாகமம் 6:4-5 வசனங்களைத்தான் இயேசு குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கட்டளையின் மொழியமைப்பு பற்றி இரண்டு காரியங்களை கவனியுங்கள்.

அ. இந்தக் கட்டளையின் உச்சகட்ட முக்கியத்துவம் – கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளிலெல்லாம் இது முதன்மையானது என்று இயேசு அடையாளம் காட்டுகிறார். அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. பிறகு இரண்டாவது கட்டளையைப் பட்டியலிட்டு, இந்த இரண்டையும்விட கடவுளுடைய கட்டளைகளில் பெரியது வேறு எதுவுமில்லை என்று அறிவிக்கிறார். இதை சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் செய்யும்படி கடவுள் கட்டளையிட்டுள்ள ஒழுக்க நீதிச் சட்டங்களில், அவரிடம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருவதைவிட முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்று இயேசு சொல்லுகிறார். (பிறகு இரண்டாவதாக நம்மைப் போல் பிறரை நேசிக்க வேண்டுமென்கிறார். லேவியராகமம் 19:18).

ஆனால் இங்கே இன்னும் அதிக உண்மைகளைக் காண்கிறோம். இயேசு எடுத்துரைத்த இந்த இரண்டு கட்டளைகளின் முக்கியத்துவத்தை அந்த வேதபாரகன் ஒப்புக்கொண்டான். பழைய உடன்படிக்கையின்படி கடவுளுக்கு செலுத்தப்படும் சர்வாங்க தகனபலி மற்றும் ஏனைய பலிகளைவிட இவை இரண்டுமே மிகவும் முக்கியமானது என்று அவன் சொன்னான். இந்த மனிதனின் வார்த்தைகளுக்கு இயேசு எப்படி பதிலளித்தார் என்று கவனியுங்கள். அவனுடைய பதில் ஞானமானது என்ற வகையில் கவனிக்கச் சொல்லுகிறார். அந்த வேதபாரகன் தேவனுடைய ராஜ்யத்திற்கு தூரமானவன் அல்ல என்று இயேசு அறிவிக்கிறார். இயேசுவின் உண்மையான விசுவாசியாவதற்கு அவன் வெகு தொலைவில் இருக்கவில்லை. கடந்து போகப் போகிற, பழைய உடன்படிக்கையின் வெளிப்புறச் சடங்குகளையும் பரிசேயர்களால் ஏற்படுத்தப்பட்ட மனித சட்டங்களையும் தாண்டி அவன் சிந்தித்திருக்கிறான். மெய்யான கடவுள் பக்தி என்பது முழு மனிதனையும் உள்ளடக்கியது என்றும், குறிப்பாக அது இருதயத்தோடு சம்பந்தப்பட்டது என்றும் அவன் அறிந்திருந்தான். முழுமையாக கடவுளிடம் அன்புகாட்டுவது எவ்வளவு முக்கியமானது என்பதை அவன் அறியத் துவங்கியிருந்தான்.

தொடர்ந்து பார்ப்பதற்கு முன்பாக, இந்தப் பிரதான கட்டளையின் உச்சகட்ட முக்கியத்துவத்திலிருந்து நாம் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு பாடத்தை கவனியுங்கள். இந்த முதலாவது பிரதான கட்டளையானது, ரோமர் 12:11ல் கட்டளையிடப்பட்டுள்ள ஆவியிலே அனலாயிருங்கள் என்பதை விளக்கும் மற்றொரு வழிமுறையாகும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், பக்தி வைராக்கியம் கொண்டிருப்பதென்பது கடவுளை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் நேசிப்பதாகும். அது உண்மையானால், பக்தி வைராக்கியம் இருப்பதையே கடவுள் உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறார். ஆகையால் நமக்கும் அதுவே உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

இப்போது முதலாவதும் பிரதானமானதுமான கட்டளையைக் குறித்த இன்னுமொரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன்.

ஆ. இந்த கட்டளையின் மையக் கடமை – முதலாவது மற்றும் இரண்டாவது பெரிய கட்டளைகள் இரண்டிலும் ஒரு பொதுவான விஷயம் உண்டு. இரண்டுமே நாம் அன்புகாட்ட வேண்டும் என்று கோருகின்றன. முதலாவது கட்டளையின்படி நாம் கடவுளிடத்தில் முழுமையாக அன்புகாட்ட வேண்டும். இரண்டாவது கட்டளையின்படி நாம் இயற்கையாக நம்மிடத்தில் அன்புகூருவதுபோல் பிறரிடத்தில் அன்புகாட்ட வேண்டும். “மனிதனுடைய ஒரே முழுமையான கடமையாகவும், ஒரே முழுமையான ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய கட்டளையாகவும் இருப்பது அன்பே” என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். அன்புகாட்டுதலாகிய கோரிக்கை எப்படி மையமாக இருக்கிறது என்பதை கடவுளுடைய வார்த்தையின் மற்ற பகுதிகளும் நமக்கு அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

ஆனால் எப்போது நாம் இந்த வகையில் நேசிக்க முடியும்? நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், இந்த இரண்டு கட்டளைகளிலும், கடவுள் நாம் செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறவைகளை செய்வதற்கு நாம் இன்னும் துவங்கவே இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இயற்கையில் நம்முடைய இருதயம் அதிக சுயநலங் கொண்டது. கடவுளுக்கு முன்பாக தைரியமாக நின்று நான் உம்மை முழுமையாக நேசித்திருக்கிறேன் என்று சொல்லக்கூடியவன் யார்? இதன்படி, நாம் அனைவரும் நம்மிலேயே கண்டனத்திற்குரியவர்கள். கடவுளின் பெரிய கட்டளைகளான இவைகளை நாம் எப்படிக் கடைபிடிக்கத் துவங்க முடியும்? மேலும், இப்படியே சென்றால், நாம் எப்படி பக்தியுள்ள கிறிஸ்தவ வைராக்கியத்தைத் துவங்க முடியும்?

அப்போஸ்தலனாகிய யோவான் இக்கேள்விகளுக்கு மிக எளிய வழியில் பதிலளிக்கிறார் – 1 யோவான் 4:19 (இந்த வசனத்தில் வரும் “அவரிடத்தில்” என்பது இங்கே இருந்திருக்கக் கூடாது). கடவுள் நம்மிடத்தில் காட்டிய அற்புதமான அன்பினிமித்தமாகவே நம்முடைய இருதயத்தில் எந்தவித அன்பும் ஆரம்பிக்கிறது. அந்த அன்பு எப்படி நம்மிடத்தில் காட்டப்பட்டது? (1 யோவான் 4:9-10). நாம் நித்திய அழிவை நோக்கி போய்க் கொண்டிருந்தோம். நாம் தேவகோபத்திற்கே உரியவர்களாயிருந்தோம். ஆனால் பிதாவாகிய தேவனோ தம்முடைய கோபத்தை தம்முடைய நேச குமாரன் மீது சிலுவையில் ஊற்றினார். இந்த வகையில் மாசற்ற தேவாட்டுக்குட்டி கடவுளின் நீதியை நிறைவேற்றியது. பாவத்திற்காக வருந்தும் பாவிகளாக, நாம் அவரை விசுவாசித்து நாடி வருகிறபோது, அவர் மூலமாக நாம் வாழ்வை அடைகிறோம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன் – நித்திய ஜீவனை உடையவன் (1 யோவான் 5:11-12). கடவுளின் அன்புக்காக அவரைப் போற்றுங்கள். நாம் மெய்யாகவே அவருடைய அன்பை ருசிபார்த்திருந்தால், நாமும் அன்பையே பதிலாக வழங்கியிருப்போம். நன்றியுடன் அவருடைய மாதிரியைப் பின்பற்றும்படி ஊக்கப்படுத்தப்படுகிறோம். ரோமர் 12:1ஐ சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய இரக்கங்களே ஆர்வமுள்ள இருதயத்தோடு நாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய நம்மை ஊக்குவிக்கிறது. தேவனுடைய இரக்கங்களை நாம் சரியானவிதத்தில் பார்க்கக் கூடுமானால், நம்முடைய பதில் நடவடிக்கையாக கடவுளிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருவோம். கடவுளிடத்தில் அன்புகூருகிறதன் விளைவாக, நாம் நம்முடைய அயலானிடத்திலும் அன்புகூருவோம். விசேஷமாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடத்தில் அன்புகாட்டுவோம். வாசியுங்கள் 1 யோவான் 4:11 (பிறகு 9-10). கடவுளுடைய பிள்ளைகளிடத்தில் நாம் அன்புகாட்டுவோம், ஏனென்றால், நாம், நம்முடைய மற்றும் அவர்களுடைய பிதாவினிடத்தில் அன்புகாட்டுவதனால் அப்படிச் செய்வோம். (1 யோவான் 4:20 – 5:1.)

நம்முடைய இருதயத்தின் சுயநலம் மற்றும் அன்பற்ற தன்மைகளை நாம் அறிந்திருக்கிறோம். இந்த அன்பு எங்கிருந்து வரும்? யோவானின் வார்த்தைகளுக்கே இது நம்மை மீண்டும் அழைத்துச் செல்லுகிறது “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியினால் நாமும் அன்புகூருகிறோம்”. நம்முடைய அன்பிலுள்ள பிரச்சனைகளை அவருடைய அன்பு எப்படிக் கையாளுகிறது? (உபாகமம் 30:4-6). இதைத் தொடர்ந்து வரும் வசனங்கள் யூதர்கள் பாபிலோனில் சிறைப்பட்டிருந்து விடுதலை பெற்றுவருவதைக் குறிக்கிறதாக இருக்கிறது. ஆனால் அதன் முழுமையான நிறைவேற்றம் புதிய உடன்படிக்கையில் தங்கியிருக்கிறது. கடவுளிடத்தில் நாம் அன்புகாட்ட வேண்டிய வகையில் அன்புகாட்ட வேண்டுமானால், பரிசுத்த ஆவியின் செயல்பாட்டினால் நம்முடைய இருதயத்தை அற்புதமாக மாற்றினால் மட்டுமே ஆகும். அன்பென்பது ஆவியின் கனி என்று புதிய ஏற்பாடு அறிவிக்கிறது (கலாத்தியர் 5:22). வைராக்கியமுள்ள இருதயம் கடவுளிடமிருந்தே வருகிறதென்று பார்த்ததுபோல் கடவுளிடத்திலும் மற்றவர்களிடத்திலும் அன்புகாட்டுவதும் கடவுளிடமிருந்தே வருகிறது. ஆகவே முழு இருதயத்தோடு பக்தி வைராக்கியம் கொண்டிருப்பது என்னிடத்தில் குறைவாக இருந்தால், நான் சிலுவையினிடத்திலே இன்று போக வேண்டியவனாக இருக்கிறேன். முதலாவது மற்றும் இரண்டாவது கட்டளையை நிறைவேற்றுவதில் என்னுடைய தோல்விகளை நான் அறிக்கையிட வேண்டும். கடவுளுடைய புதிதான பாவமன்னிப்பை நாட வேண்டும். என்னுடைய வாழ்வில் அதிகம் தேவையான ஆவியின் கனியாகிய அன்புக்காக தொடர்ந்து கடவுளிடம் மன்றாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

2. முதலாவது கட்டளையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே மொழியமைப்பு பழைய ஏற்பாட்டின் பிற இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்ப்போம். முதலாவது கட்டளை பழைய ஏற்பாட்டில் ஒரே ஒரு இடத்தில்தான் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியிருந்தேன் – உபாகமம் 6:5. ஆயினும், இந்த கட்டளையின் சில பாகங்களோ அல்லது மொழியமைப்போ பழைய ஏற்பாட்டின் பல பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கத்தில் மீதமுள்ள பகுதியில், இப்போதனையின் சுருக்கத்தைத் தரவிருக்கிறேன்.

இதை நான் ஏன் செய்கிறேன்? முதலாவது கட்டளையோடு தொடர்புடைய முக்கியமான ஒரு கேள்விக்கு இன்னும் பதில் காண வேண்டியிருக்கிறது. இப்போது நாம் பார்க்கப் போகும் பகுதிகள் அந்த முக்கிய கேள்விக்கு பதில் காண நமக்கு உதவியாக இருக்கும். அந்தக் கேள்வி: கடவுளிடம் உச்சகட்ட முழுமையான அன்புகாட்டுதல் எப்படியிருக்கும்? நம்முடைய வாழ்க்கையில் அதை எப்படிக் காண்பிப்பது? வேதத்தின் ஏனைய பகுதிகள் இதைப் பற்றி என்ன சொல்லுகிறதென்று பார்ப்போம். முதலாவது கட்டளைக்கு மிக நெருக்கமாக இருக்கும் பகுதிகளிலிருந்து நாம் துவங்கலாம்.

அ. உபாகமம் 13:1-4. வசனம் 3, முதலாவது மற்றும் பெரிய கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோமா இல்லையா என்பதற்கான பரீட்சை நமக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறது. இதுதான் அந்த பரீட்சை? ஒருவன் தனக்கு தீர்க்கதரிசன வரமுண்டு என்று சொல்லிக்கொண்டு வருகிறான், அவன் சொல்லிய தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. மேலும், அந்த தீர்க்கதரிசனம் அற்புதங்களையும் அடையாளங்களையும் முன்னறிவிக்கிறது, அவன் சொல்லிய அற்புதங்களும் அடையாளங்களும் மெய்யாகவே நிறைவேறுகிறது. ஆனால் இந்தத் தீர்க்கதரிசியோடும் அவனுடைய அடையாளங்கள் அற்புதங்களோடும் ஒரு பிரச்சனை உண்டு. அவன் மெய்யான கடவுளை விட்டும் அவருடைய வார்த்தைகளை விட்டும் விலகும்படி நம்மை வலியுறுத்தி வருகிறான். பொருளாதாரம் மற்றும் உடல் சுகம் கிடைக்கும் என்று கூறி அந்நிய தெய்வங்களை வழிபடும்படி நம்மை வற்புறுத்துகிறான். இதற்கு எப்படி நாம் பதில் தருவது? அவனுடைய தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லையா? அவனுடைய ஊழியத்தோடு தொடர்புடைய அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கவில்லையா? ஆனால் பரீட்சை இதுதான். ஆண்டவர் நம்மைப் பார்த்துச் சொல்லுகிறார் இயற்கைக்கு எதிரான அசாதாரண நிகழ்வுகள் நடந்து நாம் அவரிலும் அவருடைய வார்த்தையிலுமிருந்து விலக வேண்டும் என்று சொன்னாலும் நாம் அவரிலும் அவருடைய வார்த்தையிலும் நிலைத்திருந்தால் மட்டுமே அவருடைய முதலாவது மற்றும் பெரிய கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறவர்களாயிருப்போம். அதேவேளை, பொய்யான அற்புதங்களும் அடையாளங்களும் இருக்கிறதென்று வேதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. பிறகு வசனங்கள் 6-10, உங்களுடைய நெருக்கமான உறவினர்களோ நண்பர்களோ உங்களைக் கடவுளையும் அவருடைய வார்த்தையையும் விட்டு விலகச் செய்தால், அப்போதும் இதே தத்துவமே கையாளப்பட வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்தில், நாம் மிகவும் மதிக்கத்தக்க மனித உறவுகளை இழக்க நேரிட்டாலும் நம்முடைய கர்த்தராகிய ஆண்டவரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்புகூர அழைக்கப்பட்டிருக்கிறோம். இதுபோன்றதை செய்யும்படிதான் இயேசுவும் சொல்லியிருக்கிறார், யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான். (லூக்கா 14:26-27)

வேறுவிதமாக சொல்லுவதானால், நம்முடைய உறவுகள் மீது நியாயமானபடி வரவேண்டிய அன்பைக் காட்டிலும், நம்மீது நமக்கு இருக்கிற அன்பைக் காட்டிலும், அதிகமாக இயேசுவின் மீது அன்பு இருக்க வேண்டும். அவர்மீதுள்ள நம்முடைய அன்பைக் காட்ட வேண்டியபடி காட்டுவதற்காக நம்முடைய உறவுகளையும் நம்மையும் நாம் வெறுக்கிறதாகவும் சில நேரங்களில் தென்படலாம். இல்லாவிட்டால், அவருடைய சீடர்கள் என்று உரிமை கொள்வதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இருக்காது. கிறிஸ்துவின் மீது நாம் காட்டுகிற அன்பு வேறு எவரிடமோ அல்லது எதனிடமோ வைக்கிற அன்பையும்விட பெரிதாக இருக்க வேண்டும். ஆண்டவரைப் பின்பற்றுவதற்காக அவைகளை விட்டுவிலக நேரிடலாம் (மத்தேயு 19:29). முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் ஆண்டவரிடத்தில் அன்புகூருவதென்பது, கிறிஸ்துவின் சிலுவையைச் சுமப்பதையும் உள்ளடக்கியது.

உபாகமம் 13 ஆம் அதிகாரத்திலுள்ள இந்த முக்கிய பகுதியில் இன்னுமொரு விஷயத்தையும் சுருக்கமாகக் கவனியுங்கள். வசனம் 4ல், கடவுள் மீதுள்ள உச்சகட்ட அன்பின் சாதகமான காரணிகளின் பட்டியலையும் பாருங்கள் – அவரை பின்பற்றுதல், அவருக்கு பயப்படுதல், அவருக்குக் கீழ்ப்படிதல், அவரைச் சேவித்தல், அவரைப் பற்றிக்கொள்ளுதல். பழைய ஏற்பாட்டில் இது போன்ற இன்னும் அநேகமானவைகளை அடுத்து வரும் பகுதிகளிலும் காணலாம்.

ஆ. யோசுவா 22:5. கானான் தேசத்தைப் பிடிப்பதற்கு உதவியாக இருந்து, பிறகு தங்களுடைய வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த யோர்தானின் மறுகரையிலிருந்த கோத்திரங்களோடு யோசுவா பேசிக்கொண்டிருந்தார். அதில் அவர், அவர்கள் தொடர்ந்து உண்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த முதலாவது மற்றும் பிரதான கட்டளையை மீண்டும் எடுத்துச்சொல்லி விளக்கினார். அவர் “உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து” என்று துவங்கி “முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும்” என்று முடிக்கிறார் (ஆங்கில வேதத்தில் இவ்வசனம் இப்படியே முடிகிறது. தமிழில் இது வசனத்தின் நடுவில் வருகிறது). கடவுளிடம் உச்சகட்ட அன்புகாட்டுவது தொடர்பாக பல காரியங்களை இவை இரண்டிற்கும் நடுவில் விளக்குகிறார். அதில், அவருடைய வழிகளில் நடத்தல், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுதல், அவரை பற்றிக்கொண்டிருத்தல், அவரை சேவித்தல் (அவரை வழிபடுதல்) ஆகியவை அடங்கும். கடவுளிடம் எப்படி அதிகமாக அன்புகாட்டுவது என்று நீங்கள் அறிய வேண்டுமா? அவர் சொல்லுகிறதை செய்யுங்கள், விசுவாசத்தினால் அவரைச் சார்ந்திருந்து உறுதியாக அவரைப் பற்றிக்கொள்ளுங்கள், அவரை ஆராதியுங்கள். இந்த அன்பு இப்படித்தான் வெளிப்படும்.

இ. 2 இராஜாக்கள் 23:24-25. தெய்வபக்தியுள்ள ராஜாவாகிய யோசியாவுக்கு கடவுள்மீதிருந்த அன்பை இப்பகுதி நேரடியாக விவரிக்கவில்லை. இருப்பினும், இப்பகுதிதான் உபாகமம் 6:5ல் குறிப்பிட்டுள்ள மனிதனிலுள்ள மூன்று அம்சங்களின் செயல்பாட்டை விவரிக்கிற அதற்கடுத்த ஒரே வேதப்பகுதியாக இருக்கிறது. ஆகவே இது அந்தப் பெரிய கட்டளையையே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அதனை மேலும் விளக்குகிற பகுதியாகவே இதை நாம் பார்க்க வேண்டும். தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், தன் முழு பலத்தோடும் யோசியா இங்கு என்ன செய்தான்? அவன் கர்த்தரிடம் திரும்பினான். அவன் சிறுவயதில் கடவுளை அறிந்துகொண்டபோதே இதைச் செய்திருக்கிறான். விசுவாசத் துரோகிகளான யூதா நாட்டிற்கு இராஜாவானபோதும் இதையே செய்திருக்கிறான். அவன் தன்னைத் தாழ்த்தி இருதயத்தின் ஆழத்தில் துக்கப்பட்டு கண்ணீர்விட்டு மனந்திரும்பியிருக்கிறான் (2 இராஜாக்கள் 22:11, 18-19). அவர்கள் அதுவரை வணங்கிக்கொண்டிருந்த அந்நிய தெய்வங்களைவிட்டுத் திரும்பினான். அதுவரை அவர்கள் பின்பற்றி வந்த எல்லாவித கீழ்ப்படியாமையின் நடவடிக்கைகளிலிருந்து அவன் திரும்பினான். கடவுள் தம்முடைய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தாரோ அதைச் செய்து தன்னுடைய மனந்திரும்புதலின் கனிகளைக் காட்டினான். யோசியாவுக்கு கடவுள் மீதிருந்த அன்பை இது நமக்கு அடையாளங் காட்டுகிறது. நமக்கும் இப்படித்தான். கடவுளிடம் நாம் அதிகமாக அன்புகாட்டுகிறதாக இருந்தால், நொறுங்கிய இருதயத்தோடு நாம் அந்நிய தெய்வங்களிலிருந்தும் பாவகரமான நடவடிக்கைகளிலிருந்தும் திரும்பி, நாம் செய்யும்படி கடவுள் சொல்லியிருக்கிறவைகளைச் செய்கிறவர்களாக இருப்போம்.

முழு இருதயத்தோடும் அல்லது முழு ஆத்துமாவோடும் கடவுளிடம் திரும்பியதாக அல்லது திரும்ப வேண்டுமென்பதை பழைய ஏற்பாடு பல பகுதிகளில் நமக்கு இனங்காட்டுகிறது. அதில் அநேகமானவை, நாம் இதுவரை பார்த்தவைகளையே மறுபடியும் எடுத்துரைக்கின்றன. இதனோடு தொடர்புடைய சிலவற்றை இப்போது நான் இங்கு பட்டியலிடுகிறேன். கடவுளிடம் மெய்யாகவே நாம் அன்புகாட்டுகிறவர்களானால், நாம்

  • முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடுவோம் – உபாகமம் 4:29 (மேலும் 2 நாளாகமம் 15:12, ஒப்பிடுக 15; 22:9; 31:21, எரேமியா 29:13). ஒரு நபரைத் தேடுவது அன்பின் அடையாளம்.
  • முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தரை சேவிப்போம் – உபாகமம் 10:12 (மேலும் 11:13; 1 சாமுவேல் 12:20, 24). நாம் நேசிக்கும் ஒரேயொருவர் கடவுள் மட்டுமே.
  • முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு காத்து நடப்போம். உபாகமம் 26:16 (உபாகமம் 30:1-2; 2 இராஜாக்கள் 23:3; 2 நாளாகமம் 34:31; ஒப்பிடுக யோவான் 14:15; 1 யோவான் 5:3). நம்முடைய தேவனும் தலைவனும் ராஜாவுமாகிய அவரிடம் அன்புகாட்டுவது அவருக்குக் கீழ்ப்படியச் செய்யும்.
  • முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய பாவங்களிலிருந்து நம்முடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்புவோம். உபாகமம் 30:10 (மேலும் 1 சாமுவேல் 7:3; 2 நாளாகமம் 6:38; யோவேல் 2:12-13). அன்பு ஒரு நல்லுறவை விரும்பும்.
  • முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சத்தியத்தில் நடப்போம். 1 இராஜாக்கள் 2:4 (மேலும் 8:23; 2 நாளாகமம் 6:14). நாம் உண்மையில் அன்புகாட்டுகிற ஒருவரோடு நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள விரும்புவோம்.
  • முழு இருதயத்தோடும் கர்த்தரைப் பின்பற்றுவோம் – 1 இராஜாக்கள் 14:8
  • முழு இருதயத்தோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் துதிப்போம் – சங்கீதம் 86:12
  • முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கை வைப்போம் – நீதிமொழிகள் 3:5
  • கடவுளின் மீட்பிற்காக அவரில் முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூருவோம் – செப்பனியா 3:14

இவ்வேளையில், முதலாவது பிரதான கட்டளையின்படி நாம் கடவுளிடம் அதிகமாக அன்புகாட்டுவதற்கு நம்மை ஊக்கப்படுத்தும் இரண்டு உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். பக்தி வைராக்கியத்திற்கான அந்த இரண்டு விஷயங்கள் இதோ –

1. கடவுள் நம்மை ஆசீர்வதிக்க செயல்படும் விதம் – எரேமியா 32:40-41. இங்கு, ஆர்வமுள்ள ஆவியோடும் அதாவது முழு இருதயத்தோடு தமக்கு மறுமொழி தரும்படி கடவுள் தாமே நம்மை அழைக்கிறார். கடவுள், தம்முடைய முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தம்முடைய மக்களை புதிய பூமியில் நாட்டுவேன் என்று புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்தை அவர்தாமே ஏற்படுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள். கடவுள் தம்முடைய பிள்ளைகளாகிய உங்களுக்குத் தாம் செய்வேன் என்று வாக்களித்திருப்பவைகளைச் செய்வதற்கு அவர் ஆர்வத்துடன் செயல்படுகிறார். ஆகவே அவரைப் போல் நாமும் ஆர்வமுள்ள ஆவியைக் கொண்டு அதாவது நாம் இதுவரை பார்த்த விஷயங்களின் அடிப்படையில் ஆண்டவரிடம் அன்புகாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க அவருக்கு எல்லா உரிமையும் உண்டு.

2. பிரசங்கி 9:10 – பாதாளம் வருகிறது. இந்த வாழ்நாளில் நம்முடைய ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்கு கொஞ்ச நாட்களே உண்டு. இரவு வருகிறது. பகற்காலமிருக்கும்போதே நமக்கு மீதமிருக்கும் வலிமையைக் கொண்டு நாம் செய்யும்படி அவர் நமக்குக் கொடுத்துள்ளவைகளை செய்வதற்கு அவர்தாமே உதவுவாராக.

பக்தி வைராக்கியத்திற்கான ஆதாரங்கள்

“ஆவியிலே அனலாயிருங்கள்” என்ற வார்த்தைப் பிரயோகம், இயேசு குறிப்பிட்ட முதலாவதும் பெரியதுமான கட்டளையை நமக்கு சுட்டிக்காட்டியது. இந்த வார்த்தைப் பிரயோகம், நம்முடைய தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்ற கட்டளையின் மொழிநடைக்கு ஒத்ததாக இருக்கிறதைப் பார்த்தோம்.

இப்போது, ரோமர் 12:11ல் பக்திவைராக்கியத்தைப் பற்றிக் குறிப்பிடும் இரண்டாம் கருப்பொருளைப் படிக்கலாம் – “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்”. இந்த வசனத்தை நாம் முதலாவது படித்தபோது, ஆவியிலே அனலாயிருப்பது அல்லது பக்தி வைராக்கியம் என்றால் எப்படியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தச் சொற்றொடர் நமக்கு உதவியது. இப்போது இதில் நாம் பார்க்கப்போவது, பக்தி வைராக்கியம் என்பது அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருப்பதாகும் என்பதையே. வேறு விதத்தில் சொல்லுவதானால், கடவுள் நாம் செய்யும்படி நமக்குக் கொடுத்திருக்கிற காரியங்களை உண்மையுடன் நிறைவேற்றுவதற்கு அதிக ஆர்வத்தைக் காட்டுவதாகும். அசதியாகவும் அஜாக்கிரதையாகவும் இருப்பது பக்தி வைராக்கியத்திற்கு எதிரானதாகும். அதாவது, கடவுள் நாம் செய்யும்படி சொல்லியிருக்கிற காரியங்களை கவனத்துடனும் ஆர்வத்துடனும் செய்யாமல் மெதுவாகவும், தயக்கமாகவும், தாமதமாகவும், சோம்பலாகவும் செய்வதாகும்.

இதுவரை நான் குறிப்பிட்ட யாவும், ஜாக்கிரதையாயிருப்பது மற்றும் அதற்கு எதிர்மாறான விஷயங்கள் பற்றிய மிகவும் பொதுவான அம்சங்கள். நம் வாழ்வில் பக்தி வைராக்கியம் இருப்பதற்கான அடையாளங்களைக் குறிப்பாகக் காட்டுவது சாத்தியமா? நிச்சயமாக இது சாத்தியம். இதைப் பற்றி வேதம் அதிகமான குறிப்புகளை நமக்குத் தருகிறது. ஆகவே இப்போது, நம் வாழ்வில் இந்த ஜாக்கிரதை இருப்பதைக் காட்டும் அடையாளங்களான 10 வழிமுறைகளில் நம்முடைய கவனத்தைச் செலுத்தப் போகிறோம். இதில் முதலாவது, மிகவும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியதாகையால் அதை விரிவாகப் படிக்கப் போகிறோம்.

1. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய வழக்கமான வேலைகளில் நாம் சோம்பலுள்ளவர்களாக இருக்கக் கூடாது. (நீதிமொழிகள் 10:4; 12:24; 13:4). கிறிஸ்தவ வைராக்கியத்திலுள்ள ஜாக்கிரதை என்பது இதன்மூலம் கண்கூடாகத் தெரியக் கூடும். இதில், ஒரு மனிதனுக்குக் கடவுள் கொடுத்திருக்கிற வழக்கமான வேலை அல்லது அவனுடைய தொழிலைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இது, அவன் இரவில் தூங்குவதற்குப் போக மீதமிருக்கிற பெருமளவிலான நேரத்தில் அவன் செய்யும் வேலையைப் பற்றியது. இந்த வேலையின் மூலமாகத்தான் அவன் தன்னுடையதும் தன் குடும்பத்திலுள்ளவர்களுடையதுமான தேவைகளை நிறைவேற்றுவதற்கான வருமானத்தைச் சம்பாதிக்கிறான். நம்மில் போதகர்களாக இருக்கிறவர்கள், அவ்வேளைக்காக வருமானம் பெறுகிறோமோ இல்லையோ, நம்முடைய வேலை போதகப் பணியை விசுவாசத்தோடு செய்வதாகும்.

இரண்டு விதமான தனிநபர்களிடத்தில் காணப்படும் வேறுபாட்டை இவ்வசனங்களில் தெளிவாகக் காணலாம். ஒருபுறம் ஜாக்கிரதையுள்ளவன், அவன், கடவுள் தனக்குக் கொடுத்திருக்கிற வேலைகளைச் செய்வதில் கவனத்தோடு ஈடுபடுகிறவன். அவன் சோர்வுறுகிறபோது, பெலத்திற்காக கடவுளை நோக்கிக் கதறுகிறான், தொடர்ந்தும் வேலையைச் செய்து கொண்டுபோகிறான். (நிச்சயமாக, அவன் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள போதுமான தூக்கத்தைப் பெறவும், ஓய்வுநாளின் ஓய்வு எடுப்பதையும் (இது போதகர்களுக்கு ஓய்வுநாளைத் தவிர்த்த ஏனைய நாளாக இருக்கும்), தேவையான விடுமுறை காலங்களையும் பொறுப்புடன் தேட வேண்டும்.) சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் தனக்கு சாதகமானதாக இல்லாதபோதும் அவன் கடவுள் தனக்குக் கொடுத்திருக்கிற வேலையைத் தொடருகிறான். அவன் தன்னுடைய வேலையை முழுமையாகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டுமானால், அதனோடு தொடர்புடைய அனைத்துக் காரியங்களிலும் அவன் தன்னுடைய கவனத்தைச் செலுத்துகிறான். கடவுளுக்காக கனி கொடுப்பதற்கு கடவுள் கொடுத்திருக்கிற அனைத்து வழிமுறைகளையும், திறமைகளையும், வாய்ப்புகளையும் உண்மையுடன் பயன்படுத்துகிறான் (தாலந்துகள் உவமையைக் கவனியுங்கள் – மத்தேயு 25:14-17, 19-23, லூக்கா 19:12-19).

மறுபுறம் சோம்பலானவன், தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஏனோதானோ என்றோ, அலட்சியமாகவோ இருக்கிறவன். அவன் தனது வேலையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றாவிட்டால், அவன் அதைச் செய்கிறதில்லை. அப்படியே அந்த வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், பாதி தூக்கத்தில் செய்வான் அல்லது தாமதமாக ஆரம்பிப்பான் (நீதிமொழிகள் 26:14). சூரியன் இன்னும் நடு வானில் இருக்கிறபோதே தன்னுடைய வேலையைவிட்டு திரும்பி பொழுதுபோக்கிற்குப் போய்விடுவான். அவன் வேலை செய்கிறபோது, அவன் தனக்குப் பிடித்தமான வேலையைத்தவிர மற்றவைகளை வழக்கமாக அவன் அரை மனதோடுதான் செய்வான். அவனது பணிகளைக் கடினமாக்குகிற ஏதாவது தடைகள் வந்தால், உடனடியாக அவன் தன் வேலையைத் தொடருவதை விட்டுவிடுவான் (நீதிமொழிகள் 20:4). அவன் எப்போதும் தனது கவனக்குறைவுக்கு சாக்குப்போக்குச் சொல்லுவான். சாக்குப்போக்குச் சொல்லுவதை விட்டுவிட்டு தன்னுடைய வேலையைத் தொடரும்படி யாராவது அவனிடம் சொன்னால் அவன் ஒருபோதும் அதை கேட்பதில்லை (நீதிமொழிகள் 26:16). அந்த சாக்குப்போக்குகள் பெரும்பாலும் அவனது கற்பனையாகவே இருக்கும் (நீதிமொழிகள் 22:13; 26:13 – “வெளியே சிங்கம் உண்டு”). அவன் முன்னேறுவதில்லை, தன்னுடைய வளங்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதில்லை, வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுவதில்லை, உருவாக்குவதில்லை. அதற்குப் பதிலாக அவன் அவைகளைப் புறக்கணித்து புதைத்து விடுகிறான் (தாலந்துகள் உவமையைக் கவனியுங்கள் (மத்தேயு 25:18, 24-30; லூக்கா 19:20-26).

ஜாக்கிரதையும் சோம்பலும் மோதுகிறதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீதிமொழிகள் புத்தகம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. உண்மைதான், இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், ஜாக்கிரதையுள்ளவனிடம் தனது தேவைக்கு மேலும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கக்கூடியதாக பணம் இருக்கும். அவன் பெரும்பாலும் மற்றவர்களுக்காக வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவனே செய்துவிடுவான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடவுள் ஒரு தற்காலிக, உடல் வழி ஊக்கத்தை ஜாக்கிரதையுள்ளவர்களுக்குத் தந்து ஆசீர்வதிக்கிறார். ஒருவேளை இவன் விசுவாசியாக இருப்பானானால், அது அவனுக்கு மிக விலையுயர்ந்த ஆசீர்வாதமாக இருக்கும். அவன் தனது கர்த்தரும் இரட்சகருமாகிய அவரின் இன்முக அங்கீகாரத்தைப் பெறுகிறான் (மத்தேயு 25:18-23; லூக்கா 19:16-19).

ஆனால் சோம்பேறியைப் பற்றி என்னச் சொல்லுவது? இறுதியில் அவன் ஏழையாவான். மற்றவர்களுக்கு இருக்கும் அதே ஆசைகள் அவனுக்கும் உண்டு. ஆனால் அவன் தன்னுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைத் தீர்ப்பதற்குக்கூட அவனிடம் போதுமானது இல்லை. பெரும்பாலும் அவன் மற்றவர்களுக்காக வேலை செய்யவே கட்டாயப்படுத்தப்படுவான். ஒருவேளை இது போன்ற ஒரு சோம்பேறி நம்முடைய திருச்சபைக்கு வந்து அல்லது அங்கத்தவனாக சேர்ந்து, நீங்கள் என்னை நேசிக்க வேண்டியவர்கள், அதனால் என்னுடைய தேவைகளுக்கான பணம் மற்றும் உணவைத் தரவேண்டுமென்று சொன்னால் என்ன செய்வீர்கள்? திருச்சபையோ அல்லது ஒரு விசுவாசியோ இதற்கு எப்படி பதிலளிப்பது? தன்னுடைய தேவைகளைத் தானே தீர்த்துக்கொள்ள இயலாமலும், மெய்யாகவே தேவையில் இருக்கிறவர்களுமாகிய மெய்யான விசுவாசிகளே இப்படியான உபகாரங்களைப் பெற வேண்டும் (1 யோவான் 3:16-18; கலாத்தியர் 6:9-10). இல்லாவிட்டால், நாம் மெய்யான கிறிஸ்தவர்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால் அதே வேதம் ஒரு நபர் வேலை செய்ய மறுத்தால், அவன் சாப்பிடவும் கூடாது என்கிறது (2 தெசலோனிக்கேயர் 3:10). சோம்பேறிக்கு வரும் பொதுவான பாதிப்புகளை நாம் மாற்றப் பார்ப்பது தவறானதாகும். ஏனென்றால் அவன் பாவம் செய்கிறான், அந்த பாவத்தில் அவன் தொடர்ந்து இருக்கும்படி ஊக்குவிக்கக் கூடாது. (நீதிமொழிகள் 16:26).

இந்த விஷயத்தில், போதகர்களுடைய வேலை என்ன? தன்னுடைய போதகப் பொறுப்புகளை அலட்சியம் செய்கிறவன் சோம்பலான போதகனாக இருப்பான், இல்லையா? நிச்சயமாக. நாம் நேர்மையானவர்களாக இருந்தால், நம்முடைய மனசாட்சி இப்படித்தான் சொல்லும். நம்மில் அநேகருக்கு, கிட்டத்தட்ட எல்லாருக்கும் என்று சொல்லலாம், பிரசங்கம் தயாரிப்பது கடினமானதும் சரீர தளர்ச்சியை ஏற்படுத்தும் வேலையுமாகும். குறிப்பாக இதற்காகப் படிக்கின்ற வேளையில் சில பிரசங்கங்கள் முழு வடிவம் பெறாமல் இருக்கும், அவற்றில் சில பகுதிகளை பல முறை எழுத வேண்டியிருக்கலாம், அல்லது முழுவதும்கூட மறுபடியும் எழுத வேண்டி வரும். வழிதவறிச் சென்று, திரும்ப மறுக்கும் ஆட்டை மீட்பதென்பது சரீரத் தளர்வை ஏற்படுத்தும் வேலையாகும். விசுவாசிகளின் வாழ்க்கையில் பாவத்தைக் சுட்டிக்காட்ட வேண்டியவேளையில் அன்போடு அதை எடுத்துக்காட்டுவதும், மனந்திரும்ப மறுக்கிறபோது திருச்சபை ஒழுங்குக்கட்டுப்பாட்டை, கசப்பானதாக இருந்தாலும், அன்போடு கொண்டு வருவதும் உண்டு. பவுல் தன்னுடைய ஊழியசப் பணிகளைக் கடினமான உழைப்பு என்கிறார், அதாவது கடுமையான வேலை என்கிறார். இருப்பினும் அவர் உண்மையுடன் தனது உழைப்பைத் தொடந்தார். அவரை நாம் உதாரணமாகக் கொண்டு உழைக்க வேண்டும். நாம் போதகர்களாக உண்மையாக உழைத்தும், பலவிதமான பணப் போராட்டங்களுடனும் நாம் வாழலாம். ஆனால் “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று ஆண்டவர் சொல்லியவற்றிற்கு வேறெதுவும் ஒப்பாகாது. “பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. . . . பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” (மத்தேயு 25:26, 30) என்ற வார்த்தைக்கு நாம் பயப்பட வேண்டும். நற்செய்தி ஊழியனாக இருப்பது பெரும் பாக்கியமானது. அதேவேளை, கடவுளுடைய மக்களின் அழியா ஆத்துமாக்களைக் குறித்த பொறுப்பும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நம்முடைய ஜாக்கிரதையில் தெளிவாகக் காணப்படும் இன்னும் சில விஷயங்களை சுருக்கமாகப் பார்க்கலாம். அடுத்து நாம் பார்க்கயிருப்பது சற்றுமுன் நாம் பார்த்ததோடு நெருக்கமான தொடர்புடையது.

2. ஜாக்கிரதை என்பது நம்முடைய பொருட்கள் மற்றும் உடமைகளை அக்கறையுடன் பராமரிப்பதாகும். அதைச் சோம்பேறி புறக்கணிப்பான். (நீதிமொழிகள் 24:30-34; 27:23-27, பிரசங்கி 10:18; நீதிமொழிகள் 12:27). இங்கு சோம்பேறி மற்றும் ஜாக்கிரதையுள்ளவன் இருவரும் விவசாயிகள். சோம்பேறியின் நிலம் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் வறுமை அவனுக்கு உண்டாவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மறுபுறம், ஜாக்கிரதையுள்ள விவசாயி தனக்கு உணவு தரும் கால்நடைகளையும் வயல்நிலங்களையும் அக்கறையுடன் கவனிக்கிறான். அவனுக்கும் அவனுடைய வீட்டிலுள்ளவர்களுக்கும் எல்லாம் நிறைவாக இருக்கிறது.

3. ஜாக்கிரதையாயிருத்தல் என்பது தன்னுடைய வாழ்க்கைக்கான திட்டமிடுவதில் தீவிரமான கவனத்தைக் காட்டுவதாகும். (நீதிமொழிகள் 21:5). நம்முடைய வீட்டிற்கும், குடும்பத்திற்கும், கிறிஸ்துவின் சபைக்கும்கூட, ஞானமான நல்ல திட்டமிடுவதற்கு அதிக உழைப்பும், கவனமான சிந்தனையும் தேவை. அதற்காக பல்வேறு காரியங்களை ஆராயவும் தேவையான தகவல்களைச் சேகரிக்கவும் நேரம் எடுக்கும். ஜாக்கிரதையுள்ளவன் நேரத்தைக் கொடுத்து அதற்குத் தேவையான முயற்சிகளைச் செய்கிறான், அவனது திட்டங்கள் ஆசீர்வதிக்கப்படுகின்றன. சோம்பேறி விரைந்து முடிக்கப் பார்க்கிறான், மனதைத் தூண்டும் செயல்களில் முற்படுகிறான், அவனது சோம்பலுக்கான விளைவை அனுபவிக்கிறான்.

ஜாக்கிரதையைக் குறித்த அடுத்த ஆதாரத்தை ஏற்கனவே நான் ஓரளவிற்கு சுட்டிக்காட்டியிருக்கிறேன், எனினும் மீண்டும் அதை வலியுறுத்துவது நல்லது. கிறிஸ்தவ தலைவர்கள் தங்களுடைய வைராக்கியத்தை அவர்களுடைய ஜாக்கிரதையின் மூலமாகக் காட்டுகிறார்கள்.

4. கடவுளின் மக்களைக் கவனமாக வழி நடத்தி செல்லுதல். முன்னரே இந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறோம். (ரோமர் 12:8 – 11வது வசனத்திலுள்ள அதே “ஜாக்கிரதை” என்ற வார்த்தையை இங்கும் கவனியுங்கள்) (யூதா 3:1 வசனத்திலும் காண்க). நாம் கிறிஸ்துவின் சபையில் தலைவர்களாக இருந்தால், சபையை ஜாக்கிரதையுடன் வழிநடத்த வேண்டிய பொறுப்புடையவர்கள். கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தைச் சிந்திய சபையை நல்ல முறையில் அதிக கவனத்தோடு கண்காணிப்புச் செய்து, மேய்க்க வேண்டும் (அப்போஸ்தலர் 20:28).

5. ஜாக்கிரதை என்பது பாவம் செய்கிறபோது ஒழுங்காக தேவனுக்கேற்ற துக்கம் கொண்டு மனந்திரும்புவதுமாகும். பாவத்திலிருந்து கர்த்தரிடம் மனந்திரும்புவதென்பது நம்முடைய முழு இருயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவரிடத்தில் அன்புகூருகிறோம் என்பதைக் காட்டும் அடையாளமாகச் செய்ய வேண்டும். இது ஜாக்கிரதையோடு தொடர்புடையதாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 7:9-11). இங்கே பவுல் கொரிந்து விசுவாசிகளின் மனந்திரும்புதலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்கள் கடவுளுக்கேற்றவிதத்தில் துக்கங்கொண்டதாக சொல்லுகிறார். பிறகு கடவுளுக்கேற்றவிதம் என்றால் என்ன என்று அவர் விளக்குகிறார். அவர் சொல்லுகிற முதலாவது காரியம், “அது உங்களில் எவ்வளவு ஜாக்கிரதையை உண்டாக்கியது?” அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாயிருந்து முற்றிலும் மனந்திரும்பியிருந்ததை அதிகத் தெளிவாக காட்ட கவனமாக இருந்தார்கள். இந்த தெய்வீக மனந்திரும்புதல் தீவிரமான விருப்பத்தோடும் வைராக்கியத்தோடும் சம்பந்தமுடையது. தேவனுக்கேற்ற துக்கத்துடன் (உலக துக்கத்திலிருந்து வேறுபட்டது) தங்கள் பாவங்களிலிருந்து அவர்கள் திரும்பியதன் தீவிரத்தைக் காட்ட பவுல் இங்கே பல விதமான பதங்களைப் பயன்படுத்துகிறார். இது நம்மில் ஒரு சவாலான கேள்வியை எழுப்புகிறது. நம்முடைய மனந்திரும்புதல் கொரிந்து விசுவாசிகளினுடையதைப் போல் இருக்கிறதா – குறிப்பாகக் கேடான பாவங்களைச் செய்தபோது? நம்முடைய மனந்திரும்புதல் ஜாக்கிரதையும் வைராக்கியமும் கொண்டதா அல்லது அது மந்தமானதும் சோம்பலானதும் உண்மையான மாற்றத்திற்கான எந்த முயற்சியும் இல்லாதிருக்கிறதா?

6. தேவையிலுள்ள ஏழை மக்களுக்கு நம்மிடமுள்ள பொருட்களைக் கொண்டு உதவி செய்வதும் கடவுளுடைய மக்களின் தேவைகளுக்கு உதவுவதும் (அவர்களைப் பாதுகாப்பது உட்பட) கிறிஸ்தவ வைராக்கியத்தின் அடையாளம். (தீத்து 2:14). நம் கர்த்தருடைய பார்வையில் இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிற அநேக வேதப்பகுதிகளை வேதத்தில் பார்க்கலாம் (கலாத்தியர் 2:10; 2 கொரிந்தியர் 8:7-8; 16; எபிரெயர் 6:10-11; 2 கொரிந்தியர் 9:1-2; 1 பேதுரு 4:8; 2 கொரிந்தியர் 11:29). பவுல் இங்கே ஏழைகளை நினைப்பதில் ஆர்வமாக (அல்லது ஜாக்கிரதையாக) இருப்பதாக கூறுகிறார். நம்மில் பக்தி வைராக்கியம் இருக்குமானால், நாம் ஏழைகளின் தேவைகளைப் பற்றியும் தேவையிலுள்ள, நம்மால் உதவக்கூடியவர்களுமான விசுவாசிகளைப் பற்றியும் இதேவித ஜாக்கிரதையையே கொண்டிருப்போம்.

7. சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ளுவது வைராக்கியமான கிறிஸ்தவ ஜாக்கிரதையின் அடையாளம். (எபேசியர் 4:1-3). பவுல் இங்கே சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ள ஜாக்கிரதையாயிருங்கள் என்று வலியுறுத்துகிறார். இத்தகைய ஒற்றுமையைப் பெற்று, அது காக்கப்பட வேண்டுமானால், அதற்கு நம்முடைய ஜாக்கிரதை அவசியமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் சண்டையிட்டுப் பிரிந்திருக்க வேண்டுமென்பதற்காகவே சாத்தான் தொடர்ந்து முயற்சிக்கிறான். நம்முடைய இரட்சகர் மரிப்பதற்கு முந்தைய நாள் இரவில், இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்ட, அவரது அப்போஸ்தலர்களிடம் இது இருக்க வேண்டுமென்று அவர் தம்முடைய பிதாவினிடத்தில் வெளிப்படையாக ஜெபித்தார். இது கிறிஸ்துவுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தால், இதை பெறுவதும் காப்பதும் சவாலான ஒன்றாக இருந்தால், இத்தகைய ஒற்றுமையே நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாகவும் நாம் அக்கறைக் காட்ட வேண்டியதுமாகும். சுயநல நோக்கங்கள், பெருமை, மற்றும் சுயவிருப்பு பற்றிய காரியங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். நமது சொந்தக் காரியங்களையே கொண்டிருப்பதும் அதையே முன்னிலைப்படுத்துவதுமாக இருப்பதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். நமக்கென்று ஒரு வட்டமிட்டிருப்பது, பிரிந்திருப்பது, சிறிய பிரச்சனைகள் மற்றும் வேதத்திற்கு எதிரான பாரம்பரியங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். அனைவரோடும் சமாதானத்தை நாடுவதையே நாம் எப்போதும் எதிர்நோக்குகிறவர்களாக இருக்க வேண்டும். நம்மில் தொடர்ந்திருக்கும் கசப்பு, மன்னிக்க மறுக்கும் ஆவி, மற்றும் பழிவாங்குவதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். நாம் ஊழியம் செய்யும் உள்ளூர் சபையில் மட்டும் ஜாக்கிரைதையுள்ளவர்களாக இருப்பதல்ல, போதகர்களான நமக்குள்ளும், வேதப்பூர்வமான நல்ல சபைகளோடும் நாம் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

8. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதில் ஜாக்கிரதையைக் காட்ட வேண்டும். (2 தீமோத்தேயு 2:15). ஒரு போதகனாக, தேவனுடைய வார்த்தையை ஒழுங்காகப் பகுத்து ஆராய்ந்து போதிக்கும் வெட்கப்படாத ஊழியனாக கடவுளுக்கு நம்மை எப்படி வழங்க முடியும்? பரிசுத்த ஆவியின் உதவியினால் நாம் தேவனுடைய வார்த்தைகளை ஜாக்கிரதையாகப் படித்தால் மட்டுமே முடியும்.

9. ஒரு கிறிஸ்தவனாக வளருவதில் ஜாக்கிரதையைக் காட்ட வேண்டும். (2 பேதுரு 1:2-7). நாம் கிறிஸ்தவர்களாக வளருவதற்கான அனைத்தும் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரே நாம் வளருவதற்கு காரணகர்த்தாவாகவும் இருக்கிறார். ஆனால் நாம் வளர வேண்டுமானால், நாம் ஜாக்கிரதையுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.

10. விசுவாசத்துடன் இறுதிவரை கிறிஸ்துவுக்குள் சமாதானத்துடன், மாசற்றவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் விடாமுயற்சியுடன் தொடர்ந்திருத்தல் வேண்டும். (2 பேதுரு 3:13-14; 2 பேதுரு 1:10; எபிரெயர் 4:11; 6:10-12). சகோதரர்களே, நாம் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் இருக்கிறோம். ஓட்டப்பந்தயத்தை நல்லவிதமாக துவங்குவது மட்டும் போதாது. நாமும் நாம் யாருக்கு ஊழியம் செய்கிறோமோ அவர்களும் ஓட்டப்பந்தயத்தின் இறுதிவரை நல்லவிதமாக தொடர்ந்து ஓடுவதற்கு ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இறுதிவரை விடாமுயற்சியுடன் தொடருகிறவர்களே இரட்சிக்கப்படுவார்கள். நம்முடைய ஆத்துமா நித்திய இரட்சிப்பை அடைய, ஜாக்கிரதையுடன் கூடிய வைராக்கியம் தேவையாக இருக்கிறது.

இதுவரை நாம், அநேக காரியங்களை பார்த்திருக்கிறோம். முடிக்கிற வேளையில் உங்கள் முன் இரண்டு கேள்விகளை விளக்கப் போகிறேன்.

1. என்னில் பக்தி வைராக்கியம் இருக்கிறது என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்ளுவது? இதுவரை நாம் பார்த்திருக்கிற பத்துக் காரியங்கள் மற்றும் நாம் செய்யும்படி கடவுள் சொல்லியிருக்கிற இன்னும் வேறுபல காரியங்களைச் செய்வதில் நாம் அசதியாக சோம்பலுடன் இருக்கிறோமா அல்லது ஜாக்கிரதையும் ஆர்வமும் கொண்டிருக்கிறோமா? என்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இது உண்மையாக இருந்தால், இன்னுமொரு கேள்வி நம்முன் எழுகிறது.

2. அப்படியானால், இந்த விஷயங்களில் என்னுடைய வைராக்கியத்தை எப்படித் தூண்டிவிடுவது? இக்கேள்விக்கு ஏற்கனவே சில பதில்களைப் பார்த்திருக்கிறோம், அதாவது ஜெபத்தில் ஆண்டவரிடம் இவ்வைராக்கியத்தைக் கேட்டல், நம்மை ஊக்கப்படுத்தும் கடவுளின் இரக்கங்களை நினைவுகூருதல் போன்றவை. எனினும் இவ்வேளையில் நான் இன்னுமொரு பதிலை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்தக் காரியங்களுக்கான வைராக்கியத்தை என்னில் தூண்டுவதற்கான ஒரு வழி: கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிற வேலைகளை உண்மையிலேயே ஜாக்கிரதையுடன் செய்யத் துவங்குவதன் மூலமே இதை என்னில் தூண்ட முடியும். நாம் காட்டும் ஜாக்கிரதையே நம்மிலுள்ள வைராக்கியத்தை வெளிப்படுத்துகிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால் இது போன்ற ஜாக்கிரதையும் நம்மில் பக்தி வைராக்கியத்தை ஏற்படுத்துவதற்கு உதவும் ஒரு கருவியே என்பதை நாம் அறிவது அவசியம். நீங்கள் சோம்பலை அழித்து, கர்த்தரைச் சார்ந்திருந்து, அவருடைய உதவியை நாடி கூக்குரலிடுங்கள் என்று வேதம் சொல்லுகிறபோது, உண்மையில், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை உடனடியாக செய்ய ஆரம்பியுங்கள் என்றுதான் சொல்லுகிறது. கடவுள் உங்களையும் உங்கள் இருதயத்தையும் உங்கள் ஆத்துமாவையும் சந்தித்து ஊக்கப்படுத்துவது உங்களுக்கு முன்னிருக்கும் தற்போதுள்ள வேலைகளைச் செய்வதற்காக என்பது உண்மை இல்லையா?

இயேசுவும் பத்துக் குஷ்டரோகிகளும் பற்றிய உதாரணத்தை கவனியுங்கள் (லூக்கா 17:12-14). இயேசு அவர்களுடைய கிராமத்தில் நுழைந்தவுடன், அந்த பத்து குஷ்டரோகிகளும் தூரத்தில் நின்று, சத்தமிட்டு, இயேசுவே ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும் என்றார்கள். என்ன நடந்தது என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஆசாரியனிடத்தில் சென்று அவர்கள் தங்களைக் காட்டும்படி இயேசு அவர்களிடம் கூறினார். ஆனால் இதில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தது. தொழுநோய் உடையவர்கள் அந்த நோயிலிருந்து முழுமையாகக் குணமானார்கள் என்று அவர்கள் அறிந்திராதவரை அவர்கள் ஆசாரியனைச் சந்திக்கக் கூடாது. அவர்கள் உண்மையில் குணமடைவதற்கு முன்பாகவே அவர்கள் சென்று ஆசாரியனுக்குக் காண்பிக்கும்படி ஆண்டவர் சொன்னார். ஒருவேளை நான் அங்கு இருந்திருந்தால், “ஆண்டவரே நான் இன்னும் குணமாகவில்லையே” என்று ஆண்டவரிடம் கேட்டிருப்பேன். ஆனால் அவர்களோ, விசுவாசத்தினால் இயேசு சொன்னதை எந்தவிதமான தயக்கமுமில்லாமல் செய்தார்கள். அவர்கள் போகும்போது அவர்கள் குணமடைந்தார்கள். எனவே அது பக்தி வைராக்கியத்தினால் உண்டானது.

நம்முடைய தியான நேரங்கள் எப்படியிருக்கிறது? நான் ஒரு கல்லூரி மாணவனாக இருந்தபோது, நான் வேத புத்தகத்தை வாசிப்பது மற்றும் ஜெபிப்பதுபோன்ற உணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. எனக்கு நினைவிருக்கிறது, மாணவர்கள் சேர்ந்திருக்கும் அந்த அறையில் நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என்னுடைய வேத புத்தகம் என் படுக்கையிலிருந்து நான்கு அடி தொலைவிலுள்ள மேசையில்தான் இருந்தது. ஆனால் எனக்கும் என் வேதப்புத்தகத்திற்கும் இடையில் ஒரு கற்சுவர் இருப்பது போல் இருந்தது. நான் கண்டறிந்தது என்ன? என்னுடைய பெலவீனத்துடன், நான் எழுந்து மேசைக்குச் சென்று என் வேதப்புத்தகத்தை எடுத்தேன், கற்சுவர் மறைந்தது. நான் வாசிக்க ஆரம்பித்தபோது கடவுள் என்னைச் சந்தித்து என் ஆத்துமாவுக்கு உணவளித்தார். இந்த வேளையில் நாம் பார்த்த 10 காரியங்களுக்கும் ஜாக்கிரதையாக இருப்பதற்கும் இதுவே வழி. எழுந்து, ஜெபத்துடன் கடவுளைச் சார்ந்திருந்து, இவைகளைச் செய்யத் தொடங்குங்கள், உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறவைகள் மாயமாக மறைவதையும் கடவுள் தாம் விரும்புவதைச் செய்யும்படி நம்முடைய இருதயங்களை எழுப்பிவிடுவதையும் காண்பீர்கள். சுவர்களின் மத்தியிலும் நாம் தொடர்ந்து நடந்து முன்னேறிச் செல்ல கடவுள் தாமே நமக்கு உதவி செய்வாராக!

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s