வேதம் போதிக்கும் தேவபயம் – 5 – அல்பர்ட் என். மார்டின்
[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]
முந்தைய அதிகாரத்தில், எப்போதெல்லாம் தேவபயம் காணக்கூடியதாக இருக்கிறதோ, அது கிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையின் ஆசீர்வாதமாக, கடவுள் தம்முடைய வல்லமையினால் தந்தது என்பதைப் பார்த்தோம். ஆகவே தேவபயம் என்பது பாவமன்னிப்பை மகிழ்ச்சியோடு உணர்வதாகிய ஆசீர்வாதமாக இருக்கிறது. இதைப்பற்றி பியூரிட்டன்களில் ஒருவரான, தாமஸ் மென்டன் (Thomas Manton) என்பவர், அருமையாக சொல்லியிருக்கிறார், “கண்டனம் பண்ணுகிற கடவுளைப் பற்றி நம்முடைய இருதயம் வெட்கப்பட்டாலும், அவரே மன்னிக்கிற கடவுளாக இருப்பதனால், அவரை நெருங்கிப் பின்தொடரவும் செய்கிறது. ஆகவே தேவபயமானது, கிறிஸ்துவுக்குள்ளாக கர்த்தருடைய நன்மையை அறிந்துணரச் செய்கிறதே தவிர, நம்முடைய உள்ளத்தை புண்படுத்துகிறதில்லை”. நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலாகிய பாவமன்னிப்பை ஒருவன் அறியாதவரை, அவன் ஒருபோதும் கடவுளைப்பற்றிய மெய்யான பயத்தைக் கொண்டிருக்க மாட்டான். அவன் கடவுளைப் பற்றி பயங்கரமாக உணரலாம், அவரைப்பற்றிய திகிலைக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்த பயங்கரமும், திகிலும் கடவுளைவிட்டு அவனைத் தள்ளி நிற்கும்படிச் செய்யும். ஆனால் பாவமன்னிப்பின் உணர்வோடு இணைந்திருக்கிற தேவபயமானது, கடவுளையும் அவருடைய வழிகளையும் பற்றிக்கொண்டிருக்கும்படி, அவனைக் கடவுளிடத்தில் நெருங்கிச் சேரும்படிச் செய்யும்.
இப்போது, அடுத்த குறிப்பாகிய, “தேவபயத்திற்கும் நம்முடைய நடத்தைக்கும் இடையிலிருக்கிற தொடர்பைப்” பற்றி பார்க்கலாம். இதுபற்றி இரண்டு கூற்றை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். முதலாவது கூற்று, “தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை உருவாக்கும்”. இரண்டாவது கூற்று, “தேவபயமின்மையே தேவபக்தியில்லாத வாழ்க்கையை உருவாக்கும்”.
தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை உருவாக்கும்
தேவபிள்ளையினுடைய வாழ்க்கையில் தேவபயம் ஏற்படுத்தும் நடைமுறை தாக்கம் என்ன? பலதரப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் வாழ்ந்த ஆண்களையும் பெண்களையும் பற்றிய வேதப்பகுதிகளை நாம் இப்போது ஆராய்ந்து பார்ப்போம். அவர்கள் மெய்யான தேவபக்தியுடன் வாழ்ந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நாம் கவனித்துப் பார்ப்போமானால், அதற்கெல்லாம் ஆணிவேராக இருந்தது தேவபயம் என்பதாகவே பார்க்க முடியும்.
ஆபிரகாம்
ஆதியாகமம் 12வது அதிகாரத்தின் முதல் சில வசனங்களில், ஆபிரகாம் தன்னுடைய இடத்தைவிட்டு வெளியேறும்படி தேவனால் அழைக்கப்பட்டதாக நாம் வாசிக்கிறோம். பிறகு, ஆதியாகமம் 20வது அதிகாரத்தில், ஆபிரகாம் தன் அழகான மனைவியாகிய சாராளோடு பிரயாணம் செய்வதாகக் காண்கிறோம். ஒருவழியாக அவர்கள் கேரார் என்ற இடத்திற்கு வந்து சேருகிறார்கள். அந்த இடத்தின் ராஜா கடவுள் பயமில்லாதவன் என்பது ஆபிரகாமுக்குத் தெரியும். அதுமட்டுமல்லாமல், கடவுள் பயமில்லாத இப்படியான ராஜாக்கள், அழகான பெண்களைப் பார்த்தால் என்ன செய்வது வழக்கம் என்பதையும் ஆபிரகாம் அறிந்திருந்தார். ஆகவே ஆபிரகாம், “இப்படியான இடங்களுக்கு வருகிறபோது, அந்த ராஜாக்கள் என் மனைவியைப் பார்த்தால், அவர்கள் இவள் மேல் விருப்பங்கொள்ளுவார்கள். அவளை அடைவதற்கு நான் இடையில் தடையாக இருப்பேன் என்று எண்ணி, அவளை தன்னுடையவளாக்கிக்கொள்ளுவதற்காக என்னை இல்லாமலாக்கிவிடுவார்கள். ஆகவே நான் அவர்களிடத்தில் பாதி உண்மையைத்தான் சொல்லப்போகிறேன், அதாவது சாராள் என் சகோதரி என்று சொல்லப்போகிறேன்” என்று முடிவெடுத்தார். அது பாதி உண்மையாக இருந்தபோதிலும், உண்மையில் அது முழுமையான பொய். அவர்கள் இருவருக்கிடையில் இரத்த சம்பந்தமான உறவு இருந்தது. சாராள் ஆபிரகாமின் சகோதரி என்பதைக் காட்டிலும் மேலானவள், அதாவது சாராள் ஆபிரகாமின் மனைவியாகவும் இருந்தாள். ஆபிரகாமுடைய அந்த பொய்யின் காரணமாக, அபிமெலேக்கு சாராளைத் தன்னுடைய வீட்டிற்குக் கொண்டு சென்றுவிட்டான். ஆனாலும் அவன் அவளோடு எந்தவிதமான உடலுறவு சம்மந்தமான விஷயங்களில் ஈடுபடாதபடி கர்த்தர் தடுத்தார். பிறகு கர்த்தர் அபிமெலேக்குக்கு கனவில் தோன்றி, “உன்னுடைய மறுமனையாட்டிகளில் ஒருவளாக இவளை எடுத்துக்கொள்ளலாம் என்று நீ எண்ணினால், நீ செத்தவன்” என்றார் (ஆதியாகமம் 20:3). ஆகவே, அபிமெலேக்கு ஆபிரகாமிடம் சென்று, “நீ ஏன் எனக்கு இப்படிச் செய்தாய்” என்றான் (ஆதியாகமம் 20:9). ஆபிரகாமின் பதிலைக் கவனியுங்கள், “இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்” என்றார் (ஆதியாகமம் 20:11).
ஆபிரகாம் என்ன சொன்னார் என்பதை கவனித்தீர்களா? ஆபிரகாம் அபிமெலேக்கிடம், “அபிமெலேக்கே, நீங்கள் என்னைக் கொன்று போட்டுவிட்டு, என் மனைவியை எடுத்துக்கொள்ளுவீர்கள் என்று நான் பயந்ததற்கான காரணத்தை நீர் என்னிடம் கேட்கிறீர், இல்லையா? இதுதான் அதற்குக் காரணம். என்னவென்றால், இது தெய்வபயமில்லாத இடம். நீரும் தெய்வபயமில்லாதவர். எனக்குத் தன்னைத்தானே வெளிப்படுத்திய மெய்யான அந்த தேவனைப் பற்றிய அறிவு இந்த இடத்தில் இல்லாததனால், இங்கு தேவபயமும் இருக்காது என்று நான் அனுமானித்தேன். ஏனென்றால், கடவுளைப் பற்றிய சரியான பார்வையில்லாத இடத்தில் தேவபயத்தின் எந்த அறிகுறியும் இருக்க முடியாது. எங்கு தேவபயம் இல்லையோ, அங்கு ஒழுக்கக் காரியங்களிலும் உணர்வற்றவர்களாகவே இருப்பார்கள். ஆகவே தேவபயம் இல்லாததனால், உங்களுடைய நடத்தையும் தேவபயமில்லாததை பிரதிபலிக்கிறதாகவே இருக்கும். ஆகவேதான் நான் இப்படிச் செய்தேன்” என்றார். தேவபயம் இருக்கிற இடத்தில்தான் தேவபக்தியும் வளர முடியும் என்று ஆபிரகாம் அனுமானித்தார். தேவபயம் இல்லாத இடத்தில் தேவபக்தியும் இருக்க முடியாது. ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம், தேவபயத்திற்கும் தேவபக்தியுள்ள நடைமுறை வாழ்க்கைக்கும் இணைபிரியா தொடர்புண்டு என்பதை வரலாற்றில் தேவன் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை நாம் காணலாம்.
யோசேப்பு
இதே போதனையை விவரிக்கிற இன்னொரு சந்தர்ப்பத்தை ஆதியாகமம் 42வது அதிகாரத்தில் காணலாம். யோசேப்பின் சகோதரர்கள் தானியம் வாங்கும்படியாக எகிப்திற்கு வந்திருந்தார்கள். அப்போது, யோசேப்பு அரியாசனத்தில் பார்வோனுக்கு அடுத்த நிலையில் இருந்தார். வந்திருந்த அவர்கள் தன்னுடைய சகோதரர்கள்தான் என்பதை யோசேப்பு அறிந்திருந்தும், அவர்களை உளவாளிகள் என்று குற்றஞ்சாட்டி, அவர்கள் உளவாளிகளா இல்லையா என்பதை நிரூபிப்பதற்கான சில காரியங்களை அவர்கள் செய்யும்படிச் சொன்னார். அப்போது, தான் ஒரு நம்பகமான நேர்மையான மனிதன் என்பதையும் தன்னுடைய கட்டளைகள் நீதியானது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த, யோசேப்பு சொல்லிய வார்த்தைகளைக் கவனியுங்கள், “மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள். நீங்கள் நிஜஸ்தரானால் (உண்மையானவர்களானால்), சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுங்கள்” என்றார் (ஆதியாகமம் 42:18-19).
யோசேப்பு சொல்லியது என்னவென்றால், “உங்களுடன் நான் பேசுகிற இந்த விஷயங்களில் நேர்மையாய் நடப்பேன் என்பதை நான் காட்டுவதற்கு, என்னுடைய இருதயத்தில் தேவபயம் இருக்கிறது என்பதைத் தவிர வேறு எதையும் நான் காட்ட முடியாது. என்னிலுள்ள தேவபயம் என்னை நேர்மையும் நம்பகமுமான மனிதனாக வைத்திருக்கிறது” என்றார். தேவபயமே ஒருவனில் தேவபக்தியுள்ள வாழ்க்கையை உருவாக்கும் என்ற உண்மையை, ஆபிரகாமைப் போல யோசேப்பும் அறிந்திருந்தார் என்பதையே தன் வார்த்தைகளின் மூலம் காட்டினார்.
கடவுள் எல்லாவற்றையும் காண்கிறார்
லேவியராகமம் 19:14ல் ஒரு விசித்திரமான கட்டளை காணப்படுகிறது, “செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.” காது கேளாத ஒருவனால், நீங்கள் பேசுகிறதைக் கேட்க முடியாது. அப்படியானால், உங்களுடைய பேச்சைக் கேட்க முடியாத அவன், உங்களுடைய பேச்சினால் காயப்படுவானா? இல்லை. இருப்பினும், கர்த்தர் சொல்லுவதைக் கேளுங்கள், “காது கேளாதவனை நிந்தியாதீர்கள்”. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், “மற்றவர்களுடனான உங்களுடைய நடத்தைகள், உங்களுடைய தவறான நடவடிக்கைகளுக்கு அதற்கீடான எதையாகிலும் அவர்களால் உங்களுக்கு செய்ய முடியுமா என்பதைப் பொறுத்து அமையக்கூடாது. அது உங்களுடைய நன்மதிப்பைப் பற்றிய என்னவிதமான தாக்கத்தை அவர்களில் ஏற்படுத்தும் என்பதை வைத்தும் அமையக் கூடாது. எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும், எந்த சந்தர்ப்பத்திலும், எந்த நேரத்திலும் உங்களுடைய எல்லாவிதமான நடவடிக்கைகளும் கர்த்தராகிய நான் உங்களுக்கு மேலிருந்து காண்கிறேன் என்பதையும், என்னுடைய காது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கிறது என்ற எண்ணத்துடனேயே செய்யப்பட வேண்டும்.” இந்த எண்ணத்திற்குக் குறைய, உங்களுடைய எந்தவொரு நடவடிக்கையும் எவருக்கு முன்பாகவும் ஒருபோதும் இருக்கக் கூடாது. “நான் செய்கிற இதையெல்லாம் எப்படி கர்த்தரால் பார்க்க முடியும்” என்ற எண்ணம் வரவே கூடாது. ஒரு குருடனுக்கு முன்னால் அவன் குறுக்கே உங்கள் காலை நீட்டினால் அவனால் காணமுடியாதிருக்கலாம், ஆனால் கடவுள் காண்கிறார். அதேபோல், காது கேளாதவனை நீங்கள் நிந்தித்தால், அவனால் கேட்க முடியாது, ஆனால் கடவுள் கேட்கிறார்.
நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிற மாணவராக இருந்தால், நீங்கள் பள்ளியில் ஏமாற்றமாட்டீர்கள். நீங்கள் தேவபயத்துடன் நடக்கிறவர்களாக இருந்தால், நீங்கள் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறபோது, மேற்பார்வை ஆசிரியர் மூன்று மணி நேரத்திற்கு அந்த அறையைவிட்டு வெளியில் சென்றுவிட்டு வந்தாலும், உங்களுடைய நேர்மையைப் பற்றிய விஷயத்தில், ஆசிரியர் அந்த அறையில் இருப்பதும் இல்லாமலிருப்பதும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஒருவேளை அந்த ஆசிரியர் வராமலே போனாலும், நீங்கள் படித்ததை மட்டுமே எழுதுவீர்கள். பக்கத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருப்பவரின் தாளை எட்டிப் பார்ப்பதையோ, பிட் அடிப்பதையோ ஒருபோதும் செய்ய மாட்டீர்கள். அப்படியில்லாமல், நீங்கள் ஏமாற்றுகிறவராக இருந்தால், உங்களுக்கு தேவபயத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறீர்கள். ஏனென்றால், உங்களுடைய ஆசிரியர் காண முடியாததை, கடவுள் காண்கிறார். அல்லது, நீங்கள் இரண்டுவிதமாக பேசுகிற வாலிபனாக இருக்கலாம். அதாவது வீட்டிலும் திருச்சபையிலும் ஒருவிதமாகவும், உங்களுடைய நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்தில் இன்னொருவிதமாக பேசுகிறவராகவும் இருக்கலாம். உங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் பேசுகிறபடியே கண்டதையும் பேசலாம். ஆனால் உங்களுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ நீங்கள் இப்படிப் பேசுகிறவர் என்பதை தெரியாமல் வைத்திருக்கலாம். உங்களுடைய பெற்றோரால் கேட்க முடியாததை கடவுள் கேட்கிறதில்லையா? நீங்கள் பேசியதையெல்லாம் அவர் அறிவார். எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த ஒலியளவில் ஒவ்வொரு முறையும் பேசினீர்கள் என்பதையும் அவரால் உங்களுக்குச் சொல்ல முடியும். உங்களுடைய அப்பாவும் அம்மாவும் அதையெல்லாம் கேட்காமல், அறியாமல் இருந்தாலே போதும் என்று நீங்கள் திருப்திப்பட்டுக்கொண்டால், நீங்கள் தேவபயத்தோடு நடக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.
வளர்ந்தவர்களும் பெரியவர்களும் இதேபோன்ற சோதனைகளைப் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் எதிர்கொள்ளுகிறார்கள். ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் நம்முடைய வருமானவரி கணக்கை தாக்கல் செய்கிறோம். நாடு முழுவதும் இருக்கிற வருமானவரி முகவர்கள், வரியைக் குறைப்பதற்காக செய்கிற குறுக்கு வழிகளைப் பற்றி பற்றி நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன்? வருமானவரி படிவத்தை பூர்த்திச் செய்கிறபோது தேவபயத்துடன் செய்ய வேண்டும். வருமானவரி படிவத்தில் நாம் குறிப்பிடுவதை வருமானவரி அதிகாரி மட்டும் பார்க்கவில்லை, எல்லாவற்றையும் அறிந்த ஒருவரும் காண்கிறார் என்ற உணர்வுடன் செய்ய வேண்டும். வருமானவரி அறிக்கையை ஏமாற்றி நியாயமான வருமானவரி சலுகையைத் தவிர்த்து, அதிகமாக பெறுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் தொடர்ந்து செய்கிறவர்களாக இருந்தால், நீங்கள் தேவபயத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவர்கள். நீங்கள் மனந்திரும்பாதபட்சத்தில், உங்களுடைய திருட்டுத்தனத்திற்கும், நேர்மையற்ற தன்மைக்குமான சாட்சியாக, நியாயத்தீர்ப்பு நாளில் கடவுளே இருப்பார்.
ஒரு மனிதன் தன்னுடைய அலுவலகத்திலோ அல்லது கடை வீதியிலோ, தன்னுடைய மனைவி தன்னுடன் இருந்தால் எந்தவிதத்தில் தன்னுடைய இச்சைகளையும் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பார்வையையும் தவிர்ப்பானோ அந்தவிதமான எச்சரிப்புடன் எப்போதும் அவனை இருக்கச் செய்யக் கூடியதுதான் தேவபயம். நீங்கள் தேவபயத்துடன் நடக்கிறவர்களாக இருந்தால், நீங்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன் நடக்கிறவர்களாக இருப்பீர்கள். உங்களுடைய கண்களைப் பற்றி எச்சரிப்புடன் இருப்பீர்கள். ஏனென்றால், உங்களுடைய மனைவி எதைப் பார்க்கிறார்கள், எதை அறிந்திருக்கிறார்கள் என்பதல்ல முக்கியம், கடவுள் எதைக் காண்கிறார், எதை அறிந்திருக்கிறார் என்பதுதான் முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவருடைய கண்களுக்கு முன்பாக உங்களுடைய இருதயம் சுத்தமாக இருப்பதையே நீங்கள் நாடுவீர்கள்.
யோபு “தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிற” மனிதனாக இருந்தான் என்று வேதம் சொல்லுகிறது (யோபு 1:1). யோபுவினுடைய தேவபயத்தைக் குறிப்பாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்துகிற அவருடைய வார்த்தைகளை, யோபு 31:1ல் நாம் காணலாம், “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” எந்தவொரு மனிதனும் மனந்திரும்பாமல், உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வகையிலும் இச்சையுடனும் தன் பார்வையையும், வார்த்தைகளையும் கொண்ட வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்தால் அவன் தேவபயத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவன். வேதத்தின்படி அவன் “விபச்சாரக்காரன்”, “தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” (மத்தேயு 5:27-28; 1 கொரிந்தியர் 6:9).
கடவுளுடைய கண்களைப் பற்றிய உணர்வு
தேவபயமானது நடைமுறை வாழ்க்கையை எந்தளவுக்கு கட்டுப்படுத்துகிறது என்பதற்கான இன்னுமொரு உதாரணத்தை நெகேமியாவின் புத்தகத்தில் பார்க்கலாம். நெகேமியா சொல்லுகிறார்,
“நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம்வரைக்குமிருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை. எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.” (நெகேமியா 5:14-15).
நெகேமியா, தன்னுடைய பதவியில் தனக்கு முன்னிருந்தவர்கள் செய்ததுபோல் தான் செய்யவில்லை என்கிறார். அதாவது, தன்னுடைய சொந்த லாபத்திற்காக தன்னுடைய பதவியைப் பயன்படுத்தியதில்லை. அதற்குக் காரணம் தன்னிலுள்ள தேவபயம்தான் என்கிறார். கடவுளுடைய கண் தன்மேல் தீர்க்கமாக இருக்கிறது என்ற உணர்வுதான், இவ்விதமான அவருடைய நடத்தைக்குக் காரணம். தன்னுடைய சொந்த லாபத்திற்காக தன் பதவியைப் பயன்படுத்தினால், கடவுளுடைய புன்னகையை இழக்க நேரிடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். நெகேமியா தன்னுடைய சுய லாபத்திற்காக தன்னுடைய பதவியைப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு இந்த உண்மை மட்டுமே போதுமானதாக இருந்தது.
தன்னுடைய சுய லாபத்திற்காக மற்றவர்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல் என்பது மனிதகுலத்தின் மிக முக்கியமான பிரச்சனை இல்லையா? நம்முடைய தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக ஓடுகிற ஓட்டத்தில் மற்றவர்களுடைய தேவைகளைப் பற்றி பெரும்பாலும் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளுவதில்லை. நம்முடைய சொந்த திருப்திக்காக ஓடுகிற ஓட்டத்தில் மற்றவர்களுடைய தேவைகளைக் காலின் கீழ்போட்டு மிதிக்கிறவர்களாகவே பெரும்பாலும் நாம் இருந்துவிடுகிறோம். நம்முடைய வியாபார நடவடிக்கைகளில் கருமிகளாக இருந்துவிடுகிறோம். பெற்றோர்களாக நம்முடைய எதிர்பார்ப்புகளெல்லாம் எல்லை கடந்ததாக இருக்கிறது. இவை யாவற்றிற்கும் தீர்வு என்ன? தேவபயம் மட்டுமே தீர்வு என்று நெகேமியாவைப் போல் நாமும் சொல்லலாமில்லையா? தேவ மனிதர்களுடைய வாழ்க்கையில் தேவபயத்திற்கான முக்கியமான இடத்தை இந்த சம்பவமும் நமக்கு எடுத்துரைக்கிறது.
கடவுளால் நம்மில் விதைக்கப்படும் கிருபையாகிய தேவபயமானது, கடவுளுடைய கண் நம்மீது நோக்கமாக இருக்கிறது என்ற உணர்வுடன் வளருகிறதாக இருக்கிறது. ஆவியினால் மீட்பின் நிறைவேற்றத்தின் காலமாகிய புதிய ஏற்பாட்டிலும் இதை நாம் பார்க்கலாம். நீங்கள் கிறிஸ்தவர்களாக, கிறிஸ்துவுக்குள்ளாக கடவுளோடுள்ள உங்களுடைய உறவைப் பற்றிய சிந்தனையினாலும், அவருடைய புன்னகையின் உண்மைத் தன்மையினாலும், அவர் விலக்கி வைத்துள்ளவைகளின் மீதுள்ள வெறுப்பினாலும் வாழுவதை நீங்கள் ஒரு கனமாகிலும் நிறுத்தினால், பரிசுத்தமாய் வாழுவதற்கு உங்களை உந்தித்தள்ளும் உணர்விலிருந்து துண்டிக்கப்படுவீர்கள். இப்படி நீங்கள் உணர்ந்ததில்லையா? கடவுளிடத்தில் உங்களுக்குள்ள உறவைப் பற்றிய எண்ணம் உங்களில் அற்றுப்போனால், வேறு எது உங்களை ஊக்கப்படுத்த முடியும்? கடவுள் வெறுத்து ஒதுக்கியிருப்பதைப் பற்றிய எண்ணம் உங்களில் இல்லாமற்போனால், வேறு எது உங்களைத் தீமையிலிருந்து திருப்பும்? கடவுளுடைய புன்னகை உங்களைத் தூண்டாவிட்டால், வேறு எது உங்களை நீதியின் பாதையில் நடக்கும்படி தூண்டப் போகிறது? வேறு எதுவும் நம்மில் இவைகளைக் கொண்டுவர முடியாது. உங்களைக் கட்டுப்படுத்தும் தேவபயத்தின் உந்துதலோடு, கிறிஸ்துவினுடைய அன்பின் வல்லமை இணைகிறபோது (2 கொரிந்தியர் 5:14), உங்களில் பரிசுத்தமானது பூரணப்பட முடியும் (2 கொரிந்தியர் 7:1). தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை வளர்க்கிறது.
கடவுளைப் பிரியப்படுத்துதல்
கொலோசெயர் 3:22ஐ கவனியுங்கள், “வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்”. கொலோசெ பட்டணத்தின் திருச்சபையிலிருந்த அடிமை வேலையாட்களான விசுவாசிகளுக்கு பவுல் சொல்லியதைக் கவனியுங்கள், “பரலோகத்தில் உங்களுக்கு கிருபையுள்ள எஜமான் இருந்தபோதிலும், பூமியிலும் உங்களுக்கு மனித எஜமான்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிய வேண்டும். உங்களுடைய எஜமான்கள் உங்களிடத்தில் செய்யச் சொல்லுகிற காரியங்களை, உங்களுடைய சொந்த மதிப்பீட்டின்படி சரியானதா, நீதியானதா என்று ஆராய்ந்த பிறகு, அதனடிப்படையில் உங்களுடைய கீழ்ப்படிவு இருக்கக் கூடாது.” அவர் சொல்லுகிறார், “எல்லாக் காரியங்களிலேயும் கீழ்ப்படியுங்கள்.” ஒரேயொரு விஷயத்தில் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு உண்டு. அதாவது கர்த்தருடைய நியாயப்பிரமாணத்திற்கு எதிராக எதையாவது அவர்கள் செய்யும்படி சொன்னால் மட்டும்தான் இந்த விஷயத்தில் விலக்கு உண்டு. விசுவாசிகளெல்லொரும் இதை அறிந்திருப்பது மிகவும் அவசியமானது. கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசத்தினால் உண்டாகிற எந்தவொரு புதிய உறவாக இருந்தாலும், கிறிஸ்துவோடு நீங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே உங்களிடத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பவைகளை இல்லாமலாக்க முடியாது.
வேலையாட்கள் தங்களுடைய எஜமான்களுக்கு இரண்டு விதங்களில் கீழ்ப்படிய முடியும் என்பதை பவுல் அறிந்திருந்தார். முதலாவது, “மனிதர்களுக்குக் பிரியமாய் இருக்க பார்வைக்கு” வேலை செய்யலாம். ஆனால் பவுல் சொல்லுகிறார், “மனிதர்களைப் பிரியப்படுத்துகிறவர்களாக பார்வைக்கு” வேலை செய்யக்கூடாது. அதாவது, உங்கள் எஜமானுடைய கண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து வேலை செய்யாதீர்கள். அவர் ஒருவேளை மூன்று நிமிடத்தில் அங்கிருந்து சென்றுவிடலாம். அவர் வேறு ஏதேனும் ஊருக்கு சென்றுவிட்டால், அவருடைய பார்வையும் உங்கள்மீதிருந்து போய்விடும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவேற்றுவதற்கு வேறு எது உங்களை ஊக்கப்படுத்தப் போகிறது? உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் நல்லபடியாக செய்து முடிப்பதற்கு உங்களை உந்தித்தள்ளும் காரணமாக இருக்கப்போவது எது? உங்கள் எஜமானுடைய கண் மட்டுமே நீங்கள் வேலை செய்வதற்கு உங்களை ஊக்கப்படுத்துமானால், உங்களுடைய ஊக்கத்தின் பெரும்பகுதியை விரைவில் இழந்துவிடுவீர்கள்.
ஆனால், வேலையாட்கள் தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிவதற்கு இன்னொரு வழி இருக்கிறது. அதாவது, “தேவனுக்குப் பயப்படுகிறவர்களாக, கபடமில்லாத இருதயத்துடன்” கீழ்ப்படிதல். கிறிஸ்தவர்களான அடிமை வேலையாட்களை இந்த விதத்தில் வேலை செய்யும்படிதான் பவுல் வலியுறுத்துகிறார். “கபடமில்லாத இருதயத்துடன்” என்றால் மனிதர்களைப் பிரியப்படுத்துவது பாதியும், கடவுளைப் பிரியப்படுத்துவது பாதியுமாக இல்லாத இருதயத்துடன் என்று பொருள். தேவபயத்துடன் நடப்பதும் வேலை செய்வதுமாகிய, ஒரே நிலையிலுள்ள இருதயத்துடன் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. அடிமைகளான வேலையாட்கள், தங்களுடைய அன்றாட கடமைகளைக் கடவுளால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் செய்வதற்கான ஒரே வழி, தேவபயத்துடன் அவைகளைச் செய்வதுதான், இல்லையா? நிச்சயமாக. நீதியை நிறைவேற்றும்படியாக அரசாட்சி செய்கிற ராஜாவாக இருந்தாலும் சரி, மிருகங்களைக் கவனித்து, அவைகளின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் பொறுப்பிலுள்ள அடிமைகளான வேலையாட்களாக இருந்தாலும் சரி, நம்முடைய கடமை பொறுப்புகளைச் சரியாக செய்வதற்கு தேவபயமே நம்மை ஊக்கப்படுத்தக் கூடியது. ராஜாவாக இருந்தாலும், அடிமைகளான வேலையாட்களைப் போலவே, கடவுளால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தன்னுடைய கடமைகளைச் சரியாக செய்ய தேவபயத்துடனேயே தன்னுடைய பணிகளைச் செய்ய வேண்டும். அடிமைகளான வேலையாட்களும், என் எஜமானுடைய கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறதா என்பதில் கவனம் காட்டாமல், பரலோக எஜமானுடைய கண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்துடனேயே தன் பணிகளைச் செய்ய வேண்டும்.
பயன்பாடுகள்
தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை வளரச் செய்யக்கூடியது என்பதை வேதம் தெளிவாகப் போதிக்கிறது. இந்தப் போதனையினுடைய மிக முக்கியமான பயன்பாடுகள் என்ன?
தேவபயத்தின் அவசியத்தைப் பற்றிச் சிந்தியாமல், மனிதர்களுடைய நடத்தை பற்றிய பிரச்சனைகளை தீர்க்க முற்படுவது மடமையே. கடவுள், மனிதன் தன்னோடு உறவுகொள்ளுகிறபோது ஒழுக்க நடவடிக்கைகளை அவனில் விதைக்கிறார். மெய்யாக கடவுளைத் தேடுவது இல்லாமற்போனால், ஒழுக்கத்தில் உண்மை என்பது விரைவிலேயே இல்லாமலாகிவிடும். இந்நாட்களில் மெய்யாக கடவுளைத் தேடுவது என்பதைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது. மெய்யாக கடவுளைத் தேடுவதன் இடத்தை இந்நாட்களில் மனிதநலவாதம் பிடித்திருக்கிறது. அதாவது மனிதனே கடவுள் என்ற எண்ணம் அதிகமாகியிருக்கிறது. அத்தோடு, தாராளவாத கோட்பாடுகளும் நிறைந்திருக்கிறது. அதாவது, மனிதனுக்கு ஏற்ப கடவுளை மறுவடிவம் செய்து பார்த்தல். இருப்பினும், மெய்யாக கடவுளைத் தேடுபவர்களின் எச்சங்கள் இன்னும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மீந்திருப்பவர்களின் தொகை தேய்ந்துகொண்டுதான் போகிறது. ஒழுக்கரீதியான பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திக்கிறபோது, மனிதர்கள் மத்தியில் பெரும்பாலும் கடவுளைப் பற்றிய எந்த எண்ணமும் ஏற்படுகிறதில்லை. உதாரணத்திற்கு, போதை பொருள் பிரச்சனையை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாருமே இந்தப் பிரச்சனை பற்றி அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். போதைப் பொருளுக்கு, முன்பு அடிமையாக இருந்தவர்களை அழைத்துவந்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பேச வைக்கிறார்கள். மாணவர்கள் மத்தியில் இதைப் பற்றிய பயத்தை ஏற்படுத்துவதற்காக அரசு அதிகாரிகளை அழைத்து அதனுடைய தாக்கங்களை எடுத்துச் சொல்ல வைக்கிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது? பெரும்பாலும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. இதையெல்லாம் கேட்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை என்கிறார்கள். ஏன்? ஏனென்றால், மனிதர்கள், தேவபயமே தேவபக்தியுள்ள ஒழுக்கரீதியான வாழ்க்கை வாழவும், அதில் நிலைத்திருக்கவும் செய்யும் என்ற உண்மையை அறியாமல், வெறுமனே ஒழுக்கரீதியான அந்தப் பிரச்சனையை, தாக்கும் நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுகிறார்கள். ரோமர் 1:28ல், பவுல் இதைப் பற்றி இப்படியாகச் சொல்லுகிறார், “தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.”
இரண்டாவதாக, மெய்யான எழுப்புதல் ஒழுக்கம் மற்றும் சமூக மாற்றங்களையும் எப்போதும் அதைத் தொடர்ந்து கொண்டுவரும். எழுப்புதல் என்பது தேவஆவியானவருடைய வல்லமையான செயல்பாட்டினால் உண்டாவது. அதாவது அவருடைய சாதாரண பணிகளை அசாதாரணமான வழிகளில் செயல்படுத்துவதனால் உண்டாவது. ஒரு குறுகிய காலத்தில், மக்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட பகுதியில், அநேக மனிதர்களுடைய இருதயத்தில் தேவபயத்தை நாட்டுவதை கர்த்தர் தம்முடைய வல்லமையான மற்றும் சர்வஏகாதிபத்திய செயலின் மூலம் செய்வதுதான் எழுப்புதலாகும். இந்த வகையில் கடவுள் செயல்படுகிறபோதெல்லாம் என்ன நடக்கிறது? பத்தாயிரம் பேர் இருக்கிற ஒரு சமூகத்தில் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் பேர் திடீரென்று தேவபயத்துடன் நடக்கிறார்கள். அவர்களுடைய நடத்தையெல்லாம் போலீஸ்காரருடைய கண்கள் தங்களைப் பார்க்கிறது என்பதற்காக இல்லாமல் கடவுளுடைய கண்கள் பார்க்கிறது என்பதனால் அமைகிறது. பள்ளியிலுள்ள மாணவர்களுடைய நடவடிக்கைகளெல்லாம் அவர்களுடைய ஆசிரியரின் கண்கள் காண்கிறதா என்பதைப் பொறுத்தில்லாமல், கடவுளுடைய கண்கள் காண்கிறது என்பதால் மாற்றமடைகிறது. சமூகத்தின் மத்தியில் அவர்கள் ஒரு சிறு ஏதேனைப் போல் காணப்படுகிறார்கள். எதனால் இதெல்லாம்? அவர்களுடைய இருதயங்களில் நாட்டப்பட்ட தேவபயமானது அவர்களில் வேர்கொண்டு, சமூக ஒழுக்கரீதியான ஒழுங்குமுறையுள்ள வாழ்க்கையாக வளருகிறது. அவர்கள் ஒருவரோடொருவர் கனிவாக நடக்கிறார்கள், மற்றவர்களைப் பற்றிய அக்கறையுடையவர்களாக இருக்கிறார்கள். வரலாற்றில் ஆவியின் மூலமாக செய்யப்பட்ட எந்தவொரு மெய்யான எழுப்புதலும் பெருமளவில் சமூக மற்றும் ஒழுக்கரீதியான மாற்றங்களைப் பிறப்பிக்கிறதாகவே இருந்திருக்கிறது.
மூன்றாவதாக, பெற்றோர்களாகிய நம்முடைய நடவடிக்கைகள் எந்தளவிலான தாக்கத்தை நம்முடைய பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மூன்று பெரும் ஓடைகள் இருக்கின்றன. முதலாவது, அடிப்படையானதொன்று, நம்முடைய வீடு; இரண்டாவது பள்ளி; மூன்றாவது திருச்சபை. இந்த வரிசை முறையை நான் மாற்றிவிட்டேனா? இல்லை. அவர்கள் பெருமளவிலான நேரம் உங்களுடைய வீட்டில்தான் இருக்கிறார்கள். ஆகவே அதுதான் அதிக வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதற்கடுத்தப்படியாக, பள்ளியில்தான் அவர்கள் அதிகளவிலான நேரம் இருக்கிறார்கள். திருச்சபையில்தான் குறைந்தளவிலான நேரம் இருக்கிறார்கள்.
பெற்றோராகிய நீங்கள், கடவுளுடைய கரத்திலுள்ள, அவரால் பயன்படுத்தப்படுகிற கருவியாக, உங்களுடைய பிள்ளைகளிடத்தில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை மதிப்பிட நீங்கள் விரும்புகிறீர்களா? அதை மதிப்பிட இதோ ஒரு வழி: உங்களுடைய பிள்ளைகள் எந்தளவுக்கு தேவபயத்தை உங்களுடைய உதாரண வாழ்க்கை, கட்டளைகள், வேத ஒழுக்கமுறையில் அவர்களைத் தொடர்ச்சியாக நீங்கள் பயிற்றுவித்தல் மற்றும் என்னவிதமான கல்விமுறையை அவர்களுக்கு வழங்குகிறீர்கள் என்பதன் மூலமாக அவர்கள் கற்றுக்கொள்ளுகிறார்கள். உங்களுடைய எல்லாவிதமான நடவடிக்கைகளிலும், கடவுளுடைய கண்தான் மிகவும் வலிமையான தாக்கத்தை உங்களில் ஏற்படுத்துகிறது என்பதை உங்களுடைய பிள்ளைகள் காண்கிறார்களா? அல்லது இரட்டை வாழ்க்கையை நீங்கள் வாழுவதை அவர்கள் காண்கிறார்களா? அதாவது திருச்சபையில் ஒருவிதமாகவும், குறிப்பிட்ட ஒரு நண்பர்கள் கூட்டத்தில் ஒருவிதமாகவும், இன்னொரு நண்பர்கள் கூட்டத்தில் இன்னொருவிதமாகவும் இருப்பதை அவர்கள் காண்கிறார்களா? உங்களுடைய உதாரண வாழ்க்கை மற்றும் கட்டளைகளின் மூலமாக தேவபயத்தை அவர்களுக்குக் கற்றுத் தருகிறீர்களா? அப்படி நீங்கள் செய்யாவிட்டால், கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தையும், நீங்கள் பெற்றிருக்கிறதாக சொல்லுகிற இரட்சிப்பையும் பற்றி அவர்கள் குறை கூறினால், அதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் அடைந்திருக்கிறதாக சொல்லுகிற இரட்சிப்பு, நாள் முழுவதும் தேவபயத்தினால் வாழுகிற வாழ்க்கையை உங்களில் ஏற்படுத்தவில்லை (நீதிமொழிகள் 23:17).
ஒவ்வொரு பெற்றோரும், தாவீது சொல்லிய வார்த்தைகளை நினைவில் கொண்டு உங்களுடைய பிள்ளைகளிடத்தில் உரையாடுங்கள், “பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.” (சங்கீதம் 34:11). இந்த இடத்தில் மிகவும் முக்கியமான ஒரு வார்த்தையை வேதம் வலியுறுத்துகிறது. அதை, நீதிமொழிகள் 1:7ல் நாம் வாசிக்கலாம், “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்”. நீதிமொழிகளின் முதலாவது அதிகாரம், தேவபயத்தைப் பற்றிய வலிமையான வாக்கியத்துடன் ஆரம்பமாகிறது. அநேக வருடங்களாக நன்மை தீமையை அறியக்கூடியவனாகவும், தேவபயம் சம்பந்தமான எல்லாவித வழிமுறைகளை நிராகரிக்கிறவனாகவும் இருக்கிற மனிதனைப் பற்றிய அற்புதமான, தெளிவான குறிப்புகளை அதன் இறுதியிலும் வாசிக்கலாம். சாலமோன் சொல்லுவதைக் கவனியுங்கள்,
“அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள். என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள். ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.” (நீதிமொழிகள் 1:28-31)
இந்த அற்புதமான வார்த்தைகளில், தேவபயத்தில் நடப்பதை நிராகரிக்கிற மகனோ, மகளோ, அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களை நல்வழியில் நடத்தாமற்போனதுதான் காரணம் என்பதாக எந்தவிதமான குறிப்பும் இங்கில்லை. மாறாக, அந்தத் தவறு, அந்த இளம் மகன் அல்லது மகளினுடைய நடவடிக்கையில்தான் இருக்கிறது. அதாவது, அவர்கள் “அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள்.” சில பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவபயத்தைக் கட்டளைகளின் மூலமாகவும், ஒழுங்கு நடவடிக்கைகளின் மூலமாகவும், உதாரண வாழ்க்கையின் மூலமாகவும் கற்றுத் தருவதிலிருந்து தவறியதையும், அதனிமித்தம் அந்தப் பிள்ளைகள் தேவபக்தியற்றவர்களாக இருந்ததையும் வேதம் சுட்டிக்காட்டத்தான் செய்கிறது. ஏலியினுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு துக்ககரமான உதாரணத்தை வேதத்தில் நாம் பார்க்கலாம் (1 சாமுவேல் 2:27-30). எனினும், கிறிஸ்தவ பெற்றோர்களினுடைய அடங்காத பிள்ளைகள், அந்த பெற்றோர்கள் தேவபக்தியில் வாழத் தவறியதும், அவர்களை தேவபயத்தில் வழிநடத்தாமற்போனதும்தான் காரணம் என்பதாக வேதம் எங்கும் குறிப்பிடவில்லை. இதற்கு ஆதாரமாக, ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் சொல்லிய வார்த்தைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், “நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.” (ஏசாயா 1:2). ஒரு பெற்றோருடைய கடமையைப் போன்று கடவுள் தம்முடைய கடமையைச் செய்யத் தவறினார் என்று யாரேனும் அவரைக் குற்றஞ்சாட்ட முடியுமா?
அத்தோடு, உங்களுடைய பிள்ளை படிக்கின்ற பள்ளியின் தாக்கத்தையும் மதிப்பிட்டுப் பாருங்கள். தேவபயமே ஞானத்தின் மையமாக இருக்கிறது என்று கடவுள் சொல்லுவாரானால், தேவபயமில்லாமலிருப்பது மூடத்தனத்தின் மையம் என்று சொல்லுவதுதான் சரியென்று நான் எண்ணுகிறேன். இது உண்மையானால், அநேக பிள்ளைகள் அவர்களுடைய பள்ளியில் இருக்கிற நாட்கள் ஒருவகையில் மூடத்தனத்தின் நாட்களாகத்தான் இருக்கிறது. தேவபயமில்லாமல் வாழ முடியும் என்பதுதான் அவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது. எந்தவொரு ஆசிரியரும் அப்படிச் சொல்லவே மாட்டார்கள் என்று நீங்கள் சொல்லலாம். தேவபயத்தை அடிப்படையில் வலியுறுத்தி ஒழுக்கரீதியான காரியங்களைக் கற்றுத் தராமலிருப்பதன் மூலமாக, அவர்கள் தேவபயம் தேவையில்லை என்பதைத்தான் சொல்லாமல் சொல்லுகிறார்கள்.
இந்த விஷயத்தில் திருச்சபையின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பின்வருமாறுதான் நாம் மதிப்பிட வேண்டும்: என்னுடைய திருச்சபை என் பிள்ளைகளுக்கு தேவபயத்தைப் போதிக்கிறதா அல்லது அவர்களை வெறுமனே ஏதேனும் காரியங்களில் ஈடுபடவும் மகிழ்ச்சியூட்டவும் மட்டும் செய்கிறதா? அது கடவுளுடைய மெய்யான குணாதிசயங்களைப் போதிக்கிறதா? கடவுளுடைய பிரசன்னத்தையும், அவருடைய பரிசுத்த கட்டளைகளினுடைய கோரிக்கைகளையும், சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய கிருபையின் ஆச்சரியங்களையும் பற்றிய உணர்வை, தேவகிருபையினால் வளர்ந்து வரும் இளம் பிள்ளைகளில் நாட்டுவதற்கான காரியங்களில் ஈடுபடுகிறதா? திருச்சபையின் தாக்கத்தை இவைகளின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும். இளம் பிள்ளைகளுக்கானவைகளை மட்டுமே வைத்து நாம் மதிப்பிட்டுவிடக்கூடாது, நமக்கானவைகளையும் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நாம் பாடுகிற பாடல்கள் நமக்குப் போதிப்பதென்ன? ஆராதனை வேளைகளில் என்னவிதமான ஆவிக்குரிய சூழலைத் திருச்சபையில் பார்க்க முடிகிறது? அங்கு தேவபயத்தை நாடுவதையும் விளக்குவதையும் காணமுடிகிறதா?
சில நாட்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் போதக ஊழியம் செய்கிற என்னுடைய நெருக்கமான நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதினேன். அதில், அவர் அநேக நாட்களாக உண்மையுடன் ஊழியம் செய்துவருகிற திருச்சபையின் தற்சமய நிலையைப் பற்றித் தெரிவிக்கும்படி கேட்டிருந்தேன். அவருடைய பதிலில், மிகவும் ஊக்கப்படுத்தும் சில காரியங்களுக்கு மத்தியில் ஊக்கமிழக்கச் செய்யும் முக்கியமான ஒரு காரியத்தையும் குறிப்பிட்டிருந்தார். சிலர் சபையைவிட்டுச் சென்றுவிட்டதோடு, அவர்கள் சபையைவிட்டு சென்றதற்கான காரணமாக குறிப்பிட்டிருந்தது என்னவென்றால், “என்னுடைய சிறு பையனுக்கு ஏற்றவிதமான போதனைகள் இங்கில்லை, அத்தோடு அவனை ஊக்கப்படுத்தும் வகையிலான எந்தவித இசையும் இங்கில்லை” என்பதுதான் என்றெழுதியிருந்தார். அவர்களுடைய பிள்ளைக்கு அரணைப் போன்று, உறுதியான வேத பிரசங்கமும், கடவுளை மையமாகக் கொண்ட பயபக்தியுள்ள ஆராதனையும், திருச்சபை அன்பையும் ஐக்கியத்தையும் விட்டுவிட்டு, தன் பிள்ளையினுடைய கேளிக்கையில் கவனம் காட்டிய இந்தவிதமான முதுகெலும்பில்லாத, அறிவற்ற பெற்றோர்களுக்கு கடவுள்தாமே இரக்கம் காட்டுவாராக. தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை வளர்க்கிறது. தேவபயம் இருக்கிற இடத்தில்தான் எப்போதும் மெய்யான தேவபக்தியும் காணப்படும். வீடும், பள்ளியும், திருச்சபையுமாக இணைந்து, உதாரண வாழ்க்கையின் மூலமாகவும், போதனைகளின் மூலமாகவும், ஞானத்தின் மையமாகிய தேவபயத்தை இளம் தலைமுறையினருக்குக் கற்றுத் தந்து வளர்க்க வேண்டும்.
தேவபயமின்மையே தேவபக்தியில்லாத வாழ்க்கையை உருவாக்கும்
தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை வளர்க்கிறது என்பது உண்மையானால், தேவபயமில்லாமலிருப்பது தேவபக்தியில்லாத வாழ்க்கையை வளர்க்கிறது என்று சொல்லுவதும் உண்மைதான், இல்லையா? எனினும், இந்தக் கூற்றை நிரூபிக்க, வெறுமனே அனுமானத்தை மட்டும் நாம் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. வேதத்தின் மூலமாகவும் இதை நிரூபிக்க முடியும். இதை நாம் ஆழமாக ஆராய்வதற்கு, இதைப் பற்றி விவரிக்கிற ஒரு முக்கியமான வேத வசனத்தை முதலாவது நாம் கவனிப்போம். இரண்டாவதாக, இந்த மைய வசனத்தைக் கொண்டு விளக்கப்படுத்தப்பட்ட போதனைக்கு ஆதாரமாக வேதத்தின் ஏனைய பகுதிகளையும் பார்க்கலாம். இறுதியாக, இவைகள் நமக்குப் போதிக்கிற நடைமுறை பயன்பாடுகளைப் பார்க்கலாம்.
முக்கிய வசனம்: ரோமர் 3:18
தேவபயமில்லாமலிருப்பது தேவபக்தியில்லாத வாழ்க்கையை வளர்க்கிறது என்ற கூற்றை நிரூபிப்பதற்கான முக்கிய வசனம், ரோமர் 3:18, “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை”. கடவுளுக்கு முன்பாக உலகத்திலுள்ள எல்லா மனிதர்களும் பாவிகளாக இருக்கிறார்கள் என்பதை நிலைநிறுத்தவும், கிறிஸ்துவில் மட்டுமே காணப்படும், விசுவாசத்தின் மூலமாக மட்டுமே பெறப்படும் இரட்சிப்பானது, எந்தவிதமான விதிவிலக்கும் இல்லாமல் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்கும் அவசியமானது என்பதை நிரூபிப்பதற்கான வேத ஆதாரங்களை பவுல் தொடர்ந்து தந்து, இந்த வசனத்தோடு அதை நிறைவு செய்கிறார். ஒட்டுமொத்த உலகத்திலுமுள்ள அவபக்தியான செய்கைகள் யாவற்றிற்கும் காரணமாக இருப்பது, “அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வபயமில்லை” என்பதுதான் என்று சொல்லுகிறார். ரோமர் 3:10-18 வரையுள்ள வசனங்களில் பவுல் விவரித்திருப்பதைப்போன்ற, ஒழுங்கற்ற, அவபக்தியான வாழ்க்கைக்குக் காரணம், அவர்களில் தேவபயமில்லாமல் இருப்பதுதான்.
தேவபக்தியில்லாதவர்கள், அவரவருடைய பார்வையின்படியாக தங்கள் வாழ்க்கையை வாழுகிறார்கள், தங்களுடைய விருப்பங்களையும், நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக வாழுகிறார்கள், இதன் மூலம் அவர்களில் தேவபயமில்லை என்பதைக் காட்டுகிறார்கள். யாரேனும் ஒருவரை ப்ளாஷ் கேமரா வைத்துப் படம் பிடித்தால், அப்போது ஒரு சில நிமிடங்கள் அந்நபருடைய கண்களுக்கு முன்பாக ஒரு பிரகாசமான புள்ளி தோன்றும். அவர் பார்க்கிற எல்லாவற்றின் மேலும் அந்தப் புள்ளி இருப்பதாகத் தோன்றும். அவர், தன்னுடைய கையையோ, மரத்தையோ, வீட்டையோ அல்லது வேறுவொரு நபரையோ அந்தப் புள்ளியில்லாமல் பார்க்க முடியாது. அது தொடர்ந்து “அவருடைய கண்களுக்கு முன்பாக” இருக்கும். ஆனால் கேடானவர்களைப் பற்றி வேதம் சொல்லுகிறது, “அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வபயமில்லை” என்று. அதாவது, அவர்கள் காலையில் எழுந்து, அந்த நாளில் செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்திக்கிறபோது, கடவுள் இருப்பதையும், கடவுளுடைய எதிர்பார்ப்பையும், கடவுளுடைய குணாதிசயங்களையும், கடவுளுடைய இரட்சிப்பையும், கடவுளுடைய கட்டளைகளையும், கடவுளுடைய நியாயத்தீர்ப்பையும் பற்றி எந்தவிதமான எண்ணமும் இல்லாமல்தான் அவைகளைப் பார்க்கிறார்கள். தேவபயத்தைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல்தான் அவர்கள் அந்த நாளில் நடக்கிறார்கள். இதுதான் பவுலினுடைய குற்றச்சாட்டு. ஆகவே பவுல் சொல்லுகிறார், தேவபக்தியற்ற வாழ்க்கை வாழுவதை நீங்கள் காணுகிறபோது, அங்கு தேவபயம் இல்லை என்பதுதான் தெரிகிறது. அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வபயம் இல்லாததனால்தான் அவர்கள் மிகவும் சீர்கேடாகவும் பாவமுள்ளவர்களாகவும் வாழுகிறார்கள்.
தேவபக்தியுள்ள மனிதனோ, தான் பார்க்கிற அனைத்திலும் தேவபயமாகிய அந்த பிரகாசமுள்ள புள்ளி தோன்றுவதாகத்தான் பார்க்கிறான். அவன் கடவுளைப் பற்றிய எண்ணமற்றவனாக ஒருநாளும் எதையும் செய்கிறதில்லை. அவன் எப்போதும், “இந்த நாள் என்னுடைய கர்த்தர் உருவாக்கிய நாள். நான் அவருடைய வேலையாள். அவர் என் தேவன். ஆகவே இந்த நாளில், நான் கடைக்கோ, பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ சென்று, அங்கு வேலையிலோ அல்லது ஏதேனும் உரையாடலில் ஈடுபடும்போதோ, அல்லது வேறு எதைச் செய்தாலும் அவையாவற்றிலும், கடவுள் இருப்பதையும், அவருடனான என்னுடைய உறவையும், அவர் என்னிடம் கோருவதையும், அவர் எனக்காக தந்திருப்பதையும் நினைவுபடுத்தும் விதத்தில்தான் செயல்படுவேன்” என்பான். தேவபயமானது அவனுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது, அதன் பிரதிபலிப்புகள், அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இருக்கிறது. அதற்கு எதிர்மறையாக, தேவபக்தியில்லாதவனுடைய கண்களுக்கு முன்பாக தேவபயமென்பது இல்லை. அவன் கடவுளுடைய அதிகாரத்தை மதிப்பதில்லை, அவருடைய கட்டளைகளைப் பொருட்படுத்துவதில்லை, கடவுள் வழங்குகிற இரட்சிப்பைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளுவதில்லை, கடவுளுடைய புன்னகையைப் பற்றி அக்கறைகொள்ளுவதில்லை, கடவுளால் கைவிடப்பட்ட நிலையைப் பற்றி பயப்படுவதில்லை.
ஒழுக்கரீதியான பிரச்சனைகள், வாழ்வியல் நடத்தைப் பிரச்சனைகள் யாவும், கடவுளுடைய போதனைகள் மற்றும் கட்டளைகளின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்பதை இந்த ஆரம்ப வார்த்தைகளே நமக்குக் கற்றுத் தருகின்றன. நன்னெறி, ஒழுக்கம், நடத்தை ஆகியவற்றை, மெய்யாக வேதம் போதிக்கிற கடவுளைத் தேடும் வழிமுறைகளிலிருந்து நாம் பிரிக்க முடியாது. கடவுளே இவைகளையெல்லாம் இணைத்திருக்கிறார், ஆகவே நாம் இவைகளைப் பிரிக்க முடியாது. கடவுள் இணைத்திருப்பவைகளை மனிதன் பிரிக்கப் பார்த்தால், அது அவனுக்குக் கேடாகத்தான் போய் முடியும். ரோமர் 3:18, தெளிவாக நமக்குக் காட்டுகிறது, தேவபயமில்லாத இடத்தில், நிச்சயமாக தேவபக்தியான வாழ்க்கையைப் பார்க்க முடியாது.
முக்கிய குறிப்பாகிய ரோமர் 3:18ஐ பார்த்த பிறகு, பழைய ஏற்பாட்டிலிருந்து வேறு இரண்டு வசனப்பகுதிகளை நாம் இப்போது ஆராய்வோம். அதில் முதலாவது, சங்கீதம் 10. இந்த சங்கீதத்தின் சூழலை, முதல் இரண்டு வசனங்கள் தெளிவாக விவரிக்கிறது:
“கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.”
இதில், துன்மார்க்கனால், நீதிமான் துன்புறுத்தப்படுவதையும், அதைப்பற்றியெல்லாம் கடவுள் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்பதாக அவன் நினைப்பதையும் பார்க்கலாம். இது ஒரு பெரும் பிரச்சனையாக பல சங்கீதங்களிலும் மறுபடியும் மறுபடியும் சுட்டிக் காட்டப்படுவதை நாம் பார்க்கலாம். கிறிஸ்தவர்களாகிய நாம் இன்றளவும் இந்தப் பிரச்சனையை அனுபவிக்கிறோம். “ஆண்டவரே, இதெல்லாம் இப்படிச் சரியில்லாமல் நடக்கிறதே” என்று நாம் சொல்லிய நேரங்களும் உண்டு. ஒருவேளை, என்னுடைய மகனை, ஒருவன் எட்டி உதைத்து, காயப்படுத்திக்கொண்டிருப்பதை நான் கண்டும், அதைத் தடுப்பதற்கான வலிமை என்னிடத்தில் இருந்தும், அந்தவேளையில் நான் ஒன்றும் செய்யாதிருந்தால், ஒரு தகப்பனாக என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? என்னுடைய பிள்ளையின்மீது எனக்கிருக்கிற ஆழமான அன்பைப் பற்றி நீங்கள் கேள்வி எழுப்பமாட்டீர்களா? நிச்சயமாக கேள்வி எழுப்புவீர்கள். கடவுளுடைய பிள்ளைகளும் இந்த பிரச்சனையை அனுபவித்திருக்கிறார்கள்.
இந்த சங்கீதத்தின் சூழலில், இதை எழுதியவர், துன்மார்க்கனுடைய எண்ணத்தில் என்ன நினைக்கிறான் என்பதைப் பற்றி ஆராய்ந்து இங்குத் தெரியப்படுத்துகிறார். துன்மார்க்கன் நீதிமானைப் பிடித்துக்கொள்ளுகிறான், ஆனால் வானத்திலிருந்து எந்தவிதமான இடிமுழக்கமும் உண்டாகவில்லை, மின்னலின் ஒளி அவனைத் தாக்கவும் இல்லை. ஆகவே அவன் தொடர்ந்தும் தன்னுடைய துன்மார்க்கத்தின்படி நடக்கிறான். முதலாவது, துன்மார்க்கன் என்ன செய்கிறான் என்பதைக் கவனியுங்கள்:
“அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான். நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது. தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.” (சங்கீதம் 10:5-10)
நீதிமான்களுக்கும், ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் எதிராக துன்மார்க்கன் தன்னுடைய திட்டங்களையெல்லாம் செயல்படுத்துகிறான். ஆனால் இந்தப் பகுதி, 4வது மற்றும் 11வது வசனங்களைச் சுற்றி அமைந்திருக்கிறது. இவை இரண்டும், துன்மார்க்கன் தான் செய்கிறதை எதனால் செய்கிறான் என்பதை விவரிக்கின்றன. இவையெல்லாவற்றிற்குமான அவனுடைய காரணத்தை 4வது வசனத்தில் கவனியுங்கள், “துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே”. வேறுவிதமாக சொல்லுவதானால், துன்மார்க்கன் கடவுளைப் பற்றிய சிந்தனைகளைத் தன்னுடைய எண்ணத்திலிருந்து எடுத்துப் போடுகிறான். இப்படி சொல்லுவதனால், அவன் நாத்தீக சிந்தனை கொண்டவன் என்று பொருளல்ல. கடவுளைப் பற்றிய சிந்தனைகள், அவனுடைய எண்ணத்திலிருந்து அவனை ஆளுகை செய்யவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அவனுடைய எண்ணமெல்லாம் கடவுள் இல்லை என்பதாகவே இருக்கிறது. அவன் தன்னுடைய திட்டங்களைத் தீட்டுகிறான். அவனுடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறான். ஆனால் கடவுளைப் பற்றிய எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் இதையெல்லாம் செய்கிறான். அதே துன்மார்க்கன் கடவுளுடைய குணாதிசயங்கள் பற்றிய உணர்வுகளை தன்னிலிருந்து விரட்டித் தள்ளுகிறான் என்று 11வது வசனம் காட்டுகிறது, “தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்”. கடவுளுடைய எல்லாம் அறிந்த அறிவை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறான். ஏன் அவன் தன்னுடைய எண்ணத்திலிருந்து கடவுளைத் தள்ளிவிடுகிறான்? அதில் அவன் முழுமையான வெற்றி காண முடியாதபோது, தன் எண்ணத்தில் தொடர்ந்து வலம்வருகிற கடவுளுடைய குணாதிசயங்களையும் வல்லமையையும் ஏன் வேறுவிதமாகக் காட்ட, குறைவுபடுத்த முயற்சிக்கிறான்? ஏனென்றால், அவனுடைய எண்ணத்திலிருந்து தேவபயத்தை விரட்டாவிட்டால், அவனால் அவபக்தியான வாழ்க்கையை வாழ முடியாது என்பதனால்தான். ஆகவே அவன் தன்னுடைய அவபக்தியான வாழ்க்கையைத் தொடரவேண்டுமானால், தேவபயமற்ற சூழலைத் தன்னில் அவன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான மற்றொரு பழைய ஏற்பாட்டு வேதப்பகுதி மல்கியா 3. உடன்படிக்கையின் தூதனானவரைப் பற்றிய அறிவிப்போடு இவ்வதிகாரம் ஆரம்பமாகிறது. அது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய குறிப்பாக இருக்கிறது. அவர் வருகிறபோது, அவர் இரண்டுவிதமான ஊழியங்களைக் கொண்டிருப்பார் என்று தீர்க்கதரிசி சொல்லுகிறார். முதலாவது, சுத்திகரிக்கும் ஊழியமாயிருக்கும்:
“ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் (சோப்பு) போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.” (மல்கியா 3:2-3)
இரண்டாவது, உடன்படிக்கையின் தூதனானவர் நியாயத்தீர்ப்பின் ஊழியத்தைக் கொண்டிருப்பார்:
“நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபச்சாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (மல்கியா 3:5)
தூதனானவர் வெறுமனே சுத்திகரிப்பதற்காக மட்டும் வரவில்லை, நியாயந்தீர்க்கவும் வருகிறார். யாரெல்லாம் நியாயந்தீர்க்கப்பட போகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்: சூனியக்காரர்கள், விபச்சாரக்காரர்கள், பொய்யாணையிடுகிறவர்கள், விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்கள், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்கள். வேறுவிதமாகச் சொல்லுவதானால், கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்பு, உலகத்திலுள்ள எல்லாவிதமான தீமைகளுக்கும், குற்றங்களுக்கும், ஒழுக்கக்கேடுகளுக்கும் எதிராக இருக்கும் என்கிறார். பிறகு, அவர்கள் எல்லாருக்குமிடையில் இருக்கிற ஒரு ஒற்றுமையைக் குறிப்பிடுகிறார், “அவர்கள் எனக்கு பயப்படாதவர்கள்”. ஒரு விபச்சாரக்காரனுக்கும், மற்றவர்களுடைய அடிப்படையான தேவைகளைத் தீர்க்குமளவுக்கு தன்னிடம் இருந்தும் அதை செய்வதற்கு மனமற்றவனாக இருக்கிற ஒருவனுக்கும் இடையிலிருக்கிற ஒற்றுமை என்ன? இந்த வசனத்தின்படி, அவர்கள் இருவரும் தேவபயத்தில் நடக்கிறவர் அல்ல என்பதுதான். ஆகவே கடவுள் தமக்கு பயப்படாதவர்களுக்கு எதிராக கடும் கோபத்துடனும், பழிவாங்குதலுடனும் தம்முடைய நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருவார் என்று மல்கியா தீர்க்கதரிசி சொல்லுகிறார்.
மதரீதியான மாய்மாலக்காரர்கள்
இதுவரை நாம் பார்த்த வேதப்பகுதிகள், வெளிப்படையாக கடவுளுக்கு எதிராக துன்மார்க்கமாய் நடக்கிறவர்களைப் பற்றி குறிப்பிடுவதைப் பார்த்தோம். ஆனால் தேவபயமற்ற இன்னொரு பிரிவினரான மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்கள் வெளிப்புறமாக கடவுளுடைய காரியங்களில் அதிகமாக ஈடுபடுகிறவர்கள், ஆனால் இவர்கள் மதரீதியான மாய்மாலக்காரர்கள். வெளிப்புறமாக கடவுளைப் பற்றிய விஷயங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள், ஆனால் அவைகளின் தாக்கம் அவர்களில் இருக்காது. இந்தவிதமான மனிதர்களுக்கு ஏற்ற உதாரணமாக இருந்தவர்கள்தான், பரிசேயர்களும் வேதபாரகர்களும்.
மத்தேயு 6ல், நம்முடைய கர்த்தர் இவர்களை மாய்மாலக்காரர்கள் என்று அழைக்கிறார். இவர்களைப் போல் நாம் இருக்கக்கூடாது என்று நம்மை எச்சரிக்கிறார். அதற்கான காரணங்களாக அவர் குறிப்பிடுவது, அவர்கள் ஜெபிக்கிறபோது, மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஜெபிப்பார்கள் (வசனம் 5), அவர்கள் தர்மம் செய்கிறபோது, மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே செய்வார்கள் (வசனம் 2), மற்றும் அவர்கள் உபவாசம் பண்ணும்போது, மனிதர்கள் காணும்படியாகவே செய்வார்கள் (வசனம் 16). அதாவது, மதரீதியான காரியங்களைச் நிறைவேற்றுவதற்காக அவர்கள் எடுக்கிற முயற்சிகளிலும், மதரீதியான காரியங்களை அவர்கள் செய்கிறபோதும், அவற்றில் எந்தவிதமான தேவபயமும் இருக்கவில்லை. தேவபயத்தின் சாராம்சம் என்ன? கடவுள் இருக்கிறார் என்றும், அவருடைய புன்னகையே எனக்கு பெருத்த மகிழ்ச்சி என்றும், அவரால் கைவிடப்படுவதுதான் பெரும் பயங்கரமானது என்றும் உணருவதே தேவபயமாகும். இது ஒரு மனிதனை, அவனுடைய மனச்சாட்சியை மீறி எதையும் செய்யாமலும், கடவுளுடைய சாட்சியத்தை நாடுகிறவனாகவும் இருக்கச் செய்யும். இப்படியான விஷயங்களுக்கு பரிசேயர்களும் வேதபாரகர்களும் அந்நியர்களாக இருந்தார்கள்.
கிறிஸ்தவர்களே, உங்களுடைய இருதயம் எங்கிருக்கிறது? கடவுளிடத்தில் ஜெபம் பண்ணுவதற்கு நீங்கள் செல்லுவதையும், அவருடைய கட்டளைகளுக்கான உங்களுடைய கீழ்ப்படிவையும் மனிதர்கள் காணலாம். ஆனால் கேள்வி என்னவென்றால், கடவுள் உங்களில் எதைக் காண்கிறார் என்பதுதான்? அவருடைய கட்டளைகளுக்கான உங்களுடைய வெளிப்புறமான கீழ்ப்படிவை, உங்களுடைய இருதயத்திலுள்ள தேவபயத்தின் வெளிப்பாடாக அவர் காண்கிறாரா? நீங்கள் அவரை ஆராதிப்பது, அவர்மீதுள்ள உங்களுடைய அன்பினாலும், அவரைப் பிரியப்படுத்துவதிலுள்ள உங்களுடைய ஆர்வத்தினாலும், அவருக்கு நீங்கள் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வினாலும் நீங்கள் செய்கிறதாக அவர் பார்க்கிறாரா? அல்லது மதரீதியான உங்களுடைய நடவடிக்கைகள் யாவும் ஏதோ தொடர்ச்சியாக செய்துவருகிற உயிரற்ற நடைமுறை ஒழுங்காக மட்டுமே இருக்கிறதா? மற்றவர்கள் உங்களை அப்படிக் காணவேண்டுமென்பதற்காக அவற்றைத் தொடர்ந்து செய்து வருகிறீர்களா?
நீங்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டுவருகிறவைகளையெல்லாம் எதற்காகச் செய்கிறீர்கள்? மற்றவர்கள் செய்கிற சிலவற்றையும் நீங்கள் ஏன் செய்யக் கூடாது? மனிதர்களுடைய கண்களுக்கு முன்பாக, ஏதோ மெய்யான மதரீதியான சடங்குகளாக செய்ய வேண்டும் என்பதற்காக இவைகளையெல்லாம் செய்து கொண்டு வருகிறீர்களா? வேதபாரகர்களையும் பரிசேயர்களையும் பார்த்து இயேசு சொல்லியவைகளைக் கவனியுங்கள், “அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.” (மத்தேயு 23:28). வேதம் போதிக்கும் ஆத்மீக வழிமுறைகளையெல்லாம் வெறுமனே அறிவில் மட்டும் வைத்திருந்து, வெளிப்புறமான சடங்குமுறைகளை மட்டும் கைக்கொண்டு, இருதயத்தில் தேவபயத்திற்கு அந்நியனாக ஒருவன் இருந்தால், அவன் மெய்யான, இரட்சிக்கும், வேதப்பூர்வமான கிறிஸ்தவத்தைப் பற்றி உள்ளார்ந்த மனதில் ஒன்றும் அறியாதவனாக இருக்கிறான். ஆவிக்குரிய வறட்சியைப்பற்றி அவன் ஒன்றுமறியாதவனாக இருக்கிறான். நீதியினிமித்தமான பசிதாகத்தைப் பற்றி அவன் ஒன்றுமறியாதவனாக இருக்கிறான். தனிமையில் தன்னுடைய பாவத்திற்காக அழுது புலம்புவதைப் பற்றி அவன் ஒன்றுமறியாதவன். கடவுளைப் பற்றிய அவனுடைய ஒட்டுமொத்தமான அனுபவம் தலையில் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது, வெளிப்புறமான சில நடவடிக்கையில் மட்டுமே அது அவனுடைய வாழ்க்கையில் வெளிப்படுகிறது. ஆனால் கடவுளைப் பற்றி அவனுடைய இருதயத்தில் ஒன்றும் அறியாதிருக்கிறான்.
இந்தக் காலகட்டங்களில், தேவபயமின்மையின் தாக்கம், மிகுந்த வீரியத்துடன் உலகின் எல்லா கலாச்சாரத்திலும் காணப்படுகிறது. என்னுடைய பழங்கால வீடு ஒன்றை இடித்துத் தள்ளுவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதை நான் இரண்டு வழிகளில் செய்யலாம். கட்டிடத்தை உடைப்பதற்கான கருவிகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, மேற்கூரையிலிருந்து ஆரம்பித்து, வீட்டைப் பகுதி பகுதியாக இடிக்கலாம். ஒவ்வொரு செங்கல்லாக, கட்டிடத்திலுள்ள கதவு மற்றும் ஜன்னல்களையெல்லாம் ஒவ்வொன்றாக கழட்டி நான் அதை செய்து வரலாம். ஆனால் கட்டிடத்தை இடிப்பதற்கு இன்னொரு முறையையும் நான் செய்யலாம். அதாவது வலிமையான சுத்தியலைப் பயன்படுத்தி, கட்டிடத்தின் அஸ்திபாரத்திலிருந்து நான் ஆரம்பிக்கலாம். செய்யத் துவங்கிய ஒரு மணி நேரத்திற்கு பின், அவ்வழியே செல்பவர்கள், நான் என்ன செய்கிறேன் என்பதை அறியாதிருக்கலாம். ஏனென்றால், வீடு இன்னும் அப்படியேதான் இருக்கும். அதுவரை நான் என்ன செய்திருக்க முடியும், அஸ்திபாரத்திலுள்ள ஏதோ ஒரு பகுதியை உடைத்திருப்பேன் அல்லது அதில் ஒரு சிறு துளை மட்டுமே போட்டிருக்க முடியும். இந்த முறையை நான் தொடர்ந்தால், நிச்சயமாக, அன்று மாலைவரைகூட வீடு அப்படியேதான் இருக்கும். ஆனால் முதல் முறையைக் கையாண்டிருந்தால், இந்நேரத்தில் வீட்டின் பல பகுதிகள் உடைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேற்கூரையின் பல பகுதிகள் கிழித்தெறியப்பட்டிருக்கலாம். சில ஜன்னல்களையும் உடைத்தெடுத்திருக்கலாம். ஆனால் இரண்டாவது முறையை நான் தொடர்ந்திருந்தால், இரண்டு மூன்று நாட்களில், முதல் முறையைக் கையாளுவதனால் ஏற்படும் மாற்றங்களைக் காட்டிலும் அதிகமானதைச் செய்திருப்பேன். ஒட்டுமொத்த கட்டிடத்தின் வலிமையையும் தாங்கி நிற்கிற அஸ்திபாரத்தின் சில பகுதிகளை நான் கண்டறிந்து, சரியாக அதை நான் உடைத்தெறிந்தால், இரண்டு மூன்று நாட்களில் முழு கட்டிடமே தரைமட்டமாக்கிவிடலாம். முதல் முறையைக் கையாண்டிருந்தால் அந்த நேரத்தில் 80 சதவீதமான கட்டிடம் இன்னும் அப்படியேதான் இருக்கும்.
வேதப்பூர்வமான நன்னெறி ஒழுக்க முறைகளையெல்லாம் பிசாசானவன் வெறுக்கிறான். இவைகளையெல்லாம் அவன் தகர்த்தெறிய இரண்டு முறைகளைக் கையாளலாம். முதலாவது, கிறிஸ்தவ நல்லொழுக்க முறைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே தாக்கும் வண்ணமாக, அவன், “சரீரப்பிரகாரமான பரிசுத்தம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. அப்படியான பரிசுத்தத்தையெல்லாம் நான் அழிக்கப் போகிறேன். நேர்மை என்பதெல்லாம் ஒன்றுமில்லை, அப்படியான நேர்மையின் ஒவ்வொரு கல்லையும் நான் தகர்த்தெறியப் போகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் சாத்தான் இதையெல்லாம்விட புத்திசாலியானவன். அவன், “உங்களுடைய கட்டிடத்தின் கற்களையெல்லாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பக்கம் செல்லுகிறவர்களெல்லாம் கட்டிடம் இன்னும் நிற்பதைப் பார்க்கட்டும். நான் என்ன செய்யப் போகிறேனென்றால், உங்களுக்குத் தெரியாமல், உங்களுடைய பின்புறத்தில் வந்து கட்டிடத்தினுடைய அஸ்திபாரத்தை மெல்லத் தகர்க்க ஆரம்பிக்கிறேன்” என்று சொல்லுகிறான்.
அநேக தலைமுறைகளாக, சாத்தான், பின்புறத்திலிருந்து அஸ்திபாரத்தைத் தகர்க்கும் வேலையில்தான் ஈடுபட்டு வருகிறான். அதற்காக அவன் பயன்படுத்துகிற ஒரு சுத்தியல்தான் தாராளவாத கோட்பாடு. அதன் மூலம் அவன் வேதம் போதிக்கும் கடவுளைப் பற்றி திரித்துக் கூறுகிறான். இஸ்ரவேலின் பயபக்தியும் மகிமையுமான அவரை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய தேவனும் பிதாவுமாகிய அவரை, கொள்கைகளற்ற உணர்ச்சிவசப்படுகிறவராக மட்டும் அவரைக் காட்டுகிறான். அவருடைய பரிசுத்தம், நீதி, கோபம் என்பதெல்லாம் பெருமளவுக்கு மறக்கப்பட்டுப் போனது அல்லது நேரடியாக மறுதலிக்கப்படுகிறது. பிறகு இன்னொரு சுத்தியல், மனிதநலவாதம். இது பள்ளி படிப்பின் வாயிலாக பெருமளவுக்கு நுழைக்கப்படுகிறது. மனிதன் அடிப்படையில் தீமையை நாடி செல்லக்கூடியவனாக சீர்கேடான பாவநிலையில் இருக்கிறான் என்பதெல்லாம் இல்லை என்று அங்குக் கற்றுத்தரப்படுகிறது. மற்றொரு சுத்தியலையும் அவன் பயன்படுத்துகிறான், அதுதான் பரிணாம வளர்ச்சித் தத்துவம். அது, மனிதன் கடவுளுக்குக் கடமைப்பாடுடையவன் அல்ல, ஏனென்றால், மனிதன் கடவுளுடைய கையினால் உண்டானவையே அல்ல என்கிறது. மிருகங்களுடைய வளர்ச்சிபெற்ற நிலையே மனிதன் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டாலும், ஒருவேளை மிருகங்களைப் போல் அவர்கள் நடந்தாலும், அது நமக்கு ஆச்சரியமாக இருக்குமா?
இந்தத் தாக்கங்கள் யாவும், ஒழுக்கம் சம்மந்தமான அஸ்திபாரத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று அழகான மாளிகையைப் போல் காணப்பட்டதெல்லாம், இன்று கசாப்புக் கடையைப் போல் காணப்படுகிறது. எல்லாரும் சொல்லுகிறார்கள், “அதோ பாருங்கள், வீடு விழுந்துகொண்டு இருக்கிறது” என்று. ஏன்? ஏனென்றால், தேவபயமானது நம்முடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது. மறுபடியுமாக வேதப்பூர்வமான நன்னெறி ஒழுக்க முறைகளுக்குத் திரும்ப வேண்டுமானால், அதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது, மனிதர்களுடைய இருதயங்களில் தேவபயத்தை நாட்ட ஆரம்பிப்பதுதான். இங்கிருந்துதான் இதை நாம் துவங்க வேண்டும். இயேசு கிறிஸ்துவினுடைய கிரியையினாலும், பரிசுத்த ஆவியானவருடைய புதிதாக்குதலினாலும், கடவுளுடைய இரட்சிக்கும் கிருபையாகிய சுவிசேஷத்தின் மூலமாக மட்டுமே, மனிதர்களுடைய இருதயங்களில் தேவபயமாகிய அஸ்திபாரம் கட்டப்படும்.
மறுபடியும் நாம் மக்களிடத்தில் சென்று, கடவுள் யார் என்பதையும், அதாவது அவர் சிருஷ்டிகராக, கட்டளைகளைத் தருகிறவராக, நியாயந்தீர்க்கிறவராக இருப்பதையும், தம்முடைய படைப்புயிர்களிடத்தில் அவர் எதிர்பார்க்கிற நன்னெறி மற்றும் ஒழுக்கத்தின் நிலையையும் எடுத்துரைக்க வேண்டும். அவர் யார் என்பதையும், அவர்களிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் பற்றி அவர்கள் சிந்திக்கத் துவங்குகிறபோது, அத்தகைய கடவுளுக்கு எதிராக பாவம் செய்வதென்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை அவர்கள் சிந்திக்க துவங்குவார்கள். பிறகு, இந்த பரிசுத்தமுள்ள கடவுள், நீதியாக நம்மை தண்டிக்கக்கூடியவராக இருந்தபோதிலும், அவர் உலகத்தில் மிகவும் அன்புகூர்ந்ததனால், தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுப்பினார் என்பதைக் கேட்கிறபோது, சங்கீதக்காரனைப் போல், “உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” (சங்கீதம் 130:4) என்று பாவமன்னிப்பைப் பற்றி இவர்களும் சொல்லுவார்கள். மனிதர்களில் தேவபயத்தைப் பற்றிய எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாத, அவர்களுடைய பாவங்களில் தொடர்ந்திருக்க செய்யக்கூடிய மலிவு விலை மருந்தைப் போன்று சுவிசேஷத்தை மாற்றக் கூடாது. மாறாக, பலமான வேதப்பூர்வமான சுவிசேஷ அறிவிப்பென்பது, மனிதர்களை மனந்திரும்புதலுக்கும், சீடத்துவத்திற்குமான கருவியாக, தங்களுடைய இருதயத்திலும் மனச்சாட்சியிலும் புதிய உடன்படிக்கையினுடைய ஆசீர்வாதங்களின் வல்லமையினால், கடவுளுடைய இலவசமானதும், முழுமையானதுமான பாவமன்னிப்பை மனிதர்கள் பெற்று அனுபவிக்கிறபோது, பயத்தோடும் பக்தியோடும் அவர்கள் கடவுளிடம் சேரும்படி கொண்டுவரப்படுகிறார்கள். கடவுளுடைய இந்த செயல், அவருடைய கட்டளைகள் மற்றும் கற்பனைகளின்படி நடப்பதற்கான வலிமையை அவர்களுக்குப் பெற்று தந்து, இந்த கிருபையுள்ள தேவனும் இரட்சகருமாகிய அவரிடத்தில் இருதயப்பூர்வமான மகிழ்ச்சியும் நேசமும் கொண்டவர்களாக இருக்கச் செய்கிறது.
அவிசுவாசியினுடைய சாட்சி
தேவபயமின்மை என்பது ஒரு நாட்டினுடைய ஆவிக்குரிய நிலையை மட்டுமல்ல, அந்நாட்டிலுள்ள தேவபயமற்ற ஒவ்வொரு தனிநபருடைய நடத்தையையும் விளக்குகிறதாக இருக்கிறது. ஒரு அவிசுவாசியினுடைய வாழ்க்கை ஏன் அந்தவிதமாக இருக்கிறது? அவிசுவாசியான ஒரு இளைஞன், காலையில் எழுந்து, சாப்பிட்டு, பள்ளிக்குச் சென்று, இங்குமங்குமாக கொஞ்சம் பொய் பேசி, இங்குமங்குமாக கொஞ்சம் ஏமாற்றி, தன் சகோதர சகோதரிகளுடன் சண்டை போட்டு, தன் பெற்றோரிடமிருந்து உண்மையை மறைத்து ஏன் வாழுகிறான்? அதற்கான பதில் இதோ: அவனுடைய கண்களுக்கு முன்பாக தேவபயமில்லை. அவிசுவாசிகளான பெரியவர்களுடைய வாழ்க்கையும் இப்படியே இருக்கிறது.
துரதிஷ்டவசமாக, இந்நாட்களில் தங்களைக் கிறிஸ்தவர்களாக காட்டிக்கொள்ளுகிற அநேகர், கர்த்தருடைய நாளில் திருச்சபையிலிருந்து வீட்டிற்குச் சென்றபிறகு, அன்று மதியமும், மாலையும் டி.வி. பெட்டியின் முன் தங்களுடைய நேரங்களைக் கழிக்கிறார்கள். கடவுளுடைய கட்டளையாகிய “ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக” என்பது என்ன சொல்லுகிறது என்பதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்துகிறதே இல்லை. கர்த்தருடைய நாளை எப்படிச் செலவிடுவது என்பதெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது, அதில் கடவுள் எதுவும் சொல்லுவதற்கில்லை என்பதாக நினைக்கிறார்கள். கர்த்தருடைய நாளின் மதிய வேளையிலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கடவுள்தாமே சொல்லியிருக்கிறார் என்பதாக அவர்கள் நினைத்தும் பார்ப்பதில்லை. ஏன் அவர்கள் அப்படி நடக்கிறார்கள்? கர்த்தருடைய நாளில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றிய விஷயத்தில் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக தேவபயமில்லை என்பதே அதற்குக் காரணம்.
அன்பான வாசகரே, உங்களுடைய அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை நேர்மையுடன் ஆராய்ந்து பார்த்தால், அதனுடைய அடித்தளமாக தேவபயம் இல்லை என்பது உங்களுக்கு வெளிப்பட்டால், நீங்கள் இயேசுவிடம் வந்து, அவரால் இந்த பயம் உங்களுடைய இருதயத்தில் நாட்டப்படாதவரை, உங்களுடைய வாழ்க்கை இப்படியேதான் தொடரப்போகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதே நிலையிலேயே நீங்கள் தொடர்ந்து வாழ்ந்து மரித்தால், ஏன் கர்த்தராகிய இயேசு “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” (மத்தேயு 10:28) என்று மனிதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்பதை அப்போது நீங்கள் உணருவீர்கள்.
Actual topic,
LikeLike
THANK YOU FOR REMINDING ME AGAIN,GOD BLESS YOU,VIVEK.S
LikeLike