இந்த இதழை நேரத்தோடு முடிக்க இதழாசிரியரோடு உழைத்திருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் அச்சகத்தாருக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும். முழு நேர பத்திரிகை ஆசிரியராக இருப்பதற்கும், பகுதி நேர பத்திரிகை ஆசிரியராக இருப்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. பகுதி நேர ஆசிரியர் பல வேலைகளுக்கு மத்தியில் இதழை வெளியிடும் கடமை இருக்கிறது. இந்தப் பணியில் கர்த்தரின் துணையை இதழ் ஆரம்பித்த காலத்தில் இருந்து கண்டு வருகிறோம். கர்த்தருக்கு நன்றி!
‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்தவாதக் கோட்பாட்டை கிறிஸ்தவர்கள் மத்தியில் அநேகர் விஷயம் தெரியாமல் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் கோட்பாட்டை சீர்திருத்தவாத வரலாறு தெரியாமல் விளங்கிக்கொள்ள முடியாது. இது பற்றி இந்த இதழில் ஒரு ஆக்கத்தைத் தந்திருக்கிறேன்.
மகிழ்ச்சியான ஒரு விஷயம் – வரும் ஜனவரி மாதத்தில் மூன்று வருட இதழ்களைச் சுமந்து திருமறைத்தீபத்தின் 6ம் வால்யூம் 608 பக்கங்களோடு வெளிவரவிருக்கிறது. சீர்திருத்த வெளியீடுகளின் சென்னை முகவரியோடு தொடர்புகொண்டு வாசகர்கள் இதனைப் பெற முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த இதழில் இன்னுமொரு மகிழ்ச்சி தரும் விஷயம் போதகர் அல்பர்ட் என் மார்டினின் தேவபயத்தைப் பற்றிய தொடர்கட்டுரையும், போதகர் டேவிட் மெரெக்கின் பக்தி வைராக்கியம் பற்றிய தொடர்கட்டுரையும் வெளிவருவதாகும். அநேக வாசகர்கள் இவை தரும் நடைமுறை பயன்களை எங்களுக்கு விளக்கியிருக்கிறார்கள். இதுபோன்ற சத்தியங்களைக் கேள்விப்பட்டதேயில்லையே என்பதுதான் பொதுவாக நம் காதில் விழுகின்ற வார்த்தைகளாக இருக்கின்றன. இந்த இதழில் வந்திருக்கும் தொடர்கள் உங்களை சிந்தித்து செயல்பட வைக்கவேண்டும். அந்தளவுக்கு அதிக நடைமுறைப் பயன்பாடுகளோடு (Applications) இரண்டும் வந்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்கவும் கேட்கவும் முடியாதிருக்கும் வேதசத்தியங்களைச் சுமந்து இந்த இதழ் வருகிறது. கர்த்தர், நம்மினத்தின் மத்தியில் நாம் ஒருபோதும் கண்டிராத பெரும் ஆத்மீக சீர்திருத்தத்தை எழுப்ப அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஜெபியுங்கள். அதுதான் காலத்தின் தேவையாக இருக்கிறது. எப்போதும்போல் இந்த இதழும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்