வேதம் போதிக்கும் தேவபயம் – 6
– அல்பர்ட் என். மார்டின் –
[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]
இத்தொடர் ஆக்கத்தில், பரிசுத்த வேதாகமத்தின் மையப் போதனையாக தேவபயமே இருக்கிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும் துரதிஷ்டவசமாக, இந்நாட்களில், கிறிஸ்தவ சமுதாயத்தில் வேதத்தின் இந்த முக்கியமான போதனையே பெருமளவுக்கு நிராகரிக்கப்படுகிறது. ஜோன் மரே எழுதிய ஒரு வாக்கியத்தை, இப்பாடத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன் – “தேவபயமே தேவபக்தியின் மையமாக இருக்கிறது”. வேறுவிதமாக சொல்லுவதானால், தேவபயமென்பது நம் வாழ்வில் தொடர்ச்சியாக காணப்படாவிட்டால், தேவபக்தியுள்ள வாழ்க்கையை நம்மில் காண முடியாது. அத்தோடு, தேவபயமாகிய நிலத்தில்தான் தேவபக்தியுள்ள வாழ்க்கை வளரும் என்றும், தேவபயமில்லாத நிலத்தில் தேவபக்தியில்லாத வாழ்க்கையே வளரும் என்று வேதம் கூறும் உண்மையையும் படித்தோம். இந்தப் போதனை மிகவும் முக்கியமானதாகையால், நம்முடைய இருதயத்தில் தேவபயத்தை தக்கவைப்பதும் அதிகரிப்பதும் எப்படி என்பதைப் பற்றிய சில நடைமுறை காரியங்களை நாம் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் அவசியமானது.
இதுபற்றி நாம் விரிவாகப் படிக்க நமக்குத் துணை செய்யும் ஒரு அடிப்படையான வேதப்பகுதி, நீதிமொழிகள் 23:17. இந்த வசனத்தில், முதலாவது ஒரு எதிர்மறையான காரியம் குறிப்பிடப்பட்டுள்ளது, “உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே”. தேவபக்தியற்றவர்களிடமுள்ள எழில் நயம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி உன் இருதயத்தில் பொறாமை ஏற்படவிடாதே. வாழ்வின் இன்பங்கள் என்று அவர்கள் குறிப்பிடுகிறவைகளைப் பற்றிய எந்தவிதமான ஏக்கமும் உன்னுடைய ஆவியில் தாக்கத்தை ஏற்படுத்த விட்டுவிடாதே. மாறாக, “நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.” வேறுவிதமாக சொல்லுவதானால், பாவிகள் மற்றும் அவர்களுடைய பாவகரமான வாழ்க்கை முறையைப் பற்றி பொறாமை கொள்ளாத இருதயம்தான், தேவபயத்தைத் தன்னில் சரியாகக் கொண்டிருந்து, தொடர்ந்து அதை தன்னில் தக்கவைத்துக்கொள்ளும் இருதயமாகும்.
தேவபயத்தை நம்முடைய இருதயத்தில் எப்படி தக்கவைத்துக் கொள்ளுவது? தேவபயத்தை நம்முடைய இருதயத்தில் தக்கவைத்திருக்க வேண்டும் என்பது நம்மைப் பற்றிய தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்பதை நீதிமொழிகள் 23:17 எல்லாவிவாதங்களுக்கும் அப்பாற்பட்டு உறுதிப்படுத்துகிறது. “நாடோறும்” அதை நம்மில் கொண்டிருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கட்டளையிடப்பட்டுள்ளது. இதை நாம் எப்படி செய்வது என்பதற்கான பதிலில், முதலாவது, இதற்கான அடித்தளமாக இருக்கும் ஒரு பொதுவான தத்துவம் பற்றி நாம் கவனிப்போம். பிறகு, தேவபயத்தைக் கொண்டிருப்பதற்கும் அதில் வளர்ந்து பெருகுவதற்குமான எட்டு குறிப்பிட்ட வழிமுறைகளைப் பற்றி சிந்திப்போம்.
அடித்தளமான தத்துவம்
முதலாவது, தேவபயத்தை நம்முடைய இருதயத்தில் கொண்டிருக்கவும் அதில் வளர்ந்து பெருகவும் வேண்டுமானால், அதுபற்றிய ஒரு பொதுவான தத்துவத்தை நாம் விளங்கிக்கொள்ளவும் கற்றறியவும் வேண்டும். அந்தத் தத்துவம் என்னவென்றால்,
“கிறிஸ்தவ வாழ்க்கை வாழுவதென்பது, கடவுள் நம்மில் செயல்படுத்தியுள்ளதாக அவர்தாமே அறிவித்துள்ள அவருடைய சொந்தக் கிரியைகளின் அடிப்படையிலேயே, நம்முடைய உணர்வுப்பூர்வமான ஆவிக்குரிய முயற்சிகளின் ஆர்வமெல்லாம் இருக்கும்.”
இந்த முக்கியமான தத்துவத்தை நான் உங்களுக்கு உதாரணங்களுடன் விரிவாக விளக்குகிறேன். கலாத்தியர் 5:22-23 வசனங்களில், “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் ஒரு நபர் மெய்யான, சுயநலமற்ற, கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்துகிறதை நீங்கள் காண்கிறீர்களோ, அந்த நபரில் அத்தகைய அன்பு வெளிப்படுவதற்கு பரிசுத்த ஆவியானவருடைய ஆழமான, வல்லமையுள்ள, உள்ளார்ந்த கிரியையே காரணம் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதாவது, அத்தகைய அன்பு பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தையும் செயலையும் வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. எங்கெல்லாம் மெய்யான சந்தோஷத்தையும், சமாதானத்தையும், வேறுபல கிறிஸ்தவ கிருபைகளையும் பார்க்கிறீர்களோ, அங்கு நீங்கள் பார்ப்பது பரிசுத்த ஆவியானவருடைய செயல்களையே. இது எல்லா தர்க்கங்களையும் கடந்த ஓர் உண்மை. வேதத்தையும், நம்முடைய சொந்த இருதயத்தையும் நன்கு அறிந்திருந்தால், இத்தகைய கிருபைகளெல்லாம், நம்மிடத்தில் செயல்படும் பரிசுத்த ஆவியானவருடைய செயல்களினாலேயே நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவரப்பட்டு, வெளிப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
எனினும், இத்தகைய கிருபைகளெல்லாம், அவருடைய கிரியைகளின் கனிகளே என்று சொல்லுகிற அதே ஆண்டவர், அதே அப்போஸ்தலனைக் கொண்டு, கொலோசெயர் 3:12ல், “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லுகிறார். பிறகு, 14வது வசனத்தில் சொல்லுகிறார், “இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” அன்பு பரிசுத்த ஆவியின் கனி என்றும், கடவுளுடைய கிரியைகளே அதை நம்மில் உண்டாக்குகிறது என்றும் சொல்லுகிறதோடு, அதை “நாம்” தரித்துக்கொள்ள வேண்டும் என்றும் வேதம் சொல்லுகிறது. “தரித்துக்கொள்ளுங்கள்” என்பது செயலைக் குறிப்பிடுகிற வினைச்சொல். இன்று காலை, உங்களுடைய ஆடைகள் வைத்திருக்கும் அலமாரியிலிருந்து, ஆடைகள் தானாக உங்கள் படுக்கையினிடமாக வந்து, மெல்ல மெல்ல நகர்ந்து உங்கள் உடலில் அணியும்படி உங்கள் படுக்கையிலேயே இருந்திருக்கமாட்டீர்கள். நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்திருந்து, ஆடைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவைகளில் ஒன்றை எடுத்து அணிந்திருப்பீர்கள். “தரித்துக்கொள்ளுதல் (அணிதல்)” என்பது ஒரு நபருடைய தனிப்பட்ட உணர்வுப்பூர்வமான செயல்.
அன்பும் சாந்தமும் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இருப்பது கடவுளுடைய செயலினாலா அல்லது விசுவாசியினுடைய செயலினாலா? இதற்கான பதில் “இது அல்லது அது” என்பதல்ல, இரண்டுமே என்பதுதான் பதில். ஆவியின் கனியே அன்பு – அன்பை அணிந்துகொள்ளுங்கள். ஏனைய எல்லா கிருபைகளைப் பற்றியும் இதுவே உண்மை. ஆவியின் கனி சந்தோஷம், இருப்பினும், பிலிப்பியர் 4:4 சொல்லுகிறது, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”
நான் விளக்கி வருகிற இந்தத் தத்துவம், பிலிப்பியர் 2:12-13ல் மிகவும் அருமையாகவும் துல்லியமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
“ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.”
அதாவது, கடவுளுடைய இரட்சிக்கும் திட்டங்களை உங்களுடைய வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாகவும் ஆர்வத்துடனும் உங்களில் நிறைவேற்றுங்கள். அவருடைய இரட்சிக்கும் கிருபைகளின் வளர்ச்சியை உங்களுடைய குற்றமற்ற வாழ்க்கையின் மூலம் காட்டுங்கள். “பிரயாசப்படுங்கள்” என்ற கட்டளை, நம்மில் செயல்படும் கடவுளுடைய செயலின் உறுதியை அடிப்படையாகக் கொண்டது. கடவுளுடைய செயல் நாம் செய்ய வேண்டியவைகளை நிராகரிக்கவில்லை. அதேபோல், நம்முடைய செயல் கடவுளுடைய செயலையும் அதன் உறுதியையும் இல்லாமலாக்கவில்லை. ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் இவை இரண்டும் சேர்ந்தே இருக்கும்.
தேவபயத்தை நம்மில் தக்கவைத்துக்கொள்ளவும், அதை வளர்க்கவும் வேண்டுமானால், இந்தத் தத்துவத்தை நாம் தெளிவாக விளங்கிக்கொண்டிருக்க வேண்டியது அவசியம். ஒருவனுடைய இருதயத்தில் தேவபயத்தை கொண்டிருப்பதென்பது, புதிய உடன்படிக்கையில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள ஆசீர்வாதமாக, கடவுளுடைய சர்வஏகாதிபத்திய செயலாக இருக்கிறது.
அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன். (எரேமியா 32:40-41).
இது கடவுளுடைய இரட்சிக்கும் ஆசீர்வாதங்களில் ஒன்று. கடவுள், எல்லா காலங்களிலுமுள்ள தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில், அவர்களுடைய மனமாற்றத்தோடு சேர்ந்த ஒன்றாக இதை அவர்களில் விதைக்கிறார். இதனடிப்படையில், சிலர், ஒருவனுடைய இருதயத்தில் தம்மைப்பற்றிய பயத்தை ஏற்படுத்துவது கடவுளுடைய செயலாக இருக்குமானால், தேவபயத்தை அதிகரிப்பதற்கான வழி, அவரிடத்தில் ஜெபிப்பதும், அவரை அதிகமாக நம்பியிருப்பதுமாகத்தானே இருக்கும் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இது அந்தவிதத்தில் செயல்படுகிறதில்லை. இதிலுள்ள தத்துவம் என்னவென்றால், “கடவுள், நம்மில் செயல்படுத்தும் அவருடைய செயலாக எதை அறிவித்திருக்கிறாரோ, அதைச் செய்வதற்கு உணர்வுப்பூர்வமாக உழைப்பதும் முயற்சிப்பதுமே நம்முடைய நோக்கமாக இருக்கும்”.
ஆண்டவருடைய வார்த்தையில் போதிக்கப்பட்டுள்ள இந்தப் போதனையைப் படிக்கும் முயற்சியில், நம்மை “வேத கட்டளைகளை மட்டுமே பெரிதுபடுத்தி வேதப்போதனைகளை நிராகரிக்கிற கூட்டத்தினராகவும்,” “ஒழுக்கத்தைப் பெரிதுபடுத்தி ஆண்டவருடைய கிருபையை அலட்சியப்படுத்துகிற கூட்டத்தினராகவும்” கருதி, நம்மை குற்றப்படுத்தும் ஆபத்தில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது. நம்முடைய இருதயங்களில் தேவபயத்தை வளர்ப்பதற்குக் கர்த்தர் வேதத்தில் கொடுத்துள்ள வழிகாட்டு முறைகளைக் கண்டறியும் செயலிலிருந்து நம்மை வழிவிலக செய்யக் கூடிய இத்தகைய ஆபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். இது என்னை வருத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், வியப்படையவும் செய்கிறது. ஆண்டவருடைய கட்டளைகளை அப்பட்டமாக நிராகரிக்கிற இக்காலங்களில், இப்படியான போதனைகளைப் போலத் தென்படுகிற எந்த ஒன்றையும் மக்கள் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். ஆகவே இவை இரண்டும் நமக்கு மிகப்பெரிய நடைமுறை ஆபத்துக்கள். தூய்மைவாதிகளில் ஒருவரிடம், “ஏன் நீங்கள் இப்படி ஒரு துல்லியமான வாழ்க்கை முறையை வாழுகிறீர்கள், ஏன் உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வேத கட்டளைகளையும் போதனைகளையுமே மிகவும் கருத்ததாக கவனித்து வாழுகிறீர்கள்” என்று ஒருவன் கேட்டான். அதற்கு அவர், “நான் ஏன் இப்படி துல்லியமான வாழ்க்கை வாழுகிறேன் என்று நீங்கள் கேட்கிறீர்கள். அதற்கு பதில் மிகவும் எளிமையானது. ஏனென்றால், துல்லியமான கடவுளுக்கே நான் ஊழியம் செய்கிறேன்” என்று பதிலளித்தார். தேவபயத்தைக் கொண்டிருப்பதற்கான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் கண்டறிவதில் நாம் ஏன் இவ்வளவு அக்கறைகாட்ட வேண்டும்? ஏனென்றால், நம்மைப் படைத்தவரும், நாம் வாழும்போது எப்போதும் நமக்கு முன்பாக இருக்கிறவருமான கடவுள்தாமே, தேவபயத்தை நம்முடைய இருதயத்தில் வளர்த்துக்கொள்வதற்கான சிறந்த வழிமுறைகளாக இவைகளைக் கொடுத்திருக்கிறார்.
தேவனுடைய பிள்ளை உணர்வுப்பூர்வமாகவும், உறுதியாகவும் இதற்காக எடுக்கும் முயற்சிகளை, தேவகிருபையை நிராகரிக்கும், வெறும் சுய முயற்சியாக ஒருபோதும் கருதக்கூடாது. ஏனென்றால், கடவுள் மட்டுமே ஒருவனுடைய இருதயத்தில் தம்மைப்பற்றிய பயத்தை வைக்கிறார். அதை நாம் விரும்பவும், அவருடைய நல்நோக்கங்களை நிறைவேற்றவும் அவர்தாமே நம்மில் செயல்படுகிறார். அதேவேளை, கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து, பரிசுத்த ஆவியானவருடைய செயலைச் சார்ந்திருந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவபயத்தை நம்மில் வளர்த்துகொள்ள நாம் பிரயாசப்பட வேண்டும்.
தேவபயத்தை நம்மில் தக்க வைத்துக்கொள்ளுவதற்கான வழிமுறைகள்
இதுவரை, இப்போதனை தொடர்பான பொதுவான தத்துவத்தை விரிவாகப் படித்தோம். இப்போது, நம்முடைய இருதயங்களில் தேவபயத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் அதிகரிக்கவும் செய்வதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளைப் பற்றி படிப்போம்.
1. புதிய உடன்படிக்கையில் ஆர்வம்
முதலாவது வழிமுறை என்னவென்றால், “புதிய உடன்படிக்கையில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.” இதில் “ஆர்வம்” என்று நான் பயன்படுத்தியுள்ள பதம், ஏதேனும் ஒன்றைத் தெரிந்துகொள்ளுகிற அல்லது ஏதேனும் ஒன்றின்மீது பொதுவான அக்கறைகாட்டுவதைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. மாறாக, ஒரு விஷயத்தில் நம்மை உறுதியாக ஈடுபடுத்திக்கொள்ளும் ஆர்வத்தைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன். அதாவது, ஒருவன் தனக்குக் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சில்லறை வியாபாரம் செய்வதில் ஆர்வம் இருக்கிறது என்று சொன்னால், அவன் எப்போதோ ஒரு முறை தன் கடைக்குச் செல்லுகிறதும் அங்கு போய் அக்கடையின் ஜன்னலிலிருந்து மட்டும் பார்த்துவிட்டு வருகிறவன் என்று அதற்குப் பொருளில்லை. அவன் தன் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் அந்த வியாபாரத்தில் முதலீடு செய்கிறவன் என்றே அதற்குப் பொருள்.
ஒருவனுடைய இருதயத்தில் தேவபயம் இருப்பதென்பது, புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களில் ஒன்றை நிறைவேற்றும் கடவுளுடைய செயலினால் உண்டாகிறது என்று வேதம் சொல்லுகிறது. இதைக் குறித்து ஏற்கனவே, எரேமியா 32:40ல், கடவுள், “எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து” என்று சொல்லியிருப்பதை நாம் படித்திருக்கிறோம். புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்கு நீங்கள் அந்நியராயிருக்கிறவரை, பவுல் ரோமர் 3:18ல் குறிப்பிட்டுள்ள, அவபக்தியுள்ளவனின் அனுபவமே உங்களில் தொடரும், “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை”. மனந்திரும்புதலோடும், விசுவாசத்தோடும் கிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் நீங்கள் வராவிட்டால், பாவிகளுக்காக சிந்தப்பட்ட நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, கடவுளை நாடி வராவிட்டால், நீங்கள் மரிக்கிறவரையிலும்கூட உங்களில் தேவபயம் இல்லாதவராகத்தான் இருப்பீர்கள். கடவுளுடைய கிருபையுள்ள வாக்குத்தத்தங்களை அவர்மீதுள்ள பயபக்தியினால் நேசிப்பதும் நம்புவதும் என்பது இயற்கையாக எந்தவொரு மனிதனிலும் இல்லை.
கடவுளைவிட்டு தூர ஓடச் செய்யும் கடவுள்மீதான பயங்கரமும் திகிலும் ஒருவனில் இருக்கலாம். ஆனால், உங்களுடைய இருதயத்திலிருந்து கடவுளை நேசிப்பதும், நம்புவதும், ஆராதிப்பதும், அவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்துடன், கடவுளுடைய குணாதிசயங்களை அறிந்து அவரை நாடி வரும், வேதம் போதிக்கும் பயத்தை உங்களில் கொண்டிருக்க முடியாது. கடவுளைப் பற்றிய திகில் உங்களில் இருக்கலாம். கடவுளைப் பற்றி உங்களில் எழும் எண்ணங்களை, விரட்டியடிக்க நீங்கள் முயற்சிக்கலாம். கடவுள் இல்லை என்ற விதத்தில் உங்களுடைய அன்றாட வாழ்க்கையை வாழலாம். திருச்சபை என்று சொல்லுகிற கட்டடத்திற்கு, வாரத்தில் ஒரு முறை நீங்கள் செல்லலாம். அங்கு நடைபெறும் ஆராதனைகளில் வெளிப்புற உணர்வுகளோடு நீங்களும் கலந்துகொள்ளலாம். ஆனால் தேவபயத்துடன் நீங்கள் வாழ முடியாது. உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று கடவுள் தம்முடைய வார்த்தையில் சொல்லியிருக்கிறபடி வாழுவதற்கான மெய்யான தாக்கத்தை உங்களுடைய எண்ணங்களிலும், நோக்கங்களிலும், வார்த்தைகளிலும் செயல்களிலும் பார்க்க முடியாது. உங்களுடைய கண்களுக்கு முன்பாக தெய்வ பயம் இல்லை. கடவுள் யார், அவர் உங்களிடம் கோருவதென்ன என்ற உண்மைகள் உங்களுடைய வாழ்க்கையை நடத்தும் பிரதான கொள்கையாக இருக்காது.
இதுவே இயற்கையாக நம் ஒவ்வொருவரையும் பற்றிய உண்மையாக இருக்கிறது. நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், தேவபயமில்லாத அந்தவிதமான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்ததை எண்ணி வெட்கப்படுவீர்கள். பழைய ஏற்பாட்டின் காலத்தில், கேடான ஒருவன், கோழிக் குஞ்சின் தலையை முறித்து அதன் இரத்தத்தைப் பலிப்பீடத்தில் சிந்தவிட்டது போல், ஏதோ ஒரு சபையில், ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு நம்முடைய தலையை ஆட்டுகிறவர்களாக இருந்திருக்கலாம். தேவன் தம்முடைய கிருபையினால் நம்மை சிறைபிடித்து, நம்முடைய இருதயங்களில் அவரைப் பற்றும் பயத்தை வைக்காதவரை, கொஞ்ச நேரத்தையும் கொஞ்சப் பணத்தையும் கொடுத்துவிட்டு, முற்றிலுமாக தேவபயமற்றவர்களாக வாழ்ந்திருக்கலாம்.
ஆகவே, தேவபயத்தில் நாம் வளர வேண்டுமானால், புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்தவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முதலாவது உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லா விசுவாசிகளையும்பற்றி, எபிரெயர் 12:24 சொல்லுகிறது, “புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும் . . . வந்து சேர்ந்தீர்கள்.” “என்னுடைய கரங்களில் நான் எதுவும் கொண்டு வரவில்லை, உம்முடைய சிலுவையையே நான் பற்றிக்கொள்ளுகிறேன்” என்று ஒரு பாடலாசிரியர் சொல்லியதுபோன்ற மனநிலையில் நாம் அவரிடம் வருகிறபோதுதான், அவருடைய சொந்த விலைமதிப்பில்லாத இரத்தத்தினால் முத்திரையிடப்பட்டிருக்கிற உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை நமக்கு அருளிச் செய்கிறார்.
தேவபிள்ளையே, தேவபயத்தில் வளர வேண்டும் என்று நீ ஆவல் கொண்டிருக்கிறாயா? உன்னில் அவரைப் பற்றும் பயம் அதிகரிக்க வேண்டும் என்று நீ அவரை நோக்கிக் கெஞ்சுவதற்கான அடித்தளமாக இருப்பது, புதிய உடன்படிக்கையின்மீதுள்ள உன்னுடைய ஆர்வமே. “ஓ, தேவனே என்னில் உம்மைப் பற்றும் பயத்தை அதிகரிக்கச் செய்யும்” என்று நீங்கள் அவரை நோக்கி ஜெபிக்கிறபோது, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இயேசு கிறிஸ்து மரித்திருக்கிறார் என்றும் அந்த உடன்படிக்கையில் வாக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களில் ஒன்றுதான், தேவன் தம்மைப் பற்றும் பயத்தை உங்களில் வைக்கிறார் என்பதையும் வலியுறுத்தியே நீங்கள் தேவனிடம் கேட்க வேண்டும். எனவே இப்படித்தான் உங்களுடைய ஜெபம் இருக்க முடியும், “கர்த்தராகிய இயேசுவே, உம்மைப் பற்றும் பயம் என்னில் அதிகரிக்க வேண்டுமென்று நீர் சிந்திய இரத்தத்தினடிப்படையில் நான் கெஞ்சுகிறேன். உம்முடைய உடன்படிக்கையின் இரத்தம் உறுதிப்படுத்தியுள்ளதனடிப்படையில் என்னில் தேவபயத்தை அதிகரிக்கச் செய்யும்”.
2. வேத வாக்கியங்கள்
இரண்டாவது, உங்களுடைய தேவபயத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அதிகரிக்கவும் வேண்டுமானால், உங்களுடைய சிந்தைக்கு வேத வாக்கியங்களை ஊட்ட வேண்டும். சங்கீதம் 19, தெய்வீக வெளிப்படுத்தலின் இரண்டு முக்கியமான அம்சங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. 1 முதல் 6 வசனங்களில், படைப்புகளின் மூலம் கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார், “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (வசனம் 1). 7 முதல் 11 வசனங்கள் வரை, கடவுள் தம்முடைய வார்த்தையாகிய வெளிப்படுத்தலைக் குறித்து அறிவிக்கிறார், “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும்” (வசனம் 7). இந்த வசனங்களின்படி, கடவுள் தம்மைப் பற்றிய வெளிப்படுத்தலை இரண்டு புத்தகங்களின் மூலம் தந்திருக்கிறார்: படைப்பின் புத்தகம், வேத வாக்கியங்களாகிய புத்தகம். இவைகளை, பொதுவான வெளிப்படுத்தல் மற்றும் சிறப்பான வெளிப்படுத்தல் என்று சொல்லுவார்கள்.
7வது வசனத்திலிருந்து, தாவீது, கடவுளுடைய சிறப்பான வெளிப்படுத்தலுக்காக என்ன சொல்லி துதிக்கிறார் என்று கவனியுங்கள். அவர் சொல்லுகிறார், “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது”. பிறகு மற்றொரு பதத்தைப் பயன்படுத்துகிறார், “கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது”. 8வது வசனத்தில் இன்னொரு பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது, “கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது”. பிறகு “கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது”. இறுதியாக, 9வது வசனத்தின் இறுதியில் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார், “கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது”. கர்த்தருடைய வார்த்தையாகிய சிறப்பான வெளிப்படுத்தலின் மேன்மைகளை விவரிக்கிற இவற்றின் மத்தியில், தாவீது, 9வது வசனத்தின் முதற்பகுதியில் என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள், “கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது”. தாவீது என்ன சொல்ல வருகிறார்? வேத வாக்கியங்களில் கடவுள் கொடுத்துள்ள சிறப்பான வெளிப்படுத்தலுக்கும் தேவபயத்திற்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு இருப்பதை தாவீது இங்கு உறுதிப்படுத்துகிறார். இந்தத் தொடர்பு எப்படியானதென்றால், “கர்த்தருடைய வார்த்தை” என்ற பதத்திற்கு இணை வார்த்தையாக “தேவபயம்” என்ற பதத்தை அதன் ஒட்டுமொத்த நோக்கங்களின் அடிப்படையில் பயன்படுத்தலாம். எனவேதான் தாவீது, “கர்த்தருடைய வார்த்தையைக்” குறிக்கிற பல பதங்களைப் பயன்படுத்தியதற்கு இடையே “தேவபயம்” என்ற வார்த்தையைத் தாராளமாக பயன்படுத்தியிருக்கிறார். இது நமக்கு எதைச் சொல்லுகிறது? ஒருவன் தேவபயத்தில் வளர வேண்டுமானால், அவன் தன்னுடைய சிந்தைக்கு வேத வாக்கியங்களை ஊட்ட வேண்டும். தேவபயத்தை நம்மில் உருவாக்குவதில், கர்த்தருடைய வார்த்தையின் பங்கு மிகவும் அதிகமானது என்பதனால்தான் இந்த இரண்டு வார்த்தைப் பிரயோகங்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான், வேத வாக்கியங்களோடுள்ள உங்களுடைய தற்போதைய உறுதியும் தொடர்பும் குறையத் தொடங்கினால், உங்களிலுள்ள தேவபயத்தின் வேரும் சுருங்கத் தொடங்கும். எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தையில் உங்களுடைய புரிதல் வளராவிட்டால், தேவபயத்தில் நீங்கள் வளருவது கூடாத காரியம். அனுதினமும், தனிப்பட்ட வகையிலும் குடும்பமாகவும் வேத வாக்கியங்களில் உங்களால் எந்தளவு ஈடுபடுத்திக்கொள்ள முடியுமோ அந்தளவு ஈடுபடுத்திக்கொள்ளுவது மிகவும் அவசியமானது. வேத வாக்கியங்கள் வாசிக்கப்படுகிற, பாடப்படுகிற, பிரசங்கிக்கப்படுகிற, போதிக்கப்படுகிறபோதெல்லாம், நீங்கள் உண்மையுடனும் தொடர்ச்சியாகவும் அதில் ஈடுபடுதல் அவசியமானது (கொலோசெயர் 3:16). வேதத்திலுள்ள அநேக பகுதிகள், தேவபயத்தைத் தக்கவைக்கவும் அதிகரிக்கவும் செய்வதற்கு நேரடியான உந்துதலைத் தராவிட்டாலும், வேத வாக்கியங்களின் ஒவ்வொரு சத்தியத்தின் ஒட்டுமொத்த தாக்கமும், தேவபயத்தை நமக்கு ஊட்டுகிறதாக இருக்கிறது. ஏதோ ஒருவிதத்தில், எந்தவொரு தனி நபர், வேத வாக்கியங்களில் அதிகமாக கிரகித்துக்கொள்ளுகிறாரோ, அதை தன்னுடைய இருதயத்திலும், வாழ்க்கையிலும் ஆவிக்குரிய விதத்தில் நிலைநிறுத்திக்கொள்ளுகிறாரோ, அவர் தேவபயத்தைப் பற்றி அதிகமாக அறிந்தவராக இருப்பார்.
உங்களுடைய சிந்தைக்கு வேத வாக்கியங்களைத் தருகிற ஒழுங்குமுறையை நீங்கள் குறைத்துக்கொள்ளும் சோதனைக்குட்படுகிறபோது, தேவபயத்தினால் உண்டாகிற பரிசுத்தமாக்குதலிலிருந்து உங்களை விழச் செய்வதற்கு பிசாசானன் தந்திரமான யுக்தியைக் கையாளுகிறான் என்பதை மறந்துவிடாதீர்கள். தேவபயத்திலிருந்து நீங்கள் சற்று விலகுவதற்கு முன் தேவபக்தியிலிருந்து விலகியிருப்பீர்கள் என்பதைப் பற்றி நாம் ஏற்கனவே படித்தோம். உங்களையும் என்னையும் தேவபயத்திலிருந்து வழிவிலகச் செய்ய வேண்டுமானால், அதற்கு முன்னதாக ஏதோ ஓரளவில் தேவபக்தியை நாம் கைவிட்டிருக்க வேண்டும்.
இந்த சோதனைக்கு நாம் இணங்கிவிட்டால், பாவத்தின் வசீகரிப்பாகிய கடும் சோதனையினால் நாம் இழுக்கப்படுவதையும், கடவுளுடைய புன்னகையா அல்லது கடவுளுடைய வெறுப்பா? எது வேண்டும் என்ற அழுத்தம் நம்மில் இருப்பதையும் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒருவருட காலம் கடவுளுடைய மெய்யான பிள்ளையாக வாழ்ந்திருக்கிற எவரும், அந்தக் காலப்பகுதியில் அவ்வப்போது, கடவுள், கிறிஸ்து, பரலோகம், நரகம், நியாயத்தீர்ப்பு, தேவபக்தி என்பதெல்லாம் தனக்கு வெகு தொலைவில் இருப்பதாகவும், ஒரு வகையில் அவையாவும் வெறும் வார்த்தைகளும் தத்துவங்களுமே என்று எண்ணியிராத ஒரு கிறிஸ்தவனும் இருந்ததில்லை. நான் சொல்லுவது உண்மை இல்லையா? சிலவேளையில் உங்களை நீங்களே கேட்டிருப்பீர்கள், “நான் யார்? இந்த உலகத்தில் நான் எதை நம்புவது? இவையாவும் என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறபோது, இவைகள் எனக்குரியதாக எப்படி இருக்க முடியும்?” இதற்கான பதில் மிகவும் எளிமையானது. இப்படியான சூழலில், எப்போதும் இதுதான் பதில் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பாலானவேளையில் பதில் என்னவென்றால், “கடவுளுடைய வார்த்தையில் முறையாக, தொடர்ச்சியாக உங்களை உட்படுத்திக்கொள்ளாததன் விளைவுதான் அது”.
இப்படிச் சொல்லுவது, ஒரு குறிப்பிட்ட நாளில், “சரி இனிமேல், வேதத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை” என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. அதாவது, நீங்கள் கடவுளோடு செலவிடுகிறதற்கு வைத்திருந்த நேரத்தைக் குறைக்கும் வகையில், இன்னும் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் அன்றாட வாழ்வில் ஏற்பட்டிருக்கும். ஒரு நாள் கூடுதலான பொறுப்புகள் வந்திருக்கும், அடுத்த நாள் இன்னும் கொஞ்சம் கவனச்சிதறலுக்கான விஷயங்கள் கூடியிருக்கும், இப்படியே ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து, பிறகு நீங்கள் வேதத்தை நிராகரிக்கிறீர்கள் என்பதை உணராதளவுக்குக் கொண்டு சென்று விடும். இந்தத் தேய்மானத்தின் வலியைப் பற்றி நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். பிறகு உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அனுபவத்திலும், ஒரு பெரும் பின்னடைவு உண்டாயிருக்கும். ஒருநாள் நீங்களே உங்களைக் கேட்பீர்கள், “இதெல்லாம் எப்போது நடந்தது” என்று. இதற்கான பதில், நீங்கள் எப்போது கர்த்தருடைய வார்த்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்நியராக மாறினீர்களோ அப்போதுதான் அதெல்லாம் நடந்தது. தேவபயத்தை நம்மில் தக்கவைத்துக்கொள்ள குறுக்கு வழி எதுவும் இல்லை. ஆகவே தேவபயத்தை நம்மில் தக்கவைத்துக்கொள்ளுவதற்கும் அதிகரிப்பதற்குமான இரண்டாவது வழிமுறை, உங்களுடைய சிந்தையிலும் இருதயத்திலும் வேத வாக்கியங்களைத் தொடர்ச்சியாக, முறையாக, ஜெபத்துடன் ஊட்டுங்கள். இதை வேதம் உறுதியாக எடுத்துரைக்கிறது,
“மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல; கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (உபாகமம் 8:3).
3. கடவுளுடைய மன்னிப்பு
மூன்றாவது வழிமுறை, கடவுளுடைய மன்னிப்பின் மெய்த்தன்மையை உங்களுடைய ஆத்துமாவுக்கு ஊட்டுங்கள். சங்கீதம் 130:3ல், சங்கீதக்காரன் ஒரு கேள்வி எழுப்புகிறார், “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே?” செய்யப்பட்ட ஒவ்வொரு பாவத்தையும், கடவுள் பதிவிட்டு வைத்திருந்து, பிறகு பாவிகளை தம்முடைய பிரசன்னத்தில் அழைத்து, ஒவ்வொரு பாவத்திற்காக பதிலளிக்க சொன்னால், யார் ஒருவனும் அவருக்கு முன்பாக நிற்க முடியாது. பரிசுத்தமும் எல்லாம் அறிந்தவருமான கடவுள், தம்முடைய படைப்புகளை, அவர்களுடைய ஒவ்வொரு பாவத்திற்குமாக பதிலளிக்கும்படி எதிர்பார்க்கிறபோது, அது “மலைகளே, குன்றுகளே, எங்கள் மீது விழுங்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 6:15-17) என்ற கூக்குரலைத்தான் ஒருவனில் ஏற்படுத்தும். நியாயத்தீர்ப்பு நாளில் அநேகருடைய கதறல் இப்படியாகத்தான் இருக்கப் போகிறது. கடவுள் பாவத்தைக் குறித்து வைத்து, அவைகளுக்கு பதிலளிக்க சொல்லுகிறபோதுதான், யார் ஒருவனுக்கும் கடவுளைப் பற்றிய திகில் உண்டாகும். ஆனால், சங்கீதக்காரன், தன்னுடைய கேள்விக்குத் தானே பதிலும் அளித்திருக்கிறார்,
“உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” (சங்கீதம் 130:4).
இந்த மாபெரும் கடவுள், பரிசுத்தமும், நீதியும், எல்லாம் அறிந்தவருமாக இருந்தபோதிலும், அவர் பாவங்களை மன்னிக்கிறவராக இருக்கிறார் என்பதைக் கண்டறிகிறபோது, தம்முடைய எல்லா குணாதிசயங்களோடும்கூட எனக்கு மன்னிப்பை அருளி, என்னை ஏற்றுக்கொண்ட அவருக்கு, ஆழமான பயத்தோடும், நம்பிக்கையுடன் கூடிய நடுக்கத்தோடும், கண்ணீரோடும் அவரை வழிபடுவதைத் தவிர வேறு எதை நான் தர முடியும். எனவேதான் சங்கீதக்காரன், தன்னுடைய எண்ணம் முழுவதும் இந்த மன்னிப்பைப் பற்றிய ஆச்சரியத்தில் நிறைந்தபோது, தன்னுடைய இருதயம் முழுவதும் கடவுளைப் பற்றிய பயத்தினால் நிறைந்தது என்று சொல்லுகிறார்.
இதே வழிமுறைதான் உங்களுக்கும். உங்களுடைய ஆத்துமா மன்னிக்கும் கிருபையைப் பற்றிய உண்மையிலும் ஆச்சரியத்திலும் எந்தளவு முழுகியிருக்கிறதோ, அந்தளவுக்குத்தான் உங்களில் தேவபயமும் இருக்கும். உங்களுடைய ஆத்துமாவுக்கு கடவுளுடைய மன்னிப்பைப்பற்றிய உண்மையை அவ்வப்போது ஊட்டிக்கொண்டே இருங்கள். பரிசுத்தமுள்ள கடவுள், நீதியுள்ள கடவுள், எல்லாவற்றையும்விட உயர்ந்த கடவுள், உண்மையில் பாவியாகிய என்னை மன்னிக்கிறவராக இருக்கிறார். மன்னிப்பைப் பற்றிய இந்தப் பெரிதும் ஆசீர்வாதமுமான சத்தியம் உங்களுடைய சிந்தையில் எப்போதும் உயர்ந்திருப்பதாக. ஏன் தெய்வீகத்தின் இரண்டாம் நபர் மாம்சமாகிய நம் மத்தியில் வந்து வாசம்பண்ணினார்? ஏன் தெய்வீகம் கொண்டவர், ஒரு கன்னியின் வயிற்றில் வந்திருந்தார்? மிருகங்கள் தங்கியிருந்த இடத்தில் அவர் ஏன் பிறக்க வேண்டியிருந்தது? ஏன் சிலுவையில் கோரமும், பயங்கரமுமான மரணத்தை அவர் அடைய வேண்டியிருந்தது? இந்த ஒவ்வொரு கேள்விக்குமான பதில் இதுதான், கடவுளுடைய பரிசுத்தம், நீதி மற்றும் அவருடைய வளைந்துகொடுக்காத நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளுக்குகேற்ப மனிதர்கள் மன்னிப்பைப் பெற வேண்டும் என்பதுதான்.
மன்னிப்பைப் பற்றிய உண்மையை நம்மில் ஊட்டுவதுமட்டுமல்லாமல், அந்த மன்னிப்பிற்கான வழிமுறைகளின் மூலமாக நம்மில் தேவபயம் ஆழமாகவும் அதிகமாகவும் பெருகும். தாமஸ் மென்டன் (Thomas Manton) என்பவர் சொல்லிய அருமையான ஒரு வாக்கியத்தை இங்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன், “கண்டனம் பண்ணுகிற கடவுளைப் பற்றி நம்முடைய இருதயம் வெட்கப்பட்டபோதும், அவர் மன்னிக்கிற கடவுளாக இருப்பதனால், அவரை நெருங்கிப் பின்தொடரவும் செய்கிறது. இந்த தேவபயமானது, இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக தேவனுடைய நன்மையையே அறிந்துணரச் செய்கிறது”. சங்கீதம் 34:8, நாம் யாரும் அறிந்த, பெரும்பாலும் சுவிசேஷ அழைப்பாக பயன்படுத்தப்படுகிற ஒரு வசனம். அதில் தாவீது சொல்லுகிறார், “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்”. பிறகு, 9வது வசனத்தில், “கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்” என்று சொல்லுகிறார். கடவுளுடைய அளவற்ற நன்மை மற்றும் கிறிஸ்துவுக்குள்ளான அவருடைய தாராளமான கிருபையின் சூழலில் அல்லாமல், கடவுளுக்குப் பயப்பட வேண்டியவிதத்தில் நம்மால் பயப்பட முடியாது. ஆகவே, உங்களுடைய இருதயத்தில் தேவபயம் நிலைத்திருக்க வேண்டுமானால், உங்களுடைய ஆத்துமாவுக்கு கடவுளுடைய மன்னிப்பை ஊட்டுங்கள். அவரைவிட்டு உங்களைத் தூரப்படுத்தக்கூடிய, நியாயப்பிரமாணத்தின் பயங்கரத்திற்குள்ளாக உங்களை உட்படுத்திக்கொள்ளாதீர்கள். அவருடைய மன்னிப்பின் ஆச்சரியத்தில் குளிர்காயுங்கள். அவருடைய கிருபையின் வெளிப்பாட்டை எண்ணி ஆச்சரியப்படுங்கள். இந்தக் கிருபையே, உங்களுடைய இச்சையாகிய சேற்றில் புரளுவதிலிருந்து உங்களை தடுத்து நிறுத்துவதுமட்டுமல்லாமல், உங்கள் மனம் சுற்றித்திரிகிறபோதும், இடறுகிறபோதும் உங்களைப் பொறுமையாக இருக்கவும் செய்கிறது. இத்தகைய மன்னிப்பிற்கு முன்பாக ஆச்சரியப்பட்டு நில்லுங்கள், அப்போதுதான் உங்களில் தேவபயம் தழைத்தோங்கும்.
4. பெரியவரான கடவுள்
நான்காவது வழிமுறை, கடவுளுடைய மகத்தான பெருமையை உங்களுடைய ஆத்துமாவுக்கு ஊட்டக் கற்றுக்கொள்ளுங்கள். இதன் மூலம் நான், கடவுளுடைய சர்வஏகாதிபத்தியம், பரிசுத்தம், பெலன், சர்வவல்லமை மற்றும் அவருடைய உயர்ந்த தன்மையைத்தான் குறிப்பிடுகிறேன். இதை வெளிப்படுத்தின விசேஷம் 15:3-4 வசனங்களில் காணலாம். இந்தத் தரிசனத்தில், யோவான், ஒரு கண்ணாடிக் கடலையும், மிருகத்துடனான சண்டையில் ஜெயங்கொண்டவர்களையும் காண்கிறார். பிறகு, அவர்கள் மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடிக்கொண்டிருப்பதைப் பற்றி விவரிக்கிறார். அந்த பாடல்,
“சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின.”
இந்தப் பாடலில் கடவுளுடைய எந்தெந்த குணாதிசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது? அவருடைய உயர்ந்த தன்மையும், பரிசுத்தமும், வல்லமையும், நீதியும், சர்வஏகாதிபத்தியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடவுளுடைய இந்த குணாதிசயங்களெல்லாம் அவருடைய மேன்மையின் மகத்துவத்தை நமக்குக் காட்டி எதை வலியுறுத்துகிறது? பரலோக பாடற்குழுவினர், கடவுளுடைய இந்த மகத்துவத்தைப் பற்றிச் சிந்திக்கிறபோது, எந்தவொரு படைப்புயிரும் அவருக்கு முன்பாகப் பயப்படாமல் இருக்கவே முடியாது என்று அவர்கள் சொல்லுகிறார்கள்,
“கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்”.
கடவுள் தம்மை வெளிப்படுத்தியிருக்கிற விதமாக அவரை அறிகிற எந்தவொரு படைப்புயிரும், அவரிடம் பயப்படாமல் இருக்கவே முடியாது. கடவுளுடைய பிள்ளைகளான நமக்கு இதிலிருந்து வரும் போதனை என்னவென்றால், நீங்கள் தேவபயத்தில் வளர வேண்டுமானால், உங்களுடைய ஆத்துமாவுக்கு கடவுளுடைய மேன்மையின் மகத்துவங்களை ஊட்ட வேண்டும்.
குறிப்பாக, இத்தகைய வேதப்பகுதிகளில் பரிச்சயமாக இருப்பது, கடவுளைப் பற்றிய இந்த உண்மைகளை உங்களுக்குத் தெளிவாகக் காட்டும். ஏசாயா 40 வது அதிகாரம் போன்ற வேதப்பகுதிகளைத் தொடர்ச்சியாக அவ்வப்போது படிப்பது மிகவும் நல்லது. இந்தப்பகுதியில்தான் ஏசாயா, கடவுளுடைய மேன்மையின் மகத்துவங்களை மிகவும் உயர்த்தி விவரித்திருக்கிறார். இதுபோன்ற விஷயங்கள் இந்நாட்களில் எழுதப்படுகிற அநேக புத்தகங்களில் காண்பது அரிதாக இருக்கிறது. வானங்களின் ஒட்டுமொத்தத்தையும் பற்றிப் பேசுகிறார், ஆனால் அவையாவும் கடவுளுடைய ஒரு ஜாண் அளவுதான். பூமியிலுள்ள எல்லா நாடுகளும் அவருக்கு முன் தண்ணீரின் ஒரு துளி போல் இருக்கின்றன என்கிறார். பூமியின் பல நாடுகளிலுமுள்ள மனிதர்கள் யாவரும் திரளான வெட்டுக்கிளிகள் கூட்டம் போல் காணப்படுகிறார்கள். ஏசாயா, கடவுளை பெரிய மேய்ப்பராகவும், நட்சத்திரக் கூட்டங்களை ஆடுகளாகவும் குறிப்பிடுகிறார். நட்சத்திரங்களின் திரள் கூட்டத்திலுள்ள ஒவ்வொன்றையும் அவர் பேர் சொல்லி அழைக்கிறார். எவ்வளவு அருமையான ஒரு உருவகத் தொகுப்பு. இதையெல்லாம் எதற்காக ஏசாயா குறிப்பிடுகிறார்? நம்முடைய தேவனுடைய மேன்மையை நம்மில் ஆழப் பதிய செய்வதற்காகவே. இந்த அதிகாரம், யூதாவில் ஆண்டவருடைய செய்தியை அறிவிக்கிறவர்களுக்கான கட்டளையோடு துவங்குகிறது. அவர்களை உயர்ந்த மலைமீது ஏறி, அங்கிருந்து யூதாவுக்கான செய்தியை அறிவிக்கச் சொல்லுகிறார், “இதோ உங்கள் தேவன் சொல்லுகிறார்”. அவரை நோக்கிப் பாருங்கள். உங்களுடைய கூர்ந்த பார்வையைக் கொண்டு, அவர் தன்னை வெளிப்படுத்திய வண்ணமாகவே அவரை உற்று நோக்குங்கள். ஆகவே, ஏசாயா 40 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 1 போன்ற அதிகாரங்களில் நாம் பரிட்சயமாக இருக்க வேண்டும்.
கடவுளுடைய உயர்ந்த தன்மைகளை நம்மில் நிலைநிறுத்திக்கொள்ளுவதற்கு நமக்கு உதவக்கூடிய சபையிலும் அதன் ஊழியங்களிலும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். எதிர்மறையாகச் சொல்லுவதென்றால், கடவுளோடுள்ள உறவில் அலட்சியமாகவும், பெரியளவு அக்கறையில்லாமல் வெறும் உணர்ச்சியை மட்டுமே மையப்படுத்துகிற ஊழியங்களைவிட்டு உங்களைத் தூரப்படுத்திக்கொள்ளுங்கள். இத்தகைய செயல்கள் கடவுளுக்கு பெரும் வெறுப்பை உண்டாக்குவதாகும். இந்நாட்களில், கடவுளுக்கான ஆராதனை என்ற பெயரில் இத்தகைய வரம்புமீறிய தேவதூஷணங்கள்தான் நடந்து வருகிறது. அவையாவும் கடவுளைப்பற்றிய வேதப்பூர்வமான பார்வையில்லாமல், கடவுளுக்கேற்காத வகையில் செய்யப்படுகிறது. நீங்கள் கடவுளுடைய மகத்துவத்தின் மேன்மைகளைச் சிந்திக்க உங்களுக்கு உதவக் கூடிய ஊழியங்களில் உங்களை உட்படுத்திக்கொள்ளுங்கள். இதுபற்றி ஒரு பாடலாசிரியர் அருமையாக சுட்டிக்காட்டியுள்ளார், “நம்முடைய இரட்சகரின் நெற்றியில் மகத்துவத்தின் இனிமையானது சிம்மாசனமிட்டிருக்கிறது”. வெறும் இனிமையானது கொள்கைகளற்ற உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் சீர்கேடுக்குத்தான் உங்களை அழைத்துச் செல்ல முடியும். வெறும் மகத்துவமென்பது, அவரை நெருங்கிச் சேருவதற்கு நம்மை அச்சுறுத்துவதாக இருந்துவிடலாம். ஆனால், மகத்துவத்தையும் இனிமையையும் நாம் சேர்த்துப் பார்க்கிறபோது, கிறிஸ்துவுக்குள்ளாக தம்மை வெளிப்படுத்தியுள்ள வேதம் போதிக்கும் கடவுளை நீங்கள் காணலாம். ஆகவே, உங்களுடைய ஆத்துமாவுக்கு அவருடைய இனிமையையும் அதேவேளை அவருடைய மேன்மையின் மகத்துவத்தையும் ஊட்டக்கூடிய ஊழியங்களில் உங்களை உட்படுத்திக்கொள்ளுங்கள்.
அத்தோடு, கடவுளுடைய மேன்மைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு உங்களுக்கு உதவக்கூடிய நல்ல புத்தகங்களையும் வாசியுங்கள். இந்நாட்களில் அநேகப் பிரபலமான கிறிஸ்தவ புத்தகங்கள், எதையும் “எப்படிச் செய்வது” என்று விளக்குவதாகவே இருக்கிறது. அல்லது, நூலாசிரியர் தன்னுடைய சொந்தக் கதையை விளக்குகிற புத்தகங்களாக இருக்கின்றன. நீங்கள் அநேகக் கிறிஸ்தவப் புத்தகக் கடைக்குச் சென்று, அவர்களுடைய புத்தக அலமாரியைக் கழுவி சுத்தம் செய்து பார்த்தாலும், கடவுளுடைய மகத்துவத்தையும், மேன்மையையும், சிறப்புக்களையும் விவரிக்கிற புத்தகங்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கும். மறுபுறம், கடவுளுக்கு நாம் மிகுந்த நன்றியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால், கடவுளையும் அவருடைய வழிகளையும்பற்றி அதிகமாக வலியுறுத்தக் கூடிய வேதப்பூர்வமான புத்தகங்களைத் தங்களுடைய அலமாரிகளில் அடுக்கி வைத்திருக்கிற புத்தகக் கடைகளும் அநேகம் இருக்கின்றன. கடவுளைப் பற்றி அதிகமாக சிந்தித்து, அவைகளைத் தங்களுடைய எழுத்துக்களாகக் கொண்டு வருகிற அநேக நல்ல எழுத்தாளர்களைக் கடந்த சில வருடங்களில் எழுப்பியதற்காக நாம் கடவுளுக்கு மிகுந்த நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வேளையில் சில எழுத்தாளர்களின் புத்தகங்களை நான் எண்ணிப் பார்க்கிறோன், J.I.. பெக்கர் எழுதிய “Knowing God”, A.W. பிங்க் எழுதிய “The Sovereignity of God”, R.C. ஸ்பிரவுல் எழுதிய “The Holiness of God”, ஜோன் மரே எழுதிய “Redemption Accomplished and Applied”, J.C. ரைல் எழுதிய “Holiness”, ஜெரி பிரிட்ஜஸ் எழுதிய “Trusting God”, A.W. டோசர் எழுதிய “The Pursuit of God”, பெயர் குறிப்பிடுவதற்காக சிலரை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
வரலாற்று சீர்திருத்த இறையியல் தொடர்பாக அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஆர்வத்திற்கு முன்புவரை, கடவுளுடைய மேன்மையையும் மகத்துவத்தையும் பற்றிய புத்தகங்களை நீங்கள் வாசிக்க வேண்டுமானால், முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் புத்தகங்களைத்தான் நீங்கள் நாடி ஓட வேண்டியிருந்தது. கிறிஸ்தவர்கள் பழங்கால புத்தகங்களை வாசிக்கிறபோது, அவர்கள் பழங்காலப் பொருட்களில் ஆர்வமுள்ளவர்கள் என்று அர்த்தமல்ல. மாறாக, பழங்கால எழுத்தாளர்களுடைய எண்ணங்களில் எந்தளவு கடவுளுடைய மகத்துவத்தின் மேன்மைகள் ஊடுருவியிருந்தது என்பதை அந்தப் புத்தகங்கள் காட்டுகின்றன. அந்தப் புத்தகங்களை நாம் வாசிக்கிறபோது, அவைகளில், கடவுளைப் பற்றிய மெய்யான, வேதப்பூர்வமான எண்ணங்கள் நிறைந்திருக்கிற காற்றை நாம் சுவாசிக்கிறோம்.
நல்லவேளையாக, தூய்மைவாதிகளின் அநேக நல்ல தரமான ஆக்கங்கள், இன்றும் நாம் பயன்படுத்தும்படி கிடைக்கிறது. ஓவன், ப்ளேவல், மென்டன், குட்வின், சார்நொக், சிப்ஸ், ப்ரூக்ஸ், பனியன், மற்றும் பல எழுத்தாளர்கள் எழுதிய அநேக புத்தகங்கள், இக்காலங்களில், சுருக்கப் பதிப்புகளாகவும், தற்கால ஆங்கில நடைக்கு ஏற்றபடியாகவும், மிகக் குறைந்த விலையில் டிஜிட்டல் முறையில் கிடைக்கின்றன.
மேலும், கடவுளுடைய மகத்துவத்தைப் பிரதிபலிக்கும், கிறிஸ்தவ பாடல்களிலும் நீங்கள் பரீட்சயமாக இருங்கள். அநேக வருடங்களாக, நானும் என் குடும்பத்தினரும் சபைக்கு வருவதற்கான வாகன பயணத்தின்போது, ஆராதனைப் பாடல் தொகுப்பு புத்தகத்திலுள்ள பாடல்களை மனனம் செய்வது வழக்கம். நம்முடைய கடவுளைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்கு நமக்கு உதவக்கூடிய பெட்ரிக் பேபர் எழுதிய ஒரு பாடலை நான் இங்குக் குறிப்பிடுகிறேன்.
என் தேவனே, நீர் எவ்வளவு அற்புதமானவர்,
உம்முடைய மகத்துவம் எவ்வளவு பிரகாசமானது!
எரிகிற ஒளியின் ஆழங்களின் மத்தியிலும்
உம்முடைய இரக்கத்தின் சிங்காசனம் எவ்வளவு அழகானது!
உமது அநாதி வருடங்கள் எவ்வளவு பயங்கரமானது,
ஓ நித்திய தேவனே,
பரிசுத்த தேவதூதர்களால் இரவும் பகலும்
இடைவிடாமல் வழிபடப்படுகிறவரே.
ஓ ஜீவனுள்ள தேவனே, எப்படி நான் உமக்கு பயப்படுவேன்,
ஆழமும் மிகுந்த கவனத்துடனான பயத்துடன் அல்லவா?நடுக்கத்துடனான நம்பிக்கையுடனும், ஆழ்ந்த வருத்தத்துடனான கண்ணீரோடும்
உம்மை வழிபடுவேன்.
எனினும், ஓ தேவனே, நாம் உம்மை நேசிக்கிறேன்.
நீர் சர்வவல்லவராகவும் இருக்கிறீர்.
என்னுடைய எளிய இருதயத்தின் நேசத்தை
நான் உம்மீது காட்டும்படி என்னிடம் நீர் கேட்கிறீர்.
உலகின் எந்தவொரு தகப்பனும் உம்மைப்போல் நேசித்ததில்லை
எந்தவொரு தாயும் உம்முடைய மென்மையில் பாதியும் பெற்றிருக்கவில்லை
உம்முடைய பாவமுள்ள பிள்ளையாகிய என்னோடு
அதிகமதிகமான பொறுமையைக் காத்திருக்கிறீர்.
உம்முடைய எல்லையற்ற ஞானம், வரம்புகளற்ற வல்லமை
மற்றும் அற்புதமான பரிசுத்தம்,
இந்த வகையில் உம்மை நோக்கிப் பார்க்கிறபோது,
நீர் எவ்வளவு அற்புதமானவர், அழகானவர்.
இயேசுவின் பிதாவே, நீர் வழிபாட்டை விரும்புகிறவர்
உம்மை உற்றுநோக்கி, உம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக
சாஷ்டாங்கமாய் விழுந்து உம்மை வணங்குவதென்பது
எவ்வளவு பேரானந்தமானது!
5. கடவுளுடைய பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வு
தேவபயத்தை நம்மில் அதிகரித்துக்கொள்ளுவதற்கான ஐந்தாவது நடைமுறை வழிகாட்டி என்னவென்றால், கடவுளுடைய பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வதை நாடுங்கள். “நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு” (நீதிமொழிகள் 23:17). ஒருநாள் என்பது நம்முடைய வீட்டிலும், வாகனத்திலும், பள்ளியிலும், விளையாட்டு மைதானத்திலும், அலுவலகத்திலும் மற்றும் பல இடங்களில் நாம் செலவிடும் நேரங்களின் கூட்டு என்பதனால், இந்த இடங்களில் கடவுளுடைய பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வை நம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டும். சங்கீதம் 16:8ல் சொல்லப்பட்டுள்ளபடி நாம் செய்ய வேண்டும், “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்”. தாவீது சொல்லுகிறார், தான் இருக்கிற எந்தவொரு இடத்திலும், கடவுளைத் தனக்கு முன்பாக வைக்கிறார். அதன் மூலம், அவர் தான் இருக்கிற எந்தவொரு சூழலிலும் கடவுளுடைய பிரசன்னத்தில்தான் இருக்கிறேன் என்பதை அவர் உணருகிறார்.
இதன் பொருள் என்ன? எப்படி கடவுளை நம்முன் வைத்திருப்பது என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சூழலைக் குறிப்பிட்டு என்னுடைய பதிலைத் தருகிறேன். ஒரு கிறிஸ்தவ மாணவன் தன்னுடைய வகுப்பறைக்குச் செல்லும் முன்பாக தனக்குத்தானே இப்படிச் சொல்லிக்கொள்ளுகிறான், “நான் இந்த வகுப்பறைக்குள் நுழைகிறபோது, என்னுடைய இரட்சகருடைய முகத்திற்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னத்திலும்தான் நான் தற்போது இருக்கிறேன் என்று நான் உளப்பூர்வமான ஏற்கிறேன். என்னுடன் இந்த வகுப்பறையில் இருக்கிற சக மாணவர்கள், கடவுளைப் பற்றியோ, நான் வாழும் முறையைப் பற்றியோ நிராகரித்தாலும், கடவுள் இந்த வகுப்பறையில் இருக்கிறார். என்ன நடந்தாலும் சரி, நான் அவரை நேசிக்கவும், கனப்படுத்தவும், அறிக்கையிடவும், கீழ்ப்படியவுமே அவர் இங்கு இருக்கிறார். நான் கர்த்தரை எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.” இதன் காரணமாகவே நான், தேர்வுகளில் ஏமாற்ற மாட்டேன். ஆனால் துன்மார்க்கர் அப்படி செய்கிறதில்லை. அவர்கள் தங்களுக்கு முன்பாக தேவனை வைத்திருக்கிறதில்லை என்று தாவீது சொல்லுகிறார் (சங்கீதம் 54:3). அவர்கள் தங்களுடைய சுய இச்சையையே தங்களுக்கு முன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த இலட்சியங்களையே தங்களுக்கு முன் வைத்திருக்கிறார்கள். எப்பக்கதிலும் வளைந்து கொடுக்கும் வாழ்வியல் நெறிமுறைகளையே அவர்கள் தங்களுக்கு முன் வைத்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தேவனைத் தங்களுக்கு முன் வைத்திருக்கவில்லை. தேவபயத்தில் நடப்பதற்கு, அவருடைய பிரசன்னத்தைப் பற்றிய இந்த விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். தூரம் இருக்கிற அல்லது முற்றிலும் மறந்துபோன கடவுளுக்கு நீங்கள் பயப்பட முடியாது. கடவுளுக்குப் பயப்பட வேண்டுமானால், அவர் எப்போதும் நம்மை நெருங்கியிருக்கிறவரும், நம்முடைய நினைவிலிருக்கிறவருமாக இருக்க வேண்டும்.
நடைமுறைக்கேற்றபடி சொல்லுவதென்றால், சங்கீதம் 139ஐயும் அதிலுள்ள சத்தியங்களையும் எப்போதும் தியானிக்கிறவர்களாக இருக்க வேண்டும். கடவுளுடைய பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வை உங்களில் வளர்த்துக்கொள்ள வேண்டுமா? சங்கீதம் 139ஐ அவ்வப்போது வாசியுங்கள், அதிலுள்ளதை முன்னிறுத்தி ஜெபியுங்கள். “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்” (சங்கீதம் 139:7-8). கடவுளுடைய பிரசன்னம் எங்கும் பரவியிருக்கிறது என்பதை உணர்ந்த தாவீதின் மனதை இவ்வசனங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும் கடவுள் அங்கு இருக்கிறார் என்பதை உங்களில் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதை தொடர்ச்சியாக செய்வதற்கு நீங்கள் பழக வேண்டும். “தேவனே, எனக்காக இதை செய்யும்” என்று அவரிடம் ஜெபிப்பது போதாது. சங்கீதக்காரன் சொல்லுகிறார், “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்”. தாவீது தன்னுடைய வாழ்க்கையில் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கிற ஒரு ஆவிக்குரிய ஒழுங்குமுறையை இங்கு விவரிக்கிறார். உங்களைப் பொருத்தவரையிலும் இதுவே உண்மை. கடவுள் இங்கு இருக்கிறார். தாவீது தான் அவரை தனக்கு முன் வைப்பதாகச் சொல்லுவதனால், தாவீது அவரை அங்கு கொண்டுவந்து வைக்கவில்லை, அவர் அங்கேதான் இருக்கிறார். அவர் அங்கேயே தான் இருக்கிறார் என்பதை அங்கீகரிப்பதுதான் நம்முடைய வாழ்க்கையையே மாற்றுகிறதாக இருக்கிறது. அவருடைய பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வு நம்மில் வளர அவர்தாமே நமக்கு உதவுவாராக.
6. கடவுளுக்கான கடமைப்பாடுகளைப் பற்றிய உணர்வு
ஆறாவது வழிமுறை, கடவுளுக்கான உங்களுடைய கடமைப்பாடுகளைப் பற்றிய உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரு கிறிஸ்தவனுக்கு, கடவுளோடு தனக்குள்ள உறவுதான் தான் பெற்றிருக்கிற மற்றெல்லா உறவுகளைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவன் உணருவதுதான் தேவபயத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக இருப்பதை நாம் படித்தோம். கிறிஸ்தவனான ஒரு கல்லூரி மாணவன், தேர்வை எதிர்கொள்ளுகிறபோது, ஏதேனும் ஏமாற்று வேலைகளைச் செய்தால்தான் அத்தேர்வில் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் ஏற்படலாம். ஆனால் அவன் தனக்குத்தானே என்ன சொல்லிக்கொள்ளுவானென்றால், இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதில் தனக்குள்ள உறவைக் காட்டிலும், தன்னுடைய கல்லூரி படிப்பிற்காக பணம் செலுத்துகிற தன் பெற்றோரோடுள்ள உறவைக் காட்டிலும், மிக முக்கியமான ஒரு உறவு தனக்கு இருப்பதை அவன் எண்ணிப் பார்ப்பான். அந்த உறவுதான், “களவு செய்யாதே” என்று சொல்லியிருக்கிற கடவுளோடு தனக்குள்ள உறவு. அதாவது, தேர்வில் தான் மற்றவர்களுடைய உழைப்பை திருடக் கூடாது என்று அவன் உணர்ந்திருக்கிறான். நீங்கள் தேவபயத்தில் நடக்கிறவர்களாக இருந்தால், காலையில் பள்ளிக்குச் செல்லுவதற்கு முன், “ஆண்டவரே, இந்த நாளில் உம்மைப் பற்றிய பயத்தோடு நடக்க உதவி செய்யும்” என்று சொல்லுவீர்கள். பிறகு, ஏமாற்றுவதற்கான சோதனை உங்களுக்கு ஏற்படுகிறபோது, ஏமாற்றுச் செயலின் மூலமாக நீங்கள் பெறுகிற சிறப்பான மதிப்பெண் சான்றிதழை உங்கள் தாய் தகப்பனிடம் காட்டும் உங்களுடைய கடமை பொறுப்பைக் காட்டிலும், கடவுளுக்கான உங்களுடைய கடமை பொறுப்பு மிகவும் முக்கியமானது என்று எண்ணுவீர்கள்.
அதாவது, உங்களுடைய இச்சையும், பேரார்வமும், கடவுளுடைய வார்த்தைக்கு எதிராக நடக்கும்படி உங்களைத் தூண்டினால், கடவுளுடைய முகத்திற்கு முன்பாக நீங்கள் வெட்கப்படாமல் நிற்பதற்கு ஏதுவாக, உங்களுடைய குதிகாலை உங்களுடைய இச்சையின் முகத்தில் வைக்க வேண்டியிருந்தாலும், அதைச் செய்யுங்கள். அப்போது, யோசேப்பின் வார்த்தைகள் உங்களுடைய வார்த்தைகளாக இருக்கும், “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” (ஆதியாகமம் 39:9).
உங்கள் பெற்றோர் அல்லது உங்களுக்கு நெருக்கமான உறவினர்களின் விருப்பங்கள், உங்களைப் பற்றிய கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக இருக்கும் சூழல் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படலாம். உலகத்திலுள்ள உங்களுடைய நெருக்கமான பந்தத்தை துண்டிக்க வேண்டியிருந்தாலும், அதை செய்யுங்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார், “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே” (மத்தேயு 10:34-36).
இதன் மூலம் நம்முடைய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், “மனிதர்களுடைய இருதயங்களில் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை நாட்டுவதற்காகவே நான் வந்தேன், அதன் மூலமாக அவர்கள் எனக்கு எவ்வளவாக பயப்படுவார்களென்றால், உலகத்திலுள்ள அவர்களுடைய நெருக்கமாக பந்தங்களைத் துண்டிக்க வேண்டியிருந்தாலும், என்னிமித்தமாக அதை அவர்கள் செய்ய முற்படுவார்கள்.” அதை செய்யவே தான் வந்ததாக அவர் சொல்லுகிறார். தேவனுடைய பிள்ளைகள், கடவுளுக்கான தங்களுடைய கடமை பொறுப்புகளைப் பற்றிய உணர்வை தங்களில் வளர்த்துக்கொள்ளுகிறபோது, இதுவே அவர்களில் நிகழும்.
7. தேவபயம் கொண்டவர்களுடனான உறவு
தேவபயத்தில் நீங்கள் நிலைத்திருக்கவும் வளரவும் வேண்டுமானால், அதற்கான ஏழாவது வழிமுறை என்னவென்றால், தேவபயத்தில் நடக்கிறவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாகும். நாம் இந்த உலகத்தில் வாழுகிறபோது, தேவபயமில்லாதவர்களுடனும் நாம் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. 1 கொரிந்தியர் 5:9-10 வசனங்களில், பவுல் இதைப் பற்றி தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார், “விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப் போகவேண்டியதாயிருக்குமே”. ஒரு பொதுவான வாழ்க்கை முறையில், தேவபயமில்லாதவர்களுடனான தொடர்பை முற்றிலுமாக நாம் தவிர்க்க முடியாது. நாம் இந்த உலகத்தில் பொறுப்புடன் வாழவும், சுவிசேஷத்தின் சாட்சியை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக நல்ல நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளவும், தேவபயமில்லாதவர்களுடன் மிகுந்த கவனத்துடன், ஒரு பொதுவான உறவைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் பவுல் இங்கு சொல்லுவது என்னவென்றால், நெருக்கமான நண்பர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பும் சூழலும் உங்களுக்கு நேரிட்டால், தேவபயமுள்ளவர்களைத்தான் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். இதுபற்றி விவரிக்கிற ஒரு முக்கிய வசனம், சங்கீதம் 119:63, “உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்”. மெய்யானதும் வெளிப்படையானதுமான தேவபயம் கொண்டவர்களையே தனக்கு நெருக்கமானவர்களாக தெரிவு செய்திருப்பதை சங்கீதக்காரன் பகிரங்கமாக இங்கு அறிவிக்கிறார்.
ஏன் அவர் இதை செய்தார்? ஒரு தனிநபரின் உறவுகளைப் பற்றிய உளவியலை சங்கீதக்காரன் நன்றாக அறிந்திருந்தார். தனிநபர்களிடையிலான உறவு, ஒருவரையொருவர் பிரதிபலிப்பதும், பின்பற்றுவதும், ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு பரவும் வலிமையும் கொண்டது. ஆகவே, உங்களோடு நெருக்கமான உறவு கொண்டவர்களைப் போல் நீங்களும் இருப்பீர்கள். இதுதான் இயற்கையின் தத்துவமும் கூட. ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, “கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால் நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்” (நீதிமொழிகள் 22:24-25). ஆகவேதான் கடவுள், தீய மனிதர்களைப் போல் நாம் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பதைக் குறித்து நம்மை எச்சரிக்கிறார். இந்த உண்மையையே, பவுல், கொரிந்தியருக்குச் சொல்லிய எச்சரிக்கையிலும் இருப்பதைப் பார்க்கலாம், “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” (1 கொரிந்தியர் 15:33). கடவுள் நம்மை இந்த விதத்தில்தான் உருவாக்கியிருக்கிறார். நம்முடைய தனித்துவத்தை மட்டுமே கொண்டிருக்கிறவிதத்தில் நாம் ஏற்படுத்தப்படவில்லை. கடவுள் நம்மை ஒரு சமுகத்தில் வாழும்படியாக ஏற்படுத்தியிருக்கிறார். இந்த முறையின் தவிர்க்க முடியாத அம்சம் என்னவென்றால், அடுத்தவர்களிடமிருந்து பிரதிபலிப்பதும், பின்பற்றுவதும், பரவுவதுமாகிய வலிமை இதற்குண்டு.
இதனடிப்படையில்தான் சங்கீதக்காரன் சொல்லுகிறார், “உமக்குப் பயப்படுகிற அனைவருக்கும் நான் தோழன்”. அதாவது, “தேவனே நான் உமக்கு பயப்படுகிறேன். என்னிலுள்ள தேவபயம் அதிகரிக்க, தேவபயமுள்ளவர்களோடு நான் நெருக்கமான உறவுகொண்டிருப்பதுதான் சிறந்த வழி என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன்” என்கிறார்.
மல்கியா 3வது அதிகாரத்தில் இந்த உண்மையைப் பற்றிய ஒரு அற்புதமான உதாரணம் பதிவிடப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில், கடவுள், தம்மைவிட்டுத் தூரம் சென்றவர்களும், தமக்குரிய காணிக்கையையும் பலியையும் செலுத்தாமல் இருக்கிறவர்களான இஸ்ரவேலின் பெருங் கூட்டத்தினர்மீது குற்றஞ்சாட்டுகிறார். அவர்கள் தரம் தாழ்ந்த நிலைக்குச் சென்று, கடவுள் அவர்கள்மீது நியாயத்தீர்ப்பை அறிவிக்கும் காலமாக இருந்தது. அந்த நாட்டில் இப்படியான கேடான நிலை இருந்தபோதிலும், 16வது வசனத்தில் தீர்க்கதரிசி சொல்லுகிறார், “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது”.
இங்கு, மீந்திருக்கிற தேவபக்தியுள்ள, மெய்யான இஸ்ரவேலரைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள குறிப்பைக் கவனியுங்கள், “கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களும்”. அவர்கள் சிறு தொகையினராக இருப்பதனால், தங்களிலுள்ள தேவபயத்தை நிலைநிறுத்திக்கொள்ளுவதற்கு, தேவபயமுள்ளவர்களோடு கூட்டு வேண்டுமென்பதற்காக அவர்களைத் தேடுகிறார்கள். ஆவிக்குரிய கீழான நிலை தங்களுடைய நாட்டில் காணப்பட்டாலும், தேவபயமுள்ளவர்கள் கூடியிருப்பது மிகவும் அவசியமானது. கடவுளுடைய நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது, எப்பக்கதிலும் ஆவிக்குரிய கீழ்நிலை இருந்தது, அவற்றின் மத்தியிலும் தேவபயமுள்ளவர்கள் ஒன்றிணைந்து, தேவபயத்தில் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
நீங்கள் தேவபயத்தில் வளர வேண்டுமானால், தேவபயத்தில் நடக்கிறவர்களோடு நீங்கள் நெருக்கமான உறவை வைத்திருக்க வேண்டும். ஆவியின் கிருபைகளில் எந்தவொரு கிறிஸ்தவனும் தனியாக வளரவும் பெருகவும் முடியாது. தனிப்பட்ட கிறிஸ்தவம் என்றோ தனிப்பட்ட பரிசுத்தமாகுதல் என்றோ ஒன்றில்லை. உங்களுடைய கிறிஸ்தவ சகோதரன் உங்களுக்கு எவ்வளவு தூரம் அவசியம் என்று நீங்கள் அறியாமல், உணராமல் இருந்தால், நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல், நிச்சயமாக நீங்கள், பெருமை மற்றும் சுயநம்பிக்கை என்னும் மாயையில் சிக்கியிருக்கிறீர்கள். மல்கியாவின் நாட்களில் வாழ்ந்த தேவபக்தியுள்ள மனிதர்கள், தாங்கள் வாழும் சமுதாயத்தின் எப்பக்கத்திலும் சீர்கேடுகள் பரவியிருப்பதையே பார்க்கிறார்கள், அவர்களுடைய இருதயத்தில் தேவபயம் இருப்பதை அவர்கள் அறிந்ததனால், அவர்கள் தங்களுக்குள்ளாக சொல்லிக்கொண்டது இதுதான், “நானாக முயற்சித்தால் இன்னும் கீழ்நிலைக்குத்தான் நான் போவேன். ஆகவே நான் தேவபயமுள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களோடு இதுபற்றி தொடர்ந்து நான் பேசுவேன்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
நான் மட்டும் தனியாகவே இப்படி வாழ்ந்துவிடுவேன் என்று நினைக்கிற மாயையானது, மிகவும் சாபத்திற்குரியது. கிறிஸ்துவினுடைய சரீரமானது என்னுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கான ஒரு கூடுதல் வசதியாக மட்டும் பார்க்கிற எண்ணத்திலிருந்து, கடவுள்தாமே உங்களை விழத்தள்ளி உங்களைத் தாழ்த்துவராக. சபை என்பது வெறும் ஆடம்பரப் பொருளல்ல. நீங்கள் கிருபையில் வளருவதற்கு, சபை ஒரு விருப்பத் தேர்வல்ல. சபை என்பது நீங்கள் வளருவதற்கும் முன்னேறுவதற்கும் கடவுளுடைய அத்தியாவசியமான இடம். ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படுகிற ஆவியின் வெளிப்படுத்தல் எல்லாருடைய நன்மைக்காகவுமே கொடுக்கப்பட்டது என்பதையே 1 கொரிந்தியர் 12 அடிப்படையில் வலியுறுத்துகிறது. எபேசியர் 4:1-16 வரையுள்ள வசனப்பகுதியின் போதனை என்னவென்றால், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினுடைய ஆவிக்குரிய வளர்ச்சியும், கிறிஸ்துவினுடைய மக்களின் கூட்டு வாழ்க்கையைப் பொருத்தே அமைகிறது என்பது உணர்த்தப்படுகிறது. ஒவ்வொரு அங்கமும் சரீரத்திற்கு ஏதோ ஒன்றைத் தருகிறது, அதன் மூலம் சரீரம் அதிகமாக வளருகிறது, எந்தளவுக்கென்றால் “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக” வளருகிறது (எபேசியர் 4:11).
இந்நாட்களில், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிவித்துக்கொள்ளுகிற அநேகர், கடவுளுடைய பிள்ளைகளுக்கும் திருச்சபைக்கும் இடையே இருக்கிற உறவை, உலக மக்கள் ஒருவரோடொருவர் உறவை ஏற்படுத்திக்கொள்ளுகிற பொதுவான திருமண பந்தத்தோடு தொடர்புபடுத்துகிறார்கள். ஆனால் திருமண பந்தமில்லாமலும், “கூட்டாளிகள்” என்ற வகையில் இருவர் சேர்ந்து வாழுவதும் இந்நாட்களில் திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. முந்தைய தலைமுறையில், இப்படி வாழுவது, ஒழுக்கக்கேடும் அவலட்சணமுமான நடைமுறையாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது, இதெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது மட்டுமல்லாமல், திருமணமாகிய முறை தேவையற்றதாகவும் காலம் கடந்துவிட்ட ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. திருமண பந்தமென்பது தங்களைக் கட்டிவைப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். திருமணமில்லாமல் சேர்ந்து வாழும் முறையை விரும்புகிறவர்கள், அவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களோ இல்லையோ, திருமணத்தின் மூலமாக வருகிற சிறப்புரிமைகள் யாவும் அவர்களுக்கு வேண்டும், ஆனால் அத்தோடு இணைந்திருக்கிற பொறுப்புகளையும், தவிர்க்க முடியாத அர்பணிப்புகளையும், சரீரத்தை வருத்தி செய்ய வேண்டிய கடமைபாடுகளையும் நிராகரிக்கிறார்கள். ஒரு மனிதன் தன்னுடைய படுக்கையைப் பகிர்ந்துகொள்ளவும், காலை உணவை ஒரு பெண்ணுடன் சேர்ந்து சாப்பிடவும் விரும்புகிறான், ஆனால் தன்னையே அவளோடு பகிர்ந்துகொள்ளுவதனால் ஏற்படுகிற வளர்ச்சியை அவன் விரும்புகிறதில்லை. அதாவது விவாகரத்து கேட்கப்படுகிற நேரத்தில், தனக்கு அது தொல்லை கொடுக்கிறதாகவும் அதிக செலவீனமானதாகவும் இருப்பதை அவன் விரும்புகிறதில்லை.
அதேபோல், உடன்படிக்கையினாலான சபை அங்கத்துவத்தின்படி, அநேக கிறிஸ்தவர்களும் அப்படித்தான் இருக்கிறார். அவர்கள், சபை அங்கத்துவத்தின் சிறப்புரிமைகளையும், கடவுளுடைய பிள்ளைகளுடனான ஐக்கியத்தையும் விரும்புகிறார்கள். அதாவது, வேதத்தின்படியான ஊழியம், கடவுளை உயர்த்தும் சூழல், மற்றும் அவர்களை அன்போடு நேசிப்பதும் ஏற்பதுமாகிய நிலையையும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட சௌகரியத்தில் தலையிடுமளவுக்கான இணைப்பை விரும்புகிறதில்லை. நீங்கள் அப்படியான கிறிஸ்தவரா? கிறிஸ்துவை மட்டுமல்ல, அவருடைய மக்களையும்கூட நீங்கள் திருமணம் செய்திருக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் தேவனுடைய மக்களை திருமணம் செய்திருந்தால், அவர்களுடன் நீங்கள் உடன்படிக்கையின் பந்தத்தில் நுழைந்திருக்கிறீர்கள். ஆகவே, உங்களுக்குள்ளாக ஏதேனும் பிரச்சனை எழும்பினால், உங்களுடைய தனிப்பட்ட வழியைப் பார்த்துக்கொண்டு நீங்கள் போய்விட மாட்டீர்கள்.
இது தனிப்பட்ட வகையிலும் பொதுவாகவும், திருமண பந்தத்தினுடைய ஆசீர்வாதங்களில் ஒன்று. மெய்யான திருமண நெருக்கத்தை நோக்கிப் போகிறபோது, அநேக விரிசல்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டிருப்பீர்கள் என்பதை நீங்கள் யாவரும் ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நான் நம்புகிறேன். திருமணத்தில், ஆழ்ந்த ஒரு நெருக்கமான இணைப்பை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால், வெறுமனே எழுதப்படாத ஒரு உடன்படிக்கையாக மட்டுமே உங்கள் திருமணம் இருந்தால், நீங்கள் ஒரே வீட்டையும் படுக்கையையும் பகிர்ந்துகொள்ளுவீர்கள், ஆனால் ஏதேனும் இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அந்த உறவை முறித்துக்கொண்டு ஓடத்தான் பார்ப்பீர்கள். திருமணம் என்பது உடன்படிக்கை என்னும் அர்ப்பணிப்பினால் நெருக்கமாக இணைக்கப்படுவதாகும், கடவுளுடைய முகத்திற்கு முன்பாக எடுக்கும் உறுதிமொழியின் அடைப்படையினாலானது. ஆகவேதான் இந்த உறவு உறுதியாக நீடித்திருக்கிறது. தேவபயத்தில் நீங்கள் வளர விரும்புகிறீர்களா? அப்படியானால், உடன்படிக்கையின்படியான சபை அங்கத்தவர்களாக தேவபயத்தில் நடக்கிறவர்களுடன், சாதாரணமாக அல்ல, நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
8. ஊக்கமான ஜெபம்
தேவபயத்தில் நாம் எப்படி வளருவது என்பதற்கான எட்டாவது மற்றும் இறுதியான வழிமுறை என்னவென்றால், நீங்கள் தேவபயத்தில் வளர வேண்டுமென்று ஊக்கமாக ஜெபியுங்கள். தேவனுடைய இராஜ்யத்தின் மாற்ற முடியாத கட்டளைகளில் ஒன்று, “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” (மத்தேயு 7:7). அல்லது, இதையே எதிர்மறையாக, யாக்கோபு சொல்லுவது போல், “நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை” (யாக்கோபு 4:2) என்றும் சொல்லலாம்.
ஜெபத்தின் தன்மை, வலிமை மற்றும் நம்முடைய வாழ்க்கையில் அதற்கான இடத்தைப் பற்றி வேதம் போதிப்பதை நாம் கவனத்துடன் சிந்திக்கத் துவங்குகிறபோது, ஆழமான சில சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒருபுறம், ஜெபமென்பது, கடவுளைக் கட்டிவைத்து, அவர் நமக்குத் தர மறுக்கிறவைகளை எப்படியாவது கட்டாயப்படுத்தி அவரிடமிருந்து பெறுவதற்கான ஒரு ஆவிக்குரிய ஒழுங்காக ஒருபோதும் நாம் பார்க்கக் கூடாது என்று வேதம் தெளிவாக போதிக்கிறதை நாம் அறிவோம். மறுபுறம், யாக்கோபு 4:2ல் சொல்லப்பட்டுள்ள சத்தியத்தையும் நாம் மறுக்க முடியாது. அதாவது நம்மிடம் இல்லாதிருந்தும், அதுபற்றி கடவுளிடம் கேட்காததனால், அதை நாம் பெறாமல் இருக்கிறோம்.
இப்படியான கேள்விகளுக்கான பதிலின் ஒரு பகுதியை, 1 யோவான் 5:14-15 வசனங்களில் காணலாம். இதில் யோவான் சொல்லுகிறார், “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்”.
தேவபயமானது, இரட்சிப்பின் செயலோடும், மெய்யான தேவபக்தியோடும், ஏற்றுக்கொள்ளத்தக்க ஆராதனையோடும் மற்றும் இதனோடு தொடர்புடைய ஏனைய பல விஷயங்களோடும் இணைந்திருக்கிறது என்று யோவான் இப்புத்தகத்தில் அதிக கவனத்துடன் சுட்டிக்காட்டியிருப்பதனால், தேவபயமாகிய கிருபையில் நாம் வளர வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்பதைப் பற்றி நம்மில் எந்தக் கேள்வியும் எழ வேண்டியதில்லை. ஆகவே அப்போஸ்தலனாகிய யோவானுடைய இந்த வார்த்தைகளின் அடிப்படையில், தேவபயம் நம்மில் அதிகரிக்க வேண்டும் என்று நாம் ஜெபிக்கிறபோது, தேவனுடைய சித்தத்தின்படியான ஒன்றைத்தான் நாம் கேட்கிறோம் என்பதனால், எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் நாம் ஜெபிக்க வேண்டும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில், தேவன் நிச்சயமாக நம்முடைய ஜெபத்தைக் கேட்டு, அதற்கேற்ற பதிலைத் தருவார் என்ற உறுதியான எதிர்பார்ப்புடன், நம்மில் தேவபயம் அதிகரிக்க நாம் ஜெபிக்கலாம். மேலும், சங்கீதம் 86:11ல், தேவனே இதற்கான ஒரு மாதிரி ஜெபத்தையும் கொடுத்திருக்கிறார். அதில் தாவீது இப்படி ஜெபிக்கிறார், “நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்”.