பாவகரமான வைராக்கியம்

பக்தி வைராக்கியம் – 8

– டேவிட் மெரெக் –

[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]

மறுபடியுமாக ரோமர் 12:11 வசனத்திற்கு திரும்புவோம் – “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ் செய்யுங்கள்”.

இதுவரை, இந்த வசனத்திலுள்ள இரண்டு சொற்றொடரிலிருந்து பக்தி வைராக்கியத்தோடு தொடர்புடைய இரண்டு கருப்பொருட்களைப் பார்த்திருக்கிறோம். இப்போது இந்த வசனத்தின் மூன்றாவது சொற்றொடரான “கர்த்தருக்கு ஊழியஞ் செய்யுங்கள்” என்ற கருப்பொருளை இப்போது படிக்கப் போகிறோம்.

முதல் ஆக்கத்தில் நாம் பார்த்ததுபோல், பக்தி வைராக்கியத்தின் முக்கிய நோக்கத்தை இந்த சொற்றொடர் சிறப்பான வழியில் உயர்த்திக் காட்டுகிறது. கர்த்தரும் இரட்சகருமாகிய அவருக்கு ஊழியம் செய்வதே பக்தி வைராக்கியத்தின் இறுதி நோக்கம். எனினும், இந்தச் சொற்றொடர் பாவகரமான வைராக்கியத்தை அடையாளம் காணவும் நமக்கு உதவுகிறது. பக்தி வைராக்கியம் என்பது கிறிஸ்துவுக்காக வாழுகிறதாக இருந்தால், பாவகரமான வைராக்கியம் என்பது கிறிஸ்துவுக்கு பதிலாக வேறு தெய்வங்களுக்காகவோ விக்கிரகங்களுக்காகவோ ஆர்வத்தோடு வாழுகிறதாக பார்க்கப்படும். மேலும், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தல் நற்கனிகளுக்கு நேராக நம்மை வழிநடத்தும் என்று நாம் பார்த்திருக்கிறோம், அப்படியே அந்நிய தெய்வங்களுக்காக ஊழியம் செய்தல் கெட்ட கனிகளை உண்டாக்கும்.

இந்த நேரத்தில், நாம் ஏற்கனவே பார்த்த காரிலுள்ள பெட்ரோல் என்ஜினுக்கு திரும்பி வருவோம். என்ஜினின் உருளையில் பெட்ரோலும் காற்றும் கலந்து தொடர்ச்சியான வெடிப்பை ஏற்படுத்துகிறதன் மூலம், நல்ல பயன்தரக் கூடிய சக்தியை உண்டாக்குகிறதுபோலவே பக்தி வைராக்கியமும் இருக்கிறது என்று நாம் பார்த்தோம். அதன் மூலம் கார் ஓடுகிறது. ஒருவேளை காரை பின்னுக்கு பலமாக இடித்து தாக்கினால் என்னவாகும்? பெட்ரோல் டேங்க் உடைந்து, பெட்ரோல் சிந்தி, இறுதியில் கார் தீப்பிடித்து எரியும். என்ஜினில் தொடர்ந்து நெருப்பும் சக்தியும் இருந்துகொண்டுதான் இருக்கும். அது தொடர்ந்து சக்தியை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். ஆனால் அதன் விளைவு என்ன? அது கேடானதும் அழிவை ஏற்படுத்தக்கூடியதுமான சக்தி. அதுபோல்தான் பாவகரமான வைராக்கியமும் இருக்கிறது. அதில் வைராக்கியம் இருந்தாலும் அது தீமையை ஏற்படுத்தக் கூடியது.

இப்போது, பாவகரமான வைராக்கியத்தைப் பற்றி விவரமாக படிக்கப் போகிறோம். பக்தி வைராக்கியத்தைப் பற்றி சாதகமான காரியங்களின் மூலம் படிப்பது நல்லது, ஆனால் அதேநேரம் அதன் பாதகங்களையும் பார்ப்பது அவசியம். பாவகரமான வைராக்கியத்தைப் பற்றி வேதம் இரண்டு வேறுபட்ட முக்கிய பிரிவுகளை நமக்கு அடையாளங் காட்டுகிறது (சில விஷயங்களில் இவை இரண்டும் ஒன்றுசேர்ந்தும் இருக்கும்). முதலாவது பிரிவு,

1. சுயத்தை நாடுகிற வைராக்கியம்

இந்தவிதமான பாவகரமான வைராக்கியம் பல்வேறு வழிகளில் தன்னை வெளிப்படுத்துகிறது. சில நேரங்களில் அது மிகவும் நுட்பமாக செயல்பட்டு, பக்தியின் அறிகுறியாகத் தன்னைக் காட்டுகிறது. சில நேரங்களில் அது மறைந்திராமல் வெளிப்படையாகவே தன்னுடைய பாவகரமான செயலின் மூலம் காட்டும். சுய ஊழிய வைராக்கியத்தில் நாம் முதலாவது பார்ப்பது,

அ. பொறாமை (Envious) அல்லது எரிச்சலின் (Jealous) வைராக்கியம்

புதிய ஏற்பாட்டில் வைராக்கியத்தை விளக்குவதற்கு பொறாமையின் வார்த்தை குடும்பத்தை சேர்ந்த வார்த்தையைத்தான் மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற உண்மையை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன். வேறுவிதத்தில் சொல்ல வேண்டுமானால், வேதத்தில் வைராக்கியத்தின் உட்கருத்தை விளக்க, பொறாமையின் உட்கருத்தைக் கொண்டுதான் விளக்கப்பட்டிருக்கிறது. பாவகரமான வைராக்கியத்தின் இந்த அம்சத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், இந்த இரண்டு வார்த்தைகளுக்கான விளக்கத்தை கவனமாக நாம் அறிவது மிகவும் அவசியம். ஆங்கில அகராதிகளின்படி, இன்னொருவரின் உடமைகள், திறமைகள், அல்லது விரும்பத்தக்க சூழல்களினால் நம்முடைய இருதயத்தில் எழும் திருப்தியற்ற தன்மை அல்லது ஆத்திரத்தோடு அவைகளை விரும்புவதே பொறாமையாகும். பொறாமை என்பது நாம் விரும்பும் ஒன்றை மற்றொருவர் வைத்திருப்பதைப் பார்த்து உண்டாகும் வலி. பிறகு எரிச்சல் என்றால் என்ன? இதற்கு பொறாமை என்ற வார்த்தையின் அர்த்தமும் உண்டு. இக்காரணத்தினால், வேதத்தின் பல இடங்களில் இவ்விரண்டு வார்த்தைகளும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எரிச்சல் என்ற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அது பொறாமை என்ற வார்த்தையின் அர்த்தத்திலிருந்து மாறுபட்ட தனித்துவ விளக்கங் கொண்டது. எரிச்சல் என்பது ஒருவருடைய உடைமைகளையோ அல்லது அவருக்கு உரியதையோ மூர்க்கத்தோடு விரும்புவதாகும். வேறு விதத்தில் சொல்லுவதானால், எரிச்சல் என்பது தன்னிடம் உள்ளதை (அல்லது தன்னிடம் இருப்பதாக எண்ணியிருப்பதை) இழப்பதற்கு பயப்படுவதாகும். ஒரு பொதுவான உதாரணம் என்னவென்றால், ஒரு கணவனோ மனைவியோ தன்னுடைய திருமண உறவு முறியும் என்கிற பயத்தின்போது வருவதே எரிச்சல். இந்த எரிச்சல் அடிப்படையில் தவறானது என்று சொல்ல முடியாது. நம்முடைய பரிசுத்தமுள்ள ஆண்டவர் எரிச்சலுள்ளவர்.

வைராக்கியத்தோடு தொடர்புடைய பதம் பயன்படுத்தப்பட்டுள்ள பாவகரமான எரிச்சலின் ஒரு உதாரணத்தை கவனியுங்கள். இந்த உதாரணத்தில், எரிச்சல் பக்தி உருவில் வந்தது. வாசியுங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:42-45.

அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.  ஜெபஆலயத்தில் கூடின சபைகலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள். யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.

பவுலின் பிரசங்கத்தினால் அந்தியோகியாவிலும் பிசீதியாவிலும் எழுப்புதல் உண்டானது. அவர் அங்கு சென்றிருந்த இரண்டாவது ஓய்வுநாளில் ஜெபாலய ஆராதனைக்கு கிட்டத்தட்ட அந்த பட்டணத்திலிருந்த எல்லாருமே வந்திருந்தனர். அங்கிருந்த யூதர்களால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பவுல் அங்கு வந்து ஊழியம் செய்த இரண்டு வாரத்திற்குள்ளாக அடைந்த வெற்றியை அவர்களுடைய வாழ்நாளிலும் அடைந்ததில்லை என்ற காரணத்தினால் அவர்கள் பவுலின் மேல் எரிச்சல் கொண்டார்கள். பவுல் அதிகமாக பயன்படுத்தப்படுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே பவுல் சொல்லியதை அவர்கள் தூஷிக்கவும் எதிர்க்கவும் தொடங்கினார்கள்.

போதகர்களாகிய நாமும் சக போதகர்கள் நம்மைவிட அதிக வெற்றிபெற்று பெரிய சபைகளை நாட்டுகிறபோது எரிச்சலின் வைராக்கியம் என்ற இந்தக் குற்றத்திற்கு நாமும் உள்ளாகலாம். அல்லது மற்ற போதகர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் நம்மைவிட அதிகளவு பணம் வைத்திருக்கிறபோது அப்படி நடக்கலாம். பாவகரமான இந்த எரிச்சலின் வைராக்கியம் என்பது மிகவும் மோசமானது என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய பாவகரமான எரிச்சலின் வைராக்கியம் மெய்யான அன்பிற்கு எதிரானது என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 13:4). அதன் சுபாவத்தைக் கொண்டிருந்து மனந்திரும்ப மறுக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் இடம் பெற மாட்டார்கள் (கலாத்தியர் 5:20-21). இதனோடு நெருக்கமாக இருக்கிற இன்னொன்று,

ஆ. சுய உயர்த்துதலின் வைராக்கியம்

நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? அவர்கள் உங்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள்; ஆகிலும் நல்மனதோடே அப்படிச் செய்யாமல், நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப் புறம்பாக்க விரும்புகிறார்கள். நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும். (கலாத்தியர் 4:16-18)

இங்கே மீண்டும் போலிப் பக்தியின் வைராக்கியத்தை பாருங்கள். இரட்சிக்கப்படுவதற்கு புதிய கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென்றும் பழைய உடன்படிக்கையின் சடங்கு சட்டங்கள் எல்லாவற்றையும் கடைபிடிக்க வேண்டுமென்றும் போதித்த தவறான போதனையாளர்களைப் பற்றி பவுல் இங்கு பேசுகிறார். உண்மையில் அவர்கள் வித்தியாசமான சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள். அவர்களுடைய ஒரு தன்மையைப் பற்றி பவுல் இங்கு சுட்டிக்காட்டுகிறார். புதிய விசுவாசிகள் அவர்களை தலைவர்களாக ஏற்க வேண்டும் என்பதற்காக வைராக்கியம் பாராட்டுகிறார்கள். அதற்காக அவர்கள் பவுலைப் போன்ற உண்மையுள்ள சுவிசேஷ பிரசங்கிகளிடமிருந்து அவர்களைத் தள்ளிவைக்கப் பார்த்தார்கள். இந்த தவறான போதனையாளர்கள் தங்களை பவுலுக்குப் போட்டியாகக் கருதி, யார் பின் அநேகர் செல்லுகிறார்கள் என்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போஸ்தலனிடமிருந்து வரும் ஆவிக்குரிய பாதுகாப்பிலிருந்து ஆடுகளை விலக்கிவைக்க வைராக்கியங் கொண்டிருந்தார்கள். இவையெல்லாவற்றிலும், அவர்கள் நல்லவற்றிற்காக வைராக்கியங்கொள்ளவில்லை. கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பது அவர்கள் நோக்கமாக இருக்கவில்லை. அவர்கள் தங்களுக்கே ஊழியம் செய்து பவுலை நிந்தித்தார்கள். அவர்கள் இந்த விசுவாசிகளை உண்மையாக கிறிஸ்துவை பின்பற்றுபடி ஊக்கப்படுத்தாமல் தங்களைப் பின்பற்றும்படி செய்தார்கள். இத்தகைய சுய உயர்த்துதல் மற்றும் பிரிவினையின் வைராக்கியம் பாவகரமான வைராக்கியம் என்று தெளிவாகிறது. எங்கெல்லாம் இத்தகைய அசிங்கம் தலைதூக்குகிறதோ அதெல்லாம் பாவகரமானதே. கிறிஸ்து உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உழைக்காமல் தங்களுடைய பெயரையும் தங்களைப் பின்பற்றுகிறவர்களையுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிற சுவிசேஷ ஊழியர்களையும் இது உள்ளடக்கும் (கொலோசெயர் 1:18).

சுய ஊழியம் மற்றும் அத்தோடு சேர்ந்த இகழ்ச்சியான வைராக்கியத்தில் இதுவரை நாம் பார்த்த முதல் இரண்டோடு சேர்ந்த இன்னுமொன்று உண்டு. அது எப்போதும் மற்றவர்களின் மீது அன்பற்றதாக இருக்கும்.

இ. எரிகிற நாக்குகள்.

ஏற்கனவே நாம் பார்த்தது போல், வைராக்கியம் என்பதற்கு புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் அடிப்படை அர்த்தம், சூடாக இருக்கிற அல்லது எரிகிற என்பதாகும். ஆகவே, வைராக்கியமாகிய கருப்பொருளுக்கு எரிகிற அல்லது நெருப்பிற்கான மற்ற பதங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. இத்தகைய பதத்திற்கு தொடர்புடைய ஒரு குறிப்பை நீதிமொழிகள் 16:27ல் நாம் பார்க்கலாம்.

பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.

இந்த வசனம் புரளி பேசுவதில் தீவிர ஆர்வங்கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். பாவகரமான புரளி பேசுவதென்பது, மற்றொருவரைக் கெட்டவனாக பார்க்க வைக்கக்கூடிய சுவாரசியமான ஒரு தகவலை நாம் பேசுவது (அத்தோடு, தன்னை மற்றவனைவிடச் சிறந்தவனாக காட்டிக்கொள்ளுவதாகும்) நெருப்பைப் போன்றதாகும். யாக்கோபு 3:5-6 வசனங்களில் நாக்கை நெருப்பாகவும், நெருப்பின் தன்மைகளைக் கொண்டதாகவும், நரக அக்கினியாகவும் சொல்லப்பட்டுள்ளது. மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக சபிக்கும் நாவு என்று குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிச்சலின் வைராக்கியங் கொண்ட அந்தியோகியாவிலிருந்த யூதர்கள் பவுலின் சுவிசேஷப் பிரசங்கத்திற்கு முரணாகவும் தூஷிக்கிறவர்களாகவும் எப்படிப் போனார்கள் என்பதை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:45). இவைகளும் மற்ற வேதப்பகுதிகளும் நாக்கைப் பயன்படுத்தி நாம் செய்யும் புரளி, சபித்தல், தூஷிக்கும் வைராக்கியத்திற்கு எதிராக நம்மை எச்சரிக்கிறது. இத்தகைய பாவகரமான எரிகிற தன்மைக்கு எதிராக நம்முடைய நாக்கைப் பாதுகாக்க நாம் கடவுளை நோக்கி மனந்திரும்பி அவரிடம் வந்து, அவருடைய உதவிக்காக கெஞ்சி நிற்க வேண்டும். எந்தவொரு மனிதனும் தன்னுடைய சுய பெலத்தினால் தன் நாக்கை கட்டுப்படுத்த முடியாது என்று யாக்கோபு சொல்லுகிறார் (யாக்கோபு 3:8). துரதிஷ்டவசமாக, போதகர்கள் மாநாடுகளில் போதகர்கள் தங்களை நல்லவிதமாக காட்டிக்கொள்ளுவதற்காகவோ அல்லது புகழ் பெறுவதற்காகவோ இத்தகைய பாவகரமான வதந்திகளைப் பரப்புவதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளுவதில்லை.

சுய ஊழியத்தின் இன்னொரு வடிவத்தைப் பாருங்கள். அதுவும் எரிகிற நெருப்பு என்கிற மொழி நடையிலேயே அடையாளம் காட்டப்படுகிறது.

இ. பாலியலில் எரிதல்

ஓசியா 7:4-7

அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது உப்பிப் போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான். நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத் துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான். அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜுவாலிக்கிற அக்கினியாய் எரியும். அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.

இவ்வசனங்கள், விபச்சாரம் மற்றும் குடிவெறியிலுள்ளவர்கள் சூடான ஒரு அடுப்பிலுள்ள நெருப்பைப் போன்றவர்கள் என்று விவரிக்கிறது. ரோமர் 1:27, ஆண்கள் விரகதாபத்தினால் பொங்கி ஓரினச் சேர்க்கையாகிய இச்சையில் ஈடுபடுகிறார் என்று சொல்லுகிறது. பாவகரமான பாலியல் எரிதலுக்கு பல வடிவங்கள் உண்டு. ஆனால் அது எந்த வடிவத்தோடிருந்தாலும், பாவகரமான பாலியல் இச்சைகளை நிறைவேற்றுவதில் சுய திருப்தி காணும் எரிகிற வைராக்கியத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம். இது சுய ஊழியத்தின் இன்னொரு வடிவம்.

சுருக்கமாக, பாவகரமான வைராக்கியத்தின் ஒரு முக்கிய வகை என்னவென்றால், அது ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்கு பதிலாக ஏதாவது ஒரு வழியில் தனக்கே ஊழியம் செய்து கொள்ளும் மற்றும் அதன் தொடர்ச்சியாக, மற்றவர்களிடம் அன்புகாட்டுவதற்கு பதிலாக அவர்களை இகழ்ந்துரைக்கும்.

இப்போது, பாவகரமான வைராக்கியத்தின் இரண்டாவது முக்கிய வடிவத்தைப் பார்க்கலாம்.

2. பாவகரமான மத வைராக்கியம்

இந்த வகை வைராக்கியமானது பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது.

அ. சட்டப்பூர்வ அவிசுவாச மத வைராக்கியம்

ரோமர் 10:1-4

சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.

இங்கே பவுல் இன்னும் இரட்சிக்கப்படாத சக யூதர்கள் இரட்சிக்கப்பட தனக்கிருக்கும் ஏக்கத்தைப் பற்றி பேசுகிறார். நிச்சயமாக அவர்கள் உண்மையான வைராக்கியங் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொல்லுகிறார். மேலும், அது மதரீதியான வைராக்கியமாகவும் இருந்தது. அது அவர்களுடைய புரிந்துகொள்ளுதலின்படி, வேதத்திலுள்ள மெய்யான கடவுளுக்கான வைராக்கியம் என்று எண்ணியிருந்தனர். பாவகரமான வைராக்கியத்தின் இந்த வடிவமே குறிப்பாக யூதர்களைக் குருடர்களாக வைத்திருந்தது. அவர்களுடைய பிரச்சனைதான் என்ன?

இங்கு விவரிக்கப்பட்டுள்ள பாவகரமான மத வைராக்கியத்தில் இரண்டு அடிப்படை பிரச்சனைகள் இருந்தன. முதலாவது, இது சட்டங்களின்படியானது. இவர்கள் தங்களுடைய சுய நற்செயல்களின் மூலமாக பரிசுத்த கடவுளுக்கு முன்பாக தங்களுடைய சுய நீதி மற்றும் அங்கீகரிப்பைத் தேடினார்கள். தங்களை இரட்சித்துக்கொள்ள மனிதர்கள் எடுக்கும் இத்தகைய எல்லா முயற்சிகளும் பாவகரமான மத வைராக்கியத்தின் ஒரு வடிவமே. இந்த பாவகரமான மத வைராக்கியம் அவிசுவாசத்தோடு நெருக்கமான தொடர்புடையது. இவர்கள் கிறிஸ்துவின் மூலமாக இலவசமாக வழங்கப்படும் கடவுளுடைய கிருபையின் சுவிசேஷத்தில் நம்பிக்கை வைக்காதவர்கள். தங்களால் ஒருபோதும் சம்பாதிக்க முடியாததும், முற்றிலும் தகுதியற்றவர்களுக்கு கடவுளிடமிருந்து வரும் ஈவாகிய இரட்சிப்பை அவர்களால் சந்தோஷமாக ஏற்க முடியவில்லை. இங்கு இந்த யூதர்கள் சுவிசேஷத்தை அறியாதிருந்தார்கள். அவர்களுடைய வைராக்கியம் அறிவுப்பூர்வமானதல்ல. அதேவேளை, சுவிசேஷத்தை வெளிப்புறமாக அறிந்திருந்தும் அதை நிராகரிக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இத்தகைய சட்டப்பூர்வமான, அவிசுவாச கூட்டத்தினர், சபை என்று சொல்லிக் கொண்டு கூடிவருகிற இடத்திலோ அல்லது மெய்யான சபைகளிலோ வைராக்கியமுள்ள அங்கத்தவர்களாகவும் இருக்கலாம். ஏனையோர் உலகத்தின் மற்ற மதங்களில் வைராக்கியம் கொண்டவர்களாக, தங்கள் நித்திய சந்தோஷத்தை தங்களுடைய சுய செயல்களின் மூலம் தேடுகிறவர்களாக இருப்பார்கள். எது எப்படியிருந்தாலும், இவர்கள் யாவரும், தங்களுடைய வைராக்கியத்தினால் தங்களுடைய இரட்சிப்பிற்கான ஒரே வழியை தவறவிடுகிறார்கள். இரட்சிப்பு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, கடவுளுடைய கிருபையின் மூலமாக மட்டுமே வருகிறது. இத்தகையோருக்கு சுவிசேஷத்தின் நல்ல செய்தியை நாம் கொண்டு செல்ல வேண்டியதும் குருடாகவுள்ள இவர்களுடைய கண்களை திறக்கும்படி கடவுளிடம் மன்றாடுவதும் எவ்வளவு அவசியம்.

பாவகரமான மத வைராக்கியத்தோடு நெருக்கமான மற்றொரு வடிவத்தை பார்க்கலாம்.

ஆ. வெளிப்படையாக துன்புறுத்தும் மத வைராக்கியம்

இந்த மத வைராக்கியம் என்பது மெய்யான கடவுள்பக்தியுள்ளவர்களை நேரடியாகத் தாக்குவதாகும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மனந்திரும்பாத தர்சு பட்டணத்தானாகிய சவுல். மனந்திரும்பிய பிறகு அவரே தன்னைப் பற்றி சொல்லியதைக் கவனியுங்கள், “பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன்” என்கிறார் (பிலிப்பியர் 3.6). அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3-4 மற்றும் கலாத்தியர் 1:13-14 வசனப்பகுதிகள், பவுலின் துன்பப்படுத்தின நடவடிக்கை கடவுளுக்காகவும் அவரது பிதாக்களுடைய பாரம்பரியங்களுக்காகவும் கொண்டிருந்த வைராக்கியத்திலிருந்து வந்ததாக சொல்லுகிறது. ஒரு பரிசேயனாக, கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கான ஒரு போராளியாகத் தன்னைப் பார்த்தார். எனினும், யூத மூப்பர்களின் வேதப்பூர்வமற்ற அநேக பாரம்பரியங்களுக்காகவும் கிறிஸ்துவால் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பழைய உடன்படிக்கையின் சடங்குமுறை சட்டங்களுக்காகவுமே அவர் போராடினார். துரதிஷ்டவசமாக, இது போன்ற வெளிப்படையான துன்பப்படுத்தும் மத வைராக்கியம் பவுலுக்கு மனமாற்றத்தைக் கொண்டு வரவில்லை. திருச்சபை வரலாறு முழுவதும் இது தொடர்ந்திருந்தது. மேலும், இத்தகைய துன்புறுத்தும் வைராக்கியம் திருச்சபைக்கு வெளியிலிருந்து மட்டுமல்ல, விசுவாசத் துரோகத் திருச்சபைகளிலிருந்தும் வந்தது. கிறிஸ்துவின் மெய்யான திருச்சபைக்குள்ளிருந்தும் இது வந்திருக்கிறது. (ஆகவேதான் நான் இதை ஒரு தனி வகையான மத வைராக்கியம் என்று குறிப்பிடுகிறேன்.) இத்தகைய துன்பப்படுத்தும் வைராக்கியம் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. சில நேரங்களில், அது பவுல் செய்தது போல் விசுவாசிகளை சிறையிலடைப்பது மற்றும் மரணத்திற்குள்ளாக்குவதில் ஈடுபட்டிருக்கும். ஆனால் மற்ற நேரங்களில் அது மிகவும் நுட்பமாக ஆனால் சேதம் குறைவானதல்ல, அதாவது பொல்லாத வாய்மொழித் தாக்குதல்களின் வடிவில் (எரிகிற நாக்கைப் பற்றி ஏற்கனவே நாம் பார்த்ததுபோல்) வரும். எனினும், பாவகரமான மத வைராக்கியம் மெய்யான பக்தியோடு தொடர்புடைய சில வேறுபட்ட வடிவிலும் தன்னைக் காட்டிக்கொள்ளும்.

இ. முழு இருதயத்துடன் கடவுளிடத்தில் இணைந்திருக்காத மத வைராக்கியம்

பக்தியற்ற யெகூவின் உதாரணத்தை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2 இராஜாக்கள் 10:15-16

அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி, நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.

2 இராஜாக்கள் 10:28-31

இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான். ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரோபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை. கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார். ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.

கடவுள் யெகூவுக்குச் சொல்லியிருந்தார், இஸ்ரவேலின் வடபகுதிக்கு அவன் ராஜாவாயிருப்பான் என்று. அவபக்தியான ராஜாவாகிய ஆகாபின் குடும்பத்தையும் அவனைச் சேர்ந்தவர்கள் யாவரையும் அழிக்கும்படியும் அவர் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார். யெகூவும் கடவுள் சொன்னதையெல்லாம் ஆர்வத்தோடு செய்தான். இஸ்ரவேலில் இருந்த பாகால் விக்கிரக வழிபாட்டையும் அவன் அழித்தான். வசனம் 16ல் கடவுளுக்காக அவன் கொண்டிருந்த வைராக்கியத்தைப் பற்றிய உண்மையையே சொல்லியிருந்தான். அதற்காக கடவுளே அவனைப் பாராட்டி, அவனுடைய ராஜ்யத்தையும் ஆசீர்வதித்தார். ஆயினும் அதில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தது. எதெல்லாம் அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றதாக இருந்ததோ அதிலெல்லாம் வைராக்கியங் கொண்டு அவன் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தான். ஆனால் பொன் கன்றுக்குட்டிகளைப் பற்றிய காரியத்தில் அது வேறுவிதமாக இருந்தது. அதைப் பற்றிய விஷயத்தில் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது அவனுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. என்ன பிரச்சனை? அது இருதயம் சம்பந்தமான பிரச்சனை. வசனம் 31 சொல்லுகிறது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை” என்று.

பக்திவைராக்கியம் என்பது இந்த விஷயத்திலெல்லாம் நான் கடவுளுக்குக் கீழ்ப்படிவேன், இந்த விஷயத்திலெல்லாம் நான் கீழ்ப்படிய முடியாது என்று தெரிவு செய்யாது. பக்தி வைராக்கியம் என்பது முழு இருதயத்தோடு செயல்படுவது. நம்மில் பக்தி வைராக்கியம் இருந்தால், பிதாவும் கிறிஸ்துவும் கட்டளையிட்டிருக்கிற அனைத்திற்கும் கீழ்ப்படிய கவனமாக இருப்போம். நம்முடைய தனிப்பட்ட சொந்த வாழ்க்கையிலும், நம்முடைய குடும்பங்களிலும், நம்முடைய தொழில்களிலும், கிறிஸ்துவின் சபையிலும் அதன்படி கவனமாக செய்கிறவர்களாக இருப்போம். பக்தி வைராக்கியம் என்பது முழு இருதயத்தோடு தொடர்புடையது, அதைப் பிரித்துப் பார்க்க முடியாது.

பாவகரமான மத வைராக்கியத்தின் கடைசி வடிவம், கடவுளுடன் முழுமையாக இணைந்திருக்காத வைராக்கியத்தோடு நெருக்கமான தொடர்புடையது.

ஈ. மந்தமான மத வைராக்கியம்

வைராக்கியத்திற்கான புதிய ஏற்பாட்டு வார்த்தை சூடான அல்லது எரிகிற என்பதன் தன்மையை கொண்டது என்று ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன். ஆகவே பக்தி வைராக்கியத்திற்கு எதிரானது என்ன என்று யாரெனும் கேட்டால், நமக்கு எது நினைவிற்கு வரும்? அதற்கு எதிரான ஆத்துமாவில் குளிர்ந்த நிலையில் இருப்பது. ஆயினும் சூடாக இருப்பதோடு தொடர்புடைய பதத்தை நாம் படித்தபோது அப்படிப் பார்க்கவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதைஅறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.  நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

லவோதிக்கேயா திருச்சபைக்கு இயேசு சொன்ன வார்த்தைகளில் பக்தி வைராக்கியத்திற்கு எதிரானது இருக்கிறது? அது கிறிஸ்துவிலும் அவரைச் சார்ந்த காரியங்களிலும் மந்தமாக, கவனக்குறைவாக, அலட்சியமாக இருப்பதாகும். இந்த மந்த நிலை நம்முடைய இரட்சகருக்கு குமட்டலை உண்டாக்குகிறது. அது அவர்களை அவருடைய வாயிலிருந்து துப்பச் செய்கிறது. இந்த மந்த நிலையைப் பற்றி அதிகமாக இங்கு சொல்லப்பட்டுள்ளது. அது தனக்கு கடவுள் தேவையில்லை என்று சொல்லும் பெருமை, சுயசார்பு, தன்னிறைவுடைய இருதயத்தைக் கொண்டிருக்கும். நீங்கள் ஆவிக்குரிய வகையில் இழிவான, பரிதாபகரமான, குருடாக, நிர்வாணமாக இருக்கும்போது அது நீங்கள் எல்லாவற்றையும் கொண்டிருப்பதாகவும் உங்களுக்குத் தேவை என்பதே இல்லை என்று நினைக்கச் செய்யும். கிறிஸ்து தம்முடைய ஆவிக்குரிய பிள்ளைகளைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் இத்தகைய இருதயமே காரணம் என்று இங்கு நாம் பார்க்கிறோம்.

இயேசுவின் இந்த வார்த்தைகள் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்கிறது. நம்முடைய இரட்சகர் நமக்காக இந்த உலகத்தில் வந்து மரித்தபோது நிச்சயமாக எரிகிற சூடான வைராக்கியத்தைக் கொண்டிருந்தார். அவர் இருந்தவிதமாக நாமும் இருக்கிறோமா?

இந்தப் பாடத்தை முடிக்கிறவேளையில், இந்தப் பாடத்தின்போது நாம் சிந்தித்து வருகிற அந்தக் கேள்விக்கு நாம் திரும்புவோம். இதுவரை நாம் பார்த்த, பாவகரமான வைராக்கியத்தின் வடிவங்களின் அடிப்படையில், எப்படி நம்மில் பக்தி வைராக்கியத்தை தூண்டிவிடுவது?

வெளிப்படுத்தின விசேஷம் 3:19ல் நாம் படித்த வார்த்தைகளை நினைவுகூருங்கள், “. . . ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு.” இதைச் செய்வதற்கான இரண்டு வழிகளை கவனியுங்கள்.

1. முதலாவது, நமக்கு உணர்த்தப்படுகிற எல்லாவிதமான பாவகரமான வைராக்கியத்திலிருந்தும் மனந்திரும்புவதற்கு ஜாக்கிரதையாயிருப்பதன் மூலமாக நாம் வைராக்கியத்தை தூண்டிவிட வேண்டும். பொறாமை மற்றும் சுய உயர்வின் வைராக்கியங்களிலிருந்தும், பாவகரமான எரிகிற நாக்கு மற்றும் கேடான பாலியல் எரிதலிலிருந்தும், நம்முடைய உண்மையுள்ள சகோதரர்களை தாக்குவது போன்ற எல்லா வகையான பாவகரமான மத வைராக்கியங்களிலிருந்தும் மனந்திரும்ப வேண்டும். பாவகரமான வைராக்கியத்திற்கு நாம் பார்த்த அநேக உதாரணங்கள் மத நம்பிக்கையுள்ளவர்களைப் பற்றிய உண்மையானது என்பதை கவனியுங்கள். ஆகவே கிறிஸ்துவின் பெயரை அறிக்கை செய்கிற நம்மை வஞ்சிக்கக் கூடியதும் குற்றத்திற்குள்ளாக்கக் கூடியதுமான இத்தகைய பாவகரமான வைராக்கியத்தின் எல்லா வடிவங்களைப் பற்றியும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். சங்கீதம் 139:23-24 வசனங்களில் சங்கீதக்காரன் சொல்லியது போல்தான் நம்முடைய தொடர்ச்சியான ஜெபம் இந்த விஷயத்தில் இருக்க வேண்டும், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”

2. இரண்டாவது, முதலாவதோடு நெருக்கமான தொடர்புடையது, நம்மிலுள்ள பக்தி வைராக்கியத்தின் குறைவுகளிலிருந்து ஜாக்கிரதையாக மனந்திரும்புவதின் மூலம் நம்மில் வைராக்கியத்தைத் தூண்ட வேண்டும். போதகர்கள் மற்றும் ஊழியர்களாகிய நாம், கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் முழு இருயத்தோடு ஊழியம் செய்யாதிருந்தவைகளை அறிக்கையிடுவதிலும் அவைகளை விட்டுவிடுவதிலும் கொதிக்கிற சூட்டோடு செயல்பட வேண்டும். பணமும் உடைமைகளும் நம்முடைய வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் பெறுவதாக இருக்கிற பாவகரமான செய்கைகளிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டும் (2 தீமோத்தேயு 2:4). குளிர்ந்த, மந்த, மற்றும் சோம்பலான நிலையிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டும். தன்னிறைவு மற்றும் சுய சார்பு என்கிற பெருமைகளிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டும்.

கீழ்வரும் கேள்விகளுக்கு நாம் கவனமாக பதிலளிக்க வேண்டும்.

  1. கடவுளிடம் ஒப்புரவாவதற்கு கண்ணீரோடு இரவும் பகலும் வேண்டிக்கொள்ளுகிறது மட்டும் போதுமானதா?
  2. மனப்பூர்வமாகவும், பயனுள்ள முடிவை அடைய வேண்டும் என்கிற தீவிரத்தோடும் செய்யாமல் வெறுமனே அன்றாட கடமைக்காக ஒரு வேலையை செய்வதில் மட்டும் நாம் பெரும்பாலும் திருப்தியடைகிறோமா?

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s