ஆயிரம் வருட அரசாட்சி

வெளிப்படுத்தல் விசேஷத்தின் 20ம் அதிகாரத்தில் காணப்படும் ஆயிரம் வருட அரசாட்சியை வைத்து பல கோட்பாடுகள் உருவாகியுள்ளன. இந்த ஆயிரம் வருடத்தை எழுத்துபூர்வமாகக் கருதி விளக்கமளிப்பதா? அல்லது அடையாள மொழியாகக் கருதி விளக்கமளிப்பதா? என்பதன் அடிப்படையிலேயே இக்கோட்பாடுகளின் விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. அத்தோடு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இந்த ஆயிரம் வருட காலப்பகுதிக்கு முன்பா? அல்லது அதற்குப்பிறகா? என்பதிலும் இந்தக் கோட்பாடுகள் முரண்படுகின்றன. மிலேனியம் என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆயிரம் வருடங்கள் என்று பொருள். வெளிப்படுத்தல் விசேஷத்தின் 20ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆயிரம் வருடங்களை அடிப்படையாக வைத்து இக்கோட்பாடுகள் எழுந்திருப்பதால் இவற்றை மிலேனியலிசக் கோட்பாடுகள் என்று அழைப்பார்கள்.

போஸ்ட்-மிலேனியலிசம் (Post-Millennialism)

போஸ்ட்-மிலேனியலிசம், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படுத்தப்படும் என்று கூறுகிறது. சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றும் பலர் இக்கோட்பாட்டினைப் பின்பற்றியுள்ளனர். ஆர்சிபால்ட் அலெக்சான்டர், ஜே. ஏ. அலெக்சான்டர், பென்ஜமின் வார்பீல்ட் போன்ற பிரின்ஸ்டன் பரம்பரையில் வந்தவர்கள் இக்கோட்பாட்டைப் பின்பற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ரொபட் டெப்னி, டபிள்யூ. வி. டி. செட், ஹென்றி தோர்ன்வெல் போன்றோரும் இக்கோட்பாட்டைப் பின்பற்றியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் இயன் மரே இதனை விளக்கிவருபவர்களில் ஒருவர். வட அமெரிக்காவில் ரீகொன்ஸ்ட்ரக்சனிசம் அல்லது தியோனமி என்ற கோட்பாட்டைப் பின்பற்றிவரும் பிரஸ்பிடீரியன் சபை அமைப்பைச் சேர்ந்த ரஷ்டூனி, கெரி நோர்த் ஆகியோரும் இக் கோட்பாட்டை பின்பற்றுபவர்கள். ஆகவே, சீர்திருத்தக் கோட்பாட்டாளர் மத்தியில் இக்கோட்பாட்டிற்கு ஆதரவு இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இக்கோட்பாடு, இவ்வுலக முடிவின்போது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக இவ்வுலகில் நற்செய்தி உலகம் முழுவதும் வெற்றிகரமாக பிரசங்கிக்கப்பட்டு நாடுகள் கிறிஸ்தவ மயமாக்கப்பட்டு, உலக மக்கள் மத்தியில் நற்செய்தியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று விளக்குகிறது. இக்கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் கிறிஸ்து மத்தேயு 28ல் தந்துள்ள நற்செய்திக் கட்டளையின்படி இறுதிக் காலத்திற்கு முன்பாக இவ்வுலக நாடுகளை கிறிஸ்தவ மயமாக்குவார் என்று நம்புகிறார்கள்.

நற்செய்தி பெருவெற்றியுடன் பரவி, நாடுகள் கிறிஸ்தவ மயமாக்கப்பட்டு, கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக இவ்வுலகில் ஒரு பொற்காலம் (Golden Age) தோன்றும் என்பது இக்கோட்பாட்டின் போதனை. இந்தப் பொற்காலமே, இக்கோட்பாடின்படி இவ்வுலகில் ஏற்படும் ஆயிரவருட அரசாட்சி. இவ்வாயிரம் வருட, பொற்காலத்தின்போது உலக நாடுகள் பலவற்றின் மத்தியில் வேதம் அதிகாரம் செலுத்தி, கிறிஸ்தவத்தின் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்கிறது போஸ்ட்-மிலேனியலிசம். இக்காலத்தில் உலகத்தில் பாவம் தொடர்ந்திருந்தபோதும், ஒழுக்கத்தோடு கூடிய நீதியும், சமாதானமும், பொருளாதார மேம்பாடும் உலகளாவியதாக மானிடர் மத்தியில் காணப்படும் என்கிறது இக்கோட்பாடு. நாடுகளில் கிறிஸ்துவின் ஆட்சி நிலவி, அவருடைய இராஜ்யம் உலகில் இவ்வகையில் ஏற்படுத்தப்படும் என்பது இதன் போதனை.

போஸ்ட் மிலேனியலிசத்தைப் பின்பற்றுபவர்கள், கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சியான பொற்காலத்தின்போதோ அல்லது அதற்கு முன்போ பெருமளவில் யூதர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பார்கள் என்று நம்புகிறார்கள். இதற்காக இஸ்ரவேலில் இருக்கும் ஒவ்வொரு யூதனும் விசுவாசியாக மாறிவிடுவான் என்று இதனைப் புரிந்து கொள்ளக் கூடாது. எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்குமளவுக்கு யூதர்கள் மத்தியில் நற்செய்தி போதனையின் மூலம் நாடளவிய மனந்திரும்புதலும், விசுவாசமும் ஏற்படும் என்கிறது இப்போதனை.

உலகில் கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக ஏற்படும் பொற்காலத்தின்போது ஏற்படும் நற்செய்தியின் வெற்றியும், ஆயிர வருட அரசாட்சியும், உலகில் கிறிஸ்து ஏற்படுத்தும் ஆட்சியின் அடையாளங்கள் என்று இக்கோட்பாடு சொல்கிறது. இக்காலத்தில் பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் கிறிஸ்து வானத்தையும் பூமியையும் ஒரு சேர ஆள்வார் என்பது இதன் கருத்து. அத்தோடு, ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படுமுன் உலகத்தில் பாவத்தின் செயல்கள் நிகழ்ந்தபோதும் அது படிப்படியாக நன்மையை நாடிப்போய் சமாதானத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் காணும் என்று இது விளக்குகிறது.

போஸ்ட் மிலேனியலிசம் மத்தேயு 24ல் காணப்படும் அநேக கடைசிக் கால நிகழ்வுகள் ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படுவதற்கு முன்பே நடந்து முடிந்துவிடும் என்கிறது. முக்கியமாக மத்தேயு 24ல் விளக்கப்படுகின்ற இறுதிக்காலத்தை சுட்டிக் காட்டும் அநேக அடையாளங்கள் 70ல் எருசலேம் நிர்மூலமாக்கப்படுவதற்கு முன்பே நடந்து முடிந்துவிட்டன என்கிறது இப்போதனை. இத்தகைய விளக்கத்தையே பிரித்தரிஸ்ட் முறையைப்பின்பற்றிய விளக்கம் என்று கூறுவர்.

அத்தோடு வெளிப்படுத்தல் விசேஷத்தில் 19ம் அதிகாரமும் 20ம் அதிகாரமும் அடுத்தடுத்து நடந்துவந்த காரியங்களை விபரிப்பதாகக் கூறுகிறது. 19ம் அதிகாரம் வரலாற்றில் எவ்வாறு பகுதி பகுதியாக தனது எதிரிகளை வெற்றி கொள்கிறார் என்பதையும், 20ம் அதிகாரம் கிறிஸ்து முழு வெற்றியும் அடைந்த பிறகு சாத்தானை எப்படி ஆயிரம் வருட காலத்திற்கு கட்டிவைக்கிறார் என்று விளக்குவதாகவும் கூறுகிறது. இப்போதனையைப்பின்பற்றும் எல்லோருமே ஆயிரம் வருடங்களை எழுத்துபூர்வமானதாக விளக்குவதில்லை. ஆனால், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப்பின்பு சாத்தான் இக்காலத்தில் கட்டிவைக்கப்பட்டு, அவனுடைய ஆட்சி பூரணமாக இல்லாமலாக்கப்படும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இதன் குறைபாடுகள்:

இக்கோட்பாடு பலவிதங்களில் நாம் இனிப் பார்க்கப்போகின்ற ஆ-மிலேனியல் (A-Millennial) கோட்பாட்டை ஒத்திருந்தபோதும் பல குறைபாடுகளைக் கொண்டதாக இருக்கின்றது.

  1. ஆயிரம் வருட அரசாட்சி இந்த உலகத்தில் நடக்கப்போகிறது என்ற இதன் போதனைக்கு வேத சான்றுகள் இல்லை. இவ்வாயிரம் வருடங்களை இது எழுத்துபூர்வமானதாக (Literal) கருதாவிட்டாலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு இக்காலப்பகுதியில் உலகம் கிறிஸ்தவ மயமாக்கப்பட்டு, சாமாதானமும், நீதியும், தேவ இராஜ்யமும் நிகழும் பொற்காலமாக இருக்கும் என்பதற்கு வேத சான்றுகள் இல்லை. இதற்கு எதிர்மறையான போதனைகளையே வேதத்தில் பார்க்கிறோம்.
  2. நிகழ்காலமான சுவிசேஷ காலத்தில் உலகம் படிப்படியாக நன்மையை நாடிப்போய் விருத்தி அடைந்து பொற்காலத்தில் முடியும் என்பதற்கு எந்த சான்றும் இல்லை, மாறாக, தொடர்ந்து இந்த உலகத்தில் பாவச் செயல்கள் அதிகரிக்கத்தான் செய்யும் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
  3. மத்தேயு 24ன் அநேக கடைசிக்கால அடையாளங்களை இது நடந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சிகளாக பிரித்தரிஸ்ட் கொள்கை அடிப்படையில் விளக்குவது வேதத்தின் ஏனைய பகுதிகள் தரும் விளக்கங்களோடு ஒத்துப் போகவில்லை. உபத்திரவகாலம், போர்கள், போர்களைப்பற்றிய வதந்தி, பெருமளவில் சத்தியத்தைவிட்டு விலகிப்போகும் கூட்டம் போன்றவற்றின் அடையாளங்கள் எல்லாம் ஆயிரம் வருடகால ஆட்சிக்கு முன்பாகவே (கி.பி. 70க்கு முன்பாகவே) நடந்து முடிந்துவிட்டன என்ற இக்கோட்பாட்டின் போதனைக்கு வேத சான்றுகள் இல்லை.

பிரி-மிலேனியலிசம் (Pre-Millennialism)

பிரி-மிலேனியலிசம் கிறிஸ்து தனது இரண்டாம் வருகைக்குப் பின்பு இவ்வுலகத்தில் ஆயிரம் வருட அரசாட்சியை நிறுவுவார் என்று போதிக்கிறது. இக்கோட்பாடு இருபிரிவுகளைக் கொண்டுள்ளது. முதலாவது ஹிஸ்டோரிக் பிரி-மிலேனியலிசம். அடுத்ததாக சமீப காலங்களில் உருவான டிஸ்பென்சேஷனல் பிரி-மிலேனியலிசம்.

ஹிஸ்டோரிக் பிரி-மிலேனியலிசம் (Historic Pre-Millennialism)

இக்கோட்பாட்டைப் பின்பற்றியவர்கள் சபைப்பிதாக்களின் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். ஜஸ்டின் மார்டர் இக்கோட்பாட்டைப் பின்பற்றியதாக நம்பப்படுகிறது. ஆகஸ்தீனுடைய போதனைகளின் தாக்கத்தால் மத்திய காலப்பகுதிகளில் இது பெருமளவுக்கு இல்லாமல் போனது. சீர்திருத்த காலப்பகுதிகளில் ஆகஸ்தீனின் போதனைகளைப் பின்பற்றிய சீர்திருத்தவாதிகள் இப்போதனையை நிராகரித்தனர்.

இப்போதனையின் முக்கிய அம்சம், கிறிஸ்து இரண்டாவது வருகையின்போது இவ்வுலகில் ஆயிரம் வருட காலத்திற்கு தனது ஆட்சியை ஏற்படுத்தி ஆள்வார் என்பதாகும். இந்த ஆயிரம் வருடத்தை இவர்கள் எழுத்துபூர்வமான ஆயிரம் வருடங்களாக கணிக்கிறார்கள். கிறிஸ்து தனது சரீரத்துடன் இவ்வுலகிற்கு வந்து எருசலேமை மையமாகக்கொண்டு ஆயிரம் வருடகாலத்திற்கு நாடுகளை ஆள்வார் என்கிறது இப்போதனை. இந்த ஆயிரம் வருட கால ஆட்சியில் இவ்வுலகத்தில் இதுவரை காணாத சமாதானமும், நீதியும், பொருளாதார வளர்ச்சியும் நாடுகள் மத்தியில் காணப்படும் என்று இக்கோட்பாடு விளக்குகிறது. பாவமும் அதன் பாதிப்பும் இவ்வுலகில் தொடர்ந்திருந்தபோதும் இப்பொற்காலத்தில் மக்கள் இதுவரையிலும் காணாத ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள் என்கிறது இப்போதனை.

இவ்வாயிர வருட காலப்பகுதியில் கிறிஸ்து அந்திக் கிறிஸ்துவையும் தன்னுடைய எதிரிகள் அனைவரையும் அழித்து தனது இறை ஆண்மையை எங்கும் வெளிப்படுத்துவார் என்றும் விசுவாசிகள் இக்காலப்பகுதியில் கிறிஸ்துவுடன் ஆள்கின்ற ஆசீர்வாதத்தை அடைவார்கள் என்பதும் இக்கோட்பாட்டின் போதனை.

அத்தோடு, இப்போதனை கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சடுதியானதாகவும், எதிர்பாராததாகவும் இருக்குமென்றும் இவ்வருகைக்கு முன்பு விசுவாசிகள் தாங்கமுடியாத எதிர்ப்பையும் இவ்வுலகத்தில் அனுபவிப்பார்கள் என்றும் கூறுகிறது. அதாவது, கடைசிக்காலங்களை சுட்டிக்காட்டும் அடையாளங்களான உபத்திரவ காலம், விசுவாசத்தை விட்டு விலகி ஓடும் கூட்டம், அந்திக் கிறிஸ்துவின் வருகை போன்ற அடையாளங்களெல்லாம் கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக உடனடியாக ஏற்படும் என்றும், கிறிஸ்து இவ்வுலகிற்கு வருகை தந்து எல்லா எதிர்ப்புகளையும் முறியடித்து தனது இராஜ்யத்தை இவ்வுலகில் ஸ்தாபிப்பார் என்றும் இக்கோட்பாடு விளக்குகிறது. இந்தப் போதனையின் காரணமாக இக்கோட்பாடு போஸ்ட்-டிரிபியுலேஷனிசம் (Post-Tribulationism) அதாவது, இரண்டாவது வருகைக்கு முன்பான உபத்திரவ காலம் என்று அழைக்கப்படுகிறது. மாறாக, பிரி-டிரிபியுலேஷனிசம் (Pre-Tribulationism). இரண்டாவது வருகைக்குப் பிறகு உபத்திரவ காலம் என்ற போதனை டிபென்சேஷனல் பிரி-மிலேனியலிசத்தின் Dispensational Pre-Millennialism முக்கிய அம்சமாக இருக்கின்றது.

ஹிஸ்டோரிக் பிரி-மிலேனியலிசம் கர்த்தர் இவ்வுலகில் யூதர்களையும் புறஜாதியரையும் கொண்ட ஒரே மக்களைக் கொண்டிருக்கிறார் என்று போதித்தபோதும், யூத நாட்டுக்கும், மக்களுக்கும் தேவனுடைய திட்டத்திலும், இராஜ்யத்திலும் விசேஷமானதொரு இடமளிக்கப்பட்டிருப்பதாகவும் நம்புகிறது. அநேக பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டாலும் ரோமர் 9:11 வரையிலான அதிகாரங்களில் போதிக்கப்படும் உண்மைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்கிறது இக்கோட்பாடு. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது இஸ்ரவேலில் உள்ள யூதர்கள் மத்தியில் நாடளவில் பெரும் மனமாற்றம் ஏற்பட்டு பெருந்தொகையானோர் விசுவாசத்தை அடைந்து கிறிஸ்து ஸ்தாபிக்கும் ஆயிரம் வருட கால இராஜ்யத்தில் முக்கிய இடத்தை வகிப்பார்கள் என்பது இதன் போதனை. அத்தோடு பழைய ஏற்பாட்டு சடங்காச்சாரியங்களும் ஏதோ ஒரு வகையில் மறுபடியும் யூதர்கள் மத்தியில் புதுப்பிக்கப்படும் என்றும் இக்கோட்பாடு கருதுகிறது.

ஹிஸ்டோரிக் பிரி-மிலேனியலிசம் இரண்டுவகை உயிர்த்தெழுதல் நிகழும் என்றும், ஒன்று ஆயிரம் வருட அரசாட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவும், இரண்டாவது அவ்வாயிரம் வருட அரசாட்சி முடிவுக்கு வரும்போது நிகழும் என்றும் விளக்குகிறது. இதற்கு இக்கோட்பாடு வெளிப்படுத்தல் விசேஷம் 20ம் அதிகாரத்தை பயன்படுத்துகிறது. இதன்படி விசுவாசிகள் ஆயிரம் வருட அரசாட்சி ஆரம்பிக்கு முன் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவுடன் இவ்வுலகில் ஆயிரம் வருடங்கள் ஆள்வார்கள் என்றும், அக்காலப்பகுதி முடிந்தவுடன் அவிசுவாசிகள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பையும், தண்டனையும் சந்திப்பார்கள் என்றும் விளக்குகிறது.

டிஸ்பென்சேஷனல் பிரி-மிலேனியலிசம் (Dispensational Pre-Millennialism)

இக்கோட்பாடு ஏனையவை போலல்லாது சமீப காலத்தில் தோன்றியதாகும். 1825 ஜோன் நெல்சன் டார்பி (John Nelson Darby) என்பவர் இங்கிலாந்தில் ஆரம்பத்தில் ஆங்கிலிக்கன் சபையின் குருவாக இருந்து பின்பு பிலிமத் பிரதரன் என்ற இயக்கத்தை தோற்றுவித்தார். டார்பியின் போதனைகளைப் பலர் பின்பற்றியபோதும், அவற்றை சீ. ஐ. ஸ்கோபீல்டைப்போல (C. I. Scofield) பரப்பியவர்கள் யாருமில்லை. அமேரிக்காவில் ஒரு கொங்கிரிகேசனல் சபையில் போதகராக இருந்த ஸ்கோபீல்ட் டார்பியின் போதனைகளால் கவரப்பட்டு அவற்றை ஏற்றுக் கொண்டதோடு ஸ்கோபீல்ட் பைபிள் என்ற பெயரில் டார்பியின் போதனைகளை விளக்கும் வேதப்புத்தகத்தையும் வெளியிட்டார். 1909ல் இது முதலில் வெளிவந்தது. ஸ்கோபீல்டின் டிஸ்பென்சேஷனல் கருத்துக்களைக் கொண்ட ஸ்கோபீல்ட் வேதப்புத்தகம் அதனை வாங்கிப்பயன்படுத்துகிற அனைவரையும் இன்றும் வேதவிளக்கங்கள் என்ற பெயரில் டிஸ்பென்சேஷனலிசப் போதனையால் கவர்ந்து கொண்டிருக்கிறது.

இதுதவிர டிஸ்பென்சேஷனல் பிரி-மிலேனியலிசத்தை வட அமெரிக்காவில் பெரிதும் பரப்புவதற்கு அக்கோட்பாட்டைப் பின்பற்றிப் போதித்துவரும் பல இறையியல் கல்லூரிகளும், இறையியல் வல்லுனர்களும் காரணமாக இருக்கின்றார்கள். மூடி பைபிள் இன்ஸ்டிடியூட், டல்லஸ் இறையியல் கல்லூரி, மாஸ்டர்ஸ் இறையியல் கல்லூரி, கிரேஸ் இறையியல் கல்லூரி போன்றவை இவற்றில் சில, அத்தோடு இக்கோட்பாட்டைப் பின்பற்றும் இறையியல் வல்லுனர்களாக ஜோன் வெல்வூர்ட், டுவைட் பென்டிகோஸ்ட், சார்ள்ஸ் ரைரி, ஜோன் மெக்கார்தர் சுவின்டல் போன்றோரைக் குறிப்பிடலாம்.

இதன் முக்கிய அம்சங்களை இனிப் பார்ப்போம். மீட்பின் வரலாற்றில் கடவுள் பல்வேறு விதங்களில் மனிதனோடு தொடர்பு கொண்டு செயல்படுகின்றார் என்கிறது டிஸ்பென்சேஷனலிசம். “ஒரு குறிப்பிட்ட காலத்தில் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தின் ஒரு அம்சத்தைக்குறித்து மனிதன் எவ்வாறு சோதிக்கப்படுகிறான்” என்பதையே டிஸ்பென்சேஷன் என்ற வார்த்தை விளக்குகிறது என்கிறது பழைய ஸ்கோபீல்ட் பைபிள் குறிப்பு. சமீபத்தில் வந்துள்ள ஒரு வெளியீடு, “மனிதர்கள் தம்மோடு எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை ஒரு குறிப்பிட்ட வழிமுறையின் மூலம் கடவுள் செயல்பட்டு வெளிப்படுத்துவதே டிஸ்பென்சேஷன்” என்று விளக்குகிறது. ஆகவே, இக்கோட்பாடு, மனிதனுடைய வீழ்ச்சிக்கு முன்பாக படைப்பிலிருந்து ஆயிரம் வருட அரசாட்சியுடன் வரலாறு முடிவடையும்வரை கடவுள் தன்னுடைய படைப்புயிர்களான மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கு பல்வேறு விதமான நிர்வாக முறைகளைப் பயன்படுத்துகிறார் என்கிறது.

ஏழு நிர்வாக முறைகள் (Seven Dispensations)

டிஸ்பென்சேஷனலிஸிட்டுகள் இந்த நிர்வாக முறைகள் எத்தனை என்பதில் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தபோதும் பொதுவாக அத்தகைய ஏழு நிர்வாக முறைகள் இருக்கின்றன என்று ஒத்துப் போகின்றனர். இவற்றை அறியாமையின் நிர்வாக முறை (படைப்பு முதல் ஏதேன் தோட்டத்தில் இருந்து ஆதாம் விரட்டப்படும் வரை), மனித மனசாட்சியின் நிர்வாகமுறை (நோவாவின் காலத்தில் மக்கள் தண்ணீர் வெள்ளத்தால் அழிக்கப்படும்வரை), மனித அரசின் நிர்வாகமுறை (வெள்ளத்தால் உலகம் அழிக்கப்பட்டதிலிருந்து ஆபிரகாம் அழைக்கப்பட்டவரை), வாக்குத்தத்த நிர்வாகமுறை (ஆபிரகாம் அழைக்கப்பட்டதிலிருந்து சீனாயின் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதுவரை), நியாயப்பிரமாண நிர்வாகமுறை (சீனாயில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது முதல் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுவரையும்), திருச்சபை நிர்வாகமுறை (கிறிஸ்து சிலுவையில் மரித்ததுமுதல் பரிசுத்தவான்கள் வருகைவரையும்), தேவ இராஜ்யத்தின் நிர்வாக முறை அல்லது ஆயிரம் வருட அரசாட்சி (கிறிஸ்து இஸ்ரவேலை மீட்டு, எருசலேமை தலைமையகமாகக்கொண்டு ஆயிரம் வருடம் ஆட்சி செய்தல்) என்று இவர்கள் பிரிக்கிறார்கள். இந்த நிர்வாகப்பிரிவுகளில் கடைசி மூன்றுமே முக்கியமானவை என்றும் இவர்கள் கூறுவார்கள்.

டிஸ்பென்சேஷனல் போதனைகள் உருவான ஆரம்பகாலத்தில் இந்த ஏழுவிதமான நிர்வாக முறைக்காலங்களில் மனிதர்கள் உலகத்தில் ஓரேவிதத்தில் இரட்சிக்கப்படுவதில்லை என்று நம்பப்பட்டது. அதாவது, ஒவ்வொரு டிஸ்பென்சேஷனிலும் (நிர்வாகமுறை) வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி கர்த்தர் பாவிகளை இரட்சித்தார் என்று போதிக்கப்பட்டது. இப்போது இதில் டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் மத்தியில் வேறுபட்ட கொள்கைகள் நிலவுகின்றன. சிலர் இரட்சிப்பு எக்காலத்திலும் கிருபையினால் விசுவாசத்தின் மூலமே கிட்டும் என்ற தெளிவான வேத போதனையை ஏற்றுக்கொள்கிறார்கள்.

திருச்சபையும், இஸ்ரவேலும்

டிஸ்பென்சேஷனலிசம் இஸ்ரவேலுக்கும், திருச்சபைக்கும் இடையில் பெரும் வேறுபாட்டைக் காண்கிறது. சார்ள்ஸ் ரைரி (Charles C. Ryrie) என்ற டிஸ்பென்சேஷனலிச போதனையாளர், “கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள், இந்த உலகத்தோடு உள்ள தொடர்பு ஆகியவற்றில் ஆரம்பத்தில் இருந்தே இஸ்ரவேலுக்கும், திருச்சபைக்கும் இடையில் பெரு வேறுபாடு இருந்துள்ளது” என்கிறார். இதுபற்றி ஆரம்பத்தில் போதித்தவர்கள், கிறிஸ்து தேவ இராஜ்யத்தைப்பற்றிப் போதித்து தனது ஊழியத்தை ஆரம்பித்து, எருசலேமில் தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்து இஸ்ரவேலை மறுபடியும் ஆளப்போவதாகப் பிரசங்கித்தார் என்றும், ஆனால், அவர் காலத்து யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாததால் அந்த இராஜ்யத்தை ஸ்தாபிப்பதை அவர் தள்ளிவைத்து திருச்சபையின் காலத்தை இடைச்செருகலாக ஆரம்பிக்க வேண்டி வந்தது என்றும் போதிக்கின்றனர். தேவ இராஜ்யத்தின் நிர்வாகமுறையான மேசியாவின் இராஜ்யம் உலகத்தில் இஸ்ரவேலை மையமாகக் கொண்டு அமைய வேண்டி இருப்பதால் அது நிறைவேறும் காலம் பின்தள்ளிப்போடப்பட்டுவிட்டது என்றும் இப்போது திருச்சபைக்கான கர்த்தரின் திட்டங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்றும் விளக்கினார்கள்.

(இத்தொடராக்கத்தின் மிகுதி அடுத்த இதழில் நிறைவு பெறும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s