கிறிஸ்தவ தலைமைப் பஞ்சம்

என்னடா? இன்னுமொரு பிரச்சனை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேனே என்று யோசிக்கிறீர்களா? சமீப காலமாக இதுபற்றி என்னால் சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக கிறிஸ்தவ சபைகள் இணைந்து வந்த கூட்டத்தில் பேசியபொழுது இதுபற்றி என்னால் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. தனிப்பட்ட சிலரிடமும் இதுபற்றிப் பேசியிருக்கிறேன்.

நல்ல கிறிஸ்தவ தலைமை சபைகளுக்குத் தேவையானால் அது இறையியல் கல்லூரிகளில் இருந்து ஆரம்பிக்கும் என்பது சமுதாயத்தில் இருந்துவரும் பொதுவான எண்ணம் என்பது எனக்குத் தெரியும். அதை அடியோடு மறுதலிக்கிறவன் நான். வேதம் இந்தவிதமாக கிறிஸ்தவ தலைமைக்கு இறையியல் கல்லூரிகளிலேயே வித்திடப்படுவதாக எந்தப் பகுதியிலும் விளக்கவில்லை. 19ம் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே இந்தவிதமான தவறான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. அதற்கு முன்பாக இந்தவிதமான எண்ணம் இருக்கவில்லை. 19ம் நூற்றாண்டில் இறையியல் போதனைகளை எவரும் இறையியல் கல்லூரிகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகி, அக்கல்லூரிகளின் போதனைகள் முக்கியமாக சுவிசேஷ ஊழியத்தை மையப்படுத்தி அமைந்திருந்ததால் அதில் இருந்து வெளிவந்தவர்கள் சுவிசேஷ ஊழியப்பணியில் ஈடுபட்டு திருச்சபை அமைக்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு திருச்சபையே இந்தப்பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தன. திருச்சபை செய்ய வேண்டிய பணிகளை இறையியல் கல்லூரிகள் செய்ய ஆரம்பித்தது 19ம் நூற்றாண்டில் இருந்தே ஆரம்பித்தது. இந்தப் புதிய முறையினால் திருச்சபை வாழ்க்கையையும், அனுபவத்தையும் பெற்றிராதவர்களெல்லாம் சுவிசேஷ ஊழியப்பணியில் ஈடுபடவும் திருச்சபைகள் அமைக்கவும் ஆரம்பித்தனர். பெரும்பாலான இறையியல் கல்லூரிகள் ஆத்துமாக்களுக்கு அவசியமான போதக ஊழியத்திற்கும், வேதப்பிரசங்கத்திற்கும் அதிமுக்கிய இடத்தை அளிக்காமல் சுவிசேஷ ஊழியத்திற்கும், அதுதொடர்பான நடைமுறை விஷயங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்ததால் அதில் இருந்து வெளிவந்தவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் முதிர்ச்சியற்றவர்களாகவும், ஆத்தும வைத்தியத்திலும், திருச்சபை வாழ்க்கையிலும் அனுபவம் பெற்றிராதவர்களாகவும் இருந்தனர். இதுவே இன்று தமிழ் கிறிஸ்தவ சமுதாயத்தில் தொடர்ந்து வருகின்ற முறையாகவும் இருக்கிறது.

நல்ல கிறிஸ்தவ தலைமைக்கு கருவாக இருப்பது இறையியல் கல்லூரிகளல்ல. இறையியல் கல்லூரிகள் அவசியமா, இல்லையா என்ற வாதத்தில் இந்த ஆக்கத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. அது பற்றிய என் கருத்துக்களை திருமறைத்தீப வாசகர்கள் இதழ்களில் வாசித்து அறிந்துகொள்ளலாம். அவை நல்ல கிறிஸ்தவ தலைமைக்கு பட்டறைகளா, என்பதே என் கேள்வி. அதற்கு இல்லை என்பதுதான் என் ஆணித்தரமான பதில். அப்படியானால் நல்ல கிறிஸ்தவ தலைமை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று கேட்பீர்கள். அதைத்தான் இந்த ஆக்கத்தில் விளக்க விரும்புகிறேன்.

வேதபூர்வமான குடும்ப வாழ்க்கையும் வளர்ப்பு முறையும்

கிறிஸ்தவ தலைமைக்கு அத்திவாரம் குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; இருந்தாலும் அதுவே உண்மை. குடும்பத்திலேயே இதற்கு வித்திடப்படுகிறது. கிறிஸ்தவ குடும்பத்தில் தகப்பனும் தாயும் பிள்ளைகளை கர்த்தருக்காக வளர்த்தெடுக்க வேண்டிய தவிர்க்கமுடியாத கடமையைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் இரட்சிப்பை வழங்கமுடியாது; அது கிறிஸ்துவின் பணி. இருந்தபோதும் சுவிசேஷத்தை பிள்ளைகளுக்கு அறிவித்து கர்த்தரின் வழியில் நடத்தவேண்டியது அவர்களுடைய பிரதான பொறுப்பு. அத்தோடு தகப்பனும் தாயும் பேச்சிலும், நடத்தையிலும் விசுவாசத்தோடு கிறிஸ்துவின் கட்டளைகளைப் பின்பற்றி நடந்து பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். பிள்ளைகள் குடும்பத்தில் வளர்கிறபோதே அவர்களுடைய பிற்கால வாழ்க்கைக்கான அத்திவாரமிடப்படுகிறது. ஒழுக்கவிதிகளைப் பின்பற்றி நன்னடத்தையுள்ளவர்களாக பிள்ளைகள் இருக்க குடும்ப வளர்ப்பே வித்திடுகிறது. குடும்ப வாழ்க்கையை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. கணவன் மனைவி உறவு மற்றும் வாழ்க்கை பற்றியும் (எபேசியர், கொலோசெயர், 1 பேதுரு), பிள்ளை வளர்ப்பு பற்றியும் பழைய புதிய ஏற்பாடுகள் விளக்குகின்றபோது குடும்பத்தை மையமாகக் கொண்டே அவற்றிற்கவசியமான விளக்கங்களைக் கொடுக்கின்றன. கர்த்தர் தான் ஏற்படுத்தி வைத்திருக்கும் குடும்பத்தில் பத்துக்கட்டளைகளின் அடிப்படையிலான அவர் மேல் இருக்க வேண்டிய அன்பையும், அவருக்கே உரித்தான ஆராதனையையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கிறார். குடும்பமே பிள்ளை வளர்ப்புக்கான பட்டறையாக இருக்கிறது; அது பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் நடக்கவேண்டியதல்ல.

தமிழ் கிறிஸ்தவ சமுதாயக் குடும்பங்களில் வேத வாசிப்பும், ஜெபமும் இருந்தபோதும் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையும் பிள்ளை வளர்ப்பும் வேத அடிப்படையில் அமைந்திருப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் குடும்பத் தலைவனும், தலைவியும் வேத அடிப்படையில் வளர்க்கப்படாததுதான். புறஜாதிப் பெற்றோர்களிடம் வளர்ந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் புறஜாதிப்பண்பாடுகளும் கருத்தோட்டமும் அதிகளவில் இருப்பதை நம் சமுதாயத்தில் காண்கிறோம். சிறு வயதில் இருந்தே ஊறிப்போயிருக்கின்ற புறஜாதிக் கண்ணோட்டத்தை அவர்களால் அடியோடு மாற்றிக்கொள்ள முடிவதில்லை. பெண்களை எந்த விதத்தில் அணுக வேண்டும், எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் என்பதிலெல்லாம் பலரிடம் கிறிஸ்தவ கண்ணோட்டம் இருப்பதில்லை. ஆணாதிக்கப் புறஜாதி இந்துப் பண்பாடு பெண்களை அலட்சியப்படுத்தி திருமணம் செய்துகொள்ளவும், பிள்ளை பெறவும், அடுப்படியில் சமைத்துப்போடவும் அவசியமான கருவியாக மட்டுமே கருதுகிறது. கிறிஸ்தவ வாலிபன் ஒழுக்கமுள்ள, விசுவாசமுள்ள வாலிபப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்டிருக்கும் அதேநேரம், அத்தகைய பெண்ணுக்கு அன்பின் அடிப்படையிலான வாழ்க்கையைக் கொடுக்கும் அளவுக்குத் தேவையான தகுதிகளைத் தன்னில் தேவபயத்தோடு வளர்த்துக்கொண்டிருக்கிறேனா என்று ஒருபோதும் எண்ணிப்பார்ப்பதில்லை. அதற்குப் புறஜாதிப்பண்பாட்டில் சிறுவயதில் இருந்தே ஊறிப்போன வழக்கமே காரணம். இந்துப் புறஜாதிப்பண்பாடு அந்த வாலிபனை ஆணாதிக்கமுள்ளவனாகவே வளர்த்துவிட்டிருக்கிறது. இதைப் பொதுவாகவே கிறிஸ்தவ வாலிபர்களிடம் நாம் காண்கிறோம். இந்தப் புறஜாதிப்பாண்பாட்டைத் தூக்கியெறிந்துவிட்டு கிறிஸ்தவ வேத அடிப்படையில் சிந்தித்து செயல்படும் வாழ்க்கை முறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று உண்மையோடும் தைரியத்தோடும் போதித்து அவர்களை வளர்க்கின்ற போதகர்கள் நம்மினத்தில் அரிதாகவே இருக்கிறார்கள்.

விசுவாசம் மற்றும் தேவ பயத்தின் அடிப்படையிலான வளர்ப்பு முறை வீட்டில் கிடைக்காததால் அநேக வாலிபர்கள் வாழ்க்கை அனுபவமும் முதிர்ச்சியும் இல்லாதவர்களாக வளர்ந்துவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கும் காரியங்களைவிட தெரியாதவையே அநேகம். தகப்பனோடும் தாயோடும் வெளிப்படையான அன்பின் அடிப்படையிலான உறவில்லாமல் வெறும் மரியாதை மட்டுமே இருந்து வளர்ந்திருப்பதால் எந்த விஷயத்திலும் எப்படி ஒரு கிறிஸ்தவனாக கர்த்தருடைய வார்த்தைக்குப் பங்கமேற்படாமல் தைரியத்தோடு தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சரீரம் வளர்ந்திருக்கும் அளவுக்கு மனப்பக்குவமும், ஆத்மீக வளர்ச்சியும் பலரிடம் இல்லாமலிருக்கிறது. காமன்சென்ஸ் என்று நாம் சொல்லுகிற பொதுவான அறிவு கூட அநேகரிடம் இல்லாமலிருக்கின்றது.

இத்தகைய வாலிபர்களும், பெண்களும் திருமண வயது வந்து பெற்றோர்கள் வழிப்படியோ தாங்களோ ஒரு துணையைத் தேடிக் குடும்பத்தை அமைத்துக்கொள்ளுகிறபோதும் வேதத்தைப் பின்பற்றி எப்படிக்குடும்பத்தை நடத்துவது என்பது தெரியாமல் பலவிதமான பிரச்சனைக்குள்ளாகிறார்கள். கணவன் மனைவிக்குள் உறவு கர்த்தரின் அன்பின் அடிப்படையில் இல்லாமல் இருந்துவிடுகிறது. இந்த நிலைமையில் குழந்தைகளும் பிறந்துவிட வெளியில் சொல்லவழியில்லாமலும், இருதயத்தில் சமாதானமும் இல்லாமல் வெளிப்பார்வைக்கு மட்டும் விசுவாசமுள்ளவர்களாக இருந்து வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இந்த நிலைமையில் அவர்களால் பிள்ளைகளை சரியாக வளர்க்கவும் முடியாமல் போய்விடுகிறது. இத்தோடு பொருளாதார பிரச்சனையும் சேர்ந்து கொண்டால் பலருடைய வாழ்க்கையில் அமைதிக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. கிறிஸ்துவை விசுவாசித்திருந்தும் ஏன் இப்படி நடந்துகொள்ளுகிறோம் என்ற குழப்பமும் பலருக்கு ஏற்பட்டு பலவீனத்தோடு தொடர்ந்து நிம்மதியின்றி வாழ்கிறார்கள் அல்லது விசுவாசத்தைவிட்டு விலகியோடுகிறார்கள். பெரும்பாலும் தமிழ் சமுதாய திருச்சபைகளில் இப்படி வாழ்ந்து வருகிறவர்களே அநேகம்.

இதையெல்லாம் எங்கிருந்து தெரிந்துகொண்டீர்கள் அல்லது கற்பனை செய்து எழுதுகிறீர்களா என்று நீங்கள் கேட்கலாம். கால் நூற்றாண்டு காலமாக அநேக வாலிபர்களை அறிந்திருந்து பக்கத்தில் இருந்து பார்த்து அனுபவபூர்வமாக அறிந்துணர்ந்திருப்பதாலேயே இதையெல்லாம் என்னால் சிந்திக்க முடிகிறது. உள்ளுக்குள் இருக்கும் நோயை அது இல்லை என்று மறைத்து வைக்கமுடியுமா? ஆத்மீக வளர்ச்சியும், முதிர்ச்சியும் இல்லாமல் சபை சபையாக குடும்பங்கள் இருந்து வருவது திருச்சபைக்கு நல்ல தலைமை இல்லாமலிருப்பதற்கு முக்கிய காரணம்.

திருச்சபை தலைமைக்கான இலக்கணங்களைப் பவுல் 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும் தந்திருக்கிறார். போதகர்கள், உதவிக்காரர்களுக்கான அந்த இலக்கணங்களில் முக்கியமானதொன்று சபையால் தலைமைக்காகத் தெரிந்தெடுக்கப்படுகிறவர்கள் குடும்பத்தை நல்ல நிலையில் வைத்திருந்து தங்களுடைய தலைமை ஸ்தானத்தை குடும்பத்தில் நிதர்சனமாக வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கவேண்டும் என்பது. இது ஒரு வரியில் சொல்லப்பட்டிருந்தாலும் அதில் அடங்கியிருக்கும் அர்த்தங்கள் அதிகமானவை. வீட்டில் மனைவி தன் ஆலோசனைகளை எந்தவித முறுமுறுப்பும், மறுப்பும் காட்டாமல் ஒத்துழைத்து நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது கணவனின் கடமை. இதைக் கணவன் அன்போடு கூடிய தலைமை மூலம் நிதர்சனமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு மனைவியோடு கிறிஸ்துவின் அன்பின் அடிப்படையிலான நல்லுறவு இருக்கவேண்டும். பிள்ளைகள் தன் வார்த்தையையும், தாயின் வார்த்தையையும் கேட்டு எதிர்ப்புக்காட்டாமல் அவற்றின்படி நடந்துகொள்கிறவர்களாக இருக்கவேண்டும். பிள்ளை வளர்ப்பில் அதிக சிரத்தை காட்டி குடும்பத்தை அமைதியும், அன்பும் இருக்கும் இடமாக வைத்திருக்க வேண்டியது கணவனின் பெரும் பொறுப்பு. மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஆத்மீக ஆலோசகனாக, வழிகாட்டியாக, பொறுப்புள்ள தலைவனாக கணவன் இருக்க வேண்டும். தலைமைக்கான அத்தனை தகுதிகளையும், ஞானத்தையும் வீட்டை நடத்துவதில் காட்டுகிறவனாக கணவன் இருக்கவேண்டும்.

நன்னடத்தையும், சமூக இங்கிதமும்

மேலே குறிப்பிட்ட இத்தகைய தகுதிகளை எத்தனை கிறிஸ்தவ குடும்பத்தலைவர்களிடம் காண முடிகிறது? உங்களுக்கே நிச்சயம் தெரியும், இந்த விஷயத்தில் நம் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறதென்று. நிலைமை இப்படி இருக்கும்போது நல்ல தலைமை சபையில் உருவாகுவதென்பது நடக்காத காரியம். அதனால்தான் இருப்பதை வைத்து சமாளிப்போம் என்ற எண்ணத்தோடு வேத இலக்கணங்களையெல்லாம் பொறுப்படுத்தாமல் சபை சபையாக ஆவிக்குரிய வளர்ச்சியும், முதிர்ச்சியும், ஞானமும் இல்லாதவர்கள் சபைத்தலைவர்களாக இருந்து வருகிறார்கள். இதையெல்லாம்விட பெரிய கொடுமை இவர்களிடம் சராசரி நற்குணங்களும், ஆவிக்குரிய கனிகளும் பெருமளவுக்கு இல்லாமலிருப்பதுதான். உண்மைபேசி, கொடுத்த வார்த்தையின்படி நடப்பதென்பது பொதுவாகவே அநேகரிடம் இல்லை. ஒரு காரியத்தை செய்ய முடியாமல் போனதற்கு ஆயிரம் சாக்குப்போக்குகளைக் கொடுக்க முன்வருமளவுக்கு சொன்ன வார்த்தையின்படி நடக்காமல் போய்விட்டேனே என்று ஆதங்கத்தையும், மனவருத்தத்தையும் சிறிதளவாவது ஒருவரிடமும் பார்க்க முடியாமலிருக்கிறது. பொறுப்பற்ற விதத்தில் வீட்டில் வளர்ந்திருப்பதால் ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை’ என்ற வார்த்தையின்படி அநேகருடைய வாழ்க்கையில் நன்னடத்தைக்கு இடமில்லாமலிருக்கிறது. இதெல்லாம் நன்னடத்தையோடு சம்பந்தப்பட்டது என்பதுகூட பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை.

ஒரு முறை ஒரு இந்திய வாலிபப் பெண் பல் விளக்காமல் சபைக்கு வந்தது மட்டுமல்ல, அதை என்னிடமே சொல்லவும் செய்தாள். இது எதைக்காட்டுகிறது? வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை வளர்த்துக் கொள்ளாததற்கு அடையாளமாகவே இருக்கிறது. நேரத்துக்கு சபை ஆராதனைக்கு நம்மவர்கள் வருவதில்லை. அது எதைச்சுட்டுகிறது? நேரத்துக்கு மதிப்புக்கொடுத்து பொறுப்போடு வாழக்கற்றுக்கொள்ளாததன் அடையாளத்தையே காட்டுகிறது. எடுத்துக்கொண்ட பொறுப்பை சரிவர செய்யாமல் சாக்குப்போக்கு சொல்லுவதும், வாய் சுத்தமில்லாமல் அப்படி இருப்பதையும் பெரிதுபடுத்தாமல் இருப்பது எதைக்காட்டுகிறது? வாழ்க்கையில் அடிப்படை அம்சங்களில் ஒழுக்கத்தோடு வளராததன் அடையாளத்தையே காட்டுகிறது. உண்ணும் உணவில் கட்டுப்பாடில்லாமல் வயிற்றை வளர்த்து அதனால் ஏற்படும் வியாதியால் ஊழியப்பணியை சரிவர செய்யமுடியாமல் இருப்பது எதைக்காட்டுகிறது? இச்சையைக் கட்டுப்படுத்தி வாழக்கற்றுக்கொள்ளாமல் வளர்ந்திருக்கும் அவலத்தைத்தான் காட்டுகிறது. ஒரு முறை ஒரு ஊழியக்காரனுக்கு அவனுடைய வாய்க்குக் கீழ் வளர்ந்து கட்டுப்பாடில்லாமல் தொங்கிக்கொண்டிருக்கும் மீசையை அளவோடு வைத்துக்கொள்ளும்படி நான் புத்திகூறினேன். நிமிடத்துக்கு ஒருதரம் அதைத் தடவி சரிசெய்துகொண்டிருப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தது சமூக இங்கிதமில்லாத செயலாக இருந்தது. அதாவது மற்றவர்கள் என்னைப் பார்க்கிறார்களே, அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற நினைவே இல்லாமல் இருப்பதைத்தான் சொல்லுகிறேன். நாம் தனி மனிதர்களாக அல்ல, சமுதாயத்தின் அங்கமாகவே வாழ்ந்து வருகிறோம்.

இதெல்லாம் எப்படி ஒழுக்கத்தோடு தொடர்புடையதாக இருக்க முடியும் என்று சிலர் கேட்கலாம்; இதெல்லாம் பக்திவிருத்தியோடு தொடர்பில்லாதவை என்று சிலர் எண்ணலாம். இவர்கள் வேதத்தை முறையாகப் படிக்காமலும், மெய்க்கிறிஸ்தவத்தின் தன்மையை உணராமலும் வளர்ந்திருப்பதாலேயே இப்படி நினைக்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். உண்மையில் வேதம் இதையெல்லாம் பக்திவிருத்தியோடு தொடர்புள்ளதாக விளக்குகிறது. நன்னடத்தைக்கும், சமூக இங்கிதத்தைக் கொண்டிருப்பதற்கும் பக்திவிருத்திக்கும் பெருந்தொடர்பு இருக்கிறது.

இதற்கு சில உதாரணங்களைத் தரவிரும்புகிறேன்.

  1. மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

இந்த வசனம் காணப்படும் பகுதியின் ஆரம்பத்தில் பவுல், தனக்கிருக்கும் கிறிஸ்தவ சுதந்திரத்தைப் பற்றி விளக்கியபிறகு (4, 5, 6), கிறிஸ்தவ பணிபுரியும் தான் அந்தப் பணிக்கான ஊதியத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை என்பதை உணர்த்துகிறார் (9, 10, 14). அதற்குப் பிறகு இதெல்லாம் வேதப்படி நியாயமானவையாக இருந்தபோதும் சுவிசேஷத்திற்காக நான் எதையும் இழந்து, நியாயமான சொந்த சுகத்தையும் இழந்து, கிறிஸ்தவ சுதந்திரத்தையும் பெரிதுபடுத்தாமல் வாழத்தயாராக இருப்பதாகக் கூறுகிறார் (15, 16). இறுதியில் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காகவும், மகிமைக்காகவும், கிறிஸ்தவனாக தான் எப்போதும் தன்னுடைய சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தி வாழ்வதைக் கடமையாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஓடுகிறவன் எப்படி அந்த ஓட்டத்தில் வெற்றிபெற தன் சரீரத்தை அடக்கி ஓட்டத்திற்கு ஏற்றவிதத்தில் தயார் செய்து பந்தயத்தில் கவனம் செலுத்துவானோ அதுபோல் தானும் செய்வதாகக் கூறுகிறார். சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துவது என்பது, தன்னுடைய இச்சைகளை அடக்கி ஒடுக்கி சரீரம் அசிங்கங்களை செய்துவிடாமல் ஆவிக்குரிய கிரியைகளை மட்டுமே செய்யும்படியாக வைத்திருப்பது என்று அர்த்தம். இதில் வாழ்க்கையில் ஒழுக்கத்தோடு வாழ்வதற்காக மனத்தையும், சரீரத்தின் எல்லா அவயவங்களையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நன்னடத்தையுள்ளதாக வைத்திருப்பதும் அடங்கியிருக்கிறது. இதில் நேரத்துக்கு உறங்குவதும், எழுந்திருப்பதில், பொறுப்போடு எல்லாக் காரியங்களையும் வரைமுறையோடு ஒவ்வொரு நாளும் செய்வதும், உண்ணும் உணவில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதும், சோம்பேறித்தனமில்லாமலிருப்பதும், நாவையும் இருதயத்தையும் கட்டுக்குள் வைத்திருந்து வார்த்தை தவறாமல் இருப்பதும், கடுமையாக கவனத்தோடு உழைப்பதும் அடங்கியிருப்பதென்பது சொல்லித்தெரிய வேண்டுமா?

இந்தச் சரீரக்கட்டுப்பாடுகளையும், ஒழுங்கையும் ஆவிக்குரியவர்களாக இல்லாதவர்களும் தங்களுடைய (சுயநல) இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகப் பின்பற்றுகிறார்கள். ஆவிக்குரியவனாக இல்லாமலிருந்த போதும் இதிலெல்லாம் ஒழுங்கில்லாமலா அம்பானி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார். பொதுவான கிருபையின் காரணமாக ஆவிக்குரியவர்களாக இல்லாதவர்களும் இந்த விஷயங்களில் ஒழுங்கைப் பின்பற்றி கவனத்தோடு வாழ்ந்து வருவதை சமுதாயத்தில் நாம் காண்கிறோம். பிரச்சனை என்னவென்றால் ஆவிக்குரியவர்களாக இருந்து கிறிஸ்துவுக்காக வாழவேண்டியவர்கள், ஆவிக்குரியவர்களாக இல்லாமலிருக்கிறவர்களுக்கு இருக்கின்ற புத்திகூட இல்லாமல் இந்த விஷயங்களிலெல்லாம் அவிசுவாசியைவிட மோசமாக ஒழுங்கில்லாமல் வாழ்ந்து வருகிற கொடுமையைத்தான் நம் இனத்தில் காண்கிறோம். ஆவிக்குரிய கிறிஸ்தவன் இதிலெல்லாம் ஒழுங்கில்லாமல் இருக்கும்போது அவன் ஒழுங்கற்ற வாழ்க்கை வாழ்ந்து கிறிஸ்துவை அவமானப்படுத்துகிறான் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? முக்கியமாக ஊழியப்பணியில் இருக்கிறவர்களுக்கு இதிலெல்லாம் ஒழுங்கும் கட்டுப்பாடும் வாழ்க்கையில் இல்லாதிருக்குமானால் அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றி வாழ்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

வேத இறையியலறிவின்மை

நம்மினத்தில் பரவலாகக் காணப்படும் சுவிசேஷக் கிறிஸ்தவ உலகில் கிறிஸ்தவ சபைத்தலைவர்களாக இருந்தாலும் அல்லது கிறிஸ்தவ ஊழியப்பணி செய்து வருகிறவர்களிடம் அடிப்படை வேத இறையியலறிவு இல்லாமலிருந்து வருவது இன்னுமொரு காரணம். இதற்கு எத்தனையோ காரியங்கள் இருந்தபோதும் பெந்தகொஸ்தே கெரிஸ்மெட்டிக் இயக்கம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய மிகத் தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கும் இந்த இயக்கம் தமிழினத்துக் கிறிஸ்தவத்தைத் தலைகீழாக மாற்றி மனித மூளைக்கும் சிந்தனைக்கும் எந்த இடத்தையும் கொடுக்காத வேதத்தோடு சம்மபந்தமில்லாத ஒரு மதத்தைக் கிறிஸ்தவம் என்ற பெயரில் உருவாக்கிவிட்டிருக்கிறது. பெந்தகொஸ்தே கெரிஸ்மெட்டிக் இயக்கத்திலும் அங்குமிங்குமாக வேதத்திற்கு மதிப்புக்கொடுத்து அதை வாசித்து தேவ பயத்தோடு வாழ்கிறவர்கள் இருந்தபோதும் அவர்கள் மிகச் சிறு தொகையே. அந்த இயக்கத்தில் பெருமளவில் இருப்பவர்கள் ஜொயல் ஒஷ்டின், பெனி ஹின், ஜொய்ஸ் மாயர் போன்றவர்களையும் அவர்களின் உதிரிகளாக இயங்கிவரும் கீழைத்தேய பொலிவூட் பாணி ஊழியம் செய்துவரும் பால் தினகரன், மோகன் சி லாசரஸ் போன்ற புரட்டர்களையும் பின்பற்றுகிறவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் வேதத்தைப் பயன்படுத்தும் முறை வேதம் போதிக்காத ஒரு முறை. வேதம் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டு தங்களுடைய போலியான சொந்த அனுபவங்களுக்கு அத்தாட்சி வேதம் என்று வேதம் தெரியாதவர்கள் மத்தியில் ஆணித்தரமாக அறைகூவலிட்டு அவர்களை மோசம் செய்து வருகிறார்கள். இவர்களோடு வேதத்தின் எத்தனையோ போதனைகளில் நமக்குப் பிரச்சனைகள் இருந்தாலும், ஆரம்பப் போதனையான பாவத்தில் இருந்து விடுபட்டு மன்னிப்புப் பெற்று இரட்சிப்பை அடைவது எப்படி என்ற விஷயத்தில் இவர்களோடு நாம் அடியோடு முரண்படுகிறோம். மனிதனுடைய செயலாக வேதம் குறிப்பிடும் விசுவாசமே ஒருவனுக்கு இரட்சிப்பை அளிக்கிறது என்று இவர்கள் நம்பிவருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே இவர்கள் எல்லாக் கூட்டங்களிலும் கர்த்தருக்காகத் தீர்மானம் எடுக்கும்படி கூட்டத்திற்கு வருகிறவர்களை தங்களுடைய வார்த்தை ஜாலத்தால் வசப்படுத்தி தீர்மானம் எடுக்கவைத்து, அப்படித் தீர்மானம் எடுத்தவர்களை விசுவாசிகளாக பகிரங்கமாக அறிக்கை செய்கிறார்கள். இரட்சிப்பை அடையாத பெரும்பாலானோர் மோசம் போய் கிறிஸ்தவர்களாக வந்துவிட்டோம் என்ற தவறான நம்பிக்கைக்கு இவர்களால் தள்ளப்படுகிறார்கள்.

ஆவியானவர் சுவிசேஷ செய்தியைப் பயன்படுத்தி ஒருவனில் உண்டாக்கும் மறுபிறப்பே கிறிஸ்துவை அவன் விசுவாசிக்கும்படிச் செய்கிறது என்ற வேதபோதனையை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இந்த அடிப்படை வேதபோதனையில் தவறிழைக்கும், இவர்களுடைய வேதத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு இன்றைக்கு ‘செழிப்பு உபதேசம்’ வரை இவர்களைக் கொண்டுபோய் விட்டிருக்கிறது. வல்லமையான வேதத்தின் மூலம் மட்டுமே கர்த்தர் நம்மோடு பேசுகிறார் என்பதை நம்பாத இவர்கள் வேத இறையியலுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல் தங்களுடைய போலித்தனமான சொந்தப் போதனைகளையே கர்த்தரின் சித்தம் என்பதுபோல் மக்கள் முன்வைத்து ஏமாற்றி வருகிறார்கள். இத்தகையோரைப் பின்பற்றித் தங்களை வளர்த்துக் கொள்வதற்காகவே அநேகர் ஊழியப்பணிக்கு வருவதால் கிறிஸ்தவ தலைமை இன்று வேத இலக்கணங்களைக் கொண்டிராததொன்றாக இருந்து நம்மினத்து மக்களைப் பொய்யை நம்பும்படிச் செய்து வருகிறது. ஆத்துமாக்களுக்கு ஒளிவீசி ஆத்மீக இருட்டை அகற்ற வேண்டிய வேத வெளிச்சத்துக்கு இத்தகையோர் இடங்கொடுக்காது இருந்துவருவதால் நம்மினத்தார் தொடர்ந்தும் இருட்டில் இருந்து வருகிறார்கள்.

பெந்தகொஸ்தே கெரிஸ்மெட்டிக் இயக்கத்துக்கு வெளியில் வந்து பார்த்தால் சுவிசேஷ இயக்கத்தில் இன்று கிறிஸ்தவ தலைமை பெரிதும் ஆழ்ந்த இறையியல் நம்பிக்கை இல்லாமல் இருந்துவருகிறது. வேதபூர்வமான இறையியலை அறிந்துவைத்திருப்பதால் மட்டும் ஒருவர் அதை நம்பிவாழ்கிறார் என்று அர்த்தமல்ல. இஞ்சினியரிங் கற்றுக்கொண்டிருக்கிற ஒருவர் அதில் நல்லறிவு பெற்று அதைப்பயன்படுத்தி நன்றாக உழைத்துப் பெயர் பெற்று நல்ல நிலையில் இருக்கிறார் என்பதற்காக அதை ஆணித்தரமாக நம்பிவாழ்கிறார் என்று அர்த்தமல்ல. தொழிலுக்காகவும், பணத்திற்காகவும் அவர் அதைப் பயன்படுத்துகிறவராக மட்டுமே இருந்து வரலாம். அதேபோல் கிறிஸ்தவ இறையியலை ஓரளவுக்கு கற்றுக்கொண்டு பணிசெய்து வருகிறவர்கள் அதில் ஆழந்த நம்பிக்கையும், வைராக்கியமும் இல்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். இதன் காரணமாகவே பலர் தாங்கள் போதிப்பதன்படி வாழாமலும், அதை நடைமுறையில் தங்கள் வாழ்க்கையிலும் சபை அமைப்பிலும் பயன்படுத்தாமலும் இருந்து வருவதற்குக் காரணம். வேத இறையியல் அவர்களுக்கு தங்கள் தொழிலுக்கு பயன்படும் ஒரு சாதனமே தவிர இருதயத்தின் ஆழ்ந்த நம்பிக்கை அல்ல. அநேகர் தங்களுடைய வசதிக்கேற்ப இறையியல் நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டு ‘இறையியல் பச்சோந்திகளாக’ இருந்து வருகிறார்கள். இதெல்லாம் நேர்மையான நல்ல கிறிஸ்தவ தலைமை நம்மினத்து சபைகளில் அருகிக் காணப்படுவதற்கு காரணமாக இருந்துவருகின்றன.

ஆவிக்குரிய வளர்ச்சியும் ஆவியின் நடமாட்டமும்

எங்கு வேதத்திற்கு பெருமதிப்பிருந்து, அது உள்ளது உள்ளபடியாக விளக்கிப்போதிக்கப்பட்டு, அதன் வழிப்படி மட்டுமே வாழவேண்டும் என்ற வாஞ்சையும் வைராக்கியமும் ஆத்துமாக்களுக்கு இருக்கிறதோ அங்கே ஆவியானவரின் நடமாட்டத்தைப் பார்க்கலாம்; மனமாற்றமடைந்து கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களைப் பார்க்கலாம்; ஆவியின் கனிகளைப் பார்க்கலாம். ஆவிக்குரிய வளர்ச்சியும் ஆவியானவரின் நடமாட்டமும் இருப்பதற்கு கர்த்தருக்கும் அவருடைய வேதத்திற்கும் மட்டும் மதிப்பளித்து கீழ்ப்படிவோடும் அன்போடும் வாழ்வது அவசியமாக இருக்கிறது. இவை இல்லாமலிருக்கும்போது ஆவியின் நடமாட்டத்தை அதிகமாகக் காணமுடியாது. இவற்றைக் கொண்டிராமல் இருந்து வெறும் உலக ஞானத்தைப் பயன்படுத்தி ஆட்களைச் சேர்க்கும் செயல்களில் ஈடுபடுவதால் ஆவியின் கிரியையைப் பார்க்க முடியாது. இன்று உலக ஞானமே திருச்சபைகளை அதிகம் ஆண்டுவருகின்ற ஆண்டவராக இருந்துவருகிறது.

ஆவியானவரின் நடமாட்டம் இல்லாத இடங்களில் இருந்து ஆவிக்குரிய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் தலைமை உருவாகுவதென்பது நடவாத செயல். அதிக மனத்தாழ்மையோடும், இருதய பரிசோதனையோடும், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஜெபத்தோடு அவரில் தங்கியிருந்தால் மட்டுமே கர்த்தரின் பார்வை நம்மீது படும். வெறும் கூட்டத்தை வைத்து ஆவிக்குரிய நடமாட்டத்தை அளவிட்டுவிட முடியாது. உலக ஞானத்தைப் பயன்படுத்திப் பெருங்கூட்டத்தைச் சேர்த்துவிடலாம்; ஆவியிருப்பதுபோன்ற போலித்தோற்றத்தை உருவாக்கிவிடலாம். ஆனால் ஆவியானவர் அங்கிருக்கமாட்டார். ஆவியானவர் நம்மத்தியில் இருப்பதற்கான அடையாளத்தை எதன் மூலம் அறிந்துகொள்ளலாம் தெரியுமா? உலகத்தை வெறுத்து வாழும் பரிசுத்த வாழ்க்கையும், ஆவிக்குரிய கனிகளின் பயன்படுத்தலும், வேதத்தில் வைராக்கியமும், கீழ்ப்படிவும், கர்த்தரில் காணப்படும் அதிக நேசமுமே ஆவியானவரின் நடமாட்டத்தை நம்மத்தியில் உணரும்படியாகச் செய்யக்கூடியவை. ஏனெனில் இவையெல்லாவற்றையும் இருக்கும்படிச் செய்கிறவரே ஆவியானவர்தானே. ஆவிக்குரிய குணாதிசயங்கள் இல்லாத இடங்கள் நல்ல கிறிஸ்தவ தலைமை உருவாவதற்கு எப்படி உதவமுடியும்?

தமிழ் கிறிஸ்த சமுதாயத்தில் மெய்யான பொறுப்புள்ள தலைமைப் பஞ்சம் இருப்பதற்கு இதுவரை நான் விளக்கியிருக்கும் சில முக்கிய அம்சங்கள் பெரிய தடைக்கற்களாக இருந்து வருகின்றன. இவை அடிப்படை அம்சங்கள்; இவை மாறாமல் நல்ல தலைமை உருவாக வழியில்லை. இவையே ஒருவனை தேவமனிதனாகக் காட்டுகிற விஷயங்கள். போலித்தனமாக ஒரு மனிதன் யார் காதிலும் விழும்படி நல்ல ஜெபத்தை செய்துவிட முடியும்; வேத வார்த்தைக்கு விளக்கங் கொடுத்துவிட முடியும். ஆனால், நன்னடத்தையையும், ஆத்மீக முதிர்ச்சி, ஞானம் மற்றும் அன்பின் அடிப்படையில் வீட்டை நடத்தும் பக்குவத்தையும், அவை இருந்தால் மட்டுமே ஒருவனின் வாழ்க்கையில் பார்க்க முடியும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s