அதிகாரமும் அடங்காப்பிடாரிகளும்

சமீபகாலங்களில் உலக நாடுகளிலும், சமுதாயங்களிலும், திருச்சபைகளிலும் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளும், சிந்தனைப்போக்கும் அதிகாரத்தைப் பற்றி என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. அரசுகளுக்கும், அதிகாரங்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது மட்டுமல்லாமல், பொதுஉடமைகளுக்கு தீவைப்பதும், வாகனங்களைத் தாக்கி உடைப்பதும், எதிராளிகளைத் தாக்கிக் காயமேற்படுத்துவதும் சமுதாயத்தில் இன்று சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் நிகழ்வுகளாக இருக்கின்றன. அல்ஜிசீரா போன்ற சில மீடியாக்கள் இத்தகைய தாக்குதல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் துன்பத்தை அனுபவித்து வருவது உண்மைதான். அதை நிர்வகிக்கும் ஹமாஸ் ஒரு சமாதானப் புறா அல்ல; ஆரம்பத்திலிருந்தே இஸ்ரவேலுக்கு எதிராக வன்முறை நடத்திவரும் வன்முறைக்கூட்டம் அது. பாலஸ்தீனியர்களைத் தூண்டிவிட்டு வன்முறையை சர்வசாதாரணமாக அது நடத்திவருவதை அல்ஜிசீரா தொடர்ந்து மிகுந்த அனுதாபத்தோடு செய்தி வெளியிட்டு வருகிறது. இதேபோல்தான் சீரியாவிலும் ஐசிஸ் அமைப்பு உருவாகி வன்முறையை வளர்த்தது. இவர்களெல்லோரும் அரசுகள் தவறான போக்கில் போவதாகவும் அதனால் அவற்றைத் தூக்கியெறிய இதுவே வழி என்றும் சொல்லுகின்றனர். இதே நியாயத்தைத்தான் ஸ்ரீ லங்காவில் புலிகளை ஆதரித்தவர்களும் சொன்னார்கள். அதிகாரங்கள் தவறான போக்கில் போனால் வன்முறை செய்து அவற்றை நீக்க வேண்டும் என்ற தத்துவமே உலகமெங்கும் காணப்படும் அரசியல் வன்முறை அமைப்புகளின் சித்தாந்தமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசைப் பிடிக்காவிட்டால் குடிமக்கள் அரசுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்ப்புக்காட்டும் Civil disobedience சமுதாயத்தில் சாதாரணமாகிவிட்டது.

அரசியலில் மட்டுமல்லாமல் சமுதாயத்தின் எல்லாத் தட்டுகளிலும் அதிகாரத் தளங்களுக்கு (Authority structure) எதிரானதொரு புதிய ஒழுக்கமுறை இன்றைய சமுதாயத்தில் இருந்துவருகிறது. இதற்கு முன்பெல்லாம் எது சரி, எது தவறு என்பதில் சமுதாயத்தில் தெளிவான கருத்து இருந்தது. இப்போது அது அடியோடுமாறி ஒருவருக்கு எது சரியாகப்படுகிறதோ அது மற்றவர்களுக்குத் தவறாகத் தெரிந்தாலும் அதை எல்லோரும் சரியானதாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுத்து (Postmodernism) சமுதாயக் கோட்பாடாகியிருக்கிறது. இதனால்தான் ஆண், பெண் என்ற இனவேறுபாட்டை இன்று சமுதாயம் விலக்கிவைத்து ஒரு ‘புதிய ஒழுக்கப் போக்கை’ (New morality) உருவாக்கியிருக்கிறது. அத்தோடு சமுதாயத்தில் எல்லோரும் ஒருவருக்கொருவர் சமம் (Egalitarianism) என்ற தத்துவமும் மேலோங்கி பரவிவருகிறது. அதாவது ஆணும், பெண்ணும் சமம், உயர்வு தாழ்வு என்ற நிலை சமுதாயத்தில் எதிலும் இருக்கக்கூடாது என்ற போக்கும் அதிகாரத்தை எதிர்த்து நிற்கிறது. தனக்குப் பிடிக்கவில்லை, தன்னுடைய வசதி பாதிக்கப்படுகிறதென்றால் சுய உரிமையை முன்வைத்து மேலிடத்திலிருப்பவர்களுக்கெதிராகப் போர்க்கொடி எழுப்புவது வழமையாகிவிட்டது. சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் தன்னினச் சேர்க்கை செயல்கள் தண்டனைக்குரியவை என்றிருந்த சட்டத்தை இனிச் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்து அத்தகைய செயல்களை நியாயப்படுத்தியிருக்கிறது. ஆண், பெண் இனவேறுபாட்டை வெறித்தனமாக எதிர்க்கும் இன்றைய சமுதாயம், மூன்றாம் பாலின் உரிமைகளுக்கு மூர்க்கத்தனமாகப் போராடுகிறது. இதெல்லாம் கர்த்தரின் அதிகாரத்துக்கும் சமுதாய பாதுகாப்புக்காக அவர் ஏற்படுத்தியிருக்கும் சமுக அதிகாரங்களுக்கும் எதிரான போராட்டம்.

சமீபத்தில் அமெரிக்க சுப்ரீம் கோர்டிற்கு புதிய நீதிபதியொருவரை சிபாரிசு செய்து அதிபர் டொனல்ட் டிரம்ப், பிரெட் கவனாவை சிபாரிசு செய்தபோது, அவர் பழமைவாதக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர் என்பதற்காக அவர் நியமனமாவதை தடுத்து நிறுத்துவதற்கு எதைச் செய்தாலும் பரவாயில்லை என்று அரசுக்கெதிரான Civil disobedienceஐ எதிர்க்கட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிடவேண்டும் என்று கூக்கிரலிட்டார்கள். இதுவே இன்றைய அதிகார மறுப்பு வர்க்கத்தின் புதிய ஒழுக்கமுறை. எதெல்லாம் அதிகாரமாக சமுதாயத்தில் இதுவரை இருந்து வந்திருக்கிறதோ அதையெல்லாம் இடித்தெரிந்து அதிகாரத்தையே இல்லாமலாக்கும் ஆக்ரோஷமான போரை சமுதாயத்தின் ஒரு பகுதி நடத்திவருகிறது. இது தாராளவாதப் போக்கின் (Liberalism) அதிகாரத்திற்கு எதிரான உச்சகட்டப் போர். தனிமனிதனின் இச்சையை முதன்மைப்படுத்தி அவனுடைய சுயநலப்போக்கிற்கு உரிமைகோரி பொதுவான அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சமுதாயத்தின் ஒரு பகுதியே கைதிகளுக்கான உரிமை, ஓரினச்சேர்க்கையாளருக்கான உரிமை, இனமாற்றக்காரருக்கான உரிமை, பாலியல் தொழிலாளருக்கான உரிமை, போதைப் பொருள் பயன்படுத்துபவர்களுக்கான உரிமை, சட்டரீதியற்ற முறையில் நாட்டில் நுழைந்திருப்பவர்களுக்கான உரிமை என்று அத்தகையோருக்கான உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதெல்லாம் அதிகாரத்திற்கெதிராக அதை அழித்துவிடக் கங்கனம்கட்டி நடந்துவரும் போராட்டம். இதையெல்லாம் கிறிஸ்தவத்தை எதிர்க்கும் புரோகிறசிவ் சோஷலிசத்தை நோக்கி நடைபோடும் சமுதாயத்தில் காணலாம். ஆனால், இத்தகைய கடவுளுக்கெதிரான சமுதாயங்களின் மூர்க்கத்தனமான போராட்டத்தின் மத்தியில் கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறை என்ன என்பதையே இந்த ஆக்கம் ஆராய்கிறது.

அதிகாரம் என்பது எது?

அதிகாரத்தைப் பற்றிய முறையான புரிந்துகொள்ளுதல் நமக்கிருக்கவேண்டும். அதிகாரமில்லாத ஒரு சமுதாயத்தை வேதம் நமக்கு அடையாளம் காட்டவில்லை. மனித சமுதாயத்தை மனிதன் உருவாக்கவில்லை. அதேபோல் அதிகாரத்தையும் மனிதன் உண்டாக்கவில்லை. மனித சமுதாயத்தை உருவாக்கிய தேவன் ஆதியிலேயே படைக்கப்பட்ட மனித குலம் தன்னை அனைத்துக்கும் மேலான அதிகாரியாக ஏற்றுத் தன் அதிகாரத்தின் கீழ் இருக்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருந்தார் (ஆதியாகமம் 1-3). அவரே பத்துக்கட்டளைகளைத் தந்து முழு மனித குலமும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தக் கட்டளைகள் முழு மனிதகுலத்துக்குமான அவருடைய அதிகாரக் கட்டளைகளாக, வாழ்க்கை நியதியாக இருக்கின்றன. மெய்க்கிறிஸ்தவர்கள் மட்டுமே அவற்றை வாழ்க்கையில் பின்பற்றும் ஆவிக்குரிய தன்மையைக் கொண்டிருந்தாலும், அவையே மனிதகுலத்தில் பொதுவான நீதிக்கட்டளைகளாக இருந்துவருகின்றன. எது சரி, எது தவறு என்பதை இந்தக் கட்டளைகள் நமக்கெல்லாம் மேலதிகாரியான சர்வவல்லவரான கர்த்தரின் பார்வையிலிருந்து நமக்கு விளக்குகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே இதுவரை நாட்டுச் சட்டங்களும் இயற்றப்பட்டு எங்குமிருந்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் கடவுளே ஆண், பெண் என்ற வேறுபாட்டை உண்டாக்கி ஆணைத் தலைமை ஸ்தானத்தில் நிறுத்தி, பெண் ஆணோடு இணைந்து பணியாற்றும் நிலையை வரலாற்றில் உருவான முதல் குடும்பத்தில் ஏற்படுத்தியிருந்தார். இது படைப்பில் ஏற்படுத்தப்பட்டிருந்த சமுதாயத்தின் ஆணிவேரான அதிகார அமைப்பு. ஆதியாகமத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது இந்த ஆரம்ப அதிகார அமைப்பின் கீழ் சமுதாயத்தின் ஏனைய அதிகார அமைப்புகளைக் கர்த்தர் படிப்படியாக மனிதகுலத்தில் ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். அவரே தெரிந்தெடுத்து தன் மகிமைக்காகப் பயன்படுத்திய நாடான இஸ்ரவேலிலும் அவர் ஏற்படுத்தியிருந்த அதிகார அமைப்புகளைக் காண்கிறோம். கடவுளுடைய நீதியையும் அதிகாரத்தையும் தொடர்ந்து நினைவுறுத்தி, அவருடைய அதிகாரத்தின் கீழும் அவர் ஏற்படுத்தியிருக்கின்ற அதிகார அமைப்புகளின் கீழும் நாம் பணிவோடு வாழவேண்டும் என்பதை அவர் தந்திருக்கும் பத்துக்கட்டளைகளும் அவர் ஏற்படுத்திய உடன்படிக்கைகளும் நமக்கு அறிவுறுத்தி நம்மை வழிநடத்துகின்றன. மனிதன் அதிகாரத்தைப் பற்றிய விளக்கத்தை கடவுளிடம் இருந்தே பெற்றுக்கொள்கிறான். பாவத்தில் தொடருகின்ற மனிதகுலம் தொடர்ந்தும் அதிகாரத்தின் அவசியத்தை அறிந்துவைத்திருப்பதனாலேயே அதிகாரத்தளங்களைப் பொதுவாக எல்லா நாடுகளிலும், சமுதாயங்களிலும் காண்கிறோம். இதுவரை நாம் பார்த்திருக்கும் விளக்கங்களில் இருந்து அதிகாரத்தையும், அதிகாரத்தளங்களையும் எதிர்ப்பதும், இல்லாமலாக்க முயல்வதும் கடவுளுக்கு எதிரான செயல்மட்டுமல்ல, மனிதகுலத்தின் நலத்திற்கே தீங்கு விளைவிக்கும் நாசச்செயல்களாக அமையும். அதையே இன்றைய சமுதாயத்தின் பாவச் செயல்களில் இருந்தும் அதன் வெறித்தனமான அதிகாரங்களுக்கெதிரான போராட்டதில் இருந்தும் கவனிக்கிறோம்.

அதிகாரத்தைப் பற்றியும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நாம் நடக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியும் தெளிவாக விளக்கும் புதிய ஏற்பாட்டு வசனங்களைக் கவனியுங்கள்.

பவுல் அப்போஸ்தலன் ரோமர் 13:1-3ல் அதிகாரங்களைப் பற்றி மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. 2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்துநிற்கிறான்; அப்படி எதிர்த்துநிற்கிறவர்கள் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். 3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். (ரோமர் 13:1-3)

பவுல் அப்போஸ்தலன் இந்த வசனங்களில் சமூக அதிகாரத் தளங்களைப் பற்றிய உண்மைகளை விளக்குகிறார். அதிகாரம் எப்படி உருவாக்கப்பட்டது, நடைமுறைக்கு வந்தது என்பது பற்றியெல்லாம் பட்டியலிட்டுக் கொடுக்காமல் அதிகாரம் கர்த்தரால் ஆதியில் ஏற்படுத்தப்பட்டது என்ற உண்மையின் அடிப்படையில் அவர் இந்தப் புதிய ஏற்பாட்டு விளக்கங்களைக் கொடுக்கிறார். கிறிஸ்தவன் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒருபகுதியாக சமூக அதிகாரங்களை மதித்து அவைகளுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பதையே பவுல் இங்கு விளக்குகிறார். இந்த வசனங்கள் மிகத்தெளிவாக அதிகாரத்தளங்களை உருவாக்கியிருப்பவர் கர்த்தர் என்றும், அவராலே அல்லாமல் எந்த அதிகாரமும் உருவாகவில்லை என்றும், உலக சமுதாயங்களில் காணப்படுகின்ற அனைத்து அதிகாரங்களும் அவராலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் விளக்குகின்றன. அதேநேரம், அதிகாரங்கள் அநியாயத்திற்கே எதிரானவையென்றும், நீதி, நியாயம் நிலைநிற்க சமுதாயம் அதிகாரங்களை மதித்து நடக்கவேண்டும் என்றும் விளக்குகின்றன. வேதம் பிடிக்காதவர்களும், கடவுளை மதிக்காதவர்களும் இவற்றை மறுதலிக்கலாம். அதற்காக கடவுள் இல்லை, வேதம் இல்லை என்று ஆகிவிடாது. பூனை கண்ணை முடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று அர்த்தமல்ல.

இந்த அடிப்படையிலேயே ஏனைய புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் அதிகாரத்தைப் பற்றியும் சமுதாயத்தில் காணப்படும் அதிகாரப்பிரிவுகளைப் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். பேதுரு, 1 பேதுரு 2:13-14, 18 வசனங்களில் இதைப்பற்றி விளக்குவதைக் கவனியுங்கள்.

13 நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். 14 மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். (1 பேதுரு 2:13-14)

வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். (1 பேதுரு 2:18)

மேலே காணப்படும் வசனங்களில் பேதுரு பவுல் தந்திருக்கும் அதே போதனைகளை தனக்குரிய முறையில் கிறிஸ்தவர்களுக்கு எழுதியிருக்கிறார். இரண்டு வேதப் பகுதிகளும் ஒரே உண்மையையே வலியுறுத்துகின்றன.

கொலோசெயர் 3:18-20, 22 வசனங்களில் பவுல், இந்த அதிகாரத்தளங்களை வேறெங்கெல்லாம் சமுதாயத்தில் காண்கிறோம் என்றும் அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்குவதைக் கவனியுங்கள்.

18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். 19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். 20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது. (கொலோசெயர் 3:18-20)

வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். (கொலோசெயர் 3:22)

தொடர்ந்து பேதுரு, 1 பேதுரு 3:1-2ல் பின்வருமாறு பவுல் விளக்கியதையே நினைவுறுத்துகிறார்.

1 அந்தப்படி மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். (1 பேதுரு 3:1-2)

பவுல் மேலும் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் தீத்து 2:4-5லும், 2:9-10லும், 3:1-2லும் பின்வருமாறு சொல்லுகிறார்.

4 பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், 5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, (தீத்து 2:4-5)

9 வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, 10 தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்து கொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு. (தீத்து 2:9-10)

1 துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், 2 ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. (தீத்து 3:1-1)

அரசு, மேலாளர்கள் மற்றும் குடும்பம் இவற்றோடு சமுதாயத்தில் வேறெந்தெந்த அதிகாரங்களுக்கெல்லாம் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை விளக்கும் பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்.

அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். (1 பேதுரு 5:5)

உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. (எபிரெயர் 13:17)

இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்ற வசனப்பகுதிகள் அனைத்தும் சமுதாயத்தில் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரத்தளங்களையும் பொதுவாக விபரித்து அவற்றிற்குக் கீழிருப்பவர்கள் அமைதலோடு அந்த அதிகாரங்களுக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்று விளக்குகின்றன. சமுதாயத்தில் நம்மை ஆளும் அரசு, வேலைத்தளங்களில் நமக்கு மேலிருக்கும் அதிகாரிகள், வீட்டில் சொந்தக் கணவன், பெற்றோர், திருச்சபை ஆகிய சமூக அதிகாரங்களை இந்தப் பகுதிகளில் நாம் வாசிக்கிறோம். ஆகவே, எங்கு நமக்கு மேலாக ஒரு அதிகாரத்தளம் இருக்கிறதோ அந்த அதிகாரத்தளத்துக்கு மதிப்புக்கொடுத்து நாம் நடக்க வேண்டும் என்பதே கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் நியமம். இந்த விஷயத்தில் பழைய ஏற்பாடும், ஆண்டவராகிய இயேசுவும் போதித்திருப்பதையே பவுலும், பேதுருவும், எபிரெயருக்கான நிருபத்தை எழுதியவரும் சுட்டிக்காட்டி விளக்கியிருப்பதைக் கவனிப்பது அவசியம். அதிகாரங்களை மதித்து நடக்கவேண்டும் என்பதில் புதிய ஏற்பாட்டை எழுதியிருப்பவர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்திருக்கிறார்கள்.

நீதியற்ற அதிகார அமைப்புகள்

அதிகாரத்திற்கும், அதிகார அமைப்புகளுக்கெதிராகவும் போராடி வருகிறவர்கள் அவை நீதியற்ற முறையில் நடந்துகொள்ளுகின்றன என்றும், நம் பார்வைக்கு நீதியானவையாகத் தெரியவில்லை என்ற விளக்கத்தை முன்வைக்கிறார்கள். நீதியற்ற முறையில் நடக்கும் எந்த அதிகாரங்களுக்கும் நாம் கட்டுப்பட வேண்டியதில்லை என்பது பொதுவாக நம்மினத்தில் நிலவி வரும் கருத்து. அதாவது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு அதிகாரம் நீதியற்ற முறையில் நடந்தால் அதற்கு அடிபணிய வேண்டியதில்லை, அதை எதிர்க்கலாம், அதைத் தூக்கியெறியலாம் என்பது அநேகருடைய பொதுவான சிந்தனையாக இருந்து வருகிறது. அத்தோடு நம் பார்வைக்கும் இச்சைக்கும் எதிரான முறையில் நமக்கு அநீதியாகத் தெரிகிறவற்றையும் எதிர்த்து இல்லாமலாக்க வேண்டும் என்ற எண்ணப்போக்கும் ஒரு பகுதியினரை சமூக அதிகாரங்களை எதிர்க்கவைக்கின்றது. அதனால்தான் அதிகார அமைப்பாக கடவுள் ஆதியில் இருந்து ஏற்படுத்தியிருக்கும் ஆண், பெண் வேறுபாட்டையும் நீதியற்றதாக சமுதாயத்தின் ஒரு பகுதி எதிர்க்கிறது. இந்தச் சிந்தனை வேதத்திற்கு முரணானது; வேதம் எதிர்க்கிறது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. இந்த சிந்தனை இந்த உலகத்துப் பார்வையில் இருந்து எழுகிறதே தவிர கர்த்தரின் வேதத்தில் இருந்தல்ல. இந்த எண்ணப்போக்கிற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

  1. மனித சுயநலம்: தன் சுயநினைப்பே சரியானது, நீதியானது என்ற சுயநலப்போக்கு. இதற்கு அடிப்படைக் காரணம் பாவமே.
  2. தன் கருத்துக்கு ஒத்துப்போகாததை எதிர்த்து தன்னுடைய சிந்தனைப் போக்கின்படி வாழவேண்டும்; அதுவே சுதந்திரத்தின் அடித்தளம் என்ற மனப்போக்கு.

இந்த எண்ணத்தின் காரணமாகத்தான் அநேகர் அரசு விதிக்கும் வரிகளில் சில நியாயமானவை அல்ல என்று தீர்மானித்து அதைக்கட்ட மறுக்கிறார்கள் அல்லது தவிர்த்துவிட வேண்டிய வழிகளை நாடுகிறார்கள். இந்த எண்ணப்போக்கே பலரை ஜனநாயக ரீதியில் அமைக்கப்பட்டுள்ள அரசுகளுக்கு எதிராகப் போராடத் தூண்டுகிறது அல்லது அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளை எடுக்க வைக்கிறது. இந்த எண்ணத்தின் விளைவாகவே அநேகர் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை; வேலைத்தளத்தில் மேலிருப்பவர்களை மதித்து நியாயமாக நடந்துகொள்வதில்லை. இந்த எண்ணப்போக்கே ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகளுக்காக சிலரைப் போராட வைக்கிறது. இதை லிபரல் எண்ணப்போக்கு என்று அழைப்பார்கள்; அதாவது வேதத்திற்கு முரணான பாவகரமான உலகத்து இச்சைகளின் அடிப்படையிலான எண்ணப்போக்கு இது.

முதலில், சமுதாயத்தில் எங்கும் நிகழும் அநியாயத்துக்கும், நீதியற்ற நடவடிக்கைகளுக்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதத்தைப் பொறுத்தவரையில் மனிதனைப் பிடித்திருக்கும் பாவமே அதற்கு முழுக் காரணம். பாவத்தைப் பற்றிய உணர்வற்ற பாவ மனிதன் தவறானவற்றை இச்சிப்பதிலும், அநியாயங்களைச் செய்வதிலும் ஆச்சரியமில்லை. பாவமுள்ள இந்த உலகில் பாவம் பெருகி உலகை நிரப்பி அழித்துவிடாமல் இருக்கவே கர்த்தர் அதிகார அமைப்புகளை உருவாக்கி பாவத்தைக் கட்டுப்படுத்துகிறார். அத்தகைய கட்டுப்பாடுகளை அவர் விதிக்காமலிருந்திருந்தால் உலக அழிவு உடனடியாக நிகழ்ந்துவிடும். கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும் இந்த உலகத்தில் பூரணமாக நிறைவேற பாவம் கட்டுப்படுத்தப்பட்டு கர்த்தரின் திட்டங்களின் பூரணத்துவத்தை நோக்கி உலகம் போய்க்கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த உலகத்தில் ‘அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல; துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்’ என்று பவுல் ரோமர் 13:3ல் சொல்லுகிறார். இந்தப் பாவ உலகில் அதிகாரத்தளத்தில் அமர்ந்திருக்கும் அரசுகளும், அதிகாரிகளும் சரியானது எது, தவறானது எது என்ற பொதுப்பார்வையைக் கொண்டிருந்து சட்டம், போலீஸ், இராணுவம், வக்கீல்கள், நீதிபதிகள், நீதிமன்றம் என்ற அமைப்புகளின் மூலம் பொது நீதி நிலவுமாறு கடமையாற்றுகிறார்கள். இதற்குப் பின்னால் இருந்து, இந்த எண்ணப்போக்குக்கிற்கும், அமைப்புகளுக்கும் காரணகர்த்தாவாக இருந்து இயக்கி வருகிறவர் உலகாளும் கர்த்தரே. இவற்றை எதிர்ப்பதும், தூக்கியெறிய முயல்வதும் கர்த்தரை எதிர்த்து நிற்பதிலேயே போய் முடியும்.

உலகத்தின் அரசுகளும், அதிகார அமைப்புகளும் பூரணமானவையல்ல; அத்தனையும் பாவ மனிதர்களால் இயங்கி வருபவையே. இருந்தபோதும் அவை கர்த்தருடைய பொதுநீதியைப் பாதுகாத்துவரச் செயல்படுகின்றன. அவை பல வேலைகளில் தவறாக நடந்துகொண்டபோதும், நீதியற்ற செயல்களைச் செய்தபோதும் அதற்காக கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் அமைப்பைத் தூக்கியெறிய முயல்வது கர்த்தரையே தூக்கியெறிய முயலும் செயலாகும். உதாரணத்திற்கு இயேசுவின் எதிரிகள் அவரை மடக்குவதற்காக அரசுக்கு வரிகொடுப்பது முறையானதா? என்று கேட்டபோது ‘சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடு’ என்று இயேசு பதிலளித்தார். இதன் மூலம் அரசு விதிக்கும் வரியை செலுத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறார். ரோமப் பேரரசும் அதற்குக் கீழிருந்து வரிவசூலித்தவர்களும் (சகேயு) சுயநலவாதிகளாக இருந்தபோதும் இயேசு அதற்காக அவ்வரசுக்குக் கீழ்ப்படியக்கூடாது; வரிசெலுத்தக்கூடாது என்று சொல்லவில்லை. இன்னொரு தடவை, ரோமப்பேரரசை எதிர்த்து யூதர்களுக்கு தலைமை தாங்கிப் போராடவேண்டும் என்று யூதர்கள் எதிர்பார்த்தபோது இயேசு அதற்கு இடங்கொடுக்காது அவர்களுடைய எண்ணத்தில் மண்ணைப் போட்டார். அதற்காகவே யூதர்கள் அவரைக் கொல்ல முயன்றார்கள். இயேசு எந்த விதத்திலும் இஸ்ரவேலில் இருந்த அரசுக்கோ அல்லது ரோமப்பேரரசுக்கோ எதிரான விதத்தில் நடந்துகொள்ளவில்லை; எந்த அதிகாரத்தையும் தூக்கியெறிய முயலவில்லை. அதிகார அமைப்புகளை உருவாக்கி நியமித்த திரித்துவத்தின் இரண்டாம் ஆள்தத்துவமான தேவகுமாரன் தன் அதிகாரத்துக்கு எதிராகச் செயல்படுவாரா? இயேசுவில் காணப்பட்ட இதே போக்கைப் பவுல் அப்போஸ்தலனிலும் காண்கிறோம். பல முறை சிறைவாசத்தை அனுபவித்த பவுல் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டே நடந்துகொண்டார். தன்னுடைய ரோம குடியுரிமையை அவர் சுவிசேஷ நோக்கத்திற்காகப் பயன்படுத்திக்கொண்ட போதும் எந்தவகையிலும் தன்னுடைய உரிமைகளுக்காக வாதாடிப் போராடி அரசையும், சமூக அதிகாரங்களையும் எதிர்க்கவில்லை.

எஜமானர்களும், அடிமைகளும்

முக்கியமாக இந்தப் புதிய ஏற்பாட்டு கட்டளைகளும் அவற்றிற்கான விளக்கங்களும் முதல் நூற்றண்டில் நீதியற்ற முறையில் சமுதாயத்தை ஆண்டுகொண்டிருந்த ரோமப் பேரரசின் காலத்தில் கொடுக்கப்பட்டவை. அந்தக் காலப்பகுதியில் சமுதாயத்தில் அடிமைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ‘வேலைக்காரர்கள்’ என்று நாம் கொலோசெயர் 3:22லும், 1 பேதுரு 2:9லும் காண்கின்ற வார்த்தை முறையாக ‘அடிமைகள்’ அல்லது ‘அடிமை’ என்றே மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் மூலமொழியான கிரேக்கத்தில் அதுவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் அன்றிருந்த அடிமைவாழ்க்கை முறைதான். எஜமானர்களும், அடிமைகளுமே அன்றிருந்திருக்கிறார்கள்; இன்று சமுதாயத்தில் காண்பதுபோன்ற சம்பளத்துக்காக ஒருவருக்குக் கீழ் வேலை செய்கிறவர்கள் அன்றிருக்கவில்லை. இன்று வேலைக்காரர்களாக இருக்கும் எவருக்கும் சமுதாயத்தில் உரிமைகளும் வசதிகளும் இருந்து வருகின்றன. அரசின் பாதுகாப்பும் சட்டங்களும், நீதிமன்றமும் அவர்களுக்கு உதவுகின்றன. முதல் நூற்றாண்டு ரோம அரசின் கீழிருந்த நாடுகளில் இதற்கெல்லாம் இடமிருக்கவில்லை. அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டார்கள்; எஜமானர்களுக்குக் கீழ் அவர்கள் எந்த வேலையையும் செய்ய வேண்டியவர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு உரிமைகளோ உடமைகளோ இருக்கவில்லை. அவர்களுக்காக வாதாட எந்த யூனியனும் இருக்கவில்லை. அவர்கள் எஜமானர்களுடைய உடமைகளாக மட்டுமே கணிக்கப்பட்டார்கள். அடிமைகளுக்கு அன்பு காட்டிய நல்ல எஜமானர்கள் அன்றிருந்திருந்தபோதும் அடிமைகளை அநேகர் கொடுமைப்படுத்தியும் வந்தார்கள். முக்கியமாக பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள். முதலாம் பேதுருவில், பேதுரு இத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கே அறிவுறை செய்கிறார். இத்தகைய சமூக சூழலின் கீழ் வாழ்ந்தவர்களுக்கே பவுலும் தன் நிருபங்களை எழுதியிருக்கிறார்.

பவுலின் பிலேமோன் நிருபம் பிலேமோன் என்ற கிறிஸ்தவ எஜமானுக்கு எழுதப்பட்டது. அவனுடைய வீட்டில் அன்று சபை கூடிவந்துகொண்டிருந்தது. பிலேமோனின் அடிமையாக வேலை செய்து வந்தவன் ஒநேசிமு. ஒரு நாள் ஒநேசிமு வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். அது தற்கொலை செய்துகொள்வதற்கு சமமான ஒரு செயல். ஏனென்றால் அன்று அடிமைகள் சந்தையில் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள்; அவர்கள் எஜமானுக்கு சொந்தமானவர்கள். வீட்டைவிட்டு ஓடிப்போன ஒரு அடிமையை எவரும் வாங்கமாட்டார்கள்; வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது; விற்கவும் முடியாது. ரோம சட்டம் அதற்கெல்லாம் எதிரானது. அடிமை அமைப்புமுறைக்கு அது பாதுகாப்பளித்தது. ரோமுக்கு போன ஒநேசிமு பவுலை சிறையில் சந்தித்து அந்த அறிமுகத்தால் சுவிசேஷத்தைக் கேட்டு கர்த்தரையும் விசுவாசித்தான். பவுல் அவனை மீண்டும் பிலேமோனிடம் சிபாரிசுக் கடிதத்தோடு அனுப்பிவைத்ததாக அந்த நிருபத்தில் நாம் வாசிக்கிறோம். ஒநேசிமு பிலேமோனிடம் திரும்பியபோது தொடர்ந்தும் அடிமையாகவே (இப்போது கிறிஸ்தவ அடிமை) வாழவேண்டியிருந்தது. அடிமை வழக்கத்தை முதலில் அன்றோடு ஒழித்துவிட்டு ஒநேசிமுவை கவனித்துக்கொள்ளும்படி பவுல் பிலேமோனுக்கு எழுதவில்லை. அவனை மீண்டும் அடிமையாக ஏற்றுக்கொண்டு அன்றுமுதல் கிறிஸ்தவ அன்பைக்காட்டி நடத்தும்படியே பவுல் பிலேமோனுக்கு அறிவுறுத்தினார். அத்தோடு ஒநேசிமுவால் ஏதும் நஷ்டங்கள் ஏற்பட்டிருந்தால் அதைத் தானே ஈடுகட்டிவிடுவதாகவும் பவுல் எழுதியிருந்தார்.

இதெல்லாம் எதைக் காட்டுகிறது? நிச்சயமாக பவுலின் இந்த ஆலோசனையின் அடிப்படையில் அடிமைத்தனத்துக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை; இன்று அது இல்லாமல் போயிருப்பது நல்லதுதான். இருந்தாலும் இந்த வரலாற்று சமூகப் பின்புலத்தின் அடிப்படையில்தான் நாம் அதிகாரத்தையும், அதிகாரத்துக்கு மதிப்பளித்து சமுதாயத்தில் நம் கடமைகளைச் செய்யவேண்டிய அவசியத்தையும் இந்த வேதப்பகுதிகளில் இருந்து விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, நீதியற்ற சமுதாய அமைப்புகளின் கீழ் வாழ்ந்தாலும் கிறிஸ்தவர்கள் அந்த சமுதாய அமைப்பின் அதிகாரங்களுக்கு எதிராகப் போராடி சமூக சீர்திருத்தத்தை நாடாமல் அதிகாரங்களை மதித்து அவர்களுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்ற வேண்டும் என்பதையே இந்த வேதப்பகுதிகள் விளக்குகின்றன. சமுதாயத் தீங்குகளுக்கு எதிராக வேதம் எத்தனையோ பகுதிகளில் விளக்கங்கொடுக்கிறது; அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கிறது. இருந்தபோதும் அந்த சமுதாயத்தீங்குகளுக்கு விடிவாக அது அதிரடி சமூக சீர்திருத்தத்தையோ அல்லது அராஜகத்தையோ சிபாரிசு செய்யவில்லை; அதிகாரத்துக்கெதிரான போராட்டத்தை முன்வைக்கவில்லை. சமுதாயத்தீங்குகளுக்கு விடிவாக அது சுவிசேஷத்தையும், சுவிசேஷ வாழ்க்கை முறையையுமே நம் முன்வைக்கிறது. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்துவை விசுவாசித்து மனிதர்களின் வாழ்க்கை மாற்றமடைகிறபோதே சமுதாயத் தீங்குகளுக்கு விடிவு ஏற்படுவதாக அது விளக்குகிறது. பாவத்தில் இருந்து விடுபட்டு கிறிஸ்தவ நன்னடத்தையை வாழ்க்கையில் கொண்டிருக்கின்றபோதே சமூக மாற்றங்களை கிறிஸ்தவன் ஏற்படுத்துகிறான் என்கிறது வேதம்.

நீதியற்ற அரசின் கீழும், நீதியற்ற சமுதாய அமைப்பு முறையின் கீழும் வாழ்ந்து வருவதை அதிகாரத் தளங்களை உதறித்தள்ளுவதற்கு ஒருபோதும் சாக்காக இருக்கக்கூடாது என்பதை மேலே நாம் கவனித்த வசனங்கள் வெளிப்படுத்துவதைக் கவனியுங்கள். நீதியான சமுதாயத்தில் மட்டுமே அதிகாரங்களுக்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்பதல்ல கர்த்தரின் போதனை. சமுதாயத்தில் நீதியற்ற காலங்களிலும் தொடர்ந்து கடவுளே உலகத்தை ஆளுகிறவராகவும், சகல அதிகாரங்களும் அவருக்குக்கீழாகவே இருந்து வருகின்றன. நீதியற்ற நீரோ, டொமீசியன் போன்ற ரோமப் பேரரசர்களும் கர்த்தரால் ஆள அனுமதிக்கப்பட்ட ராஜாக்களாக இருந்திருக்கிறார்கள். நேரடியாக கர்த்தருடைய வார்த்தைகளுக்கு எதிரானவற்றைச் செய்ய எவரும் நம்மை வற்புறுத்தும்போதே நாம் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் தானியேலைப்போல கர்த்தருக்கு மட்டும் கீழ்ப்படியவேண்டும். ஏனைய சந்தர்ப்பங்களில் நீதியற்றவர்களுக்குக் கீழிருந்து அதிகாரத்துக்கு மதிப்புக்கொடுத்து கிறிஸ்தவ நன்னடத்தையைப் பின்பற்றிப் பணிசெய்யவேண்டும் என்பதே வேதம் நமக்களிக்கும் தெளிவான போதனை. அநீதிகளுக்கு மத்தியில் கிறிஸ்தவ நன்னடத்தையோடு அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு ஒருவர் வாழ்கிறபோதே சுவிசேஷ செய்தியின் வல்லமை நிலைநாட்டப்படுவதாக வேதம் விளக்குகிறது. சுவிசேஷ வாழ்க்கையே அநீதியையும், பாவத்தையும் கட்டுப்படுத்துவதற்காக கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் ஆவிக்குரிய வாழ்க்கை முறை. அதற்கு ஈடானதொன்றில்லை. சமூக சீர்திருத்தமும், சமூக நீதியும் குறுகிய காலத்துக்கான வெளிப்புற மாற்றத்தை மட்டுமே கொண்டுவர முடியும். அவற்றால் மனிதர்களை மாற்றமுடியாது; பாவத்தைத் கட்டுப்படுத்த முடியாது; நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது. சமூகத்தில் நிரந்தர மாற்றங்கள் ஏற்பட ஆவிக்குரிய சுவிசேஷ வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். வேதம் சுவிசேஷத்திற்கும், சுவிசேஷத்தின் அடிப்படையிலான ஆவிக்குரிய இருதய மாற்றத்துக்குமே முன்னிடம் கொடுக்கிறது.

அதிகாரத்தை மதித்து நடக்கவேண்டும்

இதுவரை நாம் பார்த்திருக்கும் வேதவிளக்கங்கள் சமுதாயத்தின் அனைத்து அதிகாரங்களுக்கும் நாம் மதிப்புக்கொடுத்து பணிந்து நடக்கவேண்டும் என்பதை விளக்குகின்றன. அதுவே கிறிஸ்தவ நன்னடத்தை. அந்த நடவடிக்கையின் மூலமாகவே கிறிஸ்துவை நாம் மகிமைப்படுத்தி சுவிசேஷ வாழ்க்கையை சமுதாய மக்கள் அறிந்துகொள்ளும்படியாக வாழ்ந்து வரவேண்டும். தாராளவாத (லிபரல்) சிந்தனை கிறிஸ்தவர்களுக்கு இருக்கக்கூடாது. அதிகாரங்களுக்கு அடிபணிந்து (கீழ்ப்படிந்து) வாழவேண்டும் என்று போதிக்கும் வேதத்தில் ‘கீழ்ப்படிந்து’ என்ற வார்த்தையில் ஆழமான அர்த்தமிருக்கிறது. அதாவது ஒருவன் தன்னைத் தாழ்த்தி தனக்கு மேலிருக்கும் அதிகாரத்தை மதித்து கர்த்தருக்காக அந்த அதிகாரத்திற்கு பணிந்து அனைத்துப் பணிகளையும் செய்யவேண்டும் என்பதே அதன் அர்த்தம். இன்று கிறிஸ்தவர்களும் உலகத்து சிந்தனைகளைப் பின்பற்றி தங்களுடைய உரிமைகளுக்காக தொட்டதற்கெல்லாம் குரல்கொடுக்கவும் போராடவும் ஆரம்பித்திருக்கிறார்கள்; அநியாயத்தைத் தட்டிக்கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இயேசுவும், அப்போஸ்தலர்களும், வேத மனிதர்களும் இதற்கெதிரான முறையிலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இயேசு தன் உரிமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து தன்னைத் தாழ்த்தி சகல அதிகாரங்களுக்கும் அடங்கி வாழ்ந்து காட்டியிருப்பதை சிந்தித்துப் பாருங்கள்.

1 பேதுரு 2:18-23
18 வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால், அதுவே பிரீதியாயிருக்கும். 20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். 21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. 23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

இத்தகைய வாழ்க்கைமுறை உலகத்தைப் பொறுத்தவரையில் முதுகெலும்பில்லாத பலவீனமாகத் தெரியலாம்; வேதத்தைப் பொறுத்தவரையில் இதுவே கிறிஸ்துவின் வல்லமையும் நிதர்சனமான கிறிஸ்தவ சுவிசேஷ வாழ்க்கையுமாகும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s