அத்தநேசியஸும் ஏரியன் முரண்பாடும்

– டேவிட் மெரெக் –

டாக்டர் சாமுவேல் வால்டிரன் எனும் சீர்திருத்த போதகர், வரலாற்று இறையியல் தொடர்பான தன்னுடைய விளக்கங்களில், புதிய ஏற்பாடு நிறைவுபெற்ற பின்பு, திருச்சபை வரலாற்றில் மூன்று மாபெரும் இறையியலறிஞர்கள் இருந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். அவர்களில் இருவர் பிரபலமானவர்கள் – ஜோன் கல்வின் மற்றும் ஆகஸ்டின். எனினும் மூன்றாவது நபர் அந்தளவுக்குப் பிரபலமானவர் அல்ல. அவர்தான் அத்தநேசியஸ்.

அத்தநேசியஸ்

அவர்கள் மூவரில், அத்தநேசியஸ் ஏன் அந்தளவுக்குப் பிரபலமானவராக இருக்கவில்லை என்பதற்கான ஒரு காரணம், திருச்சபை வரலாற்றின் ஆரம்ப காலப்பகுதியில் அவர் வாழ்ந்ததுதான். மூன்றாவது நூற்றாண்டின் இறுதியில் அவர் பிறந்தார் (கி.பி. 295 மற்றும் கி.பி. 298 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம்). கி.பி. 373ல் அவர் மரித்தார். ஆகவே, திருச்சபை வரலாற்றில், ஆதி திருச்சபையின் காலம் என்று குறிப்பிடப்படுகிற காலப்பகுதியில் அவர் வாழ்ந்திருந்தார். (வரைபடத்தைப் பாருங்கள்)

மேலும், கல்வினோ, ஆகஸ்தீனோ செய்ததுபோல், இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிற எந்தவிதமான புத்தகங்களையும் அத்தநேசியஸ் விட்டுச் செல்லவில்லை. மற்றொரு காரணம், முறைப்படுத்தப்பட்ட இறையியல் போதனைகளுக்கான பங்களிப்பில் ஏனைய இருவர் செய்தது போன்று, அத்தநேசியஸ் குறிப்பிடத்தகுந்தளவுக்குச் செய்யாததனால், அவர் அவர்களைப் போல அநேகரால் அறியப்பட்டிருக்கவில்லை. அத்தநேசியஸின் மிக முக்கிய பங்களிப்பு, இயேசு கிறிஸ்துவினுடைய முழுமையான தெய்வீகத் தன்மையைப் பற்றிய போதனைகளிலேயே பெருமளவுக்கு தங்கியிருந்தது.

திருச்சபையின் அடித்தளமாக, கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை பற்றிய போதனை இருந்தது. இதுவே, திரித்துவம் மற்றும் கிறிஸ்துவின் தன்மையைப் பற்றிய அடிப்படையான வேத சத்தியங்களுக்கான மையப் போதனையாக இருந்தது. வேறுவிதமாக சொல்லுவதானால், “கடவுள் யார்?” “இயேசு கிறிஸ்து யார்?” என்ற அடிப்படையான கேள்விகளுக்கான பதில் காண்பதில் அத்தநேசியஸின் பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், ஏரியன் முரண்பாடு (Arian controversy) என்று பொதுவாக அறியப்பட்டிருக்கின்ற விஷயத்தில், அவர் காட்டிய ஈடுபாடே அவருடைய பங்களிப்பை மிக முக்கியமானதாக முன்வைக்கிறது. இந்த முரண்பாடு, நான்காவது நூற்றாண்டில் (கி.பி. 318 முதல் 381 வரை) கிறிஸ்துவினுடைய திருச்சபையையே குலுக்கியது. சில காலங்களுக்கு, திருச்சபையில் பிரிவினையை ஏற்படுத்தி அச்சுறுத்துகிறதாகவும் இருந்தது. இந்த முரண்பாட்டில் முக்கிய விஷயமாக இருந்தது, இயேசு கிறிஸ்துவினுடைய முழுமையான தெய்வீகம் பற்றிய போதனை. கிறிஸ்துவினுடைய தெய்வீகம் பற்றிய போதனையில், முதல் நூற்றாண்டிலிருந்து திருச்சபை தொடர்ச்சியாக போதித்து வந்த போதனையில் அத்தநேசியஸ் உறுதியாக நின்றதன் காரணமாக, ‘Father of Orthodoxy’ என்று அவர் அழைக்கப்பட்டார். எனவே இந்த ஆக்கத்தில், அத்தநேசியஸின் வாழ்க்கை, அவருடைய பணிகள் மற்றும் ஏரியன் முரண்பாட்டில் அவருடைய பங்களிப்பு பற்றிய விஷயங்களில் நம்முடைய கவனத்தை செலுத்துவோம். ஆனால், இவைகளில் நம்முடைய கவனத்தைச் செலுத்துவதற்கு முன், நாம் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை முதலாவது நாம் பார்க்கலாம்.

அத்தநேசியஸின் வாழ்க்கையும் ஏரியன் முரண்பாட்டின்போது இருந்த அரசியல் சூழ்நிலையும்

அத்தநேசியஸ், மத்திய தரைக்கடலைச் சூழ்ந்ததும் அதனைக் கடந்த பகுதிகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு ஆண்டு வந்த வல்லரசான ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்து வந்தார். (வரைபடத்தைப் பாருங்கள்)

அவர் வாழ்ந்த காலப்பகுதியில், ரோம சாம்ராஜ்யம், கிறிஸ்துவினுடைய திருச்சபையைக் கொடூரமாக எதிர்த்தது. முதல் நூற்றாண்டிலிருந்தே, கேடான ரோம ஆட்சியாளர்களால், அவ்வப்போது, கொடூரமான துன்புறுத்தல் நடந்து கொண்டுதான் இருந்தது. கி.பி. 303 முதல் கி.பி. 310 வரையிலான காலப்பகுதியில் மிகவும் வன்மையான துன்புறுத்தல்கள் நிகழ்ந்தது. அப்போது அத்தநேசியஸ் சிறுவனாக இருந்தார். அத்தோடு, அத்தநேசியஸ் வாழ்ந்த, ரோம ராஜ்யத்தின் கிழக்குப் பகுதியில், துன்புறுத்தல்கள் மிகவும் அதிகமாக இருந்தது.

கான்ஸ்டன்டைன்

எனினும், அந்நேரத்தில் அரசியல்ரீதியாக ஒரு திடீர் மாற்றமும் ஏற்பட்டது. அந்த மாற்றம், கேடான ரோம ஆட்சியாளர்களால் ஏற்பட்ட துன்புறுத்தலுக்கு முடிவு கட்டியது. கி.பி. 306ல், கான்ஸ்டன்டைன் என்பவர் தன்னுடைய தந்தையின் மறைவிற்குப் பிறகு, மேற்கு சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதிக்கு அதிபதியானார். பிறகு, கி.பி. 324ல், ஒட்டுமொத்த ரோம சாம்ராஜ்யத்தின் பேரரசனானார். இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், கி.பி. 312ல் ரோமுக்கு வெளியில் நடந்த ஒரு முக்கியமான போருக்குப் பிறகு, கான்ஸ்டன்டைன், தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று பகிரங்கமாக அறிவித்ததுதான். ஆனால், கி.பி. 337ல், அவருடைய மரணத்திற்கு கொஞ்சக் காலத்திற்கு முன்புதான் அவர் உண்மையில் மனந்திரும்பியிருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. எனினும், கான்ஸ்டன்டைன் தன்னைக் கிறிஸ்தவன் என்று அறிவித்ததனால், நல்லதும் கெட்டதுமான அநேக முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன.

ரோமப் பேரரசர்களில் முதலாவது கிறிஸ்தவனான, கான்ஸ்டன்டைன், தன் சாம்ராஜ்யத்தில் மத சுதந்திரத்தை அறிவித்தது மட்டுமல்லாமல், கிறிஸ்தவர்களுக்கான துன்புறுத்தலையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். அத்தோடு, திருச்சபையின் நன்மைக்கேதுவாக, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் செய்யத் துவங்கினார். கான்ஸ்டன்டைனின் மறைவுக்குப் பிறகு, சில காலம் கழித்துத்தான், கிறிஸ்தவம், நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்படுத்தப்பட்டது. கான்ஸ்டன்டைன், நாடாளும் அரசனாக இருந்தபோதிலும், திருச்சபையின் நடவடிக்கைகளில், குறிப்பாக ஏரியன் முரண்பாட்டிலும், தானாக முன்வந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். கான்ஸ்டன்டைனை மிகவும் ஊக்கப்படுத்திய விஷயமென்னவென்றால், திருச்சபை தன்னுடைய சாம்ராஜ்யத்தை ஒன்றிணைக்க உதவும் என்று அவர் எதிர்பார்த்ததுதான். இந்த மாற்றம், அதாவது திருச்சபைக்கும் நாட்டிற்கும் இடையிலான இந்தத் தொடர்பு, பிறகு பாதகமான விளைவுகளைத் திருச்சபையில் ஏற்படுத்தியது. நாட்டரசாங்கம், வெகுவேகமாக திருச்சபையோடு ஒன்றிணைந்தது. பிறகு, திருச்சபையின் நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டது. கீழ்வரும் வரைபடத்தைப் பாருங்கள்.

கி.பி. 318ல் ஏரியன் முரண்பாடு உருவானபோது, திருச்சபைக்கும் நாட்டிற்கும் இடையிலான உறவின் நிலை இப்படியே இருந்தது. அடுத்து வந்த வருடங்களில் அது மேலும் படர்ந்து விரிந்தது. இனி வரும் தொடரில், இதன் முக்கியத்துவத்தை நாம் பார்ப்போம். இப்போது இரண்டாவது பின்னணியைக் கவனிப்போம்.

அத்தநேசியஸின் வாழ்க்கையும் ஏரியன் முரண்பாட்டின்போது இருந்த இறையியல் பின்னணியும்

இதில் நாம் மூன்று குறிப்புகளைப் பார்க்கலாம்.

1. திருச்சபையில் ஒருபுறம் சத்தியக் கோளாறு வளர்ந்தது, மறுபுறம் சத்தியத்தின் மெய்த்தன்மையைப் பற்றிய புரிதலும் வளர்ந்தது. (இதுபற்றி விளங்கிக்கொள்ள வரைபடத்தைப் பாருங்கள்)

அப்போஸ்தலர்களைக் கொண்டும் அவர்களோடு நெருக்கமாக இருந்தவர்களைக் கொண்டும், ஆண்டவர் நமக்கு தெய்வீக வெளிப்படுத்தலான, தவறிழைக்கவியலாத புதிய ஏற்பாட்டு வேதநூல்களைத் தந்தார். எனினும், கடைசி அப்போஸ்தலனுடைய மறைவுக்குப் பிறகு, கடவுளிடமிருந்து நேரடி வெளிப்படுத்தல் முடிவுக்கு வந்தபோது, வேதத்தைப் பற்றிய திருச்சபையின் அறிவு முதிர்ச்சியடையாத நிலையில் இருந்தது என்பது கண்கூடாகவே தெரியக்கூடியதாக இருந்தது. ஆகவே, கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தைப் பற்றிய புரிதலில் சபை வளரத் துவங்கியது. அதேநேரம், திருச்சபையில் தவறான போதனைகளும் உருவாகின. பல்வேறு காலப்பகுதிகளில், சபையின் சத்தியத்தைப் பற்றிய வளர்ச்சிக்கும் தவறான போதனைகளின் பெருக்கத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரித்து, திருச்சபையில் பிரிவினையை ஏற்படுத்துமளவுக்கு நிலைமை மாறியது. கிறிஸ்துவினுடைய மெய்யான திருச்சபையில், சத்தியம் ஒருபோதும் அசத்தியத்தோடு இணைந்து வாழ முடியாது. இதுவே ஏரியன் முரண்பாடு உண்டாவதற்கு, முதலாவது முக்கிய காரணமாக அமைந்தது.

2. திருச்சபையில் வேதத்திற்கு முரணான அதிகாரப் படிமுறைகளின் வளர்ச்சி.

முதல் நூற்றாண்டு நிறைவு பெறுவதற்கு முன்பாகவே, உள்ளூர் திருச்சபையிலுள்ள போதகர்கள் மற்றும் உதவிக்காரர்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் சபைத் தலைவர்களைக் கொண்ட வேதத்திற்கு முரணான ஒரு நடைமுறை வளரத் துவங்கியது. ஆரம்பத்தில், ஒரே திருச்சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்கள் இருக்கிறபோது, அவர்களில் ஒருவர் மற்றவர்களைவிட முக்கியத்துவம் கொண்டவர் என்ற வகையில் அது ஆரம்பமானது. அந்த முக்கியத்துவம் பெற்றவரே “பிஷப்” என்று அழைக்கப்பட்டார். ஏனையோருக்கு அப்பெயர் வழங்கப்படவில்லை. பிறகு, ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள பல உள்ளூர் திருச்சபைகள் மீது அந்த பிஷப் அதிகாரம் செலுத்துகிறவரானார். அதன் பிறகு, சில முக்கியமான திருச்சபைகளிலுள்ள குறிப்பிட்ட பிஷப்புகள், அதே பகுதியிலுள்ள ஏனைய பிஷப்புகள் மீது அதிகாரம் கொண்டவர்களானார்கள். இப்படி அதிகாரம் கொண்ட “சூப்பர்” பிஷப்புகளில் மிகவும் முக்கியமானவராக இருந்தவரை “சமயகுருமார்” (Patriarch) என்று கிழக்கத்திய பகுதியில் அழைத்தார்கள். அவரையே ரோமில் “போப்” என்று அழைத்தார்கள்.

அத்தநேசியஸ் வாழ்ந்த காலத்தில், இப்படியான அதிகாரம் கொண்ட “சூப்பர்” பிஷப்புகளைக் கொண்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த திருச்சபைகள், எருசலேமிலும், அந்தியோகியாவிலும், கான்ஸ்டான்டிநோபிளிலும், ரோமிலும், எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவிலும் இருந்தன. எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவில்தான் அத்தநேசியஸ் ஊழியம் செய்து வந்தார். இந்த அதிகாரம் கொண்ட “சூப்பர்” பிஷப்புகள் யாவரையும் பொதுவாக ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்கள். நம்முடைய இந்த படிப்பிற்கு இதெல்லாம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால், அத்தநேசியஸும் இந்த “சூப்பர்” பிஷப்புகளில் ஒருவராகவே இருந்தார்.

3. ஏரியன் முரண்பாட்டிற்கான மிக முக்கியமான இறையியல் பின்னணி

இயேசு வந்தபோது, யூதர்கள் ஒரு தெளிவான, சரியான சத்தியத்தில் உறுதியாக இருந்தார்கள். அதாவது ஒன்றான மெய்தேவன் ஒருவரே (உபாகமம் 6:4). பெந்தகொஸ்தே தினத்தில் கிறிஸ்துவினுடைய திருச்சபை ஏற்படுத்தப்பட்டபோதும், இந்த சத்தியத்தில் திருச்சபை உறுதியாக தொடர்ந்தது. எனினும் இயேசு கிறிஸ்து வந்தபோது, இது ஒரு சவாலை எழுப்பியது. இயேசு, தம்முடைய பரலோக பிதாவோடு சேர்ந்து, தானும் கடவுள் என்பதை உறுதியாக எடுத்துரைத்தார். இயேசுவும் கடவுளே என்ற சத்தியத்தைத் திருச்சபையானது சரியாகவே தழுவிக்கொண்டது. ஆகவே, ஆரம்பத்திலிருந்தே, திருச்சபையானது, இந்த இரண்டு சத்தியங்களையும் விசுவாசித்தது. அதாவது, ஒன்றான மெய்தேவன் ஒருவரே என்றும், பிதாவாகிய தேவனோடு சேர்த்து இயேசுவும் கடவுள் என்று அது விசுவாசித்தது. ஆனால் இது ஒரு சவாலை உருவாக்கியது. அதாவது, இந்த இரண்டு சத்தியங்களையும் தர்க்கரீதியாக எப்படி இணைத்துப் பார்ப்பது? இதற்குத் தீர்வு காண முயற்சித்தவர்கள், இதில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு, மற்றதை நிராகரிக்கும் அல்லது மறுக்கும் முடிவுக்கே பெரும்பாலும் வந்தார்கள். இப்படியான முடிவுக்கு வந்தவர்களுடைய சில உதாரணங்களைப் பார்ப்போம்.

திருச்சபை வரலாற்றின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த, ஜஸ்டின் மார்டர் (Justin Martyr) என்ற தேவ மனிதன், இதற்கு ஒரு தீர்வைத் தந்தார். அதை லோகோஸ் ஸ்பெக்யூலேஷன் (Logos Speculation) என்று அழைப்பர். இப்போது நான் இதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லப்போவதில்லை. எனினும் சுருக்கமாக சொல்லுவதானால், திரித்துவத்திலுள்ள மூன்று நபர்களும் ஒரே கடவுள் என்பதை மறுதலிக்காமல், அந்த மூன்று நபர்களில் ஒவ்வொருவருக்கும் இருக்கிற தனித்துவமான தன்மையையும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கிற உறவின் அதிகாரத்தையும் விவரிக்கிற ஒரு முயற்சியாக இது இருந்தது. ரோமப் பேரரசின் கிழக்குப் பகுதியில் இந்தவிதமான பார்வை மிகவும் பிரபலமாக இருந்தது. இதிலிருக்கிற ஒரு பிரச்சனை என்னவென்றால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராகிய இந்த மூவரின் தனித்துவத்தையும் அவர்களுக்கு இடையே இருக்கிற உறவையும் வலியுறுத்துகிற அளவுக்கு, இவர்கள் மூவரும் ஒரே கடவுள் என்பதை வலியுறுத்தவில்லை. இதுவே பின்னால் ஏரியன் என்ற மனிதன், குமாரனாகிய இயேசுவின் முழுமையான தெய்வீகத் தன்மையை வெளிப்படையாக மறுதலிக்கும்படியாக வழிநடத்தியது. ஏரியனின் அந்தப் போதனை ஆத்துமாவை அழிக்கும் கள்ளப் போதனை.

இன்னொருபுறம், தெய்வீகத்தின் ஒருமையை ஆரம்பத்தில் அதிகமாக வலியுறுத்தி, இறுதியில் திரித்துவத்தின் மூன்று நபர்களுக்கும் இடையில் இருக்கிற தனித்துவத்தை மறுதலிக்கிற கள்ளப் போதனையில் போய் முடிந்தவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கள்ளப் போதனைக்குப் பெயர் மொனாக்கியனிசம் (Monarchianism – கிரேக்க மொழியில் இவ்வார்த்தையின் பொருள் “ஓர் அரசன்”). இப்பெயரே அவர்களுடைய போதனை என்ன என்பதை விவரிக்கிறதாக இருக்கிறது. அதாவது ஒரே அரசர் அல்லது ஆட்சியாளரே உண்டு, அவர்தான் கடவுள் என்பதே இந்தப்போதனை. இந்தக் கள்ளப் போதனையாளர்கள், இயேசு கிறிஸ்து மனிதனாக இப்பூமிக்கு வந்தபோதும், கடவுளின் ஒருமையைக் காக்கும் முயற்சியைச் செய்தார்கள். மொனாக்கியனிச போதனையாளர்களில் இரண்டு பிரிவினர் உண்டு.

  1. டைனாமிஸ்டிக் மொனாக்கியனிசம் (Dynamistic Monarchianism) அல்லது அடாப்ஷனிஸ்டிக் மொனாக்கியனிசம் (Adoptionistic Monarchianism): இந்தக் கள்ளப் போதனையாளர்கள், இயேசு அடிப்படையில் மனிதன் மட்டுமே என்றும், அவருடைய பிறப்பின்போதோ, ஞானஸ்நானத்தின்போதோ அல்லது உயிர்த்தெழுதலின்போதோ, தெய்வீக வல்லமை அவர்மேல் வந்திறங்கியது என்று விளக்கினார்கள். இவர்கள், கடவுள் இயேசுவைத் தத்தெடுத்தார் என்று ஒருவிதத்தில் சொல்லலாம் என்றார்கள். இயேசு உண்மையாகவும் முழுமையாகவும் கடவுள் இல்லை என்பதுதான் இப்பிரிவினரின் கள்ளப் போதனை. மொனாக்கியனிசத்தின் மற்றொரு பிரிவினர் இவர்களுடைய போதனையை எதிர்த்தனர்.
  2. மொடலிஸ்டிக் மொனாக்கியனிசம் (Modalistic Monarchianism) அல்லது பெட்ரிபசியனிசம் (Patripassianism – பிதாவாகிய தேவனே சிலுவையில் அறையப்பட்டார்) அல்லது செபெலியனிசம் (Sabellianism – Sabellius என்ற மனிதனால் உருவாக்கப்பட்ட போதனை): இந்தக் கள்ளப் போதனை, பிதாவாகிய தேவனே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குமாரனாகிய தேவனாக தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டார் என்று போதித்தது. மொடலிஸ்டிக் மொனாக்கியனிசம், கடவுளுடைய ஒருமை நிலை மற்றும் கிறிஸ்துவினுடைய தெய்வீகத் தன்மை ஆகிய இரண்டு சத்தியத்தையும் திருப்தி செய்ய எண்ணியது. இப்போதனை, மேற்குப் பகுதியில் சில காலத்திற்கு மிகவும் பிரபலமாக இருந்தது. ரோமன் கத்தோலிக்க போப்புகளும் இந்தப் பார்வையை சில காலத்திற்குக் கொண்டிருந்தனர். ஆனால் பிதாவாகிய தேவனும், குமாரனாகிய தேவனும் தனித்துவம் வாய்ந்த தனி நபர்கள் என்பதை இப்போதனை மறுத்தது. இது டைனாமிஸ்டிக் மொனாக்கியனிசம் மற்றும் லோகோஸ் ஸ்பெக்யூலேஷன் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையைக் கொண்டிருப்பதனால், இதுவே வேதம் போதிக்கும் முறை என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டது.

அத்தநேசியஸின் ஆரம்ப கால வாழ்க்கை

அத்தநேசியஸ், கி.பி. 295 மற்றும் கி.பி. 298 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருப்பார் என்று சொல்லப்படுகிறது. கி.பி. 373 ல் அவர் மரித்தார். ஏரியன் முரண்பாடு அதிகம் பரவ ஆரம்பித்த காலப்பகுதியில், அத்தநேசியஸ் என்ற உண்மையுள்ள ஊழியன் பிறந்தது, கர்த்தருடைய பராமரிப்பின் செயலே. அத்தநேசியஸின் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றி குறைந்தளவே நாம் அறிய முடிகிறது.

அத்தநேசியஸ், நாடு கடத்தப்பட்ட காலத்தைத் தவிர்த்து, அவருடைய வாழ்நாள் முழுவதும் எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவிலேயே அவர் வாழ்ந்து வந்தார் என்றே தெரிகிறது.

அவருடைய பெற்றோர், உயர் வகுப்பைச் சார்ந்தவர்களும், செல்வமிக்கவர்களுமாக இருந்தார்கள் என்று பிறகு வந்த வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். அவர், கிரேக்கக் கலாச்சாரத்தின் முக்கியமான தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட, தாராளவாத கிரேக்க கல்வியையே ஆரம்பக் கல்வியாகக் கற்றார் என்பதை அவருடைய எழுத்துக்களிலிருந்து நாம் அறிய முடிகிறது.

அத்தநேசியஸ், பழைய ஏற்பாட்டு கிரேக்க மொழிபெயர்ப்பான செப்டுஜியன்ட் வேதத்திலும், கிரேக்க புதிய ஏற்பாட்டு வேதத்திலும் நன்கு தேர்ச்சிப்பெற்றவராக இருந்தார். கிறிஸ்தவ போதனைகளைத் தனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் இரத்த சாட்சிகளாக மரித்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டதிலிருந்து, அத்தநேசியஸ் இளம் வயதிலேயே வேத சத்தியங்களில் வளர்ந்திருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது. இது கி.பி. 313 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அதன் பிறகு கொடிய துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அத்தநேசியஸ், வேதத்தில் ஆச்சரியமான அறிவைக் கொண்டிருந்ததாக ஒரு வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அலெக்சாந்தியாவிலுள்ள புகழ்பெற்ற கேட்டகெட்டிகல் பள்ளியில் (Catechetical School) இறையியல் பயின்றார். அத்தநேசியஸ், சந்நியாசி வாழ்க்கை முறையைத் தழுவி வந்தார். இது வேதபூர்வமற்றது. அவருடைய வாழ்நாள் காலத்தில் எகிப்தில் வளர்ந்து வந்த துறவிமட வாழ்க்கையை அவர் அதிக ஆர்வத்துடன் ஆதரித்தார்.

கி.பி. 312 முதல் கி.பி. 328 வரை அலெக்சாந்திரியாவின் பிஷப்பாக இருந்த, அக்காலத்தின் ஜாம்பவான்களில் ஒருவரான அலெக்சாண்டர், ஒரு கடற்கரை ஓரத்தில், சிறுவனான அத்தநேசியஸ் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து “திருச்சபை” விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டார். அந்த விளையாட்டில், அத்தநேசியஸ் தன்னை ஒரு பிஷப்பாக காட்டிக் கொண்டார். இதைக் கண்ட அலெக்சாண்டர், அத்தநேசியஸின் செயலால் கவரப்பட்டார். பிறகு இளைஞனாக வளர்ந்த அத்தநேசியஸிற்கு இது தொடர்பாக பயிற்சியையும் தந்து, அவரைத் தன்னுடைய செயலாளராக நியமித்தார். அதன்பிறகு, அலெக்சாண்டருக்குக் கீழாக, ஆர்ச்டீக்கனாக அத்தநேசியஸ் ஏற்படுத்தப்பட்டார். ஆர்ச்டீக்கன் என்ற பதவி, வேதம் போதிக்கின்ற டீக்கன் (உதவிக்காரர்) பதவியைப் போன்றதல்ல. இது ஒரு விசேஷ பதவி, ஆனால் வேதபூர்வமற்றது. இப்பதவியை ஏற்கிறவர்கள், அடுத்த பிஷப்பாக வருவதற்கான வகையில் பயிற்றுவிக்கப்படுவார்கள். அத்தநேசியஸ் தேவனுடைய மக்களுக்காக பணி செய்வதற்கு ஆரம்பத்திலிருந்தே இந்த வகையில் தயார் செய்யப்பட்டிருக்கிறார். பொதுவாக, இப்படியே கிறிஸ்து தன்னுடைய ஊழியர்களைத் தயார் செய்கிறார்.

இப்படியாக, தனக்கு முன்னிருந்த தேவப்பணிக்காக இளம் வயதிலேயே அத்தநேசியஸ் அனைத்து தகுதிகளையும் பெற்று வளர்ந்தார். கிறிஸ்தவ சத்தியத்தை ஆதரித்து, அவர் எழுதிய இரண்டு நூல்கள், இளம் பருவத்திலேயே அவர் கொண்டிருந்த திறமைக்கான சான்றாக இருந்தன. அவற்றில் ஒன்று உலக தத்துவங்களுக்கு எதிரானது. மற்றொன்றின் தலைப்பு, “On the Incarnation of the Divine Word”. இப்புத்தகம், கிறிஸ்தவ சத்தியத்தின் மையமாகிய “வார்த்தை மனிதரானார்” என்பதைப் பற்றி அத்தநேசியஸ் ஏற்கனவே சிந்தித்திருக்கிறார் என்பதை நமக்குக் காட்டுகிறது. இப்புத்தகத்தைப் பற்றி ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்,

“அத்தநேசியஸ் கிறிஸ்துவைப் பற்றிய இரகசியத்தை, ஒரு இறையியலாளரைப் போல் அல்லாமல், இரட்சகரின் தேவையை அறிந்த, அவர்மீது விசுவாசமுள்ள ஆத்துமாவின் அனுகுமுறையைப் போல்  எழுதியுள்ளார். ஏரியன் முரண்பாட்டின் சிக்கல்களை எதிர்நோக்கியபோது, இந்த அடிப்படையான சத்தியத்தில் அவர் உறுதியாக இருந்ததுதான், இந்த விஷயத்தில் திசைமாறாமலும், இறையியலில் சமநிலையிலும் அவரை இருக்கச் செய்தது.”

நம்முடைய ஆத்துமாவிற்கான முக்கியமான ஒரு பாடமும் இங்கிருக்கிறது. தவறான போதனைகளிலிருந்து நம்மைக் காக்கவும், கடவுளுடைய சரியான சத்தியங்களில் நம்முடைய புரிதல் மேம்படவும் வேண்டுமானால், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதில் நம்முடைய அனுகுமுறையும் அத்தநேசியஸின் அனுகுமுறையைப் போல் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது, இரட்சகரின் தேவையை அறிந்த, அவர்மீது விசுவாசமுள்ள ஓர் ஆத்துமாவைப் போன்று அதை நாம் அனுக வேண்டும்.

அத்தநேசியஸின் இனி வரும் வாழ்க்கைக் குறிப்புகளை, ஏரியன் முரண்பாட்டோடு அவருக்கு இருந்த தொடர்போடு இணைத்துப் படிப்போம்.

கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆரம்ப வெற்றி (கி.பி. 318-325)

அலெக்சாந்தியாவில் துவங்கிய முரண்பாடு

1. ஏரியஸின் தவறான போதனை

ஏரியஸ்

அத்தநேசியஸ், பிஷப் அலெச்சாண்டருக்குக் கீழாக ஊழியம் செய்துவந்தபோது, கி.பி. 318ல் அலெச்சாந்திரியா திருச்சபையில் ஒரு பிரச்சனை எழுந்தது. அது ஏரியஸ் என்ற ஒரு நபருடைய போதனையினால் உண்டான பிரச்சனை. எனவேதான், இந்த பிரச்சனைக்கு “ஏரியன் முரண்பாடு” என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்த ஏரியஸ், மிகவும் உயரமானவரும், அதேசமயம் மெலிந்த உடலைக் கொண்டிருந்து, கல்வியில் தேர்ந்தவரும், வெளிப்புறமாகத் தன்னுடைய பக்தியைத் தெரியப்படுத்தி வாழ்ந்தவரும், மிகவும் பிரபலமானவருமாக இருந்தவர் என்று இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது. எகிப்திலுள்ள ஒரு திருச்சபையின் மூப்பராக இவர் இருந்தார். வேதத்தை வியாக்கியானம் செய்து போதிக்கும் பொறுப்பும் அவரிடம் ஒப்புவிக்கப்பட்டிருந்தது. ஏரியன் முரண்பாடு எழுந்தபோது, அவர் வயது முதிர்ந்தவராக இருந்தார். அத்தோடு, அவர் பெருமைமிக்கவரும், சாதூரிய திறமையுள்ளவரும், எதையும் விட்டுக்கொடுக்காது விவாதிக்கும் நபராகவும் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஏரியஸ், திரித்துவ நபர்களுக்கு இடையிலான தனித்துவ தன்மைகளையும் அவர்களுக்கு இடையே இருந்த உறவினிமித்தமான அதிகாரப் பகிர்வையும் வலியுறுத்திய லோகோஸ் ஸ்பெக்யூலேஷனைத் தன்னுடைய கள்ளப் போதனைக்கான தளமாக ஏற்படுத்திக்கொண்டார். குமாரனாகிய தேவன், எல்லாப் படைப்புயிர்களுக்கும் முந்தி இருந்தவர் என்பதையும் எல்லா படைப்புயிர்களுக்கும் மேற்பட்டவர் என்பதையும் சரியாகவே அவர் போதித்தார் [யோவான் 1:1ல் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தை (Logos)]. குமாரனாகிய தேவனே உலகத்தைப் படைத்தவர், பிதாவினுடைய பரிபூரணமான சாயலைக் கொண்டவர் என்றும் போதித்தார். அதனடிப்படையில், குமாரனாகிய இயேசுவை ஒரு வகையில் கடவுள் என்று சொல்லலாம் என்று ஏரியஸ் விளக்கினார். ஆனால், குமாரனும் பிதாவாகிய தேவனால் உருவாக்கப்பட்டவரே என்றும் அவர் போதித்தார். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகம் உருவாக்கப்பட்டதுபோல் குமாரனும் காலங்கள் துவங்குவதற்கு முன்பே ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கப்பட்டார். ஆகவே, குமாரன் நித்தியமானவர் அல்ல, அவருக்குத் துவக்கம் இருந்தது என்று ஏரியஸ் போதித்தார். ஏரியஸின் இந்த முறையிலான விளக்கங்கள், கிறிஸ்துவினுடைய இத்தகைய தன்மையின்படி அவர் முழுமையான கடவுளாக இருக்க முடியாது, ஆனால் கடவுளுக்கு அடுத்த நிலையிலான ஒருவராகதான் இருக்க முடியும் என்பதாக இருந்தது. ஏரியஸின் இந்த வாதம் பற்றி வாக்கர் என்பவர் பின்வறுமாறு விளக்கியிருக்கிறார்,

“ஏரியஸின் இந்த வாதம் பல தெய்வ கொள்கையையே காட்டுகிறது. ஏரியஸின் விளக்கம் இரண்டு கடவுள்கள் இருப்பதாகக் காட்டுகிறது. அதாவது, ஒருவர் உயர்ந்தவர், பரிபூரணமானவர், யாரும் எட்ட முடியாத தூரத்திலிருக்கிறவர். மற்றவர், அவரைப் போன்றவர், ஆனால் உருவாக்கப்பட்டவர், வரையறைகள் கொண்டவர், முதலாமவருக்குக் கீழானவர்.”

அத்தோடு, இயேசு மனித சரீரத்தைக் கொண்டிருந்தாலும், அவர் மனிதனல்ல, அவரிடம் ஆத்துமாவும் இருக்கவில்லை என்றும் ஏரியஸ் போதித்தார். ஆகவே, இயேசு முழுமையான கடவுள் அல்ல என்று அவர் மறுத்ததோடு, அவர் முழுமையான மனிதனும் அல்ல என்றும் ஏரியஸ் மறுத்திருக்கிறார். எனினும், அந்நாட்களில், இயேசுவின் முழுமையான தெய்வீகத் தன்மையைப் பற்றிய விஷயமே இந்த முரண்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பிதாவாகிய தேவனுக்கும் குமாரனுக்கும் இடையில் இருக்கிற தனித்துவமான தன்மைகளைத் தானே சரியாக வலியுறுத்திப் போதிக்கிறதாக ஏரியஸ் நம்பினார். தன்னோடு முரண்படுகிறவர்கள், தத்துவார்த்தரீதியாக, தெய்வீகத்தின் ஒருமையை அதிகமாக வலியுறுத்துகிற மொடலிஸ்டிக் மொனாக்கியனிசம் என்கிற கள்ளப் போதனையோடு உடன்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.

2. அலெக்சாண்டரின் பதில்

இவைகள் நடந்துவந்த காலங்களில், திரித்துவத்தைப் பற்றிய போதனையில் பிஷப் அலெக்சாண்டர் முழுமையான தெளிவைக் கொண்டிருந்ததாக பார்க்க முடியவில்லை. எனினும், குமாரனாகிய தேவன், நித்தியமாக இருக்கிறவர் என்றும் முழுமையான கடவுள் என்றும் அவர் உறுதியாக நம்பினார். ஆரம்பத்தில் அலெக்சாண்டர் ஏரியஸோடு சமாதானமாக இருக்கவும், அவர் சொல்லுவதை பொறுமையோடு கேட்கவும் வேண்டும் என்று விரும்பினார். எனினும், அவர்கள் இருவருடைய நிலைப்பாட்டின் வேறுபாடுகள் தெரியவர, ஏரியஸ் தன்னுடைய நிலையிலிருந்து பின்வாங்க மறுத்தார். அத்தோடு, தன்னுடைய வாதத்தை ஏற்கிறவர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குத் தொடர்ந்து இதைப் போதித்து, சபையில் பிரிவினை உண்டாவதற்குக் காரணமானார்.

அலெக்சாண்டரும், அலெக்சாந்திரியாவிலிருந்த ஏனைய சபைத் தலைவர்களும் இணைந்து, ஏரியஸிற்கும் அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கும் இது தொடர்பாக ஒரு கடிதத்தை எழுதினார்கள். ஆனால் அதற்கு பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. இறுதியில், கி.பி. 320 அல்லது 321ல், எகிப்து மற்றும் லிபியாவிலிருந்த பிஷப்புகளின் ஆலோசனைக் குழுவைக் கூட்ட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் அலெக்சாண்டர். குழுவின் முடிவாக, ஏரியஸையும் அவரைப் பின்பற்றியவர்களையும் சபைப் பதவியிலிருந்து விலக்கியதோடு, அவர்கள் சபையிலிருந்தும் நீக்கப்பட்டார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக, இந்தப் பிரச்சனை இத்துடன் முடிவடைந்துவிடவில்லை.

3. சச்சரவும் முரண்பாடும் மேலும் பரவியது

ஏரியஸ் பிஷப்புகளின் ஆலோசனைக் குழு எடுத்த நடவடிக்கையை புறக்கணித்ததோடு, தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் தொடர்ந்து தன்னுடைய போதனைகளைப் போதித்து வந்தார். அத்தோடு, தன்னுடைய கருத்திற்கு ஆதரவளிக்கும்படி அனுதாபக் கடித்தை எழுதிப் பலருக்கும் அனுப்பினார். பாலஸ்தீனம் மற்றும் ஆசியா மைனர் பகுதிகளில் பிரயாணம் செய்து அங்கிருந்தவர்களிடம் தன்னுடைய கருத்திற்கு ஆதரவு கோரினார். அதன்விளைவாக, ஆசியா மைனரிலுள்ள நிக்கோமீடியாவின் பிஷப்பாக, அப்போது ஏற்படுத்தப்பட்டிருந்த யூஸிபியஸ் (Eusebius) என்பவர் ஏரியஸின் கருத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார்.

ஏரியஸுக்குப் பிறகு இந்த யூஸிபியஸே ஏரியஸின் ஆதரவாளர்களை வழிநடத்தினார். செசேரியாவின் பிஷப்பும், அந்நாட்களில் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியருமாக இருந்த இன்னொரு யூஸிபியஸும் ஏரியஸின் போதனைக்குத் தன் ஆதரவைத் தெரிவித்திருந்தார். ஏரியஸை ஆதரிக்கும்படியாக நிக்கோமீடியாவின் யூஸிபியஸ் ஒரு ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தினார். ஆனால் அவரால் அலெக்சாண்டரை ஒருபோதும் தன் பக்கம் இழுக்க முடியவில்லை.

அந்நேரத்தில், அலெக்சாண்டரும் அமைதலாக இருந்துவிடவில்லை. தன்னுடன் இருந்த பிஷப்புகளுக்குத் தொடர்ந்து கடிதங்கள் மூலம் ஏரியஸைப் பற்றி எச்சரித்து வந்தார். இவையெல்லாவற்றின் விளைவாக, அலெக்சாந்தியாவிலும், ரோமப் பேரரசின் கிழக்குப் பகுதி முழுவதிலும் இருந்த திருச்சபைகளில் சச்சரவும் இறையியல் முரண்பாடுகளும் அதிகமாக காணப்பட்டது. பிஷப்புகளுக்கு எதிராக பிஷப்புகளும், திருச்சபை அங்கத்தவர்களுக்கு எதிராக அங்கத்தவர்களும் சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தனர். இறுதியில் இந்த குழப்பமானது ரோமப் பேரரசனான கான்ஸ்டன்டைனை எட்டியது.

கான்ஸ்டன்டைன் மூலமாக கூட்டப்பட்ட கவுன்சில்

கி.பி. 324ல், கான்ஸ்டன்டைன் தன்னுடைய பேரரசின் புதிய தலைநகரான பைசான்டியம் (Byzantium – இதுவே பிறகு கான்ஸ்டான்டிநோபிள் என்று அழைக்கப்பட்டது) என்ற பட்டணத்திற்கு வந்தபோது, கிழக்குப் பகுதியின் திருச்சபைகளில் முரண்பாடுகளின் சூறாவளியும், பிரிவினைகளின் பயமுறுத்தல்களும் இருப்பதைக் கண்டு மிகவும் அதிருப்தியடைந்தார். தன்னுடைய இராஜ்யத்தை ஒன்றிணைக்க அவர் திருச்சபையையே பெரிதும் சார்ந்திருந்தார். ஆகவே பேரரசன் என்ற அடிப்படையில், திருச்சபை ஆலோசனைக் குழுவை நைஸ் என்ற இடத்தில் கூடும்படி செய்தார். ஆகவே இக்குழு நைசீயா கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. தலைநகரான பைசான்டியத்திற்கு அருகில் இருந்ததன் காரணமாகவே நைஸ் என்ற இடத்தை கான்ஸ்டன்டைன் தெரிவு செய்தார். தானும் நேரடியாக அக்குழுவின் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தார்.

அக்காலத்திலிருந்த எல்லாக் கிறிஸ்தவ திருச்சபைகளுடைய பிஷப்புகளும் கலந்துகொண்ட முதலாவது பொதுவான ஆலோசனைக் குழுவாக இந்த நைசீயா கவுன்சில் இருந்தது. இதில் சுமார் 220 பிஷப்புகள் கலந்துகொண்டார்கள். இதில் பெரும்பாலானவர்கள் கிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர்கள். வெகுசிலரே மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில், கான்ஸ்டன்டைனுடைய மிகவும் செல்வாக்குமிக்க ஸ்பெயின் நாட்டு ஆலோசகரான பிஷப் ஹோஸியஸும் (Hosius) இருந்தார். இந்த கவுன்சில், கி.பி. 325, மே மாதத்தின் இறுதியிலிருந்து ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி வரை கூடிவந்தது.

நைசீன் கவுன்சில் நடந்ததை விவரிக்கிற வரைபடம்

  1. ஏரியர்கள் (Arians): இந்த கவுன்சிலில் ஏரியஸும் கலந்து கொண்டார். எனினும், அவருடைய தரப்பினரை நிக்கோமீடியாவின் பிஷப்பாகிய யூஸிபியஸே தலைமையேற்று நடத்தினார். இவர்களுடைய தரப்பினரே இக்கவுன்சிலில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது, இவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
  2. பழமைவாத பெரும்பான்மையினர் (The Conservative Majority): இக்கவுன்சிலில் இப்பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருந்தனர். இக்குழுவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள், ஏரியனிசத்திற்கும், கிறிஸ்துவின் தெய்வீகத்தைப் பற்றிய வேதபூர்வமான சத்தியத்திற்கும் இடைப்பட்ட நிலையைக் கொண்டவர்களாக இருந்தனர். எதன் காரணமாக இந்தக் கவுன்சில் கூட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி இக்குழுவினர் சரியாக அறிந்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். லோகோஸ் ஸ்பெக்யூலேஷன் ஆதரவாளர்களான இவர்கள், தெய்வீகத்தின் மூன்று நபர்களுக்கு இடையிலான தனித்துவத்தையும், அவர்களுடைய அதிகாரத் தன்மையையும் பற்றிய நிலையில் உறுதியாக இருந்தனர். ஆகவே இவர்கள், தெய்வீகத்தின் மூன்று நபர்களுக்கு இடையிலான தனித்துவத்தை நிராகரிக்கிற மொடலிஸ்டிக் மொனாக்கியனிசம் போதனையை வன்மையாக எதிர்த்தனர். இக்கவுன்சிலில் இவர்கள் தரப்பின் முக்கிய பேச்சாளராக இருந்தவர், செசேரியாவின் யூஸிபியஸ்.
  3. திரித்துவ போதனையாளர்கள் (The Trinitarians): இந்த மூன்றாவது பிரிவினரும் இக்கவுன்சிலில் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். மேற்குப் பகுதியைச் சேர்ந்த சில பிஷப்புகளும், ஏரியஸை முற்றாக எதிர்த்தவர்களும் இப்பிரிவில் இருந்தனர். ஸ்பெயினின் பிஷப் ஹோசியஸும் அலெக்சாந்தியாவின் பிஷப் அலெக்சாண்டரும் இவர்களுடைய முக்கிய பிரதிநிதிகளாக இருந்தனர். ஆர்ச்டீக்கன் அத்தநேசியஸும் தன்னுடைய பிஷப்புடன் சேர்ந்து இக்கவுன்சிலில் கலந்துகொண்டார். அத்தநேசியஸுக்கு நேரடியாக இக்கவுன்சிலில் பேசும் அனுமதி இல்லாதிருந்தபோதிலும், அலெக்சாண்டருக்கு உதவியாக வாதப்பிரதாபங்களை தைரியமாக எடுத்துக்காட்டி முக்கிய பங்காற்றினார். அத்தநேசியஸின் இந்தப் பங்களிப்பின் காரணமாக, ஏரியனிச ஆதரவாளர்களால் அவர் குறிவைக்கப்பட்ட நபராக இருந்தார். ஆகவே, இக்கவுன்சில் தொடர்ந்து நடைபெறுகிறபோது, ஏரியனிச ஆதரவாளர்களின் முக்கிய இலக்காக அத்தநேசியஸே பெரும்பாலும் இருந்தார்.

இந்தக் கவுன்சிலின் முடிவு, திரித்துவத்தைப் பற்றிய வேதபூர்வமான நம்பிக்கை கொண்டவர்களை ஊக்கப்படுத்துகிறதாக இருந்தது. ஏரியனிச ஆதரவாளர்கள், அவர்கள் தரப்பின் வாதங்களைத் தைரியமாக எடுத்துரைத்தனர். ஆனால் அவர்களுடைய விசுவாச அறிக்கையை மிக சுலபமாகவும் அதேநேரம் உறுதியாகவும் எல்லாரும் நிராகரித்தனர். ஆகவே கவுன்சிலின் ஏனைய தரப்பினர் ஏரியனிச போதனையாளர்களை எதிர்மறையாக பார்க்க ஆரம்பித்தனர்.

பிறகு, செசேரியாவின் யூஸிபியஸ் தன்னுடைய சபையின் விசுவாச அறிக்கையைச் சமர்பித்தார். அதில் மொடலிஸ்டிக் மொனாக்கியனிசம் போதனைக்கு எதிராக சிலவற்றையும் சேர்த்திருந்தார். இந்த விசுவாச அறிக்கை வேதபூர்வமாக இருந்தபோதிலும், கவுன்சில் எதற்காக கூடியதோ அதற்கான தீர்வை நேரடியாக தரக்கூடியதாக இருக்கவில்லை.

ஆகவே, கான்ஸ்டன்டைன், ஏரியனிசத்திற்கு எதிரான குறிப்புகளையும் கொண்ட ஒரு விசவாச அறிக்கையைச் சமர்பிக்கும்படி சொன்னார். ஒருவேளை, பிஷப் ஹோசியஸ் கான்ஸ்டன்டைனை இந்த விஷயத்தில் ஊக்கப்படுத்தியிருக்கலாம். மறுபடியும் சமர்பிக்கப்பட்ட விசுவாச அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த, கிறிஸ்துவைப் பற்றிய ஒரு முக்கியமான வார்த்தை, இக்கவுன்சிலில் முக்கிய வாதப்பொருளாகியது. அந்த கிரேக்க வார்த்தை “homoousion”. இதற்கான பொருள் “ஒரே தன்மை”. இதன்மூலம், கிறிஸ்து, பிதாவாகிய தேவனுடைய அதே தன்மையைக் கொண்டவர் என்பது உணர்த்தப்பட்டது. ஏரியனிசத்திற்கு எதிரான இந்த வலிமையான வார்த்தை, திருச்சபையை ஒன்றிணைக்கும் என்று கான்ஸ்டன்டைன் நம்பினார். ஏனென்றால், மேற்குப் பகுதியின் அனைத்து திருச்சபைகளும், கிழக்குப் பகுதியின் பெரும்பாலான திருச்சபைகளும் இதை ஏற்றுக்கொண்டனர்.

கிறிஸ்துவின் தெய்வீகத்தைப் பற்றிய முக்கியமான குறிப்பாக, நைசீன் அறிக்கையின் முடிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கீழ்வரும் வரிகளில் கவனியுங்கள். செசேரியாவின் அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்ட வார்த்தைகளை இங்கே அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே, தேவகுமாரனும், பிதாவினுடைய ஒரே பேறுமானவர்; வேறுவிதமாக சொல்லுவதானால், அவர் பிதாவினுடைய தன்மையைக் கொண்டவர். அதாவது, தேவனில் தேவனும், ஒளியில் ஒளியும், கடவுளின் அச்சடையாளங்களைக் கொண்டவரும், கடவுளின் பேறுமானவர். அவர் உண்டாக்கப்பட்டவரல்ல, பிதாவின் அதே சாரத்தைக் கொண்டவர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்.

ஏரியனிசத்தின் கள்ளப் போதனையை நிராகரிக்கின்ற குறிப்புகளும் அவ்வறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இக்கவுன்சிலில் கூடியிருந்த இரண்டு பிஷப்புகளைத் தவிர்த்து ஏனைய எல்லா பிஷப்புகளும், அதாவது ஏரியனிச ஆதரவாளர்களும் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டிருந்தனர். அதில் கையெழுத்திடாத இருவரும், கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையைப் பற்றிய விஷயங்களுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக கையெழுத்திடவில்லை. ஏரியனிச ஆதரவாளர்கள் தங்களுடைய நிலைக்கு எதிராக இதில் கையெழுத்திட்டிருந்தது பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை. ஏரியனிச ஆதரவாளர்கள் ஒழுங்குமுறையான தேவபக்தியை தங்கள் வாழ்வில் கொண்டிருக்கவில்லை. ஏரியனிச ஆதரவாளர்கள் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டிருந்தபோதிலும், வெகுவிரைவிலேயே அதை நிராகரிக்கவும் செய்தனர். இவ்வறிக்கையில் கையெழுத்திடாத இருவரும், ஏரியஸும், அவருடைய ஆதரவாளர்களும் கான்ஸ்டன்டைனால் நாடுகடத்தப்பட்டார்கள். இக்கவுன்சிலின் முடிவு வேதபூர்வமான சத்தியத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே அப்போது கருதப்பட்டது. கான்ஸ்டன்டைன் பெரிதும் விரும்பியதுபோல் திருச்சபையும் ஒன்றுபட்டிருந்தது. மேலும், இதன்மூலம் திருச்சபைக்கான ஒரு உறுதியான, அற்புதமான விசுவாச அறிக்கையும் கிடைத்தது.

எனினும், இந்த முரண்பாட்டில் இது முதலாவது சுற்றுதான். ஏரியனிசத்தின் கள்ளப் போதனையானது வெளிப்படையாக தோலுரித்துக் காட்டப்பட்டிருந்தபோதிலும், நைசீயாவிலிருந்த பழமைவாத பெரும்பான்மையினரின் நடவடிக்கைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறவிதமாகவே இருந்தன. சத்தியத்தின் உறுதியான நம்பிக்கையில் நிலைத்திருப்பதைவிட, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் அதிக இடம் கொடுத்துவிட்டனர். அதன் காரணமாக, நாளடைவில் நைசீன் அறிக்கையிலுள்ள வார்த்தைகளுக்கு வெவ்வேறு விதமான பொருள் கொடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். அது கிறிஸ்துவின் திருச்சபையை இருண்ட காலத்திற்கு வழிநடத்தியது.

இதுவரை பார்த்தவற்றிலிருந்து ஒரு முக்கியமான பயன்பாட்டை அறிந்துகொள்ளலாம். கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள வார்த்தையின் இரகசியங்களை அறிவதற்கு, மனித தத்துவங்களுக்கு அதிகமான இடம் கொடுத்தால், கடவுளுடைய வார்த்தையை நாம் சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் போகக்கூடிய ஆபத்தை ஏரியஸில் நாம் காண்கிறோம். திரித்துவத்தின் இரகசியத்தைப் பற்றி அத்தநேசியஸ் பின்வறுமாறு சொல்லியிருக்கிறார், “திரித்துவ தேவனுடைய ஆடையின் ஓர் ஓரத்தை மட்டுமே மனிதனால் அறிய முடியும்.” ஏரியஸ் திரித்துவ போதனையில் இடறியதற்குக் காரணம், திரித்துவ தேவனில் மூன்று தனித்துவமான நபர்கள் இருந்தபோதிலும், ஒரே கடவுள் மட்டுமே இருக்க முடியும் என்பதற்கு அவருடைய இருதயம் ஒத்துப்போகாதபோது, திரித்துவ தேவனைப் பற்றி கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள வார்த்தையில் சொல்லப்பட்டிருப்பதற்கு அடிபணிவதைவிட்டு, தன்னுடைய பலவீனமான எண்ணத்தின் அடிப்படையில் இறுதி முடிவுக்கு வந்துவிட்டார். “இரண்டுமே” உண்மை என்பதற்கு பதிலாக “ஏதேனும் ஒன்றுதான்” உண்மை என்று முடிவு செய்துவிட்டார். அதன் விளைவாக, கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஒரு பிரிவை உருவாக்க அவர் முற்பட்டார். வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தைக்குட்பட்டு வாழ மனமற்றிருந்தால், நாமும் இப்படியான மோசமான தவறுகளுக்கு உடன்பட்டுவிடுவோம். அவருடைய வார்த்தைக்கு முன்பாக நம்முடைய எண்ணங்களைத் தாழ்த்தும்படி தேவன்தாமே நமக்கு உதவுவாராக.

(தொடரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s