ஆயிரம் வருட அரசாட்சி

பரலோக இராஜ்யமும், தேவனின் இராஜ்யமும்

அநேக டிஸ்பென்சேஷனலிஸ்ட்டுகள் மத்தேயு தன் சுவிசேஷத்தில் அதிகமாக பயன்படுத்தும் ‘பரலோக ராஜ்யம்’ என்ற பதங்களை ‘தேவ இராஜ்யம்’ என்ற பதங்களிலிருந்து வேறுபடுத்தி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏனெனில், பரலோக இராஜ்யம் உலகத்தில் இஸ்ரவேலுக்கு கர்த்தர் ஏற்படுத்தியுள்ள திட்டம் என்றும் அதற்கும் திருச்சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இதன்படி மத்தேயுவில் இயேசு அளிக்கும் போதனைகள், மலைப்பிரசங்கம் உட்பட யூதர்களுக்கு மட்டுமே சொந்தமானதாகவும் அவற்றிற்கும் விசுவாசிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் இவர்களுடைய முடிவு. ஆனால், இந்தப் போதனைக்கு வேதத்தில் இடமில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வேதம், பரலோக இராஜ்யம், தேவ இராஜ்யம் என்ற வார்த்தைகளை ஒரே பொருளைக் குறிக்கும் வார்த்தைகளாகத்தான் பயன்படுத்துகிறதே தவிர டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் விளக்குவதுபோல் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. மத்தேயு தன்னுடைய சுவிசேஷத்தை யூதர்களைக் கிறிஸ்துவுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தை முக்கியமாகக் கொண்டு எழுதியதால் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பரலோக இராஜ்யம் என்ற வார்த்தைகளைத் தன்னுடைய சுவிசேஷத்தில் அதிகம் பயன்படுத்தியுள்ளார். இதற்கும் தேவ இராஜ்யத்திற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் மத்தேயு காணவில்லை.

கர்த்தரின் பரலோக மக்களும், இஸ்ரவேலும்

டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் கர்த்தருடைய பரலோகத்து மக்களுக்கும், இந்த உலகத்தில் இருக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மத்தியில் வேறுபாட்டைக் காண்கின்றனர். கர்த்தரின் பரலோகத்து மக்கள், இவ்வுலகத்து இஸ்ரவேலர் என்று பிரித்துப் போதிக்கின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலரைக்குறித்துக் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள், வாக்குத்தத்தங்கள் எல்லாம் திருச்சபையில் நிறைவேறாமல் இனிவரப்போவதாக அவர்கள் கருதும் இஸ்ரவேலை மையமாகக்கொண்ட ஆயிரம் வருட அரசாட்சியின்போதே நிறைவேறப்போகின்றன. இந்த வாக்குத்தத்தங்கள் இந்த உலகத்தில் இஸ்ரவேல் அனுபவிக்கப்போகும் உலகளாவிய இராஜ்யம், பொருளாதார மேம்பாடு, உலகளாவிய சமாதானம் ஆகியவற்றையே குறிப்பிடுகின்றன என்று இவர்கள் விளக்கமளிக்கிறார்கள். இவையனைத்தையும் எழுத்துபூர்வமாகவே (Literal) நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இவ்வாசீர்வாதங்கள் திருச்சபையின் காலத்தில் நிறைவேற முடியாதென்றும், அவை கிறிஸ்து வந்து இவ்வுலகில் ஏற்படுத்தும் ஆயிரம் வருட ஆட்சியில் நிறைவேறும் என்றும் கூறுகிறார்கள். இது டிஸ்பென்சேஷனலிஸ்டுகளின் ஒரு முக்கிய போதனை. அவர்கள் இஸ்ரவேல் என்ற வார்த்தையை ஒருபோதும் சபையைக் குறித்து பயன்படுத்தக் கூடாதென்றும் அது எப்போதும் இஸ்ரவேலை மட்டுமே குறிக்கும் என்றும் சொல்லுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்கள் அனைத்தும் எழுத்துபூர்வமாக சொல்லுக்குச் சொல் இஸ்ரவேலை அடிப்படையாகக் கொண்டு இந்த உலகத்தில் நிறைவேற வேண்டும். டிஸ்பென்சேஷனலிஸ்டுகளின் வேத விளக்க முறை விநோதமானதாகவும் மெய்யான வேத விளக்க முறைகளுக்கு எதிர்மறையானதாகவும் காணப்படுகின்றன. உண்மையில் வேதத்தில் இஸ்ரவேல் என்ற பதம் நான்கு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதை எழுத்துபூர்வமாக இஸ்ரவேல் நாட்டை மட்டுமே குறிப்பதாகக் கருதுவது வேதவிதிமுறைகளுக்கு எதிரானது.

உபத்திரவகாலத்துக்கு முன் திருச்சபை உயரெடுத்துக்கொள்ளப்படல்

இவர்களைப் பொறுத்தவரையில் கர்த்தரின் திட்டங்களில் திருச்சபை ஒரு தற்காலிக இடைச்செருகலாகக் காணப்படுவதால், இஸ்ரவேலுக்கான அவருடைய திட்டம் எப்படி நிறைவேறப்போகின்றது என்பதை இவர்கள் எப்படி விளக்குகிறார்கள் என்று பார்ப்போம்.

இவர்கள், திருச்சபையின் காலம் கிறிஸ்து தன்னுடைய பரிசுத்தவான்களுக்காக வரும் வகையின்போது முடிவுக்கு வரும் என்று கூறுகிறார்கள். கிறிஸ்துவின் வருகையையும், அவர் முதலில் தன்னுடைய பரிசுத்தவான்களுக்காக வருவார் (for the saints) என்றும், அதன்பிறகு ஏழுவருடங்கள் கழிந்து அவர் தன்னுடைய பரிசுத்தவான்களோடு (with the saints) வருவார் என்றும் பிரித்து விளக்குகிறார்கள். அத்தோடு, 1 தெசலோனிக்கேயர் 4:17ல் நாம் பார்க்கும் கிறிஸ்துவின் வருகை பெரும் மகா உபத்திரவகாலத்துக்கு முன்பு நிகழும் என்பது இவர்களுடைய விளக்கம். இதையே Pre-tribulational rapturism என்று அழைக்கிறார்கள். கிறிஸ்துவின் இவ்வருகையின்போது எல்லா விசுவாசிகளும், உயிர்த்தெழுந்தவர்களும், மறுரூபமாக்கப்பட்டவர்களும், கிறிஸ்துவை வானத்தில் மேகத்தின் மத்தியில் சந்திப்பார்கள் என்று இவர்கள் விளக்குகிறார்கள். அதன்பின் அந்தசபை கிறிஸ்துவோடு பரலோகத்துக்குப்போய் தேவ ஆட்டுக்குட்டியின் கலியாணவிருந்தைக் கொண்டாடுவார்கள் என்றும், அதேநேரம் தானியேலில் 9ம் அதிகாரத்தில் காணப்படும் 70வது வாரம் இந்த உலகத்தில் ஆரம்பிக்கும் என்றும் போதிக்கிறார்கள். இதுவே உபத்திரவகாலம் என்றும் இக்காலத்தில் அந்திக்கிறிஸ்துவின் ஆளுகை இவ்வுலகில் நடைபெறும் என்றும் கூறுகிறார்கள். இக்காலப்பகுதியின் பிற்பாதியில் யூதர்கள் மனந்திருந்துவதோடு, சாத்தானுக்கெதிரான அமர்கெதோன் போரில் கிறிஸ்து பெரு வெற்றி அடைவார் என்றும் கூறுகிறார்கள்.

இவர்கள் 1 தெசலோனிக்கேயர் 4:17ல் நாம் வாசிக்கும் கிறிஸ்துவின் வருகையை ‘இரகசிய வருகை’ (Secret rapture) என்று விளக்கம் கொடுக்கின்றனர். அவருடைய இரகசிய வருகையின்போது பரிசுத்தவான்களும் கண்ணுக்குத் தெரியாத முறையில் மறுரூபமாக்கப்பட்டு வானத்தில் கிறிஸ்துவை சந்திப்பார்கள் என்று விளக்குகிறார்கள்.

ஆயிரம் வருட அரசாட்சி

ஏழு வருட காலப்பகுதியில் இஸ்ரவேலுக்கான கர்த்தரின் திட்டங்கள் தனது நிறைவேற்றுதலை அடையத் தொடங்கி ஆயிரம் வருட அரசாட்சி ஆரம்பிக்கும் என்பது இவர்கள் போதனை. உபத்திரவ காலமான ஏழு வருட காலத்திற்குப்பின்பு கிறிஸ்து மறுபடியும் வரும்போது யூதர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த நாடான பாலஸ்தீனத்தில் கூடி இரட்சிப்பை அடைவார்கள் என்கிறது (ரோமர் 11:26) டிஸ்பென்சேஷனலிசம். இவ்வேளையில் ஆயிரம் வருடங்களுக்கு சாத்தான் முழுமையாக கட்டப்பட்டு இருட்டில் தள்ளப்படுவான் என்றும் இது போதிக்கிறது.

ஆயிரம் வருட அரசாட்சி இரண்டாவது உயிர்த்தெழுதலின்போது (முதலாவது, ஏழு வருட உபத்திரவ காலப்பகுதியில் மடிந்த பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதல். இரண்டாவது, மிகுதியாக இருக்கும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்) ஆரம்பிக்கிறது என்று டிஸ்பென்சேஷனலிசம் கூறுகிறது. இவ்வாறு உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள், மேலெடுத்துக் கொள்ளப்பட்ட சபையோடு பரலோகத்தில் வாழ்ந்து ஆள்வார்கள் என்றும், அதேவேளை யூத பரிசுத்தவான்கள் இந்த உலகத்தில் எருசலேமில் இருந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருடங்கள் அரசாளுவார்கள் என்றும் போதிக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் இரண்டு நியாயத்தீர்ப்புகள் நடைபெறும் என்றும், ஒன்று ஏழுவருட காலப்பகுதியில் பரிசுத்தவான்களைத் துன்புறுத்திய புறஜாதியாருக்கும் (மத்தேயு 25:1-46), இரண்டாவது இஸ்ரவேலுக்கும் (எசேக்கியேல் 20:33-38) நிகழும் என்கிறது இப்போதனை. இந்த ஆயிரம் வருடகாலத்தில் பொருளாதார விருத்தியும், மேம்பாடும் ஏற்பட்டு, உலகளாவிய சமாதானத்தை அனுபவித்து இஸ்ரவேல் உலகத்தில் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களினதும், ஆசீர்வாதங்களினதும் நிறைவேற்றுதலை அனுபவிக்கும் என்கிறது டிஸ்பென்சேஷனலிசம். இந்த ஆயிரம் வருட காலப்பகுதியின் முடிவில் சாத்தானின் சிறிய காலப்பகுதியில் பெயரளவில் விசுவாசிகளாக இருப்போர் அவனுடன் சேர்ந்து கிறிஸ்துவை எதிர்ப்பார்கள். ஆனால், முடிவில் கிறிஸ்து அவர்களை அழிப்பார். இந்த ஆயிரம் வருட ஆட்சி முடிவில் இந்தக் காலப்பகுதியில் உயிரிழந்த பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுவார்கள். அத்தோடு அவிசுவாசிகளின் இரண்டாவது உயிர்த்தெழுதலும் நிகழும். அவிசுவாசிகள் மகா வெள்ளை சிம்மாசனத்தின் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டு சாத்தானுடன் நரகத்தில் தள்ளப்படுவார்கள். எல்லா விசுவாசிகளும் (சபையும், இஸ்ரவேலும்) பரலோக எருசலேம் உலகில் ஏற்பட நித்திய நிலையை அடைவார்கள். இதுவே டிஸ்பென்சேஷனலிசத்தின் போதனை.

இதன் குறைபாடுகள்:

  1. எழுத்துபூர்வமான வேதவிளக்கமுறையை அதன் பொருள் புரியாமல் தவறாகப் பயன்படுத்தி வேதத்திற்கு விளக்கமளிக்கிறது டிஸ்பென்சேஷனலிசம். இந்தத்தவறான வேத விளக்க முறையே டிஸ்பென்சேஷனலிசத்தை அதன் ஏனைய எல்லாத் தவறான போதனைகளுக்கும் வழி நடத்திச் செல்கிறது.
  2. கர்த்தருடைய மக்களை பழைய ஏற்பாட்டு மக்கள், புதிய ஏற்பாட்டு மக்கள் என்று இரண்டு பிரிவுகளாக வேதத்திற்கு விரோதமாகப் பிரித்துக் காட்டுகிறது. இரட்சிப்பு பலவிதங்களில் பாவிகளுக்கு வரும் என்று போதித்து வேதம் போதிக்கும் எல்லாருக்கும் ஒரே விதத்தில் அமைந்த கிருபையால் விசுவாசத்தின் மூலம் மட்டுமே இரட்சிப்பு என்ற வேதபோதனையை நிராகரிக்கிறது.
  3. பழைய ஏற்பாட்டிற்கும் திருச்சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இது விளக்குகிறது. ஆனால், உண்மையென்னவென்றால் பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாடு போல திருச்சபை ஒரு நிறுவனமாக அமைக்கப்பட்டு காணப்படாவிட்டாலும், பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் திருச்சபையின் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். ஆகவே, பழைய ஏற்பாட்டில் நாம் நிச்சயம் திருச்சபையைப் பார்க்கிறோம் (விசுவாசிகளைக் கொண்டதே சபை).
  4. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களும், வாக்குத்தத்தங்களும் இஸ்ரவேலுக்கு மட்டுமே பொருந்தும் என்று போதிக்கிறது. இது வேதத்தை இரண்டாகப் பிரித்து பழைய புதிய ஏற்பாடுகளுக்கிடையில் உள்ள பிரிக்கமுடியாத ஒற்றுமையைக் குழைக்கிறது. உண்மையில் பழைய ஏற்பாட்டுப் போதனைகள் கிறிஸ்துவில் நிறைவேறி புதிய ஏற்பாட்டு மக்களுக்கு ஆசீர்வாதங்களாக அமைந்திருக்கின்றன.
  5. கர்த்தருடைய திட்டங்களில் திருச்சபை ஒரு தற்காலிகமான இடைச்செருகல் மட்டுமே என்ற தவறான போதனையைத் தருகிறது. இவர்கள் கிறிஸ்துவின் திருச்சபைக்கு மதிப்பளிப்பதில்லை. ஆனால், திருச்சபையே கர்த்தரின் திட்டங்கள் எல்லாவற்றிலும் மேலான இடத்தை வகிக்கின்றது (எபேசியர் 1:20-22).
  6. பரலோக இராஜ்யம், தேவனுடைய இராஜ்யம் என்று இரண்டிருப்பதாக இது போதிக்கிறது. ஆனால், இவை இரண்டும் ஒன்றையே குறிக்கும் பதங்கள்.
  7. கிறிஸ்துவின் வருகை இரண்டாக இருக்குமென்றும், இரண்டு உயிர்த்தெழுதல்கள் இருக்குமென்றும் வேதத்தில் இல்லாததை இது போதிக்கிறது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஒரு முறை மட்டுமே நிகழும். அத்தோடு ஒரே முறை மட்டுமே உயிர்த்தெழுதலும் நிகழும்.
  8. கிறிஸ்துவின் வருகை எவர் கண்ணுக்கும் தெரியாத இரகசிய வருகையாக இருக்குமென்றும், அப்போது பரிசுத்தவான்கள் கண்ணுக்குத் தெரியாத முறையில் மறுரூபமாக்கப்படுவார்கள் என்றும் தவறாகப் போதிக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 4:17ல் கிறிஸ்துவின் வருகை எல்லோரும் கண்களால் பார்க்கக்கூடியதாகவும், எக்காளச்சத்தம் எல்லோர் காதுகளிலும் விழக்கூடியதாகவும் இருக்கும் என்று பவுல் விளக்குகிறார்.
  9. இந்த உலகில் யூதர்களுக்கான ஆயிரம் வருட அரசாட்சி இஸ்ரவேலைக் கொண்டு நடக்கும் என்றும் இது தவறாகப் போதிக்கிறது.

ஆ-மிலேனியலிசம் (A-Millenialism)

இது வெளிப்படுத்தல் நூலின் ஆயிரம் வருடங்களை கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட நீண்ட காலத்தைக் குறிக்கும் ஒரு அடையாள மொழியாகக் கருதுகிறது. ஆகவே, ஆயிரம் வருடத்தை எழுத்துபூர்வமாக இது எடுத்துக் கொள்வதில்லை. வெளிப்படுத்தல் விசேஷம் அடையாள மொழிகள் நிறைந்த புத்தகமாதலால் ஆயிரம் வருடங்களை எழுத்துபூர்வமாக விளக்கக்கூடாது என்கிறது இந்த வேதவிளக்க முறை. ஆயிரம் வருடங்களை இது நிராகரிக்கவில்லை. ஆனால், அதை எழுத்துபூர்வமாக விளக்கக்கூடாது என்றுதான் இது கூறுகிறது.

இவ்விளக்கத்தின்படி கிறிஸ்துவின் வருகையோடு ஆயிரம் வருடங்கள் ஆரம்பித்து விட்டது. இந்த ஆயிரம் வருட காலப்பகுதியில் கிறிஸ்துவும் அவருடைய மக்களும் பரலோகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் இந்த உலகத்தில் நற்செய்தி தங்கு தடையின்றி எங்கும் பிரசங்கிக்கப்படுகின்றது. இந்த உலகத்தில் திருச்சபை அமைக்கப்பட்டு அது வளர்ந்து கொண்டே போகும். நற்செய்திப்பணியால் பெரு வெற்றிகளையும், அதேநேரம் மந்தமான நிலையையும் உலகம் சந்திக்கும். விசுவாசிகள் இக்காலமுழுவதும் நன்மை, தீமை இரண்டையுமே சந்திப்பார்கள். அவிசுவாசிகளின் துன்பத்திற்கும் ஆளாவார்கள். இந்த நீண்ட காலப்பகுதியில் சாத்தான் கொட்டம் அடக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருக்கிறான். ஆயிரம் வருடங்கள் நிறைவடையும்போது அவன் கொஞ்சக்காலத்துக்கு விடுதலை செய்யப்பட்டு நாடுகளை தன்வசமாக்கி திருச்சபையை அநேக துன்பங்களுக்குள் இட்டுச் செல்வான். இது கொஞ்சக்காலமாகத்தான் இருக்கும். இக்காலமுடிவில் இயேசு இரண்டாம் தடவையாக இவ்வுலகுக்கு வந்து தன்னுடைய திருச்சபையை உயரெடுத்துக்கொள்வார். அப்போதே எல்லோரும் நியாயத்தீர்ப்பைச் சந்தித்து விசுவாசிகள் வெகுமதியையும், அவிசுவாசிகள் நித்திய தண்டனையையும் இராஜாவாகிய இயேசுவிடம் இருந்து பெற்றுக்கொள்வார்கள். அதன் பின் புதிய உலகமும், புதிய வானமும் சிருஷ்டிக்கப்படும்.

இந்த விளக்கம் வேதபோதனைகளுடன் பொருந்திப்போவதாகவும், வேதபோதனைகளுக்கு ஏற்ற முறையிலும் இருக்கின்றது. சீர்திருத்த கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் விசுவாசிக்கும் விளக்க முறையாக இது மட்டுமே இருக்கின்றது. வில்லியம் ஹென்றிக்சன், ரொபட் ரேமன்ட், லூயிஸ் பேர்கொப், வேர்ன் பொய்த்தரஸ், கொர்னேலியஸ் வெனீமா, ஹேர்மன் ஹொக்சீமா, மார்டின் லொயிட் ஜோன்ஸ், ஜே அடம்ஸ் போன்றோர் இந்த விளக்க முறையையே ஆதரிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

One thought on “ஆயிரம் வருட அரசாட்சி

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s