கிறிஸ்தவ வைராக்கியமும், ஜெபமும்

பக்தி வைராக்கியம் – 10

– டேவிட் மெரெக் –

[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]

இந்த ஆக்கத்தில், கிறிஸ்தவ வைராக்கியத்தை நமக்குக் காட்டக் கூடிய மேலும் சில உதாரணங்களைப் பார்க்கப்போகிறோம். இந்த உதாரணங்களில் கிறிஸ்தவ வைராக்கியத்தின் ஒரு முக்கியமான சிறப்பான அம்சத்தில், கவனம் செலுத்தப்போகிறோம் – “கிறிஸ்தவ வைராக்கியமும் ஜெபமும்.”

என்னுடைய ஆய்வின்படி, புதிய ஏற்பாட்டில் ஜெபத்தைப் பற்றிய போதனைக்கும் நாம் படித்துவருகிற கிறிஸ்தவ வைராக்கியத்தின் மைய நோக்கமாகிய “கொதிக்கிற சூடான” என்ற வார்த்தைக் குடும்பத்திற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை. ஆயினும், கிறிஸ்தவ வைராக்கியத்திற்கும் ஜெபத்திற்கும் வேதபூர்வமான எந்தத் தொடர்பும் இல்லை என்று இதற்கு பொருளல்ல. முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கடவுளைத் தேட வேண்டுமென்று அவர் நமக்குக் கட்டளையிட்டிருப்பதாக ஏற்கனவே நாம் படித்திருக்கிறோம். இந்தவிதமாக அவரைத் தேடுகிற யாவரும் அவரைக் கண்டடைவார்கள் என்று அவர் வாக்களித்திருக்கிறார்.

உபாகமம் 4:29
அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.

எரேமியா 29:13
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

நிச்சயமாக அத்தகைய முழு இருதயத்துடனான ஜெபம் வைராக்கியமான ஜெபமே. ஜெபம், பக்தி வைராக்கியத்தின் உட்கருத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக வேதத்தின் பல பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பக்தி வைராக்கியத்தையும் ஜெபத்தையும் பற்றிய பாடத்திற்கு ஆரம்பமாக இரண்டு பொதுவான வேதப்பகுதிகளைப் பார்த்துவிட்டு பிறகு இவை இரண்டிற்கும் இடையே இருக்கிற தொடர்பை விளக்கும் மூன்று வேதப்பகுதிகளைக் கவனிக்கலாம்.

ரோமர் 12:11-12
11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். 12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

எப்போதாவது ஒரு முறை மட்டும் ஜெபம் செய்யும்படி பவுல் இவ்வசனத்தில் நம்மை வற்புறுத்தவில்லை. ஜெபத்தில் தொடர்ந்து உறுதியாய்த் தரித்திருக்கும்படி பவுல் இங்கு குறிப்பிடுகிறார். உறுதியாய் தரித்திருங்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை கிரெக்க மொழியில் ஒரே வார்த்தையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தை, ஒட்டிக்கொண்டிருந்தல், ஈடுபாடோடிருத்தல், நிலைதடுமாறாமல் கவனத்தோடிருத்தல், சோர்வின்றி விடாமுயற்சியோடு இருத்தல் என்பதையெல்லாம் உள்ளடக்கமாகக் கொண்டது. ஆகவே நாம் தொடர்ச்சியாக ஜெபிப்பதுமட்டுமல்லாமல் விடாமுயற்சியுடனும் ஜெபிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். நாம் நிரந்தரமாக நிலைத்தடுமாறாமல் ஜெபத்தில் ஈடுபடுகிறவர்களாக இருக்க வேண்டும். எனினும் நம்முடைய இருதயத்தைப் பற்றி நமக்குத் தெரியும். நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், ஜெபத்தில் இந்தவிதமாக உறுதியாய் இருப்பதிலிருந்து நம்முடைய இருதயம் எவ்வளவு இலகுவாக நழுவிச் சென்றுவிடுகிறது என்பதை நாம் அறிவோம். வசனம் 11ல் சொல்லியிருப்பதுபோல் நம்முடைய இருதயங்களில் பக்தி வைராக்கியம் இல்லாவிட்டால் நம்முடைய சரீரத்திற்கு எதிராகச் செல்லக்கூடிய இத்தகைய ஆவிக்குரிய ஒழுங்கில் விடாமுயற்சியோடு நம்மை ஈடுபடுத்திக்கொள்ளுவது முற்றிலும் இயலாத காரியம். இத்தகைய பக்தி வைராக்கியம் மட்டுமே எது நடந்தாலும் நம்மை கட்டுப்படுத்தி முழு இருதயத்தோடு அவருடைய இராஜ்ய வளர்ச்சிக்காகவும், அவருடைய மக்களின் நலனுக்காகவும், நம்முடைய தனிப்பட்ட நலனுக்காகவும் கடவுளிடம் முறையிட வைக்கும். உண்மையில், ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்பதும், ஜெபத்தில் பக்தி வைராக்கியமாய் இருப்பதும் பிரிக்க முடியாதவைகள்.

கொலோசெயர் 4:2
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.

இடைவிடாமல் ஜெபம்பண்ணுபடி கொலோசெய விசுவாசிகளை பவுல் வற்புறுத்துகிறார். இடைவிடாமல் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, ரோமர் 12:12ல் இருக்கும் அதே கிரேக்க வார்த்தையே இங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதோடு சேர்த்து, ஜெபத்தில் நன்றியோடு ஜாக்கிரதையாகவும் அல்லது விழிப்புடனும் அல்லது எச்சரிக்கையாவும் இருக்கும்படி பவுல் இங்கு குறிப்பிடுகிறார். ஜெபம் செய்வதற்கு நாம் மிகுந்த கவனம் காட்ட வேண்டும், அதற்கு தடையாக எதையும் அனுமதிக்கக் கூடாது. அத்தகைய ஊக்கமான ஜெபம், அது வெறுமனே தானாக நடந்துவிடாது. இது நம்முடைய ஆவிக்குரிய பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது. விசுவாசிகள் என்ற பெயரில், ஜெபமில்லாமல், தூங்கிவழிகிறவிதமான ஒரு சறுக்கலான வாழ்க்கை வாழக்கூடாது. ஜெபம் பண்ணுவதைப் பற்றி நாம் விழிப்புடனும் ஆர்வத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். ஆகவே, நாம் ஜெபிக்க வேண்டியபடி ஜெபிப்பதற்கு வைராக்கியம் அவசியமாயிருப்பதை இவ்வசனத்தின் மொழிநடை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. இதுகுறித்த சில உதாரணங்களை இப்போது நாம் பார்ப்போம்.

முதலாவதாக, கொலோசெயர் 4:12ல் (ரோமர் 12.12) பவுல் வலியுறுத்துகிறவிதமாக, புதிய ஏற்பாட்டு சுவிசேஷ ஊழியர்களில் ஒருவர் வாழ்ந்திருப்பதை நாம் பார்க்கலாம்.

1. எப்பாப்பிரா

கொலோசெயர் 4:12-13
12 எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். 13 இவன் உங்களுக்காகவும், லாவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.

யார் இந்த எப்பாப்பிரா? கொலோசெய நிருபம் எழுதப்பட்ட அதே காலப்பகுதியில், சிறைவாசத்தின் போது எழுதப்பட்ட வேறொரு நிருபத்தை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், அப்போஸ்தலனாகிய பவுலோடு கிறிஸ்துவுக்காக சிறையில் இருந்தவர் என்பதை நாம் அறியலாம்.

பிலேமோன் 23
கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்

வேறுவிதமாக சொல்லுவதானால், எப்பாப்பிரா உண்மையுள்ள சுவிசேஷ ஊழியம் செய்ததன் காரணமாக தற்போது சிறையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கொலோசெய நிருபத்தில் இதற்கு முன்பு ஒரு முறை எப்பாப்பிரா பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கொலோசெயர் 1:5-8
5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். 6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; 7 அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்; 8 ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.

கொலோசெய விசுவாசிகளுக்காக உண்மையுடன் ஊழியம் செய்த அன்பார்ந்த சக ஊழியன் என்று பவுல் எப்பாப்பிராவைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறார். கடவுளுடைய கிருபையுள்ள சுவிசேஷத்தை அவர்களுக்கு கொண்டு சென்றதன் மூலம் அவர் உண்மையுள்ள ஊழியராக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எப்பாப்பிரா அந்த ஊரைவிட்டுச் சென்றதோடு அவருடைய உண்மையுள்ள ஊழியம் முடிந்துவிடவில்லை. நாம் பார்த்து வரும் வசனப்பகுதியின்படி, கொலோசெயர் 4:12-13, அவர்களுக்காக ஜெபிக்கிற ஊழியத்தின் மூலமாக தொடர்ந்தும் அவர்களுக்கு உண்மையுள்ள ஊழியத்தைச் செய்து வருகிறார். அவருடைய ஜெப ஊழியத்திலுள்ள பல சிறப்பம்சங்களை கவனியுங்கள்.

  • எப்பாப்பிரா தன்னுடைய ஜெப ஊழியத்தில் தெளிவான வைராக்கியங் கொண்டிருந்தார். இங்கு, கொலோசெயர் 4:2ல் குறிப்பிடப்பட்டுள்ள “இடைவிடாமல்” என்ற வார்த்தை கொடுக்கப்படவில்லை. ஆனால் அதன் உட்கருத்தே இங்கும் இருக்கிறது. இங்கு பவுல், அவர்களுக்காக எப்பொழுதும் ஜெபத்தில் போராடுகிறவனாக இருக்கிறான் என்கிறார். “எப்பொதும் போராடுகிறான்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை கிரேக்க வினைச்சொல்லில் ஒரே வார்த்தையாக இருக்கிறது. இந்த வார்த்தை, ஒன்றை அடைவதற்காக விடாமுயற்சியுடனான வைராக்கியத்துடன் போராடுவதன் உட்கருத்தைக் கொண்டது. வேறுவிதத்தில் சொல்லுவதானால், எப்பாப்பிராவின் ஜெப ஊழியம் விடாமுயற்சியுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் கடின உழைப்போடு இருந்தது. இது பக்தி வைராக்கியத்தை உள்ளடக்கியது.
  • எப்பாப்பிரா தன்னுடைய வைராக்கியமான ஜெப ஊழியத்தில் விடாமுயற்சியுடன் இருந்தார். ஜெபத்தில் அவருடைய ஊக்கமான உழைப்பு ஆரம்பத்தில் மட்டும் இருந்துவிடவில்லை. அல்லது, ஆரம்பித்து இடையில் நிறுத்திவிட்டு, பிறகு மறுபடியும் துவங்குகிறதாக இருக்கவில்லை. அவர் எப்போதும் ஜெபத்தில் ஊக்கமாக போராடுகிறவராக இருந்தார். இது ஜெபத்தில் விடாமுயற்சியுடனான வைராக்கியமாக இருந்தது.
  • எப்பாப்பிராவின் ஜெப ஊழியம் சுயநலமில்லாத, கடவுளுடைய ராஜ்யத்தைச் சார்ந்ததாக இருந்தது. அவர் அப்போஸ்தலனாகிய பவுலோடு சிறையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இருந்தும், அவருடைய சொந்த தனிப்பட்ட உபத்திரவங்களைப் பற்றிய எண்ணத்தோடு மட்டும் இருந்துவிடவில்லை. சுய பரிதாபம் என்கிற கடலில் அவர் மூழ்கிவிடவில்லை. மாறாக, ஜெபத்தில் கொலோசெய விசுவாசிகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார். மேலும், அவருடைய ஜெபத்தில் அவர்களுடைய தற்காலிக நலனைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய ஆவிக்குரிய நலனே அவருடைய முதன்மையான கவலையாக இருந்தது. அவர்கள் கடவுளுடைய சித்தத்தில் பூரணமாகவும் முழுமையாக நிலைத்திருக்கும்படியும் ஜெபித்துக் கொண்டிருந்தார். அத்தோடு, ஒரு உள்ளூர் சபை விசுவாசிகளை மட்டும் உள்ளடக்கியதாக அவருடைய ஜெப ஊழியம் இருந்துவிடவில்லை. லவோதிக்கேயாவிலும் எராப்போலியிலும் இருக்கிற விசுவாசிகளுடைய நலன்களிலும் ஆழ்ந்த அக்கறைக்கொண்டு ஜெபித்து வந்தார். விசுவாசிகள்மீதும் தன்னுடைய இரட்சகர்மீதும் அவருக்கிருந்த இருதயப்பூர்வமான அன்பின் வெளிப்பாடாகவே அவருடைய வைராக்கியமுள்ள ஜெப ஊழியம் இருந்தது.
  • எப்பாப்பிரா, தன்னைக்  கிறிஸ்துவினுடைய ஊழியனாக எண்ணி, வைராக்கியமுள்ள ஜெப ஊழியத்தைச் செய்து வந்தார். வசனம் 12ல் பவுல் அவரை கிறிஸ்துவின் ஊழியக்காரன்  என்று குறிப்பிடுகிறார். ரோமர் 12:11ல் நாம் பார்த்ததுபோல், இங்கே ஜெபத்தில் அவருடைய வைராக்கியத்தை உந்தித்தள்ளியது எது என்பதைப் பார்க்கலாம். அது, தன்னுடைய தலைவனும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவுக்காக மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் அப்படி செய்து வந்தார். யாருக்காக அவர் தன்னையே கொடுத்திருந்தாரோ, யார் அவருக்கு எல்லாமாக இருந்தாரோ அவருக்கே அவர் ஊழியம் செய்தார். ஆகவேதான் அவரது வைராக்கியமுள்ள ஜெப ஊழியம் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தது.
  • எப்பாப்பிரா ஒரு சாதாரண கிறிஸ்தவனாக இருந்தே தன்னுடைய வைராக்கியமான ஜெப ஊழியத்தைச் செய்து வந்தார். அவர் மற்ற கிறிஸ்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அசாதாரண பரிசுத்தவானல்ல. வசனம் 12ல் பவுல், அவரை தங்களோடு ஒருவர் என்கிறார். வேறுவிதமாக சொல்லுவதானால், அவரும் கொலோசெ பட்டணத்திலிருந்து வந்தவர். ஏனையோரைப் போல அவரும் மற்றொரு விசுவாசியாகவே இருந்தார்.

எனவே, ஜெபத்தில் கிறிஸ்தவ வைராக்கியம் கொண்டிருப்பதற்கான ஒரு அற்புதமான உதாரணமாக எப்பாப்பிரா இருக்கிறார். குறிப்பாக போதகர்களாகிய நமக்கு அவர் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். கடவுளுடைய மக்களுக்காக போதக ஜெபம் செய்யும்படியான பக்தி வைராக்கியம் கொள்ளும்படி அவர் நம்மை அழைக்கிறார். அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:4ல் அப்போஸ்தலர்களால் அடையாளங்காட்டப்பட்ட சுவிசேஷ ஊழியத்தின் இரண்டு மைய பணிகளை உண்மையுடன் நிறைவேற்றி, நமக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எப்பாப்பிரா.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:4
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.

இதில், “இடைவிடாமல் தரித்திருப்போம்” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். ரோமர் 12:12லுள்ள “உறுதியாய் தரித்திருங்கள்” மற்றும் கொலோசெயர் 4:2லுள்ள “இடைவிடாமல்” என்ற வார்த்தைகளுக்கான கிரேக்க வார்த்தையே இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. போதகர்களாகிய நாம் பொதுவாக கடவுளுடைய ராஜ்யத்திற்காகவும், குறிப்பாக நம்முடைய ஊழியத்தின் கீழுள்ள கடவுளுடைய மக்களுக்காகவும் தொடர்ந்து ஜெபத்தில் ஈடுபடும்படியே அழைக்கப்பட்டிருக்கிறோம். இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. இத்தகைய தொடர்ச்சியான வைராக்கியமுள்ள ஜெபம் நம்முடைய ஊழியத்தின் மையப் பகுதியாக இருக்கிறதா? எப்பாப்பிராவைப் போல நாமும் இதில் உண்மையாக ஈடுபட்டு, அதனிமித்தம் விடாமுயற்சியுடன் அதில் உழைக்கிறோமா? அல்லது இத்தகைய ஜெபம் நம்மில் எப்போதாவது இடையிடையில் மட்டும் இருந்துவிடுகிறதா? இந்த ஊழியத்தில் வைராக்கியத்தை தக்கவைத்துக்கொள்ளுவதென்பது இலகுவானதல்ல என்பதை நம்முடைய அனுபவங்களே நமக்குச் சொல்லுகின்றன. இது தொடர்ச்சியான கவனத்தையும் கடின உழைப்பையும் உள்ளடக்கியது. இதிலிருந்து நம்முடைய கவனத்தை சிதற வைக்கக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. இணையதளம் பயன்படுத்தும் வசதியிருந்தால், ஈமெயில் வாசிப்பது, சமூக வலைதளங்களைப் பார்ப்பதென்பது ஜெபத்திற்கு இடையூறாக வந்துவிடும். பிறகு நம்முடைய ஜெப நேரம் சுருங்கிவிடும் அல்லது ஜெபிக்காமலேயே இருந்துவிடுவோம். ஜெபிப்பதைவிட இலகுவான அநேக விஷயங்கள் இருக்கின்றன. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதோடு ஜெபத்தில் ஈடுபடுவதற்காகவும் சுவிசேஷ ஊழியர்களாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவின் ஊழியனாக அவரோடு நமக்குள்ள உறவே நம்மை கட்டுப்படுத்தி அதைச் செய்யும்படி நம்மை அழைக்கிறது. நாம் மனந்திரும்பவும், இந்த விஷயத்தில் நம்முடைய ஊழியத்திலுள்ள குறைகள் நீங்க கடவுள் தாமே நமக்கு உதவுவாராக.

கிறிஸ்தவ வைராக்கியத்தையும் ஜெபத்தையும் பற்றிய மேலும் சில பகுதிகளைச் சுருக்கமாக நாம் பார்க்கலாம்.

2. எருசலேமில் கூடிவந்த முதலாவது உள்ளூர் திருச்சபை

இங்கே நான் சுருக்கமாக மூன்று வசனப்பகுதிகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அ. ஈடுபாட்டோடு கூடிவந்து ஜெபித்ததன் விளைவாக முதலாவது உள்ளூர் திருச்சபை உருவானது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:14
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட  ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

இயேசு பரலோகத்திற்கு திரும்பிச் சென்ற பிறகு, 120 சீஷர்கள் (வசனம் 15) எருசலேமில் ஒரு மேலறையில் கூடியிருந்தனர். எழுத்துபூர்வமாக, “தொடர்ந்து ஈடுபாட்டோடு ஜெபித்து வந்தார்கள்” என்று அவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. ரோமர் 12:12லும் மற்றும் பிற வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தைதான் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜெபத்தில் ஈடுபடும்படி மிகுந்த அர்ப்பணிப்போடு மட்டும் கூடிவந்த கூட்டமாக இந்தக் கூட்டம் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் அதில் பங்குக்கொண்டார்கள். இந்நாட்களில் சில கிறிஸ்தவ குழுக்கள் செய்வதுபோல் அவரவருடைய தனிப்பட்ட சொந்த விஷயங்களை சத்தம்போட்டு சொல்லும், பாபேலில் ஏற்பட்டது போன்ற குழப்பமான காரியங்களுக்காக அவர்கள் ஜெபிக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். மாறாக, அவர்கள் யாவரும் ஒருமனப்பட்டு ஜெபிக்கும்படியாக தொடர்ந்து கூடிவந்தார்கள். இது நிச்சயமாக அவர்களுடைய ஜெபக்குறிப்புகளும் ஒன்றாக இருந்திருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஆகவே ஒருவர் ஜெபத்தை நடத்த, மற்றவர்கள் அமைதலோடு தங்கள் இருதயத்தில் இணைந்திருந்தனர். இந்த விஷயத்தில், அவர்களுடைய இணைந்த ஜெபத்திற்கு ஆண்டவர் பதிலளித்தார். பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியாகிய வரம் இந்த புதிய திருச்சபையில் ஊற்றப்பட்டு, அன்று ஒரேநாளில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டு, திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். உண்மையில் இந்த உள்ளூர் திருச்சபை, ஈடுபாட்டோடு அவர்கள் செய்த கூட்டு ஜெபத்தினால் உருவானது.

ஆ. முதலாவது உள்ளூர் திருச்சபையில் தொடர்ச்சியான கூட்டு ஜெபம் இருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:41-42
41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர்களின் தலைமையின் கீழ், கிறிஸ்துவால் இவ்வுலகில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது உள்ளூர் திருச்சபையின் முக்கிய நடவடிக்கைகள் இங்கு பட்டியலிடப்பட்டு தரப்பட்டுள்ளன. இந்த விசுவாசிகள் அப்போஸ்தலருடைய போதனையிலும், ஐக்கியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபத்திலும் உறுதியாய் தரித்திருந்தார்கள் (ரோமர் 12:12லும் அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:14லும் பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தை). இந்த முதலாவது திருச்சபையின் மற்ற நடவடிக்கைகளைப் போலவே கூட்டு ஜெபத்திலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்கள். உண்மையில், திருச்சபையின் தொடர்ச்சியான நடவடிக்கையின், மையமாக இருப்பது கூட்டு ஜெபமே.

இ. முதலாவது உள்ளூர் திருச்சபை குறிப்பாக நெருக்கடியான காலங்களிலெல்லாம் ஜெபத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1-5
1 அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி; 2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். 3 அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது. 4 அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். 5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.

இங்கே முதலாவது உள்ளூர் திருச்சபையானது ஒரு உண்மையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அப்போஸ்தலர்களில் ஒருவரான யாக்கோபுவை பொல்லாத ஏரோது ஏற்கனவே கொலை செய்துவிட்டான். பேதுருவும் சிறையில் இருந்தார். வசனம் 5, பேதுருவுக்காக அவர்கள் ஊக்கத்தோடு ஜெபித்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே நாம் பார்த்த “கொதிக்கிற சூடான” என்ற வார்த்தையைவிட வித்தியாசமான வார்த்தை கொடுக்கப்பட்டுள்ளது. இது 1 பேதுரு நிருபத்தில் ஊக்கமாக அன்புகூருங்கள் என்ற கட்டளையில் கொடுக்கப்பட்டுள்ள “நீட்டுதல்” என்ற வார்த்தை குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வார்த்தை குடும்பத்தில் “இழுத்து நீட்டுதல்” என்பது உள்ளடக்கமாக இருக்கிறது. இதனடிப்படையில், இந்த வார்த்தை குடும்பத்தில் ஊக்கமான, ஆர்வமான, தீவிரமான, பெரும் அக்கறையான, விடாமுயற்சியுடன் என்ற உட்கருத்து இருக்கிறது. அந்தத் திருச்சபையின் வைராக்கியமான ஜெபத்தின் விளைவாக, பேதுருவைக் கொலை செய்யும்படி ஏரோது திட்டமிட்டிருந்த அந்த இரவில் கடவுள் அற்புதமாக அவரை வெளியில் கொண்டுவந்தார். அவர்களுடைய ஜெபத்தின் விளைவாக பேதுரு வெளியில் கொண்டுவரப்பட்டது ஆச்சரியமானதாக இருந்ததால், ஜெபித்த அந்த விசுவாசிகளால் முதலில் அதை நம்ப முடியவில்லை. உண்மையில், பெரிய நெருக்கடியான அந்நேரத்தில், கடவுள் தம்முடைய திருச்சபையின் வைராக்கியமான கூட்டு ஜெபத்தை ஆசீர்வதித்தார். ஆர்வத்துடன் ஜெபித்தவர்களின் நம்பிக்கைக்கு மேலாக கடவுள் தம்முடைய கிருபையைக் காட்டினார்.

இந்த முதலாவது உள்ளூர் திருச்சபையில் நாம் பார்த்தவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதென்ன? உள்ளூர் திருச்சபையின் தொடர்ச்சியான நடவடிக்கையிலும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஒட்டுமொத்த திருச்சபையும் வைராக்கியத்துடனும், ஈடுபாட்டுடனும், தொடர்ந்தும் கூட்டு ஜெபம் செய்வதென்பது மைய நடவடிக்கையாக இல்லாவிட்டால், அத்திருச்சபையில் ஏதோ மோசமான தவறு இருக்கிறது என்றே அர்த்தம். தேவராஜ்யத்தின் பணிகளாகிய சுவிசேஷ பணிகளிலும் சபை நாட்டும் பணிகளிலும் ஈடுபடும்போது திருச்சபை ஊக்கமான ஜெபத்தில் ஈடுபடாவிட்டால் அங்கு ஏதோ சரியில்லை என்றே அர்த்தம். உள்ளூர் திருச்சபைகளில் ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளுபவர்களின் எண்ணிக்கை சரிந்துவருகிறபோதும் அல்லது ஜெபக்கூட்டம் முற்றாக நிறுத்தப்படுகிறபோதும் அத்திருச்சபையின் ஆவிக்குரிய பின்னடைவை காட்டும் அடையாளம் என்பதே என்னுடைய அனுபவத்தில் நான் கண்டதாகும். நம்முடைய உள்ளூர் திருச்சபைகளில் கூட்டு ஜெபம் எப்படியிருக்கிறது? அது சரிந்துகொண்டிருந்தால், நாம் மனந்திரும்பி ஆவியின் புதுப்பிக்குதலுக்காக கடவுளை நோக்கிக் கெஞ்சுகிறவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

3. பழைய ஏற்பாட்டு பிரசங்கியாகிய எலியா

யாக்கோபு 5:16-18
16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. 17 எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய்  ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. 18 மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.

வசனம் 16, நாம் ஒருவருக்கொருவர் ஜெபிக்கும்படி நம்மை அழைக்கிறது என்பதை முதலாவது கவனியுங்கள். அந்த வசனத்தின் இறுதியில் அத்தகைய ஜெபத்திற்கு நம்மை ஊக்கப்படுத்துகிற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மூலமொழி வாக்கியத்தில் உள்ளதுபோல் “ஊக்கம்” அல்லது “வைராக்கியத்தைக் காட்டுவதாக” சில மொழிபெயர்ப்புகளில் இல்லை. மாறாக, நீதிமான்கள் கடவுளிடம் ஏறெடுக்கும் ஜெபத்திற்கான வலிமையே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. நன்மையான, பெரிய நல்ல காரியங்களைச் செய்வதற்காகவே அத்தகைய ஜெபம் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது.

யாக்கோபு சற்று முன், தான் சொல்லியதற்கான ஆதாரமாக ஜெபிக்கும் எலியாவின் உதாரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார். எலியாவின் உதாரணத்திலும், அவருடைய ஜெபத்தில் ஊக்கமாக இருந்தார் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. வசனம் 17ல், பழைய ஏற்பாட்டில் சொல்லப்படாத விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. எலியா ஒரு தீர்க்கதரிசியாக இருந்து, ஒரு நீண்ட காலத்திற்கு மழை பெய்யாது என்று அறிவித்தார்.

1 இராஜாக்கள் 17:1
கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

எலியா அறிவித்தது போல், மூன்றரை வருடங்கள் மழை பெய்யாதிருந்தது, எலியாவின் ஊக்கமான வேண்டுதலுக்கான பதிலாகவும் இருந்தது. “ஊக்கமாக ஜெபித்தான்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் மூலமொழியில் “ஜெபித்த ஜெபம்” (prayed prayer) என்பதாகவே இருக்கிறது. எபிரெய மொழியில் பொதுவாகக் காணப்படும், மீண்டும் சொல்லும் முறையை யாக்கோபு இங்கு பயன்படுத்தியிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதைப் பற்றி மாத்யூ ஹென்றி பின்வருமாறு சொல்லுகிறார்,

“இங்கு நாம் எலியாவைப் பின்பற்றி அவரைப்போல் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும் அல்லது மூலமொழியிலுள்ளதுபோல் ஜெபத்தில் ஜெபிக்க வேண்டும். வெறுமனே நாம் ஜெபத்தைச் சொல்லுகிறவர்களாக இல்லாமல், ஜெபத்தில் நாம் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும். நமது சிந்தனைகள் ஓரிடத்திலிருக்க வேண்டும். நம்முடைய விருப்பங்கள் உறுதியாகவும் தீவிரமாகவும் இருக்க வேண்டும். நாம் ஜெபத்தில் ஜெபிக்கிறபோது, நாம் தீவிரமாக ஜெபிக்க வேண்டும்.”

மழையை நிறுத்துவது மட்டும் எலியாவின் ஊக்கமான ஜெபத்திற்கான பதிலாக இருக்கவில்லை. வசனம் 18ல், மறுபடியுமாக மழை பெய்வதும் அவருடைய ஜெபத்திற்கான பதிலாக இருந்தது. வசனம் 18ல், எலியா இரண்டாவதாக ஜெபித்ததில் ஊக்கமான என்பது வலியுறுத்தப்படவில்லை. ஆனால் இதைப் பற்றிய பழைய ஏற்பாட்டு குறிப்பில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 இராஜாக்கள் 18:41-45
41 பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான். 42 ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்கால்பட குனிந்து, 43 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். 44 ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான். 45 அதற்குள்ளாக வானம் மேகங்களிலாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.

எலியா அங்கு செய்தவையாவும், அதாவது அவன் தன் முகம் தன் காலில்படும்படி குனிந்து வணங்கியது, தன் வேலைக்காரனை ஏழு முறை வெளியில் சென்று மழை மேகம் வந்திருக்கிறதா என்று விடாமுயற்சியுடன் பார்க்கச் சொன்னது யாவும் எலியா ஊக்கமாக வேண்டினான் என்பதையே காட்டுகிறது.

எலியா முதலில் பொல்லாத இஸ்ரவேலர்களின் மீதான கடவுளின் கண்டிப்பு அல்லது நியாயத்தீர்ப்பிற்காக ஊக்கமாக ஜெபித்தார். கர்மேல் மலையில் அவர்கள் அவரை கடவுள் என்று அறிக்கையிட்டதனால் அவர்களின் விடுவிப்பிற்காக கடவுளின் இரக்கத்திற்காக மறுபடியும் ஊக்கமாக ஜெபித்தார். எலியாவின் ஜெபங்கள் ஆச்சரியவிதமான பலன் தருகிறதாக இருந்தது. மேலும், எலியா அசாதாரண பரிசுத்தவானாக இருந்து இத்தகைய ஆச்சரியமான பலன் தரும் ஜெபத்தைச் செய்யவில்லை என்பதையும் யாக்கோபு அடிகோடிட்டுக் காட்டுகிறார். யாக்கோபு 5:17ல், எலியா நம்மைப்போல சாதாரண மனிதன் என்பதை வலியுறுத்துகிறார். ஆகவே அவர் ஜெபத்தில் ஊக்கமாக இருந்தது நம்முடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அவரைப்போல நாமும், ஒருவர் நலனுக்காக ஒருவரும், கடவுளின் கண்டிப்பிற்காகவும், நியாயத்தீர்ப்பிற்காகவும் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். இத்தகைய ஜெபங்கள் பலனுள்ளதாக இருந்ததும் நம்மை ஊக்கப்படுத்துகிறது.

எனினும், எவ்வளவாக அவிசுவாசத்திற்கு எதிராக தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அறிவோம். இவ்வாக்கத்தை முடிக்கிற வேளையில், நம்முடைய கர்த்தராகிய இயேசு வைராக்கியத்தோடு ஊக்கமாக ஜெபிப்பதற்கு நம்மை ஊக்கப்படுத்தும்படி சொல்லியிருப்பதைக் கவனிப்போம்.

லூக்கா 18:7-8
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? 8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஒடுக்கும் பொல்லாதவர்களுக்கு எதிரான கடவுளுடைய நீதிக்காக ஜெபிப்பதைப் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. மனந்திரும்பாத மனிதர்கள் மீது தம்முடைய நீதியை சீக்கிரமாக நிறைவேற்றுவார் என்ற உறுதியை இயேசு தருகிறார். இந்த வாக்குத்தத்தமும் இதுபோன்று இன்னும் பலவும் (யாக்கோபு 5:16) மனந்தளராமல் தொடர்ந்து ஜெபிக்கும்படி நம்மை நிச்சயமாக ஊக்கப்படுத்த வேண்டும். கடவுள் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறதில்லை என்று சில நேரங்களில் தோன்றலாம். உண்மையில், நல்ல காரியங்களை நமக்குத் தருவதற்காகவே பெரும்பாலும் ஆண்டவர் நம்முடைய ஜெபங்களுக்கான பதிலைத் தாமதப்படுத்தலாம். ஆனால் அவருடைய வாக்குத்தத்தங்கள் எப்போதும் நிலைநிற்கும். ஆகவேதான் நாம் விசுவாசமுள்ளவர்களாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய வாக்குத்தத்தங்களை நம்பும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். மனந்தளராமல் அவருடைய வாக்குத்தத்தங்களைச் சொல்லி ஜெபித்துக் கொண்டிருப்பதே நம்முடைய விசுவாசத்திற்கான அடையாளமாக இருக்கிறது. கடவுள் தாமே நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்தவும் விசுவாசத்தில் ஊக்கமாக தொடர்ந்து ஜெபிக்கவும் நம்மை நடத்துவாராக.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s