வேதபூர்வமான சத்தியத்திற்கு வரலாற்றில் கிடைத்த ஆரம்ப வெற்றியை (கி.பி. 318-325) முந்தைய இதழில் வந்த அத்தநேசியஸ் பற்றிய ஆரம்ப ஆக்கத்தில் பார்த்தோம். எனினும் சத்தியத்திற்கு ஏற்பட்ட ஆபத்து அத்தோடு ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை இவ்வாக்கத்தில் ஆராய்வோம்.
கி.பி. 325-361 காலப்பகுதியில், ஏரியனிசத்தைப் பின்பற்றியவர்களின் கை ஓங்கியிருந்ததுபோல் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள், ஏரியர்கள் கிட்டதட்ட வென்றுவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றியது. இந்த மாற்றங்கள், இரண்டு குறிப்பிட்ட நிலைகளில் ஏற்பட்டது.
1. ஏரியர்களுடைய தந்திரமான செயல்பாடுகள் (கி.பி. 325-337)
இக்காலப்பகுதி, கான்ஸ்டன்டைனினுடைய ராஜ்யத்தின் பிற்பகுதியை உள்ளடக்கியது. அதாவது, இது நைசீயா கவுன்சிலின் ஆரம்பத்திலிருந்து (கி.பி. 325), கான்ஸ்டன்டைனினுடைய மரணத்தை (கி.பி. 337) உள்ளடக்கிய காலப்பகுதி. இக்காலப்பகுதி முழுவதும் கான்ஸ்டன்டைன், நைசீயா கவுன்சிலின் அறிக்கையே, மெய்யான விசுவாசத்தின் அடிப்படை என்று பகிரங்கமாக அறிவித்து நடந்து வந்தார். அதன் காரணமாக, ஏரியர்கள் அவ்வறிக்கையிலுள்ள சத்தியத்திற்கு எதிராக, எந்தவிதமான தாக்குதல்களையும் நேரடியாகச் செய்யத் துணியவில்லை. எனினும், கான்ஸ்டன்டைனினுடைய இந்த நிலைக்குக் காரணம், சபையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்று அவர் விரும்பியதுதானே தவிர, இந்த சர்ச்சையினுடைய முக்கியத்துவத்தை அவர் தெளிவாக உணர்ந்ததனால் அல்ல. இதற்கிடையில், ஏரியர்கள் தாங்கள் இழந்திருந்த பலத்தைப் பெருமளவில் மீண்டும் பெற்றிருந்தனர். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
முதலாவது காரணம், பழமைவாதப் பெரும்பான்மையினர் திரித்துவ போதனையாளர்களுக்கும், நைசீன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த “homoousion” என்ற பதத்திற்கும் எதிராக விரைவிலேயே செயல்படத் துவங்கினார்கள். பழமைவாதப் பெரும்பான்மையினர், தெய்வீகத்தில் மூன்று தனித்துவமான நபர்கள் இருப்பதை உறுதியாக வலியுறுத்தினார்கள். அந்த மூவருக்கு மத்தியில் அதிகாரப் பகிர்வு இருப்பதாகவும், ஒருவர் மற்றவருக்குக் கீழிருப்பதாகவும் நம்பினார்கள். இதன் காரணமாக, அவர்கள் மொடலிஸ்டிக் மொனார்கியனிசத்தை வன்மையாக எதிர்த்தார்கள். ஏனென்றால், மொடலிஸ்டிக் மொனார்கியனிசம், தெய்வீகத்தில் ஒரு நபர் மட்டுமே உண்டு, அதாவது பிதாவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் குமாரனாக வந்தார் என்று நம்புகிறது. இந்த எண்ணம், திரித்துவப் போதனையாளர்களும் இதையேதான் வலியுறுத்துகிறார்களோ என்ற சந்தேகத்தை பழமைவாதப் பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்படுத்தியது. ஏனென்றால், திரித்துவ போதனையாளர்களின் கூட்டத்தில் இருந்த, அன்சிராவின் பிஷப்பான மார்சிலஸ் (Marcellus) என்பவர், மொடலிஸ்டிக் மொனார்கியனிசத்தைத் தழுவித் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தார். அன்சிரா (Ancyra) என்பது தற்காலத் துருக்கி நாட்டின் தலைநகர். அன்சிரா நிக்கோமீடியாவுக்கு அருகில் இருந்தது. நிக்கோமீடியாவில்தான் ஏரியர்களின் தலைவரான யூஸிபியஸ் இருந்தார்.
பழமைவாதப் பெரும்பான்மையினருக்கு இருந்த மற்றொரு பிரச்சனை என்னவென்றால், நைசீன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தையான “homoousion” என்பது வேதத்திலிருந்து வந்த வார்த்தையல்ல என்பதுதான். இவர்கள் இவ்வார்த்தையைத் தீவிரமாக எதிர்த்ததற்கான காரணம், கி.பி. 269ல், சமோசடா (Samosata) என்ற இடத்திலிருந்த பவுல் (Paul) என்பவர், வேதத்திற்கு எதிராக இவ்வார்த்தையைப் பயன்படுத்தி, கள்ளப் போதனையாகிய மொடலிஸ்டிக் மொனார்க்கியனிசத்தைப் போதித்து வந்தார். அன்றிருந்த சபையும் அவரைக் கண்டித்தது. ஆகவே, இவ்வார்த்தையைப் பயன்படுத்துவதையே இவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்த்தனர். எனவே, பழமைவாதப் பெரும்பான்மையினர் திரித்துவப் போதனையாளர்களுடன் இருந்த தங்களுடைய கூட்டைத் துண்டித்துக்கொண்டு ஏரியர்களுடன் கூட்டுச் சேர்ந்தனர். இதன்காரணமாக, பழமைவாதப் பெரும்பான்மையினரைப் “பாதி ஏரியர்கள்” (Semi Arians) என்று அக்காலத்தில் அழைத்தார்கள். இந்த மாற்றத்தை, ஏரியர்கள் அதிதீவிரத்துடன் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
இரண்டாவது காரணம், ஏரியர்களுடைய தலைவரான, நிக்கோமீடியாவின் யூஸிபியஸ், தந்திரமான அரசியல்வாதியாகவும் இருந்ததால், இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக எப்படி மாற்றிக்கொள்ளுவது என்பதை நன்றாக அறிந்தவராக இருந்தார். இவர், நைசீன் அறிக்கைக்கு எதிராக செயல்பட்டதனால், கான்ஸ்டன்டைன் மூலமாக நாடுகடத்தப்பட்டிருந்தார். எனினும், கி.பி. 328ல், தான் நைசீன் அறிக்கையை ஏற்பதாக வாயளவில் பேரரசனுக்குத் தெரிவித்து, இவர் மறுபடியுமாக நாட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார். அத்தோடு, கான்ஸ்டன்டைன் வாழ்ந்துவந்த நகரமாகிய நிக்கோமீடியாவின் பிஷப்பாக மறுபடியும் நியமிக்கப்பட்டார். வெகுவிரைவிலேயே, அவர் கிழக்குப் பிரதேசத்தின் தலைவர்களில், கான்ஸ்டன்டைனுடைய மனதை அதிகமாக கவர்ந்தவரானார். இந்தச் செல்வாக்கை அவர் திறம்படப் பயன்படுத்தி, ஏரியர்களுக்கு எதிராயிருந்த திரித்துவப் போதனையாளர்களை ஒவ்வொருவராக, பதவியிலிருந்து நீக்கி, திருச்சபையின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் அவர்கள் யாவரையும் நாடுகடத்தும்படிச் செய்தார். இவர்கள் யாவரும் தங்களுடைய கொள்கையில் உறுதியானவர்கள், வளைந்துகொடுக்காதவர்கள். ஆகவே பிரிவினைக்கு காரணமானவர்கள் என்று அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பேரரசனோடு நெருக்கமாக இருந்த சிலரை, அவர்களுடைய சொந்தப் பிரச்சனைகளைப் பெரிதுபடுத்திக் காட்டி பேரரசனிடம் அவர்களுக்கு இருந்த மதிப்பு குறையும்படிச் செய்தார்.
இவ்வாக்கத்திற்கான அறிமுகமாக, கான்ஸ்டன்டைனுடைய இராஜ்ஜியத்தின் பிற்பகுதியில் ஏரியர்களின் ஆதிக்கம் எப்படி அதிகரித்தது என்பதற்கான இரண்டு காரணங்களைப் பார்த்தோம். இப்போது, அது எப்படி வரலாற்றில் நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
(1) கி.பி. 328ல், பிஷப் அலெக்சாண்டர் மரணமடைந்தார். அதன்பிறகு, அத்தநேசியஸ் அலெக்சாந்திரியாவின் பிஷப்பாக பொறுப்பேற்றார். அத்தநேசியஸ் பிஷப்பாக பொறுப்பேற்பதை, அலெக்சாந்திரியா திருச்சபையிலிருந்த பெரும்பாலுமான அங்கத்தவர்கள் அதிக ஆர்வத்துடன் வரவேற்றார்கள். எனினும், ஆரம்பத்திலிருந்தே, அதை எதிர்க்கும் சிறு கூட்டமும் அத்திருச்சபையில் இருக்கத்தான் செய்தனர். எதிர்த்தவர்களில் சிலர் ஏரியனின் போதனையைப் பின்பற்றியவர்களாகவும் இருந்தனர். அத்தநேசியஸ் பிஷப்பாக பொறுப்பேற்றபோது அவருக்கு வயது முப்பது. அவர் பிஷப்பாக பொறுப்பேற்று பணியாற்றிய அத்திருச்சபை, ரோமிலிருந்த திருச்சபைக்கு அடுத்தபடியாக மிகவும் பழமைவாய்ந்த திருச்சபையாக அக்காலத்தில் இருந்தது. இதன்காரணமாக, எகிப்திலும் லிபியாவிலும் பிஷப்புகளை நியமிப்பதில் அவருக்கு நேரடியான செல்வாக்கு இருந்தது. ஆகவே அப்பகுதியிலிருந்த திருச்சபைகளிலுள்ள தலைவர்கள் மட்டத்தில், ஏரியனிச போதனையின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இருந்தது. கி.பி. 328ல் அத்தநேசியஸ் பிஷப்பாக ஏற்படுத்தப்பட்டதிலிருந்து ஏழு வருடங்களுக்கும் மேலாக அவர் அங்கு பணியாற்றினார்.
(2) அத்தநேசியஸ் உட்பட திரித்துவ போதனையாளர்களான தலைவர்கள் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்கள். நிக்கோமீடியாவிலிருந்த யூஸிபியஸும் அவருடைய கூட்டாளிகளும் செய்த தந்திரத்தினால், ஏரியனிச போதனைக்கு எதிராக இருந்தவர்கள், அவர்களுடைய பொறுப்பிலிருந்து ஒவ்வொருவராக நீக்கப்பட்டார்கள். ஆனால் அத்தநேசியஸை அவருடைய பொறுப்பிலிருந்து நீக்குவது அவர்களுக்கு சவாலாகவே இருந்தது. அத்தநேசியஸை அவருடைய எதிரிகள் இரண்டு திசைகளிலிருந்து தாக்கினார்கள்.
முதலாவது, ஏரியஸையும் அவருடைய நண்பர்களையும் மறுபடியுமாக அலெக்சாந்திரியா திருச்சபையில் இணைப்பதற்கான முயற்சியில் நிக்கோமீடியாவின் யூஸிபியஸ் ஈடுபட்டார். தன்னுடைய கடிதத்தின் மூலமாக அத்தநேசியஸைப் பயமுறுத்துவதற்கு எடுத்த முயற்சி தோல்வியுற்றதால், கான்ஸ்டன்டைனை வற்புறுத்தி அத்தநேசியஸைப் பயமுறுத்துகிறவிதமாக கடிதம் எழுத வைத்தார். கிறிஸ்துவினுடைய திருச்சபையில், ஏரியஸுடைய கள்ளப் போதனைக்கு எந்தவிதத்திலும் இடமில்லை என்று உறுதியாக தன்னுடைய பதிலை அத்தநேசியஸ் தெரிவித்தார். யூஸிபியஸின் சதி தோற்கடிக்கப்பட்டது. எனினும், தன்னுடைய தோல்வியை யூஸிபியஸ் எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டாவதாக, அத்தநேசியஸுக்கு எதிரான அவதூறுகளை யூஸிபியஸ் பரப்பத் துவங்கினார். இதன்காரணமாக, அத்தநேசியஸ் கான்ஸ்டன்டிநோபிளுக்கு வந்து அதற்கான தன்னுடைய பதிலை அளிக்கும்படி கான்ஸ்டன்டைன் அழைத்திருந்தார். ஆனால் கான்ஸ்டன்டிநோபிளுக்குச் சென்ற அத்தநேசியஸ், உடல்நலக்குறைவின் காரணமாக, ஒரு வருடத்திற்கும் மேலாக அங்கேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. இறுதியில், அத்தநேசியஸ் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, கான்ஸ்டன்டைனிடமிருந்து அதற்கான கடிதத்தைப் பெற்று, அலெக்சாந்திரியாவுக்கு வந்து தன்னுடைய பொறுப்பைத் தொடர்ந்தார்.
அப்போதும் பின்வாங்காத யூஸிபியஸ், மேலும் இரண்டு அபாண்டமான தவறான குற்றச்சாட்டுகளை அலெச்சாந்தியாவின் பிஷப்பான அத்தநேசியஸ் மீது கொண்டுவந்தார். அந்த இரண்டு தவறான குற்றச்சாட்டுகளில், மிகவும் மோசமான ஒன்றைப் பற்றி நாம் பார்க்கலாம். ஆர்சினியஸ் (Arsenius) என்பவரை அத்தநேசியஸ் கொலை செய்துவிட்டார் என்பதுதான் அந்த முதலாவது தவறான குற்றச்சாட்டு. அத்தநேசியஸுக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதற்காக, எகிப்திலுள்ள அரசு அதிகாரிகளில் ஒருவனுக்கு லஞ்சம் கொடுத்து, அப்பகுதியின் பிஷப்புகளில் ஒருவரான ஆர்சினியஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கும்படிச் செய்தார்கள் அத்தநேசியஸின் எதிரிகள். பிறகு, அத்தநேசியஸ், ஆர்சினியஸைக் கொலை செய்துவிட்டு, மாயவித்தை செய்வதற்காக அவருடைய கைகளில் ஒன்றை எடுத்து வைத்திருக்கிறார் என்று புரளி பரப்பிவிட்டனர். பிறகு, அந்தக் கையைப் பறிமுதல் செய்து, அதைப் பேரரசனுக்கு அனுப்பி அது ஆர்சினியஸின் கைதான் என்று சொல்ல வைத்தார்கள். அத்தநேசியஸ் மீதான இந்த குற்றச்சாட்டும், இன்னும் ஏனையவையும், பேரரசனான கான்ஸ்டன்டைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் பேரரசனோ இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான காரணத்தை உணர்ந்து கொண்டார். இறுதியில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிப்பதற்காக திருச்சபைக் கவுன்சிலைத் தீருவில் (Council of Tyre) கூட்டுவதற்காக திட்டமிடப்பட்டது. அந்த கவுன்சில் நியாயப்படி நடத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக, பேரரசன் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அக்கவுன்சிலுக்காக நியமித்து, அதில் அத்தநேசியஸும் கலந்துகொள்ள வேண்டுமென்று கட்டளையிட்டார்.
இதற்கிடையில், அலெக்சாந்திரியா திருச்சபையிலிருந்த ஒரு தேவபக்தியுள்ள உதவிக்காரர், ஆர்சினியஸ் உயிருடன்தான் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில், ஆர்சினியஸ் உயிருடன்தான் இருக்கிறார் என்பதையும் நிரூபித்தார். எனினும், ஆர்சினியஸ் எகிப்திலிருந்து தீருவுக்கு ஓடிவிட்டார். அவர் தீருவில் இருந்தபோது, அவர் ஆர்சினியஸ்தான் என்று அடையாளங் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, அவரே ஆர்சினியஸ் என்று அவரை ஒப்புக்கொள்ள வைத்தனர். இது அத்தநேசியஸுக்கும் பேரரசனுக்கும் அறிவிக்கப்பட்டது. அப்போது, கான்ஸ்டன்டைன், கடிதத்தின் மூலம் இந்த சதிமோசத்திற்கெதிரான தன்னுடைய கோபத்தையும் வருத்தத்தையும் அத்தநேசியஸுக்குத் தெரியப்படுத்தினார். பிறகு, ஆர்சினியஸ் அத்தநேசியஸோடு ஒப்புரவானார். அத்தோடு ஆர்சினியஸ் மறுபடியுமாக எகிப்தின் பிஷப்பாக முறைப்படி நியமிக்கப்பட்டார். ஆனால், ஆர்சினியஸ் கண்டுபிடிக்கப்பட்டதும், கைது செய்யப்பட்டதும், பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்தப்படவில்லை. இதுவே பிறகு மறுபடியும் பிரச்சனை எழுவதற்குக் காரணமாக அமைந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளெல்லாம் அத்தநேசியஸுக்கு எதிராக, தவறாக ஏற்படுத்தப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிந்திருந்தபோதிலும், எகிப்தில் பிரச்சனைகள் தீர்ந்து அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக தீரு கவுன்சில் கூட்டப்படுவதனால், அதை அப்படியே நடத்துவோம் என்று கான்ஸ்டன்டைனைச் சம்மதிக்க வைத்தனர் அத்தநேசியஸின் எதிரிகள். உண்மையில், இது அத்தநேசியஸைப் பிடிப்பதற்கான ஒரு பொறியாகவே இருந்தது. ஆனாலும் அத்தநேசியஸ் அக்கவுன்சிலுக்கு வரவேண்டியிருந்தது. கி.பி. 335 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி, அவர் அலெக்சாந்திரியாவைவிட்டுப் புறப்பட்டார். ஆனால் 2 வருடங்கள், 4 மாதங்கள், 11 நாட்களுக்கு அவர் மறுபடியும் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பவே இல்லை. நைசீன் பிதாக்களில் ஒருவர், தீரு கவுன்சிலைப் பற்றி தன்னுடைய எழுத்தில் குறிப்பிட்டிருப்பவைகளைக் கவனியுங்கள்:
ஏரியனிச தத்துவம் மிகவும் வலிமை கொண்டிருந்தது. சிசெரியாவின் யூஸிபியஸ் பெரும் எண்ணிக்கையிலான பழமைவாதப் பெரும்பான்மையினருடைய கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருந்தார். அவர்கள் தொகை 150. அத்தநேசியஸின் நண்பர்களில் ஒருவர் மட்டுமே அங்கிருந்தார். சிசெரியாவின் யூஸிபியஸ் தலைமை இருக்கையில் அமர்ந்திருந்தார். கவுன்சிலின் நடவடிக்கைகள் காரசாரமாகவும் ஒழுங்கற்றவகையிலும் நடந்தது. பல குற்றச்சாட்டுகள், நாலாபுறத்திலுமிருந்து எறியப்பட்டன. அத்தநேசியஸுக்கு எதிராக எந்தவகையிலெல்லாம் குற்றஞ்சாட்ட முடியுமோ, அதையெல்லாம் அவர்கள் செய்தனர். அவற்றில் முக்கியமான ஒரு குற்றச்சாட்டு மிகவும் மோசமானது. அங்கு கூடியிருந்த பெரும்பான்மையான பிஷப்புகள், அத்தநேசியஸுக்கு எதிராக என்ன சொன்னாலும் அதை நம்பும் நிலையிலேயே இருந்தனர். அத்தநேசியஸ் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லுவதற்கான அவகாசம் கொடுக்கப்படவில்லை. அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டியவர்கள், எப்படியாவது ஒரு விஷயத்தில் அத்தநேசியஸை சிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்தனர். அதற்காக ஆர்சினியஸின் கை அங்கு கொண்டுவரப்பட்டது. அதைக் குறித்து பதிலளிக்க அத்தநேசியஸ் தயாரானார். “ஆர்சினியஸைத் தனிப்பட்ட வகையில் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?” என்று அத்தநேசியஸ் கேட்டார். “ஆம்” என்ற பதில் மிகுந்த ஆர்வத்துடன் எல்லாப்பக்கத்திலுமிருந்து ஒலித்தது. ஆர்சினியஸ் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்று கூறி ஒரு பெரிய மேலங்கி அணிந்த ஒருவர் அவர்கள் மத்தியில் வந்து நின்றார். ஆனால் கவுன்சிலோ, ஆர்சினியஸின் கை எப்படி துண்டிக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தை எதிர்பார்த்தது. அத்தநேசியஸ் ஆர்சினியஸின் மேலங்கியின் ஒரு பகுதியைத் தூக்கிக்காட்டி இதோ ஒரு கை இருக்கிறதே என்றார். ஒரு குறிப்பிட்ட நேரம் அங்கு நிசப்தம் நிலவியது. பிறகு, மேலங்கியின் அடுத்த பக்கத்தையும் தூக்கிக் காட்டி, அவருடைய மற்ற கையையும் எல்லோரும் பார்க்கும்படிச் செய்தார். ஆனால் குற்றஞ்சாட்டியவர்கள், அப்படியானால் ஆர்சினியஸின் வெட்டப்பட்ட இந்த மூன்றாவது கை எங்கிருந்து வந்தது என்று கேட்டார்கள். எதிராளிகளுடைய தலைவர்களில் ஒருவரான ஜோன் ஆர்கப் (John Arcaph), அவர்களுடைய சதியைப் போட்டுடைத்து, அங்கிருந்து துரிதமாக வெளியேறினார். ஆனால் யூஸிபியர்கள், அதாவது ஏரியர்களின் தலைவரான நிக்கோமீடியாவின் யூஸிபியஸைப் பின்பற்றியவர்கள், இதெல்லாம் ஏதோ கண்கட்டு வித்தையைப் போல் இருக்கிறது. உண்மையில் ஆர்சினியஸைக் கொல்லுவதற்கான முயற்சி நடந்திருக்க வேண்டும். அந்த பயத்தின் காரணமாகவே இப்போது ஆர்சினியஸும் அதை மறைக்கப் பார்க்கிறார் என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்கள். இது குறித்து பதிலளிக்க, அவர்கள் அத்தநேசியஸை எளிதில் அனுமதிக்கவில்லை. கவுன்சிலின் நடவடிக்கைகள் தனக்கெதிராகவே இருக்கும் என்பதை அறிந்த அத்தநேசியஸ், தன்னைச் சேர்ந்த நான்கு பிஷப்புகளின் உதவியுடன், மத்திய தரைக்கடல் வழியாக, ஒரு படகில் அங்கிருந்து தப்பிச் சென்றார். அக்டோபர் 30 ஆம் தேதி, அவர் கான்ஸ்டன்டிநோபிளை சென்றடைந்தார்.
அத்தநேசியஸ் இதுகுறித்து பேரரசனிடம் மேல்முறையீடு செய்தார். முதலில் அத்தநேசியஸின் முறையீட்டைக் கேட்க மறுத்த பேரரசன், பிறகு சம்மதித்தார். அத்தநேசியஸ் தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லுவதற்காக, பேரரசன், தீரு கவுன்சிலில் கூடிய அனைவரையும் கான்ஸ்டன்டிநோபிளுக்கு வரும்படி கட்டளையிட்டார். எனினும், நிக்கோமீடியாவின் யூஸிபியஸும், ஏரியனிசத்தைப் பின்பற்றிய சிலரும், சிசெராவின் யூஸிபியஸுமே அங்கு வந்திருந்தனர். அத்தநேசியஸ் மீது அவர்கள் முன்பு சொல்லிய குற்றச்சாட்டுகளை விட்டுவிட்டு, இப்போது புதிதாக தேசத்துரோகக் குற்றச்சாட்டைச் சுமத்தினர். தேசத்துரோக குற்றச்சாட்டைக் கேட்ட கான்ஸ்டன்டைன், அத்தநேசியஸை எந்தவிதமான கேள்வியும் கேட்காமல், அவரைத் தான் வாழுகிற பகுதியைவிட்டு எவ்வளவு தூரத்திற்கு அனுப்ப முடியுமோ அந்தளவுக்கு தூரத்திலுள்ள கௌலிலுள்ள (Gaul) திரிவேரிக்கு (Treveri) நாடுகடத்தினார். கான்ஸ்டன்டைனினுடைய இச்செயலுக்கான உண்மையான காரணத்தைப் பற்றி இன்றளவும் விவாதம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை, திருச்சபையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காக, இத்தகைய முரண்பாடுகளுக்குக் காரணமாக இருப்பவரை இங்கிருந்து தள்ளி வைப்பது நல்லது என்ற எண்ணத்தில் இதைக் கான்ஸ்டன்டைன் செய்திருக்கலாம். எனினும், கான்ஸ்டன்டைனுடைய மறைவுக்குப் பிறகு, அவருடைய மகனான இரண்டாம் கான்ஸ்டன்டைன், தன் தந்தையினுடைய செயலுக்கான விளக்கத்தைத் தந்தார். அதாவது, அத்தநேசியஸைப் பாதுகாக்கவே அப்படிச் செய்ததாக என்று அவர் தெரிவித்தார். ஒருவேளை என் தந்தை மரணமடையாதிருந்திருந்தால், இந்நேரம், அத்தநேசியஸ் அலெக்சாந்திரியாவின் பிஷப்பாக மறுபடியுமாக பொறுப்பேற்றிருந்திருப்பார் என்றார். அவருடைய இரண்டாவது கூற்று எந்தளவுக்கு உண்மையானது என்று தெரியாது, ஆனால், ஏரியர்கள் தங்களுடைய தரப்பினரான ஒருவரை அலெக்சாந்திரியாவின் பிஷப்பாக அப்போதுவரை ஏற்படுத்த முடியவில்லை. அத்தநேசியஸ் நாடுதிரும்பியபோது, அலெக்சாந்திரியாவின் பிஷப் பொறுப்பு காலியாகவே இருந்தது.
அத்தநேசியஸ் நாடுகடத்தப்பட்டிருந்தபோது, திரித்துவ போதனையாளர்களில் இருந்த ஒரே முக்கியமான தலைவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். கிழக்குப் பகுதி திருச்சபைகளிலிருந்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள், ஏரியர்கள் மற்றும் பழமைவாதப் பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தனர். இப்போதுவரை நைசீன் அறிக்கைதான் திருச்சபையின் அதிகாரப்பூர்வ கோட்பாடுகளுக்கான அடிப்படையாக இருந்தபோதிலும், இதெல்லாம் நடக்கத்தான் செய்தன. நாட்டின் அரசியல் சூழல் தங்களுக்குச் சாதகமாக இருந்ததைப் பயன்படுத்தி, சத்திய விரோதிகள், வெளிப்படையாகவே தங்களுடைய நிலைக்கு ஏற்றபடி கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டனர். இதற்காக அவர்கள் நெடுநாட்களுக்குக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. கி.பி. 337ல் கான்ஸ்டன்டைன் மரணமடைந்தார்.
இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளைப் படிப்பதற்கு முன்பாக, இதுவரை நாம் பார்த்திருப்பவற்றில் இருந்து, 21 ஆம் நூற்றாண்டில் வாழுகிற நமக்கு வரலாறு தரும் சில முக்கியமான பாடங்களைப் பார்ப்போம்.
(1) இது மனிதனுடைய முழுமையான சீர்குலைவை நமக்கு நினைவுபடுத்துகிறது. மனிதன் தாயின் வயிற்றிலிருந்து வருகிறபோதே, பொய் பேசுகிறவனாகவே வருகிறான். அதுவும் தீங்கிழைக்கிறதும் அபாண்டமுமான வகையில் பொய் பேசுகிறவனாக இருக்கிறான். யூஸிபியஸும்அவரைச் சேர்ந்தவர்களும் எப்படியெல்லாம் பொய்யை வாரியிறைத்தார்கள் என்பதை நாம் பார்த்தோம். வெறுமனே கிறிஸ்தவன் என்ற பெயரை மட்டும் கொண்டிருப்பது, சத்தியத்தின் தேவனுக்கு எதிராக இத்தகைய குற்றங்களைச் செய்வதிலிருந்து ஒருவனைத் தடுப்பதில்லை. கிறிஸ்துவை நமக்குக் காட்டும் வேதபூர்வமான சுவிசேஷத்தின் கிருபை மட்டுமே ஒரு மனிதனை இத்தகைய வஞ்சகத்திலிருந்தும் பொய்யிலிருந்தும் விடுவிக்கும்.
(2) தன்னுடைய நேர்மையை நிரூபித்திருக்கிற ஒருவரை, சந்தேகத்திற்குரிய நோக்கம் கொண்ட மனிதர்கள் தீங்கிழைக்கும் எண்ணத்துடன் தாக்குகிறபோது, அம்மனிதருக்கே சந்தேகத்தின் பலனைத் (Benefit of the doubt) தர வேண்டும். எப்போதும் ஒருவருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டுகிறவர்களின் ஆதாரங்கள் நிரூபிக்கும்வகையில் உறுதியானதாக இருந்தால் மட்டுமே அவற்றை ஏற்க வேண்டும் (Innocent until proven guilty). இதை அத்தநேசியஸின் விஷயத்தில் ஒருவரும் பின்பற்றவில்லை.
(3) சத்தியத்தையும் நீதியையும் வீழ்த்துவதற்கு, கோபமும் ஆத்திரமும் எந்தளவுக்கு வலிமையாக செயல்படக்கூடியது என்பதை இச்சம்பவங்கள் நமக்குக் காட்டுகின்றன. கள்ளப்போதனையைத் தழுவிய ஏரியர்களைப் பொறுத்தளவில் மட்டும் இது உண்மையல்ல, தீரு கவுன்சிலில் இருந்த பழமைவாதப் பெரும்பான்மையினரைப் பொறுத்தளவிலும் இது உண்மையாகவே இருக்கிறது. கிறிஸ்துவினுடைய திருச்சபையின் தலைவர்களான அவர்கள், பக்தியுள்ள அத்தநேசியஸுக்கு எதிராகக் கடுங்கோபத்துடன் நடந்துகொண்டதோடு, நீதியைப் புரட்டுவதை அனுமதித்தது மட்டுமல்லாமல், அதற்குத் துணையும் போனார்கள். மற்றவர்களுக்கு எதிராக நாமும் இத்தகைய பாவமுள்ள கோபத்தையும் ஆத்திரத்தையும் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்ற எச்சரிப்பை இது நமக்குத் தருகிறது. நம்முடைய எதிரிகளிடத்திலும் மென்மையான போக்கைக் காட்டுகிறவிதத்தில் நம்முடைய இருதயத்தைப் பாதுகாக்காவிட்டால், நாமும் அவர்களிடம் அநீதியுடனும் கொடூரமாகவும் நடந்துவிடும் கேட்டில் சிக்கிக்கொள்ளுவோம்.
(4) வஞ்சகமும், கேடும், ஒழுங்கற்றவர்களுமான மனிதர்கள், திருச்சபையிலுள்ள உண்மையும் தேவபக்தியுமுள்ள தலைவர்களை எந்தளவுக்குத் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாக்குகிறார்கள் என்பதை இவற்றிலிருந்து நாம் அறிகிறோம். எவ்வளவு தூரம் ஒரு திருச்சபையின் தலைவர், முக்கியமானவரும், பயனுள்ளவரும், ஒழுங்குமுறையின்படி நடக்கிறவருமாக இருக்கிறாரோ அந்தளவுக்கு அவருக்கு எதிராக தாக்குதல்களும் இருக்கும். அத்தநேசியஸை அவமானப்படுத்தி அவருடைய பதவியிலிருந்து அவரை நீக்குகிறவரை, ஏரியர்கள் ஓயவில்லை. பொய் சொல்லுவதைப் பற்றி அவர்கள் கூச்சப்படவே இல்லை. இருந்தும் அவர்கள் தங்களை நேர்மையான கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்டார்கள். மேலும் அவர்கள் புறம்பேசித் திரிந்தார்கள். நிக்கோமீடியாவின் யூஸிபியஸ், தான் ஏற்படுத்திய பொய்ச்சாட்சிக்காரர்களுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதுபோலவே எப்போதும் காட்டிக்கொண்டார். ஏனென்றால், அவர்கள் பொய்ச்சாட்சிக்காரர்கள் என்று தெரிகிறபோது, தானும் அந்தக் குற்றச்சாட்டில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காகத் தந்திரமாக நடந்து கொண்டார். இவரைப் போன்ற மனிதர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியானவர்கள், தேவபக்தியுள்ளவர்களை எதிர்ப்பது உண்மையில் அவர்களுடைய தேவனையும் அவருடைய சத்தியத்தையுமே எதிர்ப்பதாகும்.
(5) அவதூறையும், தீய குற்றச்சாட்டுகளையும் நெடுநாட்களுக்குத் தொடர்ந்து சொல்லிவந்தால், அதைக் கேட்டு, சத்தியத்திற்கு ஆதரவாக இருக்கிறவர்களும் தங்களுடைய நிலையிலிருந்து மாறிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற உண்மையையும் இது நமக்குக் கற்றுத் தருகிறது. கான்ஸ்டன்டைன் அத்தநேசியஸைக் காப்பாற்றுவதற்காக அவரை நாடு கடத்தினார் என்ற செய்தி ஏதோவொரு விதத்தில் உண்மையாகவும்கூட இருக்கலாம். ஆனாலும் சத்தியத்திற்கு ஆதரவாக இருந்த அவர், கள்ளப் போதனையின் பக்கமாக சாய்ந்துவிட்டார். அத்தநேசியஸை ஒருபோதும் நாடுகடத்தியிருக்கக் கூடாது. ஏனென்றால், அத்தண்டனைக்கான எந்தக் குற்றத்தையும் அவர் செய்யவில்லை. எனினும், நிக்கோமீடியாவின் யூஸிபியஸைப்போன்ற தந்திரமானவர்களின் பேச்சைத் தொடர்ந்து கேட்டுவந்தால், அவை தேவபக்தியுள்ளவர்களைத் தாக்குவதாக இருந்தாலும், அதுதான் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வாக அமையும் என்று நினைக்கவும் செய்துவிடும். கோள் சொல்லுகிறவனுடைய வார்த்தைகள், நம்முடைய உள்ளத்தின் ஆழத்திற்குள் செல்லக்கூடியது என்ற வேதத்தின் வார்த்தைகளை நினைவுகூருங்கள்.
நீதிமொழிகள் 18:8, 26.22
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
ஆகவே அதை நாம் கவனம் கொண்டு கேட்க ஆரம்பித்தால், நிச்சயமாக அது நம்மையும் தாக்கும்.
(6) இறுதியாக, அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லுகிறவர்களைப் பற்றிய ஒரு முதுமொழி வாக்கியத்தை இந்தச் சம்பவங்கள் நமக்கு நினைவுபடுத்துகிறது. தேவபக்தியுள்ள மனிதர்கள்மீது யார் எந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்களோ, அந்தக் காரியங்களை அவர்களே செய்கிறவர்களாக இருப்பார்கள். அத்தநேசியஸ் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளுகிறார் என்று அவருடைய எதிரிகள் அவர்மீது குற்றஞ்சாட்டினார்கள். சில நேரங்களில், தேவைக்கேற்ப, அவர் அப்படி இருந்திருக்கிறார் என்பதும் உண்மைதான். ஆனால், தீரு கவுன்சிலில், அத்தநேசியஸ்தான் மிகவும் கடுமையான வார்த்தைகளால் தாக்கப்பட்டார். எனவேதான், அவ்விடத்தைவிட்டுப் படகு வழியாக அவர் மத்திய தரைக்கடலைக் கடந்து செல்ல வேண்டிவந்தது.
2. ஏரியர்களுடைய அதிரடியான வெற்றி (கி.பி. 337-361)
(1) அலெக்சாந்திரியாவுக்குக் குறுகிய காலத்திற்குத் திரும்பி வந்த அத்தநேசியஸும், அவருடைய இரண்டாம் நாடுகடத்தல் நிகழ்வும் (கி.பி. 337-341). கி.பி. 337ல் கான்ஸ்டன்டைன் மரணமடைந்தபோது, அவருடைய மூன்று மகன்கள் அவருடைய இராஜ்யத்தை மூன்று பங்காக பங்கிட்டுக் கொண்டார்கள். ஆனால் இப்படி பங்கிடுவதற்கு முன்பாக, அவருடைய மகன்களில் ஒருவரான இரண்டாம் கான்ஸ்டன்டைன் (Constantine II), அத்தநேசியஸின் விவகாரத்தைத் தானே கையாளுவதாக ஏற்றுக்கொண்டார். அத்தநேசியஸுக்கும் நைசீன் அறிக்கைக்கும் இவர் ஆதரவாக இருந்தார். ஆகவே, அலெக்சாந்திரியாவின் பிஷப்பாக அத்தநேசியஸை மறுபடியுமாக நியமிப்பதாக அவர் அறிவித்தார். அதன்காரணமாக, கி.பி. 337ல் நவம்பர் 23 ஆம் தேதி மறுபடியுமாக அநேகரின் மகிழ்ச்சிப்பிரவாரத்திற்கு மத்தியில் அத்தநேசியஸ் அலெக்சாந்தியாவுக்கு வந்தார். எனினும், அவர் குறுகிய நாட்களுக்கே அங்கு தங்கியிருந்தார், அதுவும் பிரச்சனைகள் இல்லாத காலங்களாக இருக்கவில்லை. அலெக்சாந்திரியாவில், ஏரியர்கள் தொடர்ந்து பிரச்சனைகளைத் தூண்டிவிட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். யூதர்களும், அந்நிய மக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.
இக்காலத்தில் மிகவும் அச்சுறுத்துகிற விஷயமாக நடந்தது என்னவென்றால், இரண்டாம் கான்ஸ்டன்டைனின் சகோதரரான கான்ஸ்டன்டியஸ் (Constantius) என்பவர் அத்தநேசியஸ் வாழ்ந்த கிழக்குப்பகுதி ராஜ்யத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்கொண்டார். கான்ஸ்டன்டியஸ் ஏரியனிசத்திற்கு ஆதரவாக இருந்தார். இவர் நிக்கோமீடியாவின் பிஷப்பாகிய யூஸிபியஸின் சிந்தனைகளால் கவரப்பட்டிருந்ததனால், அவரைத் தன்னுடைய ராஜ்யத்தின் தலைநகரான கான்ஸ்டன்டிநோபிளின் பிஷப்பாக ஏற்படுத்தினார். இதைப் பயன்படுத்தி, யூஸிபியஸ் அத்தநேசியஸுக்கு எதிரான பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும் கிளறிவிடத் துவங்கினார்.
ஏரியனிய ஆதரவாளர்கள், அத்தநேசியஸைப் பிஷப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு தங்களுக்கு ஆதரவான ஒருவரை அப்பொறுப்பில் ஏற்படுத்துவதற்கான முயற்சியாக, ரோமில் பிஷப்பாக இருந்த ஜூலியஸிடம் (Julius), அத்தநேசியஸின் விஷயம் சம்பந்தமாக மறுபடியும் விசாரிக்கும்படியான ஒரு கவுன்சிலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர். எனவே ஜூலியஸ், அடுத்து வரும் கோடைக்காலத்தில் (கி.பி. 340), திருச்சபைகளின் கவுன்சில் கூட்டப்பட இருப்பதை சுற்றறிக்கையாக எழுதி எல்லாத் திருச்சபைகளுக்கும் அனுப்பினார். (இந்நிகழ்வுகளுக்கு மத்தியில், ரோமிலுள்ள திருச்சபையின் பிஷப்புக்கான அதிகாரமும், முக்கியத்துவமும் அதிகரித்து வருவதை நாம் காண முடிகிறது.) கவுன்சில் கூடுவதற்காகக் குறித்திருந்த நாள் வரை ஏரியர்களால் காத்திருக்க முடியவில்லை. ஆகவே, அந்தியோகியாவில், அவர்களாகவே கூடி, அத்தநேசியஸ் பிஷப் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டதாகவும், அத்திருச்சபையில் அவருக்குக் கீழிருந்த ஒருவரை அப்பொறுப்பில் ஏற்படுத்துவதாகவும் அறிவித்தனர். இதற்கிடையில், எகிப்தில், அத்தநேசியஸைக் கைது செய்வதற்காக, அவருடைய எதிரிகள் முயற்சித்தபோது, பலமுறை அவர் நூலிழையில் தப்பித்திருக்கிறார். இறுதியாக, அவரை அலெக்சாந்திரியாவைவிட்டு வெளியேறவும், ரோமுக்குச் செல்லவும் கட்டாயப்படுத்தினார்கள். இப்படியாக அத்தநேசியஸ், கி.பி. 339, ஏப்ரல் 16 ஆம் நாள், இரண்டாம் முறையாக நாடுகடத்தப்பட்டார். இந்த முறை, ஏழு வருடங்களுக்கு மேலாக அவர் மறுபடியும் திரும்பிவர முடியாமல் போனது. இதற்கிடையில், அத்தநேசியஸுக்கும் நைசீன் அறிக்கைக்கும் ஆதரவாக இருந்த, எகிப்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஏரியர்கள் மூலமாக கடும் துன்புறுத்தல் உண்டானது.
இந்த இரண்டாம் நாடுகடத்தலின்போது, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியிலுள்ள திருச்சபைகளுக்கு இடையிலான பிரிவினைகள் வெளிப்படையாகவே தெரிந்திருந்தது (கி.பி. 339 – கி.பி. 343). ஏரியர்கள், கி.பி. 340ல் கூட்டப்பட்ட கவுன்சிலில் கலந்துகொள்ளுவதற்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. எனினும், பிஷப் ஜூலியஸ் அக்கவுன்சிலை நடத்தினார். அத்தநேசியஸைப் பற்றிய அதே பழைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் நன்றாக ஆராயப்பட்டது. பிறகு, எல்லாக் குற்றச்சாட்டுகளிலும் அத்தநேசியஸ் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டது. அத்தநேசியஸ் அலெக்சாந்திரியாவின் பிஷப் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு, அவருடைய இடத்தில் இன்னொருவரைப் பிஷப்பாக ஏற்படுத்தியது முறையற்ற நியமனம் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்தோடு, அன்சிராவின் பிஷப்பாக இருந்த மார்சிலஸின் நீக்கமும் செல்லாது என்று கூறி, அவரையும் நிரபராதி என்று அறிவித்தது. மார்சிலஸைப் பற்றிய இந்தக் கடைசி அறிவிப்பு, திரித்துவ கோட்பாட்டாளர்களைப் பற்றி பழமைவாதப் பெரும்பான்மையினர் கொண்டிருந்த பயத்தைத் தணிப்பதற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. ஏனென்றால், மார்சிலஸ், மொடலிஸ்டிக் மொனார்கியனிசப் போக்கைக் கொண்டிருந்தது, பரவலாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது. பிஷப் ஜூலியஸ், இக்கவுன்சிலின் முடிவுகளை, கிழக்குப் பகுதி திருச்சபைகளுக்குக் கடிதத்தின் மூலம் தெரியப்படுத்தினார்.
கி.பி. 341ல், அந்தியோகியாவில், கிழக்குப் பகுதி திருச்சபைகளின் கவுன்சில் கூடியது. வழக்கம்போல், பழமைவாதப் பெரும்பான்மையினரே அக்கவுன்சிலில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால் இம்முறை, யூஸிபியஸினால் வழிநடத்தப்பட்ட ஏரியர்களும் அதில் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர். ஜூலியஸினால் அனுப்பப்பட்ட கடிதத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை. குறிப்பாக, நைசீன் அறிக்கையிலிருந்து விலகி, கிழக்குத் திருச்சபைகளுக்காக ஓர் அறிக்கையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையில் அவர்கள் முதல் முறையாக ஈடுபட்டனர்.
மொடலிஸ்டிக் மொனார்கியனிசம், நைசீன் அறிக்கையைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்று பழமைவாதப் பெரும்பான்மையினர் அஞ்சினர். மேற்குப் பகுதி திருச்சபையினர், மொடலிஸ்டிக் மொனார்கியனிசம் என்ற கள்ளப் போதனையை எதிர்க்கவில்லை என்று பழமைவாதப் பெரும்பான்மையினர் நம்பினார்கள். நைசீன் அறிக்கையிலிருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையின் ஓர் அம்சமாக, அதில் குறிப்பிடப்பட்டிருந்த கிரேக்க வார்த்தையான “homoousion” என்ற வார்த்தையை அவர்கள் வன்மையாக எதிர்த்தனர். “Homoousion” என்ற வார்த்தையின் மூலம் கிறிஸ்து பிதாவின் அதே சாரத்தைக் கொண்டுள்ளார் என்று நைசீன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பழமைவாதப் பெரும்பான்மையினரில் அநேகர், ஏரியனிசப் போதனையை எதிர்த்தபோதிலும், நைசீன் அறிக்கையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட அவர்களுடைய நடவடிக்கையை ஏரியனிசப் போதனையாளர்கள், தங்களுக்கான வழியாகப் பயன்படுத்தி, அவர்களுடைய நிழலில் அடைக்கலம் கொண்டார்கள். இப்படியாக, பழமைவாதப் பெரும்பான்மையினர், மொடலிஸ்டிக் மொனார்க்கியனிசயத்திற்கும் மேற்குப் பகுதி திருச்சபைக்கும் எதிராக, ஏரியனிச போதனையாளர்களோடு கைகோர்த்தனர்.
(2) அத்தநேசியஸ் அலெக்சாந்திரியாவுக்கு திரும்பி வந்ததனால் உண்டான தசாப்த பொற்காலமும் (Golden Decade), மூன்றாவது முறையாக நாடுகடுத்தப்படுதலும்.
கி.பி. 340ல் இரண்டாம் கான்ஸ்டன்டைன் மரணமடைந்ததனால், அவருடைய சகோதரரான கான்ஸ்டன்ஸ் (Constans) என்பவர் மேற்குப்பகுதி முழுமைக்கும் தனியொருவராக ஆளுகிறவரானார். கான்ஸ்டன்ஸ், அத்தநேசியஸ்மீது பெரும் மதிப்புக் கொண்டிருந்ததனால், தன்னுடைய சகோதரரான கிழக்குப் பகுதி ஆட்சியாளரான கான்ஸ்டன்டியஸோடு பேசி, இப்பிரச்சனைக்கான தீர்வு காணும்படியாக, அனைத்து திருச்சபைகளின் மாபெரும் கவுன்சில் கூட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். எனினும், கி.பி. 343ல், சர்திகா (Sardica) என்ற இடத்தில் இம்மாபெரும் கவுன்சில் கூடியபோது, வெகுவிரைவிலேயே பிரச்சனை எழுந்தது. கி.பி. 341ல், ஏரியர்களின் தலைவரான யூஸிபியஸ் மரணமடைந்திருந்ததனால், இக்கவுன்சிலில் ஏரியர்கள் பலவீனமாக இருந்ததையும், மேற்குப் பகுதி திருச்சபைகளின் பிரதிநிதிகள் பெரும் பலத்துடன் இருந்ததையும் ஏரியர்கள் அறிந்திருந்தனர். ஏரியர்கள், குற்றஞ்சாட்டப்பட்ட அத்தநேசியஸும் மார்சிலஸும் மேற்குப் பகுதி பிரதிநிதிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அது நிராகரிக்கப்பட்டதனால், அவர்கள் அக்கவுன்சிலிலிருந்து வெளிநடப்பு செய்து, பிலிப்போபொலீஸ் (Philippopolis) என்ற இடத்தில் தனியாகக் கூட்டம் நடத்தினர். இம்மாபெரும் கவுன்சில் கூட்டப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறாமல் போனது. இப்படி இரண்டு பிரிவாக பிரிந்து, இரண்டு கவுன்சில்கள் நடத்தப்பட்டதனால், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதி திருச்சபைகளுக்கு இடையிலான பிளவு மேலும் அதிகரித்தது.
இந்த இருளான காலங்களின் போது, ஆச்சரியமான சில மாற்றங்களுக்கான நிகழ்வுகளும் நடந்தன. மேற்குப் பகுதி ரோம பேரரசனான கான்ஸ்டன்ஸ், அத்தநேசியஸுக்கும் நைசீன் அறிக்கைக்கும் சாதகமான, சர்திகா கவுன்சிலின் முடிவுகளை நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்தார். நைசீயா அறிக்கைக்கு ஆதரவாக இருந்ததன் காரணமாக நாடுகடத்தப்பட்ட அத்தநேசியஸ் மற்றும் ஏனையோரை மறுபடியுமாக நாட்டிற்குள் அனுமதிக்கும்படி, கி.பி. 344ல், அந்தியோகியாவிலிருந்த தன்னுடைய சகோதரரான கான்ஸ்டன்டியஸிடம் வலியுறுத்தும்படி, மேற்குப்பகுதி பிஷப்புகளில் மிகவும் மதிப்புமிக்க இருவரை கான்ஸ்டன்ஸ் அனுப்பினார். இவர்கள் இருவருடைய செயல்பாடுகள் சிறிது வெற்றியையும் தந்தது. எனினும், அப்பகுதியின் பிஷப் ஸ்டீபன் (Stephen), ஏரியனிசப் போதனையைப் பின்பற்றியதால், கேடான சதி ஆலோசனையின் மூலமாக இவர்களுடைய முயற்சியைத் தடுப்பதற்கான செயலில் ஈடுபட்டார். தனக்குக் கீழிருந்த ஒரு திருச்சபை ஊழியன் மூலமாக, ஒரு விபச்சாரப் பெண்ணைக் கூலிக்கு அமர்த்தி, அவளைக் கொண்டுவந்து, அந்த இரண்டு பிஷப்புகளில் ஒருவர் தங்கியிருக்கிற அறையில், அவருக்குத் தெரியாமல் விட்டுச்சென்றனர். அவருடைய அறையில் கொஞ்ச நேரம் அமைதலாக இருந்த பிறகு, அறையைவிட்டு வெளியே வந்து, அவர்மீது குற்றஞ்சாட்டும்படி அவளுக்குச் சொல்லிவைத்திருந்தனர். அவளும் அப்படியே செய்தாள். மறுநாள் காலையில், இந்தக் குற்றச்சாட்டு வேகமாகப் பரவத் துவங்கியது. இது அப்பகுதியில் பெரும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது. எனவே இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இறுதியில், இந்தச் சதியோசனைக்கு உடன்பட்ட, அந்த ஏரியன் பிஷப்புவின் ஊழியனுக்கே எதிராகவே அது திரும்பியது.
கான்ஸ்டன்டியஸ், இந்தச் சதிகளினால் மிகவும் கோபங்கொண்டதோடு, தன்னுடைய சகோதரன் சொல்லிய விஷயத்தில் அதிக ஈடுபாடு காட்டவும் துவங்கினார். அத்தோடு, நைசீன் அறிக்கைக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு எதிராக இருந்த அநேக கட்டுப்பாடுகளையும் தளர்த்தினர். பத்து மாதங்களுக்குப் பிறகு (கி.பி. 345, ஜுன் மாதம்), எகிப்தில் அத்தநேசியஸுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட பிஷப் மரணமடைந்தார். அத்தநேசியஸை அந்தப் பொறுப்பில் நியமிப்பதற்காக தன்னைச் சந்திக்க வரும்படி, கான்ஸ்டன்டியஸ் அத்தநேசியஸுக்கு மூன்று முறை கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து அதை மறுத்து வந்த அத்தநேசியஸ், பிறகு சந்திக்கச் சம்மதித்தார். அத்தநேசியஸ் மீது முன்பு சொல்லப்பட்ட எந்தவிதமான குற்றச்சாட்டைக் குறித்தும் ஒருபோதும் கேட்க மாட்டேன் என்று காஸ்டன்டியஸ் வாக்குறுதி அளித்திருந்தார். இறுதியாக, கி.பி. 346, அக்டோபர் 21 ஆம் நாள், அத்தநேசியஸ் மறுபடியுமாக எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார். அத்தநேசியஸ் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பியதை அங்குள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரவேற்றனர். அத்தநேசியஸ் அன்று அலெக்சாந்திரியாவுக்கு வந்ததைக் குறிப்பிடுகிற ஒரு வரலாற்று ஆசிரியர், “அத்தநேசியஸ் அலெக்சாந்திரியாவுக்கு வருவதற்கு 100 மைலுக்கு முன்பாகவே, அவரை வரவேற்க அப்பகுதியிலுள்ள மக்களும் அதிகாரம் பெற்ற பெரியவர்களும் சென்றனர். இப்படியாக, அன்று அத்தநேசியஸ் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையில் அலெக்சாந்திரியாவில் காலடி எடுத்து வைத்தார்” என்று எழுதியிருக்கிறார்.
அத்தநேசியஸின் வருகை, மனந்திரும்புதலின் காலமாகவும் ஆவிக்குரிய எழுப்புதலின் காலமாகவும் அங்கு இருந்தது என்பதை வெளிப்படையாகவே காண முடிந்தது. அத்தநேசியஸ் தன்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான காலப்பகுதியில் இருந்தார். அப்போது அவருக்குக் கிட்டதட்ட 40 வயதாக இருந்தது. அலெக்சாந்தியாவின் பிஷப்பாக எந்தவிதமான இடையூறும் இல்லாமல் மகிழ்ச்சியோடு அவர் பணியாற்றிவந்த காலமது. 9 வருடங்களும், 4 மாதமும் அவர் அங்கு பணியாற்றினார். இந்த அற்புதமான காலப்பகுதியே அவருடைய வாழ்வின் பொற்கால தசாப்தமாக இருந்தது. எகிப்தில் பிஷப்பாக அவருடைய பலம் ஒவ்வொரு வருடமும் பெருகிக்கொண்டு வருவது கண்கூடாகவே தெரிந்தது. திருச்சபையில் ஒற்றுமை அதிகரித்தது. எகிப்தில் ஏரியனிச போதனையைப் பின்பற்றியவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே அப்போதனையைப் பின்பற்றியவர்கள் இருந்தார்கள்.
எனினும், ரோம சாம்ராஜ்யத்தின் திருச்சபைகளுக்கு இடையில் ஏரியன் முரண்பாடு இன்னும் ஒரு உறுதியான தீர்வை எட்டவில்லை. ஆரம்ப காலத்தில் கூட்டப்பட்ட கவுன்சில்களில், ஏரியன் முரண்பாட்டில் ஈடுபட்ட இரு தரப்பினருக்கும் எதிராக அறிவிக்கப்பட்ட எந்தவிதமான கண்டனங்களும் தண்டனைகளும், நிறைவேற்றப்படவும் இல்லை, அவைகள் ரத்து செய்யப்படவும் இல்லை. ஏரியனிசத்தைப் பின்பற்றியவர்கள் இன்னும் அதிகளவில் திருச்சபை தலைவர்களுக்கான பொறுப்பில் இருக்கத்தான் செய்தார்கள். எனினும் அவர்கள் தங்களை அதிகமாக முன்னிலைப்படுத்தாதபடிக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தார்கள். மொடலிஸ்டிக் மொனார்கியனிச சிந்தனை கொண்ட மார்சிலஸ் போன்றவர்கள் இன்னும் திருச்சபைகளில் உயர்ந்த பதவிகளில் இருக்கத்தான் செய்தார்கள். பழமைவாதப் பெரும்பான்மையினர், ஏரியனிச போதனையைப் பின்பற்றியவர்களுடன் இணைந்து, மொடலிஸ்டிக் மொனார்கியனிசத்தைப் பின்பற்றியவர்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். இவையாவும் பழைய பிரச்சனையை அனல் மூட்டி எழுப்புவதற்கான முக்கிய நிகழ்வை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
கி.பி. 350ல், மேற்குப் பகுதி ராஜ்யத்தின் அரசனும், அத்தநேசியஸின் ஆதரவாளருமான கான்ஸ்டன்ஸ் என்பவர் மெக்னென்டியஸ் (Magnentius) என்ற கிளர்ச்சியாளனால் கொல்லப்பட்டார். ஆனால், கான்ஸ்டன்டியஸ் மெக்னென்டியஸை வென்றதால், இப்போது ஒட்டுமொத்த ராஜ்யமும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக, கான்ஸ்டன்டியஸ், நைசீன் அறிக்கையைவிட்டு விலகிச் செல்லத் துவங்கினார். என்ன விலை கொடுத்தாவது திருச்சபையில் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று எண்ணினார். திருச்சபையில் ஒற்றுமை நிலவுவதற்கு பெரும் இடையூறாக இருப்பது, எதிலும் வளைந்துகொடுக்காத அத்தநேசியஸ்தான் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். இதன்காரணமாக, தான் அத்தநேசியஸுக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியை மீறி, அத்தநேசியஸுக்கு எதிராக சில நடவடிக்கைகளைச் செய்யத் துவங்கினார். ஆரம்பத்தில் அதை மறைமுகமாகவே செய்தார். அதன்பின் நேரடியாகவே செய்யத் துவங்கிவிட்டார். மேற்குப் பகுதியிலுள்ள அத்தநேசியஸ் ஆதரவாளர்களை முற்றிலுமாக இல்லாமலாக்குவதற்காக, கி.பி. 353ல் ஆர்லஸ் (Arles) என்ற இடத்திலும், கி.பி. 355ல் மிலான் (Milan) என்ற இடத்திலும் கவுன்சில்களைக் கூட்டி, அத்தநேசியஸுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்புவதில் அவர்களை வலுக்கட்டாயமாக இணையும்படிச் செய்தார். இதைச் செய்ய மறுத்தவர்களை, அவர்களுடைய பொறுப்பிலிருந்து நீக்கி, அவர்களை நாடுகடத்தினார். அலெக்சாந்திரியாவில் அத்தநேசியஸை கைது செய்வதற்காக பல முயற்சிகள் செய்யப்பட்டது. கி.பி. 356, பிப்ரவரி 8 ஆம் நாள், திருச்சபையில் அத்தநேசியஸ் ஆராதனையை நடத்திக்கொண்டிருந்தபோது, ரோமப் பேரரசின் போர்வீரர்கள் ஆராதனை வளாகத்தை சுற்றி வளைத்தனர். இருந்தும், அத்தநேசியஸ் அங்கிருந்து தப்பிவிட்டார். அதுவும் தன்னுடைய மக்களுக்கு அதன்மூலம் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது என்பதை உறுதிசெய்த பிறகே அங்கிருந்து தப்பியோடினார். இப்படி ஓடியவர், கிட்டதட்ட 6 வருடங்கள், 8 நாட்களுக்கு, பொதுவில் யாருக்கும் தென்படாமலேயே இருந்துவந்தார். இது அத்தநேசியஸின் மூன்றாவது நாடுகடத்தும் நிகழ்வாகும். அப்போது, அத்தநேசியஸுக்குக் கிட்டதட்ட 58 வயதாக இருந்தது.
இதற்கிடையில் எகிப்தில், அத்தநேசியஸின் ஆதரவாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல் துவங்கியது. அத்தநேசியஸ் நாட்டைவிட்டுச் சென்றதனால், காலியான பிஷப் பதவிக்கு ஏரியர்களில் ஒருவர் வலுகட்டாயமாக பதவியமர்த்தப்பட்டார். அத்தோடு ஏரியர்களுக்கே, திருச்சபைத் தலைவர் பொறுப்பு பெருமளவுக்குக் கொடுக்கப்பட்டது. சில விசுவாசிகள் ஏரியர்களுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டிலும், ஒதுக்குப்புறமாக கல்லறைகளில் கூடிவந்து ஆராதனை செய்தனர்.
இப்படியாக, முழு ராஜ்யத்திலும், தங்களுடைய எண்ணத்தை முன்னெடுத்துச் செல்லுவதற்கான வழி ஏரியர்களுக்குக் கிடைத்தது. கி.பி. 357ல், நைசீயா அறிக்கையை வெளிப்படையாக நிராகரிக்கும் ஒரு சிறு கவுன்சில் கூட்டப்பட்டது. அக்கவுன்சில் ஏரியனிசப் போதனையை வலியுறுத்துவதாக இருந்தது. ஏரியர்கள், ஏரியனிச போதனையை வெளிப்படையாக வலியுறுத்தியதால், பழமைவாதப் பெரும்பான்மையினர், இப்போது ஏரியர்களை வலிமையாக எதிர்க்கத் துவங்கினார்கள். இதன்காரணமாக, ஏரியனிச அறிக்கையை பெருமளவிலான திருச்சபைகள் ஏற்கமாட்டார்கள் என்பதை ஏரியர்கள் அறிந்து கொண்டார்கள். ஆகவே, ஒரு பொதுவான, தெளிவற்ற, சமரசமான விசுவாச அறிக்கை, அதாவது கிறிஸ்துவினுடைய தெய்வீகத்தைப் பற்றிய எந்தவிதமான குறிப்பையும் நேரடியாகக் கொண்டிராத ஒன்றைத் தயார் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இது அவர்கள் தொடர்ந்து திருச்சபையில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளுவதற்கான வகையில் தயார் செய்யப்பட்டது.
ஏரியர்களும், கிழக்குப் பகுதியிலிருந்த பழமைவாதப் பெரும்பான்மையினரும், தங்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கிற பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளுவதற்கான ஒரு பொதுவான திருச்சபை கவுன்சில் தேவை என்று நம்பினார்கள். கி.பி. 359ல், வெலென்ஸ் (Valens) என்ற ஏரியர்களின் தலைவன், கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு பகுதிகளையும் கொண்ட ஒரு பொதுவான கவுன்சிலைக் கூட்டும்படி பேரரசனிடம் கேட்டுக்கொண்டார். ஏரியர்கள், தாங்கள் தயாரித்த பொதுவான, தெளிவற்ற, சமரசமான அறிக்கையை ஏற்கும்படி, தங்களுடைய சதியோசனைகளினாலும் பொய்களினாலும் பேரரசனுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இந்த அறிக்கை, ஏரியர்களுக்கு திருச்சபையின் கதவைப் பரந்த அளவில் திறந்து வைத்தது. ரிமினி (Rimini) என்ற இடத்தில் கூட்டப்பட்ட மேற்குப்பகுதி கவுன்சிலைக் குறித்து, ஜெரோம் (Jerome) என்பவர் எழுதியிருக்கிறார், “தன்னில் ஏரியர்களைப் பார்க்க முடிகிறதே என்று முழு உலகமும் புலம்பி, ஆச்சரியப்பட்டது”. இப்போது, பழமைவாதப் பெரும்பான்மையினரில் இருந்த அநேக வேதபூர்வ கிறிஸ்தவ தலைவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இருந்த பொறுப்புகளில் ஏரியனிச போதனைகளில் உறுதியானவர்கள் நியமிக்கப்பட்டார்கள். வெளியில் பார்ப்பதற்கு ஏரியர்கள் வெற்றியடைந்ததுபோலவே தெரிந்தது. ஆனால் கிறிஸ்துதான் அப்போதும் அரியணையில் இருந்தார் என்பதை மறந்துவிடக்கூடாது. கேடான ஆட்சியாளர்கள் என்றென்றும் வாழுகிறதில்லை. கி.பி. 361ல், கான்ஸ்டன்டியஸ் மரணமடைந்தார்.
அடுத்தகட்ட நிகழ்வுகளை நோக்கி நாம் சொல்லுவதற்கு முன், இதுவரை நாம் பார்த்த நிகழ்வுகள், நமக்குப் போதிக்கும் சில முக்கியமான பயன்பாடுகளை நாம் பார்க்கலாம்.
- ஓர் உள்ளூர் திருச்சபையும், அதன் தலைவர்களும், வேதம் போதிக்கும் சத்தியங்கள் தொடர்பான துல்லியமான, விரிவான அறிக்கையைக் கொண்டிருந்து, அதை உறுதியாகப் பிடித்திருக்க வேண்டியதன் அவசியத்தை இதுவரை நாம் பார்த்த நிகழ்வுகள் வலியுறுத்திக் காட்டுகிறது. அவ்வறிக்கை, திருச்சபை வரலாற்றில் எழுந்த முக்கியமான இறையியல் பிரச்சனைகளையும் தற்காலப் பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முக்கியமான இறையியல் பிரச்சனைகளை உள்ளடக்கமாகக் கொண்டிராத, ஒரு தெளிவற்ற, பொதுவான அறிக்கை, கள்ளப் போதனைகளுக்கே வழியை ஏற்படுத்தித் தரும்.
- திருச்சபையில் அன்பும் ஒற்றுமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான குரல் மேலெழுகிறபோது, கிறிஸ்தவர்களைப் போன்று வெளிப்பார்வைக்குத் தெரிகிறவர்களோடும், கிறிஸ்தவ விசுவாசத்தின் முக்கியமான சத்தியங்களில் சமரசம் செய்துகொள்ளும் ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாயிருங்கள். அன்பையும், ஒற்றுமையையும், சகிப்புத் தன்மையையும் குறித்துப் பேசுகிறவர்கள், மிகவும் நுட்பமாக தங்களுடைய எண்ணத்தைச் சாதித்துக்கொள்ளுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அதாவது, வேதபூர்வமான கிறிஸ்தவர்களுக்கு இடையில் அவ்வப்போது ஏற்படும் சச்சரவுகளைப் பற்றிப் பெரியளவில் அச்சப்படவோ, சேர்வுற்றுப் போகவோ வேண்டியதில்லை என்று அவர்கள் சொல்லுவார்கள். இப்படியானவர்களுடைய அணுகுமுறை நுட்பமாகவும், வெளித்தோற்றத்தில் வேதபூர்வமான கிறிஸ்தவர்கள் என்ற பிரமையையும் ஏற்படுத்தும். ஆனால் இவர்கள், வெளிப்புறமாகத் தெரிகிற கள்ளப் போதனையைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானவர்கள். வேத சத்தியங்களில் சமரசம் செய்யும் போக்கு (compromise) எப்போதும் மிகவும் மோசமான சத்தியக்கோளாறுகளை மறைக்கிறதாகவே இருக்கும். இது வேதத்திலுள்ள பிரதான சத்தியங்களெல்லாம் முக்கியமற்றவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். கள்ளப் போதனையின் கை ஓங்குகிற இடங்களில் சகிப்புத் தன்மைக்கு இடமில்லை என்பதைத்தான் இந்நிகழ்வுகளின் அனுபவம் நமக்குக் கற்றுத் தரும் பாடம். அநேக பழமைவாதப் பெரும்பான்மையினர் எப்படியாக கள்ளப் போதனையின் பிடியில் சிக்கி நாடுகடத்தப்பட்டார்கள் என்பதை நினைவுகூருங்கள். ஆகவே கள்ளப் போதனையின் இப்படியான அணுகுமுறையைச் சந்திக்கும்போது ஜாக்கிரதையாயிருங்கள்.
- தேவபக்தியுள்ள ஒருவர், மோசமான கள்ளப் போதனைகளுக்கு எதிராக நிற்கிறபோது, அவரைப் பிரிவினைக்காரர், அன்பற்றவர், சபையில் குழப்பமேற்படுத்துகிறவர், வைராக்கியம் கொண்டவர், சகிப்பு தன்மையற்றவர் என்றெல்லாம் அவர்மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கள்ளப் போதனை செய்கிறவர்கள் சுமத்துவார்கள் என்பதைப் பற்றி எச்சரிக்கையாயிருங்கள். சத்தியத்திற்காக நாம் போராடுகிறபோது, அன்போடுகூட சத்தியத்தை எடுத்துரைப்பதில் நாம் கவனம்காட்ட வேண்டும் என்பது உண்மைதான் (எபேசியர் 4:15; 2 தீமோத்தேயு 2:23-26). சத்தியத்திற்காக போராடுகிற நம்முடைய முயற்சிகளில், அவ்வப்போது பாவத்தின் எச்சங்கள் வெளிப்படுவதும் உண்மைதான். ஆனால், சத்தியத்திற்காக உண்மையுடன் போராடுகிறவர்கள்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளைக் கள்ளப் போதனையாளர்கள், கடவுளுடைய வார்த்தையாகிய சத்தியத்திற்கெதிரான போராட்டத்தைத் திசைதிருப்புவதற்கான ஆயுதமாகவே பெருமளவுக்குப் பயன்படுத்துகிறார்கள். சத்தியத்திற்காக உறுதியுடன் போராடுகிறவர்களின் வாழ்க்கையில், இந்த அனுபவம், கிறிஸ்து மறுபடியுமாக வருகிறவரை தொடர்ந்து கொண்டிருக்கும்.
- நமக்கோ அல்லது நம்மைப் போன்று ஆண்டவருடைய சத்தியத்திற்காக போராடுகிறவர்களுக்கோ வருகிற எதிர்ப்பைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மாறாக, நம்முடைய விசுவாசம் பெலப்பட வேண்டும். எந்தச் சத்தியத்திற்காகப் போராடுகிறமோ, அந்தச் சத்தியமே சொல்லுகிறது, இத்தகைய தாக்குதல்கள், உண்மையுள்ள பிரசங்கிகளுக்கும் போதகர்களுக்கும் அன்றாட அனுபவமாகவே இருக்கும் (2 தீமோத்தேயு 3:1-12). அத்தோடு, அத்தநேசியஸைப் போன்ற கிறிஸ்துவினுடைய உண்மையான வேலையாட்களின் வரலாறு, இந்த விஷயங்களில் நம்மை அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும்.
3. வேதபூர்வமான சத்தியத்தின் இறுதி வெற்றி (கி.பி. 361-381)
(1) ஏரியர்களுடைய வீழ்ச்சிக்கான காரணிகள். அந்நேரத்தில் ஏரியர்கள் வெற்றி பெற்றது போல காணப்பட்ட போதிலும், ஜீவனுள்ள தேவன் அவர்களுடைய இறுதியான தோல்விக்கான விதையை ஏற்கனவே விதைத்திருந்தார். அதற்காக அவர் கட்டளையிட்டிருந்த நிகழ்வுகளைப் பார்க்க முடிந்தது. ஏரியர்களின் அடுத்தகட்ட தலைமுறையினர், தங்களுடைய கள்ளப் போதனையின் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவிக்கிறவர்களாக இருந்தனர். இதன்காரணமாக, கிழக்குப்பகுதியிலிருந்த பழமைவாதப் பெரும்பான்மையினர், இம்முறை அன்சிராவிலுள்ள பெசில் (Basil) என்பவரின் தலைமையில், முன்பு யாருடன் கைக்கோர்த்து திரித்துவ போதனையாளர்களுக்கு எதிராக செயல்பட்டார்களோ, அவர்களுக்கு எதிராகவே இப்போது திரும்பிவிட்டார்கள். இவ்வாறு, ஏரியர்களுக்கும் பழமைவாதப் பெரும்பான்மையினருக்கும் இடையே ஆழமான பிரிவினை, குறுகிய காலத்தில் உருவாகியிருந்தது. இறுதியாக, இந்தப் பிரிவினை கிழக்குப் பகுதி திருச்சபைகளிலிருந்த ஏரியர்களின் வலிமையை பலவீனமாக்கியது. கான்ஸ்டன்டியஸின் மரணமும்கூட ஏரியர்களின் பெரும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. ஏனென்றால், பேரரசனான கான்ஸ்டன்டியஸின் ஆதரவினால், அநேகருக்கு வெளிப்புற ஆதரவளித்து பல சபைகளில் தங்களை முன்னிறுத்தியிருந்தார்கள் ஏரியர்கள். எதிர்காலத்தில் அநேக பேரரசர்கள் ஏரியர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள், ஆனால் யாரும் கான்ஸ்டன்டியஸைப் போல் ஏரியர்களுக்கான ஒரு போராளியாக இருந்து அவர்களை ஆதரித்ததில்லை.
ஏரியர்களுடைய வீழ்ச்சிக்கு இன்னும் அநேக காரியங்களின் பங்களிப்பும் இருந்திருக்கிறது. அத்தநேசியஸ் மூன்றாவது முறையாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்த நாட்களில், எகிப்திலிருந்த அவருடைய ஆதரவாளர்களுடைய உதவியினால், அவரைத் தேடிக் கைது செய்வதற்காக அலைந்து திரிந்த பேரரசனின் அடியாட்களுடைய கையில் சிக்கிக்கொள்ளாமல் தப்ப முடிந்தது. அந்தக் காலங்களில் அவர் சும்மா இருந்துவிடவும் இல்லை. நைசீயா கவுன்சிலினால் அறிவிக்கப்பட்ட, கிறிஸ்துவைக் குறித்த போதனைகளை ஆதரித்து, தெளிவாகவும் உறுதியாகவும் அவர் குறிப்புக்கள் எழுதி வைத்தார். அத்தோடு, கள்ளப் போதனையாளர்களான ஏரியர்கள், தவறான முறையில் தன்னைத் தாக்கியதையும், அதில் தான் குற்றமற்றவன் என்பதையும் பதிவு செய்துவைத்தார். அத்தநேசியஸின் எழுத்தாக்கங்களாக இன்று அச்சில் இருப்பவைகளில், பாதிக்கும் மேற்பட்டவைகள், அவர் மூன்றாவது முறையாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்த இந்தக் காலத்தில் எழுதப்பட்டவைகளே. மேலும், பழமைவாதப் பெரும்பான்மையினரோடு சமாதான நடவடிக்கைகளிலும் அத்தநேசியஸ் ஈடுபட்டிருந்தார். அவரும் பழமைவாதப் பெரும்பான்மையினரும், கிறிஸ்துவின் தெய்வீகத்தைப் பற்றிய விஷயத்தில் ஒரே கருத்தையே கொண்டிருந்தார்கள் என்பதைப் பின்னர் அவர் அறிந்து கொண்டார். இதன் காரணமாக, முன்பு தன்னுடைய எதிரிகளில் ஒரு பகுதியினரும், தன்னை மிகவும் மோசமாக நடத்தியவர்களுமான பழமைவாதப் பெரும்பான்மையினரோடு ஒப்புரவாகும் நடவடிக்கையை முன்னெடுத்தார். அத்தநேசியஸுக்கும் பழமைவாதப் பெரும்பான்மையினருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்வதற்கான நடவடிக்கையை அத்தநேசியஸே தலைமை ஏற்று நடத்தியது, ஏரியர்களின் இறுதியான வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இத்தருணத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான பாடமும் இங்கிருக்கிறது. இதுவரை நாம் பார்த்த சம்பவங்கள், அத்தநேசியஸின் தேவபக்தியுள்ள செயல்களைத் தெளிவாக நமக்குக் காட்டுகிறது. தன்னுடைய பெயருக்கு ஏற்படுகிற களங்கத்தைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல், தன்னுடைய கர்த்தரின் மகிமையும், கிறிஸ்துவினுடைய திருச்சபையின் நன்மையுமே அவருக்கு மிகவும் முக்கியமானது என்ற விதத்திலேயே அவர் எப்போதும் செயல்பட்டார். தன்னுடைய எதிரிகளை மன்னிக்காமல், கசப்புடனும் கோபத்துடனும் அவர் தொடர்ந்து வாழ்ந்துவிடவில்லை. இவையெல்லாவற்றிலும், அத்தநேசியஸ் அற்புதமான தேவகிருபையின் வெற்றிச் சின்னமாக இருந்திருக்கிறார்.
(2) நாடுதிரும்புதல் – நாட்டைவிட்டு வெளியேறுதல் – நாடுதிரும்புதல் – நாட்டைவிட்டு வெளியேறுதல் – நாடுதிரும்புதல். கி.பி. 361ல், கான்ஸ்டன்டியஸுக்குப் பிறகு, அவருடைய இன்னொரு சகோதரன் ஜூலியன் (Julian) பேரரசனானார். ஜூலியன் கிறிஸ்தவத்தை நிராகரித்தார். ரோம பேரரசில் இதற்கு முன்பு இருந்த அந்நிய மதத்தை மறுபடியும் ஏற்படுத்த முற்பட்டார். அதற்கான ஒரு நடவடிக்கையாக, நாடுகடத்தப்பட்ட கிறிஸ்தவ பிஷப்புகளை மறுபடியுமாக நாட்டிற்குள் கொண்டு வந்தால், அவர்களுக்கு இடையில் இருக்கிற சச்சரவின் காரணமாக, திருச்சபைகள் தானாக அழிந்துவிடும் என்று அவ்வரசன் எதிர்பார்த்தான். நாடுகடத்தப்பட்ட பிஷப்புகள், மறுபடியுமாக நாட்டிற்குள் அழைக்கப்படுகிறார்கள் என்ற ஜூலியனின் அரசாணை, அலெக்சாந்திரியாவில் வெளியிடப்பட்டு 12 நாளுக்குப் பிறகு அத்தநேசியஸ் அலெக்சாந்திரியாவுக்கு வந்து மறுபடியுமாக அவர் பிஷப் பொறுப்பை ஏற்றார். இதற்கு முன்பு இருந்த பிஷப், கான்ஸ்டன்டியஸின் மறைவிற்குப் பிறகு எகிப்திலிருந்த ஒரு கலகக்கார கும்பலால் கொல்லப்பட்டார். ஆகவே அப்பொறுப்பு காலியாக இருந்ததனால், அத்தநேசியஸ் மறுபடியுமாக அதே பொறுப்பை ஏற்றார்.
திருச்சபைகளைக் குறித்த ஜூலியனின் எதிர்பார்ப்பு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது. தற்போதைய நிலையை நன்கு அறிந்த அத்தநேசியஸ், உடனடியாக ஒரு கவுன்சிலைக் கூட்டினார். அந்தக் கவுன்சில், கி.பி. 362ல் அலெக்சாந்தியாவில் கூட்டப்பட்டது. இந்தக் கவுன்சிலின்போது, அத்தநேசியஸ் தானாக முன்வந்து, தனக்கும் பழமைவாதப் பெரும்பான்மையினருக்கும் இடையே ஒரு உறுதியான சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அலெக்சாந்திரியாவில் நடந்த கவுன்சிலைத் தொடர்ந்து, ரோம ராஜ்யத்தின் எல்லா பகுதிகளிலும் இத்தகைய கவுன்சில்கள் நடத்தப்பட்டு, நைசீன் அறிக்கையை உறுதிப்படுத்தி, ஏரியன் அறிக்கைகளை கவுன்சில்கள் நிராகரித்தன. ஜூலியனின் சதித்திட்டங்களுக்கெல்லாம் மாறாக, சமாதானமும் ஒற்றுமையும் திருச்சபையில் அதிகமதிகமாக ஊக்கப்படுத்தப்பட்டது. மறுபடியுமாக ஒன்றிணைந்த வேதபூர்வமான கிறிஸ்தவர்கள், அதன்பிறகு எழுந்த ஏரியனிச தாக்குதல்களையெல்லாம் எதிர்க்கும் வலிமை பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் ஒன்றிணைந்ததன் இறுதி இலக்காக, ஏரியனிசத்தைத் திருச்சபையிலிருந்து தூக்கியெறிந்தனர். அலெக்சாந்திரியாவில் கூட்டப்பட்ட கவுன்சில், அத்தநேசியஸின் வாழ்க்கையில் முக்கியமான ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் அத்தநேசியஸ் தன்னுடைய வெற்றிப் பாதையில் ஓய்வெடுக்கிறவராக இருந்துவிடவில்லை.
அலெக்சாந்திரியாவில் கவுன்சில் கூடுவதற்கு முன்பாகவே, அத்தநேசியஸ் அலெக்சாந்திரியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு கடிதத்தின் மூலம் ஜூலியன் கோரியிருந்தார். அத்தநேசியஸுடைய வளர்ச்சியின் காரணமாகவும், அந்நிய மதத்திலுள்ளவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பின்பற்றுவதற்கு எடுக்கும் முயற்சியில் அவர் கண்ட வெற்றியின் காரணமாகவும் ஜூலியன் மிகுந்த கவலையுடன் இருந்தார். அலெக்சாந்திரியாவில் இருந்த மக்கள் ஜூலியனின் ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது, அப்பகுதியில் மேற்கொண்டு கவுன்சில்களை நடத்துவதற்கு அத்தநேசியஸுக்கு தேவையான நேரத்தை ஏற்படுத்தித் தந்தது. ஆனால் ஜூலியனோ, பிஷப்புகள் அலெக்சாந்திரியாவில் இருந்து மட்டுமல்ல, எகிப்திலிருந்தும் வெளியேற வேண்டும் என்று தன்னுடைய ஆணையை உறுதிப்படுத்தி தெரிவித்தார். ஆகவே, கி.பி. 362 அக்டோபர் மாதத்தில், அதாவது அவர் மறுபடியுமாக நாட்டிற்கு திரும்பிவந்து, எட்டே மாதமான நிலையில், அதுவும் தன்னுடைய 64 ஆம் வயதில் அத்தநேசியஸ் நைல் நதியில் ஒரு படகில் ஏறித் தென்புறத்தை நோக்கிச் சென்று, பிறகு எகிப்தின் மேற்புறத்தை வந்தடைந்தார். அத்தநேசியஸைப் பிரிய வேண்டிய நிலையை எண்ணி, நைல் நதியின் கரையில் அவருடைய நண்பர்கள் அழுது கொண்டிருந்தனர். அப்போது அத்தநேசியஸ், ஒரு தீர்க்கதரிசன வாக்கியத்தைப் போல், “தைரியமாக இருங்கள். இதெல்லாம் மேகத்தைப் போன்றதுதான். வெகுவிரையில் எல்லாம் கடந்து போகும்” என்றார்.
அத்தநேசியஸைத் தூர இடத்திற்குச் செல்ல விட்டுவிடக்கூடாது என்பதில் ஜூலியன் மிகவும் கருத்தாக இருந்தார். ஏனென்றால், தூர இடத்திற்குச் சென்றால், அங்கிருந்தும் தனக்கு எதிராக அத்தநேசியஸ் செயல்படுவார் என்று அவர் கருதினார். ஆகவே ஜூலியன், அத்தநேசியஸைக் கொலை செய்யும் நோக்கில், அரசாங்க ஊழியர்களை அத்தநேசியஸ் செல்லும் படகைப் பின்தொடர்ந்து சொல்லும்படி அனுப்பினார். தான் பின்தொடரப்படுவதை உணர்ந்த அத்தநேசியஸ், தன்னுடைய படகைத் திருப்பி வந்த வழியே போகச் சொன்னார். அப்படிச் செல்லுகிறபோது, அத்தநேசியஸைப் பின்தொடர்ந்து வந்த படகை அவருடைய படகு சந்தித்தது. ஆனால் அத்தநேசியஸோ படகில் பதுங்கியிருந்தார். பின்தொடர்ந்து வந்தவர்கள், அத்தநேசியஸ் பதுங்கியிருந்த படகில், அவர் இருப்பதை அறியாமல், அவர்களிடம், அத்தநேசியயைப் பற்றி கேட்டனர். அவர்களும், அத்தநேசியஸ் வெகுதூரத்தில் இல்லை. அருகில்தான் இருக்கிறார் என்று பதிலளித்தனர். உண்மையில் அத்தநேசியஸ் அவர்கள் அருகில்தான் இருந்தார். அதைக் கேட்டு, பின்தொடர்ந்து வந்த படகிலுள்ளவர்கள், விரைவாக படகை ஓட்டினர். இவ்வாறு அத்தநேசியஸ் அன்று அவர்களிடமிருந்து தப்பினார். இறுதியில் அவர் எகிப்தின் மேற்பகுதிக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்தார். அங்கிருந்தபோது, கி.பி. 363 ஜுன் மாதத்தில் பெர்சியர்களுடன் நடந்த போரில் ஜூலியன் மரணமடைந்தார் என்பதை அத்தநேசியஸ் அறிந்து கொண்டார். புதிதாக பதவியேற்ற, கிறிஸ்தவ பேரரசனான ஜோவியன் (Jovian) என்பரை, எடேசா (Edessa) என்ற இடத்தில் சந்திக்க, அலெக்சாந்தியா வழியாக, இன்னும் சில தலைவர்களுடன் சேர்ந்து, அவசரமாக எகிப்திலிருந்து இரகசியமாக புறப்பட்டார் அத்தநேசியஸ். அவர் அவசரமாக சென்றதற்கு முக்கியமான காரணங்கள் இருந்தது. ஏனென்றால், அலெக்சாந்திரியாவின் பிஷப்பாக அத்தநேசியஸை மறுபடியும் பதவியமர்த்தியதற்கு எதிராகவும், அலெக்சாந்திரியாவின் பிஷப்பாக வேறொருவரை பதவியில் அமர்த்தவும் வேண்டுமென்று ஏரியர்களும் கோரிக்கை மனுவை ஜோவியனிடம் அளிக்க ஒரு பெரிய கூட்டத்தை அனுப்பியிருந்தனர். ஆனால் ஏரியர்களால் அத்தநேசியஸோடு போட்டியிட முடியவில்லை. ஏனென்றால், அத்தநேசியஸ் மறுபடியுமாக திரும்பி வந்து, தன்னுடைய பொறுப்பை ஏற்கும்படி பேரரசனிடமிருந்தே அவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆகவே, அத்தநேசியஸ், கி.பி. 364 பிப்ரவரியில், அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பிவந்து, தன்னுடைய பொறுப்பை மறுபடியுமாக ஏற்றார். எனினும், இந்த முறையும் அது குறுகிய கால அளவில் மட்டுமே இருந்தது.
அத்தநேசியஸ் அலெக்சாந்திரியாவுக்கு வந்த கொஞ்ச நாட்களில், பேரரசன் ஜோவியன் தன்னுடைய தங்கும் விடுதி ஒன்றில், படுக்கை அறையில் இருந்தபோது, அங்கு கொளுத்தப்பட்டிருந்த கரி நெருப்பிலிருந்து எழுந்த அடர்த்தியான புகையைச் சுவாசித்ததனால், மரணமடைந்திருந்தார். அவருடைய இரண்டு சகோதரர்கள் இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டனர். வெலன்டினியன் (Valentinian) என்பவர் மேற்குப் பகுதியையும், வெலன்ஸ் (Valens) என்பவர் கிழக்குப் பகுதியையும் எடுத்துக் கொண்டனர். துரதிஷ்டவசமாக, வெலன்ஸ் விரைவிலேயே ஏரியனிசப் போதனையினால் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தார். ஆகவே அவர், அத்தநேசியஸின் பிரிவினரையும், பழமைவாதப் பெரும்பான்மையினரின் பிரிவினரையும் எதிர்த்தார். இந்த எதிர்ப்பு, இந்த இரண்டு பிரிவினரும் கோட்பாடுரீதியாக தங்களுக்கு இடையே சிறு வித்தியாசங்கள் இருந்தபோதிலும், இனி வரும் காலம் முழுவதும் ஒன்றாக இணைந்தே செயல்படும்படி உந்தித்தள்ளியது. அத்தநேசியஸும் அவரோடு இணைந்திருந்த பிஷப்புகளும் அவர்களுடைய பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வெலன்ஸ் ஆணையிட்டார். கி.பி. 365 மே மாதத்தில், இந்த அரசாணை அலெக்சாந்திரியாவில் அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த அரசு அதிகாரிகள் அத்தநேசியஸைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பாக, அது குறித்து எச்சரிக்கப்பட்டதனால், அவர்களுடைய கையில் அகப்படாமல் புறநகர் வழியாக மறுபடியும் அத்தநேசியஸ் தப்பிச் சென்றார். ஐந்தாவது முறையாக அத்தநேசியஸ் நாட்டைவிட்டு வெளியேறினார். இது நடந்தபோது அவருக்கு வயது 67. இதுவும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.
அப்போது, கிழக்குப் பகுதி ஆட்சியாளருக்கு எதிராக ஒரு புரட்சி உண்டானது. அது பேரரசனை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியது. இந்நிலையில், வெலன்ஸ் அலெக்சாந்திரியாவில் உண்டான பதட்டத்தை அமர்த்துவதற்கான முயற்சியில் ஆர்வம் காட்டினார். கி.பி. 366 பிப்ரவரியில், ஓர் அரசாங்க தூதுவனை அலெக்சாந்திரியாவுக்கு அனுப்பி, அத்தநேசியஸை மறுபடியும் அலெக்சாந்திரியாவுக்கு அழைத்துவருவதற்கான அறிவிப்பை முறைப்படி தெரிவித்தார். அரசு தூதுவனும், அப்பகுதியிலிருந்த அரசு அதிகாரிகளும், பேரரசின் புறநகர் பகுதிக்கு நேரடியாக சென்று, அத்தநேசியஸைத் தகுந்த பாதுகாப்புடன் அழைத்து வந்து, டியோனைசியஸ் திருச்சபையில் (Church of Dionysius) சேர்ந்தனர். அங்கிருந்து அத்தநேசியஸ் தான் இருந்த இடத்திற்குச் சென்றார்.
(3) அத்தநேசியஸின் இறுதி நாட்கள். வெலன்ஸின் இராஜ்யத்தில் கிழக்குப் பகுதி திருச்சபைக்குத் தொடர்ந்தும் பிரச்சனைகள் இருந்து வந்தபோதும், அலெக்சாந்திரியாவில் அத்தநேசியஸின் கடைசி ஏழு வருட பணியில் அங்கு சமாதானமும், நன்மதிப்பும், நன்மைக்கு ஏதுவான தாக்கமும் இருந்தது. அவருடைய இந்த ஏழு வருட காலப்பகுதியைக் குறித்த தகவல்கள் குறைந்த அளவே நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அவருடைய இறுதிக்காலம் மட்டும் அவர் தொடர்ந்து அதிக முனைப்புடன் தன் பொறுப்பை நிறைவேற்றி வந்தார் என்பதை மட்டும் நம்மால் அறிய முடிகிறது. கி.பி. 373, மே மாதம் 2 ஆம் நாள், அத்தநேசியஸ் தன்னுடைய 46 வருட கால பிஷப் பணியை நிறைவேற்றி, தன்னுடைய 75வது வயதில் மரணமடைந்தார்.
அத்தநேசியஸ் மரிக்கிறபோது, அங்கு இன்னும் சில காரியங்கள் சீர்படுத்த வேண்டிய நிலையில்தான் இருந்தன. ஆனால் ஏரியன் முரண்பாட்டிற்கு எதிரான போரில் அத்தநேசியஸ் வெற்றியடைந்திருந்தார்.
அத்தநேசியஸின் வாழ்க்கையும் ஏரியன் முரண்பாடும் நமக்குக் கற்றுத் தரும் சில பயன்பாடுகளோடு இவ்வாக்கத்தை நிறைவு செய்யலாம்.
- கிறிஸ்வினுடைய திருச்சபைக்கு எதிரான ஆபத்துக்கள் பெரும்பாலும் திருச்சபைக்கு வெளியில் இருந்தல்ல, திருச்சபைக்குள்ளிருந்துதான் வருகிறது. நான்காவது நூற்றாண்டில், மோசமான ரோம பேரரசர்கள், துன்புறுத்தலின் மூலமாக கிறிஸ்தவ விசுவாசத்தையும் திருச்சபையையும் அழிக்க முற்பட்டதைக் காட்டிலும், திருச்சபையின் அங்கமாகவும், தங்களைக் கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்டவர்களுமான ஏரியர்களே கிறிஸ்தவ விசுவாசத்தையும் திருச்சபையையும் கிட்டதட்ட அழித்தே விட்டார்கள் என்ற நிலைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
- அத்தநேசியஸின் வாழ்க்கை ஓர் உண்மைக்கு சான்றாக இருக்கிறது. என்னவென்றால், பெரும்பான்மையாக இருப்பதெல்லாம் (பெருந்தொகையாக) எப்போதுமே சரியானதாகவும், உண்மையானதாகவும் இருந்துவிடாது என்பதே அது. கிறிஸ்தவ திருச்சபைகளைப் பொறுத்தவரையிலும் இதுவே உண்மை. என்றென்றும் மாறாத் தன்மைக்கொண்ட கடவுளுடைய வார்த்தைக்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதிலேயே நாம் அதிகக் கவனம் காட்டவேண்டும். ஏனென்றால், அதுவே, இறுதி நாளில், நம்மைப் பார்த்து ஆண்டவர் சொல்லும் நல் வார்த்தையைக் கேட்கும்படி செய்யும்.
- கிறிஸ்துவினுடைய திருச்சபையில் மெய்யான ஒற்றுமையை மனிதனுடைய கட்டளையினாலோ, வலுகட்டாயத்தினாலோ கொண்டு வரமுடியாது. மெய்யான கிறிஸ்தவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்குதான் மெய்யான ஒற்றுமையையும் காண முடியும். ஏனென்றால், அவர்களில் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருப்பதனாலும், அவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையான சத்தியங்களில் ஒன்றிணைந்த புரிதலைக்கொண்டிருப்பதனாலும், அவர்களில் மெய்யான ஒற்றுமையைக் காண முடியும். (எபேசியர் 4:1-16)
- கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில், கடவுளுடைய உண்மையுள்ள மாமனிதனுக்கான அறிகுறியை அத்தநேசியஸில் நாம் காண்கிறோம். தான் வாழ்ந்த காலத்தில் எழுந்த பெரிய பிரச்சனைகளைச் சரியாக இனங்கண்டு, அவற்றை தைரியமாக எதிர்த்து நின்றார் அத்தநேசியஸ். இத்தகைய மனிதர்களை அதிகமாக உலகிற்குத் தர வேண்டும் என்றும், நாமும் இம்மனிதனைப் போன்று இருக்க வேண்டும் என்றும் கடவுளிடம் நாம் மன்றாட வேண்டும்.
- கர்த்தருடைய கிருபையினால் மெய்யான சத்தியத்தின் பக்கமாக விடாமுயற்சியுடன் தொடர்ந்து நின்ற ஓர் அற்புதமான மனிதனை அத்தநேசியஸில் நாம் காண்கிறோம். நம்முடைய வாழ்க்கையில், கடவுள் நம்மை வைத்திருக்கிற இடத்தில் இந்த விடாமுயற்சியை நாமும் அதிகமதிகமாகக் கொண்டிருக்க கர்த்தர்தாமே அதை நமக்குக் கொடுத்தருள்வாராக. நாமும் சோர்வுறாமல் நம் சத்தியப் பாதையில் தொடர்ந்தால், இறுதியில் அதற்கான பலனைப் பெறுவோம்.
- அத்தநேசியஸின் வாழ்க்கை மற்றொரு உண்மையை நமக்குத் தெளிவாக்குகிறது. என்னவென்றால், விடியலுக்கு சற்று முன், இருட்டு பெரும்பாலும் அதிகளவில் இருக்கும். அப்படியே, ஏரியனிச கள்ளப் போதனை வெற்றியடைந்துவிட்டதுபோல் ஆரம்பத்தில் காணப்பட்டபோது, இன்னும் கொஞ்ச நாட்களில், கர்த்தர் அதைத் தூக்கியெறியவும் தம்முடைய திருச்சபையிலிருந்து அதை நீக்கவும் தீர்மானித்திருந்தார் என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்று நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன. ஆகவே, நாம் இருக்கிற நிலை எவ்வளவு இருள் சூழ்ந்ததாக இருந்தாலும், கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து சரியானதை நாம் தொடர்ந்து செய்து சத்தியப்பாதையில் முன்னேற வேண்டும்.
- நான்காவது நூற்றாண்டில், ஏரியன் முரண்பாட்டின் காரணமாக, மோசமான மோதல்களும், உபத்திரவங்களும், சச்சரவுகளும், பிரச்சனைகளும் எழுந்தபோதும், கிறிஸ்துவே அப்போதும் உலகாளும் அரியணையில் வீற்றிருந்தார். அவர் வாக்களித்திருந்தபடி, தம்முடைய திருச்சபையை அவற்றின் மத்தியிலும் கட்டிக்கொண்டிருந்தார். அவர் தம்முடைய பணியை இன்றும் தொடருகிறார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
- இறுதியாக, அத்தநேசியஸும் ஏரியன் முரண்பாடும் என்ற இந்த ஆக்கத்தின் மூலமாக, கிறிஸ்துவின் திருச்சபையாகிய நாம் அனைவரும், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவினுடைய மகிமையை மேலும் தெளிவாகக் காண முடிகிறது. இயேசு கிறிஸ்து முழுமையான கடவுள் என்று அத்தநேசியஸ் உறுதியாக சொன்னதற்கான முக்கியமான காரணம் என்னவென்றால், நம்மைப் படைத்த கடவுளால் மட்டுமே நம்மைப் போன்ற பாவிகளை மீட்டு இரட்சிக்க முடியும் என்பதில், அவர் தெளிவுடன் இருந்ததுதான். மனிதனாக வந்த தேவன், சிலுவை மரணத்தின் மூலமாக, நம்மை இரட்சித்தார். அத்தநேசியஸின் இரட்சகருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.