திருமறைத்தீபம் இதழ் பற்றிய ஒரு முக்கிய விஷயத்தை, இதழின் வரலாற்றோடு தொடர்புடையதொரு விஷயத்தை இவ்விதழில் எழுதலாமென்றிருக்கிறேன். இதுவரை நியூசிலாந்தில் அச்சிடப்பட்டு (ஸ்ரீ லங்காவிற்கு வெளியில் இருக்கும்) அனைத்து வாசகர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட திருமறைத்தீபம் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தில் அச்சிடப்பட்டு சென்னை, சீர்திருத்த வெளியீடுகள் நிறுவனத்தால் வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். உங்கள் கரத்தில் இருக்கும் இவ்வருடத்திற்கான முதல் இதழ் சென்னையில் அச்சிடப்பட்டது. இது நம் இதழ் வரலாற்றில் ஒரு மைல்கல். இப்புதிய திட்டம் பலவிதங்களில் வாசகர்களுக்குப் பலனுள்ளதாக இருக்கும்; அத்தோடு செலவு குறையவும், தேவைப்பட்டால் மேலதிக இதழ்களை அச்சிடவும் இது துணைபுரியும். நாம் இதைச் செயல்படுத்தத் தீர்மானித்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்திய அச்சுப்பணித் தொழில் நுட்பம் மேலைத்தேயத் தரத்திற்கு உயர்ந்திருப்பதுதான். குறைந்த செலவில் மிகச்சிறந்த தரத்தில் தொடர்ந்து திருமறைத்தீபத்தை அச்சிட்டு வெளியிட கர்த்தர் எங்களை வழிநடத்தியிருக்கிறார்.
1995ல் வெளிவர ஆரம்பித்த திருமறைத்தீபம் தேவ கிருபையால் எந்த இடையூறுகளையும் சந்திக்காமல் இதுவரை நியூசிலாந்தில் இருந்து வெளிவந்தது. இந்த இதழ்பணியில் நாம் கர்த்தரின் வல்லமையான கரத்தைக் காண்கிறோம். இலவசமாக இதை நாம் வெளியிட்டு வந்தபோதும் ஆக்கங்களின் தரத்திலும், அச்சுத்தரத்திலும் எந்தக் குறைபாட்டையும் வைக்காமல் வெளியிட்டு வந்திருக்கிறோம். முக்கியமாக இதழின் ஆக்கங்கள் வேதபூர்வமாக, வரலாற்று சீர்திருத்த போதனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாக அமைய அக்கறை காட்டியிருக்கிறோம். என்று ஆரம்ப இதழில் பெரியவர் ஸ்பர்ஜனின் ஆழமும் அழுத்தமும் பொதிந்த வார்த்தைகளான, ‘கொள்கைகளையும் கோட்பாடுகளையும் புறக்கணித்து, சத்தியத்தை வெளிப்படையாக எடுத்துக்கூறாத ஒரு பத்திரிகையை இலக்கியத்தடங்கல் என்றுதான் கூறவேண்டும்’ என்பதை இதழட்டையின் உட்புறத்தில் பதிவு செய்து அதை வெளியிட ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து இன்றுவரை அக்கோட்பாட்டிற்கு இழுக்கு ஏற்படுமாறு இதழ் வேறுபாதையில் போக எத்தனித்ததில்லை. இதழ் பலபேரை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக எந்தவொரு சபைப்பிரிவின் போதனைகளையும் குறைகாணாமல் ‘சாம்பார் இறையியல்’ பாணியில் சத்தியங்களை எழுதினால் என்ன, என்று வந்த ஆலோசனைகளுக்கெல்லாம் தலைசாய்க்காமல் சீர்திருத்தப் போதனைகளை வரலாற்று விசுவாச அறிக்கைகளினதும், வினாவிடைப்போதனைகளினதும் அடிப்படையில் உண்மையோடு இதுவரை எழுதி வெளியிட்டு வந்திருக்கிறோம். சினொட் ஆப் டோர்ட் மற்றும் 1689 விசுவாச அறிக்கையின் போதனைகளுக்கு எந்தவிதத்திலும் முரணாக பத்திரிகையின் ஆக்கங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. இதழின் ஆக்கங்களைப் படைக்கிறவர்களும் அச்சத்தியங்களை முழுமனதோடு விசுவாசித்துப் பின்பற்றுகிறவர்களாகவே இருக்குமாறு தொடர்ந்தும் கருத்தோடு கவனித்துக்கொள்கிறோம். தமிழினத்தைத் தன் பலம் வாய்ந்த கரத்தில் இறுகப்பற்றி ஆண்டு வருகிறதே என்பதற்காக பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் மற்றும் செழிப்புபதேசத் குழுவினர்களுக்கு துதி பாடியோ அல்லது அவற்றைக் குறைகாணாமலோ திருமறைத்தீபம் இதழ் இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட போதனை பிரபலமாக இருக்கிறது என்பதற்காகவும், அதன் வசியத்திற்கு கும்பல் கும்பலாக கூட்டம் மயங்கிக் கட்டுப்பட்டிருக்கிறது என்பதனாலும் அதுவே சரியானது, வேதபூர்வமானது என்று அர்த்தமில்லை. வரலாற்று சீர்திருத்த இறையியல் தலைவர்கள் மற்றும் போதகர்கள் அறிந்திராததொன்று நவீன கெரிஸ்மெட்டிக் போதனைகளும், செழிப்புபதேசமும். அதற்குக் காரணம் அது வேதத்தில் காணப்படாத போதனை என்பதே. சத்தியத்தை உள்ளது உள்ளபடி வெளிப்படையாக எந்தவித சத்தியப்புரட்டலும் இல்லாமல் எழுதி கர்த்தரின் மகிமைக்காக வெளியிடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இதழ் இதுவரை வெளிவந்திருக்கிறது; இனியும் வெளிவரும்.
கடந்த இருபத்து நான்கு வருடங்களாக ஆக்லாந்தில் இருக்கும் எங்கள் திருச்சபை இவ்விதழ் பணியில் விசுவாசத்தோடும், தளர்ச்சியற்றும் ஈடுபட்டு வந்திருக்கிறது. பத்திரிகை அச்சகத்தில் இருந்து வெளிவந்தவுடனேயே சிறுகுழுவினராக சபையைச் சார்ந்தவர்கள் உதவிக்காரர்களின் கீழ் வருடத்தில் நான்கு முறை கூடி பத்திரிகையை வாசகர்களுக்கு அனுப்பிவைக்கத் தேவையான அனைத்தையும் செய்து தபால் நிலையத்தில் அவற்றைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இதில் எந்த வருடத்திலும் எந்தத் தடங்கலும் ஏற்பட்டதில்லை. பத்திரிகையை அச்சிட்டு வெளியிடும் செலவிலும் கர்த்தர் எந்த வருடத்திலும் எந்தக் குறையையும் வைத்ததில்லை. கடந்த இருபத்தி நான்கு வருடங்களும் இந்தப் பணியை ஆர்வத்தோடு சுவிசேஷப்பணியாகக் கருதி சபை செய்துவந்திருக்கிறது. எந்தப் பாராட்டையும், பணத்தையும் எதிர்பார்க்காமல் இந்தப் பணியை இதழாசிரியரிலிருந்து அனைவரும் செய்து வந்திருக்கிறார்கள். அத்தோடு இதழை இருபது வருட காலத்துக்கு மேல் எந்தக் குறையும் இல்லாமல் இதுவரை அச்சிட்டுத் தந்திருக்கும் நியூசிலாந்து டி ராவு அச்சகத்தாருடைய அருமையான பணியை நினைத்துப் பார்த்துப் பாராட்டாமல் இருக்க முடியாது. இப்போது அந்தப் பணியை நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும், ஆர்வத்தோடும் சென்னை சீர்திருத்த வெளியீடுகளின் கரத்தில் ஒப்படைத்திருக்கிறோம். இந்தப்பணியை இனி நெடுங்காலத்துக்கு கர்த்தரின் மகிமைக்காகவும், சத்தியப் பரவுதலுக்காகவும் அவர்கள் செய்து வர எங்கள் சபை தொடர்ந்து கர்த்தர் முன் மன்றாடும்; துணை நிற்கும்.
திருமறைத்தீபம் இப்போது இருபத்தி ஐந்தாவது வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களா, என்று திரும்பிப் பார்க்கிறபோது ஆச்சரியம் ஏற்படுகிறது. இத்தனை வருடங்களுக்கு இதழை வெளியிடுவோம் என்று நாம் என்றுமே எண்ணியதில்லை. இத்தனை வருடங்களை ஒருவர் மட்டுமே கடந்துவரச் செய்யமுடியும். அது யாரென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. கர்த்தரின் கரமின்றி ஒருவரும் அதைச் செய்யமுடியாது. இதில் முக்கியமானது என்ன தெரியுமா? சத்திய வெளிச்சமின்றி வாடி வதங்கிக் காணப்படும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில், அதுவும் வாசிப்புப் பழக்கம் பெருமளவுக்கு இன்றும் இல்லாமலிருக்கும் சமூகத்தில், சீர்திருத்த போதனைகளை மிகவும் குறைவான தொகையினரே அறிந்து வைத்திருக்கும் ஒரு இனத்தில், பல நாடுகளுக்கு இதழைக் கர்த்தர் கொண்டு சேர்திருக்கிறார். இதழ் பணியில் எமக்கு மகிழ்ச்சி தரும் (பல விஷயங்களில்) சிறப்பான ஒரு விஷயம் என்ன தெரியுமா? எத்தனையோ கிறிஸ்தவ பிரிவுகளில் இருந்து சீர்திருத்த கிறிஸ்தவ போதனைகளை முதன் முறையாக அறிந்து கற்றுணர்ந்து அதன் வழியில் போகின்ற அநேகரைக் கர்த்தர் எழுப்பியிருப்பதுதான். இவர்களில் இன்று பலர் போதகர்களாக இருக்கிறார்கள்; திருச்சபை நிறுவும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்; சபை ஊழியங்களில் ஈடுபட்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள்; திருச்சபை மக்களாக இருக்கிறார்கள்; சமூகத்தில் பெரும் பொறுப்புகளை வகித்து வருகிறவர்கள் இருக்கிறார்கள்; சாமானியர்களும் இருக்கிறார்கள். இதைவிட மகிழ்ச்சி தரும் விஷயம் என்ன இருக்கமுடியும்? சாமானியர்களை திருமறைத்தீபம் இன்று இறையியல் கற்கவும், இறையியல் பேசவும் வைத்திருக்கிறது; ஒருபோதும் ஒரு நூலையாவது தமிழில் வாசித்திராதவர்களுக்கு வாசிக்கும் ஈடுபாட்டை உண்டாக்கித் தொடர்ந்து வாசிக்க வைத்திருக்கிறது; குறிப்பிட்ட சிலரை வைராக்கியமுள்ள சீர்திருத்த பிரசங்கிகளாக்கியிருக்கிறது. பாகிஸ்தானில் சீர்திருத்த போதனைகளைப் பின்பற்றி திருச்சபை நடத்தி வரும் நண்பரொருவரை சமீபத்தில் சந்தித்தேன். திருமறைத்தீபத்தின் பாணியில் அந்நாட்டில் அவர் ‘சத்திய விளக்கு’ என்ற பெயரில் ஒரு சீர்திருத்த இதழை எழுதி வெளியிட்டு வருகிறார். அப்படியொரு இதழை வெளியிட வேண்டும் என்று அவர் சிலவருடங்களுக்கு முன் தீர்மானித்து என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார். அந்நாட்டிலும் சத்திய ஒளி வீச திருமறைத்தீபம் தன் பங்கைச் செய்திருக்கிறது.
திருமறைத்தீபத்தின் மூலம் கர்த்தர் செய்திருக்கும், செய்துவரும் அற்புதங்களை எழுத்தில் வடிக்கப்போனால், என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு சிறு நூலாகவே மாறிவிடும். இதெல்லாம் இவ்வூழியத்தில் ஈடுபட்டிருக்கும் எங்களுக்கு ஒருபோதும் தலைக்கனத்தை ஏற்படுத்தியதில்லை. இதையெல்லாம் செய்கிறவர் கர்த்தராக இருக்கிறபோது சாதாரண மனிதர்களாகிய நாம் பெருமைப்பட்டுக் கொள்ளுவதில் என்ன பயன்? சகல மகிமையும் கர்த்தரையே சார வேண்டும்.
எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.
எனும் சங்கீதம் 115:1-2 வார்த்தைகளை இந்நேரத்தில் இங்கே நினைவு கூருவது பொறுத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
திருமறைத்தீப ஊழியர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து விசுவாசத்தோடு தொடர வாசகர்களாகிய நீங்கள் எங்களோடு இணைந்து ஜெபியுங்கள். எந்தவிதத்திலும் பிசாசின் கரத்தில் விழுந்துவிடாதபடியும், அவன் மாயையில் சிக்கிவிடாதபடியும், சத்தியப்புரட்டல்களுக்கும் மிரட்டல்களுக்கும் பணிந்து விடாதபடியும், ஆவிக்குரிய தைரியத்தோடும், மனத்தாழ்வோடும் உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக எழுதி வெளியிட்டு கலங்கரை விளக்காக நம்மினத்துக்கு வேதசத்திய வெளிச்சமுண்டாக்க கர்த்தர் எங்களைப் பயன்படுத்த கிருபை பாராட்டும்படி ஜெபியுங்கள். திருமறைத்தீபத்தின் மூலம் பயனடைகிறவர்களாக நீங்கள் இருப்பீர்களானால் இதழையும் இதழ் விளக்கும் சத்தியங்களையும் உங்களைச் சார்ந்தவர்களும் அறிந்துகொள்ளும்படி நீங்களும் ஏதாவது செய்வீர்களானால் இப்பணியில் நீங்களும் பங்குகொண்டவர்களாக இருப்பீர்கள்.
இந்தியாவிலுள்ள திருமறைத்தீபம் வாசகர்கள், இப்பத்திரிகை தொடர்பான உங்களுடைய எண்ணங்களையும் கேள்விகளையும் இனி வரும் நாட்களில் இவ்விதழில் குறிப்பிடப்பட்டுள்ள “சீர்திருத்த வெளியீடுகள்” நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கலாம். இந்தியாவில் இப்பத்திரிகை தேவையானவர்கள், இனி கீழ்வரும் முகவரிக்கு எழுதுங்கள்.
சீர்திருத்த வெளியீடுகள்
6/87 காமராஜர் தெரு, திருவள்ளுவர் நகர், அயனாவரம், சென்னை 600023
தமிழ்நாடு, இந்தியா.
+91 9445671113
biblelamp1995@gmail.com
Reformed Publications
6/87 Kamarajar Street,
Thiruvalluvar Nagar,
Ayanavaram, Chennai 600023
Tamilnadu, India. +91 9445671113
biblelamp1995@gmail.com