தள்ளாடும் பக்திவைராக்கியம் – டேவிட் மெரெக்

சென்ற இதழில், நாம் பக்திவைராக்கியத்தின் அநேக ஊக்கப்படுத்தும் சாதகமான உதாரணங்களில் நம்முடைய கவனத்தை செலுத்தினோம். எனினும், அத்தகைய நல்ல உதாரணங்களும் நம்மில் ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு உண்டு. அதாவது, உண்மையான விசுவாசிகளுக்கும் சுவிசேஷ ஊழியர்களுக்கும் பக்திவைராக்கியம் பற்றிய விஷயங்களில் அவர்களுக்கு ஒருபோதும் போராட்டம் ஏற்பட்டதில்லை என்பதுபோல் நமக்குத் தென்படலாம். அப்படியில்லை என்பதை வேதம் தெளிவாகக் காட்டுகிறது. 1 இராஜாக்கள் 18-19 அதிகாரங்களில், முக்கிய கதாபாத்திரமாகிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய எலியாவில் இந்த உண்மை தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பொல்லாதவனாகிய ஆகாப் ராஜாவின் நாட்களில் கலகக்காரராகிய இஸ்ரவேலின் வடபகுதி ராஜ்யத்திற்கு, கடவுளுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய எலியா அனுப்பப்பட்டார். முந்தைய ஆக்கத்தில், வைராக்கியமான, பலனுள்ள ஜெபத்திற்கு நல்ல உதாரணமாக எலியா இருந்ததை நாம் கவனித்தோம். இருந்தும் இந்த உண்மையுள்ள தீர்க்கதரிசியும் கிட்டதட்ட அவிந்துவிடக்கூடிய பக்திவைராக்கியத்தை அனுபவித்திருந்தார். ஊக்கம் குன்றிய, மனஅழுத்தங்கொண்ட பக்திவைராக்கியத்திற்கு அவர் ஓர் உதாரணமாக இருக்கிறார்.

1 இராஜாக்கள் 18வது அதிகாரத்தில், எலியா கடவுளுடைய கிருபையினால் கர்மேல் மலையில் கர்த்தருக்காக பெரிய வெற்றி பெற்றார். விக்கிரக தெய்வமாகிய பாகாலின் தீர்க்கதரிசிகள் கொல்லப்பட்டார்கள். எலியாவினுடைய ஜெபத்திற்கான பதிலாக, மூன்றரை வருடங்கள் மழைப்பெய்யாதிருந்த நிலத்தில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. அது கர்த்தரை உண்மையாக பின்பற்றுகிறவர்களுக்கான அற்புதமான காலங்கள் என்பதுபோல் இருந்தது. ஆவிக்குரிய எழுப்புதல் இஸ்ரவேலில் உண்டானதுபோல் இருந்தது. ஆனால் யேசபேல் யெஸ்ரயேலுக்கு வந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டவுடன் எலியா ஓடிவிட்டார். பிறகு என்ன நடந்தது என்பதை 1 இராஜாக்கள் 19 வது அதிகாரம் விவரித்துக் காட்டுகிறது. பக்திவைராக்கியத்தைப் பற்றிய மூன்று முக்கியமான விஷயங்களை இந்த அதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது.

1. எலியாவினுடைய பக்திவைராக்கியத்தின் மெய்த்தன்மை

வசனங்கள் 10 மற்றும் 14ல் இரண்டு முறை, எலியா, “சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1 இராஜாக்கள் 19:10, 14
10 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

14 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

இங்கு எலியாவினுடைய வார்த்தையைக் கவனியுங்கள். வெறுமனே பக்திவைராக்கியமாக இருந்ததாக அவர் சொல்லவில்லை. மாறாக, “வெகு” பக்திவைராக்கியமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே இங்கு எலியா குறிப்பிடுவது, “உண்மையிலேயே நான் கர்த்தருக்காக வைராக்கியங் கொண்டிருந்தேன், கர்த்தரே உமக்காக ஊழியம் செய்வதற்கு முழு இருதயத்தையும், ஆத்துமாவையும், உணர்ச்சியையும் பயன்படுத்தினேன்” என்றே சொல்லியிருக்கிறார்.

அதற்கு கர்த்தர், “எலியா, உன்னைப் பற்றி நீ கொஞ்சம் பெரிதாகவே பேசிக்கொள்ளுகிறாய்” என்று பதிலளிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், “இப்போது யேசபேலைக் கண்டு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறபோது, எனக்காக நீ வைராக்கியமாக இருந்ததை என்னிடமே சொல்லுகிறாயோ?” என்றும் கர்த்தர் கேட்கவில்லை. எலியாவின் வார்த்தைகளை கர்த்தர் மறுக்கவில்லை. சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக உண்மையிலே வைராக்கியங் கொண்டிருந்தார் எலியா. இங்கு அவருடைய வார்த்தை உண்மையானது. பக்திவைராக்கியத்தின் சிறந்த உதாரணமாக அவர் இருந்திருக்கிறார். அதற்கான சில குறிப்புகளைப் பார்ப்போம்.

கிட்டதட்ட முற்றிலுமாக ஆண்டவரை விட்டுத்தூரப் போயிருந்த இஸ்ரவேலின் வட ராஜ்யத்தில் எலியா உண்மையுள்ள ஊழியனாக இருந்து வந்தார். விக்கிரக தெய்வமாகிய பாகாலை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களை, மனந்திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பொல்லாத ராஜாவாகிய ஆகாபுக்குக் கர்த்தரிடமிருந்து வந்த கெட்ட செய்தியை, அதாவது அதைப் பற்றி வேறு செய்தி கொடுக்கப்படும்வரை தொடர்ந்திருக்கும் வறட்சியின் செய்தியை தைரியமாக எலியா சொன்னார். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காக மூன்றரை வருடங்கள் அவர் மறைந்திருக்க வேண்டியிருந்தது. அநேக நாட்களாக வறட்சியின் பிடியிலிருந்த நாட்டை எண்ணிக் கோபமாக இருந்த ராஜாவை தைரியமாக சந்திக்க வந்தார். ஆகாப் தவறாகக் குற்றஞ்சாட்டியபோது அதை ஏற்க மறுத்தார் எலியா. அத்தோடு, ஆகாபின் பொல்லாத செயல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பின்னர் அவர் தன்னந்தனியாக 850 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எதிராக கர்மேல் மலையில் நின்றார். அவர்கள் போலியானவர்கள் என்று வெளிப்படுத்தப்பட்டபோது அவர்களில் 450 பேரைத் தனியொருவராக அவர் கொன்றுபோட்டார். அவருடைய ஊக்கமான ஜெபத்தின் காரணமாக மழை நிறுத்தப்பட்டது என்பதை முந்தைய ஆக்கத்தில் கண்டோம். அப்படியே அவருடைய ஊக்கமான ஜெபத்திற்கான பதிலாக மழை மறுபடியும் பெய்தது (யாக்கோபு 5:17-18). மெய்யாகவே எலியா கர்த்தருக்கென்று அதிக வைராக்கியங் கொண்டிருந்தார். தன்னுடைய வைராக்கியத்தைப் பற்றி அவர் சொல்லியிருப்பது உண்மையே.

எலியாவின் வைராக்கியத்தைப் பற்றிச் சொல்லும் மற்றொரு குறிப்பை இப்போது பார்ப்போம்.

2. அவிந்துபோகும் நிலையிலிருந்த எலியாவின் பக்திவைராக்கியம்

18 வது அதிகாரத்தில் நாம் பார்க்கும் எலியாவுக்கும் 19வது அதிகாரத்தின் ஆரம்பத்தில் பார்க்கும் எலியாவுக்கும் வெளிப்படையான வேறுபாடு இருப்பதைப் பார்க்கலாம். 19 வது அதிகாரத்தின் முதற்பகுதியில் கர்த்தருக்கான எலியாவின் வைராக்கியம் கிட்டதட்ட முற்றிலுமாக அவிந்துபோகும் நிலையிலிருந்தது. யெகோவாவுக்கான அவரது ஆர்வமும் வேகமும், இப்போது யெகோவா இந்த உலகத்தில் இல்லை என்பதுபோல் இருந்தது. எஞ்சி இருந்ததெல்லாம் ஊக்கமிழந்ததும் மனஅழுத்தங்கொண்டதுமான வைராக்கியம்தான். ஆனால் அதையடுத்து வரும் நிகழ்வுகள், அவரில் பக்திவைராக்கியம் முற்றிலுமாக இல்லாமல் போய்விடவில்லை என்பதைக் காட்டுகிறது. எனினும், 19வது அதிகாரத்தின் ஆரம்பத்தில், அது நிச்சயமாக கிட்டதட்ட அணைந்து போயிருந்தது. இந்த கட்டத்தில் அவிந்துபோகும் நிலையிலிருந்த எலியாவின் பக்திவைராக்கியத்தைப் பற்றிய இரண்டு விஷயங்களைக் கவனியுங்கள்.

அ. எலியாவின் பக்திவைராக்கியம் அவிந்துபோகும் நிலையில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள்.

19வது அதிகாரம் இதற்கான அநேக ஆதாரங்களை நமக்குத் தருகிறது.

1 இராஜாக்கள் 19:2-3
2 அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள். 3 அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச் சேர்ந்த பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.

கர்மேல் மலையில் மிக தைரியமாக இருந்த எலியா தற்போது மரண பயம் கொண்டவராக, தான் இருக்க வேண்டிய இடத்தைவிட்டும், தனக்கு அசாதாரண வலிமையைக் கொடுத்து தன்னை நடத்தின கர்த்தரைவிட்டும் ஓடினார். தனக்கு ஏற்பட்டிருக்கிற இக்கட்டான சூழலில், வழிகாட்டுதலுக்காக அவர் கர்த்தரிடம் ஆலோசனை கேட்கவே இல்லை. யேசபேலின் பயமுறுத்தலினால் அவர் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவிட்டார். ஓரேப் மலைக்குப் போய்ச் சேரும்வரை அவர் ஓட்டத்தை நிறுத்தவே இல்லை (ஓரேப் என்பது சீனாய் மலைக்கு இன்னொரு பெயர்). அது ஒரு குறுகிய பயணமல்ல. யெஸ்ரயேலிலிருந்து ஓரேப் 470 கி.மீ. தொலைவில் இருந்தது.

1 இராஜாக்கள் 19:4
அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,

எலியா கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் கர்த்தருக்காக துடிப்போடு வாழ்ந்து காட்டினார். ஆனால் இப்போது தான் மரிக்க வேண்டும் என்று கர்த்தரிடம் சொல்லுகிறார். அவர் அதிக மனஅழுத்தத்தோடு இருந்தார் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

இதிலும் நாம் சில சாதகமான விஷயங்களைப் பார்க்க முடிகிறது. அவர் மனஅழுத்தத்தோடு இருந்தபோதிலும் தன்னுடைய உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளும் கேடான காரியத்தை அவர் செய்யவில்லை. மாறாக, உயிருக்கு உரிமையுடையவராகிய கடவுளுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்து தன்னுடைய மரணத்தின் நேரத்தை அவரிடமே விட்டுவிட்டார். இரண்டாவதாக, தனது துன்பநேரத்திலும் அவர் சரியான இடத்திற்குதான் சென்றிருக்கிறார். அதாவது, தனது போராட்டத்தைப் பற்றிக் கடவுளிடம் பேசினார். உணர்ச்சிபூர்வமாகவும் ஆத்மீகபூர்வமாகவும் மோசமான நிலையில் இருந்தபோதும் அவர் கடவுளிடம் சென்றார். எனினும், முடிவில், தான் மரித்தால் போதும் என்றே தொடர்ந்து எலியா கடவுளிடம் கேட்டார்.

1 இராஜாக்கள் 19:10-14
10 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். 11 அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று: பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. 12 பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று. 13 அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. 14 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

சற்று முன் கர்மேல் மலையில் வெற்றிப் பெற்ற எலியா, தற்போது கடவுளின் மென்மையான, அவரை ஆராயும் கேள்விக்கு பதிலளிக்கையில், இரண்டு முறை அதே வார்த்தைகளையே சொல்லுகிறார். இது அவருடைய ஆழ்ந்த ஊக்கமின்மையையும், விரக்தியையுமே காட்டுகிறது. இஸ்ரவேல் ஆவிக்குரிய விதத்தில் யெகோவாவிடம் திரும்பும் என்ற நம்பிக்கை அவருக்கு முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது. இஸ்ரவேலின் வட ராஜ்யத்தில் மீந்திருந்த ஒரே உண்மையுள்ள தீர்க்கதரிசியாக எலியா மட்டுமே இருந்தார். அவ்விடத்திலிருந்த பொல்லாத மனிதர்கள் அவருடைய கழுத்தை வாங்கக் காத்துக்கொண்டிருந்தனர்.

எலியா தான் கர்த்தருக்காக வெகு வைராக்கியம் கொண்டிருந்ததாக இரண்டு முறை சொன்னபோது, அவர் கடந்த காலத்தைப் பற்றித்தான் சொன்னார் என்பது தெளிவாக தெரிகிறது. தற்போதிருக்கிற நிலையைப்பற்றி அவர் விவரிக்கவில்லை. இப்போது எலியாவின் பக்திவைராக்கியம் கிட்டதட்ட அணைந்துபோகும் நிலையில் இருந்தது கண்கூடாக தெரிகிறது. ஆனால் ஏன் இப்படி இருந்தது? முன்னுதாரணமாக இருந்த எலியாவின் முந்தைய வைராக்கியத்திற்கு என்ன நடந்தது? ஏன் இந்த மோசமான நிலை ஏற்பட்டது? இதற்கான விளக்கத்தை இரண்டாவது குறிப்பு தருகிறது.

ஆ. எலியாவின் பக்திவைராக்கியம் கிட்டதட்ட அணைந்துபோகும் நிலையில் இருந்ததற்கான விளக்கங்கள்.

19வது அதிகாரத்திற்கு முன்பு எலியாவைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எலியாவில் இந்த வைராக்கியம் தற்போது சரிந்துள்ளதற்கான காரணங்களைத் தெளிவாக நமக்குத் தரவில்லை. எனினும் 19வது அதிகாரம் இதற்கான சில முக்கியமான குறிப்புகளை நமக்குத் தருகிறது. அந்தக் குறிப்புகள், மனஅழுத்தமும், ஊக்கமின்மையும், பயமும், விரக்தியுமுள்ள தம்முடைய ஊழியனை மறுபடியும் நிலைநிறுத்துவதற்காக கடவுள் செய்த கிருபையுள்ள செயல்களின் மூலமாக தெரியவருகிறது.

முதலாவதாக, எலியா கீழ்வரும் விஷயங்களினால் பாதிக்கப்பட்டிருந்தார்:

கடுமையான உடல் சோர்வு. எலியா தூங்கியதிலிருந்தும் தேவதூதன் கொண்டு வந்த உணவையும் தண்ணீரையும் சாப்பிட்டதிலிருந்தும் இது நமக்குத் தெரியவருகிறது. எலியா பெயர்செபாவுக்கு வந்தபோது, சரீரபிரகாரமாக முற்றிலும் அவர் சோர்ந்துபோயிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கர்மேல் மலையில் பாகாலின் 450 தீர்க்கதரிசிகளோடு போராடி அவர்களைக் கொலை செய்தார். கர்த்தர் மழையை அனுப்புவதற்கு முன்பு ஜெபத்தில் போராட வேண்டியிருந்தது. கர்மேல் மலையிலிருந்து யெஸ்ரயேலுக்கு ஓடி வரவேண்டியிருந்தது (32 கிமீ), அதுவும் ஆகாபின் இரதத்தைவிட வேகமாக ஓடி வரவேண்டியிருந்தது. இவைகளின் காரணமாக, சரீரத்தின் பெலன் அதிகமாக செலவழிந்திருக்கும். யெஸ்ரயேலுக்கு அவ்வளவு வேகமாக ஓடுவதற்கு நிச்சயமாக கர்த்தர் அவருக்கு அசாதாரண வலிமையைத் தந்திருக்க வேண்டும். ஆனால் இத்தகைய உடல் உழைப்பு, நிச்சயமாக அந்த உண்மையுள்ள தீர்க்கதரிசியிலிருந்து சரீர பெலத்தை இழக்கச் செய்திருக்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக, இடையில் எந்தவித ஓய்வும் எடுக்காமல் உடனடியாக, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காக யெஸ்ரயேலிலிருந்து ஒரு நாள் பிரயாண தூரத்தையும் தாண்டியுள்ள பெயர்செபாவுக்கு ஓடி வந்தார். ஆகவே, சரீரப்பிரகாரமாக முற்றிலும் சோர்ந்துபோன நிலையில்தான், தான் சாக வேண்டும் என்று அவர் கர்த்தரிடம் கேட்டார். நாம் சரீரமில்லாத ஆவியைக் கொண்டிருக்கவில்லை. நம்முடைய சரீரத்தின் நிலை நம்முடைய ஆத்துமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் பக்திவைராக்கியமும் உள்ளடங்கியிருக்கிறது. எலியாவின் உதாரணம் இதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

இதனோடு சேர்ந்த இன்னொரு விஷயத்திலும் எலியா அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

மிகுந்த மனத்தளர்ச்சி. மூன்று வருடங்கள் தலைமறைவாக வாழுவது என்பது எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே நமக்குக் கடினமாக இருக்கும். முதலாவது, எலியா ஆற்றுக்கு அருகில் தனியாக வாழ்ந்து வந்தார். பிறகு புறஜாதி விதவை மற்றும் அவளுடைய பிள்ளையோடு வாழ்ந்து வந்தார். தலைமறைவாக இருந்த காலம் முழுவதும், ஆகாப், தன்னை எப்போது கண்டுபிடித்துக் கொலை செய்வானோ என்றுதான் ஒவ்வொரு நாளும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார். தன்னைச் சாகடிக்கக் கூடிய பொல்லாத ஆகாபை எதிர்கொள்ளும்போது உண்டாகும் மனத் தளர்ச்சியைப் புரிந்துகொள்ளுவது கடினமே. பிறகு நூற்றுக்கணக்கான கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு மத்தியில் அவர் தனியாக நிற்கவேண்டியிருந்த நிலையை எண்ணிப்பாருங்கள். மரண பயம் கொண்டிருந்த 450 மனிதர்களுடைய உடலில் கத்தியை உருவக் குத்திச் சாய்க்கின்ற நிலை நமக்கு ஏற்பட்டிருந்தாலொழிய அதை நம்மால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுடைய சரீரத்திலிருந்து இரத்தம் வடிவதையும், அவர்களுடைய சரீரத்திலிருந்து உயிர் பிரிந்து தன்னுடைய நித்தியத்திற்கு செல்லும்போது உண்டாகிற மரண ஓலத்தையும், வலியையும் வேதனையையும் பார்க்கிற ஓர் ஆத்துமாவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். பிறகு தரையில் முழங்கால் படும்படி குனிந்து, மழைக்காக கடவுளிடம் வேண்டியபோது, அதுவும் தன்னுடைய வேலைக்காரனை ஏழு முறை அனுப்பி மழை மேகம் வருகிறதா என்று பார்த்து வரச் சொல்லி, இறுதியில் அவன் மழை மேகம் சமுத்திரத்திற்கு மேல் எழும்புகிறது என்று சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது அவருடைய உணர்ச்சிகள் எப்படியிருந்திருக்கும்! இறுதியாக, யேசபேலின் பயமுறுத்தலினால் அதிர்ச்சியடைந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடியபோது அவருடைய மன உணர்வுகள் எப்படியிருந்திருக்கும்! என் உயிரை எடுத்துக்கொள்ளும் என்று அவர் கர்த்தரிடம் சொன்னபோது, நிச்சயமாக அவர் அதிகமான மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஆவிக்குரிய எதிர்ப்பும் ஒடுக்குதலும் ஆவிக்குரிய சோர்வுக்கு வழிநடத்தியிருக்கிறது. நாம் இப்போது படித்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள், வெறுமனே சரீரத்தோடும் இரத்தத்தோடுமான சண்டையல்ல என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எபேசியர் 6:12ல் சொல்லப்பட்டது போல், “நம்முடைய போராட்டம் துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் இருக்கிறது”. சாத்தானோடும் அவனுடைய தூதர்களோடும்தான் நமக்கு போராட்டம் உண்டு.

இந்த ஆத்மீகப் போரின் முன்னணியில்தான் எலியா இருந்தார். பொல்லாத ராஜாவுக்கும் ராணிக்கும் நூற்றுக்கணக்கான கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் எதிராக நிற்பதென்றால் எப்படியிருந்திருக்கும்? கள்ளத்தீர்க்கதரிசிகள் பெரும் குரலெழுப்பி கூக்குரலிடுவதும், தங்கள் சரீரங்களில் இரத்தம் வரும்வரை கத்தியால் கிழித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கும் முன்பாக சாட்சியாயிருத்தல் என்றால் எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். கேட்கவோ, பேசவோ, பார்க்கவோ முடியாததும், வானத்திலிருந்து அக்கினியை அனுப்பவும் முடியாததுமான தெய்வமல்லாதவைகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக எடுக்கும் முயற்சியைப் பார்ப்பதும் கேட்பதுமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அத்தோடு பொல்லாத ராணி யேசபேலின் பயமுறுத்தலும் இருந்தது. இவையனைத்திற்கும் பின்னால் சாத்தானுடையதும் பேய்களுடையதுமான தீங்கிழைக்கும் திட்டங்களும் இருந்தன. எலியா தன்னுடைய கண்ணால் பார்ப்பதற்கு அப்பாற்பட்ட ஆவிக்குரிய விரோதிகளினாலும் சேனைகளினாலும் உண்டான போரில் காயப்பட்ட போராளியாக இருந்தார்.

ஆனால் எலியாவின் சரிவுக்குப் பின்னால் மிகவும் பலமாக இருந்த காரணி என்னவென்றால்,

அதிக தீவிரமான ஆத்மீக ஏமாற்றமும் மனஅழுத்தமும் விரக்தியும்தான் இந்த நேரத்தில் எலியாவை அதிகமாகப் பாதித்தது.

கர்மேல் மலையில் எலியா ஆவிக்குரிய பெரும் வெற்றியடைந்தார். ஆனால் அந்த வெற்றி இஸ்ரவேல் இராஜ்யத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை யேசபேலின் அச்சுறுத்தல்கள் காட்டியது. கடவுள்தாமே எலியாவின் ஜெபத்திற்கு பதிலாக வானத்திலிருந்து அக்கினியையும் மழையையும் அனுப்பியிருந்தபோதும், சாதகமான எந்த விளைவும் அங்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எதிர்பார்த்தது நடக்காமல் போனதும் அவநம்பிக்கையும் எலியாவின் ஆத்துமாவைப் பற்றிக்கொண்டது. எது நடந்து என்ன பயன் ஏற்படப்போகிறது? இஸ்ரவேல் என்றாவது ஒருநாள் நல்ல நிலையை அடையும் என்பதற்கு எந்த நம்பிக்கையும் இல்லாமல் போயிற்று.

எனினும், இங்குக் குறிப்பிட வேண்டிய இன்னொரு கடைசி ஒரு குறிப்பு இருக்கிறது. அது என்னவென்றால்,

எலியா பெயர்செபாவுக்கு போகும்வரை அவருடன் ஒரு வேலைக்காரன் இருந்தான் என்பது நமக்குத் தெரியும் (19:3). ஆனால் பெயர்செபாவுக்கு போகுமுன்புகூட உண்மையில் அவர் தனியாக இருப்பதாகவே உணர்ந்தார். தன்னுடைய வேலைக்காரனை விட்டு வந்தபிறகு, உண்மையிலேயே அவர் மனித தொடர்பின்றி தனிமையில் இருந்தார். தேவனுடைய தீர்க்கதரிசிகளிலெல்லாம் “நான் மட்டுமே மீந்திருக்கிறேன்” என்று அவர் சொல்லிய வார்த்தை அவருடைய தனிமையைக் காட்டுகிறது. அந்த தனிமையே எலியாவை பலவீனப்படுத்தியது. சாத்தான், மந்தையிலிருந்து பிரிந்திருக்கிற, தனிமைப்படுத்தப்பட்டு தன்னந்தனியாக இருக்கிற ஆடுகளையே எப்போதும் பிடிக்க முயற்சிப்பான்.

அதன் பிறகுதான் எலியாவின் பக்திவைராக்கியம் கிட்டதட்ட அணைகிறதாக இருந்தது. எலியாவின் வைராக்கியம் சரிந்ததிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று பயன்பாடுகளைக் கவனிப்போம்.

1. முன்பு எலியா கர்த்தருக்காக மிகவும் வைராக்கியம் கொண்டவராக இருந்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளுவது, கடந்தகால வைராக்கியம் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான வைராக்கியத்திற்கு எந்தவித உத்தரவாதத்தையும் தராது என்பதுதான். எந்தவொரு கிறிஸ்தவனும் வைராக்கியத்தில் சரியக்கூடிய பலவீனமான நிலையில்தான் இருக்கிறான். தீவிரமாக சரியும் நிலையிலும் இருக்கிறான். ஆகவே ஒவ்வொரு புதிய நாளையும் எதிர்நோக்குகிறபோது, கடந்த காலத்தில் கர்த்தரிடமிருந்து பெற்ற வைராக்கியத்தைச் சார்ந்து நாம் இருக்கக் கூடாது. நேற்று கொண்டிருந்த வைராக்கியதைத் தக்கவைப்பதும் அதிகரிப்பதற்குமான ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். நாம் விழிப்புடன் இருந்து ஜெபிக்க வேண்டும். வைராக்கியத்தை மங்கச் செய்கிறதும் அவிக்கவும்கூடிய எந்தவொரு விஷயத்திற்கும் எதிராக நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியின் புதிய, அதிகரிக்கிற நிரப்புதலுக்காகவும் வைராக்கியத்திற்கான நிரப்புதலுக்காகவும் அவரிடம் மன்றாட வேண்டும். கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதற்கான அனலுள்ள இருதயத்தையும் அதைத் தூண்டுவதற்கு கடவுளால் கட்டளையிடப்பட்டுள்ள வழிமுறைகளையும் தொடர்ந்து நாடுகிறவர்களாக இருக்க வேண்டும்.

2. எலியா கர்த்தருக்காக வெகு வைராக்கியமாயிருந்த அந்தச் செயலே, அவர் ஏமாற்றமுற்று பலவீனமடையவும் செய்தது. எலியா சில நல்ல விஷயங்கள் ஏற்படவேண்டுமென்று மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து உண்மையுடன் உழைத்தார். ஆனால் பிறகு அந்த ஏக்கமும் உழைப்புமே அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவர் விரும்பிய இலக்குகள் ஒருபோதும் நடைபெறப் போவதில்லை. இன்னொருவிதமாக சொல்லுவதானால், மிகுந்த பெலத்தோடிருந்த அவருடைய முந்தைய வைராக்கியமே, அவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனபோது அவருடைய சரிவுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. நம்முடைய வாழ்க்கையிலும் இது உண்மையாக இருக்கலாம். நம்மை சுற்றியிருக்கிற பாவிகளுக்காகவும் நம்முடைய குடும்பத்திலுள்ளவர்களின் இரட்சிப்பிற்காகவும் அநேக வருடங்களாக ஜெபித்தும் உழைத்தும் இருப்போம். வேதபூர்வமாக சபை நிறுவப்பட்டு கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று ஆர்வத்துடன் செயல்பட்டிருப்போம். ஆனால் மிகுந்த ஏமாற்றமே நமக்குக் கிடைத்திருக்கும். நாம் எதிர்பார்த்த, உழைத்த அந்தக் காரியங்களே நமக்கு விரக்தியை ஏற்படுத்தி நமக்கு எட்டாத தூரத்தில் இருந்துவிடலாம். அத்தகைய நேரங்களில் நாமும் பலவீனப்பட்டு மனஅழுத்தமும் விரக்தியும் கொள்ளலாம். அதற்கு இடமளிக்கக் கூடாது.

மூன்றாவது மற்றும் இறுதிப் பாடம் (இது ஆர்த்தர் பிங்க் எழுதிய “எலியா” என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது).

3. எலியா தன்னுடைய கண்களைக் கர்த்தரைவிட்டு விலக்கியதே அவர் பலவீனமடைந்ததற்குக் காரணம். யேசபேலையும் மற்ற பொல்லாத இஸ்ரவேலர்களையும், தன்னுடைய ஊக்கமிழந்த சந்தர்ப்பச்சூழல்களையும், தன்னைப்பற்றிய சுய பட்சாதாபம் மற்றும் விரக்தியையுமே அவர் நோக்கிக் கொண்டிருந்தார். எனவே எலியாவின் வைராக்கியம் பலவீனமாக இருந்ததைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்த உண்மையை விளக்குகிற புதிய ஏற்பாட்டு உதாரணத்தைக் கவனியுங்கள். பேதுரு தன்னுடைய கண்களை விசுவாசத்தோடு கர்த்தராகிய இயேசுவில் வைத்திருந்தவரை அவர் கடலின் மேல் நடந்தார் என்பதை நினைவுகூருங்கள். இரட்சகரைவிட்டு தன்னுடைய பார்வையை விலக்கி, தன்னைச் சுற்றியுள்ள அலைகளின் மீது வைத்தபோதுதான் அவர் முழுக ஆரம்பித்தார். இதில் நமக்கான ஒரு பாடமும் இருக்கிறது. நாமும் நம்முடைய கண்களை நம்முடைய இரட்சகர் மீதும் அவருடைய வார்த்தையின் மீதுமிருந்து விலக்கிக்கொள்கிறபோது, நம்மைச் சுற்றியுள்ள ஏமாற்றங்கள் மற்றும் சோதனைகள், அல்லது நம்முடைய சொந்த பாவங்கள் மற்றும் பலவீனங்களில் நாம் கவனம் காட்டுகிறபோது, நாமும் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளுவோம்.

எலியா ஒரு தவறான பாதையில் போய்க்கொண்டிருந்தார். ஆனால் முற்றிலும் கர்த்தரைவிட்டுப் போய்விடவில்லை. ஏனென்றால், எலியாவின் கர்த்தர் அவரோடு அங்கு தொடர்ந்து இருந்தார்.

3. எலியாவின் பக்திவைராக்கியம் புதுப்பிக்கப்படுதல்

எலியாவின் வைராக்கியத்தை கர்த்தர் எப்படிப் புதுப்பித்தார் என்பதை படிப்படியாகப் பார்க்கலாம்.

அ. முதலாவது எலியாவின் சரீரத் தேவைகளைக் கடவுள் தம்முடைய இரக்கத்தினாலே கொடுத்தார்.

1 இராஜாக்கள் 19:5-6
5 ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரை பண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். 6 அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்.

இவ்வசனங்களில், இரண்டு முறை எலியா தூங்கினார் என்று நாம் வாசிக்கிறோம். இதை நாம் பெரிதாகக் கவனித்திருக்க மாட்டோம். ஆனால் சங்கீதம் 127:2 சொல்லுவதைக் கவனியுங்கள்,

நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

கடவுள் தமக்கு பிரியமானவனுக்கு தூக்கத்தைத் தருகிறார். சோர்ந்து போயிருந்த எலியாவுக்கு இந்தத் தூக்கம் கடவுளுடைய கிருபையின் ஈவாக இருக்கிறது. (நமக்கும்கூட கடவுள் தம்முடைய கிருபையினால் ஒவ்வொருநாளும் இரவு தூக்கத்தைத் தருகிறார்). இத்தோடு முடிந்துவிடவில்லை. கர்த்தர் தம்முடைய இரக்கத்தினால் வனாந்திரத்தில் தம்முடைய தூதனை அனுப்பி எலியாவுக்கு உணவும் தண்ணீரும் தந்தார் (7-8).

1 இராஜாக்கள் 19:7-8
7 கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான். 8 அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான்.

இது சாதாரண உணவாக இருக்கவில்லை. எலியா இந்த உணவினால் உண்டான வலிமையைக் கொண்டு 40 நாட்களுக்கு வனாந்திரத்தின் வழியாக பயணம் மேற்கொண்டு சீனாய் மலைக்குப் போனார். கேரீத் ஆற்றண்டையிலும், சாரிபாத்திலுள்ள விதவையின் வீட்டிலும் கர்த்தர் எலியாவுக்கு உணவளித்தபோது, காயப்பட்ட தம்முடைய ஊழியக்காரனுக்கு முதலாவதாக சரீரப்பிரகாரமான தேவைகளைக் கொடுக்கிறதன் மூலமாக தம்முடைய இரக்கத்தைக் காண்பித்தார். எலியாவை உண்டாக்கிய கடவுளுக்கு, முதலாவது அவருடைய சரீரத்தேவைகள் தீர்க்கப்படாதவரை அவருடைய ஆவிக்குரிய இருதய பிரச்சனைகளைச் சமாளிக்க, அவரால் முடியாது என்பதை அறிந்திருந்தார். கர்த்தர் எலியாவிடம் கையாண்ட இந்த முறையின் மூலம், நம்முடைய வைராக்கியம் சரிந்தோ குறைந்தோ இருக்கிறபோதோ அல்லது இத்தகைய போராட்டங்களைச் சந்திக்கிறபோதோ, மற்றவர்கள் இத்தகைய போராட்டங்களை அனுபவிக்கிறபோதோ சரீரத் தேவைகளை ஒருபோதும் நிராகரிக்கக் கூடாது என்ற முக்கியமான உண்மையை இங்கே கோடிட்டுக் காட்டுகிறார்.

ஆ. சரீரத் தேவைகளை சந்தித்த பிறகு, கடவுள் தம்முடைய கிருபையினால் எலியாவின் உணர்ச்சி மற்றும் ஆத்மீக தேவைகளைக் தீர்த்துவைக்கிறார்.

(1) கடவுள் எலியாவின் உணர்ச்சி மற்றும் ஆத்மீக தேவைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்திய முக்கியமான வழிமுறைகள். வசனம் 9 சொல்லுகிறது, “கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டானது”. பிறகு வசனம் 13 சொல்லுகிறது, “இதோ . . . ஒரு சத்தம் அவனுக்கு உண்டாயிற்று”. எலியாவின் ஆத்துமாவையும் வைராக்கியத்தையும் சரிப்படுத்தியது எது? கடவுள் எலியாவிடம் பேசியதுதான். கர்த்தருடைய ஆவியின் மூலமாக கர்த்தருடைய வார்த்தையே இதை எலியாவின் இருதயத்தில் ஏற்படுத்தியது.

இந்த இடத்தில் நான் முந்தைய ஆக்கத்தில் வைராக்கியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ஒரு உதாரணத்திற்குத் திரும்பி வர விரும்புகிறேன். அது ஒரு பெட்ரோல் என்ஜினின் உதாரணமாகும். கடவுள் கொடுக்கிற உடல் மற்றும் ஆத்துமாவின் பெலத்தையே பெட்ரோல் குறிக்கிறது என்று பார்த்தோம். மேலும், சிலிண்டர்களிலுள்ள பெட்ரோல்-காற்றுக் கலவையின் வெடிப்புகள் கர்த்தருக்கு ஊழியம் செய்வதற்கு நம்மை உந்தித்தள்ளும் பக்திவைராக்கியத்தை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. பெட்ரோல்-காற்றுக் கலவையை எரியூட்டுவதற்கு பயன்படும் தீப்பொறி எது? பரிசுத்த ஆவியின் மூலமாக நம்முடைய ஆத்துமாவில் கொண்டு சேர்க்கப்படும் கடவுளுடைய வார்த்தையே என்று நான் நம்புகிறேன்.

பக்திவைராக்கியமாகிய தீப்பொறியை ஏற்றுவதில் கடவுளுடைய வார்த்தையினுடையதும் பரிசுத்த ஆவியினுடையதுமான பங்கைச் சுட்டிக்காட்டும் வேதப்பகுதிகள் சிலவற்றை இப்போது பார்ப்பது உதவும்.

எரேமியா 23:29
என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கடவுளுடைய வார்த்தை இங்கு அக்கினியாகக் காட்டப்பட்டிருக்கிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள “அக்கினி” என்பது புதிய ஏற்பாட்டில் பக்திவைராக்கியத்திற்கான வார்த்தையாகிய “எரிகிற சூடான” என்பதை ஒத்திருக்கிறது. இந்த அக்கினி கடவுளுடைய வார்த்தையின் வல்லமையையும் மற்றும் திறனையும் விவரிக்கிறதாக இருக்கிறது என்று மாத்யூ ஹென்றி குறிப்பிட்டிருக்கிறார். கடவுளுடைய வார்த்தை வல்லமையும் திறனும் கொண்டதாக இருப்பதனால், நம்முடைய இருதயங்களில் வைராக்கியமாகிய அக்கினியை அது ஏற்றக் கூடியதாக இருக்கிறது.

கடவுளுடைய வார்த்தை நம்முடைய இருதயங்களில் வைராக்கிய அக்கினியை ஏற்றுவதைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள வேறு சில வார்த்தைப் பிரயோகங்களை இப்போது நாம் பார்ப்போம் – “மரணம் நெருங்குதல்”, “உயிர்ப்பித்தல்”. உயிர்ப்பித்தல் கடவுளுடைய வார்த்தையோடு சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கும் அநேக வேதப்பகுதிகளைப் பாருங்கள்.

  • சங்கீதம் 119:107 – “ நான் மிகவும் உபத்திரவப்டுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.”
  • சங்கீதம் 119:154 – “எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்; உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்”
  • சங்கீதம் 119:25 – “என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்”
  • சங்கீதம் 19:7 – “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது”

உண்மையில், பரிசுத்த ஆவியானவர் கடவுளுடைய வார்த்தையை நம்மில் பயன்படுத்தும்போதுதான், நம்முடைய ஆத்துமாவை மீட்டெடுப்பதும் உயிர்ப்பிப்பதும், உண்டாகிறது. நம்முடைய ஆத்துமாவில் வைராக்கிய அக்கினியை மீட்டெடுப்பதும் புத்துயிர் பெறச் செய்வதும் அப்படித்தான். கர்த்தர் எலியாவின் ஆத்துமாவில் வைராக்கியத்தை உயிர்ப்பிப்பதற்கு, ஆவியின் மூலமாக தம்முடைய வார்த்தைகளைப் பயன்படுத்தியே அதைச் செய்தார்.

(2) கடவுள் எலியாவுக்கு தம்முடைய வார்த்தையின் மூலமாகப் பயன்படுத்திய கிருபையின் படிமுறைகளைக் கவனிப்போம்.

கடவுள் எலியாவின் மனசாட்சியை மெதுவாக, மீண்டும் மீண்டுமாக, பொறுமையாக ஆய்வு செய்தார். வசனங்கள் 9 மற்றும் 13ல் கர்த்தர் இரண்டு முறை “எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்?” என்று கேட்டார். ஏனென்றால், எலியா தற்போது எங்கிருக்க வேண்டுமோ அங்கிருக்கவில்லை. மேலும், அவர் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை. அதன் விளைவாக, கடவுள் மென்மையாக இப்போது அவருடைய பாவத்தை உணரும்படிச் செய்தார். எலியாவினுடைய தனிப்பட்ட அவசியத் தேவையே அவருடைய பாவத்தை உணர்வதுதான். ஆனால் கடவுள் கிருபையாக எலியாவினுடைய சரீரத் தேவைகளை ஓரளவுக்கு சரிசெய்யும்வரை அவருடைய பாவங்களைப் பற்றிக் குறிப்பிடத் துவங்கவில்லை.

கடவுள் எலியாவுக்கு அதிகமான வேலையைத் தந்தார். அவர் செய்யப் போவது மிகுந்த பலனுள்ளதாக இருக்கும் என்றும் அவரை ஊக்கப்படுத்தினார்.

1 இராஜாக்கள் 19:15-17
15 அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, 16 பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு. 17 சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்.

கடவுள் தம்முடைய வேலைகளை இன்னும் பூமியில் நிறுத்திக்கொள்ளவில்லை. குறிப்பாக நியாயத்தீர்ப்பு மற்றும் மீட்பு ஆகிய இரண்டிலும், இஸ்ரவேலில் தம்முடைய வேலையை நிறுத்திக்கொள்ளவில்லை. தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியனாகிய எலியாவின் வேலை இன்னும் முடிந்துவிடவில்லை. எலியா நிறைவேற்ற வேண்டிய குறிப்பிட்ட வேலைகள் இன்னும் இருந்தது. எலியாவுக்கான வேலையின் விவரங்களை எடுத்துரைத்ததும், அதோடு சாதகமான முடிவுகளைப் பற்றிய வாக்குறுதி அளித்ததும் இணைந்து எலியா புத்துயிர் பெறுவதற்கான முக்கிய காரணிகளாக அமைந்தன.

நம்மில் வைராக்கியம் தூண்டப்படுவதற்கு, நாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ளுவது அவசியம் என்பதை ஏற்கனவே படித்திருக்கிறோம். கடவுள், நாம் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறார், அதை எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிறகு நாம் அதன்படிச் செய்யவேண்டும். அதையே கடவுள் எலியாவிடம் செய்தார். முதலில், என்ன செய்யவேண்டுமென்றும், அதை எப்படிச் செய்ய வேண்டுமென்றும் கடவுள் சொல்லிக் கொடுத்தார். எலியா செய்யவேண்டியதைச் செய்வதற்கு கடவுள் எலியாவைத் தயார்செய்தார்.

எலியா, தான் தனிமையாக இருப்பதாக சொன்ன அவருடைய புகார்களுக்கு பதிலளிக்கும் வண்ணமாக அவருடைய கட்டளைகளின் இறுதியில் மேலும் ஊக்கப்படுத்தும்படிச் செய்தார்.

1 இராஜாக்கள் 19:18
ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.

அதாவது, உண்மையாக தம்மைப் பின்பற்றுகிறவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை எலியாவுக்குத் தெரியப்படுத்தினார்.

கடவுள் எலியாவின் தனிமைக்கு ஒரு முக்கியமான தீர்வு வழங்கினார். அவர் எலியாவுக்கு ஒரு வேலைக்காரனைவிட மேலான ஒருவனை உதவியாளனாகத் தந்தார். எலியாவுக்குப் பிறகு எலிசா வரும்படிச் செய்தார். இஸ்ரவேலில் தீர்க்கதரிசிகளின் ஊழியம் இன்னும் நெடு நாட்களுக்கு இருக்க வேண்டியிருந்தது. எலியா இஸ்ரவேலின் கடைசி தீர்க்கதரிசியல்ல. எலியாவின் வேலையைத் தொடர்ந்து செய்யும்படி எலிசாவைக் கடவுள் ஏற்படுத்தினார். கர்த்தருக்குள் எலியாவின் உழைப்பு வீணாகிவிடவில்லை. யெஸ்ரயேலின் ராணியினுடைய கடுங்கோபம் இருந்தபோதிலும் கடவுளின் பணிகள் தொடர்ந்து முன்னேறின.

இவையே போராடிக்கொண்டிருந்த தம்முடைய ஊழியக்காரனின் வைராக்கியத்தை புத்துயிர் பெறச் செய்ய கடவுள் பயன்படுத்திய வழிமுறைகள். இவைகளை நம்முடைய வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துவது?

முதலாவதாக, இதுவரை நாம் பார்த்த எலியாவின் சரிவைத்தான், இன்று “மனச்சோர்வு” என்று சொல்லுகிறார்கள். பெரும்பாலும் சலிப்பூட்டுகிற மனஅழுத்தத்தின் காரணமாக இனிமேல் நம்முடைய வாழ்க்கையோ ஊழியமோ முன்னுக்குப் போகப் போவதில்லை என்று அநேகர் நினைக்கிறார்கள். அவர்கள் ஊக்கமிழந்து விடுகிறார்கள். கவனத்தோடு இருக்கவும் தங்களுடைய இலக்கை எட்டுவதற்கும் பெரியளவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய சொந்த அனுபவத்தில், இதற்கான எச்சரிக்கை அறிகுறி என்னவென்றால், அடுத்த இலக்கை எட்டுவது, அதாவது அது இலகுவான இலக்காக இருந்தாலும் உயரமான மலையை ஏறுவதுபோன்றது என்ற உணர்வு ஏற்படுவதுதான். மனஅழுத்தமும் குற்றவுணர்வும் எப்போதும் இணைந்தே இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நமது மனித தன்மை முடிவின் விளிம்பில் இருக்கும். மற்றும் இது போன்ற சந்தர்ப்பங்களில், வைராக்கியம் நிச்சயமாக பாதிக்கப்படும். ஒருவேளை நீங்கள், இத்தகைய மனச்சோர்வைத் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கலாம் அல்லது அதற்கு நெருங்கி வந்திருக்கலாம். ஒருவேளை எலியாவைப் போல பக்திவைராக்கியம் சரிந்தவர்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.

சில வேளையில் இத்தகைய மனச்சோர்வு நம்முடைய கட்டுப்பாட்டை மீறிய காரணிகளைக் கொண்டிருக்கும். எலியாவின் சூழ்நிலையில் அவரது கட்டுப்பாட்டை மீறியதாகவே பெரும் பகுதி இருந்தது. சுய வருத்தமே பெரும்பாலும் இத்தகைய மனச்சோர்வுக்கு நம்மை வழிநடத்துகிறது. மீட்கப்பட்ட மனித தன்மையின் வரையறைகளை ஏற்க மறுப்பதுதான் இதன் தோல்விக்குக் காரணம். எலியாவுக்கு ஆண்டவர் செய்தவைகளில் நாம் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் நம்முடைய தோல்விக்குக் காரணம். கிறிஸ்டோபர் ஆஷ் என்பவர் எழுதிய “Zeal Without Burnout” என்ற புத்தகம் சமீபத்தில் எனக்கு பேருதவியாக இருந்தது. நம்மில் வலிமையும் நல்ல ஆரோக்கியமும் இருக்கிறபோது, உண்மையில் நாம் மண் என்பதை உணராமல் அசாதாரண மனிதன் என்பதுபோல் பெருமையாக சிந்திக்கவும் செய்யவும் துவங்குவோம் என்பதை இந்நூல் விளக்குகிறது.

சங்கீதம் 103:14
நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.

மனச்சோர்வைத் தவிர்ப்பது எப்படி? தற்போது நாம் மனச்சோர்வினால் போராடிக் கொண்டிருந்தால், அல்லது அதற்கு அருகில் இருப்பதுபோல் உணர்ந்தால், அதிலிருந்து விடுபட என்ன செய்வது? இவை பக்திவைராக்கியத்தோடு மிகவும் தொடர்புடைய முக்கியமான கேள்விகள். நாம் மண் என்பதை சரியாக உணர்ந்தவர்களாக இருந்தால், நம்முடைய சரீரங்கள் ஒரு நாள் மண்ணுக்குத் திரும்பக்கூடிய வரையறைக்குட்பட்ட மனிதர்கள் என்பதை உணர்ந்தவர்களாக இருந்தால், இதற்கு நாம் எப்படி பதிலளிப்பது? மனச்சோர்விலிருந்து திரும்ப அல்லது தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய இருதயங்களில் பக்திவைராக்கியத்தை தக்க வைக்கவும் தூண்டவும் என்ன செய்ய வேண்டும்? எலியாவின் உதாரணம் இதற்கு குறைந்தது மூன்று பதில்களைத் தருகிறது.

1. உங்கள் சரீரத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்

பக்திவைராக்கியம் என்று வருகிறபோது, போதுமான, ஊட்டமளிக்கும் உணவு மற்றும் ஓய்வு முக்கியமானது. வலிமையையும் வீரியத்தையும் பெற இரவில் போதுமான அளவு தூங்குவது அவசியம். சங்கீதம் 127:2ஐ நினைவிற்கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஊழியத்தில் ஈடுபடுகிறவர்களாக இருந்தால் ஓய்வுநாளின் ஓய்வை மற்றொரு நாளில் பெறுவது அவசியம். இது நெடுநாட்களுக்கு வீரியத்தோடும் பயனுள்ள வகையிலும் ஊழியம் செய்ய அவசியம். படைப்பிலிருந்தே கடவுள் ஆறு நாட்களுக்கு வேலை செய்தல், பிறகு இடைமறைத்து ஒரு நாள் ஓய்வு என்ற முறையை ஏன் ஏற்படுத்தினார் என்பதற்குக் காரணம் உண்டு. படைப்பிலேயே நமக்கு ஓய்வு தேவை என்ற விதத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறோம்.

யாத்திராகமம் 20:9-10
9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; 10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

மேலும், விடுமுறைக் காலங்கள் அல்லது தொடர்ச்சியான அதிக வேலையிலிருந்து விடுமுறை எடுப்பது மிகவும் அவசியமானது. அதிக பரபரப்பான ஊழியக் காலங்களில், இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி “வனாந்திரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்” என்றார் (மாற்கு 6:31). மேலும், வேதமும், உடற்பயிற்சி உடலுக்கு கொஞ்சம் பிரயோஜனமுள்ளது என்கிறது

1 தீமோத்தேயு 4:8
சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

பகல் வேளையில் படிப்பறையிலும் அல்லது மனிதர்களோடு பேசுகிறபோதும் நீங்கள் இங்குமங்கும் நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் அது உங்களுக்குத் தீங்கை ஏற்படுத்தும். நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கவும், மனஅழுத்தத்தைத் தள்ளி வைக்கவும், சரீரமும் மனமும் சரியாக செயல்படவும் என்னுடைய படிப்பை நிறுத்திவிட்டு, வானத்தையும் மரங்களையும் பார்த்துக் கொண்டு நல்ல நடைபயணம் செய்வேன். அந்த நடைபயணத்தின்போது அற்புதமான பிரசங்கக் குறிப்புகள் என் மனதில் எழுந்திருக்கிறது. அத்தோடு, தேவைப்படும் வேளையில், மருத்துவ உதவியையும் நாடுங்கள்.

1 தீமோத்தேயு 5:23
நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.

உண்மையில், நம் உடலைப் பற்றிய இந்த விஷயங்கள் மிகவும் முக்கியமானது. அதை நிராகரிப்பதன் மூலம் நமக்கு நாமே ஆபத்தை வருவித்துக்கொள்ளுகிறோம். அது மற்றவர்களுக்கும் சுமையை ஏற்படுத்தக் கூடியது. நம்முடைய சரீரத்தின் நிலைமை நம்முடைய வைராக்கியத்தையும் பாதிக்கக்கூடியது.

2. கடவுளுடைய உண்மையான மனிதர்களோடு நெருக்கமாக இருந்து பரஸ்பரம் ஊக்கத்தையும் உதவியையும் பெறுங்கள். வேதபூர்வமான உள்ளூர் திருச்சபையில் இணைந்திருப்பதன் அவசியத்தை இது சுட்டிக்காட்டுகிறது.

எபிரெயர் 10:23-25
23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. 24 மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; 25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.

போதகர்கள் மற்றும் மிஷனரிகளுக்கான ஒரு முக்கியமான பயன்பாடும் இங்கு இருக்கிறது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக அவர்கள் இருப்பதும், அவர்களிடையே வேலை சமன்பாடு இருப்பதுமே அது. நாம் தனியாக இருப்பதும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கணக்குக் கொடுக்காமல் இருப்பதும் நமக்கு நல்லதல்ல. இயேசு தம்முடைய சீடர்களை அனுப்பியபோது, அவர்கள் இரண்டு இரண்டு பேர்களாக சென்றனர். ஒரே ஒரு போதகரைக் கொண்ட திருச்சபை குறைபாடுள்ள திருச்சபை என்றே புதிய ஏற்பாடு சொல்லுகிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:23
அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.

தீத்து 1:5
நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கீரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.

நெருக்கமானதும் ஆவிக்குரிய நன்மைதரக் கூடியதுமான நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளுவதன் முக்கியத்துவத்தையும் இது காட்டுகிறது. உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். நீங்கள் தனிமையாக இருக்கிறபோது பலவீனமாக இருக்கிறீர்கள்.

நீதிமொழிகள் 18:1
பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.

3. தொடர்ந்து ஜெபியுங்கள், அத்தோடு கடவுளுடைய வார்த்தையில் வளருவதை நோக்கமாகக் கொண்டிருங்கள்.

எலியாவைப் போல உங்களுடைய போராட்டங்களையெல்லாம், உங்களுடைய ஆத்துமா எவ்வளவு இருளாகக் காணப்பட்டாலும் கடவுளிடம் உங்களுடைய இருதயத்திலுள்ளதையெல்லாம் கொட்டிவிடுங்கள்.

சங்கீதம் 61:1-2
1 தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும். 2 என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

சங்கீதம் 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.

உங்களுக்காக தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள், ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்காக அதைச் செய்வது கடினமாக இருந்தால், உங்களுக்கு உதவக்கூடிய உண்மையுள்ள ஒருவரைத் தேடிக் கண்டுப்பிடியுங்கள். தேவைப்படுகிறபோதெல்லாம் வேதபூர்வமான ஆலோசகர்களை நாடுங்கள். திருச்சபைக்குச் செல்லுங்கள். ஜெபத்தின் மூலமாக, பாடல்களின் மூலமாக, பிரசங்கத்தின் மூலமாக, போதனைகளின் மூலமாக உங்களுடைய சிந்தனையை நேராக்கும் பொருட்டு திருச்சபைக்குச் செல்லுங்கள்.

சங்கீதம் 73:16-17
16 இதை அறியும்படிக்கு யோசித்துப் பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, 17 அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.

உங்கள் இருதயத்தில் உங்களுடைய பாவம் வெளிப்படுத்திக் காட்டப்படும்போது மனந்திரும்புங்கள். கடவுள் கட்டளையிட்டிருப்பவைகளைச் செய்யுங்கள். பாவம் உங்களுடைய வைராக்கியத்தைக் கொல்லும் என்று நாம் படித்திருக்கிறோம். அதே நேரம் வேதத்திலுள்ள கடவுளுடைய வாக்குத்தத்தங்களில் கவனம் செலுத்தி அதைக்கொண்டு ஊக்கத்தைப் பெறுங்கள்.

தொடர்ந்து ஜெபிப்பதும் கடவுளுடைய வார்த்தைக்கு நம்மை வெளிப்படுத்துவதும் ஏன் அவசியமானது? ஏனென்றால், எலியாவைப் போல், நாமும் பொல்லாத மனிதர்களையும் நம்மையும் நம்முடைய சூழ்நிலைகளையும் கவனிப்பதிலிருந்து நம்முடைய கண்களைத் திருப்ப வேண்டும். கர்த்தர் மீதும், அவருடைய அன்பு மற்றும் கிருபையின் மீதும், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதன் மீதும் உங்களுடைய கண்களை நேராக்க வேண்டும். உங்களோடு மென்மையாக பேசக்கூடிய ஒருவரோடு உங்களுக்கு தொடர்பும் உறவும் இருக்க வேண்டும்.

இறுதியாக, எலியா தான் எதிர்பார்த்ததைவிட நேர் எதிர்மாறான ஒன்றோடு எதிர்கொள்ளுகிறார். மரணத்தின் மூலமாக தன்னை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எலியா விரும்பினார். ஆயினும், அவருடைய கடவுள் அவருடைய ஆத்துமாவை புத்துயிர் பெறும்படிச் செய்தது மட்டுமல்லாமல், மரணத்தைச் சந்திக்காமலேயே பரலோகமும் கொண்டு சென்றார். மரணமடையாமல் பரலோகம் சென்றதாக வேதம் சொல்லும் இருவரில் ஒருவராக இவர் இருக்கிறார். எவ்வளவு கிருபையும் இரக்கமும் கொண்ட ஆண்டவருக்கு நாம் ஊழியம் செய்கிறோம்! நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் எலியாவின் கர்த்தரே உங்களுடைய கடவுளாகவும் இருக்கிறார் என்பதை நினைவுகூருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், உங்கள் முழு பலத்தோடும் இத்தகைய அன்புள்ள இரட்சகருக்கு ஊழியம் செய்வதில் தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்படுங்கள்.

நீங்கள் கிறிஸ்தவராக இல்லாதிருந்தால், இந்த இரக்கமுள்ள கடவுளை நேசிக்கவும் அவருக்கு ஊழியம் செய்யவும் மறுக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் ஒரு பெரிய பிரச்சனையில் இருக்கிறீர்கள். இத்தகைய இரக்கமுள்ள பரலோக பிதாவிடம் நீங்கள் திரும்பாவிட்டால், உங்களை அழிவுக்கு இழுத்துச் செல்லும் பிசாசின் அடிமைகளாக இருக்கிறீர்கள்.

1 இராஜாக்கள் 19:17ல் கர்மேல் மலையில் இத்தகைய இரக்கத்தைக் காட்டிய கர்த்தரை நிராகரித்து தங்களுடைய சொந்த விக்கிரகங்களை நாடி ஓடிய இஸ்ரவேலர் அனைவருக்கும் வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் குறித்து சொல்லிய கடவுளின் வார்த்தைகளை நினைவுகூருங்கள்.

1 இராஜாக்கள் 19:17
சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s