கிறிஸ்தவ வரலாற்றில் வினாவிடைப் போதனைகள்

நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இறையியல் பஞ்சமிருப்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மைதான். பிரசங்கங்களிலும், போதனைகளிலும் தனிமனித அனுபவங்களும், வெறும் வரட்டுத்தனமான போலி வாக்குத்தத்தங்களும் நிரம்பி வழிகின்றனவே தவிர மெய்யான வேதவிளக்கங்களுக்கு இடமிருப்பதில்லை. பிரசங்கமேடை சத்தியமற்ற சாட்சிகளை மட்டும் கொண்டிருப்பதாலேயே பரவலாக ஆத்துமாக்களும் சத்தியம் தெரியாமல், வழிதெரியாமல் அலையும் ஆடுகளைப்போல அனுபவ சுகத்தை மட்டும் நாடிப் போலிப் பிரசங்கிகளின் கையில் அகப்பட்டுத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் தென் ஆபிரிக்காவில் ஒரு பிரசங்கி இறந்துபோன ஒருவனை உயிர்த்தெழச் செய்யும் ஒரு நாடகத்தை சபை மத்தியில் செய்துகாட்டி கைதட்டல் பெறப்பார்த்திருக்கிறார். அதில் எந்த உண்மையும் இல்லை என்று சில கிறிஸ்தவ தலைவர்கள் அந்த நாடகத்தை நடத்திய மனிதன் மீது கிரிமினல் வழக்குத் தொடரவேண்டும் என்று போலீசை நாடியிருக்கிறார்கள். இதை பிபிசி செய்தியில் நான் பார்த்தேன். இப்படி நூற்றுக்கணக்கான போலித்தனங்கள் நம்மைச்சுற்றி எங்கும் நிகழ்ந்து வருகின்றபோதும் அசையமாட்டேன் சாமி, என்று தொடர்ந்தும் இந்தப் போலிகள் பின்னால் திரிந்துவருகிறவர்களே அநேகம். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலில் காணப்பட்ட வார்த்தைப் பஞ்சமே இன்று நம்மினத்தையும் வாட்டிவருகிறது.

இந்த நிலைமைக்கு மத்தியில் சத்தியத்தை மட்டும் போதித்து சபை வளர்க்கும் ஆர்வம் சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. இருந்தபோதும் அவர்களுக்கு இந்த நீண்ட ஊழியப்பயணத்தில் அதை எப்படிச்செய்வது என்ற பிரச்சனை இருந்துவருகிறது. இதற்கு உதவுமுகமாகத்தான் 1689 விசுவாச அறிக்கையையும், பாப்திஸ்து போதனையின் படியிலான சுருக்க வினாவிடை நூலையும் நாம் சீர்திருத்த வெளியீடுகளின் மூலமாக வெளியிட்டு உதவினோம். இவை இரண்டின் மூலமும் வரலாற்றுக் கிறிஸ்தவம் நமக்கு வேத இறையியலை முறைப்படுத்தி தொகுத்துத் தந்திருக்கிறது. இவற்றைக் கருத்தோடு படிக்கிறவர்கள் வேதத்தில் பரவலாகக் காணப்படும் இறையியல் போதனைகளை முறையாகக் கற்றுக்கொள்ள முடியும். இவற்றில் இரண்டாவதான சுருக்க வினாவிடை நூலின் வரலாற்றையும், அதன் விசேஷ தன்மைகளையும்பற்றி விளக்க விரும்புகிறேன்.

வேத இறையியல் தெரியாமல் பிரசங்க ஊழியத்தை ஒருவரும் செய்யமுடியாது. வேதம் கர்த்தரைப்பற்றியும் அவருடைய கிரியைகளைப் பற்றியும், மனிதன் பின்பற்ற வேண்டிய கர்த்தரின் கட்டளைகளைப்பற்றியும் விளக்கும் உண்மைகள் தெரியாமல் ஒருவர் எதைப் பிரசங்கிக்க முடியும்? இறையியல் என்பது இறைவனைப்பற்றிய சத்தியங்கள். அவற்றில் நல்லறிவில்லாமல் எவரும் சுவிசேஷத்தைக்கூட பிரசங்கிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இறையியல் சத்தியங்கள் தெரியாமல் ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்க்கையில் கிறிஸ்துவோடு நல்லுறவுகொண்டு விசுவாசமாக வாழ்வதும் கடினம். அந்தளவுக்கு வேத இறையியல் பிரசங்கத்திற்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் இன்றியமையாததாக இருந்து வருகிறது. வேத இறையியலில் அக்கறை காட்டாமல் அதை உதாசீனப்படுத்துகிற சபை “செத்த சபை” என்று ஆர். சி. ஸ்பிரவுல் எனும் சீர்திருத்த போதகர் குறிப்பிட்டிருக்கிறார்.

வேத இறையியலை 32 அதிகாரங்களில் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவும், அதேநேரம் சுருக்கமாகவும் தெளிவாகத் தொகுத்து வழங்குவதே விசுவாச அறிக்கை (Confession of Faith). அதே இறையியல் போதனைகளை வினாவிடைகளாக தெளிவாக, அதேநேரம் சுருக்கமாகத் தொகுத்துவழங்குவதே வினாவிடைப் போதனைகள் (Catechism). இத்தகைய வினாவிடையைப் பயன்படுத்தி போதனையளிக்கும் முறையை நாம் வேதத்தில் காண்கிறோம். பிரசங்கத்தின் மூலமும், விரிவுரைகளின் மூலமும் மட்டுமல்லாது கேள்வி-பதில் முறையிலும் ஆதியில் இருந்து கர்த்தரைப் பற்றிய போதனைகளைப் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலும், புதிய ஏற்பாட்டு சபையும் தந்து வந்திருக்கின்றன. இதற்கு ஓர் உதாரணமாக லூக்கா 2:46-47 வசனங்களைக் குறிப்பிடலாம். இங்கே இயேசு பாலகனாக எருசலேம் ஆலயத்தில் நியாயப்பிரமாணத்தைப் போதிக்கின்றவர்கள் மத்தியில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்து மட்டுமல்லாமல் அவர்களைக் கேள்விகள் கேட்கவும் செய்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய போதனை முறை வினாவிடைப் போதனையாக இருந்தது. அவருடைய விளக்கங்களைக் கேட்ட அனைவரும் பிரமித்துப் போனார்கள். 47ம் வசனம், அங்கிருந்த அனைவரும் அவருடைய ஞானத்தையும் அவரளித்த மறுமொழிகளையும் கேட்டு பிரமித்தார்கள் என்கிறது. ஆகவே, வினாவிடைப் போதனை என்பது ஏதோ இன்று புதிதாக உருவானதொன்றாக எண்ணிவிடக்கூடாது. இந்த முறையில் போதனை அளிக்கும் வழக்கம் உலகத்தில் என்றும் இருந்து வந்திருக்கின்றது. இதைப் பழைய ஏற்பாட்டுப் போதகர்களும், புதிய ஏற்பாட்டுப் போதகர்களும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்த வினாவிடை முறையில் அமைந்த போதனையில் பெரும் நன்மை இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் இரண்டு முக்கிய நடைமுறை நன்மைகள் என்ன தெரியுமா?

  1. வேதசத்தியங்களை இது துல்லியமாகவும், சுருக்கமாகவும் மனதிலிருத்திக்கொள்ளும்வகையில் தொகுத்துத் தருகிறது.
  2. பாலகர்கள் முதல் பெரியவர்கள்வரை வேதசத்தியங்களை மனனம் செய்து மறக்காமல் இருதயத்தில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

திருச்சபை சீர்திருத்தமும் வினாவிடைப் போதனையும்

வேதவினாவிடைப் போதனை முறை ஆதியில் இருந்து பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதால்தான் 16ம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்கத்தின் பிடியில் இருந்து கிறிஸ்தவத்தை மீட்ட சீர்திருத்தவாதிகள் மறுபடியும் வினாவிடைப் போதனை முறையைப் பயன்படுத்தி வேதசத்தியங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதிக்க ஆரம்பித்தார்கள். இந்த முறையை ரோமன் கத்தோலிக்க மதத்திலும் காணலாம்; பிரச்சனை என்னவென்றால் அவர்களுடைய வினாவிடைப் போதனை வேதத்திற்கு முரணானது. அதில் சத்தியத்திற்கு இடமில்லை. இன்று வினாவிடைப் போதனை என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தினால் பலர் தவறாக அது ரோமன் கத்தோலிக்க முறை என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

மார்டின் லூத்தர்

16ம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் வினாவிடைப் போதனை முறையைப் பயன்படுத்திப் போதனையளிப்பதில் அதிக அக்கறை காட்டினார். இதன் மூலம் குடும்பங்களும், சிறுவர்களும், தனிநபர்களும் சத்தியத்தில் வளருவதோடு அதைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும் என்று அவர் நம்பினார். ஒருதடவை அவரைப் பார்த்து ஒருவர், ஐயா, நீங்கள் எழுதியிருக்கும் நூல்கள் அனைத்திலும் எது தொடர்ந்தும் அச்சில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, லூத்தர் கண்ணிமைக்கும் வேகத்தில், நான் சிறுவர்களுக்காக எழுதி வெளியிட்டிருக்கும் வினாவிடைப் போதனை என்று பதிலளித்தார். அந்தளவுக்கு வினாவிடைப் போதனை மூலம் சத்தியவிளக்கமளிக்கும் முறையில் லூத்தருக்கு நம்பிக்கையிருந்தது. வினாவிடைப் போதனை முறை மூலம் சத்தியவிளக்கம் பெற்று வளர்ந்து வந்திருக்காத இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்துக்கு இது ஆச்சரியமளிக்கலாம்; இதைப் புரிந்துகொள்ளுவதும் கஷ்டமாக இருக்கலாம்.

லூத்தர் ஒன்றுக்கு மேற்பட்ட வினாவிடைப் போதனைகளை எழுதிப் பயன்படுத்தியிருக்கிறார். 1529ல் அவர் இரண்டு வினாவிடைப் போதனைகளை வெளியிட்டார். ஒன்று சுருக்கவினாவிடைப் போதனை, இரண்டாவது விரிவான வினாவிடைப் போதனை. 1528ம் ஆண்டில் சாக்சனியில் இருந்த கிறிஸ்தவ சபைகளை, அவற்றின் தரத்தை அறிந்துகொள்ள போய்ப் பார்த்த லூத்தர் பின்வறுமாறு குறிப்பிட்டார்: “கருணை காட்டுங்கள் ஆண்டவரே! எத்தனை பெரிய துன்பத்தை நான் காண்கிறேன். கிராமங்களில் இருக்கும் சாதாரண விசுவாசிகள் எந்தவிதமான வேதஞானமும் இல்லாமலிருக்கிறார்கள். அநேக போதகர்கள் வேதத்தைப் போதிக்கும் ஆற்றலும், தகுதியும் அறவே இல்லாமலிருக்கிறார்கள். இருந்தபோதும், ஆண்டவருடைய ஜெபத்தையோ, விசுவாச அறிக்கையையோ அல்லது பத்துக்கட்டளைகளையோ மனனம் செய்து சொல்லமுடியாதிருக்கும் இவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளுவதோடு ஞானஸ்நானத்தையும் பெற்றுக்கொண்டு, திருநியமங்களைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். அவர்கள் பேசமுடியாதிருக்கும் மிருகங்களைப்போலவும், மூளையில்லாத பன்றிகளைப்போலவும் வாழ்ந்து வருகிறார்கள் . . . ஓ! போதகர்களே, உங்களுடைய ஊழியப்பணிகளை ஒரு நிமிடமாவது நிறைவேற்றாமல் வெட்கப்படவேண்டியவிதத்தில் ஆத்துமாக்களில் அக்கறையில்லாமல் இருந்துவந்திருக்கும் நீங்கள் கிறிஸ்துவைப் பார்த்து என்ன சொல்லப்போகிறீர்கள்?”

வினாவிடைப் போதனை முறையைப் பின்பற்றி திருச்சபை சீர்திருத்தத்தைத் தொடருவது லூத்தரின் சீர்திருத்தப்பணியில் முக்கிய இடம் வகித்து வந்திருக்கிறது. ஆத்துமாக்களும், போதகர்களும் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிய எந்த வேத அறிவும் இல்லாலிருப்பதை லூத்தர் கவனித்தார். இதை நிவர்த்தி செய்வதற்கு லூத்தருக்கு வினாவிடைப் போதனை முறையே சிறந்ததாகப்பட்டது. லூத்தர் ஒன்றும் எதையும் புதிதாக செய்துவிடவில்லை; ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் முறையைத்தான் அறிமுகப்படுத்தினார். வரலாற்றில் முதலாவதாக வெளியிடப்பட்ட வினாவிடைப் போதனை 8ம் நூற்றாண்டில் இருந்ததாக அறிகிறோம்.

திருச்சபை சீர்திருத்தம் மேலும் தொடர்ந்து முன்னேறியபோது, 1563ல் ஹைடில்பேர்க் வினாவிடைப் போதனை (Heidelburg Catechism) வெளியிடப்பட்டது. இதுவே இன்றும் அமெரிக்காவில் இருக்கும் நெதர்லாந்து, ஜெர்மானிய சீர்திருத்த திருச்சபைகளில் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேதத்திற்கு அடுத்த இடத்தில்வைத்து இந்த வினாவிடைப் போதனைக்கு அவர்கள் மதிப்பளிக்கிறார்கள். அதற்குக் காரணம் சத்தியத்தை மட்டும் விசுவாசிப்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதால்தான். இந்த வினாவிடைப் போதனைக்கு முன்பாகவே 1561ல் பெல்ஜிக் விசுவாச அறிக்கை (Belgic Confession of Faith) எழுதி வெளியிடப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் காலப்பகுதி திருச்சபைக்கு மேலும் அழகு சேர்த்தது. இது திருச்சபை சீர்திருத்தத்தில் மிகவும் சிறப்பான காலப்பகுதி. இந்தக் காலப்பகுதியிலேயே பியூரிட்டன் பெரியவர்கள் கூடி வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையையும் (Westminster Confession of Faith), சுருக்க மற்றும் விரிவான வினாவிடைப் போதனைகளையும் (Larger and Shorter Catechism) தொகுத்து வெளியிட்டனர். 1648ல் இவை வெளியிடப்பட்டன. இவையே இன்றும் சீர்திருத்த பிரெஸ்பிடீரியன் திருச்சபைகளில் அவர்களுடைய விசுவாச அறிக்கைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை வெறும் போதனையளிக்கும் நூல்களாக மட்டும் கருதாது தாங்கள் விசுவாசிக்கும் சத்தியங்களின் தொகுப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

பியூரிட்டன் பெரியவர்கள் பிரசங்க மேடையில் இருந்து கொடுக்கப்படும் போதனையின் மூலம் மட்டும் சபை வளர்ந்துவிடும் என்று நம்பவில்லை; அதற்கு மேலாக வினாவிடைப் போதனைகளைப் பயன்படுத்தி தனிப்பட்டவிதத்தில் ஆத்துமாக்களுக்கு போதனையளிப்பதன் அவசியத்தை அவர்கள் அறிந்திருந்தனர். கிறிஸ்தவ அடிப்படை சத்தியங்களை முழு சபை மக்களும் அறிந்து விசுவாசிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர். அநேக பியூரிட்டன் பெரியவர்கள் சிறுவர் சிறுமியர்களுக்கு வினாவிடைப் போதனைகளைக் கொடுத்து வளர்ப்பதில் தீவிரமாக இருந்திருக்கிறார்கள். பியூரிட்டன் காலப்பகுதி ஆத்மீகத்திலும், இறையியல் நம்பிக்கையிலும் மிக உயர்வான நிலையிலிருந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.

ரிச்சட் பெக்ஸ்டர்

ரிச்சட் பெக்ஸ்டர் என்ற பியூரிட்டன் போதகர் இங்கிலாந்தில் கிடர்மின்ஸ்டர் என்ற ஊரில் போதகப் பணியேற்று ஊழியத்தை ஆரம்பித்தபோது அங்கு ஒவ்வொரு தெருவிலும் ஒரு குடும்பமாவது வினாவிடைப் போதனை முறையைப் பயன்படுத்தி கர்த்தரை ஆராதித்து வந்திருந்தது. அவ்வூரில் அவருடைய ஊழியம் நிறைவேறியபோது ஊரில் இருந்த அத்தனை குடும்பங்களும் வினாவிடைப் போதனையைப் பயன்படுத்தி கர்த்தரை ஆராதிப்பதில் ஈடுபட்டிருந்தது. அவருடைய ஊழியத்தின் காரணமாக 600 பேர் கர்த்தரிடமிருந்து இரட்சிப்பை அடைந்திருந்தார்கள். அவர்களில் ஒருவராவது கர்த்தரைவிட்டு விலகி உலகத்தை நாடி ஓடவில்லை என்று கூறியிருக்கிறார் பெக்ஸ்டர். இதற்கெல்லாம் ரிச்சட் பெக்ஸ்டருடைய பிரசங்கப்பணி மட்டுமல்லாது வினாவிடைப் போதனை முறையை அவர் அறிமுகப்படுத்தி ஊர்மக்கள் அனைவரையும் சத்தியத்தில் வளரச் செய்திருந்ததே காரணம்.

பாப்திஸ்துகளும் வினாவிடைப் போதனையும்

19ம் நூற்றாண்டு, கிறிஸ்தவத்திற்கு பல்வேறு தொல்லைகளைத் தந்த நூற்றாண்டு. இந்நூற்றாண்டுக்கு முன்புவரை கிறிஸ்தவ உலகம் வினாவிடைப் போதனை மூலம் கிறிஸ்தவ சத்தியங்களைக் கற்று நல்ல நிலையில் இருந்திருக்கிறது. 19ம் நூற்றாண்டில் இருந்து வினாவிடைப் போதனையின் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. அதுவும் பாப்திஸ்து கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் மத்தியில் அதன் பயன்பாடு மறைய ஆரம்பித்தது. இன்று பெரும்பாலான பாப்திஸ்துகள் வினாவிடைப் போதனைக்கு முக்கிய இடமளிக்காமலிருப்பதற்கு 19ம் நூற்றாண்டு ஒரு முக்கிய காரணம். அடுத்ததாக டிஸ்பென்சேஷனலிசமும் அதற்கு ஒரு காரணம் என்று கூறவேண்டும். சீர்திருத்த வரலாற்று வினாவிடைப் போதனைகள் டிஸ்பென்சேஷனலிசப் போதனைகளுக்கு எதிரானவை. இருந்தபோதும் பாப்திஸ்துகள் வினாவிடைப் போதனைகளை 16ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே எழுதி வெளியிட்டுப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பியூரிட்டன்களின் காலமான 17ம் நூற்றாண்டில் பாப்திஸ்துகள் விசுவாச அறிக்கையையும், வினாவிடைப் போதனைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். சீர்திருத்தவாதக் கோட்பாட்டைப் பின்பற்றாதவர்களும் இதைச் செய்திருக்கிறார்கள். அன்றைய சீர்திருத்த பாப்திஸ்துகளை வரலாறு பர்டிகுளர் பாப்திஸ்து (Particular Baptist) என்று அழைக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் கல்வாரிப் பலியை (Particular atonement) விசுவாசித்ததுதான். இவர்களைச் சார்ந்த ஹெர்குளஸ் கொலின்ஸ் (Hercules Collins 1646-1702) எனும் கல்வினித்துவ போதகர் ஹைடில்பேர்க் வினாவிடைப் போதனையை மூலமாகக் கொண்டு தன்னுடைய ஓர்த்தடொக்ஸ் வினாவிடைப் போதனையை (Orthodox Catechism) 1680ல் எழுதிவெளியிட்டார். பாப்திஸ்துகள் எழுதி வெளியிட்ட வினாவிடைப் போதனைகளில் முக்கியமானதொன்று பெஞ்சமின் கீச் (Benjamin Keach 1640-1704) எழுதி வெளியிட்ட பாப்திஸ்து வினாவிடைப் போதனை (Baptist Catechism). இது ‘கீச்சின் வினாவிடைப் போதனை’ என்று பரவலாக அழைக்கப்பட்டது. பெஞ்சமின் கீச் தன்னுடைய வினாவிடைப் போதனையை எழுதுவதற்கு பியூரிட்டன்கள் எழுதி வெளியிட்ட ‘சுருக்கவினாவிடைப் போதனையை’ மூலமாகக் கொண்டிருந்தார். அதேபோலவே பின்னால் பெரும் பாப்திஸ்து பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் ஒரு வினாவிடைப் போதனையை எழுதி வெளியிட்டபோது வெஸ்ட்மின்ஸ்டர் வினாவிடைப் போதனையை மூலமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

சார்ள்ஸ் ஸ்பர்ஜன்

இங்கிலாந்தில் பாப்திஸ்து திருச்சபைப் பிரிவு வேத நம்பிக்கைகளைத் துறக்க ஆரம்பித்தபோது அதிலிருந்து தன்னுடைய சபையைப் பிரித்து சுயாதீன சபையாக இயங்க ஆரம்பித்தபோது, ஸ்பர்ஜன் தன்னுடைய சபை விசுவாசிக்கும் சத்தியங்களைப் பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிக்க 1689 விசுவாச அறிக்கையை மறுவெளியீடு செய்தார். அதுமட்டுமல்லாது அக்டோபர் 14ம் தேதி, 1855ல் அவர் ஒரு வினாவிடைப் போதனை நூலையும் எழுதி வெளியிட்டார். அப்போது ஸ்பர்ஜனுக்கு வயது 21. அவர் நியூபார்க் தெரு திருச்சபையில் ஒரு பிரசங்கத்தை (பிரசங்கம் எண்: 46) அளித்தார்; அது வெளிவந்தபோது அதில் ஸ்பர்ஜன் தான் வெளியிடவிருக்கும் வினாவிடைப் போதனைபற்றி குறிப்பிட்டிருந்தார்.

அந்த வினாவிடை நூலின் அறிமுகப்பகுதியில் ஸ்பர்ஜன் பின்வருமாறு எழுதியிருந்தார்:

“மெய்யான சத்தியங்களைப் பின்பற்றி வந்திருக்கும் சபைகள் முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்குள்ளாக அடிக்கடி மாறி சத்திய விரோத சபைகளாக மாறிவிடுகின்றன. அதற்குக் காரணம் இந்த சபைகள் ஒருபோதும் தங்களுடைய குழந்தைகளுக்கு வினாவிடைப் போதனைகளைப் பயன்படுத்தி சுவிசேஷத்தின் அடிப்படை சத்தியங்களில் வளர்க்காமல் இருந்திருப்பதுதான். நம்முடைய குடும்பங்களில் நல்லதொரு வினாவிடைப் போதனை நூலைப் பயன்படுத்தி வேதபோதனைகளில் வளர்ப்போமானால் இன்று நாம் முகங்கொள்ளும் அநேக போலிப்போதனைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளியின் வினாவிடைப் போதனையையும், பாப்திஸ்து வினாவிடைப் போதனையையும் பயன்படுத்தி, நம்முடைய சபை அங்கத்தவர்களுக்காகவும் ஏனையோருக்காகவும் இந்த வினாவிடைப் போதனையைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறேன். இதைக் குடும்பங்களிலும், வகுப்புகளிலும் போதிக்கிறவர்கள் வார்த்தைகளின் அர்த்தத்தை விளக்கவேண்டும்; ஆனால் அவற்றைக் கவனத்தோடு மனனம் செய்து இருதயத்தில் பதித்துக்கொள்ளும்போது காலம் செல்லச் செல்ல பிள்ளைகள் அவற்றை விளங்கிக்கொள்ளுவார்கள்.”

பெரும்பாலான வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளியைச் சேர்ந்த பியூரிட்டன்கள் பிரெஸ்பிடீரியன்களாக இருந்ததால் பிரெஸ்பிடீரியன் கோட்பாடுகளில் சிலவற்றைக் கொண்டிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்கவினாவிடையை பாப்திஸ்துகள், பெஞ்சமின் கீச் மற்றும் ஸ்பர்ஜன் உட்பட மாற்றவேண்டியிருந்தது. பியூரிட்டன் காலத்து பிரஸ்பிடீரியன்களும், பாப்திஸ்துகளும் சீர்திருத்தவாத போதனைகளைப் பொறுத்தவரையில், அதாவது கிருபையின் போதனைகள் என்றழைக்கப்படும் இரட்சிப்பைக் குறித்த ஐம்போதனைகள், கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின் நடைமுறைப் பயன்பாடு, கிறிஸ்துவின் சுவிசேஷம், திருச்சபைபற்றிய அடிப்படைப் போதனைகள் போன்றவற்றில் பிரிக்கமுடியாத ஒற்றுமையைக் கொண்டிருந்தனர். ஆனால், கர்த்தரின் உடன்படிக்கை, ஞானஸ்நானம், திருவிருந்து, திருச்சபையின் அமைப்பு, நிர்வாகம் ஆகிய விஷயங்களில் அவர்களுக்கிடையில் கோட்பாட்டு வேறுபாடுகள் இருந்தன. இதன் காரணமாக பாப்திஸ்துகள் தங்களுடைய விசுவாச அறிக்கை மற்றும் வினாவிடைப் போதனைகளில் இவை சம்பந்தமான பாப்திஸ்து கோட்பாடுகளை வலியுறுத்தி விளக்கவேண்டியிருந்தது. இதனால் வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளி வெளியிட்ட சுருக்க மற்றும் விரிவான வினாவிடைப் போதனைகளை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. அவை சபைப்பிரிவுகளை மீறிய வரலாற்று வேத இலக்கியங்கள். அதனால்தான் கீச்சும், ஸ்பர்ஜனும் எந்தவிதமான மனச்சங்கடமும் இல்லாமல் தாங்கள் தொகுத்த வினாவிடைப் போதனை நூல்களுக்கு அவற்றை அடித்தளமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்கவினாவிடை, பாப்திஸ்து பதிப்பு

1900களின் ஆரம்பகாலப்பகுதியில் சீர்திருத்தப் போதனைகளில் பேரார்வம் கொண்ட பாப்திஸ்துகள் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகளை வட அமெரிக்காவில் ஆரம்பித்தபோது 1689 விசுவாச அறிக்கையிலும், வினாவிடைப் போதனையிலும் அதிக அக்கறை காட்ட ஆரம்பித்தனர். சீர்திருத்த பாப்திஸ்து சபைகள் விசுவாச அறிக்கையை மட்டுமல்லாது வினாவிடைப் போதனையையும் சபைகளில் பயன்படுத்தினர். இதன் காரணமாக ஒரு நல்ல வினாவிடைப் போதனை நூல் தேவைப்பட்டது. அநேக பாப்திஸ்து வினாவிடைப் போதனைகள் இருந்தபோதும், அவற்றில் அநேகமானவை வெஸ்ட்மினஸ்டர் அசெம்பிளி வினாவிடை நூலை அடித்தளமாகக் கொண்டு தொகுக்கப்பட்டிருந்தபோதும், காலத்துக்கு ஏற்றபடியான வினாவிடை நூலொன்று அவசியம் தேவைப்பட்டது. இதை மனதில் கொண்டு அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் இருந்த சீர்திருத்த பாப்திஸ்து சபையொன்று அத்தகைய நூலைத் தொகுக்க ஆரம்பித்தது. முக்கியமாக தங்கள் சபைக்குடும்பங்களுக்கு நெடுங்காலத்துக்குப் பயன்படுத்த இதைத்தொகுத்தபோதும், அவர்கள் ஏனைய சீர்திருத்த பாப்திஸ்து சபைகளையும் மனதில் கொண்டு இதைச் செய்ய ஆரம்பித்தனர். இதைத் தயாரித்ததில் பல போதகர்களுக்கு பங்கிருந்தபோதும் முக்கியமாக நியூ ஜெர்சி, மொன்ட்வில் திரித்துவ பாப்திஸ்து சபையின் போதகர்களில் ஒருவராக அப்போதிருந்த கிரெக் நிக்கல்ஸுக்கு பெரும் பங்கிருந்தது. அவர் அச்சபை நிர்வகித்துவந்த திரித்துவ இறையியல் கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட இறையியலைப் போதிக்கும் பேராசிரியராக இருந்தார். இந்த வினாவிடை நூலுக்கு அவர் தயாரித்த அருமையான அவுட்லைன் இதைப் பயன்படுத்துகிறவர்களுக்கு பேருதவியாக இருக்கும். சிம்ப்சன் வெளியீடுகள் 1991ல் இதை முதல்முதலாக வெளியிட்டு வைத்தனர். 115 வினாவிடைகளைக் கொண்டிருக்கும் இந்நூல் இன்று அநேக திருச்சபைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதைத் தயாரிக்க ஆரம்பித்தபோது கிரேன்ட் ரெபிட்ஸ், மிச்சிகன் சபைப் போதகர்கள் வரலாற்றில் பரவலாக திருச்சபைகள் பயன்படுத்தி ஆசீர்வாதம் அடைந்திருந்த பியூரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளி தயாரித்த சுருக்க வினாவிடை நூலை அதற்காகத் தெரிவுசெய்தனர். சீர்திருத்தவாத பியூரிட்டன் போதகர்கள் கவனத்தோடு தயாரித்திருந்த இந்த அருமையான நூலே இதற்குத் தகுந்தது என்று அவர்கள் தீர்மானித்தனர். அத்தோடு இது ஒரு தனி மனிதனால் தயாரிக்கப்படாமல், இறையியல் ஞானமுள்ள திறமைவாய்ந்த சீர்திருத்தவாத பியூரிட்டன் போதகர்கள் கூடிய அசெம்பிளியால் பல காலம் ஆராய்ந்து கவனத்தோடு தயாரிக்கப்பட்டிருந்தது. இதைத் தெரிவுசெய்ததற்கு இன்னொரு காரணம், இந்த வினாவிடை வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை போன்றே, அதோடு ஒத்துப்போய் இறையியல் போதனைகளை மிகுந்த கவனத்தோடு தகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த சுருக்க வினாவிடைப் போதனையின் அநேக பகுதிகளை அவர்கள் மாற்றம் செய்யவேண்டிய அவசியமிருக்கவில்லை. செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை அவர்களே அவர்கள் தயாரித்த வினாவிடை நூலின் அறிமுகத்தில் விளக்கியிருக்கிறார்கள்.

  1. வெஸ்ட்மின்ஸ்டர் பிரெஸ்பிடீரியன் போதனைகள் கொண்டிருந்த பகுதிகளை பாப்திஸ்து போதனைகளைத் தரும்படியாக மாற்றங்கள் செய்திருக்கிறோம்.
  2. வெஸ்ட்மின்ஸ்டர் விரிவான வினாவிடைப் போதனையை வழிகாட்டியாகக் கொண்டு அதிமுக்கியமான போதனைகளுக்கு தேவையான மேலதிக விளக்கங்களைத் தந்திருக்கிறோம்.
  3. தற்காலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் முக்கிய போதனைகளுக்கு அவசியமான விளக்கங்களைத் தந்திருக்கிறோம். இந்த விளக்கங்கள் வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்கவினாவிடையில் மேலெழுந்தவாரியாக மட்டுமே தரப்பட்டிருந்தன அல்லது அத்தகைய விளக்கங்கள் இல்லாமல் இருந்தன.

நாம் செய்திருக்கும் முக்கிய மாற்றங்கள் பின்வருவன:

  1. தற்கால இளைஞர்கள், பிழைகளற்றும் தவறிழைக்காததாகவும் வேதம் இருக்கின்றது என்ற வேதத்தின் தன்மை பற்றிய நம்பிக்கை இல்லாமல் இருக்கமுடியாது. இந்த உண்மையை வலியுறுத்தி விளக்குவதற்காக வினாவிடை 4ஐ இணைத்திருக்கிறோம்.
  2. படைப்பில் மனிதன் வகிக்கும்படியாக கர்த்தர் தந்திருக்கும் இடத்தை தெளிவாக விளக்குவதற்காக வினாவிடை 18ன் மொழிநடையைப் பின்பற்றி வினாவிடை 13ஐ இணைத்திருக்கிறோம்.
  3. விரிவான வினாவிடை 45ன் (Larger Catechism) மொழிநடையைப் பின்பற்றி கிறிஸ்துவின் மீட்புப்பணி நிறைவேறுதலுக்காக அவர் எடுத்திருக்கும் அரசபணியை மேலும் தெளிவாக விளக்க வினாவிடை 27ஐ இணைத்திருக்கிறோம்.
  4. விரிவான வினாவிடை 67ஐத் தழுவி வினாவிடைகள் 30-32ஐ இணைத்திருக்கிறோம். இவை மீட்பின் பலன்களை விசுவாசிகள் அடையச் செய்வதில் பிதாவின் பங்கு என்ன என்பதை விளக்குகின்றன.
  5. பென்ஜமின் கீச்சின் வினாவிடைப் போதனையில் இருந்து 39-41 வரையிலான வினாவிடைகள், இதில் வினாவிடை 42-43ஆகத் தரப்பட்டிருக்கின்றன. இவை அவிசுவாசிகள் மரணத்தின்போதும் நியாயத்தீர்ப்பின்போதும் அனுபவிக்கப்போகும் பயங்கரங்களை விளக்குகின்றன.
  6. வினாவிடைகள் 88-89 மாற்றியமைக்கப்பட்டு 92-93 ஆகிய வினாவிடைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பாவிகளின் மனந்திரும்புதலோடு தொடர்புடைய கீழ்ப்படிவையும், விசுவாசிகள் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய கீழ்ப்படிவையும் பிரித்துக்காட்டவேண்டியதற்காகவே இவை திருத்தப்பட்டு புதிய வினாவிடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 92-93 ஆகிய வினாவிடைகளின் மொழிநடை வெஸ்மின்ஸ்டர் விரிவான வினாவிடையைத் தழுவியவை (61, 79, 80).
  7. வினாவிடைகள் 101-103 பென்ஜமின் கீச்சின் வினாவிடைப் போதனையில் இருந்து எடுக்கப்பட்டு இதில் 98-100 ஆகத் தரப்பட்டிருக்கின்றன. இவை விசுவாசிகள் மட்டுமே ஞானஸ்நானம் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்றும், குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிக்கக்கூடாது என்றும், தெளிப்பு ஞானஸ்நானத்தைவிட முழுக்கு ஞானஸ்நானம் மட்டுமே வேதபூர்வமானது என்றும் விளக்குகின்றன.
  8. ஜெபத்தைப் பற்றிய 106வது வினாவிடை வெஸ்ட்மின்ஸ்டர் விரிவான விளக்கவுரையின் (178) மொழிநடையைத் தழுவி விளக்கப்பட்டுள்ளது.

இவை தவிர வெஸ்மின்ஸ்டர் சுருக்கவினாவிடையில் இருந்த ஆதார வசனங்களில் சிலவற்றைத் தவிர ஏனைய அத்தனை வசனங்களும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பொருளை வெளிப்படையாக விளக்கத் தவறியிருக்கும் வசனங்களுக்கு மட்டும் தெளிவானதாகக் காணப்படும் ஆதார வசனங்கள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சுருக்கவினாவிடை, பாப்திஸ்து பதிப்பு நிச்சயம் பாப்திஸ்து திருச்சபைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால்தான் சில வருடங்களுக்கு முன்பு இதைத் தமிழில் மொழிபெயர்த்து சீர்திருத்த வெளியீடுகள் மூலமாக வெளியிட்டிருந்தோம். அதை நம்மினத்தின் சில சீர்திருத்த பாப்திஸ்து சபைகள் பயன்படுத்தி வருவதோடு தனிப்பட்டவர்களும் வாசித்து இறையியல் கற்றுக்கொள்கிறார்கள். தெளிவான வேத இறையியல் போதனைகளைப் பெற்றுக்கொள்ள நம்மினத்துப் போதகர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இது பேருதவியாக இருக்கும். இறையியல் அறிஞரும் போதகருமான சாம் வோல்டிரன் சொல்லுகிறார்,

“நம் காலத்தில் பாப்திஸ்து திருச்சபைகள் மத்தியில் வேதவினாவிடைப் போதனைகளைப் பயன்படுத்துவதும், வினாவிடைப் போதனை அளிக்கும் முறையும் பெருமளவுக்கு இல்லாமல் போயிருக்கிறது. இதன் காரணமாக ஒரு நல்ல வினாவிடைப் போதனையைப் பயன்படுத்தி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு எங்கு ஆரம்பிப்பது, எதைப்பயன்படுத்துவது என்ற பிரச்சனை இருக்கிறது.”

இந்தப் பிரச்சனையை நிச்சயம் இந்த வினாவிடைப் போதனை நூல் தீர்த்து வைக்கும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s