வேதத்தை விளக்க வேண்டியது அவசியமா? – A.W. பின்க்

A.W. பின்க்

படைப்புயிர்களில் மனிதனே கேடான காரியங்களுக்குப் பேர்போனவன். இந்த உண்மை வேறு எந்தவிஷயத்தையும்விட, இந்நூலில் நாம் கையாளும் விஷயத்தைப்பற்றி பலரும் கொண்டிருக்கும் எண்ணப்பாட்டிலிருந்து மிகத்தெளிவாக அறியலாம். பரிசுத்த வேதாகமம், யாரும் விளக்க வேண்டிய அவசியமில்லாதளவுக்கு, எளிமையான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று ஆதாரங்களுடன் சிலர் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக, பெரும் கூட்டத்தினர் எழும்பி, தங்களுடைய கருத்துக்கு அவர்களை இணங்கவைக்க முற்பட்டனர். அவர்களுடைய கருத்து என்னவென்றால், பரிசுத்த வேதாகமத்தின் உள்ளடக்கம் சாதாரண மனிதர்களுடைய அறிவினால் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், அதன் போதனைகள் ஆழமானதாகவும், மிகவும் உயர்ந்ததாகவும், அதன் மொழிநடை எளிதில் புலப்படாதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் கொண்டதாகவும் இருக்கிறது என்பதாகும். சாதாரண மனிதர்கள் தங்களுடைய சுய முயற்சியினால் அதை விளங்கிக்கொள்ள முடியாது என்றும், பரிசுத்த வேதத்தின் போதனைகளைக் குறித்த விஷயங்களில் “பரிசுத்த தாய் சபையின்” முடிவுக்கு அடிப்பணிவதே ஞானமான செய்கையாகும் என்றார்கள். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில் இத்திருச்சபையே, கடவுளுடைய வார்த்தையை விளக்குவதற்கு தெய்வீக அதிகாரம் கொண்டதும், தகுதியானதுமாக இருக்கிறது. ஆகவே ரோமன் கத்தோலிக்க போப்புகள், தேவனுடைய வார்த்தை பாமர மக்களிடம் செல்லாதபடி தடுத்து நிறுத்திவைத்து, தங்களுடைய சொந்த தத்துவங்களையும், மூடநம்பிக்கைகளையும் அதன் மீது திணித்திருந்தனர். இதைப் பெரும்பாலுமான பாமர மக்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஏனென்றால், வேதத்தை ஆராயவேண்டிய கடமையிலிருந்து, இது அவர்களை விடுவிப்பதினால் அதில் அவர்கள் சமாதானம் கொண்டிருந்தனர். ரோமன் கத்தோலிக்கர்களின் இப்போதனைக்கு எதிராக எழும்பியவர்களுக்கும் பெருமளவிலான வரவேற்பு இருக்கவில்லை, ஏனென்றால், சுயமாக வேதத்தைப் படித்து ஆராய்வதற்கு மிகவும் சோம்பலுள்ளவர்களாகவே பொதுவாக மக்கள் இருந்தனர். கத்தோலிக்கர்கள் சொல்லியதைக் கேட்டு, நம்பினால் போதும் என்று இருந்துவிட்டனர்.

பரிசுத்த வேதாகமம், தன்னில் மறைபொருள் போதனைகளைக் கொண்டிருப்பதனால், இதைப் பாமர மக்கள் கையாள முடியாத ஓர் ஆபத்தான புத்தகம் என்ற தன்னுடைய தீய கருத்தை நிலைநாட்டுவதற்கு, ரோமன் கத்தோலிக்கம் முதன்மையாக பயன்படுத்தும் வேதப்பகுதி 2 பேதுரு 3:15-16. அதில் பரிசுத்த ஆவியானவரே பேதுருவைக் கொண்டு சொல்லியிருக்கிறார், தனக்குக் கொடுக்கப்பட்ட ஞானத்தினால் அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய நிருபங்களில் சொல்லியிருக்கின்ற “சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்” என்று. ஆனால் இது குறித்து விளக்கும் ஜோன் கல்வின் விளக்கியிருக்கிறார்,

“அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபங்களில் சில, நாம் விளங்கிக்கொள்ளுவதற்கு கடினமாக இருக்கிறது என்பதற்காக அவைகளை நாம் வாசிக்காமல் தவிர்த்துவிட வேண்டும் என்பதல்ல. மாறாக, அமைதலோடு கற்றுக்கொள்ளக் கூடிய மனப்பாங்கை, நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதையே இது எடுத்துரைக்கிறது”.

அத்தோடு, இவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளையும் கவனியுங்கள். “சில காரியங்கள்” என்று சொல்லியிருக்கிறாரே தவிர “அநேக காரியங்கள்” என்று இல்லை. “அரிதாயிருக்கிறது” என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர “புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது” என்று இல்லை. மேலும், தெளிவற்ற தன்மை அவைகளில் இல்லை, நம்மில்தான் இருக்கிறது. நம்முடைய சீர்குலைந்த தன்மையின் காரணமாக, இவைகளை அறிந்துகொள்ளுவதற்கு தேவையான கடவுள் குறிப்பிட்டுள்ள பரிசுத்தமான தேவைகளை நாம் நிராகரிக்கிறோம். நம்முடைய இருதயத்திலுள்ள பெருமையின் காரணமாக, கடவுளிடமிருந்து வரும் பரிசுத்த ஒளியூட்டலை நாடாமல் நாம் வெறுத்தொதுக்குகிறோம். “கல்லாதவர்கள்” என்று இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது “கல்வி கல்லாதவர்களை” அல்ல, கடவுளைக் கற்றறியாதவர்களை; “உறுதியில்லாதவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது நம்பிக்கையில் உறுதியில்லாதவர்களை. அதாவது, காற்றுத் திசைகாட்டும் கருவிபோல், தன்மீது வீசும் எந்தவிதமான போதனையின் பக்கமாகவும் திரும்புகிறவர்களையே இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.

மறுபுறம், இவற்றிற்கு எதிரான மற்றொரு உச்சத்திற்கு, ஆத்தமாக்களை தவறாக வழிநடத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள், வேதம் எளிய ஆத்துமாக்களுக்காக எழுதப்பட்டிருப்பதனால், வேதத்தை விளக்கவேண்டிய அவசியமே இல்லை என்பார்கள். வேதத்தை வாசிக்கும்போது அவரவர் என்ன பொருளை உணருகிறார்களோ அதுவே அதன் பொருள் என்கிறார்கள். வேதம் விசுவாசிக்கப்பட வேண்டியதே தவிர, விளக்கப்பட வேண்டியதில்லை என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் விசுவாசிப்பதையும், விளக்குவதையும் ஒன்றுக்கொண்று எதிராகக் காட்டுவது தவறானது. இவை இரண்டுமே அவசியமானவை. கடவுள் குருட்டுத்தனமான நம்பிக்கையை நம்மிடம் கேட்கவில்லை. மாறாக, அறிவார்ந்த விசுவாசத்தையே கேட்கிறார். இதற்கு தவிர்க்கமுடியாத மூன்று காரியங்கள் அவசியம்:

  1. கடவுளுடைய வார்த்தையை வாசிக்க வேண்டும் (கேட்க வேண்டும்)
  2. கடவுளுடைய வார்த்தையை விளங்கிக்கொள்ள வேண்டும்
  3. கடவுளுடைய வார்த்தைக்கேற்ப நடக்க வேண்டும்

கிறிஸ்துவே அதற்கான புரிதலைத் தருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. இருந்தபோதிலும் அவரே சொல்லியிருக்கிறார் “வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்” (மத்தேயு 24:15) என்று, நாம் வாசிக்கிறவைகளைப் பற்றி நம்முடைய மனதில் சிந்திக்க வேண்டும். நாம் வாசிப்பதை அல்லது கேட்பதைப்பற்றிய ஒரு குறிப்பிட்ட அளவிலான புரிதல் அவசியம் என்பதை நம்முடைய கர்த்தர் போதித்த விதைக்கிறவன் உவமையிலிருந்து நாம் அறியலாம்.

மத்தேயு 13:19, 23
19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்”.

நாம் வாசிக்கிறவைகளை விளங்கிக்கொள்ளுவதற்கு, நாம் கடினமான முயற்சிகளையும் செய்ய வேண்டும், ஏனென்றால், விளங்காத ஒன்றை வாசிப்பதனால் நமக்கு என்ன பயன் இருக்கிறது?

இன்னும் சிலர், நாம் வாசிக்கிறவைகளின் பொருளை அறிய, நமக்கான ஒரே விளக்கம் கூறுபவர், அதைச் சரியாக செய்துமுடிக்கத் தகுதியானவர், பரிசுத்த ஆவியானவர் மட்டுமே என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இக்கருத்துக்கு ஆதாரமாக, 1 யோவான் 2:20, 27 வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

1 யோவான் 2:20, 27
20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக”.

இவ்வசனங்களைப் பயன்படுத்தி அவர்கள் சொல்லுகிறார்கள், வேதத்தை எனக்குப் போதிக்க வேறு யாரும் தேவையில்லை, பரிசுத்த ஆவியானவர் மட்டுமே போதும். அதுவே அவருக்கு மகிமையாகவும் இருக்கும் என்று. இது சரியா? மனிதர்கள் எந்தவொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்த்து ஏற்கவேண்டும் என்பதுதான் பொதுவான நியதி. ஆவிக்குரிய விஷயங்கள் என்பதற்காக கேள்விப்படும் எதையும் அப்படியே நாம் எடுத்துக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில், அதாவது வேறு யாரும் எனக்குத் தேவையில்லை, பரிசுத்த ஆவியானவரே எனக்குப் போதிப்பார் என்று சொல்லுவது, சரியா என்பதற்கான நம்முடைய பதில், “இல்லை” என்பதுதான். இல்லாவிட்டால், கிறிஸ்து, “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும் . . . மேய்ப்பர்களையும் போதகர்களையும்” (எபேசியர் 4:12, 13) தந்தது மிதமிஞ்சிய செயலாகப் போய்விடும். கர்த்தரை நம்புவதிலிருந்து விலகி அவரைப் பரீட்சைப் பார்ப்பதற்கும், அவரை விசுவாசிப்பதிலிருந்து விலகி ஊகத்திற்கு இடமளிக்கும் நிலைக்கும் சென்றுவிடுவதற்கான வாய்ப்பு தொலைவில் இல்லை என்பதை எப்போதும் நாம் மனதில் வைத்திருக்க வேண்டும் (மத்தேயு 4:6, 7). கடவுள் தம்முடைய படைப்புயிர்களின் தேவைகளை வழங்குவதில், அவர் கையாளுகிற பொதுவான முறைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் எதையும் நேரடியாகக் கொடுப்பதில்லை, மனித பிரதிநிதிகளையே அதற்காக அவர் பயன்படுத்துகிறார். பொதுவான விஷயங்களைப் போலவே ஆவிக்குரிய விஷயத்திலும் இம்முறையையே கையாளுகிறார். வரம்பெற்ற போதகர்களைத் தம்முடைய மக்களுக்கு வழங்குவதில் கர்த்தர் பிரியப்படுகிறார். ஆகவே ஆணவத்துடன் அவர்களை நிராகரிப்பதைவிட்டு, அவர்களுடைய போதனையைச் சோதித்தறிந்து (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11), அவர்கள் எந்தவகையில் நமக்கு உதவ முடியும் என்பதை அறிந்து அவர்களை நன்றியறிதலோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஓர் இளம் விசுவாசி, தான் கடவுளையே சார்ந்திருக்கவும், பரத்திலிருந்து வருகிற ஞானத்தைப் பெறுவதற்கும், குறிப்பாக அவருடைய பரிசுத்த வார்த்தைகளைப் படிக்கிறபோதும் தியானிக்கிறபோதும், தொடர்ந்து கர்த்தரை நாடி ஓடவேண்டிய அவசியத்தை உணர்வதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்யும் எந்த எழுத்துக்களையும் கிட்டவும் வர அனுமதிக்கக்கூடாது. எனினும், கடவுள் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறதில் எப்போதும் குறிப்பிட்ட முறையைக் கையாளுவதில்லை என்பதை விசுவாசிகள் மனதில் வைத்திருக்க வேண்டும். நம்முடைய மனதை நேரடியாகவும், உடனடியாகவும் ஒளிரச் செய்வது அவருக்குப் பிரியமானதே, ஆனால் பெரும்பாலும் அவர் அப்படிச் செய்வதில்லை. மற்ற மனிதர்களைக் கருவிகளாக பயன்படுத்தியே இதைச் செய்கிறார். அதன்மூலம் அவர் நம்மில் பெருமை எழாமல் இருக்கச் செய்கிறதோடு, தம்முடைய சொந்த நிறுவனமான சபை மதிப்புறவும் செய்கிறார். “தம்முடைய மந்தையை மேய்ப்பதற்கும்” (1 பேதுரு 5:2), அதை “நடத்துவதற்கும்” (எபிரெயர் 13:7) அவர்தாமே அதற்கான நபர்களை நியமித்து அவர்களை தகுதியுள்ளவர்களாக்கியிருக்கிறார். பேதைகளும் தவறிழைக்க முடியாதபடிதான் (ஏசாயா 35:8) கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை எழுதியிருக்கிறார் என்பது ஒருவிதத்தில் உண்மைதான்; இருப்பினும், அவற்றில் ஆராய்ந்து அறியவேண்டிய ஆழமான காரியங்களும் இருக்கத்தான் செய்கின்றன (1 கொரிந்தியர் 2:10); குழந்தைகளைப் போன்றவர்களுக்கு அதில் பாலும் இருக்கிறது, முதிர்ச்சியானவர்களுக்கான திடமான உணவும் அதில் இருக்கிறது (எபிரெயர் 5:13,14).

வேதத்தை விளக்கவேண்டியதன் அவசியத்தைக் குறித்து இதுவரை பொதுவான விஷயங்களைத் தெரிவித்தேன், இப்போது நேரடியான சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். முதலாவது, முரண்பாடுகள் போன்று தெரியக்கூடிய பகுதிகள் அதில் இருப்பதனால், வேதம் விளக்கப்பட வேண்டும். ஆதியாகமம் 22:1, 2, “தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: . . . உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை . . . தகனபலியாகப் பலியிடு என்றார்.” இப்போது, யாக்கோபு 1:13ஐ வாசித்துப் பாருங்கள், “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” இவ்விரு வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைப்போல் தெரிகின்றன. ஆனால் அப்படி ஒருபோதும் இருக்க முடியாது என்று ஒரு விசுவாசி நன்கு அறிவான். ஒருவேளை அவனால் அதை நிரூபிக்க முடியாமல் போகலாம். ஆகவேதான் இவ்வசனங்களின் பொருளை ஆராய்ந்தறிய வேண்டியது அவசியம். இது மிகவும் கடினமானதும் அல்ல. இவ்விரு வசனங்களிலும் “சோதனை” என்ற வார்த்தை ஒரேவிதத்தில் பயன்படுத்தப்படவில்லை. “சோதனை” என்ற வார்த்தை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை ஆகிய இரு அர்த்தங்களைத் தன்னில் கொண்டுள்ளது. முதல் நிலையில், ஒன்றின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதையும் பரிசோதிப்பதையும் குறிக்கிறது. இரண்டாம் நிலையில், தீமை செய்வதற்காக ஒன்றை வசீகரித்து, கவர்ந்திழுப்பதைக் குறிக்கிறது. எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாமல், ஆதியாகமம் 22:1ல் “சோதனை” என்ற வார்த்தை முதல் நிலையில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஆபிரகாம் தன் மகனைப் பலியிடுவதற்கு போனபோது, கர்த்தர் இடைமறித்து அதைத்தடுக்காமல் இருந்திருந்தாலும், ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட்டிருந்தாலும், ஆபிரகாம் பாவம் செய்ததாகாது. ஏனென்றால், கர்த்தரே அதைச் செய்யும்படி ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டிருந்தார்.

கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தபோது, பிசாசு செய்கிறதைப்போல் அவரை பாவத்தில் விழத்தள்ளுவதற்காக அதைச் செய்யவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். மாறாக, கர்த்தர்மீது முற்பிதாக்களுக்கு இருந்த பயத்தையும், விசுவாசத்தையும், அன்பையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்தச் சோதனையைக் கர்த்தர் செய்தார். சாத்தான் சோதிக்கிறபோது, நம்மைக் கீழேவிழத்தள்ளுவதையே நோக்கமாகக் கொண்டு, நம்மை வசீகரிக்கக் கூடியவைகளை நம்முன் வைப்பான். ஆனால் கடவுள் சோதிக்கிறபோது, நம்முடைய நலனை மனதில் கொண்டே அதைச்செய்வார். எந்தவொரு பரீட்சையும் சோதனையே, அது நம்முடைய இருதயத்தின் நிலையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கிறிஸ்து “எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிறார்” (எபிரெயர் 4:15) என்கிறது வேதம். அவருக்கு உண்டான சோதனை மெய்யானது, இருப்பினும் நம்மில் நடப்பதைப்போல் அவரில் நன்மைக்கும் தீமைக்கும் இடையே போராட்டம் இருக்கவில்லை. அவருடைய உள்ளார்ந்த பரிசுத்தத்தன்மை சாத்தானுடைய கேடான ஆலோசனைகளைத் தண்ணீர் ஊற்றப்பட்ட நெருப்பைப்போல் இல்லாமலாக்கியது. நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படுகிறபோது, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். ஏனென்றால், அவைகள் நம்முடைய இச்சைகளை அழிக்கவும், நம்முடைய கீழ்ப்படிவுக்கான பரீட்சையாகவும், கடவுளுடைய கிருபை நம்மில் இருப்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் பாவத்திற்கு ஏதுவாக அவை நம்மைத் தூண்டும்போது நாம் சந்தோஷப்படும்படி ஆண்டவர் சொல்லவில்லை.

மற்றொரு உதாரணம், “துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்” (நீதிமொழிகள் 15:29) என்பது. எனினும், அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:27ல் “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவிசுவாச மக்களைப் பார்த்தே பவுல் இவ்வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார். பார்ப்பதற்கு இவ்விரு சொற்றொடர்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதுபோல் தெரிகின்றன. இவற்றைச் சரியாக விளக்காதவரை, இவை இப்படித்தான் தென்படும். கடவுள் எவ்விதத்தில் துன்மார்க்கருக்கு தூரமாகவும், எவ்விதத்தில் தூரமில்லாமலும் இருக்கிறார் என்று நாம் ஆராய்ந்தறிய வேண்டும். இப்படிச் செய்வதே வேதத்தை விளக்குவதாகும். கடவுளுடைய வல்லமையான அல்லது பராமரிப்பின் பிரசன்னத்திற்கும், அவருடைய மனவிருப்ப பிரசன்னத்திற்கு இடையே இருக்கிற வேறுபாட்டை நாம் கண்டறிய வேண்டும். கடவுளுடைய ஆவிக்குரிய பிரச்சன்னத்தின்படி அல்லது எங்கும் நிறைந்திருக்கும் தன்மையின்படி, அவர் எல்லாப் படைப்புயிர்களுக்கும் மிகவும் அருகில்தான் இருக்கிறார் (“நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர்” எரேமியா 23:24), அவர்களுடைய உயிரைக் காத்து, தம்முடைய பராமரிப்பின் இரக்கங்களை அளித்து வருகிறார். ஆனால் துன்மார்க்கர், கர்த்தரைவிட்டுத் தூரமாய் இருக்கிறார்கள் (சங்கீதம் 73:27). அவர்கள் கர்த்தரை நோக்கி “எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்” (யோபு 21:14) என்று தங்களுடைய இருதயத்தில் சொல்லுகிறார்கள். ஆகவே அவருடைய கிருபையுள்ள பிரசன்னம் அவர்களைவிட்டுத் தூரமாக இருக்கிறது, அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறதில்லை, அவர்களோடு எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளுகிறதில்லை, அவர்களுடைய ஜெபங்களைக் கேட்கிறதில்லை (“மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்” சங்கீதம் 138:6), அவர்களுடைய தேவையில் அவர்களுக்கு உதவுகிறதில்லை, “சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டுப் . . . போங்கள்” (மத்தேயு 25:41) என்கிறார். நீதிமான்களுடன் தம்முடைய கிருபையினால் நெருங்கியிருக்கிறார் (சங்கீதம் 34:18; 145:18).

மற்றொரு உதாரணம், “என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது” (யோவான் 5:31). “என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது” (யோவான் 8:14) என்ற வசனங்கள். மேலெழுந்தவாரியாக இவற்றைப் பார்த்தால், இவை இரண்டும் முரண்படுவதுபோல் தெரியும். சரியாக விளக்கமளித்தால், இவற்றிற்கிடையிலும் எந்தவிதமான முரண்பாடும் இல்லை என்பதை உணரலாம். யோவான் 5:17-31 வசனங்களில், இயேசு பிதாவோடு தனக்கிருக்கும் ஏழு சமத்துவங்களைக் குறிப்பிடுகிறார். அதாவது, பிதாவின் கிரியைகள் தொடங்கி, அவருடைய சித்தம்வரையுள்ளவைகளைக் குறிப்பிடுகிறார். 19வது வசனத்தில், பிதாவும் குமாரனும் ஒன்றாயிருப்பதனால், பிதாவுக்கு முரணாக இயேசு எதையும் செய்வதில்லை (30வது வசனத்திலும் இதைக் காணலாம்) என்றிருக்கிறது. அதேபோல், இயேசு பிதாவைவிட்டு தன்னிச்சையாக தம்மைப்பற்றி சாட்சியிடுகிறதுமில்லை, அப்படிச் செய்வது பிதாவின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படியாமல் போவதாகும். எனவே, அவருடைய சாட்சி பிதாவோடும் (வசனம் 37), வேதத்தோடும் (வசனம் 39) இசைந்திருந்து, அவருடைய முழுமையான தெய்வீகத்தைக் குறித்து சாட்சியிடுகிறது. ஆனால் யோவான் 8:13-14ல், இயேசு, தம்முடைய சாட்சியைத் தவறானது என்று சொன்ன பரிசேயர்களுக்கு நேரடியாக பதிலளிக்கிறார். பரிசேயர்கள் சொல்லியதை, இயேசு உறுதியாக மறுதலித்து, பிதாவின் சாட்சியத்தை மறுபடியும் எடுத்துரைக்கிறார் (வசனம் 18). மறுபடியும் அவர் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள், “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30), “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான் 14:28). ஆகவே யோவான் 5ல், இயேசு தம்முடைய மெய்யான தன்மையைக் குறித்து சொன்னார். யோவான் 8ல், இயேசு தாம் ஏற்றிருக்கிற மத்தியஸ்த பொறுப்பை முன்னிலைப்படுத்தி அப்படிச் சொன்னார்.

வேதம் விளக்கப்பட வேண்டும் என்பதற்கான இரண்டாவது காரணம், வேதத்திலுள்ள சில வார்த்தைகளை நாம் தவறாக விளங்கிக்கொள்ளுவதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேதம் சரியாக விளக்கப்பட வேண்டியது அவசியம். அந்தந்த வசனங்கள் எழுதப்பட்டுள்ள மொழிநடையை உணராமல், எத்தனைபேர் பல்வேறு வசனங்களைப்பற்றிய தவறான எண்ணங்கொண்டிருக்கிறார்கள். சில வார்த்தைப்பிரயோகங்களுக்கு அது வெளிப்படையாகத் தெரிவிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், வேறுபட்ட தவறான அர்த்தங்களை அநேகர் கொடுத்துவருகிறார்கள். கிறிஸ்துவின் வார்த்தையை விளக்குவதாக சொல்லிக்கொண்டு, தொடர்ந்து கேடான வைராக்கியத்துடனும் பிடிவாதத்துடனுன் இப்படிச் செய்துவருகிறவர்களுக்கு எதிரான அநேக எச்சரிப்புகளை வேதத்தில் காணலாம். உதாரணமாக, இயேசு “இது (புளிப்பில்லா அப்பம்) உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்றார். இங்கு இயேசு, “இந்த அப்பம் என்னுடைய சரீரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்றுதான் சொன்னார் என்பதை அநேகர் ஏற்கமறுக்கிறார்கள். அதேபோல் வெளிப்படுத்தின விசேஷம் 1:20ல், “நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்” என்பதில் ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளுக்கான அடையாளம் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் கவனமில்லாததனால்தான் “பிரபஞ்சவாதம்” (Universalism) என்ற தவறான இறையியல் போதனை உருவானது. இதன்காரணமாக தவறான போதனைகள் எழுவதனால், இது நம்மை மேலும் எச்சரிக்கிறது. “எண்ணிக்கைக்குட்படாத” என்ற வார்த்தைப்பிரயோகங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த தவறான போதனை உருவானது. ஆர்மீனியனிசமும் இதிலேயே தவறிழைக்கிறது. எபிரெயர் 2:9, “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு . . . இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம்” என்ற வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “ஒவ்வொருவருக்காகவும்” என்பது காயீனையோ, பார்வோனையோ, யூதாஸையோ உள்ளடக்கமாகக் கொண்டதல்ல. இவ்வசனத்தில் வருகிற “ஒவ்வொருவருக்காகவும்” என்பதை லூக்கா 16:16, ரோமர் 12:3 மற்றும் 1 கொரிந்தியர் 4:5 ஆகிய வசனங்களின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.

லூக்கா 16:16 “. . . தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.”

ரோமர் 12:3 “. . . உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் . . .”

1 கொரிந்தியர் 4:5 “. . . இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.”

அதேபோல், 1 தீமோத்தேயு 2:4ல் குறிப்பிடப்பட்டுள்ள “எல்லா மனுஷரும்” என்பதை ஒருமனிதனையும் விட்டுவிடாமல் எல்லா மனிதனையும் உள்ளடக்கியது என்பதாக நாம் ஒருபோதும் பொருள்கொள்ளக் கூடாது. லூக்கா 3:15, யோவான் 3:26 மற்றும் அப்போஸ்தலர் 22:15 ஆகிய வசனங்களின் அடிப்படையிலேயே அதற்கு விளக்கமளிக்க வேண்டும்.

லூக்கா 3:15, “யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு . . .”

யோவான் 3:26, “. . . இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.”

அப்போஸ்தலர் 22:15, “நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.”

ஆதியாகமம் 6:9 “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்” என்கிறது. யோபு 1:1ல், யோபுவைக்குறித்து “உத்தமனும் சன்மார்க்கனுமாக” இருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இவ்விரு வசனங்களிலும் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள “உத்தமன்” என்ற வார்த்தைக்கு ஆங்கில வேதத்தில் “பூரணமானவன் – perfect” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் அந்தப் பொருளில்தான் இப்பத்தியில் இவர்களைப்பற்றி விளக்குகிறார்). இவர்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளை எத்தனைபேர் தவறாக விளங்கிகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக அவர்களில் ஏற்பட்ட தவறான எண்ணங்கள்தான் எத்தனை! “இரண்டாம் ஆசீர்வாதம்” அல்லது “பூரணமான பரிசுத்தமாக்கப்படுதல்” ஆகிய பதங்களைப் பயன்படுத்துகிறவர்கள், மனிதன் இவ்வுலகில் வாழுகிறபோதே பாவமற்ற பூரணமான நிலையை அடைய முடியும் என்று உறுதியாக சொல்லுகிறார்கள். இக்கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஏனென்றால், நோவா, யோபு ஆகிய இவர்களுடைய வாழ்க்கையை விளக்குகிற தொடர்ந்து வரும் வசனங்களை வாசித்துப் பார்க்கிறபோது, இவர்கள் இருவரும் குறைபாடுகளற்ற வாழ்க்கையை வாழவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. நோவா, மது அருந்தி வெறித்திருந்திருக்கிறார்; யோபு, தான் பிறந்த நாளையே சபித்திருக்கிறார். “உத்தமன் அல்லது பூரணமானவன்” என்ற வார்த்தை, “உண்மையானவன், நேர்மையானவன்” என்ற பொருளில், அதாவது “மாய்மாலமற்றவன்” என்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. “தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்” (1 கொரிந்தியர் 2:6). (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இங்கும் ஆங்கில வேதத்தில் “தேறினவர்கள்” என்பதற்கு perfect என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது). பிலிப்பியர் 3:15ல் “தேறினவர்கள்” என்ற வார்த்தை இதையே குறிப்பிடுகிறது. எபிரெயர் 5:14ல், இதையே, குழந்தைப் பருவத்தைக் கடந்து, முதிர்ச்சியடைந்தவர்கள் என்ற அர்த்தத்தில் “பூரண வயதுள்ளவர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எரேமியா 51:57, “அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த்தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்” என்கிறது. பொருள்முதல்வாத கொள்கையாளர்கள் (gross materialists) இவ்வசனத்தைக் குறிப்பிட்டு, கேடானவர்களின் ஆத்துமா அழிந்து, இல்லாமல் போய்விடும் என்று நம்புகிறார்கள். அவர்களுடைய தவறைச் சுட்டிக்காட்ட அதிக நேரம் நமக்குத் தேவையில்லை, இவ்வசனம் அடையாள மொழிநடையில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. பாபிலோனுடைய பெருமையினிமித்தம், கடவுள் அவர்கள்மீது தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றயிருந்தார். அதன் நிறைவேற்றத்தை வரலாற்று பதிவுகள் நமக்குக் காட்டுகின்றன. பாபிலோனின் இராஜாவும் அவனுடைய அரசவையில் இருந்தவர்களும் மது குடித்து மயங்கியிருந்தபோது, அவர்களுடைய நாடு பிடிக்கப்பட்டு, அவர்கள் மயக்கத்தில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் மறுபடியும் இப்பூமியில் கண்விழிக்கவில்லை. “விழிக்காத தூக்கமாய்த்தூங்கி” என்பதை எழுத்துப்பூர்வமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால், தானியேல் 12:2, யோவான் 6:29 ஆகிய வசனங்கள், துன்மார்க்கரும் ஒருநாளில் (கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நாளில்) உயிரோடு எழுந்திருப்பார்கள் என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறது.

எண்ணாகமம் 23:21, “அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை” என்றிருக்கிறது. இவ்வசனத்தின் சந்தர்ப்பசூழலைப் பொருட்படுத்தாமல், எத்தனைபேர் இவ்வசனத்திற்கு அவர்களுக்குத் தோன்றுகிறபடியெல்லாம் விளக்கம் தந்துவிடுகிறார்கள். இது, பிலேயாம் பாலாக்கினிடத்தில், இஸ்ரவேலை மீதியானியர் அழிக்கும்படி அவர்களை ஏன் தான் சபிக்க முடியாது என்பதற்கான விளக்கங்களைத் தருகிறபோது, சொல்லப்பட்ட ஒரு வாக்கியம். இஸ்ரவேலர் பாவமற்ற பரிசுத்த நிலையில் இருக்கிறார்கள் என்று இவ்வசனம் பொருள்தரவில்லை. அத்தோடு, இவ்வசனம் சொல்லப்பட்ட காலம்வரையில், இஸ்ரவேலர் நேரடியாக யேகோவாவாகிய தேவனுக்கு எதிராக எந்தவிதமான பாவகரமான காரியங்களையும் செய்யவில்லை. விக்கிரக ஆராதனை போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பாவங்களை அவர்கள் செய்திருக்கவில்லை. சாபத்தைப் பெறுமளவுக்கு அவர்ளுடைய நடத்தை அப்போது இருக்கவில்லை. பிறகு, இஸ்ரவேலர் கர்த்தருடைய சொற்கேளாமல் போனதினால், பாபிலோனை அதற்காக அவர் ஏற்படுத்தி, தம்முடைய நியாயத்தீர்ப்பை அவர்கள்மீது நிறைவேற்றினார் (ஏசாயா 10). ஆகவே இந்த வசனத்தை, திருச்சபையோடு தொடர்புடுத்தி விளக்குவது ஏற்புடையதல்ல. கர்த்தர் தம்முடைய மக்களிடத்தில் காணப்படும் அக்கிரமங்களைக் கவனிக்கிறார், அதை தம்முடைய சிட்சையின் பிரம்பினால் வெளிப்படுத்துகிறார். இருப்பினும் அவர்கள்மீது நித்திய தண்டனையை சுமத்துவதில்லை.

வேதம் விளக்கப்பட வேண்டும் என்பதற்கான மூன்றாவது காரணம், சில பகுதிகளில், விரிவாக விவரித்துக் காட்டவேண்டிய சொற்கள் இருப்பதனால், வேதம் சரியாக விளக்கப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஆபகூக் 1:13ல், “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே” என்றிருக்கிறது. “நோக்கிக்கொண்டிருக்கமாட்டீர்” என்பது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டீர் என்று பொருள்படும். இப்படியான வார்த்தைகள் சரியாக விவரித்து விளக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் வேதத்தின் ஏனைய பகுதியோடு இவ்வசனம் முரண்படுகிறதாக சொல்லிவிடுவோம். உதாரணத்திற்கு, நீதிமொழிகள் 15:3ல், “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது” என்றிருக்கிறது. கர்த்தர் ஒருபோதும் தீமையைக் கண்டு அகமகிழ்கிறதில்லை. மாறாக அவைகளுக்கு எப்போதும் பதிலீடு செய்கிறார். மற்றொரு உதாரணம், ரோமர் 9:19, “அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்?” என்கிறது. இங்கு “சித்தம்” என்பது கடவுளுடைய மறைவான ஆணை. லூக்கா 12:47ல், “அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன்” என்றிருப்பதைக் காண்கிறோம். இங்கு “சித்தம்” என்பது கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள வார்த்தை. இப்படி இந்த இரு வசனங்களிலும் “சித்தம்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இவ்விரு வசனங்களின் சந்தர்ப்பசூழலின் அடிப்படையில், அவைகளுக்கான வேறுபாட்டை அறியாவிட்டால், வேதத்தில் முரண்பாடுகள் உள்ளதாகவே சொல்ல நேரிடும். இறுதியாக இன்னொரு உதாரணம், சங்கீதம் 119:2, “அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்கிறது. இதில் “கைக்கொண்டு” என்பது மெய்யான ஆர்வத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்வதையே குறிக்கிறது. ஏனென்றால், கர்த்தருடைய நியாயப்பிரமாணம் முழுவதையும், எவரும் அடியோடு பூரணமாக நிறைவேற்றுவதென்பது முடியாத காரியம்.

வேதம் விளக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கான இறுதியான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இதற்காக நீங்கள் யாவரும் நன்கு அறிந்த எளிமையான ஒரு வசனத்தை எடுத்துக்கொள்ளுவோம். எபிரெயர் 13:8 சொல்லுகிறது, “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று. இவ்வசனம் சொல்லுவது சரிதானா? “ஆம், முற்றிலும் சரியானதே” என்று நீங்கள் சொல்லுவீர்கள். இதை எழுதுகிற நானும் முழுமனதுடன் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் இவ்வசனம் என்ன சொல்லுகிறது என்பதை சரியாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த நாளிலிருந்து எந்தவிதமான மாற்றமும் அவரில் நிகழவில்லையா? அவர் மனிதனாக வந்தபோது இருந்த அதேவிதமாகத்தான் இன்றும் இருக்கிறாரா? இப்போதும் அவருக்கு பசியும், தாகமும், சோர்வும் ஏற்படுகிறதா? அவர் இன்னும் “ஓர் ஊழியக்காரனாக”, தன்னுடைய தாழ்மையின் நிலையில், “துக்கங்களின் மனிதனாக” இருக்கிறாரா? நிச்சயமாக இவ்வசனம் விளக்கப்பட வேண்டியது அவசியம். ஒருவகையில் அவர் இன்றும் “மாறாதவராகவே” இருக்கிறார். அவருடைய ஆள்தத்துவ இலக்கணங்களிலும், மத்தியஸ்த பணியிலும், தம்முடைய சபையை நித்திய அன்பினால் நேசிக்கிற தன்மையிலும், அவர்களுடனான உறவிலும், அவர் மாறாதவராகவே இருக்கிறார். ஆனால் அவருடைய மானுடத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, இப்போது அவர் மகிமையடைந்த சரீரத்தைக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது இருக்கிற நிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மத்தேயு 28:18, “. . . வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.”

அப்போஸ்தலர் 2:36, “ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று”.

ஆகவே நாம் நன்கு அறிந்திருக்கும், மற்றும் மிகவும் எளிமையான வேதப்பகுதிகளுக்கும், அவைகளின் சரியான விளக்கத்தை நாம் அடைவதற்கு, கவனத்துடனான ஆராய்ச்சியும், ஜெபத்துடனான தியானமும் அவசியமாக இருக்கிறது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s