மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம்?

மானுடம் எத்தனையோ எதிரிகளை வரலாறுதோறும் சந்தித்து வந்திருக்கிறது. பாவத்தின் காரணமாக மனிதன் அவலட்சணமான செயல்களைத் தொடர்ந்து செய்துவந்திருக்கிறான். மானுடத்திற்கெதிரான அவனுடைய செயல்கள் அத்துமீறியவையாக எந்தளவுக்கு கேடான இருதயம் கொண்டவனாக இருக்கிறான் என்பதை அறியாதவர்கள் இருக்கமுடியாது. மனிதனின் அவலட்சணமான கோரச் செயல்களைக் காணாத நாடுகள் இல்லை. இருந்தபோதும் நவீன காலத்தில் மானுடத்தின் அதிமோசமான பாவச்செயலின் உதாரணமாக அமெரிக்காவின் செப்டெம்பர் 9, 2011 கணிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் அன்று மாண்டவர்களின் எண்ணிக்கை அல்ல; அந்த அக்கிரமச் செயல் நடந்தவிதமே அதற்குக் காரணம். மனிதன் தன்னையே வெடிகுண்டாக பயன்படுத்தி விமானங்களைக் கட்டடங்களை நோக்கிப் பறக்கவைத்து ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுகுவித்தான். இந்தச் செயல் 21ம் நூற்றாண்டின் ஆயுதமான மனிதவெடிகுண்டை உலகம் முழுதும் அறியவும் உணரவும் செய்தது. அதுமட்டுமல்லாமல் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் உலகறியச் செய்தது. தீவிரவாதமும் தீவிரவாதச் செயல்களும் துப்பரவாக நடந்திராத நாடுகள் வெகுகுறைவு. மதத்தீவிரவாதத்தை உலகின் பல நாடுகளில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தங்களுடைய மதத்திற்கு எதிரானதாக இன்னொரு மதத்தைக் கணித்து அந்த மதத்தாரைக் கொல்லுவது கடவுளுக்குச் செய்யும் பெருஞ்சேவையாக எண்ணி அதை வைராக்கியத்தோடும், தீவிரத்தோடும், ஆண், பெண், முதியோர், குழந்தைகள் என்ற எந்தப் பேதமும் இன்றிச் செய்கின்ற இஸ்லாமியத் தீவிரவாதத்தை இந்த 21ம் நூற்றாண்டில்தான் கண்டிருக்கிறோம். இந்த மிருகத்தை வளர்த்து தீனிபோட்டு தங்களுடைய அரசியல் சமூக நோக்கங்களுக்காக சில தீவிரவாத இயக்கங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தி வந்தன. அதை உலகளாவிய ஆயுதமாகப் பயன்படுத்துவதில் வெற்றிகண்ட தீவிரவாத இயக்கம் ஐசிஸ் (ISIS).

இந்த இயக்கம் இதுவரை மத்தியகிழக்கு நாடுகள், அதற்கு வெளியில் ஆபிரிக்கா, ஐரோப்பா என்று தன் கைங்கரியத்தை காட்டி இப்போது தெற்காசிய நாடுகளில் ஒன்றான ஸ்ரீலங்காவிலும் நுழைந்துவிட்டது. தீவிரவாதம் ஸ்ரீலங்காவிற்கு புதிதல்ல. முப்பது வருடங்களாக இனத்தீவிரவாதத்தை அந்நாடு சந்தித்து அந்த அழிவிலிருந்து மீண்டு கடந்த பத்துவருடங்களாகத்தான் அமைதியின் பலனை அனுபவித்து வந்திருந்தது. மக்கள் ஓரளவுக்கு ஆனந்த மூச்சுவிடவும் ஆரம்பித்திருந்தார்கள். பலவிதங்களில் நாடும் முன்னேற்றங்களைச் சந்தித்து உல்லாசப் பிரயாணிகள் ஆயிரக்கணக்கில் நாட்டில் குவிய ஆரம்பித்திருந்தார்கள். லோன்லி பிளெனெட் எனும் உல்லாசப்பிரயாண அமைப்பு ஸ்ரீலங்காவை 2019ல் உலகின் சிறந்த உல்லாசப்பிரயாண நாடாக அறிவித்திருந்தது. 5% நாட்டு தேசிய வருமானத்தை உல்லாசப்பிரயாணம் இந்த வருடம் ஈட்டித்தரும் என்ற எதிர்பார்ப்பும் பெரியளவில் இருந்தது. ஏப்ரல் 21ம் தேதி அதற்கெல்லாம் முடிவுகட்டி நாட்டையே தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுபோய்விட்டிருக்கிறது. இதுவரை நாடு கண்டிராத புது எதிரியான இஸ்லாமியத் தீவிரவாதம் ஸ்ரீலங்காவில் வேர்விட்டு வளர்ந்திருப்பதை ஏப்ரல் 21 உலகறியச் செய்திருக்கிறது. கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும் முக்கிய நாளாகக் கருதும் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் ஆயிரக்கணக்கானோர் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும் செயின்ட் செபஸ்டியன் ஆலயத்திலும், மட்டக்களப்பு சீயோன் ஆலயத்திலும் ஆனந்தத்தோடு கூடி ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது இருதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஆலயத்தில் நுழைந்து தங்களை மனிதவெடிகுண்டுகளாகப் பயன்படுத்தி பெரும் நாசச்செயலைச் செய்திருக்கிறார்கள். அன்று மாண்டவர்கள் எண்ணிக்கை பெரிது. அதுமட்டுமல்லாமல் மேலும் சில தீவிரவாதிகள் தலைநகரான கொழும்பு நகரின் மூன்று நட்சத்திர ஓட்டல்களையும் தாக்கி அநேகரை அழித்திருக்கிறார்கள். ஆக மொத்தம் ஒன்பது மனிதவெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எட்டுபேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் நன்கு கல்விகற்ற மேற்படிப்புப் படித்த, செல்வாக்கும் பணவசதியுமுள்ள நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள். சி.என்.என்னின் தகவலின்படி இவர்களில் இரண்டுபேர் தலைநகரான கொழும்பில் கோடீஸ்வரரான பிரபல வர்த்தகரொருவரின் மகன்களாகும்.

இன வேறுபாடு ஸ்ரீலங்காவுக்கு புதிதல்ல; மதவேறுபாடும் அங்கிருந்திராமலில்லை. கடந்த சில வருடங்களாகவே கிறிஸ்தவ சபைகள் முக்கியமாக, நாட்டின் தென்பகுதியில் சிங்கள புத்த மதத்தவர்களின் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. அத்தோடு கடந்த வருடம் இஸ்லாமிய இளைஞர்கள் புத்த ஆலயங்களில் இருந்த சிலைகளைக் கண்டிப்பிரதேசத்தில் அசிங்கப்படுத்த, அது அவர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் அந்தப் பிரதேசத்தில் பிரச்சனையை எழுப்பி ஊரடங்கு சட்டம் கொண்டுவரும்வரைப் போயிருந்தது. இருந்தபோதும் கத்தோலிக்கர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நாட்டில் என்றுமே பிரச்சனைகள் இருந்ததில்லை. இஸ்லாமியர்களும், தமிழ் இந்துக்களுக்கு சரிசமமான எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் மட்டக்களப்பில் அரசியல் சமூக வேறுபாடுகள் ஓரளவுக்கு இனங்களுக்கிடையில் இருந்திருந்தபோதும் மதவேறுபாடும், மதப்பிரச்சனைகளும் என்றுமே இருந்ததில்லை. இன்று கத்தோலிக்கர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான இந்த இஸ்லாமிய மதத்தீவிரவாதக் கோரச்செயலுக்குக் காரணம் என்ன என்ற கேள்விதான் உலகத்தையே தலைசுற்ற வைத்திருக்கிறது. அதற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க ஸ்ரீலங்காவும் பல்வேறு உலக நாட்டு இரகசிய சேவை அமைப்புகளும், மீடியாக்களும் முழுமூச்சாக தரையிறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லிவருகின்றன மீடியாக்கள். ஒன்று மட்டும் உறுதியாயிருக்கிறது, நடந்த சம்பவங்களுக்கும் ஐசிஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கும் தெளிவாகவே தொடர்பிருந்திருக்கிறது; இதை ஐசிஸும் அறிவித்திருக்கிறது. இதில் நாட்டு மக்களைக் கோபப்படவைத்து, உலக நாடுகளுக்கு பெரும் வியப்பேற்படுத்தியிருப்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உதாசீனப்போக்குதான். இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய சம்பங்கள் நாட்டில் நிகழப்போகின்றன என்ற தெளிவான இரகசியத் தகவல்களை முன்கூட்டியே பலதடவைகள் ஸ்ரீலங்கா இரகசிய சேவை அமைப்புகளுக்கு அறிவித்திருந்தபோதும் நாட்டின் அதிபர், பிரதான அமைச்சர், அமைச்சர்கள் எவருக்கும் இதுபற்றி எந்தத் தகவல்களும் தெரியாமலிருந்திருக்கின்றன; அதை அவர்களே அறிவித்திருக்கிறார்கள். இந்தளவுக்கு செய்திப்பறிமாறல் இரகசிய சேவை அமைப்புகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இல்லாமல் இருந்ததற்குக் காரணம் என்ன என்பதும் இப்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் 250க்கு மேற்பட்டோரின் சடலங்கள் புதைக்கப்பட்டு குடும்பங்களில் நெஞ்சைக்கலக்கும் கதறல்களும், கண்ணீரருவியும் பெருகியோடிக்கொண்டிருக்கிறது. 500க்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். மரணத்தொகை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்கிறது அரசு. நெஞ்சைக் கலக்கவைக்கும் இன்னொரு செய்தி, இஸ்லாமியத் தீவிரவாதிகள் இன்னும் நாட்டில் திரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும், வரும் நாட்களிலும் அவர்கள் இன்னும் ஏதாவது செய்துவிடுவார்கள் என்பதும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் அரசு அறிவித்திருப்பததுதான். அமெரிக்கா உட்பட பல நாடுகள் தங்களுடைய தூதரங்ககங்களை மூடி, தங்கள் நாட்டு மக்களுக்கு உல்லாசப்பிரயாணத் தடை ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. இதெல்லாம் ஸ்ரீலங்காவிற்கு பெரும் பொருளாதார வீழ்ச்சியையும், பின்னடைவையும் ஏற்படுத்தாமல் இருக்காது.

இஸ்லாமியத் தீவிரவாதம் ஸ்ரீலங்காவில் நுழைந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுவாக நாட்டிளுள்ள முஸ்லீம்கள் அனைவரும் இதற்கு ஆதரவளிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இருந்தபோதும் இவ்வமைப்பு எப்படியோ படித்த இளைஞர்களை இந்நாட்டிலும் ஈர்த்திருக்கிறது என்பது உண்மை. அதன்படிப் பார்க்கும்போது ஸ்ரீலங்காவின் முஸ்லீம் சமுதாயம் தங்களுடைய இளைஞர்களையும், பிள்ளைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஐசிஸ் தீவிரவாதம் மேலைத்தேயத்தைச் சேர்ந்தவர்களையும், கத்தோலிக்கர் மற்றும் கிறிஸ்தவர்களையே முக்கியமாகத் தாக்கும் நோக்கம் கொண்டது. அத்தகைய மதப்பிரச்சனை ஸ்ரீலங்காவில் இல்லாதிருந்திருந்தபோதும் அதற்கு பூசைபோட்டு ஆரம்பித்து வைத்திருக்கிறது ஸ்ரீலங்காவைச் சேர்ந்த என். டீ. ஜே இஸ்லாமிய அமைப்பு. இவர்களுடைய கோட்பாட்டின்படி இஸ்லாம் மட்டுமே நாட்டு மதமாக இருக்கவேண்டும் என்பதும், இஸ்லாமிய சாரியா சட்டம் நாட்டில் அமலாக்கப்பட வேண்டும் என்பதுதான். இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷம். ஸ்ரீலங்கா இந்தப்புதிய ஆபத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் தெரியவில்லை. அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, வந்திருக்கும் ஆபத்தின் கோரத்தன்மையை உணர்ந்து அரசியல்வாதிகள் ஒருமனப்பட்டு இதை அழிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காமல்போனால் வெகுவிரைவில் நாடு பாகிஸ்தானைப்போல மாறிவிடக்கூடும்.

ஸ்ரீலங்காவின் 21 மில்லியன் மக்கள் தொகையில், சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் முஸ்லீம்கள் 7% இருக்கிறார்கள். 1% மட்டுமேயுள்ள கத்தோலிக்க, கிறிஸ்தவ சமுதாயத்தில் கத்தோலிக்கர்களே பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். கத்தோலிக்கர்களைத் தவிர்த்த கிறிஸ்தவ சமூகம் 15 இலட்சம் மட்டுமே. இவர்களில் அனைத்துக் கிறிஸ்தவப் பிரிவினரையும் அடக்கலாம்.

இந்தளவுக்கு குறைவான தொகையினரான கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைக் குறிவைத்து ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கு ஐசிஸின் தீவிரவாத இஸ்லாமியக்கோட்பாடே காரணம் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

ஸ்ரீலங்காவில் நடந்திருக்கும் நிகழ்ச்சிகளில் இருந்து கிறிஸ்தவர்களாகிய நாம் எதைக் கற்றுக்கொள்ளுகிறோம்? என்னைப் பொறுத்தவரையில் முதலில், நிலையான மக்களுடைய சுகபலனைக் கருத்தில்கொண்டு நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் அவசியத்தைப்பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. நடந்திருக்கும் நிகழ்ச்சிகளுக்கு அதுமுக்கிய காரணமாக இருந்திருப்பது அரசநிர்வாகத்தின் உதாசீனப்போக்குதான். ரோமர் 13:1-7வரையுள்ள வசனங்கள், மற்றும் புதிய ஏற்பாட்டு வேத வசனங்கள் அரசாங்கம் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருப்பதாக வாசிக்கிறோம். அரசியல் கட்சிகள் வெவ்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருந்தபோதும், அதிக வாக்குகள் பெற்று நாட்டை ஆளும் அதிகாரத்தைப் பெறுகிறபோது எந்த நாட்டிலும் அரசும் நிர்வாகமும் சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் நிர்வகிக்கும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவர்களுடைய பணியாக இருக்கிறது. எந்த இன, மத பாகுபாடுமில்லாமல் குடிமகனுடைய உரிமைகளுக்கும், நலனுக்கும் அரசு பாதுக்காப்பளிக்க வேண்டும். இது கடவுளே ஏற்படுத்தியிருக்கும் நாட்டு நிர்வாக அமைப்பு. அத்தகைய சாதாரண சட்ட ஒழுங்கை நாட்டுக்குத் தரமுடியாத நிலையில் எந்த நாட்டு அரசும் இருக்குமானால் அது நாட்டைப்பிடித்திருக்கும் பெருந் தரித்திரம் என்றே சொல்லவேண்டும். வெனிசுவேலா, லிபியா போன்ற நாடுகளில் இன்று சட்டமும் ஒழுங்கும் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. ஸ்ரீலங்காவில் அந்தளவுக்கு அதீத பிரச்சனைகள் இல்லாதிருந்தபோதும், அது ஜனநாயக நாடாக இருந்து வருகிறபோதும், சாதாரண சட்ட ஒழுங்கை அரசுகள் தொடர்ந்தும் மக்களுக்குத் தருகின்ற நிலை இல்லாமலிருக்கின்றது. இதுவே உலகின் பல நாடுகளில் நாம் இன்று கவனிக்கின்ற உண்மை. உலகில் மிகச் சிறிய நாடாக இருக்கும் சிங்கப்பூர் என்னை எப்போதும் பிரமிக்க வைக்கின்ற ஒருநாடு. அந்நாட்டரசாங்கம் கிறிஸ்தவ அரசாக இல்லாதிருந்தபோதும் நாட்டு மக்களின் நன்மைக்கு முதலிடம் கொடுத்து பொதுவான சட்டஒழுங்கு நாட்டில் இருக்குமாறு அது எப்போதும் பார்த்துக்கொள்ளுகிறது. யாரும் எங்கும் நாட்டில் பயமின்றி எந்நேரமும் போகக்கூடிய பாதுகாப்பு அங்கிருக்கிறது. பல்வேறு இனங்கள், மதப்பிரிவுகள் நாட்டில் இருந்தபோதும் எந்தவித இன மதவேறுபாடும் இல்லாதபடி அரசு கவனித்துக்கொள்ளுகிறது. இத்தகைய பொதுவான சட்டஒழுங்குக் கட்டுப்பாட்டை நாட்டுக்குக் கொடுக்கவேண்டியதே அரசின் பணி. அத்தகைய எண்ணப்போக்குக்கொண்ட அரசும் நிர்வாகமும் ஸ்ரீலங்காவுக்குக் கிடைக்குமா? அதுவும் இந்தப் புதிய இஸ்லாமிய மதத்தீவிரவாதத்தை எதிர்கொண்டு வெற்றிகாணக்கூடிய அரசு நாட்டுக்குக் தேவை. உயர் அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கும்படி வேதம் போதிக்கிறது (1 தீமோத்தேயு 2:1-3).

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

நாட்டில் யார் நம்மை ஆண்டுகொண்டிருந்தபோதும் அவர்களுக்காக நாம் தொடர்ந்து ஜெபிக்கவேண்டும். அவர்கள் நீதியான ஆட்சியை நடத்தி நாம் அமைதலுள்ள வாழ்க்கை நடத்தத் துணைபோகும்படி ஜெபிக்கவேண்டும். ஸ்ரீலங்கா அரசநிர்வாகம் உதாசீனமான போக்கோடு இருந்திருந்தபோதும் அந்த நிலை திருத்தப்பட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்க கர்த்தர் உதவும்படி ஜெபிக்கவேண்டும். இறுதியில் கர்த்தர் மட்டுமே ஒரு நாட்டுக்கு, அதன் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க முடியும்.

இந்த சந்தர்ப்பத்தில் கிறிஸ்தவர்களுடைய கடமை என்ன? வந்திருக்கும் புதிய ஆபத்தை அவர்கள் உணரவேண்டும். இது இதுவரை கிறிஸ்தவர்கள் நாட்டில் சந்தித்திருக்கும் ஆபத்துக்களைவிடப் புதியதும், பேராபத்துமானதுமாகும். புலிகளுக்கும், அரசுக்குமிடையில் போர் நடந்த காலங்களிலும் கிறிஸ்தவர்கள் உயிரிழக்க நேர்ந்திருக்கிறது. உயிரிழப்பது என்பது அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு புதிய அனுபவமல்ல. தீவிரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் ஆபத்தானதுதான். கிறிஸ்தவத்தைக் குறிவைத்துத் தாக்கும் இந்தத் தீவிரவாதம் பேராபத்தானது. ஐசிஸ் தீவிரவாதம் மனிதத் தன்மையற்றது; ஈவுஇரக்கமில்லாமல், யார் எவர் என்று பார்க்காமல் கிறிஸ்தவர்களையும், மேலைத்தேசத்தவர்களையும் மாய்க்கும் நோக்கம் கொண்டது.  உயிரை இழக்கும் ஆபத்தைக் கிறிஸ்தவர்கள் வரலாற்றில் சந்தித்திருக்கிறார்கள். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் இதை அன்றாடம் வாழ்க்கையில் எதிர்கொள்கிறார்கள். அத்தகைய சூழ்நிலைகளில் வாழ்ந்துவராத கிறிஸ்தவர்களுக்கு இது நிச்சயம் புரிந்துகொள்ளக் கஷ்டமானதுதான். இருந்தபோதும் வேதம் இதைப்பற்றி விளக்காமலில்லை. நான் தொடர்ந்து இந்தக் காலங்களில் பிரசங்கம் செய்து வருகின்ற 1 பேதுரு நூல் இத்தகைய ஆபத்துக்கள் நிறைந்திருந்த சமுதாயத்தில் அன்றாடம் இத்தகைய ஆபத்துக்களை நிதர்சனமாக சந்தித்து வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்கே எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் நெருப்பில் எரிவதுபோன்ற துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று பேதுரு சொல்லியிருக்கிறார். திருச்சபை இந்த உலகத்தில் சிலவேளைகளில் அமைதியையும், சிலவேளைகளில் பெருந்துன்பங்களுக்கும் முகங்கொடுத்தே கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாள்வரை இருக்கப்போகின்றது. இவற்றை திருச்சபை வரலாற்றில் மாறிமாறிச் சந்திக்கப்போகின்றது. அத்தகைய துன்புறுத்தல்களை இனிவருங்காலங்களில் கிறிஸ்தவர்கள் சந்திக்க நேரலாம். வெளிப்படுத்தல் விசேஷம் அத்தகைய நிலை உருவாகலாம் என்பதை விளக்காமலில்லை. கிறிஸ்தவர்கள் எல்லா நாடுகளிலும் எதற்கும் முகங்கொடுக்க தயாராக இருக்கவேண்டும். துன்பமேயில்லாத அமைதி வாழ்க்கை திருச்சபைக்கு இந்த உலகத்தில் இருக்கப்போவதில்லை. ஆனால், எந்தத் துன்பத்தையும் தாங்கும் இருதயத்தைக் கொடுக்கும் இயேசு கிறிஸ்துவை அது தன்னில் கொண்டு எத்துன்பத்தையும் கடந்துசெல்லும். அத்தகைய வல்லமை திருச்சபைக்கிருக்கிறது. அதையே திருச்சபை வரலாறும், வேதமும் நமக்கு விளக்குகின்றன.

மெய்க் கிறிஸ்தவர்களும், மெய்க் கிறிஸ்தவ சபைகளும் இந்தத் துன்ப காலங்களில் வேதம் போதிக்கின்றபடி தங்களுடைய பக்திவிருத்திக்குரிய வாழ்க்கையிலும், சுவிசேஷப் பணியிலும் இன்னும் அதிக ஆர்வத்தைக் காட்டவேண்டும். ஒவ்வொரு நாளையும் இன்றே ஆண்டவர் வந்துவிடுவார் என்ற விதத்தில் கருத்தோடு வாழவேண்டிய கடமை நமக்கிருந்தபோதும், ஸ்ரீலங்காவிலுள்ள கிறிஸ்தவர்கள் சுவிசேஷப்பணியில் மேலும் தீவிரத்தோடு ஈடுபடவேண்டும். தீவிரத்தோடு என்று நான் சொல்லுகிறபோது அதில் கவனத்தோடும் அதேநேரம் வைராக்கியத்தோடும், ஆத்தும கரிசனையோடும் ஈடுபடுகிறதையே குறிக்கிறேன். இந்தத் மதத்தீவிரவாதம் இதோடு நின்றுபோகாமல் இன்னும் மோசமாகுமானால் (அது நிகழாமலிருக்க ஜெபிப்போம்) பலருக்கு சுவிசேஷப்பணிக்குரிய காலங்கள் 16ம் நூற்றாண்டில் இருந்ததைப்போல குறுகியதாக இருந்துவிடலாம். ஹியூ லட்டிமரைப்போல கிறிஸ்துவுக்காக உயிரைப்பறிகொடுக்க நேரிடலாம். இத்தகைய நிலைமை இன்று எல்லா நாடுகளிலுமே கிறிஸ்தவர்களை எதிர்நோக்காமலில்லை. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதும், சபைகள் தாக்கப்படுவதும், ஏன், கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதும் உலகின் பல நாடுகளில் அதிகரித்திருக்கின்றது என்பதைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சுவிசேஷப்பணி என்பது மனிதனுடைய பாவத்தில் இருந்து மனிதனுக்கு விடுதலை தரக்கூடிய கிறிஸ்துவின் அன்பின் அடிப்படையிலான பரிகாரப்பலியையே குறிப்பிடுகிறேன். தற்கால சுவிசேஷப்பிரங்கங்களும், சுவிசேஷப் பணிகளும் இதில் கவனம் செலுத்தாமல் மனிதனுடைய சரீரத்தேவையை நீக்குவதிலேயே பெருங்கவனம் செலுத்தி வருகின்றன. மனிதனுக்கு நித்திய ஜீவனையும் இரட்சிப்பையும் வழங்குவது  கிறிஸ்துவின் வல்லமையுள்ள சுவிசேஷம் மட்டுமே. அவனுடைய உடனடித்தேவை நோய் தீர்வதல்ல; பணத்தேவையல்ல; மனமாற்றமும், மறுபிறப்புமே. மறுபிறப்படையாத எவரும் நிச்சயமாகப் பரலோகம் போகப்போவதில்லை. அத்தகைய மறுபிறப்பை பாவியாகிய மனிதன் அடைவதற்கு வழிகோலும் சுவிசேஷ சத்தியத்தை அதன் அடிப்படை அம்சங்கள் தவிர்க்கப்படாமல், சுயநல நோக்கங்களுக்காக மாற்றப்படாமல் ஆணித்தரமாகவும், பரிசுத்த ஆவியின் வல்லமையோடும் பிரசங்கிக்க வேண்டியதே இக்காலங்களில் அவசியமாக இருக்கின்றது. கிறிஸ்துவை விசுவாசித்து நித்திய ஜீவனை அடைகிறவர்களுக்கே நிரந்தர விடுதலை கிடைக்கிறது. சமீபத்தில் நடந்த கொடூரமான தாக்குதல்களில் மரித்திருக்கும் மெய்க்கிறிஸ்தவர்கள் இப்போது கர்த்தரின் பிரசன்னத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய உலகத் துன்பங்களுக்கு முடிவு வந்திருக்கிறது. அவர்களுடைய உறவினர்கள் அவர்களை இழந்ததால் வருந்துகிறார்களே தவிர, பரலோகமடைந்தவர்கள் நிரந்தர சமாதானத்தையும், தேவனுடைய அன்பையும் ருசிபார்த்து ஆனந்தத்தோடு வாழ்கிறார்கள். சுவிசேஷப் பிரசங்கத்தைச் செய்கிறவர்களே! இதை மனதில் கொண்டு கர்த்தருக்கு விசுவாசமாக இருந்து சுவிசேஷத்தை அது இருக்கவேண்டிய விதத்தில் இருக்குமாறு பார்த்து அந்த ஊழியத்தில் மேலும் தீவிரத்தோடு ஈடுபடுங்கள். பாவிகள் மனந்திரும்புவதற்கான வழியைக் காட்டுங்கள். அதற்கு அவசியமான கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்யுங்கள்.

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

One thought on “மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம்?

  1. thanks for message

    Virus-free.
    http://www.avast.com

    On Fri, Apr 26, 2019 at 5:10 PM திருமறைத்தீபம் (Bible Lamp) wrote:

    > ஆர். பாலா posted: ” மானுடம் எத்தனையோ எதிரிகளை வரலாறுதோறும் சந்தித்து
    > வந்திருக்கிறது. பாவத்தின் காரணமாக மனிதன் அவலட்சணமான செயல்களைத் தொடர்ந்து
    > செய்துவந்திருக்கிறான். மானுடத்திற்கெதிரான அவனுடைய செயல்கள் அத்துமீறியவையாக
    > எந்தளவுக்கு கேடான இருதயம் கொண்டவனாக இருக்கிறான் என்பதை”
    >

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s