ஆள்பிடிக்கும் கிறிஸ்தவமா? ஆவிக்குரிய மறுபிறப்பா?

கிறிஸ்தவத்தைப்பற்றிய சரியான விளக்கத்தைக்கொண்டிராத அநேகரை நான் கிறிஸ்தவ சமுதாயத்தில் அடிக்கடி காண்கிறேன். கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக மனதில் மட்டும் கொண்டிருந்து ஆலயத்துக்கு ஆராதனைக்குப் போய்வருவதல்ல கிறிஸ்தவம். கிறிஸ்துவை நேசிக்கிற அதேநேரத்தில், மனந்திரும்புவதற்கு முன்பிருந்த சமுதாயப் பண்புகளுக்கு வக்காலத்துவாங்கி, கிறிஸ்தவம் அவற்றில் பலவற்றை நிராகரிக்கின்றதென்ற அறிவோ உணர்வோ இல்லாமல் அவற்றை வாழ்க்கையில் தொடர்வதற்குப் பெயரல்ல கிறிஸ்தவம். கிறிஸ்துதான் ஆண்டவர் என்று சொல்லிக்கொண்டு கிறிஸ்தவ வேதம் போதிக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டிராமல் நொன்டிச்சாக்குச் சொல்லிப் பெயரளவில் வாழ்வதல்ல கிறிஸ்தவம். மொத்தத்தில் சொல்லப்போனால் கிறிஸ்தவம் வெறும் சடங்கல்ல.

கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தை வெறும் சடங்காக மட்டுமே பார்க்கிறது. சீ. எஸ். ஐ கிறிஸ்தவத்திலும் அதேநிலைதான். கிறிஸ்தவத்தை வெறும் சடங்காக மட்டும் கொண்டு வாழ்கிறபோது அது நிச்சயம் உலகத்தைக் குழம்பிப்போகச் செய்யும். ஏனென்றால், கிறிஸ்தவத்தின் மெய்த்தன்மையை அதனால் கண்டுகொள்ள முடியாமல் போய்விடுகிறது. ஒரு தடவை கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தன்னைக் கிறிஸ்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். உங்கள் மதம் என்ன என்று அவர் என்னைப் பார்த்துக்கேட்டபோது, நான் கிறிஸ்தவன் என்று சொன்னேன். அவர் அதற்குப் பதிலாக, நாமிருவருமே கிறிஸ்தவர்கள் என்று பதிலளித்தார். உடனே அவரைத் திருத்தி, நான் கத்தோலிக்கன் அல்ல, கிறிஸ்தவன் என்று பதிலளித்தேன். அத்தோடு அவருக்குப் புரியும்படியாக ஒருசில வார்த்தைகளில் கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைகளை விளக்கினேன். அவருக்கு அது புரியவில்லை என்பது எனக்குத் தெரிந்தது. கத்தோலிக்க மதம் எந்தளவுக்கு உலகத்தைக் குழப்பிவைத்திருக்கிறது என்பது தெரிகிறதா?

உலகத்தால் கிறிஸ்தவத்தை மாம்சத்தில் புரிந்துகொள்ள முடியாது. அதைப்பொறுத்தளவில் கிறிஸ்துவின் பெயரை ஏதோவொருவிதத்தில் சூட்டிக்கொண்டிருப்பவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள். அதற்கு கத்தோலிக்கர்கள், வேதத்தை நிராகரித்து மாம்சத்தின் வழியில் போய்க்கொண்டிருக்கும் லிபரல் திருச்சபைகள், சுவிசேஷ கிறிஸ்தவர்கள் என்றெல்லாம் பிரித்து அடையாளங்கண்டுகொள்ளத் தெரியாது. அதனால்தான் ஸ்ரீலங்காவில் கத்தோலிக்க ஆலயங்கள் நீர்கொழும்பு என்ற பகுதியில் தாக்கப்பட்டபோது கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று அது எண்ணுவதற்குக் காரணம். அது நடந்தபின் நீர்கொழும்பில் அங்கிருந்த சிங்களவர்கள் முஸ்லீம்களைத் தாக்கியபோது அதைக் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களைத் தாக்குவதாக முடிவு கட்டியது. மாம்சத்தில் இருக்கும் உலகத்துக்கு மெய்கிறிஸ்தவத்தை மாம்சத்தில் புரிந்துகொள்ள முடியவில்லை.

கிறிஸ்தவம் அடிப்படையில் நம் வாழ்க்கையில் பெருமாற்றத்தை, அதிரடியான மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதற்கு மறுபிறப்பு என்ற பெயரிருப்பதற்குக் காரணமே அவ்வாழ்க்கை மறுபடியும் பிறக்கின்ற அடிப்படை மாற்றத்தைத் தன்னில் கொண்டிருப்பதனால்தான். அந்த அடிப்படை மாற்றம் பழையவை அனைத்தையும் அடியோடு களைந்தெறிந்து முற்றிலும் புதிய ஆவிக்குரிய வாழ்க்கையை ஒருவனில் உண்டாக்குகின்றது.

2 கொரிந்தியர் 5:17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

ஒருவனுடைய பழைய இருதயம் முழுமுற்றாக அடியோடு ஆவிக்குரியவிதத்தில் மாற்றியமைக்கப்படுகிறது. அத்தகைய மாற்றத்தைச் செய்கிறவர் பரிசுத்த ஆவியானவர்; அவரால் மட்டுமே முடிந்த, அவர் மட்டுமே செய்கின்ற செயல் அது. அதனால்தான் நாம் ஒருவன் தன்னைக் கிறிஸ்தவனாக மாற்றிக்கொள்ளவோ, வேறு எவரும் இன்னொருவரைக் கிறிஸ்தவராக மாற்றவோ முடியாதென்கிறோம்.

யோவான் 1:13
அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.

யோவான் 3:5-6
5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

அடிப்படையிலேயே புதிய மாற்றத்தை ஒருவனில் ஆவியானவர் கொண்டுவருவதால் அவன் அறிவோடும் உணர்வோடும் பழைய வாழ்க்கைக்குரிய அத்தனையையும் தன்னில் அன்றாடம் களைந்துபோடுகிறான். அவன் பாவத்தைத் தொடர்ந்து வாழ்க்கையில் செய்கிறவனாக இல்லாமலிருப்பதோடு, பழைய பஞ்சாங்கமான களைந்தெறிந்திருக்கும் புறமத சமுதாயப்பண்பாடுகளைத் தொடர்ந்து தன் வாழ்க்கையில் கொண்டிருக்கவும் இடங்கொடுக்கமாட்டான். அவனுடைய இருதயம் ஆண்டவருக்கு சொந்தமானதாக, ஆண்டவருடைய சித்தத்தை மட்டுமே எத்தனை எதிர்ப்புகள் வந்தபோதும் அவற்றிற்கு முகங்கொடுத்து தன் வாழ்வில் நிறைவேற்றுகிறவனாக இருப்பான். வேதத்தை வாசித்து எதையும் வேத அடிப்படையில் ஆராய்ந்து சிந்திக்கிறவனாக இருப்பான். அவன் இப்போது கிறிஸ்துவுக்கு அடிமை; அவன் கிறிஸ்துவின் சீடன். தன் எஜமானாகிய கிறிஸ்துவின் வார்த்தைகளை மனதிலிருத்திக்கொண்டு அவருடைய எண்ணங்களுக்கு மீறிய செயல்களுக்கு அவன் தன் வாழ்வில் இடங்கொடுக்க மாட்டான். அதுமட்டுமல்லாமல் அவருடைய சித்தத்திற்கேற்றபடி தன் வாழ்க்கையை அன்றாடம் அமைத்துக்கொண்டு அவருக்கு சாட்சியாக சமுதாயத்தில் சமுதாயம் ஆச்சரியப்படும்படியாக வாழ்ந்து வருவான். இது பரிசுத்த ஆவியைத் தன்னில் கொண்டிருந்து ஆவிக்குரிய கிறிஸ்தவன் ஆவியின் மூலம் வாழ்கின்ற நிதர்சனமான வாழ்க்கை.

மறுபிறப்படைந்த மெய்க்கிறிஸ்தவன் பூரணமானவனல்ல. அவன் பூரணத்துவத்தை அடையும் நோக்கத்துடன் (பரலோகத்தில்) அன்றாடம் ஆவியின் துணையோடு பரிசுத்தமாகுதலில் ஈடுபட வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறான். அவன் விசுவாச வாழ்க்கையில் சில வேளைகளில் தவறு செய்கிறான்; சிலவேளைகளில் விழுந்துபோகிறான்; தவறு செய்துவிட்ட குற்றவுணர்வினால் தவித்துப் போகிறான்; தன்னைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறான் என்றால் அதற்கெல்லாம் காரணம் அவன் ஆவியின் பிறப்பை அடைந்து, ஆவியானவரைத் தன்னில் கொண்டிருந்து தனக்குள் இருக்கும் பாவத்தையும் தன் பலவீனங்களையும் உணர்கிறான் என்றுதான் அர்த்தம். ஆவியின் பிறப்பை அடைந்திராத மனிதனுக்கு இத்தகைய உணர்வுகள் ஒருபோதும் ஏற்படாது. அவன் யூதாஸைப்போலவும், ஏரோது இராஜாவைப்போலவும் வருத்தப்படலாம்; ஆனால், அவனுக்கு பாவஉணர்வோ, பாவத்தில் இருந்து மனந்திரும்பவேண்டும் என்ற இருதயத்துடிப்போ இருக்காது. மறுபிறப்படைந்தவன் அன்றாடம் தனக்குள் இருக்கும் இருதயத்தின் பலவீனத்தை உணர்ந்து, அதன் சோதனைக்கு அகப்பட்டுப் பாவத்தைச் செய்துவிடாமல் இருப்பதற்கான சகல முயற்சிகளையும் ஆவியின் துணையோடு எடுத்து கர்த்தரை நெருங்கி வாழ்வான். அவன் தாழ்மையோடு அன்றாடம் மனந்திரும்பி வாழ்கின்ற வாழ்க்கையைக் கொண்டவனாக இருப்பான்.

மெய்க்கிறிஸ்தவன் மறுபிறப்படைந்ததன் விளைவாக துன்பங்களைக்குறித்த வித்தியாசமான பார்வையைக் கொண்டவனாக, அவற்றை வித்தியாசமான முறையில் எதிர்கொள்ளுகிறவனாகவும் இருப்பான். அவன் துன்பத்தை மெய்க்கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒருபகுதியாகக் கணிக்கிறான். மறுபிறப்படைந்தவுடன் அவன் முன்பனுபவித்து வந்திருந்த துன்பங்கள் தொடர்ந்தும் வாழ்வில் தொடரும் என்ற ஞானத்தைக் கொண்டிருக்கிறான். அவனில் ஏற்பட்டிருக்கிற ஆவிக்குரிய மாற்றம் தொடரும் துன்பங்களைப்பற்றிய வித்தியாசமான அறிவையும், அவற்றை அணுகும் முறையில் மாற்றத்தையும் கொண்டுவந்திருக்கிறது. இன்று நம்மத்தியில் பரவலாகக் காணப்படும் போலிக்கிறிஸ்தவம், கிறிஸ்துவை விசுவாசித்தால் எல்லாத்துன்பங்களும் மறைந்துவிடும் என்று பொய்யைப் பரப்பிவருகிறது. அதனால்தான் கிறிஸ்தவ சுவிசேஷத்தை மட்டும் அது சொல்லுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் ‘சுகமளிக்கும் ஆசீர்வாதக் கூட்டத்தை’ அதோடு சேர்த்து நடத்துகிறது. சுவிசேஷத்தை நம்பினால் துன்பங்கள், நோய்கள், தொல்லைகள் எல்லாம் உடனடியாகப் போய்விடும் என்ற பொய்யை அது நம்புவதாலேயே இம்முறையைக் கையாண்டு வருகிறது. இதேபோல்தான் ‘செழிப்புபதேசப்’ பிரசங்கிகளும் இயேசுவை விசுவாசித்தால் செல்வந்தனாகிவிடலாம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்துவருகிறார்கள். இதெல்லாம் வேதத்தில் காணப்படாத போலிப்பிரச்சாரங்கள். மெய்க்கிறிஸ்தவம் தரும் மறுபிறப்பாகிய வாழ்க்கையில் இதற்கெல்லாம் இடமில்லை. மெய்க்கிறிஸ்தவம் துன்பங்களை அகற்றுவதைவிட அவற்றைத் தாங்கி ஆவிக்குரிய பலத்தோடு கர்த்தருடைய மகிமைக்காக வாழும் வல்லமையைத் தருகிறது. எல்லாத் துன்பங்களையும் ஆவிக்குரிய ஆசீர்வாதமாக மாற்றியமைக்கிறது மெய்க்கிறிஸ்தவம். அத்துன்பங்கள் அக்கினியின் ஆக்ரோஷத்தைக் கொண்டிருந்தாலும் அதில் நடந்துபோகிற மெய்க்கிறிஸ்தவன் ஜில் என்று தண்ணிரில் நடப்பதுபோன்ற அனுபவத்தை அடைகிறான். அதற்குக் காரணம் அவனடைந்திருக்கும் புதிய வாழ்க்கையாகிய மறுபிறப்பும், அவனுக்குள் இருக்கும் ஆவியானவருமே.

இதுவரை நான் விளக்கியிருப்பது மெய்க்கிறிஸ்தவமாக இல்லாவிட்டால் 1 பேதுரு நிருபத்தில் பேதுரு எழுதியிருப்பதெல்லாமே பொய்யாகிவிடும். முதலாம் நூற்றாண்டில் உலக இன்பத்தை அனுபவிப்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு கிறிஸ்தவத்தை நிந்தித்து, எதிர்த்து, அதற்கு ஆபத்து விளைவித்து ஆண்டுவந்த ரோம இராஜ்ஜியத்தின் கீழ் கொடுமையான பல்வேறு துன்பங்களை அன்றாடம் அனுபவித்து வாழ்ந்து வந்துகொண்டிருந்த கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, அவர்களை நன்கறிந்திருந்த பேதுரு ஆலோசனை தரும்போது, எத்தனைப் பெரும் துன்பங்களை சந்தித்தபோதும் அத்துன்பங்களை ஏற்று கிறிஸ்து துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்ததுபோல் கிறிஸ்துவின் மகிமைக்காக வாழுவதோடு, அத்துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்துவின் வார்த்தைகளை மீறாமல் பின்பற்றி வாழும்படி அந்நிருபத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை அறிவுறுத்தி வருகிறார். இன்னொருவிதத்தில் கூறுவதானால், துன்பத்தை நீக்கிக்கொள்ளுவதற்காகத் தன்னைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்ப சுழ்நிலையை எதையாவது செய்து மாற்றுவதில் கவனத்தைச் செலுத்தாமல், கிறிஸ்துவைப்போல அனைத்தையும் தாங்கி இருதயத்திலும், வாழ்க்கையிலும் வேதவார்த்தைக்கேற்ற பண்புகளை மட்டும் கொண்டிருந்து கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் வாழ்க்கையைப் பலரும் பார்த்தறிந்துகொள்ளுமாறு வாழும்படிப் பேதுரு சொல்லியிருக்கிறார். அதாவது, வெளிப்புற சீர்திருத்தத்தை சமுதாயத்தில் கொண்டுவருவதில் நேரத்தை வீணாக்காமல் (புரட்சி செய்தோ, ஆட்சியைக் கவிழ்த்தோ, ஆயுதம் தாங்கியோ, திருப்பி அடித்தோ அல்லது சமூகநீதி, மனித உரிமைகள் என்று சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்காமல்), உட்புறமாக ஆவிக்குரிய சீர்திருத்தத்தைக் கொண்டிருந்து (கிறிஸ்துவின் அன்பை இதயத்தில் கொண்டிருந்து ஆவிக்குரிய கிருபையின் கனிகளை வெளிப்படுத்தி) அதை சமுதாயம் பார்த்து வியக்கும்படிச் செய்யுமாறு பேதுரு சொல்லுகிறார். அடிக்கிறவனை திருப்பி அடிக்காமல், நிந்திக்கிறவனைத் திருப்பித் தாக்காமல், தன் இருதயத்தையும், வாயையும் வேதக்கடிவாளத்தால் கட்டி தனக்கு எதிராக நடக்கின்ற கொடுமைகளையெல்லாம் ‘ஆசீர்வாதமாக’ எண்ணி ஏற்று எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்தவன் கர்த்தரை மகிமைப்படுத்துவான். (1 பேதுரு 2:13-25; 3:8-17). ஆவிக்குரியவிதமாக ஒருவனில் ஆவிக்குரிய மாற்றங்கள் இந்தவகையில் ஏற்பட்டு ஆவிக்குரிய கிரியைகளை அவன் சமுதாயத்தில் செய்கிறபோது சமுதாயம் மெய்க்கிறிஸ்தவம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளுகிறது, அத்தோடு அத்தகைய ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்துகிறவர்களின் செயல்களும் சமுதாயத்தில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஆயிரக்கணக்கான வார்த்தைகளைக்கொட்டி கிறிஸ்தவத்தைப்பற்றி அசட்டுப்பேச்சுப் பேசுகிறதைவிட ஐந்து நிமிடம் மெய்க்கிறிஸ்தவனாக வாழ்ந்து காட்டுகிறபோது அதை உலகம் நின்று நிதானித்துக் கவனிக்கிறது.

உதாரணத்துக்கு, லூக்கா 10:25-37 வரையுள்ள வசனங்களில் விளக்கப்பட்டிருக்கும் நல்ல சமாரியன் உவமையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த உவமை மூலம் இயேசு கிறிஸ்தவத்தின் மெய்த்தன்மையை விளக்குகிறார். எரிகோவுக்கு போகிற வழியில் கள்வர்களால் தாக்கப்பட்டு குற்றுயிராகக் கிடந்த மனிதனுக்கு அந்த வழியில்போன ஆசாரியனும் லேவியனும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அதற்குக் காரணம் அவர்களுடைய போலிமத வாழ்க்கையில் கர்த்தரிடம் இருக்கவேண்டிய மறுபிறப்பின் அடிப்படையிலான மெய்யான அன்போ, அந்த அன்பை சக மனிதர்களிடம் வெளிப்படுத்துகிற வாழ்க்கையோ இருக்கவில்லை. அந்தப் போலிமதச் சடங்கே அவர்கள் குற்றுயிராகக் கிடந்த மனிதனிடம் எந்த அக்கறையும் காட்டாமல் விலகிப்போக வைத்தது. அந்த வழியில் வந்த சமாரியன் வித்தியாசமானவனாக இருந்தான். அவன் குற்றுயிராகக் கிடந்த மனிதன் மேல் இரக்கங்காட்டி, அன்புகாட்டி அவனுக்குத் தேவையான அனைத்தையும் செய்துவைத்தான். இந்த உவமையின் மூலம் இயேசு மெய்யான கிறிஸ்தவம் எது என்பதை விளக்கியிருக்கிறார்.

இந்த உவமை விளக்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பார்க்கிறபோது அங்கே ஒரு நியாயசாஸ்திரி (பரிசேயர்கள் கூட்டத்தைச் சேர்ந்த நியாயப்பிரமாணத்திற்கு விளக்கங்கொடுக்கிறவர்கள்) நித்தியஜீவனை அடைய என்ன செய்யவேண்டும்? என்று இயேசுவை நோக்கிக் கேட்டான். அவனுடைய எண்ணப்படி சடங்குகளை வாழ்க்கையில் வெளிப்புறமாகப் பின்பற்றுவதே நித்தியஜீவனை அடைய வழியாயிருந்தது. அவன் இயேசுவில் குற்றம் கண்டுபிடிப்பதற்காக இதைக் கேட்டான். ஆனால், இயேசு மிகவும் ஞானத்தோடு நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறதென்று சொல் என்று கேட்டு அவனை மடக்கினார். அதற்கு அவன் நல்ல பதிலைக் கொடுத்தான். இயேசு அந்தப் பதிலை மெச்சினார். அவனுடைய பதில் பத்துக்கட்டளைகளைச் சுருக்கமாக விளக்குவதாக இருந்தது: முதலில், முழுமனதோடும் இருதயத்தோடும் கர்த்தரில் அன்பு காட்டு, இரண்டாவதாக, உன்னில் அன்புகாட்டுவதுபோல் பிறனில் அன்புகாட்டு என்பது அவனுடைய பதிலாக இருந்தது. பதிலில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அந்தப் பதிலின்படி அவன் வாழவில்லை; வாழமுடியாதவனாக இருக்கிறான் என்பதை அவன் உணராமல் இருந்தான். தான் கர்த்தர் மேல் ஆழமான அன்புசெலுத்துவதாகவும், தன்னை நேசிப்பதுபோல் மற்றவர்களை நேசிப்பதாகவும் அவன் எண்ணி வாழ்ந்துகொண்டிருந்தான். இயேசு அவனுடைய பதிலை மெச்சி, நீ சொன்னதைத் தொடர்ந்து செய் என்று சொன்னது அவனுடைய மனதை ஏதோ ஒருவிதத்தில் உறுத்தியிருக்கிறது. அதனால் அவன் மறுபடியும் தான் நீதிமான் என்று காட்டிக்கொள்ளுவதற்காக, எனக்குப் பிறன் யார்? என்று இயேசுவிடம் கேட்டான். அதற்கு பதிலளிக்கும்போதுதான் இயேசு இந்த நல்ல சமாரியன் உவ¬மையை விளக்கினார். அதை விளக்கியபின் இந்த மூன்று பேரில் (ஆசாரியன், லேவியன், சமாரியன்) எவன் பிறன், உனக்கு எப்படித் தோன்றுகிறது? என்று இயேசு கேட்டார். நியாயசாஸ்திரி அதற்குப் பதிலாக, இரக்கஞ் செய்தவனே என்றான். இயேசுவும் நீயும் போய் அப்படியே செய் என்றார். இந்த இடத்தில் யூதனான நியாயசாஸ்திரி சமாரியர்களோடு எந¢தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை என்பதை உணரவேண்டும். அவர்கள் சமாரியர்களை யூதமத எதிரிகளாகக் கணித்து வெறுத்தார்கள். இங்கே இயேசு தன் உவமையில் சமாரியனை நல்லவனாகக் காண்பிக்கிறார்.

இந்தப்பகுதியில் இருந்து எதை அறிந்துகொள்ளுகிறோம்? கர்த்தரை அறிந்திருப்பதாகவும், நேசிப்பதாகவும் எண்ணி வாழ்ந்துகொண்டிருந்த நியாயசாஸ்திரி உண்மையில் அவரை அறியவும் இல்லை; நேசிக்கும் இருதயத்தைக் கொண்டிருக்கவும் இல்லை. அவனுக்கு அன்பு காட்டுவதும், இரக்கங்காட்டுவதும் என்ன என்பது தெரியாமல் இருந்தது. இயேசு மெய்க்கிறிஸ்தவத்தை இந்தப் பகுதியில் அவனுக்கு விளக்கும்போது, மெய்க்கிறிஸ்தவனுடைய செய்கைகள், அவனுடைய வெளிப்புற வாழ்க்கை நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை வைத்தே விளக்குகிறார். சமாரியனுடைய செய்கைகளை வைத்தே கிறிஸ்தவம் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறார். சமாரியன் குற்றுயிராகக் கிடந்தவனுக்கு செய்துவைத்த செயல்கள் அவன் மனித உரிமைகள் இயக்கத்தை சேர்ந்தவனாக இருந்ததாலோ அல்லது சமூகசேவை செய்வதை வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்ததாலோ அல்ல. கிறிஸ்தவனாக இல்லாமலேயே ஒருவன் அருமையாக சமூகசேவைகள் செய்யமுடியும். உலகத்தில் அநேகர் அப்படிச் செய்கிறார்கள். இங்கே சமாரியனுடைய செயல்கள் அனைத்திற்கும் காரணம் அவன் கர்த்தரை மெய்யாக விசுவாசித்து அவருடைய அன்பை அனுபவத்தில் மறுபிறப்பின் மூலம் அடைந்து, அந்த அன்பை சுற்றி இருப்பவர்களிடம் தன்னலம் இல்லாமல் சுயமாக வெளிப்படுத்துகிறவனாக இருந்ததுதான். சமாரியனுடைய செயல்களுக்கெல்லாம் காரணம் அவனுக்கு கர்த்தரிடம் இருந்த மெய்விசுவாசமே. இயேசு அதை வெளிப்படையாக விளக்காமல் சமாரியனுடைய செயல்களுக்குக்கெல்லாம் அதுவே காரணமாக விளக்குகிறார்.

மெய்க்கிறிஸ்தவ அனுபவம் சமாரியனில் இருந்ததுபோல ஒவ்வொருவருடைய அகவாழ்க்கையை மட்டுமன்றி புறவாழ்க்கையையும் மாற்றும். மறுபிறப்பாகிற அனுபவத்தை அகத்தோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. விஷம் உள்ளே போய்விட்டால் எப்படி முழுச்சரீரத்தையும் பாதிக்குமோ அதேபோல் மறுபிறப்பு இருதயத்தில் நிகழ்ந்துவிட்டால் அது முழு மனிதனையும், அவனுடைய இருதயம், அதிலிருந்து புறப்படும் அவனுடைய சிந்தனைகள், செயல்கள் அனைத்தையும் முற்றாக மாற்றும். சமாரியனில் இதையே காண்கிறோம். நியாயசாஸ்திரியின் இருதயம் மறுபிறப்பை அடையாததாக இருந்ததால் அவனால் வெளிப்புறமாக ஜீவனில்லாத சடங்குகளை மட்டுமே தன்னலத்தோடு செய்யமுடிந்தது; அதற்குமேல் அவனால் உயரமுடியவில்லை.

இதையெல்லாம் நான் விளக்குவதற்குக் காரணம் மெய்க்கிறிஸ்தவர்கள் சமாரியனைப்போல கர்த்தரை நேசித்து அந்த நேசத்தின் காரணமாக எந்த விளம்பரத்தையும் நாடாமல், ஒரு கை செய்வதை மற்றக்கை அறியாதவகையில் வாழ்க்கையில் நற்கிரியைகளை சமூதாயத்தில் செய்துவருவார்கள். மறுபிறப்பாகிய ஆவியின் அனுபவம் அவர்களை அடியோடுமாற்றி அத்தகைய வாழ்க்கையை வாழவைக்கிறது. இந்த ஆவிக்குரிய வாழ்க்கையையே கிறிஸ்தவம் என்று வேதம் சொல்லுகிறது. இந்த ஆவிக்குரிய புரட்சிகரமான வாழ்க்கையை வாழும் வல்லமையைத் தருவதே ஆவிக்குரிய மறுபிறப்பு. இந்த வாழ்க்கைக்குப் புறம்பான அனைத்தும் உலகத்தைச் சார்ந்த, சாத்தானுக்குரிய போலிச் சமுதாய வாழ்க்கை.

இதை வாசிக்கும்போதே சிலர் இம்மாதிரியான வாழ்க்கையெல்லாம் இந்தக் காலத்தில் சரிப்பட்டு வருமா? என்று கேள்வி கேட்பார்கள். வேறுசிலர், இதெல்லாம் பரலோகத்தில் மட்டுந்தான் வாழக்கூடிய வாழ்க்கை என்று எகத்தாளத்துடன் சொல்லுவார்கள். இத்தகைய, துன்பங்களைத் தலைமேல் சுமந்து வாழும் வாழ்க்கையை அவர்களால் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. இது கற்பனையான வாழ்க்கை என்று அவர்கள் முடிவுகட்டுகிறார்கள். இவர்கள் இப்படி நடந்துகொள்வதற்குக் காரணம் வேதம் போதிக்கும் கிறிஸ்தவத்தைப்பற்றிய நல்லறிவையும், அதன் அடிப்படையிலான அனுபவத்தையும் அடைந்திராததுதான். நம்மினத்தில் பெரும்பாலும் மறுபிறப்பு பற்றிய மெய்யான போதனைகள் சபைகள் தோறும் குறைவு. அத்தோடு சுவிசேஷம் சொல்லுகிற 99% சுவிசேஷ பிரசங்கிகள் மனிதன் தன்னை எப்படியாவது ஆவிக்குரிய முறையில் மாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சுவிசேஷம் சொல்லுகிறார்கள். இதனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று வாயளவில் சொல்லுகிற எல்லோருக்கும் அவர்கள் ஞானஸ்நானத்தைக் கொடுத்து கிறிஸ்தவர்கள் என்று அறிவித்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மெய்யான மறுபிறப்பாகிய அனுபவத்தை ஆவியானவர் மூலம் அடைந்திராததால் புறத்தில் கிறிஸ்தவர்களைப்போல வாழமுயற்சிக்கிறார்களே தவிர அகத்தில் ஆவிக்குரிய அனுபவமும் வல்லமையும் இல்லாமல் பாவத்தில் தொடர்ந்தும் நிலைத்திருந்து பாவத்தை விடமுடியாமல் தவிப்போடு வாழ்கிறார்கள். இவர்களால் வேதம்போதிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையை ஒருபோதும் வாழமுடியாது; வேத சத்தியங்களின் மெய்பொருளை உணரவும் முடியாது.

மெய்க்கிறிஸ்தவத்தை நம்மினத்தில் காணவேண்டுமா? முதலில், கூடுகின்ற கூட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவ விசுவாசத்தை விளக்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். கூட்டம் எதற்குவேண்டுமானாலும் எப்போதும் கூடும். கொஞ்சம் அரிசி, பருப்பு கிடைக்கும் என்றாலே நம்மினத்தில் கூட்டம் தாங்கமுடியாதளவுக்குக் கூடிவிடும். இன்று சுவிசேஷ பிரசங்கிகள் அரிசி, பருப்புக்குப் பதிலாக சரீரசுகமளிப்பதாக அறிவிப்புகொடுக்கிறார்கள். அதை நம்பி வீணாய்ப்போகிறது கூடுகிறகூட்டம். ஒரு தடவை ஒரு போதகர் என்னைப் பிரசங்கிக்க வைத்து பெரிய கூட்டம் நடத்த அழைத்தார். அதுபற்றி நான் மேலும் துருவித் துருவி விசாரித்தபோது, அவர் அந்தக் கூட்டத்திற்கு சுகமளிப்பு ஆசீர்வாதக் கூட்டம் என்று நோட்டீஸ் அடிக்க அனுமதி கேட்டார். அத்தோடு கூட்டத்தில் குறைந்தது மூன்று தடவையாவது காணிக்கை எடுக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார் என்று அறிந்துகொண்டேன். இதெல்லாம் எனக்குப் பிடிக்காது, சுவிசேஷத்தை சொல்ல மட்டும் கூட்டம் நடத்துவதானால் என்னோடு பேசுங்கள் என்று அவரிடம் சொல்லி அனுப்பிவிட்டேன். இதுதான் இன்று நடைமுறையில் இருந்துவரும் நம்மினத்து கிறிஸ்தவ ஊழியம். வேறுபலர் அவிசுவாசிகளின் தேவைகளை முன்னிலைப்படுத்தி பணத்தையும், பொருளையும் வாரிவிட்டு ஆள் சேர்க்கிறார்கள். கேட்டால் சமூகசேவை என்று பதில்கிடைக்கிறது. இதெல்லாம் எதில் போய் முடிகிறது தெரியுமா? மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தின் தன்மையை ஒருவன் அறிந்துகொள்ள முடியாதபடி அதற்கு வேலிபோட்டுத் தடுத்து விடுகிறது. உலக இச்சையோடு சரீரத்தேவைக்காக வருகிற எவருக்கும் ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை இருக்கவழியில்லை. நடந்துகொண்டிருக்கின்ற, ஆண்டவருக்கு ‘ஆள்பிடிக்கிற’ வியாபாரப்பணி தொடர்கிறவரை ஆவிக்குரிய ஆத்மீக மறுபிறப்பை விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுதொகையினரில் மட்டுமே நம்மினத்தில் காணமுடியும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s