கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வது பற்றிய விஷயத்தில் அநேகருக்கு பிரச்சனை இருக்கிறதை நான் உணர்கிறேன். பெரும்பாலானவர்கள் இதை உணர்ச்சி வசப்படுவதோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். கிறிஸ்தவ விசுவாசம் நிச்சயம் மனித உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது. கிறிஸ்து தருகின்ற ஆத்மீக விடுதலை நம்மை முழுமையாகவே பாதிக்கிறது. விசுவாசத்தை அடைகிறவர்களுடைய உணர்வுகளும் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறவையாக மாறுகின்றன. ஆகவே, மனித உணர்ச்சிகளுக்கும் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வதற்கும் தொடர்பில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இருந்தபோதும் உணர்ச்சிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, கர்த்தரின் பிரசன்னத்தை ஒருவர் உணர்கிறாரா, இல்லையா என்பதை தீர்மானித்துவிட முடியாது. உணர்ச்சிகளை மட்டும் வைத்து ஒருவருக்கு விசுவாசம் இருக்கிறதா, இல்லையா என்பதையும் தீர்மானித்துவிட முடியாது.
நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டு, உணர்ச்சிகளின் அடிப்படையில் எதையும் தீர்மானிக்கும் காலமாக இருந்து வருகிறது. இது பெரிய ஆபத்து! மற்றவர்களுடைய மனதைப் புண்படுத்தக்கூடாது என்பதை அடிப்படையாக வைத்தே ஒன்று உண்மையா, இல்லையா என்பதை அது தீர்மானிக்கிறது. சமீபத்தில் இஸ்ரேல் பாலாவு என்ற ஆஸ்திரேலிய ரக்பி விளையாட்டு வீரன் தன்னினச் சேர்க்கையாளர்கள் நரகத்திற்கே போவார்கள் என்று வேதம் சொல்லுகிறது என்று தன்னுடைய இன்ஸ்டகிரேம் பதிவில் எழுதியதால் அது தன்னினச்சேர்க்கையாளர்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி ஆஸ்திரேலிய ரக்பி அமைப்பு இஸ்ரேல் பாலாவுவை அந்த விளையாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலக்கியிருக்கிறார்கள். இஸ்ரேல் பாலாவு இப்படிச் சொல்லியிருக்கலாமா, இல்லையா என்பது இன்னொரு விஷயம். ஆனால், இந்த விஷயத்தில் தன்னினச் சேர்க்கையாளர்களின் உணர்வுகள் புண்படுகின்றன என்பதன் அடிப்படையிலேயே இஸ்ரேல் பாலாவுக்கு எதிரான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே போஸ்ட்மொடர்ன் (Postmodern) சமுதாயத்தின் எண்ணப்போக்கு; எது உண்மையென்று ஆராய்ந்து அந்த உண்மைக்கு மதிப்புக்கொடுப்பதில்லை. தனியொருவரின் உணர்வுகளையே போஸ்ட்மொடர்ன் சமுதாயம் உண்மையின் இடத்தில் அமர்த்தியிருக்கிறது.
கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே குழுக்கள் மத்தியில் அதீத உணர்ச்சிகளுக்கே எப்போதும் முதலிடம் கொடுக்கப்படுகிறது. அது இந்தக் குழுக்கள் விடும் பெரும் தவறு. இவர்களே கர்த்தரின் பிரசன்னத்தை உணருகின்ற விஷயத்தில் உணர்ச்சிகளுக்கு மட்டும் முதலிடம் கொடுக்கிறார்கள். இவர்களில் ஒருவரோடு இது பற்றிப் பேசிப்பார்த்தால் அவர்களுடைய விளக்கம் பின்வரும் வகையில் அமையும்: ‘இன்றைக்கு ஆராதனையில் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்ந்தேன், பாடல்களும், இசையும், ஜெபங்களும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன’ என்று சொல்லுவார்கள். இவர்கள் சொல்வதன் பொருள் என்ன தெரியுமா? ஆராதனையில் பயன்படுத்தப்பட்ட விஷயங்கள் என் உணர்ச்சிகளைப் பாதித்து என்னைச் சந்தோஷப்படுத்தியது அல்லது புல்லரிக்கவைத்து கர்த்தருடைய பிரசன்னத்தை உணரவைத்தன என்பதுதான். இவர்கள் தங்களுக்குள் உருவாகிய அதீத உணர்வுகளை கர்த்தரின் பிரசன்னத்திற்கான அடையாளம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
கர்த்தரின் பிரசன்னம்
கர்த்தரின் பிரசன்னம் என்பது என்ன? என்பதை முதலில் சிந்திப்போம். அது கர்த்தர் மனிதன் அறிந்துகொள்ளும்படி அல்லது உணரும்படி தன்னை வெளிப்படுத்தும் அனுபவம். இதைக் கர்த்தர் பழைய ஏற்பாட்டில் இருந்து கிறிஸ்து இந்த உலகிற்கு வந்து வாழ்ந்து மரிக்கும்வரை பல்வேறு விதங்களில் செய்திருக்கிறார். இதையே எபிரெயர் 1:1-2 வரையுள்ள வசனங்கள் சுருக்கமாக விளக்குகின்றன.
1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், 2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.
இந்த வசனங்களில் ‘பூர்வகாலங்கள்’ என்பது சிருஷ்டியில் இருந்து வந்திருந்த பழைய ஏற்பாட்டுக் காலங்கள். அந்தக் காலங்களில் தேவன் தன்னை வெவ்வேறு விதங்களிலும், அதற்குப் பின் தீர்க்கதரிசிகள் மூலமாகவும் முன்னோர்களுக்கு வெளிப்படுத்தினார் (திருவுளம்) என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர். ‘பங்குபங்காகவும் வகைவகையாகவும்’ என்ற வார்த்தைப்பிரயோகங்கள் தேவன் தானே மனிதன் முன் தோன்றியது, தேவதூதர்கள் மூலம் அவர்களோடு பேசியது, சீனாய் மலையில் மனிதன் கண்களுக்குப் புலப்படாமல் அவன் கேட்கும்படி (மோசேயுடன்) மட்டும் பேசியது போன்ற அவருடைய பல்வேறுவித நடவடிக்கைகள் மூலம் மனிதன் தன்னை அறிந்துகொள்ளும்படி வெளிப்படுத்திய முறைமைகளைக் குறிக்கின்றன. இவ்வழிகளிலெல்லாம் தன்னை ஆதியிலிருந்து வெளிப்படுத்தி வந்திருந்த தேவன் இறுதியில் தன்னுடைய ஒரே குமாரன் மூலமாகத் தன்னை வெளிப்படுத்தினார் என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர். அதாவது, பழைய வழிகளிலெல்லாம் தன்னை வெளிப்படுத்தி வந்திருந்த தேவன், கடைசிக்காலங்களின் ஒருபகுதியான முதல் நூற்றாண்டில் தன்னுடைய குமாரனும் தேவனுமாகிய இயேசு கிறிஸ்து மூலம் தன்னை வெளிப்படுத்தினார் என்பதே இதற்குப் பொருள். இந்த வழிகளின் மூலம் மனிதன் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்ந்திருந்தான்.
எபிரெயருக்கு எழுதியவரின் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கும்போது கர்த்தர் மனிதன் அறிந்துகொள்ளும்படி தன்னை வெளிப்படுத்தியிருந்த வழிகளெல்லாம், அவர் யார் என்பதையும் அவருடைய சித்தம் என்ன என்பதையும் மனிதன் தெளிவாகத் தெரிந்துகொள்ள கர்த்தர் பயன்படுத்தியிருந்த வழிகள் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். அதுவே இந்த வசனங்களில் நாம் கவனிக்க வேண்டிய உண்மை. மனிதன் தன்னைத் தெளிவாக அறிந்துகொள்ளுவதற்காகவே கர்த்தர் தன்னுடைய ஒரே குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பிவைத்து அவர் மூலமாக மனிதனோடு பேசினார். இயேசு தன்னுடைய போதனைகளின் மூலம் மனிதர்கள் தன்னை அறிந்துகொண்டு விசுவாசித்து வாழ வழி செய்தார். இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தபின் கர்த்தர் மனிதனுக்கு, அவன் தன்னை அறிந்து விசுவாசித்து உணரும்படிச் செய்யும் வழியில் மாற்றங்கள் ஏற்பட்டன. அதாவது கர்த்தரின் வெளிப்படுத்தல் கிறிஸ்துவின் வருகைக்குப் பின் அவருடைய வார்த்தைகளின் மூலமாகவே இருக்கும்படியாக கர்த்தர் தீர்மானித்தார். அப்போஸ்தலர்களுடைய காலத்திற்குப் பின் கர்த்தரின் வெளிப்படுத்தல் நிறைவுற்று அவருடைய சித்தம் முழுமையாக வேதத்தில் பதிந்திருக்கும்படி கர்த்தர் 66 வேத நூல்களை மனிதனுக்குத் தந்தார். இந்த நூல்கள் மட்டுமே இன்று கர்த்தரின் வெளிப்படுத்தலாக, கர்த்தர் மனிதனுக்கு தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்தும் சாதனமாக, மனிதன் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்ந்துகொள்ள உதவும் கருவியாக இருந்துவருகின்றன.
இதுவரை பார்த்து வந்திருக்கும் வேத விபரங்களில் இருந்து, கர்த்தரின் பிரசன்னத்தை நாம் அறிந்துகொள்ள ஆதியில் இருந்து கர்த்தர் பல முறைகளைப் பயன்படுத்தி வந்திருந்த போதும், இந்தக் கடைசிக் காலங்களில் வேதத்தின் மூலம் மட்டுமே அதைச் செய்து வருகிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. கர்த்தர் தன் பிரசன்னத்தை மனிதன் அறிந்துகொள்ளச் செய்து வந்திருந்த ஆதி முறைகளை இக்கடைசிக்காலங்களில் அவர் செய்வதில்லை; அதற்குக் காரணம் அவரால் அவற்றைச் செய்ய முடியாது என்பதனால் அல்ல, அவரே அவற்றை நிறுத்திக்கொண்டிருக்கிறார் என்பதுதான். அது மட்டுமல்லாமல் அவருடைய பிரசன்னத்தை நாம் அறியவும் உணரவும் ஒரே வழியாக அவர் வேதத்தை மட்டுமே பயன்படுத்தத் தீர்மானித்திருக்கிறார் என்பதையும் நாம் உணர்வது அவசியம்.
கர்த்தரை நான் கடற்கரையில் பார்த்தேன், கர்த்தர் நான் வைத்திருந்த இயேசு படத்தின் மூலமோ, சிலுவையின் மூலமோ என்னோடு பேசினார், நான் பரலோகம் போய் தரிசனத்தில் கர்த்தரை சந்தித்தேன், கர்த்தர் என் பக்கத்தில் வந்து நின்றார் என்ற பிதற்றல்களுக்கெல்லாம் இன்று வழியில்லாதபடி கர்த்தரின் பூரணமான வேதம் இந்த அசட்டுத்தனமான பேச்சுக்களையெல்லாம் நிராகரிக்கிறது. இந்த முறையில் சாட்சிகள் கொடுத்துவருகிறவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுவதோடு பிறரையும் ஏமாற்றுகிறார்களே தவிர அவர்கள் பக்கம் உண்மையில்லை. வேதமே இன்றைக்கு மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தையும், கிறிஸ்தவ வாழ்க்கையையும், சகலவித கிறிஸ்தவ அனுபவங்களையும் ஆராய்ந்து எது உண்மை என்று தீர்மானிக்கின்ற ஆணித்தரமான அதிகாரத்தைத் தன்னில் கொண்ட சத்திய வேதமாக இருக்கின்றது. வேத போதனைகளின் அடிப்படையில் அமையாத எந்த விசுவாசமும், எந்த அனுபவமும் மெய்யான கிறிஸ்தவ அனுபவமாக இருக்க வழியில்லை. வேதம் போதிக்கும் இந்தப் போதனை நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டு வருகிறது. கர்த்தரின் வேதத்தைப் போக்குக்குப் பயன்படுத்துவதுபோல் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு அது போதிக்கும் அனைத்துப் போதனைகளுக்கும் முரணான வழியில் கர்த்தரின் பிரசன்னத்தை அறிய முயற்சி செய்துகொண்டிருக்கிறது நம்மினத்து போலிக் கிறிஸ்தவம். உருவங்கள் மூலமும், படங்கள் மூலமும், காட்சிகள் மூலமும், வெறும் உணர்ச்சிகள் மூலமும் கர்த்தர் தன் பிரசன்னத்தை அறியச் செய்வதில்லை என்பதை அது உணர மறுக்கிறது. இந்த விஷயத்தில் வேதபோதனையை நிராகரிப்பது கர்த்தரையே நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும்.
கர்த்தரின் பிரசன்னத்தை எப்படி உணர்வது?
கர்த்தரின் பிரசன்னத்தை அறியவும், உணரவும் என்ன செய்யவேண்டும்? முதலில், ஒருவர் கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசிக்க வேண்டும். கிறிஸ்துவில் விசுவாசம் இல்லாதவர்களுக்கு கர்த்தரின் பிரசன்னத்தை அறிய வழியில்லை. சமீபத்தில் ஒரு கத்தோலிக்க ஸ்திரீக்கு இதுவே நான் சொன்ன ஆலோசனை. அவருக்கு கிறிஸ்துவில் எவ்வளவோ ஆர்வமிருந்தது; ஜெபிக்கவும் செய்கிறார்; வேத வசனங்களை மனனமும் செய்திருக்கிறார். ஆனால், இன்னும் கிறிஸ்துவை மட்டுமே இரட்சிப்பிற்காக விசுவாசித்து திருமுழுக்கைப் பெறவில்லை. முழுமுற்றாக கிறிஸ்துவில் நாம் விசுவாசம் வைக்காதபோது ஆண்டவரின் பிரசன்னத்திற்கு நம் வாழ்வில் இடமில்லை. இரட்சிப்பு அவரிடம் இருந்தே வருகிறது. பழைய ஏற்பாட்டு போதகனான நிக்கொதேமுவுக்கும் அதுவே பதில்; பத்துக்கட்டளைகளுக்குப் பெருமதிப்புக்கொடுத்து வாழ்ந்து வந்திருந்த பணக்கார யூத வாலிபனுக்கும் அதுவே பதில்; யெரொபெயாம் வழியில் போய் கடவுளை ஆராதனை செய்த சமாரியப்பெண்ணுக்கும் அதுவே பதில்; ஒழுக்கங்கெட்டவள் என்று அறிவிக்கப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படும் நிலையில் இருந்த பாவியான பெண்ணுக்கும் அதுவே பதில். கிறிஸ்து தரும் மாபெரும் இரட்சிப்பை அவர் மூலம் இலவசமாகப் பெற்று அவருடைய கட்டளைகளைத் தவறாமல் பின்பற்றி வாழ்கிறவர்கள் மட்டுமே அவருடைய பிரசன்னத்தை அன்றாடம் வாழ்க்கையில் அறிந்துணர முடியும்.
கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வது ஒரு ஆத்மீக அனுபவம்; ஆவிக்குரிய அனுபவம். கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் அனுபவம். மறுபிறப்பாகிய ஆவிக்குரிய செயலின் மூலம் ஆவியானவரைப் பெற்று கிறிஸ்துவுக்காக வாழ்கிறவர்கள் அனுபவிக்கும் அனுபவம். இதை அவர்கள் எந்தவகையில் அனுபவிக்கிறார்கள் என்பதை இனி ஆராய்வோம். ஏற்கனவே நான் விளக்கியுள்ளபடி இந்தக் கடைசிக்காலங்களில் (கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரை) கர்த்தர் சரீரபூர்வமாக எவருக்கும் நேரடியாகக் காட்சியளிப்பதில்லை. அவர் தூதர்கள் மூலமோ அல்லது மனிதர்களைப் பயன்படுத்தியோ எவரோடும் தொடர்புகொள்வதில்லை. அவர் மோசேயுடன் பேசியதுபோல் எவருடனும் இன்று பேசுவதில்லை. இதையெல்லாம் ஆதியில் இருந்து அவர் செய்திருந்ததற்குக் காரணம் தன்னுடைய சித்தத்தை மனிதனுக்கு வெளிப்படுத்தவே. இன்றைக்கு அவருடைய சித்தமனைத்தும் தெளிவாக வேதத்தில் பதியப்பட்டு தரப்பட்டிருப்பதால் கர்த்தர் முன்பு செய்ததுபோல் மனிதனோடு தொடர்புகொள்ளும் அவசியமில்லாமல் போய்விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பாரிஸில் நோட்டர்டாம் கெதீட்ரல் எரிந்து அதன் கூரை அழிவுற்றது. இன்றைய செய்தியில் வாசித்தேன், கெதீட்ரல் எரிகின்ற நெருப்பின் மத்தியில் ஒருவர் இயேசுவின் உருவத்தைப் பார்த்ததாக சொல்லியிருக்கிறார். அந்த மனிதனுடைய சென்டிமென்டல் மனப்பான்மை எரிகின்ற நெருப்பின் தோற்றத்தின் விதத்தைப் பார்த்து கற்பனையாக இயேசுவின் தோற்றமாக எண்ணவைத்திருக்கிறது. உண்மையில் நாம் படங்களில் காணும்விதத்தில் இயேசு இருந்ததாக எவரும் நிரூபிக்க முடியாது. இதெல்லாம் சிலைவணக்கப் பண்பாட்டில் இருந்து இன்றுவரை தொடர்ந்துவரும் கர்த்தருக்குப் பிடிக்காத செயல்கள்.
கர்த்தரின் பிரசன்னத்தை உணரும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய சொந்தக் கற்பனைகளை ஒதுக்கிவைத்துவிட்டு வேதத்தை ஆராய்வது அவசியம். கர்த்தரின் பிரசன்னம் என்கிறபோது நாம் காட்சியையோ, காதில் கேட்கும் ஒலியையோ, தரிசனத்தையோ, கனவையோ குறித்துப் பேசவில்லை. இதெல்லாம் நிகழ்ந்த காலங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. இன்றைக்கு கர்த்தரின் பிரசன்னத்தை நாம் அறிந்துகொள்ளுவதற்கு இவைகள் அல்ல வழிகள். அப்படியானால் எவை அதற்கு வழிகள்?
கர்த்தர் இன்று தன்னுடைய பிரசன்னத்தைத் தன்னுடைய மக்களுக்கு திருநியமங்கள் மூலமே அறிந்துகொள்ள வழிசெய்கிறார். திருநியமங்கள் என்று நாம் சொல்வது கர்த்தரே தன்னுடைய வார்த்தையில் நாம் பயன்படுத்தும்படிக் கட்டளையிட்டு நியமித்திருக்கும் நியமங்களாகும். இவை திருநியமங்கள் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இவற்றின் மூலம் நாம் கர்த்தரின் கிருபையை அடைவதால்தான். கர்த்தர் தன்னுடைய மக்களுக்கு நித்தமும் தன்னுடைய கிருபையைத் தந்து போஷிக்கிறார். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். (யோவான் 1:16)
இந்தத் திருநியமங்கள் மூலம் கர்த்தர் புதிய வெளிப்படுத்தல்களைத் தருவதில்லை; புதிய அனுபவங்களைத் தருவதில்லை. இவற்றின் மூலம் கர்த்தர் தன்னுடைய பிரசன்னத்தை நாம் உணரும்படிச் செய்கிறார். ஏற்கனவே கிருபையின் மூலம் நாம் அடைந்திருக்கும் இரட்சிப்பின் அநேக ஆசீர்வாதங்களில் ஒன்றே கர்த்தரின் பிரசன்னத்தை நாம் உணரக்கூடிய ஆத்மீக அனுபவமாகும். கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாக நம்மில் ஜீவிக்கிறார் என்பதும், கிறிஸ்து நமக்குள் இருக்கிறார் என்பதும் ஆணித்தரமான சத்தியங்கள். இருந்தபோதும் இவற்றிற்கெல்லாம் இன்னும் ஒருபடி மேலே சென்று நம்முடைய அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையில் தம்மோடு நாம் உறவாடும்படியும், அசாதாரண காலங்களான ஓய்வுநாள் ஆராதனை மற்றும் சபைக்கூட்டங்களில் நாம் கூடிவருகின்றவேளை தம்முடைய விசேஷ பிரசன்னத்தைக் கர்த்தர் நாம் உணரச் செய்கிறார். இதற்காக அவர் பயன்படுத்துகின்ற சாதனங்களே திருநியமங்கள்.
வேதவார்த்தைகள்
கர்த்தருடைய பிரசன்னத்தை நாம் உணரத் துணைபுரியும் திருநியமங்களில் ஒன்று அவருடைய வார்த்தை. அதாவது, வேதம் அல்லது வேதாகமம். இது எந்த வகையில் நமக்கு கர்த்தரின் பிரசன்னத்தை உணர உதவுகிறது? இதன் மூலமே இன்று கர்த்தர் தன்னுடைய சித்தத்தை எழுத்தில் வடித்துத் தந்திருப்பதால் அதன் மூலமாக கர்த்தர் நம்மோடு பேசுகிறார் என்று விளக்குகிறது வேதம். வேத வார்த்தைகளை நாம் சிந்தித்து ஆராய்ந்து வாசித்துப் படிக்கிறபோது, அதன் மெய்ப்பொருளை விளங்கி உணருகிறபோது, அது வெளிப்படுத்தும் கர்த்தரைப் பற்றிய சத்தியங்கள் நம் உள்ளத்தில் ஆத்மீக உணர்வுகளைக் கிளறிவிடுகின்றபோது கர்த்தரின் பேச்சை நாம் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. சில வேளைகளில் வேதவார்த்தைகள் நமக்கு ஆறுதலைக் கொடுக்கும், ஆனந்தத்தைத் தரும், அறிவுரை செய்யும். சில வேளைகளில் அவ்வார்த்தைகள் நம்முடைய குறைபாடுகளையும், பாவங்களையும் கண்டித்து உணர்த்தும், திருந்துகிற வழியைக் காண்பிக்கும். இதையெல்லாம் வேதவார்த்தைகளின் ஊடாகப் பரிசுத்த ஆவியானவரின் மூலமாகக் கர்த்தர் நம்மோடு பேசி நம்மில் செய்யும் கிருபையின் செயல்கள். இவையெல்லாம் நம்மில் நிகழ்கிறபோது நாம் கர்த்தரோடு உறவாடுகிறோம், அவருடைய பிரசன்னத்தை உணர்கிறோம். அத்தோடு ஓய்வுநாள் ஆராதனையின் ஒரு பகுதியாக வேதவார்த்தைகளை வாசிக்கும்படி வேதம் அறிவுறுத்துகிறது. பழைய ஏற்பாட்டில் இருந்தும் புதிய ஏற்பாட்டில் இருந்தும் தொடர்ச்சியாக வேதம் ஆராதனையின் ஒரு பகுதியாக ஆத்துமாக்கள் அனைவரும் கேட்கும்படி வாசிக்கப்பட வேண்டும். வாசிக்கப்படும் பகுதிக்கு மிகச்சுருக்கமான ஒருவிளக்கத்தை மட்டுமே கொடுத்துவிட்டு வாசிக்கத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பகுதி தெளிவாக வாசிக்கப்பட வேண்டும். இதை நியமித்திருப்பது கர்த்தரே. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? முழு சபையும் பிரசங்கத்தின்போது மட்டுமல்லாமல் வேதவாசிப்பின்போதும் கர்த்தரின் சத்தத்தைக் கேட்பதோடு அவருடைய வல்லமையான பிரசன்னத்தையும் உணர வேண்டும் என்பதால்தான்.
கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்வது என்பது வெறும் மனித உணர்ச்சிகளோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல என்பது இப்போது புரிகிறதா? அதற்கு வேதமாகிய ஊடகம் அவசியமாக இருக்கிறது; அதன் மூலம் ஆவியானவர் நம்மோடு பேசி வேதவார்த்தைகளை நாம் விளங்கிக்கொள்ளும்படி செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது. இதிலிருந்து கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வதில் நம்முடைய மூளைக்கும் அறிவுக்கும் இருக்கும் பிரிக்கமுடியாத அவசியமான தொடர்பையும் கவனியுங்கள். கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வது நமது புத்திக்கெட்டாத விஷயமாக, அறிவுபூர்வமாக விளக்கமுடியாத விஷயமாகப் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். புத்திக்கெட்டாத விஷயங்களுக்கும் மெய்யான கிறிஸ்தவ ஆத்மீக அனுபவங்களுக்கும் ஒருபோதும் தொடர்பிருந்ததில்லை. கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்வது என்பது வெறும் உணர்ச்சியல்ல; அது அறிவுபூர்வமான ஆத்மீக உணர்வு. அதாவது வேத உண்மைகள் நம் இருதயத்தில் ஏற்படுத்துகின்ற அறிவுபூர்வமான ஆத்மீக உணர்வுகளும், அந்த உணர்வுகளுக்கேற்ற முறையில் நாம் ஆத்மீகக் கிரியைகளைச் செய்கிறபோது நம்மோடு கர்த்தர் உறவாடித் தம் பிரசன்னத்தை உணர வைக்கிறார்.
வேத அறிவோடு, நம்மில் ஜீவிக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரே நம்முடைய அனைத்து பரிசுத்தமாக்குதலுக்கும் காரணமாக இருக்கிறார். கர்த்தருடைய பிரசன்னத்தை நாம் அறியவும், உணரவும் முடிவதில் அவருக்குப் பெரும்பங்கிருக்கிறது. வேதவார்த்தைகள் நம்மில் ஆத்மீகரீதியில் பதியவும், அதில் நாம் ஆனந்திக்கவும் அவரே காரணமாக இருக்கிறார். அத்தோடு நம்மில் ஏற்பட்டிருக்கும் மறுபிறப்பின் அனுபவமும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதுபற்றி ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். இவையனைத்தும் நாம் கர்த்தரின் பிரசன்னத்தை அறிந்துணரக் காரணமாக இருக்கின்றன. இதெல்லாம் நாம் கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்து ஆவிக்குரிய உணர்வுகளை நாம் அடையவும், அவற்றைப் பேச்சிலும், ஜெபத்திலும், நாம் செய்யும் செயல்களின் மூலம் வெளிப்படுத்தவும் உதவுகின்றன.
இத்தகைய பல்வேறுவித ஆத்மீக உணர்வுகளைத்தான் சங்கீதக்காரன் தன் பாடல்களில் சங்கீதப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறான். உதாரணத்திற்கு சங்கீதம் 51ஐ எடுத்துக்கொள்ளுங்கள். அது தாவீதின் மனந்திரும்புதலின் பின் பாடப்பட்ட சங்கீதம். அதில் தாவீது எழுதியிருக்கும் ஆத்மீக அனுபவங்களை அவன் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்கின்ற உணர்வோடு எழுதியிருக்கிறான். கர்த்தரின் பிரசன்னத்தை உணர்ந்த உணர்வோடு மட்டுமே ஒருவனால் ‘உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்’ (51:11) என்று எழுத முடியும். இங்கே சங்கீதக்காரனின் மனந்திரும்புதலின் அனுபவம் அறிவுபூர்வமானதாக (சத்தியத்தின் அடிப்படையில்) இருப்பதோடு அவனுடைய உணர்ச்சிகளும் அதற்கேற்றபடி வெளிப்படுகிறவையாக இருக்கின்றன.
வேதப்பிரசங்கம்
இன்னொரு வகையில் கர்த்தரின் பிரசன்னத்தை அசாதாரண விதத்தில் நம்மால் அனுபவிக்கக்கூடிய வசதியைக் கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். நாம் பொதுவாகவே வேதப்பிரசங்கத்தை சத்தியத்தைக் கேட்பதற்கான சாதனமாக மட்டுமே நினைப்பது வழக்கம். ஆனால், கர்த்தர் அதை ஓய்வுநாள் ஆராதனையின் ஒரு முக்கிய பகுதியாக நியமித்திருப்பதற்கு சிறப்பான காரணமிருக்கிறது. ஓய்வுநாளில் சபைகூடிவருகிறபோது கர்த்தர் தம்முடைய மக்கள் மத்தியில் பிரசன்னமாவதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். பின்வரும் வசனத்தில் பவுல் ஆராதனைவேளையில் சபைகூடிவரும்போது கர்த்தர் பிரசன்னமாகியிருப்பதை கொரிந்தியருக்கு விளக்கியிருப்பதைக் கவனியுங்கள். ‘உங்களுக்குள்ளே’ என்பதை உங்கள் மத்தியிலே என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.
1 கொரிந்தியர் 14:24-25
24 அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். 25 அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.
இதேபோல் மத்தேயு 18:20லும் தம்முடைய பிரசன்னம் சபையிலிருப்பதை கிறிஸ்து விளக்குகிறார்.
ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
இந்த வசனத்தில் ‘இரண்டுபேராவது மூன்று பேராவது என் நாமத்தில் எங்குகூடியிருக்கிறார்களோ’ என்ற வார்த்தைப்பிரயோகங்கள் திருச்சபை கூடிவருவதைக் குறிக்கும் வார்த்தைகளாக இருக்கின்றன. தனிநபர்கள் வேறு இடங்களில் ஜெபத்தில் வருவதைக் குறிப்பதாக இதைக் கருதக்கூடாது. இந்த வசனம் காணப்படும் பகுதி இது சபைகூடிவரும்போது நிகழும் விஷயங்களைப்பற்றி இயேசு விளக்குவதை உணர்த்துகிறது.
சபைகூடிவரும்போது கர்த்தரின் பிரசன்னத்தை நாம் எப்படி உணர்கிறோம்? ஆராதனையில் பயன்படுத்தப்படும் கிருபையின் நியமங்களின் மூலமாக கர்த்தர் நாம் அவருடைய பிரசன்னத்தை உணரும்படிச் செய்கிறார். உதாரணத்திற்கு வேதப்பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதற்காக நியமிக்கப்பட்டவர் தேவபயத்தோடு பிரசங்கிக்கும்போது, வார்த்தையின் அடிப்படையில் சத்தியத்தைப் பிரசங்கிக்கும்போது, விசுவாசிகள் இதன் மூலம் ஆறுதலையும், சத்திய அறிவையும் பெறுவது மட்டுமல்லாமல் பாவ உணர்த்துதலுக்கும் உள்ளாகிறார்கள். இதை ஆவியானவரே ஆத்துமாக்களில் செய்கிறார். இத்தகைய ஆத்மீக அனுபவத்தை பிரசங்கத்தின் மூலம் அடைகிறவர்கள் கர்த்தரின் பிரசன்னத்தை அறிவுபூர்வமாக உணர்கிறார்கள்; அவருடைய வல்லமையை வார்த்தையின் மூலம் உணர்கிறார்கள். இந்தக் காரணத்தால்தான் ஆராதனையில் பிரசங்கம் எப்போதும் முக்கிய பங்கு வகித்துவருகிறது. இது கர்த்தர் தன் பிரசன்னத்தை ஆத்துமாக்கள் அறியப் பயன்படுத்தும் திருநியமங்களில் ஒன்று. பிரசங்கத்தின் வல்லமையைத் தெளிவாக விளக்கும் பல பகுதிகளில் ஒன்று ரோமர் 10:13-15. ஒருவன் கிறிஸ்துவில் விசுவாசத்தை அடைவதற்கு ஆண்டவர் பயன்படுத்தும் வல்லமையான சாதனமாக இந்தப்பகுதி பிரசங்கத்தைப் பற்றிய விளக்கத்தைக் கொடுக்கிறது.
13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? 15 அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
பிரசங்கத்தைக் கர்த்தர் இந்தவகையில் பயன்படுத்தியபோதும் பிரசங்கம் சத்தியத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு தெளிவானதாக, ஆவியின் வல்லமையோடு பிரசங்கிக்கப்படுகிறபோதே கர்த்தர் தன் பிரசன்னத்தை அதன் மூலம் ஆத்துமாக்களில் உணர்த்துகிறார். பிரசங்கம் அதில் இருக்கவேண்டிய தன்மைகளைக் கொண்டிராதபோது அது கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படாது; ஆத்துமாக்களையும் தொடாது. கர்த்தரின் பிரசன்னத்தை ஆத்துமாக்கள் உணர உதவும் பிரசங்கம் எப்போதும் தேவபயத்தோடும் அக்கறையோடும் உண்மையோடும் தயாரிக்கப்பட்டு பிரசங்கிக்கப்பட வேண்டும். வெறும் கதை சொல்லுவதும், வேத வார்த்தைகளை ஆராய்ந்து படிக்காமல் தவறான விளக்கங்களைக் கொடுப்பதும், பிரசங்கத்தைப் பயன்படுத்தி சொந்தக் கருத்துக்களை விளக்குவதும், சுயநலத்துக்காகப் பிரசங்கத்தைப் பயன்படுத்துவதும் கர்த்தரின் பிரசன்னத்தை ஆத்துமாக்கள் அறியமுடியாதபடி செய்துவிடும். பிரசங்கமாகிய ஊடகத்தைத் தன் சித்தத்தை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளவும், தன் பிரசன்னத்தை அவர்கள் உணரவும் கர்த்தரே நியமித்திருந்தபோதும் பிரசங்கம் பிரசங்கமாக இல்லாமலிருக்கும்போது கர்த்தர் அங்கிருக்கப்போவதில்லை. பிரசங்கம் எப்போதும் கர்த்தருக்குரிய பயத்தோடு அணுகவேண்டிய ஆத்மீக சாதனம். அதனால்தான் பிரசங்கிகள் புதிய விசுவாசிகளாகவும், தகுதியற்றவர்களாகவும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக வேதம் அதைச் செய்யவேண்டியவர்களுக்குரிய இலக்கணங்களைத் தெளிவாக 1 தீமோத்தேயு 3, தீத்து ஆகிய பவுலின் நிருபங்களில் தெளிவாகத் தந்திருக்கிறது.
சபை ஜெபக்கூட்டம்
ஆத்துமாக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்டவிதத்தில் தங்களுடைய ஆத்மீக விருத்திக்காகவும், கர்த்தரோடு உறவாடவும் ஜெபிக்க வேண்டிய கடமை இருந்தபோதும், கர்த்தர் திருச்சபை ஜெபத்திற்காகக் கூடிவரும்படி வேதத்தில் ஆணித்தரமாக அறிவுறுத்தியிருக்கிறார். அதுபற்றி டேனிஸ் கன்டசன் என்பவர் எழுதி வெளியிட்டிருக்கும் ஒரு நூலை (A Praying Church: Neglected Blessing of Corporate Prayer) சமீபத்தில் நான் வாசித்தேன். ஜெபம் பற்றி அநேக நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தபோதும் திருச்சபை ஜெபக்கூட்டத்தைப் பற்றிய நூல்கள் அரிது. அதுவும் திருச்சபையில் ஜெபக்கூட்டமே இன்று அதிகம் உதாசீனப்படுத்தப்பட்டு வருகிறது.
சபை ஜெபக்கூட்டத்தின் அவசியம் பற்றி இந்த ஆக்கத்தில் அதிகம் எழுதுவதற்கு இடம் போதாது. இருந்தபோதும் அதைக் கர்த்தர் தன்னுடைய அசாதாரண பிரசன்னத்தை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளப் பயன்படுத்துகிறார் என்பதை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலருடைய நடபடிகள் நூலில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். திருச்சபை புதிய ஏற்பாட்டில் நிறுவப்படுவதற்கு முன் அதற்கு முன்னோடியாக இருந்திருப்பது 120 விசுவாசிகள் எருசலேமில் மேலறையில் கூடிவந்த ஜெபக்கூட்டம் என்பதை அப்போஸ்தலருடைய நடபடிகள் நூல் நமக்கு விளக்குகிறது. பல தடவைகள் அந்நூலில் சபைகூடிவந்து ஜெபித்த உதாரணங்களை நாம் காண்கிறோம். அப்போஸ்தலருடைய நடபடிகள் 4ம் அதிகாரத்தில் அப்போஸ்தலர்கள் தங்களுடைய சுவிசேஷப்பணிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டபோது சபையாகக் கூடிவந்து கர்த்தரிடம் ஜெபத்தில் மன்றாடியபோது அவருடைய பிரசன்னத்தை அவர்கள் அறியமுடிந்தது மட்டுமல்லாமல் அவர்களுடைய ஜெபத்தைக் கர்த்தர் ஆசீர்வதித்து சுவிசேஷத்தை அதிக வல்லமையோடு பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலையும் அவர்களுக்குக் கொடுத்தார். அதன் காரணமாக திருச்சபை ஆசீர்வதிக்கப்பட்டு சுவிசேஷமும் பரவியது.
23 அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். 24 அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். 25 புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், 26 கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 27 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, 28 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். 29 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர் கவனித்து, 30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். 31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். 32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். (அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:23-32)
இதுபோன்ற திருச்சபை ஜெபக்கூட்டம் பற்றிய பல உதாரணங்களைப் புதிய ஏற்பாட்டில் நாம் காண்கிறோம். சபைகூடிவருகிறபோதெல்லாம் கர்த்தர் சபையில் பிரசன்னமாகி தன்னுடைய வல்லமையை ஆத்துமாக்கள் உணரச் செய்கிறார்.
திருவிருந்து
அடுத்ததாக திருநியமங்களில் ஒன்றான திருவிருந்தும் கர்த்தருடைய பிரசன்னத்தை நாம் அறிந்துணரக் கிறிஸ்துவால் சபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓய்வுநாளில் தேவ பயத்தோடும், சகல மரியாதைகளுடனும் திருவிருந்தில் ஆத்துமாக்கள் பங்குகொள்கிறபோது அங்கு கர்த்தர் பிரசன்னமாகி ஆத்துமாக்களை ஆசீர்வதிக்கிறார். திருவிருந்துபற்றித் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கும் 1 கொரிந்தியர் 11வது அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். கொரிந்தியர் சபை திருவிருந்தை உதாசீனப்படுத்துவதுபோல் நடந்துகொண்டபோது கர்த்தர் அவர்களைத் தண்டித்தார். திருவிருந்தின்போது அவர்கள் நடந்துகொண்ட முறை பாவகரமானதாக இருந்ததால் சிலர் உடனடியாக மரித்துப்போனார்கள். சிலருக்கு தீராத வியாதிகள் வந்தன, சபையின் சாட்சியும் பாதிக்கப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் திருவிருந்தில் கவனத்தோடு நிதானித்து பங்குகொள்ளாதது மட்டுமல்ல; அது நிகழ்ந்தபோது சர்வவல்லமையுள்ள கர்த்தரின் பிரசன்னம் அந்த இடத்தில் இருந்ததுதான் காரணம். கர்த்தரின் பிரசன்னத்தை சட்டைசெய்யாமல் அலட்சியப்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் வேறென்ன செய்வார்?
சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் திருவிருந்தின்போது கர்த்தரின் மெய்யான வல்லமையான ஆவிக்குரிய பிரசன்னம் சபையில் இருப்பதாக விளக்கியிருக்கிறார். வெறுமனே கிறிஸ்துவின் மரணத்தை, அந்த நிகழ்ச்சியை மனதில் கற்பனை செய்து பார்ப்பதற்காக, ஜீவனற்ற சடங்கைப்போல் திருவிருந்தை எடுப்பதற்காக நாம் திருவிருந்தில் கலந்துகொள்வதில்லை. ஆவிக்குரியவிதத்தில் கிறிஸ்துவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் விசுவாசத்தோடு நினைவுகூர்வதோடு கிறிஸ்துவின் வல்லமையான பிரசன்னத்தை விசுவாசத்தின்மூலம் உணரவும் நாம் திருவிருந்தில் கலந்துகொள்கிறோம். அந்தப் பிரசன்னமே திருவிருந்தை உதாசீனம் செய்கிறவர்களைப் பாதித்துத் தண்டிக்கிறது.
29 என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். 30 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். 31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். (1 கொரிந்தியர் 11:29-31)
ஓய்வுநாள்
இந்தக் கடைசிக்காலங்களில் ஓய்வுநாளுக்கு மதிப்புக்கொடுத்து வரும் திருச்சபைகள் மிகக் குறைவு; அதுவும் நம்மினத்தில் அத்தகைய சபைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஓய்வுநாளுக்கும் ஏனைய நாட்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், நடைமுறை வசதிக்காகவே அந்நாளில் ஆராதனை செய்கிறோம் என்ற எண்ணமே பரவலாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிறது. இந்தத் தவறான டிஸ்பென்சேஷனலிச, அன்டிநோமியனிச எண்ணப்போக்கு அநேகரை ஓய்வுநாளுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்காமல் அந்நாளில் கர்த்தரின் வார்த்தையை மீறவைத்துக்கொண்டிருக்கிறது. ஓய்வுநாளை உருவாக்கியது தனி மனிதனோ, சமுதாயமோ அல்ல; அதைக் கர்த்தரே உருவாக்கி ஆசீர்வதித்து மானுட நன்மைக்காகத் தந்திருக்கிறார். அது பழைய ஏற்பாட்டோடு முடிந்துபோன நாளல்ல; புதிய ஏற்பாட்டிலும் தொடரும் ஆராதனை நாள். அது கர்த்தரின் நாள். அவருடைய பிரசன்னத்தை ஆத்துமாக்கள் விசேஷ முறையில் அறிந்துணரக்கூடிய ஆசீர்வாதமான நாள். ஓய்வுநாள் பற்றிய வேதஉண்மைகளில் நம்பிக்கைகொண்டு விசுவாசத்துடனும், வைராக்கியத்துடனும் நடந்துவருகிறவர்களுக்கே அது ஆசீர்வாதமான நாள். அவருடைய வல்லமையான பிரசன்னத்தை அத்தகையவர்களே அந்நாளில் அனுபவிப்பார்கள். விசுவாசத்தோடு அந்நாளில் ஆத்துமாக்கள் கூடிவந்து ஆராதிக்கும்போதும், குடும்பமாக வீட்டில் ஆராதிக்கும்போதும் கர்த்தரின் பிரசன்னத்தை அவர்கள் உணர்கிறார்கள். அந்நாளில் செய்யக்கூடாதவைகளைச் செய்யாது ஏசாயா 58:13-14ல் சொல்லியிருப்பதுபோல் நடந்துகொள்கிறபோது கர்த்தர் அந்நாளை மனமகிழ்ச்சியுள்ள நாளாக்கி தன் மக்கள் அந்நாளில் தன்னுடைய பிரசன்னத்தை உணரும்படிச் செய்கிறார்.
13 என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், 14 அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
இனியாவது கர்த்தரின் வல்லமையான பிரசன்னத்தை உணர்வது பற்றிய ஆவிக்குரிய அனுபவத்தைக் கொச்சைப்படுத்தாமல் கர்த்தர் நமக்களித்துள்ள திருநியமங்களை விசுவாசத்துடன் பயன்படுத்தி ஆவிக்குரிய ஆத்துமாக்களைப்போல் நடந்துகொள்வீர்களா? சிலைவணக்கத்தில் ஈடுபட்டு வாழ்கிற அவிசுவாசிகள்போல் நாம் அறிவற்று கர்த்தரின் பிரசன்னத்தை அவர்கள் நாடுவதுபோல் நாடக்கூடாது. சாமி வந்துவிட்டது என்று கோவிலிலும், கூட்டத்திலும் அவர்கள் அதீத உணர்ச்சிவசப்பட்டு புத்திக்கெட்டாத விதத்தில் சாமியாடுவதுபோல் நாம் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வது பற்றிய விஷயத்தில் நடந்துகொள்ளக்கூடாது. அநேக கெரிஸ்மெட்டிக் கூட்டங்களில் நம்மினத்தில் இதுவே நடந்துவருகிறது. அவிசுவாச மதத்தார் நடவடிக்கைகளுக்கும் கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகளுக்கும் இந்த விஷயத்தில் வித்தியாசமில்லாமல் இருக்கிறது. வேதமே நம்முடைய விசுவாச அனுபவங்கள் அனைத்திற்கும் ஆதாரமும் முடிவுமாக இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். சத்திய வேதத்தில் முழுமுற்றுமாகத் தங்கியிருந்து நம்மாண்டவர் கிறிஸ்துவை நித்தமும் ஆராதித்து அவருடைய பிரசன்னத்தை புத்திரீதியாக அன்றாடம் அறிந்துணர்ந்து ஆசீர்வாதமான கிறிஸ்தவ வாழ்க்கையை வேதமனிதர்களாக வாழ முற்படுங்கள்.
மிகவும் பிரயோஜனமாக இருந்தது. இப்பொழுது ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. நன்றி
LikeLike