‘நம்ம ஊருக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது’ அல்லது ‘நம்ம பண்பாட்டுக்கு இதெல்லாம் ஒத்துவராது’ என்ற வார்த்தைகளை நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவை அதிகம் கேட்டுக்கேட்டுக் காது புளித்துப்போன வார்த்தைகள். இந்தப் பண்பாடே அநேக மிஷனரிகளுக்கு நம்மினத்தில் அடிபதிக்க முடியாதபடி ஆபத்தாக இருந்திருக்கிறது. போப் ஐயரும், கால்ட்வெல்லும் இன்று உயிரோடிருந்தால், ஏன்! சீகன்பாலும், வில்லியம் கேரியுங்கூட இதைப்பற்றி அதிகம் சொல்லிச் சலித்திருப்பார்கள். இந்த வார்த்தைகளை வாசிக்கிறபோதே, மேலைத்தேசத்து கிறிஸ்தவ தலைவர்களுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக ஒருசில குரல்கள் நம்மினத்தில் எழும். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளுவதெல்லாம், இயேசு நம்மினத்தில் பிறக்கவில்லை என்பதைக் கொஞ்சம் உணருங்கள் என்பதுதான். வேறொரு இனத்தில் பிறந்த இயேசு வேண்டும், ஆனால் வேறு இனங்களில் பிறந்த கிறிஸ்தவ தலைவர்கள் தேவையில்லையா? வெளிதேசத்தில் இருந்து நம்மினத்துக்கு வந்ததுதான் கிறிஸ்தவம். அதேநிலைதான் உலகத்திலுள்ள ஏனைய தேசங்களுக்கும். யார், எங்கிருந்து வந்¢தார் என்பதல்ல முக்கியம்; சத்தியமும் சத்திய தேவனும் மட்டுமே நமக்குத் தேவை.
பண்பாடு என்பது ஒவ்வொரு இனத்தோடும் இணைந்தது. பண்பாடில்லாத இனமே இல்லை. சுவிசேஷப் பணியைக்கூட பண்பாட்டை அடியோடு ஒதுக்கிவைத்துவிட்டு பயனுள்ள முறையில் செய்துவிட முடியாது. ஆனால், பண்பாடு கிறிஸ்தவ திருச்சபைகளை ஆளமுற்படுகிறபோது, அது கர்த்தரின் வேதத்தைவிட அதிகாரமுள்ளதாக மாறிவிடுகிறபோது, வேதபோதனைகளைவிட அதற்கு ஓர் இனம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றபோது, அதன் அடிப்படையில் வேதபோதனைகள் மாற்றியமைக்கப்படுகிறபோது எந¢த இனத்திலும் கிறிஸ்தவம் உயிர்வாழ வழியேயில்லை.
சிலைவணக்கத்தைப் பின்பற்றும் நாடுகளில் வாழ்கிறவர்களின் பண்பாடு அம்மதக் கோட்பாட்டின், அதன் வழிமுறைகளின் செல்வாக்கைப் பெருமளவுக்குக் கொண்டிருக்கும். அவ்வின மக்களின் மதவழக்கங்களை அவர்களுடைய பண்பாட்டில் இருந்து பிரித்துவிடுவது என்பது அத்தனை சுலபமானதல்ல. அது அவர்களின் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும்; அந்தளவுக்கு அதன் செல்வாக்கு அவர்களில் காணப்படும். ஒரு சாதாரண உதாரணத்தை எடுத்துக்கொள்ளுவோமே. எனக்குத் தெரிந்த ஒரு பிராமணப் பின்னணியில் இருந்து வந்த இந்தியக் கிறிஸ்தவர் இன்றுவரைக் கறியை (இறைச்சி) வாயில் வைத்ததில்லை. அதற்குக் காரணம், கிறிஸ்தவரான பின் அவருடைய மனம் இந்த விஷயத்தில் அறிவோடு இருந்தபோதும், வளர்ந்துவந்த முறை அவரைக் கறியின் பக்கம் போகவிடாமல் வைத்திருக்கிறது. நல்ல வேலை, வேதம் கறி சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று கட்டளையிடவில்லை. அப்படியொரு கட்டளை இருந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பாரோ தெரியவில்லை. அவர் வளர்ந்து வந்திருந்த பண்பாட்டு முறை கிறிஸ்தவரான பின்னரும் அவரைவிடாமல் பிடித்திருக்கிறது.
எந்த இனப்பண்பாட்டிலும் நல்லவையும் இருக்கும்; கேடானவையும் இருக்கும். அதுவும் சிலைவணக்கப் பண்பாட்டைப்பற்றிச் சொல்லவே தேவையில்லை. உதாரணத்திற்கு, நம்மினத்து இந்துப்பண்பாட்டில் ஆணாதிக்கம் அளவுக்கு மீறியதாக இருக்கிறது. ஆண்பிள்ளைதான் தலைப்பிள்ளையாக இருக்கவேண்டும் என்பதும், ஆண் பிள்ளையை அதிகம் படிக்கவைப்பதும், அவனுக்கே அதிக சொத்தை எழுதிவைப்பதும் பொதுவாகவே இந்துப்பண்பாட்டில் வழக்கம். வளர்கிறபோதுகூட வீட்டில் பெண்பிள்ளைகள் ஆண் பிள்ளைகளை மதித்து நடக்கவேண்டும் என்று சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் ஆண் பிள்ளைகளுக்கே விசேஷ கவனிப்பும், அக்கறையும் காட்டப்படும். இந்தப் பண்பாட்டில் வளர்கின்ற நம்மினத்து ஆண் வாலிபர்களுக்கு பெண்களைப்பற்றிய தாழ்வான ஒரு எண்ணம் சிறுவயதில் இருந்தே பதிந்துவிடுகிறது. உண்மையில் பெண்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், எண்ணங்கள் எல்லாம் இருக்கின்றன என்ற உணர்வே இல்லாமல் அவர்களைத் தரத்தில் ஓரிடம் குறைத்து வைத்துப்பார்த்தே நம்மினத்து வாலிபர்கள் வளர்கிறார்கள். பெற்றோர்களும் அப்படியே வளர்க்கிறார்கள். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான 25 வயதுள்ள ஹிரிதிக் பாண்டியா பெண்களைப் பற்றி அசிங்கமான கருத்துக்களை டிவியில் எல்லோரும் பார்க்கிறார்களே என்ற எண்ணமே இல்லாமல் பேசிவிட்டான். அவனுடைய செயல் தவறுதான். ஆனால், பெண்களைப்பற்றிய இந்தத் தாழ்வான எண்ணமே பொதுவாக நம்மினத்து வாலிபர்கள் மத்தியில் இருக்கிறது.
கிறிஸ்துவை விசுவாசிக்கும் வாலிபர்களுக்கு பெண்களைப்பற்றி அவிசுவாசியான ஹிரிதிக் பாண்டியாவைப்போல அசிங்கமான எண்ணங்கள் இல்லாமல் இருந்தாலும், ஆணாதிக்கப் பார்வை இருதயத்தில் ஊறிப்போயிருந்து அவர்கள் திருமணத்திற்காக பெண்தேடுகிறபோது வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். இந்துப் பண்பாட்டில் இருந்து வந்திருக்கும் இந்த ஆணாதிக்கப் பார்வை வேதத்திற்கு முற்றிலும் முரணானது. வேதம் இதை நல்லதாகப் பார்க்கவில்லை; உண்மையில் அருவருப்போடு பார்க்கிறது. பெண்ணைப்பற்றிய இந்த இழிவான பண்பாட்டுப் பார்வையையும் நடத்தையையும் தன் வாழ்வில் இருந்து போக்கிக்கொள்ளாத கிறிஸ்தவன் பரிசுத்தத்தில் குறைபாடுள்ளவனாகவே இருப்பான். ஆணாதிக்க மனப்போக்கு ஒரு கிறிஸ்தவன் வாழ்வில் தொடர்ந்தால் அவனால் கிறிஸ்தவ குடும்பவாழ்க்கையைப் பரிசுத்தத்தோடு, கர்த்தரின் மகிமைக்காக நடத்தவே முடியாது. இதிலிருந்து பண்பாட்டில் இருக்கும் தீய அம்சங்களை வேதபோதனையின் அடிப்படையில் அடியோடு மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்கிறீர்களா? கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் பழைய பண்பாட்டில் இருந்து விடவேண்டியவைகள் ஏராளம். இந்தச் சிலைவணக்கப் பண்பாட்டில் இருந்து விலகி கிறிஸ்துவை விசுவாசித்தவன் என்பதால் இதுபற்றி எனக்கு அதிக அறிவும், அனுபவமும் இருக்கிறது.
சிலைவணக்க இனப்பண்பாட்டில் அல்லது புறஜாதி இனத்தில் கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பிரசங்கித்து திருச்சபை அமைக்கின்றபோது நாம் முகங்கொடுக்கின்ற ஒரு வார்த்தைப்பிரயோகந்தான் ‘சூழிசைவுபடுத்தல்.’ இதை ஆங்கிலத்தில் Contexualisation என்று அழைப்பார்கள். இந்த வார்த்தைப்பிரயோகம் 20ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஓர் இனத்துப் பண்பாட்டில் தரப்பட்டிருக்கும் சத்தியத்தை இன்னொரு இனத்துப் பண்பாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எப்படி விளங்கிக்கொள்ளுவது என்ற ஆய்வு எழுகிறபோதே சூழிசைவுபடுத்தல் ஆரம்பிக்கிறது. சிலர் இதை வேதவிளக்கவிதிமுறையாகக் காண்கிறார்கள். வேறு சிலர் அதை மறுத்து இதை செய்திப்பறிமாற்றத்தோடு தொடர்புடையதாக மட்டுமே பார்க்கவேண்டும் என்கிறார்கள். அதாவது, சுவிசேஷத்தை அறிவித்து சபை நிறுவும் பணியில் ஈடுபடுகிறபோது இதன் பங்கு அவசிமாகிறது என்பது அவர்களுடைய கருத்து.
கர்த்தரின் மீட்புப்பணியின் வரலாற்றை விளக்கும் வேதம், யூத-கிரேக்க வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்த கர்த்தரின் வெளிப்படுத்தலாக இருக்கிறது. அவ்வேதம் போதிக்கும் சுவிசேஷத்தை இன்னொரு நாட்டுப் பண்பாட்டுச் சூழலில் பிரசங்கித்து திருச்சபை நிறுவுகிற விஷயம்பற்றி விவாதிக்கும்போதே சூழிசைவுபடுத்துதல் என்ற வார்த்தைப்பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு அப்போஸ்தலன் பவுல் புறஜாதியினர் மத்தியில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து திருச்சபை நிறுவும் பணியில் ஈடுபட்டபோது யூதப்பண்பாட்டுச் சூழலில் வளர்ந்திருக்கும் வேதத்தை கிரேக்கப் பண்பாட்டுச் சூழலுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது என்ற அவசியத்தை உணர்ந்தவராக அதைக் கவனத்தோடு செய்யும் பணியில் ஈடுபட்டார். ஆகவே, சூழிசைவுபடுத்துதல் என்பது சுவிசேஷத்தைப் புறஜாதிக் கலாச்சாரத்தில் அறிமுகப்படுத்தும்போது அவசியமாகிறது. ஆனால், இதற்கும் Syncretism (சின்கிரிடிஷம்) என்றழைக்கப்படுகின்ற ‘சமயசமரசப் பிணைப்பிற்கும்’ இடையில் உள்ள வேறுபாட்டை நாம் புரிந்துகொண்டு, ஆபத்தைத் தவிர்க்க வேண்டும். சுவிசேஷப் பணியில் ஓரளவிற்கு வேதஅடிப்படையிலான சூழிசைவுபடுத்தல் அவசியமாகிற அதேவேளை, சமயசமரசப் பிணைப்பு சுவிசேஷத்தை அடியோடு அழிக்கின்ற ஆபத்தாக இருக்கின்றது.
சமயசமரசப் பிணைப்பு (Syncretism)
முதலில், சமயசமரசப் பிணைப்பை விளக்கிவிடுகிறேன். இதுவே பிசாசின் வழிமுறை, இது சுவிசேஷத்தை அழிக்கும் ஆபத்து. சுருக்கமாக விளக்கப்போனால் சமயசமரசப் பிணைப்பு என்பது இரு மதப்போதனைகளை ஒன்றாக இணைத்து விளக்குவது. கிறிஸ்தவ வேதபோதனைகளோடு வேறு மதப்போதனைகளை சரிசமமாகப் பிணைப்பது பிசாசின் கைங்கரியம். இந்தியாவில் வட தென்பகுதிகளில் சாது செல்லப்பா, புலவர் தெய்வநாயகம் போன்றோர் சமயசமரசப் பிணைப்பைப் பயன்படுத்தி பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கேற்ப கிறிஸ்தவத்தை மாற்றி அமைத்து மக்களைக் கவர முயற்சிக்கிறார்கள். இவர்கள் அப்போஸ்தலன் தோமா இந்தியாவுக்கு வந்தபோது தென்பகுதி மக்கள் சிலைவணக்கத்தில் ஈடுபட்டிருந்ததைக் கவனித்து வேதம் போதிக்கும் கடவுள் வழிபாடு இந்தியப் பண்பாட்டுக்கு ஒத்துப்போகாது என்று தீர்மானித்து இயேசுவை சிலைவடிவத்தில் வணங்கும் முறையை ஏற்படுத்தினார் என்று விளக்குகிறார்கள் (புலவர் தெய்வநாயகம்). இது வேதத்தையும் வேதமனிதனான தோமாவையும் நிந்திக்கும் தவறான போலிவிளக்கம். பத்துக்கட்டளைகளும், வேதத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் சிலைவணக்கத்தை வெளிப்படையாக ஆணித்தரமாகக் கண்டித்து நிராகரிக்கின்றன. கீழைத்தேய நாடுகளில் அதுவே மதப்பண்பாடாக இருக்கிறதென்பதற்காக கீழைத்தேய நாட்டுக் கிறிஸ்தவர்கள் வேதம் சிலைவணக்கத்தை நிராகரிக்கின்ற பகுதிகளுக்கெல்லாம் தற்காலப் பண்பாட்டிற்கேற்றபடி விளக்கங்கொடுப்பது வேதமறியாதவர்களும், வேதத்தைக் கர்த்தர் தெய்வீக வழிநடத்தலின்படித் தந்திருக்கும் முறையை நிராகரிக்கிறவர்களும் செய்யும் செயல்.
இதுபற்றி விளக்கி, தெய்வநாயகம் மற்றும் சாது செல்லப்பா ஆகியோருக்கு பதிலளித்து ‘இந்திய வேதங்களில் இயேசுவா’ என்ற நூலைப் பலவருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். (இந்நூல் தற்போது பதிப்பில் இல்லை. திருமறைத்தீப வலைப்பூவிலிருந்தோ அல்லது திருமறைத்தீபத்தில் இவ்வாக்கம் வெளிவந்த இதழிலிருந்தோ படித்தறியலாம். திருமறைத்தீபம் மலர் 6 – இதழ் 3-4, 2000 (Unicode) (PDF)) இதை எழுதி வெளியிட்டதற்குக் காரணம் கோயம்புத்தூரில் இருந்த சில போதகர்கள், ‘ஐயா, இதற்கு பதிலளிக்கும் ஞானம் இல்லாத நிலையில் இருக்கிறோம். நீங்கள்தான் இதற்கு பதில்கூறி எங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுதான். சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோர் இந்துமத இந்திய வேத நூல்களிலும், சங்க இலக்கியங்களிலும் காணப்படும் போதனைகளுக்கு கிறிஸ்தவ விளக்கத்தைக் கொடுத்து இந்தியர்கள், இந்திய வேதநூல்களிலும், தங்களுடைய மதத்திலும் கிறிஸ்துவைப்பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை அறிந்துணர்ந்தாலே கிறிஸ்தவர்களாகி விடலாம் என்று விளக்கியிருக்கிறார்கள். இது கிறிஸ்தவ வேதத்தின் அதிகாரத்தை அடியோடு நாசப்படுத்தும் பிசாசின் போதனை. இது சமயசமரசப் பிணைப்பிற்கு ஒரு நல்ல உதாரணம்.
வேதத்தில் இருந்து ஆவியின் பலத்தோடு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்காமல், வேதத்தின் சத்தியங்களை புறஜாதி மத எழுத்துக்களில் பார்க்க முனையும் வேதநிந்தனை செய்யும்முறை என்று இதன் போலித்தனத்தை ‘இந்திய வேதங்களில் இயேசுவா’ என்ற நூலில் தோலுரித்துக் காட்டியிருந்தேன். அத்தோடு தமிழகத்தில் தெய்வநாயகத்தைப் பின்பற்றி இந்துத் தமிழ் இலக்கியங்களிலும், அவிசுவாசிகளான திருவள்ளுவர், இராமலிங்க அடிகள் போன்றோரின் எழுத்துக்களிலும், சித்தர் பாடல்களிலும் கிறிஸ்தவ போதனைகளைக் காண முயல்கின்ற வேறு சிலரையும் அடையாளங் காண்பித்து திருமறைத்தீபத்தில் எழுதியிருந்தேன். இந்த சமயசமரசப் பிணைப்பாளர்களின் போலிப்போதனைகள் தமிழகத்து இந்துக்கோவில்களைப்போல் அதேவடிவில் உயரமாக திருச்சபைக் கட்டடங்களைக் கட்டும் அளவுக்கு கொண்டுபோய்விட்டிருக்கிறது. இந்த ஆபத்தான போதனையை நான் அநேக வருடங்களுக்கு முன் என் நூலில் விளக்கியிருந்தபோதும் அதன் எச்சங்கள் இன்னும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் தொடரத்தான் செய்கின்றன. வேதபோதனையான கிருபையின் போதனைகளிலிருந்தும் இந்துமத விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள் ஒரு சிலர். சமயசமரசப் பிணைப்பாகிய பாம்பு எந்த நாட்டிலிருந்து எந்த ரூபத்தில் வந்தாலும் அது கிறிஸ்தவத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதைத் தோலுரித்துக்காட்டி கிறிஸ்தவர்கள் அந்த விஷப்பாம்பினால் கடியுண்டு ஆவிக்குரிய மரணத்தை சந்திக்காமல் இருக்கவே நான் அந்த நூலை எழுதவேண்டியிருந்தது.
இதேபோல, பங்ளாதேஷில் (Bangladesh) ஒரு சில கிறிஸ்தவ மிஷனரி நிறுவனங்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக அவர்களுடைய இஸ்லாமிய நடைமுறைகளான ஐந்துவேளை ஜெபம் செய்வது, தொழுகை செய்வது, அவர்கள் தொழுகைக்குப் போகும்போது அணியும் உடை மற்றும் கைகால் கழுவுதல் போன்றவற்றைச்செய்து இயேசுவை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க முயற்சிப்பதோடு, இஸ்லாமிய மசூதியைப்போலத் தோற்றமளிக்கும் கிறிஸ்தவ ஆராதனைத் தளத்தை அமைத்து, இஸ்லாமிய ஆராதனையைப்போலத் தோற்றமளிக்கும் ஆராதனையையும் கிறிஸ்துவின் பெயரில் செய்துவருகிறார்கள். இதற்குப் பெயர் நிச்சயம் சூழிசைவுபடுத்தல் அல்ல; சமயசமரசப் பிணைப்பே.
பவுலும், பேதுருவும் இதுபற்றி விளக்கி எச்சரித்திருப்பதைக் கவனியுங்கள்.
2 கொரிந்தியர் 11:13-15
13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். 14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 15 ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
1 தீமோத்தேயு 6:3-5
3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், 4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, 5 கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
2 பேதுரு 2:1-3
1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
இன்னும் எத்தனையோ வேதவசனங்களை சமயசமரசப் பிணைப்பிற்கும் அதுபோன்ற போலிப்போதனைகளுக்கும் எதிராக உதாரணங்காட்டலாம். இதில் இருக்கும் பேராபத்து என்ன தெரியுமா? சர்வவல்லவரான கர்த்தரின் சத்தியவேதத்தை அதனுடைய பரிசுத்தமானதும், தவறுகளற்றதும், எக்காலத்துக்கும் அவசியமானதுமானதும், போதுமானதும், அதிகாரமுள்ளதுமான தன்மையைப்பற்றிய எந்த ஞானமும் இல்லாமல், வெறும் மானுடனான சாதாரண தமிழக எழுத்தாளன் எழுதிய ஒரு கதைப்புத்தகத்தைப்போல் பயன்படுத்தி மனதில் தோன்றியவிதத்தில் அரட்டும் புரட்டுமான கருத்துக்களை அதில் திணித்து விளக்கங்கொடுப்பதுதான். கொஞ்சநஞ்சமாவது தேவபயமும், வேதபயமும் மனதில் இருக்கின்ற எந்தக் கிறிஸ்தவனும் வேதத்தைப் பயன்படுத்தி இத்தகைய புரட்டல் கதைகளை உலவவிட மாட்டான்.
ஆபத்தை விளைவிக்கும் எதிர்மறை சூழிசைவுபடுத்தல் (Dangerous negative contexualisation)
சூழிசைவுபடுத்தல் என்பது அதன் நேர்மறைப் பயன்பாட்டைவிட எதிர்மறைக் காரணங்களுக்காகவே அதிகம் பெயர்போயிருக்கிறது. முதலில் சூழிசைவுபடுத்தல் எப்படி இருக்கக்கூடாது, எதில்போய் முடியக்கூடாது என்பதைக் கவனிப்போம்.
(1) ஒரு நாட்டுப் பண்பாட்டு, மதம் மற்றும் நடைமுறை வழக்கங்களுக்குப் பொருந்திப்போகும்படி சுவிசேஷத்தின் அடிப்படைப் போதனைகள் எந்தவிதத்திலும் அதன் உள்ளடக்கத்திலோ, பிரசங்கத்திலோ மாற்றியமைக்கப்படக்கூடாது. அப்படி மாற்றியமைக்கும்போது அது மெய்யான சூழிசைவுபடுத்தல் அல்ல; அது சமயசமரசப் பிணைப்பாக (Syncretism) மாறிவிடுகிறது. இப்படியாக சூழிசைவுபடுத்தல் என்ற பெயரில் நடக்கும் சமயசமரசப் பிணைப்பை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். இதேவகையில் ஒரு நாட்டு, இனத்துப் பண்பாடு, நடைமுறை வழக்கம் என்பவற்றை முதனிலைப்படுத்தி சுவிசேஷத்தையும் வேதபோதனைகளையும் எந்தவிதக் கட்டுப்பாடுமில்லாமல் அவ்வினத்து மக்கள் கிறிஸ்துவை ஏற்று ஆராதிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கண்மூடித்தனமாக மாற்றிப்பயன்படுத்துகிறபோது அது மெய்யான சூழிசைவுபடுத்தல் அல்ல, சமயசமரசப் பிணைப்பே. உதாரணத்திற்கு,
- இந்து மத வேதங்களில் இருந்து சுவிசஷத்தைப் பிரசங்கிக்க முயல்வது.
- ஓர் இனத்தில் இரத்தப்பலி கொடுப்பது கொடுமையாகக் கருதப்பட்டால் கிறிஸ்துவின் சிலுவைபலியை அடியோடு மாற்றி அந்த இனத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியவிதத்தில் அல்லது அதற்கு ஒத்துப்போகக்கூடியவிதத்தில் சிலுவைப்பலிக்கு விளக்கங்கொடுப்பது.
- கீழைத்தேய இனங்களில் பல தெய்வ வழிபாட்டுப் பண்பாடு இருப்பதால் திரித்துவப் போதனையை மாற்றி கிறிஸ்தவத்தில் மூன்று கடவுள்கள் வழிபாடிருப்பதாகப் போதிப்பது.
(2) இத்தகைய தவறான, ஆபத்தான அல்லது எதிர்மறையான சூழிசைவுபடுத்தல் பலவிதங்களில் நிகழ்ந்து வருகின்றது. முக்கியமாக வேதமொழிபெயர்ப்பு செய்கிறவர்கள் இதைச் செய்கிறார்கள். எபிரெய, கிரேக்க மொழிகளில் இருக்கும் சத்திய வேதத்தை மொழிபெயர்க்கும்போது எந்தவித அக்கறையும் இல்லாமல் இந்த 21ம் நூற்றாண்டு மக்களை மட்டுமே மனதில் கொண்டு வேத மொழிநடையையும், போதனைகளையும் கண்மூடித்தனமாக மாற்றியமைத்துள்ள ஓர் ஆங்கில மொழிபெயர்ப்புக்குப் பெயர் ‘மெசேஜ்’ (Message). இதை மொழிபெயர்ப்பு என்றே அழைக்கமுடியாது. கடவுளைத் தகப்பனாகவும், தாயாகவும் வர்ணிக்கும் மொழிபெயர்ப்புகள், எபிரெய, கிரேக்க மொழியில் இருந்து ஆங்கிலத்தில் All men, Man என்று மொழிபெயர்க்கப்பட்ட இடங்களை ஆண், பெண் என்று மொழிபெயர்க்கும் gender-inclusive language மொழிபெயர்ப்புகள், அத்தோடு தன்னினச் சேர்க்கை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெருகிவரும் பண்பாடு பல சமுதாயங்களில் இன்று காணப்படுவதால் அதை வேதம் அனுமதிப்பதாகக் காட்டும்விதத்தில் மாற்றி அமைத்திருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. இவையனைத்தும் எதிர்மறை சூழிசைவுபடுத்தலுக்கு உதாரணங்கள்.
(3) இன்னுமொருவிதத்தில் எதிர்மறை சூழிசைவுபடுத்தலை நம்மினத்தில் நான் காண்கிறேன். வேதத்தின் தன்மைபற்றிய அடிப்படை ஞானமில்லாமல், அதன் போதனைகள் எப்போதும் நம்மினத்துப் பண்பாட்டிற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற ஒரே அனுமானத்தோடு எதிர்மறை சூழிசைவுபடுத்துதலில் பெரும்பாலானோர் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது, அவர்களைப் பொறுத்தவரையில் வேதவசனங்களின் பொருளைத் தீர்மானிப்பது அவர்களுடைய பண்பாட்டு நடைமுறை மட்டுமே. இவர்கள் வேதம் எப்போதும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டுக்கேற்ப விளக்கப்படுத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய வேதவிளக்கவிதியாக இருக்கிறது. இவர்களில் அநேகர் வேதஅறிவின்மையால் அதைச் செய்கிறார்கள்; வேறு பலர் சுவிசேஷம் மக்களை அடையவேண்டுமானால் சூழிசைவுபடுத்தியே தீரவேண்டும் என்ற தீவிரத்தில் அந்தத் தவறைச் செய்கிறார்கள். ஏனையோர் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் காணப்படும் லிபரல் பெயர் கிறிஸ்தவர்கள். இதற்குப் பல உதாரணங்களைத் தரமுடியும். இருந்தாலும் ஒன்றையாவது பார்ப்போம். கர்த்தர் வேதத்தில் ஆராதனையை அறிமுகப்படுத்தி அது எப்படி அமைய வேண்டும் என்று அதுபற்றிய அடிப்படைப் போதனைகளை விபரமாகத் தந்திருக்கிறார். இவையெல்லாம் பல பகுதிகளில் பழைய புதிய ஏற்பாடுகளில் விளக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆராதனைக்குரிய அடிப்படை அம்சங்கள், அதற்குரிய சந்தர்ப்பங்கள் என்று பிரிக்கவேண்டும். இவற்றில் இரண்டாவதான ஆராதனைக்குரிய சந்தர்ப்பங்களில் ஒரு தேசத்துக்குரிய மாற்றங்களைச் செய்ய அனுமதியுண்டு. அதாவது, ஆராதனைக்காக கூடும் நேரம், கூடும் இடம், எத்தனை பாடல்கள் பாடுவது, நிலத்தில் அமர்வதா, இருக்கையில் இருப்பதா? போன்றவையே ஆராதனைக்குரிய சந்தர்ப்பங்கள். ஆனால், ஆராதனைக்குரிய அடிப்படை அம்சங்களில் நாம் ஒருபோதும் ஒரு தேசத்திற்கோ, இனத்திற்கோ, பண்பாட்டிற்கோ ஏற்றபடி மாற்றங்களைச் செய்துகொள்ள முடியாது. அவற்றை ஆண்டவரே வேதத்தில் ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார். ஆராதனையின் அடிப்படை அம்சங்கள்: பிரசங்கம், ஜெபம், பாடல்கள், வேதவாசிப்பு ஆகியவையாகும். இவற்றில் ஒன்றையும் குறைக்கவோ, வேறு எதையும் இந்தப் பட்டியலில் திணிக்கவோ, இவற்றில் எதையாவது பண்பாட்டிற்குத் தகுந்தபடி மாற்றியமைக்கவோ நமக்கு அனுமதியில்லை. இருந்தபோதும் நம்மினத்தில் பெரும்பாலான சபைகள் இவற்றை வேதபூர்வமாக ஆராதனையில் அமையும்படிப் பார்த்துக்கொள்ளாமல் இனப்பண்பாட்டிற்கும், நடைமுறைகளுக்கும் தகுந்தபடி இவற்றை மாற்றியோ, வேறு விஷயங்களை ஆராதனையில் திணித்தோ ஆண்டவருக்கு முன் ஓய்வுநாள்தோறும் அந்நிய அக்கினியைப் படைக்கிறார்கள். ஆராதனையில் கைத்தட்டல் அதன் அடிப்படை அம்சமாக இருக்கவேண்டும் என்று வேதத்தில் எந்தப் பகுதியில் வாசிக்கிறோம்? ஆராதனையின்போது கைதட்டுவது ஆண்டவருக்கு எந்த மகிமையைத் தருகிறது? அதுமட்டுமல்லாமல் ஆராதனை வேளையில் அதன் பகுதியாக எல்லோரும் சேர்ந்து ஒரேநேரத்தில் குரலை அதிகம் உயர்த்தி ‘அல்லேலூயா, ஆண்டவர் பெரியவர், வல்லவர்’ என்று காரணமில்லாமல் ‘துதி’ என்ற பெயரில் சபை சபையாக நம்மினத்தில் செய்து வருகிறார்களே, இது எங்கிருந்து முளைத்தது? இதற்கும் ஆராதனைக்கும் என்ன சம்பந்தம்? நம் பண்பாட்டிற்கும், மனித இச்சைக்கும் இது பொருந்தி வருகிறது என்று அநேகர் இதற்குப் பதில் சொல்லுவதை நான் காதில் கேட்டிருக்கிறேன். உன்னைப் படைத்த, உனக்கு இலவசமாக இரட்சிப்பை அளித்த சர்வவல்லவரான ஆண்டவர் கேட்பதை மட்டும் அவருக்குக் கொடுப்பதைவிட இந்த உலகத்தில் நிலைத்திராத, குறைபாடுகள் கொண்ட பண்பாடு உனக்கு அத்தனை முக்கியமாகப் போய்விட்டதா?
சூழிசைவுபடுத்தலும் வேதவிளக்க விதிமுறையும்
வேறொரு காலத்துப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்திருக்கும் மீட்பின் வரலாறான வேதத்தை இன்னுமொரு காலத்து சமூகப் பண்பாட்டில் வாழும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும்போது சூழிசைவுபடுத்தல் அவசியமாகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது சூழிசைவுபடுத்தலை வேதவிளக்கவிதியாகப் பயன்படுத்தும்போது ஏற்படும் ஆபத்துக்களை விளக்க விரும்புகிறேன். முதலில் இதுபற்றி பிரைன் எட்வர்ட்ஸ் (Brain Edwards) எனும் நூலாசிரியர் தன் நூலில் (Nothing but the truth) விளக்கியிருப்பதைக் கவனியுங்கள்.
‘ஒரு பண்பாட்டில் வளர்ந்திருக்கும் வேதவசனங்களை இன்னொரு காலப்பண்பாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேதத்தை விளக்குகிறவன் நேர்மையோடும், உண்மையோடும் செய்யவேண்டிய கடுமையான வேலையைத் தவிர்த்துவிடுகிற ஆபத்து இதில் (சூழிசைவுபடுத்தல்) இருக்கிறது. அத்தோடு, வேதத்தை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் ஒருவர் வாழ்கின்ற காலப்பண்பாடு வேதவசனங்கள் மேல் அதிகாரம் செலுத்துகிற நிலைமையையும் உருவாக்கிவிடுகிறது. இத்தகைய சூழிசைவுபடுத்தலே, செழிப்பான (வசதியுள்ள) வாழ்க்கையை நாடி அலையும் இச்சைகொண்டிருக்கும் (மேலைத்தேச) சமுதாயப்பண்பாடு அதை நியாயப்படுத்தி வேதவசனங்களுக்கு தனக்கேற்றமுறையில் விளக்கங்கொடுத்து ‘செழிப்புபதேசப் போதனையை’ (prosperity gospel) உருவாக்கிவிட்டிருக்கின்றது. இதேபோல மோசமான நீதியற்ற அடக்குமுறையையும், சமுதாயத்தின் சகல தளங்களையும் பாதித்திருக்கும் ஊழலையும் கொண்டிருக்கும் சமுதாயப்பண்பாடு வேதத்தின் மீது அதிகாரம் செலுத்தி தீவிரவாதத்திற்கும், அரச அடக்குமுறைக்கும் எதிரான வன்முறையை நியாயப்படுத்தும் ‘விடுதலை இறையியலை’ (theology of liberation) உருவாக்கிவிட்டிருக்கின்றது. இதேபோல் உருவானதுதான் கருப்பு இறையியலும் (Black theology). நம்கால சமுதாயப்பண்பாட்டிற்கு இணங்கிப்போகிறபடி வேதத்திற்கு விளக்கங்கொடுக்கின்ற பேராபத்து சூழிசைவுபடுத்தலைத் தவறான முறையில் பயன்படுத்தும்போது உருவாகின்றது.’
கர்த்தர் சர்வவல்லவராக இருந்து அந்தந்தக் காலத்து உலக வரலாற்று, பண்பாட்டுச் சந்தர்ப்பங்களில் தான் நிகழ்த்திய மீட்பின் வரலாற்றை வார்த்தைகளாக நமக்குத் தந்திருக்கிறார். அந்த வார்த்தைகளின் மூலப்பொருளை அதை நமக்குக் கொண்டுவந்திருக்கும் வரலாறு மற்றும் மொழிஇலக்கணத்தின் அடிப்படையில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பது வேத விளக்கவிதிகளில் ஒன்று. ஆனால், அவற்றின் மூலம் ஆவியானவர் நமக்குத் தரும் போதனை எக்காலத்துக்கும் உரியது. அப்போதனை காலங்களைத் தாண்டியது. அது ஒரு நாட்டு வரலாற்று, நடைமுறைப்பண்பாட்டிற்கு ஏற்ப மாற்றி விளக்கப்படக்கூடாது. உதாரணத்திற்கு, கர்த்தர் திருமணத்தை ஆதியில் (ஆதியாகமம்) ஏற்படுத்தினார். அது ஏற்படுத்தப்பட்டது ஆதாம், ஏவாளை அவர் படைத்தகாலத்தில். அதற்குப்பிறகு வந்திருக்கும் வரலாற்று மாற்றங்கள், நடைமுறை சமுதாயப்பண்பாட்டு மாற்றங்களுக்கு இசைந்துபோகும்விதத்தில் திருமணத்திற்கு நாம் புது விளக்கங்கொடுக்க முடியுமா? கூடாது.
ஆண்டவர் ஆதியில் மனித சமுதாயத்தில் ஆணையும் பெண்ணையும் மட்டுமே படைத்தார். இன்று உலக சமுதாயங்கள் போட்டி போட்டுக்கொண்டு மூன்றாம் பால் என்று ஒன்றை உண்டாக்கி, பிறக்கின்ற எவரும் தங்கள் விருபத்திற்கேற்ப தங்களை ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்றும், தன்னினச் சேர்க்கையும், தன்னினத் திருமணமும் செய்துகொள்வதில் தப்பில்லை என்றும் கூறி சமுதாயத்தில் இந்த மோசமான, இழிவான நடத்தைகளைத் திணிக்கப் பார்க்கின்றபோது வேதம் போதிக்கும் ஆண், பெண் வேறுபாட்டிற்கும், திருமணத்திற்கும் நாம் காலத்திற்கும் பண்பாட்டு மாற்றங்களுக்குமேற்றபடி சூழிசைவுபடுத்தி விளக்கங்கொடுக்க முடியுமா? முடியவே முடியாது. அப்படிக் கொடுப்பது வேத விளக்கவிதியாக, தவறாக சூழிசைவுபடுத்தலைப் பயன்படுத்துவதோடு, வேதத்தை நாம் நினைத்தபடி மாற்றி அமைத்துக்கொள்ளும் பாவச்செயலுமாகும்.
கர்த்தர் வேதத்தின் மூலம் தரும் கட்டளைகளையும், போதனைகளையும் அவை தரப்பட்ட கால வரலாற்று, மொழிஇலக்கண அடிப்படையில் ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கின்றபோதும், அந்தப்போதனைகளை நம்காலத்து பண்பாட்டு நடைமுறைக்கேற்ப மாற்றிக்கொள்ளுவது வேதவிளக்கவிதிகளுக்கு முரணான செய்கை. உதாரணத்திற்கு, 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும், திருச்சபையில் போதகர்களை நியமிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் நமக்குப் போதிக்கிறார். போதகர்கள் அல்லது மூப்பர்கள் என்ற பெயர்கள் நம் காலத்துக்குப் பொருந்தாது என்று நாமே தீர்மானித்து, அவை சூழிசைவுபடுத்தப்பட வேண்டும் என்று, நம் காலத்தில் ‘தலைவர்’ (President) என்ற பெயரே பொதுவில் இருக்கிறது என்பதற்காக நாம் சபைப்போதகர்களை பிரசிடென்ட் என்று அழைக்க முடியுமா? முடியாது, அப்படிச் செய்வது வேதத்தை சிதைத்து அதை மீறுகிற செயல். கர்த்தரின் சித்தம் இதுதான் என்று தீர்மானிப்பது நம்காலத்து வழக்கமோ, பண்பாடோ அல்ல. அதை வேதமே தீர்மானிக்கிறது. இதேபோலத்தான் உதவிக்காரர்கள் என்ற திருச்சபைப் பணிக்கும், நம்காலத்துக்குரிய வேறுபெயரைப் பயன்படுத்தும் அதிகாரம் நமக்கில்லை. இவற்றில் இருந்து வேதவிளக்க விதிமுறையாக சூழிசைவுபடுத்தும் பெருந்தவறைச் செய்யக்கூடாது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் நல்லது.
புதிய ஏற்பாட்டின் சில பகுதிகளில் (1 கொரிந்தியர் 7:20-24; எபேசியர் 6:5-8; 1 தீமோத்தேயு 6:1:2; 1 பேதுரு 2:18-21) அன்று அடிமைகளாக (slaves) இருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய நிலையிலேயே இருக்கவேண்டும் என்றும், தங்களுக்கு மேலாளர்களாக இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகள் தமிழ் வேதத்தில் ‘அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர்’ (1 கொரிந்தியர் 7:20-24) என்றும், வேலைக்காரர் (எபேசியர் 6:5; 1 பேதுரு 2:18) என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சரியல்ல. இந்த இடங்களில் மொழிபெயர்ப்பாளன் (Translator) தன் கடைமையைச் செய்யாமல் வேதத்திற்கு விளக்கங் கொடுக்கிறவனாகிவிடுகிறான் (Interpreter). வேதமொழிபெயர்ப்பாளனின் பணி உள்ளதை உள்ளபடி எபிரெய, கிரேக்க மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பது மட்டுமே; வியாக்கியானம் செய்வதல்ல. இந்த இடங்களில் மொழிபெயர்ப்பாளன் உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்காமல் அந்த வார்த்தைக்கு அவனுடைய காலத்து சமூகபண்பாட்டின் அடிப்படையில் ஆபத்தான சூழிசைவுபடுத்தலைச் செய்து விளக்கியிருக்கிறான். அதாவது, அவன் வாழ்ந்த காலத்து சமூகப் பண்பாடு இந்த இடத்தில் வேதத்தை ஆள்கிறதாக இருக்கிறது. இதே தவறை சில ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் காண்கிறோம்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் முதல் நூற்றாண்டில் வழக்கத்தில் இருந்த அடிமைகளைப்பற்றி விளக்குகிறதே தவிர தற்காலத்தில் இருக்கும் ‘வேலைக்காரர்களைப்’ (servants) பற்றியல்ல. தற்காலத்தில் சமூகப்பண்பாட்டில் அடிமைத்தனம் அதிகாரபூர்வமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகவும், இன்று நம் மத்தியில் வேலைக்காரர்களைத்தான் காண்கிறோம் என்பதற்காகவும் வேதத்தை மாற்றி எழுதவோ அதற்கு மறுவிளக்கம் கொடுக்கவோ எவருக்கும் உரிமை இல்லை. அப்படிச் செய்வதே ஆபத்தான சூழிசைவுபடுத்தல். அப்படியானால் இந்தப் பகுதிகளை 21ம் நூற்றாண்டு சமூகப் பண்பாட்டில் எப்படி விளங்கிக்கொள்ளுவது? அந்தக் காலத்தில் அடிமைகள் எப்படித் தங்களுக்கு மேலாளர்களாக இருந்தவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படிந்து நடந்துகொண்டார்களோ அதேவிதமாக நாமும் (அதிகார அமைப்புக்குக் கீழிருக்கும் அனைவரும்) இன்று அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். அதனால்தான் இந்தப் பகுதிகள் இயேசு கிறிஸ்துவை நமக்கு இந்த விஷயத்தில் உதாரணம் காட்டுகின்றன. ஏனெனில், இறையாண்மைகொண்ட இயேசு தேவனும் மனிதனுமாக இந்த உலகத்தில் இருந்தபோதும் அதிகாரங்களுக்கு எதிர்த்து நிற்காமல் அவற்றிற்கு கீழ்ப்படிந்து நடந்தே தனக்குப் பிதா அளித்திருந்த பொறுப்பைப் பூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஆபத்தான சூழிசைவுபடுத்தலில் ஈடுபடுகின்ற அதிகப்பிரசங்கிகள் அதிகாரங்களை எதிர்ப்பது இன்றைய சமூகப்பண்பாடாயிருப்பதாலும் (பின்நவீனத்துவம¢), தீய அதிகாரங்களை எதிர்ப்பதில் தப்பில்லை (Liberation theology) என்ற உலகக் கண்ணோட்டத்தாலும் இந்தப் பகுதிகளில் தங்கள் சொந்தக் கருத்தைத் திணித்து விளக்கங்கொடுக்கப் பார்க்கிறார்கள். அது வேதநிந்தனை செய்யும் விளக்கமாகும்.
1 கொரிந்தியர் 11:2-16 வரையுள்ள வசனங்களில் முதல் நூற்றாண்டு சமூகப் பண்பாட்டில் மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையும், பெண் ஆணுக்கு முன் அமைதலோடு நடந்துகொள்வதையும் வெளிப்படுத்த தலையை மறைத்துக்கொள்ளும் வழக்கமிருந்ததை பவுல் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில் அதற்கு வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை “cover”. ஆங்கில வேதநூல்களில் அப்படியே இருக்கிறது. ஆனால், அது எத்தகையது என்பதை பவுல் நமக்கு விளக்கவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பில் முக்காடு (மறைத்தல், மூடுதல் என்றிருந்திருக்க வேண்டும்) என்றிருக்கிறது. அது என்ன என்பதை அறிந்துகொள்ள அன்றைய பண்பாட்டை ஆராயவேண்டியிருக்கிறது. அதைத் தவிர்க்கமுடியாது. இருந்தபோதும், அந்தத் தலையை மூடுதல் அல்லது மறைத்தல் ஓர் அடையாளமாகவே இருந்திருக்கிறது. அந்த அடையாளம் தலையை மறைக்கும் துணியாக இருந்திருக்கலாம் அல்லது தலையை இயற்கையாக மறைக்கும் தலைமயிராகவும் இருந்திருக்கலாம். அந்த அடையாளத்துக்குக் காரணம் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியவேண்டும் என்ற வேதபோதனையே. ஏனெனில், இந்த வேதப்பகுதி ஆணுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைமை ஸ்தானத்தைப்பற்றியே விளக்குகிறது. அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிவதன் அடையாளமே அந்த மறைத்தல். இதை இன்றைய சமூகப்பண்பாட்டில் எப்படி நடைமுறையில் பின்பற்றுவது என்று சிந்திக்கும்போது நாம் உடனடியாக இன்று எந்தவிதமாக தலையைப் பெண்கள் மறைத்துக்கொள்கிறார்கள் என்று சுற்றிவரப்பார்த்து முக்காட்டைப் போட்டுக்கொள்ளுவது தவறான சூழிசைப்படுத்துதலுக்கு உதாரணம். இந்தப் பகுதி முக்காடு போடுவதை முக்கியப்படுத்தவில்லை; அதிகாரத்துக்கு அடங்கி நடப்பதையே விளக்குகிறது. இன்றைய சமூகப் பண்பாட்டில் எந்தப் பெண்ணும் கணவனின் தலைமைத்துவத்துக்கு பணிந்து நடப்பதை அடையாளமாகக் காட்ட முக்காடு போடுவதில்லை. உண்மையில் இந்தப் பகுதிக்கும் முக்காட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்படி நான் சொல்வதுகூட சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக உண்மையை மறைக்க முடியாது. மாட்டைவிட்டுவிட்டு அதன் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கும் கதைதான் பெண்கள் சபைக்கு வரும்போது முக்காடு போடுவது. இது தவறான சூழிசைவுபடுத்தலுக்கு இன்னொரு உதாரணம்.
வேதத்தின் சில இடங்களில் ஒருவிஷயத்தை நேரடியாக விளக்காமல் மறைவாக வித்தியாசமான மொழிநடையில் விளக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். உதாரணத்திற்கு 1 தீமோத்தேயு 2:8ல், ‘பரிசுத்தமான கைகளை உயர்த்தி’ என்ற பதங்களைக் காண்கிறோம். இது திருச்சபையில் ஜெபிக்கும்போது செய்யவேண்டியதாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் பரிசுத்தமான கைகள் என்ற வார்த்தைப்பிரயோகம் எழுத்துபூர்வமாக (literal) எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதல்ல. ஏனெனில் பரிசுத்தமான கைகளைக் கொண்டவர்கள் எவரும் இல்லாதது மட்டுமல்ல, அந்தமுறையில் மனிதனுடைய கரங்கள் வேதத்தில் ஏனைய பகுதிகளில் விளக்கப்படவில்லை. ஆகவே, இந்த வார்த்தைப்பிரயோகம் எதைக்குறிக்கிறது என்பதை அது காணப்படும் ஜெபம் குறித்த சந்தர்ப்பத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது நம்முடைய பரிசுத்தமான இருதயத்தின் அவசியத்தையும், பரிசுத்தமான எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டியதையும், பரிசுத்தத்தை நினைவூட்டும் வகையில் நம்முடைய அங்க அசைவுகளும், செயல்களும் ஜெபத்தின்போது இருக்கவேண்டியதை விளக்குவதற்காக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திருச்சபை ஜெபத்தில் ஈடுபடுகிற திருச்சபைத் தலைவர்கள் பரிசுத்தமான மனிதர்களாக இருக்கவேண்டும் என்பதையும் குறிப்பதாக இருக்கிறது. இந்த இடத்தில் நாம் இந்தப்பகுதியை சூழிசைவுபடுத்தவில்லை. அதற்குரிய நியாயமான விளக்கத்தையே அறிந்துகொள்ளுகிறோம்.
மேலே விளக்கியதுபோலவே புதிய ஏற்பாட்டின் நான்கு பகுதிகளில் (ரோமர் 16:16; 1 கொரிந்தியர் 16:20; 2 கொரிந்தியர் 13:12; 1 தெசலோனிக்கேயர் 5:26) ‘பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்’ என்று சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதையும் நாம் ஒருபோதும் எழுத்துபூர்வமாக எடுத்து விளக்கக்கூடாது. ஏனெனில், முதலில் அப்படியொரு முத்தத்தைப் பற்றி எவரும் கேள்விப்பட்டதில்லை. வேதமும் அப்படிப்பட்டதொரு முத்தம் இருப்பதாக வேறெந்தப்பகுதிகளிலும் விளக்கவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்ளுவது? இந்த இடத்தில் சூழிசைவுபடுத்தலைச் செய்து நம் பண்பாட்டிற்கு ஏற்ற ஒன்றை அறிமுகப்படுத்துவது முறையான வேதவிளக்க விதியாகாது. அப்படிச் செய்வது தவறு. இந்த முத்தம் நிச்சயமாக இது உலக சுகத்துக்குரிய முத்தத்திலிருந்து வேறுபட்டது. அத்தோடு அது புதிய ஏற்பாட்டில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுவதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. நவீனகால சமுதாயத்தில் வாழ்த்துத் தெரிவிக்கும்போது கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறோம் அல்லது கைகுலுக்குகிறோம். அதற்கு இணையானது இந்த வாழ்த்துத்தெரிவிக்கும் முறை. அத்தோடு இது கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கவேண்டிய அந்நியோன்யமான உறவின் அடையாளமான பாசத்துக்குரிய வாழ்த்துதலையும் குறிக்கும். இந்தவகையில் சில விஷயங்கள் வேதத்தில் நாம் எழுத்துபூர்வமாக எடுத்துக்கொள்ளாமல் அவை எதைக் குறிக்கின்றன என்பதைக் கவனத்தோடு ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவற்றிற்கும்கூட வேதமே ஏனைய பகுதிகளில் காணப்படும் விளக்கங்களின் மூலம் அவை எதைக்குறிக்கின்றன என்பதை விளங்கிக்கொள்ளத் துணை செய்கின்றது. இந்தப் பகுதிகளை விளங்கிக்கொள்ளாமல் தவறாக சூழிசைவுபடுத்துகிறோம் என்று கன்னாபின்னாவென்று எதையாவது அறிமுகப்படுத்துவது வேதத்தை சிதைக்கும் காரியத்தில்போய் முடியும்.
வேதபூர்வமான சூழிசைவுபடுத்தல்
பழங்காலத்து சமூகப்பண்பாட்டில் வளர்ந்திருக்கும் கர்த்தரின் மீட்பின் வெளிப்படுத்தலை அந்தக் காலத்துக்கு முற்றிலும் வேறுபட்டுக் காணப்படும் இன்னொரு காலத்துக்குக் கர்த்தர் தந்திருப்பது மட்டுமல்லாமல், இந்த இரு காலங்களுக்கும் வித்தியாசமான காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளனோ அல்லது பிரசங்கியோ அதை எப்படி விளங்கிக்கொள்ளுவது? இங்கே மூன்றுவித கலாச்சாரப் பண்பாடுகள் இருப்பதைக் கவனிக்கிறோம். இந்தக் கலாச்சாரப் பின்னணியில் தரப்பட்டிருக்கும் வேதவசனங்களை உண்மையாக தவறற்ற முறையில் விளங்கிக்கொள்ள வேண்டிய பெரும் கடமை நம்முன் நிற்கிறது.
வேதத்தில் எந்தப் பகுதியிலும் சூழிசைவுபடுத்தல் என்ற பதத்தைக் காணமுடியாது; இது 20ம் நூற்றாண்டில் வழக்குக்கு வந்த சொற்பிரயோகம் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இதற்குரிய ஆங்கில வார்த்தையான contexualisation, இலத்தீன் வார்த்தையான contextus என்ற மூல வார்த்தையில் இருந்து பிறந்தது. இதற்கு எழுத்துபூர்வமான அர்த்தம் ‘இரண்டைச் சேர்த்து நெய்வது’ என்பதாகும். கிறிஸ்தவத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறபோது சாதாரணமாக அவிசுவாச உலகில் இதற்கு இருக்கும் அர்த்தத்தோடு பயன்படுத்தக்கூடாது. அத்தகைய கருத்து வேதத்தோடு பொருந்திவராது. இரண்டைச் சேர்த்து இணைப்பது என்பது சமயசமரசப் பிணைப்பாகிவிடும் (syncretism). கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இந்தப் பதம், சுவிசேஷத்தைப் புறஜாதி இனங்கள் மத்தியில் அறிவிக்கும்வேளையில் அந்த இனத்துப் பண்பாட்டு, நடைமுறைகளை மனதில் வைத்து வேதவசனங்களையும், போதனைகளையும் அந்த இனத்தாருக்குப் புரிகின்றவகையில் விளக்கவேண்டும் என்று மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த அர்த்தத்திற்கு மேல்போய் இதற்கு விளக்கங்கொடுப்பது பேராபத்தில் முடியும். இதற்கு ஓர் உதாரணத்தைத் தரலாமென்று நினைக்கிறேன்.
புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் பெண்கள் கணவன்மாருக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிக்கிறது. அதேவேளை பொது இடங்களிலும் ஆண்களை மதித்தே நடக்கவேண்டும் என்ற போதனை இருக்கிறது. இது முதல் நூற்றாண்டும் காலத்து சமூகப்பண்பாட்டின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது. இதேபோதனை ஆதியாகமத்தில் இருந்து பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் அந்தந்த காலத்து சமூகப்பண்பாட்டிலும் விளக்கப்பட்டிருக்கிறது. நம்காலத்து சமூகப்பண்பாடு முன்னே குறிப்பிட்ட சமூகப்பண்பாட்டைவிட வேறுபட்டது. இங்கே மூன்று சமூகப்பண்பாடுகளைக் காண்கிறோம். சமூகப்பண்பாடுகள் மூன்றிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன, அவை அடிக்கடி மாறியிருக்கின்றன; ஆனால் போதனை ஒன்றுதான். மூன்றாவதான நம்காலத்து சமூகப்பண்பாட்டில் இதேபோதனையை (பெண்கள் ஆண்களை மதித்து நடக்கவேண்டும் என்பதை) விளக்கும்போது வேதப்பிரசங்கி நம்காலத்து சமூகப்பண்பாட்டில் ஆண்கள், பெண்கள் உறவுமுறையில் காணப்படும் அம்சங்களை கவனத்தில் வைத்திருக்கவேண்டும். அதாவது, இன்று பெண்ணீயம், ஆணுக்கு சமமான உரிமையைப் பெண்கள் கோருதல், ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்தல், ஆணாகவோ, பெண்ணாகவோ பிறந்தபின் ஒருவர் தன்மையை மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை, மூன்றாம் பால் என்பது பிறப்பிலேயே உண்டாகும் ஒன்று, அதிகாரங்களுக்கு அடங்கக்கூடாது என்ற egalitarian (எல்லோரும் சமம்) மனப்பான்மை என்பதுபோன்ற புதிய அம்சங்களெல்லாம் நாம் வாழும் சமுதாயத்துப் பண்பாட்டு நம்பிக்கையாக இருக்கிறது. அத்தோடு நம்முன்னால் சபையிலோ கூட்டங்களிலோ அமர்ந்து செய்திகேட்கும் அவிசுவாச மக்களிலும், இளைஞர்களிலும்கூட இதெல்லாம் ஆழமான நம்பிக்கையாகப் பதிந்திருக்கலாம் என்ற அறிவார்ந்த உணர்வோடு அத்தகைய சமூகப் பண்பாட்டு மாற்றங்களுக்கு மத்தியில் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடக்கவேண்டும், பெண்கள் ஆண்களை மதித்து நடக்கவேண்டும் என்ற கர்த்தரின் மாற்றமுடியாத எக்காலத்துக்கும் உரிய போதனையை, ஏன் அந்தப்போதனை இன்றைய சமூகத்துப் போக்குக்கு வளைந்து போகக்கூடாது, தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை உதாரணங்களோடு விளக்கி அதன் பயன்பாட்டையும் பிரசங்கிக்க வேண்டும்.
இந்த 21ம் நூற்றாண்டு இனப்பண்பாடு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட அதிகம் மாற்றமடைந்திருக்கிறது. இந்நூற்றாண்டு மக்களின் சிந்தனைகள் மட்டுமல்லாது நடைமுறைகளும் மாற்றமடைந்திருக்கின்றன. அக்காலங்களில் மக்கள் பேசக்கூச்சப்பட்டிருக்கின்ற மொழிநடை, எழுத்தில்வடிப்பதற்கு அனுமதியில்லாமலிருந்த சிந்தனைப்போக்கு மற்றும் நடைமுறைகள் மட்டுமல்லாது புதிய அம்சங்களும் இந்நூற்றாண்டு சமுதாயத்தில் புகுந்திருக்கின்றன. அன்றில்லாமலிருந்த தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்கள், செய்திப்பறிமாற்றக் கருவிகள், மொழிநடை என்று புதிதாக உருவாகியுள்ள மாற்றங்களுக்கும் அளவில்லை. இவைமட்டுமல்லாமல் சமூகப் பண்பாட்டிலும் மாற்றங்கள் உருவாகியுள்ளன. பின்நவீனத்துவ சமுதாயமாக தற்கால சமுதாயம் இருந்துவருகிறது. இத்தகைய மாற்றங்களைத் தன்னுள்கொண்டு வாழ்கின்ற இன்றைய சமுதாயத்தில், யூத-கிரேக்க வரலாற்று சமுதாயப்பின்னணியில் வளர்ந்த சுவிசேஷத்தையும், வேதபோதனைகளையும் விளக்குகின்றபோது அவற்றில் எந்த அடிப்படை மாற்றங்களையும் செய்யாமல், இன்றைய சமுதாயம் அவற்றைப் புரிந்துகொள்ளும்படியாக இன்றைய சமுதாய சூழ்நிலையில், அதன் மொழியில், அதன் பாணியில் விளக்கவேண்டிய அவசியத்தையே கிறிஸ்தவத்தில் சூழிசைவுபடுத்தல் என்ற பதத்தின் மூலம் குறிப்பிடுகிறோம். உதாரணத்திற்கு, தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் நான் சுவிசேஷ செய்தியளித்திருக்கிறேன். அவற்றில் சில கிராமங்களில் வாழும் மக்களுக்கு நகரத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் பொதுஅறிவுகூட கிடையாது. நகரத்தையே பார்க்காதவர்களும் அங்கிருந்தார்கள். இவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கின்றபோது, எந்தப் பகுதியைப் பயன்படுத்தி அதைச் செய்கிறேனோ அந்தப் பகுதியின் அடிப்படை அம்சங்கள், போதனைகள் எதையும் நான் மாற்றியமைக்காமல், அந்த மக்களுக்குப் புரியக்கூடிய, அவர்களுக்குப் பரிச்சயமான மொழிநடையில், அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய அன்றாட கிராமத்து உதாரணங்களைப் பயன்படுத்தியே எப்போதும் பிரசங்கித்திருக்கிறேன். சுவிசேஷம் அவர்களைப் போய் அடையவேண்டுமானால் எனக்கு அவர்களைத் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இருந்தது. அவர்களுடைய எண்ணப்போக்குகள், அவர்களுடைய தேவைகள், அவர்களுடைய குடும்ப, சமூக வாழ்க்கை, அவர்கள் பயன்படுத்தும் அன்றாட மொழிநடை அனைத்திலும் எனக்குப் பரிச்சயம் இருக்கவேண்டியிருந்தது. வேத சுவிசேஷத்தை (அதன் வரலாறு, சமூகப்பின்னணி, இறையியல் எதையும் மாற்றாமல்), இக்காலத்து சமுதாயத்துக்கு இன்றியமையாத போதனை என்பதை அவர்களுக்குப் புரியும்படி அவர்கள் பாஷையில் இருதயத்தைத் தொடுகின்றவிதத்தில் சொல்வதையே சூழிசைவுபடுத்தல் என்று அடிப்படையில் கிறிஸ்தவத்தில் விளக்குகிறோம். இதற்கு அப்பால் போவது வேதபூர்வமான சூழிசைவுபடுத்தல் அல்ல.
பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்குப் பலியாகியிருக்கும் தற்கால கிறிஸ்தவர்களில் ஒருபகுதியினர் நம்காலத்துப் பண்பாட்டுக் கண்ணாடியை அணிந்து, அந்தப்பண்பாட்டிற்கு வக்காலத்து வாங்கி, அதை நியாயப்படுத்தி அந்தப் பண்பாட்டிற்கு ஏற்றமுறையில் அதற்கு இணங்கிப்போகும் விதத்தில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு இன்றைய பின்நவீனத்துவ சமுதாயத்தில் மேலைத்தேய இசையில் ராப், ஹிப்ஹொப், ஹெவி மெட்டல் போன்றவை அறிமுகமாகியிருக்கின்றன. இவற்றை நியாயப்படுத்தி இசையில் நல்லது கெட்டது இல்லை என்ற அனுமானத்தில் திருச்சபை ஆராதனையில் இத்தகைய இசையைப் பயன்படுத்தி வருவதை சபைசபையாகக் காணுகிறோம். இன்று பெண்ணீயம், பெண்களுக்கு சமஉரிமை மற்றும் ‘மீ-டூ’ இயக்கம் (பெண்கள் தாங்கள் எவ்வாறு ஆண்களால் அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று வெளிப்படையாக மீடியாக்கள் மூலம் அறிவிப்பது) போன்றவை சமூகத்தில் வழமையாக இருப்பதால் சமூகப்பண்பாட்டிற்கு ஏற்ப வேதவிளக்கமளித்து பெண்களுக்குச் சம இடத்தைக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பெண்களைச் சபைகளில் பிரசங்கம் செய்யவிடுவதும், வேதத்தை வாசிக்க வைப்பதும், ஏன் போதகர்களாக நியமிப்பதும் மோசமான சூழிசைவுபடுத்தலின் விளைவு. இதற்கு மாறாக வல்லமையான கர்த்தரின் வேதவசனங்களை அவர் தந்திருக்கும் அடிப்படைப் போதனைகளில் எந்தமாற்றத்தையும் ஏற்படுத்தாமல் நம்காலத்து மக்கள் விளங்கிக்கொள்ளுகிறவகையில் விளக்கவேண்டியதே நம்கடமை. வேதபோதனைகளின்படி பண்பாட்டுச் சீரழிவுகளைத் திருத்தியமைத்து வாழமறுத்து, ‘இதெல்லாம் நம்ம ஊருக்கு சரிப்பட்டு வராது’ என்கிற உதாசீனப்போக்கு இயேசுவை நேசிக்கும் கிறிஸ்தவனுக்கு இருக்கக்கூடாது. எந்தக் காலமாக இருந்தாலும், எத்தகைய மாற்றங்கள் பண்பாட்டில் ஏற்பட்டாலும் நம்மை ஆளுவது வேதமாகத்தான் இருக்கவேண்டும். வேதபோதனைகள் காலத்தைக் கடந்தவை. அவற்றைப் பண்பாடு ஆளவிடக்கூடாது.