ஆங்கிலேயரான சார்ள்ஸ் டார்வின் தன்னுடைய பரிணாமத் தத்துவத்தை 1859ல் தன் நூலொன்றில் வெளியிட்டார். அது எந்தளவுக்கு உலக சமுதாயத்தைப் பாதிக்கப்போகிறது என்பது டார்வினுக்கே தெரிந்திருக்க வழியில்லை. இத்தனை காலத்துக்குப் பிறகும் டார்வினின் கோட்பாடு உலக சமுதாயத்தைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. சமுதாயத்தை அது தொடாத பகுதியில்லை என்றே கூறவேண்டும். கிறிஸ்தவர்கள்கூட டார்வினின் கோட்பாட்டின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அந்தளவுக்கு மனித சமுதாயத்தை டார்வினின் கோட்பாடுகள் பாதித்தன; பாதித்தும் வருகின்றன. டார்வினின் கோட்பாடு பிசாசினால் பயன்படுத்தப்பட்டு வரும் வல்லமையான கருவி என்பதை எந்தக் கிறிஸ்தவனும் மறுக்கமுடியாது. டார்வினின் கோட்பாட்டில் எந்த மாற்றத்தைச் செய்தும் கிறிஸ்தவர்கள் பயன்படுத்த வழியில்லை. அந்தளவுக்கு அது கிறிஸ்தவத்தின் பேரெதிரியாக இருக்கிறது. டார்வினின் கோட்பாடுகள் அதிரடியாகப் பரவ ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் அதை எதிரியாகப் பார்க்க அநேக கிறிஸ்தவர்கள் தவறினார்கள். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அநேக இறையியல் அறிஞர்களையும், இறையியல் கல்லூரிகளையும் டார்வினின் கோட்பாடுகள் பாதித்தன.
ஸ்கொட்லாந்தில் பிரபலமான இறையியலறிஞராக இருந்த தொமஸ் சார்மர்ஸ் டார்வின் வழியில் சிந்தித்து உலகத் தோற்றத்தின் காலம்பற்றி விளக்கங்கொடுக்கும் இடைவெளிக் கோட்பாட்டுக்குப் (Gap theory) பலியாகியிருந்தார். இந்தக் கோட்பாடு வேதத்தையும், விஞ்ஞானத்தையும் இணைத்து விளக்கங்கொடுக்க முயல்கிறது. அதாவது, ஆதியாகமம் 1:1ல் நாம் வாசிக்கிறபடி கடவுள் உலகத்தைப் பூரணமாகப் படைத்தார் என்றும், 1:2ல் இருந்து 2:3வரையுள்ள பகுதி உலகத்தைக் கர்த்தர் சீராக்கியதைப்பற்றி விளக்குகிறது என்றும் இடைவெளிக் கோட்பாடு விளக்குகிறது. முதலாவது பூரணப்படைப்பு கர்த்தருடைய நியாயத்தீர்ப்பினால் சின்னாப்பின்னமாகி மோசமான நிலையை அடைந்து எவரும் அதில் வாழமுடியாத நிலை ஏற்பட்டதென்றும், 1:2ன் மூலம் கடவுள் மறுபடியும் தன் படைப்பை சீராக்கினார் என்றும் இது விளக்குகிறது. கடவுளின் நியாயத்தீர்ப்புக்குக் காரணம் உலகம் பாவத்தில் விழுந்ததே என்றும், அதற்கு பிசாசு காரணம் என்றும் இது விளக்குகிறது. உலகம் மோசமான நிலையை அடைந்ததாலேயே உலகம் முழுவதும் தண்ணீரால் மூடப்பட்டிருந்ததென்று இரண்டாம் வசனத்தில் வாசிக்கிறோம் என்றும் இந்தக் கோட்பாடு விளக்குகிறது.
அத்தோடு முதலாவது வசனத்திற்கும் இரண்டாம் வசனத்திற்கும் இடையில் மில்லியன் ஆண்டுகளுக்கு மேலான இடைவெளி இருந்ததென்றும், இரண்டாம் தடவை கடவுள் தன் படைப்பை சீராக்கி சரிப்படுத்தியபோது அதைக் குறைந்தகால அளவில், அதாவது ஆறு நாட்களில், சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் செய்துமுடித்தார் என்றும் இக் கோட்பாடு விளக்குகிறது. ஆரம்பகாலப் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியின் பிரபல அறிஞர்களாக இருந்தவர்கள்கூட இந்த இடைவெளிக்கோட்பாட்டிற்குப் பலியாகியிருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இன்றும்கூட கர்த்தர் 24 மணி நேரங்கொண்ட ஆறுநாட்களில் உலகத்தைப் படைத்தார் என்ற போதனையை ஆணித்தரமாக ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் இருக்கும் இறையியல் அறிஞர்களும் போதகர்களும் இருந்துவருகிறார்கள். அந்தளவுக்கு டார்வினுடையதும் அவன் வழியில் புறப்பட்ட கோட்பாடுகளின் செல்வாக்கும் பலரூபங்களில் தொடர்ந்திருந்து வருகிறது.
இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், வேதத்தின் முதல் நூலான ஆதியாகமத்தின் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தத்தான். வேதத்தை இல்லாமலாக்குவதற்கு பிசாசு எப்போதுமே முயற்சி எடுத்துவந்திருக்கிறான். 19ம் நூற்றாண்டில் உருவான டார்வினின் பரிணாமத்தத்துவம் இந்த விஷயத்தில் பிசாசினால் பயன்படுத்தப்பட்டு வரும் வல்லமையான ஆயுதம். என்றுமில்லாதவகையில் இந்த 21ம் நூற்றாண்டில் ஆதியாகமத்தையும், முழு வேதத்தையும் படிப்படியாக அழிப்பதற்கு பிசாசு பெருமுயற்சி எடுத்து வருகிறான். அதில் அவன் வேதத்தின் முதல் நூலான ஆதியாகமத்தை அதிகம் தாக்கி வருகிறான். ஆதியாகமத்தை செல்லாக்காசாக்கிவிட்டால் முழு வேதத்தையும் அழித்துவிடலாம், அதாவது அதன் மீது கிறிஸ்தவர்களுக்கும் ஏனையோருக்கும் இருக்கும் நம்பிக்கையை அழித்துவிடலாம் என்று பிசாசு நடவடிக்கைகள் எடுத்துவருகிறான்.
முக்கியமாக ஆதியாகமத்தை செல்லாக்காசாக்குவதில் பிசாசுக்கு என்ன நன்மை இருக்கிறது? வேதத்தின் மூல போதனைகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது ஆதியாகமமே. ஆதியாகமத்தில் தான் பெரும்பாலான அடிப்படைப் போதனைகளுக்கான அத்திவாரம் போடப்பட்டிருக்கிறது. ஆதியாகமத்தில் இருக்கும் அந்த அடிப்படைப்போதனைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்:
- உலகத்தோற்றம் பற்றிய விளக்கம்
- ஆணும், பெண்ணுமாக மனிதனின் படைப்பும் அவர்களுடைய தன்மை, பொறுப்பு பற்றிய விளக்கம்
- படைப்பில் எக்காலத்துக்குமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நியமங்கள் – உழைப்பு, ஓய்வுநாள், திருமணம்
- சாத்தானைப்பற்றிய விளக்கம்
- பாவத்தைப்பற்றிய விளக்கம்
- மனிதனின் வீழ்ச்சிபற்றிய விளக்கம்
- சுவிசேஷம் – ஆதியாகமம் 3:15
மேலே நாம் கவனித்திருக்கும் அனைத்தும் வேதத்தின் அடிப்படைப் போதனைகள். முழு வேதத்திலும் இந்தப் போதனைகள் பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களுக்கு ஆதியாகமமே ஆதாரமாக இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவும், பவுலும், பேதுருவும் இந்த விஷயங்கள் பற்றிய தங்களுடைய போதனைகளுக்கு ஆதியாகமத்தையே ஆதாரமாகக் காட்டியுள்ளனர். மத்தேயு 5-7வரையுள்ள அதிகாரங்களில் காணப்படும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தை வாசித்துப் பாருங்கள். நான் கொடுத்திருக்கும் பட்டியலில் இருக்கும் விஷயங்களில் சிலவற்றிற்கு இயேசு புதிய ஏற்பாட்டில் விளக்கங்கொடுப்பதைக் காண்கிறோம். இதேபோல் பவுலும், 1 தீமோத்தேயு 2:8-15வரையுள்ள வசனங்களில் ஆதியாகமம் முதலிரண்டு அதிகாரங்களின் அடிப்படையிலேயே புதிய உடன்படிக்கை காலத்திற்கான விளக்கத்தைத் தந்திருக்கிறார். 1 பேதுரு 3ல் ஆண், பெண் உறவுபற்றி விளக்கும் பேதுருவும் அந்தப்போதனைகளுக்கு அத்திவாரமாக ஆதியாகமத்தை நினைவுறுத்தி ‘பூர்வத்தில்’ (ஆதியில்) இப்படி நடந்திருக்கிறது என்று உதாரணங்காட்டி விளக்கமளிக்கிறார். புதிய உடன்படிக்கை காலத்தில் பெண்கள் சபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கங்கொடுக்கும் பவுல் 1 கொரிந்தியர் 14:34ல் ஆதியாகமத்தை நினைவூட்டி ‘வேதமும் அப்படியே சொல்லுகிறது’ என்றார். ஏனெனில் பெண்களின் சமுதாய நடத்தைக்கான அத்திவாரம் ஆதியாகமத்திலேயே போடப்பட்டுவிட்டது. புதிய ஏற்பாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்றவிதத்தில் அதை மாற்றியமைக்க முடியாது. இதற்கெல்லாம் காரணம் புதிய ஏற்பாட்டில் இயேசுவோ, பவுலோ, பேதுருவோ முற்றும் புதிதான போதனைகளைக் கொடுக்காமல் ஏற்கனவே அத்திவாரமிட்டுத் தரப்பட்டிருக்கும் ஆதியாகமத்தின் விளக்கங்களின் அடிப்படையிலேயே புதிய ஏற்பாட்டு வாழ்க்கைக்கான விளக்கங்களைத் தந்திருக்கின்றனர். இதைப் புதிய ஏற்பாட்டில் அநேக பகுதிகளில் காணலாம்.
ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களுக்கு எவராவது தவறான விளக்கங்களைக் கொடுத்தால் முழு வேதத்திற்கும் தவறான விளக்கங்கொடுப்பதில் போய் முடியும். ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களும் அந்தவிதத்தில் வேதபோதனைகளனைத்திற்கும் அத்திவாரமாக அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அதன் முதல் மூன்று அதிகாரங்களும் அதிமுக்கியமானவை. அந்த மூன்று அதிகாரங்களில்தான் உலகத்தோற்றத்தைப் பற்றியும், மனிதன் படைக்கப்பட்டவிதத்தைப்பற்றியும், பாவம் உண்டானவிதத்தைப் பற்றியும், அதன்காரணமாக ஏற்பட்ட மானுட வீழ்ச்சி பற்றியும், சுவிசேஷத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளுகிறோம். இவையனைத்திற்கும் அந்த மூன்று அதிகாரங்களே அடித்தளம். அதனால்தான் பிசாசு ஆதியாகமத்தைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டு வருகிறான். எந்தவிதத்தில் பிசாசு ஆதியாகமத்தைத் இக்காலத்தில் தாக்குகிறான் என்று கேட்கிறீர்களா? பின்வரும் வேதத்திற்கு முரணான நவீன பிரச்சனைகளைக் கவனியுங்கள்.
- பரிணாமத் தத்துவம் (Evolution)
- இயற்கையைத் தெய்வமாக வணங்கும் லிபரலிச சுற்றுப்புற சீர்திருத்தக் கோட்பாடு (Environmentalism)
- ஆண், பெண் வேறுபாட்டை அகற்றி, எவரும் தங்களுடைய இனத்தை சுயவிருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம் என்ற லிபரலிசக் கோட்பாடு.
- திருமணத்தை இல்லாமலாக்கி திருமணம் இல்லாமல் இணைந்து வாழலாம் என்ற லிபரல் போக்கு.
- ஓரினச் சேர்க்கையும், ஓரினத் திருமண பந்தமும்.
- ஆணுக்குக் கடவுள் கொடுத்திருக்கும் தலைமை ஸ்தானத்தை மறுதலித்து ஆணும், பெண்ணும் சமம் என்று வாதிக்கும் Egalitarian போக்கு.
- உழைப்புக்கு மதிப்புக்கொடுக்காமலும் எல்லோரும் உழைப்பதற்கு வழியேற்படுத்தாமலும் Socialism பேசும் போக்கு. சோஷியலிஸம் என்பது இருப்பவர்களிடம் (உழைப்பவர்களிடம்) இருப்பதைப் பிடுங்கி இல்லாதவர்களுக்கு (உழைக்காதவர்களுக்கு) கொடுப்பது.
- ஓய்வுநாளையும், ஆராதனையையும் எதிர்க்கும் போக்கு.
மேலே நான் குறிப்பிட்டிருக்கும் அத்தனையும் இந்த 21ம் நூற்றாண்டில் நமக்கு சோதோம், கொமோரா காலத்தை நினைவுபடுத்துகிறது இல்லையா? ஏன்? அந்தளவுக்கு பாவம் பெருகி அக்காலத்தை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது உலக சமுதாயம். இயற்கையை மனிதன் கடவுளாக ஆராதித்து சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாப்பதில் இன்று ஆக்ரோஷத்தோடு கவனம் செலுத்துகிறான். பசியால் வாடி வதங்கி இறந்துகொண்டிருப்பவைகளுக்குக்கூட அவன் அத்தனை அக்கறை காட்டுவதில்லை; கொலைகளும், கற்பழிப்பும், காட்டுமிராண்டித்தனமும் பெருகியோடுவதைக்கூட அவன் அந்தளவுக்கு பெரிதுபடுத்தவில்லை. ஓரினச்சேர்கைக்காகவும், அவர்களுக்கு திருமண உரிமை கோருவதற்கும், மூன்றாம் பால் என்று அவன் பெயர் வைத்திருக்கும் அரவாணிகளின் உரிமைக்காகப் பாடுவதிலும் அவன் காட்டுகின்ற அதீக அக்கறை அவனைத் தன்பாவ நிலையை உணரமுடியாதபடி வைத்திருக்கிறது. உழைப்பை ஆனந்தத்தோடு நாடாமல், நீதியானதைச் செய்து சம்பாதிப்பதில் கவனம் செலுத்தாமல் உழைப்பவர்களிடம் இருப்பதைப் பிடுங்கி அதில் சுகம் காண முயல்கிறான். அருமையாகக் கடவுளால் படைக்கப்பட்டிருக்கும் மனிதன், பாவத்தால் இன்று மானுடத்தை மிருகங்களைவிடக் கேவலமாகப் பார்க்கிறான். மனிதனுக்கு தான் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டு, அந்தச் சாயலைத் தொடர்ந்து தன்னில் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே இல்லாமல் தான் அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கும் மிருகங்களின் உரிமைக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறான். இத்தகைய அசிங்கப்போக்கில் போய்க்கொண்டிருக்கும் மனிதன் கடவுளை ஆராதிக்க மறுத்து ஓய்வுநாளைத் துப்புரவாக மதிக்காமல் நடந்துகொண்டிருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
கர்த்தருடைய வார்த்தையை நிந்தித்து, அவர் இல்லை என்று நிரூபிக்கப் பார்க்கும் வகையில் பாவகரமான சிந்தனைப்போக்கோடு போய்க்கொண்டிருக்கும் மனித சமுதாயம் வேதத்தையும், கிறிஸ்தவத்தையும் எள்ளிநகையாடிக் கொண்டிருக்கிறது. அது வரப்போகின்ற நியாயத்தீர்ப்பைப் பற்றிய உணர்வில்லாமல் நடந்துகொள்ளுகிறது. இந்த சமுதாயத்தில் சுவிசேஷத்தைச் சொல்லி கிறிஸ்தவ வாழ்க்கையைக் கர்த்தரின் மகிமைக்காக வாழவேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டிருக்கும் நாம் ஆதியாகமத்தையும், பழைய ஏற்பாட்டையும் துச்சமாக எண்ணக்கூடாது. இன்று அப்படி நடந்து ஆதியாகமமும், பழைய ஏற்பாடும் புதிய உடன்படிக்கைக்கால கிறிஸ்தவர்களுக்கு பயனில்லாதது என்று போதித்து வருகிற பிரசங்கிகளும், இறையியலறிஞர்களும் தங்களைப் புத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் பிசாசின் வலையில் விழுந்திருக்கிறார்கள்; பிசாசின் வேலையைச் செய்துவருகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் ஆதியாகமத்தை ஆழமாகப் படித்து சிந்திக்கவேண்டும். புதிய ஏற்பாட்டுப் போதனைகளோடு தொடர்புபடுத்திப்படித்து உலகத்தைப்பற்றிய தங்களுடைய எண்ணங்கள் வேதபூர்வமாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். கர்த்தரின் வார்த்தையை அதிகாரமாகக் காணாத உலக சிந்தனைகளுக்கு நம்முடைய இருதயங்களில் இடங்கொடுக்காது எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். வேதபூர்வமான எண்ணங்களை இருதயத்தில் வளர்த்து அவற்றின்படி நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய இருதயங்களைப் பாதுகாத்துக்கொள்ளுவதோடு இருந்துவிடக்கூடாது. நம்முடைய மனைவி, பிள்ளைகளும் அத்தகைய வேத எண்ணங்களை மட்டும் இருதயத்தில் கொண்டிருக்க அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.
சிந்திக்காமலும், எதையும் ஆராய்ந்து பார்க்காமலும் கிறிஸ்தவர்கள் இருக்கக்கூடாது. டெலிவிஷனில் கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது. அதை நடத்துகிறவர்கள் உலக சிந்தனை கொண்டவர்கள். அவர்களால் நமக்குப் பயனில்லை. அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை நம்பி எந்த நிகழ்ச்சியையும் நடத்துவதில்லை. கிறிஸ்தவர்கள் எது காதில் விழுந்தாலும் அவற்றை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல் வேதத்தை வைத்து ஆராய்ந்து பார்க்கவேண்டும். உங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கும், கல்லூரிக்கும் போய்வருகிறபோது எதைக் கேட்கிறார்கள், படிக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். வேதத்திற்கு எதிரான போதனைகளை இந்த உலகம் நம்மில் புகுத்துவதற்கு அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதன் வலையில் நாம் சிக்கிவிடக்கூடாது. தானியேலையும், அவனுடைய நண்பர்களையும் தங்கள் சமுதாயப்போக்கில் இழுப்பதற்கு பாபிலோனியர்கள் எத்தனை பாடுபட்டும் தானியேல் அதற்கு இடங்கொடுக்கவில்லையே. அவன் கிறிஸ்தவனைப்போல சிந்தித்தான்; கிறிஸ்தவனாக எல்லா இடங்களிலும் நடந்துகொண்டான். அதுபோலத்தான் நாமும் இருக்கவேண்டும்.
கிறிஸ்தவ வாலிபர்கள் இன்றைக்கு சமூகதளங்ளே வாழ்க்கை என்று இருந்து வருகிறார்கள். முகநூல், இன்ஸ்டகிராம், டுவிட்டர் என்று தங்கள் நேரமனைத்தையும் அதிலேயே செலவிடுகிறார்கள். சமூகதளங்களை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்துகிற மார்க் சக்கிள்பேர்க் போன்றோர் முழுமுற்றாக இந்த உலக சிந்தனைப்போக்கைக் கொண்டவர்கள். அவர்கள் கிறிஸ்தவ போதனைகளைத் தவிர வேறு அனைத்தையும் சமூகதளங்களில் அலைய விடுகிறவர்கள். பிசாசு அவர்களை அருமையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். கிறிஸ்தவ வாலிபர்கள் இதையெல்லாம் எண்ணிப்பார்க்காமல் சமூகதளங்களே கதியென்று இருந்துவருவது அவர்களுடைய வாழ்க்கைக்கு வந்திருக்கும் ஆபத்தாக இருக்கிறது. உலக சிந்தனை எங்கிருந்து, எந்த ரூபத்தில், எதன் மூலம், எந்த நேரத்தில் வந்தாலும் நீங்கள் விழிப்போடிருக்கவேண்டும். கிறிஸ்துவிலும், கிறிஸ்துவின் வேதத்திலும் உங்களுக்கிருக்கும் நம்பிக்கையைக் கெடுப்பதைத் தவிர பிசாசுக்கு வேறு என்ன வேலையிருக்கிறது? வாலிபர்களே ஜாக்கிரதையாயிருங்கள்! வஞ்சிக்கிறவன் உங்களுக்காக வலைவீசிக்கொண்டிருக்கிறான்; விழிப்போடிருங்கள். வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்; வேதபோதனைகளை மட்டும் நம்புங்கள். அவை மட்டுமே உங்களைக் கிறிஸ்துவில் உயர்த்தும். ஆதியாகமத்துக்கு வந்திருக்கிறது ஆபத்து! அதைத் தொலைக்கக் கங்கனம் கட்டிச் செயல்படும் பிசாசு உங்களைக் கர்த்தரிடம் இருந்து பிரிக்கப் பார்க்கிறான். அவன் வெற்றிபெற வழியில்லாதபடி உங்கள் இருதயத்தையும், வாழ்க்கையையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.