வேதத்தை விளங்கிக்கொள்ள இன்றியமையாத அம்சங்கள் – A.W. பின்க்

 அதிகாரம் 2

இதற்கு முந்திய அதிகாரத்தில், வேதத்தை விளக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்துப் பார்த்தோம். பரிசுத்த வேதத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியத்தின் அர்த்தத்தையும் ஆராய்ந்தறிய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதையும் கவனித்தோம். கடவுள் தன் வார்த்தையில் சொல்லியிருப்பவை மிக முக்கியத்துவமும், பெரும் மதிப்பும் கொண்டவை. இருந்தாலும், அதிலுள்ள போதனைகளை நாம் தெளிவாக அறியாமற்போனால், அதிலிருந்து நாம் எத்தகைய நன்மையை அடைய முடியும்? வேதத்திலுள்ள சில சொற்களுக்கு வேதத்திலேயே அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் இதை நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய ஏற்பாட்டின் முதல் அதிகாரத்திலேயே, இயேசு கிறிஸ்துவைக் குறித்து இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது, “அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” (மத்தேயு 1:23). மேலும், யோவான் 1:41ல், “மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்” என்றிருக்கிறது. மாற்கு 15:22, “கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்” என்கிறது. எபிரெயர் 7:2, “இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்” என்கிறது. வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும், நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. கர்த்தருடைய வேதம், வார்த்தைகள் மூலம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அவ்வார்த்தைகளுக்கான பொருளை நாம் அறியாதிருந்தால், அவற்றின் அர்த்தத்தை நாம் அறிந்துகொள்ள முடியாது. ஆகவே வேதத்தில் நாம் வாசிப்பவைகளின் பொருளை ஆராய்ந்தறிவதே நம்முடைய முதன்மையான பொறுப்பு.

வேதத்தை விளக்குவதற்கான சில விதிமுறைகளையும் கொள்கைகளையும் விளக்குவதற்கு முன், வேதத்தை விளங்கிக்கொள்ள முற்படுகிற ஒருவனில் காணப்பட வேண்டிய சில முக்கியமான அம்சங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். நல்ல வேலையாளுக்கு வேலைக்கான நல்ல கருவிகள் கட்டாயம் தேவை, ஆனால் அவற்றைப் பயன்படுத்த தகுதியற்றவர்களிடம், அவற்றில் சிறப்பானதொன்று கிடைத்தாலும் அதன் பயன் குறைந்தளவே இருக்கும். வேதத்தை விளக்குவதற்கான வழிமுறைகள் அவசியமானவைதான், ஆனால் அவற்றை எவ்விதமான மனநிலையில் இருந்து கையாளுகிறோம் என்பதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. ஆவிக்குரிய புத்தகத்தை ஆவிக்குரிய மனநிலையிலுள்ள வாசகனால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும் என்பதில் சந்தேகமேயில்லை. “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்” (1 கொரிந்தியர் 2:14). கர்த்தருடைய வார்த்தை உன்னதமான காரியங்களையும், நித்தியத்தைப் பற்றியும் விளக்குகின்றன. ஆகவே வேதத்தைக் கையாளுகிறபோது, உள்ளார்ந்தவிதத்தில் அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவசியம். இதற்கு அறிவார்ந்த பயிற்சியைவிட மேலானது தேவை. மூளையோடு இருதயமும் சரியாக இருக்க வேண்டும். நேர்மையும் ஆவிக்குரிய இருதயமும் இருக்கிற ஒருவனிடத்தில்தான், சத்தியத்தை அறியும் தெளிவான பார்வையைக் காண முடியும். அப்போதுதான், வேதத்தில் நாம் வாசிக்கிறவைகளின் முழுமையான அர்த்தத்தை விளங்கிக்கொள்ளுகிறவிதத்தில் நம்முடைய மனம் அதற்குத் தயாராகும். அப்போது, வார்த்தைகளுக்கான வெறும் பொருளை மட்டும் அறிகிறதாக இல்லாமல், அதுதரும் போதனையையும் உள்ளார்ந்தவிதத்தில் அறிந்து, அதற்கேற்றவிதமாக வாழுகிறவர்களாக இருப்போம்.

“Studies in the Scriptures” என்ற புத்தகத்தில் இருபது வருடங்களுக்கு முன் நான் எழுதிவைகளை, இங்கே குறிப்பிட விரும்புகிறேன், “கடந்த சில வருடங்களாக, வேதம் வாசிப்பதும், வேத ஆராய்ச்சி செய்வதுமாகிய காரியங்களில் ஈடுபடுகிறவர்களிடத்தில் பெரிதாக எந்த ஆவிக்குரிய நன்மையையும் காண முடியவில்லை. பல வேளைகளில், அது ஆசீர்வாதமாக இருப்பதைக் காட்டிலும் சாபமாகவே இருக்கிறது. என் வார்த்தைகள் கடுமையானதாக இருந்தாலும், தற்போது இருக்கிற நிலையை எந்தவிதத்திலும் நான் பெரிதுபடுத்திக் காட்டவில்லை என்பதை நாமெல்லோருமே அறிவோம். [எத்தனையோ காலங்களுக்கு முன் ஆர்தர் பிங்க் எழுதியிருக்கும் இந்த விஷயம் நம்மினத்தின் இன்றைய நிலைக்கு முழுமையாகப் பொருந்திக் காணப்படுகிறது – மொழிபெயர்ப்பாளர்]. இன்று தேவனுடைய வரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன; தேவனுடைய இரக்கத்தை அநேகர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். தற்போதைய சூழலில் இது எத்தனை உண்மை என்பது பலருடைய வாழ்க்கையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. அவிசுவாசியான ஒரு மனிதனும் இவ்வுலக அறிவியல் பாடங்களைப் படிப்பதுபோல் ஆர்வத்துடன் வேதத்தையும் படிக்க முடியும். அப்படிப் படிப்பது அவனுடைய அறிவைப் பெருக்கும்; அத்தோடு அவனில் ஆணவமும் அதிகரிக்கும். மருந்து தயாரிக்குமொருவர் சுவாரஸ்யமான பரிசோதனையில் ஈடுபட்டு புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து அதில் சந்தோஷமடைவதுபோல், வேத வார்த்தைகளை புத்திரீதியாக மட்டும் ஆராய்கிறவனும் புதிய விஷயங்களைப் படித்து அதில் ஆனந்தமடையலாம். இருந்தபோதும் மருந்து தயாரிக்கிறவனின் ஆனந்தத்திற்கும் இந்த மனிதனின் ஆனந்தத்திற்கும் எந்த ஆவிக்குரிய வேறுபாடும் இல்லை. மருந்து தயாரிக்கிறவன் எப்படித் தன் கண்டுபிடிப்பில் ஆனந்தத்தையும், ஆணவத்தையும் கொண்டு, தன்னை உயர்வாகவும் மற்றவர்களைத் தன்னிலும் தாழ்ந்தவர்களாகப் பார்ப்பதுபோல், வேதத்தைப் ஆராய்கிறவனும் எண்ணியல், அடையாளமொழி, தீர்க்கதரிசனம் ஆகியவற்றைப் படித்து அறிந்துகொண்டதில் ஆனந்தத்தையும் ஆணவத்தையும் கொண்டிருந்து மற்றவர்களை அறிவில் குறைந்தவர்களாகவும் தன்னிலும் தாழ்ந்தவர்களாகவும் பார்க்கிறான்.”

மனிதனுடைய எண்ணங்கள், அவனுடைய ஏனைய ஒழுக்க நடவடிக்கைகளைப் போலவே, பாவத்தால் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டும் பாழடைந்தும் இருக்கின்றன. இப்படியான எண்ணங்களின் மூலம் வெளிப்படும் எந்தவொரு செயலும், அது தேவனுடைய வார்த்தையைப் படிப்பதில் ஈடுபடுவதாக இருந்தாலும், தவறுகளாலும் குறைபாடுகளாலும் நிறைந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. நம்மிலுள்ள பாவத்தின் காரணமாகவே தேவனுடைய வார்த்தையை நாம் சரியாக விளங்கிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். பரிசுத்த ஆவியானவருடைய கிருபையின் செயலினாலேயே, ஒரு விசுவாசி சத்தியத்தில் வழிநடத்தப்படுகிறான்; சத்தியத்தை விளங்கிகொள்ளும் திறனையும் அடைகிறான். இது பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய பிள்ளைகளின் எண்ணத்தில் ஏற்படுத்தும் தனித்துவமான, சிறப்பான ஆவிக்குரிய செயலாகும். இதன் மூலம் அவர், வேத வார்த்தைகளிலுள்ள தேவனுடைய சித்தத்தைச் சரியாக அறிந்துகொள்ளுவதற்குத் தேவையான ஆவிக்குரிய ஞானத்தையும், தெளிவையும் அவர்களுக்குத் தருகிறார். அத்தோடு, அந்த உன்னத சத்தியத்தில் அவர்கள் நிலைத்திருக்கவும் செய்கிறார். பரிசுத்த ஆவியானவரின் “தனித்துவமான செயல்” என்று நான் இங்கு குறிப்பிடுவது, அவிசுவாசியான ஒருவனை ஆவிக்குரியவிதத்தில் உயிர்ப்பிப்பதற்காக அவர் செய்கிற அந்த ஆரம்பச் செயலைத் தவிர மேலும் கூடுதலானதொன்றாகும். மறுபிறப்பில், “நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்” (1 யோவான் 5:20). இதுவே பெரிய ஆசீர்வாதம். எனினும், “தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறிவதற்கு” (1 கொரிந்தியர் 2:12) இதிலும் மேலதிகமானதொன்று தேவைப்படுகிறது. இயேசுவின் சீடர்களான அப்போஸ்தலர்களுடைய நிலை, இதை நமக்கு மேலும் தெளிவாக்குகிறது. அதாவது, மூன்று வருடங்களுக்கு மேலாக இயேசுவோடுகூட இருந்து, அவருடன் நெருக்கமான ஐக்கியத்தில் இருந்திருந்தபோதிலும், பிறகுதான், “வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்தார்” (லூக்கா 24:45) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

இதுவரை நான் குறிப்பிட்டவைகளிலிருந்து, ஒரு கிறிஸ்தவன் வேதத்தை வாசிக்கிறபோது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உங்களால் உணர முடிகிறதா? அப்படிக் கவனமாக இல்லாதபட்சத்தில், அவன் தனக்குக் கேடுண்டாகும்படி, தான் வாசிக்கிறவைகளைத் தாறுமாறாக்கிவிடுகிறான். இது, வேதத்தின் ஆக்கியோனாகிய தேவனுக்கு முன்பாக அவன் மிகுந்த தாழ்மையுடன் இருக்க வேண்டியதையும், வேதத்தை விளங்கிக்கொள்ளுவதற்கு அவன் அவரை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டியுள்ளதையும் நமக்குக் காட்டுகிறது. ஒரு விசுவாசி தெய்வீக காரியங்களை அறிந்துணர, மறுபிறப்பு மட்டுமே போதுமானதாக இருந்திருந்தால், அப்போஸ்தலனாகிய பவுல், கொலோசெ பட்டண விசுவாசிகள் “எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்” (கொலோசெயர் 1:9) வேண்டுமென்று ஒருபோதும் தேவனிடத்தில் கேட்டிருக்க மாட்டார். அத்தோடு, தன்னுடைய ஆவிக்குரிய மகனைப் பார்த்து, “கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்” (2 தீமோத்தேயு 2:7) என்று சொல்லியிருக்க மாட்டார். மனித அறிவின் வரம்பிற்குள்ளாகவே சுவிசேஷத்தின் பரிசுத்த இரகசியங்கள் அமைந்திருக்கிறது என்றும், சத்திய ஆவியானவருடைய விசேஷ ஆவிக்குரிய செயல்பாடுகள் இல்லாமலேயே வேதத்தின் நன்மைகளை ஒரு மனிதன் பெற முடியும் என்று எண்ணுவதைவிட மிகவும் முட்டாள்தனமான, கேடான எண்ணம் இருக்கவே முடியாது. அவர் நம்முடைய அறிவு மற்றும் புரிதலைத் தவிர்த்த வேறு ஏதேனும் வழிகளில் நமக்குப் போதிப்பதில்லை. அப்படிச் செய்வதாக இருந்தால், நாம் மிருகத்தின் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம். ஆவிக்குரிய காரியங்களை நாம் அறிந்துகொள்ள, அவர் நம்முடைய மனதிற்கு ஒளியூட்டி, நம்முடைய எண்ணங்களை உன்னதத்தைநோக்கி நடத்தி, நம்முடைய விருப்பத்தைத் தூண்டிவிட்டு, நம்முடைய சித்தத்தை அசைத்து, நம்முடைய புரிந்துகொள்ளும் திறனை அதன்மூலம் செயல்படச் செய்கிறார்.

பரிசுத்த ஆவியானவர், ஒரு கிறிஸ்தவனுக்கு அவன் வாசிக்கும் வேத வாக்கியங்களை, அவன் நேரடியாகப் புரிந்துகொள்ளும்படிச் செய்கிறார் என்று நான் சொல்லுவது, எந்த வகையிலும் அந்த மனிதன் தான் சார்ந்திருக்கும் சபையின் பிரசங்க ஊழியத்தை விடாமுயற்சியுடனும் ஆர்வத்துடனும் பயன்படுத்திக்கொள்ளுவதிலிருந்து விலக்களிக்கவில்லை. ஏனென்றால் தம்முடைய மக்களின் ஆவிக்குரிய மேம்பாட்டிற்கான முக்கியமான வழிமுறையாக, பிரசங்க ஊழியத்தையே அவர் ஏற்படுத்தியுள்ளார். எத்தியோப்பிய மந்திரியிடம் பிலிப்பு, “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா” (அப்போஸ்தலர் 8:30) என்று கேட்டபோது, “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்” (அப்போஸ்தலர் 8:31) என்று மந்திரி பதிலளித்தார். சிலர், 1 யோவான் 2:27ல் “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை” என்ற வாக்கியத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால்” என்று பதிலளித்த எத்தியோப்பிய மந்திரியும், “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை” என்பதை தவறாக விளங்கிக்கொள்ளுபவனும், அவரவருடைய மனோபாவத்தையே காட்டுகிறார்கள். ஒருவர் மனித கருவியின்மீது அதிகமாக சார்ந்திருக்கிறார், மற்றவர், தம்முடைய மந்தையைப் போஷிப்பதற்கு, கிறிஸ்து அழைத்துத் தகுதியுள்ளவர்களாக்கியிருப்பவர்களை ஆணவத்துடன் நிராகரிக்கிறார். ஜோன் ஓவன் கூறியிருப்பதைக் கவனியுங்கள், “இருப்பினும், பிரசங்கியினுடைய சத்தியப் புரிதலிலும், சத்தியத்தில் அவருக்கு இருக்கிற பயத்திலும், விசுவாசத்திலும் நாம் தங்கியிருப்பதுமில்லை; பிரசங்கியினுடைய அதிகாரத்தின் அடிப்படையில் சத்தியத்தை உறுதிப்படுத்துவதுமில்லை. ஏனென்றால், அவர்கள் ‘நம்முடைய விசுவாசத்திற்கு அதிகாரிகளாயிராமல்’, ‘நம்முடைய சந்தோஷத்திற்கு சகாயராகவே’ (2 கொரிந்தியர் 1:24) தேவனால் ஏற்படுத்தப்பட்டவர்கள். ‘எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள்’ என்று தேவன் கொடுத்த மாபெரும் வாக்குறுதியையே நாம் முழுவதுமாக சார்ந்திருக்கிறோம். கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையை அவரிடத்திலிருந்து நாம் கற்றறியாமல் போனால், நாம் தேவனாலே போதிக்கப்பட்டவர்களாக இருக்க முடியாது.”

“உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்” (ஏசாயா 54:13, யோவான் 6:45) – இது, மறுபிறப்படைந்திருப்பவனின் தனித்துவமான அடையாளம். இந்நாட்களில், கிறிஸ்தவர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பல்லாயிரக்கணக்கானோர் மறுபிறப்படையாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வேதத்தைக் கற்றிருப்பார்கள்; கிறிஸ்தவ வரலாற்றிலும் போதனையிலும் பரீட்சயத்தைக் கொண்டிருப்பார்கள், ஆனால் அவர்களுடைய அறிவெல்லாம், மனிதர்களிடத்தில் இருந்து பெற்றுக்கொண்டதாக மட்டுமே இருக்கும். அதாவது, பெற்றோர்கள், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட வாசிப்பின் மூலமாக அவர்கள் அதைப் பெற்றிருப்பார்கள். ஆவிக்குரிய காரியங்களில் வெறும் அறிவையும், பரீட்சயத்தையும் கொண்டிருந்தும் தேவகிருபையைப் பெற்றிராத ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ புத்திஜீவிகள் இருக்கிறார்கள். அவர்கள், புத்தியோடு மட்டும் தொடர்புடைய வெறும் மத அறிவைக் கொண்டிருந்து தேவஅறிவில்லாமலும், அந்தத் தேவஅறிவினால் வெளிப்படும் கனிகளைத் தங்களில் கொண்டிராமலும் இருக்கிறார்கள். அதேபோல், நவீனத்துவத்தின் தவறுகளை வெறுத்தொதுக்கி, விசுவாசத்திற்காக ஆர்வத்துடன் போராடுகிற அநேக பிரசங்கிகளும் இருக்கிறார்கள். அவர்கள் வேதாகம கல்லூரிகளில் படித்தவர்கள்; இறையியல் பாடங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். இருப்பினும், அவர்கள் ஓர் ஆத்துமாவில் செயல்படும் இரட்சிக்கும் கிருபைக்கு முற்றிலும் அந்நியர்களாக இருப்பார்களோ என்ற பயத்தையே பெருமளவுக்கு ஏற்படுத்துகிறது. சத்தியத்தில் அவர்களுக்கு இருக்கும் அறிவு, ஜீவனில்லாத வெறும் கோட்பாடு மட்டுமே தவிர, உன்னதத்தின் உந்துதலினாலும், இரட்சிக்கும் வல்லமையினாலும், மறுரூபப்படுத்துதலினாலும் உண்டானதல்ல. ஆர்வத்தோடு உழைத்துப் படிக்கிற ஒருவன் வேதத்தில் இருந்து பல காரியங்களை அறிந்துவைத்திருக்க முடியும். அதை மற்றவர்களுக்குப் போதிக்குமளவுக்குத் திறமையையும் அவன் பெற்றுவிடலாம். ஆனால் தன்னுடைய இருதயத்தை அசைத்து, அதைச் சுத்திகரிக்கும்விதத்தில் அமையும் வேதஅறிவை அவனால் அடைய முடியாது. என்னுடைய இருதயத்தில் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை எழுதவும், என்னுடைய ஆத்துமாவில் அவருடைய சாயலை முத்திரையிடவும், சத்தியத்தினால் என்னைப் பரிசுத்தமாக்கவும், பரிசுத்த ஆவியானவரைத் தவிர வேறு எவராலும் முடியாது.

வேதத்தை விளங்கிக்கொள்ளவும், விளக்கப்படுத்தவும், தேவையான முதலாவது முக்கியமான தகுதி என்னவென்றால், ஒருவனுடைய மனம் பரிசுத்த ஆவியினால் ஒளியூட்டப்பட்டிருக்க வேண்டும். இது அத்தியாவசியமானது; இதிலிருந்து யாருக்கும் விலக்கில்லை. யூதர்களைப் பற்றி பவுல், “மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே” (2 கொரிந்தியர் 3:15) என்று சொல்லுகிறார். யூதர்களுக்கு பழைய ஏற்பாட்டின் மீது மிகுந்த மரியாதையிருந்தும், ஆர்வத்துடன் அதைப் படித்திருந்தும், அதன் ஆவிக்குரிய போதனைகளை அவர்கள் அறியாமலேயே இருந்தார்கள். யூதரல்லாத புறஜாதிகளிடத்திலும் இதே நிலைதான். பாவத்தில் வீழ்ந்த மனிதனுடைய இருதயத்தின்மீது, கேடான எண்ணம் என்ற முக்காடு இருக்கிறது, “மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை” (ரோமர் 8:7). அத்தோடு, நம்முடைய மனதின்மீது அறியாமை என்ற முக்காடு இருக்கிறது. ஒரு குழந்தை, தனக்கு அர்த்தம் தெரியாத வார்த்தைகளையும்கூட எழுத்துக்கூட்டி வாசித்து, அதை உச்சரிப்பதுபோல், வேதத்தை நாம் எழுத்துபூர்வமாகவும் இலக்கணத்தின் அடிப்படையிலும் ஆராய்ந்து அறிந்திருந்தாலும், அதனுடைய ஆவிக்குரிய அறிவைப் பெற்றிராமல் இருந்துவிட முடியும். மத்தேயு 13:14ல் சொல்லப்பட்டுள்ள தலைமுறையினரைப் போல் இருந்துவிடலாம், “காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்” என்று அவர்களைப்பற்றி வாசிக்கிறோம். மேலும், நம்முடைய விருப்பங்களும் கேடான எண்ணங்களினால் இருளடைந்திருக்கிறது. இதைப் பற்றி தொமஸ் மேன்டன் என்பவர் சொல்லுகிறார், “நம்முடைய இருதயம் இந்த உலகத்தின்மீதான தீவிரபற்றினால் இருளடைந்திருக்கிறது”. இதுவே சுயவெறுப்புக்கு எதிரான வார்த்தைகளை நாம் கேட்கிறபோது, அதைக் கேட்கவிடாமல் நம்மைத் தவிர்க்கச் செய்கிறது.

தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியில் நம்மை நாமே காண முடியாதபடி, நம்மைத் தடுக்கிற மற்றொரு முக்காடு இருக்கிறது. அதுதான் அகங்காரம். மறுபிறப்படைந்தபிறகும், இந்த முக்காடு நம்மைவிட்டு முழுமையாக விலகிவிடவில்லை. எனவேதான் வேதத்தை நாம் கண்ணோக்குகிற விதமும் பூரணமற்றதாக இருக்கிறது; சத்தியத்தின் மூலமாக நாம் பெறுகிற நன்மையும் சொற்பமாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்து சபைக்கு எழுதின முதலாவது நிருபத்தில் சொல்லுகிறார், “ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை” (1 கொரிந்தியர் 8:2). இந்த உண்மையை ஒரு கிறிஸ்தவன் அறிந்துணருவது அவனுக்குக் கிடைத்த மாபெரும் கிருபையே. அவன் இந்தப் பாவ உலகத்தில் இருக்கிறவரை, அவனுடைய மாம்சத்தின் கறைபடிந்த தன்மையின் செயல் அவனில் தொடரும். ஆகவே பரிசுத்த ஆவியினால் அவன் வழிநடத்தப்பட்டு போதிக்கப்பட வேண்டும். இதை தாவீதின் வாழ்க்கையில் கண்கூடாகக் காணலாம். அவர், “எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்” (சங்கீதம் 119:99) என்று சொல்லிய போதும், “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்” (சங்கீதம் 119:18) என்றும் “கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவேன்” (சங்கீதம் 119:33-34) என்று ஆண்டவரை நோக்கி ஜெபித்திருக்கிறார். தேவனுடைய நியாயப்பிரமாணத்தில் தனக்குத் தெளிவில்லாத காரியங்களைக் குறித்து அவர் கர்த்தரிடம் புகார் தெரிவிக்கவில்லை, மாறாக, அதற்கான காரணம், தன்னிலுள்ள குறையே என்பதை உணர்ந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், புதிதான வெளிப்படுத்தலுக்காகவும் அவர் மன்றாடவில்லை, ஏற்கனவே கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளவைகளில் மேலதிக தெளிவு வேண்டும் என்று கேட்டார். வேதபோதனைகளைக் கற்றுக்கொள்ள மிகவும் வாஞ்சையாக இருக்கிற யாவரும், கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்திருந்து, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பார்கள் (லூக்கா 10:39).

சங்கீதம் 119:18ல் குறிப்பிடப்பட்டுள்ள வினைச்சொல்லைக் கவனியுங்கள், என் கண்களைத் “திறந்தருளும்” என்று வாசிக்கிறோம். கர்த்தரே அதைச் செய்யவேண்டும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. கர்த்தருடைய வார்த்தையே ஆவிக்குரிய ஒளியாக இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டுமானால், நம்முடைய உள்ளத்தில் அதற்கான ஒளியேற்றப்பட வேண்டும். அந்த வெளிச்சத்தின் மூலமாகவே, அதாவது கர்த்தருடைய வெளிச்சத்தின் மூலமாகவே நாம் வெளிச்சத்தைப் பெறுகிறோம் (சங்கீதம் 36:9). வேதம் தெய்வீக அதிகாரத்தையும், கர்த்தருடைய சித்தத்தையும் தன்னில் முழுமையாகக் கொண்டிருப்பதால், வேதத்தைக் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்று அழைக்கிறோம். வேதம், நம்முடைய விருப்பப்படி ஏற்றுக்கொள்ளவோ அலலது தூக்கியெறிந்துவிடவோ கூடியவிதத்தில் கொடுக்கப்பட்ட நல்ல ஆலோசனைகளின் புத்தகமல்ல. வேதம் அதிகாரம் கொண்ட புத்தகம். நம்மிலிருக்கும் கேட்டின் காரணமாகத்தான் நாம் அதை நிராகரிக்கிறோம். வேதத்தில் “வார்த்தைகள்” அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. மனித எண்ணத்தின்படியான காரணகாரியங்களின் அடிப்படையில் அவைகளை விளங்கிகொள்ள முடியாது. அவைகள் தெய்வீக ஞானத்தினால் தரப்பட்டவை. மனித அறிவினால் உண்டான திசைகாட்டும் கருவியைவிட பண்மடங்கு மேலானவை. அந்த அற்புதமான வார்த்தைகளைச் சரியாக அறிவதற்கு, மிகவும் ஆவல் கொண்டு, பெரும் முயற்சி செய்யலாம். ஆனால் தெய்வீக உதவியினால் அல்லாமல், மனிதனால் அதை ஒருபோதும் அடைய முடியாது. ஆகவே, அவன் வேதத்தை நல்ல முறையில், அதாவது, விசுவாசத்திற்கும் கீழ்ப்படிதலுக்குமாக அதைத் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டுமென்று தேவனிடத்தில் ஜெபிப்பான். இப்படிச் செய்வதைத் தன்னுடைய கடமையாகக் கொண்டு, வேதத்தை அனுபவபூர்வமாக விளங்கிக்கொள்ள முற்படுவான்.

“இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப்போல் போதிக்கிறவர் யார்?” (யோபு 36:22). ஒருவரும் இல்லை என்கிறது வேதம். அவர் போதிக்கிறபோது, அதை மிகவும் திறம்படச் செய்கிறார். “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” (ஏசாயா 48:17) என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவர் போதிப்பது, தேவபக்திக்குரிய வாழ்க்கை முறையை நம்மில் உண்டாக்குகிறது. இது நம்முடைய அறிவோடு மேலும் கொஞ்சத்தைக் கூட்டிக்கொள்ளுவதற்காகக் கொடுக்கப்படும் ஒன்றல்ல. மாறாக, நம்முடைய ஆத்துமாவைப் பரிசுத்தமான காரியங்களில் ஊக்கப்படுத்தும் தேவ செயல். அந்த வெளிச்சம் நம்முடைய இருதயத்தை அனல்மூட்டி, நம்முடைய விருப்பங்களில் ஒளியேற்றுகிறது. இந்த உலகத்தின் அறிவு நம்மில் செய்வதுபோல், நாம் அகங்காரமுள்ளவர்களாக இருக்கச் செய்யாது. மாறாக, நம்மைத் தாழ்த்துகிறது. இது நம்முடைய அறியாமையையும், முட்டாள்தனத்தையும் நாம் அறிந்துகொள்ளச் செய்கிறது; நம்முடைய பாவத்தன்மையையும், தகுதியற்றநிலையையும் சுட்டுகிறது; அதன்மூலம் நாம் தாழ்ந்தவர்கள் என்பதை நாம் அறியச்செய்கிறது. மறுபிறப்படையாத ஒருவனால் மிகவும் உயர்வானதாக பார்க்கக்கூடிய காரியங்களில் இருக்கும் மாயையை, நாம் தெளிவாகக் கண்டுகொள்ளும்படி பரிசுத்த ஆவியானவரின் போதனை நம்மை வழிநடத்துகிறது. அத்தோடு, பூமிக்குரிய மதிப்பு, ஐசுவரியம், புகழ் ஆகியவை கொஞ்சக்காலமே இருக்கக்கூடியவை என்பதை அது நமக்குக் காட்டுகிறது. அதன்மூலம், தற்காலிகமான இவற்றை நாம் பெரிதாகக் கருதாமல் இருக்கச் செய்கிறது. கர்த்தர் நமக்குக் கொடுக்கும் அறிவு, நம்மை மாற்றக்கூடியது. அதாவது, நமக்குப் பாரமான தடைகளாக இருக்கக்கூடிய தேவபக்தியற்ற செய்கைகளையும், இவ்வுலக இச்சைகளையும் வெறுத்துத் தள்ளி, தெளிந்த புத்தியும், நீதியும், தேவபக்தியுமுள்ளவர்களாக நாம் வாழும்படி நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரிந்தியர் 3:18).

கர்த்தரே வேதத்தை நமக்குப் போதிக்கிறார் என்பது ஒரு காரியத்தை நமக்குத் தெளிவாக்குகிறது. என்னவென்றால், அவரால் போதிக்கப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பதுதான். இயற்கையாக நாம், தேவ காரியங்களை வெறுக்கிறவர்களாக இருப்பதனால், இந்நிலை மாற கர்த்தரால் நாம் போதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. இயற்கையாக நாம், பாவத்தை நேசிக்கிறவர்களும், பரிசுத்தத்தை வெறுக்கிறவர்களுமாக இருக்கிறோம் (யோவான் 3:19). களங்கமில்லாத பாலாகிய தேவனுடைய வார்த்தையை நாம் நேசிக்கிறவர்களாக இருக்கவேண்டுமானால், பிறப்பிலேயே நாம் அதை வெறுக்கிறவர்களாக இருக்கிற தன்மையானது பரிசுத்த ஆவியினால் அகற்றப்பட வேண்டும். நாம் சாந்தத்துடன் கர்த்தருடைய வார்த்தையை ஏற்கவேண்டுமானால், எதையெல்லாம் நம்மிலிருந்து நாம் ஒழிக்கவேண்டுமென்று வேதம் விளக்குவதை, யாக்கோபு 1:21; 1 பேதுரு 2:1 ஆகிய வசனங்களில் வாசித்துப் பாருங்கள். இதைச் செய்ய வேண்டியது நம்முடைய கடமையாக இருந்தபோதிலும், இதைச் செய்வதற்கான பெலனை அவரே தருகிறார். இயற்கையாக நாம், பெருமையும், யாரையும் சார்ந்திராமல் சுயபெலத்தின்மீது அதிக நம்பிக்கையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்தத் தீங்கானது, ஒரு கிறிஸ்தவனில், அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்வதாக இருக்கும். ஒரு சிறுபிள்ளையைப்போல் அவன் வேதத்தை அணுகுவதற்குத் தேவையான தாழ்மையையும் சாந்தத்தையும், பரிசுத்த ஆவியானவர் மட்டுமே அவனில் ஏற்படுத்துகிறார். மற்றவர்கள் நம்மைப் போற்றவும், புகழவும் வேண்டுமென்று விரும்புவது, நம்முடைய ஆத்துமாவின் கறைபடிந்த தன்மையின் மற்றொரு அம்சம். இது, சத்தியத்திடம் நாம் நெருங்க முடியாதபடி, நம்மைத் தடுத்து நிறுத்தக் கூடியது (யோவான் 5:44; 12:43). இதை நம்மிலிருந்து முற்றாக நாம் களைந்தெரிய வேண்டும். சத்தியத்தை நாம் அறிவதிலிருந்து நம்மைத் தடுப்பதற்கு, நம்மைவிட வலிமைமிக்க பிசாசு கடுமையாக, தொடர்ச்சியாகக் காட்டி வரும் எதிர்ப்புகளை, நம்முடைய சுய வலிமையினால் எதிர்ப்பதென்பது முடியாது (மத்தேயு 13:19; 2 கொரிந்தியர் 4:4). பிசாசினுடைய கேடான ஆலோசனைகளிலிருந்து நம்மை விடுவிப்பதும், அவனுடைய பொய்யான ஏமாற்று வாதங்களை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுவதும் கர்த்தரால் மட்டுமே செய்யக்கூடியதாகும்.

இரண்டாவது, பரிசுத்த வேதாகமத்தின் மெய்யான போதனையை நீங்கள் சரியானபடி கற்றறிய வேண்டுமானால், நடுநிலையான மனநிலையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். ஒன்றைப் பற்றி தீர ஆராய்வதற்கு முன்பு அதைப் பற்றிய முடிவுக்கு வருவது, உண்மையை இருட்டடிப்புச் செய்வது போலாகும். “தங்கள் கோட்பாடுகளை” நிரூபிக்கும் வேதப்பகுதிகளைக் கண்டறியலாம் என்ற நோக்கத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள் இப்படியே செய்கிறார்கள். வேதத்தைச் சரியாகப் படித்து விளங்கிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறவனிடத்தில் கர்த்தர் எதிர்பார்க்கிற முதற்தகுதி, அவன் உண்மையான இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே (லூக்கா 81:5). இப்படியான இருதயமுள்ளவன், தன்னுடைய தவறான எண்ணங்களை வேதத்தின்படி ஆர்வத்துடன் மட்டுமல்லாமல், விருப்பத்துடனும் திருத்திக்கொள்ளுகிறவனாக இருப்பான். நம்முடைய எண்ணங்களையும் ஆசைகளையும் தேவனுடைய வார்த்தைக்கு அடிபணிய வைக்காதவரை, சத்தியத்தை அறிகிற நம்முடைய ஆவிக்குரிய புரிதல் எந்தவிதமான முன்னேற்றத்தையும் அடையாது. வேதத்தில் தெளிவாகக் கொடுக்கப்படாத ஒன்றை, நாம் எவ்வளவு காலம் அதை நம்பிவந்திருந்தாலும், அதைக் கைவிட மனதில்லாமல், நம்முடைய எண்ணத்தில் உருவான போதனைகளையும், நம்முடைய சபைப்பிரிவின் தத்துவங்களையுமே விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருந்தால், நாம் எவ்வளவுதான் ஜெபித்தாலும், வேதம் வாசித்தாலும், நம்முடைய ஆத்துமாவுக்கு எந்தவிதமான நன்மையும் உண்டாகாது. கர்த்தர் பொய்யை முற்றாக வெறுக்கிறார். அதாவது, வேத சத்தியங்கள் பற்றிய தவறான நம்பிக்கைகளை அப்படியே வைத்துக்கொண்டு, கர்த்தாவே போதியும் என்று அவரை நோக்கிக் கேட்கிறபோது, அதை அவர் வெறுக்கிறார். நாம் ஆவிக்குரிய அறிவைப் பெற்றிருக்க வேண்டுமானால், நம்முடைய எண்ணங்களையும், நடைமுறை வாழ்க்கையையும், வேதத்தின்படி மாற்றியமைக்க வேண்டும் என்ற உறுதியுடன், சத்தியத்தின்மீது தாகமாயிருக்க வேண்டும்.

மூன்றாவது, மனத்தாழ்மை. “இது கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட நித்திய நியதி. கர்த்தருடைய வேதத்தின்படி அவருடைய சித்தத்தைக் கற்றறிய விரும்புகிற எந்தவொரு மனிதனும், தன்னிலுள்ள எல்லா நம்பிக்கையையும் விட்டு, மனத்தாழ்மையுடன் அவரை நாடி வர வேண்டும். பெருமையுள்ள ஒருவனுடைய அறிவு, அவனுடைய எண்ணத்தை சாத்தான் ஆளுகிறான் என்பதையே காட்டுகிறது. பெருமையினாலும், சுயநம்பிக்கையினாலும் ஆளப்படுகிற ஒருவன், கர்த்தருடைய சித்தத்தை உள்ளபடி அறிந்திருப்பான் என்று சொல்லுவது, வேதத்தையே நிராகரிப்பது போலாகும்” என்கிறார் ஜோன் ஓவன். பரலோகத்தின் இரகசியங்கள் ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவரே சொல்லியிருக்கிறார் (மத்தேயு 11:25). வேதத்தை அறிவதற்குத் தனக்குத் திறமையும் ஞானமும் இருக்கிறது என்று தன்னுடைய சுயத்தின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறவன், ஆவிக்குரிய அறியாமையிலேயே தொடர்ந்து இருப்பான். மனிதன் தன் சுய திறமையினால் பெறுகிற எந்தவொரு அறிவும், கர்த்தருடைய மகிமைக்கும், ஓர் ஆத்துமாவின் நன்மைக்கும் எந்தவிதத்திலும் பயனளிப்பதில்லை. கர்வம் கொண்டவனுக்குப் பரிசுத்த ஆவியானவர் போதிக்கிறதில்லை. “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்” என்கிறது யாக்கோபு 4:6. “பெருமையுள்ளவனுக்கு எதிராக, கர்த்தர் அவனை நெருங்கி வருகிறார். அவனுடைய செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு முழுபெலத்தோடு அவர் தயாராகிறார். இது மிகவும் வலிமையான ஒரு கூற்று! கர்த்தர் நம்மை நம்முடைய இயற்கையான தன்மையின்படி விட்டிருந்தால், நாம் அனைவரும் அறியாமையிலும் இருட்டிலும்தான் இருப்போம். அப்படியானால், கர்த்தர் வல்லமையோடு நமக்கெதிராக வருவதாக இருந்தால், அது எவ்வளவு பயங்கரமாக இருக்கும்” என்கிறார் ஜோன் நியூட்டன். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, அவர் “தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார்”.

நான்காவது, ஜெபம். ஏனைய புத்தகங்களைவிட வேதம் வேறுபட்டதாக இருப்பதனால், அப்புத்தகங்கள் தன்னை வாசிக்கிறவர்களிடம் எதிர்பார்க்காத ஒன்றை, வேதம் தன்னை வாசிக்கிறவர்களிடம் எதிர்பார்க்கிறது. ஒருவர் எழுதிய புத்தகத்தை, மற்றொருவர் வாசித்து, அதிலுள்ள விஷயங்களில் நிபுணராகலாம். ஆனால் வேதம் அப்படிப்பட்டதல்ல. அதைக் கொடுத்தவர் மட்டுமே, அதை நமக்கு விளக்குவதற்கான எல்லா தகுதியும் திறனும் கொண்டவராக இருக்கிறார். இதைப் புரிந்துகொள்ளாததனாலேயே அநேகர் தவறிழைக்கிறார்கள். ஏனைய புத்தகங்களை அணுகுவது போலவே வேதத்தையும் அணுகுகிறார்கள். அதாவது, வேதத்தின் போதனைகளை விளங்கிக்கொள்ளுவதற்கு தங்களுடைய கவனமான வாசிப்பையும், ஆர்வத்தையும் மட்டுமே சார்ந்திருக்கிறார்கள். வேதத்தை விளங்கிக்கொள்ள, முதலாவது, நாம் முழங்காலில் இருந்து, கர்த்தரை நோக்கிக் கெஞ்சவேண்டும். “என் இருதயம் உமது சாட்சிகளைச் சாரும்படிச் செய்யும்.” “. . . உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.” “உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி . . .” என்று வேதம் கூறுவதுபோல் ஜெபிக்கவேண்டும் (சங்கீதம் 119:36, 73, 133). தேவனால் ஒளியூட்டப்பட்ட கண் தொடர்ச்சியாக நமக்குத் தேவை என்பதை உறுதியாக நாம் உணர்ந்திராதவரை, வேத போதனைகளை அறிவதில் நாம் சரியான முன்னேற்றத்தைக் காணமுடியாது. “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” என்கிறார் யாக்கோபு (யாக்கோபு 1:5). இந்த வாக்குறுதியின் காரணமாக, அநேக எளிய மனிதர்களும், குடும்பத் தலைவிகளும் பரிசுத்த ஆவியினால் போதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஜெபத்தை மறந்த பண்டிதர்களால் கர்த்தருடைய இரகசியத்தை அறிய முடியவில்லை. “நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும்” (யோபு 34:32) என்று ஜெபிக்க வேண்டியது மட்டுமல்லாமல், தேவன் தம்முடைய வார்த்தைகளை நம்முடைய இருதயங்களில் எழுதவும் வேண்டுமென்று ஜெபிக்க வேண்டும்.

ஐந்தாவது, பரிசுத்த வாழ்க்கை. இந்த விஷயத்தில் அநேகர் வஞ்சிக்கப்படுகிறார்கள். அதாவது, சத்தியத்தின்மீதிருக்கிற ஆர்வத்தின் காரணமாக மட்டுமே, வேத அறிவைப் பெறுவதற்கு அநேகர் தீவிரம் காட்டுகிறார்கள். அநேகர் வேதத்தை வாசிக்கிறபோது, அதில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் என்ற ஆவலினாலேயே வாசிக்கிறார்கள். சிலர், மற்றர்வர்களால் அறிய முடிந்ததைத் தன்னால் ஏன் அறிய முடியவில்லை என்ற காரணத்திற்காக ஆர்வங்கொண்டு வாசிக்கிறார்கள். வேறு சிலர், வேத போதனைகளில் தர்க்கம் ஏற்படுகிறபோது, தன்னுடைய வாதத்தை முன்வைக்க, வேதத்தில் தனக்கு நல்லறிவு இருக்க வேண்டும் என்பதற்காக வாசிக்கிறார்கள். வேதத்தை வாசிக்கிறபோது, அதிலுள்ள போதனைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஆர்வங்காட்டுகிறதாக இருந்தால், உங்களுடைய ஆத்துமா என்கிற சோலை, இன்னும் தரிசு நிலமாக இருப்பதையே அது காட்டுகிறது. வேத வார்த்தைகள் கொடுக்கப்பட்டதன் நோக்கத்தை நாம் சரியாக ஆராய்ந்து அறிய வேண்டும். நான் வேதத்தை ஆராய்கிறபோது, வேதத்தைக் கொடுத்த கர்த்தரையும், என்னைப் பற்றிய அவருடைய எண்ணத்தையும் அறிவதில் நான் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆராய்கிறேனா? என்று சிந்திக்க வேண்டும். கர்த்தருடைய கிருபையிலும், அவரைப் பற்றிய அறிவிலும் வளரவேண்டும் என்பதே என்னுடைய முதன்மையான நோக்கமாக இருந்து, இந்த விஷயத்தில் என் வேதப்படிப்பு என்னைத் தூண்டுகிறதா என்று ஆராயவேண்டும். கர்த்தரைப் பிரியப்படுத்துகிறதாகவும், மகிமைப்படுத்துகிறதாகவும் இருக்கிறவிதத்தில், என்னுடைய வாழ்க்கையை எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்பதை மேலும் தெளிவாகவும் முழுமையாகவும் அறியவேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேனா, என்று கேட்டுப் பார்க்கவேண்டும். கர்த்தரோடு நெருங்கி வாழவும், அவருடன் பிரிக்கமுடியாத ஐக்கியம் கொண்ட நிலைக்கு நான் வரவேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேனா, என்று சிந்திக்க வேண்டும். வேதத்தின் பரிசுத்தமான போதனைகளுக்கேற்ப வாழவும், அவைகளால் மாற்றத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் வேதத்தை ஆராய்வதே நன்மையானது.

இந்த அதிகாரத்தில், வேதத்தை விளக்குவதைப் பற்றிய ஆரம்பக்கட்டத்தையே ஆராய்ந்திருக்கிறோம். எனினும், அடிப்படையான இன்னும் சில முக்கியமான விஷயங்களை வரப்போகிற அதிகாரங்களில் பார்க்கப் போகிறோம். தூய்மைவாதிகளின் காலத்திலும்கூட, ஜோன் ஓவன் அப்போதைய நிலையைப் பற்றிச் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள், “வேதத்திலிருந்து வரும் கர்த்தருடைய சத்தமாகிய சத்தியத்தைக் கற்றறிவதற்கு ஆர்வத்துடனும், தாழ்மையுடனும், உணர்வுபூர்வமாகவும் முயற்சிக்கிறவர்கள் வெகு சிலரே. அதேபோல், ஞானத்தை அடைவதற்கான ஒரே வழியாக வேதம் காட்டுகிற, சுவிசேஷ இரகசியத்திலுள்ள ஞானத்தில் வளருவதற்கு ஆர்வத்துடனும், தாழ்மையுடனும், உணர்வுபூர்வமாகவும் முயற்சிக்கிறவர்களும் வெகு சிலரே. வேதத்தைப் படிக்கிறோம் என்ற பெயரில், பெரும்பாலானவர்கள், தங்களுடைய அல்லது மற்றவர்களுடைய வீணான கற்பனையின் பின்னால் அலைந்து திரிகிறார்கள் என்று நான் சொன்னால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துமா?” இந்த ஆக்கத்தை வாசிக்கிறவர்கள் அப்படி இல்லாமல் இருப்பார்களாக.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s