ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து

கடந்த சில வருடங்களாக 1 பேதுரு நூலை சபையில் பிரசங்கித்து வருகிறேன். அருமையான நூல். முக்கியமாக முதல் நூற்றாண்டில் நீதியாக வாழ்ந்துகொண்டிருந்த கிறிஸ்தவர்கள் அதற்காக துன்பங்களை அனுபவித்தபோது அவர்களுக்கு ஆறுதலளித்து, தொடர்ந்தும் அவர்கள் தங்களுடைய கடமைகளைத் தவறாது செய்துவர ஊக்கமளித்து பேதுரு இந்நூலை எழுதியிருக்கிறார். இதற்கு மத்தியில் கடைசி அதிகாரமான 5ம் அதிகாரத்தில் மூப்பர்களின் கடமைகளைப் பற்றி விளக்கத் தவறவில்லை பேதுரு. சாதாரணமான சூழ்நிலையில் ஆத்துமாக்களை சபை மூப்பர்கள் கவனத்தோடு வழிநடத்தவேண்டியது அவர்களுடைய கடமை. அதுவும் பெருந்துன்ப காலங்களில் இன்னும் அதிகமாக உழைத்து அவர்களைக் கண்காணித்து வழிநடத்தவேண்டியது மூப்பர்களின் பெருங்கடமை.

மூப்பர்களைப் பற்றியும் அவர்களுடைய பணியைப்பற்றியும் ஆங்கிலத்தில் அருமையான நூல்கள் பெருமளவுக்கு இருக்கின்றன. தமிழில் அந்தளவுக்கு ஒன்றும் இல்லை. மூப்பர்களின் பணிபற்றி திருமறைத்தீபத்தில் அதிகம் எழுதியிருக்கிறேன். இருந்தபோதும் ஆடுகளைப் பற்றியும், மந்தைகளைப்பற்றியும் அதிக நூல்களைக் காணமுடியாது. அதாவது ஆவிக்குரிய ஆடுகளான, கிறிஸ்தவ விசுவாசிகளைப்பற்றியே சொல்லுகிறேன். டக்ளஸ் மெக்மில்லன் ஸ்கொட்லாந்து நாட்டில் வாழ்ந்த சீர்திருத்தப் போதகரும், பிரசங்கியுமாவார். இப்போது கர்த்தரின் பாதத்தை அடைந்துவிட்டார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக அவர் எங்கள் நாட்டில் நாங்கள் நிகழ்த்திய கிறிஸ்தவ கூட்டங்களில் பிரசங்கமளித்திருக்கிறார். மெக்மில்லன் போதகப்பணிக்கு வருமுன் ஸ்கொட்லாந்தில் நிலச் சொந்தக்காரராக இருந்து செம்மறி ஆடுகளை வளர்த்திருக்கிறார். அவருக்கு மேய்க்கும் பணியில் நல்ல பரிச்சயம் இருந்தது. அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலொன்றின் பெயர் ‘ஆண்டவரே என் மேய்ப்பன்’ என்பது. சங்கீதம் 23ல் அவர் கொடுத்த பிரசங்கங்கள் நூல்வடிவில் வெளிவந்தன. அந்நூலில் மெக்மில்லன் தன் ஆட்டு மேய்ப்புப் பணியின் அனுபவங்களை விளக்கியிருக்கிறார்.

பேதுரு மெய்க்கிறிஸ்தவர்களை இந்த அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களில் ‘தேவனுடைய மந்தைகள்’ என்று வர்ணித்திருக்கிறார். மூப்பர்களை மேய்ப்பர்களாக வர்ணித்திருக்கிறார். இப்படியாக தீர்க்கதரிசிகளும், இஸ்ரவேலின் ஆத்மீகத் தலைவர்களும் மேய்ப்பர்களாக வர்ணிக்கப்பட்டிருப்பதைப் பழைய ஏற்பாட்டு நூல்கள் பலவற்றில் காணலாம். கர்த்தரே தன்னை மேய்ப்பராகவும், இஸ்ரவேலின் போதகர்களை மேய்ப்பர்களாகவும் வர்ணித்து எசேக்கியேல் 34ல் விளக்கியிருக்கிறார். சங்கீதம் 23ல் தாவீது ஆண்டவரை மேய்ப்பராகவும், தன்னை ஆடாகவும் வர்ணித்துப் பாடியிருப்பதைக் காண்கிறோம். இயேசு தன்னை நல்ல மேய்ப்பனாக யோவான் 10ல் குறிப்பிட்டிருக்கிறார். ஆத்துமாக்களை அவர் தன் மந்தைகளாகவும் ஆடுகளாகவும் அவ்வதிகாரத்தில் வர்ணித்து விளக்கியிருக்கிறார்.

பேதுரு 5ம் அதிகாரத்தில் மூப்பர்களுடைய கடமைகளைப் பற்றி விளக்கியிருக்கும் சத்தியங்களில் பொதிந்திருக்கும் ஆழமான ஆவிக்குரிய உள்ளர்த்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஆடுகளைப்பற்றியும், மேய்ப்பனைப்பற்றியும் நமக்கு நல்லறிவிருக்க வேண்டும். அதாவது, நான் மிருகங்களான ஆடுகளையும், அவைகளை மேய்க்கும் மேய்ப்பனைப்பற்றியுமே சொல்லுகிறேன். ஆடுகளின் தன்மைகளைப்பற்றியும், மேய்ப்பனின் பணியைப்பற்றியும் தெரிந்துவைத்திருக்காமல் ஆவிக்குரிய மந்தை மேய்ப்பில் ஒருவரும் கர்த்தரின் வார்த்தையின்படி ஈடுபட முடியாது. அத்தோடு ஒவ்வொரு போதகனும் (மூப்பரும்) சாதாரண ஆடு மேய்க்கிறவனின் பணிபற்றித் தீர ஆராய்ந்து அறிந்துவைத்திருப்பது அவசியம்.

ஆடுகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

இங்கே பேதுரு ஆவிக்குரியவர்களை ஆடுகளாக வர்ணிக்கின்றபோது செம்மறி ஆட்டையே மனதிலிருத்தி விளக்குகிறார். பரிசுத்த ஆவியானவர் செம்மறி ஆட்டை உதாரணமாக, ஆவிக்குரியவர்களுக்கு அடையாளமாக விளக்கியிருப்பது தற்செயலான ஒன்றல்ல; காரணத்தோடேயே அதைச் செய்திருக்கிறார். நான் வாழும் நியூசிலாந்து நாடு செம்மறி ஆடுகளுக்கு பெயர்போனது. உலகத்தில் சீனாவில்தான் அதிக தொகை ஆடுகள் இருந்தபோதும் நியூசிலாந்தே நாட்டு நிலப்பரப்பைப் பொறுத்தவரையில் உலகில் அதிக தொகை ஆடுகளைக் கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது. 1982ல் நியூசிலாந்தில் 70 மில்லியன் ஆடுகள் இருந்தன. இன்று அதன் தொகை குறைந்திருக்கிறது. 2007ல் 39 மில்லியனாக இருந்த ஆடுகளின் தொகை 2018ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 27.3 மில்லியனாகக் குறைந்திருக்கிறது. நியூசிலாந்தின் மக்கள் தொகை இன்னும் 5 மில்லியனை எட்டவில்லை. நியூசிலாந்து செம்மறி ஆடுகளைப் பல தேசங்களுக்கு ஏற்றுமதி செய்வதோடு அவற்றை இறைச்சிக்காகவும், அவற்றின் தோலை விலைமதிப்புள்ள ஆடைத் தயாரிப்பு மற்றும் வேறு காரியங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளுகிறது. ஆட்டின் ஒவ்வொரு பாகமும் மனிதன் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காணாமல் போகக்கூடியது

எல்லா மிருகங்கங்களிலும் செம்மறி ஆடு மட்டுமே தன் சொந்த இடத்தைவிட்டு சில கிலோ மீட்டர்கள் போய்விட்டால் காணாமல் போகக் கூடியது; அதனால் தானே தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச்செல்ல முடியாது. வேறு எல்லா மிருகங்களுக்குமே தன் இருப்பிடத்திற்குத் திரும்பிப் போய்விடக்கூடிய ஒரு நுண்ணுணர்வைப் படைத்தவர் தந்திருக்கிறார். அது எல்லா மிருகங்களுக்கும் இயற்கையானது; செம்மறி ஆட்டிற்கு மட்டும் இது பொருந்தாது. தன் இருப்பிடத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும்போது செம்மறி ஆடு தான் செய்துகொள்ளக்கூடிய சில ஆற்றல்களைக் கொண்டிருக்கிறது. வழமையாகத் தான் மேயக்கூடிய இடம் அதற்கு நன்றாகத் தெரியும். தன் பிறந்த இடமும், தாயிடம் பாலருந்திய இடமும் அதற்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு நாளும் தான் ஓய்வெடுக்கும் இடத்திற்கே அது ஓய்வெடுக்கச் செல்லும். உறங்கும் இடமும் அதற்கு நல்ல பரிச்சயம். ஏனைய மிருகங்களைவிட, அது தான் வழமையாக மேயும் இடத்திற்கே தொடர்ந்து செல்வதோடு, அந்தத் தூரத்திற்கு மேல் அது ஒருநாளும் போகாது.

ஆனால், அதற்குப் பரிச்சயமில்லாத ஓரிடத்திற்கு அதைக் கொண்டுபோய்விட்டால் அது துப்புரவாக தொலைந்துபோய்விடும். அதால் எங்குபோவதென்று அறிந்துகொள்ள முடியாது. தான் எங்கு இருக்கிறோம், எங்கு போகவேண்டும் என்ற அறிவெல்லாம் அதற்கு முழுமையாக இருக்காது. மீண்டும் தன் இருப்பிடத்திற்கு அதால் திரும்பிப்போக முடியாது. அவ்வாறு காணாமல் போன ஆடு தான் நிற்கும் இடத்தையே தொடர்ந்து சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கும்; அது குழப்பத்தோடும், அமைதி இழந்தும், தடுமாற்றமும், திகைப்பும் நிறைந்ததாக சுற்றிக்கொண்டிருக்கும். கூட்டமாக நின்றுகொண்டிருக்கும் ஏனைய எல்லா ஆடுகளையும் விட்டுவிட்டு நம்மாண்டவர் ‘காணாமல் போன ஆட்டைத்’ தேடிக் கண்டுபிடிக்கப்போவதைப்பற்றி சுவிசேஷ நூல்களில் சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறீர்கள் அல்லவா? ஏன் தெரியுமா? தொலைந்து போயிக்கும் அந்த ஆட்டிற்குச் சுயமாகத் தன்னிடத்தைத் தேடி வரும் வல்லமை இல்லாததால்தான்.

செம்மறி ஆடு அழகானது; அமைதியானது; தாழ்மைகொண்டது. எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கும் வகையில் அது முழு முட்டாள்தனமுள்ளது அல்ல; அதற்குப் புத்தியிருக்கிறது. ஆனால், வழிதவறிப் போய்விட்டால் மட்டும் அது முற்றிலும் தொலைந்துபோய் என்ன செய்வதென்று அறியாமல் நின்றுகொண்டிருக்கும்; அதால் உணவையும், தண்ணீரையும் தேடிப்போய்த் தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாது. உலகத்தில் பில்லியன் அளவுக்கு செம்மறி ஆடுகள் இருக்கின்றன. அவைகளுக்கு பாதுகாப்பளிக்கும் ஆயிரக்கணக்கான மேய்ப்பர்கள் மட்டும் இல்லாவிட்டால் அத்தனையும் தண்ணீரும் உணவுமில்லாமல் வெகு சீக்கிரமே மடிந்துபோய்விடும். நம்மாண்டவரைப்போல அந்த மேய்ப்பர்கள் காணாமல் போன ஆடுகளைத் தேடிக்கண்டுபிடித்து வீட்டுக்குக் கொண்டுபோகிறார்கள்; ஏனென்றால் அவற்றால் சுயமாகத் திரும்பி வரமுடியாதென்று அவர்களுக்குத் தெரியும். ஏனைய எல்லா மிருகங்களுமே தான் வந்த இடமறிந்து வீடு திரும்பும் உணர்வுள்ளவை; செம்மறி ஆட்டால் அதைச் செய்ய முடியாது. இப்போது தெரிகிறதா, கர்த்தர் ஏன் நம்மைத் தொலைந்துபோன ஆட்டிற்கு ஒப்பிட்டு வேதத்தில் எழுதியிருக்கிறார் என்று?

செய்வதென்னவென்று தெரியாமல், குழம்பிப்போய், பசியோடும், தாகத்தோடும் ஆண்டவரை அறியாமல் ஆத்மீக வழி தெரியாமல் இருந்த மக்கள் கூட்டத்தைக் கண்ட ஆண்டவர் அவர்களைப் பார்த்து மேய்ப்பனில்லாத மந்தைகள் என்று சொன்னார்.

மத்தேயு 9:36
அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத  ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,

அவர்களுக்குத் தங்களுடைய நிலை புரியாமலிருந்தது. தங்களுக்காக அவர்களால் உணவு தேடிக்கொள்ள முடியவில்லை. தாகத்தோடு அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு வழிதெரியவில்லை; வழிகாட்டுவதற்கும் அங்கு எவரும் இருக்கவில்லை. தண்ணீரும், உணவும் கொடுக்கவும் மேய்ப்பனில்லாமல் நின்றார்கள். இந்த நிலையைத் தான் ஏசாயா தீர்க்கதரிசி,

“நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்” (ஏசாயா 53:6)

என்று விளக்கியிருக்கிறார். நாமெல்லோரும் ஆண்டவரைவிட்டுப் பிரிந்து அவரிடம் போவதற்கு வழிதெரியாமல், அவருடைய மந்தைகளோடு இணையும் பாதை அறியாமல் செம்மறியாடுகளைப்போல குழம்பிப்போய் நின்றுகொண்டிருக்கிறோம்.

யாராவது செம்மறியாடுகளுக்கு தவறான வழிகாட்டி அழைத்துச் செல்லும்போது அவை உண்மை தெரியாமல் அந்த வழியில் போகக்கூடியவை. அந்த வகையில் தவறான பாதையில் விழுந்துவிடக்கூடியவை செம்மறியாடுகள். எங்கள் நாட்டில் வருடாந்தரம் கோடிக்கணக்கான செம்மறியாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? அப்படிக் கொல்லுவதற்காக ஆடுகள் கொண்டுபோகப்படும்போது அந்த ஆடுகளை வழிநடத்திச் செல்ல அதற்காகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஆண் ஆடு பயன்படுத்தப்படும். இந்த ஆட்டிற்குப் பெயர் யூதாசு ஆடு. ஆம்! ஆண்டவரைக்காட்டிக் கொடுத்த யூதாசின் பெயரே இதற்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆடுகளை நம்பவைத்து தன்னைப் பின்பற்றி அழிவை நாடிப்போகவைப்பது இந்த ஆட்டின் பணி. ஆடுகள் அனைத்தும் இதற்குப் பின்னால் போய் லாரியில் ஏறி ஆடுகள் கொல்லப்படும் இடத்தை நோக்கிப் போகும். அந்த இடத்தை அடைந்த பின் ஆடுகள் இறங்கி கொல்லப்படும் கட்டடத்துக்குள் இந்த ஆட்டைப் பின்பற்றிப் போகும்போது அவற்றிற்குக் கீழிருக்கும் ஒரு கதவு திறக்கும். அது திறக்கும்போது ஆடுகள் உள்ளே விழுந்துவிடும். அங்கே ஆடுகள் கொல்லப்படும். இப்படியாக ஆட்டுக்கூட்டம் யூதாசு ஆட்டைப்பின்பற்றி மரணத்தை நாடிச் செல்லும். செம்மறி ஆடுகள் இலகுவாக ஏமாந்து அழிவை நாடிப் போய்விடக்கூடியவை. அவை காணாமல் போகின்றபோது அவற்றால் திரும்பி வரமுடியாது.

செம்மறி ஆடுகளைக் காணாமல் போகின்ற ஆபத்திலிருந்து காப்பாற்றுவது மிக அவசியம். அதனால்தான் மேய்ப்பனில்லாவிட்டால் அவைகளுக்கு பேராபத்து. இன்னொரு விஷயத்துக்காகவும் அவற்றிற்கு மேய்ப்பன் தேவை. அதாவது அவை பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றிற்கு வழிகாட்டுதல் அவசியமாகிறது. அவைகளுக்கு தண்ணீரும் உணவுமளித்து பாதுக்காப்பது இன்றியமையாதது. அவைகள் மேயும் இடத்துக்குபோய் உணவருந்தவும், தண்ணீருள்ள இடத்துக்குப் போய் தண்ணீரருந்தவும், மீண்டும் இருப்பிடத்துக்கு மாலையில் திரும்பிவரவும், வழியில் போகுமிடம் தெரியாமல் காணாமல் போய்விடாமல் இருக்கவும் மேய்ப்பன் இருப்பது மிகவும் அவசியம். அதுவும் ஒரு ஆட்டிற்குக் காயம் ஏற்பட்டால் மேய்ப்பன் அந்த ஆட்டைத் தோளில் தூக்கி வீட்டிற்குக் கொண்டுபோக வேண்டும். செம்மறியாடுகள் தங்களுடைய வாழ்நாள் பூராவும் புல்லைச் சாப்பிடுவதிலும், தண்ணீரருந்துவதிலுமே காலத்தைச் செலுத்துகின்றன. அவை அடிக்கடி தாகமெடுத்து தண்ணீரை நாடிப் போகும் குணங்கொண்டவை. ஆகையால் மேய்ப்பனொருவன் இல்லாமல் இருக்கும் ஆட்டுக்கூட்டம் மிகவும் பலவீனமான நிலையைச் சந்திக்கும்.

செம்மறியாட்டிற்குக் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் தேவை. தண்ணீர் எந்தவிதமான விஷத்தன்மையில்லாமலும், குழம்பிய குட்டையாக இல்லாமலும், தேங்கி நிற்பதாக இல்லாமலும் இருக்கவேண்டும். அதுவும் தண்ணீர் வேகமாக ஓடுகின்ற அருவியாக இல்லாமல் அமைதியாக ஓடுகின்ற நீராக இருக்கவேண்டும். அதனால்தான் தாவீது 23ம் சங்கீதத்தில் ‘அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்’ கர்த்தர் தன்னை அழைத்துப் போவார் என்று சொல்லுகிறான். தாவீது ஆடுமேய்க்கும் அனுபவமுள்ளவனாக இருந்தான். அவனுக்கு எத்தகைய தண்ணீர் செம்மறியாட்டிற்குத் தேவை என்பது தெரிந்திருந்தது. அதுவும் தண்ணீர் மிகுந்த வெப்பமில்லாமலும், அதிக குளிரில்லாமலும் இருக்கவேண்டும். அத்தகைய தண்ணீரே செம்மறியாட்டிற்குத் தேவை. அத்தோடு செம்மறியாடு போய் வசதியாக கண்டுபிடித்துக் குடிக்கும்படியாக தண்ணீர் வெகு அருகில் இருக்கவேண்டும்.

அநேக மிருகங்கள் தண்ணீர் எங்கிருக்கிறது என்று மோப்பம் பார்த்துப் போய்க் குடிக்கும் ஆற்றல் கொண்டவை. அவற்றால் காற்றை மனந்து பார்த்து அதன் தண்ணீர்ப்பதத்தைக்கொண்டு தண்ணீர் எங்கிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆனால், செம்மறியாட்டால் அது முடியாது. செம்மறியாடுகள் தாங்கள் மேயும் வழமையான புல்வெளியைவிட்டு வெகுதூரம் போய்விட்டால் அவற்றால் தண்ணீர் பக்கத்தில் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. அவை திரும்பவும் தங்களுடைய இருப்பிடத்தைத் தேடிப்போக முடியாமலும், தண்ணீரைக் கண்டுபிடிக்க முடியாமலும் தாகத்தால் மடிந்துபோகும்.

ஒரே இடத்தில் உணவருந்தும்

ஓரிடத்தில் புல் மேய்ந்துகொண்டிருக்கும் செம்மறியாடு அந்த இடத்தில் உள்ள புல்லை எல்லாம் உணவுக்குப் பயன்படுத்திய பிறகு தொடர்ந்து அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். அங்கிருக்கும் வைக்கோலையும் புல்லையும் மேய்ந்து முடித்த பிறகு எஞ்சியிருக்கும் குப்பைகளையும் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும். யாராவது புதிய இடத்திற்கு அதை அழைத்துப்போனால் தவிர அதற்குச் சுயமாக இன்னொரு இடத்தைத் தேடிப் புல்மேயப் போகத்தெரியாது. அத்தோடு செம்மறியாட்டுக்கு எதையும் பிரித்துப் பார்த்து நல்லதை மட்டும் உணவாகக்கொள்ளத் தெரியாது. ஏனைய மிருகங்களால் அதைச் செய்ய முடியும். செம்மறியாட்டுக்கு எவை சாப்பிடக்கூடாத நச்சுத் தன்மையுள்ள செடிகள், களைகள், எவை நல்லவை என்பதெல்லாம் தெரியாது. இதிலிருந்து செம்மறியாடுகளுக்கு எந்தளவுக்கு அவைகளைப் பாதுகாத்து, உணவளித்து, தண்ணீர் கொடுத்து கவனமாகக் கண்காணித்து வளர்த்து வரக்கூடிய மேய்ப்பன் தேவை என்பது தெரிகிறதா? கவனிக்காமல் விடப்படும் செம்மறியாடு மடிந்துவிடும்; அதன் வாழ்க்கைக்கு அச்சாணி மேய்ப்பனே.

எண்ணெய்த் தோல் கொண்ட மிருகம்

பொதுவாக செம்மறியாடுகள் வெள்ளைத் தோலுள்ள அழகான மிருகங்கள் என்று நினைப்போம். குட்டியாக இருக்கும் செம்மறியாடு பார்ப்பதற்கும் தொடுவதற்கும், தூக்கி வைத்திருப்பதற்கும் அழகாகத்தான் இருக்கும். ஆனால், அந்தக் குட்டியாடு சீக்கிரமே வளர்ந்துவிடும். வளர்ந்த பிறகு அது அந்தளவுக்கு வெள்ளையாக அழகாக இருக்காது. அதன் தோல் சுத்தமாகவும் இருக்காது. அது பிசுபிசுக்கும் தோலாக அழுக்குகள் நிறைந்து காணப்படும். அதற்குக் காரணம் செம்மறியாட்டின் தோல் அதிகம் எண்ணெய் சுரக்கின்ற தோலாக இருப்பதுதான். அந்த எண்ணெய் ஆட்டின் தோல் முழுதும் பரவிக்காணப்படும். அந்தளவுக்கு எண்ணெய் சுரக்கின்ற வேறு மிருகம் இல்லை. அதன் தோலுக்குள் கையை நுழைத்துத் தடவினீர்களானால் கைபூராவும் எண்ணெய்ப்பசை இருக்கும். இதனால் ஆட்டைச் சுற்றிக்காணப்படும் அத்தனைக் குப்பைக்கூளங்களும் அதன் தோலில் ஒட்டிக்கொள்ளும். காற்றில் பரந்து வரும் குப்பையும், அது புரளும்போது நிலத்தில் காணப்படும் மண்ணும், குப்பையும் அதன் தோளில் ஒட்டிக்கொள்ளும். செம்மறியாடு சுத்தமாகவே இருக்காது. அதால் தன்னைச் சுயமாக சுத்தப்படுத்திக்கொள்ளத் தெரியாது; முடியாது. தன் தோலெல்லாம் அசுத்தமாக பிசுபிசுத்துக் காணப்படுகிறதே என்ற உணர்வெல்லாம் செம்மறியாட்டுக்குக் கிடையாது. மேய்ப்பன் அதைச் சுத்தப்படுத்தும்வரை அசுத்தத்தோடேயே நிற்கும்.

தண்ணீர்ப்பதமுள்ள நிலம் ஒத்துவராது

புல்லுள்ள நல்ல நிலம் செம்மறியாடுகளுக்குத் தேவைப்படுவது மட்டுமன்றி, நீர் தேங்கி நிற்கும் நிலம் அதன் நலத்துக்கு நல்லதல்ல. நிலத்தில் நீர் தேங்கி நின்றால் அதன் பாதங்கள் சிதைந்துவிடும். அதனால் அது வளரும் நிலம் நல்ல புல்லுள்ள நிலமாகவும் அதேவேளை தண்ணீர்ப்பதமற்ற நிலமாகவும் இருக்கவேண்டும். தண்ணீர்ப்பதமுள்ள நிலத்தில் அது மேயுமானால் அதற்குக் கடுமையான வயிற்றோட்டம் ஏற்படும். அதில் நிற்கவும், புரளவும் செய்யும் செம்மறியாட்டின் எண்ணெய்த் தோல் மேலும் அசுத்தமாகி இறுதியில் நோயால் அது மடிந்துபோகும்.

அதற்கு ஈக்கள் ஆபத்து விளைவிக்கும்

ஈக்கள் செம்மறியாட்டின் தோலில் முட்டையிடும்போது அந்த முட்டைகள் தகுந்த காலத்தில் ஈக்களாவதற்கு முன் புழுக்களை உண்டாக்கும்போது அது செம்மறியாட்டிற்குப் பேராபத்து விளைவிக்கின்றன. செம்மறியாட்டால் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் வல்லமை இல்லாததால் அது உணர்வின்றிக் காணப்படும். இப்படியாக ஆட்டுத்தோலில் வளரும் ஈக்கள் ஆட்டின் உயிரைக்குடித்துவிடும். அதனால்தான் ஆட்டு மேய்ப்பன் அடிக்கடி ஒவ்வொரு ஆட்டின் தோலிலும் கைநுழைத்துப் பார்த்து அங்கே ஏதாவது ஆட்டுக்கு ஆபத்தானவை இருக்கின்றனவா என்று ஆராய்வான். அப்படி ஈக்கள் முட்டைபோட்டிருக்கும் அடையாளம் காணப்பட்டால் அந்தப்பகுதித் தோலை மேய்ப்பன் அறுத்து எடுத்துவிடுவான். பின்பு தோல் நன்றாக வளர்ந்து தோலுரிக்கும் காலத்தில் சுத்தமாக இருக்கும். அத்தோடு ஆட்டின் உயிரும் காப்பாற்றப்படும். செம்மறியாட்டால் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ள முடியாதது மட்டுமல்ல அதால் இன்னொரு ஆட்டிற்கும் எந்த உதவியும் செய்ய முடியாது.

தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாது

உலகத்தில் காணப்படும் அத்தனை மிருகங்களிலும் செம்மறி ஆடு மட்டுமே ஆபத்துக்களிலுமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளக்கூடிய எந்தவிதமான பாதுகாப்பு வல்லமையும் இல்லாத மிருகம். அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்ட ஆட்டுக்குட்டியாக இயேசுவை ஏசாயா 53ல் தீர்க்கதரிசி வர்ணித்திருப்பதற்குக் காரணம் இதுதான். செம்மறியாட்டால் உதைக்க முடியாது, கடிக்க முடியாது; உயரப் பாயமுடியாது; ஓடவும் முடியாது. அது நின்ற இடத்திலேயே நின்று மடிந்துவிடும். எந்த மிருகமாவது அதைத் தாக்கினால் உடனே எங்கேயாவது ஓடித் தப்பிக்கொள்ளுவதை விட்டுவிட்டு மற்ற ஆடுகளோடு போய் சேர்ந்து நிற்கும். அது தாக்க வருகின்ற மிருகத்திற்கு நல்ல வாய்ப்பாக அமையும். மேய்ப்பனில்லாவிட்டால் அதால் எந்த ஆபத்திலிருந்தும் தப்ப முடியாது.

வேறு எந்த மிருகத்தையும்விட செம்மறியாட்டிற்கு ஆபத்து அதிகம். ஏனெனில், அது மிகவும் தாழ்மையானது. எந்த ஆபத்திற்கும் பேச்சு மூச்சில்லாமல் அது தன்னை ஒப்புக்கொடுத்துவிடும். அதற்கு எதிர்த்துப் போராடும் குணம் கிடையாது. மேய்ப்பன் அதன் மயிரைக் கத்தரிப்பதற்காக அதன் கால்களை இறுக்கிப் பிடித்து அதன் சரீரத்தில் கத்தரியைப் பயன்படுத்துகிறபோது எந்தவித முறுமுறுப்பும் காட்டாமல் எந்த சத்தமுமிடாமல் ஆடு அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிடும். அப்படி மயிர் கத்தரிக்கும்போது மேய்ப்பன் பயன்படுத்தும் கத்தி எங்காவது உடலில் பதிந்து சின்னக் காயத்தை உண்டாக்கினாலும் ஆடு அமைதியாக இருந்துவிடும். செம்மறியாட்டை நீங்கள் தாக்கினால் அதன் இருதயம் எளிதில் உடைந்துபோய்விடும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் எந்தவித உணர்வுமில்லாமல் பட்டிருக்கும் காயங்களினால் இருதயமும் சரீரமும் வாடிப்போய் பலவீனப்பட்டுவிடும். அதனால் எதையும் எதிர்த்து நிற்க முடியாது; வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளைப் போராடி வெல்லும் குணம் அதற்கில்லை. ஆபத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்து மடிய மட்டுமே அதால் முடியும்.

நன்றாக தோல் வளர்ந்து காணப்படும் செம்மறியாடு முதுகு புரள விழுந்துவிடுமானால் அதால் உடனடியாக எழுந்து நிற்க முடியாது. எழுந்து நிற்பதற்கு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் அப்படியே இறந்து மடிய மட்டுமே அதற்குத் தெரியும். மேய்ப்பன் உடனடியாக அதன் நிலைமையைக் கவனித்து அதைத் திருப்பி எழுப்பி நிற்க வைக்காவிட்டால் அது மடிந்துவிடும். அது புரண்டு நீண்டநேரம் முதுகுப்புறம் விழுந்துகிடக்குமானால், அதைக் கவனித்து மேய்ப்பன் ஆட்டை எழும்பி நிற்கவைத்தால் அதால் உடனடியாக நிற்கமுடியாது. இரத்த ஓட்டம் நின்று போய் அது தள்ளாட ஆரம்பிக்கும். அதனால் மேய்ப்பன் அதைக்கவனமாகத் தூக்கித் தோளில் போட்டு இருப்பிடத்துக்குக் கொண்டுபோவான். மறுபடியும் அதன் இரத்த ஓட்டம் சீராக ஒரு மணி நேரமாவது ஆகும்.

அதற்கு அக்கறையோடுகூடிய கவனிப்புத் தேவை

செம்மறியாட்டுக்கு தொடர்ச்சியான அக்கறையோடுகூடிய கவனிப்பு தேவை. தன்னால் சுயமாக செய்யக்கூடியது எதுவுமில்லாமல் எல்லாவற்றிற்கும் அது மேய்ப்பனிலேயே தங்கியிருக்கிறது. அது மிகவும் பலவீனமான மிருகம். மேய்ப்பனில்லாவிட்டால் அதற்கு ஜீவனிருக்காது. மேய்ப்பனில்லாத ஆடுகள் என்று வேதத்தில் இஸ்ரவேலர் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லவா? வேறு எந்த மிருகமும் இந்தளவுக்கு இன்னொருவரில் தங்கியிருக்கும்படி படைக்கப்படவில்லை. எங்களூரில் இருக்கும் மந்தை மேய்க்கும் மேய்ப்பர்கள் மிகுந்த அக்கறையோடு ஆடுகளைக் கவனித்துக்கொள்ளுவார்கள். நள்ளிரவில்கூட ஆட்டின் மீது அவர்களுக்குக் கவனம் இருக்கும். முக்கியமாக ஆடுகள் குட்டிபோடும் பருவத்தில் மேய்ப்பன் நள்ளிரவிலும் மலையில் ஏறி ஆடுகள் இருக்கும் இடத்தைத் தேடிப்போய் பிறந்திருக்கும் ஆட்டுக்குட்டிகளை வீட்டிற்குக் கொண்டுசேர்த்து பாதுகாப்பளிப்பான். மேய்ப்பன் தனக்குச் சொந்தமான நிலத்தில் நல்ல வேலியமைத்து வெளியில் இருந்து ஆட்டுக்குத் தொல்லை தரும் எதுவும் உள்ளே வந்துவிடாதபடி பாதுகாப்பளிப்பான். வானத்தில் பறக்கும் பருந்துகூட சின்ன ஆட்டுக்குட்டிகளைத் தூக்கிச் சென்றுவிடலாம் என்பது தெரிந்து அதிலும் ஒரு கண்வைத்திருப்பான். ஏன் தெரியுமா? அந்தளவுக்கு பலவீனமான செம்மறி ஆடுகளுக்கு மேய்ப்பனின் கருத்தோடுகூடிய கண்காணிப்பு தேவை.

ஏனைய மிருகங்கள் அனைத்தைவிடவும் பலவீனமானதாக செம்மறியாடு இருந்தாலும் மற்ற மிருகங்களைவிட மிகவும் பயனுள்ளதாக அது இருக்கிறது. செம்மறியாட்டின் சரீரத்தின் அத்தனைப் பாகங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேதமும் செம்மறியாடும்

செம்மறியாட்டைப்பற்றிய அநேக விஷயங்களை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த மிருகத்தைத்தான் வேதம் ஆண்டவருக்கும், அவருடைய மந்தையான ஆத்துமாக்களுக்கும் உதாரணமாக பயன்படுத்துகிறது. யாருக்கும் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் வாய்மூடி அடிக்கப்படுவதற்காக இயேசு கொண்டுபோகப்பட்டதாக ஏசாயா (53:7) குறிப்பிடுகிறார்.

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

மேலே நாம் பார்த்திருக்கும் வசனம் மறுபடியும் மறுபடியுமாக பல தடவைகள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனம்.

யோவான் ஸ்நானன் இயேசு தன்னிடம் வருவதைக் கண்டு, ‘இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என்று சொல்லியிருப்பதை யோவான் 1:29ல் காண்கிறோம். பிதா தன்னிடம் கொடுத்திருக்கும் மீட்பின் பணியைப் பூரணமாக நிறைவேற்ற எந்தளவுக்கு பிதாவின் கட்டளைகளுக்கு அமைதியாகத் தன்னை இயேசு ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்பதை ஆட்டுக்கு ஒப்பிட்டு அவரைப்பற்றி வேதம் தரும் விளக்கங்கள் காட்டுகின்றன.

இயேசுவுக்கு மட்டுமல்லாமல் வேதம் அடிக்கடி ஆத்துமாக்களை செம்மறியாட்டிற்கு ஒப்பிட்டு விளக்குகிறது. நாம் பாவத்தின் காரணமாக வழிதவறி ஆண்டவரை அறியாமல் குருடர்களைப்போல பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை ஏசாயா 53:6 பின்வருமாறு விளக்குகிறது,

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்;

பேதுரு நம்மைப்பற்றி விளக்கும்போது பின்வருமாறு கூறுகிறார்,

சிதறுண்ட ஆடுகளைப் போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். (1 பேதுரு 2:25)

எபிரெயருக்கு எழுதியவர் செல்லுகிறார்,

நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபிரெயர் 13:20-21)

இயேசு தான் நல்ல மேய்ப்பன் என்றும், இஸ்ரவேலில் மேய்ப்பர்கள்போல் வெளிப்பார்வைக்கு தங்களை இனங்காட்டி இருந்து வந்த ஓநாய்களில் இருந்து தன்னை விலக்கிக்காட்டி எப்படியெல்லாம் தன் மந்தைகளைத் தான் கவனித்துக்கொள்வேன் என்றும் யோவான் 10ல் அருமையாக விளக்கியிருக்கிறார். இங்கே மந்தைகளாகக் காட்டப்பட்டிருப்பது அவருடைய மக்களே.

1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். 4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. 5. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.

மேலும், தான் எப்படியெல்லாம் ஆடுகளை நல்ல மேய்ப்பனாயிருந்து பாதுகாக்கிறேன் என்று இயேசு பின்வரும் வசனங்களில் விளக்குகிறார்.

7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 8. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. 9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். 11. நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 12. மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். 13. கூலியாள் கூலிக்காக வேலை செய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். 14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், 15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். 16. இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

தன்னுடைய ஆடுகளுக்கும் தனக்கும் இருக்கும் பிரிக்கமுடியாத உறவை இயேசு இதே அதிகாரத்தில் பின்வருமாறு விளக்குகிறார்.

26. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். 27. என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. 28. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. 29. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

தன் ஆடுகளின் மேல் அத்தனை அன்பு வைத்திருந்தபடியால்தான் மேய்ப்பரான இயேசு தான் மரிப்பதற்கு முன் பேதுருவைப் பார்த்து மூன்று தடவைகள் தன் ஆடுகளைத் தான் மேய்ப்பதுபோல மேய்க்கும்படிச் சொல்லியிருக்கிறார். அதை யோவான் 21:15-17 வரையுள்ள வசனங்களில் காண்கிறோம்.

15. அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16. இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17. மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

பரிசுத்த ஆவியானவரே கர்த்தரின் வெளிப்படுத்தலாகிய வேதத்தை எழுத்தில் தந்திருக்கிறார். அவர் பயன்படுத்துகிற உதாரணங்கள் பூரணமானவை. அவரைவிட மேலான எழுத்தாளர்களை உலகத்தில் சந்திக்க முடியாது. வேதத்தில் அவர் பயன்படுத்தியிருக்கும் மேய்ப்பன்-ஆடு உதாரணம் மிகவும் அருமையானது. இந்த உதாரணங்களின் மெய்த்தன்மையைப் புரிந்துகொள்ளாமல் நம் மேய்ப்பனாகிய ஆண்டவரையும், நம்மைப்பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடியாது. அதனால்தான் பேதுரு தன்னுடைய முதலாம் நிருபம் 5ம் அதிகாரத்தில் திருச்சபைப் போதகர்களை (மூப்பர்கள்) மேய்ப்பனுக்கும், நம்மை மந்தைகளுக்கும் ஒப்பிட்டுப் பேசுகிறபோது பேதுருவின் வார்த்தைகளின் முழுத்தார்ப்பரியத்தையும் புரிந்துகொள்ளுவதற்கு நாம் மேய்ப்பனைப்பற்றியும், ஆடுகளின் தன்மையைப்பற்றியும் அறிந்துகொள்ளுவது அவசியமாகிறது. வேதம் போதிக்கும் ஆத்மீக சத்தியங்களின் ஆழமான மெய்த்தன்மையை இந்த உதாரணங்கள் நாம் துல்லியமாக அறிந்துணர உதவுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா? ஆடுகள் இல்லாமல் மேய்ப்பன் இருக்கமுடியாது; மேய்ப்பனில்லாமல் ஆடுகள் இருக்கமுடியாது. அப்படி இருந்தால் இந்த வார்த்தைகள் பொருளிழந்து போய்விடும். ஆடுகளுக்கும் மேய்ப்பனுக்கும் இருக்கும் உறவு அப்படிப்பட்டது; ஒருவரில்லாமல் இன்னொருவர் இருக்க முடியாது. நம்மினத்தில்தான் சபைகள் இல்லாத மேய்ப்பர்களையும், மேய்ப்பர்கள் இல்லாத மந்தைகளையும் பார்க்க முடியும். அந்தளவுக்கு வேதத்தை மீறிய வாழ்க்கையை அநேகர் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் மேய்ப்பர்கள் என்ற பெயரில் ஓநாய்கள் ஆடுகளை சீரழித்து வருகின்ற அசிங்கங்களும் நம்மினத்தில் அதிகம். நல்ல மேய்ப்பன் தன்னை இழந்து ஆடுகளைப் பாதுகாப்பான். நம்மினத்து மேய்ப்பர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள ஆடுகளைப் பலிகொடுக்கிறார்கள். சமுதாயத்தில் ஒரு வேலையைத் தேடி நியாயமாக உழைத்து தன்னையும் குடும்பத்தையும் காத்துக்கொள்ள வக்கில்லாமல் வெறும் சம்பளப்பணத்துக்காக ஊழியத்தை நடத்தி ஆத்துமாக்களிடம் பணம் வசூலித்து வரும் ஆயிரக்கணக்கான ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் நம்மினத்தில் ஏராளம். நம் நல்ல மேய்ப்பர் இவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பு நாளை வைத்திருப்பதை இவர்கள் உணராமல் இருந்து வருகிறார்கள். தங்கள் கடமையைப் பொறுப்போடு செய்துவராத ஒவ்வொரு திருச்சபை மேய்ப்பனும் ஒருநாள் வரப்போகும் நியாயத்தீர்ப்பில் இருந்து தப்ப முடியாது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s