குருடன் குருடனுக்கு வழிகாட்டுவதுபோல்

குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? மிகவும் கஷ்டம். இரண்டு பேருக்குமே கண் தெரியாததால் இரண்டு பேருக்கும் அதனால் ஆபத்து ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பாதை தெரியாத ஒருவன் இன்னொருவனுக்கு பாதை காட்ட முடியாது. இரண்டு பேருமே தட்டுத்தடுமாறி வீடுபோய்ச் சேரமுடியாமல் எங்கோ நின்று தடுமாறிக்கொண்டிருப்பார்கள். இதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இதே நிலைமைதான் இன்று நம்மினத்து ஊழியங்கள் மற்றும் சபைகளைப் பாதித்துக்கொண்டிருக்கின்றன. வெறும் சுயநல உணர்ச்சியோடு தங்களுடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஆத்மீக ஆசை இருப்பதுபோல் பாவனை செய்து கூட்டங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் கூட்டம் ஒருபுறமிருந்தபோதும், இன்னொருபுறம் உண்மையாகவே சத்திய வாஞ்சைகொண்டு சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கின்ற ஒரு சிறிய கூட்டமும் எங்கும் இருந்து வருகிறது. அத்தகைய சத்திய வாஞ்சையை எந்த இருதயத்திலும் விதைக்கிறவர் பரிசுத்த ஆவியானவர்தான். வேதம் அதிகம் தெரியாமலிருந்தாலும் உண்மையான, உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருந்து சத்தியத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றது இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை நான் பல நாடுகளில் என்னுடைய பிரயாணங்களின்போது சந்தித்திருக்கிறேன். அவர்களோடு உறவாடி, சத்தியத்தைப் பகிர்ந்துகொண்டு அவர்களுடைய சந்தோஷத்தில் பங்கேற்றிருக்கிறேன். அப்படியான ஒரு சந்தர்ப்பம் இந்த டிசம்பர் மாதமும் கிடைத்தது.

இத்தகையோரை நான் நம்மினத்தில் இந்திய தேசத்தில் பார்த்திருக்கிறேன், ஸ்ரீ லங்காவிலும், மலேசியாவிலும் சந்தித்திருக்கிறேன். இவர்களெல்லோரும் பழைய இஸ்ரவேல் ஜனத்தின் மத்தியில் இருந்த மீதமானவர்களைப்போல இன்று இருந்துவருகிறார்கள். இவர்களால் நம்மினத்தில் காணப்படும் ஆத்மீகக் குழப்பத்தையும், ஆத்மீகப் பஞ்சத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. சத்திய வேதத்தில் நல்லறிவு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களுடைய வாஞ்சையாக இருக்கிறது. மோகன் சி லாஸரஸ், பால் தினகரன் போன்றோர் வலையில் சிக்கி அழிந்துபோவதை இவர்களால் தவிர்த்துக்கொள்ள முடிகிறது. அத்தகையோரை நாடி ஓடிக்கொண்டிருக்கும் சுயநலம் பிடித்த போலிக்கூட்டத்தோடு இவர்களால் சேரமுடியவில்லை. இருந்தபோதும் சத்தியத்தை மட்டும் பிரசங்கித்துப் போதித்து வருகின்ற சபைகளில்லாமல் இவர்கள் தவிப்போடு இருந்துவருகிறார்கள். இவர்களுக்காகவே 25 வருடங்களுக்கு முன்பு நான் திருமறைத்தீபம் இதழை ஆரம்பித்ததோடு, வேறு நூல்களையும் எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட ஆரம்பித்தேன். ஆத்தும தாகம்கொண்ட இந்த ஜனங்கள் காலத்தைப் போக்குவதற்காக எங்காவது இருந்து வாழ்க்கையைக் கடத்திவிடுவோம் என்ற எண்ணமில்லாமல் இருந்து வருகிறார்கள். இவர்களால் பொய்யைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறைந்த வேத அறிவிருந்தபோதும் அசத்தியத்தை அடையாளங் கண்டுகொள்ள முடிகிறது. இவர்களுடைய ஆத்தும தாகம் இவர்களைச் சுற்றியிருக்கும் போலிக் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு எரிச்சலை உண்டாக்குகிறது. எங்களோடு சேர்ந்து எப்படியாவது காலத்தை ஓட்டிவிடுவதை விட்டுவிட்டு சத்தியம், சத்தியம் என்று அலைகிறாயே என்று இவர்களை எள்ளிநகையாட அவர்கள் தவறுவதில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே சிலரை என் மனம் நினைத்துப் பார்க்கிறது. குக்கிராமம் ஒன்றில் இருந்து சத்திய வாஞ்சையோடு தனிமனிதராக நியாயத்திற்காக பேசிக்கொண்டிருக்கிற ஒருவரை எனக்குத் தெரியும். தன் கிராமத்தில் ஒரு நல்ல சபையில்லையே என்பதுதான் அவருடைய தவிப்பு. இருக்கும் சபைப் போதகன் வயிற்றுக்கும் வசதிக்குமாக அலைந்துகொண்டிருப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருவது இவருக்குத் தெரியும். நல்ல நூல்களை அந்த மனிதர் வாசிக்கும்படி இவர் கொடுக்கின்றபோது அதுகூட அத்தகைய ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்ப் போதகனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

சத்தியத்தைக் கற்றுத்தேற வேண்டும் என்று இறையியல் கல்லூரியை நம்பிப் போய் சத்தியத்தை அங்கே அரவே காணமுடியாமல் அரைவாசியில் படிப்பை முடித்துவிட்டு சத்தியத்தை எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று நாடி வந்திருக்கிறவர்களை எனக்குத் தெரியும். சத்தியம் தொடர்ந்து அநேகருக்கு கண்ணைத் திறந்துவிட்டுக்கொண்டிருக்கிறது என்பதில் மட்டும் சந்தேகமில்லை. இருந்தபோதும் இத்தகையோருக்கெல்லாம் வாராவாரம் சத்தியப் போதனையளித்து சத்திய ஆராதனை நடத்திவரும் நல்ல சபைகளும் நற்போதகர்களும் அதிகளவில் இல்லாமலிருப்பதுதான் கண்ணீரை வரவைக்கும் வருத்தமாக இருக்கிறது. நல்ல போதகர்களுக்கு எங்கு போவது? ஒருவர் என்னைக் கேட்ட கேள்வி இது. நல்ல போதகர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதில் கேள்வி கேட்டவர் தெளிவாகத்தான் இருந்தார். ஆனால், அத்தகையோரை எங்கு தேடிக்கண்டு பிடிப்பது? எப்போதுமே எனக்குத் தெரிந்திருக்கும் சிலரை அவர்களுக்கு நான் அறிமுகம் செய்து வைக்காமலில்லை. விரல் விட்டு எண்ணிவிடும் சிறுதொகையாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள். இதெல்லாம் எதை உணர்த்துகிறது? நல்ல போதகர்களின் இன்றியமையாத அவசியத்தைத்தான். அத்தகையோரை உருவாக்காமல் அவர்கள் தானாக முளைத்துவிடப்போவதில்லை. அத்தகையவர்களைக் கர்த்தரே சபைக்குத் தந்தபோதும் (எபேசியர் 4), அவர்களை அடையாளங்கண்டு வளர்த்து விடாமல் அவர்கள் சுயமாக உருவாவதில்லை. அவர்கள் பின்பற்ற அவசியமான உதாரண புருஷர்கள் தேவை; வேதத்தைப் பின்பற்றும் நல்ல சபை தேவை; அவர்களுக்குப் பயிற்சியும் வழிகாட்டுதலும் அவசியம். அந்தவிதத்தில் அவர்களை இனங்கண்டு பயிற்சியளித்து வளர்த்துவிடுமளவுக்கு நம்மினத்தில் பக்திவிருத்தியும், வேதத்தில் துல்லிய ஞானமும், சத்தியத்திற்காக மட்டும் நிற்கக்கூடிய நெஞ்சுரம் கொண்டவர்களையுந்தான் காணமுடியாமல் இருக்கிறது. சீர்திருத்தவாதிகளைப் போல இனங்காட்டிக்கொள்ளும் சில பச்சோந்திகள் தங்கள் சுயநலத்திற்காக அநேக வாலிபர்களைப் பலிகொடுக்கின்ற செயலைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் மனதை உருக்கும் கதைகள். ‘என் சபையை நான் கட்டுவேன்’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளின் அர்த்தமே தெரியாது பலர் சபை நடத்துகிறோம் என்று தங்களுடைய பெட்டிக்கடைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆராதனை கெரிஸ்மெட்டிக் ஆராதனையை நினைவுபடுத்தும்படி கைத்தட்டலும், பெருஞ்சத்தமும் உள்ளதாக இருக்கும். அவர்கள் ஆண்டவரே அறியாத, துதி என்ற பெயரில் எல்லோரும் இணைந்து கூக்குரலிட்டு ஆராதனை செய்வது பாபேல் கோபுரத்தை மக்கள் கட்டியபோது ஆண்டவர் மொழியைப் புரிந்துகொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியதால் நிகழ்ந்த கோமாளித்தனத்தை நினைவுறுத்துவதாக இருக்கிறது. இத்தகையோர் மத்தியில் வேத வசனங்களை ஆராய்ந்து இலக்கண, வரலாற்றடிப்படையில் தரப்படும் நடைமுறைக்குகந்த பிரசங்கங்களை எதிர்பார்க்க முடியாது; அவை வெறும் வார்த்தை ஜம்பமாக உளறல்களாகவே இருக்கும்.

வாலிப வயதில் இருந்து பிரசங்கிக்கவும், போதிக்கவும் ஆவலுள்ள சிலர் என் ஆலோசனையைக் கேட்டிருக்கிறார்கள்; கேட்டு வருகிறார்கள். அவர்களுடைய வாஞ்சை எனக்குப் பிடித்திருந்தபோதும் ஆர்வக்கோளாறு எனக்கு பயத்தை உண்டாக்குகிறது. அவர்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ எனக்குத் தெரிந்த ஆலோசனையை நான் முன்வைத்திருக்கிறேன். வாலிப வயது அருமையான வயது; இருந்தாலும் அதற்குக் கடிவாளம் தேவைப்படுகிறது. துள்ளிக்குதித்தோடும் தண்ணீர் போன்ற அதன் வாஞ்சையை நாம் ஓர் அணையைக் கட்டி நிறுத்திவிடாமல், ஒரு கால்வாயைக் கட்டிப் பொறுமையோடு ஓடும்படிச் செய்யவேண்டும். நம்மினத்து வாலிபர்களுக்கு வாசிப்பில் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். வாசிக்காத ஒருவனும் பிரசங்கியாக, போதகனாக வருவது ஆத்துமாக்களுக்கு பேராபத்து. தன்னில் நல்லறிவைக் கொண்டிராத ஒருவன் மற்றவர்களுக்கு அறிவாகிய பஞ்சாமிர்தத்தை ஊட்டி அவர்களுடைய அறிவுப் பசியைத் தீர்க்க முடியாது. வாசிக்காத, ஆராய்ந்து சிந்திக்காத பிரசங்கியாலும் போதகனாலும், தனக்கோ மற்றவர்களுக்கோ எந்தப் பிரயோஜனமுமில்லை. வாசிக்காமலும், சிந்திக்க முடியாமலும் முட்டாள்களைப்போல மேடையில் வாராவாரம் உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறவர்களையும் நான் அறிவேன். அத்தகையோரின் பேச்சைக்கேட்டு வாழவேண்டியிருப்பவர்களை நினைத்தால் நிச்சயம் நெஞ்சு கொதிக்கத்தான் செய்யும்.

வாசிக்க வேண்டியதன் அவசியத்தைப்பற்றி நான் எழுதுவது இது முதல் தடவையல்ல. வாஞ்சையிருக்கும் நம் வாலிபர்களால் ஏன் வாசிக்க முடியாமலிருக்கிறது என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். புத்தகங்கள் அதிக விலையில் விற்கப்படுகின்றன என்று நிச்சயம் சொல்ல முடியாது. அப்படியானால் அவர்கள் ஏன் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை? நிச்சயமாக அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் கல்வி முறை ஒரு காரணம் என்பதை நான் பலமுறை விளக்கியிருக்கிறேன். அதை மறுபடியும் விசிட் பண்ண வேண்டிய அவசியமில்லை. வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்க என்ன செய்ய வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டும்; சில செயல்முறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்.

வாரத்துக்கு ஒரு முறை நல்ல போதகர்கள் வாலிபர்களோடு கூடி, தான் வாசித்துப் பயன்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதோடு அவர்களையும் சம்பாஷனையில் ஈடுபட வைப்பது அவசியம். அடுத்தடுத்து வரும் கூட்டங்களில் சில நூல்களை அறிமுகப்படுத்தி அவர்களை வாசிக்க வைக்க வேண்டும். வாசித்தவற்றை கூட்டத்தில் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் பக்குவத்தை அவர்கள் மத்தியில் வளர்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில வருடங்கள் செய்துவந்தால் அந்த வாலிபர்களும் அதைச் செய்யும் போதகனும் வளர்ச்சியடைய முடியும். போதகர்கள் முதலில் வாலிபர்களைத் தள்ளிவைத்துப் பழகுவதை நிறுத்தவேண்டும். அவர்களுக்கு ஊக்கமளித்து வளர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். அநேக போதகர்கள் அவர்களைத் தங்களுடைய சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளுவதில் மட்டுமே கருத்தாக இருந்துவிடுகிறார்கள்; அவர்களுடைய வாழ்க்கையிலும், எதிர்காலத்திலும் அக்கறைகாட்டுவதில்லை. எத்தனைப் போதகர்கள் வாலிபர்களோடு இணைந்து ஜெபத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்? தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அவர்கள் பார்த்து வளரும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்களா?

இத்தகைய வாசிப்புப் பழக்கம் வாலிபர்களில் வளருமானால், அவர்கள் தாம் வாசித்தவற்றை அறிவுபூர்வமாக மற்றவர்களோடு கலந்துகொள்வதில் திறமை பெற்றார்களெனில் அவர்களுக்கு வேத இறையியலில் இருக்கும் நாட்டத்தையும், வளர்ச்சியையும் நாம் அறிந்துகொள்ள முடியும். இத்தகைய வாசிப்பு வழக்கத்தைப் பயன்படுத்தி ஒரு போதகன் அந்த வாலிபர்களுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி வாசிக்க வைப்பதன் மூலம் இறையியல் அறிவைப் பெருகச் செய்யமுடியும். நம்மினத்தில் இதற்கெல்லாம் முக்கிய தடையாக இருப்பது சோம்பேறித்தனம். டன் கணக்கில் நமக்கு தேவையில்லாதவைகளையெல்லாம் செய்வதற்கு நேரமிருக்கும், ஆனால் நல்ல நூலொன்றை வாசிப்பதற்கு அநேக சாக்குப்போக்குகளைச் சொல்லுவோம். இத்தகைய வழக்கம் ஆத்மீக வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. சோம்பேறித்தனத்திற்கு முதலில் குட்பை சொல்லவேண்டும். அது இருக்கும்வரை ஒருவரும் உருப்படாமலேயே போய்விடுவோம். என்வீட்டில் என் மனைவி பிள்ளைகளுக்கு அது ஒருபோதும் இருந்ததில்லை. அதுபற்றியே எங்களுக்குத் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்போதும் எதையாவது செய்வதிலேயே என் குடும்பம் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. நம் கர்த்தர் உழைக்கும் கர்த்தர் அல்லவா? அவரிடம் இருந்துதான் இதைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஆத்மீக வளர்ச்சிக்கும், வாசிப்புக்கும் தடையாக இருக்கும் இன்னொன்று, ஒரு காரியத்தை செய்ய வேண்டிய நேரத்தில் செய்து முடிக்காமல் தள்ளிவைக்கும் பழக்கம். இதை ஆங்கிலத்தில் procrestination என்று அழைப்பார்கள். இது நம்மினத்தில் கலாச்சாரமாக இருந்துவருகிறது. இதை அடியோடு ஒழிக்கப் பழக வேண்டும். வாழ்க்கையில் எந்த முக்கிய காரியமும் தள்ளிவைக்கப்படக்கூடாது. ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு நேரத்தோடு முடிப்பதில் ஆர்வம் காட்டிச் செய்யவேண்டும். இதையும் கர்த்தரிடம் இருந்துதான் பழகுகிறோம். நேரத்தோடும், காலத்தோடும் நாம் செய்து முடிக்கும் பணிகள் நம்மை மேலும் மேலும் உழைப்பதில் ஊக்குவித்து வாழ்க்கையில் முன்னேற வைக்கும். வாலிபர்களுக்கு பாலூட்டுவதுபோல் இதை நாம் புரிய வைக்கவேண்டும். அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பணிகளை நேரத்தோடும் கருத்தோடும் செய்துமுடிக்க ஊக்குவிக்கவேண்டும். அப்படிச் செய்வதனால் வரும் ஆசீர்வாதங்களை அவர்கள் உணரும்படிச் செய்யவேண்டும்.

வாசிக்கும் பயிற்சியில்லாமலிருப்பதற்கு இன்னுமொரு காரணம், அறிவைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் இருப்பது. கல்லூரியில் கற்பதோடு அறிவுப்பெருக்கம் நின்று விடுவதில்லை. நம்மினம் பெரும்பாலும் எந்த அறிவும் தொழிலிலும் பணத்திலும் போய் முடியவேண்டும் என்று எண்ணுகிறது. பணமீட்டும் தொழில்களை அடையவே அறிவைப் பயன்படுத்தி வருகிறது நம்சமூகம். அறிவுப்பெருக்கத்திற்கும் தொழிலுக்கும், பணத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பேரறிவாளிகளாக உலகத்தில் இருந்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்களாக ஒருபோதும் இருந்திருக்கவில்லை. முக்கியமாக வேத அறிவுப்பெருக்கத்திற்கான வழியையே நாம் இங்கு ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். வேத அறிவுப்பெருக்கம் கர்த்தரை அறிகின்ற அறிவுக்கும், அவரில் வளருவதற்கும் இன்றியமையாதது. அதைப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தக்கூடாது. வாசிக்கும் வழக்கம்கொண்டிராத எவரைக் கேட்டாலும் நேரம் இல்லை என்று சொல்லுவதோடு, வேலை அதிகம் என்றும் சொல்லுவார்கள். அவர்கள் வேத அறிவுவளர்ச்சிபற்றிய உணர்வே இல்லாமல் இருந்துவருகிறார்கள். வாசிப்பில்லாமல் வேத அறிவு வளராது என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்த்திருக்கவில்லை. வேத அறிவுப் பெருக்கத்திற்கும், வாசிப்பிற்கும் இடையில் இருக்கும் உறவை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. சமீபத்தில் ஒருவர், நல்ல தொழிலில் இருக்கிறவர், வேத அறிவு வேண்டும் என்ற வாஞ்சையுள்ளவர், என்னால் வாசிக்க முடியவில்லை என்று சொன்னார். அதாவது, அவரால் நேரமெடுத்து மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு நூலை வாசிக்க முடியவில்லையாம். நான் அவரிடம், உங்கள் தொழிலே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது, அதை வாசிக்காமல் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். சரியான பதில் கிடைக்கவில்லை.

சீர்திருத்தக் கிறிஸ்தவம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது; அதை முதன்மைப்படுத்துவது. வேத அறிவில்லாமல், வேதத்தை அடித்தளமாகப் பயன்படுத்தாமல் கர்த்தரை நாம் ஆராதிக்கவோ, அவரில் வளரவோ, அவருக்குப் பணி செய்யவோ முடியாது என்று நம்புகிறது சீர்திருத்தக் கிறிஸ்தவம். வேத அறிவை அவரோடு இருக்கும் உறவுக்கு அடித்தளமாகப் பார்க்கிறது சீர்திருத்தக் கிறிஸ்தவம். கர்த்தரை சகல விஷயங்களிலும் வாழ்க்கையில் மகிமைப்படுத்த வேதமும், அதில் நமக்கிருக்கும் நடைமுறை ஞானமும் இன்றியமையாதது என்பது சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் ஆணித்தரமான நம்பிக்கை. சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் வாசிக்காமல், சிந்திக்காமல், ஆராயாமல் இருப்பது என்பது முரண்பாடான தன்மை. சீர்திருத்தக் கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக்கொள்ளுகிற எவரும் வாசித்து சிந்திக்காமல் இருந்தால் அவர்கள் சீர்திருத்தக் கிறிஸ்தவம் என்ற போர்வையை சுயநல நோக்கத்திற்காகவே தங்கள் மேல் போர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரை நான் அறிவேன். எந்த சத்தியத்தையும், வார்த்தைப் பிரயோகத்தையும் சுயநல நோக்கத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளுவது தானே நம்மினத்தின் வழக்கம்.

ஜொயல் ஆஸ்டீன், ஜொய்ஸ் மாயர், நம்மினத்து மோகன் சி லாஸரஸ் போன்றோரின் கிறிஸ்தவ விளக்கங்களுக்கும், நடைமுறைச் செயல்களுக்கும் நல்ல நூல் வாசிப்பு அவசியமில்லைதான். வெறும் உணர்ச்சிவசப்படுதலையும், முழு நாள் ஜெபத்தையும், சுகமளிப்புக் கூட்டங்களையும், வேதத்திருகுதாளம் செய்து அதில் இல்லாததைப் போதிப்பதையுமே இவர்கள் தங்கள் வாழ்க்கை இலட்சியமாகக்கொண்டு ஆத்துமாக்களைத் திசை திருப்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மெய்யான வேத அறிவில் நாட்டமில்லை. ஆத்துமாக்களுக்கு சத்துள்ள ஆவிக்குரிய உணவை ஊட்டுவதில் அக்கறையில்லை. தங்களுடைய சுயநல நோக்கங்களுக்காக ஆத்துமாக்களையும் அவர்களுடைய பணத்தையும் பயன்படுத்தி தங்களைச் சமுதாயத்தில் முக்கிய இடத்தில் நிலைநிறுத்திக்கொள்ளுவதிலேயே இவர்கள் கருத்தாக இருக்கிறார்கள். இவர்களைப் பின்பற்றி ஊழியமென்ற பெயரில் எதையெதையோ செய்து வருகிறவர்கள் ஒருபோதும் சத்தியத்தில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்; சத்திய அறிவில் வளர்வதில் சொட்டும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். அவர்களுடைய இருதயம் சுய ஆதாயத்தைப் பூர்த்தி செய்வதையே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய கூட்டத்தைப் பின்பற்றிப்போகும் நம்மினத்து ஆட்டுமந்தைகளோடு பேசிப்பாருங்கள். அவர்களுக்குச் சத்தியத்தில் நாட்டம் இருக்காது. சரீர சுகத்திலும், வாழ்க்கை வசதி பெருகுவதிலும் மட்டுமே அவர்கள் அக்கறை காட்டுவார்கள்; அதற்குதவும் கிறிஸ்தவமே அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதனால்தான் அவர்கள் வாக்குத்தத்த வசனங்களுக்காக மட்டும் அலைகிறார்கள். அத்தகைய போலிக் கிறிஸ்தவமே நம்மினத்தில் விஷத்தைப்போலப் பரவிக்காணப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வாசிப்பைப் பற்றி எப்படிப் பேச முடியும். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

சீர்திருத்தக் கிறிஸ்தவம் நாம் மேலே பார்த்திருப்பதுபோன்ற போலிக் கிறிஸ்தவமல்ல. அது உணர்ச்சிகளுக்கு மட்டும் தீனி போடும் கிறிஸ்தவமல்ல. வெறும் வாக்குத்தத்தங்களைக் கொடுத்து ஆத்துமாக்களில் போலி நம்பிக்கையை வளர்க்காது அது. முழு நாளையும் ஜெபத்தில் செலவிடும்படி அது ஆத்துமாக்களுக்கு பொய்யான ஆத்மீக வைராக்கியமூட்டாது. ஜனங்கள் ஒவ்வொரு நாளும் எட்டு மணிநேரம் நியாயமாக உழைக்கும்படிக் கர்த்தர் பணித்திருப்பது அதற்குத் தெரியும். சுயநலநோக்கோடு மட்டும் வாழ்ந்து கர்த்தரிடம் சரீரசுகத்தை நாடி அது ஓடிக்கொண்டிருக்காது; எவரையும் ஓடவும் வைக்காது. கர்த்தரின் கட்டளைகளைத் தன் வாழ்க்கையிலும் சமுதாயத்திலும் அன்றாடம் நிறைவேற்றி வாழ்வதன் மூலமே கிறிஸ்தவன் கர்த்தரை மகிமைப்படுத்த முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறது சீர்திருத்தக் கிறிஸ்தவம். ஆவிக்குரிய மறுபிறப்படையாத எவராலும் அதைச் செய்யவும் முடியாது என்கிறது சீர்திருத்தக் கிறிஸ்தவம். இந்த வேத உண்மைகளைச் சரியாகத் தெரிந்து வைத்திருந்து வாழ்க்கை நடத்த சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் தங்களில் வேத அறிவைப் பெருக்கிக் கொள்ளுகிறார்கள். விமானி தன் விமானப் பயணத்தை ஆரம்பிக்கும் ஒவ்வொரு நாளும் விமானத்தின் மெனுவலை, கையேட்டைப் பின்பற்றி சகலத்தையும் சரிபார்த்தபின்பே அதை விண்ணில் உயர்த்தும் வேலையைச் செய்வான். அப்படிச் செய்யாமல் அவனால் விமானத்தைப் பாதுகாப்போடு ஓட்டமுடியாது. சீர்திருத்தக் கிறிஸ்தவனின் கையேடு பரிசுத்தவேதம். அதில் நல்லறிவில்லாமல் இதுவரை சொன்னவற்றையெல்லாம் அவன் செய்து கர்த்தரை மகிமைப்படுத்துவதெப்படி? இப்போது தெரிகிறதா, ஏன் வாசிப்புப் பழக்கமும், வேத வாசிப்பும், வேத அறிவும் கிறிஸ்தவனுக்கு அவசியம் என்று?

நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இன்று மறுபிறப்பாகிய வேதசத்தியமே அறியாத ஆயிரக்கணக்கான பிரசங்கிகள் இருக்கிறார்கள். அந்த வார்த்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது; அதன் இறையியல் அவர்களுக்குத் தெரியவில்லை. சர்வ வல்லவரான கர்த்தர் மட்டுமே பாவிகளுக்கு இரட்சிப்பை அளிக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இருந்தபோதும் மனிதன் தன் இரட்சிப்புக்கு ஒரு துளிபங்கு கூட செலுத்த முடியாது என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறபோது இயேசுவுக்காக உன் கையைத் தூக்கு என்றும், மனந்திரும்பிவிட்டதற்கு அடையாளமாக அட்டையில் கையெழுத்துப் போடு என்றும், ஒரு நொடிப் பாவிகளின் ஜெபத்தைப் பண்ணு என்றும் பில்லி கிரேகமில் இருந்து ஜொயல் ஆஸ்டின்வரை வளர்த்துவிட்டிருக்கும் போலிச் சுவிசேஷத்தையே அவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். இதனால்தான் பணத்தைச் செலவழித்து கூட்டத்தை எப்படியாவது கூட வைத்து அதில் மனித உணர்ச்சிகள் எல்லை கடந்து போவதற்கான கோமாளித்தனங்களைச் செய்து கைதூக்குகிறவர்களையெல்லாம் மனந்திரும்பிய கிறிஸ்தவர்கள் என்று அறிவித்து வருகிறார்கள்.

நம்மினத்து வாலிபர்களில் அநேகருக்கு சுவிசேஷம் சொல்லத் தெரியாதிருக்கிறது. அவர்களுக்கு அது கஷ்டமானதாகக் தெரிகிறது. ஏன் தெரியுமா? அதில் பிரசங்கியின் பங்கு என்ன என்றும் கர்த்தரின் பங்கு என்ன என்றும் தெரியாமல் அவர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள். கர்த்தர் சர்வவல்லவராக இருக்கிறார், அவர் மட்டுமே இரட்சிப்பை அளிக்க முடியும் என்பதும், சுவிசேஷத்தைச் சொல்லுவது மட்டுமே நம் கடமை என்பதும்பற்றிய வேதபோதனையை விளங்கிக்கொள்ளுவது கொஞ்சம் கஷ்டந்தான். அது அப்படியொன்றும் கஷ்டமல்ல என்றெல்லாம் சொல்லி உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். தத்துவரீதியில் வேதவிளக்கங்களைக் கொடுத்து அதைச் சரி என்று காட்டுவது எனக்கொன்றும் பெரிதல்ல. பிரச்சனை என்னவென்றால் வேதம் சொல்லுவதற்கு மேல் போய் அதற்கு என்னால் விளக்கங்கொடுக்க முடியாது. சுவிசேஷம் சொல்லுவதுபற்றிய இந்த வேதபோதனையில் ஓரளவுக்கு இரகசியம் அடங்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது கர்த்தர் மட்டுமே மனிதனின் எந்தவித பங்கும் இல்லாமல் ஒருவனுக்கு இரட்சிப்பளிக்க முடியும் என்றும், அதேநேரம் நம் பணி முழுமூச்சோடு ஆவியில் தங்கியிருந்து சுவிசேஷத்தை ஆணித்தரமாக சொல்லுவது மட்டுமே என்பதையும் நாம் நம்பி இந்தப் பணியில் ஈடுபடவேண்டும். இந்த இரண்டும் இரயில் பாதையில் இருக்கும் இரண்டு தண்டவாளங்கள்போல. அவற்றை நாம் நித்தியத்திற்கும் இணைக்க முடியாது. இணைத்தால் இரயில் அதில் எப்படிப் போகமுடியாதோ அதேபோல் சுவிசேஷம் பற்றிய போதனையும் குழப்பத்தில் போய் முடிந்துவிடும்.

சீர்திருத்தப் பிரசங்கிகள் வாலிபர்களைச் சுவிசேஷம் சொல்லவைப்பதோடு நின்றுவிடக்கூடாது. அவர்களுக்கு இந்தச் சத்தியம் விளங்குமளவுக்குத் தெளிவாகப்போதித்து அவர்கள் பாவிகளின் இரட்சிப்பிற்காக கர்த்தரில் தங்கியிருந்து ஜெபத்தில் ஈடுபட பயிற்சியளிக்க வேண்டும். அநேக போதகர்களுக்கு இதைச் செய்ய நேரமில்லை. முக்கியமாக வாலிபர்களுக்கு தங்களுடைய சாட்சியை வேதபூர்வமாக சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். சாட்சி சொல்லுகிறோம் என்று உளறிக்கொட்டிக் கொண்டிருக்கக்கூடாது. வேத அடிப்படையில் நம் சாட்சி அமைந்திருக்கவேண்டும். பல போதகர்களின் சாட்சியைக் கேட்டு நான் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் இருந்திருக்கிறேன். நம் சாட்சியை ஆராய்ந்து பார்த்து வேதபூர்வமாக சொல்லத்தெரியாதவன் மற்றவர்களுக்கு சுவிசேஷம் சொல்லுவதெப்படி? சுவிசேஷம் சொல்லப் பயிற்சிகொடுக்கும்போது இதுபற்றிய வேத சத்தியங்களை வாலிபர்களுக்கு விளக்கவேண்டும். அப்படி நாம் கொடுக்கின்ற மெய்யான வேத விளக்கங்கள் அவர்களுக்குப் புரியும்போது சுவிசேஷம் சொல்லுவதில் தவறிழைப்பதை அவர்கள் தவிர்த்துக்கொள்ளுவார்கள். சுவிசேஷம் சொல்லுவதெப்படி என்று வேதம் நமக்கு எந்தப் பக்கத்திலும் தனி விளக்கங்கொடுக்கவில்லை. அதற்கென்று ஒரு தனிக் கலை இருப்பதாகவும் அது நமக்குத் தெரிவிக்கவில்லை. ஆகவே, சுவிசேஷம் சொல்லுவதை ஒரு புத்திக்கெட்டாத விஷயமாக நாம் மாற்றிவிடக்கூடாது.

சுவிசேஷம் சொல்லுவதென்பது என்ன? அதில் நான்கு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். முதலாவது, கிறிஸ்து யார்? இரண்டாவது, கிறிஸ்து என்ன செய்திருக்கிறார்? மூன்றாவது, கிறிஸ்து ஏன் அவசியமாயிருக்கிறார்? நான்காவது, இரட்சிப்படைய நீ என்ன செய்யவேண்டும்? இந்த நான்கையும் விளக்கி நீளமான ஆக்கத்தை எழுத உடனடியாக என் கை துடிக்கிறது. ஆனால், அதை இன்னொரு தடவை செய்யலாமென்றிருக்கிறேன். இந்த நான்கையுந்தான் சுவிசேஷமாக ஒருவருக்கு நாம் விளக்கப்போகிறோம். இந்த நான்கையும் வேதபூர்வமாக தெளிவாக அறிந்துவைத்திராத ஒருவனால் சுவிசேஷம் சொல்ல முடியாது. சுவிசேஷத்தை சொல்லுகிறோம் என்று எதையாவது நாம் உளறிக்கொட்ட முடியாது. பரிசுத்த ஆவியானவர் உளறல் மன்னர்களின் மூலமாக பாவிகளின் இருதயத்தில் கிரியை செய்வதில்லை. மேலே பார்த்திருக்கும் நான்கு கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை நாம் வேதத்தில் இருந்து பெற்றுவைத்திருக்க வேண்டும். அதில் தெளிவடைய எவ்வளவு படித்தாலும் தகும். இதில் தெளிவில்லாதவர்கள்தான் பொய்ச்சுவிசேஷத்தை அதாவது கிறிஸ்துவும், பவுலும், பேதுருவும் பிரசங்கித்திராத வேறொரு சுவிசேஷத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய சுவிசேஷத்தைத் தவிர வேறொரு சுவிசேஷத்தை ஒரு தேவதூதன் சொன்னாலும் அதற்குச் செவிகொடுக்காதே என்று பவுல் எச்சரித்திருக்கிறார். நீங்கள் விசுவாசிக்கின்ற, பிரசங்கிக்கின்ற சுவிசேஷம் வேதபூர்வமானதா பிரசங்கிகளே? அதில் தெளிவுபெற்றிருக்கிறீர்களா நீங்கள்?

கிறிஸ்து யார்? என்று தெளிவாக சொல்லத்தெரியாத அநேகர் இருக்கிறார்கள். வேதசத்தியங்கள் தெரியாமல் அதை விளக்கமுடியாது. இறையியல் அவசியமில்லை என்று கூக்குரலிடுகிறவர்கள் இங்கே கொஞ்சம் யோசிக்கவேண்டும். கிறிஸ்து யார் என்பது நமக்குத் தெளிவாக வேதபூர்வமாகத் தெரிந்திருக்க வேண்டும். அதைத்தான் ‘கிறிஸ்து மட்டுமே’ (Christ alone) என்ற வார்த்தைப் பிரயோக சத்தியத்தின் மூலம் சீர்திருத்தவாதிகள் விளக்கியிருக்கிறார்கள். தெளிவாக கிறிஸ்து யார் என்பது நமக்குத் தெரிந்திருப்பது மட்டுமல்ல, அவர் என்ன செய்திருக்கிறார் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். இந்த இடத்தில்தான் அநேக இறையியல் கோளாறுள்ள போதனைகள் வரலாற்றில் எழுந்து சபைகளைப் பாதித்திருக்கின்றன. 1689 விசுவாச அறிக்கையின் 8ம் அதிகாரம் இதற்கு மிகவும் தெளிவான விளக்கத்தைத் தருகிறது. அத்தோடு நாம் தமிழில் வெளியிட்டுள்ள சிம்சன் வெளியீட்டின் பாப்திஸ்து சுருக்க வினாவிடைப் போதனையும் அதைப் பல வினாவிடைகளின் மூலம் விளக்கியிருக்கின்றது. நம் வாலிபர்கள் இவற்றை வாசித்து நல்லறிவு பெறும்படி போதகர்கள் அவர்களுக்கு வகுப்பு நடத்தவேண்டும். முதலில் போதகர்கள் இதில் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம். குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாதல்லவா!

கிறிஸ்துவின் சுவிசேஷம் நமக்கு பாவத்தில் இருந்து விடுதலையையும், நித்திய ஜீவனையும் இலவசமாக அளித்திருக்கிறது. அந்த சுவிசேஷத்தின் தார்ப்பரியங்களை அறிந்து தெளிவடையாமல் வாலிபர்கள் ஆத்மீகவாழ்க்கையில் வளருவதும் கர்த்தருக்குப் பணிபுரிவதும் எப்படி? ஆங்கிலம் நன்றாக வாசிக்கத் தெரிந்த வாலிபர்கள் இருந்தால் நான் ஜோன் மரெயின் ‘மீட்பின் நிறைவேற்றமும், மீட்பின் செயல்படுத்தலும்’ என்ற ஆங்கில நூலைப் பலதடவைகள் வாசித்து அதில் தேர்ச்சியடையும்படிச் செய்வேன். உண்மையில் சிலரை அப்படி நான் வாசிக்க வைத்திருக்கிறேன். இரண்டு பேர் சமீபத்தில் அவர்களுடைய வாசிப்பின் அனுபவத்தைப்பற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். ஒருவர் சொன்னார், ‘எல்லாக் கிறிஸ்தவ நூல்களிலும் இது மிக உயரத்தில் வைக்கப்பட வேண்டியது’ என்று. இன்னொருவர், ‘கிறிஸ்துவின் பரிகாரப்பலிபற்றி விளக்கும் அருமையான நூல் இது’ என்றார். நான் இதை இவர்கள் வாசிக்கும்படி செய்ததற்குக் காரணமிருக்கிறது. இதை வாசித்து இவர்கள் தேர்ச்சியடைந்தால் கிறிஸ்துவின் சுவிசேஷ சத்தியங்களில் தேர்ச்சி பெற்றவர்களாவார்கள், அதுதானே முக்கியம்.

கர்த்தருக்குப் பணிபுரிய வருவதற்கு வேதம் பல இலக்கணங்களை எதிர்பார்க்கிறது. முக்கியமானவை 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும் தரப்பட்டுள்ளன. இவை தவிர பொதுவாக எல்லோரிலும் காணப்பட வேண்டிய தகுதிகள் இருக்கின்றன. அவை கிறிஸ்தவ வாழ்க்கைபற்றி புதிய ஏற்பாடு தரும் விளக்கங்களில் காணப்படுகின்றன. நம்மினத்துப் பிரச்சனை என்னவென்றால் புறஜாதி இந்துப் பண்பாட்டில் இருந்து கிறிஸ்துவை அறிந்துகொண்டிருக்கிறவர்கள் அந்தச் சிலைவணக்க இந்துப் பண்பாட்டை இன்னும் மூட்டைகட்டி எறிந்துவிடாமல் இருப்பதுதான். நிச்சயம் சிலைகளை எறிந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையும் நேர்மையும் இல்லாத பழைய மனிதனோடு தொடர்புடைய கலாச்சாரத்தை அநேகர் இன்னும் நிராகரித்துவிடவில்லை. நான் சொல்லவருவது ஒழுக்கத்தைப்பற்றிய பண்பாட்டையே. ஒழுக்கம் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கை நடைமுறையே. காலையில் எழுந்திருப்பது, உணவருந்துவது, மனதில் சிந்திப்பவை, சரீரத்தின் மூலம் செய்யும் செயல்கள், மற்றவர்களோடு பழகும், பேசும் விதம், அவர்களோடு உறவாடி கூடிச் செய்யும் செயல்களில் காணப்பட வேண்டிய ஒழுக்க முறைகள், சமுதாயத்தில் நாம் மற்றவர்களோடு பழகிப் பேசி உறவுகொள்ளும் முறை. இதெல்லாம் ஒழுக்கத்தோடு தொடர்புடையவை. இந்த விஷயங்களில் கிறிஸ்துவின் வேதம் நம்மை ஆண்டு நாம் கிறிஸ்தவ சிந்தனையும், செயலுமுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்பதை கிறிஸ்தவ வேதம் எதிர்பார்க்கிறது. இந்தச் செயல்களையெல்லாந்தான் கர்த்தர் சுருக்கமாக பத்துக்கட்டளைகள் மூலம் விளக்கியிருக்கிறார். இவற்றில் ஆராதனையும் இணைந்துகொள்ளுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது கர்த்தரின் நாளில், கர்த்தரின் முன்னிலையில் அவருடைய வழிமுறைகளை மட்டும் பின்பற்றி எப்படி ஆராதனை செய்வதென்பதும் இதிலடங்கும். இதெல்லாம் புதிய மனிதனாக ஆவியினால் மாற்றப்பட்டிருக்கும் கிறிஸ்தவன் பின்பற்ற வேண்டிய வேதஒழுக்கமுறைகள். ஒருவன் கிறிஸ்துவை விசுவாசித்து புதிய இருதயத்தை அடைந்திருக்கும் புதிய மனிதனான போதும், அவன் புதிய மனிதனுக்குரியவைகளைத் தன்னில் தரித்துக்கொள்ள வேண்டியவனாக இருக்கிறான். அதாவது மனதில் ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்து தன்னில் காணப்படும் பழைய மனிதனுக்குரியவைகளை (பழைய இந்துப் பண்பாடு உட்பட) அரவே அன்றாடம் களைந்துபோட வேண்டியவனாக இருக்கிறான். இது கிறிஸ்தவனின் கடமை, பொறுப்பு. பழைய மனிதனுக்குரிய அம்சங்களை அவன் தன்னில் தொடரவிடக்கூடாது. அவை தானே ஓடிப்போகாது. புதிய மனிதனாயிருப்பவனில் தொடர்ந்தும் பாவம் வாசம் செய்வதால் (ரோமர் 7), அவன் உள்ளிருக்கும் அந்தப் பாவம் தன்னை ஆளமுடியாதபடி அதை அடக்கி ஆளவேண்டும். ஆதலால், கிறிஸ்தவன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து தன்னில் பாவம் ஆளாதபடி வாழவேண்டியவன். அவன் பத்துக்கட்டளையின்படியான புதிய ஒழுக்கத்தைத் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டும். இதையெல்லாம் எத்தனை சீர்திருத்தப் போதகர்கள் வாலிபர்களுக்கு விளக்கிப் போதித்து வழிகாட்டி வாழ்ந்து வருகிறீர்கள்?

குருடன் குருடனுக்கு வழிகாட்டும் நிலையில் இருக்கும் இன்றைய நம்மினத்துக் கிறிஸ்தவம் இப்படியே தொடராமல் சீர்திருத்தம் ஏற்பட்டு திருச்சபைகள் வேதபூர்வமாக இருக்கவேண்டுமானால் இளைய தலைமுறை சத்தியத்தில் வளர்ந்துவர இத்தலைமுறையில் கர்த்தர் ஆசீர்வதித்திருக்கும் சீர்திருத்தப் போதகர்கள் தங்களை இழந்து உழைத்து அவர்களை வளர்த்துவிடவேண்டும். முப்பது வருடங்கள் வயிற்றுப்பாட்டுக்காக மட்டும் சபைத்தலைவனாக இருந்து தன் இயலாமையாலும், சத்தியப் பஞ்சத்தாலும் ஆத்துமாக்களை அழித்துக்கொண்டிருக்கும் போதகப்பணியில் இருந்துவரும் போதக இலக்கணங்கள் அரவே இல்லாதவர்களை நான் அறிவேன். வரப்போகும் நியாயத்தீர்ப்பில் தனக்கு என்ன நடக்கப்போகிறது என்ற உணர்வே இல்லாமல் இவர்களால் தைரியத்தோடு இருக்கமுடிவதற்குக் காரணம் இவர்கள் வேதபூர்வமான மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் தங்களில் கொண்டிராததே. இத்தகையோரைத் தலைவர்களாகக் கொண்டிருக்கும் ஆத்துமாக்களைப் பார்த்து நான் பரிதாபப்பட்டாலும் அவர்களும் கர்த்தருக்குக் கணக்குக்கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

சமீபத்தில் ஒரு நபரோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது நீங்கள் எவ்வளவு காலமாக கிறிஸ்தவராக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவருடைய சாட்சியை அறிந்துகொள்ளுவதற்காகக் கேட்ட கேள்வி அது. அவர் உடனே, நான் பிறந்ததிலிருந்து கிறிஸ்தவ நம்பிக்கையிலேயே வளர்ந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்படிச் சொல்ல முடியாதே என்று கூறி கிறிஸ்தவ விசுவாசம் பிறப்பிலிருந்து ஏற்பட வழியில்லை என்பதை விளக்கினேன். தொடர்ந்து தான் சொன்னதையே கிளிப்பிள்ளைபோல அந்த நபர் சொல்ல ஆரம்பித்தார். அங்கே என்னால் கிறிஸ்தவ தாழ்மையையோ, கிறிஸ்தவ ஞானத்தையோ பார்க்கமுடியவில்லை. சுயநலத்தோடு கூடிய, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை அவருக்கு இருந்ததே தவிர கிறிஸ்துவை மேன்மைப்படுத்தி சாட்சிசொல்லும் பக்குவம் இருக்கவில்லை. இப்படி எத்தனையெத்தனை பேரை நாம் அன்றாடம் காண்கிறோம். கிறிஸ்தவ சுவிசேஷம் வல்லமையுள்ளது; இருதயங்களைப் பிளந்து தாழ்மைப்படுத்தி கர்த்தரிடம் அழைத்து வரக்கூடியது. அத்தகைய சுவிசேஷத்தால் வாழ்க்கை மாறியிருப்பவர்கள் தங்கள் சாட்சியைக் கண்கள் திறக்கப்பட்டிருந்த பிறவிக்குருடனைப்போல ஆனந்தத்தோடு ஊரறியச் சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். சுவிசேஷம் கொடுக்கும் அத்தகைய வல்லமையுள்ள இரட்சிப்பை அடைந்தவர்களைக் கொண்டமைந்த சீர்திருத்தச் சபைகளும், சுவிசேஷத்தை வேத அடிப்படையில் அதிரடியாக ஆவியின் பலத்தோடு பிரசங்கித்துப் போதிக்கும் நல்லொழுக்கம் கொண்ட தன்னலமற்ற போதகர்களும் நம்மினத்துக்கு இன்று இன்றியமையாத தேவை.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s