சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே! – A.W. பின்க்

அதிகாரம் 3

பரிசுத்த வேதவார்த்தைகளின் மெய்யான பொருளை அறிய விரும்புகிற ஒருவனில் இருக்க வேண்டிய மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான சில தகுதிகளைக் குறித்து முந்தைய அதிகாரத்தில் விளக்கினேன். அத்தகுதிகள் பொதுவாக எல்லா விசுவாசிகளிடத்திலும் இருக்க வேண்டியவை. இந்த அதிகாரத்தில், கர்த்தருடைய வேதத்தைப் பிரசங்கிக்கவும், போதிக்கவும் கர்த்தரால் அழைக்கப்பட்டவர்களில் (பிரசங்கிகளில்) இருக்க வேண்டிய சில குறிப்பிட்ட தகுதிகளைக் குறிப்பிடப் போகிறேன். அவர்கள் தங்களுடைய முழு நேரத்தையும், ஆற்றலையும், ஆத்துமாக்களின் ஆவிக்குரிய மற்றும் நித்திய நன்மைக்கான பிரயோஜனத்துக்காகவும், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட, உன்னதமான, மற்றும் முக்கியமான வேலைகளைச் செய்யத் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவும் அர்ப்பணித்தவர்கள். கர்த்தருடைய சத்தியத்தை எடுத்துரைப்பதும், தான் பிரசங்கிக்கிற சத்தியத்தின்படியாக, நடைமுறையில் மிகுந்த கவனத்துடன் வாழ்ந்துகாட்டி, தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களுக்குத் தேவபக்திக்கேதுவான நடைமுறை உதாரணமாக வாழ்ந்து காட்டுவதுமே அவர்களுடைய முதன்மையான பணி. அவர்கள் சத்தியத்தைப் பிரசங்கிக்க வேண்டியிருப்பதனால், அவர்கள் பிரசங்கிப்பது வேத வார்த்தைகளாகிய களங்கமில்லாத பாலாக இருப்பதனால், இதில் எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதற்கான சகல முயற்சிகளையும் செய்கிறவர்களாக இருக்க வேண்டும். சத்தியத்திற்குப் பதிலாக தவறானதைப் போதிப்பது, கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் அவமதிப்பது மட்டுமல்ல, அதைக் கேட்கிறவர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களுடைய மனதையும் கெடுக்கும் செயலாகும்.

ஒரு பிரசங்கியினுடைய வேலை, மிகவும் மதிப்புமிக்கதும், உன்னதமானதும், சிறப்பானதுமாக இருக்கிற அதேவேளையில், அது மிகவும் பொறுப்பான வேலையுமாகும். தன்னைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியன் என்று அறிவித்துக்கொள்ளுகிற ஒருவன், உன்னதமான தேவனால் அனுப்பப்பட்ட தூதுவனாக இருக்கிறான். தன் எஜமானுடைய செய்தியைத் தவறாக அறிவிப்பது, அதாவது அவருடைய சுவிசேஷத்தைவிட்டு வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது அல்லது தன்னை நம்பி அவர் கொடுத்த செய்தியைத் தவறாக எடுத்துரைப்பதென்பது, பாவத்திலும் மிகப்பெரிய பாவமாகும்; அது அவன்மீது உன்னதத்தின் சாபத்தை வருவிக்கும் (கலாத்தியர் 1:8). அவன் மிகக்கடுமையான தண்டனையை அடைவான் (மத்தேயு 23:14, யூதா 13). ஆகவே, “அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” (யாக்கோபு 3:1) என்று வேதம் எச்சரிக்கிறது. நம்மை நம்பிக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பில் உண்மையற்றவர்களாக இருந்தால் இப்படித்தான் போய்முடியும். தம்முடைய மந்தையை மேய்ப்பதற்கு, என்னை கர்த்தர்தாமே அழைத்திருக்கிறார் என்று உரிமைபாராட்டுகிற எந்தவொரு சுவிசேஷ ஊழியனும், தன்னுடைய போதகப் பணியைப்பற்றி அவரிடத்தில் முழுக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாக இருக்கிறான் (எபிரெயர் 13:17). அவன் தன் பொறுப்பில் விடப்பட்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறான். “நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு . . . நீ அவனை எச்சரிக்காமல் இருந்தால், . . . அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்” (எசேக்கியேல் 3:18) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

“நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” (2 தீமோத்தேயு 2:15) என்ற இந்தக் கட்டளையின்படி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுவதே ஒரு பிரசங்கியினுடைய முதன்மையான மற்றும் தொடர்ச்சியான கடமையாக இருக்கிறது. முழு வேதத்திலும், ஒரு பிரசங்கிக்குப் புத்திசொல்லக்கூடிய வார்த்தைகளில், இந்தக் கட்டளைக்கு இணையாகவோ, நிகராகவோ வேறெதுவும் இருக்க முடியாது. எனவேதான் சாத்தான், இந்தக் கட்டளையின் மையச் செய்தியாகிய “சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாய் இரு” என்ற வேலையைத் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் மும்முரமாக ஈடுபடுகிறான். இந்தக் கட்டளையிலுள்ள “ஜாக்கிரதையாயிரு” என்ற வார்த்தைக்கான கிரேக்க மொழியின் அர்த்தம் “உன்னுடைய எஜமானைப் பிரியப்படுத்தக்கூடிய இந்தக் காரியத்தை முழுமூச்சோடு செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ச்சியாக செய்வதே உன்னுடைய மிகமுக்கியமான பொறுப்பாக இருக்க வேண்டும்” என்பதே. பூமிக்குரிய புகழ்ச்சியைத் தேடாதே, கர்த்தர் உன்னை அங்கீகரித்து ஏற்பதையே நாடு. எல்லாவற்றிற்கும் மேலாக இதுவே முதன்மையானதாக உங்கள் வாழ்வில் இருக்கட்டும். இல்லாவிட்டால், “சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிப்பது” உங்களில் இருக்காது. “தேவனுக்கு முன்பாக உன்னை உத்தமனாக நிறுத்துவதே” உங்களுடைய நோக்கமாக இருந்து மற்ற எல்லாவற்றையும் அதற்குக் கீழ்ப்படுத்துங்கள். உங்களுடைய இருதயம், குணாதிசயம், மற்றும் கர்த்தருக்கு முன்பாக உங்களுடைய செயல்கள் அனைத்தையும் அவருடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தின்படியாக ஒழுங்குபடுத்துங்கள். நீங்கள் செய்வது அவருக்குப் பிரியமாயிராவிட்டால், உங்களுடைய ஊழியத்தியத்தினால் என்ன பலன்?

“நீ வெட்கப்படாத ஊழியக்காரனாக . . . உன்னை நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” – கர்த்தர் உங்களுக்குக் கொடுத்துள்ள நேரத்தையும் தாலந்துகளையும் பயன்படுத்துவதில் நேர்மையும், ஆர்வமும், உண்மையுமுள்ளவர்களாய் இருங்கள். இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்கு, இடைவிடாத முயற்சியுடனான முழுக்கவனத்தைக் காட்டுங்கள். “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்” (பிரசங்கி 9:10), அதை முழு முயற்சியுடன் சிறப்பாக செய்யுங்கள். கடின உழைப்புடனும், ஊக்கத்துடனும் செய்யுங்கள். கவனக்குறைவாகவோ அஜாக்கிரதையாகவோ செய்யாதீர்கள். அதை எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியும் என்றல்ல, அதை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்று பாருங்கள். “ஊழியக்காரன்” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கு, மூலமொழியில் “கடினமாக உழைக்கிறவனைக்” குறிப்பிடுகிற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பொறுப்பற்றவர்களும், சோம்பேறிகளும் கர்த்தருடைய பணியில் இருக்கக்கூடாது. கிறிஸ்துவுக்காக தன்னை இழந்து உழைத்துப் பணிபுரியவும், ஆத்துமாக்களுக்காக தன்னை இழக்கவும் தயாராக இருக்கிறவர்களுக்கே கர்த்தருடைய ஊழியம். ஒரு பிரசங்கி, சுரங்கத் தொழிலாளியைவிட கடினமாக உழைக்க வேண்டியவன்; அலுவலகத்தில் வேலை செய்கிற ஒரு மேலதிகாரியைவிட அதிகமான நேரத்தை ஒவ்வொரு வாரமும் படிப்பதற்காக செலவிட வேண்டியவன். அவன் ஒருபோதும் தன்னுடைய வேலையிலிருந்து நழுவுகிறவனல்ல. ஒரு பிரசங்கி, தன்னைக் கர்த்தருக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தவேண்டுமானால், வெட்கப்படாத ஊழியக்காரனாக இருக்க வேண்டுமானால், மற்றவர்கள் தூங்குகிற நேரத்திலும் அவன் உழைக்கிறவனாக இருப்பான். அதுவும் வியர்வை சொட்டச் சொட்ட மனதைப் பயன்படுத்தி உழைக்கிறவனாக இருப்பான். “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்” (1 தீமோத்தேயு 4:15-16).

இது கிறிஸ்து தன்னுடைய வேலையாட்களுக்குக் கொடுத்திருக்கிற மற்றொரு தவிர்க்க முடியாத கட்டளை. ஒரு பிரசங்கியினுடைய பொறுப்பை விரிவாகவும் துல்லியமாகவும் இக்கட்டளை எடுத்துரைக்கிறது. தன்னுடைய வேலையாட்கள் இருதயபூர்வமாக அதைச் செய்யும்படி கிறிஸ்து எதிர்பார்க்கிறார். அதாவது, தன்னுடைய மனதை முழுமையாக அதில் செலுத்தி, தன்னுடைய நேரத்தையும் வலிமையையும் அதற்காக அர்ப்பணித்து உழைக்கும்படி எதிர்பார்க்கிறார். அவர்கள் உலகத்தின்மீதான ஆசையிலிருந்து விலகி, தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பொறுப்பில் முழுக்கவனத்தையும் செலுத்துகிறவர்களாக இருக்கவேண்டும். ஒரு பிரசங்கியினுடைய கடமையை விவரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள உதாரணங்களிலிருந்து, இது எவ்வளவு கடினமான வேலை என்பது தெரிகிறது. பிரசங்கியை வேதம் ஒரு போர்ச்சேவகனோடு ஒப்பிட்டுக் காட்டுகிறது. அதாவது, ஒரு பிரசங்கியினுடைய வேலையில் இடைவிடாத முயற்சியும், கடின உழைப்பின் மூலம் ஏற்படும் உடற்சோர்வும் இருக்கும். அடுத்து, “கண்காணி” – பொறுப்பும் அக்கறையும் கொண்டவனாக செயல்பட வேண்டியவன். “மேய்ப்பன், போதகன்” தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்களை வழிநடத்தி போஷிக்க வேண்டியவன். ஆனால், கர்த்தருடைய ஊழியனாக மற்றவர்களுக்கு நல்லவிதத்தில் நீங்கள் பயன்பட வேண்டுமானால், கிருபையிலும் தேவபக்தியிலும் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் வளருவதைப் பற்றி சிந்திப்பதே உங்களுடைய முதலாவது முக்கியமான பொறுப்பாகும்.

கர்த்தருடைய ஊழியன், வேதத்தை ஆராய்கிறபோது, அதைப் பொறுப்போடு செய்யும் முன்பு, “உன்னைக் குறித்து . . . எச்சரிக்கையாயிரு” என்ற கட்டளையின் அடிப்படையில் முதலில் அதைக் கவனிக்க வேண்டும். அதாவது, எந்தவொரு வேதப்பகுதியையும், பிரசங்கத் தயாரிப்புக்காக ஆராய்வதற்கு முன், அந்தப் பகுதியிலுள்ள போதனைகளும் பயன்பாடுகளும் தன்னுடைய ஆத்துமாவுக்குப் பயன்படும் நோக்கில் அதை ஆராய வேண்டும். இது குறித்து ஜேம்ஸ் ஹெர்வி, 1 யோவான் 1:1-2 வசனங்களை விளக்குகிறபோது பின்வருமாறு சொல்லியிருக்கிறார்,

“தேவனுடைய சத்தியத்தை நாம் ஆராய்கிறபோது, அது நம்மைச் சிந்திக்க வைத்து நம்மில் எப்போதும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். வேதத்திலுள்ள வார்த்தைகளுக்கான பொருளை அறிய வேண்டும் என்ற வெறும் ஆய்வுக்காக மட்டும் படிக்காதீர்கள். அது போதிக்கும் சத்தியத்தையும் அதன் பயன்பாட்டையும் அறிகிற விதத்தில் மிகுந்த ஆவலுடன் படியுங்கள். அப்பகுதி குறிப்பாக யாருக்கான புத்திமதியைத் தருகிறது, யாருக்கான கட்டளையை எடுத்துரைக்கிறது என்று சிந்தித்து படிக்க வேண்டும். யாருக்கான வாக்குத்தத்தம், யாருக்கான சிறப்புரிமைகளை அது விளக்குகிறது என்பதைக் கவனித்துப் படிக்க வேண்டும். இந்த விலைமதிப்பற்ற புத்தகத்தின் உள்ளடக்கத்தைத் தெளிவாக நாம் அறிந்துகொண்டால், வேத வாக்கியங்களின் வல்லமையை நாமும் ருசிபார்ப்போம். அப்போது நாமும் மகிழ்ச்சியாக சொல்லுவோம், ‘கர்த்தருடைய வார்த்தை வெறும் வார்த்தைகளின் சத்தமல்ல, அது ஆவியும் ஜீவனுமாய் இருக்கிறது என்று.’ புதியதும் சுவையானதுமான ஒன்றைத் தொடர்ச்சியாகத் தானே ருசித்துப் பார்க்காத ஒருவரால், அப்படியானதைத் தொடர்ச்சியாக மற்றவர்களுக்குத் தர முடியாது. ஒரு பிரசங்கி எதை மற்றவர்களுக்கு அறிவிக்கிறாரோ, அதை முன்னதாக அவருடைய காதுகள் கேட்டிருக்க வேண்டும்; அவருடைய கண்கள் கண்டிருக்க வேண்டும்; அவருடைய கரங்கள் அதில் பழகியிருக்க வேண்டும்.”

பிரசங்க மேடையில் நின்று வெறுமனே வசனங்களை வாசித்துவிட்டுப் போவது மட்டும் போதாது. அதை விசுவாசிகள் வீடுகளிலிருந்தே செய்து, வேதத்திலுள்ள வார்த்தைகளில் பரிச்சயமாகிவிடுவார்கள். வேத வார்த்தைகளை விளக்குவதும், அவற்றிலிருந்து அவர்களுக்கான போதனைகளை விளக்குவதுமே அவர்களுடைய தேவையாக இருக்கிறது. “பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்” (அப்போஸ்தலர் 17:2-3).

“திருஷ்டாந்தப்படுத்தினான்” (Explaining and giving evidence – NASB) என்றால் “ஆணித்தரமாக விளக்கிக்காட்டினான்” என்று அர்த்தம். விசுவாசிகளுக்கு வேத வாக்கியங்களை ஆணித்தரமாக விளக்கிக்காட்டுவதற்கு, இறையியல் கல்லூரியில் ஏதோ சில மாதங்களுக்கு அல்லது ஓரிரு வருடங்களுக்குப் பயிற்சி பெற்றிருப்பதைவிட மேலான ஆற்றல் தேவைப்படுகிறது. விசுவாசிகளுடைய ஆவிக்குரிய பிரச்சனைகளை அறிந்து, அதற்கான தீர்வாக வேத வாக்கியங்களை அவர்களுக்கு விளக்கிக்காட்டுவதென்பது, அந்த வேத வாக்கியங்களைத் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவபூர்வமாக அனுபவித்திருப்பவனால் மட்டுமே செய்ய முடியும். வேதம் நாம் வாழவேண்டிய முறையை நமக்குப் போதிப்பதனால், வேதப்படியான நம்முடைய வாழ்க்கை அனுபவமே நமக்கு வேதத்தை விளக்குகிறதாகவும் இருக்கிறது. “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை யூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்” (நீதிமொழிகள் 16:23). இங்கு “கல்வி” என்பது கற்றுக்கொள்வதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இதை உலகிலுள்ள எந்தப் பள்ளியிலிருந்தும் பெற முடியாது. உதாரணமாக, ஓர் ஒத்தவாக்கிய அகராதியைப் பயன்படுத்தி, வேதத்தில் “தாழ்மை” என்ற வார்த்தை எங்கெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று படிப்பதன் மூலமாக ஒருவனில் தாழ்மை வந்துவிடாது. அதேபோல், வேதத்திலுள்ள சில குறிப்பிட்ட பகுதிகளைப் படிப்பதனால், விசுவாசத்தில் மேலும் உறுதியைப் பெற்றுவிட முடியாது. ஒருவன் தன்னுடைய இருதயத்தின் சீர்கேட்டை அனுபவபூர்வமாக ஆராய்ந்து அறிகிறபோதே அவனில் தாழ்மை ஏற்படும். ஒருவன் கர்த்தரோடு நெருங்கியிருந்து, அவரைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து அறிகிறபோதே அவனிலுள்ள விசுவாசம் உறுதிபெற்று வளரும். மற்றவர்களை நாம் ஆற்றித்தேற்றுவதற்கு முன்பாக, கர்த்தரால் நாம் ஆற்றித்தேற்றப்பட்டிருக்க வேண்டும் (2 கொரிந்தியர் 1:4).

“இருதயத்தில் சத்தியத்தின் வல்லமையை அனுபவபூர்வமாக அறிந்துணர்வதற்கு முயற்சி செய்யாமல், வெறுமனே சத்தியத்தின் கருத்தை மட்டும் தேடுவதாக இருந்தால், ஆவிக்குரிய காரியங்களில் சரியான புரிதலைப் பெற்று வளர முடியாது. கர்த்தருடைய சத்தியத்தின் வல்லமைக்கும் ஆளுகைக்கும், தன்னுடைய மனதையும், எண்ணத்தையும், விருப்பத்தையும் கட்டுப்படுத்தி அதற்குக் கீழ்ப்படுத்துகிறவனே கர்த்தரிடமிருந்து கற்றுக்கொள்ளுகிறவனாக இருப்பான். ஒரு பிரசங்கி, வேதத்தை ஆராய்கிறபோது, மற்றவர்களுடைய நன்மைக்காகவும் பக்திவிருத்திக்காகவும் அதைச் செய்கிறான் என்பது உண்மைதான். ஆனால், தான் படிக்கும் வேத வார்த்தைகள், முதலில் தன்னுடைய ஆத்தும நன்மைக்கும், பக்திவிருத்திக்குமானது என்ற எண்ணம் அந்தப் பிரசங்கியில் இல்லாவிட்டால், அவன் வேதத்தைப் படிக்க வேண்டியவிதத்தில் படிக்கவில்லை என்பதையே காட்டுகிறான். அத்தோடு, அவனுடைய செயலுக்கான வெகுமதியும் கிடைக்காது. வேதத்தை நாம் படிக்கிறபோதெல்லாம், இந்த எண்ணம் நம் மனதில் வெளிப்படையாக இல்லாவிட்டால், வேதத்திலுள்ள எந்தவொரு சத்தியத்தையும் நாம் ஆராய்கிறபோது, அந்தச் சத்தியத்தை நம்முடைய இருதயத்தோடு ஒப்பிட்டுப் பார்க்காவிட்டால், நாம் படிக்கிற வேத சத்தியத்தின் முதன்மையான பலனை நாம் இழந்துவிடுகிறோம்” (ஜோன் ஓவன்).

கிறிஸ்துவினுடைய வருகையின் நாளில், அநேக பிரசங்கிகள், அழுது புலம்புவதற்கான காரணமாக இது இருக்கும், “என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரராக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை” (உன்னதப்பாட்டு 1:6). ஒரு சமையற்காரர் மற்றவர்களுக்கு உணவு தயாரித்துவிட்டு, தான் பட்டினியாக இருந்தது போல்தான் இது இருக்கிறது.

ஒரு பிரசங்கி வேதத்தை ஆராய்கிறபோது, அது தன்னுடைய வாழ்க்கைக்கு என்ன போதனையைத் தருகிறது என்ற கோணத்தில் அணுகுகிற அதேவேளையில், அதைக் கடின உழைப்புடனும் செய்ய வேண்டும். “உச்சிதமான கோதுமையினால்” (சங்கீதம் 81:16) தன்னுடைய மந்தையை மேய்ப்பதற்கு ஏற்றவராக இருக்க வேண்டுமானால், ஒரு பிரசங்கி, தன்னுடைய வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும் அதிக கவனத்துடன் வேதத்தை இந்தவிதத்தில் ஆராய்கிறவனாக இருக்க வேண்டும். ஆனால் பரிதாபகரமான நிலை என்னவென்றால், அநேக பிரசங்கிகள், அந்தப் பொறுப்பையேற்ற கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே, வேதத்தை ஆராய்கிற பழக்கத்தை விட்டுவிடுகிறார்கள். வேதம், தன்னில் வற்றாத ஆவிக்குரிய பொக்கிஷத்தைக் கொண்டிருக்கிறது. கடின உழைப்புடன் அதன் ஐசுவரியத்தை எவ்வளவு அதிகமாக நாம் தோண்டி எடுத்தாலும், இன்னும் நாம் எடுக்க வேண்டியவைகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதையும், நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறவைகளில் எவ்வளவு குறைவாக நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதையுமே உணரச் செய்கிறது. “ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக் கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை” (1 கொரிந்தியர் 8:2).

கர்த்தருடைய வார்த்தையைத் தொடர்ச்சியாகவும் கடின உழைப்புடனும் படிக்காமல், மிகுந்த கவனத்துடனும், ஜெபத்துடனும் நுட்பமாக ஆராயாமலும் இருந்தால், அதன் போதனைகளை ஒருபோதும் அறிய முடியாது. இப்படிச் சொல்லுவதனால், வேதத்தில் மறைபொருள் இருக்கிறதென்று பொருளல்ல. வேதம் எளிமையானதும், சிந்தித்து புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்தமானதும், ஆழமான ஆத்மீகக் காரியங்களையும் பற்றிய விஷயங்களில், நமக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கிற விதத்திலேயே வேதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடின உழைப்புடன் அதை நாடாத ஒருவருக்கும் அது தன்னிலுள்ள சிறந்த வழியைக் காட்டுவதில்லை. அஜாக்கிரதையும் சோம்பலுமுள்ளவர்களுக்கு வேதத்தை அறிவதற்கான எந்த வாக்குறுதியும் தரப்படவில்லை. மிகுந்த கவனத்துடனும், ஆர்வத்துடனும் ஆவிக்குரிய பொக்கிஷத்தைத் தேடுகிறவர்களுக்கே அந்த வாக்குறுதி தரப்பட்டுள்ளது (நீதிமொழிகள் 2:3,5). ஒரு பிரசங்கி, கர்த்தருடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தில் நல்ல பரிச்சயம் பெற்றிருக்க வேண்டுமானால், தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களுக்கு “நல்ல கொழுமையான விருந்தை” தரவேண்டுமென்ற விரும்பமிருந்தால், அவர் வேதத்தை ஆராய்கிறவராக இருக்க வேண்டும். அதுவும் அனுதினமும், தொடர்ச்சியாகவும், விடாமுயற்சியுடனும் ஆராய்கிறவராக இருக்க வேண்டும். ஞானமுள்ள ஒரு பிரசங்கியைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள், “அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, . . . இதமான வார்த்தைகளைக் கண்டு பிடிப்பான்” (பிரசங்கி 12:9,10). ஞானமுள்ள ஒரு பிரசங்கி, தன்னுடைய பிரசங்கத்திற்கான சிறந்த வார்த்தைகளையும், அதை எடுத்துரைப்பதற்கான சிறந்த வழிமுறையையும் கண்டறிவதிலேயே மும்முரமாக ஈடுபடுவான்.

“வேதாகமங்களில் வல்லவன்” (அப்போஸ்தலர் 18:24) என்ற நிலையை அடையவே எந்தவொரு பிரசங்கியும் விரும்புவான். அதற்குக் குறைந்த நிலையில் தான் இருப்பதில், எந்தவொரு பிரசங்கியும் திருப்திப்பட்டுகொள்ள மாட்டான். ஆனால் அந்த நிலையை அடைய வேண்டுமானால், தன்னுடைய மற்ற விருப்பங்களை அதற்குக் கீழ் கொண்டுவர வேண்டும். பழங்கால எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார், “ஒரு கஞ்சனிடம் இருக்கும் தங்கத்தைப் போல், ஒரு பிரசங்கி தன்னுடைய நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். மிகுந்த கவனத்துடன் தன்னுடைய நேரத்தை மீதப்படுத்தி, எச்சரிப்புடன் தன்னுடைய நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்”. யாருடைய புத்தகத்தைத் தன் கையில் வைத்திருக்கிறேன் என்பதை ஒரு பிரசங்கி எப்போதும் தன் நினைவில் வைத்திருந்து, அதை மிகுந்த பயபக்தியுடன் பயன்படுத்துவான். “என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது” (சங்கீதம் 119:161) என்பதில் உறுதியாக இருப்பான். கர்த்தர் தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபை அளிப்பதனால், மிகுந்த மனத்தாழ்மையுடன் வேதத்தைக் கையாள வேண்டும். ஜெபத்தின் ஆவியைக் கொண்டிருந்து, “நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும்” (யோபு 34:32) என்று அவரிடம் மன்றாட வேண்டும். பரிசுத்த ஆவியினுடைய ஒளியூட்டும் கிருபை, எப்போதும் சாந்தமுள்ளவர்களுக்கே இரகசியங்களைத் தெரிவிக்கிறது. மிகவும் படித்தவர்களுக்கும், ஞானிகளுக்கும் அது மறைக்கப்பட்டதாகவே இருக்கிறது. சத்தியத்தை ஏற்பதற்கு சுத்த இருதயம் கட்டாயம் தேவை. இருதய சுத்தத்தினால் சத்தியம் தெளிவாகிறது. கர்த்தர்தாமே இதைத் தரும்படி, மிகுந்த மனத்தாழ்மையுடன் அவருடைய உதவியை நாடுங்கள்.

ஒருவன் வேதத்தை விளக்கும் தகுதியுள்ள நபராக இருக்கவேண்டுமானால், நான் இதுவரை குறிப்பிட்டுக்காட்டியுள்ள அடிப்படையான விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டால் மட்டுமே முடியும். அவனுடைய வேலையே கர்த்தருடைய வார்த்தையைத் தெளிவாகவும் துல்லியமாகவும் (Exegetically accurate) எடுத்து விளக்குவதுதான். தன்னுடைய சொந்த எண்ணங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, கர்த்தருடைய வார்த்தையின் மெய்யான பொருளைக் கண்டறிவதுதான் அவனுடைய முதன்மையான வேலை. வேதத்தை மொழிபெயர்க்கிறவர்கள், மூலமொழியாகிய எபிரெயம் மற்றும் கிரேக்க மொழியின் தன்மை மாறாமல், மொழிபெயர்க்கப்படும் மொழியில் வேதத்தைத் தர வேண்டியிருப்பதுபோல், வேதத்தை விளக்குகிறவர்களும், வேதம் எழுதப்பட்டிருக்கும் மொழிகளினடிப்படையில், அதன் சரியான பொருளை அறிந்து விளக்குகிறவர்களாக இருக்க வேண்டும். இதுகுறித்து பெங்கல் என்ற பழம்பெரும் போதகர் ஒருவர் பின்வருமாறு சொல்லியிருக்கிறார், “வேதத்தை விளக்குகிறவர்கள், கிணறு தோன்டுகிறவர்கள் போல் இருக்க வேண்டும். கிணறு தோன்டுகிறவன், கிணற்றில் தண்ணீரை ஊற்றாமல், கிணற்றிலிருந்து மாசுபடாத தண்ணீரை வெளியே கொண்டுவருவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவான்.” இன்னோருவிதமாகச் சொல்லுவதானால், அவன் கர்த்தருடைய வார்த்தையைத் தன் விருப்பப்படி கையாளுகிறவனாக இருக்க மாட்டான். வேத வார்த்தைகள் அவை கொண்டிருக்கும் அர்த்தத்தைத் தவிர்த்து தன்னுடைய சொந்த அர்த்தத்தைக் கொடுக்க முயலமாட்டான். வேதவார்த்தைகளைத் தான் நினைத்தபடி மாற்றாமலும், அவற்றின் அழுத்தம் குறையாமலும், தனிப்பட்ட சொந்த விருப்பு வெறுப்புகளின்படியாக அவற்றில் எதையும் நுழைக்காமலும், அவற்றின் மெய்யான விளக்கத்தையே தருவான்.

இதுவரை நாம் பார்த்திருப்பவைகளைத் தொகுப்பாக சொல்லுவதென்றால், வேதத்தை விளக்குகிறவர்கள், நடுநிலையோடும், உத்தம இருதயத்தோடும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வேதத்தை விளக்க வேண்டும்.

“வேதத்திலுள்ள எந்தவொரு பகுதியையும், உள்ளது உள்ளபடி அதன் மொழிநடை மாறாமல், அதன் பொதுவான இலக்கண வரம்பிற்குட்பட்டே விளக்கவேண்டும்”. (பெயார்பேர்ன்)

இக்கருத்தை ஏற்றுக்கொள்ளுவது கஷ்டமல்ல; நடைமுறைபடுத்துவதே மிகவும் கடினமானது. சில பிரசங்கிகள், தாங்கள் சார்ந்திருக்கிற சபைப்பிரிவின் காரணமாகவோ, பிரசங்கத்தைக் கேட்கிறவர்களைப் பிரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ, தான் பிரசங்கிக்கும் வேதப்பகுதி நேரடியாக கண்டிக்கும் விஷயத்தை மழுப்பி, அதில் சொல்லப்பட்டிராத விஷயங்களைப் பெரிதுபடுத்தி காட்டுவார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து லூத்தர் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்,

“கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது என்ற பெயரில் நம்முடைய சொந்த விருப்பத்தை விளக்கக்கூடாது. வேதத்தை நாம் நம் இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்கும்படி மாற்றி விளக்கக்கூடாது; அது நம்மில் மாற்றமேற்படுத்த நாம் அதற்கு இருதயத்தில் இடங்கொடுக்க வேண்டும். நம்முடைய சொந்த எண்ணங்களைவிட வேதமே சிறந்தது என்ற விதத்தில் அதை நாம் மதிப்புடன் கையாள வேண்டும்.”

இதற்கு மாறான எந்த முறையும் மிகவும் கண்டிக்கத்தக்கது. கர்த்தருடைய சித்தத்திற்குப் பதிலாக, நம்முடைய மனதிலுள்ள எண்ணங்களை விளக்கக் கூடாது என்பதில் எப்போதும் மிகுந்த அக்கறைக்காட்டுகிறவர்களாக இருக்க வேண்டும். “கர்த்தர் சொல்லுகிறார்” என்று சொல்லிகொண்டு, தன்னுடைய சொந்த கருத்தைச் சொல்லுவதைப்போன்ற தேவதூஷணம் வேறெதுவும் இருக்க முடியாது. இதையெல்லாம் அறியாமல்தான், பலரும் இப்படிச் செய்து வருகிறார்களா?

ஒரு மருந்துக்கடைக்காரர், மருத்துவர் எழுதிக்கொடுத்திருக்கும் மருந்துச் சீட்டிலுள்ளபடியே மருந்தை வழங்க வேண்டிவராக இருக்கிறார். இராணுவ வீரர்கள், தங்களுக்கு மேலிருக்கும் அதிகாரியின் வார்த்தைகளைக் கேட்டு, அதை நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்படிச் செய்யாதபோது, அதற்கான கடுமையான தண்டனையையும் பெறுகிறார்கள். அப்படியானால், கடவுளுடைய விஷயத்தில் ஈடுபடுகிற ஒருவன், அவருடைய வார்த்தையைப் பற்றிய விஷயத்தில் எவ்வளவு பொறுப்புடன் இருக்க வேண்டியவனாக இருக்கிறான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நெகேமியா 8:8ல் சொல்லப்பட்டுள்ளதையே, எந்தவொரு பிரசங்கியும் பின்பற்ற வேண்டும், “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.”

இது பாபிலோனிலிருந்து இஸ்ரவேல் தேசத்திற்குத் திரும்பி வந்தவர்களைப் பற்றிய குறிப்பு. அவர்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்தபோது, கொஞ்ச கொஞ்சமாக எபிரெய மொழியில் பேசுவதையும் அதைப் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டார்கள். அரமேய மொழியையே பேச்சு மொழியாக பயன்படுத்தினார்கள். ஆகவே, எபிரெய மொழியில் எழுதப்பட்டிருந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை விளக்க வேண்டிய அவசியம் அன்றிருந்தது (நெகேமியா 13:23-24). இச்சம்பவத்தைக் கர்த்தர் வேதத்தில் பதிவிட்டுத் தந்திருப்பதன் மூலம், இது எக்காலத்திலும் நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒன்று என்பதையே நமக்குத் தெரிவிக்கிறார். கர்த்தருடைய பராமரிப்பினால் எபிரெய, கிரேக்க மொழியிலிருந்த வேதம் நாம் பயன்படுத்தும் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பிரசங்கிகளுக்கு, இந்நாட்களில் எபிரெய, கிரேக்க மொழியின் வார்த்தைகளை விளக்குவதிலுள்ள பாரம் கொஞ்சம் குறைக்கப்பட்டிருக்கிறது. எனினும், சில பகுதிகளுக்கு மூலமொழியின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி விளக்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. பிரசங்கிகளுடைய முதன்மையான வேலை, தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்கள் புரிந்துகொள்ளும்படியாக, வேத வார்த்தைகளுக்கான “அர்த்தஞ்சொல்லி” விளக்க வேண்டும். “என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 23:28) என்ற இந்தக் கட்டளையை மிகவும் கவனத்துடன் கடைபிடிப்பதே ஒரு பிரசங்கியினுடைய கடமையாக இருக்கிறது.

One thought on “சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே! – A.W. பின்க்

  1. Dear Brother in Christ Greetings to yo in our lord savior jesus christ .pries the Lord God May revival his marvelous amassing blessing to you and believers.the சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே! – A.W. பின்க் it is very useful to me and very interesting spiritual growing here thanks a lot Best of luck.

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s