வணக்கம் வாசகர்களே! இந்த இதழ் நாம் வெளியிட்டிருக்கும் நூறாவது இதழ்! இதில் வந்திருக்கும் ஆக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்று நம்புகிறேன். முதலாவது ஆக்கம் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனைப்பற்றியது. வாஷிங்டன் மிகச் சிறப்புவாய்ந்த வரலாற்றைத் தன்னில் கொண்டிருக்கும் நகரம். அங்கு போகும் அமெரிக்கர்கள் அதன் வரலாற்றுச் சிறப்பை நினைவுகூரவே அங்கு போவார்கள். ஒரு புனித இடத்தில் கால் பதித்தது போன்ற ஓர் உணர்வை வாஷிங்டன் ஏற்படுத்தும். அந்தளவுக்கு அரும்பெரும் வரலாற்றுப் பெருமைகளை நமக்கு அது நினைவுறுத்துவதாக இருக்கிறது. இரண்டு நாட்கள் அந்த நகரில் தங்கி அதன் வரலாற்று சிறப்புமிகுந்த பகுதிகளை நான் போய்ப்பார்த்தேன். அதன் வரலாற்றுப் பெருமையில் திளைத்து வியந்து நின்றேன். இன்னுமொரு முக்கிய விஷயம் அந்த வரலாற்றில் அமெரிக்காவின் கிறிஸ்தவ வரலாறும் இணைபிரியாமல் பதிந்து காணப்படுகிறது. கிறிஸ்தவர்களைத் தலைவர்களாகக் கொண்டு பிறந்தது தானே அமெரிக்கா. ஆக்கத்தை வாசித்து அந்நகரின் சிறப்பை உணர்ந்து நம்மாண்டவரைத் துதியுங்கள்.
இது தவிர வேறு இரண்டு ஆக்கங்களையும் எழுதியிருக்கிறேன். ‘வழி தவறிப்போன ஆடுகள்’ வேதம் நமக்கு உதாரணமாகப் பயன்படுத்தும் ஆட்டின் இயற்கைத் தன்மையை விளக்குகிறது. சும்மாவா ஆண்டவர் நம்மை ஆட்டுக்கு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இதுவரை ஆட்டைப்பற்றி இந்தளவுக்கு எண்ணிப் பார்த்திராதவர்களுக்கு இது நிச்சயம் உதவி செய்யும். இங்கே செம்மறி ஆட்டைப்பற்றித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பதை மறவாதீர்கள். ஆடுகளை மேய்க்க நியமிக்கப்பட்டிருக்கும் மேய்ப்பர்கள் இனித் தங்கள் பணியில் கவனத்தோடு நடந்துகொள்ள இது பயன்பட்டால் அது சந்தோஷந்தான். ‘குருடனுக்கு குருடன் வழிகாட்டுவதுபோல்’ ஆக்கம் பரிதாபத்துக்குரிய நம்மினத்து கிறிஸ்தவத்தை மறுபடியும் அலசுகிறது; அங்கலாய்க்கிறது; ஆதங்கப்படுகிறது; ஆலோசனையும் தருகிறது. புதிய வருடத்தில் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் ஒரு மாற்றமேற்படுமானால் கர்த்தருக்கு நன்றி! பெரியவர் பிங்கின் மொழியாக்கம் செய்யப்பட்ட தொடராக்கமும் இதில் வந்திருக்கிறது. ஒவ்வொரு பிரசங்கியும் அடுத்த பிரசங்கத்தைத் தயாரிக்குமுன் வாரத்தின் திங்கள் தோறும் வாசிக்க வேண்டிய அருமையான ஆக்கம். புதிய வருடம் உங்களுக்கு ஆசீர்வாதமான வருடமாக அமைய கர்த்தர் கிருபை பாராட்டட்டும். – ஆர்