வாஷிங்டனுக்குப் போகலாம் வாங்க!

சிறுவனாக இருந்தபோது எனக்கு வாசிப்புப் பழக்கம் அதிகம். சாவி என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட சா. விசுவநாதன் அந்தக் காலத்தில் அருமையான ஒரு புனைநாவல் எழுதியிருந்தார். வாஷிங்டனில் திருமணம் என்பது அதன் தலைப்பு. ஆனந்தவிகடனில் அது தொடராக வந்து, பின்பு நூல் வடிவில் நாவலாக வெளிவந்தது. தமிழகத்தில் இருந்த ஒரு பிராமணக் குடும்பத்தார் வாஷிங்டனில் வசித்த பணம்படைத்த ராக்கபெலர் அம்மையாரின் விருப்பத்தினால் ஒரு தமிழ் திருமணத்தை வாஷிங்டன் நகரில் நடத்தினார்கள். அந்தத் திருமணத்திற்குத் தமிழகத்து வாடை முழுமையாக இருக்கவேண்டும் என்பதால் நரிக்குறவர்களும் தமிழகத்தில் இருந்து பிரைவெட் விமானம் மூலம் வாஷிங்டன் கொண்டுபோகப்பட்டிருந்தார்கள். அதுவும்போதாதென்று அமெரிக்க நாய்களுக்குத் தமிழகத்து நாய்கள்போல் குறைக்க முடியவில்லை என்பதால் நாய்கள்கூட தமிழகத்தில் இருந்து வாஷிங்டன் கொண்டுபோகப்பட்டிருந்தன. பிராமணத் தமிழில் சாவி வெலுத்துக்கட்டியிருந்த ஓர் அருமையான நகைச்சுவை புனைநாவல் அது. நான் ரசித்து வாசித்திருந்த ஒரு நூல்.

வாஷிங்டனில் திருமணம் நூல்பற்றி நான் எழுதுவதற்குக் காரணமென்ன? அநேக தடவைகள் நான் அமெரிக்காவுக்குப் பயணம் செய்திருந்தபோதும், வாஷிங்டன் நகரின் விமான நிலையத்தில் இறங்கியிருந்தபோதும் அந்த நகரத்தில் கால்வைத்து சுற்றிப்பார்த்ததில்லை. அப்படிப் பார்ப்பது ஒன்றும் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. வாஷிங்டன் அமெரிக்காவின் தலைநகரம். பொதுவாக அமெரிக்காவை நினைத்துப் பார்க்கும்போது எல்லோரும் நியூயோர்க் நகரத்தையே நினைத்துக்கொள்ளுவார்கள். அமெரிக்காவில் ‘பிக் ஆப்பிள்’ (Big Apple) என்று அழைக்கப்படும் பெரும் நகரம் அது. இருந்தபோதும் தலைநகரம் வாஷிங்டனே. இந்த வருடம் திடீரென்று வாஷிங்டன் நகரத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது வாஷிங்டன் நகரில் இருநாட்கள் இருக்கும்படியாக என்னுடைய பயணத்திட்டத்தை வகுத்துக்கொண்டேன். அமெரிக்காவுக்குப் பல தடவைகள் போய் பரிச்சயம் இருந்ததால் வாஷிங்டனைச் சுற்றிப்பார்க்க எனக்கு எவர் உதவியும் தேவை இருக்கவில்லை. இரண்டு நாட்களில் முக்கிய பகுதிகளையெல்லாம் சுற்றிப்பார்ப்பது என்று முடிவெடுத்து நானே எனக்குக் கைடாக இரண்டு நாட்களுக்கு கால் நடையாக முக்கிய பகுதிகள் அனைத்தையும் சுற்றிப்பார்த்தேன். அதில் ஒரு வசதியிருந்தது. வாஷிங்டனில் பார்க்க வேண்டிய வரலாற்றுச் சிறப்புள்ள அத்தனையும் ஒரே பகுதியில் அமைந்திருக்கின்றன. வெள்ளை மாளிகை, கெப்பிட்டல் ஹில், வாஷிங்டன் நினைவுச் சின்னம், ஆபிரகாம் லிங்கன் நினைவுச் சின்னம், உலகப் போர் மற்றும் கொரியன் யுத்த நினைவுச் சின்னங்கள், ஜெபர்சன் நினைவுச் சின்னம், சுப்ரீம் கோர்ட், நூல்நிலையங்கள், பிரதான கட்டடங்கள் எல்லாம் குறைந்தது பத்துக் கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் தலைசுற்றும்படியாக இல்லாமல் இலகுவாகப் போய்ப்பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தன. என்ன! எல்லாவற்றையும் பார்ப்பதற்கு நேரமும், நடையும் அவசியம். பொறுமையாக நடந்து சுற்றிப்பார்க்கும்போது நமக்குப் பிடித்தவிதத்தில் பிடித்த கோணத்தில் எதையும் படமெடுத்துவிடலாம்; அவசரப்படத் தேவையில்லை. முதல் நாள் பத்து கிலோமீட்டர்கள் நடை. அத்தனை கீலோமீட்டர்கள் இதற்கு முன் நான் நடந்ததில்லை; ஓடியிருக்கிறேன். இரண்டாம் நாள் சுற்றிப்பார்ப்பதோடு உடல்பயிற்சியையும் சேர்த்து செய்துவிடலாமென்று என் ஜிம் உடைகளை அணிந்துகொண்டு சுற்றிப்பார்க்கக் கிளம்பினேன். ஓட்டமும் நடையுமாக இரண்டாம் நாளும் பத்து கிலோமீட்டர்கள். கர்த்தரின் கிருபையால் உடல் வாதைகள் ஒன்றும் இருக்கவில்லை.

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

முதல் நாள் நேரடியாக அமெரிக்கத் தலைவரின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகைக்குப் போனேன். அதைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு. புதிதாக, முன்பிருந்ததைவிட உயரமான இரும்பாலான ஒரு வேலியை இப்போது அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் நின்று மட்டுமே வெள்ளை மாளிகையைப் பார்க்கமுடியும். வெள்ளை மாளிகைக்குள் போய்ச் சுற்றிப்பார்ப்பது என்றால் முன்கூட்டியே பாஸ் எடுத்திருக்கவேண்டும். அதற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரொருவரின் சிபாரிசு தேவை. இருந்தபோதும், பென்சில்வேனியா அவென்யு, கொன்ஸ்டன்டைன் தெரு இரண்டிலும் நடந்து வெள்ளை மாளிகை முழுவதையும் வெளியில் இருந்து சுற்றிப் பார்த்துவிட்டேன். பென்சில்வேனியா அவனியுவில் இருந்து வெள்ளை மாளிகையின் வடப் பசுந்தரையைக் காணமுடியும். லபேயிட் சதுரத்தோட்டத்தைக் கடந்து (Lafayette Square garden) இதை அடைய முடியும். இந்தக் கார்டனில் அமெரிக்கப் புரட்சி யுத்தத்தின் முக்கிய ஜெனரலாக இருந்த லபேயிட்டினுடையதும், அமெரிக்க ஜெனரலாகவும் பின் அமெரிக்கப் பிரெசிடன்ட்களில் ஒருவராகவும் இருந்த அன்ட்ரூ ஜெக்சனுடையதும் சிலைகள் அழகாக நின்றுகொண்டிருக்கின்றன. வாஷிங்டனைச் சுற்றிப் பார்க்கின்றபோது அமெரிக்காவின் அருமையான வரலாற்றை நினைவுபடுத்தும் சிலைகள், கட்டடங்களைக் காணாமல் இருக்கமுடியாது.

லபேயிட் சதுரத்தோட்டத்திலுள்ள அன்ட்ரூ ஜெக்சனின் சிலை

வெள்ளை மாளிகை ஒன்றும் லண்டனில் மகாராணி வசிக்கும் பக்கிங்கம் பெலஸ் போன்று மிகப்பெரிய கோட்டை போன்ற மாளிகை அல்ல. (அமெரிக்கர்களிடம் இதைச் சொல்லிவிடாதீர்கள்!). இருந்தாலும் வெள்ளை மாளிகை மிகவும் சிறப்பானது. ஏன் தெரியுமா? அமெரிக்கத் தலைவர்கள் அதை வாசஸ்தலமாகப் பயன்படுத்திவருவதால்தான். உலக நாடுகளிலெல்லாம் சிறப்பான, செல்வமிக்க, பெரும் பலம் வாய்ந்த நாடாக அமெரிக்கா இருந்துவருகிறது. அதன் தலைவர் உலகத் தலைவர்களில் பலம்மிக்க, செல்வாக்குள்ள தலைவராக மதிக்கப்பட்டு வருகிறார். அவர் வசிக்கும் இடம் என்றால் அதற்குப் பெரும் மதிப்பிருக்காதா, என்ன?

நான் வெள்ளை மாளிகையைப் பார்க்கப்போன நாளில் அநேக நாடுகளில் இருந்து உல்லாசப்பிரயாணிகள் வந்திருந்தார்கள். வெள்ளை மாளிகையின் வட பகுதி கேட்டின் முன்னால் அரசின் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒருசிலர் அட்டைகளைக் கையில் தாங்கி நின்று தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். உலகின் முன்னணி ஜனநாயக நாடாக அமெரிக்கா இருப்பதால் இத்தகைய அதிருப்தியை அமைதியாக அரசுக்குத் தெரிவிக்க முடியும். இதுவரை வெள்ளை மாளிகையை, அதை எதிரிகள் தாக்குவதுபோல் எடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களில்தான் பார்த்திருக்கிறேன். இப்போது நேரடியாகக் கண்களால் அதைப் பார்க்கும்போது அதைப்பற்றிய வரலாற்று உண்மைகள் என் மனக்கண்களில் வட்டமிட ஆரம்பித்தன. ஜோர்ஜ் வாஷிங்டன் முதல் பிரசித்திபெற்ற ரொனல்ட் ரீகன்வரை எத்தனைப் பெரும் தலைவர்கள் இதில் வாசம் செய்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் வெறும் தலைவர்களா என்ன? உலக சமாதானத்துக்காக எத்தனையெத்தனை நெருக்கடிகளைத் தங்கள் காலத்தில் சந்தித்து, தீவிரமான முடிவுகளைத் தகுந்த காலத்தில் எடுத்து நாட்டையும் உலகத்தையும் பேராபத்துக்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். அமெரிக்கத் தலைவர்கள் தனிமனிதர்களாக இருந்திருந்தபோதும், வெள்ளை மாளிகையில் வசிக்கும் தகுதி அவர்களை அதற்கெல்லாம் மேலுயர்த்தி பொதுச்சொத்தாக, உலகத் தலைவர்களாக்கியிருக்கிறது.

அமெரிக்காவின் முதல் பிரெசிடன்டாக இருந்த ஜோர்ஜ் வாஷிங்டன் பிரபலமானவர். அவர் பெயரில் இன்று நினைவுச் சின்னங்களும், கட்டடங்களும், பெரும் பாலங்களும், நூல்நிலையமும் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. அவரைப்பற்றி பின்பு விபரமாகப் பார்ப்போம். அவருக்குப் பின் தொமஸ் ஜெபர்சன், அன்ட்ரூ ஜெக்சன், ஆபிரகாம் லிங்கன், பிரெங்க்ளின் டி ரூசவெல்ட், ஹெரி ட்ரூமன், ஐஸ்ஷனோவர், ஜோன் கென்னடி, நிக்சன், ரொனல்ட் ரீகன் என்று எத்தனையெத்தனைப் பெருந்தலைவர்களை உலகம் சந்தித்திருக்கிறது, இவர்களையெல்லாம் சுற்றித்தான் எத்தனைப் பெரும் வரலாற்றுச் சரிதங்கள்! அமெரிக்கா அவர்களுடைய தலைவர்களை மதிக்கும் ஒரு நாடு. அந்தத் தலைவர்களை தனிமனிதர்களாக மட்டும் அந்த நாடு பார்ப்பதில்லை. நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னமாக அவர்களை அது கணிக்கிறது. அதனால்தான் அமெரிக்க பிரெசிடன்டாக அந்நாட்டில் ஒருவர் வருவதென்பது சுலபமான காரியமல்ல. எந்தளவுக்கு அவர்கள் விடும் தவறுகளை அது சுட்டிக்காட்டாமல் இருப்பதில்லையோ அந்தளவுக்கு அவர்களுடைய ஆட்சிச் சிறப்பையும் அது மதித்துப் பாராட்டாமலிருப்பதில்லை. உலகத்தில் மிகப்பலம் வாய்ந்த பதவியாக இருக்கிறது அமெரிக்காவின் தலைவர் பதவி. வெள்ளை மாளிகைக்கு முன் நின்றுகொண்டிருந்தபோது என் நினைவுகள் சிறகடித்துப் பறந்து அதன் பெருந்தலைவர்கள் ஒவ்வொருவரையும் மனதில் அசைபோட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் நாட்டுக்காகச் செய்திருக்கும் தியாகங்கள்தான் எத்தனை! வரலாறு எத்தனை அருமையான பாடம் தெரியுமா? வரலாற்றையும், வாழ்க்கைச் சரிதங்களையும் வாசிக்கக் கற்றுக்கொண்டவர்கள் ஒருபோதும் வீண்போவதில்லை.

வாஷிங்டன் நினைவுச் சின்னம்

வாஷிங்டன் நினைவுச் சின்னம்

வெள்ளை மாளிகையைப் பார்த்த அனுபவத்தை மனதில் அசைபோட்டுக்கொண்டே அதற்கு அடுத்தபடியாக வாஷிங்டன் நினைவுச் சின்னத்தைப் பார்க்க நடைபோட்டேன். அன்று நல்ல வெய்யில். 24 செல்சியஸ் இருந்திருக்கும். நடப்பதற்கும் சுகமாக இருந்தது. வெள்ளை மாளிகையை அடுத்து ஒரு அருமையான கட்டடத்தைக் கண்டேன். மிகப் பெரிய கட்டடம், ஆனால் பழமையை நினைவுபடுத்தும் கட்டடக்கலை. இன்று அமெரிக்க அரச நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அது இருந்து வருகிறது. அதற்கு ஐஸ்ஷனோவர் (பிரெசிடன்ட்களில் ஒருவர்) நிர்வாகக் கட்டடம் என்று பெயர். இது வெள்ளை மாளிகையின் வெஸ்ட் விங்கில் இருக்கிறது. கிழக்குப் பகுதியில் இன்னுமொரு அருமையான நிதிஅமைச்சகத்தைச் சார்ந்த கட்டடம் இருக்கிறது. இக்கட்டடங்களைப் பார்த்து வியந்துகொண்டே தொடர்ந்து நடந்தேன்.

ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவகம் மிக உயரமான விண்ணை எட்டும் வகையில் நிற்கும் கல்தூண். வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் பிரெசிடன்ட் (1789-1797) மட்டுமல்ல அவரே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் தன் படைகளோடு பிரான்சுப் படைகளை இணைத்துப் படை நடத்தி வெற்றி பெற்று அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர். அவரே அமெரிக்க கொன்ஸ்டிடியூஷனை வரைந்த குழுவுக்குத் தலைமை தாங்கி நாட்டுக் கொன்ஸ்டிடியூஷனை அமைத்தவர். அவரே நாடாளும் அரசமைப்பையும் உருவாக்கினார். அமெரிக்காவுக்கு அவரளித்த அநேக பங்களிப்புகளுக்காக அவரை அந்நாடு ‘தேசபிதா’ என்றழைக்கிறது. நாட்டின் டொலர் நோட்டுட்பட அவருடைய அடையாளச் சின்னமில்லாத ஒன்றையும் அமெரிக்காவில் பார்க்க முடியாது. அமெரிக்கப் பிரெசிடன்ட்டுகளில் தலைசிறந்தவர் என்று வாஷிங்டன் அழைக்கப்படுகிறார். தலைநகரில் வானுயரந்து நிற்கும் அவருடைய நினைவுச் சின்னம் அதற்குச் சாட்சி பகர்ந்து வருகிறது. அங்கு நின்று அந்த நினைவகத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த எண்ணங்கள் எல்லாம் என் மனஅலையில் நீச்சலிட்டன.

அமெரிக்கர்கள் அதிகம் நாட்டுப்பற்று உள்ளவர்கள். எங்கு பார்த்தாலும் அந்நாட்டில் அமெரிக்க கொடியைக் காணலாம். மக்கள் தங்கள் வீடுகளிலும் வீட்டுக்கு வெளியிலும் அந்தக் கொடியைப் பறக்கவிடுவார்கள். அந்தக் கொடிக்கு அந்நாடு வேறெங்கும் இல்லாதவகையில் மதிப்பளிக்கின்றது. இந்தளவுக்கு அங்கு பேட்ரியோட்டிஷம் தலைதூக்கி நிற்கின்றது. அதனால்தான் அமெரிக்கர்கள் தங்களுடைய பழந்தலைவர்களுக்கும், வரலாற்றுக்கும் அதிக மதிப்பளிக்கிறார்கள். நினைவு தினங்களை வைத்திருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவுகூரும் நாள் மட்டுமல்லாமல், நன்றிபகரும் நாள் என்று ஒரு நாளையும் வைத்திருக்கிறார்கள். ஆனால், உலகத்தைச் சார்ந்த லிபரல் கோட்பாடுகளும், இனத்தை முதன்மைப்படுத்துகின்ற போக்கும், உலகலாவிய பொருளாதாரம் மற்றும் சமூக மாற்றுப் போக்கு (Social Engineering) போன்றவை அந்தப் பேட்ரியோட்டிஷத்துக்கு ஆபத்தாக முளைவிட்டிருக்கின்றன. முன்னாள் தலைவர்களான கிளின்டன், ஒபாமா காலங்களில் அவர்கள் இத்தகைய பேட்ரியோட்டிஷத்தின் அடையாளங்களாக இருந்ததில்லை. சமீப காலங்களில் அமெரிக்கக் கொடியைச் சில இடங்களில் எரித்ததும், சில விளையாட்டு வீரர்கள் அமெரிக்காவின் கொடிக்கு நின்று மதிப்பளிக்காமல் முழங்காலை மடித்து அமர்ந்ததும், சார்ளட்வில் போன்ற இடங்களில் இருந்து ஜெனரல் லீ, ஜெக்சன் போன்றோரின் நினைவுச்சின்னங்களை அகற்ற முயன்றதும் இந்தப் பேட்ரியோட்டிஷப் போக்குக்கு எதிரான அடையாளங்களாக இருக்கின்றன. அமெரிக்காவில் பிரிட்டனைப் போலவே பழங்காலத்தில் அடிமைகளை வைத்திருக்கும் முறை இருந்தது. அது பின்னால் இல்லாமலாக்கப்பட்டது. இருந்தபோதும் ஜோர்ஜ் வாஷிங்டன் போன்றோர் அடிமைகளை வைத்திருந்தனர் என்பதற்காக அவரைச் சிலர் நிந்திக்க ஆரம்பித்தார்கள்; நினைவுச் சின்னங்களை அசிங்கப்படுத்தவும் முயன்றனர். ஜோர்ஜ் வாஷிங்டன் பின்னால் அடிமை வர்த்தகத்தை வெறுத்து தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்து அவர்களுக்கு வசதிகள் செய்து வைத்ததற்கு வரலாறு சான்று பகருகின்றது. பழங்காலத்தில் நிகழ்ந்த ஒன்றிற்காக அந்தக் காலத்து மனிதர்களையும், அவர்களின் பெருஞ்செயல்களையும், வரலாற்றையும் இந்தக் காலத்து கண்நோக்கோடு பார்த்து எள்ளிநகையாடுவதும் எதிர்ப்பதும் சிலரின் குறுகிய மனப்பான்மையைத்தான் காட்டுகின்றது. இத்தகைய போக்குக்கு எதிரான அமெரிக்கப் பெரும்பான்மையினரின் பேட்ரியோட்டிஷமே இன்று டொனல்ட் டிரம்ப்பை பிரெசிடன்ட் ஆக்கியிருக்கிறது. அமெரிக்கர்களுக்கு அவர்களுடைய தலைவர்கள் மீதும், வரலாற்றின் மீதும் தனிப்பற்றிருக்கிறது.

கெப்பிட்டல் ஹில்

கெப்பிட்டல் ஹில்

அதற்குப் பிறகு அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கெப்பிட்டல் ஹில் அல்லது கெப்பிட்டல் கட்டடம் என்று அழைக்கப்படுக்கின்ற கட்டடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வாஷிங்டன் நினைவகத்தில் இருந்து நேராகப் பார்க்கக்கூடிய விதத்தில் அது அமைந்திருந்தது. இடையில் ஒரு நீண்ட பசுந்தரைத் தோட்டமிருந்தது. அதன் இருபுறமும் மக்கள் நடந்துபோகக்கூடியதாக பாதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதி பார்த்து ரசிக்கக்கூடிய ரம்மியமான தோற்றத்தைக் கொண்டிருந்தது. அநேக உல்லாசப் பிரயாணிகளும், அமெரிக்கர்களும் அங்கே பரவலாகக் காணப்பட்டனர். இந்த நீண்ட பரப்பு இன்டிபென்டன்ஸ் அவென்யுவுக்கும், கொன்ஸ்டிடியூஷன் அவென்யுவுக்கும் இடைப்பட்ட பகுதியை நிரப்பியிருந்தது. மக்கள் நடந்து போவதற்கு ஒருபுறம் மெடிசன் டிரைவும் மறுபுறம் ஜெபர்சன் டிரைவும் வசதியாக அமைந்திருந்தன. இதில் நடக்கிறவர்களையும், ஓடுகிறவர்களையும், சைக்கிளில் போகிறவர்களையும் பார்த்துக்கொண்டே அமெரிக்காவின் காங்கிரஸ் மற்றும் செனட் கூடுகின்ற கெப்பிட்டல் ஹில்லை நோக்கி நடந்தேன்.

கெப்பிட்டல் ஹில்லுக்கு எதிரேயுள்ள சிலைகள்

அமெரிக்கா உலக ஜனநாயக நாடுகளில் சிறப்பானது. முக்கியமாக அது ஜனநாயகத்தை வலியுறுத்தி அதை நிலைநிறுத்தப் பாடுபட்டு வருகிறது. அமெரிக்க கொன்ஸ்ட்டிடியூஷனில் அதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். தனிமனிதப் பேச்சுரிமை அதில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. வேறெந்த நாடுகளிலும் இல்லாதளவுக்கு அதை அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. அதைத் தவறாக சுயநலத்திற்காகப் பயன்படுத்திகொள்ளுகின்ற மீடியாக்களும், தனிநபர்களும், அரசியல்வாதிகளும் அங்கிருந்தபோதும் அமெரிக்கா பேச்சுரிமைக்குப் பெரிதும் பாதுகாப்பளிக்கின்றது. அமெரிக்க அரசியல் அமைப்பில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று ஒன்றின் மீது செல்வாக்கு செலுத்த இயலாதபடி நாட்டுக் கொன்ஸ்ட்டிடியூஷன் எழுதப்பட்டிருக்கிறது. நாட்டுக் கொன்ஸ்ட்டிடியூஷன் முதன்மையானது. அதன்படியே நாடு ஆளப்பட வேண்டும். அமெரிக்க அரசியல் அமைப்பில் மூன்று பிரிவுகளில் ஒன்று, நாட்டுச் சட்டங்களை உண்டாக்கும் Legislative branch. இதிலேயே அமெரிக்க காங்கிரஸ் காணப்படுகிறது. அதில் அமெரிக்க செனட்டும் (100 உறுப்பினர்), அமெரிக்க காங்கிரஸ் (435) உறுப்பினர்களும் அடங்குகிறார்கள். இதுவே நாட்டின் சட்டங்களை உருவாக்கும் பிரிவாக இருக்கின்றது. இன்னொரு பிரிவு ஆளும் அதிகாரம், Executive branch. இதில் அமெரிக்க பிரெசிடன்ட், உப பிரெசிடன்ட் மற்றும் மந்திரிசபை ஆகியோர் அடங்குவர். அடுத்த பிரிவு நீதிப் பிரிவு (Judicial branch). இந்தப் பிரிவே அமெரிக்க கொன்ஸ்ட்டிடியூஷன் மற்றும் சட்டங்கள் சம்பந்தமான விளக்கங்களைத் தரும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டும் (9 நீதிபதிகள்), ஏனைய நீதிமன்றங்களும் அடங்கும். அமெரிக்க பிரெசிடன்டே இந்தப் பிரிவுகளில் மேலான அதிகாரத்தைக் கொண்டிருந்தபோதும் அவர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முடியாதபடி ஏனைய இரண்டு அதிகாரப்பிரிவுகளும் உயர் அதிகாரத்துக்குப் பாதுகாப்பாக இருந்து வருகின்றன. இதனை விளக்கும் வரைபடத்தைக் கவனியுங்கள்.

கெப்பிட்டல் கட்டடம் (தலைநகரக் கட்டடம்) மிக அழகானது. நான் அதை வெளியில் இருந்து மட்டுமே சுற்றிப்பார்த்தேன். நிறைய படிகள் ஏறி அதன் பிரதான இடத்தை அடைய வேண்டும். அதிலேயே காங்கிரஸ் உறுப்பினர்களும், செனட்டும் கூடி வருகின்றன. இந்தக் கட்டடத்திற்கும் பின்புறமாக இடது பக்கத்தில் சுப்பிரீம் கோர்ட் கட்டடத்தைக் காணலாம். அதற்கு வலது பக்கத்தில் காங்கிரஸ் நூலகக் கட்டடம் அமைந்திருக்கின்றது. கெப்பிட்டல் கட்டடத்தில் இருந்து தூரத்தில் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தைப் பார்க்கலாம். கட்டடத்தின் முன்னால் யூலிசஸ் கிரான்ட் எனும் முன்னாள் பிரெசிடன்ட்டின் நினைவுச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இவர் யூனியன் படையை அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது தலைமை தாங்கி வழிநடத்தியதோடு இருமுறை பிரெசிடன்ட்டாகவும் (1869-1877) இருந்திருக்கிறார். கிரான்டின் சிலை 2 மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபத்தை நோக்கிப் பார்த்தபடி நிற்கிறது. லிங்கனும், கிரான்டும் யூனியன் படைகளை வழிநடத்தியவர்கள். இருவருமே அமெரிக்க பிரெசிடன்டுகளாக இருந்திருக்கிறார்கள். இருவரும் அமெரிக்கா ஒரு யூனியனாக இருக்கப் பெரும் பணியாற்றியவர்கள். கிரான்டின் சிலைக்கு ஒரு புறம் அவருடைய போர்வீரர்களின் சிலையும் இன்னொரு புறம் அவருடைய பீரங்கிப்படையின் சிலையும் அமைந்திருக்கின்றது. இந்தச் சிலைகள் அமெரிக்க உள்நாட்டுப் போரில் யூனியன் படையினரின் பங்கைப் பெருமையோடு நினைவூட்டுவதாக நின்றுகொண்டிருக்கின்றன. இவையனைத்தும் வெண்கலத்தினால் செய்யப்பட்டவை.

என்னுடைய முதல் நாள் சுற்றுப் பயணம் இதோடு முடிந்தது. நேரம் நடுப்பகலையும் தாண்டியிருந்ததாலும், என்னுடைய இருப்பிடத்தை அடையுமுன் மாலை வரப்போவதாலும் சுற்றுப்பயணத்தில் பார்க்க வேண்டிய ஏனைய முக்கிய இடங்களை அடுத்த நாளுக்கு தள்ளிவைக்கத் தீர்மானித்தேன். கெப்பிட்டல் கட்டடத்தில் இருந்து திரும்பி நடந்தபோது மெடிசன் டிரைவின் வழியாக நடக்க ஆரம்பித்தேன். அவ்வழியாகப் போகும்போது தேசிய கலை நூலகம் மற்றும் சிமித்தோனியன் தேசிய மியூசியக் கட்டடங்களைக் காணமுடிந்தது. இவையெல்லாம் பிரமாண்டமான கட்டடங்கள் மட்டுமல்ல பழமை புதுமை இரண்டையும் பிரதிபலிப்பவையாகவும் இருந்தன. வாஷிங்டனில் மியூசியங்களுக்கும், ஆர்ட் கெலரிகளுக்கும் குறைவில்லை. மெடிசன் டிரைவில் இருந்து 14ம் தெருவில் வலப்புறமாகத் திரும்பி கொன்ஸ்டிடியூஷன் அவென்யுவைத் தாண்டி நடக்க ஆரம்பித்தேன். அங்கே அமெரிக்க வர்த்தக நிறுவனக் கட்டடத்தை வலப்புறம் கண்டேன். வீதியின் இருபுறமும் விக்டோரியன் காலத்தை நினைவுறுத்தும் உறுதியான பிரம்மாண்டமான கட்டடங்கள் கண்களைத் திரும்பித் திரும்பிப் பார்க்க வைத்தன. முன்னாள் பிரெசிடன்ட் ரொனல் ரீகனுடைய கட்டடமும் அந்தப் பகுதியிலேயே இருந்தது. வழியிலேயே மத்தியான உணவை முடித்துவிட்டு போகும் வழியில் பிரெங்ளின் கார்டினையும் பார்த்துவிட்டு என்னுடைய இருப்பிடத்தை மாலை எட்டுவதற்குள் அடைந்துவிட்டேன்.

வாஷிங்டனில் முதல் நாள் சுற்றுப்பயணம் நிச்சயம் என்னை மலைக்க வைத்திருந்தது என்பதைச் சொல்லாமலிருக்க முடியாது. பெரும் பெரும் அரச நிர்வாகக் கட்டடங்கள், வெள்ளை மாளிகை, கெப்பிட்டல் ஹில், மியூசியங்கள், நூல் நிலையங்கள் அனைத்தும் அமெரிக்காவின் அரசியல், பொருளாதார, சமூக வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டுபவையாக இருந்தன. எத்தனை செல்வமிக்க வரலாற்றை அமெரிக்கா தன்னில் சுமந்து தலைநிமிர்ந்து நிற்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அத்தனைக் கஷ்டமாக இருக்கவில்லை. ஒருபுறம் சிறப்புமிக்க ஆழமும் அழுத்தமும்கொண்ட நீண்ட வரலாற்றுப் பின்புலம், மறுபுறம் பொருளாதார எழுச்சியையும் செல்வத்தையும் பிரதிபலிக்கும் வர்த்தகத்தையும் நவீன சமுதாயத்தையும் ஒரு சேர வாஷிங்டனில் காணமுடிந்தது. இவற்றிற்கு மத்தியில் லிபரல் கோட்பாடுகளின் விளைவால் வீடற்று வீதியில் வாழும் சில மனிதர்களையும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களையும் ஆங்காங்கே வீதிகளில் பார்க்கமுடிந்தது. இந்த ஆக்கம் இன்னும் முடிவுக்கு வந்திராவிட்டாலும் ஒரு நிமிடம் நின்று அமெரிக்கா இத்தனைப் பலமிக்க நாடாக வந்திருப்பதற்கு எது காரணம் என்பதை சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. அமெரிக்காவுக்கு வெளியில் இருப்பவர்கள் லிபரல் கோட்பாடுகளின் தாக்கத்தினால் எப்போதும் அமெரிக்காவைத் திட்டிக்கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பிபிசி, அல்ஜிசீராவில் இருந்து அத்தனை லிபரல் மீடியாக்களும் அதைத்தான் இன்று நேற்றில்லாமல் செய்துவருகின்றன. அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எது காரணம் என்பதை சிந்திப்போம்.

அமெரிக்கா இங்கிலாந்தில் இருந்து வெளியேறி நியூ இங்கிலாந்து என்று அழைக்கப்படும் பகுதியில் 1620களில் குடியேறிய பியூரிட்டன் குடும்பங்களினால் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தில் தாங்கள் அனுபவித்த கிறிஸ்தவத்திற்கு எதிரான துன்புறுத்தல்களினால் நாடு கடத்தப்பட்டு மே பிளவர் என்ற கப்பலில் அந்தப் பகுதியில் வந்திறங்கியவர்களே ஆரம்பகாலப் பியூரிட்டன்கள். அவர்களே தாங்கள் வந்திறங்கிய பகுதிகளில் காலனிகளை உண்டாக்கி இன்றிருக்கும் அமெரிக்காவை உருவாக்கியவர்கள். ஆரம்பகாலத்தில் இருந்தே அமெரிக்கா மதசுதந்திரத்தைப் பெரிதும் வலியுறுத்தி வந்திருக்கின்றது. கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்தவர்கள் உருவாக்கிய தேசம் அமெரிக்கா. ஆதியில் வேதத்தை விசுவாசித்து வாசித்து, வார்த்தையின் அடிப்படையிலான ஆராதனையில் ஈடுபட்டு, ஓய்வுநாளைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தவர்களே அந்நாடு உருவாகவும், வளரவும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இவ்வாறாக உருவான 13 காலனிகள் பின்னால் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக பிரிட்டிஷ் படைகளோடு போராடி (1775-1783) வெற்றிகண்டு நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தனர். 1776ல் அவர்கள் தங்களை சுதந்திர தேசமாகப் பிரகடனம் செய்தார்கள். இவர்கள் தங்களைப் ‘பேட்ரியேட்ஸ்’ என்று அழைத்துக்கொண்டனர். இந்தப் பதின்மூன்று காலனிகளின் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் தேசபிதாக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களில் வியாபாரிகள், சட்டநிபுணர்கள், தத்துவவாதிகள், அரசியல்வாதிகள், தோட்டச் சொந்தக்காரர்கள் என்று பல்வேறு துறைகளில் திறன் பெற்றவர்கள் அடங்கியிருந்தனர். ஜோன் அடம்ஸ், பென்ஜமின் பிராங்க்ளின், அலெக்சாண்டர் ஹெமில்டன், ஜோன் ஜே, தொமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மெடிசன், ஜோர்ஜ் வாஷிங்டன் ஆகியோரே அந்த ஏழு பேரும். இவர்களே அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதி அறிவிக்கவும், அமெரிக்க கொன்ஸ்டிடியூஷன் எழுதப்படவும் காரணமாக இருந்தனர். இவர்களில் ஜோர்ஜ் வாஷிங்டன் வகித்திருந்த பங்குபற்றி ஏற்கனவே விளக்கியிருந்தேன். அமெரிக்காவின் ஆரம்பத்தலைவர்கள் உழைப்புக்கு அதிகம் மதிப்புக்கொடுத்தார்கள். உழைத்து சம்பாதிப்பதற்கும் வளர்ச்சியடைவதற்கும் அவர்கள் எந்தத் தடையுமிடவில்லை. அந்தவிதத்தில் வளர்ந்திருப்பதே இன்றைய அமெரிக்கா. அதனால்தான் அமெரிக்கா தொடர்ந்தும் தனிநபர் உழைப்புக்கும், வளர்ச்சிக்கும், சொத்துடமையாளர்களாக இருப்பதற்கும் பேராதரவு அளித்து வருகிறது. அது ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகள் கொண்டிருக்கும் சோஷியலிசப்போக்கை கடுமையாக எதிர்க்கிறது. தனிநபர் உழைப்பும், சொத்துச் சேகரிப்பும், வியாபார வளர்ச்சியுமே அமெரிக்கா செல்வமுள்ள நாடாக இருப்பதற்குக் காரணம். கைநீட்டி எவரிடமும் தங்கியிராமல் உழைப்பதை அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள். தனிமனிதன் அப்படி உழைப்பதற்கும் வளர்வதற்கும் ஆனவற்றை செய்துகொடுக்க அரசு முயல்கிறது. அரசு எல்லாவற்றையும் செய்து வருவதைவிட நாட்டு மக்கள் உழைத்துத் தங்கள் உடமைகளை வளர்த்துக்கொள்வதை அமெரிக்கா என்றும் கொள்கையாக வைத்திருந்தது; முக்கியமாக குடியரசுக்கட்சி அதையே ஊக்குவிக்கிறது. அமெரிக்க தேசபிதாக்கள் குடியரசுவாதிகளாகவே இருந்திருக்கின்றனர்.

இன்று தீவிர லிபரல் போக்குக்கொண்ட அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கோட்பாடுகளால் இளந்தலைமுறை தங்கள் நாட்டின் அருமை பெருமை அறியாமல் தேசபிதாக்களைக்கூட சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். கர்த்தருடைய கரமில்லாமல் அமெரிக்கா இன்றிருக்கும் உயர்நிலையை அடைந்திருக்க முடியாது. இன்றுகூட அவர்களுடைய டாலர் நோட்டில் ‘கடவுளையே நாம் நம்பியிருக்கிறோம்’ என்று அச்சிடப்பட்டிருக்கிறது.

இரண்டாம் நாள்

முதல் நாள் சுற்றுப்பயணத்தை முடித்தபின், உணவருந்திவிட்டு இரவு நன்றாக உறங்க முடிந்தது. பத்து கிலோ மீட்டர் நடந்திருக்கிறேன் இல்லையா! இருந்தும் அதிகாலையே எழுந்துவிட்டேன். இன்று பார்க்க வேண்டிய முக்கிய இடங்களிருப்பதால் அது தந்த உற்சாகமே நேரத்தோடு விழித்துக்கொண்டதற்குக் காரணம். காலை உணவருந்திவிட்டு கையில் வைத்திருக்கும் வாஷிங்டன் வரைபடத்தை மறுபடியும் பார்த்து போக வேண்டிய இடங்களை மனதில் குறித்துக்கொண்டேன். இன்று ஒரு மாற்றம். சுற்றுப்பயணத்தோடு உடல்பயிற்சியையும் முடித்துக்கொள்ளத் தீர்மானித்து ஜிம் உடைகளையும் ஓடுவதற்கு வசதியான காலணிகளையும் அணிந்துகொண்டேன். வசதியாக இன்றும் நல்ல வெயில் என்று கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் காட்டியது. ஒன்பது மணிக்கு முன்பே இருப்பிடத்தை விட்டு 15ம் தெருவில் மறுபடியும் நேராக வெள்ளை மாளிகைக்குப் போகும் வழியில் சென்றேன். நான் புறப்பட்ட இடத்தில் இருந்து அது ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. ஆகவே மெல்லிய ஓட்டத்தோடு சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தேன். வெகு விரைவிலேயே வெள்ளை மாளிகைக்கு முன்பிருந்த லபாயீட் தோட்டத்தைக் கடந்து மறுபடியும் பென்சில்வேனியா தெருவில் இருந்த வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று எடுக்க வேண்டிய படங்களை வெவ்வேறு கோணத்தில் எடுத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு ஐஸ்ஷனோவர் கட்டடத்தை ஒட்டியிருக்கும் 17ம் தெருவில் நடந்து வாஷிங்டன் நினைவுச் சின்னத்தை நோக்கிப் போனேன். போகும் வழியில் சுவர்நியர் விற்கும் சில கடைகள் நடைபாதையில் இருந்தன. எந்தக் கடையில் பார்த்தாலும் டொனல்ட் டிரம்பின் டீசேர்ட்டுகளும், மெகா ஹெட்டுகளும் விற்பனைக்கு இருந்தன. அந்தத் தெருவிலேயே வின்டர் கட்டடம் (Winder Building) ஐஸ்ஷனோவர் கட்டடத்திற்கு எதிர்ப்புறமாக இருந்தது. இது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பணிபுரியும் அலுவலகமாக இருந்து வருகிறது. அந்தக் கட்டடத்திற்கு முன்னால் நிறைய டிவி மீடியாக்கள் விடியோ கேமராக்களோடு நின்றுகொண்டிருந்தனர். போலீஸும் நின்றுகொண்டிருந்தது. ஏறக்குறைய நாற்பது பேர் வரையில் நின்றிருந்தார்கள். யாராவது முக்கிய பிரமுகர் கட்டடத்திற்குள்ளிருந்து வரப்போகிறாரோ என்று சில நிமிடங்கள் நின்று பார்த்தேன். எனக்குத் தெரிந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் மறுபடியும் ஆரம்பித்திருந்தன. அது சம்பந்தமானவர்களிடம் பேசுவதற்காகத்தான் மீடியாக்கள் நின்றுகொண்டிருந்தனவோ தெரியவில்லை. ஒன்றும் விசேஷமாக நடக்காததால் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து நடக்க ஆரம்பித்தேன். நேராக வாஷிங்டன் நினைவுச் சின்னம் இருந்த இடத்தை அடைந்து மேலும் தேவையான படங்களை எடுத்துக்கொண்டேன்.

நேரம் அப்போது காலை பத்து மணியை சமீபித்திருந்தது. நல்ல வெயில். அமெரிக்காவில் Fall என்று அழைக்கப்படும் இளங்குளிர் காலம் ஆரம்பித்திருந்தபோதும் அங்கு இந்த வருடம் வெய்யில் காலம் செப்டெம்பர் வரை நீண்டிருந்ததால் பனிக்காலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அது எனக்கு சுற்றுப் பயணத்திற்கு வசதியாக இருந்தது. வாஷிங்டன் நினைவுச் சதுக்கத்தைத் தாண்டி வரும்போது வீதியின் இருபுறமும் அரச நிர்வாகக் கட்டடங்களும், ரெட் குரொஸின் தலைமையகக் கட்டடமும் இருந்தன. பின்பு கொன்ஸ்டிடியூஷன் வீதி, கொன்ஸ்டிடியூஷன் தோட்டத்தைக் கடந்து வலது புறம் இருந்த இரண்டாம் உலகப் போர் நினைவுச் சின்னப்பகுதியை அடைந்தேன். அது நேராக ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபத்தை நோக்கி அமைந்திருந்தது. முதலில் இரண்டாம் உலகப்போர் நினைவுச்சின்னப்பகுதியைப் பார்த்துவிடுவோம் என்று அதற்குள் நுழைந்தேன். அது வாஷிங்டன் நினைவுச் சதுக்கத்துக்கு நேர் எதிர்ப்புறம் 17ம் S.W வீதியில் இருந்தது.

இரண்டாம் உலக யுத்த நினைவுச் சின்னம்

இரண்டாம் உலக யுத்த நினைவுச் சின்னம்

இரண்டாம் உலகப்போர் நினைவுச்சின்னம் மிக அழகாகக் கட்டப்பட்டிருந்தது. நுழைவாயிலில் இரண்டு பக்கமும் அமெரிக்கக் கொடிகள் தலைநிமிர்ந்து பறந்துகொண்டிருந்தன. இங்கே 17 அடி உயரமுள்ள 56 கிரெனைட் கல்தூண்கள் நின்றுகொண்டிருந்தன. இரண்டு பக்கமும் ஒன்றையொன்று நோக்கி நிற்கும்வகையில் 43 அடி உயர வெற்றித் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை பசுபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் யுத்தங்களை நினைவுறுத்தும் தூண்கள். நடுவில் வானவில் தண்ணீரூற்று அமைந்திருந்தது. நாட்டையும் உலகத்தையும் காப்பதற்குப் பல்லாயிரக்கணக்கானோர் போராடிப் பெற்ற வெற்றியை மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்தோடு நாட்டுக்காக உயிரிழந்தவர்களை மதிக்கும் அடையாளமாகவும் இவை இருந்தன. இந்த நினைவுச் சின்னம் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 16 மில்லியன் போர்வீரர்களை நினைவுகூர அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் ஹவாயின் பேர்ல் ஹார்பர் தாக்குதலில் போராடி உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டிருந்தார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் 405,399 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தோ அல்லது காணாமலோ போயிருந்தனர். அங்கிருந்த சுதந்திர மதிலில் 4048 நட்சத்திரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் உயிரிழந்த அல்லது காணாமல்போன 100 போர்வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதை அமைப்பதற்கு கிளின்டன் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு ஏப்ரல் 2004ல் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டபம்

ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டபம்

அடுத்ததாக ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டபத்தை நோக்கி நடைபோட்டேன். இது இரண்டாம் உலகப்போர் நினைவுச் சின்னத்தில் இருந்து 622 மீட்டர்கள் (0.62 கி.மீ.) தூரத்தில் இருந்தது. நடப்பதற்கு நல்ல வசதியான பாதைகள் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்தன. நடுவில் முகந்தெரியும் குளம் 620 மீட்டர் நீளமும் 54 மீட்டர் அகலமும் கொண்டதாக பிரமாண்டமான விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதில் யாரும் குளிக்கவோ, இறங்கவோ, நீச்சலடிக்கவோ முடியாது! இவை மிகுந்த மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டிய பகுதிகள். உல்லாசப் பிரயாணிகளும், அமெரிக்கர்களும், பாடசாலை மாணவர்களும் நடந்து லிங்கன் நினைவு மண்டபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். அவர்களில் ஓடி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களும் இருந்தார்கள். அதனால் நானும் ஓட ஆரம்பித்தேன். நல்ல வெயில் இருந்தபோதும் இளங்காற்று வீசிக்கொண்டிருந்தது. லிங்கன் நினைவு மண்டபத்திற்குப் பின்னால் பரந்து விரிந்த போட்டோமெக் ஆறு இருந்ததால் காற்று அங்கிருந்து வந்துகொண்டிருந்தது என்று நினைக்கிறேன். இந்த முகந்தெரியும் பெருங்குளத்தின் இரண்டு பகுதிகளிலும் மேலும் சில நினைவுச் சின்னங்களும், ஒரு புறத்தில் கொன்ஸ்டிடியூஷன் தோட்டமும் இருந்தன. அத்தோடு எனக்கு இடது புறத்தில் இன்டிபென்டன்ஸ் அவென்யுவும், வலதுபுறத்தில் கொன்ஸ்டிடியூஷன் அவென்யுவும் இருந்தன.

லிங்கனின் சிலை

ஆபிரகாம் லிங்கனைப் பற்றிய எண்ணங்கள் மனதில் ஊசலாட அவரின் நினைவு மண்டபத்தை அடைந்தேன். கண் முன்னால் உயரமான இடத்தில் பெருமையோடு காட்சியளித்தது அந்த நினைவு மண்டபம். ஏறிப்போக நிறைய படிகள் இருந்தன. அந்த மண்டபம் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருந்தது. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது பிரெசிடன்ட் (1861-1865). அத்தோடு பிரெசிடன்ட்கள் எல்லோரிலும் சில சிறப்புகளையும் கொண்டவர். அமெரிக்க வரலாறு அவருக்கொரு சிறப்பிடத்தை வழங்குகிறது. அதை லிங்கன் நினைவு மண்டபம் நிச்சயம் விளக்குவதாக இருக்கிறது. லிங்கன் ஒரு வழக்கறிஞர்; குடியரசுக் கட்சித் தலைவர். அமெரிக்க குடியரசு யூனியனில் இருந்து சுதந்திரம் பெற தெற்கில் இருந்த ஆறு மாநிலங்களும் ஒருங்கிணைந்து கொன்பெடெரெட்சாகப் போர்தொடுத்தபோது லிங்கன் அமெரிக்க யூனியனைப் பாதுகாக்க அவர்களோடு போரிட்டார். அந்தப் போரில் அவர் வெற்றியும் அடைந்தார். அடிமை வியாபாரத்தையும், அடிமைகள் வைத்திருப்பதையும் ஒழிப்பதற்கு அவர் பெருமுயற்சியெடுத்து அதில் வெற்றியும் கண்டார். நவம்பர் 19, 1863ல் அவர் கெட்டிஸ்பேர்க் என்ற இடத்தில் கொடுத்த சிறப்புரை அமெரிக்க வரலாற்றில் கொடுக்கப்பட்ட மிகச் சிறப்பான உரை என்று மதிக்கப்படுகிறது. கெட்டிஸ்பேர்கிலேயே லிங்கனின் படைகள் கொன்பெடெரெட்சோடு நடந்த இறுதிப்போரில் வெற்றி பெற்றன. ஏப்ரல் 14, 1865ல் ஜோன் வில்க்ஸ் பூத் என்ற கொன்பெடெரேட்ஸை ஆதரித்த ஒரு நாடக நடிகன், ஆபிரகாம் லிங்கன் ஒரு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது தலையில் துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்தான். மறுநாள் அவர் மரணமடைந்தார். அமெரிக்க பிரெசிடன்டுகளில் விசேஷமானவர்களில் ஒருவராக லிங்கன் மதிக்கப்பட்டு வருகிறார்.

லிங்கன் ஆராதித்து வந்த திருச்சபை

99 அடிகள் உயரமுள்ள லிங்கன் நினைவு மண்டம், 189.7 அடிகள் நீளமும், 118.5 அடிகள் அகலமும் கொண்டது. அதில் 36 தூண்கள் லிங்கன் காலத்தில் அமெரிக்காவில் இருந்த 36 மாநிலங்களையும் அடையாளப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. பிரதான மண்டபத்தை அடைய முகந்தெரியும் பரந்த குளத்தில் இருந்து 87 படிக்கட்டுக்கள் உள்ளன. லிங்கனின் கெட்டிஸ்பேர்க் உரையின் ஆரம்ப வசனத்தில் குறிப்பிட்டிருந்த எண்களை நினைவுறுத்தும்படியாக இந்தப் படிக்கட்டுகளின் எண்ணிக்கை அமைந்திருந்தன. உயரத்தில் அமைந்திருந்த அந்த மண்டபத்தைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறிப்போய் மத்திய மண்டபத்தை அடைந்தால் அங்கே நாம் படங்களில் பார்த்திருக்கும் ஆபிரகாம் லிங்கனின் பிரமாண்டமான உருவச்சிலை மண்டபத்தின் பின்புறச் சுவரைத் தொடும்படியாக அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். மண்டபத்தின் உள்ளேயும் சிலையைச் சுற்றிவர தூண்கள் அமைந்திருந்தன. சுவரில் லிங்கனைப் பற்றிய வரலாற்றுப் புகழ்பெற்ற வார்த்தைகள் பதியப்பட்டிருந்தன. அங்கே லிங்கனின் சிலை 19 அடி உயரத்தில் 21 மார்பல் கற்களில் உருவாக்கப்பட்டு அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஆபிரகாம் லிங்கனே நேரில் நிற்பதுபோல் மிகத் தத்ரூபமாக, கூர்ந்த பார்வையோடு அவர் தன் முக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்விதத்தில் சிலை இருந்தது. லிங்கன் நினைவு மண்டபத்தில் காணப்பட்ட ஒவ்வொன்றும் அவருடையதும், அமெரிக்க தேசத்தினதும் வரலாற்றை நினைவுபடுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அமெரிக்கா எந்தளவுக்கு தன் வரலாற்றிற்கும், தேசத்தலைவர்களுக்கும் மதிப்பளிக்கின்றது என்பதை ஆச்சரியத்தோடு கவனித்து அதிக நேரம் அந்த மண்டபத்தை சுற்றிப் பார்த்துவிட்டு படிக்கட்டுகளில் கீழிறங்கினேன். அங்கிருந்து பார்க்கும்போது முன்னால் முகந்தெரியும் நீளமான குளமும், குளத்தில் எதிர்ப்புற முடிவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடமும், மிகத்தூரத்தில் வாஷிங்டனின் நினைவுத் தூணும் அதற்குப் பின்னால் கெப்பிட்டல் ஹில்லும் கண்களால் காணக்கூடிய தூரத்தில் அமைந்திருந்தன. அந்தக் காட்சியே பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. எத்தனை ஆண்டுகால வரலாறும், எத்தனையெத்தனை பேரின் நாட்டுப்பற்றும், சுதந்திரத்திற்காக அவர்கள் செய்திருக்கும் தியாகமும் கண்கள் முன்னால் தத்ரூபமாகக் காட்சியளித்து மனதை உலுக்கும்விதத்தில் இருந்தன. முடிந்தளவுக்கு எடுக்கவேண்டிய படங்களை வெவ்வேறு கோணத்தில் எடுத்துக்கொண்டேன்.

கொரியப் போர் நினைவுச் சின்னம்

கொரியப் போர் நினைவுச் சின்னம்

அப்போது நேரம் மத்தியானத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. அடுத்ததாக எங்கு போகலாம் என்று கையில் இருந்த வரைபடத்தைப் பார்த்தேன். கொரியன் போர் நினைவிடம் வலது பக்கத்தில் இருந்ததால் அதைப் பார்க்கலாம் என்று லிங்கன் மண்டபப்படிக்கட்டுகளில் இருந்து இறங்கி அதை நோக்கி நடந்தேன். நூற்றுக்கணக்கில் என்னைப் போன்ற உல்லாசப்பிரயாணிகள் லிங்கன் மண்டபத்தைச் சூழ்ந்திருந்தனர். அன்று வானம் ஒரு துளி மேகமும் இல்லாமல் பரந்து விரிந்து நீள வர்ணத் திரைபோலக் காட்சியளித்தது. போட்டோ எடுப்பவர்களுக்கென்று வசதியாக இருந்த நல்ல வெயில் நாளது. வேகமில்லாமலும், அதேநேரத்தில் வெய்யிலின் தாக்கத்தைத் தணியச் செய்யும் வகையில் இளங்காற்று மேனியைத் தடவி ஆறுதல் அளிக்கும்விதத்தில் வீசிக்கொண்டிருந்தது. படிகளில் இருந்து இறங்கி கொரியப்போர் நினைவிடத்தை அடைந்து உள்ளே போனேன். அது பச்சை நிறப்புதர்கள் அழகாக வளர்க்கப்பட்டு சுற்றிவர கொரியன் போரை நினைவுபடுத்தும் விதத்தில் நீரூற்றையும் மற்றும் சுவர்களைக்கொண்டும் அமைக்கப்பட்டிருந்தது. முன்னால் இருந்த பச்சைப் புதர்களுக்கு மத்தியில் உண்மையிலேயே அமெரிக்கப் போர்வீரர்கள் போருடை அணிந்து துப்பாக்கிகளைத் தாங்கி நடந்துபோவதுபோல் தத்ரூபமாக இருபதுக்கு மேற்பட்ட சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. 1948ல் கொரியா இரண்டாகப் பிரிந்து வடகொரியா கம்யூனிஸ்ட் கொரியாவாகவும், தென்கொரியா முதலாளித்துவ கொரியாவாகவும் செயல்பட்டன. 1950ல் வடகொரியப் படைகள் தென்கொரியாவுக்குள் நுழைந்தன. உடனே இருநாடுகளுக்குமிடையில் பெரும்போர் தொடங்கியது. இந்தப் போரில் 1950-1953 வரை தென்கொரியாவுக்குத் துணையாக அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. வடகொரியாவுக்குத் துணையாக சீனாவும், ரஷ்யாவும் போரில் ஈடுபட்டிருந்தன. இந்தப் போரில் இரண்டாம் உலகப் போரிலும், வியட்நாம் போரிலும் இறந்தவர்களைவிட அதிகமானோர் பலியானதோடு 3 மில்லியன் பேருக்கு மேல் போரினால் பாதிக்கப்பட்டனர். இப்போரில் வடகொரியா வரலாற்றில் என்றுமில்லாதவகையில் அமெரிக்காவின் குண்டுத்தாக்குதலுக்குள்ளானது. 1953ல் இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இரண்டு நாடுகளும் சமாதான ஒப்பந்தத்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. இன்றும் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் அதற்குப் பாதுகாப்பாக இருக்கின்றன. அத்தோடு அட்லாண்டிக் கடலில் அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களும் நின்றுகொண்டிருக்கின்றன.

மேலும் சில நினைவுச் சின்னங்கள்

மார்டின் லூதர் கிங் ஜூனியரின் நினைவுச் சின்னம்

கொரியப் போர் நினைவுச் சின்னத்தைப் பார்த்தபிறகு அதற்கு அப்பால் இன்டிபென்டென்ஸ் அவென்யுவைத் தாண்டி மேற்கு பேசின் தெருவுக்கு வலதுபுறம் மேற்கு போர்டோமெக் பார்க்கில் அமைந்திருந்த மார்டின் லூதர் கிங் ஜூனியரின் நினைவுச் சின்னத்தைப் பார்க்கச் சென்றேன். அதற்குப் பின்னால் போர்டோமெக் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. நாலு ஏக்கர் நிலப்பகுதியில் ‘நம்பிக்கைக் கல்’ என்ற பெயர்கொண்ட லூதர் கிங்கின் அழகான சிலை இருந்தது. இது கிரெனைட்டில் உருவாக்கப்பட்டிருந்த வெள்ளைச் சிலை. லூதர் கிங் குடியுரிமை இயக்கத்தின் தலைவராக இருந்தவர். அதற்கு அப்பால் அமெரிக்க பிரெசிடன்டுகளில் ஒருவராக இருந்த பிராங்க்ளின் ரூசவெல்ட்டின் நினைவுச் சின்னமும், ஜப்பானிய நினைவுத் தோட்டமும் இருந்தன. தூரத்தில் போர்டோமெக் ஆற்றுக்கு அப்பால் ஜெபர்சன் நினைவு மண்டபம் இருந்தது. பிராங்ளின் ரூசவெல்ட் 12 வருடங்கள் அமெரிக்க பிரெசிடன்டாக இருந்தவர். இரண்டாம் உலகப்போர்க்கால பிரெசிடன்ட் அவர். பிரிட்டனின் வின்ஸ்டன் சர்ச்சிள் மற்றும் சோவியத் ரஷ்யாவின் ஸ்டாலின் ஆகியோரின் சமகாலப் பிரெசிடன்ட் அவர். அவர் காலத்திலேயே ஹவாயில் பேர்ல் ஹார்பர் ஜப்பானியரால் தாக்கப்பட்டு அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தில் நுழைய நேர்ந்தது. அவ்வாறு அமெரிக்கா உலக யுத்தத்தில் நுழைந்ததனாலேயே ஹிட்லரின் அராஜகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, ஜப்பானியரும் போரில் தோல்வியடைந்தனர். முதல் முறையாக அமெரிக்கா அந்த யுத்தத்திலேயே ஜப்பானியருக்குப் பாடம் கற்பிக்கும் முறையிலும், போரை நிறுத்தவும் ஹிரோசீமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்களில் அட்டோமிக் குண்டுகளை வீசியது. அதுவே ஜப்பான் சரணடையவும் போர் நிறுத்தம் ஏற்படவும் காரணமாக இருந்தது.

இத்தனைக் கால வரலாற்று நினைவுகள் மனதில் படம் போல் விரிந்து அமெரிக்கா உலகுக்கு செய்திருக்கும் நன்மைகளையும், அதன் தலைவர்களின் தியாகச் செயல்களையும் எண்ணி எண்ணி வியந்தபடி அன்றைய சுற்றுப்பயணத்தை முடிக்கலாமென்று நினைத்தேன். மறுபடியும் வந்தவழியிலேயே என்னுடைய இருப்பிடத்தை நோக்கிக் கால்கள் நகர்ந்தன. அதற்கு ஆறு கிலோ மீட்டர் நடக்கவேண்டும். மறுபடியும் வாஷிங்டன் நினைவுச் சதுக்கம், வெள்ளை மாளிகை, முக்கிய அரச நிர்வாகக் கட்டடங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்தபடி மாலை நேரம் பதியுமுன் என்னிருப்பிடத்தை அடைந்தேன்.

இரண்டு நாட்கள் வாஷிங்டனைப் சுற்றிப் பார்த்திருந்த விஷயங்கள் என் மனதில் தொடர்ந்தும் ஓடிக்கொண்டிருந்தன. எத்தனை அருமையான வரலாற்றைத் தன்னில் சுமந்து தலை நிமிர்ந்து நிற்கிறது அந்நாடு என்று என்னால் வியப்போடு சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. இத்தனைக்கும் கிறிஸ்தவ நம்பிக்கைகளும், கிறிஸ்தவர்களும் அந்நாடு உருவாவதற்குச் செய்திருக்கும் தியாகங்களையும் அரும்பெரும் செயல்களையும் என்னால் எண்ணாமல் இருக்கமுடியவில்லை. ‘நீதி ஒரு நாட்டை உயர்த்துகிறது’ என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளை இவ்வேளையில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அதேவேளை இன்றைய அமெரிக்காவில் வளர்ந்திருக்கும் உலகத்தைச் சார்ந்த லிபரல் போக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களையும் நினைத்து வருந்தாமல் இருக்கமுடியவில்லை. உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும், பிரிட்டனும் இன்றிருக்கும் நிலை கவலைகொள்ள வைக்கிறது. இரண்டு நாடுகளிலும் கிறிஸ்தவம் மிக உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. பிரிட்டன் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தத்தினாலும், பியூரிட்டன் காலத்தாலும், ஜோன் சார்ள்ஸ் வெஸ்லி மற்றும் ஜோர்ஜ் விட்பீல்ட், ஹவல் ஹெரிஸ், டேனியல் ரோலன்ட்ஸ் போன்றோரின் 18ம் நூற்றாண்டு எழுப்புதல்களினாலும் பெரும் ஆசீர்வாதத்தை அடைந்த நாடாக இருந்தது. இன்று அவை எல்லாவற்றையும் அடியோடு தூக்கியெறிந்திருக்கும் லிபரல் நாடாகவும், திருச்சபை மிகத் தாழ்ந்த நிலையிலிருக்கும் நாடாகவும் மாறியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ அரசியலும் இன்று சிரிப்புக்கிடமான இடத்தில், கர்த்தரின் தண்டனையை நினைவுறுத்துவதுபோல் அந்நாட்டில் குழப்பமான நிலையை அடைந்திருக்கிறது. அந்தளவுக்கு அமெரிக்கா போய்விடாவிட்டாலும் லிபரலிசம் அதன் உயர்வுக்கு ஆபத்தானதாக வந்திருக்கிறது. இந்த இரண்டு நாடுகளைப்போல ஆசீர்வாதத்தை அடைந்திருக்கும் வேறு நாடுகள் உலகத்தில் வேறு இல்லை. கர்த்தர் மட்டுமே எந்த நாட்டையும் உயரவைக்க முடியும். கர்த்தருக்கு மதிப்புக்கொடுக்காத நாடுகள் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலைப்போல அவருடைய வெறுப்பையும் தண்டனையையும் மட்டுமே எதிர்கொள்ள நேரும். இந்தச் சிந்தனைகளெல்லாம் இதயத்தில் கனமாகப் பதிந்திருக்க வாஷிங்டனில் கடைசி நாளை நிறைவு செய்ய படுக்கைக்குப் போனேன். நாளைய நாளைப் பார்க்கப்போகிறோம் என்ற நம்பிக்கையோடும், கர்த்தரின் கிருபையால் நாளை நலமாக அமையும் என்ற நம்பிக்கையோடும் அன்றிரவு கண்ணுறங்கினேன்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s