சகரியா 4:10, ‘அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்?’ என்ற வினாவை எழுப்புகிறது. இதற்குக் காரணம் பாபிலோனின் சிறைவாசத்தில் இருந்து திரும்பிவந்தவர்கள் எருசலேம் ஆலயத்தைத் திருத்திக் கட்டவேண்டியதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்ததுதான். பாழடைந்திருந்த ஆலயத்தையும் அதன் மதிலையும் மீண்டும் கட்டி முடித்து மறுபடியும் நாட்டில் மக்களைக் குடியேற்றுவது என்பது பெரிய காரியம். ஆனால் அதன் ஆரம்பம் அன்று அநேகருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. லேவியரும், ஆசாரியர்களும் இந்தப் பெரும் பணியில் ஈடுபட்டபோது அது எல்லோருக்கும் மிகவும் அற்பமானதாகவும், சாதாரணமானதாகவுந்தான் தெரிந்தது. அதை எவரும் பொருட்படுத்தவில்லை. அதுவும் இத்தனைப் பெரிய காரியம் மிகச்சிலரைக் கொண்டே அன்று ஆரம்பமானது. சகரியா சொல்லுகிறார், கண்களுக்குத் தெரியும் இந்த அற்பமான ஆரம்பத்தின் காலத்தை அசட்டை பண்ணாதீர்கள் என்று.
சபை வரலாற்றில் பெருங்காரியங்கள் எல்லாமே அற்பமான ஆரம்பத்தைத்தான் கொண்டிருந்திருக்கின்றன. இன்று நம்மில் பலர் பெருமையோடு வியந்து நினைவுகூரும் சீர்திருத்த வரலாற்றின் ஆரம்பம் அற்பமானதாகத்தான் இருந்தது. நவீன உலகில் நாம் மலைத்துப்போய் தலைதூக்கிப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்து உலக நாடுகளின் தலை நாடாக இருக்கும் அமெரிக்காவின் ஆரம்பகாலமும் அற்பமானதாகத்தான் இருந்தது. அதுவும் மேபிளவர் கப்பலில் இங்கிலாந்தைவிட்டு வெளியேறிய பியூரிட்டன்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய ஆதங்கம் மட்டுமே இருதயத்தில் இருந்தது. அவர்கள் கால்பதித்த புதிய தேசத்தில் அவர்களுக்குச் செழிப்பு காத்திருக்கவில்லை; அவர்களின் வரலாற்று ஆரம்பம் அற்பமானதாகத்தான் இருந்தது. அற்பமான ஆரம்பத்தின் நாளை அசட்டைச் செய்யக்கூடாது என்கிறார் சகரியா (சகரியா 4:10).
நம் ஊழியங்களும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் பெருகவேண்டும், பெரும் பேர் பெறவேண்டும் என்ற ஆசை அநேகருக்கு இருக்கிறது. அவற்றை அடைய என்னென்னவோ செய்துகொண்டிருப்பவர்களை கிறிஸ்தவ உலகு அறியும். அவர்களுக்குச் செழிப்போடு வாழவேண்டுமென்று ஆசை. கர்த்தரின் ஊழியமும், கர்த்தரின் மெய்யூழியர்களும் செழிப்பைக் காணமாட்டார்கள் என்று நினைத்துவிடக்கூடாது. செழிப்பை உண்டாக்குவதும், ஒருவருக்குக் கொடுப்பதும் பரிசுத்த ஆவியானவரின் பணி; அதை அவர் தன் சித்தப்படியே செய்கிறார். நாம் அவரை வற்புறுத்திக்கேட்டு அதை அடையமுடியாது. ஜெபித்தும் அதை அடைய முடியாது. அவரே அதை அவருடைய வழிப்படி நமக்குத் தந்தால்தான் உண்டு. கர்த்தரின் ஊழியங்கள் எப்போதும் இந்த உலகில் ஆரம்பத்தில் செழிப்போடு ஆரம்பிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்த்தருக்கு வல்லமையில்லை என்று அர்த்தமல்ல; பரிசுத்த ஆவியானவர் பலமிழந்து போய்விட்டார் என்றும் தவறாக எண்ணக்கூடாது. ஆண்டவர் அப்போஸ்தலர்களை சுவிசேஷம் சொல்ல அனுப்பிவைத்தபோது அவர்களுடைய ஊழியம் சின்னதாகத்தான் ஆரம்பித்தது. இன்னொருவிதத்தில் சொன்னால் அற்பமானதாகத்தான் இருந்தது. கடுகு சிறிதாக இருந்தாலும் காரம் பெரிது என்பதுபோல் அவர்களுடைய அற்பமான ஆரம்ப ஊழியம் வல்லமையோடுதான் ஆரம்பித்தது. இருந்தாலும் அது சுற்றியிருப்பவர்களினாலும், உலகத்தாலும் அற்பமானதாகத்தான் கருதப்பட்டது.
மீட்பின் வரலாற்றில் சில காலப்பகுதிகளில் கர்த்தர் மக்கள் மத்தியில் வார்த்தைப் பஞ்சத்தை உண்டாக்குகிறார். உதாரணத்திற்கு, பழைய ஏற்பாட்டு எலிசாவின் காலம் (2 இராஜாக்கள்) அப்படியிருந்தது. நாம் வாழும் காலம் இன்று அப்படியிருக்கிறது. அதிகளவில் கர்த்தரின் மெய்யான ஊழியத்தையும் வார்த்தைச் செழிப்பையும் நாம் எல்லா இடங்களிலும் காணமுடியாமல் இருக்கிறது. உலகில் சில பகுதிகளில் சில திருச்சபைகளில் அதைக் காணமுடிகிறது. ஆனால், பெரும் செழிப்பையும், எழுப்புதலையும் நாம் இன்று காணவில்லை. அதற்குக் காரணமென்ன? சுவிசேஷம் பலமற்றுப் போய்விட்டதா? கர்த்தரின் கரம் வலிமையற்றுப் போய்விட்டதா? இல்லவேயில்லை! மக்களின் இருதயம் கடினப்பட்டிருக்கிறது. செவித்தினவுள்ளவர்களாக அவர்கள் காதுக்கு இதமாக இருப்பதை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். அவர்கள் இருதயத்தைப் பொய்க்கு விற்றிருக்கிறார்கள். நிதானித்து ஆராய்ந்து சத்தியத்தை மட்டுமே அறிந்துணரும் பக்குவமில்லாதிருக்கிறார்கள். அதனால் கர்த்தர் வார்த்தைப் பஞ்சத்தை உண்டாக்கியிருக்கிறார். ஆசிய நாடுகளையும், இந்தியாவையும் பார்க்கும்போது பெருமளவில் நிகழ்ந்து வரும் சுவிசேஷ ஊழியங்களில் உண்மையில்லை என்பதை உணர்வதற்கு ஒருவர் ராக்கட் விஞ்ஞானியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எங்கு திரும்பினாலும் போலிப்பிரசங்கங்களும், செழிப்புபதேசப் போதனைகளும் கொரோனா வைரஸைப்போல செழிப்போடு பரவி வருகின்றன. மெய்யான சுவிசேஷ ஊழியங்கள் அங்குமிங்குமாக அற்பமானதாக இருந்து வருகின்றன. விசுவாசமுள்ள, சத்தியத்தை சத்தியமாக விளக்கிப்போதிக்கும் பக்திவிருத்தியுள்ள, பணத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படாத பிரசங்கிகளும், போதகர்களும் விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவிதத்திலேயே இருந்து வருகின்றனர். இது ‘அற்பமான ஆரம்பத்தின் காலம்.’ அதாவது இவை சத்தியப் பஞ்சத்திற்கு மத்தியில் சொற்பமாக இருந்து வரும் உண்மை ஊழியங்கள். இருந்தபோதும் இவை மட்டுமே கர்த்தரின் மெய்யான ஊழியங்கள். இவை சொற்பமானவையாக, பெருங்கூட்டத்தைக் கொண்டிராதவையாக இருந்தபோதும் இவை எதிர்காலத்தில் வரப்போகும் ஆத்மீக செழிப்பிற்கு அடையாளங்கள். அதனால்தான் சகரியா, அற்பமான ஆரம்பத்தின் நாட்களை உதாசீனப்படுத்தக்கூடாது என்கிறார்.
இத்தகைய அற்பமான ஆரம்பத்தின் காலப்பகுதியில்தான் 1995ல் திருமறைத்தீபம் ஆடம்பரமின்றி வெளிவர ஆரம்பித்தது. அது வெளிவரப்போகிறதென்பதும் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதுபற்றிய ஹொலிவுட், போலிவுட் முன்னறிவிப்புக்கள் கொடுக்கப்படவில்லை. அற்பமான முறையில் கர்த்தரை நம்பி வெளிவர ஆரம்பித்த காலாண்டிதழ் இன்று 25 வருடங்களைக் கடந்து கர்த்தரின் கிருபையால் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் மூலம் கர்த்தர் செய்துவருகின்ற ஆத்மீகக் கிரியைகளை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி தெரிவிருக்கும் ஒரு நினைவுக்கூட்டத்தை பெங்களூர் நகரத்தில் ஜனவரி மாதம் 17ம் தேதி மாலை இதழ் வெளியீட்டாளர்களும், அந்நகரில் இருந்துவருகின்ற கிருபை சீர்திருத்த பாப்திஸ்து சபையும் நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தை போதகர் முரளி ஜெபத்தோடு ஆரம்பித்து வைத்து உரையாளர்களை அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவில் இருந்து வந்திருந்த டாக்டர், போதகர் ஸ்டீபன் பேர்ட் தலைமை தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார். திருமறைத்தீப இதழுக்கும் அவருக்கும் நெடுநாள் தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. அதன் பணிக்காக ஜெபித்து வந்திருப்பவர்களில் அவரும் ஒருவர்; அதில் ஒரு சில ஆக்கங்களையும் எழுதியிருக்கிறார்.
அவரைத் தவிர மேலும் ஐந்து பேர் அக்கூட்டத்தில் பேசினார்கள். அதில் மூன்று பேருக்கு இதழின் ஆரம்ப நாளில் இருந்து அதோடு தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. முக்கியமாக அந்த ஐந்து பேர்களில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திருமறைத்தீபம் அழிக்கமுடியாத ஆத்மீகத் தாக்கத்தை ஏற்படுத்தித் தன் அச்சைப் பதித்திருக்கிறது. அவர்கள் வெறும் வாசகர்களல்ல; பத்திரிகையினால் வாழ்க்கையில் மாற்றங்களை அடைந்தவர்கள். பத்திரிகையின் பணிகளில் வெவ்வேறு விதங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறவர்கள். அவர்களுடைய உரையின் சிறப்பைப்பற்றிக் கூறவேண்டுமானால், ஐந்து பேருடைய உரையும் அவர்களுடைய இருதயத்தில் இருந்து வருவதாக இருந்தன. உரை நிகழ்த்தவேண்டுமென்பதற்காக எதையும் சொல்லாமல், இதழினால் தங்களுக்கேற்பட்ட வாழ்க்கை மாற்றத்தை நெஞ்சைத்தொடும் விதத்தில் அவர்கள் சொன்னது சிறப்பான அம்சம். திருமறைத்தீபம் தொடர்ந்து பல்லாண்டு காலத்துக்கும் பணிபுரிய வேண்டும் என்ற அவர்கள் தங்கள் ஆவலைப் பகிர்ந்துகொண்டார்கள். தலைமையுரை நிகழ்த்திய டாக்டர் ஸ்டீபன் பேர்ட் முதல் ஏனைய ஐந்துபேரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களும், எண்ணங்களும் கர்த்தர் இந்த இதழ் மூலம் இந்த அற்பமான ஆரம்பத்தின் காலங்களில் எத்தனைப் பெருஞ்செயல்களைச் செய்துவருகிறார் என்று உணர முடிந்தது. ஒரே நாளில் இருபத்து ஐந்து வருட அனுபவங்களை மனதில் அசைபோட்டுப் பார்க்கிறபோது எவருக்கும் அத்தகைய மலைப்பு ஏற்படத்தான் செய்யும்.
அன்று இதழாசிரியரோடு, இதழ் பணிகளில் ஈடுபட்டிருக்கிற சிலர் அவர்களுடைய உழைப்புக்காகவும், வைராக்கியங்கொண்ட தளராத பணிக்காகவும் கௌரவிக்கப்பட்டார்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காது கர்த்தரின் மகிமைக்காகவும், தமிழினத்துக் கிறிஸ்தவத்தின் சத்திய விழிப்பிற்காகவும் மட்டும் செயல்பட்டு வருகிற அவர்கள் இவ்வகையில் கௌரவிக்கப்பட்டது அத்தனை வாசகர்களையும் சாரும். இறுதியில் இதழாசிரியர் தனது நன்றியுரையைத் தெரிவித்தார். அதில் தன்னோடு இணைந்து செயல்பட்டு வருகிறவர்களுக்கும், தொடர்ந்து இதழ்மூலம் சத்தியவிழிப்படைந்து வருகின்ற வாசகர்களுக்கும், அருமையாக கூட்டம் நடந்துமுடிய தங்கள் உழைப்பைத் தந்திருந்த பெங்களூர் திருச்சபையினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். ஆடம்பரம் எதுவுமின்றி அமைதியாகவும், அழகாகவும் கூட்டம் அன்று நிறைவுபெற்றது.
கூட்டத்திற்கு தலைமைதாங்கி சுருக்கவுரை நிகழ்த்தியவரின் பேச்சை இங்கே தந்திருக்கிறேன்:

போதகர் ஸ்டீபன் பேர்ட்
டாக்டர், போதகர் ஸ்டீபன் பேர்ட், வட கரலைனா, அமெரிக்கா
‘அற்பமான ஆரம்பத்தின் காலத்தை அசட்டை செய்யாதீர்கள்: ஒரு சிறிய இதழை கர்த்தர் எப்படியெல்லாம் ஆசீர்வதிக்கிறார்’
திருமறைத்தீபம் 25 வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் வர்ஜீனியாவில், டிரினிடி திருச்சபையில் அங்கத்தவனாக இருந்தபோது, 1995ல், போதகர் பாலாவிடம் இருந்து வந்த ஜெபக்குறிப்பில் இதழின் ஆரம்பத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது இப்போதும் நினைவிலிருக்கிறது. இத்தனை காலத்திற்குப் பிறகு எத்தனை ஆயிரம் பேர் இதனை வாசித்து வருகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்? ஒவ்வொரு இதழிலும் கொடுக்கப்படும் சத்தியங்கள் இன்னும் எத்தனையோ விதங்களில் மேலும் பலரை அடைந்து வருகின்றது.
போதகர் பாலா இதழின் முதன்மை ஆசிரியராக இருந்து வருகிறார். நான் போதகர் பாலாவை 2005ம் ஆண்டில் சந்தித்தேன். அவரோடு சில தடவை நான் இந்தியா வந்திருக்கிறேன்; இப்போது பெங்களூருக்கு வரமுடிந்திருக்கிறது. 2005ம் ஆண்டில் இருந்து வருடா வருடம் போதகர் பாலா என் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் திருமறைத்தீபம் மூலம் கர்த்தர் செய்து வரும் அற்புதமான செயல்களையெல்லாம் நான் இப்போது போதகராக இருந்துவரும் சபையார் கேட்கும் ஆசீர்வாதம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. போதகர் பாலா சில வேளைகளில் சில ஊழியங்களை ஆரம்பித்திருக்கிறார்; சில சமயங்களில் ஒருசில தொடராமல் நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இருந்தபோதும், திருமறைத்தீபத்தின் பணி நிற்காமல் தொடர்ந்து முன்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த இதழின் விசேஷ தன்மை என்ன? இது போதகர்களுக்கும், திருச்சபை ஊழியர்களுக்கும் அவசியமான, தேவையான, தெளிவான வேதபோதனைகளை அளித்து வருகின்றது. அதில் வெளிவருகின்ற ஆக்கங்கள் அனைத்தும் உயர்தரமானவையாகவும், நடைமுறைக்கொத்ததாகவும், காலத்துக்குப் பொருத்தமானதாகவும் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாகவும் இருந்து வருகின்றன. அதுவும் நம்மத்தியில் வேதபூர்வமான, உயர்தரமான நல்ல நூல்கள் தமிழில்லை; இருந¢தபோதும் திருமறைத்தீபம் அந்தக் குறையை நீக்கி ஆங்கிலத்தில் மட்டுமே காணப்படும் தரமான வேதவிளக்கங்களை அளித்துவருகின்றது. அதேநேரம், ஆசிரியர் அருமையான ஆக்கங்களைத் தானே எழுதி வெளியிட்டும் வருகிறார். மேலாக, திருமறைத்தீபம் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது!
இத்தகைய தரமான இதழ் நம்மத்தியில் இருப்பதற்குக் காரணமென்ன? போதகர் பாலா தளர்வடையாத உழைப்பாளி; அநேக வருடங்களாக இதழில் அத்தனைப் பணிகளையும் தானே பெரும் உதவிகளெதுவுமின்றி செய்துவந¢திருக்கிறார். சமீப காலமாக அவருக்குத் துணையாக விசுவாசமும், ஊக்கமுமுள்ள ஊழியராக ஜேம்ஸ் இணைந்து பணியாற்றுகிறார். அதேநேரம் இப்பணிக்கு ஒத்துழைப்புக்கொடுத்து பின்பலமாக இருந்து வரும் நியூசிலாந்து சபையையும் மறந்துவிடக்கூடாது.
போதகர் பாலா இதழில் வரும் ஆக்கங்கள் விஷயமாக மிகவும் கவனத்தோடு செயல்படுகிறார். அனைத்து ஆக்கங்களும் வாசகர்களுக்கு அவசியமானதாகவும், நடைமுறைக்கொத்ததாகவும், வாசிப்பதற்கு எளிமையாகவும் இருக்கவேண்டும் என்பதில் மிகவும் சிரத்தை காட்டுகிறார். இது ஒரு பெரும் ஈவு! தரமான வேதபோதனைகள் மூலம் வாசகர்களின் இருதயமாற்றத்தையே, ஆத்மீக மாற்றத்தையே ஆசிரியர் எதிர்பார்ப்பதால் மிகுந்த சிரத்தையோடு இதழில் வரும் ஆக்கங்களைக் கவனத்தோடு வெளியிட்டு வருகிறார். அத்தகைய மாற்றத்தைப் பலர் அடைந்திருக்கிறார்கள்; அடைந்தும் வருகிறார்கள்.
சத்தியத்தின் வல்லமையை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. வேத வசனங்களும், தெளிவான வேதபோதனைகளும் அவற்றின் இலக்கை அடையாமல் இருக்காது. போதகர் பாலாவுடன் எனக்கிருக்கும் 15 வருடகால நட்பில் இதற்கான எண்ணற்ற உதாரணங்களை அவரிடம் இருந்து நான் கேட்டறிந்திருக்கிறேன். போதகர்களின் வாழ்க்கை மாறியிருக்கின்றது; திருச்சபைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன; சத்தியத்திற்காக திருச்சபைப் பிரிவுகளில் இருந்து விலகி வந்திருக்கிறவர்களும் அநேகர். சிலர் பலவருடங்களாக இதழை வாசித்திருக்கிறார்கள்; சத்தியம் அவர்களில் செயல்பட ஆரம்பிக்குமுன். நாம் சத்தியத்தில் வளர வேண்டியவர்களாக இருக்கிறோம்; எல்லாவற்றையும் ஒரே நாளில் நாம் அடைந்துவிடுவதில்லை. திருமறைத்தீபம் கிறிஸ்தவ வாசகர்களுக்கு வாசித்து, நிதானித்து, சிந்திக்கின்ற வாய்ப்பை அளித்திருக்கின்றது.
இந்த மாலை நேரத்தில் நாம் கிறிஸ்துவில் மிகவும் உற்சாகத்தோடு இருக்கவேண்டும். நாம் காணாத வேளைகளிலும் கர்த்தர் தொடர்ந்து கிரியை செய்து வருகிறார். சிலவேளைகளில் நாம் தளர்ந்துபோகிறோம்; ஆனால் அதற்கு அவசியமில்லை. எனக்குத் தெரியும், சிலவேளைகளில் இந்த இதழ் பணிகளை நிறுத்திவிட்டு வேறு பணிகளில் கவனம் செலுத்தலாமா என்றுகூட போதகர் பாலா எண்ணியிருந்திருப்பார். அவருக்கு வேறு எத்தனையோ பணிகள் இருப்பதோடு உள்ளூரிலும், வேறு நாடுகளிலும் ஊழியப்பணிகள் இருந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியும். இருந்தபோதும் இந்த இதழ் பணி கர்த்தரால் தனக்களிக்கப்பட்ட ஊழியப் பொறுப்பு என்பதை அவர் உணர்ந்து அதில் விசுவாசமாக இருக்க உழைத்து வருகிறார்.
என் உரையை நாம் முடிக்கின்ற இவ்வேளை, திருமறைத்தீபம் கர்த்தரால் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதம் என்பதோடு, போதகர் பாலாவுக்கும் நாம் பெருங்கடனாளியாகவும் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். ஒருவர் ஒரு பெரும் சுவிசேஷப் பணியைச் செய்வதற்கு தீர்மானிக்கின்றபோது அவர் அதற்கு அதிக தியாகத்தையும் நேரத்தையும் விலையாகச் செலுத்தவேண்டும். அதன் நல்விளைவுகளை உணரக் காலமெடுக்கும்; அதன் பலன்கள் பெரிதானவை.
நாம் ஆவியில் விதைப்பதெல்லாம் ஆவியில் கனிகொடுக்கும். நாம் அற்பமான ஆரம்பத்தைப் பற்றி ஒருபோதும் சந்தேகப்படக்கூடாது. இந்த மாலை நேரத்தில் கர்த்தரின் ஈவான திருமறைத்தீபத்திற்காகவும் போதகர் பாலாவின் விசுவாமுள்ள பணிகளுக்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். திருமறைத்தீபம் தொடர்ந்து வேதத்திற்கு விசுவாசமுள்ளதாக ஒளிவீசட்டும். கர்த்தருக்கே அனைத்து மகிமையும்; அவருடைய இராஜ்ஜியம் விஸ்தரிக்கட்டும். ஆமென்!