இதழ் 2, 2006
“. . . நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:31, 32)
இவை இயேசு கிறிஸ்து யூதர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள். யூதர்களில் பெரும்பாலானோர் இயேசுவைக் கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். சத்தியத்தை அறிந்துகொள்ள முடியாதபடி அவர்களுடைய கண்கள் குருடாயிருந்தன. சத்தியத்தை அறிந்துகொள்ளாதவர்கள் குருடர்களாக மட்டுமே தங்களுடைய வாழ்க்கையில் இருப்பது மட்டுமல்ல அவர்களுக்கு விடுதலை கிடைக்காது. ஆத்மீக விடுதலை சத்தியத்தினால் மட்டுமே கிடைக்கும் என்பதை இயேசு தெளிவாகவே விளக்கியிருக்கிறார்.
இயேசு வேறு எதையும்விட தன்னுடைய உபதேசத்துக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அவருடைய உபதேசமே வேதம் முழுவதிலும் அடங்கியிருக்கிறது. அதனால்தான் அவருக்கு “வார்த்தை” என்ற பெயரும் உண்டு. அவருடைய சீஷராக விரும்புகிற எவரும் அவருடைய உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்கிறார் இயேசு. ஆடிப்பாடுவதாலோ, உணர்ச்சிப் பிரவாகத்தால் நாம் விரும்பியதை இயேசுவுக்காக செய்வதாலோ அல்லது பாரம்பரியமாக இருந்துவரும் சடங்குகளைப் பின்பற்றுவதாலோ எவரும் அவருடைய சீஷராக முடியாது. பாரம்பரியத்துக்குப் பாலூட்டி வளர்த்த யூதர்களில் பெரும்பாலானோர் அவருடைய சீஷர்களாக இருக்கவில்லை. அவருடைய உபதேசத்தை மட்டும் பின்பற்றி அவற்றில் நிலைத்திருப்பதால் மட்டுமே எவரும் இயேசுவின் சீஷராக முடியும். இதை இன்று தமிழினத்து கிறிஸ்தவம் புரிந்துகொள்ளாமல் தன் மனம்போனபோக்கில் இயேசுவைப் பின்பற்றப் பார்க்கிறது. சபைத்தலைமையிலிருந்து அடிமட்ட விசுவாசிகள்வரை இன்று இதே நிலைமைதான்.
இளம் பங்காளர் திட்டம் என்று ஒன்றை வகுத்து இளம் பிள்ளைகளுக்குக் கர்த்தரின் ஆசீர்வாதம் கிடைக்க வகைசெய்வதாகக் கூறி அநேகரிடம் இயேசுவின் பெயரில் பணம் வாங்கித் தன்னை வளர்த்துக்கொள்கிற ஒரு குடும்ப ஊழியம் தமிழகத்தில் இருக்கிறது. இந்தத் திட்டத்துக்குப் பணம் செலுத்தி வந்த ஒரு குடும்பத்தால் அதைத் தொடர்ந்து செலுத்த முடியாமல் போனபோது கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியும் முதலுமாக உடனடியாக அனுப்பி வைக்கும்படி அவர்களுக்குக் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்தபிறகே பணம் அனுப்பிவந்த குடும்பத்தின் கண்கள் திறந்தன. இயேசு பெயரில் ஊழியம் செய்கிறவர்கள் இப்படியும் பணத்துக்காக அலைகிறார்களே என்று அந்தக் குடும்பம் வருத்தப்பட்டது. இப்படியெல்லாம் ஊழியத்தின் பெயரால் நம்மினத்தில் அநியாயங்கள் நடந்து வருவதற்கு சத்தியப் பஞ்சமே முக்கிய காரணம்.
“என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் சத்தியத்தை அறிவீர்கள்” என்கிறார் இயேசு. சத்தியத்தைத் தொடர்ந்து படித்து, சிந்தித்து, ஆராய்ந்து வருகிறபோதே அதன் போதனைகள் நமக்குத் தெளிவாகப் புரியவரும். சத்திய வேதத்தை ஒதுக்கிவைத்துவிட்டு சத்தியத்தில் வளர முடியாது. வேதத்தை அன்றாடம் ஜெபத்தோடு படிக்காவிட்டால் சத்தியத்தை அறிந்துகொள்ள முடியாது. சத்தியத்தை அறிந்துகொண்டால் மட்டுமே போலிப் போதனைகளிடம் இருந்து நாம் தப்பமுடியும். சத்தியம் தெரியாவிட்டால் போலி எது? உண்மை எது? என்று உணர முடியாத மூடர்களாக நாம் இருந்துவிடுவோம். இந்த ஆபத்து ஏற்படாதிருக்க இயேசு தன்னுடைய உபதேசத்தை மட்டும் பின்பற்றி அதில் நிலைத்திருக்கச் சொல்லுகிறார். யூதர்களின் இருதயம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. அவர்கள் தங்களுடைய சொந்தப் போதனையைச் சத்தியத்தோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்கிறார் இயேசு கிறிஸ்து. அவர் கூறுகிற விடுதலை ஆத்மீக விடுதலை. பாவத்திலிருந்தும், பாரம்பரியப் பிசாசுகளிடம் இருந்தும், உலக இச்சைகளில் இருந்தும் நமக்குச் சத்தியமே விடுதலை அளிக்கிறது; மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இரட்சிப்பின் அனுபவத்தை அடைந்தபிறகு தொடர்ந்து சத்தியத்தில் நாட்டம் காட்டி இயேசுவின் உபதேசங்களைப் படித்து நம்முடைய வாழ்க்கையில் அவற்றை மட்டும் பின்பற்றுகிறபோது இந்த விடுதலையை நாம் அடையலாம். உலகத்தின் போதனையின்படியும், சிந்தனைகளின்படியும் போய்விடாமல் இருக்கவேண்டுமானால் சத்தியத்தை நடைமுறையில் கைக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் சத்தியத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தவறை ஒதுக்கி சரியானதைச் செய்யவேண்டும். இப்படிச் செய்வதன்மூலமே இயேசுவின் உபதேசத்தில் நிலைத்திருக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரையில் இன்றைக்கு நம்மினத்தைப் பிடித்திருக்கும் பெரும் வியாதி சத்தியப் பஞ்சமே. இதைப் புரிந்துகொள்ளாதவரை நமக்கு விமோசனமில்லை. இதுபுரியாமல், எல்லோர் மேலும் அன்புகாட்ட முயற்சித்தால் கிறிஸ்தவ எழுப்புதல் ஏற்படும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள். யூதர்கள்மேலும், பரிசேயர்மேலும், சதுசேயர்மேலும், தம்மை எதிர்த்து அழிக்கமுற்பட்டவர்கள் மேலும் இயேசுவுக்கு அன்பில்லாமலில்லை. அதேநேரம் அவர்களுடைய தவறுகளை அவர் கடுமையாக சாடினார்; வரப்போகும் தண்டனையை அவர்களுக்கு உணர்த்தினார். திருந்தி வாழும்படி நாளும் மன்றாடினார். கிறிஸ்தவன் காட்ட வேண்டிய அன்பு உலகத்தைச்சார்ந்த சுயநலமான அன்பல்ல; சுத்த உள்ளத்தோடு தவறுகளைச் சுட்டிக்காட்டி சத்தியத்தைப் பின்பற்றும்படி ஊக்கமூட்டும் கர்த்தருக்குரிய அன்பு.
சுயநலவாதிகளுக்கு இந்த தேவஅன்பு புரியாது. அவர்கள் உலகத்தைச் சார்ந்த போலி அன்பை நாடுகிறார்கள். தங்களுடைய சொந்தத் தவறுகளை மறைத்தும், தங்களைச் சார்ந்திருப்பவர்களின் தவறுகளைக் கண்டும் காணா மலுமிருந்து பரிசேயர்களைப் போலக் காலத்தைப் போக்க முயற்சிக்கிறார்கள். இயேசுவுக்கு இங்கு இடமில்லை. சத்தியம் மட்டுமே விடுதலையாக்கும்; சத்தியமிருக்கும் இடத்தில் மட்டுமே மெய்யான அன்பிருக்கும்.