நம்மினத்தில் வாசிப்பது என்பது குறிஞ்சிப்பூ கிடைப்பதுபோல்தான் என்பதை நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்; எழுதியுமிருக்கிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல; எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். இதனால் வாசிப்பு கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்று வளர்ந்திருக்கிறதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நல்ல நூல்களைக்கூட விலைகொடுத்து வாங்கிப் படிப்பது அநேகருக்குக் கஷ்டமானதாகத் தெரிகிறது. மலிவு விலையில் கொடுத்தாலும் வாங்குகிறவர்கள் மிக அரிது. பணமில்லை என்பது வெறும் சாக்குப்போக்குத்தான். வேறு எத்தனையோ காரியங்களுக்கு அவர்கள் பணத்தை செலவிடத் தவறுவதில்லை. நூல்களை வாங்கப் பணத்தை செலவிட அநேகருக்கு மனதில்லை. அதற்குக் காரணமுண்டு. நூல்களை வாங்கினால் அதை ஒரு தடவை வாசித்தபின் என்ன செய்வது? என்ற எண்ணம் பலருக்கு இருப்பதால் அவர்கள் நூல்கள் பக்கமே போவதில்லை. ஒருதடவை வாசிக்கப்போகிற புத்தகத்தை வாங்க ஏன் பணத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. ஒரு நல்ல ஆக்கத்தை ஒரு தடவைக்கு மேல் வாசிக்கிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த நிலைமை தொடர்ந்தால் கிறிஸ்தவம் நம்மினத்தில் மிகவும் கீழடைந்த நிலையில் பலவீனமானதாக மட்டுமே இருக்கமுடியும்; அதுவும் கிறிஸ்தவ ஊழியர்கள் அறிவற்றவர்களாக, சிந்திக்கத் தெரியாதவர்களாக, முடமாகவே இருக்கப் போகிறார்கள்.
வாசிப்பு மோசமான நிலையில் இருப்பதற்கு நம்முடைய கல்வி முறை மிகமுக்கியமான காரணம் என்பதை பலதடவைகள் விளக்கியிருக்கிறேன். ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட கல்விமுறையே தொடர்ந்தும் நம்மத்தியில் இருந்து வருகிறது. குறிப்பிட்ட சில பாடங்களை மட்டும் கல்லூரிகளில் சொல்லிக்கொடுப்பதும், பரீட்சையில் மனப்பாடம் பண்ணியவற்றை அப்படியே பதிலாக ஒப்புவிப்பதுமே தொடர்கிறது. இதனால் சிந்திக்கவும், அறிவு வளரவும் நம் கல்விமுறை துணைபோவதாக இல்லை. வாசிப்பு என்பதே நம் கல்விமுறையில் துப்பரவாக இல்லை; அத்தகைய பயிற்சியளிக்கும் ஒரு கல்லூரியையும் நம்மினத்தில் காணமுடியாது. இதனால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்ன தெரியுமா? இதுபற்றி பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனியுங்கள், ‘இன்றிருக்கும் நம்முடைய கல்வி முறையினால் நூறு பக்கமுள்ள ஒரு நூலை வாசித்து அதன் உள்ளடக்கத்தையும், கருத்தையும் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களில் அரைவாசிப்பேர் கூட இல்லை. அதுவும் முனைவர் படிப்புப் படித்தவர்களில் பத்தில் ஒருவருக்குக்கூட அந்தத் திறமை இல்லை. இந்தியா முழுவதும் இதே நிலைமைதான்.’ இது ஜெயமோகன் ஒரு கல்லூரி விழாவில் சொன்னது. வாசிக்கும்போதே கவலையை உண்டாக்குவதாக இருக்கிறது இல்லையா?
அவர் தொடர்ந்து பேசியபோது, ‘இந்தியாவில், தமிழினத்தில் சாதாரணமாகவே எவரும் ஒரு கருதுகோளைப் (concept) புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் ஒரு தகவலைத் (information) தெரிந்துகொள்ள முடிகிறதே தவிர ஒரு கருதுகோளைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது. இந்தியாவிலும், நம்மினத்திலும் அறிவியல் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களில் ஏறக்குறைய ஐம்பதாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே அறிவியலாளராவதற்கான அடிப்படைத் தகுதியிருக்கிறது. அதற்குக் காரணம் கருதுகோள்களை புரிந்துகொள்ளுவதற்கான பக்குவம் பெரும்பாலானோரிடம் இல்லாததுதான். ஒன்றைத் தெரிந்துவைத்திருப்பதற்கும் புரிந்துவைத்திருப்பதற்கும் வேறுபாடிருக்கிறது. நம் கல்விமுறை எதையும் தெரிந்துவைத்திருக்க மட்டுமே நமக்குத் துணைசெய்கிறது; புரிந்துகொள்வதற்கல்ல’ என்று சொன்னார். இதைத்தான் நான் இந்த இதழ்களில் வாசிப்பு பற்றிய ஆக்கங்களில் சுட்டியிருந்தேன்.
கருதுகோள் என்பது ஒரு ஐடியா. படைப்பு என்பது ஒரு கருதுகோள். மூலபாவம் என்பது ஒரு கருதுகோள். கிருபையின் போதனைகள் என்பது ஒரு கருதுகோள். முன்குறித்தல், தெரிந்துகொள்ளுல், பரிகாரப்பலி, போபநிவாரண பலி ஆகியவை கருதுகோள்கள். இந்தக் கருதுகோள்களைப் புரிந்துகொள்வதில்தான் நம்மவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதை அவர்களால் தகவல்களாகத் அறிந்துவைத்திருக்க முடிகிறது; கிளிப்பிள்ளைபோல் அவற்றை ஒப்புவிக்க முடிகிறது. ஆனால் காரணகாரியங்களோடு அவற்றை அவர்களால் விளக்கமுடியவில்லை. உதாரணத்திற்கு மூலபாவத்தைப்பற்றி உங்களால் என்ன சொல்ல முடியும் என்று ஒருவரைக் கேட்டால், அது ஆதாமின் பாவம் அல்லது ஆரம்பப் பாவம் அல்லது அது எல்லோரையும் கெடுத்திருக்கும் பாவம் என்று மட்டுமே அவர்களுக்கு சொல்லத் தெரிகிறது. அதற்குமேல் எதையும் விளக்கமுடியாமல் தடுமாறுவார்கள். அவர்களுக்கு அதுபற்றி தெரிந்துவைத்திருக்க மட்டுமே முடிந்திருக்கிறது. அந்தக் கான்செப்ட்டை அவர்களால் புரிந்துவைத்திருக்கத் தெரியவில்லை. வெறுமனே ஒன்றைப்பற்றித் தெரிந்துவைத்திருப்பது வெறும் தகவல் மட்டுமே. அதைப் புரிந்துவைத்திருக்கிறவர்களால் மட்டுமே அதுபற்றி அறிவுபூர்வமாக விளக்கமுடியும். அதற்கு எதிர்வினையான வாதத்திற்கும் தர்க்கரீதியில் பதிலளிக்கமுடியும். அந்தப் புரிந்துவைத்திருப்பதற்கு அவசியமான கல்விமுறை நம்மத்தியில் இல்லை. நம் கல்விமுறை தகவல்களைத் தெரிந்து கொள்ளும் பயிற்சியை (collecting information) மட்டுமே அளிக்கிறது. அந்தத் தகவல்களையே பரீட்சைகளில் மாணவர்கள் ஒப்புவிக்கிறார்கள். பரீட்சை முடிந்தபின் மறந்துவிடுகிறார்கள். சிந்திக்க வைக்காத நடைமுறைக்குதவாத கல்விமுறை நம்மத்தியில் தொடர்கிறது.
தகவல்களை மட்டுமே சேகரிக்கும் மனப்பான்மை கொண்டிருக்கும் நம்மினம் சிந்திக்கக்கூடிய திறமையில்லாமல் டி.வி. செய்திகளிலும், வட்செப் செய்திகளிலும் மட்டுமே நேரத்தைச் செலுத்தி வருகிறது. கருதுகோள்களைப் புரிந்துகொள்ளக்கூடிய சிந்தனைத் திறன் அதற்கில்லாமல் இருக்கிறது. இந்தப் பலவீனத்தின் விளைவையே நாம் கிறிஸ்தவத்திலும் காண்கிறோம். உப்புச் சப்பற்ற, விலைபோகாத, சிந்தித்துப் பார்க்க அவசியமில்லாத மோகன் சி. லாசரஸ், சாம் செல்லத்துரை போன்றோரின் போலிப் பேச்சுக்களை எப்படி ஆத்துமாக்களால் கேட்டு அவர்களுக்குப் பின்னால் போகமுடிகிறது? அவர்களுக்குச் செய்திகளைக் காரணகாரியங்களுடன் சிந்தித்து வாதாடி நிராகரிக்கக்கூடிய பக்குவமில்லாததால்தான். அதுமட்டுமில்லாமல் அவர்கள் வெறும் தகவல்களைச் சிந்திக்காமல் பெற்றுக்கொள்ளக்கூடியவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். தொலைக்காட்சியிலும், செய்திப் பத்திரிகைகளிலும் வரும் அறிவுக்குப் புறம்பான செய்திகளையும் ஆராய்ந்து பார்க்காமல் நம்மவர்கள் நம்பிவிடுவதற்கும் இதுதான் காரணம். நம்மினத்தவர்களின் பிரச்சனை சிந்திக்க மறுப்பதல்ல; சிந்திக்க முடியாமல் (இயலாமல்) இருப்பதுதான்.
நம்மினத்துக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோருக்கு வேத அறிவில்லாமல் இருப்பதற்கும் இதுவரை நான் விளக்கியிருப்பவைதான் காரணம். அவர்களுக்கு வேத வசனங்களை வாசித்து அது விளக்கும் கருதுகோள்களைப் (concepts) புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய தகவல்களை மட்டுமே அவர்களால் கிரகிக்க முடிகிறது. ஒரு வசனத்தை வாசித்து அந்த வசனம் கொடுக்கும் போதனையை, அந்த வசனம் காணப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதற்கும் இதுவே காரணம். போதகர்களாக இருப்பவர்களின் நிலையும் இதுதான். அதனால்தான் வெறும் வாக்குத்தத்த வசனங்களையே திரும்பத் திரும்பச் சொல்லியோ அல்லது சொந்த அனுபவங்களைக் கதையாகச் சொல்லியோ அவர்கள் காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். நான் வருடத்தில் பலதடவைகள், கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நம்மினத்துப் போதகர்களுக்காக இறையியல் பயிற்சியளிக்கும் போதனைக்கூடங்களை நடத்தி வருகிறேன். அந்தப் பயிற்சிக்கூடங்களை நான் மேலைத்தேய நாடுகளில் நடத்தக்கூடிய பயிற்சிக்கூடங்கள் அளவுக்கு நடத்த முடியாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் அதில் கலந்துகொள்கிறவர்களில் குறிப்பிடக்கூடிய சிலரைத்தவிர பெரும்பாலானோர் வாசிப்புப் பயிற்சியை ஒருபோதுமே வாழ்க்கையில் கொண்டிராதவர்கள். இருந்தும் அவர்களில் அநேகர் பட்டப்படிப்பு படித்தவர்கள். வாசிப்புப் பயிற்சியில்லாததால் அவர்களின் சிந்தனைத் திறன் வளராமல் குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீர்போல இருந்து வருகிறது. எத்தனையோ தடவை இவர்கள் என்ன போதனையை ஓய்வுநாளில் கொடுத்து வருகிறார்கள் என்று நான் எண்ணிப் பார்த்திருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் கருதுகோள்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுடைய சிந்தனைத் திறன் வளராமல் இருப்பதால்தான்.
கடந்த வருடம் ஆத்மீக ஆலோசனை கேட்டு என்னிடம் வந்த ஒரு வாலிபனுக்கு 150 பக்கமுள்ள ஒரு சிறு நூலை வாசிக்கும்படிச் சொன்னேன். அதற்கு இரண்டு மாத தவனையும் கொடுத்தேன். இரண்டு மாதங்களுக்குப் பின் சந்தித்தபோது நூலை அரைவாசிப் பகுதிகூட வாசிக்காமல் வந்து நின்றான். ஏன் என்று கேட்டால், பல வேலைகள் இருந்தன என்று சாக்குப்போக்குச் சொன்னான். உண்மையில் அவனிடம் அந்தப் பலவீனம் இருந்தது தெரிந்தே நூலை வாசித்துவிட்டு வரும்படிச் சொல்லியிருந்தேன். அவன் என் எண்ணத்தை உறுதிப்படுதியிருந்தான். பெரும்பாலானோர் இப்படி நடந்துகொள்ளுவதற்கு அவர்களுடைய படிப்பின் பலவீனம் பெருங்காரணம். வாசிப்பு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இன்று இல்லாமலிருக்கிறது. இதனால் நேரத்தைப் பயன்படுத்தி ஓரிடத்தில் இருந்து நூலில் கவனம் செலுத்த அவசியமான சுயகட்டுப்பாடும், ஒழுங்குமுறையும் எவரிடமும் இல்லை. சுயகட்டுப்பாடில்லாம் வளர்ந்த முறை அவர்கள் தங்களுடைய காரியத்தைச் சாதித்துக்கொள்ளுவதற்காக அவர்களைக் குறுக்கு வழியில் போகச்செய்கிறது. உதாரணத்திற்கு, என்னிடம் சிலர் இணையதளத்தில் பொறுக்கியெடுத்த சில ஆக்கங்களையும், வீடியோ செய்திகளையும் அனுப்பிவைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இதற்குக் காரணம் எனக்குப் பிறகுதான் தெரியவந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில், அவர்களால் நேரங்கொடுத்து அவற்றை வாசிக்க அல்லது கேட்க முடியவில்லை. இரண்டாவது, அவற்றை வாசித்து அல்லது கேட்டு விளங்கிக்கொள்ளக்கூடிய பக்குவம் அவர்களுக்கு இருக்கவில்லை. அதனால் அந்த வேலையை என்னைச் செய்யவைத்து என் கருத்துக்களை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். இது சிரிப்பை ஏற்படுத்தினாலும், மிகவும் வருத்தப்பட வேண்டிய செயல். இப்படிச் செய்பவர்களெல்லாம் இணைய தளத்திலும், வேறு இடங்களிலும் இருந்து உழைப்பில்லாமல் பெற்றவற்றையே தங்களுடைய கல்லூரி, பல்கலைக்கழக பரீட்சைகளில் எழுதியிருப்பார்கள். இந்தப் பலவீனமே இன்றைக்கு நம்மினத்தாரை சிந்தித்து ஆராய்ந்து தெளிவான வேதபூர்வமான முடிவெடுக்கும் பக்குவமில்லாதவர்களாக இருக்க வைத்திருக்கிறது.
இன்று சீர்திருத்த கிறிஸ்தவம் நம்மினத்தில் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. அது நல்லதுதான். ஆனால் இங்கே ஆபத்துமிருக்கிறது. சீர்திருத்த கிறிஸ்தவம் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் பிரிவுகளைப்போல உணர்ச்சிக்கு மட்டும் தாளம்போட்டு சுகமளிப்பு வித்தைகளைச் செய்து மாய்மாலம் செய்துவரும் கிறிஸ்தவம் அல்ல. அது வேதத்தை அடிப்படையாகக் கொண்டது; வேதவழி காட்டுவது. சீர்திருத்த கிறிஸ்தவம் வேதப் பிரசங்கத்திற்கும் வேத போதனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. வேதத்தின் மூலம் மட்டுமே கர்த்தர் நம்மோடு பேசி வழிகாட்டுகிறார் என்று உறுதியாக நம்புகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் வேதப்பிரசங்கத்தைக் கேட்பதிலும், அதில் நல்லறிவு பெறுவதிலும் அன்றாடம் வளரவேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. வேதத்தைத் தவிர கிருபையின் போதனைகளையும், விசுவாச அறிக்கையையும், வினாவிடைப்போதனைகளையும் பயன்படுத்தி ஆத்துமாக்களை வளர்த்தெடுப்பதில் வைராக்கியம் காட்டுகிறது. சீர்திருத்தவாதிகள் மற்றும் பியூரிட்டன் பெரியவர்கள் அவர்களுக்குப் பின்வந்துள்ள சீர்திருத்தப் பெரியவர்களின் எழுத்துக்களை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்து வார்த்தையில் ஞானத்திலும், கிருபையிலும் விசுவாசிகள் வளர வழிகாட்டுகிறது. இத்தகைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, அதை வாசித்து, அதன் போதனைகளை சிந்தித்து ஆராய்ந்து விசுவாசித்து நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தி வளரும் கிறிஸ்தவமான சீர்திருத்த கிறிஸ்தவம் வாசிப்பையே பழக்கப்படுத்திக்கொள்ளாமல் சிந்திக்க அவசியமான எதற்கும் வாழ்க்கையில் இடங்கொடுக்காமல், வெறும் தகவல்களை மட்டும் நம்பி ஏற்று ஏமாந்து வாழும் இனத்தில் துளிர்விட்டு, வளர்ந்து, செடியாகி, மரமாகி, கனிகளைத் தந்து செழிப்பது எப்படி சாத்தியமாகும்? அன்றாடம் வாசிப்பதையும், சிந்திப்பதையும், எதையும் புரிந்துகொள்ளுவதையும் கடமையாகக் கொள்ளாமல் இருக்கும் இனத்தில் சீர்திருத்த கிறிஸ்தவம் வளரத்தான் முடியுமா? வாசிக்கிறவர்களும், சிந்திக்கிறவர்களும், போதனைகளைப் புரிந்துகொள்ளுபவர்களும் வளருவதற்கான உரம்போடப்பட்டு, தண்ணீரூற்றப்பட்டு பதப்படுத்தப்பட்ட சமுதாயம் ஏற்பட்டால் மட்டுமே அது முடியும்! இது பரிசுத்த ஆவியானவர் செய்கிற காரியம்; வெறும் நூல்களும், வாசிப்பும் செய்துவிட முடியாது என்று யாராவது எகத்தாளமாகக் கேட்கலாம். அதற்கு நானளிக்கும் பதில் என்ன தெரியுமா? சத்திய வார்த்தையைப் பயன்படுத்தி மறுபிறப்பை அளிக்கின்ற பரிசுத்த ஆவியானவர் வார்த்தைக்கும், வாசிப்புக்கும் வாழ்க்கையில் இடங்கொடுக்காத கூட்டத்தின் பக்கத்தில்கூட வரமாட்டார் என்பதுதான். வார்த்தையின் அடிப்படையிலான வாசிப்பில்லாத இனத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் முளைப்பதற்கு வழியே இல்லை. தண்ணீரை உதறித்தள்ளும் நிலத்தைப் பார்த்திருக்கிறீர்களா? தண்ணீர் தன்னுள் போகமுடியாதபடி தேங்கி நிற்கும் நிலம் இருக்கத்தான் செய்கிறது. அத்தகைய நிலத்தில் எந்த விவசாயியும் எதையும் விதைக்க மாட்டான்; விதைக்கவும் முடியாது. ஏனெனில் விதைகள் தேங்கி நிற்கும் தண்ணீரில் அழிந்துவிடும். நல்ல நிலத்தில் தண்ணீர் உள்ளே போய் சுற்றியிருக்கும் இடத்தை பதப்படுத்தி போடப்படும் விதை வளர வசதிசெய்யும். அதுபோலத்தான் நூல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்து, வாசித்தவற்றை சிந்தித்துப் புரிந்துகொள்ளுகிறவர்களும். அவர்களே ஆத்மீக வளர்ச்சியடைகிறார்கள்; அறிவில் வளர்கிறார்கள்; சீர்திருத்த சிந்தனையாளர்களாகிறார்கள்; சமுதாயத்தில் கர்த்தருக்காக சாதிக்கிறார்கள். வாசிப்பில்லாத, சிந்திக்கத் தெரியாத சமுதாயம் வறண்டுபோன பாலைவனம் மட்டுமே.
மேலே நாம் பார்த்து வந்திருக்கும் பலவீனத்தைப் போக்குவதற்கு என்ன வழி? முக்கியமாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்தப் பலவீனம் போக என்ன செய்யவேண்டும்? அதுவும் சீர்திருத்த கிறிஸ்தவ சத்தியத்தின் பாதையில் போக ஆரம்பித்திருப்பவர்கள் செய்யவேண்டியதென்ன?
1. வாசிக்கும் பயிற்சியை உடனடியாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். போதகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது தவிர்க்க முடியாத பயிற்சி. இதுவரை எதையும் வாசித்திராவிட்டாலும், அதில்லாமல் ஆத்மீக வாழ்க்கையிலும், நடைமுறையிலும் வளர முடியாது, உயரமுடியாது என்பதை உணர்ந்து, வாசிப்பது அவசியம் என்ற வைராக்கியத்தோடு வாசிக்க ஆரம்பிக்கவேண்டும். எத்தனையோ உடல் உபாதைகளுக்கு நாம் மருந்துகளும், வைட்டமின்களும் பயன்படுத்துவதில்லையா? நம் மூளைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தைத் தவிர்த்துக்கொள்ள வாசிப்பாகிய மருந்து அவசியம் என்பதை உணருங்கள்; வாசிப்புப் பயிற்சியை உடனடியாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பணமில்லாமல் நூல்கள் வாங்கமுடியாது என்பது உண்மையானாலும், கிறிஸ்தவ வாழ்க்கையில் வளரவும், சிறக்கவும் அவை அவசியம், அவையில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கையில் பலவீனமாகிவிடுவோம் என்பதை உணர்ந்து பணங்கொடுத்து நூல்களைப் பெற்று வாசிக்கும் பயிற்சியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
2. நல்ல நூல்களை மட்டுமே தேடித் தெரிந்தெடுத்து வாங்கவேண்டும். இதைச் செய்ய நமக்கு உதவி வேண்டும். நூல்கள் பற்றி அறிந்திருக்காதவர்களால் நல்ல நூல்களைத் தெரிவு செய்யமுடியாது. திருமறைத்தீப இதழ்களை வாசித்து வருகிறவர்களுக்கு அதில் பதில் கிடைத்துவிடும். வாங்குகிற எந்த நூலும், வாசிக்கின்ற எந்த நூலும் ஆத்மீக வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கவேண்டும். மோசமான உணவும், நஞ்சும் நம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்; அதுபோல்தான் மோசமான நூல்களும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும்.
3. நல்ல நூல்களை ஒரு தடவைக்கு மேல் பொறுமையோடு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். வாசிப்பதை நீங்கள் வழக்கமாகக் கொள்ளாதவராக இருந்தால் உங்கள் மனம் தேங்கிப்போய் சிந்திக்க முடியாததாகவே இருந்து வந்திருக்கும். அதற்கு சிந்திக்கும்படி பயிற்சியளிக்கவேண்டும். அது உடனடியாக நடந்துவிடாது. அதனால் எந்த நூலையும் நேரமெடுத்து பொறுமையோடு சில தடவைகள் வாசியுங்கள். ஆரம்பத்தில் கஷ்டமானதாக இருந்தாலும் போகப்போக இது பழக்கமாகிவிடும். எப்படி நோய் தீருவதற்காக தவறாமல் மாத்திரைகளைப் போட்டுக்கொள்ளுவோமோ அதுபோல இதை நீங்கள் செய்யவேண்டும். வேறு எத்தனையோ விஷயங்கள் இதைச் செய்வதற்கு குறுக்கே வரலாம். இருந்தபோதும் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இந்தப் பயிற்சிக்கு உங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
4. வாசித்த விஷயங்களை மனதில் அசைபோட்டு சிந்தியுங்கள். இது சிந்திக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள உதவும். வாசிக்கும்போதே முக்கியமான வசனங்கள், பத்திகளைக் குறித்து வைத்துக்கொள்ளுவதும் அவசியம். அவற்றை மீண்டும் மீண்டும் வாசித்து சிந்திக்கவேண்டும். வாசித்தவற்றைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். இது பலதடவை நூல்களை வாசித்தால் மட்டுமே முடியும். எதை வாசித்தாலும் அவற்றைப்பற்றித் தீவிரமாக சிந்தித்து, மனதில் அசைபோட்டுப் பார்த்து அவற்றை சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று ஆராயவேண்டும். புரிந்துகொள்ளுவதற்கும், தெரிந்து வைத்திருப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது என்று கவனித்திருக்கிறோம். ஆகவே, வாசித்தவற்றை நீங்களே உங்களுடைய சொந்த வசனத்தில் சுருக்கமாக எழுதிப் பார்க்கவேண்டும். இதைச் செய்யும்போது நூலை ஒரு பக்கம் மூடி வைத்துவிட்டு செய்யவேண்டும். நீங்கள் இப்படி எழுதுகிறபோது உங்களுடைய மனம் சிந்திக்கிறது. அப்படி எழுதியவற்றை மறுபடியும் வாசித்து நூலின் போதனையை, கருதுகோள்களைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். இதற்கு நூலையோ அதன் முக்கியமான பகுதிகளையோ மீண்டும் வாசிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். நூலின் முக்கிய கருதுகோளையும், அதை நூலாசிரியர் விளக்கியிருக்கும் முறைகளையும் உங்களால் துல்லியமாக சுருக்கமாக (நூலைத் திறந்து பார்க்காமல்) எழுதிவைத்துக்கொள்ள முடியுமானால் நூலை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதை நீங்கள் முயற்சி செய்து, அவசியமான கடமையாக எண்ணி பொறுப்புணர்வோடு செய்யவேண்டும்.
படித்தவற்றைப் புரிந்துகொள்ளுவதற்கு நீங்கள் இன்னொன்றையும் செய்யலாம். நூலின் முக்கிய கருதுகோளை ஒரு தலைப்பாக எழுதி, அந்தத் தலைப்பின் அடிப்படையில் நூல் விளக்கியிருக்கும் போதனையை நீங்களே ஒரு சிறு கட்டுரையாக எழுதலாம். இதைச் செய்யும்போது நூலைத் திருப்பிப் பார்க்கக்கூடாது. இப்படி எழுதுகிறபோது உங்கள் மனம் வேலை செய்வது மட்டுமல்லாமல், நீங்கள் உங்களுடைய சொந்தத் திறமையைப் பயன்படுத்தி நூலின் போதனையை உங்கள் பாணியில் எழுதிவைத்துக்கொள்ளலாம். அதை முடித்த பிறகு எழுதியதை வாசித்துப் பார்த்து நூலோடு ஒப்பிட்டு நூலின் போதனையை சரிவரப் புரிந்துகொண்டிருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். இத்தகைய பயிற்சி உங்களுடைய வாசிக்கும் பயிற்சியை வளர்ப்பது மட்டுமல்லாமல் உங்களுடைய மனதை அதிகம் உழைக்கவைத்து சிந்திக்கச் செய்யும்.
5. நூல்களை வாசித்து அதுபற்றிச் சிந்திக்கின்ற பழக்கமில்லாதவர்களுக்கு இந்தப் பயிற்சியில் வெற்றி அடைவதற்கு சில காலம் எடுக்கும். சிந்திக்காமல் துருப்பிடித்துப் போயிருக்கும் மனதை சிந்திக்கப்பழக்கப்படுத்துவது என்பது ஓரிரு நாட்களில் நிறைவேறுகிற காரியமல்ல. துருப்பிடித்துப் போயிருக்கும் மனம், துருப்பிடித்திருக்கும் கார் இயந்திரத்தைப்போல உடனடியாக வேலைசெய்ய ஒத்துழைக்காது. இருந்தாலும் பிடிவாதமாக நூல் வாசிப்பில் ஈடுபட்டு மனதிற்கு நீங்கள் வேலை கொடுக்கவேண்டும். துருப்பிடித்து ஓடாமல் இருந்திருக்கும் இயந்திரத்திற்கு எண்ணெய் போட்டு அதை இயங்கச் செய்வதுபோலத்தான் ந¦ங்கள் நூலை வாசிப்பதும், அதன் போதனையைப் புரிந்துகொள்ள ஆழமாக சிந்திப்பதும். எண்ணெய் போடப்பட்டு ஆரம்பத்தில் கரடு முரடான சத்தத்துடன் ஓட ஆரம்பித்திருக்கும் இயந்திரம் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சத்தமில்லாமல் காற்றில் மிதப்பதுபோல ஓடுகிறது இல்லையா? அதுபோல வாசிப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு வரும் உங்கள் மனமும் மூளையும் போகப் போக சிந்திக்கும் திறனை அடைந்து எதையும் புரிந்துகொள்ளுகின்ற பக்குவத்தையும் பெறும்.