இதழ் 4, 2005
பரம்பரியத்திற்கும், சம்பிரதாயங்களுக்கும் மனிதர்கள் கொடுக்கும் மரியாதை தமிழினத்தில் அதிகம். தாத்தா காலத்தில் இருந்து வருகிற வழக்கமென்றும், நூறுவருட பாரம்பரியமென்றும் சொல்லி பாரம்பரியத்தில் இன்பம் காண்பார்கள் நம்மினத்தவர்கள். பாரம்பரியமாக நடந்து வருகிற ஒரு காரியம் நல்லதா? கெட்டதா? என்ற வித்தியாசம் பார்க்காமல் அது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிற ஒரு காரியம் என்பதற்காக அதற்கு மரியாதை தந்து சிந்தனையில்லாமல் ஆதரித்து வருகிறது தமிழினம். அதை ஒழித்துவிட்டால் எத்தனையோ நன்மைகள் வருகின்ற வாய்ப்புகள் இருக்கின்றபோதும், அது பாரம்பரியமாக இருந்து வருகிற ஒரே காரணத்துக்காக வரப்போகிற நன்மைகளையும் இழக்கத் தயாராக இருக்கும் கண்மூடித்தனமான வழக்கத்தைப் பின்பற்றுகிறது நமது சமுதாயம். பாரம்பரியத்தோடு சேர்ந்தவைதான் சடங்குகளும், சம்பிரதாயங்களும். நம் மக்கள் தொடர்ந்தும் இருட்டில் இருந்து இளைய சமுதாயம் வளர வழியில்லாமல் இருப்பதற்கு இந்தப் பாரம்பரியமும், சடங்குகளும், சம்பிரதாயமும் பெரிய இடையூராக இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கு முன்பு நான் புறஜாதிக்காரனாக வாழ்ந்த காலத்தில் சிறு வயதில் எங்களுடைய சாதி வழக்கத்துக்கு மாறாக நான் மீசை வைக்கப்போய் என்னுடைய தகப்பனாருக்கு மாரடைப்பே வந்தது பழைய கதை. ஒன்று நல்லதா? கெட்டதா? அதால் நன்மையுண்டா? கேடு வருமா? என்றெல்லாம் சிந்திக்காமல் பாரம்பரியமாக செய்து வருகிறதை ஒருபோதும் மாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் கிணற்றுத் தவளையாக வாழ்ந்து வருகிறார்கள் நம்மக்கள்.
நல்ல பாரம்பரியங்களைத் தொடர்வதில் என்ன தவறு? என்று யாராவது கேட்கலாம். நல்ல கேள்விதான். கேட்கிறவர்கள் ஒருமுறை கருத்தோடு சிந்தித்துப் பார்த்து நமது பாரம்பரியங்களில் எத்தனை நல்லவை என்பதை பட்டியல் போட்டு யாராவது சொல்லுவார்களா? நமது பாரம்பரியங்களில் நன்மை இருக்கிறதா? என்றாவது நாம் எப்போதாவது சிந்தித்துத்தான் பார்த்திருக்கிறோமா? பாரம்பரியமாக இருந்து வருகிற காரியம் என்ற உடனேயே நாம் அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்பதற்கே நடுங்கவல்லவா செய்கிறோம். நல்லவையும், பயனுள்ளவையும் நிலைத்திருக்க வேண்டியது அவசியந்தான். பயனில்லாதவற்றை அவை காலங்காலமாக இருந்துவருகின்றன என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து பின்பற்றுவதில் என்ன நன்மையிருக்கிறது? கர்த்தருடைய வேதத்தோடு சம்பந்தமில்லாத எந்தப் பாரம்பரியமும், அது எவர் மூலமாக வந்திருந்தாலும் கடப்பாறை வைத்து இடித்துத் தள்ளவேண்டும். இல்லாவிட்டால் அது கிறிஸ்தவ சமுதாயத்தையே சீரழித்து விடும்; ஜீவனில்லாததாக்கிவிடும்.
கிறிஸ்தவர்களும் பாரம்பரியமும்
கர்த்தரை அறியாதவர்கள் மத்தியில் இருந்து வருகிற இந்தப் பாரம்பரியக் கொடுமை கிறிஸ்தவத்தைப் பாதிக்காமல் இல்லை. தமிழினத்தில் கிறிஸ்தவம் புறஜாதி வழக்கங்களையும், பண்பாட்டையும் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற கொடுமையை நாம் ஏற்கனவே பத்திரிகையில் விளக்கியிருக்கிறோம். கிறிஸ்துவுக்கு அடுக்காத இந்தப் புறஜாதி வழக்கங்களும், பண்பாடும் தொடர்கின்ற கொடுமை போதாதென்று பாரம்பரியம் என்ற பெயரில் யாரோ எப்போதோ ஏற்படுத்தி வைத்துள்ள வழிமுறைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி ஆத்மீக விருத்திக்கே வழியற்ற நிலையில் தமிழினத்தின் சபைகள் இருந்து வருகின்றன. ஆத்துமவிருத்தியைவிட இந்தப் பாரம்பரியங்களைத் தொடர்வதிலேயே இந்தச் சபைகள் அதிக அக்கறை காட்டுகின்றன. இந்தச் சபைகள் ஆத்துமவிருத்தியில்லாது, ஜீவனில்லாது இன்றிருப்பதற்கு பாரம்பரியமே பெரிய இடையூராக இருந்து வருகின்றது.
பியூரிட்டன் பெரியவர்களின் காலமான பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில், இங்கிலாந்து சபை, ஜோன் ஹூப்பர் (John Hooper) என்ற பியூரிட்டன் பெரியவருக்குத் திருச்சபையில் போதகர் பதவி அளிக்க முன்வந்தது. ஹூப்பர் அதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருந்தார். அத்தோடு, இங்கிலாந்து சபை ஹூப்பருக்கு வேறு சில நிபந்தனைகளையும் விதித்தது. அதாவது போதகர் பதவியில் இருக்கின்றபோது அவர் அதற்கான சில வெளிப்புற சாதனங்களைப் பின்பற்றவேண்டும் என்று இங்கிலாந்து சபை வற்புறுத்தியது. ஹூப்பர் அணிந்துகொள்ள வேண்டிய அங்கி மற்றும் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளே அவை. நம்மவர்கள் சிந்திக்காமலேயே இதற்கெல்லாம் உடனே தலையாட்டி விடுவார்கள். ஆனால், ஹூப்பர் அப்படிச் செய்யவில்லை. அவர் பின்பற்ற வேண்டுமென்று இங்கிலாந்து சபை எதிர்பார்த்த காரியங்களுக்கும் வேதபோதனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருந்ததைக் கவனித்தார். தொடர்பில்லாதது மட்டுமல்ல வேதரீதியில் போதகப் பணியைச் செய்வதற்கு அவை பேரிடையூறு என்பதையும் உணர்ந்தார். அவருக்கு அது வெறும் அங்கிப் பிரச்சினையாகத் தெரியவில்லை. அதனால் ஹூப்பர் அவற்றைப் பின்பற்ற மறுத்தார். திருச்சபையையும், அரசையும் எதிர்த்து சிறைத்தண்டனையையும், மரணத்தையும் வரவேற்றார். பாரம்பரியம் அந்தக் காலத்தில் எந்தளவுக்குத் திருச்சபையைக் கொலைகாரக்கூட்டமாக வைத்திருந்தது என்பதை சபை வரலாற்றை வாசித்தால் தெரிந்துகொள்ளலாம்.
பாரம்பரியத்தைப் பாரம்பரியம் என்பதற்காக ஏற்றுக்கொள்ள மறுத்து வேத போதனைகளின்படி கர்த்தருக்கு மகிமையளிப்பவைகளை மட்டுமே திருச்சபைகள் பின்பற்றவேண்டும் என்ற வைராக்கியத்தோடு உயிரையும் பணயம் வைத்து ஹூப்பர் போன்றவர்கள் உழைத்ததால் தான் இன்றைக்கு நாம் ஓரளவுக்காவது மெய்க்கிறிஸ்தவத்தை தமிழினத்தில் இங்கும் அங்குமாகப் பார்க்க முடிகிறது. இந்தப் பாரம்பரியப் பேய் நம்மை மோசம் செய்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நமது சீர்திருத்தப் பெரியவர்கள் 1689 விசுவாச அறிக்கையையும், வழிபாட்டு முறைக்கான கோட்பாடுகளையும் எழுதி வைத்தார்கள். விசுவாச அறிக்கையில் 21, 22 ஆகிய அதிகாரங்கள் மிக முக்கியமானவை. கிறிஸ்தவ சுதந்திரத்தையும், மனச்சாட்சியின் சுதந்திரத்தையும் பற்றியது 21வது அதிகாரம். அந்த அதிகாரத்தில் பின்வரும் வாசகங்களை நமது பெரியோர்கள் எழுதி வைத்தார்கள்: “கடவுள் மட்டுமே மனச்சாட்சியின் ஆண்டவராக இருக்கிறார். அவருடைய வார்த்தைக்கு எதிரான, அதில் அடங்கியிராத, சாதாரண மனிதர்களின் எந்தப் போதனைகளின் நிர்ப்பந்தத்திற்கும் நாம் உட்படவோ, அவற்றிற்குக் கீழ்ப்படியவோ அவசியமற்று அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்தும் நமது மனச்சாட்சிக்கு அவர் விடுதலை அளித்துள்ளார். அத்தகைய போதனைகளை ஏற்று அந்நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப்படுவது மெய்யான மனச்சாட்சியின் சுதந்திரத்தைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். மனிதர்கள் சக மனிதர்களை கண்மூடித்தனமாக, கேள்வி முறையற்ற கீழ்ப்படிவிற்கு உட்படுத்த முனைவது நியாயமற்றதும், மெய்யான கிறிஸ்தவ சுதந்திரத்தை அழிக்கும் செயலுமாகும்.”
மேலே நாம் பார்த்த வாசகங்கள் அருமையானவை. சீர்திருத்தவாத பெரியவர்கள் மனிதர்களின் வேதத்திற்கு விரோதமான போக்குகளுக்கும், வழிமுறைகளுக்கும் இடங்கொடுக்காமல் நாம் வாழ்வதற்காக நம்மை எச்சரித்து இந்தப் பொன்னான வாசகங்களை எழுதி வைத்தார்கள். இதைத் தெளிவாக விளங்கிக்கொள்ளுவது அவசியம். இவை கடவுளுக்கும், மற்றவர்களுக்கும் நாம் கீழ்ப்படிவதைத் தடைசெய்யவில்லை. கர்த்தருக்குக் கீழ்ப்படிகிற நாம் அவருடைய வார்த்தையின்படி சபைகளுக்கும், போதகர்களுக்கும் கீழ்ப்படிய வேண்டியவர்களாக இருக்கிறோம். அதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனால், இந்த வாசகங்கள் நாம் கர்த்தரின் வார்த்தைக்கு விரோதமான அல்லது அவருடைய வார்த்தையோடு தொடர்பில்லாத வெறும் போலிப் பாரம்பரியங்களும், சடங்குகளும், அவை எவர் மூலமாகவும், எங்கிருந்து வந்தாலும் அவற்றிற்கு நாம் கீழ்ப்படியக்கூடாது என்பதையே விளக்குகின்றன. நமது மனச்சாட்சி கர்த்தருக்கும், அவருடைய வார்த்தைக்கும் மட்டுமே கட்டுப்பட வேண்டும். அப்படிக் கட்டுப்படுகிறவிதமாக நமது மனச்சாட்சி இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. இதை மீறி சபையினுடையதும், பிஷப்புக்களினுடையதும் வேதத் தொடர்பில்லாததும், வேத விரோதமானதுமான நடவடிக்கைகளுக்கு நமது மனச்சாட்சி கீழ்ப்படியக்கூடாது. அப்படிக் கீழ்ப்படிவது நமது கிறிஸ்தவ சுதந்திரத்தை பிசாசுக்கு அடகு வைக்கிற செயலாகும். அது மட்டுமல்லாமல் கர்த்தரை அவமதிக்கின்ற செயலுமாகும். இதையே மேலே நாம் பார்த்த வாசகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கிறிஸ்தவ சுதந்திரம் பற்றிய இந்தப் போதனைகளின் அடிப்படையிலேயே அடுத்த அதிகாரம் கர்த்தரின் வழிபாடு பற்றிய போதனைகளையும் தருகிறது.
தமிழ் கிறிஸ்தவர்களைப் பாரம்பரியம் படுத்தும் பாடு
மேலே நாம் பார்த்த வேதபோதனைகளை மீறி இன்றைக்குப் பாரம்பரியத்தைப் பின்பற்றி யாரோ மனிதர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள் என்பதற்காக தமிழ்த் திருச்சபைகளில் போதகப் பணி செய்கிறவர்கள் தங்களை பிஷப்புக்கள் என்று அழைத்துக் கொண்டு, கர்த்தருக்கு விரோதமான கத்தோலிக்க மதகுருக்களைப் போன்ற அங்கிகளை அணிந்துகொண்டு சபைகளில் ஆத்துமாக்களைவிட மிக உயரமான நிலையில் இருந்து பாரம்பரியத்துக்கும், சடங்குகளுக்கும் பணி செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மனந்திரும்புதலையும், இரட்சிப்பின் அனுபவத்தையும் அடையவில்லை என்பது நாடறிந்த உண்மை. மிகுந்திருப்பவர்களுக்கு வேதமே தெரியாது. இவர்கள் அரசரடி இறையியல் (நிந்தனை) கல்லூரியிலும், சென்னை ஹிந்துஸ்தான் வேதாகமக் கல்லூரியிலும், எஸ்றா சற்குணத்தின் சென்னை இறையியல் கல்லூரியிலும், யூனியன் பிபிலிக்கள் செமினரியிலும் இறை நிந்தனைசெய்யக் கற்றுக்கொண்டு பாரம்பரியத் திருச்சபைகளை அலங்கரித்து வருகிறார்கள். (மேற்குறிப்பிட்ட இறையியல் கல்லூரிகள் எல்லாம் வேதத்தை முழுமையாக நம்புவதில்லை.) பிரசங்க ஊழியத்துக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல் வெறும் சடங்குகளை மட்டும் சபைகளில் தொடர்ந்து நடத்தி வைத்து இவர்கள் ஆத்துமாக்களை இருட்டில் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கும் கிறிஸ்துவுக்கு எதிரிகளான பரிசேயர்களுக்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை. நவீன பரிசேயர்களான இந்தப் பிஷப்புக்கள் வேதவிரோதிகள். சிந்திக்க மறுத்து இவர்களைப் பின்பற்றி வருகிற எவரும் மெய்விசுவாசிகளாக இருக்க முடியாது.
முழங்காலிட்டு ஜெபிப்பதும், சிலுவைக் குறியிடுவதும், பொறுக்கியெடுத்த சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப உணர்ச்சியே இல்லாது ஜெபம் என்ற பெயரில் சபைகளில் சொல்லுவதும், எதற்கெடுத்தாலும் “ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்” என்று மந்திரம் ஓதுவது போல் அடிக்கடி சொல்லுவதும், ஆல்டரைப் பார்த்து வணங்குவதும், சடங்குபோல் முழு இரவு ஜெபக்கூட்டம் நடத்துவதும், மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிப்பதும், வெள்ளை நிற உடை அணிவதும், லெந்து நாட்களில் உபவாசம் செய்து அக்காலங்களில் மீசை தாடியை சிரைக்காமலும், அசைவ உணவுகளை உண்ணாமலும், பெண்கள் தலையில் பூ வைக்காமலும், இக்காலங்களில் திருமணம் போன்ற வேறு நல்ல காரியங்களைச் செய்யாமலும் இருப்பது போன்ற அநேக சடங்குகள் பாரம்பரியமாக திருச்சபையாரை ஆட்டிப்படைத்து வருகின்றன. குருத்தோலை ஞாயிறு தினத்தில் தென்னை மர ஓலையில் செய்யப்பட்ட சிலுவையொன்றை சபைக்கு வருகிற எல்லோருக்கும் கொடுப்பதும் வழக்கம். அதைப் பெற்றுக்கொள்கிறவர்கள் வீட்டில் அதைப் பத்திரமாக பாதுகாத்து வைப்பார்கள். இதன் மூலம் வாழ்க்கையில் நன்மைகள் நிகழும் என்பது அவர்களின் நம்பிக்கை.
தஞ்சாவூரில் சி.எஸ்.ஐ. சபைகளில் வருடத்தில் இரண்டு நாட்கள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் திருவிருந்து கொடுத்து வருகிறார்கள் என்று அறிந்தேன். இப்படிச் செய்யும்படி கர்த்தர் வேதத்தில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. சடங்காக இந்தச் செயல் பாரம்பரியமாக இங்கே நடந்து வருகின்றது. அத்தோடு பிறந்த பிள்ளைக்கு ஞானஸ்நானம் கொடுப்பதோடு அப்பிள்ளைக்கு ஒரு ஞானத்தாயையும், ஞானத் தகப்பனையும் நியமிப்பதும் சடங்காக நம்மத்தியில் இருந்து வருகிறது. இந்த வழக்கம் கர்த்தருக்கு விரோதியான கத்தோலிக்க மதம் ஏற்படுத்திய சடங்கு என்ற அறிவு கொஞ்சமும் இல்லாமல் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளுகிறவர்களும், சபைகளும் இவற்றைப் பின்பற்றி வருகின்ற கொடுமையை நம்மினத்தில் தொடர்ந்து பார்க்கிறோம். இதெல்லாம் போதாதென்று குடித்து வெறித்து தன் நிலையை உணராமல் சபைக்கு வருகிறவர்களுக்குத் திருவிருந்து கொடுக்கிற திருகுதாலம் பல சபைகளில் நடந்து வருகின்றது. பாரம்பரிய, பெயர் கிறிஸ்தவ சபைகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
இன்னும் சொல்லப் போனால் சிலுவையை சுமப்பதும், அதை மதித்து ஆராதிப்பதும், கிறிஸ்துமஸ் பண்டிகையையும், லெந்து காலத்தையும், உயிர்த்தெழுந்த நாளையும் பெரிதுபடுத்தி அவற்றை விழாபோலக் கொண்டாடுவதும் நம்மினத்தில் சகஜம். இவை சபைகளில் பாரம்பரியமாக நடந்துவருகிற நிகழ்ச்சிகளாக மாறி வெறும் சடங்குகளாக சபைகளை அலங்கரித்து வருகின்றன. சிலுவையை வைத்து அநேகர் செய்து வருகிற கொடுமைக்கு எல்லையே இல்லை. அதற்கு மாலை போட்டு வைப்பதில் இருந்து தோலில் சுமந்து நடப்பதுவரை அநேக வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. சிலுவையைத் தோளில் சுமந்து தெருவில் நடப்பதால் ஆத்மீக விருத்தி அடைந்த மனிதன் உலகத்தில் இருந்ததில்லை. அதைச் சுமப்பது ஆத்மீக விருத்திக்கு அடையாளம் என்று கர்த்தர் ஒருபோதும் வேதத்தில் சொன்னதில்லை. மாறாக அப்படி சிலுவையை வழிபடுவது தன்னை இகழ்கின்றதும், நிராகரிக்கின்றதுமான செயலாகவே அவர் கருதுகிறார். பத்துக்கட்டளைகளில் முதல் மூன்றும் மனிதன் சிலுவையை வழிபடுவதைத் தடை செய்கின்றன. பாரம்பரியத்துக்கு அடிமைப்பட்டுப்போன மனிதர்கள் ஆத்தும விருத்தியில்லாமல் இன்று சிலுவையைக் கர்த்தராக வணங்கி வருகிறார்கள்.
பழைய ஏற்பாட்டு யூதர்கள் கர்த்தருக்கு விரோதமாக சிலை ஏற்படுத்தியதும் இதுவும் ஒரேவிதமானதே. மோசே வனாந்தரத்தில் யூதர்களை விஷப்பாம்புகளில் இருந்து காப்பாற்ற ஏற்படுத்திய வெண்கலப் பாம்பை பின்பு இஸ்ரவேலர் கடவுளாகப் பயன்படுத்தி அதற்கு தெய்வீக ஆராதனை செய்து வந்தார்கள். அது பொறுக்காமல் எசேக்கியா தான் அரசனானவுடன் நாட்டில் வழிபாட்டுச் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக முதலில் அந்த வெண்கலப் பாம்பை சிதறும்படி உடைத்தெறிந்தான். இன்று சிலுவை அந்த வெண்கலப் பாம்புபோல் ஆத்துமாக்களுக்குக் கர்த்தராக இருந்து வருகின்ற கொடுமையை கர்த்தர் சகித்துக்கொள்ள மாட்டார்.
இவை மட்டுமா? யாருக்காவது காலில் கையில் அடிபட்டுவிட்டால் உடனே அடிபட்ட இடத்தில் சிலுவைக் குறியிடுவதும், இயேசு கிறிஸ்து என்று எழுதுவதும் பலருடைய வழக்கம். இதனால் காயம் குணமாகும் என்ற போலி நம்பிக்கையை அவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் தாங்கள் நினைத்த காரியம் கைகூட பல தடவைகள் திரும்பத் திரும்ப ஸ்ரீ ராமஜெயம் எழுதுவதுபோல் கிறிஸ்தவர்களிலும் அநேகர் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று எழுதி வருகின்றனர். இரவு படுக்கப்போவதற்கு முன்பு கதவு, ஜன்னல்களில் எல்லாம் சிலுவைக் குறியிடுகிறவர்களும் அதிகம். இப்படிச் செய்தால் வீடு பாதுகாக்கப்படும் என்பது அவர்களின் தவறான நம்பிக்கை.
சடங்குகளும், சம்பிரதாயங்களும், பாரம்பரியமும் வேறு பலவிதங்களிலும் நம்மக்களை ஆட்டிப்படைத்து மெய்க்கிறிஸ்தவ அனுபவத்தை அவர்கள் வாழ்க்கையில் அடைய முடியாதபடி செய்து வருகின்றன. திருமண வைபவத்தில் தாலியை எல்லோரும் ஆசீர்வாதம் செய்வதற்காக திருமண மண்டபம் முழுவதும் அனுப்பி வைத்தல், தாலியில் சிலுவை வடிவத்தில் டாலர் செய்வது போன்ற சம்பிரதாயங்கள் மூட நம்பிக்கையாக வளர்ந்திருக்கின்றன. நாள் பார்ப்பது, நல்ல நேரம் பார்ப்பது போன்ற புறஜாதி வழக்கங்களும் கிறிஸ்தவத்தின் பெயரில் நடந்து வருகின்றன. இவை மட்டுமா? பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் ஜெபக்கூட்டம் வைத்து அதைக் கொண்டாடுவது இந்து மதத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வழக்கம். திருமணமான பெண்கள் கர்ப்பந்தரித்து ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி விருந்து வைப்பதும் இந்துப் பண்பாட்டில் இருந்து வந்திருக்கிற சடங்கே. குழந்தைக்கு மொட்டையடிப்பது, தாய்மாமன் மடியில் வைத்து அதைச் செய்வது எல்லாம் புறஜாதி வழக்கங்களே. புது வீடு கட்டினால் நிலைக்கதவுகளில் புறஜாதியானைப்போல கோழி இரத்தத்தைப் பூசி, சங்காரக்காரன் நம் வீட்டை ஒன்றும் செய்ய மாட்டான் என்று நம்பி வருகிற போலிக் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.
கிருபையின் சாதனங்கள் சடங்காக மாறிவிடுகின்ற கொடுமை
ஜெபிப்பது விசுவாசிகளுக்குக் கர்த்தர் கொடுத்திருக்கும் கிருபையின் சாதனங்களில் ஒன்று. ஜெபிப்பதன் மூலம் நாம் கர்த்தரோடு பேச முடியும். ஜெபிப்பதற்கு நேரங்காலந் தேவையில்லை. ஜெபத்தை நாம் கருத்தோடு, கர்த்தரின் வார்த்தையின்படி செய்யவேண்டும். நம்முடைய சுயநல நோக்கங்களோடும், கர்த்தரைக் காரியங்கள் செய்ய வைக்கும் எண்ணத்தோடும் தவறான முறையில் பயன்படுத்தக்கூடாது. ஜெபங்கேட்கிற தேவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது.
அதேபோல உபவாசம் செய்வது என்பதும் சாதாரணமானதொன்றில்லை. கண்டதற்கும் உபவாசம் செய்யும்படி வேதம் எங்குமே எதிர் பார்க்கவில்லை. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் குறைபாடு இருந்தால் அதைத் தீர்த்துக்கொள்ளவோ அல்லது நம்மை சோதிக்கும் குறிப்பிட்ட பாவத்தை நிறுத்திக்கொள்ளுவதற்காக சரீரத்தை பலவீனப்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டுவரவோ அல்லது சபையில் அதிகாரிகளை தேவ பயத்தோடு கர்த்தரின் பணிக்காக நியமிப்பதற்காகவோதான் உபவாசம் செய்யும்படி கர்த்தர் சொல்லியிருக்கிறார். தொட்டதற்கெல்லாம் நாம் உபவாசம் எடுக்க வேண்டுமென்றோ அல்லது மற்றவர்களை அதைச் செய்யவைக்கவோ வேதம் இடம் தரவில்லை. கூட்டம் கூடி உபவாச ஜெபம் செய்வதால் எழுப்புதலை உண்டாக்கலாம் என்று வேதம் போதிக்கவில்லை. வேதம் போதிக்காத காரியங்களுக்கு நாம் உபவாச ஜெபத்தில் ஈடுபடக்கூடாது.
ஜெபத்தைப் பற்றியும், உபவாசத்தைப் பற்றியும் மேலே நாம் பார்¢த்த உண்மைகளை வேதம் போதிக்க, இன்றைக்கு இவை தவறான முறையில் தமிழினத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உபவாச ஜெபம் என்று எடுத்ததற்கெல்லாம் சபைகளில் ஜெபக்கூட்டம் நடந்து வருகிறது. பாரம்பரிய சபைகளில் இது ஒரு சடங்காக இருந்து வருகிறது. முக்கியமாக லெந்து நாட்களில் இது மிகவும் அதிகம். ஜீவனே இல்லாமல், இரட்சிப் பின் அருமையையே வாழ்க்கையில் அறிந்திராமல், வெறும் பெயர்க் கிறிஸ்தவனாக இருந்து உபவாச ஜெபத்தை ஒரு சடங்குபோல் செய்வதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை.
சபைத் தொடர்பில்லாமல் தனி ஊழியம் செய்து வருகின்ற மனிதர்கள் எல்லாம் பல (பெந்தகொஸ்தே) சபைகளைக் கூட்டி பல நாட்களுக்கு ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். 15 நாட்கள், 30 நாட்கள் என்று இரவு ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதெல்லாம் கேட்பதற்கு நன்றாய்த்தான் இருக்கிறது. தமிழினத்தில் ஏதோ எழுப்புதல் நடக்கிறது என்றுகூட எவரும் எண்ணிவிடலாம். ஆனால், இங்கே நடக்கின்ற விஷயமே வேறு. வியாதிகளைத் தீர்க்கிறோம், ஜெபிக்கிறோம் என்று சொல்லி ஊரில் உள்ள, முக்கியமாக உணர்ச்சிவசப்படும் பெண்களைக்கூட்டி இப்படிக் கூட்டத்தை நடத்திவிடுகிறார்கள். வியாதிகளைத் தீர்ப்பதற்கு இயேசுவோ, அப்போஸ்தலர்களோ ஜெபக்கூட்டம் நடத்தியதாக வரலாறு இல்லை. சத்தியத்துக்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காதவர்கள் சடங்காக ஜெபக்கூட்டம் நடத்தினால் கர்த்தர் அசைந்துவிட மாட்டார்.
இந்த இரவு அல்லது முழுநேர உபவாச ஜெபக்கூட்டங்களில் நடக்கின்ற இன்னுமொரு அநியாயம், கூட்டம் நடத்துகிறவர்கள் பல தடவைகள் காணிக்கை எடுப்பதுதான். இந்த ஊழியத்திற்கு, அந்த ஊழியத்திற்கு என்று கூறி பணத்தில் இருந்து நகைநட்டு அத்தனையையும் கூட்டத்துக்கு வருகிறவர்களிடம் இருந்து காணிக்கையாக வற்புறுத்தி வாங்கி விடுகிறார்கள். காணிக்கை எடுக்கும் நேரம் வருகிறபோது அதற்காக ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்ட ஒரு நபர் தன்னுடைய திறமையைக் காட்டி உணர்ச்சிவசமாகப் பேசி ஆத்துமாக்கள் கழுத்தில் இருந்ததைக்கூட, அது தாலி என்ற உணர்வுகூட இல்லாமல் கழட்டிக் கொடுத்துவிட வைத்துவிடுகிறார். இதையெல்லாம் இயேசு செய்ததாக நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. இதெல்லாம் இயேசு பெயரில் தமிழினத்தில் கிறிஸ்தவக் கூட்டங்களில் நடந்து வருகின்ற அநியாயங்கள்.
மேலே நாம் பார்த்ததெல்லாம் ஆத்மீகக் கூட்டங்கள் என்ற பெயரில் சடங்குபோல் நடந்து வருகின்றன. யாருக்கும் கட்டுப்படாமல் தனி (வியாபார) ஊழியம் நடத்தி வருகின்ற அத்தனை பேரும் இத்தகைய உபவாசக்கூட்டங்களை நடத்தாமல் இருப்பதில்லை. கூட்டங்களில் எண்ணிக்கை அதிகரிக்க அவர்களின் வங்கிக் கணக்குத் தொகையும் அதிகரிக்கின்றது. இதையெல்லாம் எவரும் எதிர்ப்பதோ, குறை கூறுவதோ கிடையாது. கர்த்தர் பெயரில் நடப்பதால் இதில் தவறிருக்காது என்று எண்ணி அறிவில்லாமல் நடந்துகொள்கிறவர்கள் எண்ணிக்கையே அதிகம். கர்த்தர் நமக்குத் தந்துள்ள கிருபையின் சாதனமான ஜெபம் சில மனிதர்கள் அவருடைய பெயரைப் பயன்படுத்தி பணம் பண்ணுவதற்கு இந்தவிதத்தில் நம்மினத்தில் இன்று உதவி வருகின்றது. ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுகிற எத்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் போகும்.
கிறிஸ்துவும் பாரம்பரியமும்
இயேசு கிறிஸ்து லூக்கா 12ம் அதிகாரத்தில் பாரம்பரியத்தின் சட்டையை உரித்துக் காட்டுகிறார். அப்பகுதியில் அவர் சீடர்களைப் பார்த்து, “நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்கிறார். பரிசேயர்களுடைய மாயமான புளித்தமாவு எது? இப்பகுதியில் 2, 3 ஆகிய வசனங்கள் அதை விளக்குகின்றன. பரிசேயர்கள் உள்ளே கேடான இருதயத்தைக் கொண்டிருந்து வெளிப்புறத்தில் நல்ல பக்திமான்கள் போல் பல்வேறு சடங்குகளையும் செய்து வந்தார்கள். அவர்கள் செய்கின்ற அத்தனையும் ஒரு காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்று இயேசு எச்சரிக்கை செய்தார்.
வேத பாதுகாவலர்கள் போலவும், கர்த்தருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் போலவும் யூதர்கள் முன் நடந்து வந்த பரிசேயர்களை இயேசு விரியன் பாம்புக்குட்டிகள் என்று அழைத்தார். ஏன்? பிணத்திற்கு வெள்ளை உடுத்தி வைத்தது போல அவர்களுடைய வாழ்க்கை இருந்ததுதான் அதற்குக் காரணம். வெளிப்புறம் ஆத்மீகத்தில் சிறந்தவர்கள் போல அவர்கள் பல சடங்குகளைத் தவறாது செய்து வந்தாலும், பக்திக்கு ஆதாரமான மனந்திரும்புதலும், இரட்சிப்பும் இல்லாதவர்களாக இருந்தார்கள். சடங்குகளும், பாரம்பரியமுமே அவர்களுக்குப் பரலோக வாழ்க்கையாகத் தெரிந்தது. சடங்குகளாகிய வலையில் அகப்பட்டு அதுவே தஞ்சம் என்று வாழ்ந்தார்கள் பரிசேயர்கள். யூதர்களையும் தங்களைப் போலவே வாழத்தூண்டி வந்தார்கள்.
இயேசு கிறிஸ்து பரிசேயர்களின் பாரம்பரியத்தையும், சடங்குகளையும் சாடினார். மத்தேயு 5-7 வரையுள்ள மலைப்பிரசங்கத்தில் இயேசு பரிசேயர்களுடையதும், யூத மதத்தலைவர்களுடையதும் போலிப் பாரம்பரிய வாழ்க்கையை இனங்காட்டி அவர்களை, “மாயக்காரர்கள்”, “அஞ்ஞானிகள்”, “விரியன் பாம்புக்குட்டிகள்” என்று அழைத்தார். அவர்களைப்போல இருக்காதீர்கள் என்று மக்களை எச்சரித்தார். இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கம் முழுவதுமே சடங்குகளும், சம்பிரதாயங்களும் நிறைந்து பாரம்பரியமாக இருந்துவந்த சமய மார்க்கத்தை இனங்காட்டிக் கண்டிக்கிறது. குறிப்பாக மத்தேயு 15:1-9 வரையுள்ள வசனங்களில் பாரம்பரியத்துக்கு ஆதரவாக வேதபாரகர்களும், பரிசேயர்களும் பேசியபொழுது, இயேசு கிறிஸ்து அவர்களைப் பார்த்து பாரம்பரியத்தைப் பெரிதுபடுத்தி நீங்கள் தேவனுடைய கற்பனைகளை (பத்துக் கட்டளைகள்) மீறி நடக்கிறீர்கள் என்று குற்றஞ் சாட்டினார். “உங்கள் பாரம்பரியத்தினால் தேவனுடைய கற்பனையை அவமாக்குகிறீர்கள்” என்று கொதித்தார். “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் செல்லியிருக்கிறான்” என்று ஏசாயா காலத்திலும் மக்கள் கர்த்தரை நிராகரித்து பாரம்பரியத்துக்குப் பணிசெய்து வந்ததை சுட்டிக்காட்டி எச்சரித்தார் (மாற்கு 7). இன்று அதே போல கிறிஸ்தவம் என்ற பெயரில் சபைகள்தோறும், வீடுகள்தோறும் இருந்து வரும் போலிச் சம்பிரதாயங்களும், பாரம்பரியமும் இயேசு கிறிஸ்துவோடு சம்பந்தமில்லாத அஞ்ஞானிகளின் மார்க்கமே.
அப்போஸ்தலர்களும் பாரம்பரியமும்
ஆதிசபை அப்போஸ்தலர்களும் பாரம்பரியத்திற்கும், சம்பிரதாய, சடங்குகளுக்கும் இடம் கொடுக்கவில்லை. மெய்க்கிறிஸ்தவத்தை அவை அழித்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பரிசுத்த ஆவியைப் பணங்கொடுத்து வாங்கி சடங்குபோல் பயன்படுத்த எண்ணிய சீமோனைப் பேதுரு கடுமையாகக் கண்டித்தார் (அப்போஸ்தலர் 8). பழைய ஏற்பாட்டு சடங்குகளையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்தும் கடைப்பிடிக்க முயற்சி செய்தவர்களுக்கு முடிவுகட்ட எருசலேம் கவுன்சில் அப்போஸ்தலர்களாலும், திருச்சபை மூப்பர்களாலும் கூட்டப்பட்டது (அப்போஸ்தலர் 15). பாரம்பரியத்தையும், சடங்கையும் வைத்து கிறிஸ்தவத்திற்கு மாசேற்படுத்த முயன்றவர்களை பவுல் ரோமர், கலாத்தியர், கொலோசெயர் ஆகிய நிருபங்களில் கடுமையாக சாடுகிறார். எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபத்திலும் அதையே பார்க்கிறோம். உதாரணத்திற்கு பவுல் கொலோசேயர் 2:8 கூறுவதைக் கவனியுங்கள், “லௌகீக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல”. போலிப் பாரம்பரியங்களுக்கு அப்போஸ்தலர்களின் அகராதியில் இடமிருக்கவில்லை.
பாரம்பரியமா? இரட்சிப்பின் அனுபவமா?
சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் மனிதன் ஏற்படுத்தி வைக்கும் போலிப் பாரம்பரியங்களுக்கு எதிராகப் போராடி மெய்க் கிறிஸ்தவத்தை நிலைநாட்டிய போதும், நாளடைவில் வரலாற்றில் மறுபடியும் பிசாசு போலிப் பாரம்பரியங்களுக்கு மனிதனை தலைசாய வைத்தான். மனிதன் ஆத்மீக விருத்தியற்று வாழ பிசாசு பயன்படுத்தும் சாதனங்களே சடங்குகளும், சம்பிரதாயங்களும், போலிப் பாரம்பரியங்களும்.
சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும், பாரம்பரியத்துக்கும் அடிமைப்பட்டிருக்கிறவர்களே! இன்று உங்களுக்கு எது தேவை? இயேசு சொல்லுகிறார், மனந்திரும்புதலும், இரட்சிப்பின் அனுபவமும் இல்லாதவன் பரலோகம் போவதில்லை என்று. பாரம்பரியத்தையும், சடங்குகளையும் வைத்துக்கொண்டு ஒருவரும் பரலோகம் போக முடியாது. நீங்கள் மரிக்கின்றபோது எல்லாச் சடங்குகளுக்கும் உங்களோடு சேர்த்து சங்கூதப்பட்டுவிடும். மெய்யான மனந்திரும்புதலும், இரட்சிப்பின் அனுபவமும் இருக்கின்ற உள்ளத்தில் சடங்குகளுக்கும், சம்பிரதாயத்துக்கும் இடமிருக்காது. ஒருவருடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து மெய்யாகக் குடிபுகுந்துவிட்டால் சடங்குகளுக்கும், பாரம்பரியத்துக்கும் அவருடைய வாழ்க்கையில் அன்றோடு சமாதி கட்டப்பட்டுவிடும்.
தொடர்ந்து சடங்கை நம்பி வாழ்கிறவன் கிறிஸ்துவுக்குப் பிள்ளையல்ல; நரகத்தில் பற்கள் கடிபட அக்கினியில் வேகப் போகிறவன். இந்துப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும், சடங்குகளிலும் இருந்து நமக்கு விடுதலை தர இயேசு இந்த உலகத்துக்கு வந்தார்; கல்வாரியில் மரித்தார்; உயிர்த்தெழுந்தார். அவரை ஆண்டவராக விசுவாசித்து நேசிக்கிறவர்கள் அவர் மரித்த பாவப்பாரம்பரியத்தையும், சடங்குகளையும் தொடர்ந்து பின்பற்றுவார்களா? இயேசு குழிதோண்டிப் புதைத்த கோரப் பாரம்பரியத்தைக் கொண்டாடி மகிழ்வார்களா? பாரம்பரியத்துக்கும், சடங்குகளுக்கும் படையல் நடைபெறும் இடத்திலெல்லாம் பிசாசு ஆளுகிறான் என்பதை நீங்கள் உணரவில்லையா? சம்பிரதாயங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிறிஸ்து தரும் இரட்சிப்பை இழந்து விடாதீர்கள். பரிசுத்த வாழ்க்கை வாழ பாரம்பரியம் ஒருநாளும் உதவ முடியாது. திருச்சபை பக்தியில் உயர பாரம்பரியம் ஏணியாக முடியாது. பாரம்பரியம் பக்திக்கு விரோதி; எதிரி.