பாவஉணர்வு மட்டுமே பரலோகம் போக உதவாது

இதழ் 2, 2015

“பாவத்தை உணர்தல் இரட்சிப்புக்கு மிகவும் அவசியமானது, ஆனால் அது இரட்சிப்போடு இணைந்ததல்ல” என்று ஜெரமி வோக்கர் “யார் மெய்யான கிறிஸ்தவன்?” என்ற தன்னுடைய ஆக்கத்தில் எழுதியிருக்கிறார். இது சிலவேளை வாசகர்களை சிந்திக்கும்படி செய்யலாம் அல்லது குழப்பவும் கூடும். அதுபற்றி இந்த ஆக்கத்தில் விளக்கத் தீர்மானித்தேன். எந்த அடிப்படையில் ஜெரமி வோக்கர் இதைச் சொல்லியிருக்க முடியும்? அவர் கார்டினர் ஸ்பிரிங்கின் (Gardiner Spring) நூலின் ஒரு பகுதியின் சாராம்சத்தின் அடிப்படையில் தன்னுடைய ஆக்கத்தை எழுதியிருப்பதால் நிச்சயம் அவருடைய கருத்தும் இதுவாகத்தான் இருந்திருக்கும். கார்டினர் ஸ்பிரிங்கின் நூலை நான் இதற்காக மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். இதே வார்த்தைகளை அவர் தன்நூலில் பயன்படுத்தியிராவிட்டாலும் அதைத்தான் அவரும் விளக்கியிருக்கிறார். இது பாவ உணர்தலைப் பற்றிப் பியூரிட்டன் பெரியவர்கள் அநேகரிடமும் பொதுவாகக் காணப்பட்ட ஒரு விளக்கம்.

பாவத்தை உணர்தல் (Conviction of sin)

உண்மையில் இன்றைக்குப் பாவத்தை விளக்கிப் பிரசங்கிக்கும் பிரசங்கங்கள் அரிது. பாவம், பாவம் என்றே அலரிக்கொண்டிருக்கக் கூடாது. அது ஆத்துமாக்களுக்குச் சங்கடத்தை உண்டாகும்; நெகட்டிவ் பிரசங்கம், ஆத்துமாக்களுக்கு ஆறுதல் தரும் செய்திகளைத்தான் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லி சுவிசேஷத்தில் பாவத்தைப்பற்றிப் பிரசங்கிப்பதையே அநேகர் கைவிட்டுவிட்டிருக்கிறார்கள். நம்மினத்தில் இதுபற்றிய விளக்கமான போதனைகள் கொடுக்கப்படுவதில்லை. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அடிப்படைப் போதனையாக இருக்கிறது பாவம். பாவத்தைப்பற்றிய விளக்கத்தைத் தராத சுவிசேஷம் கிறிஸ்துவின் சுவிசேஷமாக இருக்க முடியாது. அந்தளவுக்கு சுவிசேஷத்தில் இருந்து பிரிக்க முடியாததாக அது இருக்கிறது.

பாவமே மனிதனைக் கடவுளிடம் இருந்து வெகுதூரத்தில் பிரித்து வைத்திருக்கிறது. அந்தப் பாவம் அகலாதவரையில் மனிதனுக்கு விமோசனமில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் அந்த இடைவெளி நீங்கும்படியான பாலமாகவே இயேசு இந்த உலகத்துக்கு வந்து பாவம் நீங்குவதற்கு வழியேற்படுத்தினார். பாவத்திற்கு விளக்கம் கொடுக்கும் யோவான், “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” என்கிறார் (1 யோவான் 3:4). பத்துக்கட்டளைகளையே அவர் நியாயப்பிரமாணம் என்று இனங்காட்டுகின்றார். பத்துக்கட்டளைகள் கர்த்தரின் நீதியைப் பிரதிபலிக்கின்றன. அதற்கு நீதிக் கட்டளைகள் என்றும் பெயர். ஆதாமும், ஏவாளும் அந்தக் கட்டளைகளை மீறியதாலேயே பாவம் சம்பவித்து மனிதகுலமே பாவத்தில் வீழ்ந்தது. பாவியாகிய மனிதன் அன்றாடம் அந்தக் கட்டளைகளை மீறிவாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்தக் கட்டளைகள் போதிக்கும் நீதியான வாழ்க்கையை அவன் இயற்கையாக வாழமுடியாதவனாக, அதற்கான தகுதியைத் தன்னில் கொண்டிராதவனாக இருக்கிறான். பாவத்தில் இருந்து பாவிகளை விடுவிப்பதற்காகவே இயேசு சிலுவையில் மரித்திருக்கிறார்; தன்னையே பாவநிவாரணபலியாக ஒப்புக்கொடுத்திருக்கிறார். நியாயப்பிரமாணங்களை (நீதிக்கட்டளைகளுட்பட) அவர் தன்வாழ்வில் பூரணமாக நிறைவேற்றி பாவ விடுதலைக்கும், மனிதனின் இரட்சிப்புக்குமான வழியை ஏற்படுத்தினார்.

மனிதன் இரட்சிப்பை அடைய முதலில் அவன் பாவத்தை உணருவது அவசியம். கிறிஸ்துவின் சுவிசேஷம் மனிதன் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்கிறது. ‘மனந்திரும்புதல்’ என்பது மனிதன் தான் பாவியாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து அதற்குப் புறமுதுகு காட்டுதலைக் குறிக்கிறது. இந்த மனந்திரும்புதலும் கிறிஸ்துவில் விசுவாசமும் இல்லாமல் இரட்சிப்பு எவருக்கும் கிடைக்க வழியில்லை. பாவ உணர்த்தலின்றி மனந்திரும்புதல் ஒருபோதும் நிகழ முடியாது.

பாவ உணர்வும் பரிசுத்த ஆவியும்

மனிதன் தன் ஜென்ம பாவத்தையும் (ஆதாமில் இருந்து தொடர்வது), அதன்காரணமாகத் தான் வாழ்ந்துவரும் பாவ வாழ்க்கையையும் பாவநிலையில் இருந்து தானாக உணர வழியில்லை. அவனில் எந்தவித ஆத்மீக வல்லமையும், அதை அடைவதற்கான வசதிகளும் இல்லாமலிருப்பதனால் புறத்தில் இருந்து அவனுக்கு உதவி தேவைப்படுகிறது. ‘இரட்சிப்பு கர்த்தருடையது’ என்ற யோனாவின் வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள். முற்றுமுழுதாக இரட்சிப்பைக் கர்த்தரே நிறைவேற்றி இலவசமாக மனிதனுக்கு வழங்குகிறார். அப்படி அவர் வழங்குகின்ற இரட்சிப்பை மனிதன் அடைவதற்கான வழிவகைகளையும் அவரே ஏற்படுத்தியிருக்கிறார். மனிதன் இரட்சிப்பை அடைய சுவிசேஷப் பிரசங்கத்தின் கீழ் வருவது அவசியம். அந்த சுவிசேஷத்தைக் கேட்டு அவன் மனந்திரும்ப வழிசெய்கிறவரே பரிசுத்த ஆவியானவர். 1689 விசுவாச அறிக்கை, ‘வார்த்தையும், ஆவியும்’ இணைந்து செயல்படுவதால் மனிதன் மறுபிறப்பு அடைகிறான் என்று 10 வது அதிகாரம் ‘திட்ப உறுதியான அழைப்பு’ என்ற பகுதி விளக்குகிறது. வார்த்தை மனிதனின் இருதயத்தில் பதிய பரிசுத்த ஆவியானவரே வழிசெய்கிறார். இதை இயேசு யோவான் 3ல் நிக்கொதேமுவுக்கு விளக்குகிறார்.

இந்தப் பெரிய காரியத்தைப் பரவலாக உலகம் பூராவும் செய்வதற்காகவே பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டார் என்பதை இயேசு தன் சீடர்களுக்கு அறிவித்தார் (யோவான் 16:7-8). சுவிசேஷத்தைக் கேட்கும் மனிதன் பாவத்தை உணரும்படிச் செய்கிறவர் பரிசுத்த ஆவியானவரே. சுவிசேஷத்தின் ஓர் அங்கமான நியாயப்பிரமாணம் பிரசங்கிக்கப்பட வேண்டிய நோக்கமே அதைக் கேட்கின்ற மனிதன் தான் பிறப்பிலிருந்தே அதற்கு எதிராக செயல்பட்டு வந்திருப்பதை இருதயத்தில் உணர்ந்து மனந்திரும்பவேண்டுமென்பதற்காகத்தான். நியாயப்பிரமாணத்தை (பத்துக்கட்டளைகளை) மீறுவதே பாவம், அதை மீறுவதைத்தவிர இயற்கையாக மனிதன் வேறெதையும் செய்வதில்லை. ஆகவே, மனிதனுக்கு தான் பாவியாக இருக்கிறேன் என்பதும், கடவுளின் கட்டளைகளை மீறிக்கொண்டிருக்கின்றேன் என்பதும் தெரிந்தாக வேண்டும். மெய்யான சுவிசேஷப் பிரசங்கம் அதை முதலில் உணர்த்தியே மனிதனுக்குக் கிறிஸ்து வழங்கும் இரட்சிப்பை இலவசமாக அளிக்கிறதாக இருக்கிறது. இப்போது தெரிகிறதா, ஏன் பாவத்தைப்பற்றி விளக்காத சுவிசேஷம் சுவிசேஷமாக இருக்கமுடியாதென்று?

மனிதனின் இரட்சிப்புக்குக் கிறிஸ்து மூலம் வழியேற்படுத்தியிருக்கும் இறையாண்மையுள்ள கர்த்தர் பரிசுத்த ஆவியின்மூலம் மனிதன் தன் பாவத்தை உணர வழிசெய்கிறார். இதைத்தான் இயேசு யோவானின் சுவிசேஷ நூலில் விளக்கியிருக்கிறார். அவர் தன் சீடர்களுக்குப் பரிசுத்த ஆவியின் வருகையைப்பற்றி விளக்கி, அவர் வருகிறபோது பாவத்தையும், நீதியையும், நியாயத்தீர்ப்பையும் மனிதனுக்கு உணர்த்துவார் என்று சொன்னார். பரிசுத்த ஆவியானவர் இதைச் சுவிசேஷ செய்தியின் மூலம் பாவியாகிய மனிதனில் செய்கிறார். இந்தவிதமாக அவர் கண்டித்து உணர்த்துகிற கிரியையையே பியூரிட்டன் பெரியவர்கள் ‘மனிதனை ஆவியானவர் தயார்செய்கிற’ (Preparatory work of the Spirit) பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று தங்களுடைய எழுத்துக்களில் விளக்கியிருக்கிறார்கள். வேறு சில இறையியல் வல்லுனர்கள் இதைப் ‘பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியை’ (Common operations of the Spirit) என்று விளக்கியிருக்கிறார்கள். இத்தகைய பாவ உணர்த்தலை பாவிகள் அடையும்போது அவர்கள், பிலாத்தைப்போல ‘இந்த மனிதனில் (இயேசுவில்) நான் எந்தக் குறையையும் காணவில்லை’ என்றும், அகிரிப்பா மன்னனைப்போல, ‘இவனை (பவுல்) இன்னுங்கொஞ்சம் பேசவிட்டால் நானே கிறிஸ்தவனாகி விடுவேன் போலிருக்கிறது’ என்று சொல்லியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது ராஜனைப்போல இருதயம் காயப்பட்டு அடிக்கடி யோவான் ஸ்நானனை சிறையில் சந்தித்து வேதம் கேட்டதுபோலவும், இயேசுவைக் காட்டிக்கொடுத்தபின் அதற்காக வருந்தி அழுத யூதாசைப்போலவும் நடந்துகொள்ளுவார்கள். இதெல்லாம் பரிசுத்த ஆவியானரின் பொதுவான கிரியைகளில் ஒன்று. இதை ஆவியானவர் சுவிசேஷம் கேட்கிறவர்களில் பொதுவாகச் செய்கிறார்.

மெய்யான சுவிசேஷத்தைக் கேட்கிற மனிதன் அதனால் இருதயத்தில் குத்தப்படாமல் நெடுங்காலத்துக்கு இருக்க முடியாது என்கிறார் கார்டினர் ஸ்பிரிங். அவன் என்னதான் எண்ணங்களோடும், நோக்கங்களோடும் இருந்தாலும் அவனுள்ளத்தில் நிச்சயம் சுவிசேஷத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் அவனுடைய நிலையைப்பற்றி யோசிக்க வைப்பார் என்கிறார் ஸ்பிரிங். இதற்காக அவன் மாறிவிடப்போகிறான் என்பதில்லை. அது ஆவியானவர் அவனில் செய்யும் இரட்சிப்புக்குரிய கிரியையாகிய மறுபிறப்பையும் அவனுடைய மனந்திரும்புதலையும் பொறுத்தது. பாவத்தைப்பற்றிய உணர்தலையும், குற்றஉணர்வையும் பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷம் கேட்கின்ற அனைவரிலும் பாரபட்சமின்றி செய்கிறார். எல்லோரும் சமமானவிதத்தில் பாவத்தை உணரப்போவதில்லை என்றாலும் எல்லோருக்கும் அந்த உணர்வை சுவிசேஷத்தின் மூலம் ஏதோவொருவிதத்தில் ஆவியானவர் ஏற்படுத்துகிறார். இது சுவிசேஷத்தின் மூலம் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு பொதுவான பலன். இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

பரிசுத்த ஆவியின் பொதுவான செயற்பாட்டின் மூலம் பாவ உணர்வை அடைகிறவர்களில் சிலர் பல நாட்களுக்கு அல்லது பல மாதங்களுக்குக்கூட குற்ற உணர்வையும், ஆழமான மனஉறுத்துதலையும் அனுபவிக்கக்கூடும். அவர்கள் தங்களுடைய பாவத்தின் கோரத்தையும், வரப்போகும் நியாயத்தீர்ப்பையும், தண்டனையையும் உணர்ந்து பெரும் கலக்கம் அடைவார்கள். பயமும், நடுக்கமும் அவர்களை வாட்டும¢. அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டால்கூட நாம் ஆச்சரியப்படக்கூடாது. சபைக்கு வந்து சுவிசேஷ செய்தியைக் கேட்டுவிட்டு குடும்பப் பிரச்சனைகளையும், குடிப்பிரச்சனையையும் சொல்லி ஜெபிக்கும்படியும், உதவும்படியும் கேட்கிறவர்களை நாம் காணவில்லையா? அப்படி சில நாட்களுக்கோ வாரங்களுக்கோ இருதயத்தில் கஷ்டப்படுகிறவர்கள் பின்பு நம் கண்ணிலும்படாமல் போவதில்லையா? அத்தகைய மனஉறுத்துதலை அடைந்தவர்களைப்பற்றி கிறிஸ்தவ வரலாறு நமக்கு வெளிப்படுத்துகிறது. மார்டின் லொயிட் ஜோன்ஸ் அத்தகைய அனுபவத்தை அடைந்த பலரைத் தன்னுடைய ஊழியத்தில் சந்தித்துள்ளதாகத் தான் எழுதிய ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஜோன் பனியனின் மோட்சப் பயணம் நூலின் ஆரம்பப் பகுதிகளில் கிறிஸ்தியான் மனந்திரும்புவதற்கு முன்பு அத்தகைய குற்றஉணர்வினால் நெடு நாட்களுக்குப் பாதிக்கப்பட்டிருந்ததை வாசிக்கிறோம்.

பாவத்தைப் பற்றிய இந்தக் குற்றவுணர்வை மட்டும் நாம் விசுவாசத்திற்கும் இரட்சிப்பிற்கும் அடையாளமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு மனிதன் தன்னைப் பெரும் மோசமான பாவியாகக் கருதினாலும் மனந்திரும்பாமலேயே இருந்துவிடலாம் என்கிறார் கார்டினர் ஸ்பிரிங். அவர் தொடர்ந்து, ‘பாவத்தை உணர்தல், பாவத்தில் இருந்து விடுபட்டு மனந்திரும்புதலைவிட முற்றிலும் வேறுபட்டது’ என்கிறார். இதைத்தான் பெரும்பாலான சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இரட்சிப்பை அடைவதற்கு, பாவ உணர்த்துதலும், குற்றவுணர்வும் மிக மிக அவசியமானபோதும் அது இரட்சிப்போடு இணைந்ததல்ல என்று ஜெரமி வோக்கர் எழுதியிருப்பதற்கும் இதுதான் காரணம். இத்தகைய உணர்வைப் பாவிகளில் பரிசுத்த ஆவியானவர் உண்டாக்குகிறபோதும் அவர்கள் அதைக்கடந்து அடுத்த கட்டமாகிய மனந்திரும்புதலை அடையாதவரை அவர்களுக்கு இரட்சிப்பில்லை. அநேகர் இந்தப் பாவஉணர்த்துதலைப் பெற்றிருந்தும் இரட்சிப்பை அடையாமல் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வேதத்தில் பல ஆதாரங்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் சவுல், ஆகாப், யூதாசு, ஏரோது இராஜா, அகிரிப்பா, இயேசுவிடம் வந்த செல்வந்தனும் வாலிபனுமான யூதன் போன்ற பலரை இதற்கு உதாரணங்காட்டலாம். மாயவித்தைக்காரனான சீமோன் இந்தப் பாவ உணர்த்துதல் இருந்தும் இறுதிவரை மனந்திரும்பவில்லை.

சபைக்கு வந்துகொண்டிருக்கிற ஒருவன், ‘எனக்குத் தீய எண்ணங்கள் அடிக்கடி மனதில் தோன்றி என்னைத் தொல்லைப்படுத்துகின்றன. இத்தகைய எண்ணங்களால் எனக்குக் குற்றவுணர்வு ஏற்படுகிறது. நான் ஆவிக்குரியவனா, இல்லையா?’ என்று கேட்டால், ‘அத்தகைய குற்றவுணர்வு ஏற்படுவதே நீ ஆவிக்குரியவன், விசுவாசி என்பதற்கு அர்த்தம்’ என்று பல இடங்களில் பொதுவாகவே நம்மினத்தில் போதிக்கப்பட்டு வருவதாக ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். இது மிகத் தவறானது. இருதயத்தில் பாவ உணர்த்துதல் தோன்றுவது மட்டும் நாம் விசுவாசி என்பதற்கு அடையாளம் இல்லை. ஆவியானவர் மூலமாகவே அது வந்தாலும், அதைக் கடந்து ஒருவன் போயிருக்கிறானா? பாவத்தை வெறுத்து, அதைவிட்டு விலகி விசுவாசத்தை அடைந்து அதற்குரியவிதத்தில் தொடர்ந்து வாழ்கிறானா? என்றெல்லாம் அறிந்துகொள்ளாமல், குற்றமுள்ள இருதயம் இருக்கிற காரணத்துக்காக ஒருவரை விசுவாசியாகக் கருதுவது இந்த விஷயம் பற்றிய ஞானமில்லாததால் இழைக்கப்படும் பெருந்தவறு.

பாவஉணர்த்துதலையும், குற்றஉணர்வையும் ஏற்படுத்துவது பரிசுத்த ஆவியானவராக இருப்பதால் அது இரட்சிப்போடு இணைந்தது என்று பலர் தவறாக நம்மினத்தில் எண்ணிவிடுகிறார்கள். அத்தகைய உணர்வை ஏற்படுத்தும் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் ஆவிக்குரிய அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோவார் என்று நினைக்கிறார்கள். வேதம் அப்படிப் போதிக்கவில்லை என்பதற்கு ஏற்கனவே உதாரணங்களைக் காட்டியிருக்கிறேன். பாவஉணர்வை ஆவியானவர் ஒருவரில் சுவிசேஷத்தின் மூலம் ஏற்படுத்துவது எல்லா ஆத்துமாக்களிலும் அவர் செய்யும் பொதுவான கிரியைகளின் ஒருபகுதியே தவிர தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் செய்யும் சிறப்பான கிரியையோடு இணைந்தது அல்ல.

பாவத்தை உணர்தலும் மனந்திரும்புதலும்

இதுவரை பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியையான பாவ உணர்த்துதலையும் அதன் மூலம் மனித இருதயத்தில் குற்ற உணர்வை அவர் உண்டாக்குவதையும் கவனித்திருக்கிறோம். இரட்சிப்பிற்கு இது மிக மிக அவசியமானபோதும் இது மட்டும் இரட்சிப்பை அடைந்ததற்கு அடையாளமில்லை என்றும் பார்த்திருக்கிறோம். இந்தப் பரிசுத்த ஆவியானவரின் பாவ உணர்த்துதல் எப்படி ஒருவருடைய இரட்சிப்பில்போய் முடிகிறது என்பதை ஆராய்வது அவசியம். இதை இறையியல் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

முதலில், கர்த்தரால் அநாதியிலேயே தெரிந்துகொள்ளப்படாமல் இருக்கும் ஒருவன் பாவஉணர்த்துதலை அடைந்தாலும் இரட்சிப்பை அடையும்படி மனந்திரும்பமாட்டான். வேத இறையியல் அடிப்படையில் அது முழுக்க முழுக்க உண்மை. தன்னுடைய பாவநிலைக்கு முழுப்பொறுப்பாளியாக இருக்கும் அவன் மனந்திரும்ப மறுத்து நிற்பான். சுவிசேஷத்தைக் கேட்டு, அதனால் இருதயம் பாதிக்கப்பட்டிருந்தபோதும், அவனுக்கு உலக இன்பம் பெரிதாகத் தெரிந்து அதில் திளைத்திருப்பதையே நாடிப்போகிறான். இத்தகையவர்களும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்கும் ஆசீர்வாதத்தையும், பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியைக்குள் வரும்படியும் கர்த்தர் அனுமதித்திருக்கிறார். அவருடைய இருதயத்தாகம் கேடானவர்களும் திருந்தி தேவ இராஜ்யத்தை அடையவேண்டும் என்பதுதான். இதற்காகவே அனைவரும் கேட்பதற்காக சுவிசேஷத்தை ஏற்படுத்தி, அதை உலகெங்கும் போகவைக்கும்படியாக இயேசு பரிசுத்த ஆவியானவரை அனுப்பிவைத்தார். மனிதனின் பாவநிலை அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நிலையை அனுமதிப்பதில்லை. பாவஉணர்த்துதலைப் பெற்றும் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்கள் அடையும் நீதியான நித்திய தண்டனைக்கு அவர்களே முழுப்பொறுப்பு.

அதேவேளை, பாவஉணர்த்தலையும், பாவத்திற்கான குற்ற உணர்வையும் அடைந்து, மனந்திரும்புகிறவர்களே மெய்யான கிறிஸ்தவ விசுவாசிகள். மனந்திரும்புதல் என்பது பாவத்தை உணர்வதும், அதற்கான குற்ற உணர்வை இருதயத்தில் கொண்டிருப்பதும் மட்டுமல்ல. அந்தப் பாவஉணர்தலோடு நின்றுவிடாமல் பாவத்தில் இருந்து மீண்டுவாழ அதற்கு விடுதலையளிக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவை நாடி வருதல் அவசியம்; கிறிஸ்துவைத் தன்னுடைய பாவவிடுதலைக்காக மனந்திரும்பி விசுவாசித்தல் அவசியம். 1689 விசுவாச அறிக்கை 15ம் அதிகாரத்தில் மனந்திரும்புதலைப்பற்றி விளக்குகிறபோது, ‘பரிசுத்த ஆவியின் மூலம் தன்னில் உள்ள பாவத்தின் பலவிதமான கேடுகளை உணருபவன் நற்செய்தியின் கிருபையாகிய இரட்சிக்கும் மனந்திரும்புதல் மூலம் இதை அடைகிறான். அத்தோடு அவன் பாவத்தின் காரணமாக தன்னைத் தாழ்த்தி கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறான். இத்தாழ்மைப்படுத்தல் தேவனுக்கேற்ற துக்கம், பாவத்தில் வெறுப்பு, சுய அருவருப்பு ஆகிய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும்’ (பத்தி 3) என்று கூறுகிறது.

மனந்திரும்புவதற்கு, முதலில் ஒருவன், தான் நீதியான கர்த்தருக்கு முன் பாவியாக நின்று நித்திய தண்டனையை எதிர்நோக்கி இருப்பதை உணரவேண்டும். பத்துக்கட்டளைகளை நிராகரித்து அவற்றிற்கெதிராக வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்தல் அவசியம். மனந்திரும்புவது என்பது, ஒருவன் தன் பாவத்திற்காக வருந்துவதோடு மட்டுமல்லாமல் அதை இருதயத்தில் அடியோடு வெறுத்து, அதற்கு புறமுதுகுகாட்டி, அதிலிருந்து விடுபடவழி செய்திருக்கும் பாவநிவாரணியான கிறிஸ்துவை மட்டுமே தேவனாக முழு இருதயத்தோடும் விசுவாசிப்பதாகும். பாவத்தில் இருந்து விடுதலை அடைய பாவஉணர்தலை அடையவேண்டும் என்பதல்ல சுவிசேஷம்; மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசி என்பதே சுவிசேஷம். மனந்திரும்புதலின் ஆரம்பப்படி பாவத்தை உணர்தல்; அது முழுமையான ஆவிக்குரிய மனந்திரும்புதலிலும், இரட்சிப்புக்காக கிறிஸ்துவை மட்டும் விசுவாசிக்கும் விசுவாசத்திலும் போய் முடியவேண்டும்.

இறையியலடிப்படையில் மனந்திரும்புதலும் (கிறிஸ்துவில் வைக்கும்) விசுவாசமுமே இரட்சிப்பை அடைவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள். (அப்போஸ்தலர் 20:21, தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும்; சாட்சியாக அறிவித்தேன்.) மனந்திரும்புதலா, விசுவாசமா முதலில் எது வரவேண்டும் என்ற விவாதத்தில் பல இறையியலறிஞர்கள் ஈடுபட்டு வந்திருந்திருக்கிறார்கள். 1689 விசுவாச அறிக்கையில் இரட்சிக்கும் விசுவாசம் (14) முதலில் விளக்கப்பட்டு அதற்கு அடுத்த அதிகாரத்தில் மனந்திரும்புதல் (15) விளக்கப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ஜோன் மரே (John Murray) சொல்லுவதுபோல், அதில் எது முதலில் வரவேண்டும் என்பதைவிட அவை இரண்டும் பிரிக்கமுடியாதபடி இணைந்திருக்கின்றன என்பதை உணர்வதுதான் முக்கியம். ஒன்றில்லாமல் மற்றது இருக்காது. சீர்திருத்த இறையியலறிஞரான சின்கிளேயர் பேர்கசன் (Sinclair Ferguson), இதை அழகாக விளக்கியிருக்கிறார். அதாவது, இரண்டு விசுவாசிகளை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய வளர்ப்புமுறை, மனநிலைக்கு ஏற்ப அவர்களுடைய விசுவாசத்தின் வெளிப்பாடு அமைந்திருக்கும் என்கிறார். பெரும் பாவவாழ்க்கை வாழ்ந்து சீரழியாமல் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்து இரட்சிப்பை அடைந்திருக்கும் ஒருவன் தான் அடைந்திருக்கும் கிறிஸ்துவைப் பற்றி அதிகமாகப்பேசி மகிமைப்படுத்துவான்; அவனுக்குப் பாவஉணர்தல் உண்டாகி மனந்திரும்பியிருந்தபோதும், அவனுடைய பேச்சில் கிறிஸ்துவில் வைத்திருக்கும் விசுவாசம் பற்றியே அதிகமாக இருக்கும். அதேநேரம் பாவத்தைச் செய்து சீரழிந்து மனந்திரும்பியிருக்கும் ஒருவனில், அவனுடைய மனந்திரும்புதலைப்பற்றிய பேச்சு அதிகமாக இருக்கும். அவனும் கிறிஸ்துவை விசுவாசித்திருந்தபோதும், கோரமான பாவத்தில் இருந்து அடைந்திருக்கும் விடுதலை அவனுடைய பேச்சிலும், மூச்சிலும் மேலிடம் பெற்றிருக்கும். இதற்காக ஒன்றிருந்து மற்றதில்லை என்பதில்லை. இருவரிலும் மனந்திரும்புதலும், விசுவாசமும் இடம்பெற்றிருக்கிறது (அவை இல்லாமல் அவர்கள் இரட்சிப்பை அடைந்திருக்க முடியாது). அவர்களுடைய தனிப்பட்ட ஆவிக்குரிய விடுதலைக்குத் தக்கதாக அது அவர்களில் வெளிப்படுகிறது.

மனந்திரும்புதலை அடைய ஒருவன் எந்தளவுக்கு, எத்தனை ஆழமாகப் பாவஉணர்தலையும், குற்ற உணர்வையும் பெற்றிருக்க வேண்டும்? சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறபோது பிரசங்கிகள், ஆத்துமாக்கள் பாவத்தை அறிந்து உணர்வது அவசியம் என்று வலியுறுத்துவார்கள். அதற்கு உதாரணமாக கெட்டகுமாரனின் உவமை மற்றும் ஜோன் நியூட்டன் போன்றோரின் அனுபவங்களையும் விளக்குவார்கள். இதையெல்லாம் கேட்கிறவர்கள் எந்தளவுக்கு நம்மில் பாவஉணர்தலும், குற்ற உணர்வும் இருக்கவேண்டும் என்று சிந்திக்கக்கூடும். அதற்கு பதில் – கிறிஸ்துவில் இரட்சிப்படைய எந்தளவுக்கு அது தேவையோ அந்தளவுக்கு இருக்கவேண்டும். அதைத் தீர்மானிக்கிறவரும், கொடுக்கிறவரும் கர்த்தரே. நீதியுள்ள கர்த்தர்முன், தான் ஒன்றுமில்லாத பிச்சைக்காரனைப்போல நிற்கிறேன் என்றும், அவருடைய நீதிக்கட்டளைகளுக்கெதிராக வாழ்ந்து அவருக்கு எதிரியாக இருந்திருக்கிறேன் என்றும், தன்னுடைய இருதயம் பொல்லாப்புள்ளது என்று உணர்வதும், வருந்துவதும் இங்கே மிக அவசியம். இது எந்தளவுக்கு ஒருவருடைய இருதயத்தைத் தாழ்த்துகிறதென்பது ஒவ்வொரு விசுவாசியையும் பொறுத்து வேறுபட்டுக் காணப்படும். இதை ஒருவரில் உண்டாக்குகிற பரிசுத்த ஆவியானவர் அவரவருடைய வாழ்க்கைப் பின்னணி மற்றும் அனுபவங்களுக்கேற்பவே அதைச் செய்கிறார். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரேவித அளவுகோளில்லை. ஜோன் நியூட்டனைப் போலவோ அல்லது பாவஉணர்தலைப் பலமாதங்களுக்கு அனுபவித்து வருந்தி வாடிக் கர்த்தரிடம் சேர்கிற ஒரு மனிதரைப்போலவோ அனுபவங்களைக் கொண்டிராமல் இரட்சிப்பை அடைய முடியாது என்று எண்ணுவது மிகத் தவறு. அத்தகைய ஆழமான, நெடுநாட்களுக்கு நீடித்த அனுபவங்களை எல்லோரும் கொண்டிருப்பார்கள் என்று வேதம் போதிக்கவில்லை; அதை எதிர்பார்க்கவும் கூடாது. பாவத்தை உணர்ந்து, வருந்தி, மனந்திரும்ப வேண்டும் என்பதே வேதபோதனை.

பாவஉணர்த்துதலுக்கும் மனந்திரும்புதலுக்கும் இடையில் கால இடைவெளி இருக்கவேண்டுமா? அத்தகைய இடைவெளி இல்லாத மனந்திரும்புதல் பெலனற்றதா? இல்லை என்பதுதான் இரண்டு வினாக்களுக்கும் பதில். பாவஉணர்த்துதலுக்கும், மனந்திரும்புதலுக்கும் இடையில் சிலருடைய வாழ்க்கை அனுபவங்களைப் பொறுத்தவரையில் இடைவெளி காணப்படலாம். அதுவே எல்லோரிடமும் இருக்கவேண்டிய அவசியமுமில்லை; அப்படி இருந்ததுமில்லை. இந்த இரண்டிற்கும் இடையில் இருக்கவேண்டிய இடைவெளியைவிட மனந்திரும்புதலின் ஆவிக்குரிய தரமே முக்கியம். மனந்திரும்புதல் மெய்யானதா என்பதிலேயே வேதம் கவனம் செலுத்துகிறது. இயேசுவோடு கல்வாரியில் அறையப்பட்டிருந்த மனந்திரும்பிய கள்வனிடம் பாவஉணர்த்துதலுக்கும், மனந்திரும்புதலுக்கும் இடையில் நீண்ட இடைவெளி காணப்படவில்லை. ஆனால் பவுல் அப்போஸ்தலன் தமஸ்குவுக்குப் போகும் வழியில் இயேசுவை சந்தித்தபோது அவனுக்குப் பாவஉணர்த்துதல் உண்டாகி பின்பு தமஸ்குவை அடைந்து அனனியா அவன்மீது கரம் வைத்து ஜெபித்தபோதே முழு மனந்திரும்புதலும், விசுவாசமும் ஏற்பட்டது. இவர்கள் இரண்டு பேரிடமும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை ஒரேவிதத்தில் அமைந்திருக்கவில்லை. இருந்தபோதும் இருவருடைய விசுவாசமும் முழுமையான மெய்யான விசுவாசமாக இருந்தது.

முடிவாக . . .

பாவத்தை உணர்ந்து அதற்காக வருத்தப்பட்டுவிடுவதால் மட்டும் பரலோகம் போய்விட முடியாது என்று இந்த ஆக்கத்துக்கு ஏன் தலைப்புக் கொடுத்திருக்கிறேன் என்று இப்போது தெரிகிறதா? மெய்யான மனந்திரும்புதலின் ஓர் அங்கமாக பாவஉணர்வும் அதற்காக வருந்துதலும் இருந்தபோதும், மனந்திரும்புதலை நோக்கி அழைத்துப்போகாத பாவ உணர்தல் மெய்யான மனந்திரும்புதலோடு இணைந்ததல்ல. மெய்யாக மனந்திரும்பியவர்கள் (இரட்சிப்படைந்தவர்கள்), மனந்திரும்பிய பிறகு அதிகமாகவே பாவத்தை உணர்ந்து அதற்காக வருந்தி, தொடர்ச்சியான திருத்தத்தோடு வாழ்வார்கள். உங்களுடைய பாவ உணர்தலும், குற்றவுணர்வும் எந்தவகையைச் சேர்ந்தது? வாசியுங்கள் மத்தேயு 7:13–27 வரை. இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களை சிந்திக்க வைக்கட்டும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s