இதழ் 3, 1997
மார்டின் லூத்தரும், கல்வினும், ஜோன் நொக்ஸும் இன்று நம்மோடில்லாவிட்டாலும் அவர்கள் ஆரம்பித்து வைத்த பணி இன்னும் முடிந்துவிடவில்லை. இன்றைய சூழ்நிலையில் அவர்களைப் போன்ற சீர்திருத்தவாதிகள் அநேகர் தேவை.
சீர்திருத்தவாதத்தைப் பற்றிய அறிவு இன்று தமிழ் கிறிஸ்தவ உலகில் அரிதாக உள்ளது. இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். சீர்திருத்தவாதத்தைப் பின்பற்றி எழுந்த சமயக்குழுக்களும், சபைகளும் இன்று தமிழ்கூறும் நாடுகளில் லிபரல் சபைகளாக மாறியுள்ளன. சீர்திருத்தவாதப் போதனைகளில் அவை நம்பிக்கை இழந்துவிட்டன. சீர்திருத்தவாதம் காலத்திற்குத்தகாத போதனையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சீர்திருத்தவாதிகளைப் போன்ற போதகர்களும், சபைத் தலைவர்களும் தொடர்ந்து இந்நாடுகளில் தோன்றாததுதான். அனல் கக்கும் வேதப் பிரசங்கங்களும், போதனைகளும், பரிசுத்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போதகர்களும் குறைவடையும் போது, சமயக்குழுக்களும், சபைகளும் சீர்த்திருத்தப் பாதையைவிட்டு விலகும் நிலை தோன்ற அதிக காலமெடுக்காது.
சீர்திருத்தக் கோட்பாடுகளைத் தொடர்ந்து சபைகளில் போதிக்கத் தவறியதையும் இந்நிலைமைக்குக் காரணமாகக் குறிப்பிடலாம். விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் பயிற்சிகளையும் தூக்கியெறிந்துவிட்டு வேறு வழிகளைச் சபைகள் நாடிச்சென்றது ஆபத்திற்கு வழிகோலியது. கெரிஸ்மெடிக் இயக்கத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, மக்களுக்கு உற்சாக மூட்டும் வழிகளை நாடிச்சென்று சபைகள் நமது மூதாதையர்களின் வழிகளைத் துறந்தனர். இதனால் நமது முன்னோர்களின் பாதை நிராகரிக்கப்பட்டது. இன்று சீர்திருத்தவாதிகள் யார்? என்று கேட்கும் நிலைக்குக் காலத்தால் பின்தள்ளப்பட்டு திசையறியாது தள்ளாடிக் கொண்டிருக்கின்றன அநேக சபைகள்.
சமய சமரசம், புதிய சுவிசேஷக் கோட்பாடு, கெரிஸ்மெட்டிக் குழப்பம், சிரிப்பு மாயம், பென்ஸகோலா எழுப்புதல், இனி வரப்போகும் வேறு பல கள்ளப் போதனைகளிலுமிருந்து நம்மையும் நமது சபைகளையும் காத்துக்கொண்டு, சத்தியத்திற்காக உயிரைத் தந்துழைத்த நமது முன்னோர்களான சீர்திருத்தவாதிகளின் பாதையில் முன்னேறும் வழியெது?
இதற்கு ஒரே வழி, சீர்திருத்தவாதம் என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு நாமெல்லோருமே சீர்திருத்தவாதிகளாக மாறுவதுதான். மார்டின் லூத்தரும், கல்வினும், ஜோன் நொக்ஸும் அபூர்வப்பிறவிகளல்ல. அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே. ஆனால், வரலாறு புகழ்ந்து பேசுமளவுக்கு அவர்களை மாற்றியது எதுவெனில், சத்தியத்திற்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த அவர்களுடைய தியாகமனப்பான்மைதான். உண்மையான சீர்திருத்தவாதி தனது நலன்களில் அதிக கவனம் செலுத்தமாட்டான். சத்தியமே அவனுக்கு உயிர்மூச்சு. மார்டின் லூத்தரை நோக்கி கத்தோலிக்க மதகுருக்கள், “நீ எழுதியவைகள் அனைத்தும் தவறு என்று ஒப்புக்கொண்டால் உனக்கு உயிர்ப்பிச்சையளிப்போம், நீ நிம்மதியாக வாழலாம்” என்று கூறிய போது, அவர் அதற்குப் பதிலாக, “எனது மனச்சாட்சி வேதத்திற்குக் கட்டுப்பட்டது, அதற்கு விரோதமாக என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாகக் கூறினார். இத்தகைய உறுதி கொண்ட உள்ளமே அவரை உண்மையான சீர்திருத்தவாதியாக மாற்றியது. மேல் படிப்பிற்காக பிரான்ஸுக்குப் போய்க்கொண்டிருந்த ஜோன் கல்வின், ஜெனீவாவில் இருந்தபோது அவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட பெரல், அவரைச் சந்தித்து, “நீர் படித்தது போதும், இந்நாட்டிற்கு உமது உழைப்பு தேவை, சீர்திருத்தவாதம் உம்மை அழைக்கிறது” என்று வலியுறுத்திக் கூறியபோது, பலவீனமான சுபாவமுடையவராக இருந்தபோதும் அவ்வழைப்பைத் தட்டமுடியாத கல்வின் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு களத்தில் இறங்கினார். இந்தத் தியாக மனப்பான்மை அவரைச் சீர்திருத்தவாதியாக்கியது. சீர்திருத்தவாதிகளில் எவரை எடுத்துப் பார்த்தாலும் அவர்களது சொந்தத் திறமையோ, படிப்போ அவர்களைச் சீர்திருத்தவாதிகளாக மாற்றவில்லை, மாறாக கர்த்தரை விசுவாசித்து அவருக்காக எதையும் செய்யத் துணியும் தியாகமே அவர்களை இன்று நாடு போற்றும் மனிதர்களாக மாற்றியுள்ளது.
ஒரு சீர்திருத்தவாதியில் எத்தகைய குணாதிசயங்களைக் காணலாம்? இன்றைய சூழ்நிலை நாமனைவருமே சீர்திருத்தவாதிகளாக மாறவேண்டும் என்று எதிர்பார்க்குமானால், நம்மில் காணப்பட வேண்டிய இலக்கணங்கள் யாவை?
- சீர்திருத்தவாதி கர்த்தருடைய வேதத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவனாக இருப்பான். சீர்திருத்தவாதிகள் அனைவரது வாழ்க்கையிலும் இதனை நாம் பார்க்கலாம். பாரம்பரியங்களுக்கோ, தமது சொந்த அபிப்பிராயங்களுக்கோ மதிப்புக் கொடுக்காமல் கர்த்தருடைய வார்த்தைக்கு மட்டுமே மதிப்பளிப்பவன் சீர்திருத்தவாதி. அதனால்தான் வில்லியம் டின்டேல் கத்தோலிக்க சபை எவ்வளவுதூரம் எதிர்த்தபோதும் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேயாக வேண்டும் என்று தமது உயிரையும் பணயம் வைத்து அதைச் செய்தார். இதே மனப்பான்மையே மார்டின் லூத்தரை ஜெர்மானிய மொழியில் வேதத்தை மொழிபெயர்க்க வைத்து, ஐரோப்பா முழுவதுமே அக்கினிக் கொழுந்தாக சீர்திருத்தத்தைப் பரவச் செய்தது. வேதத்திற்குக் கட்டுப்பட்ட ஒரே காரணத்தால்தான் ஸ்கொட்லாந்து அரசியின் கொடுமைகளுக்குப் பயப்படாமல் ஜோன் நொக்ஸ் ஆவேசத்தோடு தொடர்ந்து பிரசங்கித்து ஸ்கொட்லாந்தில் சீர்திருத்தவாதம் ஏற்படக் காரணமாகவிருந்தார்.
- சீர்திருத்தவாதி சத்தியத்தில் அனுபவ பூர்வமாக வளர்ச்சியடைந்துவரும் மனிதனாக இருப்பான். அதாவது வெறும் அறிவுக்காக மட்டும் வேதத்தைப் படிக்காமல், அதன் மூலம் தன் வாழ்க்கையில் பரிசுத்தம் ஏற்படவேண்டும் என்று பாடுபடுபவன் சீர்திருத்தவாதி. இன்று கிருபையின் போதனைகளையும், சீர்திருத்தக் கோட்பாடுகளையும் பலர் அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ள அதேவேளை, வெறும் அறிவுக்காக மட்டும் அவற்றைப் படிக்கும் ஆபத்தும் கூடவே ஏற்பட்டுள்ளதை உணரவேண்டும். ஏட்டுப் படிப்பு மட்டும் ஒருவரது வாழ்க்கையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்திவிடாது. எவ்வளவு படிக்கிறோமோ அந்தளவுக்குத் தாழ்மையுடன்கூடிய பரிசுத்தம் வாழ்வில் காணப்பட வேண்டும். 16, 17 ஆம் நூற்றாண்டு கண்ட சீர்திருத்தவாதிகள் அன்றாடம் கர்த்தருக்குமுன் பரிசுத்த வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே வேதத்தைப் படித்தனர். ஏனெனில் வேதம் மட்டுமே, பரிசுத்த ஆவியின் வல்லமையால், ஒருவர் வாழ்வில் பரிசுத்தத்தை வளர்க்கக்கூடிய ஒரே நூலாக இருக்கிறது. அமெரிக்காவின் பெரும் பிரசங்கியான ஜொனத்தன் எட்வட்ஸ் அன்றாடம் ஒரு நாட்குறிப்பில் தான் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் எழுதி வைத்து அவற்றைத் தவறாது செய்ய சகல நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். தாம் படுக்கைக்குப் போகுமுன், கர்த்தருக்குமுன் ஜெபத்தோடு அவற்றை செய்திருக்கிறேனா என்று அன்றாடம் ஆராய்ந்து பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். எத்தனை பெரிய பிரசங்கியாகவும், மேதையாகவும் இருந்தபோதும் எட்வட்ஸ் அடக்கத்தோடு அனுபவபூர்வமான பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதில் தவறவில்லை.
- ஒரு சீர்திருத்தவாதி சத்தியத்தின் அடிப்படையில் மட்டும் சபை அமைப்பையும், சபை வளர்ச்சியையும் நாடும் மனிதனாக இருப்பான். வேதப் போதனைகளில் தெளிவு ஏற்பட்டு, நமது இறையியல் கோட்பாடுகள் வேத அடிப்படையில் சீர்படும்போது அங்கே சீர்திருத்தவாதம் தோன்றுவதைக் காணலாம். ஏனெனில், நமது எல்லா எண்ணங்களையும், நடவடிக்கைகளையும் சீராக்கும் ஒரே நூலாக வேதத்தை நாம் அப்போது பார்க்கத் தொடங்குகிறோம். அத்தோடு நமது தவறான போதனைகளைத் திருத்தி, தெளிவான சத்தியத்தை உறுதியாக நம்பி அதை வெளிப்படையாக அறிக்கையிடும் புது பலத்தையும் வேதம் அளிக்கிறது. அதனால் நமது ஆராதனையும், வழிபாட்டு முறைகளும் வேதப் போதனையின்படி சீரடைகின்றன. பாரம்பரிய சடங்காச்சாரங்கள் பகலவனைக் கண்ட பனிபோல் மறைந்தோடிவிடுகின்றன. இதுவே லூத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. ஆகவேதான், தொண்ணூற்று ஐந்து கோட்பாடுகளை வேத அடிப்படையில் வரைந்து கத்தோலிக்க சபைக்கெதிராக அவர் போர்க்கொடி எழுப்பினார். அன்றுமுதல், இதுவரையும் மறைத்து வைக்கப்பட்டிருந்த விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல், கிருபையின் மூலம் இரட்சிப்பு, விசுவாசிகளின் ஆசாரியத்துவம் போன்ற போதனைகளை மக்கள் மறுபடியும் கேட்கும் வழி ஏற்பட்டது. ஒரு சீர்திருத்தவாதி தன் வாழ்க்கையிலும், சபையிலும் இத்தகைய மாற்றங்கள் வேதபூர்வமாக ஏற்பட அயராது உழைப்பான்.