இம்மியளவு இறையியல்

விசுவாசத்தின் மூலம்

இன்று விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும்விட வேறு எத்தனையோ வழிகளை பாவிகள் கிறிஸ்துவை அடைய சுவிசேஷகர்களும், சபைகளும் காட்டிக்கொண்டிருக்கின்றன. வேறெதெல்லாம் ஒருவனிடம் காணப்பட்டபோதும், அவன் தன் இரட்சிப்புக்காக விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவை அடையாவிட்டால் அவனுக்கு எந்தவொரு பலனுமில்லை.

பரிசேயத்தனம்

பாவத்திற்கு இடங்கொடுக்காமல் பரிசுத்தமாக வாழ்வதை நடைமுறையில் கொண்டிராதவர்களுடைய ஜெபங்களும், ஆராதனையும் பரிசேயத்தனத்தின் அடையாளங்கள். கிறிஸ்தவன் என்ற பெயரோடு ஒருவன் எத்தனைபேருக்கு சுவிசேஷத்தைச்சொல்லிப் பிரசங்கம் செய்தாலும் அவனுடைய சொந்தவாழ்க்கையும், குடும்பவாழ்க்கையும் சிதழ்பிடித்து சீரழிந்து இருக்குமானால் அவன் இருதயம் கிறிஸ்துவின் கிருபைக்குத் தொலைதூரத்தில் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

நீதிமானாக்குதல்

நீதிமானாக்குதல் கிறிஸ்தவத்தின் அடித்தளப்போதனை. அதை வீழ்த்தினால் கிறிஸ்தவம் வீழ்ந்துவிடும். 16ம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதிகள் இதை நிலைநிறுத்தக் கடும்போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. நீதிமானாக்குதல் விசுவாசத்தின் மூலமாகவே கிடைக்கிறது. அதனால்தான் சீர்திருத்தவாதம் இதைவிளக்க ‘விசுவாசம் மட்டுமே’ (Faith alone) எனும் வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்துகிறது. இதன் அர்த்தம் – நீதிமானாக்குதல் கிரியைகளினாலோ அல்லது வேறு எந்தக் கிருபைகளினாலும் அல்லாமல் விசுவாசத்தினூடாக மட்டுமே கிடைக்கிறது என்பதே (ரோமர் 4; கலாத்தியர் 3:5-14). இருந்தபோதும் இந்த விசுவாசம் ஒருபோதும் தனிமையானதல்ல (Faith is never alone); ஒருவருக்கு கிருபையின் ஈவாக இது கிடைக்கிறபோது இரட்சிப்புக்குரிய ஏனைய கிருபைகள் அனைத்தும் இதோடு இணைந்தே வருகின்றன.

பரிசுத்தமாக்குதல்

பரிசுத்தமாக்குதல் கிருபையின் ஆசீர்வாதங்களில் ஒன்று. கிருபையை அடைந்தவர்கள் விடாமுயற்சியுடன் அதில் ஈடுபடவேண்டியது அவர்களுடைய கடமை. இருந்தபோதும், அது இறுதியில் பரிசுத்த ஆவியானவரின் செயல். அதில் அவரோடு இணைந்து நாம் செயல்படுகிறோம். அதை ஆவியானவர் நம்மில் செய்தபோதும் நம்பங்கில்லாமல் அவர் அதைச் செய்வதில்லை; அவரில்லாமல் நாம் அதைச் செய்வதுமில்லை. அதில் நம் செயல்களையும் மீறி ஆவியானவரின் செயல் நம்மில் நிகழ்கிறது. இவ்விதத்தில் கிருபையை அடைந்தவர்களை இயேசு தம் மகிமைக்காகத் தொடர்ந்து ஆவியினால் பரிசுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார் (எபேசியர் 5).

பரிசுத்தவான்களின் விடாமுயற்சி

பரிசுத்தவான்களின் விடாமுயற்சி என்பது சீர்திருத்த கல்வினிச போதனைகளில் இரட்சிப்பைக்குறித்த முக்கியமான போதனை. இரட்சிப்பை இலவசமாக வழங்கும் கர்த்தர் அந்த இரட்சிப்புக்குரிய கனிகளை வெளிப்படுத்தும்படி நாம் ஆவிக்குரியசெயல்களை விடாமுயற்சியுடன் செய்துவாழ வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அந்தக் கிரியைகளை நாம் கர்த்தரின் துணையோடேயே செய்கிறோம். அவற்றை நாமே செய்கிறோம்; அவற்றைக் கர்த்தர் நம்மில் செய்வதில்லை. அதில் கர்த்தரும் நாமும் இணைந்து செயல்படுகிறோம். அவரில்லாமல் அவற்றை நாம் செய்வதில்லை; அவர் நம்மூடாக நம்மில் செயல்படுகிறார். அவற்றை நாம் 50%, கர்த்தர் 50% என்று பிரித்துச் செய்வதில்லை. அந்தக் கிரியைகள் நம்முடைய கிரியைகள், இருந்தாலும் அந்தக் கிரியைகளின் மூலமே கர்த்தர் நம்மைப் பாதுகாக்கிறார். நம் விடாமுயற்சியல்ல நம்மைப் பாதுகாப்பது; நம் விடாமுயற்சியையும் மீறிக் கர்த்தர் நம்மைப் பாதுகாக்கிறார். நம் விடாமுயற்சி இறுதியில் அவருடைய வல்லமையிலேயே தங்கியிருக்கிறது. இருந்தபோதும் நம் விடாமுயற்சி இல்லாமல் நாம் பரலோகம் போகமுடியாது.

லீகலிசமும், அன்டிநோமியனிசமும்

லீகலிசமும், அன்டிநோமியனிசமும் கிறிஸ்தவத்தின் இரட்டை எதிரிகள். சுவிசேஷக் கிருபையைவிட, கட்டளைகளை மட்டும் பின்பற்றுவதில் குறியாக இருந்து அதன் மூலம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அடைய முயல்கிறது லீகலிசம். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அடைய எந்தக் கட்டளைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்கிறது அன்டிநோமியனிசம். ‘இந்த இரண்டும் வெவ்வேறு தோற்றம் கொண்ட ஒரே தாய் வயிற்றில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்’ என்கிறார் சின்கிளெயர் பேர்கசன் எனும் இறையியலறிஞர். இதில் ஆபத்து என்ன தெரியுமா? இந்த இரண்டும் கிறிஸ்தவனில் ஒரே நேரத்தில் இருந்துவிட முடியும் என்பதுதான். சுவிசேஷ அன்பில்லாமல் எந்தக் கட்டளைகளைப் பின்பற்றினாலும் நீங்கள் ஒரு லீகலிஸ்ட். சுவிசேஷ அன்பிருந்தும் கட்டளைகளை உதறித்தள்ளினால் நீங்கள் ஒரு அன்டிநோமியன். (யோவான் 14:15; 1 யோவான் 5:3; 2:6).

பாவம்

பாவம் பொல்லாதது; மனிதனுக்குள் இருக்கும் மோசமான வியாதி அது. அவனை அது தொட்டுப் பாதித்திராத இடமே இல்லை. பாவத்தைச் செய்வதால் மனிதன் பாவியல்ல; பாவியாக இருப்பதால் அவன் பாவத்தைச் செய்கிறான். பாவத்தை மனிதனின் உருவத்தில் நாம் பார்ப்பதில்லை; அவனுக்குள் வைரஸைப்போல் அது மறைந்திருக்கிறது; அவனுடைய சிந்தனையிலும், பேச்சிலும், செயலிலுமே அது வெளிப்படும். பாவத்தின் பாவத்தைப்போல் கோரமானது எதுவுமில்லை.

நற்கிரியைகள்

நற்கிரியைகளை இயல்பாக மனிதனால் செய்யவழியில்லை; அவற்றிற்கு எதிரானவற்றை மட்டுமே அவன் இயல்பில் செய்வான். பாவியான அவனுடைய கிரியைகள் எவையும் ஒருபோதும் நல்லவையல்ல; கடவுளின் பார்வையில் அவை வெறும் கந்தல்கள் மட்டுமே. மனிதனுடைய கிரியைகள் எதுவும் ஆவிக்குரியவிதத்தில் அவனைப் பரிசுத்தப்படுத்தாது; பரலோகத்துக்கும் அனுப்பாது. சிலுவைப்பலியினால் கிறிஸ்து சம்பாதித்த நீதி மட்டுமே நம்மை நீதிமான்களாக்கும்; நீதியான கிரியைகளையும் செய்யவைக்கும். நற்கிரியைகளைச் செய்துவாழ கிறிஸ்துவில் விசுவாசம் தேவை. அவரை விசுவாசிக்காதவர்கள் நீதிமான்களுமல்ல; நற்கிரியைகளைச் செய்யக்கூடியவர்களுமல்ல.

சிலுவை மரணம்

இரட்சிப்பை அடையப் பாவி தானே வழிகண்டுகொள்ளும் வசதியேற்படுத்த கிறிஸ்து சிலுவையில் மரித்தாரா அல்லது பாவிகளுக்கான இரட்சிப்பை நிறைவேற்ற மரித்தாரா? அதற்கான வசதியை ஏற்படுத்த அவர் மரித்தார் என்கிறது ஆர்மீனியனிசம். இரட்சிப்பை நிறைவேற்ற அவர் மரித்தார் என்கிறது கிருபையின் போதனைகள். முதலாவது, பாவிக்கு இரட்சிப்பில் பங்களித்து கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொச்சைப்படுத்துகிறது. இரண்டாவது, இரட்சிப்பை இறையாண்மையுள்ள கடவுளின் இலவசமான ஈவாக விளக்குகிறது. முதலாவது, பாவியின் பங்கில்லாமல் கிறிஸ்துவின் மரணத்தால் எந்தப் பலனுமில்லை என்கிறது. இரண்டாவது, கிறிஸ்துவின் மரணத்தைத்தவிர வேறெதுவும் பாவியை இரட்சிக்க முடியாதென்கிறது. ஆர்மீனியனிசம், மனிதனை அவனுடைய இரட்சிப்புக்கு முழுப்பொறுப்பாளியாக்குகிறது. கிருபையின் போதனைகள் மனிதன் தன் இரட்சிப்புக்கு கர்த்தரில் 100% தங்கியிருக்கிறான் என்கிறது. ஆர்மீனியனிசம் மனிதனை மேன்மைப்படுத்துகிறது. கிருபையின் போதனைகள் கர்த்தரை மகிமைப்படுத்துகின்றன.

முன்குறித்தல்

விசுவாசத்திற்காக சிலர் முன்குறிக்கப்பட்டிருப்பதை ஏற்கமறுக்கிறவர்கள் இருக்கிறார்கள். கர்த்தரால் முன்குறிக்கப்பட்டிருக்கிறவர்கள்தான் விசுவாசத்தை உரியகாலத்தில் அடைகிறார்கள் என்கிறது வேதம். அது இல்லையென்றால் இரட்சிப்பு யாரிடமிருந்து வருகிறது? முன்குறித்தல் இல்லையென்றால் இரட்சிப்பு கடவுளிடமிருந்து வரவில்லை என்றாகிவிடும். அவரிடமிருந்து வராதது இந்த உலகத்தைச் சார்ந்தது; அது நிலைக்காது. மனிதன் விசுவாசத்திற்காக முன்குறிக்கப்படாதிருந்தால் மறுபிறப்பும், விசுவாசமும் மனிதனிலிருந்து பிறந்தவைகளாகிவிடும். பாவியாகிய மனிதனில் பிறக்கும் எதுவும் பாவக்கறைபடிந்தது; பரிசுத்தமற்றது. மனிதகிரியையில் தங்கியிருக்கும் இரட்சிப்பு இந்த மண்ணோடு போய்விடும்; பரலோகத்தில் இருந்து வருவது நித்தியமானது. மனிதரில் சிலர் முன்குறிக்கப்பட்டிருப்பதால்தான் அவர்கள் நிலையான நித்திய இரட்சிப்பை கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தின் மூலம் அடைகிறார்கள்.

மனித சித்தம்

பிறப்பில் இருந்தே மனிதன் சுயாதீன சித்தத்தைக் கொண்டிருக்கிறான். அவனுடைய சித்தம் அதன் இயல்புக்கேற்றவிதத்தில் மட்டுமே முழுச்சுதந்திரத்தோடு இயங்கும்; மாறாக இயங்கும் வல்லமை அதற்கில்லை. இயல்பில் பாவியாகிய மனிதன் சகலவித சுதந்திரத்தோடும், விருப்பத்தோடும், ஆர்வத்தோடும், பெலத்தோடும் பாவத்தைச் செய்கிறான். பாவத்தைத்தவிர வேறெதையும் செய்யும் சித்தம் அவனுக்கில்லை. அவனுடைய சித்தமும், கிரியைகள் அனைத்தும் பாவத்தால் கறைபடிந்திருக்கின்றன. பாவக்கறையில்லாத எந்தச் செயலையும் மனிதன் செய்யக்கூடிய நிலையில் இல்லை. எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? சிறுத்தை தன் புள்ளிகளைப் போக்கிக்கொள்ள முடியுமா? மனிதன் தன் சித்தத்தை அதன் இயல்புக்கு மாறாகப் பயன்படுத்த வழியில்லை.

வேதவார்த்தை

வேதவார்த்தையில்லாமல் விசுவாசம் வராது. ‘நான் செய்ததெல்லாம் வார்த்தையைக் கொடுத்தது மட்டுந்தான்’ என்றார் மார்டின் லூத்தர். ஆவியானவர் பயன்படுத்தும் கருவி வார்த்தை. குழாய் இல்லாமல் தண்ணீர் கிடைக்குமா? வார்த்தையால் வராதது வெறும் காகிதக் கப்பல். ஆவியும் வார்த்தையும் இணைந்தே ஆவிக்குரிய விசுவாசத்தை அடையச்செய்கின்றன. வார்த்தை மட்டும் அதைச்செய்வதில்லை; ஆவி மட்டும் அதைத் தருவதில்லை. வார்த்தையில்லாத சுவிசேஷப்பணி வரண்டுபோன பாலைவனம். ஆவியில்லாத பிரசங்கம் அக்கினியில்லாத அடுப்பு.

ஆராதனை

ஆராதனை கர்த்தருக்குரியது; கர்த்தர் கட்டளையிட்டு நாம் கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டது. அதில் அவருக்கே இறையாண்மையுண்டு; அதை ஆளுகிறார் கர்த்தர். தன் வார்த்தையால் அதை ஆண்டு பாதுகாக்கும் கர்த்தர், வார்த்தையின்படி ஆராதனை செய்யச்சொல்லுகிறார். ஆராதனையின் பகுதிகளை வார்த்தை மட்டுமே விளக்குகிறது; அதில் எதையும் நுழைப்பதும், அகற்றுவதும் சிலை வணக்கம் போன்றது. அவர் கேட்காத ஆராதனை அந்நிய நெருப்பு; கேட்டதைக் கொடுக்க மறுப்பதும் அந்நிய ஆராதனை. அவரைப் போற்றித் துதிக்க மட்டுமே ஆராதனை; நம்மை மகிழ்விக்கும் அனைத்திற்கும் பெயர் மானுடத்துதி. ஆராதனையில் இருக்கவேண்டியது தேவபயமும், தாழ்மையும்; இருக்கக்கூடாதது தன்னலமும், தற்பெருமையும். மொத்தத்தில் கர்த்தர் ஏற்படுத்திய ஆராதனையால் கர்த்தரை மட்டுமே மகிமைப்படுத்தவேண்டும்.

இறையியல்

சத்தியத்திற்கு (Truth) இன்னொரு பெயர் இறையியல் அல்லது இறைபோதனை (Doctrine). இயேசுவுக்கு இன்னொரு பெயர் வார்த்தை (யோவான் 1:1); சத்தியம் (யோவான் 14:6). சத்தியம் உன்னை விடுதலையாக்கும் என்றார் இயேசு (யோவான் 8:32). சத்திய ஞானத்தில் உங்களை உயர்த்தவைக்கின்ற ஆவியைக் கர்த்தர்தர ஜெபிக்கிறேன் என்றார் பவுல் (எபேசியர் 1:18). இறையியல் இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை; கிறிஸ்தவத்தின் அடித்தளம் கிறிஸ்தவ இறையியல். நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோமா என்பதையும் இறையியலே உறுதிசெய்கிறது. இறையியல் இல்லாமல் சுவிசேஷம் இல்லை; மெய்யான விசுவாசத்திற்கும் இடமில்லை (யோவான் 8:31). இறையியலால் அலங்கரிக்கப்படாத பிரசங்கங்கள் அலங்காரம் செய்யப்பட்ட பிணங்கள்; உப்பில்லாப் பண்டங்கள். சத்தியத்தில் நிரம்பியிராத இருதயங்கள் ஆத்மீகப் பட்டினியை அனுபவிக்கின்றன. உணவில்லாமல் உயிர்வாழ முடியுமா? இறையியல் இல்லாத திருச்சபைகள் வெறும் மயானங்கள்; அங்கே பிணங்களுக்கு மட்டுமே வேலை. இறையியலை உதாசீனப்படுத்துகிறவன் இறைவனையே வேண்டாம் என்கிறான்.

மனிதனும் தெய்வமுமாய்

தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து தேவனும், மனிதனுமாய் இந்த உலகத்தில் பிறந்தார். மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற அது அவசியமாய் இருந்தது. தேவனாக மட்டும் கிறிஸ்து மீட்பின் திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது; மனிதனாக மட்டும் பிறந்தும் அதைச் செய்திருக்க முடியாது. மனிதனின் பாவங்களுக்கு நிவாரணம் காண பாவமற்ற மானுடம் தன்னைப் பலிகொடுக்க வேண்டியிருந்தது. தெய்வீகத்தால் மட்டும் அதைச் செய்திருக்கமுடியாது. தெய்வீகமும் மானுடமும் இணைந்த ஒருவர் தேவை. நித்தியத்தில் இருந்து இயேசு தெய்வீகத்தோடு மட்டுமே தேவகுமாரனாக இருந்தார். அவர் தன் தெய்வீகத்தோடு மானுடத்தை இணைத்துப் பாவமில்லாதவராகப் பிறந்தார்; இயேசு மட்டுமே அப்படிப் பிறந்தவர். கிறிஸ்துவில் தெய்வீகம் மானுடத்தோடு கலக்கவில்லை; இரண்டும் தனித்தன்மையோடிருந்தன. இயேசுவில் இரண்டு நபர்கள் இருக்கவில்லை; அவர் ஒருவராகவே இருந்தார். அவரது தெய்வீகம் மானுடத்தை ஆக்கிரமிக்கவில்லை; இரண்டும் கலக்காமலும், ஒன்றையொன்று பாதிக்காமலும், கிறிஸ்துவில் ஒன்றாக இருந்தன. சபை வரலாற்றில் பல போலிப்போதனைகள் இதைத் தவறாக விளக்கியிருக்கின்றன; விளக்கியும் வருகின்றன. இந்த சத்தியம் கிறிஸ்தவத்தின் உயிர்நாடி.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s