நூலறிமுகம்
ரால்ப் வென்னிங் (Ralph Venning, 1622-1674) ஒரு பியூரிட்டன் பெரியவர். ஆங்கிலேய ஒத்துழையாமைவாதப் பிரசங்கிகளில் ஒருவர் (Nonconformist). இங்கிலாந்தில், டெவன்சயர் (Devonshire) என்ற இடத்தில் பிறந்து கேம்பிரிஜ்ஜில் இருந்த இம்மானுவேல் கல்லூரியில் பயின்று பட்டங்களைப்பெற்று, 25 வருடங்கள் சவுத்வேர்க் எனுமிடத்தில் இருந்த சபையில் (St. Olave’s Church in Southwark) போதகராகப் பணியாற்றியவர். 1662ம் ஆண்டில் ஒத்துழையாமைக்கு எதிரான அரச கட்டளையால் திருச்சபைப் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். அதற்குப் பிறகும் ஒரு சுயாதீன சபையில் ரொபட் பிரேக் (Robert Bragge) என்பவரோடு பலகாலம் போதகராகப் பணியாற்றியுள்ளார். 1674, மார்ச் 10ம் தேதி அவர் தன்னுடைய 53ம் வயதில் இறைபதமடைந்தார். பன்ஹில் நிலம் (Bunhill Fields) எனுமிடத்தில் அவர் புதைக்கப்பட்டார்.
ரால்ப் வென்னிங் 1669ல் எழுதிய மிகவும் முக்கியமான, அதேநேரம் பிரபலமான நூல் The Plague of Plagues. ‘நோய்களிலெல்லாம் தலையாய நோய்’ என்று இதை எழுத்துபூர்வமாக மொழிபெயர்க்கலாம். இதற்கு ஒரு உபதலைப்பையும் அவர் தந்திருந்தார். அது The Sinfulness of Sin. அதாவது, ‘பாவத்தின் பாவம்’. பியூரிட்டன் பெரியவர்களைப்போல பாவத்தை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து ஆராய்ந்து விளக்கியவர்கள் இருக்கமுடியாது. உண்மையில் எல்லாப் பியூரிட்டன் பெரியவர்களுமே அந்தவகையில் பாவத்தை ஆராய்ந்து பிரசங்கித்திருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் முக்கிய பிரசங்கிகளில் ஒருவரான டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் தன்னுடைய சுவிசேஷத்தை எப்போதுமே பாவத்தில் இருந்து ஆரம்பித்து விளக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாவத்தில் ஆரம்பித்து அதை விளக்காத சுவிசேஷம் அவரைப் பொறுத்தவரையில் சுவிசேஷமே அல்ல. அவர் பியூரிட்டன்களின் எழுத்தில் காதல்கொண்டிருந்து அந்தப் பாணியைத் தன் பிரசங்கத்தில் பின்பற்றியவர்.
இன்று மேலை நாடுகளில் மட்டுமல்லாமல் கீழைத்தேய நாடுகளிலும் பாவத்தை விசுவாசிகளும், சபைகளும் உதாசீனப்படுத்தி வருகின்றன. பாவத்தை ஆழமாக ஆராய்ந்து பார்ப்பதிலும், பிரசங்கிப்பதிலும் காலத்தை செலுத்தி ஆத்துமாக்களைத் தொல்லைப்படுத்தக்கூடாது என்ற ஒரு தவறான, ஆபத்தான மயக்கநிலை இன்று நம்மினத்திலும் உலவிவருகிறது. கிறிஸ்துவிடம் ஒருவர் வந்தவுடனேயே அவருடைய பாவத்துக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டதாகவும், இனிக் கிறிஸ்தவ சுதந்திரத்தை சாகும்வரை இன்பமாக அனுபவிக்கவேண்டியதுதான் அவருடைய கடமை என்ற போலிப்போதனை, உண்மையைப்போல திருச்சபைகளைப் பாதித்து ஆத்துமாக்களை மோசம்போக்கிக் கொண்டிருக்கிறது. அதனால் பாவத்தைப்பற்றிய பிரசங்கங்களை மட்டுமல்லாமல் பாவத்தைப் பாவமாகப் பார்த்து, ஆத்துமாக்கள் அதைச் செய்துவிடுகிறபோது வேதபூர்வமாக அதை அணுகி அதற்குப் பரிகாரம் செய்து ஆத்துமாக்களுக்கு உதவுகிற போதக ஊழியத்தையும் இன்று காணமுடியாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பாவம் இன்று உதாசீனப்படுத்தப்படுவதுதான். அதற்காக பாவத்தைப்பற்றி பிரசங்கிகள் பேசுவதேயில்லை என்று நான் சொல்லவரவில்லை; அவர்கள் பாவத்தைப் பாவமாக வேதம் விளக்குகிறமுறையில் கணித்து விளக்குவதில்லை என்றே சொல்லவருகிறேன்.
பாவத்தை வெறும் மானுட பலவீனமாகவே அநேகர் பொதுவாகக் கணிக்கிறார்கள். அந்த பலவீனம் போக்கப்படுவதற்காக பிரசங்கிகள் கொடுக்கும் மருந்து, உலகத்தைச் சார்ந்த உளவியல் சார்பானதாகவோ அல்லது சமுதாய சீர்திருத்தமாகவோ மட்டுமே இருந்து வருகிறது. இதனால் கிறிஸ்துவின் சுவிசேஷமும் அடியோடு பாதிப்புக்குள்ளாகிறது. பாவம் வெறும் பலவீனமாக மட்டுமே இருக்குமானால் தேவகுமாரன் இந்த உலகுக்கு வந்திருக்கவும், சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுக்கவும் வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. பாவத்தைப் பலவீனமாகப் பார்ப்பது சுவிசேஷத்தைக் கொச்சைப்படுத்துகிறது; கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளிலும், மரணத்திலும் சேற்றைவாரி இறைக்கிறது. என்றுமில்லாதவகையில் இன்று மேலைநாடுகளிலும் கீழைத்தேய நாடுகளிலும் பாவத்தைப்பற்றிய வேதபூர்வமான போதனைகளும் பிரசங்கமும் அவசியமாக இருக்கின்றன. சுவிசேஷம் சுவிசேஷமாகப் பிரசங்கிப்பட வேண்டுமானால், பரிசுத்த ஆவியானவரின் ஆத்மீக எழுப்புதலைத் திருச்சபையில் காணவேண்டுமானால் பாவத்தைப் பற்றிய போதனைகளும் பிரசங்கங்களும் மறுபடியும் வேதபூர்வமாகக் கொடுக்கப்படுவது அவசியம். பாவத்தைப் பாவமாகப் பார்க்காவிட்டால் சுவிசேஷத்தின் மூலம் இரட்சிப்பிற்கு வழியில்லை.
ரால்ப் வென்னிங்கினுடைய நூலை இங்கிலாந்தில் இயங்கும் கிருபை வெளியீடுகள் நவீன ஆங்கிலத்தில் மூலத்தை சுருக்கிவெளியிட்டார்கள். இப்படி மூலநூலை சுருக்குவது இலகுவான காரியமல்ல; அதுவும் ஒரு பியூரிட்டன் பெரியவரின் நூலைச் சுருக்குவது கடினமே. மூலத்தின் தன்மையை சுருக்கம் இழந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. நிச்சயமாக இந்தச் சுருக்கம் மூலநூலைப்போல இருக்க வழியில்லை. மூலநூல் 17ம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் இன்றைய வாசகர்களுக்கு வாசிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டமானதாக இருக்கும். இருந்தபோதும் ரால்ப் வென்னிங்கின் மூலநூலின் பயனை தற்கால வாசகர்கள் அடையும்படி ஜோன் ஆப்பில்பீயும், பீட்டர் கிங்கும் அதைச் சுருக்கியளித்திருக்கிறார்கள். இறைபதம் அடைந்துவிட்ட ஜோன் ஆப்பில்பீ எனக்குத் தெரிந்த ஒரு நண்பர். முப்பத்தியாறு வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் அவருடைய வீட்டில் அவரையும் அவருடைய மனைவியையும் சந்தித்து உணவருந்தியபோது எழுத்துப்பணியிலும், மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடும்படி மிகவும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். உங்களைப்போன்ற ஒருவர்தான் இதைச் செய்யமுடியும் என்ற அவருடைய வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் ஆப்பில்பீயின் உந்துதலும் ஜெபமுமே நான் இன்று செய்துவரும் சிறு பணிகளுக்குக்கூட காரணமாக இருந்திருக்கிறது.
பியூரிட்டன் எழுத்துக்கள் 17ம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் இருப்பதையும்விட, இன்னுமொரு பிரச்சனை நம்மினத்து மக்களுக்கு இருக்கிறது. பியூரிட்டன் கால வரலாற்று, இறையியல் பின்னணி நம்மக்களுக்குப் பரிச்சயமில்லாதது. அது தெரியாமல் பியூரிட்டன் எழுத்துக்களின் முழு பலனையும் அடையமுடியாது. அத்தோடு, பியூரிட்டன்களின் இறையியல் கண்ணோட்டம், ஆழ்ந்த நுணுக்கமான அணுகுமுறை, கறைத்துக்குடித்திருக்கும் வேதத்தை அவர்கள் வசனம் வசனமாக விளக்கி இறையியல் சத்தியங்களைத் துல்லியமாக எண்ணற்ற பயன்பாடுகளோடு விளக்குகின்ற தன்மை ஆகியவை அடங்கிய ஆத்மீக ஊழியங்களை அறவே காணமுடியாத நம்மினத்தில் அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அநேகருக்கு இருக்காது. இதற்கும் மேலாக பியூரிட்டன் போதகர்கள் ஆத்தும வைத்தியர்களாக இருந்தனர். அவர்களைப்போல ஆத்துமாக்களை ஆழமாக அறிந்துவைத்திருந்த போதகர்களை வேறுகாலப்பகுதிகளில் காணமுடியாது. மனித இருதயத்தின் மோசமான தன்மையை அவர்கள் துல்லியமாக அறிந்துவைத்திருந்து போதகக் கண்காணிப்பு செய்வதில் மன்னர்களாக இருந்தனர். அதனால்தான் ரால்ப் வென்னிங்கும் மனித இருதயத்தை மாசுபடுத்தி ஆண்டுவரும் பாவத்தை அத்தனைத் தெளிவாகவும், ஆழமாகவும் கல்லில் இருந்து நாருரிப்பதுபோல் ஆராய்ந்து விளக்கியிருக்கிறார். மனித இருதயத்தை ஆழமாக அறிந்திராத போதகர்கள் தேர்ந்த ஆத்தும வைத்தியர்களாக இருக்கமுடியாது என்பதில் பியூரிட்டன்கள் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருந்தனர்.
அத்தோடு பியூரிட்டன்களின் எழுத்துநடையும் இன்றைய எழுத்துக்களைவிட வித்தியாசமானது. எதையும் சுருக்கமாக சொல்லிவிடும் நூல்கள் பரவலாகக் காணப்படும் இக்காலத்தில் சில நூறு பக்கங்களில் ஆழமாக சத்தியத்தை விளக்குகின்றனவாக அவர்களுடைய நூல்கள் இருக்கின்றன. அதனால் எந்தப் பியூரிட்டன் நூலுக்கும், தேர்ந்தவர்களால் எழுதப்பட்ட, தற்கால வாசகர்கள் விளங்கிக்கொள்ளும்படியான ஒரு நல்ல அறிமுக விளக்கம் இன்று அவசியம் தேவை. அத்தகைய அறிமுக விளக்கமில்லாது பியூரிட்டன் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவது வாசகர்களுக்கு அதிக பலனளிக்காது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. இதற்கு உதாரணமாக 19ம் நூற்றாண்டு போதகரான ஜே. சி. ரைலினுடைய ‘பரிசுத்தம்’ என்ற ஆங்கில நூலை எடுத்துக்கொள்ளலாம். அந்த நூலை சிறப்பாக்குவது அதற்கு ஜே. ஐ. பெக்கர் எழுதிய அறிமுக விளக்கம். ரைலின் கால வரலாற்று, இறையியல் பின்னணிபற்றி நன்கு அறிந்திருந்த பெக்கர் எந்த நோக்கத்தில் ரைல் அந்த நூலின் உள்ளடக்கத்தைப் பிரசங்கம் செய்திருந்தார், எழுதி வெளியிட்டார் என்பதை அருமையாக விளக்கியிருந்தார். ஆங்கிலத்தில் உள்ள அந்த அறிமுகமே ரைலின் நூலைத் தற்காலத்தில் பிரயோஜனமாக இருக்கப் பேருதவி புரிகிறது. அதேபோலத்தான் ஜே. ஐ. பெக்கர், ஜோன் ஓவனின் ‘பாவத்தை அழித்தல்’ என்ற நூலுக்கான திருத்தப்பதிப்பொன்றுக்கும் அறிமுக விளக்கம் தந்திருந்தார்.
ரால்ப் வென்னிங்கின் நூல் எந்தவிதத்தில் முக்கியமானது? முதலில், அது பாவத்தைப் பாவமாக அடையாளங் கண்டுகொள்ள உதவுகிறது. அதைத்தான் கிறிஸ்தவ சமுதாயம் இன்றைக்கு தவிர்க்க முனைகிறது. ரால்ப் வென்னிங் எந்தவித கூச்சமோ, பயமோ, பெயர் கிடைக்காமல் போய்விடுமே என்ற தவிப்போ இல்லாமல் உள்ளதை உள்ளபடி விளக்கியிருக்கிறார். பாவம் என்றால் என்ன என்று விளக்குவதோடு அவரது நூல் ஆரம்பமாகிறது. பாவத்தை அகோரமான ஆபத்தான பாவம் என்று வர்ணிக்கிறார் ரால்ப் வென்னிங். பாவம் எப்படிச் சம்பவித்தது என்பதில் இருந்து, பாவம் என்றொன்றில்லாவிட்டால் கிறிஸ்தவ இறையியலுக்கே இடமில்லை என்று எந்தெந்த சத்தியங்களையெல்லாம் பாவம் பாதிக்கிறதென்று நூலாசிரியர் விளக்குகிறார். கட்டடம் கட்டுவதற்கு அடித்தளம் எத்தனை உறுதியானதாக இருக்கவேண்டுமோ அந்தளவுக்கு உறுதியான அடித்தளத்தை ஆரம்பத்திலேயே பாவத்தை விளக்குவதில் நாட்டிவிடுகிறார் ஆசிரியர். வென்னிங்கின் நூலில் வேதத்தைத் தவிர வேறெதற்கும் இடமில்லை; சமுதாயத்தையோ, சந்தர்ப்ப சூழ்நிலைகளையோ, உளவியலையோ வம்புக்கிழுத்து பாவத்தை நூலளவு மெல்லியதான நம்தோலைக்கூடப் பாதிக்காத சாதாரண கொசுக்கடியாகக் காட்டும் நவீன நயவஞ்சகப் பிரசங்கிகளின் நலினத்தையெல்லாம் அவரில் காணமுடிவதில்லை. பாவத்தைப் பாவமாகப் பார்க்காவிட்டால் அதன் பாவத்தன்மையை எப்படி அறிந்துகொள்ள முடியும்?
இரண்டாவதாக, பாவத்தின் கோரத்தன்மையை நூல் தோலுரித்துக் காட்டுகிறது. எந்தளவுக்கு அது கடவுளுக்கெதிரானதாகவும், மனிதனுக்கு ஆபத்தானதாகவும் இருக்கிறதென்பதை வேதவார்த்தைகளில் இருந்து தெளிவாக ரால்ப் வென்னிங் விளக்கியிருக்கிறார். நம்மில் காணப்படும் சகலவிதமான ஆனந்தங்களுக்கும் முடிவுகட்டியிருப்பது நம்மைப்பிடித்திருக்கும் பாவம் என்பதை ஆசிரியர் உணர்த்துகிறார். நம்மைக் கடவுளிடம் இருந்து பிரித்துவைத்திருக்கிறது பாவம் எனும் ஆசிரியர், அத்தகைய பிரிவு மிகவும் பாரதூரமானது என்று விளக்கி, அது நமக்கு இறப்பின்போது நிகழவிருந்த மாபெரும் நன்மைக்கு இடங்கொடாமல் செய்துவிட்டது என்கிறார். அதுமட்டுமல்லாமல், நம்மைத் தீங்குகளுக்கெல்லாம் தலையாய தீங்கான நரகத் தீங்காகிய அனுபவத்தை நித்தியமும் அடையவும் வழிசெய்திருக்கிறது என்கிறார். தற்காலப் பிரசங்கி வாசிப்பதற்குக் கூட அருகில்போகத் துணியாத அற்புதமான வேதவிளக்கங்களைப் பாவத்தைப்பற்றி இந்தப் பகுதியில் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
மூன்றாவதாக, பாவத்தின் பாவத்தன்மையை நாம் உணர்வது எந்தளவுக்கு அவசியம் என்பதை நூல் விளக்குகிறது. இந்தப் பகுதியில் கடவுளில் இருந்து ஆரம்பித்து, கிறிஸ்து, தூதர்கள், படைப்பு, கிறிஸ்தவர்கள், நியாயப்பிரமாணம், சுவிசேஷம் என்று ஒவ்வொரு சாட்சியாக அநேக சாட்சிகளை நம்முன் கொண்டுவந்து நிறுத்தி, கடைசியாக பாவமே பாவத்தின் அலங்கோலத்தையும், அகோரத் தன்மையையும் பற்றி என்ன சாட்சியமளிக்கிறது என்பதையும் நாம் வாசித்தறியும்படிச் செய்கிறார் ரால்ப் வென்னிங். பாவம் எப்படியெல்லாம் தன்னுடைய குணத்தை மறைத்து பொய்யைச் சொல்லி, நம்மை ஏமாற்றி நாம் ஏமாந்துபோகும்படி செய்கிறது என்பதை ரால்ப் வென்னிங் விளக்கும் அருமையை என்ன சொல்வது. இந்தப் பகுதியில் இருந்து இன்னும் எத்தனையோ அருமையான விஷயங்களை உதாரணங்காட்டும் துடிப்பு எழுகிறது. இருந்தாலும் இந்த அறிமுகம், அறிமுகத்துக்குரிய அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் அக்கறையாயிருந்து அதை அடக்கிக்கொள்கிறேன். ஒவ்வொரு பகுதியாக நூலை தியானத்தோடு வாசித்துக்கொண்டு போகிறபோது எந்தக் கிறிஸ்தவனும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கமுடியாது. அவிசுவாசிகளையும், விசுவாசிகளையும் ஒருசேரப்பாதித்து அவர்களுடைய இருதயங்களை அசைத்துவிடும் அருமையான பணியைச் செய்திருக்கிறார் ஆசிரியர். இந்த நூலை வாசித்துப் பயனடைகிற ஆவிக்குரிய வாசகர்கள் நிச்சயம் விரிவான ஆங்கில மூல நூலைப்பெற்று வாசிக்கத் துடிக்காமல் இருக்கமாட்டார்கள் என்பது என் கருத்து.
நான்காவதாக, நமக்கு எதிரியாக பாவம் இருக்கிறதென்பதில் இருந்து நாம் அறிந்துகொள்ளும் உண்மைகளை நூல் நம்முன்வைக்கிறது. நான் அடிக்கடி பிரசங்கத்தில் சொல்லுகிற ஒரு உண்மையோடு ஆசிரியர் இந்தப்பகுதியை ஆரம்பிக்கிறார். பாவத்தைவிட நமக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது எதுவுமில்லை என்பதுதான் அது. அது நம் துன்பங்களைவிடவும், சாத்தானைவிடவும், மரணத்தைவிடவும், ஏன், நரகத்தையும்விட மோசமானது என்கிறார் ஆசிரியர். இந்நான்கையும் ஒன்று சேர்த்தால்கூட பாவம் இவையனைத்தையும்விட பாவ வாழ்க்கை வாழ்கிறவர்களில் ஆபத்தைவிளைவிக்கக்கூடியது என்கிறார் ரால்ப் வென்னிங். இதைச் சொல்லி நிறுத்திவிடாமல், அது ஏன் என்பதற்கான காரணங்களை அடுத்து நம்முன் நிறுத்துகிறார். அதற்குப்பிறகு கடவுளின் பொறுமை எத்தனைப் பெரியது என்பதையும், பாவத்துக்கெதிரான அவருடைய நீதியான நடவடிக்கை எத்தனை சரியானது என்பதையும், அவரளிக்கும் மகத்தான பாவமன்னிப்பு எத்தனைப் பெரியது என்பதையும் விளக்குகிறார் நூலாசிரியர்.
கடைசி அதிகாரமான ஐந்தாம் அதிகாரத்தில் பாவம் நமக்கு எதிரியாக இருப்பதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை நம்முன் வைக்கிறார் நூலாசிரியர். பாவம் ஒருபோதும் நமக்கு எந்தவித ஆனந்தத்தையும் அளிக்கமுடியாது, திருப்திப்படுத்த முடியாது என்பதை விளக்கி பாவத்தில் நேரத்தை செலவிடும் காலங்கெல்லாம் இழந்துபோன காலங்கள் எனும் ஆசிரியர், பாவத்தில் இருந்து விடுதலை அளிக்கும் கிறிஸ்துவின் இரட்சிப்பு பற்றிய செய்தி எத்தனை வரவேற்கத்தக்க செய்தியாக இருக்கிறது என்று முடிக்கிறார்.
நூலின் இறுதிப்பகுதி மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி பாவத்தில் காலத்தை செலவிடும் அவிசுவாசிகளுக்கான அறிவுரையைத் தருகிறது.
நாம் இன்று காதால் கேட்கமுடியாத ஒரு வார்த்தையாக பாவம் இருந்துவருகிறது. அதை விளக்காத மாயமான் போன்றதொரு போலிச் சுவிசேஷத்தை மக்கள் நாடுகிறார்கள்; அதைக் கைநீட்டிக் கொடுக்கக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பிரசங்கிகளையே நாடெங்கும் காண்கிறோம். இதற்கு மத்தியில் தமிழில் இந்த நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இதழில் நூலின் ஆரம்ப அதிகாரங்கள் வந்திருக்கிறது. வெகுசீக்கிரத்திலேயே நூலை வெளியிடவும் முயற்சி செய்கிறேன். இந்தப் பக்கங்களின் மூலம் பரிசுத்த ஆவியானவர் உங்களோடு பேசட்டும்; உங்கள் இருதயங்களைத் தொடட்டும்; குணமாக்கட்டும். அவருக்கே எல்லா மகிமையும்.
அறிமுகம்
கடவுளைத் தவிர்த்துவிட்டு வாழுவதில் ஏன் மனிதர்கள் திருப்தியடைகிறார்கள் என்ற கேள்விக்கான பதில்காண, வேதம் “பாவத்தைப்” பற்றி என்னசொல்லுகிறது என்பதை நாம் ஆராயவேண்டியது அவசியம்.
இதை நாம் ஐந்து தலைப்புகளின்கீழ் பார்க்கலாம்.
- பாவம் என்றால் என்ன? (அதிகாரம் 1)
- பாவம் ஏன் மிகவும் கேடானது? (அதிகாரம் 2)
- பாவம் மிகவும் கேடானது என்பதை நாம் எப்படி அறியலாம்? (அதிகாரம் 3)
- பாவத்தின் மெய்யான தீங்கைப்பற்றி நாம் அறியவேண்டியதன் அவசியம் என்ன? (அதிகாரம் 4)
- இக்கேள்விகளின் மூலமாக நாம் கற்றுக்கொள்ளுவதென்ன? (அதிகாரம் 5)
இந்தத்தலைப்புகளை விரிவாகப் படிப்பதற்கு முன்பாக, வேதத்தில் விளக்கப்பட்டுள்ள நான்கு அடிப்படையான உண்மைகளை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
முதலாவது, கடவுள் எல்லாவற்றையும் பரிபூரணமாகவும் நல்லதாகவும் படைத்தார். “அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:31). படைக்கப்பட்ட எதுவும் அதைப் படைத்தவரிடத்தில் எந்தவிதமான தவறையும் காண முடியாது, அல்லது, அவைகளில் எந்தவிதமான குறைபாடும் இருப்பதாகக் குறைசொல்லவும் முடியாது. அப்படியானால், தற்போதைய நிலைக்கு உலகம் எப்படி வந்தது?
இரண்டாவதாக, வேதம் சொல்லுகிறது, கடவுள் படைத்த இரண்டு மகிமையான படைப்புகளான, தேவதூதர்களும், மனிதர்களும், அவர்கள் படைக்கப்பட்ட பரிபூரண நிலையிலிருந்து விழுந்துபோனார்கள் என்று. தேவதூதர்களில் ஒரு கூட்டத்தினர் கடவுளுக்கு எதிராக செயல்பட்டதால், அவர்கள் பரலோகத்திலிருந்து விரட்டப்பட்டார்கள் (யூதா 6). அவர்களில் ஒருவனாகிய சாத்தான், முதல் மனிதனும், மனித குலத்தின் பிரதிநிதியுமாகிய ஆதாமை, கடவுளுடைய நேரடியான கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போகும்படிச் செய்தான். அதன்காரணமாக, ஆதாமும் அவன் மனைவியாகிய ஏவாளும், அவர்கள் வாழ்ந்துவந்த ஏதேனிலிருந்து துரத்தப்பட்டார்கள். (ஆதியாகமம் 3)
‘இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் (கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனது) பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் (மனித குலத்தின் பிரதிநிதியாகிய ஆதாமுக்குள்), மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.’ (ரோமர் 5:12)
மூன்றாவதாக, கடவுள், பாவத்தில் வீழ்ந்த தேவதூதர்களுக்கு நித்திய தண்டனையை விதித்தார் (யூதா 6). ஆனால், மனிதகுலத்திற்கோ தம்முடைய மாபெரும் இரக்கத்தைக் காட்டினார். கடவுளுக்கு எதிரான தன்னுடைய கீழ்ப்படியாமையை உணருகிறவர்களுக்கான இரட்சகராக, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, தேவமனிதனாக இந்த உலகத்திற்கு அனுப்பினார். இயேசு, தம்மை விசுவாசிக்கிறவர்களின் இடத்தில் இருந்து, பிதாவின் கோரிக்கைகள் அனைத்தையும் தம்முடைய முழுமையான கீழ்ப்படிவின்மூலம் நிறைவேற்றி, தம்மையே பலியாக கொடுத்தார். “பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (1 தீமோத்தேயு 1:15)
இறுதியாக, கடவுளுக்கு எதிரான நம்முடைய கீழ்ப்படியாமையாகிய பாவ நிலையிலிருந்து நம்மை இரட்சிக்க, கடவுள்தாமே செயல்பட வேண்டியதாக இருந்தது. மற்றொருவர் நம்மை இரட்சிக்க வேண்டிய நிலையில் நாம் இருந்தோம். ஆகவேதான் இயேசு இந்த உலகத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது? நாம் கீழ்ப்படியாமல் போனதனால், நாம் மனந்திரும்ப வேண்டியிருக்கிறது. மனிதர்களை மனந்திரும்பும்படி அழைக்க, கர்த்தரால் நியமிக்கப்பட்டவராக இயேசு வந்தார். “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்” (லூக்கா 5:32). ஆகவே, இயேசுவே நம்முடைய இரட்சகர் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். மனிதர்களுக்கு மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் கொடுக்கவே பரிசுத்த ஆவியானவர் இந்த உலகத்தில் வந்தார் என்று வேதம் சொல்லுகிறது. நாம் மனந்திரும்ப வேண்டிய நிலையில் இல்லாவிட்டால், அவர் வரவேண்டிய அவசியம் என்ன?
வேதம் போதிக்கின்ற இந்த நான்கு அடிப்படையான உண்மைகளைக் கொண்டு நாம் சிந்தித்துப் பார்த்தால், பாவம் எவ்வளவு கேடானது என்பதையும், அது நம்மில் எத்தகைய கோரமான விளைவுகளை நம்மில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் நாம் அறியலாம். இதை நாம் அறிந்துணர்வது, இதற்கு நேர்எதிராக கடவுளுடைய இரக்கமாகிய கிருபை எவ்வளவு அற்புதமானது என்பதை நாம் காணும்படிச் செய்கிறது. கடவுள் நம்மை மீட்கவேண்டுமானால், அவர் நம்மீது அதிகமான அன்புகொண்டவராக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இந்த உண்மை இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசித்து நாடிவரும்படிச் செய்யவேண்டும். இது கடவுளுடைய கட்டளைகள் சரியானது, நல்லது என்று நாம் அறிந்துணரும்படிச் செய்யவேண்டும். அவற்றிற்கு நாம் கீழ்ப்படியாமல் போனதன் காரணமாகவே, கடவுள் தம்முடைய சொந்த குமாரனையே நமக்கான மீட்பராக அனுப்பினார். பாவம், எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாத கடவுளுடைய பரிபூரணமான பரிசுத்தத்திற்கு நேர்எதிரான, நம்மிலுள்ள அருவருப்பான கொடியநோயாக இருக்கிறது.
கடவுளுடைய நியாயப்பிரமாணம் நம்மைக் குற்றப்படுத்தி, நாம் மரணத்திற்கு உரியவர்கள் என்று கண்டனத்திற்குள்ளாக்குகிறபோது, அதை ஏற்படுத்திய கடவுள் நல்லவர் இல்லை என்று நாம் வாதிடமுடியாது. கடவுளிலும் அவருடைய நியாயப்பிரமாணத்திலும் எந்தவிதமான குறைபாடும் இல்லை. கடவுள் பரிபூரணமானவரும் நல்லவருமாவார். அதேபோல் அவருடைய நியாயப்பிரமாணமும் பரிபூரணமானதும் நல்லதுமாகும். நம்முடைய நிலையின் காரணமாகவே கடவுளுடைய நல்ல கட்டளைகள் நம்மைக் கண்டனத்திற்குள்ளாக்குகின்றன. அவற்றைப் பின்பற்றாமல் போனதன் காரணமாக, நாமே இந்தக் கண்டனத்தை நம்மீது வருவித்துக் கொண்டோம். குற்றவாளியான ஒருவன், நீதிபதிக்கு முன்பாக நிற்கிறபோது, தன்னைத் தண்டனைக்குள்ளாக்குவது கொடுமையானது என்று சொல்லலாம். ஆனால் நீதிபதியோ, “இல்லை, நீ சட்டத்தை மீறியதால், நீயே உன்னைத் தண்டனைக்குள்ளாக்கிக்கொண்டாய்” என்று சொல்லுவார். நாம் கீழ்ப்படியாமல் போகாதிருந்தால், நாம் தண்டனைக்குள்ளாக்கப்பட மாட்டோம். “எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும்” (1 தீமோத்தேயு 1:9) விதிக்கப்பட்டது. மனிதன் செய்த தவறே, அதாவது அவனுடைய பாவமே, அவனைக் கண்டனத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
முடிவாக, இது குறித்த சில விளக்கங்கள்:
- கடவுளுடைய நியாயப்பிரமாணம் அனைத்தும் நன்மையானவை. அவை பரிபூரணமானவை, நீதியானவை. நாம் எப்படி வாழவேண்டும் என்பதை அவை நமக்குப் போதிக்கின்றன.
- கடவுளுடைய கட்டளைகளை மீறுகிறபோது, அவை நீதியானவிதத்தில் நம்மைக் கட்டளையை மீறினவர்களாகவும், பாவிகளாகவும் கண்டனத்திற்குள்ளாக்குகின்றன.
- நியாயப்பிரமாணம், பாவம் செய்தவனையும், பாவத்தையும் கண்டிக்கிறது. கண்டனத்திற்குள்ளான குற்றவாளி அதன்மீது பழிசுமத்தக்கூடாது.
- கடவுளுடைய கிருபை இடைமறைத்து நம்மைக் காப்பாற்றாவிட்டால், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறியதன் காரணமாக நாம் செத்தழிந்திருப்போம்.
- கடவுள் தம்முடைய நல்ல கட்டளைகளைக்கொண்டு பாவியைக் கண்டனத்திற்குள்ளாக்குகிறார். ஆனால், நாம் செய்த பாவமே நம்மை மரணத்திற்குள்ளாக்குகிறது.
- பாவம் மிகவும் வஞ்சனையானது. எப்படியென்றால், நன்மையான நியாயப்பிரமாணத்தைப் பயன்படுத்தி நமக்குக் கேடான முடிவைக் கொண்டுவருகிறது. அதாவது, உணவையே விஷமாக மாற்றுவதுபோல்.
- பாவம் கொடூரமானது, மரணத்திற்குரியது, நமக்கு தீமையே வருவிக்கக்கூடியது என்பதைக் கடவுளுடைய நியாயப்பிரமாணம் நமக்குக் காட்டுகிறது.
இனித் தொடர்ந்து, பாவம் என்றால் என்ன என்பதைக் குறித்து பார்ப்போம்.
1. பாவம் என்றால் என்ன?
பாவம் செய்வதென்பது நம்முடைய எண்ணத்திலும், வார்த்தையிலும், செயலிலும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதாகும். “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.” (1 யோவான் 3:4).
கடவுள், நாம் தீமை செய்வதைத் தவிர்த்துவிட்டு, நன்மையையே செய்யவேண்டும் என்று கோருகிறார். அதற்கு நாம் கீழ்ப்படியாமல் போனால், அது பாவமாகும். நாம் அநேக தவறான செயல்களைச் செய்கிறோமோ, அல்லது கொஞ்சத்தை செய்கிறோமோ, அதுவல்ல விஷயம், கடவுள் நம்மிடம் கோரியுள்ளவற்றைச் செய்யாமற்போகும் எந்தவொரு செயலும் பாவமாகும். “எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.” (யாக்கோபு 2:10)
“ஆவியின் கனி” என்று வேதம் சொல்லுகிற “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய இவைகளுக்கு எதிராக எந்தவொரு கட்டளையும் இல்லை. ஆனால் மாம்சத்தின் செயலுக்கு எதிராக கட்டளைகள் இருக்கின்றன.
கேடான காரியங்களை நாம் செய்வது மட்டும் பாவமல்ல, நன்மையான காரியங்களைச் செய்யாமலிருப்பதும் பாவமாகும்.
இந்தச் சிந்தனையோடு அடுத்தத் தலைப்பிற்கு நாம் செல்லுவோம்.
2. பாவம் ஏன் மிகவும் கேடானது?
கடவுள் பரிசுத்தமானவராகவும் நீதியுள்ளவராகவும் இருப்பதனால், அவருடைய கட்டளைகளும் பரிசுத்தமும் நீதியுமானவைகள். நாம் அவருடைய படைப்புகளாக இருப்பதனால், அவைகள் நம்முடைய நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டவைகள். பாவத்தின் கேடானதன்மையை எப்படி நாம் அறியலாமென்றால், இந்தக் கட்டளைகளை நாம் மீறுகிறபோது,
- கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக நாம் செயல்படுகிறோம்.
- நமக்கு நன்மை தரக்கூடியவைகளுக்கு எதிராகவே நாம் செயல்படுகிறோம்.
கடவுளுடைய கட்டளையை நாம் கைக்கொள்ளாதபோது, நாம் கடவுளை அவமதிக்கிறோம், அத்தோடு, நம்மையே நாம் இழிவுபடுத்திக்கொள்ளுகிறோம். இந்த இரண்டு காரணங்களினால்தான், கடவுளுடைய கட்டளையை மீறுவதை நாம் வெறுக்க வேண்டும். நம்முடைய கீழ்ப்படியாமையின் மூலம் நாம் கடவுளுக்கு எதிராக செயல்படுவதென்பது எவ்வளவு பெரிய தீங்கானது என்பதை இந்த இரண்டினுடைய பின்விளைவுகளை விளக்குவதன் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இதன் மூலம் கடவுள் பாவத்தை வெறுப்பதைப் போல் நாமும் வெறுக்க இவ்விளக்கங்கள் துணை செய்யும் என்று நம்புகிறேன்.
1. நாம் பாவம் செய்கிறபோது கடவுளுக்கு எதிராக செயல்படுகிறோம்.
கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமற் போகிறவர்களை கடவுளுடைய எதிரிகள் என்றும், கடவுளுக்கு விரோதமானவர்கள் என்றும் (லேவியராகமம் 26:21), கடவுளுக்கு எதிராக கலகம் பண்ணுகிறவர்கள் என்றும் (ஏசாயா 1:2), கடவுளுக்கு எதிராக வழக்காடுகிறவர்கள் என்றும் (ஏசாயா 45:9), கடவுளை எதிர்த்து போரிடுகிறவர்கள் என்றும், அவருடைய நாமத்தை தூஷிக்கிறவர்கள் என்றும், அவர் இருப்பதையே மறுதலிக்கிறவர்கள் என்றும் வேதம் சொல்லுகிறது. “தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்” (சங்கீதம் 53:1). கடவுள் இருக்கிறார் என்ற எண்ணமே இல்லாமல் வாழுவது கடவுளை விரோதிப்பதாகும்.
எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
இதை மேலும் விளக்குகிறேன்.
1.1. பாவம் கடவுளின் தன்மைக்கு எதிரானது
கடவுள் பரிசுத்தமானவராகையால், அவர் சொல்லுவதும் செய்வதுமாகிய அனைத்தும் பரிபூரணமானது. கடவுளுடைய மகிமையின் அடிப்படை தன்மையே அவர் பரிபூரணமானவர் என்பதுதான். பாவத்தைவிட கடவுளுக்கு எதிரானது வேறெதுவும் இருக்கமுடியாது. அது அவருடைய தன்மைக்கே எதிரானது. பாவத்தைப் பார்த்து அவர் பாராமுகமாக இருந்தால், அவர் கடவுளாகவே இருக்க முடியாது. கடவுளைப் பற்றி பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி ஒருவர் சொல்லியதைக் கவனியுங்கள், “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே” (ஆபகூக் 1:13) என்று சொல்லியிருக்கிறார். கடவுளுடைய பரிசுத்தமான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போவதென்பது மிகவும் மோசமான செயல். அவற்றைக் கடவுள் வெறுக்கிறார். அதுவும் அக்கட்டளைகள் அனைத்தும் நம்முடைய நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டவைகள். கடவுளுடைய பரிசுத்தத்தில் எந்தத் தீங்கும் இல்லாததுபோல், நம்முடைய பாவத்திலும் எந்த நன்மையும் இல்லை. எல்லா நன்மையின் பரிபூரணமாக கடவுளே இருக்கிறார். அவர் நம்மில் காண்கிற பாவமே நம்மிலுள்ள எல்லா குறைபாடுகளிலும் மிகப் பெரியது.
1.2. பாவம், கடவுளுடைய நாமம் மற்றும் அவருடைய குணாதிசயங்களின் முக்கியத்துவத்தை எதிர்க்கிறது.
பாவமுள்ள சிந்தை, கடவுளை இராஜாதி இராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தராகவும் ஏற்பதில்லை. மோசே இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் எகிப்தின் பார்வோனிடத்தில் சென்றபோது, பார்வோன், “கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்?” (யாத்திராகமம் 5:2) என்று கேட்டான். அவிசுவாசிகள் கடவுளுடைய ஆளுகையை ஏற்பதில்லை. அவரை சிங்காசனத்திலிருந்து கீழிறக்கவே முயற்சிக்கிறார்கள்.
தேவபக்தியாய் வாழுவதனால் வருகிற ஆவிக்குரிய பலன்களைக் காட்டிலும், இந்த உலக வாழ்வின் இன்பங்களையே பெரிதாகக் கருதி வாழுகிறவர்கள், கடவுள் போதுமானவர் அல்ல என்பதையே குறிப்பால் உணர்த்துகிறார்கள். லூக்கா 15ல் குறிப்பிடப்பட்டிருக்கிற இளைய மகனைப்போல் எங்காவது போய் இருப்பதே எனக்கு நலம் என்று எண்ணுகிறார்கள். கடவுள் போதுமானவராக இருக்கிறார் என்ற உண்மையை மறுத்து, கடவுள் போதுமானவரல்ல என்றே அவிசுவாசியினுடைய பாவமுள்ள சிந்தை சொல்லுகிறது.
கடவுளுடைய நல்ல கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற் போவது, அவருடைய நீதிக்கு சவால் விடும் செயலாகும். நீதியும் சத்தியமும் கடவுளுடைய பரிசுத்தத் தன்மையின் அங்கங்கள். கடவுளுடைய நீதியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பது, அவர் நீதியும் நன்மையுமானவர் என்பதையும் மறுப்பதாகும்.
“உங்கள் வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்றும் அப்படிப்பட்டவர்கள்பேரில் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே.” மல்கியா 2:17
கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர். கடவுள் எதையும் அறிந்திருக்கிறதில்லை என்று எண்ணுவது, அவரைப்பற்றிய இந்தச் சத்தியத்தை மறுப்பதாகும். அவர் எல்லாவற்றையும் அறிந்தவர். அவருக்கு எல்லாம் வெளியரங்கமாயிருக்கிறது. (எபிரெயர் 4:13)
கடவுள் தம்முடைய படைப்புகளிடத்தில் மிகவும் தயாளகுணத்துடன் நடந்து வருகிறார். தம்முடைய படைப்புகள் வாழ்வதற்கான விதத்தில் இந்த உலகத்திற்கு தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் தம்முடைய கிருபையினால் வழங்கி வருகிறார். அவர் நம்மீது காட்டிவருகிற இந்தத் தயவையும் நற்குணத்தையும் மறுப்பது, அவிசுவாசத்தினால் அவரை எதிர்ப்பதாகும்.
இந்த உலக வாழ்வில், கடவுள் கொடுத்திருக்கிற நல்ல காரியங்களைப் பயன்படுத்தி, கடவுளுடைய சித்தத்திற்கு எதிரான காரியங்களைச் செய்வது, அவருடைய கிருபையை கேடானமுறையில் பயன்படுத்துவதாகும். சிலபேர் சொல்லுவார்கள், கடவுள் கிருபையுள்ளவராக இருந்தால், அவருடைய கிருபை, நாம் அதிகமாக பாவம் செய்வதற்கு அனுமதிக்கிறபோதுதான், இன்னும் அற்புதமாக வெளிப்படும் என்கிறார்கள். இப்படிச் சொல்லுவது, கடவுளுடைய கிருபையின் மெய்ப்பொருளைப் புரட்டுவதாகும்.
இந்தவிதமான பாவச்செயல்கள், கடவுளுடைய நீதிக்கு எதிராக சவால்விடும் செயல்களாகும். அவருடைய இரக்கத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும். அவருடைய பொறுமையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுவதாகும், அவருடைய வல்லமையை நிந்திப்பதாகும், அவருடைய அன்பை அற்பமாக எண்ணும் செயலாகும்.
1.3 பாவம் ஒருபோதும் கடவுளுடைய செயலோடு ஒத்துப்போகாது
கடவுளுடைய செயலோடு பாவம் ஒருபோதும் ஒத்துப்போகாதது, அவருடைய தன்மைக்கு எதிரானது என்பதினால் மட்டுமல்ல, அவருடைய செயல்களுக்கும் எதிரானதாகும். பாவம், கடவுளை எதிர்க்கிறவனாகிய பிசாசினுடைய செயல் என்று வேதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்” (1 யோவான் 3:8). உலகம் உண்டாக்கப்பட்டபோது, கடவுள் அனைத்தையும் அழகாகவும், நல்லதாகவும் படைத்தார். ஆனால் ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை, இந்த உலகத்தில் ஏற்பட்ட பிசாசினுடைய தாக்கத்தை நமக்குக் காட்டுகிறது. அதன்காரணமாக, கடவுளை நிராகரிக்கிற எண்ணமும், தன்மையும், மனிதகுலத்தில் ஊடுருவி, கடவுளுடைய பெயரையும், அவருடைய தன்மையையும், இந்த உலகத்தில் தொடர்ச்சியாக மறக்கும்படி செய்கிறது. இந்த நிராகரிப்பின் செயலிலிருந்தே, பாவத்தினுடைய அனைத்து செயல்களும் வெளிவருகிறது – ஒழுங்கற்ற, குழப்பமான, இழிவான, சீர்கெட்ட, கொடூரமான, வியாதி மற்றும் மரணம் ஆகிய நம் அனைவருக்கும் தொல்லைத் தருகின்ற அனைத்தும் வெளிவருகின்றன.
1.4 கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல் இருப்பதும், அவருடைய சித்தத்தை நிராகரிப்பதுமே பாவமாகும்.
இந்த உலகத்தில் கடவுளை வழிபடுவற்கு எதிராகவும், அவரிடமிருந்தும் அவர் எதிர்பார்க்கிறவைகளிடமிருந்தும் பிரிந்திருப்பதற்கு முயற்சித்து, கடவுளோடு ஐக்கியமாக இருப்பதனால் வரும் பலன்களை நிராகரிக்கும் ஒரு நபருடைய எண்ணத்தின் வெளிப்பாடே பாவமாகும். பாவியாகிய ஒருவன், கடவுள் மீதான தன்னுடைய எதிர்ப்பை, ஆவிக்குரிய வாழ்வின் செயல்களாகிய ஜெபம், பிரசங்கம் மற்றும் பரிசுத்தத்தை எதிர்ப்பதன் மூலம் காட்டுவான். பழைய ஏற்பாட்டில், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றின தாவீது இராஜாவைப்பற்றி சொல்லுகிறபோது, “கடவுளுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன்” (1 சாமுவேல் 13:14) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
1.5 பாவம் கடவுளுடைய சாயலுக்கு எதிரானது
ஆதாமும் ஏவாளும் பரிபூரணமானவர்களாகவும், கடவுளுடைய சாயலின்படியும் உண்டாக்கப்பட்டார்கள். ஆனால் நாம் அந்த நிலையில் இப்போது இருக்கவில்லை. இருள் வெளிச்சத்திற்கு எதிராக இருப்பதுபோல், நரகம் பரலோகத்திற்கு எதிராக இருப்பதுபோல், அசிங்கம் அழகிற்கு எதிராக இருப்பதுபோல், நாமும் நம்முடைய பாவத் தன்மையினால், உருவழிந்து, கடவுளுடைய பரிசுத்தத்திற்கும், நீதிக்கும் எதிரானவர்களாக இருக்கிறோம். “பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டானவன்” (1 யோவான் 3:8) என்று வேதம் சொல்லுகிறது.
1.6 பாவம் கடவுளுடைய மக்களுக்கு எதிரானது
கிறிஸ்தவ விசுவாசிகள் இயேசு கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக கடவுளிடம் சமாதானம் பெற்றிருக்கிறார்கள். நம்முடைய பாவத்தன்மைகள் அந்தச் சமாதானத்திற்குத் தடையாகவும், அதை அழிக்கிறதாகவும் இருக்கிறது. கடவுளிடத்தில் நாம் எவ்வளவாக நெருங்குகிறோமோ, அவ்வளவாக பாவம் மிகவும் ஆக்ரோஷமாக அந்த உறவைத் தடுப்பதற்கு முயற்சிக்கிறது, “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” (கலாத்தியர் 5:17). பிசாசு எல்லாரையும் வெறுக்கிறான், குறிப்பாக, தேவனுடைய பிள்ளைகளை வெறுக்கிறான். இருப்பினும், கடவுள் தம்மை விசுவாசிக்கிறவர்களை நேசிப்பதனால், அவன் அவர்களை காயப்படுத்த முடியாது. கடவுள் தம்முடைய மக்களுக்கு நன்மை செய்கிறதனால், அவன் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது.
1.7 கடவுளுடைய மகிமையை அழிப்பதே பாவத்தினுடைய இலக்காக இருக்கிறது
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு, நம்முடைய கேடான வழிகளிலிருந்து நாம் மனந்திரும்புகிறபோது, நாம் கடவுளை மகிமைப்படுத்துகிறோம். ஆனால் பாவமோ அதைச் செய்யாதபடி நம்மைத் தடுக்க முயற்சிக்கிறது. நம்முடைய பாவத்தன்மை கடவுளுடைய தன்மைக்கு எதிரான காரியங்களை நம்மில் ஏற்படுத்தி, கடவுளுக்காக வாழுவதிலிருந்து நம்மைத் தடுக்கிறது.
1.8 பாவத் தன்மை, கடவுள் இருக்கிறார் என்பதைக் குறித்து சந்தேகம் எழுப்புகிறது
பாவத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறவர்கள், கடவுளை வெறுக்கிறவர்களாகவும், அவர் இருக்கிறார் என்பதை நிராகரிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். தன்னுடைய எண்ணத்திலும் செயல்களிலுமிருந்து கடவுளைத் தள்ளிவைக்க முயற்சிக்கிறார்கள் (ரோமர் 1:18-32)
மேற்கொண்டு போவதற்கு முன்பதாக, இதுவரை நாம் படித்தவற்றை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். பரிசுத்த வேதம் போதிக்கிற கடவுளுடைய வார்த்தையைக் கவனித்துக் கேளுங்கள். பாவத்தின் அசிங்கங்களை நீங்கள் எப்படி நேசிக்க முடியும்? ஒரு எதிரியிடமிருந்து தப்பி ஓடுவதைப்போல் பாவத்திடமிருந்து நீங்கள் விலகியோட விரும்பவில்லையா? கடவுள் வெறுப்பதை நீங்கள் நேசிக்கிறீர்களா? உங்களைப் படைத்தவராகிய கடவுள் விரும்புகிறதை நீங்கள் வெறுக்கிறீர்களா? பாவத்தின் எந்தவொரு செயலும் உங்களுக்கு எந்தவொரு நன்மையையும் தர முடியாது. அது உங்களுக்குத் தீங்கிழைத்து, உங்களை அழிக்கவே செய்யும். உங்களைவிட வலிமைமிக்கவரான கடவுளோடு நீங்கள் எதிர்த்து வாதிடாதீர்கள். அவர் கேடானவர்களை நரகத்தில் தள்ளி அழிக்கும் வல்லமை கொண்டவர்.