வணக்கம் வாசகர்களே! இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடத்திற்கான மூன்றாவது இதழை கோவிட்-19 வெளிவர முடியாதபடி செய்துவிட்டது. வைரஸினால் முழு உலகமுமே பாதிப்படைந்து தொடர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கர்த்தர் தன் கிருபையால் இதற்கு ஒரு முடிவைக் கொண்டுவர எல்லோருடனும் இணைந்து நாமும் ஜெபித்துவருகிறோம்.
இந்த இதழோடு, இதழ் தன் இருபத்தி ஆறு வருடங்களை நிறைவு செய்கிறது. கர்த்தரின் கிருபை இத்தனைக் காலம் நம்மை வழிநடத்தி வந்திருக்கிறது. இதழின் வாசகர்கள் தொகை அதிகரித்திருப்பதை இந்த வருடம் நாம் கவனிக்காமலில்லை. புதிய வாசகர்களுக்கு வாழ்த்துக்கள்!
இந்த இதழில், மறைந்த இறையியலறிஞர் ஜே. ஐ. பெக்கரைப்பற்றிய ஆக்கமொன்று வந்திருக்கிறது. அத்தோடு பியூரிட்டன் பெரியவர்களின் ஊழியத்தின் சிறப்பையும், அவர்களுடைய பிரசங்கம் மற்றும் போதகப்பணியின் அருமையையும் பற்றிய ஆக்கத்தையும் நீங்கள் வாசிக்கலாம்.
‘பாவத்தின் பாவம்’ என்ற ரால்ப் வென்னிங் எனும் பியூரிட்டன் பெரியவர் எழுதியுள்ள நூலின் சில அதிகாரங்களை இந்த இதழில் தந்திருக்கிறோம். அதற்கான அறிமுக விளக்கத்தையும் வாசிக்கலாம். இது நூலாக கூடியவிரைவில் வெளிவரும்.
மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் என்ற ஆக்கம் முக்கியமானதொரு இறையியல் விளக்கத்தை அளிக்கிறது. அது சிந்தித்து வாசிக்கவேண்டிய ஓர் ஆக்கம்; தற்காலத்து சுவிசேஷப்பணிக்கு பொருத்தமானதும் அவசியமானதுங்கூட. இம்மியளவு இறையியல் என்ற தலைப்பில் இறையியல் சத்தியங்களைத் துல்லியமாக சுருக்கமாக எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதன் ஒரு பகுதியை இந்த இதழில் காணலாம். அத்தோடு 2 இராஜாக்களில் நாம் வாசிக்கும் சீரியனான நாகமானைப்பற்றிய ஒரு கவிதையும் வந்திருக்கிறது. சீர்திருத்த இறைபோதனையை வழங்கும் இதழாக இது இருந்தபோதும், இலக்கியத்திற்கு இடமளிக்காமலில்லை. தமிழிலக்கியத்துக்கு வரலாற்றில் கிறிஸ்தவர்கள் அதிகம் பங்காற்றியிருக்கிறார்கள். அதில் அணில்போல் ஒரு சிறு பங்கை நம்மிதழும் செய்துவருகிறது. அதனால்தான் ஆக்கங்கள் அனைத்தையும், நூல்களையுங்கூட நல்ல தமிழில் எழுதுவதை இலட்சியமாகக் கொண்டு செயலாற்றுகிறோம். – ஆர்
அன்புள்ள போதகர் அய்யா அவர்களுக்கு,
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.
தங்களுடைய திருமறைத்தீபம் பத்திரிகையில் தாங்கள் எழுதுகிற ஒவ்வொரு இறையியல் கட்டுரைகளும் மிகவும் பிரயோஜமுள்ளவைகள். ஆழ்ந்த சத்தியங்களை குறித்த விளக்கங்கள் வியப்படைய செய்கிறது.
அதுபோல தங்களுடைய ஆடியோ செய்திகள் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. குறிப்பாக எபிரேயர் 6:4-6 குறித்த சத்தியம் என் கண்களை திறந்தது.
மிகவும் நன்றி அய்யா. கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக.
கிறிஸ்துவுக்குள் நன்றி.
S.Kingsly
LikeLike
நேரமெடுத்து இதழ் பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவித்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி.
LikeLike
மதிப்புக்குரிய போதகர் அவர்களுக்கு,
திருமறை தீபத்தின் சமீபத்திய காலாண்டு பத்திரிக்கையை வாசித்து மிகவும் பயனுற்றேன், ‘அற்ப புழு வாம்’ என்மேல் பொழியும் கர்த்தரின் அளப்பெரிய கிருபையை எண்ணி அவரைத்துதிக்கிறேன்…
பியுரிட்டன்களின் காலம் சபைவரலாற்றில் பொற்காலமாக போற்றப்படுவதின் காரணத்தை அறிந்தபோது ‘ “வரலாற்றில் மறுபடியும் வராதோ! ஒரு பொற்காலம் பியூரிட்டன் காலம் போல்!’ என்ற ஏக்கம் மனதில் ஆழமாக வேரூன்றி முள்ளாக உறுத்துகிறது, பியூரிட்டன் பெரியவர்களின் பலம் அவர்கள் வேத இறையியலை ‘அறிந்து’ வேதத்திற்கு புறம்பான எந்த கொள்கையோடும் ஒத்துழையாத தன்மை என்றால்; ஜெ.ஐ பெக்கரின் பெலவீனம் அவர் வேத இறையியலை அறிந்தும் வேதத்திற்கு புறம்பான இவாஞ்சலிக்கல் பிரிவின் கொள்கைகளோடு ஒத்துழைத்ததுதான் என்று வாசித்தபோது; அசத்தியத்தோடு ஒருபோதும் ஒத்துழைக்க கூடாது என்ற வைராக்கியம் உண்டானது…
‘பாவத்தின் பாவம்’ என்னுள்ளிருக்கும் பாவத்தின் கோரத்தைத் தோலுரித்துக் காட்டுவதுடன் என்னை மீட்ட தேவ கிருபையின் ஆழத்தை ‘அறிந்து’ தேவனை துதிக்கச் செய்தது.
பலமுறை தங்கள் மூலம் இரட்சிப்பின் படிமுறை விளக்கங்களை கற்றிருந்தும், பாவமன்னிப்பின் அடித்தளத்தை வரைபடங்கள் மூலம் தெளிவாக விளக்கப்படுத்தியிருப்பது, எளிதாக புரிந்து கொள்ள மிகவும் உதவியது.
அனைத்துக்கும் மேலாக: என் குருவி மூளைக்கு ஏத்தவிதமாக, அத்தியாவசியமான அடிப்படை சத்தியத்தை, சத்துக்குறையாமல் மெத்தச்சுருக்கி “இம்மியளவு இறையியல்” என்ற தலைப்பில் தந்திருப்பது, எளிதாக நினைவில் நிறுத்தி சிந்திப்பதற்கும், வேத இறையியலை வாழ்க்கையில் செயல்படுத்தி வளர்வதற்கு மிகவும் உபயோகமாக உள்ளது.
“நாகமானை சந்தித்த கிருபை” தாழ்மையின் அவசியத்தை வலியுறுத்தி கிருபையின் மேன்மையை சுவைபட கற்றுக் கொடுத்தது…
வாசித்து முடித்த போது, ‘அடுத்த இதழ் விரிய மூன்று மாதம் காத்திருக்க வேண்டுமே!’ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது உண்மையெனிலும்; இடைப்பட்ட மூன்று மாதத்திலும் மீண்டும் பலமுறை நுகர்ந்து ‘அறிந்து’ ஆனந்தப்படும் அளவிற்கு அதிகமான கருதுகோள்களும், ஆழமான சத்தியங்களும் புதைந்திருப்பதால், மீண்டும் மீண்டும் வாசிப்பது அதிக பலனளிக்கும் என்று நம்புகிறேன்.
_மிகவும் நன்றி பாஸ்டர்.
LikeLike
உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி! வாசகர்களாகிய உங்களுடைய ஆதரவு தரும் உற்சாகமே எங்களை இந்தப்பணியில் ஊக்கமாக உழைக்கவைக்கிறது. மேலும் ஆசீர்வாதமான ஆக்கங்களை இனியும் தர ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி.
LikeLike