மொழியாக்க வறட்சி

என் இலக்கியப்பணியில் மொழியாக்கமும் ஒரு சிறு அங்கம். தற்காலத்தில் நம்மினத்தில் அதிகளவுக்கு அறிமுகமாகாமல் இருந்துவரும் சத்தியங்களை அருமையாக விளக்கியிருப்பவர்களின் நூல்களையோ அல்லது ஆக்கங்களையோ இருந்திருந்து மொழியாக்கம் செய்துவருகிறேன். மொழியாக்கம் சிக்கலானது; சிலம்பாட்டம் போன்றது. சிலம்பு சுற்ற உடல்வலிமை மட்டுமல்லாமல் அதை லாவகமாகச் சுற்றிச் சுழலும் நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். சிலம்புச் சுற்றுவதில் நலினம் தெரியவேண்டும். கையில் தடி வைத்திருப்பவர்களெல்லாம் சிலம்பாட்டக்காரர்களா என்ன! நெடுங்காலப் பயிற்சி அதற்குத் தேவை. அதுபோலத்தான் மொழியாக்கமும். எழுத்துத்துறையில் காணப்படும் சோகங்களில் இரண்டை நம்முன்வைக்கும் பிரபல பழம் படைப்பாளி அசோகமித்திரன், ஒன்று மொழிபெயர்ப்பது, இரண்டாவது, மொழிபெயர்க்கப்படுவது என்கிறார். அவற்றில் காணப்படும் பிரச்சனைகளை அவர் உணர்ந்திருப்பதாலேயே இப்படி வர்ணித்திருக்கிறார். பொதுவாகவே மொழிபெயர்ப்பு நூல்கள் நம்மொழியில் சிறப்பாக இல்லை என்பதே தேர்ந்த படைப்பாளிகளின் கருத்து.

மொழியாக்கமா, மொழிபெயர்ப்பா, எது சரி. என்னைப் பொறுத்தவரையில் இரண்டும் ஒன்றையே குறிக்கும் (Translation) வார்த்தைப் பிரயோகங்கள். இதில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தலாம். Transliteration என்பதை ஒலிபெயர்ப்பு என்று குறிப்பிடலாம். அதைத்தான் அது செய்கிறது. வார்த்தையின் ஒலிக்கேற்றபடி மொழிபெயர்ப்பது ஒலிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு வேறு, ஒலிபெயர்ப்பு வேறு. இங்கே மொழியாக்கத்தைப்பற்றி நான் விளக்க முனைகிறேன்.

மொழியாக்கத் திறன்

ஒரு படைப்பை எழுதுவது வேறு; மொழியாக்கம் செய்வது வேறு. இரண்டுக்கும் வேறுபாடிருக்கிறது. நேரடியாக ஒரு படைப்பை உருவாக்குகிறவனுக்கு அவசியமில்லாத திறன் மொழியாக்கம் செய்கிறவனுக்கு இருக்கவேண்டும். எந்தமொழியில் இருந்து மொழியாக்கம் செய்கிறானோ அந்த மொழியிலும், மொழியாக்கம் செய்யப்படுகிற மொழியிலும் அவனுக்குத் தேர்ச்சி இருக்கவேண்டும். மொழிக்கு மொழி உருவகங்கள், உவமைகள், சொல்லாடல்கள் மற்றும் பேச்சுவழக்கு, பண்பாட்டு வேறுபாடுகள் காணப்படும். மொழியாக்கத்தில் திறனுள்ளவர்களுக்கு இவற்றில் தேர்ச்சியிருக்கும். பெயர்பெறுவதற்காகவும், ஆர்வக்கோளாறு காரணமாகவும், பணத்திற்காகவும் மொழியாக்கத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு இந்தத் திறன் இருக்காது. ஒருமுறை ஓர் ஆங்கில ஆக்கத்தை மொழியாக்கம் செய்துதர ஒருவர் ஒத்துக்கொண்டார். மொழியாக்கத்தை பிஸ்னசாக செய்துவருகிறவர் அவர். அவருடைய திறமையை அறிந்துகொள்ளுவதற்காக ஒரு சிறு ஆக்கத்தை மொழியாக்கம் செய்துதரும்படிக் கேட்டுக்கொண்டேன். பரீட்சைக்காகத்தான் அதைச்செய்யச் சொல்லுகிறேன் என்பதையும் விளக்கியிருந்தேன். நான் எதிர்பார்த்தபடி மொழியாக்கம் இருக்கவில்லை; உண்மையில் அது தமிழில் வாசிப்பதற்கு ஜீவனில்லாததாக, கரடுமுரடானதாக, ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது. அந்தப் பரீட்சை மொழியாக்கத்திற்குக்கூட ஏதாவது பணத்தைப்பெற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தளவுக்கு மொழியாக்கம் செய்தவருக்கு மொழியாக்கத் திறன் இருக்கவில்லை.

மூலநூலை ஒருபோதும் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கக்கூடாது. அது அசட்டுத்தனமான செயல். மொழிகள் வித்தியாசமானவைகளாக இருப்பதால் மொழியாக்கத்திற்கு அது சரிப்பட்டு வராது. கீழைத்தேய மொழிகள் எல்லாமே பொதுவாக ஒரேவிதமாக ஆரம்பித்து முடியும். அவற்றின் எழுவாய் பயனிலை அமைப்பு ஒரேமாதிரியானவையாக இருக்கும். ஆங்கிலத்தில் இருக்கும் வசனத்தை அது முடியும் இடத்தில் இருந்தே தமிழில் மொழிபெயர்க்க ஆரம்பிக்க வேண்டும். இரண்டும் வித்தியாசமான மொழிகள். வேறுபாடான வசன அமைப்பைக் கொண்டிருக்கும் மொழிகள். ஆங்கில வசனத்தை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால் தமிழில் வாசிக்கும்போது, நீண்ட இரயில் தொடரின் முன்னால் இருக்கவேண்டிய என்ஜின் நடுவிலும், கடைசியில் இருக்கவேண்டிய கம்பார்ட்மென்ட் முன்னாலும் இருந்து முரண்பாடானவிதத்தில் இரயில் ஓடுவதுபோலிருக்கும்.

வார்த்தைகளை நேரடியாக மொழிபெயர்க்க முடியாதளவுக்கு மொழிபெயர்க்கப்படும் மொழியில் வார்த்தைகள் உடனடியாக இல்லாமல் போகலாம். மூலவார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வார்த்தையை உருவாக்க நேரிடும். மூலநூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த மொழிக்குரிய சொல்லடைவுகளையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சொல்லடைவுகளை வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்யக்கூடாது. உதாரணத்திற்கு ‘Don’t beat around the bush’ என்ற ஆங்கிலச் சொல்லடைவு (மரபுமொழி) ‘நேரடியாக விஷயத்துக்கு வா’ என்றே மொழியெர்க்கப்பட வேண்டும். Microsoft translator புதரைச் சுற்றி அடித்துவிடாதீர்கள் என்று சிரிக்கக்கூடியவிதத்தில் இதை மொழிபெயர்க்கிறது. அத்தோடு ஆங்கில மொழிக்குரிய உவமைகள், உவமானங்கள், இலக்கிய நடைப்பிரயோகங்களில் பரிச்சயம் இருக்கவேண்டும்.

Turn from sin என்பதை பாவத்தில் இருந்து திரும்பு என்று மொழியாக்கம் செய்யலாம். இருந்தாலும் அது தெளிவாக ஆங்கிலத்தின் அர்த்தத்தை விளக்குவதாக இல்லை. Turn away from sin என்றே அந்த ஆங்கில வசனம் சொல்லுகிறது. பாவத்திற்கு புறமுதுகு காட்டு என்கிறது ஆங்கில வசனம். அதை ‘பாவத்தை விட்டுவிடு’ அல்லது ’பாவத்தை விட்டுவிலகு’ என்று மொழியாக்கம் செய்யலாம். Turn என்பதற்கு ‘திரும்பு’ என்பது அர்த்தமாக இருந்தபோதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதையே பயன்படுத்த முடியாது. ஒருவசனத்தில் அது எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு மொழிபெயர்ப்பு செய்யவேண்டும்.

லௌகீக உலகில் பதிப்பாளர்கள் மொழியாக்கம் செய்கிறபோது, நூலைத் தொழில் நுணுக்கத்தோடு மூலமொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்தபிறகு, மறுபடியும் அதை மொழிபெயர்க்கப்பட்ட மொழியில் இருந்து மூலமொழிக்கு மொழிபெயர்ப்பார்கள். இதன் மூலம் மொழிபெயர்ப்பு சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை முடிவுசெய்வார்கள். அதற்குக் குறைந்த எதையும் அவர்கள் செய்வதில்லை. பணத்தைக் கொட்டி நூலை வெளியிடுகிறவர்கள் அது தரமானதாக இருப்பதோடு வாசகர்களை அணுகவேண்டும் என்பதிலும் கவனத்தோடுதான் இருப்பார்கள். ஆர்வக்கோளாற்றில் மொழிபெயர்க்கிறவர்களிடம் இந்தத் தொழில் நுணுக்கத்தையும், ஜாக்கிரதையையும் காணமுடியாது.

மொழியாக்கம் தரமானதாக இருக்கவேண்டியபோதும் பூரணமானதாக இருப்பது கடினம். இன்னொரு மொழியில் இருந்து தமிழுக்கு ஒன்றைக் கொண்டுவரும்போது மூலநூலின் ஆசிரியரை நூறுவீதம் அதில் காண்பது அரிது. முடிந்தவரை மொழியாக்கம் செய்கிறவர் அந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். மூலநூலின் கருத்தையும், ஆசிரியரையும் மொழியாக்கத்தில் பார்க்க முடிந்தால் அது வெற்றியே.

வாசிக்கத் தூண்டும் மொழிநடை . . .

மொழியாக்கம் மூலநூலின் கருத்துக்களை சரிவர வெளிப்படுத்துவதாக மட்டும் இருந்துவிடாமல், வாசகனை வாசிக்கத்தூண்டும் மொழிநடையிலும் அமைந்திருக்கவேண்டும். மேலைத்தேய மொழிகள் கீழைத்தேய மொழிகளைவிட வேறுபாடானவை. மொழியாக்கம் மொழிபெயர்க்கப்படுகிற மொழிக்குரிய தற்கால நடையில், வாசகன் ஆர்வத்தோடு வாசிக்கக்கூடிய தன்மையைக் (readability) கொண்டிருக்கவேண்டும். உள்ளதை உள்ளபடி இன்னொரு மொழியில் மொழிபெயர்த்தாலும், அது வாசிப்பதற்கு எளிதாக, ஆர்வத்தைத் தூண்டுகிற மொழிநடையில் இல்லாவிட்டால் மொழியாக்கத்தினால் முழுப்பயனும் இல்லாமல் போகும். மொழியாக்கம் செய்கிறவருக்கு மொழிபெயர்க்கப்படும் மொழியில் வெறும் பரிச்சயம் மட்டுமல்லாமல் நல்ல தேர்ச்சியும், வளமும், எழுதும் திறமையும் இருக்கவேண்டும்.

மொழியாக்கத்தைப் பற்றி எழுதும் ஜெயமோகன் சொல்லுகிறார், ‘மொழியாக்கம் செய்கிறவர்களுக்கு மொழியாக்கம் செய்யப்படுகிற மொழியில் சமகால இலக்கியங்களை வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும்’ என்று. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், மொழிபெயர்க்கப்படும் மொழியில் ஒருவருக்கு இலக்கியப்பரிச்சயம் இருக்கவேண்டும். மொழிபெயர்ப்பு அதை வாசிப்பவர்களுக்கு வாசிப்பு இன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பம் தருவதாக இருந்தால் அது வெற்றிகரமான மொழிபெயர்ப்பாக அமையவில்லை என்றே அர்த்தம். அதற்குக் காரணம் மொழியாக்கம் செய்தவருக்கு இலக்கியப் புனைவெழுத்து நடை இல்லாமலிருந்திருப்பதே. ‘அன்றாட மொழியில், சராசரி மொழியில் ஒருநாளும் படைப்புகள் வெளிப்பட முடியாது என்கிறார்’ ஜெயமோகன்.

மொழிபெயர்ப்பாளன் மூலநூலை உள்வாங்கிக்கொள்ளுவது அவசியம். மூலநூலாசிரியரின் நோக்கங்கள், சிந்தனைகள், நுணுக்கங்கள், விருப்ப வெறுப்பு, எழுத்துத் சுவை அனைத்தையும் மொழிபெயர்ப்பாளன் உணர்ந்தறிய இந்த உள்வாங்குதல் துணைபுரிகிறது. மூலநூலோடு ஒன்றிப்போயிருக்கும் அனுபவமுள்ளவருக்கே மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும். அத்தோடு மொழிபெயர்ப்பாளன் அந்த உள்வாங்குதலைத் தனக்கேயுரிய எழுத்துப்பாணியில் வாசகன் வாசித்தனுபவிக்கும்படி மொழியாக்கப்படைப்பில் ஈடுபட வேண்டும்.

ஒரு நூலை நகலெடுப்பது மொழியாக்கமல்ல. ஆங்கிலத்தில் இருப்பதை வரிவரியாக வாசித்து மொழிபெயர்ப்பு செய்வதற்குப் பெயர் மொழியாக்கமல்ல. அது நகலெடுப்பு. நூலாசிரியனைப் புரிந்துகொள்ளாமல், நூலை உள்வாங்கிக்கொள்ளாமல் பலர் இந்தவிதத்தில் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகிறார்கள். மொழியாக்கங்களை வாசிக்கும்போது அது நமக்கு அந்நியமானதாகத் தோற்றமளித்தால் அது நல்ல மொழியாக்கமல்ல. அந்நியத்தோற்றம் அதில் இருப்பதற்குக் காரணம் மொழியாக்கம் செய்தவர் நூலை உள்வாங்கிக்கொள்ளாததும், அதைத் தன் பாணியில் கொண்டுவராததுந்தான். ஆரம்பத்தில் நூலை வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்யநேர்ந்தாலும், செய்தபிறகு அதை ஒருபுறம் வைத்துவிட்டு, மொழியாக்கம் செய்யப்படும் மொழியில் மொழியாக்கத்தில் ஈடுபடுகிறவன் தனக்கேயுரிய எழுத்துவன்மையைப் பயன்படுத்தித் தன் பாணியில் அதை மாற்றவேண்டும். இதைச் செய்யும்போது மொழியாக்கம் செய்கிறவன் ஒருவிதத்தில் மொழியாக்கத்தின் ஆசிரியனாகிவிடுகிறான். மொழிபெயர்ப்பாளன் நிச்சயம் மூலநூலோடு எதையும் சேர்க்கக்கூடாது; குறைக்கவும்கூடாது. அதை மிகைப்படுத்தவும் கூடாது. இருந்தபோதும் அதை வாசகன் சுவைத்தனுபவிக்கும் விதத்தில் மொழியாக்கம் அமையாதபோது அது லட்டை சுவைக்கும்போது அடிக்கடி வாயில் அகப்பட்டு நெருடல் உண்டாக்கும் கற்கண்டுபோலாகிவிடும். மொழியாக்கத்தில் இயல்பான தடங்களற்ற அருவியோட்டம் இருக்கவேண்டும். முதல் மூன்று நான்கு பக்கங்களை வாசிக்குப்போது நெருடலில்லாமல் தொடர்ந்து வாசிக்கத்தூண்டுவதாக இல்லாமிலிருக்கும் மொழியாக்கங்களைப் பணம் கொடுத்து வாங்குவது வீண்.

கூகுள் மொழியாக்கக் கருவி இன்று இலகுவாக பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளைத் தேடிக்கொள்ள உதவுகிறது. அதைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இருந்தபோதும் அந்த வார்த்தைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருந்தக்கூடிய வார்த்தைகளாக, இலக்கியநடைக்குரிய வார்த்தைகளாக இல்லை. கலைச்சொற்களுக்கு கூகுல் தரும் வார்த்தைகள் டெக்னிக்கலாக பொருத்தமானதாக இருந்தாலும் ஜனரஞ்சகமான வார்த்தைகளாக இருக்காது. வாசகர்களுக்குப் புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் என்ன பயன்? அத்தோடு கூகுலுக்கு இறையியல் வார்த்தைப் பரிச்சயம் இல்லை! அதை மட்டும் நம்பி மொழியாக்கம் செய்யக்கூடாது.

ஒரு நூல் எந்த இலக்கியவகையைச் சேர்ந்ததோ அதற்கேற்ற நடையில் மொழியாக்கம் அமையவேண்டும். புதினத்துக்குத் தேவையான அழகியல் நடையும் வார்த்தைகளும் ஆய்வுக்கட்டுரைக்குத் தேவைப்படாது. ஆய்வுக்கட்டுரைக்கு கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்; அது சுவையானதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதன் உள்ளடக்கமும், ஆய்வுத்திறனும், அதுவிளக்கப்பட்டிருக்கும் முறையுமே அதற்கு இன்றியமையாதவை. கிறிஸ்தவ வேதசத்தியங்களை விளக்கும் நூல்களுக்கு கிறிஸ்தவ சத்தியங்களை முறையாக வெளிப்படுத்தக்கூடிய தகுந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படவேண்டும். ஆங்கிலத்தில் காணப்படும், நுணுக்கமான சத்தியங்களை விளக்கும் எல்லா இறையியல் வார்த்தைகளுக்கும் சரியான தமிழ் வார்த்தைகள் இன்னும் கிடையாது. சத்தியக்கோளாறு ஏற்பட்டுவிடாதபடியும் நூல் கவனத்தோடு மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். தமிழறிஞராகவும், அதேநேரம் சத்தியத்தில் தேர்ந்தவராகவும் இருக்கின்ற ஒருவரே கிறிஸ்தவ நூல்களை விசுவாசம் கெடாமல் மொழியாக்கம் செய்யமுடியும்.

மேலைநாடுகளில் மொழியாக்கப் பட்டறைகளை தேர்ந்த படைப்பாளிகள் நடத்துகிறார்கள். பிரபல வெளியீட்டாளர்கள் மொழியாக்கம் செய்வதற்குத் திறனுள்ள குழுக்களை அமைத்து அதைச் செய்வார்கள். அவர்கள் மொழியாக்கத்திற்கு அவசியமான வார்த்தை ரெஜிஸ்டர்களையும் வைத்திருப்பார்கள். இளம்வயதில் சில மொழியாக்கப் புதினங்களைத் தமிழில் வாசித்திருக்கிறேன். நான் விரும்பி வாசித்த ஒரு புதினம் அலெக்சாண்டர் டூமாஸின் ‘த மவுன்ட் ஒவ் மொன்டி கிரிஸ்டோ.’ இது ஒரு பிரெஞ்சு மொழிப் புதினம். ரசித்து வாசிக்கும் அளவுக்கு மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது. அதேபோலத்தான் டால்ஸ்டாயின் ‘போரும் சமாதானமும்.’ இத்தனையிருந்தும் படைப்பாளியான ஜெயமோகன் போன்றோர் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும் லௌகீக நூல்களின் தரத்தில் குறைகாண்கிறார்கள்; மொழியாக்கத்தில் தரத்தை எதிர்பார்க்கிறார்கள். கிறிஸ்தவ மொழியாக்க நூல்களை எடுத்துக்கொண்டால் நிலைமை அதைவிடப் பரிதாபந்தான்.

கிறிஸ்தவ மொழியாக்க நூல்கள்

ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதால் அவருக்கு மொழியாக்கத் திறன் இருந்துவிடும் என்று அர்த்தமல்ல. தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழறிஞர்களா என்ன! கிறிஸ்தவ அனுபவத்தை ஒருவர் அடைந்திருந்து, கிறிஸ்தவ வேதம் தெரிந்திருப்பது மட்டுமே மொழியாக்கம் செய்வதற்குத் தேவையான தகுதிகளல்ல. அதற்கும் மேலாக மொழியாக்கத் தொழில்நுணுக்கத் தகைமைகள் ஒருவரில் காணப்படவேண்டும். அத்தோடு இலக்கியப் புனையெழுத்தனுபவமும் இருக்கவேண்டும். இன்று தமிழில் கிறிஸ்தவ நூல்களை மொழியாக்கம் செய்கிற அநேகரில் இந்தத் தகைமை இல்லாமலிருக்கிறது. கிறிஸ்தவ நூல்களை மொழியாக்கம் செய்ய அது தேவையில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆவிக்குரிய அனுபவம் மட்டுமே அதற்குப் போதும் என்று கருதுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் எனக்குப் புரிகிறது; ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மொழியாக்கத் தகைமை ஆவியானவர் நமக்குக் கொடுக்கும் ஓர் ஆவிக்குரிய ஈவு அல்ல. ஒருவரில் இருக்கும் அத்தகைய தகைமையை ஆவியானவர் இன்னொரு கட்டத்திற்குக் கொண்டுசெல்ல உதவலாம். ஆனால் அந்தத் தகைமை ஆவியானவரிடம் இருந்து வருவதில்லை. அதற்கு ஒருவர் இந்த லௌகீக உலகத்தில் தகுந்த கல்வியையும், மொழியாக்கத் தொழில்நுணுக்க அறிவையும், அனுபவத்தையும் அடைந்திருக்க வேண்டும்.

‘விவிலியத் தமிழ்’

பழைய திருப்புதல் தமிழ் வேத ‘விவிலியத் தமிழைக்’ கிறிஸ்தவர்கள் பேச்சிலும் எழுத்திலும் இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். அதைப் புனிதமானதாகவும், தெய்வீகமானதாகவும் நினைக்கிறவர்கள் தொடர்ந்திருந்து வருகிறார்கள். இந்த 21ம் நூற்றாண்டில் இத்தகைய மடமை இருந்து வருவது ஆச்சரியந்தான். தமிழ் வேதம் நல்ல தமிழில் தரமான மொழிபெயர்ப்பாக இன்று இல்லாமலிருப்பது நம்மக்களைப் பிடித்திருக்கும் ஆவிக்குரிய பஞ்சமாகத்தான் நான் கருதுகிறேன். வேதத் தமிழ் வெறும் வடமொழித் தமிழ். இன்னொருவிதத்தில் சொன்னால் அதில் அந்தக்காலத்து அய்யங்கார் வாடை  அப்பட்டமாக ஆளவுக்குமீறி அடிக்கிறது. உண்மையில் இன்றைய பிராமணர்கள்கூட அத்தகைய தமிழை எழுத்தில் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலான வார்த்தைகளுக்கு அகராதிகளில்கூட அர்த்தம் தேடிக்கண்டுபிடிக்கமுடியாது. (இதைக்குறித்து ஏற்கனவே ஒரு ஆக்கத்தில் விளக்கியிருக்கிறேன்). அந்த மொழியில் கிறிஸ்தவர்கள் பேசுவதோ எழுதுவதோ பின்தங்கிய ஒரு சமுதாயத்திற்கான அடையாளம். அதைக் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் கிறிஸ்தவரல்லாதவர்கள்கூட அது புனிதமானதோ என்று எண்ணவேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளிவிடுகிறது. அந்தத் தமிழில் இன்று கிறிஸ்தவ நூல்கள் வரக்கூடாது; அப்படி வருகிறவற்றை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்க வேண்டும். அவை தமிழையும், தமிழனையும் இழிவுபடுத்துகின்றன. தமிழை உயிராகப் பார்த்த பாரதியும், தமிழை அமுதாக வர்ணித்த பாரதிதாசனும் வாழ்ந்திருந்த இனத்தில் இன்று நூல்கள் நல்ல தமிழில் வெளிவருவது அவசியம். மொழியாக்கங்கள் துப்பரவாக ‘விவிலியத் தமிழ்’ வாடையில்லாதவையாக இருக்கவேண்டும்.

பண்பாட்டுச் சிக்கல் . . .

கிறிஸ்தவம் தொடர்பான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் மேலைத்தேய நூல்களில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அவற்றைப் படைத்தவர்கள் அங்குள்ள சமுதாயத்தைப் புரிந்துகொண்டு, அந்த சமுதாயத்தின் பிரச்சனைகள், தேவைகளை மனதில்கொண்டு அவற்றைப் படைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, திருமணவாழ்க்கையைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் மேலைத்தேய கிறிஸ்தவ நூல் அங்குள்ள சமுதாய வழக்கத்தை மனதில்கொண்டே எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு படைப்பாளியும் தன் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவன். திருமணம் பற்றிய மேலைத்தேய நூலில் இருக்கும் அடிப்படை வேதசத்தியம் எந்த நாட்டுக்கும், எக்காலத்திற்கும் பொருத்தமானதாக இருந்தபோதும், அதன் வாசகர்கள் வாழும் சூழ்நிலையும், பண்பாடும், எண்ணப்போக்கும் முரண்பட்டவையாக இருப்பதால் அந்நூல் நம்மினத்திற்கு பாதிப்பயனையே அளிக்கமுடியும். புலம் பெயர்ந்து வாழுவதும், இணையதளமும் உலகத்தை சுருக்கியிருந்தபோதும் நம்மினத்தில் மேலைத்தேய கலாச்சாரத்தையும், சிந்தனையையும் பற்றிய புரிதலும், செல்வாக்கும் அதிகளவுக்கு இல்லாமலேயே இருந்துவருகிறது. மேலைத்தேய நூல்களின் சத்தியங்களை அதன் கலாச்சாரப் பின்னணியில் இருந்து பிரித்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்கு வாசிக்கவும், சிந்திக்கவும்கூடிய முதிர்ச்சி இன்னும் நம் வாசகர்களுக்குப் பெருமளவில் இல்லாமலிருக்கிறது.

என் நண்பன் அலன் டன்னின் திருமண வாழ்க்கைபற்றிய நூலை (தாம்பத்திய உறவில் நெருக்கம்) நமது சீர்திருத்த வெளியீடுகள் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தது. அருமையான வேதசத்தியத்தை வெளிப்படுத்தும் நூலது. முக்கிய சீர்திருத்தவாத அமெரிக்கப் போதகரும், படைப்பாளியுமான ஒருவர், நாற்பது வருடகாலத்தில் அத்தகைய அருமையான நூலொன்றைத் தான் வாசித்ததில்லை என்று அந்நூலுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கியிருக்கிறார். இருந்தாலும், அத்தகைய ஆவிக்குரிய திருமண உறவை கிறிஸ்தவர்கள் மத்தியில் வெளிப்படையாக இருக்கமுடியாதபடி நம்மினத்துப் பண்பாட்டில் காணப்படும் பெற்றோர் பார்த்து செய்துவைக்கும் திருமண முறையும், இந்துப்பாரம்பரிய ஆணாதிக்கமும், திருமண உறவைப்பற்றிப் பேசவோ, எழுதவோ கூடாத இரகசியமாகக் கணித்து வரும் பண்பாடும், கணவனையும், மனைவியையும் வேதம் எதிர்பார்க்கின்ற உண்மையான, நெருக்கமான அந்நியோன்யத்தோடு வாழமுடியாதபடி தடைசெய்துவருகிறது. நூலை வாசிக்கிறவர்கள் இரகசியமாக நூலின் போதனைகளை ஆமோதித்தபோதும் வெளிப்படையாகப் பேசத்தயங்குவார்கள்; காரணம், பண்பாடுதான். அதுவும் இந்த நூலில் பாலியல் உறவுபற்றி எந்த விளக்கமும் இல்லாதிருந்தபோதும், ஒருசிலருக்கு நூலின் தலைப்பு பிடிக்கவில்லை என்பது சிரிப்புக்கிடமான விஷயம்! அந்தளவுக்கு கர்த்தர் மனிதனின் நன்மைக்காக, அவன் அனுபவித்து ஆனந்தப்படும்படி ஏற்படுத்தியிருக்கும் திருமணவாழ்க்கையைப் பண்பாடு நம்மினத்தில் இரகசியமானதாகக் கேவலப்படுத்தி வைத்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அந்தக் கேவலம் தொடர்கிறது.

ஒருசில மொழியாக்கங்கள்   

சமீபத்தில் 17ம் நூற்றாண்டு ஆங்கில நூலொன்றின் தமிழ்மொழியாக்கத்தை வாசித்தேன். அதன் மூல நூலின் கருப்பொருளில் விரிவுரை கொடுத்துவந்ததால் மொழியாக்கத்தை வாசிக்க நேர்ந்தது. ஆங்கில நூலை இரசித்து வாசித்தளவுக்கு என்னால் தமிழ்மொழியாக்கத்தை ருசிக்க முடியவில்லை. மொழிபெயர்ப்பு வாசகனை வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தையெழுப்புமளவுக்குச் சுவையுள்ளதாக இருக்கவில்லை. முதலில், மொழிபெயர்ப்பாளர் ஆங்கில மூலத்தை உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆங்கில மூலம் 17ம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் இருந்ததும் மொழிபெயர்த்தவருக்கு இடறலாக இருந்திருக்கிறது. இரண்டாவது, சொல்லுக்கு சொல் செய்யப்பட்ட மொழியாக்கமாக அது இருந்தது. மூன்றாவது, தமிழ்நடை கரடுமுரடானதாக இருந்தது. அது தற்காலத் தமிழ்நடையில் இருக்கவில்லை. நான்காவது, நூல் விளக்கும் சத்தியத்தை உள்வாங்கி அதைப் புரிந்துகொண்டு இறையியல் தவறில்லாமல் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஐந்தாவது, 17ம் நூற்றாண்டு ஆங்கிலச் சொற்களுக்கான தகுதியான தமிழ்வார்த்தைகளை மொழியாக்கத்தில் பயன்படுத்தவில்லை. ஆறாவது, கொச்சையான வார்த்தைகளையும், நடையையும் ஆங்காங்கே பயன்படுத்தி வாசகனுக்கு எரிச்சலூட்டுவதாக மொழியாக்கம் இருந்தது. மொத்தத்தில் பணத்தைக்கொடுத்து நூலை வாங்குகிற வாசகனுக்கு மொழியாக்கம் செய்தவர் பாரமாகிவிடுகிறார். அருமையான ஒரு நூல் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறதாகவே என்னால் கருதமுடிந்தது. அந்த மொழியாக்கம் கோபத்தைவிட எனக்கு மிகுந்த மனவருத்ததையே அளித்தது.

தமிழில் வெளியிடப்பட்டிருந்த இறையியல் சொல்லகராதி ஒன்றைக் கையில் கிடைக்கப்பெற்று வாசித்தேன். அதைத் தொகுத்து விளக்கமளித்திருந்தவருக்கு பெரும்பாலான ஆங்கில இறையியல் கலைச்சொற்களுக்கு தமிழ்வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளை நூலில் அப்படியே ஒலிபெயர்ப்பு செய்திருந்தார்கள். இந்த நூலை வெளியிட்டிருந்தது ஒரு இறையியல் கல்லூரி! இது ஒரு மொழியாக்க நூலல்ல. இறையியல் தொடர்பான ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு தகுந்த வார்த்தைகள் தமிழில் உருவாக வேண்டியது அவசியம். அது இருமொழிப்புலமையுள்ள கிறிஸ்தவ இறையியலஞர்களால் செய்யப்பட வேண்டியது.

தமிழகத்தில் இவெஞ்சலிக்கள் இலக்கிய சேவை பதிப்பகத்தார் (ELS) வெளியிட்டிருக்கும் எச். பி. ராஜ்குமார் என்பவர் எழுதியிருக்கும் மோட்சப்பயணம் நூல் குறிப்பிடத்தகுந்தது. நூலைக் கையிலெடுத்து சில பக்கங்களை வாசிக்கின்றபோதே தொடர்ந்து வாசிக்கலாம் என்ற உணர்வை ஊட்டுகிறது. இதைத்தான் அருவியோட்ட எழுத்துநடை என்று விளக்குகிறேன். ஆங்காங்கே இலக்கணப்பிழைகள் நூலில் இருந்தபோதும், அது புனைவெழுத்து நடையைக் கொண்டிருந்து வாசகனைத் தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் வாசிக்கும்போது அதில் அந்நியத்தன்மை புலப்படவில்லை. ஆங்கிலப் பெயர்களுக்கு நல்ல தமிழ் வார்த்தைகளை அதில் பயன்படுத்தியிருக்கிறார்கள். கிறிஸ்தியான் என்றிருப்பதைக் கிறிஸ்தவன் என்று தற்காலத்துக்குரியதாக மாற்றியிருந்திருக்கலாம். மோட்சப்பயணம் ஒரு புனைவு நூல். அதற்கு புனைவெழுத்து நடையே சரியானது. மொழியாக்கம் செய்தவர் அந்த நடையைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த மொழியாக்கம் குறைபாடுகளே இல்லாத பூரண மொழியாக்கம் அல்ல. இருந்தாலும் நல்ல மொழியாக்கம் என்றுதான் சொல்லுவேன். அதுவும் இறையியல் சத்தியங்களுக்கு ஆபத்து விளைவிக்காமல் செய்யப்பட்டிருக்கும், வாசகர்களுக்கு நெருடலேற்படுத்தாத மொழியாக்கம் இது.

மொழியாக்கம் அவசியமானதாக இருக்கிறதென்பதை நாம் மறுக்கமுடியாது; அது லௌகீக நூல்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ நூல்களாக இருந்தாலும் சரி. கிறிஸ்தவர்களுக்கு அது அவசியந்தேவை; முக்கியமாக ஆங்கிலந்தெரியாதவர்களாக இருந்து போதக ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு. இருந்தாலும், தரத்திற்கும் எழுத்துநடைக்கும் முக்கியத்துவமளிக்காமல் செய்யப்படும் மொழியாக்கங்களால் பெரிய பயன்கள் இருக்காது. நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் காணப்படும் மொழி வறட்சியும், வாசிப்பு வறட்சியும், இறையியல் வறட்சியும், கிறிஸ்தவ அனுபவ வறட்சியும் இப்போதிருக்கும்விதத்திலேயே தொடருமானால் மொழியாக்க வறட்சியும் தொடருவதைத் தவிர வேறுவழியே இல்லை.

————————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

5 thoughts on “மொழியாக்க வறட்சி

 1. அன்பான போதகருக்கு,

  சத்தியப் பஞ்சத்தின் சகோதரியாகிய மொழியாக்க வறட்சியைச் சுட்டிக்காட்டி
  அருமை ஆங்கிலத்தில் உள்ள சத்தியப் புதையல்களை இனங்காட்டி
  அழகுத் தமிழில் மொழியாக்கம் செய்பவரிலுள்ள குறைவுகளைக் குத்திக்காட்டி
  திறனறிவின்றி மொழியாக்கம் செய்வதிலுள்ள இடறல்களை இடித்துக்காட்டி
  அனுபவத்தோடு மொழியாக்கம் செய்வதால் வரும் நன்மைகளை எடுத்துக்காட்டி
  நம்மினத்து கிறிஸ்தவத்திலுள்ள வறட்சிகளையும் பஞ்சங்களையும் பட்டியலிட்டுக்காட்டி
  இவ்வறட்சிகளுக்கும் பஞ்சங்களுக்குந் தொடர் நிவாரணமளித்து வருகின்ற
  தங்களின் ஊழியப்பணிகள் தொடரவும் ஆக்கங்கள் பல ஒளிரவும் வாழ்த்துக்கள்.

  “மொழியாக்க வறட்சி” மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.

  Like

 2. Is there any software out there that can change Tamil to English and vice versa? I have read in the news how Facebook and Google claim that their software is very good at translating from one language to another. Also the claim that Artificial Intelligence can aid in this task. What is your view?

  Like

  • Many apps do a limited job. ‘Kriya’ is one of them. It is a dictionary. There are a few that translate sentences from Tamil to English and vice versa. Unfortunately, all these have limited ability. I would put FB and Google too in this category. To my knowledge, there is nothing that could do a full translation from Tamil to English. I would be interested to hear from anyone if there is one. Artificial intelligence could aid, but the problem is who is prepared to spend money and energy to do this to benefit Tamil people. I understand Chinese and Korean languages are well developed with translation software. Even if one is developed, no software could do a thorough translation in Tamil due to its rich literary style, Grammar, and sentence formation.

   Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s