வாசகர்கள் இல்லாத படைப்பாளிகள் இல்லை. வாசகர்களுக்காக எழுதுகிறவர்கள் ஒருவகை; பாலகுமாரனைப்போல. தங்கள் படைப்புகளைத் தேடி வாசகர்களை வாசிக்க வைக்கிறவர்கள் இன்னொருவகை; ஜெயகாந்தனைப்போல. எல்லோருக்கும் வாசகர்கள் தேவை; அவர்களுடைய பங்கைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. அநேகர் இன்று வாசிப்பதில்லை. அது சோகமூட்டுகிறது. இண்டர்நெட்டும், வட்ஸ்அப்பும் அவர்களுடைய நேரத்தையும் கவனத்தையும் கபளீகரம் செய்திருக்கின்றன. வாசிப்பே இல்லாதபோது நுணுக்கமான வாசிப்பை எங்கே போய்த் தேடுவது? நுணுக்கமாக வாசிப்பவர்கள் எப்போதும் சிந்திக்கிறவர்களாக இருப்பார்கள். தரமான வாசிப்பு சிந்தனையாளர்களை உருவாக்கும்.
வாசிக்கின்ற எல்லோரும் எழுதுவதில்லை; எழுதினால் நல்லதே! எழுதுவது வாசிப்பை நுணுக்கமாக எழுதவைக்கும்; மேலும் வாசிக்கத் தூண்டும். இருந்திருந்து இனி இந்தத் தளத்தில் வாசகர்களை எழுதத் தூண்டி அவர்களுடைய சிந்தனைப் பெட்டகத்தில் இருந்து புறப்படும் தீபச்சுடர்களை சுட்டியில் வைத்து அழகுபார்க்கப் போகிறேன். அது உங்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும். அதற்குச் சான்றாக, ஆரம்பமாக வந்திக்கிறது இந்த வாசகரின் எண்ணங்கள். – ஆர். பாலா
வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை – அல்பர்ட் என். மார்டின்

ஷேபா மிக்கேல் ஜார்ஜ்
காந்தமாய் இழுக்கும் ‘உலகம்’ கோரமாய் துரத்தும் ‘பிசாசு’ கருநாகமாய்த் தொடரும் ‘பாவம்’ இவற்றினூடே கிருபையின் நிழலில், கிறிஸ்துவின் ஒளியில், குறுகிய வழியில் கால்பதிக்கும் கடைநிலை விசுவாசியாகிய எனக்கு, அல்பர்ட் என். மார்டின் அவர்களின் ‘வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை’ என்ற நூல் நல்ல வழிகாட்டியாக அமைந்தது. இந்நூலின் முதல் பகுதியில் ஆசிரியர் கிறிஸ்தவ வாழ்க்கை ‘இலகுவானதல்ல’ என்று ஆரம்பித்து, ஒவ்வொரு விசுவாசியின் பயணத்திலும் அவனைத் தடுமாறச் செய்யும் தடைகளையும், தடுக்கிவிழச் செய்யும் தவறான போதனைகளையும் தகுந்த உதாரணங்களுடன் வேதபூர்வமாக விபரித்து, இறுதியில் அதிலிருந்து தப்பிக்க கர்த்தரின் சிட்சையிலும் கிருபையின் சாதனங்களிலும் தங்கியிருப்பது மட்டுமே வழி என்ற ஆணித்தரமான உண்மையோடு முடிக்கிறார் . . .
- “இலகுவாக திறக்கும் மாஸ்டர் திறவுகோல் இல்லை’ என்பதில், வேதத்தின் ஒரு வார்த்தையையோ அல்லது ஒரே வசனத்தையோ மட்டுமே பற்றிக்கொண்டு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்துவிட முடியாது என்றும், முழு வேதசத்தியமும் அதற்குத் தேவை என்ற விளக்கம் தெளிவைத் தந்தது.
- “மரணம்வரைத் தொடரும் விரும்பாத தோழன்” என்ற உருவகம் எனக்குள்ளிருக்கும் பாவத்தினால் ஏற்படும் பிரச்சனைகளும், மன அழுத்தமும், மரணம்வரைத் தொடரும் என்று அறிவுறுத்தியது.
- “தீவிரமாகும் போராட்டம்” என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் என் ஆத்துமாவுக்கு இவ்வுலகிலிருக்கும் வரைக்கும் முழுமையான இளைப்பாறுதலோ அல்லது பூரண பரிசுத்தம் என்பதோ இல்லை, “தொடர்ச்சியான போராட்டமும், விசுவாசிகளின் விடாமுயற்சியும்” மட்டுமே உள்ளது என்ற உண்மையை உணர்த்தியது.
- “உச்சகட்ட அசாதாரண அனுபவம்” என்று ஒன்று இல்லை, மறுபிறப்பு மட்டுமே! . . . அதனூடே வேதத்தின் போதனைகளில் நிலைத்திருந்து வளருவது மட்டுமே! என்ற புரிதல், தவறான போதனைகளைக் கண்டுபிடித்து கருவறுக்கும் யுக்தியை கற்றுத்தந்தது.
மொத்தத்தில் கர்த்தரின் சிட்சையை அற்பமாக எண்ணாமலும், கிருபையின் சாதனங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதனாலும் மட்டுமே வெற்றிக்கோப்பையை எட்டமுடியும் என்று புரிந்துகொண்டேன்.
நூலின் சிறப்பு, ஆசிரியரின் அனுபவ முதிர்ச்சியிலும், ஆத்துமபாரத்திலும், உதாரணத்துடன் விபரிக்கும் இலக்கிய நயத்திலும் மாத்திரம் தங்கியிராமல், அதனூடே பெருகிப் பிரவாகித்து என்னில் கிரியை செய்த கர்த்தரின் பிரசனத்திலும் தங்கியிருக்கிறது . . .
தள்ளாத வயதிலும், தளராமல், தடம்புரளாமல் தொடரும் அல்பர்ட் என். மார்டின் அவர்களது எழுத்துப்பணியைக் கர்த்தர் மேலும் ஆசீர்வதித்து அவருக்கு நீடிய ஆயுளைக்கொடுக்க வேண்டும் என்று கர்த்தரிடம் வேண்டுகிறேன்.
ஆதிசபையின் அற்புத வரங்கள் – ஆர். பாலா
போதகர் பாலா அவர்களின் இந்நூல் என் ஆவிக்குரிய வாழ்க்கையில் அசாதரண மாற்றங்களைக் கொண்டுவர தேவன் பயன்படுத்திய நூல். இரண்டு வருடங்களுக்கு முன் முதன்முறையாக இந்த நூலை வாசித்து நான் அடைந்த ஆறுதல் இன்பம் இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது. நூலின் பின்குறிப்பாக இவ்வாறு எழுதி வைத்துள்ளேன்.
“என் மனதை ஆழமாக உழுது; பல பார்த்தீனிய விஷச்செடிகளை வேரோடு பிடுங்கி; சுவிசேஷ நாற்று வேர் பிடித்து வளர உதவிய நூல்.”
இது மிகைப்படுத்தப்படாத உண்மை. ஆறுவயதில் ‘அந்நிய பாஷை’ வேண்டி ஜெபிக்கக் கற்பிக்கப்பட்டு, இருபத்தி நான்கு வயதில் அது கிடைத்தேயாக வேண்டும் என்ற வெறியினால் ஏற்பட்ட மனச்சிதைவில்; மூளை ஏதோ ஒன்றை முணுமுணுக்க ஆரம்பித்து அதை இரட்சிப்பின் அடையாளம் என்று நம்பி; இவ்வாறு ஆவிக்குரிய குருட்டுத் தன்மையோடு அலைந்து அதளபாதாளத்தில் விழ இருந்த என் அகக்கண்களைத் திறக்க தேவன் பயன்படுத்திய நூல்களில் இது மிகவும் முக்கியமானது . . .
இந்நூலில் ஆசிரியர் 1 கொரிந்தியர் 11-14 வரையிலான அதிகாரங்களுக்கான விளக்கவுரையைத் தந்துள்ளார். முதலாம் அதிகாரத்தில் வேதத்தின் அதிகாரம் என்ற தலைப்பில் வேதத்தின் வழுவற்ற, தெளிவான போதுமான பூரணமான தன்மையோடு அதன் மாறாத அதிகாரத்தை விளக்குகிறார். இது என்னால் நூறுவீதம் வாசித்து உணரப்பட்ட உண்மை; கிருபையினால் ‘வேதம்’ என் சிந்தையையும், மனதையும் ஆட்சி செய்கிறதால் மட்டுமே, இத்தகைய தவறான போதனைகளின் அடிமைத்தனத்தில் இருந்து தப்ப முடிந்தது.
2ம் அதிகாரத்தில் வேதவிளக்க முறைகளை நான்கு தலைப்புகளில் தெளிவாக விளக்கப்படுத்தியிருப்பது, இந்த நூலின் ஏனைய பகுதிகளை வேத அடிப்படையில் புரிந்துகொள்ளவும், தொடர்ந்து தனிப்பட்ட வேதவாசிப்பில் தேறவும் மிகவும் உதவியது.
3ம், 4ம் மற்றும் 11ம் அதிகாரத்தில் ‘சபைகூடிவருதல்’ என்ற பதத்தைத் தெளிவாக விளக்குவதோடு; அந்த சந்தர்ப்பத்தில் அங்கே முறையாக நடக்கவேண்டிய காரியங்களையும், அதில் இருபாலாரும் எவ்வாறு நடந்துகொள்வது என்பதையும், முக்கியமாக சபையில் ஆண்களுக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் தலைமைத்துவத்தையும், ‘முக்காடு’ என்ற பதத்தில் பெண்கள் ஆண்களுக்கு அமைந்து நடக்க வேண்டும் என்ற வேத கட்டளையையும் ஐயந்திரிபற விளக்கியுள்ளார். தாராளவாத மற்றும் பெண்ணீயக் கோட்பாடுகள் தலைவிரித்தாடும் இன்றைய சமுதாயத்தில்; மெய் கிறிஸ்தவ பெண்கள் தீர்க்கமாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய சத்தியங்கள் இவை.
5 முதல் 10 வரையிலான அதிகாரங்களில்: ஆதிசபையில் கர்த்தர் அளித்திருந்த வரங்களையும், அவற்றைப் பயன்படுத்த வேண்டிய முறைகளையும் சரீரத்தின் அவயவங்களோடு ஒப்பிட்டு பவுல் எழுதியிருப்பதை விவரித்து, இவை எல்லாவற்றையும்விட அன்பு ஏன் பெரியது? என்றும், ‘நிறைவானது’ என்ற பதம் குறிப்பது வேதத்தை என்ற இறையியல் உண்மையையும், இன்று முழுமையான வேதம் நம் கரத்தில் இருப்பதால் அந்நியபாஷையோ, வேதத்திற்குப் புறம்பான தீர்க்கதரிசன வரமோ இன்று நிலுவையில் இல்லை; அவைகள் கர்த்தரால் எடுக்கப்பட்டும், நிறுத்தப்பட்டும் விட்டது என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கப்படுத்தியுள்ளார்.
பின் இணைப்பு:
- அப்போஸ்தலர்கள் சபைக்கு அஸ்திவாரமாக கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டவர்கள், எனவே மீண்டும் அஸ்திவாரம் அவசியமில்லாததால்; அப்போஸ்தல ஊழியமோ, அற்புதங்கள் செய்யும் வரங்களோ, அவற்றின் அவசியமோ இன்று இல்லை.
- பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்திற்கும் புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்திற்கும் எந்தத் தர வேறுபாடும் இல்லை.
- வேதத்திற்குப் புறம்பான எந்தத் தீர்க்கதரிசனமும் இல்லை.
- புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கர்த்தரின் இரண்டாம் வருகையோடு தொடர்புடைய தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறப்போகின்றன.
- சுவிசேஷம் சொல்வதற்கு அந்நியபாஷையின் அவசியமில்லை; தெளிவான மொழியில் கர்த்தரின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதே அவசியம்.
- எண்ணெய் பூசி ஜெபித்தல் என்றால் என்ன? என்பதற்கான விளக்கங்கள் மிகவும் வேதபூர்வமான சத்தியங்கள். இன்று ஆவிக்குரிய பெயரில் நடக்கும் அநேக பித்தலாட்டங்களைப் பிரித்து அறியவும், ஞானம் எனப் பொய்யாய்ப் பெயர் பெற்றிருக்கும் கொள்கைகளின் விபரீதங்களுக்கு விலக்கி நம் ஆத்துமாவைக் காத்துக்கொள்ளவும் இந்த அடிப்படை சத்தியங்கள் மிகவும் அவசியமானவை.
போதகர் பாலா அவர்களின் அழிவில்லாத ஆத்மீக பணிகளை தேவன் மேலும் ஆசீர்வதிக்க இறைவனை வேண்டுகிறேன்.
– ஷேபா மிக்கேல் ஜார்ஜ்,
மத்தியகிழக்கு நாடொன்றிலிருந்து