
கிங்ஸ்லி குமார்
வேதமாகிய மூக்குக் கண்ணாடியைப் பயன்படுத்தித் தன்னையும், தன் குடும்பத்தையும், சூழ்நிலைகளையும் நிதானிக்கத் தெரியாமல் தடுமாறும் தமிழ் கிறிஸ்தவ சமுதாயத்தின் கண்களைத் திறக்கச் செய்து, உள்ளுக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்தும் ஆக்கம் ‘வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி.’
தற்போது உலகத்தைப் பிடித்திருக்கும் கொரோனாவைவிடக் கொடிய பயங்கர நோய்களான தீவிர தாராளவாத கொள்கைகள், பின்நவீனத்துவ திருகுதாளங்கள், சூழியல் முற்போக்கு சிந்தனைகள் என்பவற்றை கர்த்தரின் சித்தத்தின் வெளிப்பாடாகிய வேதத்தின் மூலம் எவ்வாறு இனங்கண்டு நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.
இப்படிப்பட்ட பயங்கரமான தொற்றுநோய்களுக்கெல்லாம் காரணமாக இருப்பது பாவம். ஆண்டவர் படைத்த உலகத்தைப் பாவம் செய்து பாழ்படுத்தி, தன்னலத்தோடு தன்னிச்சையாகச் செயல்பட்டுவரும் மனிதர்களின் சிந்தனைகளையும், செயல்களையும், பாவத்தையும் மட்டுமே வெறுக்க வேண்டுமே தவிர, உலகத்தை அல்ல என்று விளக்கியிருப்பது அருமை.
இவ்வுலகத்தைப் படைத்தவரை வணங்காமல், படைக்கப்பட்டவையையும், தங்களுடைய கோட்பாடுகளையும், நெறிமுறைகளையும் கடவுளாக வணங்கி வருகிற, வேத மூக்குக் கண்ணாடி அணியாதவர்களின் பார்வை, கிருபையினால் மறுபிறப்படைந்து வார்த்தையாகிய வேதமூக்குக் கண்ணாடி அணிந்தவர்களின் பார்வையைவிட முரணானதே.
ஆவிக்குரியவர்கள் என்ற போர்வையில் உலகத்தைத் துறந்து பரிசேயர்களைப்போல வாழ்பவர்களையும், சத்தியத்தை நடைமுறை வாழ்க்கையில் தவிர்த்து, அதை வாயில் மட்டும் வைத்திருந்து ஆவிக்குரியதை ஆவிக்குரியதல்லாதவற்றில் இருந்து பிரிக்கத் திறனின்றித் தவிக்கும் மனிதர்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றது இந்த மூக்குக் கண்ணாடி.
ஆதியில் மனிதனைப் படைத்து அவனுடைய நன்மைக்கான அனைத்தையும் தந்த கடவுளுக்கு எதிராகப் பாவத்தைச் செய்து, நன்மைகளை இழந்து, கடவுளையும் உதறிவிட்டு, சகமனிதனின் உரிமைக்காக பாவமனிதன் குரல் கொடுப்பது விந்தையாக இருக்கிறது. இதற்குப் பின்னால் மறைந்திருக்கும் பாவமும், சுயநலம் கலந்த அரசியலும், பெருமை கலந்த புகழ்ச்சியும் சத்திய மூக்குக் கண்ணாடி அணிந்தவர்களின் பார்வைக்குத் தப்பாது.
மெய்க் கிறிஸ்தவன் மனிதனின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்போது அதில் எந்தவித சுயநலமும் இருக்காது. இங்கிலாந்தில் அடிமை வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளிவைத்த வில்லியம் வில்பர்போஸ் இதற்கு ஒரு நல்ல உதாரணம். மெய்க் கிறிஸ்தவன் மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கும்போது அது வேதத்தை அடிப்படையாகக் கொண்டதாக மட்டுமே இருக்கும். மெய்க் கிறிஸ்தவர்கள் இந்தப் பாவ உலகத்தில் வாழ்ந்தபோதும், உலகத்தின் ஆவியைப் பெறாமல், பரிசுத்த ஆவியின் துணையோடு வேதத்தை ஆராய்ந்து ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறார்கள். அந்தவிதத்தில் ஆவிக்கேற்றவிதமாய் ஆராய்ந்து அனைத்தையும் நிதானிக்கிறது இந்த மூக்குக் கண்ணாடி.
வேதம் பெண்களுக்கு அளித்திருக்கும் மிக உயர்வான இடத்தையும், பொறுப்பையும், பாதுகாப்பையும் உணர்த்தி அதுவே மகிமை என்பதை விளக்கி, நவீன பெண்ணியக் கோட்பாடுகளை எவ்வாறு அணுகவேண்டும் என்று விளக்கியிருப்பது தெள்ளத்தெளிவு.
மொழிப்பற்றையும், இனப்பற்றையும் பற்றிப் பேசி சுயலாபத்தையும், பெயரையும், புகழ்ச்சியையும் தேடி அரசியல் ஆதாயம் செய்யும் கூட்டத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தமேயில்லை. அப்படி இருப்பதாக நினைப்பவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாகத்தான் இருப்பார்கள்.
மெய்க் கிறிஸ்தவன் உலகத்தில் இருக்கும் பாவத்தைத்தான் ஒதுக்கி வாழ்வானே தவிர, சக மனிதர்களையும், அரசியல் அமைப்பையும், சட்டங்களையும் அல்ல; படைத்த கர்த்தரே இவற்றையும் தந்திருக்கிறார். தன்னைப்போல பிறரையும் நேசிக்கக் கற்றுத்தந்த கிறிஸ்துவின் கட்டளையை வட்டமிட்டுக்காட்டி, மனித உரிமைக் கோட்பாடுகளையும், மொழிப்பற்றையும், இனப்பற்றையும் மெய்க் கிறிஸ்தவன் அணுகவேண்டிய விதத்தை வேதத்தைக்கொண்டு உலகக் கண்ணோட்டம் அளித்து தெளிவுபெறச் செய்திருக்கிறது ‘வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி.’
தனக்கு ஒரு முகம்
குடும்பத்துக்கு ஒரு முகம்
சபைக்கு ஒரு முகம்
சமுதாயத்துக்கு ஒரு முகம்
கர்த்தருக்கு ஒரு முகம் என
பல்வேறு முகமூடிகளை
அணிந்து வாழும்
பன்முக பலவான்களுக்கு
இந்த ‘வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி’
ஒரு பயங்கர அதிர்வெடி
உலகத்தில் உள்ள அனைத்து நன்மையான ஈவுகளையும் ஆவியின் துணையோடு அனுபவிக்கும்போது சத்தியத்திலும் கிருபையிலும் வளருகிறோம் என்பதை தெளிவாக்குகிறது இந்த ஆக்கம். அத்தோடு, அசத்தியப் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு சத்தியம், சத்தியம் என்று கூப்பாடு போட்டு ஆண், பெண் சமத்துவம் பேசினாலும், தனிமனித உரிமைகளுக்கும், அனைத்துத் தாராளவாத கொள்கைகளுக்கும் குரல் கொடுத்தாலும் அவை கடவுளின் செவிகளை எட்டுமா? என்று கேள்வி கேட்கவைக்கிறது ‘வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி.’
அகக்கண் தெளியாமல்
ஆண்டவரை அறியாமல்
இறையுணர்வு இல்லாமல்
ஈடுபாடு காட்டாமல்
ஊக்கமாக்க மில்லாமல்
எடுத்துக்காட்டாய் வாழாமல்
புலன்களை அடக்காமல்
ஓரமாய் ஒதுங்கி நின்று
அறைகுறை வாழ்க்கை வாழும்
அரைவேட்காட்டு கிறிஸ்தவனுக்கு
அவசியம் தேவை இந்த
‘வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி’
வேதக்கண்ணோட்டத்தோடு அனைத்தையும் அணுகி, வேத சிந்தனையோடு மெய்க் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து உயிர்மீட்பளித்த கர்த்தருக்கு மகிமை செலுத்த உதவியாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கின்ற இந்த ஆக்கத்திற்காக கர்த்தருக்கும், ஆசிரியருக்கும் நன்றி.
கிங்ஸ்லி குமார்
(மத்தியக் கிழக்கு நாடொன்றிலிருந்து)
சத்தியம் மட்டுமென
சத்தமாக சூளுரைத்து
தற்காலத் தமிழ் கிறிஸ்தவம்
சீர்திருந்தவும் பகுத்தறியவும்
அழகு தமிழ் நடையோடும்
ஆழ்ந்தக் கருத்துக்களோடும்
இன்ப இயேசுவின்
ஈவுகளைச் சுட்டிக் காண்பித்து
உகந்த வழி உண்டென
ஊழ்வினை அகல
எல்லாம் வல்ல
ஏகாதிபத்திய கடவுளை
ஐயமின்றித் தேடவேண்டும்
ஒவ்வொரு நாளுமென
ஓயாமல் ஓதிவந்து
ஓளடதமாய் பயனளிக்கும்
“திருமறைத்தீபம்”
கண்டெடுத்தக் குழந்தையாக
எழுதுகோல் பிடித்துத்தொடருகிறேன்
வேத சிந்தனையோடு…
இறையியல் போதனையளித்து
இலக்கண ஊட்டமுமளித்து
ஊக்குவிக்கும் ஆசிரியருக்கு
உளம் கனிந்த நன்றிகள்.
LikeLike
முதல் முறை இந்தத்தளத்தில் எழுதியிருக்கிறீர்கள். நல்ல முயற்சி. சிந்திக்கிறவர்களும், ஆக்கபூர்வமாக கருத்துக்களை எழுதித்தெரிவிக்கிறவர்களும் அருகிக் காணப்படும் காலத்தில், இதிலெல்லாம் ஏன் நேரத்தை செலவிடவேண்டும் என்று எண்ணாமல் எழுதியிருக்கிறீர்கள். வாசித்து சிந்திக்கிறவர்கள் ஏற்கனவே எழுத ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரு ஆங்கில எழுத்தாளர் சொல்லக் கேட்டிருக்கிறேன். எழுதுவதைத் தொடருங்கள் கிங்ஸ்லி!
LikeLike