
K. தானியேல்
‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ என்கிற இந்த அருமையான புத்தகத்தை என் கரங்களில் கொண்டுவந்து சேர்த்த என் தேவனுக்கு முதலில் என் உளமார்ந்த நன்றி.
உலகத்தோற்றத்துக்கு முன்பாக கடவுள் தனக்கென ஒரு மக்களை இந்த உலகத்தில் தெரிந்துகொண்டு, அப்படித் தெரிந்துகொண்ட மக்களை அவர்களுடைய பாவத்தில் இருந்து விடுவித்து இரட்சிப்பை அளிப்பதற்காக, தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பிவைத்தார். இதற்கான திட்டம் அநாதி காலத்தில் பரலோகத்தில் திரித்துவ அங்கத்தவர்களால் தீட்டப்பட்டு அதன்படி பிதாவின் கட்டளையை ஏற்று குமாரன் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மண்ணுலகுக்கு வந்தார். அப்படியே இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தைப் பூரணமாகத் தன் வாழ்வில் நிறைவேற்றி முடிவில் சிலுவையில் மனிதனுடைய பாவத்திற்காக ஒரே தடவை தன்னைப் பலியாகக் கொடுத்து மரித்து உயிர்த்தெழுந்தார். இந்த மீட்பின் நிறைவேற்றுதலால் கிடைக்கப்பெற்ற இரட்சிப்பில் அடங்கியுள்ள இணைபிரியாத, ஒன்றோடொன்று தொடர்புள்ள படிமுறையான பல்வேறு கிருபைகளையே ஆசிரியர் இந்நூலில் விளக்குகிறார்.
இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் காணப்படும் கிருபைகளை ஆசிரியர் அழைப்பில் ஆரம்பித்து மறுபிறப்பு, மனமாற்றம், நீதிமானாக்குதல், மகவேட்பு, பரிசுத்தமாக்குதல், பரிசுத்தவான்களின் விடாமுயற்சி, கிறிஸ்துவுடனான இணைப்பு, மகிமையடைதல் என்று தனித்தனி அதிகாரங்களாகப் பிரித்து மிகத்தெளிவாக இந்நூலில் விளக்கியுள்ளார்.
இந்தப் புத்தகம் என் கையில் வந்து கிடைக்கும்வரை எனக்கு இரட்சிப்பைப் பற்றிய சரியான அறிவு இருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்; அரைகுறைஅறிவே இருந்தது.
நாம் இரட்சிக்கப்பட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து மனந்திரும்ப வேண்டும் என்ற ஒற்றை வார்த்தையைப் பிடித்துக்கொண்டு பயணித்த எனக்கு இந்தப் புத்தகம் அந்த மீட்பின் திட்டத்தின் ஆழத்தையும், அதன் மேன்மையையும் மிகத் தெளிவாகக் கற்றுத் தந்தது.
இந்தப் புத்தகம் என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணின புத்தகம். நான் யார் என்பதையும் (கொடிய பாவி), என் பாவம் எத்தனை கொடியது என்பதையும் (தேவனிடத்தில் இருந்து என்னைப் பிரித்தது), இதில் இருந்து என்னை நானே விடுதலை செய்துகொள்ள முடியாது என்பதையும் (சுயமுயற்சியால்), என்னை மீட்க தேவனே முதல் அடி எடுத்துவைத்தார் என்பதையும், அவர் என் வாழ்வில் கிரியை செய்யவில்லை என்றால் (மறுபிறப்பு) நான் ஒன்றுமே இல்லை என்பதையும் மிகத் தெளிவாக இந்தப் புத்தகம் எனக்கு உணர்த்தியது.
இன்றைய நாட்களில் இரட்சிப்பைப் பற்றி அநேக புத்தகங்கள் தமிழில் வெளிவந்தபோதும் (இன்னும் வந்துகொண்டும் இருக்கின்றன), அவற்றில் பல இரட்சிப்பைப் பற்றித் துளியும் வாசனை இல்லாதவையாகவும், வேறு சில இரட்சிப்பு பற்றிய முழுமையான விளக்கத்தை அளிக்காதவையாகவுமே இருக்கின்றன. ஆனால், இந்த ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ என்கிற புத்தகம் இரட்சிப்பைப் பற்றி ஆழ்ந்த தெளிவான விளக்கத்தை அளிக்கிறது என்பதை இதை வாசிக்கிற ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழ் கிறிஸ்தவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம். இது ஒருமுறை மட்டும் வாசித்துவிட்டு கீழே வைக்கவேண்டிய புத்தகம் அல்ல. பலமுறை வாசித்து, மற்றவர்களுடன் பகிர வேண்டிய அருமையான புத்தகம். நான் ஆரம்பத்தில் சொன்னதையே மறுபடியும் சொல்ல விரும்புகிறேன் – இந்தப் புத்தகத்தை என் கரங்களில் கொண்டு வந்து சேர்த்த என் தேவனுக்கு என் உளமார்ந்த நன்றியை செலுத்துகிறேன்.
K. தானியேல்,
பெங்களூரு