பெண்களைப் பற்றி வேதத்தில் உயர்ந்த இடத்தை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். அவர்கள் குணசாலியாக வாழவேண்டிய வழிமுறைகளையும் எழுதியிருக்கிறார். முறை தவறி வாழக்கூடாது என்பதைப் பற்றியும் கூறியிருக்கிறார், ஆனால் இந்த கட்டுரையை படிக்கும்பொழுது பின்நவீனத்துவம் என்ற பெயரில் சமூகம் எவ்வளவு சீரழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பது மிகப்பெரிய வேதனையே, இதற்கெல்லாம் காரணம் வேதத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறாக பிரசங்கம் செய்ததுமே என்பதை உணரமுடிகிறது.
இந்தக் கட்டுரை எங்களுடைய பிளளைகளை வேதத்தின்படி வளர்க்க உதவி செய்கிறது. நன்றி.
–கிரேஸி பிரான்ஸிஸ்
முதல் தடவை எழுதியிருக்கிறீர்கள். நன்றி. பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உயரிய இடத்தை , வேதம் அதைத் தெளிவாக விளக்கியும் திருச்சபை உணராமல் இருப்பது வேதனைதான். அதற்குக் காரணம் திருச்சபை உலகத்து சிந்தனையான தாராளவாதக் கருத்தியலுக்கு அடிமையாகியிருப்பதே. நம்மினத்துப் பிரசங்கிகளும் அதற்கு முக்கிய காரணம்.
உங்களைப்போன்ற பெற்றோர்கள் வீட்டில் பெண்களுக்கு வேதப்பாலூட்டி பெண்ணியத்தின் ஆபத்தை விளக்கி வளர்த்தால் அவர்களைப் பாதுகாக்கலாம்.
பின்நவீனத்துவத்துவம் என்பது மேலைநாடுகளை மட்டும் பிடித்திருக்கும் சீரழிவு என்று நம்மவர்கள் தவறாக எண்ணி வருகிறார்கள். அது ஏற்கனவே நம் சமுதாயத்தில் ஆழமாகக் காலூன்றிவிட்டது. கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், படைப்பாளிகள் மத்தியிலும், தொழிலகங்களிலும் அது வேரூன்றிவிட்டது. பெருநகரங்களில் பின்நவீனத்துவ பெண்ணியம் பண்பாட்டுப் பாதிப்புக்களை எப்போதோ ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்னபே ‘இன்டியா டுடே’ இதழ் பின்நவீனத்துவ பாணியில் பெண்ணியக் கருத்தியல் போக்கில் சமூகத்தில் ஆண், பெண் பாலுறவுப் போக்குகளை அப்பட்டமாக, வெளிப்படையாக ஆய்வு செய்து வருடாந்தம் வெளியிட ஒரு இதழையே அர்ப்பணித்திருக்கிறது. இருபத்தந்துவருடங்களுக்கு முன் சமூகம் அதற்கெதிராகப் போராட்டம் நடத்தியிருக்கும். இப்போது சமூகம் அதைப் பொருட்படுத்துவதில்லை.
பெண்ணியம் ஆபத்தானது; அடிப்படைக் கிறிஸ்தவ சத்தியங்களுக்கு முரணானது. கிறிஸ்தவ பெண்கள் பெண்ணியக் கருத்தியல் வலையில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டும் போதாது; கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆணாதிக்கத்துக்கு முடிவுகட்ட வேண்டும். இந்துப் பண்பாட்டின் எச்சங்களில் ஒன்றான ஆணாதிக்கம் கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றும் தொடருகின்றது. கிறிஸ்தவ ஆண்கள், பெண்களை மதித்து அவர்களுடைய உயரிய இடத்தை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். கலியாண சந்தையில் விற்பனைக்கு வைத்திருக்கும் பலியாடுகளைப்போல அவர்களை நடத்தக்கூடாது. வேதம் அனுமதிக்கின்ற எல்லாத் தளங்களிலும் அவர்கள் வளரவும், உயரவும் ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்களுக்கு இதில் பெரும் பங்கிருக்கிறது. திருச்சபையில் பெண்கள் செய்யக்கூடாத பணிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக அவர்களை இரண்டாந்தர இனமாக கிறிஸ்தவ ஆண்கள் நடத்தக்கூடாது. மனைவியைக் கணவர்கள் மதித்து நடத்தவேண்டும்; ஆவிக்குரியவிதமாகவும், வேறுவிதங்களிலும் அவர்கள் உயர உதவவேண்டும் (நீதி 31).
–ஆர். பாலா