
ஜெரால்டு
சமீபத்தில் நீங்கள் எழுதிய “வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி” என்கிற தலையங்கத்தைக் கொண்ட கட்டுரையை வாசித்தேன். அதைப் பற்றிய என் பார்வையை எழுத விளைகிறேன்.
உலகத்தை அனுபவித்தல்
உலகத்தில் நடக்கிற காரியங்களை வேத கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும், உலகத்தின் இன்பங்களை வேத வழிமுறைகளின்படி அனுபவிக்க வேண்டும் என்று எழுதியிருப்பது என் கவனத்தை ஈர்த்தது; சற்று சிந்திக்கவும் செய்தது. ஏனென்றால், “கிறிஸ்தவர்கள் உலகத்தின் இன்பங்களுக்கு ஆட்படாமல் தாமரையிலையில் தண்ணீரைப்போல உலகத்திற்கு விலகித் தங்களை பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள வேண்டும்” என்கிற போதனையே இன்று தமிழகத்தில் பரவலாக காணப்படுகிற சூழலில், “ஆண்டவர் நம்மை உலகத்தைத் துறந்து வாழச் சொல்லவில்லை; உலகத்தில் இருந்து வாழச் சொல்லியிருக்கிறார்” என்கிற வரிகள் இந்தவிஷயத்தைப் பொருத்தவரையில் வாசிப்பவர்களின் இருண்டிருக்கும் இருதய வானில் திடீரென உதித்த மின்னல் ஒளியைப் போன்று பிராகாசித்திருக்கும், தாக்கியிருக்கும் என்று நம்புகிறேன்.
என்னிலும் அப்படியானதொரு தாக்கத்தை உணர்ந்தேன். முன்பு இவற்றைப் பற்றிய அறிவு இல்லாமல் இருக்கவில்லை. ஆனால், அது மின்மினிப் புச்சியின் வெளிச்சத்தைப் போல குறைவாகவே இருந்தது. இந்தக் கட்டுரையை வாசித்த பிறகு அதைப் பற்றி ஆழமாக சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. அதற்காக உங்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மின்மினிப் புச்சியின் வெளிச்சத்தை மின்னலின் வெளிச்சத்தோடு ஒப்பிட முடியாததைப் போல, இக்கட்டுரை உள்ளத்தில் மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுத்து, ஏன் உலகத்தைப் பற்றிய இப்படிப்பட்ட பார்வை இல்லாமல் இருக்கிறது என்று சிந்திக்க வைத்தது.
உண்மைதான், “நான் ஆவிக்குரியவன். ஆகையால் உலக இன்பங்களை என்னைவிட்டகற்றி பரிசுத்தமாக வாழ வேண்டும்” என்ற எண்ணத்தினால், ஆண்டவர் நீதியாக அனுபவித்து வாழும்படி ஏற்படுத்தியிருக்கிற உலக இன்பங்களைத் தவிர்த்து வாழ்வதும் வாழ முயற்சிப்பதும் எத்தனை அறிவீனம்.
இன்றைய கிறிஸ்தவத்தின் நிலை
ஆண்டவருடைய வார்த்தையின்படி சொல்வதானால் இன்றைய கிறிஸ்தவர்களின் நிலை,
”குருடருக்கு வழிகாட்டுகிற
குருடர்களுக்குப் பின்னால்
குருடர்களாக
குருட்டுத்தனத்தோடு”
சென்று கொண்டிருப்பதே உண்மை.
நாம் யார், நம்முடைய நம்பிக்கை என்ன, இவ்வுலகில் ஆண்டவர் நம்மை எப்படி வாழச் சொல்லியிருக்கிறார் என்கிற சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்நிலைக்கான காரணங்கள்
இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். பல காரணங்களிருந்தாலும், சில அடிப்படையான இன்றியமையாமல் இருக்கவேண்டியவைகள் இல்லாமல் இருப்பதே காரணங்களாக உணர்ந்தேன். அவை என்னவென்றால்,
1) வேதம் மறுக்கப்படுகிறது (வேதப் பஞ்சம்)
வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக ரோமன் கத்தோலிக்க மதம் வேதத்தை மறைத்து கிறிஸ்தவர்களை வஞ்சித்தது. அப்பொழுது வேதம் மக்கள் கைகளில் இல்லாததால் சத்திய வெளிச்சமில்லாமல் இருண்ட காலமாயிருந்தது.
ஆனால் இன்றோ, கிறிஸ்தவர்களிடம் வேதம் மறைக்கப்பட்டிருக்கவில்லை, மறுக்கப்பட்டிருக்கிறது. அன்றாடம் வேதத்தை வாசித்து சிந்தித்துத் தியானித்து வாழாமலும், வேதத்தோடு நேரம் செலவிடாமலும் கிறிஸ்தவர்கள் வேதத்தை மறுக்கிறார்கள்.
சுருக்க தியானச் செய்திகளையும், வாக்குத்தத்த வசனங்களையும், 1000 ஸ்தோத்திர பலிகளையும் சொல்லிவிட்டு வேகமாக ஓடுகிற கிறிஸ்தவனால் வேதம் மதிக்கப்படாமல் மறுக்கப்படுகிறது. எங்கு வேதம் மறுக்கப்படுகிறதோ அங்கு கர்த்தரும் மறுக்கப்படுகிறார், அவருடைய வழிகளும் மறுக்கப்படுகிறது. விளைவு – கிறிஸ்தவர்கள் ஓநாய்களுக்கு இறையாகிவிட்டனர்; அவர்களால் வேட்டையாடப்படுகின்றனர். அநேகருக்கு இது புரிந்தாலும், வலித்தாலும் அவர்களிடமிருந்து விடுபட்டு வேதத்தின் பக்கமாக வர மனதில்லாமல் தொடர்ந்தும் துன்பங்களோடு வாழ்வது வேதனையளிக்கிறது. சத்திய வெளிச்சம் இல்லாமைக்கு காரணம், வேதம் மறுக்கப்படுகிறது.
2) வேதப்பிரசங்கம் மறுக்கப்படுகிறது (பிரசங்கப் பஞ்சம்)
வேதத்தை பிரசங்கிக்கும் பிரசங்கிகளும் இன்று வேதத்தை ஆராய்ந்து படித்து, உழைத்து, நேரம் செலவிட்டுப் பிரசங்கங்களைத் தயாரித்துப் பிரசங்கிப்பதை விடுத்து எளிய முறைகளைக் கையாளவே முயற்சிக்கிறார்கள். 52 வாரங்களுக்கான பிரசங்க புத்தகத்தை வாங்கி அதிலிருக்கும் பிரசங்கங்களை சற்றும் சிந்திக்காமல் பிரசங்கிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். “பிரசங்கத்தை உழைத்து தயாரிப்பதா, அது தவறு. அது ஆவியானவரின் செயல்” என்று ஒரு போதகர் என்னிடம் வியந்திருக்கிறார். இதனால் பிரசங்கங்கள் இன்று வலுவிழந்து காணப்படுகின்றன.
ஆத்துமாக்களைக் கண்டித்து, உணர்த்தி, ஆறுதல்படுத்தி, வேத வழிகளின்படி வழிநடத்தக்கூடிய வேதப் பிரசங்கங்கள் இன்று மிகக் குறைவாகவே இருக்கிறது. “ஆலோசனை இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்” என்கிற வார்த்தையின்படி இன்று கிறிஸ்தவம் மிகவும் தாழ்ந்த நிலையிலிருப்பதற்கு இது முக்கிய காரணம்.
பிரசங்கப் பஞ்சம் நிலவுகிற காலமாயிருப்பதனால் மக்கள் வேதத்தைக் கொண்டு உலகத்தை பார்க்க முடியாமலிருக்கிறது.
முடிவாக,
மேற்கூரிய காரணங்களால் நலிவடைந்திருக்கும் கிறிஸ்தவர்களை சிந்திக்கச் செய்திருக்கிறது இக்கட்டுரை. தங்களைச் சுற்றிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை வேதக் கண்ணோட்டத்தோடு பார்க்கத் துவுண்டியிருக்கிறது. அதற்கு உதவியாக இருக்கும்படி உலகத்தின் நிகழ்வுகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் வாசித்து சிந்திக்கவும் உந்தித்தள்ளியிருப்பது கட்டுரையின் சிறப்பு.
இவற்றைப் பற்றியெல்லாம் எந்தவித அக்கறையும் கொள்ளாமல் பெண்ணியத்தின் பின்னாலேயும், மொழிப்பற்று இனப்பற்று என்று கூறித்திரியும் கூட்டத்தின் பின்னாலேயும், எல்லாவற்றிலும் தீவிர தாராளவாதக் கோட்பாடுகளோடும், இயற்கையைக் காக்கிறோம் என்கிற பெயரில் படைத்தவரைவிட்டு படைப்புகளின் பின்னால் ஓடித்திரிவதையும், மனித உரிமைகள் என்கிற போர்வையில் பாசாங்கு செய்து கொண்டிருக்கும் கூட்டத்தையும் கடுமையாக எச்சரித்து வேதத்தின் பார்வையில் உலகத்தைப் பார்க்கும்படி உணர்த்தியிருக்கிறது கட்டுரை. மேலும் இவைகளைப் பற்றி அறிவில்லாதவர்களுக்கு அறிவையும் கொடுத்திருக்கிறது.
”ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” என்கிற வசனத்தின்படி சரியான நேரத்தில் சரியான பாதையை காட்டியிருக்கிறீர்கள். இக்கட்டுரை தனிப்பட்ட விதத்தில் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
– ஜெரால்டு
உங்கள் கடிதத்திற்கு நன்றி ஜெரால்ட். உலகத்தைப்பற்றிய தெளிவில்லாமல் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இருப்பதற்கான உங்கள் காரணங்கள் உண்மையே. என் ஆக்கத்தில் ‘உலகத்தைத் துறந்து வாழக்கூடாது; உலகத்தில் இருந்து வாழவேண்டும்’ என்று நான் குறிப்பிட்டது உங்கள் கவனத்தைத் தொட்டிருக்கிறது. “கிறிஸ்தவர்கள் உலகத்தின் இன்பங்களுக்கு ஆட்படாமல் தாமரையிலையில் தண்ணீரைப்போல உலகத்திற்கு விலகித் தங்களை பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள வேண்டும்” என்ற போதனையே தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது என்று கூறியிருந்தீர்கள். இதில் ‘உலகத்தின் இன்பம் என்பதை அவர்கள் உலகத்து இச்சைகள் அல்லது மாம்சத்துக்குரியவைகள் என்ற பொருளில் பயன்படுத்தியிருந்தால் அது தவறில்லை. உலகத்தில் காணப்படும் நீதியான ‘இன்பங்கள்’ நமக்குரியவையே. இயற்கையைப் பார்த்து வியந்து கிறிஸ்தவன் இன்பமடையலாம். ஓவியம் தீட்டலாம். சென்னை பீனிக்ஸ் சாப்பிங் மோலைச் சுற்றிப்பார்த்து ரசிக்கலாம். கடவுளின் மகிமைக்காக வாழும் கிறிஸ்தவன் தன்னுடைய முதன்மையான ஆவிக்குரிய பணிகளுக்குத் தடைவராதவிதத்தில் இதையெல்லாம் உரிமையோடு அனுபவிக்கலாம். பரிசுத்த வாழ்க்கைக்கு முதலிடம் அளித்திருந்த பியூரிட்டன் பெரியவர்கள்கூட சதுரங்கம் விளையாடியிருக்கிறார்கள்! அவர்கள் உலகத்தை வெறுக்கவோ அல்லது உதறித்தள்ளியோ வாழவில்லை.
‘தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீரைப்போல்’ என்ற வார்த்தைப் பிரயோகம், உலகத்தில் இருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர்போல் அதோடு ஒட்டாமல் இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் உலகத்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது. கிறிஸ்தவனால் அது முயன்றாலும் முடியாத காரியம். ஏற்கனவே நாம் ‘மரணத்தின் சரீரத்தைத்தாங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பாவ உலகில் மறுபிறப்பின் அனுபவத்தைக் கொண்டு நாம் நன்மையானதை அனுபவித்துத் தீமைக்குத் தள்ளி நின்று பரிசுத்தமாக வாழவேண்டும்.
சிலவேளைகளில் உலகத்தில் நீதியானதையும், நன்மையானதையும்கூட நாம் ஒரு சில தனிப்பட்ட, அல்லது பொதுக்காரணங்களுக்காக, பவுல் தன் வாழ்க்கையில் விலக்கிவைத்து வாழ்ந்ததைப்போல விலக்கிவைக்கலாம். அதில் தவறில்லை; அது தனிப்பட்ட உரிமை. பவுல் தான் செய்ததை எல்லோரும் செய்யவேண்டும் என்று வற்புறுத்தவில்லை. ஒருவருக்கு நன்மையானதாகவும், ஆபத்து விளைவிக்காததுமான ஒன்று, இன்னொருவருக்கு சோதனையாக அமைந்துவிடலாம். உதாரணத்திற்கு, தொலைக்காட்சி. சோதனைக்குள் விழுந்துவிடாமல் இருப்பதற்காக அவர் அதை வீட்டில் வைக்காமல் இருந்துவிடலாம். அவர் செய்வது சரியே; தனிப்பட்டவிதத்தில் அவர் தன் பலவீனத்துக்கு இடங்கொடுக்காமலிருக்க அதைச்செய்கிறார். இன்னொருவருக்கு அந்தப் பலவீனம் இல்லாமல் இருக்கலாம். அதனால் அவருக்குத் தொலைக்காட்சி பிரச்சனையானதல்ல. பார்க்க அவசியமானவற்றை மட்டும் பார்த்து அவர் தன்னைக் காத்துக்கொள்கிறார். எனக்கு ‘திருப்பதி லட்டு’ பிடிக்கும். திருப்பதி என்ற பெயர் லட்டோடு இணைந்திருப்பதற்காக திருப்பதி லட்டைச் சாப்பிடப் பயப்படலாமா? லட்டு லட்டாகத்தான் மாறாமல் இருக்கிறது; அதைவைத்து மனிதன் எத்தனை நாடகமாடினாலும்.
உலக இச்சைகளையும், கடவுளுடைய கட்டளைகளுக்கு எதிரானவைகளையும் நாம் ஒதுக்கி வாழவேண்டும். அவை தவிர ஏனையவை எல்லாக் கிறிஸ்தவர்களும் அனுபவிக்கக் கடவுளால் கொடுக்கப்பட்டவையே. உலகம் நமது நன்மைக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. அதிலுள்ளவற்றை வேதபூர்வமான முறையில் அனுபவிக்கும் ஆசீர்வாதம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
– ஆர். பாலா