2. நாம் பாவம் செய்கிறபோது, நமக்கு எதிராக நாம் செயல்படுகிறோம்.
2.1. பாவம் மனிதர்களாகிய நமக்கு, சரீர ரீதியில் எதிரானது.
நாம் தேவசாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறபடியால் (ஆதியாகமம் 1:26), கடவுளுடைய பார்வையில் தீமையான எதுவும், நமக்கு கேட்டையே விளைவிக்கும். நமக்கு உச்சகட்டமான நன்மைதரக்கூடியதொன்று இருக்குமானால், அது கடவுளோடு நாம் நல்லவிதமான ஐக்கியத்தைக் கொண்டிருப்பதுதான். நாம் கைக்கொள்ளும்படி கடவுள் ஏற்படுத்தியிருக்கிற கட்டளைகள், அவருடைய பரிசுத்தத் தன்மையை நமக்கு வெளிப்படுத்துவதாக மட்டுமில்லாமல், அவருடைய படைப்புகளான நம்முடைய நன்மைக்காகவுமே ஏற்படுத்தியிருக்கிறார். பாவம் நமக்கு, இந்த வாழ்க்கையிலும் நம்முடைய மரணத்திற்கு பிறகுள்ள வாழ்க்கையிலும் எந்தவிதத்திலெல்லாம் பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது என்பதை நான் விரிவாக விளக்க விரும்புகிறேன்.
அ. பாவம், இந்த உலகத்து வாழ்க்கையில், நம்முடைய சரீரத்தில் தீங்கை ஏற்படுத்தக்கூடியது. படைப்பில், ஆதாமும் ஏவாளும், கடவுளுடைய கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிகிறவரை, மரணமில்லாத பரிபூரணமான சரீரத்தைக் கொண்டிருந்தார்கள். பாவத்தின் விளைவாகவே மரணம் உண்டானது (ரோமர் 5:12), ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, அவர்களுடைய சரீரங்கள் மரணத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இப்போது எல்லா மனிதர்களுக்கும் மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது (எபிரெயர் 9:27). பாவத்தின் காரணமாக, நம்முடைய சரீரங்கள், மண்ணுக்குத் திரும்பும்படி தண்டிக்கப்பட்டிருக்கிறது.
ஆ. பாவம், இந்த வாழ்க்கையில் மட்டுமல்லாமல், நம்முடைய மரணத்திற்கு பின் வரக்கூடிய வாழ்க்கையிலும் நம்முடைய ஆத்துமாவுக்கு தீங்கை ஏற்படுத்தக் கூடியது. நம்முடைய சரீரங்களுக்கு உண்டாகும் தீங்கைக் காட்டிலும் நம்முடைய ஆத்துமாவுக்கு உண்டாகும் தீங்கு மிகவும் கேடானதாகும். நம்முடைய சரீரங்கள் ஒரு முறை மட்டுமே வாழ்ந்து, மரணத்தைத் தழுவும். ஆனால் நம்முடைய ஆத்துமாவோ என்றென்றைக்கும் வாழும். இயேசு சொல்லுகிறார்,
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28)
நம்முடைய ஆத்துமாவுக்கு எதிராக பாவம் செய்வதைத் தவிர்ப்பதற்காக, நம்முடைய சரீரத்தில் எவ்வளவு துன்பங்களையும் அனுபவிக்கலாம்.
இந்த இரண்டு குறிப்புகளும், நம்முடைய சரீரப்பிரகாரமான வாழ்க்கையையும் நம்முடைய ஒழுக்கம் சம்பந்தமான வாழ்க்கையையும் பாதிப்பதாக இருப்பதால், இவற்றை மேலும் விரிவாக விளக்கப் போகிறேன்.
உதாரணமாக,
1. படைப்பில், ஆதாமும் ஏவாளும் பரிபூரணமான வாழ்வியல் சூழலில் வாழ்ந்து வந்தார்கள். அங்கிருந்த அனைத்தும் அவர்களுடைய உடலுக்கு நல்லதாகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகவுமே இருந்தன. ஆனால் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், பாவம் செய்தபோது, கடவுள் அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டார். அதுவரை அவர்களுக்கு இருந்த, எல்லா நன்மைகளையும் அவர்கள் இழந்தார்கள். அவர்கள் பரதேசிகளைப் போலவும், பிச்சைக்காரர்களைப் போலவும் சபிக்கப்பட்ட இந்த உலகத்தில் வாழவேண்டிய நிலை உருவானது. அவர்கள் உயிர் வாழ்வதற்காக, தங்களுடைய கைகளைப் பயன்படுத்தி, சரீரத்தை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்து உணவருந்த வேண்டியிருந்தது.
கர்த்தராகிய இயேசு, பாவமுள்ள மனிதர்களை மீட்பதற்காக இந்த உலகத்திற்கு வந்தபோது, அவர் வெறுமையாக வந்தார். அவரே எல்லாவற்றிற்கும் ஆண்டவர். இருப்பினும், வீழ்ச்சியடைந்த மனித சாயலில் அவர் வந்ததால், அவர் துன்பம் நிறைந்தவராகவும், ஆதரவற்றவராகவும், தனக்கென்று ஓர் இருப்பிடம்கூட இல்லாதவராகவும் வரவேண்டியிருந்தது (லூக்கா 9:58). இது, நம்முடைய முதல் பெற்றோர் இருந்த, ஏதேனின் மிகப்பெரிய சுதந்திரத்தை, மனித குலம் இழந்திருக்கிறது என்பதையே நமக்குக் காட்டுகிறது. பாவம் நமக்கிருந்த சிறப்பான சுதந்திரத்தை அபகரித்துக் கொண்டது.
2. பாவம், நாம் பெரிதும் விரும்புகிற, கஷ்டமில்லாத இளைப்பாறுதலான வாழ்வியல் சூழலை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டது. நம்முடைய வேலைகளையெல்லாம் பாடுபட்டு முடித்தாலும், நமக்குக் கிடைப்பது என்னவோ கொஞ்சமே (பிரசங்கி 2:22-23). ஏதேனின் வாழ்க்கை, கடினமில்லாததாக, இனிமையானதாக இருந்தது. ஆனால் இப்போதோ, அது விரக்தியும், வலியும், வியர்வையும் கொண்டதாக இருக்கிறது (ஆதியாகமம் 3:17-19).
3. பாவம், நமக்கிருந்த சுகத்தையும், மகிழ்ச்சியையும் திருடிக்கொண்டது. நம்முடைய மகிழ்ச்சி பெரும்பாலும் கண்ணீராக மாறிவிடுகிறது. ஏதேனில், ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய ஆசீர்வாதத்தினால், தங்களுக்கான அனைத்தையும் பெற்று, எந்தவிதமான துன்பமும் இல்லாதிருந்தார்கள். ஆனால் இப்போதோ, இனிப்பைச் சாப்பிட்டாலும், அதில் கசப்பும் கலந்தே இருக்கிறது. பெண்களுக்குப் பிள்ளை பெறுதல் மகிழ்ச்சியைத் தந்தாலும், அது அசௌகரியமும் வலியும் கலந்ததாகவே இருக்கிறது.
4. நோய்க்கும் உடல்நலக் குறைபாடுகளுக்கும் தடுப்பாற்றல் கொண்ட மனிதன் ஒருவனும் இல்லை. பாவம் உலகத்தில் பிரவேசிப்பதற்கு முன், உடல்நலக் குறைபாடு என்பது இல்லவே இல்லை. சிறந்த உணவு வகைகளை நாம் சாப்பிட்டாலும், நல்ல பலன்தரக்கூடிய மருந்துகளை நாம் பயன்படுத்தினாலும், நம்முடைய சரீரங்களை எவ்வளவுதான் கவனத்துடன் பாதுகாத்துக்கொண்டாலும், “ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும், வெறும் மூச்சுக் காற்று மட்டுமே” (சங்கீதம் 39:5). எப்பேர்பட்ட நிலையில் இருந்தாலும், மனிதன் என்பவன் எளிதில் சுக்குநூறாகப் போகக்கூடியவன். ஏனென்றால், பாவம் நம்முடைய உடல்நலத்திற்கு எதிராகச் செயல்படும் கிருமியாக இருக்கிறது.
5. பாவம் நம்முடைய மனச்சாட்சியை உறுத்துகிறது. நாம் அமைதியான சூழலில் இருக்கிறபோது, எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம். “மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம் (மருந்து); முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” (நீதிமொழிகள் 17:22). ஆகவே பாவம் நம்முடைய மனச்சாட்சியின் அமைதியைக் குலைத்துவிடுகிறது.
6. பாவம், நம்முடைய சரீரத்தின் பரிபூரண நிலையை உருக்குலைத்துவிட்டது. படைப்பில், இந்த உலகத்தில், உருக்குலைந்த அவலட்சணமான நிலையில் எதுவும் இருக்கவில்லை. “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது” (ஆதியாகமம் 1:31). ஆனால் இப்போதோ, நாம் இழந்த அந்த சிறப்பான நிலையை அடைவதற்காக பல்வேறு வழிகளில் முயன்றாலும், எல்லாம் வீணாகப் போகிறது.
7. பாவம், நம்முடைய சரீரத்திற்கும், ஆத்துமாவுக்கும் இடையே பெரும் பிரச்சனையை உண்டாக்கியிருக்கிறது. நம்முடைய சரீரத்தின் உணர்ச்சிகள் நம்மை ஒரு பக்கமாக இழுக்கிறது, ஆனால் நம்முடைய ஆத்துமாவோ அதைக்குறித்து நம்மை எச்சரிக்கிறது, இறுதியில் நம்முடைய சிந்தை குழம்பி நிற்கிறது. படைப்பில், ஆதாமும் ஏவாளும், கீழ்ப்படியாமையின் பாவத்தில் வீழ்வதற்கு முன்பு, எது சரியானது என்பதை அறிந்திருந்தார்கள், சரியானதை நேசித்தார்கள், சரியானதைச் செய்தார்கள். ஆனால் இப்போதோ, நம்முடைய ஆத்துமா பெரும்பாலும் சரீரத்தின் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டதாகவே இருக்கிறது.
8. மனித தன்மையிலுள்ள பாவத்தின் காரணமாகவே, திருமணம் முறிவதும், ஒழுக்கக்கேடான வாழ்க்கைமுறைகளும் ஏற்பட்டிருக்கிறது. பாவம் சமுதாயத்தின் உடல்நலத்தைக் கெடுத்திருக்கிறது. சபையிலும், நாட்டிலும், பிரிவினைகளை உண்டாக்கி, ஒற்றுமையைக் குலைத்து, அவநம்பிக்கையை ஏற்படுத்தி, உறவுகளை உடைத்திருக்கிறது.
9. பாவம், நம்முடைய உடல்நலத்தை மட்டும் பாதிக்கவில்லை, நம்முடைய வாழ்நாட்களையும் பாதித்திருக்கிறது. தாயின் கருவறையிலே எத்தனை சிசுக்கள் சாகின்றன. பிறந்த குழந்தைகளும், வளர்ந்த பச்சிளங்குழந்தைகளும் எத்தனையெத்தனை சாகின்றன! ஆயிரக்கணக்கான மனிதர்கள் நோயினால் அன்றாடம் சாகிறார்கள். போர்களிலும், இயற்கை பேரழிவுகளிலும் இன்னும் எத்தனை எத்தனை மனிதர்கள் சாகிறார்கள். உலகத் துவக்கத்தில் வாழ்ந்த மனிதர்களோடு ஒப்பிட்டால், நம்முடைய வாழ்நாட்காலம் எந்தளவுக்குக் குறைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். இன்று பிறக்கிற ஒரு குழந்தை, இன்னொரு நாளைக் காணும் என்று சொல்லுவதற்குக்கூட முடியாத நிலை இருக்கிறது.
மேற்சொல்லிய குறிப்புகள் அனைத்தையும் மேலும் விரிவாக விளக்க முடியும். ஆனால் சுருக்கமாக தந்திருக்கிற இந்த விளக்கங்களே, பாவம் மனிதர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், மனிதனுக்கான நன்மையைக் கெடுக்கிறதாகவே இருகிறது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டப் போதுமானவையாக இருக்கின்றன.
2.2 பாவத்தன்மை, மனிதனுடைய ஒழுக்க நிலையைக் கெடுத்துவிட்டது.
கடவுள் நம்மை தேவதூதர்களுக்குச் சற்று கீழானநிலையில், சிறப்பானவர்களாகப் படைத்தார் (சங்கீதம் 8:5). ஆனால் பாவம், மனித குலத்தின் ஆரம்பச் சிறப்புகளைக் கெடுத்து, இப்போது இருக்கிறபடி நம்மை சாத்தானுக்கு ஏற்ற நிலைக்கு கொண்டுவந்துவிட்டது.
அ. இந்த ஒழுக்கரீதியான சீர்குலைவு, நம்முடைய சரீரத்தின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கிறது. நம்முடைய வாயினால் மற்றவர்களைச் சபிக்கிறோம், நம்முடைய வார்த்தைகளினால் மற்றவர்களை ஏமாற்றுகிறோம், நம்முடைய கண்களை இச்சைக்குப் பயன்படுத்துகிறோம், நம்முடைய முகத்தில் பெருமையைக் காட்டுகிறோம், நாம் கேட்க வேண்டியவைகளை கேட்க மறுத்து, காதைப் பொத்திக்கொள்ளுகிறோம், நம்முடைய கைகளைக் கொண்டு கேடான காரியங்களைச் செய்கிறோம், நம்முடைய கால்களினால் கேட்டை நடப்பிக்கிறோம். நம்முடைய சரீரத்திலுள்ள எதைக் கொண்டு நாம் பாவம் செய்யவில்லை?
ஆ. இந்த ஒழுக்கரீதியான சீர்குலைவு, நம்முடைய ஆத்துமாவையும் கெடுத்திருக்கிறது. படைப்பில் மனிதன் கடவுளைப்போல் நீதியும், பரிசுத்தமுமுள்ளவனாக இருந்தான். ஆனால் ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய கட்டளையை மீறிச் செய்த பாவம், கடவுளுடைய பரிசுத்தத் தன்மையை வெளிப்படுத்திய சிறப்பை மனிதகுலத்தின் மீதிருந்து அகற்றிவிட்டது. படைப்பின்மூலம் கிடைத்த சிறப்புக்களை இழந்ததனால், மனிதகுலம் பரிசுத்த கடவுளால் படைக்கப்பட்டதும், கடவுளுடையவர் களுமானவர்கள் என்ற நிலையில் இனி இல்லை. இயேசுதாமே இதை விளக்கியுமிருக்கிறார், “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்” (மத்தேயு 15:19). இவையாவும் நம்முடைய ஆத்துமாவை ஒழுக்கரீதியாக மாசுபடுத்துகின்றன. நம்முடைய ஆத்துமாவில் ஏற்பட்ட இந்தப் பாதிப்பு, நாம் கடவுளிடம் திரும்ப வேண்டும் என்ற கடவுளுடைய நல்ல ஆலோசனையைக் கேட்டு அவருக்குமுன் மனந்திரும்ப முடியாத நிலையில் நம்மை வைத்திருக்கிறது. அத்தோடு, எரேமியா தீர்க்கதரிசியிடம் அன்று மக்கள் சொல்லியது போல், “நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடுப்பதில்லை” என்று கடவுளுக்கு எதிராக நடக்க வைத்திருக்கிறது.
எரேமியா 44:16-17
நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல், எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.
இ. இந்த ஒழுக்கரீதியான சீர்குலைவு, நம்முடைய அறிவையும் பாதித்திருக்கிறது. நம்முடைய அறிவுத்திறனின் காரணமாகவே எந்தவொரு காரியத்தையும் நாம் செய்கிறோம். ஆகவே நம்முடைய அறிவுத்திறனில் குறைவு ஏற்பட்டால், நம்மால் ஞானமுள்ள முடிவுகளை எடுக்க முடியாது. இந்த ஞானக்குறைவு, ஒழுக்கக்கேடுகளுக்கும், வேறு அநேக கேடான செயல்களுக்குமே வழிவகுக்கும். நம்முடைய பாதிப்புற்ற அறிவு, வேதம் சொல்லுவது போல் நம்மை “முட்டாள்களாக்கியிருக்கிறது”. தீமை செய்வதில் நாம் ஞானமுள்ளவர்களாகவும், நன்மை செய்வதில் முட்டாள்களாகவும் இருக்கிறோம். அநேக உதாரணங்களின் மூலம் இது வேதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.
1. இருட்டில் தடவித் திரிபவர்களைப் போல் நாம் நடந்துகொள்ளுகிறோம். பிரச்சனைகளும் சோதனைகளும் நிறைந்த இந்த வாழ்க்கையில், சந்தோஷத்தையும் எதிர்கால நம்பிக்கையையும் தேடுகிற நம்முடைய முயற்சிகள், வெறும் நிழலாகவும், வீணான முயற்சிகளாகவுமே முடிகின்றன. இது குறித்து சாலொமோன், அருமையாக சொல்லியிருக்கிறார்,
என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிகபடிப்பு உடலுக்கு இளைப்பு. காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி 12:12-13)
2. சத்திய ஒளி பிரகாசித்தபோதிலும், நம்முடைய அறிவு பாதிக்கப்பட்டிருப்பதால், அதை நாம் காண முடியாதிருக்கிறது. இந்தச் சத்திய ஒளியைத் தருவதற்காகவே கர்த்தராகிய இயேசு இந்த உலகத்தில் வந்தார், ஆனால் நம்மில் மனமாற்றம் ஏற்படாதவரை, அவர் இந்த உலகத்தின் ஒளி என்று நாம் அறிய முடியாது. படைப்பில், ஆதாமும் ஏவாளும், கடவுளை அறிவுப்பூர்வமாக புரிந்துகொள்ளக் கூடிய விதத்தில் அவரோடு நேரடியாக பேச முடிந்தது. ஆனால் இப்போதோ, கடவுளைப் பற்றிய சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியாதிருப்பதனால், வேதப்பிரசங்கம் அவர்களுக்கு முட்டாள்தனமாக தெரிகிறது (1 கொரிந்தியர் 2:14).
3. பல தவறான காரியங்களை மனிதர்கள் எளிதில் செய்யக்கூடியவர்களாக இருப்பதே, மனிதனுடைய அறிவுத்திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம். கண்பார்வையற்றவர்களே எளிதில் வலையில் சிக்கிக்கொள்ளுவார்கள். பாவத்தினால் உண்டாகிற விளைவுகளை அறிந்தவர்களாக இருந்தால், அதைச் செய்வதற்கு பெரும்பாலும தயங்குகிறவர்களாகவே இருப்பார்கள்.
4. மனிதர்கள் பரலோகத்தை நோக்கி பயணமாகிறதாகவே பொதுவாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அறிவுத்திறன் பாதிக்கப்பட்டிருப்பதனால், உண்மையில் அவர்கள் நரகத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் உணராதிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்வின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அநேகர் அறியாதிருக்கிறார்கள்.
5. அவிசுவாசிகளால் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அறிய முடியாததால், அவர்கள் அவற்றை எதிர்த்து நிற்கிறார்கள். அவர்களுடைய குறைகளை இயேசுவின் போதனைகள் சுட்டிக்காட்டுவதனால்தான் அவர்கள் இயேசுவின் போதனைகளில் குறைகாணுகிறார்கள். அவர்கள் இயேசுவை அறிந்தவர்களாக இருந்தால், ஒருபோதும் அவரை எதிர்த்து நிற்க மாட்டார்கள்.
6. நாம் எதிர்காலத்தைக் காணமுடியாதிருப்பதனால், நாம் அறியாத ஒன்றிற்காக எந்தவிதத்தில் தயாராவது என்பது பற்றியும் அறியாதிருக்கிறோம். “எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி. இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?” பிரசங்கி 8:6-7.
7. ஒரு நாய்கூட நமக்கு வழிகாட்டலாம் என்று எண்ணுகிற அளவுக்கு நாம் இருப்பதே, நம்முடைய அறிவுத்திறன் குருடாக இருக்கிறது என்பதற்கான ஆதாரமாக இருக்கிறது. மனிதன் குருடாக இல்லாமலிருந்தால், நாயை வழிகாட்டியாகப் பயன்படுத்துவானா? மற்றவர்களுடைய ஆலோசனையைப் பெறுவதற்கு எவ்வளவு ஆர்வமும் வேகமும் காட்டுகிறோம். இதுவே நம்முடைய அறிவுத்திறன் குறைபாடுள்ளது என்பதற்கும், நாம் ஆலோசனை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதற்குமான ஆதாரம்.
ஆகவே பாவம், நம்முடைய உடலளவிலும், நம்முடைய ஆத்துமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் முட்டாள்களாகியிருக்கிற அளவுக்கு, பாவம், நம்முடைய அறிவுத்திறனைப் பாதித்திருக்கிறது. இந்த முட்டாள்தனத்தை மூன்று விதங்களில் விளக்கலாம்.
2.3 நம்முடைய அறிவுத்திறன் பாவத்தினால் உருக்குலைக்கப்பட்டுள்ளது.
பாவத்தை வேதம் முட்டாள்தனம் என்கிறது. மனிதன் கர்த்தருக்குப் பயப்படாதவரை, முட்டாளாகவே திரிவான். “ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?” (சங்கீதம் 94:8). கடவுள் நம்மைப் பார்க்கிறவிதத்தில், நம்மை நாம் பார்க்கிறபோதுதான், நாம் மாற வேண்டும் என்பதன் அவசியத்தை நாம் அறிந்துகொள்ளுவோம். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்” (நீதிமொழிகள் 1:7). இத்தகைய மோசமான முட்டாள்தனத்தை மூன்று வழிகளில் நாம் அறியலாம்.
அ. கடவுளை அனுபவிப்பதற்காகவே நாம் வாழவேண்டியவர்களாக இருக்கிறோம். பாவம் இந்த உலகத்தில் வருவதற்கு முன்பாக, ஆதாமும் ஏவாளும் கடவுளை அறிகிற சந்தோஷத்தை அனுபவித்தார்கள். ஆனால் மனிதகுலம் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதிலிருந்து, கடவுளை அறிவதில் எந்தவிதமான சந்தோஷமும் இல்லையென்றும், கடவுளே இல்லையென்றும் நினைக்கும் முட்டாள்தனத்தை அடைந்துவிட்டது.
நம்முடைய உடலளவிலான தேவைகளுக்கே நாம் முக்கியத்துவம் கொடுத்து வாழுகிறவர்களாக இருப்பதில் இருந்து நம்முடைய முட்டாள்தனம் தெரிகின்றது. நம்முடைய சரீர நன்மைக்காகவே நம்முடைய அனைத்து முயற்சிகளும் இருக்குமானால், மனிதத் தன்மையின் மிகமுக்கியமான அம்சமாகிய நம்முடைய ஆத்துமாவை நாம் நிராகரிக்கிறவர்களாக இருக்கிறோம் (பிலிப்பியர் 3:19). நம்முடைய மெய்யான சந்தோஷம், இந்த உலக வாழ்வின் இன்பங்களில் இல்லை என்பதை நிரூபிக்கும் மூன்று அம்சங்களை நான் சுட்ட விரும்புகிறேன்.
1. ஏதேன் தோட்டத்திலும், அதாவது படைப்புகள் அனைத்தும் பூரணமானதாக இருந்த அந்தவேளையிலும், ஆதாமின் சந்தோஷம், தன்னைச் சுற்றியிருந்தவைகளில் இல்லாமல், அவரைப் படைத்த கடவுளிலேயே இருந்தது. நமக்கு வெளியில் இருப்பவைகளினால், ஒருபோதும் நம்முடைய உள்ளார்ந்த மனதில் சமாதானத்தைத் தரமுடியாது.
2. நமக்குச் சாதாரணமாகத் தோன்றுகிறவைகள் நமக்கு மெய்யான சந்தோஷத்தைத் தரமுடியாது. நம்மை வியப்பிற்குள்ளாக்குகிறவையே நமக்கு சந்தோஷத்தை தரும். கடவுள் படைத்த அனைத்தையும் நாம் ஆண்டுகொள்ளும்படிக் கொடுத்தாரே தவிர, அவற்றை நாம் வழிபடுவதற்காக அல்ல. நாம் அவரையே வழிபட வேண்டியவர்கள்.
3. கடவுளுடைய அன்புக்கு மேல், வேறெதுவும் பெரிதான அன்பையும் சந்தோஷத்தையும் நமக்குத் தரமுடியாது. கடவுள் தம்முடைய ஒரேபேறான குமாரனை, நமக்கான இரட்சகராக அனுப்பி, அவரோடு ஒப்புரவாகுவதன் மூலமாக நமக்கு வரும் சந்தோஷத்தைத் தரக்கூடிய கடவுளின் அன்போடு எதையும் நாம் ஒப்பிட முடியாது.
ஆ. எங்கு சந்தோஷம் இருக்கிறது, எப்படி நாம் அதை அடைவது என்ற விஷயத்தில் நாம் அறியாமையுள்ளவர்களாகவே இருக்கிறோம். கடவுள் இருக்கிறார் என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது (ரோமர் 1:20), இருந்தும், அவரை அறியாதவனாகவே மனிதன் இருக்கிறான் (யோவான் 4:22; அப்போஸ்தலர் 17:23). பாவம் மனிதனை, தவறான கடவுளை வணங்குகிறவனாகவோ அல்லது கடவுளைத் தவறான வழிகளில் வணங்குகிறவனாகவோ மாற்றியிருக்கிறது.
1. விக்கிரகங்களை வணங்குவது முட்டாள்தனமானது. சிலர், அவர்களை உருவாக்கிய கடவுளை வழிபடுவதைவிட்டு, அவர்கள் உருவாக்கிய விக்கிரகத்தையே வணங்குவார்கள். சிலர், பிசாசையும் வணங்குவதுண்டு (2 கொரிந்தியர் 4:4).
2. கடவுளால் கட்டளையிடப்பட்டிருக்கிற வழிபாட்டு முறைகளை விட்டுவிட்டு, தாங்களாக ஏற்படுத்தியிருக்கிற வழிபாட்டு முறைகளைச் செய்வது, மூடநம்பிக்கையின் வெளிப்பாடாகும். அந்தவிதத்தில் வழிபாடு செய்பவர்கள், வழிபாட்டு முறைகளுக்கு அவர்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தை, வழிபட வேண்டியவருக்குக் கொடுக்கவில்லை. அப்படிச் செய்வது, தவறான கடவுளை வழிபடுவதல்ல, தவறான முறையில் கடவுளை வழிபடுவதாகும். இந்தவிதமான வழிபாட்டு முறைகள், அன்பினால் உண்டாவதில்லை, பயத்தினாலேயே செய்யப்படுகிறது. ஆகவே இதைச் செய்கிறவர்களுக்கு மெய்யான சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஒருபோதும் இவை தராது.
இ. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற வழிபாட்டு முறை கட்டளைகளை, நம்முடைய முட்டாள்தனத்தினால் நிராகரிக்கிறவர்களாகவோ அல்லது தவறாகப் பயன்படுத்துகிறவர்களாகவோ இருந்துவிடுகிறோம். நாம் கடவுளை எப்படி வழிபட வேண்டுமென்று அவர் விரும்புவதை வேதம் நமக்குத் தெரிவிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தர் நமக்குத் தம்முடைய சித்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.
எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகியிருக்கிறது. அது, அவபக்தியையும், உலக இச்சைகளையும் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி, இச்சையடக்கமும், நீதியும், தேவபக்தியும் கொண்டவர்களாக இருக்கும்படி நமக்குப் போதிக்கிறது (தீத்து 2:11-12).
மனிதர்கள் சுவிசேஷத்தை எப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். கடவுளுடைய கிருபையை பாவம் செய்வதற்கான சாக்குபோக்காக மாற்றியிருக்கிறார்கள். கடவுள் கொடுக்கிற அழைப்பைக் கொஞ்சமும் சிந்தியாமல் நிராகரிக்கிறார்கள். கடவுளுடைய ஞானமுள்ள வார்த்தைகளை, அவருடைய அன்பின் வெளிப்பாடாகப் பார்ப்பதற்கு மாறாக, அவைகள் தங்களுடைய ஆசை மற்றும் விருப்பங்களுக்கு எதிரானது என்றவிதத்தில் பார்க்கிறார்கள். வெளிப்புறமாக கடவுளை ஏற்றிருந்தாலும், தொடர்ந்தும் மனிதர்கள் கடவுளைப் பார்க்கிலும் இந்த உலக இன்பங்களையே பெரிதும் விரும்புகிறார்கள் (2 தீமோத்தேயு 3:4).
மனிதனுடைய முட்டாள்தனத்தை நமக்குக் காட்டும் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
1. நம்முடைய செயலின் பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல்தான் பெரும்பாலும் எதையும் செய்துவிடுகிறோம். மிருகங்கள்தான் செயலின் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செயல்படும். ஆனால் மனிதர்களோ மிருகங்களைக் காட்டிலும் மேலானவர்களாக உண்டாக்கப்பட்டவர்கள். “அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும்” (உபாகமம் 32:29). “அதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லையே” என்றுதான் பெரும்பாலும் மனிதர்கள் சொல்லுகிறார்கள். முட்டாள்களே இப்படிச் சொல்லுவர்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை நாம் அறிந்திருந்தால், நிச்சயமாக மிகவும் கவனத்துடன் நாம் வாழுவோம்.
2. மனிதர்கள் பாவம் செய்வதை சந்தோஷமாக எண்ணுகிறார்கள். அது அவர்களுடைய அறிவுக்கூர்மையான செயல் என்றும் நினைக்கிறார்கள். “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.” (ரோமர் 1:32).
3. கடவுளுக்கு ஊழியம் செய்வதென்பது நேரத்தை விரயம் செய்யும் செயல் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் கடவுளுக்கு பயந்திருப்பவனுக்கும் கடவுளுக்கு பயப்படாமல் இருப்பவனுக்குமான வித்தியாசத்தை இந்த வாழ்க்கையின் இறுதியில் தெளிவாகத் தெரிந்துவிடும். அப்போது, கடவுளுக்கு ஊழியம் செய்வது நேர விரயம் அல்ல என்பது வெளிப்படையாகத் தெரியும் (மல்கியா 3:14-18)!
4. கடவுளிடமிருந்து அநேக நன்மையை நாம் பெற்று அனுபவிக்கிறோம். ஆனால் அவருக்கு “நன்றி சொல்லுவது” அரிதாகவே இருக்கிறது. சிலவேளைகளில் நம்முடைய சுயநலம் மற்றும் கேடான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுவதற்கு கடவுள் கொடுத்திருக்கிற வரங்களை நாம் பயன்படுத்திக்கொள்ளுவோம்.
எத்தனை முறை சுவையான உணவை, அனுபவித்துச் சாப்பிட்டும், அதைத் தந்தவருக்கு நன்றி செலுத்தாமல் இருந்திருக்கிறோம்?
5. கடவுள் நம்மைத் திருத்துகிறபோது, அல்லது அவருடைய பராமரிப்பினால் சில துன்பகரமான சூழலில் நம்மை நடத்துகிறபோது, சிலவேளைகளில் நாம் கோபப்படுகிறோம், சிலவேளையில் நாம் அதைக் குறித்து நொந்துகொள்ளுகிறோம். திருத்தும் நடவடிக்கை இனிமையானதாக இருக்காது, ஆனால் நம்முடைய எதிர்கால நன்மைக்காக, நாம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியது அவசியம். கடவுள் நம்முடைய நன்மைக்காக செய்கிறவற்றிற்கு எதிராகப் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமானது?
பாவம், நாம் பொறுமையுடன் கற்றுக்கொள்ளுகிறவர்களாக இல்லாதபடி, மிகவும் அகந்தை கொண்டவர்களாக நம்மை மாற்றியிருக்கிறது. சிலபேர், கடவுளுடைய வழிகளைக் கற்றிருந்தும், அதைப் பின்பற்றியிருந்தும், பிறகு, மறுபடியுமாக, உலக வழிகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். இப்படிச் செய்கிறவர்கள் இரட்டிப்பான முட்டாள்கள். ஒரு வியாதியிலிருந்து குணமடைந்த யாராவது, மறுபடியும் தானே போய் அந்த வியாதியை அடைவதற்கு முயலுவானா?
2.4 பாவம் நம்மை மிருகங்களைப் போல் நடக்கும்படித் தரந்தாழ்ந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.
தேவசாயலில் உண்டாக்கப்பட்டோம் என்ற நம்முடைய படைப்பின் தன்மையை, நம்முடைய தற்போதைய நிலை பொய்த்துப்போகச் செய்திருக்கிறது.
அ. பாவம் மனிதகுலத்தை மிருகங்களைப்போல் நடந்துகொள்ளச் செய்திருக்கிறது. மனிதன் மிருகத்தைப் போன்றவன் என்று குறிப்பிடுகிற அநேக வசனங்கள் வேதத்தில் உண்டு. உதாரணமாக, சங்கீதம் 73:22ல் “நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.” அறியாமையினாலும், மூடத்தனத்தினாலும், நம்முடைய ஆத்துமாவைப் பற்றிச் சிந்திப்பதைக் காட்டிலும் நம்முடைய சரீரத்தைப் பற்றி அதிகமாக யோசித்து, நாம் மிருகங்களைப் போல் இருந்துவிடுகிறோம். பாவகரமான மூடத்தனத்தைக் கொண்டிருக்கிறபோது, நாம் பரிசுத்த கடவுளோடு ஐக்கியம் கொண்டிருக்க முடியாது.
ஆ. பாவத்தில் வாழுகிற மனிதன் சில வேளைகளில் மிருகங்களைக் காட்டிலும் கேடானவனாக நடந்துவிடுகிறான். அதாவது, செம்மறியாட்டைப் போலவும் புறாவைப் போலவும் மென்மையாக இல்லாமல், நரியையும், சிங்கத்தையும், கரடியையும் போலக் கொடூரமானவனாக நடந்துவிடுகிறான்.
இ. மனிதனுடைய பாவத்தன்மை, கொடூர மிருகங்களைக் காட்டிலும் மிகவும் கேடானவனாக அவனை மாற்றிவிடுகிறது. மிருகங்கள், அவைகளுக்கென்று இருக்கிற இயற்கை தன்மையின்படியாகவே நடக்கின்றன. அறியாமை என்பது மிருகங்களுக்குக் குறைபாடல்ல, ஆனால் மனிதனுக்கு அப்படியல்ல. மிருகங்கள் தங்களுடைய இனத்திற்குள்ளாக, ஒன்றையொன்று அடித்துத் துன்புறுத்திக்கொள்ளுவதைக் காட்டிலும், மிகவும் அதிகமாக மனிதர்கள் ஒருவரையொருவர் துன்புறுத்திக்கொள்ளுகிறோம்.
பொதுவாக மனிதர்களைப் பற்றி விளக்குகிறபோது வேதம் இரண்டு மிருகங்களைக் குறிப்பிடுகிறது – செம்மறியாடு, வெள்ளாடு. அவிசுவாசிகளை வெள்ளாடுகளாகவும், விசுவாசிகளை செம்மறியாடுகளாகவும் காட்டுகிறது. இந்த இரண்டு மிருகங்களுடைய வேறுபட்ட தன்மைகள், விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகளுடைய வேறுபட்ட தன்மைகளை விளக்குகிறவையாக இருக்கின்றன. பாவம் நம்மில் ஏற்படுத்திய விளைவுகளே நம்மை மிருகங்களைப் போல் நடக்கச் செய்திருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
2.5 பாவம் மனிதர்களை, கடவுளிடமிருந்து ஒழுக்கரீதியாகவும் ஆவிக்குரிய விதத்திலும் பிரித்திருக்கிறது.
பாவிகள் கடவுளிடமிருந்து தூரத்தில் இருப்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது (எபேசியர் 2:3)
அ. கடவுள் நம்மிடமிருந்து விலகியிருக்கிறார். ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் கடவுளிடம் முகமுகமாய்ப் பேச முடிந்தது. ஆனால், அவர்கள் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனபோது, அவர்கள் கடவுளிடமிருந்து தங்களை மறைத்துக் கொண்டார்கள். ஒரு விசுவாசியும்கூட, இப்போது கடவுளை தேடுகிறபோது, பூரணமற்ற விதத்திலேயே கடவுளை அறிய முடிகிறது. பாவம் கடவுளை அறிவதற்கான நம்மிலுள்ள திறனைப் பாதித்திருக்கிறது.
ஆ. பாவம் கடவுளிடமிருந்த ஐக்கியத்திலிருந்து மட்டும் நம்மைப் பிரிக்காமல், கடவுளுடைய வாழ்க்கையை அனுபவிப்பதிலிருந்தும் நம்மைப் பிரித்திருக்கிறது. கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்ட நம்முடைய நிலையை மிகவும் பரிதாபகரமானதாக வேதம் காட்டுகிறது. பாவத்தில் மரித்தவர்களாக இருக்கிறோம் என்கிறது (எபேசியர் 2:1).
இ. பாவிகள் கடவுளுடைய அன்பைப் பெறுவதிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். கேடானவர்கள் மீது கடவுள் கோபமாக இருக்கிறார் (சங்கீதம் 7:11).
“குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்” (யோவான் 3:36).
ஈ. பாவத்தின் தாக்கம், பாவிகள் கடவுளுடன் நெருங்கியிருக்க முடியாதபடி அவர்களை விலக்கியிருக்கிறது. நாம் ஒருபோதும் கடவுளுடைய பிரசன்னத்திலிருந்து விலகியிருப்பதில்லை, அவருடனான ஐக்கியத்திலிருந்தே விலகியிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலமாக நாம் கடவுளுடன் ஒப்புரவாகிறோம். ஆனால் கிறிஸ்துவுக்கு வெளியில், ஒரு மனிதனுடைய பாவத் தன்மை, அவனை கடவுளுடன் நட்புக்கொள்ளுவதிலிருந்து விலக்கியே வைத்திருக்கிறது.
உ. நம்மிலுள்ள பாவத்தன்மை, நம்மை கடவுளுக்கு விரோதிகளாக்கியிருக்கிறது. கடவுள் கொடுத்த சிறப்புரிமைகளை, ஆதாமும் ஏவாளும் அனுபவித்ததுபோல், நாம் அனுபவிக்க முடியாது. நம்மிலுள்ள பாவத்தை உணர்ந்து, நாம் மனந்திரும்பாவிட்டால், கடவுளிடமிருந்து வரும் எந்தவொரு சிறப்புரிமையையும் ஒருபோதும் நாம் பெறவே முடியாது.
கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்ட நிலையின் தொடர் விளைவுகள் என்ன?
அ. கடவுள் தம்முடைய முகத்தை நமக்கு மறைத்துக்கொள்ளுகிறார். கடவுளுடைய தீர்க்கதரிசி ஒருவர், தன்னுடைய நாட்டு மக்களைப் பார்த்து சொல்லியதைக் கவனியுங்கள்,
“உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசாயா 59:2).
ஆ. கடவுள் அவிசுவாசிகளுடைய ஜெபங்களைக் கேட்பதில்லை. கடவுள் தம்முடைய மக்களுடைய ஜெபங்களைக் கேட்பதில் மகிழ்ச்சிகொள்ளுகிறார். ஆனால் கேடானவர்களுடைய ஜெபம் அவருக்கு மகிழ்ச்சி தருவதில்லை. ஏனென்றால், “அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை” (ஓசியா 7:14) என்று சொல்லுகிறார்.
இ. பாவமுள்ள மனிதர்கள் பெலனற்றவர்களாக இருக்கிறார்கள். படைப்புகளாகிய நம்முடைய வலிமை, நம்மைப் படைத்த கடவுளோடு மகிழ்ச்சியான ஐக்கியம் கொண்டிருப்பதிலேயே இருக்கிறது.
ஈ. பாவம் செய்வதனால், நாம் கடவுளுக்குப் பயந்து, அவரை நெருங்கிச் சேர வெட்கப்படுகிறவர்களாக இருக்கிறோம். மனிதர்களுடைய குற்றவுணர்வு, அவர்கள் கடவுளிடம் வரமுடியாதபடி அவர்களைப் பயத்திற்குள்ளாக்குகிறது. ஆதாமும் ஏவாளும், பாவம் செய்வதற்கு முன்புவரை கடவுளுடைய பிரசன்னத்தில் கடவுளைப் பார்த்து பயப்படவில்லை. ஆனால் பாவம் செய்தபிறகு, அவரிடமிருந்து பயந்து ஓடினார்கள்.
உ. மனிதர்களுடைய பாவத் தன்மை, அவர்களோடு கடவுள் பேசுகிறார் என்பதை உணருகிறபோது, அவர்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, அதைத் தவிர்க்கச் செய்கிறது.
இந்தத் துன்பங்கள் யாவும், கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்ட நிலையின் காரணமாக வருகிறது.
3. பாவம், நம்முடைய மரணத்திற்குப் பிறகும் அதன் தாக்கத்தை நம்மில் கொண்டிருக்கச் செய்கிறது. அது நித்திய காலமாக நம்மில் தொடருகிறதாக இருக்கிறது.
நம்மிலுள்ள பாவத் தன்மை, இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துமானால், அதாவது, ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துமானால், அதைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அது நித்திய காலமாக நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதாக இருக்கிறது. கடவுளுடைய கிருபை இடையில் செயல்பட்டிராவிட்டால், மனிதர்கள் அனைவரும் நித்திய மரணத்தை நோக்கியே செல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் கடவுளுடைய கிருபையினால், விசுவாசிகள் நித்திய பரலோக வாழ்க்கை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
கடவுள் இந்தவிதமான ஏற்பாடுகளைச் செய்திருப்பதனால், அவரை அநீதியுள்ளவர் என்று நாம் ஒருபோதும் நினைக்கக் கூடாது. பாவம் செய்ததனால்தான் கடவுள் மனிதர்களைத் தண்டிக்கிறார். கடவுளுடைய தண்டனை வருகிறதற்கான காரணம், மனிதன் செய்த குற்றமே. ஏனென்றால், எப்படி வாழவேண்டும் என்றும் கடவுளுக்கு எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்றும் கடவுள் தெளிவாக தெரியப்படுத்தியிருக்கிறார். எல்லாரும் பாவம் செய்து, தேவமகிமையற்றவர்களாக இருப்பதனால், எல்லா மனிதரும், தேவகோபத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அதேவேளையில், இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதும் உண்மை (மாற்கு 16:16).
பாவியைக் கண்டனத்திற்குள்ளாக்குகிற கடவுளுடைய கோபமே, ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய தண்டனை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளுடைய கோபத்தினால் நித்திய தண்டனையைப் பெறுவதென்பது துக்ககரமானது, எல்லாவகையிலும் துக்ககரமானது, எப்போதும் துக்ககரமானது. ஒரு மனிதனுக்கு இதைவிட கேடானது வேறெதுவும் இருக்க முடியாது. கேடான மனிதர்களைப் பார்த்து இயேசு சொன்னார்,
“சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.” (மத்தேயு 25:41).
இயேசுவின் இந்த வார்த்தைகளிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், கேடான மனிதர்கள், தங்களுக்கான கண்டன வார்த்தைகளைக் கடைசி நாளில் கேட்பார்கள். பாவம் என்பது, கடவுள் நன்மையானது என்று சொல்லுகிறவைகளைச் செய்யாதிருப்பதும், கடவுள் தீமையானது என்று சொல்லுகிறவைகளைச் செய்வதுமேயாகும். ஆகவே, நரகம் என்பது நன்மையை வெறுத்து, தீமையைச் சுமந்து திரியும் பாவிகளுக்கான இடம். நரகம் உண்டு, அங்கு கடவுளின் சாபம் இருக்கிறது, அது ஒரு நித்திய இடம். அங்கு பிசாசும் அவனுடைய தூதர்களும் இருப்பார்கள்.
அ. நரகம் என்பது, கிறிஸ்துவினுடைய இரட்சிப்பிற்கு அந்நியராயிருந்து, இந்த உலகத்தின் நன்மைகளினால் சீர்கெட்டு வாழ்ந்தவர்கள் இருக்கிற இடம். கேடான மனிதர்களை இந்த உலகத்தின் மனிதர்கள் என்று வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது (சங்கீதம் 17:14). வேறுவிதமாக சொல்லுவதானால், அவர்கள் இந்த உலகத்தின் நன்மைகளைப் பெற்று அனுபவித்தவர்கள். ஆனால் அவர்கள் அவிசுவாசிகளாகவே வாழ்ந்து இந்த உலகத்தைவிட்டுச் சென்றால், அது அவர்களுக்கான தற்காலிக சந்தோஷம் மட்டுமே (லூக்கா 16:25). மனந்திரும்பாத பாவி, இந்த உலகத்தின் நன்மையையெல்லாம் அனுபவித்திருந்தாலும், இறுதியில் எல்லாத் தீமையும் இருக்கிற இடமாகிய நரகத்திற்கே செல்லுகிறான். ஆனால் ஒரு விசுவாசி, இந்த உலகத்தில் தீமைகளை அனுபவித்தாலும் (சில நன்மைகளையுங்கூட), இறுதியில் எல்லா நன்மையும் இருக்கிற இடமாகிய பரலோகத்திற்குச் செல்லுகிறான்.
ஆ. பாவிகள் இந்த உலகத்தின் நன்மைகளைப் பெற்றிருக்கிறது மட்டுமல்லாமல், அவற்றின் இன்பங்களில் திளைத்திருக்கிறார்கள். லூக்கா 12வது அதிகாரத்திலுள்ள பணக்காரன், தனக்கு அநேக நன்மைகள் கிடைத்ததனால் மட்டும் சந்தோஷப்படவில்லை, அவைகள் தனக்கு குறைவில்லாத பெரும் மகிழ்ச்சியைத் தருமென்றும் அவன் எதிர்பார்த்தான். இந்த உலகத்தின் சந்தோஷம் நெடுநாட்களுக்கு நம்முடைய இருதயத்தை சந்தோஷத்திற்குள்ளாக வைத்திருக்காது. நரகத்தில், இந்த உலக சந்தோஷங்களின் நினைவுகள் எந்தவிதமான இன்பத்தையும் தராது.
இ. நரகத்தில் கேடானவர்களுக்கு எந்த சமாதானமும் இல்லை. கடவுளைப் பற்றிய தெளிவான அறிவு இருக்கும், ஆனால் மனந்திரும்புவதற்கான வாய்ப்பு இருக்காது.
ஈ. இந்த வாழ்வில், கேடானவர்கள்கூட ஏதோவொரு விதத்தில் பரலோகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கலாம். ஆனால் மறு உலகத்தில், அப்படியான அனுமான எதிர்பார்ப்புகூட அவர்களுக்கு இருக்காது.
“துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம்” (நீதிமொழிகள் 11:7).
உ. நரகத்திலிருந்து பரலோகத்திற்கு ஒருவராலும் போக முடியாது. கேடான ஒரு மனிதன்கூட பரலோகத்தில் இருக்க மாட்டான், அப்படியே, ஒரு நீதிமான்கூட நரகத்தில் இருக்க மாட்டான்.
ஊ. நரகத்தில் இருப்பவர்கள், கடவுளற்ற சூழலின் துன்பங்களை அனுபவிப்பார்கள். அதாவது, இரக்கமற்ற, அவர்கள்மீது அக்கறை காட்டுகிறவர்கள் யாரும் இல்லாத, எந்தவிதமான எதிர்கால எதிர்பார்ப்பும் இல்லாத சூழலில் இருப்பார்கள். “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?” (சங்கீதம் 73:25) என்ற சொல்லும் சங்கீதக்காரன், அதைத் தவிர்த்து வேறு எதுவும், தனக்கு ஒன்றுமில்லாமைக்கு சமன் என்றே தெரிவிக்கிறார்.
நரகம், பரலோகத்தைப் போலவே நித்திய காலமாக இருக்கக் கூடியது. இந்த உலகத்தில் எல்லாம் தொடர்ச்சியாக மாறக்கூடியதாக இருப்பதனால், இந்த உலக வாழ்வு என்றென்றும் இருக்கக் கூடியதல்ல.
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (பிரசங்கி 9:10)
நரகம் நல்ல இடமாக மாறும் என்பதற்கு எந்தவிதமான சாத்தியமும் இல்லை.
4. நரகத்தின் நித்திய அழிவு என்பது பகற்கனவல்ல
இதை வாசிக்கிற ஒருவரும் அந்த இடத்திற்குப் போய்விடக் கூடாது என்பதுதான் என்னுடைய ஊக்கமான வேண்டுதலாக இருக்கிறது. இதைக் குறித்து நீங்கள் கேள்விப்படுவதன் மூலமாக, அந்த இடத்திற்கு நீங்கள் போகமலும், அதை அனுபவிக்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை விளக்குகிறேன்.
“தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1 கொரிந்தியர் 2:9).
இதுவே கடவுளை வெறுக்கிறவர்களைப் பற்றிய உண்மையும்.
அ. தேவபக்தியற்ற மனிதர்கள்கூட “நரகம்” என்ற வார்த்தையைத் தாங்க முடியாத துன்பத்தைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறார்கள். இந்த உலக வாழ்வின் அனைத்துத் துன்பங்களையும் ஒன்றுசேர்த்தாலும், நரகத்தின் துன்பத்தோடு ஒப்பிட முடியாது. இயேசு சொல்லுகிறார், நரகத்தின் தண்டனையைக் காட்டிலும், வலது கண் பிடுங்கப்பட்டதும், அல்லது வலது கை துண்டிக்கப்பட்டதுமான நிலை நன்மையைத் தரக்கூடியது என்று (மத்தேயு 5:29-30).
ஆ. சமாதானத்திற்கு எதிரானது பயங்கரம் என்பதுபோலவே பரலோகத்திற்கு எதிரானது நரகம். பாவிகள், பரிசுத்தவான்கள் பெறுகிற மகிமையான வாழ்க்கை இழந்து நரகத்திற்குப் போகிறார்கள். பரிசுத்தவான்கள் விடுவிக்கப்பட்ட துன்பங்களைப் பாவிகள் நரகத்தில் பெறுகிறார்கள்.
இ. நரகத்திற்கு முடிவில்லை. நரகம் என்பது பரிதாபம் காட்டப்படாத தண்டனையும், இரக்கமற்ற துன்பங்களும், உதவியற்ற வருத்தங்களும், ஆறுதலற்ற அழுகுரலும் நிறைந்த இடம்.
ஈ. நரகத்தை விளக்குவதற்கு வேதம் சில உதாரணங்களைப் பயன்படுத்துகிறது:
- அது வருத்தத்தின் இடம் (2 சாமுவேல் 22:6)
- இந்த உலகத்தில் ஏற்படுகிற வேதனையைக் காட்டிலும் அதிக வேதனையை ஏற்படுத்தும் இடம் (சங்கீதம் 116:3)
- அழிவின் இடம் (மத்தேயு 10:28)
- எரிகிற நெருப்பின் நிலை (மத்தேயு 5:22)
- முடிவில்லா அழிவுக்கான இடம் (மத்தேயு 23:33)
- கடும் வாதையின் இடம் (லூக்கா 16:28)
- நரகம் சிறைக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது (மத்தேயு 5:25)
- முடிவில்லா படுகுழி (வெளிப்படுத்தல் 9:11)
- எரிகிற சூலை (மத்தேயு 13:41-42)
- அக்கினிக்கடல் (வெளிப்படுத்தல் 21:8)
- இருள் சூழ்ந்த இடம் (மத்தேயு 22:13, யூதா 6, 13)
- நரகம் சாபமும், இரண்டாம் மரணமும், அவமானத்திற்குமான இடம் (தானியேல் 12:2).
உ. நரகத்தில் கடுமையான வேதனையைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. நரகத்தில் வேதனை இல்லாத நேரமில்லை, அதிலுள்ள எந்தவொரு நபரும் அவ்வேதனையிலிருந்து தப்ப முடியாது, அவ்வேதனைக்கு முடிவே இல்லை.
மேலும் தொடருவதற்கு முன்பதாக, இதை வாசிக்கிற உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க விழைகிறேன்.
- நீங்கள் தொடர்ந்து அவிசுவாசத்தில் இருக்கக் கூடாது என்பதற்கு இதற்கும் மேலாக வேறெதையும் நான் சொல்ல வேண்டுமா?
- நரகத்திற்குப் போவதைப் பற்றிக் கொஞ்சம் அமைதலாக நீங்கள் சிந்திக்கக் கூடாதா?
உங்களுடைய ஆத்துமாவுக்காக இதைக் கவனத்துடன் கேளுங்கள், இதுகுறித்து பயம் கொள்ளுங்கள், பாவிகளுக்கான இரட்சகராகிய இயேசுவை நாடிச் செல்லுங்கள்.
ஊ. நரகத்தில் சாத்தானே முதன்மையான வேதனைப்படுத்துகிறவனாக இருப்பான். நம்மைப் போன்ற சக மனிதர்களால் வேதனைப்படுத்தப்படுவதே கொடுமையானதாக இருந்தால், பிசாசினால் வேதனைப்படுத்தப்படுவது எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்?
எ. நரகத்தில் கேடான மனிதர்களுடைய மனச்சாட்சியும்கூட அவர்களை வேதனைக்குள்ளாக்கும். இந்த உலக வாழ்வில், நம்முடைய மனச்சாட்சியின் குரலை நிராகரித்து வாழலாம். ஆனால் நரகத்தில் ஒரு மனிதனுடைய மனச்சாட்சியின் குரலை வேறுபக்கமாக திருப்புகிறதற்கேற்ற சூழல் இருக்காது. தெரிந்தே நிராகரித்த மனச்சாட்சியின் குரலை நரகத்தில் தவிர்க்கவே முடியாது.
ஏ. நரகத்தில் கடவுளுடைய கோபமும் அவர்களை வேதனைக்குள்ளாக்கும். இந்த உலக வாழ்க்கை முழுவதும் கடவுள் மிகவும் பொறுமையுள்ளவராக இருக்கிறார். பல காரியங்களைப் பற்றி அவர் எதுவும் சொல்லாமல் இருந்துவிடுகிறார். கோபங்கொள்ளுவதில் அவர் மிகவும் பொறுமையுள்ளவர், அதிகமான இரக்கமுள்ளவர். ஆனால் மறு உலகத்தில், அவருடைய பொறுமை முடிவுக்கு வருகிறது, அவருடைய கோபம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
5. சிலருக்கு அதிகமான தண்டனை விதிக்கப்படுமா?
அ. நெடுநாட்களாக பாவத்தில் வாழ்ந்து, மனந்திரும்பாமலேயே மரணமடைகிறவர்கள், அவர்களுடைய கீழ்ப்படியாமையுள்ள கேடான வாழ்க்கையின் காலத்திற்கேற்ப தண்டனையைப் பெறுவார்கள்.
ஆ. மனந்திரும்புவதற்கும் விசுவாசிப்பதற்குமான அதிக ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைக் கேட்டிருந்தும், கிறிஸ்தவ குடும்பங்களிலும், கிறிஸ்தவ சூழலிலும் வளர்க்கப்பட்டவர்களுமாக இருந்தும், கிறிஸ்துவை நிராகரித்து வாழுவார்களானால், அவர்கள் அதிக தண்டனைக்குரியவர்களாவார்கள். இயேசு அதிகமாக போதித்ததும், அற்புதங்களைச் செய்ததுமான கப்பர்நகூம் ஊர் மக்களை நினைத்துக்கொள்ளுங்கள் (மத்தேயு 11:23).
இ. கடவுளுடைய கட்டளைகளையும், சுவிசேஷத்தின் செய்தியையும் அறிந்திருந்தும், அவற்றைக் கவனத்தோடு சிந்தித்து அவற்றிற்கேற்ப செயல்பட மறுக்கிறவர்கள், அவற்றிற்கேற்ற பெரும் விலை கொடுப்பார்கள் (யாக்கோபு 4:17).
ஈ. மாய்மாலக்காரர்களுக்கு நரகம் மிகவும் மோசமானதாக இருக்கும். தேவபக்திக்கேற்ற விதத்தில் வெளிப்புறமாகக் காட்டிக்கொண்டும், கடவுளைப் பற்றியும் அவருடைய மகிமையைப் பற்றியும் அக்கறையற்றவர்களாக வாழுவதென்பது மிகவும் பாவகரமானது.
உ. விசுவாச வீழ்ச்சியடைகிறவர்கள் பெரும் துரோகிகளாகக் கருதப்படுவார்கள். இவர்கள் கர்த்தரைப் பின்பற்றியவர்கள், ஆனால் பாதியில் கர்த்தரைவிட்டுத் தூரம்போய், மறுபடியும் மனந்திரும்பாமல் போனவர்கள். இவர்கள் கர்த்தரைப் பின்பற்றாமல் இருந்திருந்தாலே, அவர்களுக்கு ஏதோவொரு விதத்தில் நல்லதாக இருந்திருக்கும்.
ஊ. சுருக்கமாகச் சொல்லுவதென்றால், நரகம் என்பது வார்த்தையால் விவரிக்க முடியாத வருத்தமும், தாங்க முடியாத துன்பமும், முடிவில்லா அழிவும் கொண்டது. அங்கு செல்லுகிறவர்கள், “தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை” (வெளிப்படுத்தல் 16:11).
பாவம் எந்தவிதத்தில், இந்த உலக வாழ்வுக்கும், இனி வரும் வாழ்வுக்குமான நன்மைக்கு எதிராக இருக்கிறது என்பதை இதுவரை விளக்கினேன். இதுவரை நீங்கள் வாசித்தவற்றை சிந்தித்துப் பார்க்கும்படி மிகவும் வேண்டிக் கேட்கிறேன். உங்களுடைய பாவத்தை உணர்ந்து, இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரும் இரட்சிப்பைப் பற்றிய கடவுளுடைய செய்தியை நீங்கள் கேட்டு மனந்திரும்பியிருந்தால், நரகத்தைப் பற்றி படித்ததன் மூலமாக மட்டுமே அறிந்திருப்பீர்கள். உங்களுடைய பாவகரமான வழியை நீங்கள் மாற்றிக்கொள்ள மறுத்தால், ஒரேயொரு முடிவு மட்டுமே உண்டு, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டும் அதற்குக் கீழ்ப்படியாமல் போனதற்கான தண்டனையாக, மரணத்தின் பின், நரகத்தையே முடிவாக அடைவீர்கள்.