அன்பான போதகருக்கு,
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவனுக்கு உதவிட ஆளில்லாமல், அத்தண்ணீரில் மூழ்கிச் சாக இருக்கும் சமயத்தில் கையில் கிடைத்த மரப்பலகை அவனுக்கு “உயிர்காக்கும் சாதனம்” ஆகும். அதுபோலத் தற்காலத் தமிழ் கிறிஸ்தவத்தில் சத்தியத் தெளிவில்லாமல், முறையான இறையியல் போதனைகள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த என்னைக் காத்த சாதனம் “திருமறைத்தீபம்” சீர்திருத்த காலாண்டு பத்திரிக்கை.
உலகமே உலகத்தனமாக கிறிஸ்துவின் பிறந்த நாளைக் குதுகலத்தோடு கொண்டாடி மகிழ்ந்திருக்கின்ற இவ்வேளையில், நான் திருமறைத்தீப வலைத்தளத்தில் 2015ம் ஆண்டு நீங்கள் எழுதிய “அர்த்தமுள்ள கிறிஸ்மஸ்” மற்றும் 2016ம் ஆண்டில் எழுதிய “நமக்கொரு பாலகன் கொடுக்கப்பட்டார்” என்ற ஆக்கங்களை வாசித்து முடித்தேன். ஏற்கனவே இவற்றை நான் வாசித்துப் பயன் அடைந்திருக்கிறேன்.
வாசித்தவற்றையே மீண்டும் பலமுறை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிற நான், இம்முறை இந்த ஆக்கங்களை வாசித்து முடிக்கும் போது இருதயத்தை இடியாய் தாக்கிய கேள்வி “எங்கே போகிறது தற்காலத் தமிழ் கிறிஸ்தவம்”?
இந்தக் கேள்வியைச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது என் சிந்தனையில் தோன்றியவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள உடனடியாகக் குறிப்பெடுத்து எழுத ஆரம்பித்தேன், வேதமூக்குக்கண்ணாடியை அணிந்தவனாக; அது இல்லாமல் நான் பார்வையற்றவன் என்பதை அறிவேன்.
இந்த ஆக்கங்களில், கிறிஸ்துவின் அசாதாரண பிறப்பை ஆவிக்குரிய விதத்தில் நினைத்துப் பார்த்து மகிமை செலுத்த வேண்டும் என்ற வார்தைகள் சிந்திக்க வைப்பவை. மனித உருவெடுத்த உன்னதக் கடவுளுடைய கிருபையின் மகத்துவங்களையும் அதிசயத்தையும் எண்ணிப்பார்த்து ஆவியில் ஆனந்திக்க வேண்டிய நேரமும், கிறிஸ்துவின் நற்செய்தியை உவகையோடும், விவேகத்தோடும் அறிவிக்கும் நல்ல தருணமும் இதுதான் என்பது நன்றாகப் புரிந்தது.
உலகம் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என பெரு மூச்செடுக்கும் இந்த வேளையில், கொரோனாவை “திரிபு கொரோனாவாக” திரும்ப அனுப்பி, தான் இருப்பதை தொடர்ந்து நிரூபித்தும் எச்சரித்தும் வருகிறார் இறையாண்மையுள்ள கர்த்தர். இக்கட்டான இந்தச் சூழ்நிலையிலும், எப்போதும் போல இப்போதும் ‘கிறிஸ்து இல்லா கிறிஸ்மஸை’ கொண்டாடி ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற உலகத்தில், தமிழ் கிறிஸ்தவத்தை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. “அர்த்தமுள்ள கிறிஸ்மஸை” அர்த்தம் தெரியாமல் கொண்டாடிவருகிறது தற்காலத் தமிழ் கிறிஸ்தவம். இந்த கிறிஸ்மஸ் நாட்களில் கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு இலாபம் என்றாலும், ஏமாறும் மாய்மால பக்தர்களுக்கு இழப்பு மட்டுமே மிஞ்சும்.
கிறிஸ்மஸ் என்றவுடன் தற்காலத் தமிழ் கிறிஸ்தவ சமுதாயத்தில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிற சிலருக்கு புத்தாடையும் ஆபரணங்களும், மரமும் வண்ணவிளக்குகளும், தோரணங்களும் வானவேடிக்கைகளும் முக்கியமாக பிரியாணியும் தான் நினைவுக்கு வரும். இவை மட்டுமில்லாமல் சிலருக்கு மாட்டுக்கொட்டிலும் சாஸ்திரிகளும் வெள்ளை தாடித் தாத்தாவும் வெகுமதிகளும், ஆடலுடன் பாடலுமான கிறிஸ்மஸ் பவனியும், இன்னும் இது போன்ற பல பாரம்பரிய காரியங்களும் தான் நினைவுக்கு வரும்.
வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும் என்பதற்காக வியாபாரிகளும் இந்நாட்களில், தங்கள் வியாபார இடங்களை அலங்கரித்து வாழ்த்துக்கள் சொல்லி இலாபமீட்டுவது உலகத்தனம் தான். இவைகளெல்லாமா கிறிஸ்து இவ்வுலகில் வந்ததன் நோக்கம்? என சிந்திக்க வைக்கிறது இந்த ஆக்கம். சத்தியத்தை அழிக்கவே இவையெல்லாம் வழிவகை செய்வதாக இருக்கிறது என்ற உண்மையை உணர வைத்திருக்கிறீர்கள் இவ்வாக்கியங்களின் மூலமாக.
நாயகனான கிறிஸ்து இராஜா இவ்வுலகில் மனிதனாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாகத்தான் அவதரித்தார். இந்த அதிஉன்னத பிறப்பு, மீட்பின் செயல்கள் பற்றிய இறையியல் போதனைகளில் இருந்து பிரிக்கமுடியாததொன்று என விளக்கியிருப்பது மிக அருமையான சத்தியம்.
இந்த விசேடமான நாட்களில், தங்கள் இருதயத்துக்கு இதமாக தற்காலிக மகிழ்ச்சியை தருவித்துக்கொண்டு, தங்களையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றி வருபவர்கள் செய்யும் சேட்டைகளைச் சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை.
என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? எப்படி செய்கிறோம்? எதனால் செய்கிறோம்? என்பதையெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல், ‘எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன்’ என்று சொல்பவர்களையே பெரும்பாலும் காணமுடிகிறது. அர்த்தமுள்ள கிறிஸ்மஸை அர்த்தமில்லாமல் கொண்டாடும் தற்காலத் தமிழ் கிறிஸ்தவம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? என சிந்திக்கும் போது மெய்ப்போதகர்கள் இல்லாத வெறுமையை உணரமுடிகிறது.
படித்தவருக்கென்றாலும்
பாமரருக்கென்றாலும்
பகுத்தறிவுக்கெட்டும்படி
பரமனின் சத்தியத்தை
பாங்காய்ப் போதிப்பதே
பண்பான போதகப்பணி
இவ்வாறு போதகப்பணி செய்பவர்களே ஆண்டவர் சத்தம் கேட்டறிந்து, ஆளும் அவர் சித்தம் தெரிந்து, ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தோடு உண்மையான நற்செய்தியை உலகெங்கும் பிரசங்கிக்கிறார்கள். இவர்களே மெய்ப்போதக பிரசங்கிகள்.
வேத வார்த்தைகளால் பிரசங்கத்தை அலங்கரியாமல் ஆவியானவரின் துணை இல்லாமல் சுயநலத்தோடு வீண் வார்த்தைகளைக் கூறிப் பிரசங்கம் செய்பவர்களைத் தலை மேல் வைத்து தாங்கிக் கொண்டிருக்கிறது தற்காலத் தமிழ் கிறிஸ்தவம்.
இறையியல் போதனையில்லாமல், இலக்கண இலக்கியம் தெரியாமல் பிரசங்கிக்கப்படும் இக்காலத்து பிரசங்கங்களை, மிக நன்றாக இருக்கிறது என முகஸ்துதிக்காக கூறுபவர்களையும் பிரசங்கத்தின் தாற்பரியம் தெரியாதவர்களையும் இறையியல் போதனையின் அவசியம் அறியாத வேதப்பண்டிதர்களையும், அணைத்துக்கொண்டிருக்கிறது தற்காலத் தமிழ் கிறிஸ்தவம்.
வேதம் போதிக்கும் கிறிஸ்துவை அறியாத ஏமாளிகளாலும், வேதக் கோட்பாடுகள் இல்லாத கோமாளிகளாலும் மிகுந்திருக்கிறதைக் காணும்போது சிரிப்போடு சிந்தனையும் எழுகிறது. இவர்களின் ஆத்துமாவை நினைக்கையில் கண்கள் நனைகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றுக்கும் உதவாத பாரம்பரியக் கட்டுக்களால் இவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறதை அறிந்துணரும்போது இருதயம் கனக்கிறது.
தேவையான வாழ்வாதார வசதிகள் இருந்தும், சிந்திக்கத்தெரியாமல், சீரான கல்வியறிவின்றி, சில சமயங்களில் பொது அறிவும் கூட இல்லாமல் நம்மவர்கள் அலைமோதிக்கொண்டிருக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்பதை சிந்திக்கும் போது சில சமயங்களில் உறக்கமும் தூரமாகிறது.
இப்படிப்பட்ட தற்காலத் தமிழ் கிறிஸ்தவம் சீராக சிந்தித்து வேத சத்தியமாகிய சீர்திருத்த சத்தியத்தை அறிந்து கொண்டு எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது, என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஆனாலும் கர்த்தரின் கிருபை என்றும் இருப்பதை நினைவில் கொள்கிறேன். அவருடைய ஆடுகளில் ஒன்றையும் அவர் கைகளில் இருந்து பறிப்பவன் ஒருவனுமில்லை. எண்ணத்தில் எழுந்தவைகளை எழுத்தில் வரைந்திருக்கிறேன். இருதயம் சற்று இலேசானது போலத் தெரிகிறது.
கிங்ஸ்லி குமார்
இரண்டாவது தடவை எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுடைய உள்ளத்தில் எழுந்திருக்கும் ஏக்கங்களைக் கொட்டியிருக்கிறீர்கள். அவசியமான ஆதங்கந்தான். கிறிஸ்துமஸ் தினத்தை பண்டிகையாக்கி கிறிஸ்துவைத் தூரத்தில் வைத்துவிடுகிறது நம்மினத்துக் கிறிஸ்தவம்; இருதயத்தில் இதுபற்றிய சிந்தனைக்கு நேரத்தை செலவிடாமல் ‘அலங்கரிப்புக்கும் மின்சாரத்திற்கும்’ இக்காலங்களில் பணத்தை அள்ளியிறைக்கிறது அது. ’சீர்திருத்தம் அவசியம், அது அவசரம் தேவை’ என்று CSI முகநூல் பகுதியொன்றில் நேற்று வாசித்தேன். CSI ல் எங்கே வரப்போகிறது சீர்திருத்தம்? செத்த பிணங்கள் எழமுடியாது. நம்மினத்து நிலம் சீர்திருத்தத்திற்கு இன்னும் பதப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நம் கனவுகள் நனவாக கர்த்தர் கிருபை பாராட்டட்டும்.
அன்புடன்,
ஆர். பாலா
சீர்திருத்த இறையியல் இல்லாத போது என் வாழ்வும் அப்படி இருந்தது (கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்) கர்த்தரை ஒதுக்கித்தான் என் வாழ்வும் இருந்திருந்தது..
LikeLike