“வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி” – தன் மந்தையை சூழ்ந்திருக்கும் ஆபத்தை உணர்ந்த ஒரு மேய்ப்பனின் கருத்தாழமிக்க எச்சரிக்கைப் பதிவு.
இளம் விசுவாசிகளாகிய எங்களுக்கு அத்தியாவசியமாக இருக்கவேண்டிய கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை, சமுதாயத்தில் இன்று காணப்படும் கொள்கைகளோடு ஒப்பிட்டு விளக்கப்படுத்தியுள்ளீர்கள். கர்த்தருடைய பராமரிப்பின் மேன்மையை எண்ணி அதிகமாக அவரைத் துதிக்கிறோம். இந்த ஆக்கம் எனக்கு மோட்சப் பயண நூலின் 2ம் பாகத்தில் வரும் உறக்க பூமியும், அதனைக் கடப்பதற்கு முன்பு பயணிகளுக்குக் கிடைத்த மேய்ப்பர்களின் எச்சரிக்கையையும், சிக்கலான சமயத்திலெல்லாம் சரியான பாதையை வேதம் என்ற வரைபடத்தின் மூலமாகக் கண்டறிந்ததையும் ஞாபகப்படுத்தியது.
மேலெழுந்தவாரியாக ஒருசில கொள்கைகளைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும்; அதன் பாதிப்பை உணராததால், அதனைவிட்டு விலகியிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டிருந்தேனே தவிர, வேதப்பார்வைகொண்டு அதைப் பகுத்தறிந்து தேவசித்தத்தை நிறைவேற்றி வாழவேண்டும் என்ற புரிதல் கொண்டிருக்கவில்லை. எனவே தங்களுடைய எழுத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்வதற்காக இது தொடர்பான சில லௌகீக கட்டுரைகளை வாசித்தபோது தலை சுற்றியது. 19ம், 20ம் நூற்றாண்டுகளில் ஆர்ப்பாட்டமில்லாமல் தோன்றிய சில கொள்கைகள் இந்த 21ம் நூற்றாண்டின் அனைத்துத் துறைகளிலும் தன் அழுத்தமான காலடிகளை அகலப்பரப்பியிருப்பதை உணர்ந்தபோது ஒரு பயம்வந்து மேலெழுந்து இதயத்தை அழுத்தியது உண்மையெனினும், தேவனின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் விசுவாசித்து தைரியம் கொள்கிறேன்.
பெண்ணுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; அதற்காகச் சட்டம் இயற்றி திருமணத்திற்குப் புறம்பான பாலியல் சுதந்திரம் அளிப்பதும், ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பதும் தவறானது. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவசியம், அதன் பெயரில் இறந்த யானைக்கும் ஆத்துமா இருப்பதாகக் கருதி அஞ்சலி செலுத்துவது அறிவீனம். மொழிப்பற்று இன்றியமையாததுதான், ஆனால் அதற்குள் அரசியலைத் திணிப்பது மொழிக்குச் செய்யும் துரோகம். மிருகவதை கூடாது, ஆனால் அதன் பொருட்டு மாமிசம் உண்பதைத் தடை செய்து போராடுவது முட்டாள்தனம் என்பது புரிந்தது.
பட்டப்படிப்பு கல்லூரி முதற்கொண்டு பாலர் பள்ளி கார்டூன்வரை பின்நவீனத்துவ விதை விதைக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது; சமூகக் கட்டமைப்பை உடைத்து, வரலாற்றை மிதித்து, பகுத்தறிவைத் தொலைத்து, மாற்றத்தை மந்திரமாக்கி முன்னேறும் பின்நவீனத்துவம் சாத்தானின் ஆயுதமே என்பதையும், சூழல்வாதம் என்ற பெயரில் இறைவனுக்கு எதிராக இயற்கையை வணங்குவதிலிருந்து தாராளவாதம் என்ற பெயரில் இயற்கை நியதிக்கெதிராக மனித பாலினத்தை மாற்றுவது வரையிலும் மனிதனின் சித்தாந்தங்கள் அனைத்தும் இறைவனின் சித்தத்திற்கெதிராகவே இருப்பதையும் தெளிவாக அறிந்து கொண்டேன்.
“உலகத்தின் தீய சிந்தனைகளைப் புறக்கணித்து வாழவேண்டுமே தவிர உலகம் தெரியாமல் வாழக்கூடாது” – “சமூகம் சத்தமாகக் குரல் கொடுக்கிறது என்பதற்காக சமூகக் குரல்கள் எல்லாமே சரியானதாகிவிடாது” – ஆகிய வாசகங்களை சிந்தையில் வைத்திருப்பதை அத்தியாவசியமாக்கிக் கொள்கிறேன்.
இந்த உலகம் பாவத்தினால் கறைபடிந்திருந்தாலும்; வேதத்தின் கட்டமைப்புக்குட்பட்டு, பாவத்தை எதிர்த்து, தேவனை மகிமைப்படுத்தி வாழும் தகவமைப்பை மறுபிறப்பினூடே பெற்றிருக்கிறோம். மேலும் ‘‘பிசாசின் தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” என்று வேதம் சொல்லுகிறது. எனவே உலகத்தைவிட்டு விலகியோ அல்லது உலகத்தோடு உறவாடியோ வாழாமல்; வேதம் என்ற ‘மூக்குக் கண்ணாடியின்’ மூலமாக உலகத்தின் காரியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து, தீமையை களைந்து நன்மையை அனுபவித்து கர்த்தரை மகிமைப்படுத்தி வாழவேண்டியது நமது கடமை என்பதை தீர்க்கமாக அறிந்துகொண்டேன்.
இந்தப் பதிவை ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தையாகவும், காலத்தினாற் செய்த உதவியாகவும் உணருகிறேன். மிகவும் நன்றி.
– ஷேபா மிக்கேல் ஜார்ஜ்