எலிசா போனாலும் யெகோவா இருக்கிறார்

2 இராஜாக்கள் 13:20-25

நீங்கள் இப்போது வாழ்ந்து வரும் காலப்பகுதி உங்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தும் காலப்பகுதி. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனாவும் நாட்டின் நிலமையும் மோசமாக இருக்கிறது. உங்களில் சிலர்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்காக ஜெபித்து வருகிறோம். ஆண்டவர் ஜெபங்களைக் கேட்டு, இருக்கும் சூழ்நிலையை மாற்றி வந்திருக்கும் ஆபத்தில் இருந்து விடுதலை தர ஜெபித்து வருகிறோம்.

இந்த சமயத்தில் 2 இராஜாக்களைத் தொடருவதா, அல்லது வேறு செய்தி அளிக்கலாமா என்றுகூட எனக்கு சிந்தனை ஏற்பட்டது. இருந்தபோதும் 2 ராஜாக்களிலேயே சமயத்துக்குத் தகுந்த செய்தி இருப்பதை 13ம் அதிகாரத்தின் கடைசிப் பகுதியில் கவனித்தேன். இந்தப் பகுதிமூலம் கர்த்தர் நம்மோடு பேசட்டும்; நம்மைத் தைரியப்படுத்தட்டும்.

2 இராஜாக்கள் 13:20, இதுவரை இஸ்ரவேலுக்கு அரணாக, பாதுகாப்பு வளையமாக இருந்துவந்திருந்த தீர்க்கதரிசி எலிசா மரணமடைந்ததை அறிவிக்கிறது. எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல், பீடிகை எதுவும் இல்லாமல் அந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது. ’எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம் பண்ணினார்கள்’ என்றிருக்கிறது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதலமைச்சரானவுடன், கொரானாவுக்கு மத்தியில் ஆடம்பரமில்லாமல் பதவிப்பிரமாணம் நடக்கும் என்று அறிவித்திருந்தபோதும் ஒருவித ஆர்ப்பாட்டத்தோடுதான் அது நடந்தது. பத்திரிகைகள் அதைப் பிரமாதப்படுத்தின. கொரோனாவால் சரிந்த சில சினிமா தொடர்பானவர்களின் மரணத்தைக்கூட பத்திரிகைகள் விசேஷ செய்திபோலத்தான் வெளியிட்டன. ஆனால், வேதநாயகனான பரிசுத்த ஆவியானவர் எலிசாவின் மரணத்தை அறிவிக்கும்போது விசேஷமாக எதையும் எழுதவில்லை. ‘எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம் பண்ணினார்கள்’ என்று சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது.

அத்தனை பெரிய தீர்க்கதரிசியின் மரணத்தை ஒரே வரியில் இப்படி முடித்துவிடலாமா? என்றுகூட யாராவது கேட்கலாம். நாம் வாழும் சமுதாயம் அப்படித்தான் கேட்கும்.

ஒரே வரியில் எலிசாவின் மரணத்தைப்பற்றி நாம் வாசிப்பதற்குக் காரணமென்ன?

ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் இருக்கிறபோது என்ன செய்கிறான் என்பதுதான் முக்கியம். மரணம் வராமல் இருக்காது. எத்தனைப் பெரிய மனிதனுக்கும் மரணம் சம்பவிக்கும்; எலிசா இதற்கு விதிவிலக்கல்ல. எலிசா எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம். அதற்குத்தான் வேதம் முக்கியத்துவம் அளிக்கிறது. எலிசா கர்த்தரின் தீர்க்கதரிசி. இஸ்ரவேலுக்குக் கிடைத்திருந்த சக்திவாய்ந்த பாதுகாப்பு அரண். அதை இஸ்ரவேல் முழுதும் உணர்ந்து பயன்படுத்திக் கொண்டிராவிட்டாலும் அதுவே உண்மை.

எலிசா விசுவாசமுள்ள ஊழியத்தைச் செய்தவர். தன்னுடைய அதிரடியான அற்புதங்களையும், அருமையான தீர்க்கதரிசன ஊழியத்தையும் பார்த்தும் கேட்டும் ஆயிரக்கணக்கில் நாட்டில் மக்கள் பாராட்டிப் பயனடையத் தவறியபோதும், எந்தவிதத்திலும் தளர்ந்து போகாமலும், தன் ஊழியத்தில் சந்தேகம் கொள்ளாமலும், கர்த்தரைப் பார்த்துக் குறைகூறாமலும் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை விசுவாசமுள்ள ஊழியத்தைச் செய்த பழைய ஏற்பாட்டுப் பிரசங்கி எலிசா. கூட்டத்தைத்தேடியும், நாடியும் ஊழியம் செய்யாமல் கர்த்தருக்காக மட்டும் ஊழியம் செய்த வீட்டு மனைவி அவர். இது சமீபத்தில் நான் வாசித்த போல் வொஷரின் ஒரு ஆக்கத்தில் இருந்து கடன் வாங்கிக்கொண்ட உதாரணம். வீட்டு மனைவி, விசுவாசத்தோடு எல்லாவிதக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் குடும்பத்துக்கு விசுவாசத்தோடு சமைத்துப்போட்டு பணி செய்வார். அவருக்கு இருந்திருந்து மட்டுமே ஏதாவது நல்ல வார்த்தை கிடைக்கும். இருந்தபோதும் தளராமல் கடைசிவரை சமைத்துப் போட்டும், வீட்டுப் பணிகளையும் செய்து வருகிறவர் வீட்டு மனைவி. வீட்டு மனைவியிடம் ஆடம்பரம் இருக்காது; அலங்காரம் இருக்காது. சமையலறையில் சாதாரண சேலையைக்கட்டிக் கொண்டு விசுவாசத்தோடு பணிசெய்து வருவார். அதுபோலத்தான் எலிசாவும். அவர் செய்த பணி கர்த்தருக்கு. அதிலிருந்து அணுவளவும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல் கடைசிவரை பணிசெய்து வீட்டு மனைவிபோல் மரணமடைந்தார் எலிசா. இறப்பதற்கு முன்புகூட இஸ்ரவேலுக்கு செய்யவேண்டியிருந்த பணியைச் செய்துமுடித்துவிட்டு இறந்தார் எலிசா. அதையே 19 வரையுள்ள வசனங்களில் வாசித்திருக்கிறோம்.

மரணம் பொதுவானது

இங்கே எலிசாவைப்பற்றிய இன்னுமொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். எலிசாவும் மரிக்கவேண்டியிருந்தது. அதுவும் எல்லோரையும்போல சாதாரண மனிதனைப்போல மரிக்க வேண்டியிருந்தது. அதையும் 2ம் வசனம் நமக்கு உணர்த்துகிறது. எலிசா இந்தவேளையில் நோய்வாய்ப்பட்டு மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தார். தனக்கு மிக அருகில் மரணம் வந்துவிட்டது அவருக்குத் தெரிந்திருந்தது. அதை 14ம் வசனம் விளக்குகிறது. எலிசா மரணத்தை எதிர்பார்த்து அதற்குத் தயாராக நின்றார். கிறிஸ்தவ விசுவாசிகள் மரணத்தைச் சந்திக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது. கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு மரணம் மிகவும் ஆபத்தானது. அது அவர்களுக்கு நித்திய அழிவைக் கொண்டுவருகிறது. கிறிஸ்தவ விசுவாசிகள் மரணத்தை வரவேற்கிறார்கள். ஏன் தெரியுமா? அது அவர்களுக்கு அழிவில்லாத பரலோக வாழ்க்கையைக் கொண்டுவருகிறது. எலிசா ஆண்டவரோடு நிரந்தரமாக இருக்கப்போகிற பரலோக வாழ்க்கைக்குத் தன்னை தயார்செய்து கொண்டிருக்கிறார்.

ஒருவருக்கு மரணம் எப்படி வருகிறது என்பது முக்கியமேயல்ல. ஆண்டவர் எதையும் பயன்படுத்தி கிறிஸ்தவனுக்கு மரணத்தைக் கொண்டுவருவார். அது அவருடைய இறையாண்மையைப் பொறுத்தது. இப்படிதான் நான் சாகவேண்டும்; என் மரணம் விசேஷமாக இருக்கவேண்டும், அப்போதுதான் எனக்கு மதிப்பு என்று கிறிஸ்தவன் கேட்கமாட்டான். எப்படி மரணம் சம்பவிக்கப்போகிறது என்பது முக்கியமேயல்ல; நாம் ஆத்துமாவில் எந்த நிலையில் இருந்து அதை சந்திக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம். எலிசா விசுவாசி, தீர்க்கதரிசி. அவருக்கு பரலோகத்தில் இருந்து இந்த வேளையில் மரணத்தின் மூலம் அழைப்பு வந்திருந்தது. எனக்கு நன்கு அறிமுகமான இரண்டு போதகர்கள் 2020ல் பரலோகத்தை அடைந்தார்கள். ஒருவர் கென்சர் வியாதியாலும், மற்றவர் கொரோனா பாதிப்பாலும் மரித்தார்கள். இருவரும் விசுவாசமுள்ள ஊழியப் பணியைச் செய்திருந்தார்கள்; அவர்களுக்கு பரலோக அழைப்பு வந்திருந்தது. அதுதான் முக்கியம். அவர்கள் இப்போது கிறிஸ்துவோடு நிரந்தர ஐக்கியத்தை ருசிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோவாபியரின் ஊடுருவல்

எலிசா இறந்து அடக்கம் பண்ணப்பட்டதை ஒரே வசனத்தில் (20) மிகச்சுருக்கமாகச் சொல்லிவிட்டு இஸ்ரவேலின் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு சம்பவத்திற்குத் தாவிவிடுகிறார் நூலை எழுதியவர். அந்த சம்பவம் பற்றிக்கூட எந்த விபரத்தையும் தராமல் நம்முன் வைத்திருக்கிறார் நூலாசிரியர். 20ம் வசனத்தில், ‘மறுவருஷத்தில் மோவாபியரின் தண்டுகள் தேசத்தில் வந்தது’ என்றிருக்கிறது. அந்த வசனங்களை, 20-21 ஐ வாசிப்போம்.

எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.

இந்த இடத்தில் இந்த வசனங்கள் நமக்கு என்ன சொல்லுகின்றன. இந்த இடத்துக்கே சம்பந்தமில்லாத வகையில் எழுதப்பட்ட விஷயத்தைப்போல இது நம் கண்களுக்குத் தோற்றமளிக்கிறது. உண்மையில் 20ம் வசனத்திற்குப் பிறகு 21ஐ விட்டுவிட்டு 22ல் இருந்து தொடர்ந்து வாசித்தால் எந்தப் பிரச்சனையும் இல்லாததுபோல் உணர்வோம். 21ம் வசனமே பிரச்சனையுள்ளதாகத் தென்படும். அதனால்தான் தாராளவாத இறையியல் விளக்கமளிப்பவர்கள் இதை திணிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதையாக இதற்கு விளக்கமளித்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி ஆண்டவர் உலகத்தைப் படைத்திருக்கும் விதத்திற்கும், செங்கடல் பிரிந்த சம்பவத்திற்கும், யோனாவைப் பெரிய மீன் விழுங்கிய சம்பவத்திற்கும் விளக்கங்கொடுத்திருக்கிறார்களோ அதேவகையில்தான், இதையும் யாராலோ இந்த இடத்தில் தேவையில்லாமல் திணிக்கப்பட்ட விஷயமாகவும், கட்டுக்கதையாகவும் லிபரல் விளக்கமளிப்பவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள். ‘எலிசாவின் சரீரத்தின் மேல் பிணம் விழுகிறதாம். விழுந்த பிணம் உயிரோடு எழுந்து நிற்கிறதாம், இதெல்லாம் வெறுங்கட்டுக்கதை, 21ம் நூற்றாண்டுக்குப் பொருந்தாது‘ என்று ஆணவக்குரல் எழுப்புகிறார்கள் வேதத்தின் அருமை தெரியாதவர்கள்.

20ம் வசனத்திற்கு முன் நாம் என்ன வாசித்தோம் என்பதை இந்த இடத்தில் நாம் மறந்துவிடக்கூடாது. வெறும் அம்புகளைப் பயன்படுத்தி இஸ்ரவேலுக்கு வரப்போகும் வெற்றிகளை எலிசா விவரித்து சொல்லவில்லையா? பாலைவனம் போல் இருந்த இடத்தில் எங்கிருந்தோ தண்ணீர் வரவழைத்து மூன்று நாட்டுப்படைகளுக்கும், மிருகங்களுக்கும் தண்ணீர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதைப் பயன்படுத்தி இஸ்ரவேலின் எதிரிகளின் படையையும் எலிசா அழித்துக்காட்டவில்லையா? அதையெல்லாம் இதே நூலில் நாம் வாசித்திருக்கும்போது இந்த விஷயத்தை மட்டும் நாம் எப்படிக் கட்டுக்கதை என்று தள்ளிவிட முடியும்?

உண்மையில் எலிசா மரணமடைந்ததை அறிவிக்கும் வசனத்துக்கும் இந்தச் சம்பவத்துக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. நூலாசிரியர் இந்த இரு சம்பவங்களையும் இணைத்து இங்கே நமக்குத் தந்திருக்கிறார். இதைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் இந்த அதிகாரம் முழுவதையும் கவனத்தோடு வாசித்துப் பார்த்தாலே போதும்; இந்த அதிகாரமே இந்த வசனத்துக்கு விளக்கத்தை அளிக்கிறதாக இருக்கிறது.

2 இராஜாக்கள் 13:20

எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.

உண்மையில் எபிரெய மொழிப்படி இந்த வசனம் பின்வருமாறு இருக்கவேண்டும். ’இப்போது, எலிசா மரணமடைந்தார், அவனை அடக்கம் செய்தார்கள். அந்த வருஷத்தின் இளவேனில் (வசந்த) காலத்தில் அடிக்கடி ஊடுருவும் மோவாபிய படைகள் நாட்டை ஊடுருவின.’

தமிழ் வேதத்தில் இந்தப் பகுதியில் மறுவருஷத்தில் என்றிருப்பது சரியல்ல. மூலமொழியின்படி ‘அந்த வருஷத்தில்’ என்றே இருக்கவேண்டும். இந்த வசனத்தின் பொருள் என்ன தெரியுமா? எலிசாவை அடக்கம் செய்த நாட்களுக்கும், மோவாபிய ஊடுருவிகள் நாட்டை ஊடுருவிய நாட்களுக்கும் அதிக இடைவெளி இருக்கவில்லை என்பதுதான். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், வழமையாக மோவாபியர்கள் இஸ்ரவேலை ஊடுருவுகின்ற இளவேனில் காலப்பகுதியில்தான் எலிசாவும் மரித்து அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இஸ்ரவேலைப் பிடிக்காத மோவாபியர்கள் அந்த நேரத்தில் வல்லமையடைந்து வந்திருந்தார்கள். அவர்கள் அடிக்கடி சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் இஸ்ரவேலை ஊடுருவி தொல்லை தந்தும் வந்திருந்தார்கள். அப்படியானதொரு ஊடுவல் காலப்பகுதியிலேயே எலிசா அடக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து வசனங்களை வாசிப்போம்.

2 இராஜாக்கள் 13:21

அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.

எலிசா அடக்கம் செய்யப்பட்டு அதிக காலமாகியிருக்கவில்லை. அத்தோடு அந்தக் காலப்பகுதியில் இஸ்ரவேலில் ஒருவரை அடக்கம் செய்யும்போது ஏதாவது ஒரு குகையில் அடக்கம் செய்வதே வழக்கம். பிணத்தின் சரீரத்தைத் துணிகளால் சுற்றி அந்தக் குகைக்குள் வைத்துவிடுவார்கள். குகையின் நுழைவாசலை கற்களால் மூடிவிடுவதும் வழக்கம். அப்படியாக, இறந்த அந்த மனிதனையும் அவனைச் சார்ந்தவர்கள் எலிசாவின் சரீரம் அடக்கம் செய்யப்பட்ட அந்தக் குகையில் வைக்க அன்று அவர்கள் வந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் மோவாபிய ஊடுருவிகள் ஊரில் நுழைந்திருந்ததை அவர்கள் கவனித்து அவசர அவசரமாகக் கொண்டுவந்திருந்த பிணத்தைக் குகைக்குள் போட்டுவிட்டு வெகுவேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்கள். அப்படி அவர்கள் பிணத்தைக் குகைக்குள் போட்ட அவசரத்தில் அந்தப் பிணம் எலிசாவின் சரீரத்தின் எலும்புகளைத் தொட்டபோது, அது உயிர்பெற்று உடனடியாக எழுந்து நின்றது. இதுதான் அன்று நடந்த அற்புதம்.

இந்த அற்புதத்தின் மூலம் ஆவியானவர் நமக்கு எதை விளக்குகிறார்?

கைல், டிலிச் என்ற பழைய ஏற்பாட்டு வேதவிளக்க ஆசிரியர்கள் இதைப் பற்றி அளித்திருக்கும் விளக்கம் எனக்கு சரியாகப்படுகிறது.

“இந்த அற்புதம், எலிசா இறந்துவிட்டபோதும் கல்லறையில் இருந்து அற்புதம் செய்து எலியாவையும் மிஞ்சிவிட்டார் என்பதைக் காட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டதல்ல. இறக்கும் நிலையில் இருந்தபோது எலிசா, சீரியர்களை யோவாஸ் மூன்றுமுறைத் தாக்கி வெற்றியடைவான் என்று சொன்ன தீர்க்கதரிசனம் நிச்சயம் நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்தும் தெய்வீக அற்புதமாக இது இருக்கிறது” என்று விளக்கியிருக்கிறார்கள். அத்தோடு அவர்கள், “இதன்மூலம் கர்த்தர், தான் மரித்தவர்களின் தெய்வமல்ல, ஜீவிக்கிறவர்களின் தேவன் என்பதையும் எலிசாவின் பிணத்தின் மூலம் நிகழ்த்திய அற்புதத்தால் காட்டுகிறார்” என்று விளக்கியிருக்கிறார்கள்.

எலிசா இறந்துவிட்டார், ஆனால் அவருடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் நிலைத்திருக்கின்றன. எலிசா போய்விட்டிருக்கலாம்; ஆனால் எலிசாவின் தேவன் தொடர்ந்தும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். இதைத்தான் இந்த அற்புதம் இந்த இடத்தில் வலியுறுத்துகிறது. எலிசா மறைந்துவிட்டதை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த அந்தக் காலத்து விசுவாசிகளுக்கு இந்தக் கல்லறை அற்புதம் எப்படியெல்லாம் ஊக்கமளித்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். எல்லாம் முடிந்துவிட்டது; எலிசாவும் போய்விட்டார். இனி இஸ்ரவேலுக்கு முடிவு வந்துவிட்டது. யார் நமக்கு உதவ இருக்கிறார்கள்? என்று ஏங்கிக்கொண்டிருந்த விசுவாச இருதயங்களில் இந்த அற்புதம் பால் வார்த்திருக்கும் இல்லையா? ஆண்டவருக்குத் தெரியும், எந்தெந்த நேரத்தில் தம்முடைய மக்களை எந்தவிதத்திலெல்லாம் தைரியப்படுத்த வேண்டுமென்று. இந்தக் கல்லறை அற்புதம் கட்டுக்கதையல்ல; விசுவாசிகளுக்கும், இஸ்ரவேலுக்கும் கர்த்தர் அனுப்பிவைத்த ஆணித்தரமான உறுதிமொழி. உன் பாதுகாப்பு அரண் எலிசா அல்ல; எலிசாவின் தேவனான நானே என்று இந்த அற்புதத்தின் மூலம் கர்த்தர் இங்கே சொல்லுகிறார்.

இஸ்ரவேலில் அன்று கல்லறையில் நிகழ்ந்த இந்த அற்புதம் நமக்கு புதிய ஏற்பாட்டில் இன்னுமொரு சம்பவத்தை நினைவூட்டுகிறது. மத்தேயு 27:51-53

அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

இயேசு சிலுவையில் மரித்தபின் இந்த நிகழ்ச்சி நிகழ்ந்ததாக மத்தேயு விளக்குகிறார். கவனியுங்கள் – இயேசு இறந்தபோது கல்லறைகள் திறந்தன மரித்திருந்த அநேக கிறிஸ்தவர்களின் சரீரங்கள் உயிர்பெற்று எழுந்து நின்றன. இது இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ந்தபின் நடந்தது என்று 53ம் வசனத்தில் வாசிக்கிறோம். இயேசு இறந்தபோது கல்லறைகள் திறந்தன. இந்த உயிர்த்தெழுதல் இயேசு உயிர்த்தெழுந்தபின் நிகழ்ந்தது.

இதைக்கூட வாசிக்கின்ற வேதஞானமற்ற மனிதர்கள் கட்டுக்கதை என்றே சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சியைவைத்து என்ன சொல்லுவது என்று திகைப்பார்கள்.

ஆனால், மத்தேயு, இயேசு மரணத்தை வெற்றிகொண்டு பாவத்தில் மரித்திருப்பவர்களுக்கு ஜீவனளிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும் என்பதை இது உணர்த்துவதாக இருக்கிறது என்று நாம் அறியும்படியாக இதை எழுதியிருக்கிறார். இயேசு மரித்தார்; கல்லறைகள் திறந்தன. 2 இராஜாக்கள் 13ல் எலிசாவின் எலும்புகள் இன்னொரு பிணத்தை உயிர்த்தெழச் செய்தன. மத்தேயு 27ல் இயேசுவின் மரணம் அநேகருக்கு ஜீவனளிக்கின்ற மரணமாயிருக்கிறது என்று அறிகிறோம்.

2 இராஜாக்கள் 13ம் அதிகாரத்தில் காணப்படும் கல்லறை அற்புதம் எத்தனை பெரிய சுவிசேஷ செய்தியை நமக்கு அளிக்கிறது. மரித்த எலிசா பரலோகத்தில் உயிரோடிருக்கிறார். எலிசாவின் தேவன் தொடர்ந்து தன்னை விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த உலகத்தில் தேவனாக இருக்கிறார். மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து இன்று நம்மோடிருந்து நம்மைப் பாதுகாத்து வருகிறார். மரணம் நமக்கு முடிவானதல்ல. அது நாம் பரலோகம் போவதற்கான கதவு மட்டுமே. இயேசுவை விசுவாசிக்காதவர்களுக்குத்தான் மரண பயம் இருக்கவேண்டும். விசுவாசிகள் மரணத்தை இன்னொரு வாழ்விற்கான ஆரம்பமாகப் பார்ப்பார்கள். அதைத்தான் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் பவுல் விளக்குகிறார். இந்தக் கொரோனா காலங்கள் அனேகருக்கு மரண பயத்தை உண்டாக்கியிருக்கிறது. எதிர்காலத்தைப்பற்றிய சந்தேகத்தையும், கவலையையும் உண்டாக்கியிருக்கிறது. அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும் இது ஆண்டவராகிய இயேசுவை அதிகம் நெருங்கிவாழ வேண்டிய நேரம். அவரில் தஞ்சமடைந்திருப்பவர்களுக்கு மரண பயம் இருக்கவேண்டிய அவசியமில்லை. இயேசுவின் உயிர்த்தெழுதல் அவர்களுடைய உயிர்த்தெழுதலுக்கு உத்தரவாதம் தந்திருக்கிறது. இந்த உலகத்தின் ஆபத்துக்கள் நம் உயிர்த்தெழுதலை இல்லாமலாக்கிவிட முடியாது. கொரோனா நம் உயிரை மட்டுமே எடுக்கமுடியும்; நித்திய ஜீவனையும், வரப்போகும் உயிர்த்தெழுதலையும் அதால் ஒன்றும் செய்யமுடியாது.

உங்களில் எல்லோருமே கிறிஸ்தவர்களா என்று எனக்குத் தெரியாது. நீங்கள் கிறிஸ்தவராக இல்லாமலிருந்தால் உங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? நீங்கள் எதை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஆதரவு யார்? ஆண்டவரை ஒதுக்கிவைத்து வாழும் நீங்கள் எப்படி எதில் நம்பிக்கை வைத்து வாழுகிறீர்கள்? இன்று உங்கள் வாழ்கைக்கு முடிவு ஏற்பட்டால் நீங்கள் எங்கே போகப்போகிறீர்கள்? எந்த நம்பிக்கையோடு இயேசு கிறிஸ்துவை ஒதுக்கிவைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? மரித்து உயிர்தெழுந்து பாவிகளுக்கு நித்திய வாழ்வளிப்பதற்காக வந்த இயேசுவை உங்களால் பாவமன்னிப்புக்காக எப்படி விசுவாசிக்காமல் இருக்கமுடிகிறது?

One thought on “எலிசா போனாலும் யெகோவா இருக்கிறார்

 1. *ஆமென்!ஆமென்!!ஆமென்!!!🙏* *இயேசுவுக்கே புகழ்!*

  On Tue 13 Jul, 2021, 5:32 PM திருமறைத்தீபம் (Bible Lamp), wrote:

  > ஆர். பாலா posted: ” 2 இராஜாக்கள் 13:20-25 நீங்கள் இப்போது வாழ்ந்து வரும்
  > காலப்பகுதி உங்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தும் காலப்பகுதி. நாளுக்கு நாள்
  > உயர்ந்து வரும் கொரோனாவும் நாட்டின் நிலமையும் மோசமாக இருக்கிறது. உங்களில்
  > சிலர்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். ”
  >

  Liked by 1 person

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s