சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கம் – மோட்சப் பிரயாணம்

18ம், 19ம் நூற்றாண்டுகளில் தமிழில் மோட்சப் பயண மொழியாக்கம்

18ம் நூற்றாண்டிலேயே, நாம் இன்று அறிந்திருக்கின்றவிதத்தில் உரைநடை எழுத்து தமிழுக்கு அறிமுகமானது. அதன் அறிமுகத்துக்கு கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் கொன்ஸ்டன்டைன் பெஸ்கிக்கும் (1740) நாம் நன்றிகூற வேண்டும். அத்தோடு அதற்குமுன் காகிதம், அச்சுக்கூடம் ஆகியவை இருந்திராதபடியாலும், சுவடிகளிலேயே பெரும்பாலும் எதையும் எழுதி வந்ததாலும் உரைநடையில் எவருக்கும் நாட்டம் இருக்கவில்லை. அன்றைய தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. அவற்றை சுவடிகளில் இலகுவாக எழுதிவிடலாம். எதையும் சுருக்கமாக குறுக்கி விளக்குவதே செய்யுளின் பணி. 17ம் நூற்றாண்டுக்கு முன் உரைநடை பரவலாகக் காணப்படவில்லை. (History of the Tamil Literature, 1928, a Desertation by V. S. Sankaranarayana Pillai, M. A).

செய்யுளில் எதையும் விளக்கும் முறை மாறி உரைநடையில் எழுத்து வளர, அன்று ஆரம்பிக்கப்பட்ட அச்சுக்கூடம் துணை போனது. திருநெல்வேலியில் 1847ல் திருச்சபை மிஷனரி சங்கம் (C. M. S.) ஒரு அச்சுக்கூடத்தை நிறுவியது. அதற்கு முன் சென்னையிலும் ஒரு அச்சுக்கூடம் நிறுவப்பட்டிருந்தது. அத்தோடு தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்த கிறிஸ்தவ மிஷனரிகளான C.T.E. இரேனியஸ், ரொபட் கால்ட்டுவெல், ஜி. யூ. போப் ஆகியோரும் உரைநடை இலக்கியத்தை ஊக்குவித்திருக்கிறார்கள். இந்தத் தமிழிலக்கிய, இலக்கண வளர்ச்சிகள் ஆங்கிலத்தில் காணப்பட்ட அருமையான உரைநடை இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழில் வெளியிட வழிகோளின. ஆங்கிலேய மிஷனரிகள் மட்டுமல்லாது, தமிழில் புலமை பெற்றிருந்த தமிழ் கிறிஸ்தவர்களும் மொழியாக்கப் பணியிலும், தாங்களே சுயமாக தரமான கிறிஸ்தவ இலக்கியங்களைப் படைப்பதிலும் இக்காலத்தில் வளர ஆரம்பித்திருந்தனர்.

தமிழில் மோட்சப் பயணத்தின் மொழியாக்கம் பற்றிய தெளிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளுவது சுலபமாக இருக்கவில்லை. சில படைப்புகளில் இருந்து கிடைத்த வருடங்கள் பற்றிய குறிப்புகளும் முரண்பாடுள்ளவையாக காணப்பட்டன. பொதுவாகவே, எல்லாக் குறிப்புகளிலும் 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மோட்சப் பயணத்தின் உரைநடை மொழியாக்கங்கள் அச்சில் இருந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றன. மோட்சப் பயணத்தின் முதலாம் பாகம் உரைநடையில் 1793ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த வேப்பேரியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சிடப்பட்டிருந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. சாமுவேல் பவுல் ஐயர் இதை உறுதிப்படுத்தும் வகையில் தான் வெளியிட்ட நூலின் முன்னுரையில், சுவிசேஷப் பிரபல்லிய மிஷன் சங்கத்தார் (S. P. C. K.) இதை வெளியிட்டதாகக் கூறியிருக்கிறார். சென்னை துண்டுப்பிரதிகள் சங்கம் (Madras Tract Society) 1841ல் இதன் முதல் பாகத்தின் தமிழ் மொழியாக்கத்தை மட்டும் தனியாக வெளியிட்டிருந்தது. இதன் திருத்தப்பதிப்பு 1842லும், இதன் மூன்றாவது பதிப்பு 1848லும் வெளிவந்திருந்தது.

மோட்சப் பயணத்தின் இரண்டு பாகங்களையும் முதன் முதல் தமிழில் மொழியாக்கம் செய்தவர் லெவி ஸ்பால்டிங் (Levi Spaulding) என்பவர். 1818ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவைத் தன்கீழ் கொண்டு வந்திருந்தது. அமெரிக்கரான லெவி ஸ்பால்டிங் 1818ல் மருத்துவ மிஷனரியான ஜோன் ஸ்கடர் (John Scudder) என்பவரோடு அமெரிக்க மிஷன் போர்டினால் (ABCFM) அனுப்பிவைக்கப்பட்டு பொஸ்டனில் கப்பலேறி 1820ல் ஸ்ரீ லங்காவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். ஆரம்பத்தில் மானிப்பாயிலும் பின்பு தெல்லிப்பளை என்ற இடத்திலும் பணியாற்றினார். தன்னுடைய ஊழியத்தின் பெரும்பகுதியை உடுவில் என்ற இடத்திலேயே கழித்தார். சபையையும், பாடசாலைகளையும் மேற்பார்வை செய்ததோடு சுவிசேஷப் பணியிலும் ஈடுபட்டுவந்தார். அவருடைய மனைவி மேரி ஸ்பால்டிங் உடுவில் பெண்கள் போர்டிங் கல்லூரியை நாற்பது வருடங்களுக்கு மேற்பார்வை செய்து வந்திருக்கிறார். ஸ்பால்டிங் 1834ல் அமெரிக்க மிஷன் போர்டுக்கு புதிதாக ஒரு மிஷன் ஸ்டேசனைத் தேடி தென்னிந்தியாவில் மதுரைப்பகுதிக்கு ஒரு மிஷனரி குழுவோடு போனார். அங்கேயே லெவி ஸ்பால்டிங்கின் வழிநடத்தலில் அமெரிக்க மதுரை மிஷன் ஆரம்பமாகியது.

லெவி ஸ்பால்டிங் ஏனைய மிஷனரிகளைவிட மக்களை நேரடியாக சந்தித்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அவர்களுடைய பேச்சுமொழியைக் கற்றுக்கொள்ளுவதில் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார். மொழியாக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வந்திருந்த ஸ்பால்டிங் தமிழில் ஒரு அகராதியையும், ஆங்கில-தமிழ் அகராதியையும் தொகுத்தார். கீர்த்தனைப் பாடல்களையும், சுவிசேஷத் துண்டுப்பிரதிகளையும் வெளியிட்டிருந்த ஸ்பால்டிங் ஜோன் பனியனின் மோட்சப் பயணத்தையும், புதிய ஏற்பாட்டையும் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். ஸ்பால்டிங் மோட்சப் பயணத்தை யாழ்ப்பாணத் துண்டுப்பிரதிகள் சங்கத்திற்காக (Jaffna Tract Society) மொழியாக்கம் செய்து, அதை அந்தச் சங்கம் 1853ல் அச்சிட்டு வெளியிட்டது. சாமுவேல் பவுல் ஐயர் தன் நூலின் முகவுரையில், ஸ்பால்டிங்கின் பெயரைக் குறிப்பிடாமல், இது யாழ்ப்பாணம் மானிப்பாய் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியிருக்கிறார். லெவி ஸ்பால்டிங் தன்னுடைய 82ம் வயதில் நாற்பத்தி நான்கு வருட ஊழியப்பணிக்குப் பிறகு 1873ல் வட ஸ்ரீ லங்காவின் உடுவில் என்ற பகுதியில் உயிர் துறந்தார்.

லெவி பால்டிங்கின் மோட்சப் பிரயாண மொழியாக்கம் எத்தகையது, எந்தளவுக்குத் தரமானது என்பதை விளக்கும் எந்தக் குறிப்புகளும் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதனால் அதுபற்றி எதையும் விளக்கமாகக் கூறமுடியவில்லை. வரலாற்றில் அதுவே முதன் முதலாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட மோட்சப் பயண நூல் என்றளவில் மட்டும் அது முக்கியத்துவம் பெறுகிறது.

சாமுவேல் பவுல் ஐயரின், ‘பரதேசியின் மோட்சப் பிரயாணம்’

சாமுவேல் பவுல் ஐயர் பிறப்பதற்கு முன்பே மோட்சப் பயணத்தின் முதலாம் பாகம் மூன்று பதிப்புகள்வரை வெளிவந்திருந்தன. ஐயர், 1844ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் நாள் திருநெல்வேலிப் பகுதியில் மெய்ஞானபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை, தானியேல் பவுல் ஐயர் மிகுந்த தெய்வ பக்தியுள்ளவர்; வல்லமையான பிரசங்கியாகவும் இருந்திருக்கிறார். மெய்ஞானபுரத்தில் பணிபுரிந்த மிஷனரியான ஜோன் தோமஸ், பவுல் ஐயரின் தந்தையைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘இந்தியப் போதகர்களில் எழுப்புதலான மகோன்னதப் பிரசங்கி இவர்தாம்’ என்று கூறியிருக்கிறார். சாமுவேல் பவுல் ஐயர், மிஷனரியான ஜோன் தோமஸ் அவர்களிடமே உயர்கல்வி பயின்றார். அவர் கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிப்படைந்தபின் ஊக்கமாக சுவிசேஷத்தை அறிவிக்க ஆரம்பித்தார். அப்போது மிஷனரியாகவும், பின்னால் திருநெல்வேலி திருச்சபை உதவிப் பேராயராகவும் இருந்த அருள்திரு எட்வர்ட் சார்ஜன்ட் ஐயரிடம் சாமுவேல் பவுல் ஐயர் வேதத்தையும், வேத இறையியலையும் முறையாகக் கற்றறிந்திருந்தார்.

எட்வர்ட் சார்ஜன்ட்டும் (C. M. S.), ரொபர்ட் கால்ட்வேலும் (S. P. C. K.) இணைந்து பணிபுரிந்தவர்கள்; திருநெல்வேலி திருச்சபையில் உதவி பிஷப்புக்களாக இருந்துள்ளனர். சாமுவேல் பவுல் ஐயர் சந்தைகளிலும், சிறைகளிலும் போய் சுவிசேஷத்தை சொல்லுவதில் அதிக அக்கறை காட்டினார். ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த ஐயர் பின்பு பல திருச்சபைகளில் பணிபுரிந்திருக்கிறார். சென்னையில் சத்தியநாதன் ஐயர் அவர்களின் கீழ் உபதேசியாராகப் பணியாற்றினார்; அங்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 1868 பெப்ரவரி மாதம் அருள்திரு பரமானந்தம் சிமியோன் என்பவரின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். 1874ல், குருப்பயிற்சி பெற்றபின் திருச்சி எஸ். பி. ஜி ஆலயத்தில் ஜெல் நைட் எனும் பேராயரிடம் குருவாக அபிஷேகம் பெற்றார். ஐயர் உதகமண்டலத்தில் ஒன்பது ஆண்டுகள் குருவானவராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு திருநெல்வேலி மாநிலத்தில் சாயர்புரம் என்ற கிராமத்தில் பணிபுரியச் சென்றார். சாயர்புரத்தில் இரண்டு சாதிக்காரர்களிடம் பிரச்சனை உண்டாகி இனக்கலவரம் நிகழ்ந்தபோது அவர்களோடு பேசி அந்தப் பிரச்சனையைத் தீர்த்துவைத்ததன் காரணமாக இவருக்கு 1891ம் ஆண்டு ராவ் சாகிப் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தப் பட்டம் ஐயருடைய இலக்கியப் பணிக்காகக் கொடுக்கப்பட்டதாக முனைவர் பென்னி தன் நூலில் தெரிவித்திருக்கிறார் (சாமுவேல் பவுல் ஐயரின் கிறிஸ்தவ இலக்கியப் படைப்புகள்; 2020). இரண்டுக்காகவும் கொடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம்.

சிவகாசியில் ஐயர் திருச்சபைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நற்போதகம் என்ற புரொட்டஸ்தாந்து தமிழ் பத்திரிகையின் ஆசிரியராக மூன்று வருடங்கள் இருந்தார். இதற்கு முன் இப்பத்திரிகையின் ஆசிரியராக தமிழ்ப் புலமை வாய்ந்த இரேனியஸ் இருந்திருக்கிறார். தமிழ் இலக்கியத்திலும், எழுத்துப் பணியிலும் அதிக ஆர்வம் காட்டிய ஐயர் தன் வாழ்நாளில் 42 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். 1870 முதல் 1900வரை திருநெல்வேலி மாநிலத்தில் மெய்ஞானபுரத்துக்கு அருகிலுள்ள பாட்டக்கரையில் வாழ்ந்த காலத்தில், ஸ்பால்டிங் மொழியாக்கம் செய்திருந்த மோட்சப் பயணத்தை ஐயர் திருத்தி, சென்னை துண்டுப்பிரதிகள் சங்கம் அதை 1890ல் திருத்தப் பதிப்பாக வெளியிட்டதாக எனக்குக் கிடைத்த ஒரு குறிப்பு கூறுகிறது. அதற்கு முன்பாக, 1882ம் ஆண்டு கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் மூலம் பரதேசியின் மோட்சப் பிரயாணம் என்ற தலைப்பில் அதை வெளியிட்டதாக, ஐயர் தன்னுடைய மொழியாக்கத்திற்குத் தந்திருந்த முகவுரையில் வாசிக்கிறோம். இதுவே அவரது எழுத்துப் பணியில் முதன்மையானது. எந்தளவுக்கு சாமுவேல் ஐயர் தன் மொழியாக்கத்திற்கு ஸ்பால்டிங்குடைய மொழியாக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்ற விபரங்களை அறிந்துகொள்வது மிகக் கடினமாக இருந்தது. அத்தகைய குறிப்புகள் இல்லாமலிருப்பதே அதற்குக் காரணம்.

சாமுவேல் பவுல் ஐயர் எட்வர்ட் சார்ஜன்ட்டிடம் இறையியல் கற்று, ஆங்கிலம் கற்று, ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை வாய்ந்தவராக இருந்திருக்கிறார். தமிழைக் கற்ற அமெரிக்கரான ஸ்பால்டிங்கைவிட ஐயருடைய தமிழ்நடை நிச்சயம் மிகவும் சிறந்ததாகவே இருந்திருக்கும். ஸ்பால்டிங்கின் மொழியாக்கத்தை அவர் பயன்படுத்தியிருந்தாலும், ஐயர் பனியனின் ஆங்கில நூலைப்பயன்படுத்தி தன் சொந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். ஐயருடைய மோட்சப் பயண மொழிபெயர்ப்பு பல மடங்கு சிறந்ததாக இருப்பதோடு அவருடைய மொழிநடையும் அக்காலத்துக்கேற்ற உரைநடையாக சிறப்பானதாக இருக்கிறதென்றே நான் கூறுவேன். சாமுவேல் பவுல் ஐயரைப்பற்றி தமிழில் வந்திருக்கும் ஓரிரு நூல்கள் ஐயருடைய மொழிபெயர்ப்பு அவருடைய சொந்த மொழிபெயர்ப்பு என்று கூறுகின்றன. இந்த விஷயத்தில் முறையான வரலாற்று ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளுவது நம்மினத்தில் மிகவும் கடினமானதொன்று. இருந்தபோதும் சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கத்தின் சிறப்பைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. தமிழ் உரைநடையின் ஆரம்பகாலமாக இருந்த 18ம் நூற்றாண்டில் ஐயரின் தமிழ்நடை மிகவும் பாராட்டக்கூடியதாக இருந்திருக்கிறது. 1900 ஆண்டில் சாமுவேல் பவுல் ஐயர் இறைபதம் அடைந்தார். (இந்தப் பகுதியில் நான் குறிப்பிட்டிருக்கும் சில விபரங்களைத் தேடித் தந்துதவிய சென்னையைச் சேர்ந்த டாக்டர் பென்னி மற்றும் தேவராஜ் ஆகியோருக்கு என் நன்றிகள். டாக்டர் பென்னி ‘சாமுவேல் பவுல் ஐயரின் கிறிஸ்தவ இலக்கியப் படைப்புகள்’ என்ற நூலை 2020ல் வெளியிட்டுள்ளார்).

என். சாமுவேலின் பதிப்பு

சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கம் பற்றிய விபரங்களை நான் தேடிக்கொண்டிருந்தபோது உதகமண்டலத்தில், கோத்தகிரியில் வாழ்ந்து மறைந்த என். சாமுவேல் என்பவர் (ஆசிரியர்: தேவ எக்காளம்) பற்றிய விபரம் கிடைத்தது. இவர் சிறுவனாக இருந்தபோது, இவருடைய தந்தைக்கு 1947ம் ஆண்டு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கம் இவருடைய கைக்கு வந்தது. இவர் கையில் கிடைத்த பிரதி 1942ம் வருடப் பதிப்பு. அது 453 பக்கங்களைக்கொண்டதாக மூலநூலின் இருபாகங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. அதை யார் அச்சிட்டது என்ற விபரத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அதில் நிறைய அச்சுப்பிழைகள் இருந்ததாக என். சாமுவேல் குறிப்பிட்டிருக்கிறார். அதில், சாமுவேல் பவுல் ஐயரின் பெயரோடு உள்ள முகவுரையில் அக்டோபர் 1882ம் வருடம் உதகமண்டலம் என்ற குறிப்பும் இருந்திருக்கிறது. அது வெளியிடப்பட்ட காலத்தில் ஐயர் உதகமண்டலத்தில் பணிபுரிந்திருந்தது அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

இந்தப் பதிப்பைப் பற்றிய மேலும் விபரங்களைத் தெரிந்துகொள்ள கோத்தகிரியில் உள்ள நண்பர் ஜெகதீஸுடன் தொடர்புகொண்டு, அவர்மூலம் என். சாமுவேலின் மகன் சுந்தர்சிங்கோடு தொலைபேசியில் பேசி சில விபரங்களைப் பெற்றுக்கொண்டேன். 2018ல் என். சாமுவேல், சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கத்தின் பதிப்பில் இருந்த அச்சுப்பிழைகளை நீக்கி, நூலை மறுபடியும் டைப் செய்து 490 பக்கங்களோடு 2018ம் ஆண்டில் தடித்த பதிப்பாக வெளியிட்டிருக்கிறார். அவருடைய சொந்தச் செலவில் நூற்றுக்கணக்கான பிரதிகளை அச்சிட்டுத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுத்திருக்கிறார். கடைசியாக இருந்த ஒரு பிரதியை அவருடைய மகன் சுந்தர்சிங் எனக்கு அனுப்பி உதவினார். இப்போது அவருடைய குடும்பத்தார் அது தொடர்ந்தும் அச்சில் இருக்கவேண்டும் என்பதற்காக மறுபடியும் அதை அச்சிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அறிந்தேன்.

கிறிஸ்தவ இலக்கிய சங்கப் பதிப்பு

சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கமான பரதேசியின் மோட்சப் பிரயாணம், ‘மோட்சப் பிரயாணம்’ என்ற பெயரில் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தால் அதன் முதல் பாகம் மட்டும் அச்சிடப்பட்டது. அவர்கள் அச்சிட்ட, என் கையில் இருக்கும் முதல் பாகத்தின் பிரதி 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் காணப்படும் குறிப்புப்படி அது 16வது பதிப்பு. அதற்கு முன் அது 15 பதிப்புக்களைச் சந்தித்திருக்கிறது. 2004ம் ஆண்டுப் பதிப்பு, முதலில் 1968ம் ஆண்டு பண்ணிரெண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அதற்கு முன் வந்திருக்கும் பதிப்புகள் பற்றிய விபரங்களை அந்நூலில் இருந்து தெரிந்துகொள்ள முடியவில்லை. என் கையில் இருக்கும் பதிப்பில் சாமுவேல் பவுல் ஐயரின் முகவுரை காணப்படுகிறது. அந்த முகவுரை முதல் பதிப்பில் வந்த முகவுரையாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். அந்த முகவுரை சில முக்கியமான விபரங்களைத் தருகிறது.

சாமுவேல் பவுல் ஐயரின் முகவுரை, மோட்சப் பயணத்தின் தமிழாக்கம் சுவிசேஷப் பிரபல்ய மிஷன் சங்கத்தாரால் (S. P. C. K), 1793ல், தமிழில் முதன் முறையாக அச்சிடப்பட்டதாகக் கூறுகிறது. இந்தக் குறிப்பை அவர் ஜோன் மேர்டொக் என்பவருடைய Catalogue of the Christian Vernacular Literature of India (1870) என்ற நூலில் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார். அந்த மொழியாக்கத்திலும், அதற்குப் பின் வந்த திருப்புதல்களிலும் முதலாவது பாகம் மட்டுமே காணப்பட்டதாக ஐயர் கூறுகிறார். நூல் முழுவதும் 1853ல் ஸ்ரீ லங்காவில் மானிப்பாய் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார். இந்த விபரத்தில் இருந்து ஐயர் குறிப்பிட்டிருக்கும் மொழியாக்கம் யாருடையது என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அது ஸ்பால்டிங்குடையதாக இருந்திருக்கவேண்டும் என்பது என் கருத்து.

தன்னுடைய சொந்த மொழியாக்கத்தில் தான் எதையும் கூட்டவோ குறைக்கவோ இல்லை என்றும் சாமுவேல் பவுல் ஐயர் இந்த முகவுரையில் கூறியிருக்கிறார். மூலநூலில் இருப்பதை சுவைபட மொழியாக்கம் செய்வதே தன் நோக்கம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் மொழியாக்க நூலைப் பிரதி பண்ணுவதில் ஸ்தேவான் உபதேசியார் தனக்கு மிகுந்த துணை செய்தார் என்றும் கூறியிருக்கிறார். என் கையில் இருக்கும் பதிப்பு ஆங்கில மோட்சப் பயணத்தின் முதல் பாகத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. சாமுவேல் பவுல் ஐயரின் முதல் பதிப்பு இரண்டு பாகங்களையும் கொண்டிருந்தபோதும், முதல் பாகத்தை மட்டும் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தார் ஏன் பதிப்பித்தார்கள் என்பதும் தெரியவில்லை. முதல் பதிப்புக்கும், 1968ல் வெளிவந்த பன்னிரெண்டாம் பதிப்புக்கும் இடையில் என்ன நிகழ்ந்தது என்பதும் தெரியவில்லை. நம்மினத்தில் இத்தகைய அவசியமான குறிப்புகளை பதிவில் வைத்திருப்பது வழக்கத்தில் இல்லாமலிருப்பது வரலாற்று நிகழ்வுகளுக்கு சான்றுகள் இல்லாமல் செய்துவிடுகிறது. ‘தோமா இந்தியாவுக்கு வந்தார்’ என்பது போன்ற கர்ணபரம்பரைக் கதைகளின் மூலமே வரலாற்றை ஓட்டிக்கொண்டிருக்கும் நம்மினத்தில் வரலாற்று நிரூபணங்கள் பாதுகாத்து வைக்கப்படாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத குறைபாடு. நவீன விஞ்ஞான வரலாற்று ஆய்வுகள் ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது போன்ற செவிவழி வந்த கதைகளை ஏற்றுக்கொள்ளுவதில்லை.

சீர்திருத்த கிறிஸ்தவமும், தமிழில் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்த இடத்தில் தமிழில் உரைநடை வளர்ச்சிபற்றி மேலும் விளக்கவேண்டியது அவசியம். 19ம் நூற்றாண்டுக்கு முன் பெரும்பாலும் படைப்புகள் செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளிலேயே எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தன என்று ஏற்கனவே விளக்கியிருந்தேன். இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள்வடிவில் அமைந்திருந்தன. செய்யுளுக்கே அன்று படித்தவர்கள் மத்தியில் வரவேற்பிருந்தது. உரைநடை அருகிக் காணப்பட்டது. இலக்கியங்களில் உரைநடை ஆங்காங்கே வந்துபோயிருந்தாலும் அவை செய்யுள்களுக்கு மத்தியில் காணப்பட்டது. அன்றிருந்த ஏட்டுச்சுவடிகளில் எழுதிவைப்பதற்கும் செய்யுள்கள் வசதியாக இருந்தன. இன்றிருப்பதுபோல் நீளமான உரைநடை ஆக்கங்களை எழுதிவைக்க ஒரு கூடை ஓட்டுச்சுவடிகள் தேவைப்பட்டிருக்கும். இதனால் உரைநடைக்கு அன்று வரவேற்பிருக்கவில்லை; அதில் எவரும் நாட்டம் காட்டவில்லை.

19ம் நூற்றாண்டே தமிழ் உரைநடை வளர்ச்சிக்காலம் என்று பலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். மயிலை சீனி வேங்கடசாமியின் கருத்துப்படி (கிறிஸ்தவமும் தமிழும்), முதல் முதல் தமிழில் உரைநடை தோன்றுவதற்கு இத்தாலியைச் சேர்ந்த கத்தோலிக்க யெசுவிஸ்ட் பிரிவின் மிஷனரியான டீ நொபிளியே (1577-1656) காரணம். இவர் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு பணிபுரிந்தவர். இவருக்குப் பிறகு உரைநடையைப் பிரபலப்படுத்தியவர் இன்னொரு கத்தோலிக்க குருவான, வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட கொன்ஸ்டன்டைன் பெஸ்கி (1680-1746). இவரும் இத்தாலியைச் சேர்ந்தவர். இவருக்கு சமகாலத்தவராக தரங்கம்பாடியில் பணிபுரிந்தவர், ஜெர்மானியரான சீர்திருத்த கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த சீகன் பால்கு (1683-1719). தமிழறிவைப் பொறுத்தவரையில் டேனிஷ் மிஷனரியான சீகன் பால்கைவிட கத்தோலிக்கரான வீரமாமுனிவர் அதிகப் புலமை அடைந்தவராக இருந்திருக்கிறார். இருந்தும் தரங்கம்பாடியில் பணிபுரிந்த சீகன் பால்கே புதிய ஏற்பாட்டை முதலில் தமிழாக்கம் செய்தவர். அத்தோடு முதன் முதலில் 1713ல் அச்சகத்தை நிறுவி நூல்களை அச்சிட்டு வெளியிட்டதும் சீகன் பால்கே. சீகன் பால்கின் மொழியாக்கப் பணிகளும், நூல்வெளியீட்டுப் பணியும் கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பாமர மக்கள் விசுவாசிக்கத் துணைபுரிவனவாக இருந்தன. அவருடைய உரைநடை எளிமையானதாக தாம் பணிபுரிந்துவந்த மக்களுக்குப் புரியும்படியாக இருந்தது.

இவர்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்கவிதத்தில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு துணைபுரிந்தவர்கள் தமிழகத்தில் திருநெல்வேலிப் பிரதேசத்தில் பணிபுரிந்த மேலைத்தேய மினஷரிகளும், அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்ப்போதகர்களுமே. 19ம் நூற்றாண்டில், 1830-1900 வரை இப்பகுதியில் கிறிஸ்தவ எழுப்புதல் என்று அழைக்கக்கூடியவிதத்தில் கிறிஸ்தவ திருச்சபைப் பணி அற்புதமாக நிகழ்ந்திருக்கிறது. இந்தளவுக்கு இந்தியாவில் வேறு எங்கும் நிகழ்ந்திருக்கிறது என்று கூறமுடியாது. அதுவும் சாதிக்கட்டமைப்பு பலமாக இருந்த காலத்தில், பஞ்சம் இப்பிரதேசத்தை அதிகமாகப் பாதித்திருந்த காலத்தில் அருமையான கிறிஸ்தவ பணியாளர்கள் தொடர்ச்சியாக ஒருவர்மாறி இன்னொருவர் இக்காலப்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் திருச்சபைப்பணி புரிந்திருக்கிறார்கள். வெளிநாட்டு மிஷனரிகள் முறையாக தமிழைக்கற்று பாண்டித்தியம் அடைந்து இலக்கண நூல்கள் உட்பட அனேக இறையியல் நூல்களையும் படைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது அநேக திருச்சபைகளையும், பாடசாலைகளையும் இப்பகுதிகளில் நிறுவியிருக்கிறார்கள். நிலங்களை விலைக்கு வாங்கிப் பல கிறிஸ்தவ கிராமங்களை அமைத்திருக்கிறார்கள். சாயர்புரம், மெய்ஞானபுரம், நாசரேத்து, இடையான்குளம், ஆசீர்வாதபுரம், நல்லூர், டோனவூர் ஆகிய கிராமங்களை இரேனியஸ் 1825-1833க்கும் இடைப்பட்ட வருடங்களில் நிலங்களை விலைக்கு வாங்கி உருவாக்கியிருந்தார். இவை கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்காக நிறுவப்பட்டவை. இவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்ப் போதகர்களும் இவர்களைப்போலவே தமிழறிவுள்ளவர்களாக சத்திய வாஞ்சையோடு சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். முக்கியமாக இந்தக் கிறிஸ்தவப் பணியாளர்களில் பலர் இங்கிலாந்து சபைப்பிரிவைச் சேர்ந்தவர்களாக, CMS, SPCK மிஷன்கள் மூலமாக வந்தவர்களாக இருந்தபோதும் சீர்திருத்த போதனைகளைப் பின்புலமாகக் கொண்டிருந்தவர்கள். 17ம் நூற்றாண்டின் சீர்திருத்த பியூரிட்டன் போதனைகளின் தாக்கம் இவர்களில் பெரிதும் இருந்திருக்கிறது. மோட்சப் பிரயாணம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதுகூட ஒரு தற்செயல் நிகழ்ச்சியல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு சீர்திருத்த பியூரிட்டன் இறையியல் புதினம். சீர்திருத்த போதனைகள் இக்காலப்பகுதியில் இப்பகுதிகளில் பரவ ஆரம்பித்ததே இந்நூலின் மொழியாக்கத்திற்கும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்கமுடியாது.

இந்த 21ம் நூற்றாண்டில் திருநெல்வேலிப் பகுதியில் 19ம் நூற்றாண்டில் காணப்பட்ட சீர்திருத்த போதனைகளின் தாக்கத்தை எந்தச் சபைப்பிரிவிலும் அடியோடு காணமுடியாது. இன்று அப்பகுதியில் இங்கிலாந்து சபைப்பிரிவின் வழிவந்து சி. எஸ். ஐ என்ற பெயரில் இருக்கும் சபைப்பிரிவு அன்று வாழ்ந்த அந்த அருமைப்பணியாளர்கள் கட்டிய கோவில்களில் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து சடங்காக வருடாந்தர கொண்டாட்டங்களைப் பெயருக்காக மட்டுமே நடத்தி வருகின்றது. அதில் சீர்திருத்த போதனைகளுக்கோ, அன்றிருந்த பணியாளர்களின் பக்திவிருத்தி கொண்ட பரிசுத்தப் பணிகளுக்கோ எந்த இடமும் இல்லாதிருக்கிறது. அது தாராளவாத இறையியலுக்கு அடிமையாகி வெறும் பாரம்பரியச் சபைப்பிரிவாக எந்தவித ஆத்மீக எழுச்சிக்கும் இடமில்லாத ஜீவனற்ற சபைப்பிரிவாக நடமாடி வருகிறது.

திருநெல்வேலி மிஷனரிகளான ஜோன் தோமஸ், இரேனியஸ், எட்வர்ட் சார்ஜன்ட், கால்டுவெல், ஜி. யூ. போப் போன்றவர்களைப் பற்றி இன்று எழுத்தில் காணப்படும் தமிழ் நூல்களில்கூட அவர்களுடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி எழுதப்பட்டிருக்கிறதே தவிர அவர்கள் விசுவாசித்திருந்த சீர்திருத்தப் போதனைகளைப் பற்றியோ, அவற்றின் தாக்கத்தால் எழுச்சியோடிருந்த ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைப் பணிபற்றியோ எந்த வாடையையும் காணமுடியாதிருக்கிறது. அதற்குக் காரணம் அந்த ஆவிக்குரிய எழுச்சிக்காலம் மறந்துபோனதொன்றாகவும், மறைந்துவிட்டதாகவும் இன்று மாறிவிட்டிருப்பதுதான். அதை நினைவுபடுத்தும்விதமாக தமிழில் அச்சில் எதுவும் பிரயோஜனமானவிதத்தில் எழுதப்படவில்லை.

ஏறக்குறைய எழுபது வருடங்களுக்குள் அடங்கிய இந்தத் திருநெல்வேலி ஆத்மீக எழுப்புதல் காலப்பகுதிக்கும், தமிழில் உரைநடையில் கிறிஸ்தவ நூல்கள் எழ ஆரம்பித்ததற்கும், மோட்சப் பயண நூல் மொழியாக்கத்திற்கும் பெருந்தொடர்பு இருந்திருக்கிறது. இக்காலப்பகுதியில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு துணைபுரிந்தவர்களில் ஒருவர் C. T. E. இரேனியஸ் (1790-1838). 1814ல் சென்னைக்கு வந்து பணிபுரிந்து அதன் பிறகு 1820 முதல் திருநெல்வேலியில் பாளயங்கோட்டையில் கிராமங்களையும், சபைகளையும் பாடசாலைகளையும் நிறுவி ஊழியம் செய்திருக்கிறார். ஜெர்மானியரான இரேனியஸே முதல் CMS மிஷனரியாக இந்தியா வந்தவர். ஆரம்பத்தில் சென்னைக்கு வந்து தமிழ் கற்று அதற்குப் பிறகு தரங்கம்பாடிக்கு வந்து அங்கிருந்து தமிழ் கற்று பின்னால் திருநெல்வேலியில் பாளயங்கோட்டைக்குப் பணிபுரியச் சென்றார் இரேனியஸ். இரேனியஸே அக்காலப்பகுதியில் பணிபுரிந்த அனைவரிலும் சிறந்தவராகக் கருதப்படுகிறார். அவரைப்பற்றிக் குறிப்பிடும் ஸ்டீபன் நீல், ‘இந்தியாவின் மாபெரும் மிஷனரிகளில் ஒருவர்’ என்று அவரைப்பற்றிக் கூறியிருக்கிறார். இரேனியஸுக்கு ‘திருநெல்வேலியின் அப்போஸ்தலர்’ என்ற பெயரும் உண்டு. இரேனியஸ் வேதத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அவருடைய உரைநடைத் தமிழ் அதற்கு முன் வேதத்தை மொழியாக்கம் செய்தவர்களுடையதைவிட எளிமையாக இருந்திருக்கிறது. இரேனியஸ் தமிழில் புலமை பெற்றவராக இருந்து அநேக உரைநடை நூல்களையும் எழுதியிருக்கிறார். இரேனியஸ் 48ம் வயதில் 1838ல் மரித்தார். அவரது சரீரம் பாளையங்கோட்டையில் அடைக்கலபுரம் எனுமிடத்தில் புதைக்கப்பட்டது. இன்றும் அவருடைய கல்லறை அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தன்னுடைய பதினைந்து வருட திருநெல்வேலி ஊழியப் பணியில் 371 திருச்சபைகளை இரேனியஸ் நிறுவியிருந்தார். இவருக்குப் பின் குறிப்பிடத்தக்கவர்களாக தமிழில் புலமைபெற்று கிறிஸ்தவ பணியாற்றியவர்கள் ஜி. யு. போப்பும் (1820-1907), ரொபட் கால்டுவெல்லும் 1814-1891). போப்பும், கால்டுவெல்லும் தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் பணிகள் மிகச்சிறப்புமிக்கவை.

கத்தோலிக்க மிஷனரியான டி நொபிளி காலத்தில் இருந்து பார்க்கும்போது, உரைநடை தமிழில் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்திருப்பதைக் கவனிக்க முடிகின்றது. சீகன் பால்கு மொழிபெயர்த்துள்ள புதிய ஏற்பாட்டுத் தமிழெழுத்துக்களை இன்று தமிழர்கள் அடையாளம் காணமாட்டார்கள். தமிழெழுத்துக்களில் படிப்படியாக மாற்றங்கள் உருவாயின. வீரமாமுனிவர் எழுத்துருவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். நிறுத்தக் குறிகள் பயன்பாட்டை உரைநடையில் கொண்டுவந்தவர்கள் போப்பும், கால்டுவெல்லுமே. இரேனியஸ், போப், கால்டுவெல் ஆகியோரின் உரைநடை எழுத்துக்கள் கத்தோலிக்கரான வீரமாமுனிவருடையதைவிட சிறப்பாக, எளிமையாக இருந்தன.

சாமுவேல் பவுல் ஐயரின் இலக்கியப் புனைவெழுத்துநடை

இரேனியஸ், ஜி. யூ. போப், கால்டுவெல் ஆகியோரின் சமகாலத்தவரான சாமுவேல் ஐயர் தமிழில் மிகப் புலமை பெற்றிருந்தவர். அவரின் தமிழ் உரைநடை மிகவும் எளிமையாக, இலக்கியச் சுவையோடு சிறப்பாக இருக்கிறது. கோத்தகிரி என். சாமுவேல் அவர்களிடம் இருந்த 1882ம் வருட முதல் பதிப்பில் இருந்தவாறே, 1968லும் அதற்குப் பின் 2004 வரையுள்ள காலங்களில் வந்திருக்கும், சாமுவேல் பவுல் ஐயரின் மோட்சப் பிரயாணம் பதிப்புகளிலும் மொழிநடை எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. சாமுவேல் ஐயரின் மொழிநடையில் இன்று வழக்கில் இல்லாத சில வடமொழிப் பதங்கள் இருந்தபோதும், அவருடைய புனைவெழுத்து தமிழ் நடை வாசிப்பதற்குக் கடினமானதாக இல்லை; இலகுவானதாகவே இருக்கிறது. புனைவு இலக்கியத்திற்கு ஏற்ற நடையாகவும் இருக்கிறது.

சாமுவேல் பவுல் ஐயரின் தமிழ்நடை ‘விவிலியத்’ தமிழ் நடையைவிடச் சிறப்பாக, எளிய நடையில் இருக்கிறது என்றுதான் சொல்வேன். நான் இங்கு ‘விவிலியத் தமிழ்நடை’ என்று குறிப்பிடுவது வேதத்தின் பழைய திருப்புதலில் காணப்படும் தமிழ் நடையைத்தான். விவிலியம் என்ற வார்த்தையை கத்தோலிக்கர்கள் வேதத்தைக் குறிக்க அதிகம் பயன்படுத்துவார்கள். கிறிஸ்தவர்கள் அல்லாத தமிழறிஞர்கள், நூலாசிரியர்கள் கத்தோலிக்கத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையிலிருக்கும் வேறுபாடுகள் தெரியாததாலும், கிறிஸ்தவ வேதம் பற்றிய உண்மைகளை அறிந்திராததாலும், இந்த ‘விவிலியத் தமிழ்’ நடையை கிறிஸ்தவத்திற்கே உரிய முக்கியத்துவம் பெற்ற நடையாகவும் எண்ணி வருகின்றனர். உண்மையில், அந்த நடையில் எப்போதோ மாற்றங்கள் ஏற்பட்டிருந்திருக்க வேண்டும். அதே பழைய திருப்புதலை வாசித்து வந்திருந்த சாமுவேல் ஐயர், அந்த நடையில் எழுதவில்லை, பேசவும் இல்லை என்பதை உணருவது அவசியம். மோட்சப் பிரயாண மொழிபெயர்ப்பிலும் அவர் தனக்கேயுரிய இலக்கியத் தமிழ் உரைநடையையே பயன்படுத்தியிருக்கிறார்.

இதிலிருந்து 1800களிலும், உரைநடையின் ஆரம்பகாலமாக அது இருந்திருக்கிறபோதும், தமிழ் உரைநடை வளர்ச்சியடைந்து இலகுவாக வாசிக்கக்கூடியதாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. அப்படியிருந்தும் தமிழ்வேதத்தின் பழைய திருப்புதலின் நடை ஏன், சாமுவேல் பவுல் ஐயருடைய மொழிநடையைப்போல இலகுவானதாகக் கட்டமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. தமிழ் வேதத்தில் அடிக்கடி வந்துபோகும் ‘நிற்கக்கடவது, சொல்லக்கடவது’ போன்ற வார்த்தைப் பிரயோகம் ஐயரின் எழுத்தில் ஓரிடத்திலாவது வரவில்லை. ஐயரின் உரைநடைக்கு ஒரு உதாரணத்தை மோட்சப் பிரயாணம் நூல், 40ம் பக்கத்தில் இருந்து தருகிறேன். இது நூலின் ஒரு கதாபாத்திரமான வியாக்கியானி சொன்னது,

“இன்றிரவு நான் அயர்ந்து நித்திரை செய்கையில், அதிர்ந்து கலங்கும்படியான ஒரு சொப்பனங் கண்டேன்; இதோ வானங்கள் கார்மேகங்களால் மூடப்பட்டன, இடிகள் முழங்கின, மின்னல்கள் பிரகாசித்தன, அதைக்கண்டு நான் கலங்கி வியாகூலப்பட்டேன்; பின்னும் நான் என் சொப்பனத்தில் மேகங்கள் வேகமாய் விலகி ஓடினதையும், அவைகளின் மேல் எக்காளச் சத்தம் தொனிப்பதையும் கண்டேன். அந்த மேகத்தின் மேல் ஒருவர் உட்கார்ந்திருக்கவும், அவரைச் சுற்றிலும் ஆயிரம் பதினாயிரமான வானசேனைகள் சூழ்ந்து நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் எல்லோரும் அக்கினிச் சுடரைப்போல் இருந்தார்கள். வானங்களோ எரிகிற அக்கினி மயமாய்ப் பிரகாசிக்கக் கண்டேன்.”

மேலே நாம் பார்த்திருக்கும் பகுதி வாசிக்க இலகுவாக இருப்பதோடு, அதன் இலக்கிய நடையையும், அதன் சுவையையும் கவனிக்கத் தவறக்கூடாது. வார்த்தைகளை ஐயர் சரளமாக அருவியோடுவதுபோல் பயன்படுத்தியிருக்கிறார். அது அவருடைய எழுத்தின் இலக்கியத் தரத்தைக் காட்டுகிறது. 1882ம் பதிப்பிலிருந்து தொடர்ந்து அனைத்துப் பதிப்புகளிலும் வந்திருக்கும் இந்தப் புனைவிலக்கிய நடை வாசிப்பதற்கு நெருடலுள்ளதாக இல்லை என்பதைக் கவனியுங்கள். ஆங்காங்கு வந்துபோகும் சில வார்த்தைகள் இன்று பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும் அவை புரிந்துகொள்ளக் கஷ்டமானவையல்ல. ‘விவிலியத் தமிழைக்’ கொண்டிருக்கும் தமிழ் வேதத்தை வாசித்து வருகிறவர்களுக்கு இந்த மொழியாக்கமே பிடித்திருக்கிறது என்று ஒரு போதகர் என்னிடம் சொன்னார். தன் மொழியாக்கத்தில் சாமுவேல் பவுல் ஐயர் நிறுத்தற்குறிகளைத் தகுந்தவிதத்தில் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய எழுத்துச் சிறப்பை இதில் காணமுடிகிறது.

தமிழில் சில எழுத்துருக்கள் (லை, றா, னா போன்றவை) 1978ல் மாற்றப்பட்டன. கணினித் தட்டச்சுக்கு வசதியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த மாற்றங்களை என் கையில் இருக்கும் 2004ம் ஆண்டுப் பதிப்பில் காணமுடியவில்லை. அதற்குக் காரணம் 1968ல் டைப் செய்யப்பட்ட அதே பிரதியை தொடர்ந்தும் 2004ம் ஆண்டுப்பதிப்புவரை, எழுத்துருவில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் அச்சிட்டிருக்கிறது. இது அநாவசியமான, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தவறு. கணினித் தொழில் நுணுக்கங்கள் ராக்கெட் வேகத்தில் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் வெறும் 200 பக்கங்களை, மீண்டும் எழுத்துக்களைத் திருத்தித் டைப் செய்வதற்கு முடியாமலிருந்திருப்பது ஆச்சரியமே! அதற்கு சோம்பல் காரணமா? அல்லது அக்கறையின்மை காரணமா? என்று தெரியவில்லை. இது கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் கவனக்குறைவு.

இந்த மோட்சப் பயணப் பதிப்பில் சாமுவேல் பவுல் ஐயர், ஜோன் பனியனின் நூலில் இருந்ததைப்போலவே, ஒவ்வொரு பக்கத்திலும் பனியன் பயன்படுத்தியிருந்த வேதசனங்கள் அனைத்தையும் அடிக்குறிப்பாகத் தந்திருக்கிறார். இது வாசகர்கள் வாசிக்கும் பகுதியை அதற்குரிய வேதவசனங்களோடு தொடர்புபடுத்தி வாசிக்கத் துணைசெய்கிறது. அத்தோடு அரும்பதங்களுக்கு பனியன் அளித்திருந்த விளக்கங்களையும் தமிழில் ஐயர் அடிக்குறிப்பாகத் தந்திருக்கிறார். முக்கியமான புனைவின் கதாபத்திரங்கள் யார் என்றும், அவர்கள் யாரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அடிக்குறிப்பில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இது பாராட்ட வேண்டிய விஷயம். 17ம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் இருந்த ஜோன் பனியனின் நூலைக் கருத்தோடு கற்று, அதோடு தன்னைப் பரிச்சயப்படுத்திக்கொண்டதோடு மூலநூலை அதிலிருந்தவாறே தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் சாமுவேல் பவுல் ஐயர். எந்தளவுக்கு அர்ப்பணிப்போடும், ஈடுபாட்டோடும் அதை ஐயர் செய்திருக்கிறார் என்பதை அவருடைய மொழியாக்கம் சுட்டுகிறது.

சாமுவேல் ஐயரின் கவித்துவம்

நூல் முழுதும் வந்துபோகும் அத்தனைப் பாடல்களையும், பாடல் வரிகளையும் கவனத்தோடு இசைக்கு இணைந்து வரும்விதத்தில் கவித்துவ நடையில் ஐயர் மொழியாக்கம் செய்திருக்கிறார். மொழியாக்கம் செய்கிற எவரும் நூலோடும் நூலாசிரியரோடும் அணுக்கமாகாவிட்டால், நூலை உள்வாங்கி மொழியாக்கம் செய்யமுடியாது என்று ஒரு ஆக்கத்தில் எழுதியிருந்தேன். அதை நினைவுபடுத்துகிறது ஐயரின் மொழியாக்கம். பனியனின் ஆக்கத்தை உள்வாங்கி மொழியாக்கம் செய்திருக்கிறார் ஐயர். மொழியாக்கம் செய்கிறவர், அதைக் கருத்தோடு செய்கிறபோது தானும் மூல ஆசிரியரோடு இணையாசிரியராகிவிடுகிறார். மொழியாக்கம் செய்கிறவரின் தனித்துவமும், எழுத்துநடைச் சிறப்பும் மொழியாக்கத்தில் தெளிவாகப் புலப்படும். அதை ஐயரின் மொழியாக்கத்தில் காண்கிறோம். சாமுவேல் பவுல் ஐயர் தமிழ்ப் பண்டிதரும், புலவருமல்லவா!

ஐயரின் கவித்துவத்தை இந்தப் பாடல்களில் கவனியுங்கள். 44ம் பக்கத்தில் கிறிஸ்தியான் ஆனந்தப் பரவசம் கொண்டு பாடிக்கொண்டே போகிறான்,

பாவப்பாரஞ் சுமந்தேன்
இதுவரையும் வந்தேன்,
இங்கே வருமட்டுமே
பாரம் நீங்கவில்லையே.
இங்கே வந்த நிமிஷம்
என் பாவபாரம் நாசம்,
இது என்ன இடமோ!
பாரம் நீங்கிப் போயிற்றே.
இங்கென் கட்டு விடவும்
என் வாழ்வு துவக்கிற்றே
இது என்ன இடமோ!
சிலுவையே நீ வாழ்க!
சமாதியே நீ வாழ்க!
சிலுவையில் மாண்ட
ஏசுவே வாழ்க வாழ்க

இது பிரயாணி கஷ்டகிரி மேல் ஏறியபோது பாடியது (49ம் பக்கம்),

இம்மலை மா உயரம்; ஏறுவேன் ஏறுவேன்,
இச்சிகரம் கஷ்டம்; ஆனால் ஏறுவேன், ஏறுவேன்.
இப்பரும்பே ஜீவவழி; ஏறுவேன், ஏறுவேன்.
மனமே மயங்காதே; ஏறுவேன், ஏறுவேன்.

கஷ்டம் ஆனால் நல்வழியே; ஏறுவேன், ஏறுவேன்.
ஏற்றம் ஆனால் நேர்வழியே; ஏறுவேன், ஏறுவேன்.
லேசுவழி நாசம்; இதில் ஏறுவேன், ஏறுவேன்.
மனமே நீ மூச்சடக்கு; ஏறுவேன், ஏறுவேன்.

இன்னொரு கவிதையையும் கவனியுங்கள்,

                        (ஆனந்தக் களிப்பு)

பக்தரைப் பலதொல்லை சுற்றும் – அவையெல்லாம்
மாமிச சம்பந்த மார்க்கமே யாக்கும்
அலைமேலே அலைபோலே என்றும் – ஓயாமல்
தொடருமே, பிடிக்குமே, தள்ளுமே முற்றும் – பக்தரை

மோட்சப் பிரயாணிகளே நின்று – அவைகள்
மோசமோ, நாசமோ, சேமமோ என்று
விழிப்போடு கவனித்துக்கொண்டு – புருஷராய்
நடவுங்கள், நடவுங்கள் கிரீடமே உண்டு – பக்தரை

இந்தக் கவிதைகளைப்பற்றித் தன் முகவுரையில் ஐயர் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள், ‘இப்புத்தகத்தின் ஊடே வருகிற கவிப்போங்குகள் பெரும்பாலும் தமிழ் இராகங்களில் இயற்றப்பட்டிருக்கின்றன. அக்கவிகள் இலக்கண விதிப்படி இருப்பதைப் பற்றி அவ்வளவாய்க் கவனியாமல், மூலத்தில் இருக்கும் கருத்துக்களுக்கு எவ்வளவேனும் பேதப்படலாகாதென்றே கருதிக்கொண்டேன். ஆங்காங்கே வரும் பாடல்களை அதினதின் இராகப்படியே பாடிக்கொண்டு வாசிக்கப் பிரயாசைப்படுவோர், வெறும் வாசிப்பாய் ஏடுகளைத் திருப்பிக்கொண்டு போகிறவர்களைவிட அதிக உற்சாகம் அடைவார்கள் என்பதற்கு நம்பிக்கை உண்டு.’

கிறிஸ்தவ இறையியல் போதனைகள்

மோட்சப் பயணம், கிறிஸ்தவ புதின இலக்கியம் மட்டுமல்லாது வேத சீர்திருத்த இறையியல் போதனைகளின் அடிப்படையிலான புதினம் என்பதைக் குறிப்பாக நினைவுகூற வேண்டும். அனைத்துக் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் வாசித்து மகிழ வேண்டிய நூலாக இது இருந்தபோதும், சீர்திருத்தவாத பியூரிட்டன் பாப்திஸ்து பெரியவர் புனைந்த நூலிது என்பதை மறக்கக்கூடாது. ஜோன் பனியன், மெய்யான சுவிசேஷத்தையும், கிருபையின் அடிப்படையிலான இறையியல் சத்தியங்களான, முன்குறித்தல், தெரிந்துகொள்ளுதல், அழைப்பு, மறுபிறப்பு, கிறிஸ்துவின் பாவநிவாரணபலி, நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், மகிமையடைதல், பாவம், போலி மனந்திரும்புதல், பின்வாங்குதல், கிறிஸ்துவில் நிச்சயம் போன்றவற்றை இந்தப் புனைஇலக்கியத்தில் அருமையாக விளக்கியிருக்கிறார். பனியனின் நூலை வெறும் நாவலாகக் கருதக்கூடாது. அதில் கதாபாத்திரங்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவ நம்பிக்கை, கிறிஸ்தவ வாழ்க்கை, கர்த்தரின் கட்டளைகள், கீழ்ப்படிவு போன்ற ஆத்மீக விளக்கங்களை மேலோட்டமாக மட்டும் படித்துவிட்டுப் போய்விடக்கூடாது. அதில் வெளிப்படையாகவே விளக்கப்பட்டிருக்கும் ஆழமான இறையியல் போதனைகளை அனுபவித்துக் கற்று ஆனந்திக்க வேண்டும். பனியனின் மோட்சப் பயணம் ஒரு சீர்திருத்த இறையியல் புனைவு என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு சீர்திருத்த பியூரிட்டன் பெரியவரிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

பனியனின் நூலை மொழியாக்கம் செய்கிறவர் சீர்திருத்த கிறிஸ்தவ போதனைகளுக்கு அந்நியராக இருந்திருந்தால் அந்த மொழியாக்கத்தில் ஒருபோதும் சத்திய சுத்தம் இருந்திருக்காது. எத்தனையோ புதிய வேதமொழிபெயர்ப்புகளில் கூட சத்தியத்தை மாற்றி மொழியாக்கம் செய்து வருகிறவர்கள் இருக்கிறபோது, இதில் அதைச் செய்யாமலா விட்டுவிடப்போகிறார்கள்? ஆனால், சாமுவேல் ஐயர் எட்வர்ட் சார்ஜன்ட்டிடம் இறையியல் கற்றவர். சீர்திருத்த இறையியலில் அவருக்கு நன்கு பரிச்சயம் இருந்திருக்கிறது; அதுவே அவருடைய விசுவாசமாகவும் இருந்திருக்கிறது. பனியனின் நூலில் இறையியல் விளக்கங்கள் காணப்படுகிற பகுதிகளையெல்லாம் மூலத்தில் இருந்தவாறே அனுபவித்து தமிழில் ஐயர் மொழியாக்கம் செய்திருக்கிறார். நூலில் எந்த இறையியல் தவறும் வராமல் கவனத்தோடு மொழியாக்கம் செய்திருக்கிறார். அது சாமுவேல் ஐயரின் மொழியாக்கத்தின் சிறப்பு.

தொடர்ந்து அச்சில் இருக்கவேண்டிய நூல்

சாமுவேல் பவுல் ஐயரின் 1882ம் மொழியாக்கம் என்னைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு என்றும் அச்சிலிருக்க வேண்டிய கிறிஸ்தவ புனைவு இலக்கியம். ஆங்காங்கு ஒருசில இடங்களில் அதில் காலத்துக்கேற்ற அவசியமான சிறு மாற்றங்களைச் செய்வதில் தவறில்லை; தேர்ச்சிபெற்றவர்களால் அது செய்யப்பட வேண்டும். ஏறக்குறைய 140 வருடங்களுக்கு முன் வெளிவந்திருக்கும் மொழியாக்கமாக இருந்தபோதும் ஐயரின் மொழியாக்கத்தின் நடை அற்புதமானதாகவும், இருதயத்தைப் பாதிப்பதாகவும், உணர்ச்சிபூர்வமானதாகவும், ஜீவனுள்ளதாகவும் இருக்கிறது. ஒரு படைப்பாளியான நான் எந்த நூலிலும் அதன் உயிரோட்டத்தை எதிர்பார்க்கிறவன். அவற்றில் நூலாசிரியரின் இதயத்தைக் கண்டுகொள்ள நான் எப்போதும் முயற்சி செய்வேன். முக்கியமாகத் தமிழ் நூல்களிலும், தமிழ் மொழியாக்கங்களிலும் வெறும் தமிழை மட்டும் நான் எதிர்பார்ப்பதில்லை; எழுத்திலும், மொழியாக்கத்திலும் ஜீவன் இருக்கிறதா என்பதை என் இதயம் தேடும். அத்தகைய ஜீவனை எழுத்தில் கொண்டுவர எழுதுகிறவர் தமிழ்ப்புலமையையும், இலக்கியப் புலமையையும், எழுத்தாற்றலையும், செய்யும் பணியில் ஈடுபாட்டையும் கொண்டிருப்பது அவசியம். அவை ஐயரின் மொழியாக்கத்தில் இருக்கின்றன என்று நான் ஆணித்தரமாக அடித்துக் கூறுவேன்.

கிறிஸ்தவ இலக்கிய சங்கம் (CLS) இதைத் தொடர்ந்து அச்சிடாமலிருந்திருப்பதற்குக் காரணம் புரியவில்லை. இப்போது நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு அதன் முக்கியத்துவமும், மகிமையும் தெரியாமல் போய்விட்டதா? வாங்குகிறவர்கள் குறைவாக இருப்பார்கள் என்ற காரணத்தைத்தான் பொதுவாக எல்லாப் பதிப்பாளர்களும் நம்முன் வைப்பார்கள் என்று நம்புகிறேன். புத்தகம் விற்காவிட்டால் அவர்களுக்குப் பணமுடக்கம் ஏற்படுமே? கோத்தகிரியில் வாழ்ந்த என். சாமுவேல் தனிநபராக இதைச் செய்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், இந்நூல் ஒரு கிறிஸ்தவ பதிப்பக நிறுவனத்தால் பல்லாயிரக்கணக்கானவர்களை அடையும்வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்பட வேண்டியது. இதை நாம் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தார் முன்வைக்கவேண்டியது அவசியம்.

ஆங்கிலத்தில் ஜோன் பனியன் எழுதிய 17ம் நூற்றாண்டு இலக்கியத்தை திருச்சபைகள் மேலை நாட்டில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. பதிப்பகங்கள் அதைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அங்கே மோட்ச பயணம் இல்லாத கிறிஸ்தவ புத்தகக் கடைகள் இல்லாமலிருக்காது. விதவிதமான வடிவங்களில் வாங்குவோரின் விருப்பத்திற்கேற்ற விதத்தில் பெரியதும், சிறியதுமான சைஸ்களில் பனியனின் நூல் கடைகளை அலங்காரம் செய்துவருகின்றன. சீர்திருத்த திருச்சபைகளிலும் ஏனைய சபைகளிலும் நூலகங்களில் அது வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் அதை வைத்திருந்து வாசிப்பதோடு குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்பார்கள். நான் வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்கின்ற காலங்களில் விமானதள புத்தகக்கடைகளில்கூட மோட்சப் பயண ஆங்கில நூல் இருக்கக் கண்டிருக்கிறேன். மேலைத் தேய கிறிஸ்தவர்களும், சபைகளும் அதற்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

அருமையான கிறிஸ்தவ இலக்கியங்கள் அருகிக் காணப்படும் நம்மொழியில், கடவுள் கருணையோடு அருளித் தந்திருக்கும் சாமுவேல் பவுல் ஐயரின் இந்த இறவா கிறிஸ்தவ இலக்கியத்தைத் தொடர்ந்து அச்சிட்டு வெளியிடாமலும், கிறிஸ்தவர்கள் மத்தியில் அதற்கான புரிதலையும், உணர்வையும் ஏற்படுத்தாமலும் நம்மினத்துக் கிறிஸ்தவம் தொடர்ந்திருந்து வருகிறது. இந்நூலின் வரலாற்றுச் சிறப்பிற்காக மட்டுமல்ல, இலக்கியத் தரத்திற்காகவும், புதின எழுத்துநடைக்காகவும், மொழியாக்கத் திறனுக்காகவும், முக்கியமாகத் தேர்ந்த கிறிஸ்தவ இறையியல் போதனைகளுக்காகவும் இது பாதுகாக்கப்படவும், பயன்படுத்தப்படவும் வேண்டிய நூல்.

கிறிஸ்தவ இறையியல் தரம் மிகவும் அருகிக் காணப்படும் நம்மினத்துச் சபைகளில் மோட்சப் பயணம் நூல் பயன்படுத்தப்படாமல் இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. சபைகளுக்கும், போதகர்களுக்கும் அதன் அருமை, பெருமை தெரியாமலிருக்கின்றது. எத்தனைப் பெரிய இறையியல் பொக்கிஷங்கள் நூலுக்குள் இருக்கிறதென்பது அனேகருக்கு இன்று தெரியாமலிருக்கிறது. அதுவே நூலின் பயன்பாடு நம்மத்தியில் இல்லாமலிருப்பதற்கு முக்கிய காரணம். இரண்டாவது காரணம், வாசிப்பு மிகவும் கீழ் நிலையில் இருப்பதுதான். ஜோன் பனியனின் நூல் புதினமாக இருந்தபோதும், அதை வாசித்துப் புரிந்துகொள்ளுவதற்கு நிதானத்தோடு கூடிய பொறுமையான வாசிப்பு அவசியம். மேலெழுந்தவாரியான வாசிப்பு உதவாது; கருத்தோடு சிந்தித்து வாசிக்க வேண்டிய நூலிது. அத்தகைய வாசிப்புப் பண்பாடு இன்று பெரும்பாலானோரிடத்தில் இல்லாமலிருக்கிறது. நம்மினத்துப் போதகர்கள் மத்தியில்கூட இந்நூலை வாசித்துத் தேர்ந்தவர்கள் குறைவு. என் பிரசங்கங்களில் நான் பல தடவைகள் பனியனின் நூலில் இருந்து உதாரணங்களைக் கொடுத்திருக்கிறேன். அந்தளவுக்கு பிரசங்கத்திற்குத் துணைபோகும் அம்சங்களை மோட்சப் பயணம் கொண்டிருக்கிறது.

கோஹினூர் வைரத்தின் அருமை தெரியாத ஒருவனுக்கு அது வெறும் கல்லாகத்தான் தெரியும். தரமானதொரு கிறிஸ்தவ இலக்கியம் கைக்கெட்டிய தூரத்தில், சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கத்தில் நம் மொழியில் இருந்தும், அதன் அருமை தெரியாமலும், பயன்படுத்திக்கொள்ளாமலும் தமிழ் கிறிஸ்தவம் இருந்து வருகிறதென்றால் அதற்குக் காரணம், நம் கற்பனை உலகில் வலம்வருகிறவிதத்தில் கிறிஸ்தவம் நம்மினத்தில் எழுச்சியோடு இல்லாமலிருப்பதுதான். வெட்டித்தனமாக பாட்டுப்பாடியும், ஜெபம் என்ற பெயரில் உணர்ச்சி புரண்டோடக் கூச்சலிட்டும், வாந்தியெடுக்க வைக்கும் தனிநபர் துதிபாடல் சாட்சியங்களைக் கொடுத்தும், தீர்க்கதரிசனம் என்ற பெயரில் உளரிக்கொட்டியும் வரும் நம்மினத்து பிரசங்க மேடைகளில் என்று மோட்சப் பயணம் அடிக்கடி பிரசங்கங்களில் எடுத்துச்சொல்லப்பட்டு, பிரசங்கிகளின் இருதயத்திலும், நாவிலும் அன்றாடம் வலம் வந்து, சபையாரின் குடும்ப ஆராதனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறதோ, அன்று வாருங்கள் என்னிடம் பேச, நம்மினத்து கிறிஸ்தவ எழுப்புதலைப் பற்றி!

2 thoughts on “சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கம் – மோட்சப் பிரயாணம்

 1. Dear bro
  Please check http://www.devaekalam.com for the tamil Pilgrims progress both the
  parts

  On Tue, 13 Jul 2021, 17:35 திருமறைத்தீபம் (Bible Lamp), wrote:

  > ஆர். பாலா posted: ” 18ம், 19ம் நூற்றாண்டுகளில் தமிழில் மோட்சப் பயண
  > மொழியாக்கம் 18ம் நூற்றாண்டிலேயே, நாம் இன்று அறிந்திருக்கின்றவிதத்தில்
  > உரைநடை எழுத்து தமிழுக்கு அறிமுகமானது. அதன் அறிமுகத்துக்கு கிறிஸ்தவ
  > மிஷனரிகளுக்கும், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்றழைக்க”
  >

  Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s