பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்கான சாட்சியங்கள்

பகுதி 2 – ரால்ப் வென்னிங்

5. அநேக அவிசுவாசிகளும் பாவச் செயல்களுக்காக வெட்கப்படுகிறார்கள்.

மனிதர்களுடைய பாவகரமான வாழ்க்கை முறை, அவர்களுடைய மனிதத் தன்மையைத் தரமிழக்கச் செய்கிறது என்று பழங்கால கிரேக்க தத்துவ ஞானி ஒருவர் சொல்லியிருக்கிறார். இத்தகைய வாழ்க்கைமுறை வெட்ககரமானது என்பதையும் அவரே ஒப்புக்கொள்ளுகிறார். கேடான முறையில் வாழுகிற எந்தவொரு மனிதனும் இழிவானவன் என்று அவிசுவாசியான மனிதர்களில் ஒருவரே சொல்லியிருக்கிறார்.

பாவியான மனிதன், பாவகரமான செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பேகூட, தன்னுடைய பாவச் செயல்களைப் பற்றி வெட்கப்படுகிறான். இது எப்படித் தெரியவருகிறதென்றால்,

1. பாவகரமான செயல்களைச் செய்துவிட்டபின், அவர்களுடைய மனச்சாட்சி அவர்களைக் குற்றப்படுத்துகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இருப்பினும், பாவச்செயல்களை நிறுத்துவதற்கான உறுதிகொண்டிராமல், அதைச் செய்வதற்கே துடிக்கிறார்கள். பாவத்தின் தொடர் விளைவுகளைக் கருத்துடன் ஆராய்ந்து, அதை நிறுத்துவதற்கான நடவடிக்கையாக அவர்கள் செய்யவேண்டியதைச் செய்வதில்லை.

2. பாவகரமான செயல்களில் ஈடுபடுவது மேன்மையாகவும் மதிப்புள்ளதாகவும் இருந்தால், அதனுடைய நற்பயனையும், அதனால் அவர்களுக்கு உண்டாகும் நன்மைகளையும் ஏன் சத்தமாகச் சொல்லக்கூடாது? அவர்கள் அப்படிச் செய்வதில்லை. ஏனென்றால், அது அவர்களுக்கு வெட்கத்தையே ஏற்படுத்தும். தங்களுடைய பாவகரமான செயல்களுக்கு நல்லதாகத் தோன்றும் வேறு பெயர்களைத் தருவதும் வீணானதே. உதாரணமாக, மது அருந்துவதை, நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கும் நேரம் என்றோ, ஒழுங்கற்றதாக இருந்தாலும் அது மனிதர்களுடைய இயல்புதான் என்றோ சொல்லுவது வீணானது.

3. தங்களுடைய பாவச் செயலினால் உண்டான வெட்கத்தை மறைப்பதற்கு, அவற்றை இருட்டில் செய்கிறார்கள் (யோவான் 3:19-20). மறைவில் செய்யப்படுகிற அவர்களுடைய பாவங்கள் யாருக்கும் தெரியாது என்று நினைப்பது அவர்களுடைய முட்டாள்தனமே (எபேசியர் 5:11-12). ஏனென்றால், கடவுளுக்கு இருள் ஒருபோதும் தடையல்ல. அவர்கள் தங்களுடைய பாவச் செயல்களை மறைப்பதற்கு எடுக்கின்ற முயற்சிகளிலிருந்தே அது எந்தளவுக்கு வெட்கரமானது என்பதை அவர்களே வெளிப்படுத்துகிறார்கள்.

4. பாவச் செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு அதனால் உண்டாகிற இன்பம் நிலைப்பதில்லை. அவர்கள் பாவச் செயல்களில் ஈடுபடுகிறபோதோ அல்லது அதன்பிறகோ, அதனால் உண்டாகிற அவமானமும் குற்றவுணர்வும் அவர்களுடைய பாவ ஆசைகளினால் உண்டாகிற இன்பங்களைக் காட்டிலும் அதிகமாயிருக்கும். “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்” (நீதிமொழிகள் 14:13). பாவகரமான ஆசைகள் பெரியளவில் இருந்தால், அதனால் ஏற்படும் இன்பம் குறைவானதே. (2 சாமுவேல் 13:10-17).

5. பாவச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள், தங்களுடைய பாவச் செயல்களைக் குறித்து வெட்கப்படுகிறார்கள் என்பதை, அவர்கள் தங்களுடைய பாவச் செயல்களை தேவபக்தியின் வேஷத்திற்குள் மறைக்கப் பார்ப்பதன் மூலம் தெரிவிக்கிறார்கள். ஏரோது இராஜா, இயேசு பிறந்தபோது, அவரை வழிபட விரும்புவதாகத் தெரிவித்தான். ஆனால் உண்மையில் அவன் அவரைக் கொல்லவே திட்டமிட்டிருந்தான் (மத்தேயு 2:8, 16).

பாவியான மனிதன், பாவகரமான செயல்களில் ஈடுபட்ட பிறகு, தன்னுடைய பாவச் செயல்களை நினைத்து வெட்கப்படுகிறான். இது எப்படித் தெரியவருகிறதென்றால்,

1. அவர்கள் பாவச் செயல்களைச் செய்தபோது அதைக் குறித்து வெட்கப்படுகிறதோடு, அது, தான் செய்த பாவச் செயல் என்பதை ஒப்புகொள்ள மறுக்கிறார்கள். மாறாக, அவர்கள் செய்த செயலுக்கு சாக்குபோக்குச் சொல்லத் தீவிரம் காட்டுகிறார்கள். அவர்கள் நன்மையான காரியங்களைச் செய்கிறபோது, சாக்குப்போக்குச் சொல்ல வேண்டிய அவசியமேற்படுவதில்லை. ஆனால் தீமையான காரியங்களைச் செய்கிறபோது, அவர்கள் செய்ததைப் பற்றி அவர்களே அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் சொல்லுகிற சாக்குபோக்கே காட்டுகிறது. அவர்களுடைய பாவங்களினால் உண்டாகிற அவமானத்தை மூடுவதற்கும் மறைப்பதற்குமான மற்றொரு வழியாக மேலும் பாவச் செயல்களைச் செய்கிறார்கள்.

2. தாங்கள் செய்த அதே கேடான செயல்களை மற்றவர்கள் செய்வதைக் காண்கிறபோது, அதைக் கடுமையாக விமர்சிப்பதன் மூலமாக தாங்கள் செய்ததை மறைக்கப் பார்க்கிறார்கள். பழைய ஏற்பாட்டில், யூதா முறையற்ற பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தும், அவருடைய மருமகளின் ஒழுங்கற்ற செயலைக் கண்டித்திருக்கிறார் (ஆதியாகமம் 38). மற்றவர்களிலுள்ள பாவங்களைப் பார்ப்பது மிகவும் எளிது, ஆனால் நாமும் பாவிகள்தான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

3. மனிதர்கள் பாவம் செய்து அதை உணருகிறபோது, அதனால் உண்டாகிற குற்றவுணர்வின் அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சியாக மதச் சடங்குகளை மேற்கொள்ளுகிறார்கள். அதாவது, இயேசு அறையப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட சிலுவை குறியை முத்தமிடுவது, ஜெபமாலை கொண்டு ஜெபிப்பது, பாவமன்னிப்பு அறிக்கை செய்வது, வழிபாட்டு சடங்குகளில் ஈடுபடுவது போன்றவற்றைச் செய்கிறார்கள். இதையெல்லாம் செய்வதன் மூலமாக, அவர்களுடைய செயல் எந்தளவுக்கு வெட்ககரமானது என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

4. கேடான மனிதர்களும்கூட மரணத்திற்குப் பிறகு பரலோகத்திற்குப் போகவே விரும்புகிறார்கள். அவர்கள் நரகத்திற்குப் போக ஆசைப்படுவதில்லை. கேடான வாழ்க்கைக்கான தவிர்க்க முடியாத கூலியாக, அதாவது கடவுளிடமிருந்தும் அவருடைய பரலோகத்திலிருந்தும் நித்தியமாகப் பிரிக்கப்பட்ட நிலைக்குப் போக, அவர்கள் அந்தளவுக்கு மனமற்றவர்களாக இருந்திருந்தால், அவர்களுடைய செயல்கள் நல்லவைகளாக இருந்திருக்காதா? “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23).

தங்களுடைய பாவச் செயலினாலும், அதனால் வருகிற தொடர்விளைவுகளினாலும், அநேகருடைய மனச்சாட்சி கலக்கமடைகிறது என்பது உண்மைதான். ஆனால் தங்களுடைய பாவச் செயல்களைப் பற்றிச் சந்தோஷமாக பெருமைபாராட்டுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அவமானத்தையும், பயத்தையும், குற்றவுணர்வையும் தள்ளிவிடுகிறார்கள். தங்களுடைய கேடான செயலைப் போற்றுகிறார்கள். இப்படியானவர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?

தங்களுடைய கேடான செயலைக் குறித்து வெட்கப்படாதவர்களைப் பற்றி ரோமர் முதலாவது அதிகாரத்தில் மூன்று முறை “தேவன் அவர்களை அதற்கென்று ஒப்புக்கொடுத்திருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது (ரோமர் 1:24, 26, 28). இன்னொருவிதமாக சொல்லுவதென்றால், அவர்கள் தங்களுடைய கேடான செயல்களின் ஆழத்தில் மேலும் முழுகி, பிசாசைப் போல் அவர்கள் அவைகளினால் முழுவதுமாக ஆட்கொள்ளப்படும்படியாக தேவன் அவர்களை விட்டுவிட்டார். பிசாசினுடைய ஆளுகையின்கீழ் முழுவதுமாக இருக்கிற ஒருவன், பிசாசுக்கு விதிக்கப்பட்டிருக்கிற தண்டனையின்கீழும் இருக்கிறான். அவர்கள் தங்களுடைய பாவங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுவது தொடராது.

கண்பார்வையற்ற மனிதர்களைப் பார்த்து நிறங்களைக் கண்டறிந்து சொல்லுங்கள் என்று எப்போதாவது சொல்லுவோமா? உயிரோடு இருக்கிறவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க செத்துபோன பிணத்திடம் கேட்போமா? உறைந்த பனித்துளியைக் கருமை நிறம் கொண்டது என்றும், தேனைக் கசப்பானது என்றும் சொல்லுகிற அளவுக்கு உணர்வற்றவர்களாக இருக்கிற மனிதர்களை நாம் நம்புவோமா? அப்படியானால், கேடான அவர்களுடைய அபிப்பிரயாங்களை நாம் கவனிக்க வேண்டிய அவசியமென்ன?

சில நேரங்களில், கடின இருதயம் கொண்ட பாவிகளும், தங்களுடைய செயலினால் வருகிற அவமானங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக,

மரணத்தை நெருங்குகிறபோது அல்லது குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்படுகிறபோது, அவர்களுடைய எண்ணங்கள் மாறலாம். நேபுகாத்நேச்சார் தன்னுடைய பலத்தின் உச்சத்தில் இருந்தபோது, தேவனுக்கே எதிர்த்து நின்றான். ஆனால், அவனைத் தாழ்த்துகிறவிதமான சூழல் ஏற்பட்டபோது, தன்னுடைய கேட்டை உணர்ந்து, தேவனை வழிபட்டான் (தானியேல் 4:33-37).

கர்த்தருடைய இறுதி நியாயத்தீர்ப்பின் நாள் துவங்குகிறபோது, எல்லாரும் அவருக்கு முன்பாக வந்து நின்று, அவருடைய அதிகாரத்தை ஏற்பார்கள். அப்போது, கேடானவர்கள் தங்களுடைய செயலை நியாயப்படுத்த முடியாது. வேறு எவரும் அவர்களுக்கு உதவவும் முடியாது. அவர்கள் மௌனமாக நிற்கத்தான் முடியும்.

அவர்கள் கடவுளிடமிருந்தும் எல்லா நன்மையிலிருந்தும் பிரிக்கப்பட்டு, நரகத்தில் அவர்களுடைய நித்திய நிலையை அனுபவிக்கத் துவங்குகிறபோது, தங்களுடைய பாவச் செயல்களைப் பற்றிப் பெருமைபாராட்டியவர்கள், பாவத்தின் கோர நிலையிலிருந்து பெருங்குரலெடுத்து அழுவார்கள்.

ஆகவே, கேடான மனிதர்களும் பாவத்தின் கோரத் தன்மையை வெளிப்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த உண்மையை விவரிக்கிற மற்றொரு சாட்சியை உங்களுக்குக் காட்டுகிறேன்.

6. எல்லாப் படைப்புகளும் பாவத்தின் தீங்கை விவரிக்கிற சாட்சியங்களாக இருக்கின்றன.

1. படைப்புகள் அனைத்தும், கடவுளுடைய கரத்திலிருந்து தோன்றியபோது இருந்ததைப்போல் இப்போது இருக்கவில்லை. படைப்பில் கடவுள் படைத்த ஒவ்வொன்றும் பரிபூரணமானதாக இருந்தன. கடவுள் தாம் படைத்தவைகளை “மிகவும் நல்லது” என்று சொன்னார். ஆனால் முதல் மனிதனுடைய கீழ்ப்படியாமையின் காரணமாக, உலகத்தில் பிரவேசித்த பாவத்தின் வல்லமையினால், சிருஷ்டிகள் தற்போது எந்தளவுக்கு மாறியிருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம். பூமி சாபத்திற்குள்ளாகியிருக்கிறது (ஆதியாகமம் 3:17-19); கடவுளுடைய பார்வையில் வானங்களும் சுத்தமானவைகள் அல்ல (யோபு 15:15); மனிதத் தன்மையில் சிறப்பானவை என்று சொல்லக்கூடியவைகளும் மாயையே (சங்கீதம் 39:5); படைப்புகள் அனைத்தும் புலம்பிக் கொண்டிருக்கின்றன (ரோமர் 8:21-22).

2. கடவுளுக்கு நேராக நாம் செய்ய வேண்டிய கடமைகளை, கடவுளால் படைக்கப்பட்ட மிருகங்கள் நமக்குப் போதிக்கின்றன. அவை அனைத்தும் கடவுளுடைய கட்டுப்பாட்டுக்கு அமைந்து நடக்கின்றன. எதற்காக அவைகள் படைக்கப்பட்டனவோ அவற்றை அவைகள் தொடர்ந்து செய்துவருகின்றன. விழுந்துபோன தூதர்களும், பாவமுள்ள மனிதர்களுந்தான், அவர்கள் செய்யும்படியாக கடவுள் குறித்திருக்கிறவைகளைச் செய்யமறுக்கிறார்கள். இதன் மூலமாக, மிருகங்கள் நமக்கு கீழ்வரும் காரியங்களைப் போதிக்கின்றன.

(அ) மிருகங்கள் கடவுளையே சார்ந்திருப்பதுபோல், நாமும் அவரையே சார்ந்திருக்க வேண்டும் என்பதைப் போதிக்கின்றன. இயேசு சொன்னார்,

“என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகக் கவலைப்படாதிருங்கள். . . . ஆகாயத்து பறவைகளைக் கவனித்துப் பாருங்கள். உங்கள் பரமபிதா அவைகளையும் பிழைப்பூட்டுகிறார். . . . காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். . . . இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:25-34).

(ஆ) கடவுளை நம்பி, அவரை நோக்கி ஜெபிக்க வேண்டியதை அவை நமக்கு உணர்த்துகின்றன. உலகத்திலுள்ள இயற்கை வளத்தின் மூலமாக, கடவுள் அவற்றைப் பராமரித்து வருகிறார் (சங்கீதம் 101:27; சங்கீதம் 147:9; யோபு 38:41).

(இ) பலன் தரக்கூடிய விதத்திலும், கடவுள் ஏற்படுத்திய கடமைகளை நிறைவேற்றவும் வேண்டும் என்று அவை நமக்குப் போதிக்கின்றன. பூமி மழை நீரைக் குடித்து, பயிர்களை விளையச் செய்கிறது (ஏசாயா 55:10), கழுதை தன் முதலாளியை அறிந்திருக்கிறது (ஏசாயா 1:3), மந்தை மேய்ப்பனுக்கான தேவையை நிறைவேற்றுகிறது (1 கொரிந்தியர் 9:7). நம்முடைய வாழ்க்கை பலனற்றதாக இருந்தால், நம்முடைய தோட்டங்களும், வயல்நிலங்களுமே நம்மைக் கண்டிக்கும். கடவுளுடைய சித்தத்திற்கு நாம் கீழ்ப்படியாமல் போனால், நாம் வளர்க்கிற மிருகங்களே நம்மைக் கடிந்துரைக்கும்.

3. நம்முடைய பாவங்களையும், நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் நம்மைச் சுற்றியுள்ள உலகப் படைப்புயிர்களே நமக்குப் போதிக்கின்றன. அநேக படைப்புயிர்களை நாம் தவறானவிதத்தில் பயன்படுத்துவதே நம்முடைய பாவத்தன்மைக்கான நிரூபணமாக இருக்கிறது. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்த படைப்புயிர்களை தகாதவிதத்தில் பயன்படுத்தவில்லை. ஆதாமும் ஏவாளும் அணிந்திருந்த சிறப்பான ஆடையைப் பாவம் நம்மிடத்திலிருந்து திருடிவிட்டது என்பதைத்தான் நாம் தற்போது அணிந்திருக்கிற ஆடை தெரிவிக்கிறது (ஆதியாகமம் 2:25). பாவம் எந்தளவுக்கு நம்மைச் சேதப்படுத்தியிருக்கிறது என்பதைப் பூமியிலுள்ள மண்ணும், நம்முடைய சரீரங்கள் மண்ணுக்குத் திரும்புவதன் மூலமும் நமக்கு நினைவூட்டுகின்றன (ஆதியாகமம் 3:19).

(அ) கடவுள் மறுப்புக் கோட்பாட்டின் முட்டாள்தனத்தை படைப்புகளே அம்பலப்படுத்துகின்றன. படைப்புகள் இருந்தால் அவற்றைப் படைத்தவர் ஒருவர் இருக்க வேண்டும். அந்தப் படைத்தவர் கடவுளைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்ப மறுப்பதற்கு எந்தவிதமான சாக்குபோக்குக் காரணங்களையும் சொல்ல முடியாதளவுக்கு படைப்புகள் இருந்து வருகின்றன. (யோபு 12:7-11; ரோமர் 1:19-20).

(ஆ) படைப்புகள் நம்முடைய நன்றிகெட்ட பாவத்தன்மைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன. நதிகள் தொடர்ந்து ஓடி, கடலில் சேருகின்றன. இதன்மூலம் அவை நம்முடைய பாவத்தைச் சுட்டிக்காட்டி நம்மைக் குற்றப்படுத்துகின்றன. அதாவது, நாம் கடவுளை நோக்கி நன்றிசெலுத்தாமலும் அவர் நமக்குத் தந்திருக்கிற இயற்கை கொடையை கேடானவிதத்தில் பயன்படுத்துகிற பாவத்திற்கான குற்றத்தை அவை நம்மீது சுமத்துகின்றன.

(இ) படைப்புகள், நாம் சும்மா இருக்கக்கூடாது என்பதை நமக்குப் போதிக்கின்றன. தங்களுடைய வாழ்நாள் முழுவதும் அவை தொடர்ந்து வேலை செய்து வருகின்றன. ஏதேன் தோட்டத்திலும், ஆதாமும் ஏவாளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது. சும்மா இருப்பதற்காக மனிதர்கள் படைக்கப்படவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல், சும்மாயிருந்தவர்களைப் பார்த்து, அவர்கள் வேலைசெய்து, தங்களுடைய சாப்பாட்டிற்குத் தேவையானதைச் சம்பாதிக்க வேண்டும் என்றார். உழைக்காமல் இருப்பவர்கள் சாப்பிடவும் கூடாது என்றார் (2 தெசலோனிக்கேயர் 3:10-12).

(ஈ) அநேக மிருகங்களுடைய வாழ்க்கை முறை, வருடம் முழுவதும் சுழன்று வரும் நேரத்தையும் காலத்தையும் ஒட்டியிருக்கின்றது. அவை கடவுள் வடிவமைத்த காலச்சூழல்களைக் கருத்தாய்க் கவனித்து அதனடிப்படையில் தங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துகொள்ளுகின்றன. இதன் மூலம், கடவுள் நம்மைப் பற்றித் தெரிவித்திருக்கிற நோக்கத்தைக் குறித்து நாம் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணங்களாக அவை இருக்கின்றன. (எரேமியா 8:7)

(உ) தங்களுடைய நலனுக்காக உலகப் படைப்புகள் தருகிற எல்லா வாய்ப்புகளையும் அவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுகின்றன. அத்தோடு, தங்களுடைய நன்மைகாக வழங்கப்படுகிற எதையும் அவை மறுக்கிறதில்லை. எத்தனை மனிதர்கள் கடவுள், இயேசு கிறிஸ்துவின் மூலமாக வழங்குகிற இரட்சிப்பு அவருடைய கிருபையின் வெகுமதி என்பதை அறிந்தும், அது அவர்களுடைய நித்திய நன்மைக்காகத் தரப்படுகிறது என்பதை அறிந்தும், நிராகரிக்கிறார்கள்!

4. சிலவேளைகளில் கடவுள், அவர் நம்முடைய நன்மைக்காக படைத்தவைகளையே நம்முடைய பாவங்களின் காரணமாக நம்மைத் தண்டிக்கவும் பயன்படுத்துகிறார். தண்ணீர் நம்முடைய அத்தியாவசிய தேவை, ஆனால் கடவுள் அதையே பெருவெள்ளமாக ஏற்படுத்தி, மனித குலத்தைத் தண்டிக்கவும் பயன்படுத்துகிறார். நம்முடைய நன்மைக்காக கொடுக்கப்பட்ட நெருப்பைக் கொண்டுதான் கடவுள் சோதோம் கொமோராவை அழித்தார். பாவத்தின் காரணமாக பூமி பிளந்து, கோராகையும் அவனுடைய குடும்பத்தாரையும் விழுங்கியது. நாம் சுவாசிக்கும் காற்றுகூட சில கொள்ளைநோய்களைத் தாங்கி வருகிறது. (ஆதியாகமம் 7:17, 19-24; எண்ணாகமம் 16:31-32)

(அ) பூமி தன் பலனைத் தரும்படி மழை உதவுகிறது. ஆனால் சிலவேளைகளில், மனிதர்களுடைய பாவங்களுக்கான தண்டனையாக, மழை பெய்யாமல், பஞ்சமும் ஏற்படுகிறது. இயற்கை நிகழ்வுகள் தடைபடுவதன் மூலம் கடவுள் பாவங்களுக்கான தண்டனையை வழங்குகிறார்.

(ஆ) சிலவேளைகளில் கடவுள், இயற்கையின் பொதுவான தன்மைக்கு மாறாக, அற்புதமானவிதத்தில் அதைப் பயன்படுத்தி, கேடான மனிதர்களுடைய அநீதியான செயல்களையும், தம்முடைய மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் பாவச் செயல்களையும் விளங்கப்பண்ணுகிறார். சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை இரண்டாகப் பிளந்து, உலர்ந்த தரை வழியாக, கடவுள் தன்னுடைய மக்களைக் கடக்கப் பண்ணினார். ஆனால் அதே தண்ணீரில் பார்வோனின் இராணுவத்தை அமிழ்ந்துபோகச் செய்தார். நேபுகாத்நோச்சாருடைய நெருப்பு சூளையில், தானியேலுடைய மூன்று நண்பர்கள் தூக்கிவீசப்பட்டபோது, நெருப்பு அவர்களை எரித்துப் பொசுக்கவில்லை. கடவுள், நெருப்பினுடைய இயற்கை தன்மையை அற்புதமானவிதத்தில் மாற்றி, தம்முடைய மனிதர்களுக்கு நேபுகாத்நோச்சார் விதித்த தீர்ப்பு அநீதியானது என்பதை விளங்கப்பண்ணினார்.

இதுவரை நான் விளக்கியவைகளின் அடிப்படையில், எல்லாப் படைப்புகளும் பாவத்தின் கேட்டையே அறிவிக்கின்றன என்று அறிகிறோம்.

7. பாவம் தீங்கானது என்று கடவுளுடைய பரிசுத்த நியாயப்பிரமாணம் கண்டிக்கிறது.

1. கடவுளுடைய நியாயப்பிரமாணம் பரிசுத்தமும் நன்மையுமாக இருப்பதனால், நியாயப்பிரமாணத்திலுள்ள எந்தவொரு கட்டளையையும் மீறுவது அசுத்தமும், கேடான செயலுமாகும். கடவுளுடைய நியாயப்பிரமாணம், அவர் நம்மைப் படைத்தவராக நம்மீது அதிகாரமுள்ளவர் என்பதையும், நாம் ஒழுங்கான முறையில் வாழுவதற்கான நல்ல வழிகாட்டுதலை நம்முடைய நன்மைக்காக தந்திருப்பதையும் காட்டுகிறது. கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கு எதிரான எந்தவொரு செயலும், அவருடைய அதிகாரத்தையும் அவர் நல்லவர் என்பதையும் தாக்குகின்ற நடவடிக்கையாகும். ஆகவே கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவது, தீங்கும், தவறானதும், பாவகரமான செயலுமாகும்.

(அ) கடவுளுடைய நியாயப்பிரமாணம் பாவகரமான எந்தவொரு செயலையும் தடைசெய்வதன் மூலமாக, நாம் பாவகரமான செயலில் ஈடுபடுவதற்கு முன்பாக அதைக் குறித்து நம்மை கண்டிக்கிறது. எது நமக்கு நன்மையானது என்றும், எது நம்முடைய கடமை என்றும், எது நமக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்றும் அது விவரித்துக் காட்டுகிறது. கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி செய்யாத எந்தவொரு மனிதனும் சபிக்கப்பட்டவன் என்பதைச் சுட்டிக்காட்டி, பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பதாகவே அது நம்மை எச்சரிக்கிறது (கலாத்தியர் 3:10). பாவத்தினால் வரும் தீங்கு நமக்கு ஏற்படுவதற்கு முன்பாகவே அது குறித்து நாம் எச்சரிக்கப்படுகிறோம்.

(ஆ) கடவுளுடைய நியாயப்பிரமாணம், நாம் பாவம் செய்தபிறகு, நம்முடைய பாவச் செயலைக் குறித்து நம்மைக் கண்டிக்கிறது. பாவம் செய்த பாவிகள் என்ற அடிப்படையில், நாம் கடவுளுடைய பரிசுத்த நீதிக்கு முன்பாக கண்டனத்திற்குள்ளானவர்களாக நிற்கிறோம் என்பதை அது நமக்குத் தெரிவிக்கிறது. நீதியாக வாழுகிறவன் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் பற்றிப் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுகிறவர்கள், அவர்கள் மீறுகிற ஒவ்வொரு கட்டளையின்படியாகவும் குற்றவாளிகள். கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுகிற பாவச் செயல்களில் ஈடுபடுகிறபோது, நாம் எத்தகைய தீங்கை நமக்கு நாமே வருவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதையே நியாயப்பிரமாணம் நமக்குத் தெரிவிக்கிறது.

2. பாவத்தினுடைய வல்லமையின் தீயகுணாதிசயம் என்னவென்றால், அதைத் தடைசெய்கிறபோதுதான், அது இன்னும் தீவிரத்துடன் எதிர்த்து செயல்படக் கூடியதாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இதை விளக்குகிறபோது, “பாவம், நியாயப்பிரமாணத்தினால் நமக்குக் கொடுக்கிற வாய்ப்புகளை நிறுத்தி, எல்லா வகையான இச்சைகளும் நம்மில் உண்டாகும்படி செய்கிறது” என்கிறார் (ரோமர் 7:8). கடவுளுடைய நியாயப்பிரமாணம், பாவத்திற்கு எதிரானதை அறிவிக்கிறபோது, அது நம்மில் பாவத்தைத் தூண்டுகிறவிதத்தில் தீவிரமாகச் செயல்படுகிறது. நாம் எதைச் செய்யக்கூடாது என்று தடைசெய்யப்பட்டிருக்கிறதோ, அதையே நாம் அதிகமாக விரும்பிச் செய்கிறோம்.

(அ) பிசாசு, கடவுளுடைய கட்டளையைப் பயன்படுத்தியே ஏவாளை வஞ்சித்தான். ஏதேன் தோட்டத்திலிருந்த மரத்தைப் பற்றி கடவுள் என்ன சென்னார் என்பதில் சந்தேகக் கேள்வியை ஏற்படுத்தினான் (ஆதியாகமம் 3:1). நியாயப்பிரமாணத்தைப் பிசாசு பயன்படுத்தியதன் மூலமே தான் வஞ்சிக்கப்பட்டதாக பவுல் சொல்லுகிறார் (ரோமர் 7:11). கடவுள் என்ன சொல்லியிருக்கிறார் என்று நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நமக்கு அறிவுரை கூறுகிறவிதமாகவும் பிசாசு நம்மை வஞ்சிப்பான்.

(ஆ) பிசாசு, நாம் பாவம் செய்தால், நாம் சாவதில்லையென்றும், மாறாக, நம்முடைய வாழ்க்கை மேம்படத்தான் செய்யும் என்று சொல்லி நம்மை நம்பவைக்கப் பார்ப்பான். அவன் ஏவாளிடத்தில், அவள் கீழ்ப்படியாமல் போவதனால் சாவதில்லை என்றும், மாறாகக் கடவுளைப் போலாவாள் என்றும், இனி எதற்கும் கீழ்ப்படியவேண்டிய கட்டுப்பாடுகள் அவளுக்கு இருக்காது என்றும் சொன்னான். ஆனால் பிசாசின் உண்மையான நோக்கம், மனிதர்களைக் கெடுத்து, அவர்களைப் பற்றி கடவுள் கொண்டிருக்கிற திட்டத்தில் கடவுளை வீழ்த்தவேண்டும் என்பதுதான். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்புவரை இறவாத் தன்மையுள்ளவர்களாக இருந்தார்கள், ஆனால் பாவம் செய்தபிறகோ அவர்கள் சாகவேண்டியவர்களானார்கள். பாவத்தின் சம்பளம் மரணம்.

3. கடவுளுடைய நியாயப்பிரமாணம் பாவத்தைக் கண்டிக்கிறதாக மட்டுமில்லாமல், பாவிகளுக்கு எதிரான கண்டனத்தையும் அறிவிக்கிறது. நியாயப்பிரமாணம் இதைப் பல்வேறுவிதங்களில் செய்கிறது.

(அ) கடவுளுடைய நியாயப்பிரமாணம், சிறிதான ஒரு பாவச்செயலையும்கூட மன்னிப்பதில்லை. நியாயப்பிரமாணத்திலுள்ள ஒரு கட்டளையை மீறி நடந்தால், அந்த ஒரு கீழ்ப்படியாமையினால், நியாயப்பிரமாணத்தின் எல்லாக் கட்டளைகளையும் மீறியவர்களான குற்றத்திற்குள்ளாவோம். குண்டுமணிகள் கோர்க்கப்பட்டுள்ள ஒரு சங்கிலியிலுள்ள கயிற்றின் ஒரு பகுதியை அறுத்துவிட்டால், எப்படி எல்லாக் குண்டுமணிகளும் உதிர்ந்துவிடுமோ அப்படியே இதுவுமாகும். (யாக்கோபு 2:10).

(ஆ) நியாயப்பிரமாணம் எந்தவொரு மனிதனையும் “குற்றமற்றவன்” என்று அறிவிக்காது. ஏனென்றால் எல்லாரும் பாவம் செய்திருக்கிறார்கள். நம்மில் பாவம் இருப்பதனால், நியாயப்பிரமாணம், நம்மை வலிமையாகக் கண்டனத்திற்குள்ளாக்க முடியுமே தவிர, நம்மை நீதிமானாக்கும் திறனற்றது. நியாயப்பிரமாணம் நமக்கு உயிர்கொடுக்க முடியாது, ஏனென்றால், உலகம் முழுவதும் பாவத்திற்குள் சிறைப்பட்டிருக்கிறது (கலாத்தியர் 3:21-22).

(இ) நியாயப்பிரமாணத்தின் நோக்கம், பாவியினுடைய மனச்சாட்சியில், பாவம் உண்மையில் எத்தகையது என்ற அறிவை ஏற்படுத்துவதுதான். பத்துக்கட்டளைகளிலுள்ள பத்தாவது கட்டளை தன்னைக் குற்றப்படுத்தாதவரை, தான் இச்சையுள்ள மனிதன் என்பதை உண்மையில் தான் அறிந்திருக்கவில்லை என்று பவுல் சொல்லுகிறார் (ரோமர் 7:7). நியாயப்பிரமாணம், பாவம் எவ்வளவு கேவலமானது, தீமையானது என்று எடுத்துக்காட்டி, அதற்கு எதிரான கண்டனத்தைப் பலமாக அறிவிக்கிறது. இதன் காரணமாகவே, சிலவேளைகளில் நியாயப்பிரமாணம் “ஆசானாகவும்” “வழிகாட்டியாகவும்” அழைக்கப்படுகிறது. ஏனென்றால், கிறிஸ்து நம்மை விடுவிக்கிறவரை, அது நம்மை நியாயத்தீர்ப்பின் கீழ் இருக்கச் செய்கிறது. (கலாத்தியர் 4:1-5).

(ஈ) சிலபேர், தங்களுடைய நல்ல செயல்களைப் பற்றி அதிகமாகப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு முன்பாக வருகிறபோது, தங்களுக்குச் சாதகமாகப் பேசுவதற்கு அவர்களிடத்தில் எதுவும் இருக்காது. ஏனென்றால், எல்லாரும் பாவம் செய்திருக்கிறார்கள். இவைதான் பாவத்தினுடைய தொடர் விளைவுகள். கடவுளுடைய பிரசன்னத்தில் வாயை மூடிக்கொண்டு அமைதலாக நிற்பது மட்டுமே ஒரு பாவியினுடைய செயலாக இருக்க முடியும். (ரோமர் 3:19)

(உ) கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறினால், அதனிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. நியாயப்பிரமாணத்தை மீறுகிறவர்களை, அது கண்டனத்திற்குள்ளாக்குவதை மட்டுமே செய்யும். அது ஒரு பாவிக்கு நியாயத்தீர்ப்பை மட்டுமே வழங்கும்; வேறு எந்தவொரு நம்பிக்கையையும் அது தராது. கடவுளுடைய நியாயப்பிரமாணம் பாவத்திற்கு எதிரானது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் அறிகிறோம்.

உங்களில் சிலர் நினைக்கலாம், இதெல்லாம் இருந்தாலும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தின் உக்கிரத்தை, கடவுளுடைய கிருபையின் சுவிசேஷ செய்தி மேற்கொள்ளுகிறது என்று. ஆகவே, பாவத்தின் தீங்கையும், நியாயப்பிரமாணத்தின் உக்கிரத்தையும், சுவிசேஷ செய்தியும்கூட உறுதிப்படுத்துகிறது என்பதை நான் உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியமாகிறது.

8. சுவிசேஷ செய்தியும்கூட பாவத்திற்கு எதிரான சாட்சியங்களைக் கொண்டிருக்கிறது.

சுவிசேஷ செய்தி பாவகரமான நடவடிக்கைளுக்குச் சாதகமான எதையும் தன்னில் கொண்டிருக்கவில்லை. மாறாக, எந்தவொரு சிறு பாவத்தையும் அது கண்டும் காணாமல் இருந்துவிடுவதில்லை. பாவத்திலிருந்து மனிதர்களை விடுவிக்கவேண்டும் என்ற முக்கியமான காரணத்திற்காகவே இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். பாவிகள் மனந்திரும்பி, தம்மை விசுவாசிக்க வேண்டும் என்பதே கிறிஸ்துவினுடைய போதனையாக இருந்தது. மனந்திரும்புதலும் விசுவாசமும் பாவத்திற்கு எதிரான சாட்சியங்களைத் தருகின்றன. பாவிகள் மனந்திரும்ப வேண்டியதும், பாவகரமான வாழ்க்கையிலிருந்து மாற வேண்டியதுமாக இருந்தால், நிச்சயமாக பாவம் பெரும் தீங்கானதாகத்தான் இருக்க வேண்டும். விசுவாசமும் பாவத்தைக் கண்டனத்திற்குள்ளாக்குகிறது. ஏனென்றால், விசுவாசத்தின் மூலமாக நாம் கடவுளை நம்பி அவருக்குக் கீழ்ப்படிகிறோம். இது பாவத்திற்கு எதிரான நடவடிக்கை.

பாவத்தினுடைய தீங்கைப் பற்றி சுவிசேஷத்தின் சகல பகுதிகளும் எடுத்துரைக்கின்றன. சுவிசேஷத்தின் இந்தச் செய்தியை விசுவாசிக்கிறவர்கள், “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள” வேண்டியவர்களாக இருக்கிறார்கள் (எபேசியர் 4:22-24). கிறிஸ்தவன் ஒருபோதும் பாவகரமான வாழ்க்கை முறையை நியாயப்படுத்த முடியாது என்பதையே பழைய மனிதனிலிருந்து புதிய மனிதனாக முற்றாக மாறுகிற மாற்றம் தெரிவிக்கிறது. இருப்பினும், சிலர், சுவிசேஷச் செய்தியைப் பாவகாரமான செயலை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்த முயற்சிப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

(அ) பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று (ரோமர் 5:20). இதை வைத்து சிலர், நீங்கள் பாவம் செய்தால், கிருபையை அதிகமாகப் பெருகவைக்கிறீர்கள் என்று வாதிடுகிறார்கள். இந்தவிதமான எண்ணத்திற்குப் பதிலளிக்கும்படியாகவே பவுல், “பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?” (ரோமர் 6:2) என்று கேட்கிறார். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, தங்களுடைய பாவகரமான செயலுக்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறவர்களைப் பார்த்து, யூதா சொல்லுகிறார், தேவனுடைய கிருபையைக் கேடான செயல்களைச் செய்வதற்கான அனுமதியாக மாற்றுகிறவர்கள், உண்மையில் கிறிஸ்தவர்களே அல்ல, அவர்கள் கண்டனத்திற்காக நியமிக்கப்பட்டவர்கள் (யூதா 4).

(ஆ) கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதுதான் மகிமையான சுவிசேஷ சத்தியம். கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்திருப்பதனால், அது நம்மைப் பாவம் செய்ய அனுமதிக்கிறது என்று சிலர் வாதிட்டிருக்கிறார்கள். சுவிசேஷ செய்தியைத் தவறாக விளங்கிக்கொண்டதனால்தான் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள். கிறிஸ்து “நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி” மரித்தார். (தீத்து 2:14).

(இ) கடவுள் விசுவாசிகளுக்கு பூமியில் தரப்படும் எல்லாவிதமான கௌரவப் பெயர்களுக்கும் மேலான, உயர்வான கௌரவ பெயர்களைத் தந்து மதிப்பளித்திருக்கிறார். அவர்களைத் தேவனுடைய பிள்ளைகள் (1 யோவான் 3:1), தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம், இராஜரீக ஆசாரியர்கள், பரிசுத்த ஜாதி என்று அழைக்கிறார் (1 பேதுரு 2:9). கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பார்வையில் இந்தளவுக்கு மதிப்புமிக்கவர்களாக இருந்தால், கீழ்ப்படியாத பாவிகளாக அவருக்கு முன்பாக வாழ்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

(ஈ) எல்லாரும் அவரவர் வாழ்ந்த விதத்திற்கான கணக்கொப்புவிக்க வேண்டிய நியாயத்தீர்ப்பு நாள் இனித்தான் வரவிருக்கிறது. ஆகவே பவுல் சொல்லுவது போல், மனிதர்கள் பாவத்தைத் தவிர்த்து, நீதியும் பரிசுத்தமுமாக வாழ வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகிறோம் (2 கொரிந்தியர் 5:11). இதன் மூலம், சுவிசேஷச் செய்தியின் போதனை, பாவகரமான நடவடிக்கைகள் தேவபக்தியற்றதும் தவறானதுமாக இருக்கிறது என்பதற்கான சாட்சியங்களாக இருக்கிறது என்பது தெரிகிறது.

(உ) சுவிசேஷச் செய்தியிலுள்ள அனைத்துப் போதனைகளும், கட்டளைகளும் பாவத்தின் கேட்டை உறுதிப்படுத்துகின்றன. நீதியோடும் பரிசுத்தத்தோடும் நாம் கடவுளுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்று சுவிசேஷம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. பாவகரமான நடவடிக்கைகள் கடவுளுக்குக் கோபமூட்டுவதும், நமக்குத் தீங்கை ஏற்படுத்துவதுமான செயல்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே பாவகரமான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.

(ஊ) சுவிசேஷ செய்தியில் விசுவாசிகளுக்கு அநேக பொன்னான வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன. இந்த வாக்குறுதிகள், பாவகரமான வழிகளிலிருந்து நாம் விலகியிருக்கவும், பாவத்தினால் வருகிற கண்டனங்களிலிருந்து நாம் தப்பிக்கவும் செய்கின்றன. கடவுளுடைய நல்ல வாக்குறுதிகள், பாவத்தினால் வருகிற தீங்கிற்கு எதிராக இருக்கின்றன.

(எ) சுவிசேஷ செய்தி சில எச்சரிப்புகளையும் தன்னில் கொண்டுள்ளது. கடவுள், நாம் பாவம் செய்வதற்கு முன்பாகவே, நாம் பாவம் செய்துவிடக்கூடாது என்பதற்காக, பாவத்தினால் வருகிற தண்டனையைக் குறித்து நமக்கு எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கிறார். நாம் பாவம் செய்துவிட்ட பிறகும், நாம் மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக, பாவம் செய்ததினால் வருகிற தண்டனையைக்குறித்து நம்மை எச்சரிக்கிறார். அவருடைய எச்சரிப்புகள், நாம் பாவத்திலிருந்து விலகியிருக்கவும், மனந்திரும்பவும் வேண்டும் என்பதற்காகத் தரப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 2:5, 16, 22; 3:3, 19)

(ஏ) கடவுளுடைய நல்ல செயல்களையும், நம்முடைய இருதயத்தின் கேடான தன்மையையும் நாம் அனுபவபூர்வமாக அறிந்துணருவது, பாவம் எந்தளவுக்குத் தீமையானது என்பதையே நமக்குக் காட்டுகிறது. கடவுள் நமக்கு நன்மை செய்திருக்க, அதற்கான பதில் நடவடிக்கையாக அவருக்கு வெறுப்பையூட்டும் செயலைச் செய்வது சரியா? நம்முடைய இருதயம் நம்மைத் தவறாக வழிநடத்துகிறது என்பதைக் கற்றறிந்த பிறகும், நம்முடைய இருதயத்தைத் தொடர்ந்தும் நம்புவது சரியா? ஆவிக்குரிய வாழ்க்கையை வாழுகிற அனுபவங்கள், ஒரு கிறிஸ்தவனுக்கு, பாவம் செய்வது எவ்வளவு முட்டாள்தனமும் ஆபத்தானதுமாகும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.

9. பாவமே தன்னுடைய தீங்கையும் கேட்டையும் அறிவிக்கிறது

இதுவே பாவத்தினுடைய தீங்கிற்கும் கேட்டிற்குமான சாட்சியங்களில் இறுதியாக நான் சுட்டிக்காட்டுவது. இதற்கான சில நிரூபண ஆதாரங்களைத் தருகிறேன்.

1. பாவத்தை விவரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பெயர்கள் பாவத்தின் மெய்யான தன்மையை நமக்குக் காட்டுகின்றன. உதாரணமாக, பாவத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு பெயர் “சாத்தானின் கிரியை.” இதன் காரணமாக, பாவம் செய்வதன் மூலமாக, பாவிகளிலெல்லாம் பெரும் பாவியுடன் நாம் இணைந்துவிடுகிறோம். ஏனென்றால், சாத்தானே முதலில் கடவுளை எதிர்த்தவன், உலகம் முடியும்வரை அவன் அந்த எதிர்ப்பைத் தொடருகிறான். மனிதர்கள் பல வழிகளில் சாத்தானின் கிரியைகளைச் செய்து வருகிறார்கள்.

(அ) சோதனைக்கு நாம் இடம் தருகிறபோது, அந்த விஷயத்தில் நாம் சாத்தானின் வேலையாட்களாகிவிடுகிறோம். வேத சத்தியங்களைப் பற்றிய விஷயத்தில் வஞ்சிக்கப்படுவதற்கு இடம் தருவதும், கடவுளுடைய கட்டளைகளுக்கு எதிராக மற்றவர்கள் நடப்பதற்கானவிதத்தில் சோதனைக்குள்ளாக்க முயற்சிப்பதும், கொலை செய்வதும், பொய்யைப் பரப்புவதும், மற்றவர்களைக் கெடுப்பதும், ஏமாற்றுவதும், மற்றவர்களைப் பொய்யாய்க் குற்றஞ்சாட்டுவதும், சுவிசேஷ செய்தியை மற்றவர்கள் கேட்பதற்கும் விசுவாசிப்பதற்கும் இடையூறாக இருப்பதும், கிறிஸ்தவ விசுவாசிகளைத் துன்புறுத்துவதும் ஆகிய இவைகளே சாத்தானின் கிரியைகள். இவற்றில் ஏதொன்றையும் செய்கிறவன் சாத்தானின் அடிமையாயிருக்கிறான். சாத்தானுக்கு வரவிருக்கிற கண்டனத்தை அவனும் பெறுவான்.

(ஆ) கடவுளின் நோக்கத்தைத் தோற்கடித்துவிட முடியாது என்பதைச் சாத்தான் அறிந்திருக்கிறான். ஆகவே அவன் மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதன் மூலம் கடவுளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையைச் செய்துவருகிறான். கடவுள் மீதுள்ள தன்னுடைய விரோதத்தை அவருடைய படைப்புகளுக்குத் தீமைசெய்வதன் மூலம் தீர்த்துக்கொள்ளப் போராடுகிறான். இப்படிச் செய்வதன் மூலமாக, பாவம் தீங்கானது என்பதை அவனே காட்டுகிறான். ஒருவிதத்தில், சாத்தானுடைய பாவத்தைக் காட்டிலும் மனிதர்களுடைய பாவம் மோசமானது என்று சொல்லலாம். ஏனென்றால், சாத்தானுக்குப் பாவ விமோசனத்திற்கான எந்த வாய்ப்பும் இல்லை. மனிதர்களைப்போல் இரக்கத்திற்கு எதிராகவோ கிருபைக்கு எதிராகவோ சாத்தான் பாவம் செய்வதில்லை.

2. பாவத்திற்கான மற்றொரு பெயர் “அருவருப்பு”. பாவகரமான வாழ்க்கை ஒரு மனிதனுடைய சரீரத்தையும் ஆத்துமாவையும் சீரழிக்கிறது. அருவருக்கப்பட்ட, அழுகிய, கெட்டுப்போன, வியாதி, கொள்ளைநோய், சேறு, சகதி என்று நம்முடைய வாழ்க்கையில் பெரும் முயற்சி செய்து நாம் தவிர்க்க நினைக்கிற இப்படியான பல காரியங்களை வேதம் பாவத்தைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறது. வியாதி நம்முடைய உடலைத் தாக்குகிறபோது, அது பெரியளவில் நம்மைக் கஷ்டப்படுத்துகிறது. ஆனால் நம்முடைய மனதையும் எண்ணத்தையும் பாவத்தினால் பாதிக்கப்பட விட்டுவிட்டு, சாத்தானுக்குச் சந்தோஷமாக நாம் ஊழியம் செய்வது, அதையும்விட மிகவும் பயங்கரமானது. ஏனென்றால், உடலில் ஏற்படும் வியாதி நமக்கு சரீர மரணத்தையே கொண்டு வரும். ஆனால் ஆவிக்குரிய வியாதி நம்மை நித்திய அழிவுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

(அ) இந்த உலகத்தில் பாவம் எங்கும் இருக்கிறது. மனிதர்களுடைய தன்மையில் பாவம் எல்லாப் பகுதியையும் பாதித்திருக்கிறது. (ரோமர் 5:12; 2 கொரிந்தியர் 7:11).

(ஆ) நம்மை எச்சரிக்கிறவிதத்தில், பாவத்தின் தொடர் வளர்ச்சி இருக்கிறது. ஏதேன் தோட்டத்தில், கீழ்ப்படியாமை என்கிற முதல் பாவத்தில் தொடங்கியது, இப்போது, உலகம் முழுவதையும் தன்வயப்படுத்தியுள்ளது. அத்தோடு, மனிதத் தன்மையின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கிறது. மனித வாழ்வியல் முறையின் வளர்ச்சிக்கேற்ப அதுவும் வளர்கிறது. இச்சையான பார்வை, ஒழுக்ககேடான விபச்சாரத்திற்கு நேராகக் கொண்டு போகிறது. அதன் தொடர்ச்சியாக கொலையையும் செய்யவைக்கிறது. பாவகரமான நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக தொற்றக்கூடியவை. ஒரு மனிதனுடைய பாவகரமான செயல் எளிதில் அநேகரால் பின்பற்றப்படுகிறது. (யாக்கோபு 3:5-6).

(இ) பாவத்தினுடைய பாதிப்பு எளிதில் சரிசெய்யப்பட முடியாதது (எரேமியா 17:9). கடவுள் பாவச் செயல்களைப் பலவிதமான வழிகளில் தண்டித்திருக்கிறார். ஆனால் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து, பரிபூரணமான வாழ்க்கையை வாழ்ந்து, தன் மக்களுடைய பாவங்களுக்கான பரிகாரப் பலியாக சிலுவையில் மரணமடைகிறவரையில், எந்தவொரு வழிமுறையும் முழுமையான தீர்வாக இருக்கவில்லை.

(ஈ) நாம் மரணமடைந்த பிறகும், பாவத்தின் பாதிப்பு தொடர்ந்திருக்கிறது. மரணத்திற்குப் பிறகு, நம்முடைய சரீரம் தொடர்ந்து அழுகிக் கெட்டுப்போய், முதன் முதலில் எதிலிருந்து நாம் உண்டாக்கப்பட்டோமோ அதற்கே திரும்புகிறோம். ஆனால் கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் சரீரம் கெட்டுப்போகவில்லை. ஏனென்றால், இயேசுவில் பாவமே இல்லை.

இதுவரை, பாவத்திற்கு வழங்கப்பட்டிருக்கிற பெயர்கள், பாவத்தினுடைய தீங்கை எந்தவிதத்தில் நமக்குக் காட்டுகின்றன என்பவற்றில் சிலதை நாம் கவனித்தோம்.

3. பாவம் நம்மை வஞ்சிப்பதற்காகத் தன்னுடைய உண்மையான தன்மையை மறைக்கிற வழிமுறைகள், பாவத்தினுடைய கேடான தன்மைக்கான மற்றொரு ஆதாரம். வெளிப்படையாக இருப்பதற்காக சத்தியம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. ஆனால் பாவமோ, தன்னுடைய உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏமாற்று வேலைகளையும், பொய்களையும் பயன்படுத்துகிறது. பாவம் நமக்குத் தீங்கை ஏற்படுத்தாமல் இருந்தால், பிறகு ஏன் அது நம்மை வஞ்சிக்கிறது? அதனுடைய வஞ்சகமான தன்மைகளே அதனுடைய கேட்டை நமக்கு அறிவிக்கின்றன. உதாரணமாக,

(அ) சிலவேளைகளில் சாத்தான், சில விஷயங்கள் உண்மையிலேயே பாவகரமானதல்ல என்று சொல்லி நம்மை வஞ்சிக்கப் பார்க்கிறான். ஏவாள் விலக்கப்பட்ட கனியைப் பார்த்து, அதைச் சாப்பிட விரும்பினாள். அதைச் சாப்பிடுவதன் மூலம் ஆதாமும் அவளும் கடவுளைப்போல் இருப்பார்கள் என்று சாத்தான் அவளுக்கு உறுதியாய்ச் சொன்னான். அதன்காரணமாகவே கடவுள் அதை அவர்களிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறார் என்று கேடான ஓர் ஆலோசனையை வழங்கினான். (ஆதியாகமம் 3:5).

(ஆ) சிலர் திருடுவதை நியாயப்படுத்துவார்கள். ஏனென்றால், அவர்கள் திருடும் பொருளை வாங்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை என்பார்கள். அவர்களுடைய நிலையை எண்ணி ஒருவேளை நாம் அவர்களை மன்னிக்கலாம். ஆனால் அவர்கள் திருடியது பாவமே.

(இ) சிலர், ஒரே ஒருமுறை பாவம் செய்வது பரவாயில்லை என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த ஒரு பாவம், மற்றொரு பாவத்திற்கு வழிவகுக்கும். அதன்பிறகு, மற்றொன்று, மற்றொன்று என்று அது தொடர்ந்துகொண்டே இருக்கும்.

(ஈ) அநேகர், தாங்கள் செய்தது ஒரு சிறு பாவந்தான் என்று சொல்லி, அதைப் பெரிதாகக் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்பார்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாக இருந்தால், அதில் சிறியது என்று எதையாகிலும் சொல்ல முடியுமா?

(உ) பொதுவிடத்தில் செய்யப்படும் பாவத்தைக் காட்டிலும், மறைவிடத்தில் செய்யப்படும் பாவம் அந்தளவுக்கு மோசமானதல்ல என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், கடவுள் எல்லாவற்றையும் காண்பவராயிற்றே, அவருக்கு முன் எந்தவொரு பாவமும் இரகசியமாக இருக்க முடியுமா? (சங்கீதம் 139:11-12).

(ஊ) சிலவேளையில், கேடான செயலைச் செய்தால்தான் நமக்கு சில நன்மைகள் வரும் என்பதாக நினைக்கலாம். ஆனால் பாவத்தால் வருகிற நன்மை, பேரிழப்பே. ஏனென்றால், பாவகரமான வழியில் உலகத்தையே சொந்தமாக்கிக்கொண்டாலும், அதன் மூலம் தன் ஆத்துமாவை இழந்துவிடுகிறான் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

(எ) “எத்தனையோ பேர் செய்கிறார்கள், நான் செய்தால் என்ன?” என்று நாம் நினைக்கலாம். அப்படிச் சொல்லுகிறவர்களே, நீங்கள் எனக்குச் சொல்லுங்கள், நரகத்தில் அந்த நபர் உங்களுக்குக் கூட்டாளியாக இருப்பது எந்தவிதமான ஆறுதலை உங்களுக்குத் தரப்போகிறது?

(ஏ) பாவத்தைச் செய்து மனந்திரும்புகிறபோது, கடவுள் உங்களை மன்னிக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் பாவத்திலிருந்து மனந்திரும்புகிறவனுக்குத்தான், அவர் அத்தகைய மன்னிப்பை வாக்களித்திருக்கிறாரே தவிர, பாவம் செய்கிறவனுக்கு அல்ல.

(ஐ) என்னதான் பாவம் செய்தாலும், எனக்கு எதுவும் நடந்துவிடவில்லை என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? பாவத்திற்கான தண்டனையை உடனே பெறாமல் இருப்பதே மிகப் பெரிய தண்டனையாக இருந்துவிடலாம். ஏனென்றால், பாவத்திற்கான தண்டனையை உடனே பெற்றிருந்தால், ஒருவேளை அந்த பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கான வாய்ப்பாக அது அமைந்திருக்கும். (ஏசாயா 1:15).

(ஒ) பிறப்பிலேயே பாவியாக இருக்கிற நாம், பாவம் செய்யாதிருப்பது எப்படி? நம்மிலுள்ள பாவத் தன்மையின் காரணமாகவே, நாம் கேடான காரியங்களைச் செய்கிறோம். பாவத்தைத் தவிர்த்து வேறு என்ன செய்துவிட முடியும்?

இந்தவிதமான வழிகளில்தான் பாவம், தனக்குத்தானே சாதகமாகப் பேசி, நம்மை வஞ்சிக்கும். இந்தவிதமான வழிகளே, பாவம் எந்தளவுக்குக் கேடானது என்பதற்காக நிரூபணங்களாக இருக்கின்றன. பாவம் காணப்படுகின்ற, அதனுடைய தன்மைக்கு மேலாக அதை மோசமாக விளக்கிவிட முடியாது. அல்லது, அது எந்தளவுக்கு மோசமானதோ அந்தளவுக்குங்கூட அதைப் பற்றி விளக்கிவிட முடியாது.. ஏனென்றால், பாவம் எல்லாத் தீமைகளின் உச்சமாக இருக்கிறது. அது ஏதோவொருவிதத்தில் அவலட்சணமானதல்ல; அது தன்னில்தானே முழுவதும் அவலட்சணமானது. அது அருவருப்பானது மட்டுமல்ல; அருவருப்பின் சாராம்சமே அதுதான். அது ஒழுக்கக் கேடானது மட்டுமல்ல; எல்லா ஒழுக்கக் கேட்டின் ஊற்றாக இருக்கிறது.

3 thoughts on “பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்கான சாட்சியங்கள்

 1. *இயேசுவுக்கே புகழ் !!ஆமென் !!ஆமென்!!!*

  On Tue 13 Jul, 2021, 5:32 PM திருமறைத்தீபம் (Bible Lamp), wrote:

  > ஆர். பாலா posted: ” பகுதி 2 – ரால்ப் வென்னிங் 5. அநேக அவிசுவாசிகளும் பாவச்
  > செயல்களுக்காக வெட்கப்படுகிறார்கள். மனிதர்களுடைய பாவகரமான வாழ்க்கை முறை,
  > அவர்களுடைய மனிதத் தன்மையைத் தரமிழக்கச் செய்கிறது என்று பழங்கால கிரேக்க
  > தத்துவ ஞானி ஒருவர் சொல்லியிருக்கிறார். இத்தகைய”
  >

  Liked by 1 person

 2. பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்கான சாட்சியங்கள்

  by ஆர். பாலா

  பகுதி 1 – ரால்ப் வென்னிங்

  பகுதி 1 அனுப்ப முடியுமா அய்யா?

  On Tue, Jul 13, 2021 at 5:33 PM திருமறைத்தீபம் (Bible Lamp) wrote:

  > ஆர். பாலா posted: ” பகுதி 2 – ரால்ப் வென்னிங் 5. அநேக அவிசுவாசிகளும் பாவச்
  > செயல்களுக்காக வெட்கப்படுகிறார்கள். மனிதர்களுடைய பாவகரமான வாழ்க்கை முறை,
  > அவர்களுடைய மனிதத் தன்மையைத் தரமிழக்கச் செய்கிறது என்று பழங்கால கிரேக்க
  > தத்துவ ஞானி ஒருவர் சொல்லியிருக்கிறார். இத்தகைய”
  >

  Like

  • ரால்ப் வென்னிங்கின் நூலின் பகுதி 1 ஐ, நம் வலைத்தளத்தில் பதிவாகியிருக்கும் திருமறைத்தீபம் pdf இதழ்களில் நீங்கள் காணலாம். கடந்த வருடத்தின் இதழ்களை வலைத்தளத்தில் தேடீனீர்களானால் அதை இலகுவாகக் கண்டுகொள்ளலாம்.

   Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s